உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, October 17, 2018

ரவிபிரகாசா, பாவிபிரகாசா?!


சில நாட்களுக்கு முன், சென்னை கே.கே.நகர் டிஸ்கவரி பேலஸில் நடந்த ‘பெருவெளிக் காற்றுநூல் அறிமுக விழாவில் கலந்துகொண்டு பேசும்போது, எழுத்தாளர் எஸ்.சங்கரநாராயணன் என் சாவி காலத்து நண்பர் என்றும், அவர்பொருட்டு சாவி சாருடன் நான் வாதிட்ட ஒரு நிகழ்வு பற்றியும் குறிப்பிட்டேன்.

சங்கரநாராயணன் என் நண்பர் என்பதால் நான் படித்துப் பார்க்காமலே அவரின் சிறுகதைகளை சாவியில் பிரசுரித்துவிடுகிறேன் என்றும், தன்னுடைய தரமான கதைகளை நிராகரித்துவிடுகிறேன் என்றும் என்மீது குற்றம்சாட்டி எழுத்தாளர் ஒருவர் சாவி சாருக்குக் கடிதம் எழுதினார். இதுபற்றி சாவி சார் என்னிடம் கேட்க, நான் ‘அப்படியெல்லாம் இல்லை. நண்பர் என்பதற்காக அவரின் கதைகளை நான் பிரசுரிப்பதில்லை. படித்துப் பார்த்து, உண்மையிலேயே நன்றாக இருந்தால்தான் பிரசுரிக்கிறேன்என்றும் விளக்கினேன்.

அந்த வாரம் ‘சாவியில் வெளியான எஸ்.சங்கரநாராயணனின் சிறுகதை ‘அன்றிரவு’, அந்த ஆண்டில் சிறந்த சிறுகதையாக ‘இலக்கிய சிந்தனைஅமைப்பால் தேர்ந்தெடுக்கப்பட்டது. இதுகுறித்து, மேற்படி சிறுகதையை வெளியிட்டதற்காக அங்கிருந்து ஒரு வாழ்த்துக் கடிதம்கூட வந்திருந்தது.

இந்த நிகழ்ச்சியைக் குறிப்பிட்ட நான், என்னைக் குறை சொல்லி சாவி சாருக்குக் கடிதம் எழுதிய அந்த எழுத்தாளர் பற்றி அங்கே குறிப்பிடவில்லை. அவர் திரு.கண்ணன் மகேஷ்.

அவர் பின்னர் இதே நிகழ்வை மையப் பொருளாக வைத்து, தினமணி கதிரில் ‘பச்சைப் புல்லில்என்றொரு சிறுகதையை எழுதினார். அதில், சங்கரநாராயணன் என்ற பெயரை நாராயண சங்கர் என்று மாற்றி எழுதியிருப்பார்.

பத்தாண்டுகளுக்கு முன்… அதாவது 2008-ம் ஆண்டு, பிளாக் எழுதுவது ஒரு ஃபேஷனாக இருந்தது. நானும் எழுதினேன். அப்போதே இதைப் பற்றிக் குறிப்பிட்டு ஒரு நீளமான பதிவு போட்டு, மேற்படி ‘பச்சைப் புல்லில்சிறுகதையையும் என் வலைப்பூவில் பிரசுரித்திருந்தேன்.

இப்போது அதைத் தேடிப் பார்க்க விரும்பியபோது, அவற்றைக் காணவில்லை. அதாவது, 2008-ம் ஆண்டுப் பதிவுகளையே காண முடியவில்லை. 2009-லிருந்துதான் என் பதிவுகள் காணக் கிடைத்தன. 2008 பதிவுகள் என்ன ஆயிற்றென்றே தெரியவில்லை.

கூகுள் மெயிலில் தேடியபோது, மேற்படி ‘பச்சைப் புல்லில்கதை கிடைக்கவில்லையே தவிர, அதுபற்றி நான் எழுதிய பதிவு கிடைத்தது. இது ஏற்கெனவே 2008-ம் ஆண்டு ‘உங்கள் ரசிகன்வலைப்பூவில் நான் போட்டிருந்த பதிவு. அதை இங்கே மீண்டும் மறுபிரசுரம் செய்திருக்கிறேன்.

