உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, February 23, 2016

என் புகுந்த வீடு - 9

இரு மேதைகள்!

பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடம் இருந்த ஒரு பழக்கம், தன் நண்பர்களிடம் தமாஷாக பெட் கட்டி விளையாடுவது. அன்று ஆனந்த விகடன் பணியில் இருந்த சாவி சாரும் இன்னும் பலருமாக ஒரு ஏழெட்டுப் பேர், ஆசிரியர் பாலசுப்ரமணியன் அவர்கள் அழைப்பின்பேரில் ஒரு வேனில் கிளம்பி டூர் போனார்கள். அடிக்கடி இப்படித் தன் நண்பர்களை அழைத்துக்கொண்டு ஜாலி டூர் கிளம்புவதும் திரு.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடம் இருந்த ஒரு வழக்கம்தான்.

டூர் கிளம்பும்போது ஆசிரியர் எஸ்.பாலு அவர்கள் தன் வீட்டிலிருந்து இட்லி, தோசை, தொட்டுக்கொள்ள மிளகாய்ப்பொடி, எள்ளுப்பொடி, பருப்புப் பொடி எனப் பலவிதமான அயிட்டங்களைத் தயார் செய்து எடுத்துக்கொண்டு வந்துவிடுவார். பயண வழியில், தேசிய நெடுஞ்சாலையில் மரங்கள் அடர்ந்த ஒரு பகுதியில் ஓரமாக வேனை நிறுத்தி, மரங்களின் கீழ் நிழலாக ஒரு பெரிய பவானி ஜமுக்காளத்தை விரித்து அமர்ந்துகொண்டு, எல்லோரும் சாப்பிடுவார்கள்.

அப்படி ஒருமுறை, அனைவரும் அமர்ந்து சிற்றுண்டி அருந்திக்கொண்டு இருந்தபோது, சாவி சார் அருகில் இருந்த ஒரு பூவரசு மரத்திலிருந்து ஒரு கிளையை ஒடித்தார். ஏராளமான இலைகளுடன்கூடிய அந்தக் கிளையைக் கண்டதும், ஆசிரியர் பாலுவுக்கு ஜாலி பெட் ஆர்வம் துளிர்த்துவிட்டது.

அவர் உடனே ஆசிரியர் சாவியைப் பார்த்து, “இதிலே எத்தனை இலைகள் இருக்கும்னு சொல்லுங்க, பார்க்கலாம்!” என்று கேட்டார். “400, 500 இலைகள் இருக்கலாம்!” என்றார் சாவி. “இல்லை. எண்ணிக்கையைச் சரியா சொல்லுங்க. நானூறா, ஐந்நூறா?” என்று கேட்டார் ஆசிரியர் பாலு. “நானூறு” என்றார் சாவி. “சரி, இதிலே 250 இலைகள்தான் இருக்குன்னு நான் சொல்றேன். என்ன பெட்?” என்றார் பாலு உற்சாகத்துடன்.

அதைத் தொடர்ந்து, அங்கிருந்த மற்றவர்கள் ஆளாளுக்கு ஓர் எண்ணிக்கையைச் சொன்னார்கள். யார் சொன்ன எண்ணிக்கை கிட்டத்தட்ட நெருக்கமாக வருகிறதோ, அவருக்கு மற்றவர்கள் தலா 100 ரூபாய் கொடுக்கவேண்டும் என்று பந்தயம் முடிவாகியது. உடனே அந்தக் கிளையிலிருந்து ஒவ்வொரு இலையாகப் பிய்த்து அனைவருமே எண்ணத் தொடங்கினார்கள். மொத்த இலைகளையும் பிய்த்து எண்ணி முடிக்க ஏறத்தாழ அரை மணி நேரமாகியிருக்கலாம். மொத்த எண்ணிக்கை, கூட்டத்திலிருந்த யாரோ ஒருவர் சொன்ன எண்ணிக்கைக்கு நெருக்கமாக வந்தது. உடனே பாலு சார் தன் கைப்பையைத் திறந்து அனைவரின் சார்பாகவும் தானே அந்தப் பந்தயத் தொகையை, இலைகளின் எண்ணிக்கையைச் சரியாகச் சொன்ன அந்த உதவி ஆசிரியருக்கு அப்போதே வழங்கினாராம்.

இந்தத் தகவலைச் சொல்லிவிட்டு, “இலையாவது, எண்ணுறதாவது... இதுக்கு ஒரு பெட் அவசியமா? பாலுவுக்கு இதென்ன வேண்டாத வெட்டிவேலை என்றுதான் முதலில் நினைத்தேன். ஆனால், தனக்கும் சக ஊழியர்களுக்கும் இடையே ஒரு நெருக்கத்தை உண்டாக்கவும், அவர்களுக்கு ஏதாவது ஒரு காரணத்தை வைத்துப் பண உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் அவர் அடிக்கடி இப்படி அல்ப காரணங்களுக்காக பெட் கட்டி விளையாடுகிறார் என்பதைப் பிறகு புரிந்துகொண்டேன்” என்றார் ஆசிரியர் சாவி.

