உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, November 16, 2010

வாழ்க்கையல்ல... வேதம்!

னோஹர் தேவதாஸ் - மஹிமா... இந்த ஆதர்ச தம்பதியின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் அநேகம்!

மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர்கள் அங்கேயே தங்குவதற்கு வசதியும், வற்புறுத்தலும், நல்ல வேலை வாய்ப்பும் இருந்தன. என்றாலும், ‘எங்கள் தேசம் இந்தியாதான்’ என்று, படிப்பு முடிந்த கையோடு இந்தியா திரும்பிவிட்டனர். சென்னையிலிருந்து தங்கள் சொந்த ஊரான மதுரைக்குக் காரில் போய்க்கொண்டு இருந்தபோதுதான் அந்த விபரீதம் நிகழ்ந்தது. சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது.

மஹிமாதான் காரைச் செலுத்திக்கொண்டு இருந்தார். அமெரிக்காவில் அந்த நாட்டுச் சாலைகளில் குறைந்தபட்சம் 80 கி.மீ. வேகத்தில் லாகவமாகக் கார் ஓட்டக்கூடியவர் அவர். அங்கே அவர் இருந்த காலத்தில் ஒரு சின்ன விபத்து கூட ஏற்பட்டதில்லை. இங்கேயுள்ள சாலைகளுக்கேற்ப அன்றைக்கு மிக மிக மெதுவாகத்தான் அவர் காரைச் செலுத்தினார். என்றாலும், நேஷனல் ஹைவேஸில் படுவேகமாக வந்த லாரி ஒன்று ஓவர் டேக் செய்யும்போது, இவர்கள் காரை பக்கவாட்டில் உரசிச் செல்ல, கார் பக்கத்திலிருந்த பள்ளத்தில் உருண்டது. காரில் இருந்த மனோஹர், அவரது தாயார், ஆறு வயது மகள் சுஜாதா மூவரும் அதிர்ஷ்டவசமாக சிறு காயமும் இன்றித் தப்பிக்க, பாவம்... மஹிமாவுக்குதான் பலத்த அடி. முதுகெலும்பில் முறிவு ஏற்பட்டு, கை கால்கள் செயல் இழந்தன.

பின்னர், மருத்துவமனையில் சேர்த்துத் தீவிர சிகிச்சை அளித்தும், பூரண குணம் என்பது ஏற்படவே இல்லை. கொஞ்சம்கூட நகர முடியாத அளவுக்கு ஆளானார் மஹிமா. படுக்கையில் புரண்டு படுக்க வேண்டும் என்றாலும், பிறர் உதவியின்றி முடியாது. தோளுக்குக் கீழே உணர்ச்சியே இல்லை. சக்கர நாற்காலியே மஹிமாவின் உலகம் என்றாகிவிட்டது.

இது ஒருபுறம் இருக்க, இன்னொரு விபரீதமும் சேர்ந்துகொண்டது. மனோஹர் தேவதாஸின் கண் பார்வை மங்க ஆரம்பித்தது. மருத்துவர்களை அணுகியபோது, அவருக்கு ‘ரெடினிடிஸ் பிக்மெண்டோஸா’ என்னும் கண் குறைபாடு இருப்பதைக் கண்டுபிடித்தார்கள். இந்தக் குறைபாடு மனோஹருக்குச் சின்ன வயது முதலே இருந்திருக்கிறது. என்றாலும், அந்த விபத்துக்குப் பிறகு, பார்வை மங்குவது துரிதமாகியது. அவரால் ஒரு குறிப்பிட்ட வெளிச்சத்துக்கு அதிகமான வெளிச்சம் இருந்தாலும் பார்க்க முடியாது; குறைவான வெளிச்சம் இருந்தாலும் பார்க்க முடியாது. தவிர, ஒரு குறுகிய வட்டத்தின் வழியாகப் பார்க்கிற மாதிரிதான் அவரால் பார்க்க முடிந்தது. இதை ஆங்கிலத்தில் tunnel vision என்று சொல்வார்கள். அதாவது, ஒரு சுரங்கப்பாதையின் உள்ளிருந்து பார்த்தால், வெளியே இருக்கும் பகுதி வட்டமாகத் தெரியும்; மற்ற இடங்கள் இருட்டில் கறுப்பாகத் தெரியும் அல்லவா? அது போல, இவரது பார்வை ஒரு ரூபாய் நாணயம் அளவுக்கே இருந்தது. மற்ற இடங்கள் கறுப்பாக இருக்கும். அவர் ஒருவரின் முகத்தைக் கூட முழுதாகப் பார்க்க முடியாது. இடது கண், வலது கண், மூக்கு என்று ஒவ்வொரு அங்கமாகத்தான் பார்க்க முடியும்.