@@@@@

மிகச் சமீபத்தில் நண்பர் ரமேஷ்வைத்யா, ஒரு ஜெராக்ஸ் பிரதியை என்னிடம் கொடுத்து, "இதைப் படிச்சுப் பாருங்க, ரவி!" என்றார்.

வாங்கிப் பார்த்தேன். அது ஒரு சிறுகதை. எப்போதோ தினமணிகதிரில் வெளியாகி, புத்தகத் தொகுப்பு ஒன்றில் இடம்பெற்றிருந்த கதை. இப்போதுதான் யதேச்சையாக நண்பர் கண்ணில் பட, உடனே என் கவனத்துக்குக் கொண்டு வந்திருக்கிறார்.

16
ஆண்டுகளுக்கு முன் சாவி பத்திரிகையில் நான் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது நடைபெற்ற சம்பவம் ஒன்றின் அடிப்படையில், அந்தச் சம்பவத்தில் ஓர் அங்கமான கதாசிரியரே எழுதியிருந்த கதை அது. நல்ல கதைதான். ஆனால், பெயர்களைத் திரித்து சாவி பத்திரிகையையும், இன்னொரு பிரபல எழுத்தாளரையும், பெயர் குறிப்பிடாமல் என்னையும் நக்கலடித்து கேலித் தொனியில் எழுதப்பட்டு இருந்த கதை அது.

இப்படி அந்தக் கதாசிரியர் எழுதப்போவது தெரிந்திருந்தால், 'தயவுசெய்து என் பெயரையும் உங்கள் கதையில் எப்படியாவது சேர்த்துக் கொள்ளுங்கள். ரவிபிரகாஷ் என்பதைப் பாவிபிரகாசம் என்று வேண்டுமானால் திரித்துப் போட்டுக்கொள்ளுங்கள்' என்று சொல்லியிருப்பேன். தெரியாததால், அந்தப் பொன்னான வாய்ப்பு கைநழுவிப் போய்விட்டது. ஹூம்... இப்போது வருந்தி என்ன பயன்? டூ லேட்! டூ ஹண்ட்ரட் லேட்! டூ தவுசன் லேட்!

'
பச்சைப் புளுகில்...' என்கிற... மன்னிக்கவும், 'பச்சைப் புல்லில்...' என்கிற தலைப்பில் வெளியான அந்தக் கதையைத் தனியாகக் கொடுத்துள்ளேன். நிஜமாகவே நல்ல கதைதான். படித்துப் பாருங்கள்.

அதற்கு முன்... சாவியில் நடைபெற்ற அந்தச் சம்பவம் என்ன என்று தெரிந்துகொண்டால், கதை படிக்கும்போது அதன் சுவாரஸ்யம் இன்னும் ஒரு படி தூக்கலாக இருக்கும் என்பதால், அதை இங்கே கொடுத்துள்ளேன்.

தவிரவும், அந்தக் கதையைப் படித்தபோது, கால யந்திரத்தில் ஏறி, 'சாவி' வார இதழில் நான் பணியாற்றிய காலத்துக்கே சென்று வந்ததான ஓர் உணர்வு எனக்கு ஏற்பட்டது. அந்த அனுபவங்களையும் இங்கே நினைவுகூர்ந்துள்ளேன்.

@@@@@

அப்போது 'சாவி' அலுவலகம் அண்ணா நகரில், அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரிக்கு எதிரே இருந்த சாவி அவர்களின் இல்லத்திலேயே இருந்தது. கீழே சாவி சார் வீடு; மாடி போர்ஷன் வேலை நடைபெற்றுக்கொண்டு இருந்தது. வீட்டுக்குப் பக்கத்தில் இருந்த கார் ஷெட்டில் மேஜை நாற்காலிகள் போடப்பட்டு, எடிட்டோ ரியல் இயங்கிக்கொண்டு இருந்தது.