அவர் சொன்ன இன்னொரு பெட் சம்பவம் சுவையானது.

ஆசிரியர் பாலுவுடன் சாவி மற்றும் அன்றைக்கிருந்த உதவி ஆசிரியர்கள் பலரும் சுற்றுலாப் பொருட்காட்சிக்குச் சென்றிருக்கிறார்கள். விதம் விதமான கடைகளை ஜாலியாகச் சுற்றிப் பார்த்துக்கொண்டே வந்தவர்கள் ஓரிடத்தில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, ஆசிரியர் பாலுவுக்கு பெட் வைத்து விளையாடும் ஆசை முளைத்துவிட்டது.

வழக்கம்போல் ஏதோ ஓர் அல்ப காரணத்துக்கான பந்தயம்தான். ஆனால், பெட் என்ன தெரியுமா? பந்தயத்தில் ஆசிரியர் பாலு தோற்றுவிட்டால், மற்ற அனைவருக்கும் அந்தச் சுற்றுலாப் பொருட்காட்சிக் கடைகளிலிருந்து அப்போதே, அங்கேயே அவரவர் கேட்கும் ஏதேனும் ஒரு பொருளை வாங்கிப் பரிசளிப்பார். நாளை என்று ஒத்திப் போடமாட்டார். அதுவே, பந்தயத்தில் ஆசிரியர் ஜெயித்துவிட்டால், அனைவரும் சேர்ந்து அவர் கேட்கும் பொருளை வாங்கித் தரவேண்டும்.

பந்தயம் என்ன என்பது ஞாபகத்தில் இல்லை (என் ஞாபகத்தில் அல்ல; ஆசிரியர் சாவியின் ஞாபகத்திலேயே இல்லை). ஆனால், அந்தப் பந்தயத்தில் ஆசிரியர் பாலு தோற்றுவிட்டார். முன்பே சொன்னதுபோல், நண்பர்களிடம் தோற்றாலும் சந்தோஷம்தான், பெரிய மனிதர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களுக்கு.

“சரி, கேளுங்கோ! நீங்க கேட்பதை இப்போதே, இந்த க்ஷணமே வாங்கித் தரேன்” என்றார் பாலு. ஒவ்வொருவரும் ஒவ்வொன்று கேட்டார்கள். ஒருத்தர் பிளாஸ்க் கேட்டார். மற்றவர் பெண்டுலம் கடிகாரம் கேட்டார். வேறொருத்தர் மடக்கு நாற்காலி கேட்டார். இப்படி ஆளாளுக்கு ஒவ்வொன்று கேட்க, அனைத்தையும் உடனுக்குடன் வாங்கித் தந்தார் ஆசிரியர் பாலு. எல்லாமே 100 ரூபாய், 200 ரூபாய்க்குள் முடிகிற பொருள்கள்.

இப்போது கடைசியாக ஆசிரியர் சாவியின் முறை. “சொல்லுங்கோ சாவி, உங்களுக்கு என்ன வேணும்?” என்று கேட்டார் ஆசிரியர் பாலு.

குறும்புத்தனமும் புத்தி சாதுர்யமும் சமயோசிதமும் நிரம்பியவர் சாவி சார் . அதனால்... “பாலு, ஞாபகம் வெச்சுக்கோங்க. நாளைக்குன்னு ஒத்திப் போடாம இப்போதே, இந்த க்ஷணமே நான் கேட்பதை வாங்கித் தரேன்னு சொல்லியிருக்கீங்க!” என்ற பீடிகையுடன், ஆசிரியர் பாலுவை அங்கிருந்த ஒரு கடைக்கு அழைத்துச் சென்றார். அது எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்கும் கடை.

அங்கே மிக மிக விலை உயர்ந்ததான ரேடியோவும் கிராமபோன் பிளேயரும் இணைந்த ஒரு ‘டெக்’கைக் காண்பித்து, அதைத் தனக்கு வாங்கித் தரும்படி கேட்டார் சாவி. அதன் விலை கிட்டத்தட்ட ரூ.5,000. அந்தக் காலத்தில் அது மிக அதிக தொகை.  ஜாலியாக வேடிக்கை பார்க்க வந்த இடத்தில் அத்தனை பெரிய தொகையை எடுத்து வந்திருக்க மாட்டார் பாலு சார், இதை வைத்தே அவரை மடக்கிவிடலாம் என்கிற உத்தேசத்தில் சாவி சார் அதைக் கேட்டு வைக்க, “அதுக்கென்ன, தாராளமா வாங்கிக்கோங்க!” என்று இடுப்பு வேட்டி மடிப்பில் முடிந்து வைத்திருந்த பணத்தை எடுத்துக் கொடுத்தாராம் ஆசிரியர் பாலசுப்ரமணியன்.

சாவி சார் உடனே பதறி, “இல்லை பாலு! உங்களை மடக்கணும்கிறதுக்காகத்தான் அப்படிக் கேட்டேன். எனக்கு இது வேண்டாம். ஏதாவது சின்ன பரிசாக வாங்கிக் கொடுங்கள்” என்று சொல்ல, “இல்லையில்லை. நான் சொன்னால் சொன்னதுதான். நீங்கள் கேட்டதுபோல் அந்த டெக் உங்களுக்குதான். பிடியுங்கள் 5,000 ரூபாய்” என்றார் பாலு.

