உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, January 29, 2016

என் புகுந்த வீடு - 6

அன்பிலே கரைந்தேன்...!
ரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட கதாசிரியர்களுக்கே திருப்பி அனுப்புவதற்குரிய காரணங்களை எடுத்துச் சொன்னதும் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அதற்கு அரை மனதாக ஒப்புக்கொண்டாலும், அவர்களுக்கான கடிதத்தில் கூடுதலாக ஒரு தகவலை மட்டும் சேர்க்கச் சொன்னார்.

‘தங்கள் சிறுகதையைப் பிரசுரிப்பதற்குக் கால தாமதம் ஏற்படுவதை முன்னிட்டே அதைத் திருப்பி அனுப்புகிறோம். என்றாலும், தங்கள் படைப்புக்குரிய சன்மானத்தையும் தங்களுக்கு அனுப்பியுள்ளோம். இந்தச் சன்மானம், தங்களின் இந்தப் படைப்பை வேறு பத்திரிகையின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்’ என்பதே அந்தத் தகவல்.

ஆம்... தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் பிரசுரிக்கப்படாமல் திருப்பி அனுப்பிய கதைகளுக்கும்கூட அவற்றுக்குரிய சன்மானத் தொகையை வழங்கிய பண்பாளர் மதிப்புக்குரிய ஆசிரியர் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்.

நான் திட்டமிட்டபடியே, பரிசீலனையில் தேங்கிக் கிடந்த 3000 சிறுகதைகளையும் அடுத்த ஒன்று, ஒன்றரை மாத காலத்துக்குள் அதிரடியாகப் பரிசீலித்து முடித்துவிட்டேன். இதை நான் ஒருவன் மட்டும் தனியனாகச் சாதிக்கவில்லை. சாதிக்கவும் இயலாது.

அப்போது நிர்வாக ஆசிரியராக இருந்த திரு.வீயெஸ்வி அவர்களிடம் ஒரு யோசனையைச் சொன்னேன். ஆசிரியர் குழுவில் இருந்த அனைவரும் ஒவ்வொரு ஞாயிறன்றும் அலுவலகத்துக்கு வந்து, கான்ஃப்ரென்ஸ் ஹாலில் ஒன்றாக அமர்ந்து, கதைகளைப் படித்துப் பரிசீலிக்க வேண்டும்; இப்படி தொடர்ந்து ஆறு, ஏழு ஞாயிற்றுக்கிழமைகள் வந்து படித்தால், கண்டிப்பாக அத்தனை கதைகளையும் படித்து முடித்துவிட முடியும் என்பதுதான் என் யோசனை.

அதை அப்படியே செயல்படுத்தினோம். அனைவரும் வந்தார்கள். ஒன்றாக அமர்ந்து அத்தனை கதைகளையும் படித்து முடித்து, தேர்ந்தெடுக்கப்படாத கதைகளில் திருப்பி அனுப்ப ஸ்டாம்ப் வைத்திருந்தவற்றை உடனடியாகத் திருப்பி அனுப்பினோம். பிரசுரத்துக்காக வைத்திருந்த கதைகளையும் அடுத்த சில வாரங்களில் பிரசுரித்துவிட்டோம். அதன்பின்பு, அதிகபட்சம் இரண்டு, மூன்று மாத காலத்துக்குள்ளாக பரிசீலனைக்கு வந்த கதைகள் பரிசீலிக்கப்பட்டு, பிரசுரிக்கப்பட்டுவிடும் நிலை உருவானது.

இதில் என் மனத்தில் ஆழமாகப் பதிந்த விஷயம் ஒன்றுதான்... திருப்பி அனுப்பப்பட்ட கதைகளுக்குக்கூட சன்மானம் அனுப்பச் சொன்ன ஆசிரியரின் அந்த நேர்மை; அவர் கடைப்பிடித்த அந்தப் பத்திரிகா தர்மம்!

தனிப்பட்ட முறையிலும் ஆசிரியர் தன் கீழ் பணிபுரிகிறவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பார், அவர்களின் கஷ்ட நஷ்டங்களில் மனிதாபிமானத்தோடு பங்கு கொள்வார் என்பதை, விகடனில் சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே நான் அனுபவபூர்வமாக அறிந்துகொண்டேன். சில பழக்கங்களை, பக்குவங்களை வரவழைத்துக்கொள்ள முடியும்; ஆனால், அடிப்படைக் குணங்கள் வாழையடி வாழையாக ஜீன்களிலேயே கலந்திருக்கும். ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் அந்தப் பெரிய மனசு, அவரின் பாட்டி அதாவது எஸ்.எஸ்.வாசனின் தாயார் காலத்திலிருந்தோ, அதற்கும் முந்தைய தலைமுறையிடமிருந்தோ வழிவழியாக வந்துகொண்டிருப்பது.

நான் விகடனில் சேர்ந்து நாலு மாதங்களே ஆகியிருந்த நிலையில் எனக்குப் பெரிய பணத் தேவை ஒன்று வந்தது. என் மனைவிக்கு பிரசவ செலவு. முதல் குழந்தை சிசேரியன் என்பதால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் செய்து எடுக்க வேண்டிய கட்டாயம். மாதச் சம்பளமாக அப்போது நான் பெற்ற ரூ.1200 மாதாந்திர செலவுகளுக்கே சரியாக இருந்தது. சிசேரியனுக்கு குறைந்தபட்சம் ரூ.8000/-வது தேவைப்படும் என்ற நிலை. என்ன செய்வது, யாரிடம் கேட்பது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. செப்டம்பர் முதல் வாரம் எனத் தேதி கொடுத்திருந்தார் டாக்டர்.

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் ஒரு நாள், திரு.வீயெஸ்வி அவர்களின் அறைக்குச் சென்றேன். சட்டைப் பையில் வைத்திருந்த மனைவியின் தங்க வளையல்களை எடுத்து அவர் மேஜையில் வைத்தேன். “சார், மனைவியின் ஆஸ்பத்திரி செலவுகளுக்கு எனக்கு உடனடியாக எட்டாயிரம் ரூபாய் பணம் வேண்டும். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் இங்கே பணியில் சேர்ந்து ஒரு சில மாதங்களே ஆகியுள்ளதால், இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கேட்பதும் முறையில்லை. எனவே, நீங்கள்தான் இதை வைத்துக்கொண்டு எனக்கு எப்படியாவது பண உதவி செய்ய வேண்டும்” என்றேன்.

அவர் பதறிவிட்டார். “என்ன ரவி இது, முதல்ல இதை எடுத்துப் பையில வைங்க. வாங்க, எடிட்டர்கிட்ட போய்ப் பேசுவோம்” என்றார். “இல்லை சார், எனக்குத் தயக்கமாக இருக்கிறது. நான் இங்கே சேர்ந்து சில மாதங்கள்கூட ஆகாத நிலையில், இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகத் தரும்படி ஆசிரியரிடம் போய்க் கேட்டால், அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார். அதனால் இந்த வளையல்களை எங்காவது விற்றுப் பணம் தந்து உதவுங்கள். தங்கம் விலை, சேதாரம், செய்கூலி போன்ற விவரங்கள் எனக்கு எதுவும் தெரியாது என்பதால்தான் உங்கள் உதவியைக் கேட்கிறேன்” என்றேன்.

எனக்குப் பணி ரீதியாக நேரடித் தொடர்பில் இருந்தவர் வீயெஸ்வி சார் மட்டும்தான்! அவரைத் தவிர, ஆசிரியர், மதன் சார், ராவ் சார் ஆகியோர் மட்டுமல்ல; அங்கு வேறு யாரையுமே அதிகம் பழக்கம் இல்லாமல் இருந்தது. தவிர, ஏழெட்டு பேர் மட்டுமே கொண்ட ‘சாவி’ என்னும் மிகச் சிறிய பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டு, இப்போது (1995-ல்) ஆசிரியர் குழுவில் மட்டுமே ஐம்பது அறுபது பேர் பணிபுரியும் ஒரு பெரிய நிறுவனத்தில் பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் பணிபுரிவதில் உள்ள தயக்கமும் கூச்சமும் வேறு என்னை ஆக்கிரமித்திருந்தது.

இருந்தாலும், “வாங்க சும்மா! ஆசிரியர்கிட்ட நான் பேசறேன். நீங்க பேச வேண்டாம். போதுமா?” என்று என்னை உடனே ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் சென்றார் வீயெஸ்வி. தலையைக் குனிந்தவாறு அவரைப் பின்தொடர்ந்தேன்.

“வாங்கோ, என்ன விஷயம்?” என்றார் ஆசிரியர்.

வீயெஸ்வி நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “சார், இவர் மனைவிக்கு இது பிரசவ நேரம். சிசேரியன்தான்னு டாக்டர்கள் சொல்லி, செப்டம்பர் ஒண்ணுன்னு தேதியும் கொடுத்துட்டாங்களாம். இவருக்கு உடனே எட்டாயிரம் ரூபாய் கடனாகத் தேவை!” என்றார்.

