உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, February 28, 2010

இறையும் அன்பும்!

‘சக்தி விகடன்’ இதழுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டதுமே, இதில் புதிதாக யாரை எழுதச் செய்யலாம் என யோசித்தபோது, சட்டென என் மனதில் தோன்றிய பெயர் ‘இறையன்பு’.

ஒரு மனிதனுக்கு ‘இறை’ உணர்வும், சக மனிதர்களின், உயிர்களின் மீதான ‘அன்பு’ம் அவசியம் தேவை. அவற்றை வளர்ப்பதுதான் ‘சக்தி விகட’னின் நோக்கம். இந்தக் கோணத்தில் யோசித்தபோதுதான், ‘அட! இறையன்புவையே எழுதச் சொன்னால் என்ன!’ என்கிற யோசனை எனக்குத் தோன்றியது.

திரு. வெ.இறையன்புவுக்கு என் வயது இருக்கலாம். அல்லது, என்னைவிட அவர் ஓரிரு வயதுகள் இளையவராக இருக்கலாம். சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு, ‘சாவி’ வார இதழில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், இறையன்பு அடிக்கடி அங்கே சாவி சாரை பார்க்க வருவார். வரும்போது அழகான, மணிமணியான கையெழுத்தில் புதுக் கவிதைகள் எழுதிக் கொண்டு வருவார். மிக இளம் வயதினராக, புதிதாகக் கல்லூரியில் சேர்ந்த மாணவர் போல அப்போது இருந்தார். (இப்போது மட்டுமென்ன, அதே ஸ்லிம்மான தோற்றத்தில் இளமையாகத்தான் தெரிகிறார். 50 வயது இருக்கலாம் என்று நம்புவது கடினமாக இருக்கிறது.)

“ரவி! இந்த இளைஞரிடம் ஒரு கவர்ச்சி இருக்கிறது. எழுத்தில் ஒரு வசீகரம் இருக்கிறது. கவிதைகள் கொஞ்சம் முன்னே பின்னே இருந்தாலும்கூட, அவற்றை நிராகரித்துவிடாமல் சாவியில் வெளியிட்டு உற்சாகமூட்டு. ஒரு காலத்தில் இவர் ஓகோவென்று வரப்போகிறார். என் கணிப்பு இதுவரை தவறியதே இல்லை” என்று சொல்லி, அந்தக் கவிதைகளை என்னிடம் பிரசுரத்துக்குக் கொடுப்பார் சாவி.

இறையன்பு எழுதத் தொடங்கிய புதிது அது! சாவி சொன்னதுபோல் எழுத்தில் கொஞ்சம் கன்னித்தன்மை தெரிந்தாலும், சொல்கிற விஷயம் கனமாகவும், அழுத்தமாகவும், தீர்க்கமாகவும் இருந்ததைக் கண்டேன். அவரின் பல கவிதைகளை, கட்டுரைகளை ‘சாவி’யில் வெளியிட்டு ஊக்கம் தந்திருக்கிறார் சாவி.

என்றாலும், இறையன்புவைப் பலமுறை சாவி சாரின் இல்லத்தில் வைத்துப் பார்த்திருக்கிறேன் என்பதைத் தவிர, அவரது கவிதைகளை சாவி இதழில் வெளியிட்டிருக்கிறேன் என்பதைத் தவிர, அவரோடு எனக்கு நெருங்கிய தொடர்பு எதுவும் ஏற்படவில்லை. பொதுவாகவே நான் ரிசர்வ்ட் டைப். அதிகம் யாருடனும் ஒட்டி உறவாட மாட்டேன். அதுவும் வி.ஐ.பி. என்றால், சத்தமில்லாமல் ஒதுங்கிப் போகிற வழக்கம் உள்ளவன். அன்றைக்கு இறையன்பு மிகவும் எளிதில் நெருங்கிப் பழக முடிகிற ஒரு நண்பராகத்தான் இருந்தார் என்றாலும், அவரோடு எனக்கு நட்போ, தொடர்போ உண்டாகவில்லை.

அதன்பின், நான் ஆனந்தவிகடனில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கிய பின்பு, திரு. இறையன்புவிடமிருந்து பலப் பல கட்டுரைகளை வாங்கிப் பிரசுரித்திருக்கிறோம். அப்போதும் நிருபர்கள்தான் அவரைச் சென்று சந்தித்துப் பேசிவிட்டு வருவார்களே தவிர, தனிப்பட்ட முறையில் அவருடன் நான் தொடர்பை வளர்த்துக் கொள்ளவில்லை. அவர் மிக உயர்ந்த நிலைக்குச் சென்று, பல சாதனைகள் செய்தபோதெல்லாம், ‘அட! அன்றைக்கு சாவியில் நாம் பார்த்த அந்த ஒல்லிய தேகம் கொண்ட இளைஞரா இவர்!’ என்று வியப்பதோடு சரி.