மற்றவர்கள் மயக்கம் போடாத குறை. பாலு சார் எங்கே இத்தனை பெரிய தொகையை எடுத்து வந்திருப்பார் என்றெண்ணி, சொற்பத் தொகையில் ஒரு பரிசை வாங்கிக்கொண்டோமே, சாவி சாருக்கு அடித்ததே பம்பர் பிரைஸ் என்று பொருமித் தீர்த்துவிட்டார்கள்.

தர்மசங்கடமாகிவிட்டது சாவி சாருக்கு. வேண்டாமென்றாலும் பாலு கேட்கமாட்டேனென்கிறார். மற்றவர்களுக்கு இதனால் தன் மீது கசப்பு உணர்ச்சி வந்துவிடுமோ என்று அதை வாங்கிக் கொள்ளத் தயக்கம்! இறுதியில்...

“பாலு, உங்க கிட்டே நான் இப்போ ஒரு உண்மையைச் சொல்லிடறேன். நீங்க இடுப்புல எக்கச்சக்கமான பணம் முடிஞ்சு வெச்சிருக்கிறது எனக்கு ஏற்கெனவே தெரியும். அது தெரிஞ்சு, வேணும்னேதான் இத்தனை பெரிய பரிசுப் பொருளை வாங்கித் தரமுடியுமான்னு கேட்டேன். இது தப்பு. எனக்கு இது வேண்டாம்!” என்று மீண்டும் மறுத்தார் சாவி.

“என்கிட்டே பணம் இருக்கிறது உங்களுக்குத் தெரிஞ்சாதான் என்ன? அதுக்கும் நான் உங்க கிட்டே பெட் கட்டினதுக்கும் என்ன சம்பந்தம்? இதோ பாருங்கோ சாவி, என்னை வாக்குத் தவறினவனா ஆக்கிடாதீங்கோ!” என்று ஸ்ட்ரிக்டாகச் சொன்ன பாலசுப்ரமணியன், சாவி சார் விரும்பியபடியே அந்த ரேடியோ கம் கிராமபோன் பிளேயரைப் பரிசுப் பொருளாக பிடிவாதமாக வாங்கிக் கொடுத்துவிட்டாராம்.

நான் விகடனில் பணியில் சேர்ந்த பின்னர், 1997 வாக்கில் என நினைக்கிறேன்... சாவி சார் ஆசிரியர் பாலசுப்ரமணியனைச் சந்திக்க விரும்பினார். அதை இவரிடம் சொல்லி, ஆசிரியர் சாவியை நானே சென்று அழைத்து வந்தேன். மிக நீண்ட வருடங்களுக்குப் பிறகு பத்திரிகைப் பிதாமகர்கள் இருவரும் மனம் விட்டு, நெகிழ்ந்து பழைய ஞாபகங்களைப் பற்றிப் பேசிக்கொண்டு இருந்தபோது, நானும் அருகிலேயே இருந்தேன்.

அப்போது இந்த சுற்றுலா பொருட்காட்சி பெட் விஷயத்தை நினைவுகூர்ந்தார் ஆசிரியர் சாவி. “ஆமாம், நல்லா ஞாபகம் இருக்கு. அன்னிக்கு என்கிட்டே அவ்வளவு தொகை இருந்தது உங்களுக்குத் தெரியும்னும் எனக்கு முன்பே தெரியும்!” என்றார் ஆசிரியர் பாலு.

“தெரியுமா? எப்படி? அத்தனை பணத்தை நீங்க இடுப்பு வேட்டியில் முடிஞ்சு வெச்சிருக்கிறது யாருக்குமே தெரியாதே! இத்தனைக்கும் நீங்க நீளமான ஜிப்பா வேற போட்டிருந்தீங்களே! அப்படியிருக்கிறப்போ எனக்குத் தெரியும்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார் சாவி, ஆச்சரியத்துடன்.

“அதுவா... அதிக பணம் இருந்ததால என் கை தன்னிச்சையா என் இடுப்பு மடிப்பை அடிக்கடி தொட்டுத் தொட்டுப் பார்த்துட்டிருந்துது. மத்தவங்க யாரும் அதை கவனிக்கலே. ஆனா, நீங்க மட்டும் கவனிச்சதை நான் கவனிச்சேன். நாளைக்குன்னு ஒத்திப் போடாம இன்னிக்கே நீங்க கேக்கற பரிசை நான் வாங்கித் தரேன்னு சொன்னதும், சரிதான், என்கிட்டே பெரிய தொகை இருக்கு, அதை இடுப்புல முடிஞ்சு வெச்சிருக்கேன்னு யூகம் பண்ணிட்டீங்க. மிக விலை உயர்ந்த பரிசுப் பொருளை நீங்க கேட்டப்பவே அது ஊர்ஜிதமாயிடுச்சு.  உங்களோட அந்த அதீதமான ஆப்சர்வேஷனுக்கான பரிசாதான் அந்தப் பொருளை நான் வாங்கிக் கொடுத்தேன். உண்மையான பத்திரிகையாளனுக்கு அப்படியான கழுகுப் பார்வை வேணும்!” என்றார் எஸ்.பாலசுப்ரமணியன்.