நான் மட்டும்தான் அங்கே பொறுப்பாசிரியர், உதவி ஆசிரியர் எல்லாம். துரை என்பவர் மேனேஜராக இருந்தார். ஸ்ரீனிவாசகமணி (இப்போது கோபுர தரிசனம் என்னும் ஆன்மிக இதழை நடத்தி வருபவர்) விளம்பரத் துறை மேலாளராக இருந்தார். ரா.கி. என்கிற ராதாகிருஷ்ணன் போட்டோகிராபர். (தற்போது தினமணி நாளேட்டில் பணிபுரிகிறார்). மோகன் லே-அவுட் ஆர்ட்டிஸ்ட். ராஜேந்திரன் லெட்டரிங் ஆர்ட்டிஸ்ட் (இவர் தற்போது தினமலர் நாளேட்டில் பணிபுரிகிறார்). இந்த மோகனும் ராஜேந்திரனும் சகோதரர்கள். ஓவியர் ஜெயராஜின் அக்கா பிள்ளைகள். சம்பத் என்பவர் உதவி ஆசிரியராக இருந்தார். இவர் நல்ல எழுத்தாளரும்கூட. எஸ்.சம்பத் என்கிற பெயரில் மட்டுமல்லாது, ஷோபா லலித் என்கிற பெயரிலும் நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். பிரான்சிஸ் என்பவர் அட்டெண்டராக இருந்தார். சாவி சார் இடும் பணிகளைச் செய்வது மட்டுமின்றி, ஓவியர்களிடமிருந்து படங்கள் வாங்கி வருவது, முடித்து வைத்திருக்கும் லே-அவுட் அட்டைகளை நடராஜா கிராஃபிக்ஸ் அலுவலகத்துக்கு எடுத்துச் சென்று பாஸிட்டிவ் போட்டு வருவது என அத்தனை வேலைகளுக்கும் அவர் ஒருவரே!

ஆக, நாங்கள் எட்டே எட்டு பேர் மட்டுமே சாவி அலுவலகத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்தோம். (எட்டு பேருக்கு அந்தப் பெரிய கார் ஷெட் தாராளம்!).

சாவி இதழின் பரிசீலனைக்கு வாரம் குறைந்தது ஐம்பது சிறுகதைகளாவது வரும். அத்தனையையும் படித்துப் பரிசீலித்துத் தேர்ந்தெடுத்து, வெளியிடுவது நான்தான். கதைகள் மட்டுமின்றி, அன்றாடம் வரும் ஜோக்குகளையும் படித்துத் தேர்ந்தெடுத்து, ஆசிரியரின் பார்வைக்கு வைத்து ஒப்புதல் வாங்கவேண்டும். சிறுகதைகளை ஆசிரியர் படிப்பது இல்லை.

சாவி இதழ் தயாரிப்பு வேலைகளுக்கே என் நேரம் முழுமையும் செலவிட வேண்டியிருந்ததால், வரும் சிறுகதைகளைப் படித்துத் தேர்ந்தெடுப்பது இயலாததாக இருந்தது. எனவே சாவி அவர்கள், தமது கடைசி மகள் மாலதியின் வீட்டுக்குக் கதைகளைக் கொடுத்து அனுப்பும்படியும், அவர் படித்துப் பரிசீலித்துத் தருவார் என்றும் சொன்னார். திருமதி மாலதி அவர்களுக்குப் பத்திரிகையில் மிகுந்த ஈடுபாடும், சிறுகதைகள் படிப்பதிலும் நல்ல ஆர்வமும் உண்டு.

ஆசிரியர் சொன்னதன்பேரில், அன்று முதல் சிறுகதைகளை வாராவாரம் கட்டுக்கட்டாகக் கட்டி, மாலதி அவர்களின் வீட்டுக்குக் கொடுத்தனுப்பிவிடுவேன். அவர் செலெக்ட் செய்து தரும் கதைகளை மட்டும் படித்து, தேவையானவற்றை உபயோகித்துக் கொள்வேன். பெருக்கல் குறியிட்டு நிராகரிக்கப்பட்டு வரும் கதைகளில் ஸ்டாம்ப் இருந்தால், திருப்பி அனுப்பப்படும். மற்றபடி, பரிசீலனைக்கு வரும் கதைகளை ஒரு நோட்டு போட்டுப் பதிந்துகொள்வதற்கோ, ‘என் கதை என்ன ஆயிற்று? என்று விசாரித்து வரும் கடிதங்களுக்கு பதில் அனுப்புவதற்கோ எனக்கு நேரம் இல்லாமல் இருந்தது. சொல்லப்போனால், கொடுத்தனுப்பிய கதைகள் மொத்தமும் படித்துத் திரும்பி வந்துவிட்டதா, இன்னும் எத்தனை கதைகள் வரவேண்டியிருக்கிறது என்கிற விவரத்தைக்கூட என்னால் ஃபாலோ-அப் செய்யமுடியாமல் இருந்தது.