ஆனால், மனோஹர் தேவதாஸ் மன உறுதி மிக்கவர். முழுமையாகப் பார்வை பறிபோகும் முன் தன்னால் எத்தனைப் படங்கள் வரைய முடியுமோ வரைந்துவிட வேண்டும் என்று படங்கள் வரைவதில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தவிர, அவரால் நிறங்களைப் பிரித்தறியவும் முடியாது என்பதால், வெறுமே கோட்டுச் சித்திரங்களை மட்டுமே வரையத் தொடங்கினார். படத்துக்கான நீள, அகல அளவுகளை மனதிலேயே வகுத்துக்கொண்டு, ஒரு தாளில் கொஞ்சம் கொஞ்சமாக வரைந்து, அதை முழுப் படமாக்குகிற அவரது திறன் எத்தகையது என்பதை நான் இங்கே முழுமையாக விளக்கியிருக்கிறேனா, அவரது நிலையை உங்களால் 100 சதவிகிதம் உணர முடிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. சுருக்கமாகச் சொன்னால், அவர் வரைந்த படத்தை அவராலேயே முழுதாகப் பார்த்து சரியாகத்தான் வரைந்திருக்கிறோமா, இல்லையா என்று தெரிந்து கொள்ள முடியாது. மனைவியிடம் காண்பித்து அபிப்ராயம் கேட்பார்.

அவரின் மனைவி மஹிமாவும் சிறந்த ஓவியர். அந்த விபத்துக்குப் பிறகு அவரால் கைகளைக் கொஞ்சம்கூட அசைக்க முடியாமல் போனதால், வரைய முடியவில்லை. ஆனால், அதற்காகத் தளர்ந்துவிடவில்லை மஹிமா. மனோஹர் தேவதாஸ் படம் வரையும்போது அருகில் இருந்து நல்ல புத்தகங்களை ஏற்ற இறக்கத்துடன் வாசித்துக் காட்டுவார். அதைக் கேட்டு ரசித்தபடியே படம் வரைவார் மனோஹர். “உண்மையில், முன்பு நான் வரைந்த படங்களின் எண்ணிக்கையைவிட, படித்த புத்தகங்களின் எண்ணிக்கையைவிட, அந்த விபத்துக்குப் பிறகு வரைந்த படங்கள், படித்த புத்தகங்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகம்” என்று கேணி கூட்டத்தில் சொன்னார் மனோஹர் தேவதாஸ்.

மனைவியை அந்த அளவு மிக அதிகம் நேசித்தவர் மனோஹர். “உங்களுக்குள் சின்ன மனஸ்தாபம்கூட வந்ததில்லையா?” என்று கேட்டதற்கு மனோஹர் சொன்னார்... “எப்படி வரும்? அவ தங்கம்னா தங்கம், அப்படித் தங்கம்! ஒரு உதாரணம் சொல்றேன். ஒருமுறை எனக்கும் என் அண்ணனுக்கும் மனஸ்தாபம் வந்துடுச்சு. அவனிடம் பண உதவி கேட்டபோது, காலி உறையை எனக்கு அனுப்பியிருந்தான். வெறுப்பு வந்தது. ‘இவனெல்லாம் ஒரு அண்ணனா!’ன்னு என் மனைவியிடம் கன்னாபின்னானு திட்டினேன். ‘நான் வேலைக்குப் போய், அந்த வருமானத்துலதானே இவனைப் படிக்க வெச்சேன். அந்த நன்றிகூட இல்லாம இப்படி வெறும் கவரை அனுப்பியிருக்கானே!’ன்னு புழுங்கினேன். ‘இத்தனைக்கும் அம்மாவை நான்தான் பார்த்துக்கறேன்’ன்னு பேச்சுவாக்குல சொன்னேன். உடனே மஹிமா குறுக்கிட்டு, ‘தப்பாச் சொல்றீங்க. நாம அவங்களைப் பார்த்துக்கலை. அவங்கதான் நம்மளைப் பார்த்துக்கறாங்க. நாம ரெண்டு பேரும் வேலைக்குப் போறோம். அவங்கதான் வீட்டையும் நம்ம குழந்தையையும் பார்த்துக்கறாங்க. இனியொரு தடவை அவங்களை நாம பார்த்துக்கறோம்னு சொல்லாதீங்க. அவங்கதான் நம்மளைப் பார்த்துக்கறாங்க’ன்னு அழுத்தமா சொன்னா.