பத்திரிகையுலக மேதைகள் இருவரிடம் பணிபுரிந்த பாக்கியம் எனக்கு. இந்த ஒரே ஒரு தகுதிதான் என்னை சுமார் 30 ஆண்டுகளாக இந்தப் பத்திரிகையுலகில் தாக்குப் பிடித்துக்கொண்டிருக்க வைத்திருக்கிறது.

(இன்னும் சொல்வேன்)

Sunday, February 14, 2016

என் புகுந்த வீடு - 8

கோடியில் ஒருவர்!
சாவி பத்திரிகையில் 1986 மே முதல் 1995 ஏப்ரல் வரை  நான் பணியாற்றிய அந்த ஒன்பது ஆண்டுகளில், முதல் மூன்று ஆண்டுகளைத் தவிர மற்ற ஆறு ஆண்டுகளும் பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் என்னை நம்பி ஒப்படைத்திருந்தார் ஆசிரியர் சாவி.

பத்திரிகையில் அவர் கட்டுப்பாட்டில் இருந்த விஷயங்கள் தலையங்கம், கார்ட்டூன், கேள்வி-பதில், ஜோக்ஸ் ஆகியவை மட்டுமே! எப்போதேனும் குறிப்பிட்ட ஒரு விஷயம் பற்றிய கட்டுரையையோ, அல்லது குறிப்பிட்ட நபரின் பேட்டியையோ வெளியிடச் சொல்வார். அதைத் தவிர, பத்திரிகைத் தயாரிப்பின் அன்றாட நடவடிக்கைகள் எதிலும் அவர் தலையிட்டதில்லை.

தலையங்கத்தை அவரே எழுதுவார். சில நேரம் ராணிமைந்தன் எழுதித் தர, அதை சாவி சார் திருத்திக் கச்சிதமாக்குவார். சாவி சாரின் மாப்பிள்ளைகளில் ஒருவரான அர்த்தநாரி சிறந்த எழுத்தாளரும்கூட. ஆங்கிலத்தில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார். தமிழிலும் நிறைய கட்டுரைகள் எழுதியுள்ளார். அவர் சில காலம் தலையங்கம் எழுதித் தந்துகொண்டிருந்தார். அதையும் சாவி சார் பார்த்துத் திருத்தி, எடிட் செய்து கொடுப்பார்.

பொதுவாக, தலையங்கம், கார்ட்டூன் இவை இரண்டும் ஒரு பத்திரிகைக்கு மிக முக்கியம் எனப் பிடிவாதமாக அவற்றை சாவி அவர்கள் தமது பத்திரிகையில் திணித்ததே இல்லை. பல காலம் அவை இரண்டும் இல்லாமலே சாவி இதழ்கள் வெளியாகியிருக்கின்றன.

ஆனந்த விகடனைப் பொறுத்தவரையில் தலையங்கமும் கார்ட்டூனும் அதன் இரு கண்களாக, காலம் காலமாக இருந்து வருகின்றன. அந்த இரண்டையும் பங்களிக்கக்கூடிய திறமையான எழுத்தாளர்களும் கார்ட்டூனிஸ்ட்டுகளும் தொடர்ந்து விகடனுக்குக் கிடைத்துக்கொண்டிருப்பதும் அதற்கு ஒரு காரணம்.

சாவி சார் ஆனந்த விகடனில் எஸ்.எஸ்.வாசனிடமும் பணியாற்றியிருக்கிறார்; அவருக்குப் பின் அவரின் புதல்வர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடமும் பணியாற்றியிருக்கிறார். எஸ்.எஸ்.வாசன் அவர்களிடம் தலையங்கத்தின் டிராஃப்ட் ரெடி செய்து புரூஃப் எடுத்து அனுப்பினால், அவரே உட்கார்ந்து அதில் அடித்தல் திருத்தல் செய்து, பக்காவாகச் செய்து கொடுத்துவிடுவாராம். பாலசுப்ரமணியனின் பாணி வேறு!

நான் அறிந்தவரையில், உதவி ஆசிரியர்களுக்குள் டிஸ்கஸ் செய்து, என்ன தலைப்பில் தலையங்கம் எழுதலாம் என யோசித்து முடிவு செய்து, முதலில் ஒருவர் எழுத, இன்னொருவர் அதில் திருத்தங்கள் செய்ய, ஃபைனல் புரூஃப் ஆசிரியரின் பார்வைக்குப் போகும். அவர் ஆசிரியர் குழுவில் சம்பந்தப்பட்டவர்களை அழைத்து, தலையங்கத்தில் செய்யவேண்டிய திருத்தங்கள் குறித்து டிஸ்கஸ் செய்வார். பின்னர் திருத்தப்பட்ட தலையங்கம் மீண்டும் ஆசிரியரின் பார்வைக்குப் போகும். அதில் சின்னச் சின்ன திருத்தங்கள் செய்வார். அது ஃபைனலாகி, அச்சுக்குப் போகும்.