ஆசிரியர் மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. “சரி, நான் கேஷியரைக் கூப்பிட்டுச் சொல்றேன். அவர் தருவார்!” என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இங்கே பணியில் சேர்ந்து, என் உழைப்பையோ, திறமையையோ இன்னும் சரிவரக் காட்டியிருக்கவில்லை. என் முகம் கூட இன்னும் இங்குள்ளோருக்குப் பரிச்சயம் ஆகியிருக்காது. அப்படியிருக்க, என்ன தகுதியில் எனக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகத் தருகிறார்கள் என்று புரியவே இல்லை. நன்றியின் மிகுதியில், ஆசிரியருக்கு வாய் வார்த்தையாக நன்றி சொல்லக்கூடத் தோன்றாமல் சிலையாக நின்றிருந்தேன். வீயெஸ்விதான் என் சார்பாக நன்றி சொல்லிவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

“போதுமா? இனிமே நிம்மதியா போய் உங்க வேலையைக் கவனியுங்க!” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குப் போனார்.

மறுநாள் போனது. அதற்கு மறுநாளும் போனது. இப்படியே நாலைந்து நாள் ஓடிப் போயிற்று. எனக்கு யாரும் பணம் கொண்டு வந்து தரவில்லை. மீண்டும் வீயெஸ்வி அவர்களிடம் சென்றேன். “சார், கேஷியரைப் போய்ப் பார்க்கட்டுமா சார்? எனக்கு இன்னும் கடன் தொகை கிடைக்கவில்லை!” என்றேன்.

“கேளுங்களேன்” என்றார். அதன்பின் கேஷியரைப் போய்ப் பார்த்து, விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன். அவர் சொன்னதிலிருந்து பணம் வழங்குவதில் உள்ள சில நடைமுறைகள், வவுச்சரில் கையெழுத்து போடுவது, வங்கியில் பணம் எடுப்பது போன்ற அலுவலக சம்பிரதாயங்கள் சில பூர்த்தியாகாததால் உடனடியாகப் பணம் வழங்க அவரால் இயலவில்லை என்பதாகப் புரிந்துகொண்டேன்.

திரும்ப வீயெஸ்வியிடம் வந்து கேஷியர் சொன்னதைச் சொல்லி, “ஆசிரியரிடம் சொல்வோமா சார்?” என்று கேட்டேன். “சார் ஊர்ல இல்லையே! ஃபாரின் போயிருக்கார். மாதக் கடைசியிலதான் வர்றார்!” என்றார்.

எனக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. நாட்கள் கடகடவென்று ஓடிக்கொண்டு இருந்தன. சாமி வரம் தந்தும் பூசாரி தரவில்லை என்கிற கதையாக, எனக்குப் பணம் கிடைக்காமலே இருந்தது.

ஆகஸ்ட் 29. “ரவி, ஆசிரியர் வந்துவிட்டார். வாருங்கள், அவரிடம் போய்ச் சொல்லலாம்!” என்று என்னை அழைத்துப் போனார் வீயெஸ்வி.

உள்ளே நுழைந்ததும், “வாங்கோ! எப்படியிருக்கா உங்க வொய்ஃப்? செக்கப்லாம் ஒழுங்கா பண்ணிண்டிருக்கேளா? கூட யார் இருக்கா கவனிச்சுக்கறதுக்கு?” என்றெல்லாம் அக்கறையோடு விசாரித்தார். சொன்னேன்.

“சார், அது விஷயமாத்தான் வந்தோம். இவர் எட்டாயிரம் ரூபாய் கடனா கேட்டிருந்தார் இல்லையா...” என்று வீயெஸ்வி ஆரம்பித்ததுமே, “அதான் அன்னிக்கே கொடுக்கச் சொல்லிட்டேனே..!” என்றார் ஆசிரியர்.

“இல்லை. இவருக்கு அந்தத் தொகை இன்னும் கிடைக்கலை!” என்றார் வீயெஸ்வி.

சரிந்து தளர்வாக உட்கார்ந்திருந்த ஆசிரியர் சட்டென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தார். “என்னது... இன்னும் கிடைக்கலையா, ஏன்?” என்று கோபமானவர், உடனே இன்டர்காம் மூலம் கேஷியரை அழைத்து, உடனே தன் அறைக்கு வரச் சொன்னார்.

அவர் வந்ததும், “இவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னேனே, ஏன் கொடுக்கலே?” என்று கேட்டார். கேஷியர் நடைமுறை புரொஸீஜரைச் சொல்லவும், “கையெழுத்து என்ன மண்ணாங்கட்டி கையெழுத்து! உங்களுக்கு எத்தனை கையெழுத்து போடணும், நான் போடறேன்!” என்று பேனாவை மேஜை மீது கோபத்துடன் எறிந்தார் ஆசிரியர். “அன்னிக்கு நானே உங்களைக் கூப்பிட்டு, ‘அவசரம்... இவருக்கு உடனே  பத்தாயிரம் ரூபாய் கொடுங்க’ன்னு சொல்லிட்டுப் போனேனா இல்லையா, பத்து நாள் ஆகியும் பணம் கொடுக்கலேன்னா இவர் என்ன பண்ணுவார் பாவம்? என்னைப் பத்தி என்ன நினைப்பார்? சே...! முதல்ல போய் பணத்தை எடுத்து வாங்க! வவுச்சரையும் கொண்டு வாங்க, கையெழுத்து போடறேன்! உடனே வரணும்!” என்றார்.

கேஷியர் ஓடிப் போய் பணத்தையும் வவுச்சரையும் கொண்டு வந்தார். வவுச்சரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, என்னிடம் பணத்தை நீட்டிய ஆசிரியர், “ஸாரி, ரொம்ப ஸாரி! கொடுக்கச் சொல்லிட்டுதான் போனேன். கொடுத்திருப்பார்னு நினைச்சேன். பணம் இல்லாம ரொம்ப சிரமப்பட்டிருப்பேள். தப்பு நடந்து போச்சு! மன்னிக்கணும்! உடனே போய் கவனியுங்கோ!” என்றார். (அடுத்த இரண்டு நாளில் மனைவியை சென்னை- மாம்பலம் ஹெல்த் சென்டரில் சேர்த்து, செப்டம்பர் முதல் தேதியன்று மகன் பிறந்தான்.)

புத்தம் புதியவன்; அலுவலகத்துக்குச் சற்றும் பழகாதவன்; நான் யார், உழைப்பாளியா, திறமைசாலியா, விகடனுக்குப் பயன்படுவேனா, தொடர்ந்து இங்கே வேலை செய்வேனா... எதுவும் தெரியாது! ஆனால், வாக்களித்தபடி உரிய நேரத்தில் எனக்குப் பணம் தந்து உதவ முடியவில்லையே என்பதற்காகப் பதறி, தன் அலுவலகத்தில் வெகு காலமாகப் பணிபுரியும் ஒருவரைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார் ஆசிரியர் என்றால், அவருடைய மனிதாபிமானத்துக்கு முன், அவருடைய பெருந்தன்மைக்கு முன் நான் தூசிலும் தூசு!

அதுவும் எவ்வளவு பெரிய வார்த்தை... ‘தப்பு நடந்து போச்சு! மன்னிக்கணும்!’

என் கண்கள் கரகரவென்று நீரைச் சொரிந்தன. இதோ, இதை எழுதிக்கொண்டிருக்கிற இப்போதும்!

எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியப் பெருந்தகையாளர் எஸ்.பாலசுப்ரமணியன் மரிக்கவில்லை; எங்கள் உடம்புகளில் ஓடும் ரத்த நாளங்களின் கதகதப்பாக, எங்கள் மூச்சுக் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவாக, எங்களின்  மூளை மடிப்புகளில் பொதிந்திருக்கும் நினைவுப் படிமங்களாக அவர் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

(இன்னும் சொல்வேன்)

Sunday, January 24, 2016

என் புகுந்த வீடு - 5

வானுயர நின்றவர்!

னது முதல் சிறுகதை, ‘கரிநாக்கு’ என்னும் தலைப்பில் கல்கி 17.9.1978 இதழில் வெளியானது!

கல்கி இதழின் பரிசீலனைக்கு அந்தக் கதையை நான் அனுப்பி 20  நாள் கூட ஆகியிருக்கவில்லை; கதை பிரசுரமாகி, புத்தகம் சங்கீதமங்கலம் கிராமத்திலிருந்த எங்கள் வீட்டுக்குத் தபாலில் வந்தது. நான் அப்போது நாலைந்து கி.மீ. தொலைவில் இருந்த அனந்தபுரம் டவுனுக்கு, டைப்ரைட்டிங் கிளாஸ் சென்றிருந்தேன். எஸ்.எஸ்.எல்.சி. முடித்து வீட்டில் நாலைந்து வருடமாக தண்டச்சோறாக இருந்ததால், பஸ்ஸையெல்லாம் எதிர்பார்க்காமல் தினமும் நடந்தே போய் வருவது வழக்கம்.

தபாலில் வந்த கல்கி பத்திரிகையை வாங்கிப் புரட்டிப் பார்த்த என் அப்பா, அதில் என் சிறுகதை பிரசுரமாகியிருந்ததைக் கண்டதும் பெரிய இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார். அவர் கை கால்கள் படபடத்து, வெடவெடத்துவிட்டன. எளிதில் உணர்ச்சிவசப்படுபவர் அவர். அவருக்கு நேர்மாறாக எதற்கும் உணர்ச்சிவசப்படாதவன் நான்.