சக்தி விகடனுக்காக, குறிப்பாக அதில் வரும் ‘இளைஞர் சக்தி’ பகுதிக்காகக் கட்டுரைத் தொடர் ஒன்று எழுதித் தர வேண்டும் என்று நான் கைபேசியில் கேட்டபோது, மறுக்காமல் உடனே ஒப்புக்கொண்டார். “ஞாயிறன்று காலையில் வீட்டுக்கு வாங்களேன்! இது பற்றி விரிவாகப் பேசுவோம்” என்றார்.

அதன்படி இன்று போயிருந்தேன். இறையன்புவிடம் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பார்த்த அதே இளமை, இனிமை, எளிமை!

முன்பு அவர் குரல் மிக மென்மையாக, மிருதுவாக இருக்கும். காலத்தின் மாற்றத்தால் குரல் மட்டும் இப்போது சற்றுக் கனத்திருக்கிறது. மற்றபடி, பல நாள் பழகியவர் போன்ற அதே சகஜ பாவத்துடன் பேசினார்.

ராஜாஜி ஹால் எதிரே ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கான குவார்ட்டர்ஸ் ஒன்றில் குடியிருக்கிறார் திரு.இறையன்பு. ரொம்ப நாள் கழித்து அந்தப் பக்கம் போகிறேன். அண்ணா சிலைக்குப் பின்னே, டெல்லி பாராளுமன்ற கட்டடம் போன்று மிக பிரமாண்டமாக உருவாகிவரும் புதிய தலைமைச் செயலக வேலைகள் பரபரப்பாக நடந்துகொண்டு இருந்தன. அதையொட்டி சேப்பாக்கம் ஸ்டேடியம் போகும் சாலை முழுக்கவே அடையாளம் தெரியாமல் மாறியிருந்தது.

சக்தி விகடன் தொடருக்கு இரண்டு மூன்று தலைப்புகள் கொடுத்திருக்கிறார் இறையன்பு. அனைத்துமே சுவாரசியமானவை. எதை வைத்துக்கொள்ளலாம் என்பதை மற்றவர்களுடன் கலந்துகொண்டு நாளை தீர்மானிக்க உத்தேசம்.

கவியரசு கண்ணதாசன் ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ எழுதியபோது, அதுவரை ஆன்மிகம் பக்கம் திரும்பாதிருந்த லட்சக் கணக்கான இளைஞர்கள், கண்ணதாசனின் எழுத்தால் வசீகரிக்கப்பட்டு ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ தொடரை விழுந்து விழுந்து படித்தார்கள். அதற்குப் பின்பு எனக்குத் தெரிந்து, தமது எழுத்தால் அதிக இளைஞர்களை வசீகரிக்கச் செய்திருப்பவர் இறையன்புதான்.

அவரது எழுத்து சக்தி விகடனில் வெளியாவது, இதழுக்கு மேலும் ஒரு புதிய சக்தியைக் கூட்டும் என்பது நிச்சயம்!
.

Friday, February 05, 2010

காந்தி மகாத்மாவா?

காத்மா காந்தி பற்றிப் பள்ளிப் பருவத்தில் பாடங்களில் நமக்குச் சொல்லித் தரப்பட்டது வேறு; பின்னர் வளர்ந்து பெரியவனாகி, எல்லா விதமான புத்தகங்களையும் படிக்கத் தொடங்கிய பின்னர், நாம் கேள்விப்படும் விஷயங்கள் வேறு.

அவர் தன் மனைவி கஸ்தூரிபாவைப் பாடாய்ப் படுத்தி எடுத்திருக்கிறார்; கிட்டத்தட்ட ஒரு சாடிஸ்ட் போல அந்தம்மாவை டார்ச்சர் செய்திருக்கிறார்; பிள்ளைகளுக்கு ஒரு நல்ல தகப்பனாகவே அவர் நடந்து கொள்ளவில்லை; இதனால்தான் அவரின் பையன் மணிலால் ஒரு பொறுக்கியைப் போலச் சுற்றித் திரிந்தான் என்று 30 வருடங்களுக்கு முன்பே கேள்விப்பட்டேன். அதுவே எனக்குக் கொஞ்சம் அதிர்ச்சிதான்! ‘சரி, ஒழுக்கத்தை போதிப்பதில் சற்றுக் கடுமையாக அவர் நடந்துகொண்டு இருக்கலாம்’ என்று நினைத்துக் கொண்டேன் - ‘எம்டன் மகன்’ படத்தில் நாசர் கேரக்டர் இல்லையா, அது போல!