ஆனால், விகடனில் சாவி சார் பணியாற்றிய காலத்தில் இருந்த முறை வேறு. சாவி சாரின் வாய்மொழியாகவே அதை இங்கு தருகிறேன்.

“தலையங்கம் நான் எழுதுவேன். மணியன் எழுதுவார். முகுந்தன்னு ஒருத்தர் இருந்தார். அவரும் எழுதுவார். சில சமயம் டிஸ்கஸ் பண்ணி எழுதறதும் உண்டு. முதல்ல ஒரு டிராஃப்டை ரெடி பண்ணுவோம். கம்போஸ் பண்ணுவோம். ‘தலையங்கம் ரெடி சார்’னு ஒருத்தர் போய் பாலு கிட்டே சொல்லுவார். ‘வரச் சொல்லுங்கோ’ன்னுவார் பாலு.

கம்போஸ் ஆன ‘கேலி’யை எடுத்துண்டு எல்லோரும் போவோம். அவர் முன்னே உட்காருவோம் (Galley என்பது நியூஸ்பிரிண்ட் தாளில் டிரெடில் மெஷினில் எடுத்த புரூஃப்.).

‘என்ன டாபிக்?’னு கேட்பார். சொல்லுவோம். ‘யாராவது ஒருத்தர் வாய்விட்டுப் படியுங்கோ’ன்னுவார். எங்கள்ல யாராவது படிப்போம்.

படிக்கிறதுன்னா வெறுமே வரிகளைப் படிச்சிண்டு போறது இல்லே. தலைப்புன்னு சொல்லிட்டு தலைப்பைப் படிக்கணும். மேற்கோள் குறிகள் தொடங்கினா, ‘இன்வெர்ட்டட் கமாஸ் பிகின்’னு சொல்லிட்டு அந்த வரியைப் படிக்கணும். சிங்கிள் கொட்டேஷனா இருந்தா அதையும் சொல்லிட்டுதான் அந்த வார்த்தையை, வரியைப் படிக்கணும். அதுபோல, முடிக்கும்போதும் ‘இன்வெர்ட்டட் கமாஸ் எண்ட்’ சொல்லணும். கமா வர இடத்துல கமா, முற்றுப்புள்ளி வர இடத்துல ஃபுல்ஸ்டாப்னு சொல்லிட்டுதான் மேலே படிக்கணும். அடுத்த பாராவா இருந்தா மறக்காம நெக்ஸ்ட் பாரான்னு சொல்லிட்டுதான் அந்தட் பாராவைப் படிக்க ஆரம்பிக்கணும்.

நாங்க படிக்க ஆரம்பிச்சதும் பாலு கைகளைக் கட்டிண்டு, கண்களை மூடிண்டு தியானத்துல உட்கார்ந்திருக்கிற மாதிரி அமைதியா இருப்பார். படிக்கிறவரைத் தவிர வேற யாரும் பேசக்கூடாது. அதுபோல தலையங்கத்தை முழுசா படிச்சு முடிக்கிற வரைக்கும் அவரும் குறுக்கிட மாட்டார்.

அன்னிக்கு அப்படித்தான், முகுந்தன் தலையங்கத்தைப் படிக்கிறார். நாங்கள்ளாம் பக்கத்துல அமைதியா உட்கார்ந்திருக்கோம். பாலு வழக்கம்போல கைகளைக் கட்டிண்டு, கண்களை மூடிண்டு, அமைதியா உட்கார்ந்திருக்கார்.

முகுந்தன் தலையங்கத்தை நிறுத்தி, நிதானமா, தெளிவா படிச்சு முடிச்சுட்டு அமைதியா இருக்கார்.

“முடிஞ்சுடுத்தா? இன்னும் ஏதாவது வரிகள் இருக்கா?”ன்னு கேட்டார் பாலு.

“அவ்வளவுதான் சார்!”னார் முகுந்தன்.

“சரி, இந்தாங்கோ பேனா. நான் சொல்ற கரெக்‌ஷன்களை அப்படியே சைடுல குறிச்சுக்குங்கோ. சொல்லட்டுமா?”ன்னார் பாலு.

“ம்... சொல்லுங்க சார்!”னு தயாரானார் முகுந்தன். மறுபடியும் பாலு கண்களை மூடிண்டார்.

“முதல் பாராவுல நாலாவது வரியில ‘பேதம்’கிற வார்த்தைக்குப் பதிலா ‘வேற்றுமை’ன்னு போட்டுக்கோங்கோ. அப்புறம், ரெண்டாவது பாராவின் கடைசி வாக்கியத்தை முதல் பாராவின் கடைசி வாக்கியமா கொண்டு வாங்கோ. அங்கேதான் அது இன்னும் ஆப்டா பொருந்தறது. ஆச்சா?

மூணாவது பாராவுல ரெண்டாவது வரியில ‘போர்க்கொடி எழுப்பி’ன்னு போட்டிருக்கேள். அவா போர்க்கொடியெல்லாம் எழுப்பலே. அது தப்பு. அதை டெலீட் பண்ணிடுங்கோ.