நான் எழுத்தாளனாகவேண்டும் என்பது அப்பாவின் ஆசை. சாவி, மணியன், சுஜாதா போல் நானும் பெரிய எழுத்தாளனாகவேண்டும் என்று கனவு கண்டு, கதைகள் எழுத என்னை ஊக்குவித்தவர் அவர்தான். அப்படி இருக்கையில், நான் எழுதிய முதல் சிறுகதையே தேர்ந்தெடுக்கப்பட்டு, பத்திரிகையில் பிரசுரமானதில் அவருக்குப் படபடப்பு ஏற்பட்டதில் வியப்பில்லை.

கல்கி புத்தகத்தை எடுத்துக்கொண்டு அவரும் பொடிநடையாகவே நடந்து அனந்தபுரம் வந்து, டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட்டுக்கு வந்துவிட்டார். என்னை உடனே கிளம்பச் சொல்லி அழைத்தார். கிராமம் என்பதால் ஒரு மணி நேரக் கணக்கெல்லாம் இல்லாமல், தொடர்ந்து அரை நாள்கூடப் பயிற்சி செய்துகொண்டிருப்பேன். ஆனாலும், அப்பா வந்து என்னவோ அவசரம் என்று அழைத்ததால், உடனே கிளம்பினேன்.

வீடு திரும்பும் வழியில், “ரவி, ஒண்ணு சொல்வேன். படபடப்பு ஆகக்கூடாது. நல்ல விஷயம்தான். ஆனா, ரொம்ப உணர்ச்சிவசப்படாதே. அதிக சந்தோஷத்துல ஒண்ணு கிடக்க ஒண்ணு ஆயிடக்கூடாது...” என்று எக்கச்சக்கமாக பில்டப் கொடுத்துவிட்டு, பைக்குள்ளிருந்து கல்கி புத்தகத்தை எடுத்து என்னிடம் நீட்டினார். அவர் அதை என்னிடம் கொடுக்கும்போது அவர் விரல்கள் நடுங்கியதை கவனித்தேன். புத்தகத்தை வாங்கிப் புரட்டிப் பார்த்தேன். என் கதை ‘கரிநாக்கு’ அதில் மூன்று பக்க அளவில் பிரசுரமாகியிருந்தது. ‘ஸோபிலா’ என்றொரு ஓவியர் படம் வரைந்திருந்தார்.

பார்த்துவிட்டு, புத்தகத்தை அப்பாவிடமே கொடுத்துவிட்டேன். “பரவாயில்லையே! ரெண்டு மூணு மாசம் ஆகும்னு நினைச்சேன். கதை அனுப்பி பதினஞ்சே நாள்ல பிரசுரமானது ஆச்சர்யம்தான்!” என்றேன்.

“சந்தோஷத்துல கத்தணும்போல இருக்கா?” என்று கேட்டார். “எதுக்குக் கத்தணும்? கதை வந்ததுல சந்தோஷம்தான். பத்திரிகையில வேலை செய்யறவங்களே கதை, கட்டுரையெல்லாம் எழுதிப்பாங்கன்னுதான் நினைச்சிட்டிருந்தேன். வெளியிலேர்ந்து யாராவது அனுப்பினாலும் சிபாரிசு வேண்டியிருக்குமோன்னு நினைச்சேன். அது எதுவும் இல்லாம, கதை வெளியானது ஆச்சர்யம்தான். சந்தோஷம்தான். அதுக்கு மேல என்ன இருக்கு?” என்றேன்.

“படபடப்பா வர்றதா?” என்று கேட்டார். “எதுக்குப் படபடப்பு வரணும்? அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை. இன்னொரு கதை எழுதிப் போடலாம். நல்லா இருந்தா தேர்ந்தெடுப்பாங்கன்னு நம்பிக்கை வந்திருக்கு. அவ்வளவுதான்!” என்றேன்.

“புஸ்தகத்துல உன் பேரைப் பார்த்ததும் எனக்குப் படபடன்னு வந்துடுச்சு, தெரியுமா! அம்மா எனக்கு என்னவோ ஆகிப்போச்சுன்னு பயந்துட்டா!” என்றார்.

அப்பா இந்த அளவுக்கு உணர்ச்சிவசப்பட்டது எனக்கு வியப்பை அளித்த மாதிரி, நான் கொஞ்சம்கூட உணர்ச்சிவசப்படாதது அப்பாவுக்கு ஆச்சர்யம் அளித்தது.

முதல் கதை மட்டுமல்ல, அடுத்தடுத்து நான் எழுதி அனுப்பிய 12 சிறுகதைகள் கல்கி, ஆனந்த விகடன், குங்குமம், சாவி, தினமணி கதிர் ஆகிய பத்திரிகைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரம் ஆகியபோதும் நான் ரொம்பவெல்லாம் உணர்ச்சிவசப்படவில்லை. அதே போல், அதன்பின் அனுப்பிய சிறுகதைகள் சில பத்திரிகைகளிலிருந்து ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்னும் குறிப்போடு திருப்பியனுப்பப்பட்டபோதும் நான் பெரிதும் வருத்தமுறவில்லை. அப்பாதான் ரொம்ப ஏமாற்றமடைந்தார். சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது கடும் கோபம் கொள்வார். “சே... எவ்வளவு நல்ல கதை! இதைப் போய்த் திருப்பி அனுப்பியிருக்கானே! இந்த வாரம் அந்தப் புஸ்தகத்துல ஒரு கதை வந்திருக்கு. சுத்த தண்டம்! அதையெல்லாம் பிரசுரம் பண்றான். நல்ல கதையைத் திருப்பறானே!” என்று பத்திரிகையைத் திட்டித் தீர்ப்பார். எனக்குச் சிரிப்பாக இருக்கும்.

‘மாடு காத்துக்கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் தினமணி கதிருக்கு (பெரிய சைஸ்) ஒரு கதை எழுதிப் போட்டேன். நான் அதுவரை எழுதியதிலேயே அது கொஞ்சம் நீளமான கதை. எனவேதான் அதை தினமணி கதிருக்கு அனுப்பினேன். கிட்டத்தட்ட ஒரு வருஷம் ஆகியும் கதை பிரசுரம் ஆகவும் இல்லை; எனக்குத் திருப்பி அனுப்பப்படவும் இல்லை. இந்நிலையில் அந்தக் கதையை வேறு பத்திரிகைக்கு அனுப்பப் போவதாகவும், எனவே உங்கள் பத்திரிகையில் இதைப் பிரசுரிக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டு, தினமணி கதிருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டுவிட்டு, அதை வேறு பத்திரிகைக்கு அனுப்பினேன். அங்கிருந்து அது ஒரு மாதத்தில் திரும்பியது. பின்பு அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். அங்கிருந்தும் ஓரிரு மாதங்களில் திரும்பியது. இப்படியாக அந்தக் கதை நாலைந்து பத்திரிகைகளில் இருந்து திரும்பி, கடைசியாக ஆனந்த விகடனின் பரிசீலனையில் இருந்தது.

இந்த நிலையில், கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு, எந்த முன்னறிவிப்புமே இல்லாமல் மேற்படி கதை தினமணி கதிரில் ஒரு வரிகூடக் குறைக்கப்படாமல் ஆறு பக்கங்களில் விஸ்தாரமாகப் பிரசுரம் ஆகி, புத்தகம் வீட்டுக்கு வந்தது. ஓவியர் வர்ணம் அதற்குப் படம் வரைந்திருந்தார்.

கதை சிறந்த முறையில் தினமணி கதிரில் பிரசுரமானது ஒருபுறம் மகிழ்ச்சியைத் தந்தாலும், ஆனந்த விகடன் பரிசீலனைக்கும் அதை அனுப்பியிருக்கிறேனே, அங்கும் ஒருவேளை அது தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரமாகிவிட்டால் விகடன் என்னைத் தவறாக நினைத்துக் கொள்ளப் போகிறதே என்று பதற்றமும் கவலையுமாக, உடனே என் நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். தகவலுக்கு நன்றி தெரிவித்து ஒரு கடிதத்துடன் அந்தக் கதையை அங்கிருந்து திருப்பி அனுப்பினார்கள்.

பின்பு, தினமணி கதிருக்கும் ஒரு கடிதம் எழுதிப் போட்டேன். ‘கதையைப் பிரசுரித்தது குறித்து மகிழ்ச்சி. ஆனால், என் கதையைப் பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுத்துள்ளது குறித்து எனக்குத் தகவல் தெரிவிக்கப்படவே இல்லை. தவிர, அதை வேறு வேறு பத்திரிகைகளுக்குப் பரிசீலனைக்கு அனுப்பியபோதெல்லாம் ஒவ்வொரு முறையும் உங்கள் பத்திரிகைக்கு அதுகுறித்துக் கடிதம் எழுதி, அதைப் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். ஒரே கதை இரண்டு பத்திரிகைகளில் பிரசுரமானால் இருவருமே அல்லவா என்னைத் தவறாக நினைப்பீர்கள்? எனக்கல்லவா கெட்ட பெயர் ஏற்படும்?’ என்று சற்றுக் கோபமாகவே கடிதம் எழுதிப் போட்டேன். அதற்கும் அங்கிருந்து எந்த பதிலும் இல்லை.