சமீபத்தில், விகடனில் அந்தக் காலத்தில் ‘கஸ்தூரி திலகம்’ என்னும் தலைப்பில் கஸ்தூரிபா காந்தியைப் பற்றி பரணீதரன் எழுதிய தொடர் கட்டுரையைப் படித்தபோதுதான், தன் கருத்துக்கு எதிர்க் கருத்து சொன்னதற்காக கஸ்தூரிபாவைப் பிறந்த வீட்டுக்கு அடித்துத் துரத்தியிருக்கிறார் காந்தி என்கிற விஷயம் தெரிய வந்தது. இன்னும் என்னென்ன அவமானப்படுத்த முடியுமோ படுத்தியிருக்கிறார். இத்தனைக்கும் பரணீதரன் அந்தக் கட்டுரையைச் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பு எழுதும்போது மிகவும் ஜாக்கிரதை உணர்ச்சியோடுதான் எழுதியிருக்கிறார்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஞாநி ஒரு கட்டுரையில் மகாத்மா காந்தி பற்றிக் குறிப்பிடும்போது, ‘தன் காம உணர்ச்சிகளைத் தன்னால் கட்டுப்படுத்திக் கொள்ள முடிகிறதா’ என்பதைப் பரிசோதித்துத் தெரிந்துகொள்ள இரண்டு இளம் பெண்களை முழு நிர்வாணமாகத் தன் இரண்டு பக்கத்திலும் படுக்கச் சொல்லிவிட்டு, காந்தி ஓர் இரவு முழுவதும் தன் புலன்களை அடக்கிப் படுத்துக்கொண்டு இருந்தார் என்று எழுதியிருந்தார். காந்தியின் சுய பரிசோதனைக்குப் பரிசோதனை எலிகளாகப் பயன்பட்ட அந்தப் பெண்களும்கூட அந்தச் சோதனையில் வெற்றி பெற்றதாகத்தானே அர்த்தம்... அவர்கள் காந்தியைவிட மேலல்லவா என்று அதைப் படித்தபோது எனக்குத் தோன்றியது.

சிறையில் கைதிகளை ஆண், பெண் பேதமில்லாமல் ஒன்றாக அடைக்கும்போது, ஆண் கைதிகள் உணர்ச்சிவசப்பட்டுப் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்துவிடாமல் இருக்க, கைதாகி உள்ளே இருக்கும் பெண்கள் அத்தனை பேருக்கும் தலையை மழுங்க மொட்டை அடித்துவிடும்படி காந்தி சொன்னதாக நடிகர் சிவகுமார் ஒரு கூட்டத்தில் பேசும்போது சொல்லியிருக்கிறார்.

இப்படி காந்திஜியின் இமேஜை சரிப்பதற்கென்றே சில செய்திகள் அவ்வப்போது என் காதில் வந்து விழுந்துகொண்டு இருக்கின்றன. அதையும் மீறி, வெள்ளையனிடம் அடிமைப்பட்டுக் கிடந்த நமது தேசத்துக்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்த மகான் என்கிற ஒரு விதமான பக்தி உணர்வு எனக்கு அவர் மீது இருக்கிறது. ‘என்ன இருந்தாலும், அவரும் மனிதர்தானே? கடவுள் அவதாரம் இல்லையே! சொல்லப்போனால் கடவுள் அவதாரங்கள்கூடத் தப்பு செய்திருக்கிறதே!’ என்று நினைப்பதுண்டு. மகாகவி பாரதியைக்கூட ‘கஞ்சா அடிக்ட்’ என்று சொல்லிக் கேள்விப்பட்டிருக்கிறேன்.

பொதுவாக, நமது முன்னோர்களிடம் உள்ள நல்லவைகளை மட்டுமே எடுத்துக்கொண்டு, அவற்றைத்தான் நமக்கான வழிகாட்டிகளாக ஏற்றுப் பின்பற்ற வேண்டுமே தவிர, அவர் கஞ்சா அடிக்கலையா, நானும் அடிப்பேன் என்றும், கண்ணதாசன் பெத்தடின் ஊசி போட்டுக் கொள்ளவில்லையா, நானும் போட்டுக் கொள்வேன் என்றும் தேடித் தேடிக் கெட்டவைகளை மட்டுமே பின்பற்றுவது நம்மை மேலும் மேலும் சீரழிக்கத்தான் செய்யும். ஆனால், நம் மனசு எப்போதுமே வக்கிரமானது; நல்லவைகளை எடுத்துக் கொள்ளாது. கெட்டவைகளைக் கப்பென்று பற்றிக் கொள்ளும். அதற்கு இம்மாதிரியான பெரியவர்களை உதாரணம் காட்டி, ஒன்றும் தப்பில்லை என்று நம் செயலுக்குச் சமாதானம் சொல்லும். இதனால்தான் காந்தி போன்ற பெரியவர்களைப் பற்றிப் பேசும்போது, அவரிடமுள்ள அல்லவைகளை நீக்கி, நல்ல விஷயங்களை மட்டுமே இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி வந்திருக்கிறோம்.

ஆனால், இன்றைக்குக் காலம் மாறிவிட்டது. தகவல் தொழில் நுட்ப யுகத்தில் எந்த விஷயத்தையும் மூடி மறைக்க முடியவில்லை. எல்லாரும் எல்லாவற்றையும் தெரிந்து கொள்கிறார்கள். அன்னப் பறவை போல் பகுத்தாய்ந்து பால் போன்ற நல்லவைகளை மட்டும் பின்பற்றி நடப்பது அவரவர் சமர்த்து!

சமீபத்தில், மருதனின் வலைப்பூவில் ‘காந்தியின் பெண்கள்’ என்னும் தலைப்பில் ஒரு பதிவைப் படித்துத் திடுக்கிட்டேன். பெண்கள் பற்றி காந்தி எத்தனை மோசமான எண்ணம் கொண்டு இருக்கிறார் என்பது குறித்து, இங்கிலாந்தைச் சேர்ந்த ‘மைக்கேல் கானெல்லன்’ என்பவர் எழுதிய கட்டுரையை மருதன் படித்து அதிர்ந்ததோடு, அதற்கான யுஆரெல் இணைப்பையும் தந்திருந்தார். அந்த ஆங்கில மூலக் கட்டுரையின் தமிழாக்கத்தைதான் கீழே தந்துள்ளேன்.