நாலாவது பாராவுல முதல் இரண்டு வாக்கியங்களை சுழிச்சு வெச்சுக்கோங்க. அதை என்ன பண்ணணும்னு அப்புறம் சொல்றேன். அடுத்த வரி, நியாயமா டபுள் கொட்டேஷன்ல ஆரம்பிக்கணும். போட்டிருந்து, படிக்கும்போது சொல்ல மறந்துட்டேளோ என்னவோ! டபுள் கொட்டேஷன் போடலைன்னா போட்டுக்கோங்க. அது எங்கே முடியறது தெரியுமா, ’உரிமைகளைப் பெறுவோம்’கப்புறம் டபுள் கொட்டேஷன் எண்ட். சரியா?

அஞ்சாவது பாராவுல  கடைசி சென்ட்டென்ஸ் மட்டும் வேண்டாம். அது அங்கே அநாவசியம். நீக்கிடுங்கோ. மத்தபடி அதுல வேற எந்தத் திருத்தமும் இல்லை.

இப்போ, அங்கே நாலாவது பாராவுல ரெண்டு சென்ட்டென்ஸை சுழிக்கச் சொன்னேனே, அதை இங்கே ஆறாவது பாராவா போட்டுக்கோங்க. தலையங்கத்துக்கு முத்தாய்ப்பா ஒரு ஃபினிஷிங் கிடைச்ச மாதிரி இருக்கும்.” என்ற பாலு, “இப்போ நான் சொன்ன கரெக்‌ஷனையெல்லாம் செய்துட்டு ஒரு தடவை படியுங்கோ!” என்றார்.

படிச்சார் முகுந்தன். என்ன ஆச்சரியம்...! தலையங்கம் மிகக் கச்சிதமா , கோர்வையா அமைஞ்சிருந்தது. அவர் நீக்கச் சொன்ன வரி இப்போ எங்களுக்கும் தேவையில்லேன்னுதான் பட்டது. அதே மாதிரி அவர் சொன்ன மாற்றங்கள், திருத்தங்கள் எல்லாம் 100 சதவிகிதம் ஒத்துக்கறாப்ல இருந்தது. முடிவும் நச்சுனு அமைச்சிருந்துது. மொத்தத்துல, முன்னே இருந்த சிக்கல்கள், குழப்பங்கள் எல்லாம் காணாம போய், ரொம்பத் தெளிவா இருந்துது தலையங்கம்.

இத்தனைக்கும் அவர் புரூஃபை கையிலேயே வாங்கலை. வெறுமே படிக்கச் சொன்னார். அதைக் காதால கேட்டு உள்வாங்கிண்டார். முகுந்தன் படிக்கப் படிக்க, பாலுவின் மனசுக்குள்ளே ஒரு வெள்ளைப் பேப்பர்ல அந்த வார்த்தைகள் அச்சுக் கோத்தாப்ல தோணியிருக்கும்னு நினைக்கிறேன். அதை மானசீகமா பார்த்துதான் அத்தனை கரெக்‌ஷன்களையும் துல்லியமா சொன்னார். இத்தனை அபூர்வமான நினைவாற்றல் லட்சத்துல ஒருத்தருக்கு, கோடியில ஒருத்தருக்குதான் அமையும்! அப்ப்பா...! மெரண்டுட்டேன். என்ன மாதிரி மனுஷர் இவர்!”

விகடன் ஆசிரியர்   பாலசுப்ரமணியன் பற்றி சாவி சார் அன்று சொன்னபோது, கொஞ்சம் மிகைப்படுத்திச் சொல்கிறாரோ என்றுதான் நினைத்தேன். பின்னாளில் எனக்கே நேரடியாக வேறொரு விதத்தில் அந்த அனுபவம் கிடைத்த பிறகு, சிலிர்த்துப் போனேன்.

விகடன் ஆசிரியரின் நினைவாற்றல் பற்றி மட்டுமல்ல... தான் ஒரு பெரிய நிறுவனத்தின் முதலாளி, மற்றவர்கள் தன்னிடம் பணிபுரியும் உதவி ஆசிரியர்கள் என்றெல்லாம் பாராது, மிகவும் நட்புரிமையோடு எளிமையாய் அவர் பழகிய விதம், விமர்சனத்தை ஏற்றுக்கொள்ளும் பாங்கு, அவரிடம் இருக்கும் சமையல் கலை, அடிக்கடி அனைவரையும் அழைத்துக்கொண்டு காரில் டூர் போன அனுபவங்கள் எனப் பலவற்றை சாவி சார் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.

பெட் கட்டி விளையாடுவதில் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனுக்கு அலாதி பிரியம் உண்டாம். தான் அந்தப் பந்தயத்தில் தோற்றாலும் அவர் அதற்காகக் கவலைப்பட மாட்டாராம். அந்தப் பலன் தன்னைச் சேர்ந்தவர்களுக்குத்தானே போகிறது என்று மகிழ்ச்சியோடு அந்தத் தோல்வியை சந்தோஷமாக ஏற்றுக் கொள்வாராம்.