ஆனால், அதன்பின்பும் தினமணி கதிரில் நான் பல சிறுகதைகள் எழுதியுள்ளேன். அவற்றை வெளியிட முதல் கதை போல் அதிக காலம் எடுத்துக்கொள்ளவில்லை. அதிகபட்சம் ஒரு மாதத்துக்குள் பிரசுரமாகிவிடும்; அல்லது, திரும்பிவிடும்.

இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்றால், என்னைப் பொறுத்த வரையில் கதை தேர்ந்தெடுக்கப்பட்டால் மகிழ்ச்சி; திரும்பி வந்தால் ஏமாற்றம். ஆனால், எந்தத் தகவலும் இல்லாமல் மாதக் கணக்கில் காத்திருக்க வைத்தால் கடுப்பும் கோபமும்தான் ஏற்படும். எனவே, ரிசல்ட் உடனடியாகத் தெரிந்துவிட வேண்டும் எனக்கு. என்னதான் வேலைப் பளு இருந்தாலும், ஒரு கதை அனுப்பி ஒரு மாதத்துக்குள் அதைப் பரிசீலித்து அந்த எழுத்தாளருக்கு ரிசல்ட் சொல்ல முடியவில்லை என்றால், அதில் அர்த்தமே இல்லை என்ற கருத்து உடையவன் நான்.

ஆனந்த விகடனில் வேலை கிடைத்து, சிறுகதைகளைப் பரிசீலிக்கும் பணியில் என்னை ஈடுபடுத்திக்கொண்டபோது, சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க அதுவரை அங்கே கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டிருந்த முறை எனக்கு அயர்ச்சியைத் தந்தது. நோக்கம் நல்ல நோக்கமாக இருக்கலாம். ஆனால், இதனால் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்கு எந்தத் தகவலும் இல்லாமல், அவர் அனுப்பிய கதை பரிசீலிக்கப்படுவதற்கே ஒரு வருடம், ஒன்றரை வருடம் ஆகும் என்கிறபோது, அவருக்குச் சலிப்பும் கடுப்பும் ஏற்படும் என்பதே உண்மை! எனவே, பரிசீலனையைத் துரிதப்படுத்த வேண்டும் என்று முனைந்தேன்.

மீசை மனோகரிடம் சென்று, பரிசீலிக்க வேண்டிய கதைகள் எத்தனை உள்ளன, திருப்பி அனுப்ப வேண்டியவற்றைத் திருப்பி ஆயிற்றா, தேர்ந்தெடுக்கப்பட்ட கதை குறித்த தகவல் சம்பந்தப்பட்ட கதாசிரியருக்கு அனுப்பப்பட்டதா போன்ற தகவல்களை விசாரித்தேன். அவர் சொன்ன விஷயங்கள் என்னை அதிர வைத்தன.

3000-க்கும் மேற்பட்ட கதைகள் இன்னும் பரிசீலனையில் இருந்தன. 300 கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அது குறித்த விவரம் எழுத்தாளருக்கு அனுப்பப்பட்டிருந்தன. அவற்றில் 100-க்கும் மேற்பட்ட கதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடத்துக்கு மேலாகியும் பிரசுரம் காணாதிருந்தன. ஓர் இதழில் அதிகபட்சம் ஐந்து கதைகள்தான் பிரசுரிக்க முடியும் என்கிற நிலையில், பிரசுரமாவதில் கால தாமதமாவது இயல்புதானே?

இந்நிலையில், இன்னும் மீதமுள்ள கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுக்க வேண்டும்; அவற்றை எப்போது பரிசீலித்து முடிப்பது, அவற்றில் தேர்ந்தெடுக்கப்படும் கதைகளை எப்போது பிரசுரிப்பது?! மலைப்பாக இருந்தது.

ஒரு வாரத்துக்கு சுமார் ஐம்பது கதைகளுக்கும் மேல் பரிசீலனைக்கு வந்துகொண்டிருந்த நிலையில், கைவசம் ஒரு மாதத்துக்குத் தேவையான, அதாவது 20 சிறுகதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து வைத்துக்கொண்டால் போதுமானது. மற்றவற்றைத் திருப்பி அனுப்பிவிடுவதே உசிதமானது. முடிவு தெரியாமல் காத்திருப்பவர்கள் மட்டுமல்ல; தேர்ந்தெடுக்கப்பட்டுப் பிரசுரம் ஆகாமல் வருடக்கணக்கில் காத்திருப்பவர்களும் அல்லவா எரிச்சலுக்கும் சலிப்புக்கும் ஆளாகியிருப்பார்கள்?

எனவே, நான் ஒரு முடிவுக்கு வந்தேன். இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 300 கதைகளிலிருந்து மிக மிகச் சிறப்பான கதைகளாக ஒரு 20 கதைகளை வடிகட்டித் தேர்ந்தெடுத்துக்கொண்டு, அவற்றை அடுத்தடுத்த வாரங்களில் வெளியிடுவதாக சம்பந்தப்பட்ட கதாசிரியருக்குத் தகவல் அனுப்புவது; மற்ற கதைகளை ஏதேனும் தகுந்த காரணம் சொல்லித் திருப்பி அனுப்பிவிடுவது; இன்னும் பரிசீலிக்க வேண்டிய 3000 கதைகளையும் அதிரடியாக ஒரு மாதத்தில் படித்து முடிப்பது.

இந்த என் முடிவை ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களை நேரில் சந்தித்துச் சொன்னேன். அதற்கான காரணத்தையும் விளக்கமாக எடுத்துரைத்தேன். அவர் புரிந்துகொண்டார். ஆனால், “தேர்ந்தெடுக்கப்பட்ட கதைகளைத் திருப்பி அனுப்புவது வாக்கு தவறுவதற்குச் சமம்; அதை நான் செய்ய மாட்டேன்” என்றார். “300 கதைகள் உள்ளன சார்! ஒரு வாரத்துக்கு ஐந்து கதைகள் வீதம் இவற்றைப் பிரசுரித்து முடிக்க 60 வாரங்கள், அதாவது இன்னும் ஒரு வருடத்துக்கு மேல் ஆகும் சார்!” என்றேன். “சரி, என்ன செய்யலாம்?” என்றார். பிரசுரக்கிறோம் என்று சொல்லிவிட்டு, ஏதோ ஒரு காரணம் சொல்லித் திருப்பி அனுப்புவதில் அவருக்கு உடன்பாடே இல்லை. அது பத்திரிகை தர்மமில்லை என்பது அவர் கருத்து.

என்றாலும், வேறு வழியில்லை! தவிர, வருடக் கணக்காக வைத்திருந்த கதைகளைப் பிரசுரித்தபோது, ஒரு சில கதைகள் சில மாதங்களுக்கு முன்பு வேறு பத்திரிகையில் பிரசுரமாகியுள்ளதாக வாசகர்களிடமிருந்து கடிதங்கள் வந்திருந்தன. கதாசிரியர்களைக் குற்றம் சொல்லியும் பயனில்லை. பொறுமை இழந்துதான் அவர்கள் தங்கள் கதைகளை வேறு பத்திரிகையின் பரிசீலனைக்கு அனுப்பியிருக்கக்கூடும். சில கதைகள் பிரசுரமானபோது, சம்பந்தப்பட்ட கதாசிரியரின் உறவினர்களிடமிருந்து, ‘அவர் இப்போது இல்லை. இறந்துபோய்விட்டார். ஆனந்த விகடனில் தன் கதை பிரசுரமாவதைப் பார்க்க வேண்டும் என்று ஏங்கினார்..’ என்கிற ரீதியில் கடிதங்கள் வந்தன.

இதையெல்லாம் ஆசிரியரிடம் சொல்லி, “கைவசம் பிரசுரத்துக்குத் தேர்வான கதைகள் அதிக எண்ணிக்கையில் உள்ளதால், தங்கள் கதையைப் பிரசுரிப்பதில் ஏற்படும் கால தாமதத்துக்கு வருந்துகிறோம். இந்நிலையில், தங்களை மேலும் காத்திருக்க வைப்பதில் அர்த்தமில்லை என்பதால், தங்கள் கதையை இத்துடன் திருப்பி அனுப்புகிறோம். மற்றபடி, தங்களின் இந்தச் சிறுகதை மிகச் சிறப்பானது என்பதில் சந்தேகம் இல்லை. தங்களின் எழுத்துப் பணி சிறக்க வாழ்த்துக்கள்!” என்கிற கடிதத்துடன் அவற்றைத் திருப்பி அனுப்பிவிடுவதே சரி என்றேன்.

மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். பின்பு,  அவர் அந்தக் கடிதத்தில் சேர்க்கச் சொன்ன ஒரு தகவல், அவர் மீதான மரியாதையை வானம் வரை உயர்த்தியது.

அவர் சொன்னார்...