2010 ஜனவரி 27-ம் தேதி புதன்கிழமை எழுதப்பட்ட கட்டுரை இது.

காந்தியால் துயருறும் பெண்கள்

பெண்ணுரிமைக்காக இந்தியா தயாரானபோது, மோகன்தாஸ் காந்தி அதைப் பின்னுக்கு இழுத்தார்; தவிர, பெண்கள் தொடர்பான அவரது நடத்தையும் விசித்திரமாகவே இருந்திருக்கிறது.

மோகன்தாஸ் காந்தியின் நினைவு தினம் சனிக்கிழமையன்று வருகிறது. அவர் மிகவும் வியப்புக்குரிய ஒரு மனிதர். அவர் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தை ஒழித்துக்கட்ட உதவி, தன் நாட்டை சுதந்திர நாடாக்க வழிவகை செய்தார். இந்தியா அவரை புனித ஆத்மா என்றும் மகாத்மா என்று வழிபட்டது; இன்றைக்கும் வழிபடுகிறது. அவர் மிகுந்த தைரியம் உள்ளவராகவும், புத்திச் சாதுர்யம் நிரம்பியவராகவும், தன் மக்களிடத்தில் கருணை கொண்டவராகவுமே மேற்கத்திய நாடுகள் அவரைப் பார்க்கின்றன.

ஆனால், காந்தி ஒழுக்கக் கோட்பாடுகளில் மிகக் கடுமையாகவும், இன்பங்களைத் துய்ப்பதைக் கடுமையாக எதிர்ப்பவராகவும், பெண்களை வெறுப்பவராகவுமே இருந்தார். பாலியல் உணர்வுகளை வெளிப்படுத்தாமல் உள்ளுக்குள்ளேயே புதைத்துக் கொள்ளும் ஒரு பெரிய நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதை அவர் உறுதிப்படுத்த விரும்பினார். பெண்கள் பிறப்பதற்கு ஏற்றதாக இல்லாமல் அச்சுறுத்தும் ஒரு நாடாகவே அவர் இந்தியாவை வைத்திருக்க விரும்பினார். 1949-ல் ஜார்ஜ் ஆர்வெல் எழுதிய ‘காந்தி - சில எண்ணங்கள்’ (Reflections on Gandhi) என்கிற கட்டுரையில், ‘அப்பாவிகள் என்று நிரூபணமாகிற வரையில், மகான்களைக்கூடக் குற்றவாளிகளாகத்தான் பார்க்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இருக்கலாம்.

காந்தி உடலுறவை அடியோடு வெறுத்தார். வம்ச விருத்திக்காக மட்டுமே உடலுறவு கொள்ளலாம்; வேறு எந்த வகையிலும் பாலியல் உறவு கூடாது என்பதில் தீவிரமாக இருந்தார். காம இச்சைகளை அடக்கத் தவறினால், அது மலச்சிக்கல் போன்ற உபாதைகளுக்கு வழிவகுக்கும் என்று அவர் போதித்தார். உடலுறவு வைத்துக் கொள்வது ஆரோக்கியத்துக்குத் தீங்கானது என்றும், உடலுறவுச் சுதந்திரம் என்பது இந்தியர்களை மனிதர்களாக வாழவே தகுதியற்றதாகச் செய்துவிடும் என்றும் அவர் நம்பினார். ‘சமய நெறிகள் காரணமாக இல்லற இன்பத்தைத் துறந்துவிட்டு வாழ்வது ஒரு நரகம்’ என்றார் மார்ட்டின் லூதர் கிங். ஆனால், அப்படியொரு இன்பம் துறந்த நாடாகத்தான் காந்தி தன் நாட்டைக் காண விரும்பினார். தன் மனைவியிடம்கூடக் கலந்தாலோசிக்காமல், இல்லற இன்பத்தைத் துறப்பதென அவர் தன்னிச்சையாக முடிவெடுத்தார்.

காந்தி பெண்களை ஆண்களுக்கு நிகராக மதித்தார் என்றும், சுதந்திரப் போராட்ட காலத்தில் பெண்கள் செலுத்திய பங்களிப்பைப் போற்றினார் என்றும், காந்தி மற்றும் அந்தப் புனிதரைப் பற்றிக் கட்டுரை எழுதியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். ஆம்பிளைத்தனமான பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கொடுமைக்கு எதிராக அவர் கையாண்ட அஹிம்சா ரீதியான எதிர்ப்பை பெண்மைக்குரிய கொள்கையாக அவர் மதித்துக் கொண்டாடினார். ஆனால், பாலியல் உறவுகள் குறித்தான அவரின் கவலைகள், அவரை பாலுறவுகளுக்கு எதிராக அதிர்ச்சியான கொள்கைகளை எடுக்கச் செய்தன. பெண்களின் உடம்பு குறித்த அவரது சிந்தனை கோணலாக இருந்தது. ரீத்தா பானர்ஜி ‘செக்ஸ் அண்ட் பவர்’ என்கிற தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருப்பது போல, ‘பெண்களின் ஆன்மா காம உணர்வுக்குத் திரும்புவதன் காரணமாகவே அவர்களுக்கு மாதாந்திர உதிரப் போக்கு நிகழ்கிறது என்று காந்தி நம்பினார்’.