அப்படி ஒருமுறை பாலு சாரோடு பெட் கட்டி விளையாடியபோது, தான் அடித்த பம்பர் பிரைஸைப் பற்றி ரசனையோடு சொல்லியிருக்கிறார் சாவி சார்.

(இன்னும் சொல்லுவேன்)

Wednesday, February 10, 2016

என் புகுந்த வீடு - 7

மறக்க முடியுமா?

சாவி பத்திரிகையில் நான் பணியாற்றிய காலத்தில், சாவி சார் இன்னொரு பத்திரிகையாளரைப் பற்றி அதிகம் வியந்து என்னிடம் சிலாகித்துப் பேசியது விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றித்தான்.

அதற்கு முன்பே திரு.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றி ஓரளவு நான் அறிந்திருந்தாலும், 80-களில் விகடன் பரிசீலனைக்கு நான் அனுப்பிய சிறுகதை தொடர்பாக, புதிதாக எழுதத் தொடங்கும் ஓர் எழுத்தாளனுக்கே உரிய (?) ‘தார்மீக’(!) கோபத்தோடு கடிதம் வாயிலாக அவரோடு வாதப் பிரதிவாதத்தில் ஈடுபட்ட நேரத்தில் அவர் காட்டிய பெருந்தன்மையை இரண்டு முறை அனுபவரீதியாக உணர்ந்திருந்தாலும், சாவி சார் விகடன் சேர்மனைப் பற்றிப் பகிர்ந்துகொண்ட பல விஷயங்கள் திரு.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் மீது எனக்கிருந்த மரியாதையையும் வியப்பையும் பல மடங்கு உயர்த்தின. இயன்றவரை நினைவுகூர்ந்து ஒவ்வொன்றாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

முதலில், விகடன் சேர்மனின் நினைவாற்றல்!

ஒவ்வொரு திங்கள்கிழமையன்றும் ஆனந்த விகடன் ஆசிரியர் குழுக் கூட்டம், ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் தலைமையில் நடைபெறும். அவர் தமது பழைய ஆசிரியர் குழாம் அனுபவங்கள், பறவை வளர்ப்பு, சினிமா என சுவாரஸ்யத்தோடு பல விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள, நாங்கள் வாய் பிளந்து, வியப்போடு கேட்டுக்கொண்டிருப்போம்.

ஒருமுறை, ஞாபகசக்தி பற்றிப் பேச்சு ஓடியது. “மறதி என்பது பெரிய வரம். தேவையில்லாத குப்பைகளை மனசுல சுமக்க வேணாம். உங்களுக்கெல்லாம் எந்த ஒரு விஷயமும் சட்டுனு மறந்து போயிடுதுன்னு சொல்றதைக் கேக்கறப்போ எனக்கு ரொம்ப ஆச்சரியமா இருக்கு. என்னால எந்த ஒரு விஷயத்தையும் மறக்கவே முடியலே. மறக்கணும் நினைக்க நினைக்க அந்த விஷயம் இன்னும் இன்னும் ஆழமாதான் மனசுல பதியுது. மனசே பாரமாகித் திணறிக்கிட்டிருக்கேன் நான்” என்றார்.

“ஒரு விஷயம் நம்ம மனசுல பதியுறதும் பதியாததும், அந்த விஷயத்தின் முக்கியத்துவத்தைப் பொறுத்ததுதான், இல்லையா சார்?” என்று கேட்டேன் நான்.

“உண்மைதான்! ஆனா, என்னைப் பொறுத்தவரைக்கும் முக்கியம், முக்கியமில்லாததுங்கிற பாகுபாடே இல்லாம, எல்லாமே என் மனசுல அழுத்தமா பதிஞ்சுடுது. அதுதான் கஷ்டமா இருக்கு!” என்றார். தொடர்ந்து...

“ஒரு உதாரணம் சொல்றேன்... கொஞ்ச நாளைக்கு முன்னால உறவு முறைகள் பற்றிப் பேசினோம் இல்லையா..? அப்போ உங்க பாட்டி பேர் என்ன, அத்தை பேர் என்ன என்றுகூடக் கேட்டேனே, ஞாபகம் இருக்கா?” என்றார்.

ஆமாம்! அது நடந்து நாலைந்து மாதங்கள் இருக்கும். அந்தக் காலத்தில் அப்பா, பெரியப்பா, அத்தை, அவர்களின் வாரிசுகள் எனக் கூட்டுக்குடும்பமாக ஒரே வீட்டில் 30, 40 பேருக்கு மேல் வாழ்ந்தது, இன்றைக்குப் பெற்றோர்களைக் கொண்டு போய்  முதியோர் இல்லத்தில் விட்டுவிட்டுப் பிள்ளைகள் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் போய் செட்டிலாகிவிடுவது, வெளிநாடுகளில் பெற்றவர்கள் இறுதிக் காலத்தில் தங்கள் வாரிசுகள் தங்களை வைத்துக் காப்பாற்ற வேண்டும் என்று கருதாமல், தங்களுக்கென பணத்தைச் சேமித்துக்கொண்டு தாங்களே தனி ஃப்ளாட் எடுத்து சொந்தக் காலில் தங்க விரும்புவது, சீனியர் சிட்டிஸன்களுக்கு அங்குள்ள மரியாதை... எனப் பலவிதமாக அப்போது பேச்சு ஓடியது.