(இன்னும் சொல்வேன்)

Sunday, January 10, 2016

என் புகுந்த வீடு - 4

முன்குறிப்பு: ‘நீங்கள் விகடனில் சேர்ந்து பத்துப் பதினைந்து ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறீர்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். எனவே, நீங்கள் இந்தப் பதிவில் தொடரும் போடுவதில் எந்த சுவாரஸ்யமும் இல்லை. ’ என்பதாக செல்போனிலும், ஃபேஸ்புக் உள்டப்பியிலும்,  திரு.சுரேஷ்கண்ணன் உள்படப் பலர் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். தொடரும் போடுவது சுவாரஸ்யத்துக்காக அல்ல. இது கற்பனைக் கதை இல்லை. எனவே, இதில் சுவாரஸ்யத்தையும் திடுக் திருப்பங்களையும் வலிந்து திணிக்கவும் முடியாது. நடந்தவற்றை ஞாபகப்படுத்திக்கொண்டு என்போக்கில் எழுதிக்கொண்டு போகிறேன். எல்லாவற்றையும் ஒரே பதிவில் எழுதிவிட முடியாது; படிப்பவர்களுக்கும் அலுப்புத் தட்டும் என்பதால் கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன். எனவேதான், இடையில் தொடரும் போட வேண்டிய கட்டாயம். மற்றபடி, சுவாரஸ்ய  நோக்கம் காரணமில்லை.
தேறுமா, தேறாதா?

விகடனில் இந்த முறையும் வேலை கிடைக்கப் போவதில்லை என்கிற அவநம்பிக்கையோடும் ஏக்கத்தோடும் நான் மேலும் காத்திருக்கப் பொறுமையின்றி எழுந்தேன். அதே நேரம், ரிசப்ஷனிஸ்ட் பத்மினி என்னிடம் “நீங்கதானே ரவிபிரகாஷ்? உங்களை மேலே வீயெஸ்வி சார் வரச் சொன்னார்” என்றார்.

மேலே போனேன். “வாங்க ரவிபிரகாஷ், நீங்க விகடன்ல சேர்ந்தாச்சு!” என்று கைகுலுக்கினார் வீயெஸ்வி. “நம்ம ஸ்டாஃப்களையெல்லாம் உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன் வாங்க” என்று அவரது அறையை விட்டு என்னை வெளியே அழைத்துக்கொண்டு வந்தார்.

இப்போதுள்ள இதே கட்டடம்தான். ஆனால், அன்றைக்கு உள்கட்டமைப்பு முற்றிலும் மாறுபட்டிருந்தது. முதல் மாடியில் நுழையும்போதே எதிரில் ஆசிரியரின் அறை இருக்கும். அதற்கு முன்பாக இடப்புறம் திரும்பும் நடைவழியில் இடப்புறமாக மதன் சார், ராவ் சாருக்கான அறைகளும், வலப்புறம் மீட்டிங் ஹாலும் இருக்கும். நேரே சென்றால், பெரிய ஹால். ஹாலின் கடைசியில் ஓரமாக வீயெஸ்வி மற்றும் பிரகாஷ் எம்.சுவாமிக்கான (அவர் அப்போது ஜூனியர் விகடன் பொறுப்பேற்றிருந்தார்)  தனி அறைகள் இருந்தன.

வீயெஸ்வியுடன் ஹாலுக்கு வந்தேன். ஹால் நடுவில் பெரிய இடம் விட்டு, ஓரமாக மேஜை, நாற்காலிகள் போடப்பட்டு இருந்தன. இந்தப் பக்கம் ஒன்றும், அந்தப் பக்கம் ஒன்றுமாக இரண்டு கேபின்கள் இருந்தன. ஒன்றில் அப்போதைய விகடன் பொறுப்பாசிரியர் சுபா வெங்கட் இருந்தார்; மற்றொன்றில் ஜூனியர் விகடனின் பொறுப்பாசிரியர் கே.அசோகன் இருந்தார். இருவரிடமும் என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார் வீயெஸ்வி.

 பின்னர் ஹால் ஓரங்களில் அமர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்த ஆனந்த விகடன், ஜூனியர் விகடன் ஆசிரியர் குழுவினரிடம் ஒவ்வொருவரிடமாக என்னை அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினார். ரா.கண்ணன், உபைதுர்ரஹ்மான், கௌதம், ஆரோக்கியவேல் ஆகியோரை முதல் நாள் சந்தித்தது நினைவிருக்கிறது.

பின்னர் இரண்டாம் மாடிக்குச் சென்றோம். அங்கே பி.சுவாமிநாதன், சிவகுமார் மற்றும் பலரைச் சந்தித்தேன். தவிர, புரூஃப் ரீடர்கள் எனப் பத்து பேர் இருந்தனர்.

அடுத்து, டிடிபி செக்‌ஷனுக்கு என்னை அழைத்துப் போனார் வீயெஸ்வி. அங்கே ஏழெட்டு சிஸ்டம்களில் ஏழெட்டுப் பேர் அமர்ந்து கையெழுத்துப் பிரதிகளைப் பார்த்து கம்போஸ் செய்துகொண்டிருந்தார்கள். தினகர், ரேவதி என இருவர் அவர்களுக்குத் தலைமையாக இருந்தார்கள்.

கையெழுத்துப் பிரதி கம்போஸ் ஆகி வந்ததும், முதலில் அந்த பிரிண்ட் அவுட் புரூஃப்ரீடர்களிடம் போகும். அவர்கள் அனைவரும் ஒரு சுற்று அதைப் படித்துத் திருத்துவார்கள். பின்பு உதவி ஆசிரியர்களிடம் அந்த ஃபைனல் பிரிண்ட் அவுட் வரும். அவர்கள் எடிட் செய்து, திருத்தங்கள் செய்வார்கள். இப்படி ஏழெட்டு முறை திருத்தப்பட்டு,  இறுதி பிரிண்ட் அவுட் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டிடம் போகும்.

மூன்றாவது மாடியில் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்கள் இருந்தார்கள். நீளமும் அகலமுமான பழைய கால தேக்கு மர மேஜையில் பிரபு, வேதா இருவரும் பெரிய பெரிய சார்ட் அட்டைகளில் பிரமாண்டமாக தலைப்பு எழுத்துக்களை எழுதிக்கொண்டும், அவற்றில் சில அட்டைகளை புத்தக அளவில் நறுக்கி வைத்துக்கொண்டு, அதில் மேட்டர் இடம்பெறும் பகுதியை அளந்து பென்சிலால் கோடு போட்டுத் தயார் செய்து வைத்துக்கொண்டும் இருந்தார்கள். அவர்களிடம் ஒரு டப்பா ரப்பர் சொல்யூஷன் இருந்தது. வரும் பிரிண்ட் அவுட்களைக் கத்தரித்து லே-அவுட்டுக்கேற்ப படங்களுக்கு இடம் விட்டு அந்த அட்டைகளில் ரப்பர் சொல்யூஷனால் ஒட்டுவார்கள். இப்படி ஒரு புத்தகத்துக்கான பக்கங்கள் அனைத்தும் அட்டைகளாகத் தயாரானதும் அவை ஸ்கேன் செய்யப்பட்டு, பிளேட் போடப்பட்டு, பிரஸ்ஸுக்குப் போகும். இதெல்லாம் நான் சாவி பத்திரிகையிலேயே பார்த்ததுதான். அங்கே டிடிபி-க்குப் பதிலாக ஹேண்ட் கம்போஸிங் செய்து, டிரெடில் மெஷினில் பிரதி எடுத்து, புரூஃப் படிக்கத் தருவார்கள். அதை ‘கேலி’ என்போம்.

லே-அவுட் செக்‌ஷனில் தலைமை ஓவியராக விவேக் இருந்தார். நான் விகடனில் இவரின் நகைச்சுவை ஓவியங்களைப் பார்த்து ரசித்துள்ளேன். தவிர, ஓவியர் வாணியும் அவ்வப்போது வாரத்துக்கு ஒருமுறை அல்லது இருமுறை விகடன் அலுவலகத்துக்கு வந்து, ஜோக்குகளுக்குப் படங்கள் வரைந்து தந்துவிட்டுப் போவார். விகடனிலேயே இதுவரை மிக அதிக காலம் பணிபுரிந்த ஓவியர்/ ஊழியர் அவர்தான். சுமார் 45 வருடங்கள்!

அங்கே அவருக்கென்று ‘போடியம்’ மாதிரி ஒரு மேஜை இருந்தது. அதில் சார்ட் அட்டை வைத்து,  நின்றுகொண்டேதான்  வரைவார். ஒரு ‘ஸ்ப்ரே கன்’னும் உண்டு. சின்ன ஸ்பூன் மாதிரி இருக்கும் அதில் கொஞ்சம் வாட்டர் கலர் விட்டு, ஸ்விட்ச் போட்டால், பூ மாதிரி தெளிக்கும். அதை கோட்டுப் படத்தின் மீது தேவையான இடத்தில் காண்பித்தால் ஷேடு விழும். அந்தக் கால ஓவியங்களில் அது ரொம்ப ஃபேமஸ். இன்றைய கணினி யுகத்தில், இதையெல்லாம் நினைத்துப் பார்க்கிறபோது ரொம்பத் தமாஷாக இருக்கிறது.