தென்னாப்பிரிக்காவில் தங்கி, அந்த அரசின் நிறவெறிக் கொள்கையை எதிர்த்து காந்தி போராடிக்கொண்டு இருந்த காலத்தில், இரண்டு பெண்கள் ஓர் இளைஞனைத் தொடர்ந்து பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்துக்கொண்டு இருந்ததைக் கண்டார். அந்தப் ‘பாவக் கண்கள்’ சுத்திகரிக்கப்படவேண்டுமானால், அந்த இரண்டு பெண்களின் தலையை மொட்டை அடித்துவிடும்படி அவர் அவனுக்கு ஆலோசனை சொன்னார். காந்தியே தனது கட்டுரை ஒன்றில் இந்த நிகழ்ச்சியைப் பெருமையோடு குறிப்பிட்டு, பாலியல்ரீதியான தாக்குதல்களுக்குப் பெண்கள்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் என்கிற செய்தியை எல்லா இந்தியர்களுக்கும் தெரிவித்துள்ளார். அத்தகைய கொள்கைதான் இன்னமும் நீடித்துள்ளது. 2009-ம் ஆண்டு கோடையில், வட இந்தியாவில் உள்ள கல்லூரிகள் பாலியல் வன்முறைகளுக்குத் தீர்வு காணும் விதமாக, பெண்கள் மேற்கத்திய நாகரிக உடையான ஜீன்ஸ் அணிவதைத் தடை செய்தன. அத்தகைய உடைகள் அந்த வளாகத்தில் உள்ள ஆண்களின் காம உணர்ச்சியைத் தூண்டுகின்றனவாம்.

கற்பழிக்கப்பட்ட இந்தியப் பெண்கள் மனிதர்களுக்குண்டான தகுதியை இழந்துவிடுகிறார்கள் என்று நம்பினார் காந்தி. குடும்ப மற்றும் சமூக நன்மைக்காக, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தங்கள் மகள்களை அப்பாக்கள் கொல்வதைக்கூட அவர் நியாயம் என்று வாதாடினார். தனது வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில் அவர் தனது கருத்துக்களை மாற்றிக் கொண்டார். ஆனால், அவரது கொள்கைகளின் பாதிப்பு இன்னமும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஒவ்வொரு நாளும் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகும் பெண்கள் அவமானம் கருதித் தற்கொலை செய்துகொள்ளும் செய்திகள் நாளேடுகளில் வந்துகொண்டுதான் இருக்கின்றன. கர்ப்பத்தடை மாத்திரை மற்றும் சாதனங்களுக்கு எதிராகவும் யுத்தம் செய்தார் காந்தி. அவற்றைப் பயன்படுத்தும் பெண்களை விபசாரிகளுக்கு நிகராகக் கருதினார்.

தனது சொந்த காம உணர்வுகளின் மீதே யுத்தம் செய்து அவற்றை அழுத்தப் பார்க்கும் எந்தவொரு ஆண் மகனையும் போலவே, பெண்கள் தொடர்பான காந்தியின் நடத்தை மிக மிகப் புதிராக ஆகிப்போனது. தன் காம இச்சையைக் கட்டுப்படுத்திக்கொள்ளத் தன்னால் முடிகிறதா என்று பரிசோதித்துக் கொள்ளும் பொருட்டு, நிர்வாணமான ஓர் இளம்பெண் மற்றும் தன் உடன்பிறந்தவரின் மகளோடு படுத்து உறங்கினார். இந்தச் செயல் அவரது ஆதரவாளர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கடுங் கோபத்தையும் ஏற்படுத்தியது. காந்தியின் மனைவி இதை எப்படி எடுத்துக் கொண்டார் என்பது கடவுளுக்குத்தான் வெளிச்சம்!

பெண் என்பவள் அவளை உடைமையாக்கிக் கொண்டுள்ள ஆணுக்குப் பெருமையோ சிறுமையோ தேடித் தரும் ஒரு ஜந்து என்பது மாதிரியான ஒரு மனப்போக்கைத்தான் அடுத்த தலைமுறைக்குப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார் காந்தி. இதுவும்கூட இன்னமும் தொடர்கிறது. உலக பொருளாதார மன்றத்தின்படி, ஆண்-பெண் சமத்துவப் பட்டியலில் இந்தியா மிக மிகக் கீழே இருக்கிறது. இத்தகைய ஒரு ஆணாதிக்கத்தை எதிர்த்து இந்திய சமூகப் போராளிகள் யுத்தம் செய்துகொண்டுதான் இருக்கிறார்கள். வரதட்சிணைக் கொடுமைகளுக்கு எதிராகவும், வரதட்சிணை சாவுகளுக்கு எதிராகவும் அவர்கள் போராடுகிறார்கள். பதின்பருவ காதலர்களை இகழ்பவர்களுக்கு எதிராகப் போராடுகிறார்கள். எய்ட்ஸுக்கு எதிராகப் போராடுகிறார்கள். பெண் குழந்தைகள் பிறப்பதைத் தடுப்பதற்கு எதிராகவும், பெண் சிசுக் கொலைக்கு எதிராகவும் போராடுகிறார்கள்.