சில சமயம், ஒரு வாரம் எந்தக் கதையும் சரியில்லை என்று திருப்பி அனுப்பிவிடுவார் மாலதி. அடுத்த இதழ் தயாரிப்புக்கு இடிக்கும். ஓர் இதழுக்குக் குறைந்தபட்சம் நான்கு கதைகளாவது வேண்டியிருக்கும். எனவே, ஏதேனும் புனைபெயரில் (சூர்யகலா, சந்திரகலா, ராஜ்திலக், ராஜாமகள் எனக் கிட்டத்தட்ட பதினைந்துக்கும் மேற்பட்ட புனைபெயர்களில் சாவியில் சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்.) நானே ஒரு சிறுகதை எழுதிவிடுவேன். மாலதிக்கு அடுத்துக் கொடுத்தனுப்பப்படத் தயாராக இருக்கும் சிறுகதைக் கட்டிலிருந்து அவசரத்துக்கு நானே படித்து இன்னும் இரண்டு கதைகளைத் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்துவிடுவேன். இதுதான் நடைமுறை.

குறிப்பாக, எஸ்.சங்கரநாராயணன் போன்ற எழுத்தாளர்கள் எழுதும் சிறுகதைகள் என்றால், கண்டிப்பாக அது பிரசுரத்துக்குத் தகுதியாக இருக்கும் என்பதால், அப்படியான தேர்ந்த எழுத்தாளர்களின் கதைகளை எடுத்துப் பரிசீலிப்பேன்.

அப்படி ஒருமுறை, எஸ்.சங்கரநாராயணனின் ‘அன்றிரவுசிறுகதையை சாவியில் பிரசுரித்திருந்தேன்.

அண்ணா நகரில், சாவி அலுவலகத்துக்குச் சில தெருக்கள் தள்ளி இருந்த தபால், தந்தி மற்றும் தொலைபேசித் தொடர்பு அலுவலகத்தில் அவர் பணியாற்றிக்கொண்டு இருந்தார். அவ்வப்போது நேரிலேயே வந்து, சிறுகதைகளைப் பரிசீலனைக்குத் தந்துவிட்டுப் போவார். பெரும்பாலும் சிறப்பாகவே இருக்கும். அப்படியே நிராகரித்தாலும், வருத்தப்படமாட்டார். புதிய கதையைக் கொடுத்துவிட்டு, நிராகரிக்கப்பட்டதை வாங்கிச் சென்றுவிடுவார். 'ஏன்... நல்லா இல்லையா? இந்தக் கதையில் என்ன குறை?' என்று ஒரு கேள்வியும் கேட்கமாட்டார். அவருக்கும் எனக்கும் ஓர் ஒற்றுமை உண்டு. அவரும் பாண்டிச்சேரி அரவிந்த அன்னையின் பக்தர்; நானும் அரவிந்த அன்னையின் தீவிர பக்தன்.

அவரது அன்றிரவு சிறுகதையை வெளியிட்டதில், ஆசிரியர் சாவிக்கும் எனக்கும் சற்று மனஸ்தாபம் வந்துவிட்டது. இந்த விஷயத்தை சங்கரநாராயணனிடம்கூட இன்று வரை நான் சொல்லியது இல்லை.

'
அன்றிரவு'... அப்பாவின் மரணம் எழுப்பிய சோகத்தை விவரிக்கும் கதை. மிக உருக்கமாக எழுதியிருந்தார். கொடுத்துப் போன அடுத்த வாரமே சாவியில் அதைப் பிரசுரித்துவிட்டேன்.

புத்தகம் வெளியாகி, அடுத்த வாரத்தில் ஒரு நாள், சாவி சார் என்னைக் கூப்பிட்டார்.

"
கதைகளைப் பிரசுரிக்கும்போது கொஞ்சம் கவனமா பார்த்துத் தேர்ந்தெடு ரவி! இல்லேன்னா பத்திரிகை பேர் கெட்டுப் போயிடும்!" என்றார்.

எனக்குப் புரியவில்லை. "இல்லையே சார்! கவனமாதான் தேர்ந்தெடுக்கிறேன்" என்றேன்.