ரெண்டொரு வருஷம் கழிச்சு, ஒரு திருமண நாளின்போது, மஹிமாவுக்கு ஏதாவது பரிசு தர விரும்பினேன். ‘என்ன பரிசு வேண்டுமோ, கேள்’னு சொன்னேன். உடனே அவ சொன்னா... ‘எனக்கு வேண்டிய புடவைங்க, நகைங்கன்னு எல்லாம் இருக்குது. அதனால எனக்கான தேவைன்னு எதுவுமே இல்லே. ஆனா, பரிசா ஒண்ணு கேக்கறேன். நிறைவேத்துவீங்களா?’ன்னா. ‘சொல்லு. கண்டிப்பா நிறைவேத்தறேன்’ன்னு சொன்னேன். ‘உங்க அண்ணன் மேல இருக்கிற கோபத்துல அவர் அன்னிக்கு அனுப்பின காலி கவரை இன்னும் பத்திரமா வெச்சுக்கிட்டு, மனசுல அந்த வெறுப்பை இன்னமும் சுமந்துக்கிட்டிருக்கீங்களே... முதல்ல அந்த கவரைக் கிழிச்சுப் போடுங்க. வெறுப்பை உதறுங்க. அதுதான் நீங்க எனக்குத் தர்ற பரிசு!’ன்னா. இப்படியொரு அருமையான மனைவியோடு எப்படிங்க மனஸ்தாபம் வரும், சொல்லுங்க?”

மனோஹர் தேவதாஸ் சிறந்த ஓவியர் மட்டுமல்ல; நல்ல எழுத்தாளரும்கூட! மதுரையைப் பற்றி ஓவியங்களோடு கூடிய புத்தகங்கள் எழுதியிருக்கிறார். மனைவி மஹிமாவின் மறைவுக்குப் பின், அவரைப் பற்றிய புத்தகம் ஒன்றும் எழுதியிருக்கிறார். மனோஹர் வேதியியல் நிபுணரும்கூட. ஆரம்ப காலத்தில் அவர் வரைந்த ஆயில் பெயிண்டிங்குகளை வைத்து ஒரு கண்காட்சி நடத்தி, அதன் மூலம் கிடைத்த 53,000 ரூபாயையும் சங்கர நேத்ராலயாவுக்கு வழங்கிவிட்டார். அன்றைக்கு மட்டுமல்ல, இன்று வரையில் அவர் வரைகிற படங்களை விற்பனை செய்து கிடைக்கிற வருமானம் மொத்தத்தையும் சங்கர நேத்ராலயாவுக்கும், மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்குமே கொடுத்து வருகிறார் மனோஹர்.

மஹிமாவும்கூட புத்தகங்கள் எழுதி வெளியிட்டிருக்கிறார். ஹாரிபாட்டர் எழுதிய ஜே.கே.ரௌலிங் போல, மஹிமா தன் குழந்தை சுஜாதாவுக்காகக் கற்பனை செய்து தினம் தினம் ராத்திரி விளையாட்டாகச் சொன்ன கதைகளைத் தொகுத்துக் கொடுக்க, அதை ‘தி மேஜிக் கார்டன் அண்ட் அதர் ஸ்டோரீஸ்’ என்னும் தலைப்பில் அதைப் புத்தகமாக வெளியிட்டிருக்கிறது ‘ஓரியண்ட் லாங்மேன்’ நிறுவனம்.

விவாகரத்துகள் பெருகி வரும் இந்நாளில், மனோஹர்- மஹிமா தம்பதியின் வாழ்க்கை ஆச்சரியமானது மட்டுமல்ல; பலருக்கும் ஒரு வேதப் புத்தகம் போன்றது என்பதில் சந்தேகமில்லை.
.