இந்திய எழுத்தாளர் குஷ்வந்த் சிங்கின் வார்த்தைகளில் சொன்னால், “இந்தியாவில் நடக்கும் வன்முறை மற்றும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளில் பத்துக்கு ஒன்பது, பாலியல் ரீதியான கட்டுப்பாடு காரணமாகவே நிகழ்கின்றன”. செக்ஸ் மற்றும் பெண்களின் பாலுறவு விருப்பங்கள் தொடர்பாக இந்தியாவில் ஆழமாகப் படிந்து கிடக்கும் இத்தகைய பிரச்னைக்குரிய மனப்போக்குக்கு காந்தியை மட்டும் நாம் தனிப்பட்டுக் குற்றவாளியாக்க முடியாது. ஆனால், தமது ஆளுமையும் புகழும் தொடர்ந்துகொண்டு இருந்த போதிலும், பாலுறவுச் சுதந்திரத்தை இந்தியா எப்போதுமே அனுபவிக்கக் கூடாது என்பதற்காகப் போராடி, அதில் வெற்றியும் பெற்றார் காந்தி. அகிம்ஸா முறையிலான அரசியல் புரட்சிக்கு உள்ள சக்தியை உணர்ந்துகொண்டது காந்தியின் மேதைமை. ஆனால், பெண்களுக்கு எதிரான அவரது எண்ணங்களில் உள்ள வன்முறையானது எண்ணற்ற கௌரவக் கொலைகளையும், அளக்க முடியாத துயரங்களையும் வழங்கியிருக்கிறது.

நினைவில் கொள்ளுங்கள், புனிதர் என்று இங்கே யாரும் இல்லை.

றிவியல் கோட்பாடுகள் காலத்துக்குக் காலம் மாறுபடும் என்பார்கள். அதே போலவே சமூகக் கோட்பாடுகள், ஒழுக்க நெறிகள் போன்றவையும் நாட்டுக்கு நாடு, நகரத்துக்கு நகரம், காலத்துக்குக் காலம் மாறிக்கொண்டே இருக்கும். இன்றைக்குள்ள நாகரிகம் பெண்களை உயர்வாய்ப் போற்றுகிறது. ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சமூகத்துக்கு பெண்களை போகப் பொருளாக நினைப்பது தவறாகவே இருந்திருக்கவில்லை. குல தெய்வத்துக்கு எருமை, ஆடு போன்ற மிருகங்களைப் பலியிடுவது இன்றைக்கும் பலருக்குத் தவறான செயலாகத் தோன்றவில்லை. ஆனால், இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, மக்கள் நம்மையெல்லாம் கொடூர சமுதாயமாக, ஈவு இரக்கமற்ற அரக்கர்கள் போன்று நினைக்கக்கூடும்.

காந்தியின் காலத்தில், அவர் வளர்ந்த சூழ்நிலையில், அவர் அப்படியான எண்ணங்களைக் கொண்டிருந்திருக்கிறார். அதை அந்த அளவோடுதான் பார்க்க வேண்டுமே தவிர, அதிகப்பிரசங்கித்தனமாக விமர்சிப்பது சரியல்ல என்பதுதான் என் எண்ணம். அய்யன் திருவள்ளுவர்கூட பெண்களுக்கு எதிரான குறள்கள் பலவற்றை எழுதியிருக்கிறார். ஆனாலும், திருக்குறளை இன்றைக்கும் உலகப் பொதுமறை என்று உயர்த்திப் பிடிக்கிறோமல்லவா?

ஆகவே, நல்லவைகளை எடுத்துக் கொள்வோம்; அல்லவைகளைப் புறந் தள்ளுவோம்!
,

Thursday, February 04, 2010

ஒரு ஓவியரின் கதை!

நார்மன் ராக்வெல் (3.2.1894 - 8.11.1978)
னந்த விகடன் ஓவியர்கள் என்றதுமே, இன்றைக்கும் சட்டென்று நம் நினைவுக்கு வருபவர்கள் கோபுலுவும், மாயாவும்தான்! இந்த ஓவிய மேதைகள் இருவருடனும் அதிகம் பழகும் பாக்கியம் கிடைக்கப் பெற்றவன் நான்! அதிலும், ஓவியர் மாயாவின் வீடு என் வீட்டிலிருந்து நடை தூரத்தில் இருப்பதால், நினைத்தவுடன் கிளம்பிப் போய் அவருடன் சில மணி நேரம் கதை பேசிவிட்டு வருவேன்.