"
இந்த வாரம் வந்திருக்கிற சங்கரநாராயணன் எழுதிய கதை நல்லாவே இல்லைன்னு மாலதி சொன்னா! நண்பராச்சேன்னு அதை வாங்கி அப்படியே போட்டுடக்கூடாது. முக தாட்சண்யத்துக்காகக் கதையைப் பிரசுரிக்கக்கூடாது. அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன். போ!" என்றார்.

எனக்குச் சுருக்கென்றது. "இல்லை சார்! நான் அப்படி தாட்சண்யத்துக்காக யார் கதையையும் போடறது இல்லை!" என்றேன்.

"
அப்ப இந்தக் கதையை எப்படிப் போட்டே? இது ரொம்ப நல்ல கதையா?" என்றார் சாவி, சற்றே கோபமான குரலில்.

"
மோசமான கதைன்னு சொல்லமுடியாது சார், சுமாரான கதை!" என்றேன்.

"
சுமாரான கதையெல்லாம் நமக்கு வேண்டாம்! பெஸ்ட் கதையை மட்டும்தான் போடணும். புரியுதா?" என்றார்.

அதற்கு அப்புறம் அவர் சொன்ன வார்த்தைதான் எனக்குச் சுருக்கென்றது.

"
இனிமே கதைகளையெல்லாம் வழக்கம்போல மாலதிக்கே அனுப்பு. அவ செலெக்ட் பண்ணித் தர்ற கதையை மட்டும் போடு! நீயா எதையும் செலெக்ட் பண்ணிப் போடாதே!" என்றார்.

"
சரி சார்!" என்று உர்ரென்று சொல்லிவிட்டுக் கிடுகிடுவென்று கீழே போனேன். பரிசீலனைக்கு வந்திருந்த கதைகளை ஒரு கட்டாகக் கட்டினேன். எடுத்துக்கொண்டு வந்து, சோபாவில் அமர்ந்திருந்த சாவி சாரின் காலடியில் வைத்தேன்.

"
இவ்வளவுதான் சார் கதை! கொடுத்து அனுப்பிடுங்க. அவங்க செலெக்ட் பண்ணித் தர்ற கதையை மட்டும்தான் இனி நான் போடுவேன். அது நல்லாருக்கா, நல்லா இல்லையான்னு என்னை நீங்க கேட்கக்கூடாது. அதே மாதிரி ஒரு வாரம் கதையே இல்லேன்னா, அதுக்கும் நான் பொறுப்பு கிடையாது! வர்ற வாரத்துக்கே கதை இல்லே!" என்று கடகடவென்று சொல்லிவிட்டு, அவரது பதிலுக்குக் காத்திராமல் வந்துவிட்டேன்.

அடுத்த ஒரு மணி நேரத்தில், சாவி சார் கூப்பிட்டதாக அட்டெண்டர் வந்து அழைத்தார். போனேன். கிட்டத்தட்ட என் நேர்மையைச் சந்தேகப்படுகிற மாதிரி சாவி சார் சொன்ன வார்த்தையால் என் உடம்பும் உள்ளமும் பதறிக்கொண்டு இருந்தது. அவர் ஏதாவது கோபமாகப் பேசினால், பதிலுக்குக் கோபமாக நானும் பதில் சொல்லிவிடுவது என்று தயாராகப் போனேன்.

"
வா, ரவி!" என்று மிகச் சாந்தமான குரலில் அழைத்தார் சாவி. "உன் கோபத்தில் உள்ள நியாயத்தை என்னால புரிஞ்சுக்க முடியுது. நான்தான் கொஞ்சம் அவசரப்பட்டுட்டேன். யம் வெரி ஸாரி! யாரும் கதைகளைப் பார்க்கவேணாம். நீயே முடிவு பண்ணு. உனக்கு முழுச் சுதந்திரம் தரேன். உனக்கு உதவியா இருக்கும்னா மட்டும் மாலதிக்குக் கொடுத்து அனுப்பி, செலெக்ட் பண்ணித் தரச் சொல்லு. மத்தபடி நீயே டிஸைட் பண்ணு. இனிமே, யாரும் எந்தக் கமென்ட்டும் அடிக்க மாட்டாங்க... நான் உள்பட!" என்றார்.