மூன்றாம் மாடியில் நான் பார்த்த இன்னொரு முக்கிய விஷயம் போட்டோ லைப்ரரி. ஜார்ஜ் என்பவரும், அவருக்கு உதவியாக ரவி என்பவரும் அதற்கு இன்சார்ஜாக இருந்தார்கள். பேங்க் லாக்கர் மாதிரி வரிசையாக இழுவைப் பெட்டிகள் கொண்ட, நீளமும் அகலமுமான ஒரு அலமாரி. தவிர, கூடவே, அடையாளக் கார்டுகள் கொண்ட ஒரு சின்ன பெட்டி. நாம் ஒரு போட்டோ கேட்டால், உடனே அந்த ஐடி கார்டுகளைத் தள்ளி, அடையாளக் குறியீட்டைக் கண்டுபிடிப்பார்கள். பின்பு, கரெக்டாக அந்த அலமாரியில் குறிப்பிட்ட இழுவைப் பெட்டியை இழுப்பார்கள். அதில் வரிசையாக ப்ரவுன் கவர்களில் படங்கள் இருக்கும். மேலே எழுத்துக்கள் இருக்கும். குறிப்பிட்ட ஒரு கவரை மேஜை மேல் எடுத்துப் போட்டுக் கவிழ்ப்பார்கள். கொட்டும் புகைப்படங்களிலிருந்து நமக்குத் தேவையான புகைப்படத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இன்றைக்கு எல்லாமே டிஜிட்டல் மயமாகி, கம்ப்யூட்டரில் ஸேவ் ஆகியுள்ளது.

எல்லாரையும் அறிமுகம் செய்துகொண்டுவிட்டுக் கீழே வந்தேன்.  முதல் தள ஹாலில், நட்ட நடுவே ஒரு மேஜை, நாற்காலி போடப்பட்டு இருந்தது. ‘இதுதான் உங்கள் ஸீட்!’ என்றார் வீயெஸ்வி. மற்ற உதவி ஆசிரியர்கள் எல்லாம் ஓரங்களில் வரிசையாக இருக்க, நான் மட்டும் துண்டாக நட்ட நடுவில் அமர்ந்திருப்பது சற்றுக் கூச்சத்தை ஏற்படுத்துவதாயிருந்தது. எனக்கான நாற்காலியில் அமர்ந்தேன். மேஜை இழுப்பைத் திறந்தேன். பால் பாயிண்ட் பென்கள், ஒரு முழு பென்சில், பென்சில் ஸ்க்ரூ, பிளாஸ்டிக் ஸ்கேல், ஒரு ஸ்க்ரிப்ளிங் பேட், ஜெம் க்ளிப் பாக்கெட், குண்டூசிகள் நிறைந்த குஷன் டப்பி என அனைத்தும் முறையாக வைக்கப்பட்டிருந்தன.

சற்று நேரத்தில் ஓர் அட்டெண்டர் என் மேஜையில் ஒரு பெரிய கதைக் கட்டை வைத்துவிட்டுப் போனார். “இதை நீங்க படிச்சு, செலக்ட் பண்றதை ஒரு குறிப்போடு இணைச்சு, தனியா எடுத்து என்கிட்ட கொடுங்க” என்றார் வீயெஸ்வி. குறிப்பு எழுதவென தனியாக அச்சடிக்கப்பட்ட அரைப் பக்கத் தாள்கள் இருந்தன. அதில் முதல் பரிசீலனை, இரண்டாம் பரிசீலனை, பொறுப்பாசிரியர் குறிப்பு, ஆசிரியர் குறிப்பு எனக் கட்டங்கள் இருந்தன. முதல் பரிசீலனையில் என் குறிப்பை எழுதிக் கொடுக்க வேண்டும். இப்படி ஒவ்வொரு சிறுகதையும் இந்த இரண்டு மூன்று கட்டப் பரிசீலனைகளைத் தாண்டினால்தான் ஆசிரியரின் கவனத்துக்கே போகும். அவர் படித்து ஒப்புதல் அளித்தபின்புதான் அது குறித்த தகவல் கடிதம் சம்பந்தப்பட்ட எழுத்தாளருக்குப் போகும்.

முதல் ஒரு மாதம் தள்ளுவது பெரும்பாடாக இருந்தது. சாவியில் பரபரப்பாக இருந்துவிட்டு, இங்கே நாளும் பொழுதும் கதைகளைப் படித்துத் தேர்ந்தெடுத்துக்கொண்டு இருப்பது போரடித்தது.

ஒருநாள்... வழக்கம்போல் சிறுகதைகளைப் படித்துப் பரிசீலித்துக் கொண்டிருந்தேன். நான் பொதுவாக, முதலில் ஓரிரு பாராக்களைப் படிப்பேன்; பின்னர் கடைசி பாராவைப் படிப்பேன். அந்தக் கதை தேறுமா, தேறாதா என்று தெரிந்துவிடும். தேறாதவற்றைப் பெருக்கல் குறி போட்டு ஒதுக்கி வைத்துவிடுவேன். இப்படி 100 கதைகள் கொண்ட கட்டை மிகச் சாதாரணமாக ஒரு நாளில் படித்துப் பரிசீலித்துக்கொண்டு இருந்தேன்.

இதை அன்று என் அருகில் வந்து நின்று கவனித்துக்கொண்டு இருந்த வீயெஸ்வி அவர்கள், “என்ன படிக்கிறீங்க? இப்படி நுனிப்புல் மேய்ஞ்சா என்ன அர்த்தம்? முழுசா படிக்க வேணாமா? இப்படித்தான் ஆரம்பத்துலேர்ந்தே படிச்சிட்டிருக்கீங்களா?” என்றார். விகடனில் ஒவ்வொரு கதையையும் முழுமையாகப் படித்துப் பரிசீலிப்பதே வழக்கம் என்றார்.

“முழுக்கப் படிக்க வேண்டியதில்லை சார்! ஒரு கதையைப் படிக்க ஆரம்பிக்கும்போதே அது தேறுமா, தேறாதா என்று என்னால் சொல்லிவிட முடியும். இருந்தாலும், கிளைமாக்ஸையும் படிக்கிறேன்” என்றேன். அவர் சமாதானமாகவில்லை.

“இல்லை.  இது சரியில்லை. நீங்கள் ஒதுக்கிய கதைகளில் நல்ல கதை இருந்தால் என்ன செய்வது?” என்றார்.

அதற்கு நான் சொன்ன பதில் அவரைத் துணுக்குறச் செய்திருக்க வேண்டும். ‘என்ன இவன், சேர்ந்து இன்னும் ஒரு மாதம்கூட ஆகவில்லை; இப்படிச் சொல்கிறானே இவன்!’ என்று நினைத்திருக்க வேண்டும்.

“நான் இங்கு வந்ததிலிருந்து இதுவரைக்கும் சுமார் 1000 கதைகளுக்கு மேல் படித்திருப்பேன் என்று நினைக்கிறேன். அதில் முதல் கட்ட பரிசீலனையில் நான் தேர்ந்தெடுத்தது பத்துப் பன்னிரண்டு இருக்கலாம். மீதி என்னால் ஒதுக்கப்பட்ட கதைகள் அத்தனையும் மேலே மீசை மனோகரிடம் இருக்கின்றன. அவற்றைக் கொண்டு வரச் சொல்லுங்கள். யாரிடமேனும் கொடுத்துப் படிக்கச் சொல்லுங்கள். (அப்போது விகடனின் பரிசீலனைக்கு வரும் சிறுகதைகள், வெளியே தரமான எழுத்தாளர்கள் சிலரிடமும் முதல் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டு வந்தன.) அவற்றிலிருந்து ஒரே ஒரு சிறுகதையையேனும் யாரும் இது நல்ல கதை என்று தேர்ந்தெடுத்துக் கொடுத்துவிட்டால், இந்த மாதத்துக்கான சம்பளம்கூட வாங்காமல் நான் இந்த வேலையை விட்டுப் போய்விடுகிறேன்” என்றேன்.

“என்னவோ போங்க!” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார் வீயெஸ்வி.

அந்த ஆண்டு இறுதிக்குள், விகடனுக்கு வரும் சிறுகதைகளைப் பரிசீலிக்கும் முறையை துரிதப்படுத்தினேன் நான். அது பற்றி விரிவாக அடுத்த வாரம்.

(இன்னும் சொல்வேன்)  

Sunday, January 03, 2016

என் புகுந்த வீடு - 3

இன்னொரு இன்டர்வியூ!

ப்ரல் 1. 

பத்துப் பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் நான் நுழைய ஆசைப்பட்ட அந்த பிரமாண்ட கோட்டைக்குள் ஒருவாறாக நுழைய அனுமதி கிடைத்து, எக்கச்சக்க ஆர்வத்தோடும் எதிர்பார்ப்போடும் கனவுகளோடும் நான் சென்றபோது, எனக்கு முதலில் ஏமாற்றமே காத்திருந்தது.

ரிசப்ஷனிஸ்ட் நான் வந்த காரணம் பற்றி விசாரித்தார். இன்றுமுதல் விகடன் எடிட்டோரியலில் வேலையில் சேர்ந்திருப்பதாகச் சொன்னேன். அப்பாயின்ட்மென்ட் ஆர்டரைக் காட்டும்படி கேட்டார். “இன்னும் தரவில்லை. இன்றைக்குத் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்” என்றேன். “சற்று அப்படி உட்காருங்கள்” என்று இருக்கையைக் காண்பித்தார். பின், இன்டர்காமில் யாருடனோ பேசினார். அதன்பின்பு ஒரு அட்டெண்டரை அழைத்து, என்னை திரு.வீயெஸ்வியிடம் அழைத்துப் போகச் சொன்னார்.