1955 ஜனவரியில் எஸ்.எஸ்.வாசனால் விகடனில் வேலைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டவர் ஓவியர் மாயா. இயற்பெயர் மகாதேவன். ஏற்கெனவே அங்கே உதவி ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த தேவனின் முழுப் பெயரும் மகாதேவன் என்பதால், இவர் மாயா ஆனார். 1978 வரை 23 ஆண்டு காலம் விகடனில் பணியாற்றி, பின்பு விதிவசத்தால் விலக நேர்ந்து (அது பெரிய கதை!) எழுத்தாளர் மணியன் மற்றும் தாமரை மணாளனோடு ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் இணைந்து, அங்கே ஐந்தாறு ஆண்டு காலம் பணியாற்றி ஓய்வு பெற்றவர் (அவர் ஓய்வு பெற்ற விதமும் ஒரு தனிக் கதை!).

அவரைச் சந்திக்கும்போதெல்லாம் அமரர் எஸ்.எஸ்.வாசனைப் பற்றியும், அவரின் மகன், என் மதிப்புக்குரிய சேர்மன் எஸ்.பாலசுப்பிரமணியன் பற்றியும், என் குருநாதர் சாவி பற்றியும், விகடனில் பணியாற்றிய அனுபவங்கள் பற்றியும் சுவாரசியமாக நினைவுகூர்ந்து பல விஷயங்களைச் சொல்வார். நேரம் போவதே தெரியாமல் வாய் பிளந்து ஆவலோடு கேட்டுக்கொண்டு இருப்பேன். ஒரு தனி வலைப்பூவே ஆரம்பித்து, அவர் சொல்வதையெல்லாம் பதியலாம். அவர் சொன்ன விஷயங்கள் அவ்வளவு இருக்கின்றன.
எஸ்.ராஜம்
சில நாட்களுக்கு முன் மாயாவைப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தபோது, ஓவியர் எஸ்.ராஜம் பற்றிப் பல தகவல்கள் சொன்னார். அவர் வீணை மேதை எஸ்.பாலசந்தரின் சொந்த அண்ணன் என்பதே எனக்கு அப்போதுதான் தெரியும். தவிர, ராஜத்துக்கு ஓவியம் வரைதல் என்பது ஒரு பொழுதுபோக்குதான் என்றும், அவர் ஒரு சங்கீத வித்வான் என்றும், சங்கீத உலகம் அவரை நன்கறியும் என்றும், நமக்குத்தான் அவரை ஓவியராகத் தெரிந்திருக்கிறது என்றும் பேசிக்கொண்டு இருந்தார்.

அடுத்த சில நாளில், ‘இட்லிவடை’ வலைப்பூவில் ஓவியர் ராஜம் பற்றிய குறும்படம் எடுத்துக்கொண்டு இருப்பது பற்றியும், ராஜம் இப்போது உடல் நிலை கெட்டு சீரியஸாக இருக்கிறார் என்றும் படித்தேன். ராஜம் பற்றி மாயா என்னிடம் பேசியதும், அடுத்த சில நாட்களில் ‘இட்லி வடை’யில் ராஜம் பற்றிப் படிக்க நேர்ந்ததும் மிகத் தற்செயலானவை. மாயா என்னிடம் ராஜம் பற்றிப் பகிர்ந்துகொண்ட தகவல்களில் ஒன்றிரண்டை பின்னூட்டமாக ‘இட்லிவடை’யில் இட்டேன் (ஓவியர் ராஜம் உடல் நிலை மோசமாகி அடுத்த நாள் காலமாகிவிட்டார். அவருக்கு வயது 91.).

நேற்றும் வழக்கம்போல் மாயாவைப் போய்ப் பார்த்துப் பேசிக்கொண்டு இருந்தேன். அவரின் துணைவியார் இதய நோயால் பாதிக்கப்பட்டு அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு, விஜயா மருத்துவமனையில் இருப்பதாகச் சொன்னார். திடுக்கிட்டேன். ஆஞ்சியோகிராம் செய்து பார்த்தபோது இதயத்தில் மூன்று இடங்களில் அடைப்பு இருந்ததாகவும், ‘எனினும் பயப்பட ஒன்றுமில்லை; அறுவைச் சிகிச்சை நல்லபடியாக முடிந்தது; விரைவில் பூரண குணம் பெற்று வீடு திரும்பிவிடுவார்’ என்கிற ஆறுதலான செய்தியைச் சொன்னார்.

பின்னர், பேச்சு வழக்கம்போல் வேறு திசையில் பயணித்தது. விகடனில் தான் ஓவியம் வரைந்த அனுபவங்கள் பற்றிப் பேசத் தொடங்கிய மாயா, அந்நாளில் நியூயார்க்கில் பிரபல ஓவியராக விளங்கிய ‘நார்மன் ராக்வெல்’ என்பவர் பற்றிச் சொன்னார். 1894 பிப்ரவரி 3-ம் தேதி பிறந்தவர் நார்மன் ராக்வெல். 1978-ல் தனது 85-வது வயதில் அவர் காலமானார்.