அதன் ஓர் அங்கமாகத்தான் ஆசிரியர் என்னிடம், “உங்க பாட்டி பேர் என்ன? அத்தை பேர் என்ன? உங்களால சொல்ல முடியுமா?” என்று கேட்டிருந்தார். சொன்னேன்.

“உங்களால சொல்ல முடியுது. ஆனா, இனிமே வர ஜெனரேஷன்கிட்டே கேட்டுப் பாருங்க. அவங்களால சொல்ல முடியாது. அந்தக் கூட்டுக் குடும்ப முறை கொஞ்சம் கொஞ்சமா சிதைஞ்சுக்கிட்டே வருது. நமக்கு உறவுகள் முக்கியம். மாமா, அத்தை, அவர்களின் பிள்ளைகள், ஒன்றுவிட்ட சித்தப்பா, ஒன்றுவிட்ட நாத்தனார் என்று நமது உறவு முறைகள் நீளும். வெளிநாடுகளில் இந்தக் கட்டமைப்பைப் பார்க்க முடியாது. அவர்களின் வாரிசுகள் கொஞ்சம் தலையெடுத்ததுமே சொந்தக் காலில் நிற்கத் தொடங்கிவிடுவார்கள். அவர்களே உருண்டு, புரண்டு, வாழ்க்கையில் அடிபட்டு, முன்னுக்கு வருவார்கள். அப்பா, அம்மாவைச் சார்ந்து இருக்க மாட்டார்கள். இங்கே அப்படி இல்லை. பையனுக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கிற வரைக்கும் அவனுக்குப் பெற்றோர் பாதுகாப்பாக இருப்பார்கள்...” என்று, அன்றைக்கு வேறொரு டாப்பிக்கில் பேசிக்கொண்டிருந்தார் ஆசிரியர்.

“ஆமா சார், ஞாபகம் இருக்கு. என்னோட பாட்டி பேர், அத்தை பேர் என்னன்னு கேட்டீங்க...” என்று நான் பதில் சொல்லத் தொடங்கும்போதே, “இருங்க. நான் சொல்றேன்” என்று தடுத்தார் ஆசிரியர். அடுத்து...

“உங்க பாட்டி பேர் லட்சுமி; அத்தை பேர் அலமேலு. கரெக்டா?” என்று அவர் கேட்க, சிலீரென்று உறைந்தாற்போல் ஆனேன் நான். மிகச் சரியே அவர் சொன்னது.

“எப்படி சார்...?” என்று வியப்பின் உச்சத்தில் கொஞ்சம் கத்தியேவிட்டேன். நான் மட்டுமல்ல; கூட்டத்தில் இருந்த அத்தனை பேருமே ஆசிரியரின் இந்த அபார நினைவாற்றலைக் கண்டு அசந்துபோய்விட்டார்கள்.

“அன்னிக்கு வேற எதுக்கோ பேசினோம். அப்போ பேச்சோடு பேச்சாகச் சொன்ன உங்க பாட்டி, அத்தை பேர்களை ஞாபகம் வெச்சுக்கணும்னு எனக்கென்ன அவசியம்? ஆனா, அன்னிக்கு நீங்க சொன்னது இன்னமும் தெளிவா ஞாபகம் இருக்கே! மனசுல வந்து விழற ஒவ்வொரு தகவலும் அப்படியே வஜ்ரம் போட்ட மாதிரின்னா ஒட்டிக்கிறது. இதுதான் என்னோட பிராப்ளமே!” என்று ஆசிரியர் சொன்னபோது ஆச்சரியத்தில் வாயடைத்து நின்றோம் நாங்கள்.

விகடன் சேர்மனின் நினைவாற்றல் குறித்து ஆசிரியர் சாவி பல ஆண்டுகளுக்கு முன்னால் என்னிடம் பகிர்ந்துகொண்ட தகவல் இதைவிட ஆச்சரியம் தரக்கூடியது. நம்பவே முடியாதது.

நம்ப முடியாத காரணத்தினால்தானோ என்னவோ, ஆசிரியர் சாவி அன்று அதைச் சொன்னபோது அதை ஒரு தகவலாக மட்டுமே கேட்டுவிட்டு, கொஞ்சம்போல் ஆச்சரியப்பட்டுவிட்டு, அத்தோடு மறந்துவிட்டேன்.

இப்போது நேரடி அனுபவமாக அதை நானே உணர்ந்தபோது, அன்று அவ்வளவாக ஆச்சரியப்படாததற்கும் சேர்த்து வியப்பு, திகைப்பு, சிலிர்ப்பு என சகலவிதமான உணர்ச்சிகளுக்கும் ஆளானேன்.

சரி, சாவி சார் பகிர்ந்துகொண்ட அந்த அனுபவம்தான் என்ன?

(இன்னும் சொல்வேன்)