நானும் அவரோடு முதல் மாடியில் இருந்த வீயெஸ்வி சாரின் அறைக்குச் சென்றேன். “வாருங்கள் ரவிபிரகாஷ்!” என்று வரவேற்ற அவர், என்னை அதே தளத்தில் இருந்த வேறொரு அறைக்கு அழைத்துச் சென்றார். ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்களின் அறையைவிட மூன்று மடங்கு பெரிதான அறை அது.  ஹால் போன்றதொரு பிரமாண்ட அறை.

அங்கே நீளமும் அகலமுமான ஒரு பெரிய மேஜையின் பின்னால், சுழல் நாற்காலியில் அமர்ந்திருந்தவர் கார்ட்டூனிஸ்ட் மதன்.

“இவர் ரவிபிரகாஷ். சாவி பத்திரிகையில், சாவி சாரின் நேரடிப் பார்வையில் வொர்க் பண்ணினவர். இங்கே வேலைக்குச் சேர அப்ளிகேஷன் கொடுத்திருக்கார். நீங்க பார்த்துக்குங்கோ!” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு, வீயெஸ்வி அவர்கள் வெளியேறிவிட்டார்.

அதன்பின், மதன் சாருக்கும் எனக்குமான உரையாடல் தொடங்கியது.

“எத்தனை வருஷமா சாவியில வொர்க் பண்ணினீங்க ரவிபிரகாஷ்?” என்று மெலிதான புன்னகையோடு கேட்டார் மதன். 1987-லிருந்து பணி புரிந்ததைச் சொன்னேன்.

“சாவி ஏன் நின்னு போச்சு? என்ன பிரச்னை?” என்றார். நான் உள்பட ஏழெட்டு பேரை சாவி சார் பெங்களூர் அழைத்துச் சென்றதையும், அங்கே ஏற்பட்ட ஒரு குழப்பத்தால் சாவி சார் என் மீது கோபம் கொண்டதையும், அதன் காரணமாக அங்கேயே பத்திரிகையை மூடிவிட்டதாக அவர் அறிவித்ததையும் திரு.மதனிடம் சொன்னேன். புன்சிரித்தார்.

“சாவி ரொம்ப கோபக்காரரா?” என்று கேட்டார்.

“ரொம்பவே! ஒருத்தனிடம் திறமை இருக்குன்னு தெரிஞ்சா ஓஹோன்னு கொண்டாடுவார். மனம் திறந்து பாராட்டுவார். உயரே தூக்கி வைப்பார். அதுவே அவன் ஒரு சின்ன தப்பு பண்ணினாலும், கண்டபடி திட்டுவார். நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேள்வி கேப்பார்” என்றேன்.

“அவர் கோபக்காரர், கண்டபடி திட்டினார்ங்கிறதாலதான் நீங்க சாவியை விட்டு வெளியே வந்தீங்களா?” என்று கேட்டார் மதன்.


“ஏற்கெனவே இரண்டு முறை அவரோட கோபம் தாங்காம வெளியேறியிருக்கேன். ஆனா, ஒரு சில மாதங்கள்ல மீண்டும் அவர் கிட்டேயே போயிருக்கேன். காரணம், அவர் கொடுத்த உற்சாகம்; சுதந்திரம். கோபம் உள்ள இடத்துலதான் குணமும் இருக்கும்கிற மாதிரி, அவர் ரொம்ப கோபக்காரராக இருந்தாலும் என் மீது நிறைய நம்பிக்கை வெச்சிருந்தார். அவர் என்னைக் கண்டிச்சது, திட்டினது எல்லாமே என் மேலுள்ள அக்கறையினால்தான். இது அவர் திட்டும்போது புரியறதில்லை. அப்புறம் நிதானமா யோசிக்கும்போது புரியும். அதனால நானே திரும்ப அவரிடம் போயிடுவேன். அவரும் எதுவுமே நடக்காத மாதிரி அன்போடு என்னைச் சேர்த்துப்பார். ஆனா, இந்த முறை அவரை விட்டு நான் வெளியேறினதுக்குக் காரணம் அவர் காட்டிய கோபம் இல்லை. பத்திரிகையை நடத்த பொருளாதார ரீதியா அவர் ரொம்ப சிரமப்பட்டுக்கிட்டிருந்தார். கடன்கள் பெருகிப் போச்சு. வரவேண்டிய நிலுவைத் தொகைகள் வந்து சேரவே இல்லை. பத்திரிகையை நிர்வகிக்கவும் சரியான ஆள் இல்லை. சாவி சார் சிறந்த பத்திரிகையாளர். ஆனா, சிறந்த நிர்வாகி கிடையாது. அவர் வாரிசுகளும் இந்தத் துறையில் இல்லை. இன்னிக்கில்லேன்னா நாளைக்கு, நாளைக்கில்லேன்னா அடுத்த வாரம் என்கிற நிலைமையில்தான் சாவி பத்திரிகையின் ஆயுள் இருந்தது. இந்த நிலையில் சார் திடீர்னு ஒரு நாள் பத்திரிகையை மூடிட்டா என் கதி என்ன ஆகுறதுன்னு கவலையா இருந்தது. அதனால்தான் அவரோட இந்தக் கோபத்தை ஒரு சாக்கா வெச்சு, அங்கிருந்து வெளியேறிட்டேன்...” என்று விரிவாகச் சொன்னேன்.

“ஒருவேளை, சாவி பத்திரிகை நல்லபடியா நடந்து, இன்னும் ஒரு பத்து வருஷத்துக்குக் கவலையில்லேன்னு தெரிஞ்சா, நீங்க அங்கே வேலையில் தொடர்ந்திருப்பீங்களா?” என்று கேட்டார் மதன்.

“கண்டிப்பா! அவர் கிட்டேர்ந்து பிரிஞ்சு வரணும்கிறது என் விருப்பம் இல்லை. என் கால்கள் பிடிமானமில்லாமல் அந்தரத்தில் தொங்குற மாதிரி இருந்துது நிலைமை. எனவே, என் காலை அழுத்தமா ஊனிக்கணும்னுதான் வெளியேறினேன். அந்த பயம் இல்லைன்னா, அவரிடமே பணியில் தொடர்ந்திருப்பேன்” என்றேன்.

“அப்போ ஆனந்த விகடனில் வேலை செய்யணும்கிறது உங்க நோக்கம் இல்லை!” என்று கேட்டுப் புன்னகைத்தார் மதன்.

“ஆனந்த விகடன்லதான் வேலை செய்யணும்னு எனக்கு ஒரு பெரிய கனவே உண்டு. அதுக்காக ஏற்கெனவே முயற்சி பண்ணித் தோத்திருக்கேன். இங்கே வேலை செய்ய ஒரு தகுதி வேணும்; ஒரு கொடுப்பினை வேணும். எனக்கு அதுக்கான தகுதியோ கொடுப்பினையோ இல்லைன்னு தெரிஞ்ச பிறகுதான், புஷ்பாதங்கதுரை சிபாரிசுல சாவி சாரிடம் வேலைக்குச் சேர்ந்தேன். அதன்பிறகு, எனக்கு வேறெந்தச் சிந்தனையும் எழுந்ததில்லை. அவர் என் மீது சில சமயம் கோபப்பட்டால்கூட, அது என்னோட வளர்ச்சிக்காகத்தான்னு எனக்கு நல்லா புரியுது. என் மீது சாவி சாருக்கு தனிப்பட்ட அபிமானம் உண்டு. அன்பு உண்டு. அதை உணர்ந்த பிறகு அவரை விட்டு வெளியேற நான் விரும்பியதில்லை. எனவே, சாவி பத்திரிகை எந்தத் தொய்வும் இல்லாமல் இன்னும் பத்து வருஷம் நீடிக்கும் என்கிறபட்சத்தில், ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றியே இருக்காது என்பதுதான் உண்மை. எனவே, நான் மீண்டும் ஒருமுறை விகடன் வேலைக்கு முயற்சி பண்ணியே இருக்க மாட்டேன்!” என்றேன்.

“ம்ம்...” என்று சிந்தனையோடு தமது ஃப்ரெஞ்ச் தாடியை வருடி விட்டுக்கொண்டார் மதன்.

பின்னரும் அவர் கேட்ட கேள்விகள் எல்லாம், சாவி பத்திரிகையில் எனக்கு ஏற்பட்ட சுவாரஸ்யமான அனுபவங்கள், அட்டைப்பட ஜோக் போட்டு கைதானது பற்றியதாகவே இருந்தன.

இங்கே ஓர் உண்மையை நான் சொல்லியே ஆகவேண்டும். என் அப்ளிகேஷனின்பேரில் மதன் சார் அப்போது என்னை இன்டர்வியூ செய்துகொண்டிருக்கிறார் என்பதை நான் உணரவே இல்லை. சுத்தமாக அது எனக்கு உறைக்கவே இல்லை. அவர் இயல்பாக என்னோடு பேசிக்கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொண்டிருந்தேன். அதனால், அவர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் வெள்ளந்தியாக பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன்.