என் கோபம் எல்லாம் உடம்பிலிருந்து புஸ்ஸென்று வழிந்து காணாமல் போய்விட்டது. பதிலுக்கு, வேறு விதமான பதற்றம் என்னில் தொற்றிக்கொண்டது. 'ஐயோ! இவ்வளவு பெரிய மனிதரை, அற்பன் என்னுடைய முன்கோபத்தால் மனம் புண்படுத்திவிட்டேனா!' என்கிற பதற்றமே அது.

சாவி சார் சொல்வாக்கு தவறாதவர். தான் சொன்னது போலவே, அதன்பின் சாவியில் வெளியான சிறுகதைகளைப் பற்றிக் கடைசி வரையிலும் அவர் எந்த கமென்ட்டும் அடிக்கவில்லை.

அதன்பின்புதான், அவர் ஒரு கடிதத்தை என்னிடம் கொடுத்தார். அது கண்ணன் மகேஷ் என்ற எழுத்தாளர் எழுதிய கடிதம். அந்தக் கடிதத்தில், நண்பர் என்பதால் சங்கரநாராயணனின் கதைகளை நான் அடிக்கடி பிரசுரிக்கிறேன் என்றும், தன்னுடைய நல்ல கதைகளை நிராகரிக்கிறேன் என்றும் என்னைக் குறை சொல்லி  எழுதியிருந்தார். சொல்லிவைத்தாற்போன்று அதே வாரத்திலேயே சங்கரநாராயணனின் ‘அன்றிரவுகதையை நான் வெளியிட்டிருந்தேன்.

யாரோ ஓர் எழுத்தாளரின் கடிதத்தை நம்பி என்னைக் குறை சொன்னதாக ஆகிவிடக்கூடாது என்றுதான் தன் மகள் மாலதி அந்தக் கதையை நன்றாக இல்லை என்று சொன்னதாகச் சொல்லி, சாவி என்னை விசாரித்திருக்கிறார் என்றும், உண்மையில் மாலதி அவர்கள் அப்படிச் சொல்லவே இல்லை என்றும் பின்னர் புரிந்துகொண்டேன்.

@@@@@

கண்ணன்மகேஷுக்கு வருகிறேன். அவரை எனக்குப் பழக்கம் இல்லை. அவர் தனது கதையில் விவரித்திருந்த அந்த ஒரு சம்பவத்தின்போது பார்த்ததுதான். மற்றபடி, அவரது முகம்கூட இப்போது எனக்கு நினைவில்லை.

கண்ணன்மகேஷின் சில சிறுகதைகளை சாவியில் நானே பிரசுரித்திருக்கிறேன் என்றுதான் ஞாபகம். நிறைய எழுதி அனுப்புவார். ஆனால், அவை சாவிக்குப் பொருத்தமாக இல்லாததால், ஒரு சமயம் தொடர்ந்து அவரது கதைகளை நிராகரிக்கவேண்டி வந்தது.

நிராகரிக்கப்பட்டவை தவிர, அவர் கதைகள் ஒன்றிரண்டை மறுபரிசீலனைக்காக எடுத்து வைத்திருந்த சமயத்தில், வாசகர் ஒருவரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், 'கண்ணன்மகேஷ் என்பவரின் கதைகளைப் பிரசுரிக்கும்போது கவனமாக இருங்கள். இவர் சாவி அவர்களின் நெருங்கின உறவினர் என்றும், சாவி தன் சொந்த மாமாதான் என்றும் பல இடங்களில் சொல்லித் திரிகிறார். சாவி இதழுக்குத் தான் அனுப்பும் கதைகளைப் படித்துக் கூடப் பார்க்காமல் நேரடியாக அச்சுக்கு அனுப்பிவிடுவார்கள் என்றும் பல பேரிடம் தம்பட்டம் அடித்துக்கொண்டு இருக்கிறார். எச்சரிக்கையாக இருக்கவும்!' என்று எழுதப்பட்டு இருந்தது.

சாவி அவர்களிடம் அந்தக் கடிதத்தைக் காட்டியபோது, "அப்படி யாரும் கிடையாது. அவர் கதைகளைப் போடாதே!" என்று சொல்லிவிட்டார். என்றாலும், மறுபரிசீலனைக்காக எடுத்துவைத்திருந்த கண்ணன்மகேஷின் குறிப்பிட்ட அந்தச் சில கதைகளை நான் திருப்பி அனுப்பவில்லை.