எவ்வளவு வெள்ளந்தி என்று, அவர் கேட்ட ஒரு கேள்விக்கு நான் அளித்த பதிலைச் சொன்னால் உங்களுக்குப் புரியும்.

பேச்சினூடே மதன் சார் என்னிடம், “ரவி, சிறந்த கார்ட்டூனிஸ்ட்னு நீங்க யாரைச் சொல்வீங்க?” என்று கேட்டார்.

நான் தயக்கமே இல்லாமல், “மதிக்குமார்தான் சார்!” என்றேன். இப்போது தினமணி நாளேட்டில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணிபுரிகிறாரே, அந்த ‘மதி’தான்! அவர் அப்போது தொடர்ந்து சாவி பத்திரிகையில் கார்ட்டூன்கள் வரைந்துகொண்டிருந்தார். அவர் ஏற்கெனவே ‘மக்கள் குரல்’ நாளேட்டில் ஃப்ரீலான்சராக கார்ட்டூன்கள் வரைந்துகொண்டிருந்தார். பின்னர் ‘இதயம்பேசுகிறது’ பத்திரிகையிலும் ‘சிதம்பரம்’ என்ற பெயரில் கார்ட்டூன்கள் வரைந்தார். 

அவர் வரைந்த கார்ட்டூன்களை எல்லாம் கொண்டு வந்து என்னிடம் காண்பித்து, சாவி பத்திரிகையில் கார்ட்டூன் வரைய வாய்ப்பு கொடுக்கும்படி கேட்டார். அவரின் கார்ட்டூன்களைப் பார்த்து அசந்து போனேன். ஒவ்வொன்றும் புத்தம்புதுச் சிந்தனையோடு, அற்புதமாக இருந்தன.  திருத்தமாக இருந்தன. கேலி, கிண்டல், நகைச்சுவை என கார்ட்டூனுக்கு இருக்கவேண்டிய அத்தனை ரசனைகளும் குறைவற இருந்தன. சொல்ல வந்த விமர்சனத்தை சின்னச் சின்ன கோடுகளில் நறுக்கென்று சொல்லும் அவரின் உத்தி அசத்தலாக இருந்தது. அவரை நான்தான் சாவி பத்திரிகையில் கார்ட்டூன்கள் போடச் செய்தேன்.

சாவி சார், மதியின் கார்ட்டூன்களைப் பார்த்து பிரமித்துப் போனார். ஒவ்வொரு வாரமும் நாலைந்து கார்ட்டூன் ஐடியாக்களை ரஃப் ஸ்கெட்ச் போட்டுக் கொண்டு வந்து  காட்டுவார் மதி. அதில் எதை எடுப்பது, எதை விடுப்பது என்று குழப்பமே வந்துவிடும். அத்தனையுமே அற்புதமாக இருக்கும். பின்னர் ரொம்ப யோசித்து, அவற்றிலிருந்து ஒன்றைத் தேர்ந்தெடுப்பார் சாவி சார். ஒருமுறை ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்து மதி போட்டிருந்த எட்டு கார்ட்டூன்களையுமே தேர்ந்தெடுத்து, எட்டுப் பக்கங்களுக்கு வரிசையாகப் போடச் சொன்னார் சாவி. அந்த அளவுக்குத் திறமையானவர் கார்ட்டூனிஸ்ட் மதிக்குமார்.

எனவே, மதன் சார் கேட்டதுமே சற்றும் தயக்கமின்றி, “மதிக்குமார்தான் சிறந்த கார்ட்டூனிஸ்ட்” என்றேன்.

மதன் சார் என்னை ஆழமாகப் பார்த்து, “ம்... இஸ் இட்?” என்றபோதும் சுதாரிக்காமல், “ஆமாம் சார்” என்றேன்.

கேட்பவர், ஆனந்த விகடனின் இணையாசிரியரும், கார்ட்டூனிஸ்ட்டுமான மதன்; நான் இங்கே வேலை கேட்டு விண்ணப்பித்திருக்கிறேன். அவர் என்னை இன்டர்வியூ செய்யவில்லை, சும்மாதான் கேட்கிறார் என்றே வைத்துக் கொள்வோம். நான் என்ன பதில் சொல்லியிருக்க வேண்டும்? “என்ன சார் நீங்க, உங்களைவிட சிறந்த கார்ட்டூனிஸ்ட் உண்டா? எனக்கு உங்கள் கார்ட்டூன்கள் என்றால் உயிர்! நீங்கள் இந்திராகாந்தியை கார்ட்டூனில் தத்ரூபமாகக் கொண்டு வந்தது போல் வேறு யாருமே போட்டதாக எனக்குத் தெரியவில்லை...” என்று சிலிர்ப்பும் பரவசமுமாகக் கொட்டியிருக்க வேண்டாமா? புத்தியுள்ள பிள்ளை அதைத்தானே செய்வான்? சரி, அதுதான் போகட்டும்... அவரைத்தான் சொல்லவில்லை. தமிழ்ப் பத்திரிகையில் அல்லாது தி ஹிண்டு, இண்டியன் எக்ஸ்பிரஸ் என ஆங்கிலப் பத்திரிகைகளில் வரையும் கார்ட்டூனிஸ்ட், அல்லது வெளிநாட்டு கார்ட்டூனிஸ்ட்டுகளில் யார் பெயரையாவது சொல்லியிருக்கக் கூடாதா? 

நான்தான் முழு அசடனாயிற்றே! மதிக்குமார் பெயரை இரண்டாம் முறையும் மதன் சாரிடம் அழுத்தம் திருத்தமாகச் சொன்னேன்.

அப்புறம், அவர் மேற்கொண்டு சம்பிரதாயத்துக்கு நாலைந்து கேள்விகள் கேட்டுவிட்டு, “சரி ரவிபிரகாஷ், நீங்க கிளம்புங்க. ஆசிரியரோடு பேசி முடிவெடுத்து, அப்புறம் உங்களுக்குத் தெரிவிக்கிறேன். அப்ளிகேஷன்ல உங்க அட்ரஸ் கொடுத்திருக்கீங்க இல்லியா... லெட்டர் வரும்.  போயிட்டு வாங்க!” என்றார்.

தூக்கிவாரிப் போட்டது எனக்கு. அப்போதுதான் எனக்கு உறைத்தது, அத்தனை நேரம் மதன் சார் என்னை இன்டர்வியூ செய்திருக்கிறார் என்று. நாலைந்து நாள் முன்னாடியே வந்து, ஆசிரியரைப் பார்த்துப் பேசி, அவரும் என்னை செலெக்ட் செய்துவிட்டதாகச் சொல்லி, முதல் தேதியிலிருந்து வரச் சொல்லிவிட்டபடியால், இப்போது மதன் சாரிடம் உரையாடியதை இன்டர்வியூவாகவே எடுத்துக் கொள்ளவில்லை என் மனம்.

எனவே, பதறிப் போய், “சார், நான் நாலைந்து நாள் முன்னாடியே வந்திருந்தேன். ஆசிரியர் என்னை இன்டர்வியூ செய்தார். என்னை செலெக்ட் செய்துட்டதா சொன்னார். முதல் தேதி வந்து ஜாயின் பண்ணிக்கும்படியும், அப்பாயின்ட்மென்ட் ஆர்டரை அப்போ வாங்கிக்கலாம்னும் சொன்னார். அதான், ஜாயின் பண்றதுக்காக இன்னிக்கு வந்தேன்” என்றேன்.

“ஓஹோ! ஏற்கெனவே இன்டர்வியூ முடிஞ்சாச்சா? இதை முன்னாடியே சொல்லியிருக்கலாமே ரவிபிரகாஷ்? நான் இவ்வளவு நேரம் உங்க டயத்தை வேஸ்ட் பண்ணியிருக்கவே மாட்டேனே? சரி, போய் வீயெஸ்வியை வரச் சொல்லுங்க!” என்றார் மதன்.

மதன் சாரின் அறையிலிருந்து வெளியேறி, மீண்டும் வீயெஸ்வியின் அறைக்குச் சென்று, நடந்ததை விவரித்து, அவரை மதன் சார் அழைத்ததாகச் சொன்னேன்.

“அன்னிக்கு நீங்க வந்தப்போ மதன் சார் லீவுல இருந்தார். அவர் உங்களைப் பார்க்கலை, இன்டர்வியூ பண்ணலை இல்லியா... அதான்! கொஞ்சம் இருங்க, வந்துடறேன்!” என்று சொல்லிவிட்டு எழுந்து போனார் வீயெஸ்வி.

இருபது நிமிடம் கழித்துத் திரும்பினார். “சரி, நீங்க கீழே போய் ரிசப்ஷன்ல வெயிட் பண்ணுங்க!” என்றார்.

கீழே வந்தேன். காத்திருந்தேன். நிமிடங்கள் யுகங்களாக நகர்ந்தன.

மதன் சார் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு நான் அளித்த பதில்களும் மனதில் ரீவைண்டாகி, மீண்டும் ஒருமுறை ஓடின.

‘சத்தியமாக இங்கே எனக்கு வேலை கிடைக்கப் போவதில்லை’ என்கிற எண்ணம் பலமாக எழுந்தது.

காத்திருக்கப் பொறுமையின்றி, கிளம்பிவிடலாமா என்று தோன்றியது.

(இன்னும் சொல்வேன்)