இந்த நிலையில்தான் அவரே ஒருநாள் சாவி அலுவலகத்துக்கு வந்தார். அவர் தன் சிறுகதையில் குறிப்பிட்டுள்ளபடி அவரை யாரும் கவனிக்காமலோ, பதில் சொல்லாமலோ இல்லை. நான்காவது இளைஞனாக, முக்கால் நிர்வாணமாக நின்ற வெளிநாட்டுப் பெண்ணை (ஆங்கிலப் பத்திரிகையில் பிரசுரமாகியிருந்த படம்) தன் மடியில் கிடத்திக்கொண்டவனாக, வெளிநாட்டுத் துணுக்கைத் தங்கள் பத்திரிகைக்கு மாற்றச் சிரமப்பட்ட இளைஞனாக அவர் வர்ணித்திருந்தது என்னைத்தான். சரி, ஒரு சிறுகதை என்றால், அதில் இப்படிச் சில சுவாரஸ்யங்கள் சேர்க்காவிட்டால் எப்படி?

சாவி சார் அப்போது இயல், இசை, நாடக மன்றத் தலைவராகப் பொறுப்பு ஏற்றிருந்தார். கதைகளை நானே பார்த்துப் பரிசீலித்து, இறுதி முடிவு எடுப்பவனாக இருந்தாலும், பல சௌகரியங்களுக்காக, 'நான் பரிசீலித்துத் தருவேன். இறுதி முடிவு எடுப்பவர் சாவி சார்தான்' என்று கைகாட்டி விடுவது வழக்கம். பல தொல்லைகள், சிபாரிசுகளிலிருந்து நான் தப்பித்துக்கொள்ள அது சிறந்த வழியாக இருந்தது. அப்படித்தான் அன்றைக்குக் கண்ணன்மகேஷிடமும் சொன்னேன்.

கூடவே, அந்தக் கடிதத்தை எடுத்து அவரிடம் காட்டி, "இப்படி ஒரு கடிதம் வந்திருக்கிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டேன்.

அவர், தான் ஏதோ தப்பு செய்துவிட்டவர் போல், சற்று நேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தார். பிறகு, "இதில் சொல்லப்பட்டிருப்பது எல்லாமே பொய்! அப்படி யாரிடமும் நான் சொல்லவில்லை" என்றார். "உங்கள் விளக்கத்தை எனக்கு ஒரு கடிதமாக எழுதிக் கொடுங்கள்" என்று கேட்டேன். பேப்பர் கேட்டார். கொடுத்தேன். எழுதுவதற்கு ஆயத்தமானவர் சற்று யோசித்து, "வேண்டாம். என் கதைகளை நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். இருந்தால் எடுத்துக் கொடுத்துவிடுங்கள்" என்றார். எடுத்துக் கொடுத்தேன். வாங்கிக்கொண்டு போய்விட்டார்.

மற்றபடி, இது சம்பந்தமாக அவர் என்னிடம் எதுவும் பேசவில்லை. அதற்குப் பிறகு இன்றுவரை என்னோடு தொடர்புகொள்ளவும் இல்லை.

அவர் தன் கதையில் என் மீது குற்றம் எதுவும் சுமத்தவில்லை. என்றாலும், அபாண்டமாக எஸ்.சங்கரநாராயணனைப் பற்றி எழுதியிருப்பதை அறிந்து, வருத்தமாக இருக்கிறது. கதைச் சம்பவம் நிகழ்ந்த அன்றைய தினத்தில், கண்ணன்மகேஷ், சங்கரநாராயணன் இருவரும் எனக்கு ஒன்றுதான். என்ன... இந்த 20 வருடத்தில் கண்ணன்மகேஷை அன்று ஒருநாள் மட்டும்தான் பார்த்தேன். சங்கரநாராயணனை நாலைந்து முறை பார்த்திருப்பேன். அவ்வளவுதான்!

எப்படியோ... சாவியில் பணியாற்றிய அந்தப் பழைய மலரும் நினைவுகளில் என்னை மூழ்கடித்ததற்கும், இந்த பிளாகில் ஏற்ற ஒரு புதிய விஷயம் தந்ததற்கும் கண்ணன்மகேஷுக்கு நன்றி!

@@@@@