‘தி சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்’ பத்திரிகையில் ஓவியராகப் பணியாற்றியவர் நார்மன் ராக்வெல். முதலில் குழந்தைகளுக்கான குட்டிக் குட்டி ஜோக் படங்களை, லைன் டிராயிங்குகளைத்தான் வரைந்துகொண்டு இருந்தார் அவர். பின்னர், இல்லஸ்ட்ரேஷன் எனப்படும் கதைகளுக்கான சித்திரங்களை வரையத் தொடங்கினார். அப்போதும் குழந்தைகளுக்கான கதைப் படங்களைத்தான் வரைந்தார்.
நார்மன் ராக்வெல் வரைந்த படம்
அவர் ஒரு சுயம்பு. தாமாகவே படம் வரையக் கற்றுக்கொண்டவர். சிறுவர்களை மாடலாக நிறுத்தி வரைந்து பழகினார். அவர் வரைந்த படங்களுக்கு வாசகர்களிடம் அத்தனை வரவேற்பு! ஒரு குறிப்பிட்ட கதையைப் படித்ததும் அதில் உள்ள கதாபாத்திரத்துக்கு ஏற்ற முகவெட்டு உள்ள சிறுவனைத் தேடி காரில் பயணம் கிளம்புவாராம். ஒரு வாரமோ, பத்து நாளோ அலைந்து அப்படி ஒரு சிறுவனைக் கண்டுபிடித்ததும், அவனை அழைத்து வந்து தன் விருப்பத்துக்கேற்ப ‘போஸ்’ கொடுக்கச் சொல்லி, அவனைப் படமாக வரைந்து பத்திரிகைக்குத் தருவாராம். இதனால் அவர் வரைந்த படங்கள் உயிரோட்டத்துடன் இருந்தன. படம் வரைவதற்கு அவருக்குப் போதிய நேரம் மட்டுமின்றி, போக வர கார் செலவு, மாடல் சிறுவனுக்குக் கொடுக்க வேண்டிய தொகை உள்பட அவர் படத்துக்கு ஒரு பெரிய தொகையைச் சன்மானமாகக் கொடுத்தது அவர் பணியாற்றிய பத்திரிகை.

பின்னர் நார்மன் ராக்வெல் பெரியவர்களின் கதைகளுக்கும் படங்கள் வரையத் தொடங்கினார். அப்போதும் வழக்கமான பாணியையே கையாண்டார். அந்தக் கதைகளில் வரும் கேரக்டர்கள் போன்ற மனிதர்களைத் தேடிப் பயணம் கிளம்பினார். அவருக்குப் புகழ் சேரச் சேர, அவருக்கு மாடலாக நின்று ‘போஸ்’ கொடுக்க படா படா மில்லியனர்களின் மனைவிமார்களும் ஆவலோடு நான், நீ என்று போட்டி போட்டுக்கொண்டு முன்வந்தார்களாம்.

அவர் தனக்கு அப்படி ‘போஸ்’ கொடுத்தவர்களைப் பற்றியே ஒரு புத்தகம் எழுதினார். அது அந்நாளில் பரபரப்பாக விற்றுத் தீர்ந்தது.

அந்தப் புத்தகத்தில், தனக்கு ‘போஸ்’ கொடுத்த ஒரு சிறுவனைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார் நார்மன் ராக்வெல். அவர் வரைந்த பல படங்களுக்கு மாடலாக நின்றவன் அவன். நாளாக நாளாக அவனிடம் ஒரு திமிர் வந்துவிட்டதாம். ‘நான் போஸ் கொடுத்து, அதைப் படமாக எழுதித்தானே நீங்கள் சம்பாதிக்கிறீர்கள்? எனக்கு இத்தனை பணம் தர வேண்டும்’ என்று கேட்கத் தொடங்கினானாம். அப்படியும்கூட சரியான நேரத்துக்கு வந்து ஒத்துழைப்பு கொடுக்க மறுத்துவிட்டானாம். இவரை வேண்டுமென்றே காக்க வைப்பது, தன்னைக் கண்டதும் அவர் பரபரப்பாவதைப் பார்த்து ரசிப்பது போன்ற குணங்கள் அவனிடம் வளர்ந்துவிட்டன. ஒரு கட்டத்தில் நார்மன் ராக்வெல் அவனை வேண்டாமென்று ஒதுக்கிவிட்டு, மாடலுக்கு வேறு ஒரு சிறுவனைத் தேடிக்கொண்டு விட்டார்.

அதற்குப் பின் ஓரிரு வருடங்கள் கழித்து, ஒரு பிச்சைக்காரச் சிறுவன் பணக்கார வீட்டில் திருடுவதற்காக டிரெயினேஜ் பைப்பைப் பிடித்துக்கொண்டு உயரே ஏற முயற்சி செய்து, மிக உயரத்தில் ஜன்னலுக்குத் தாவும்போது பிடி நழுவி, அங்கிருந்து கீழே விழுந்து மண்டை சிதறிச் செத்துப்போவதைக் கண்ணெதிரே பார்த்திருக்கிறார் நார்மன் ராக்வெல். பதறிப்போய் காரை நிறுத்திவிட்டு, இறங்கிப் போய்ப் பார்த்தால், அவன் வேறு யாருமல்ல; முன்பு அவரால் நிராகரித்து ஒதுக்கப்பட்ட அதே சிறுவன்!
.

Tuesday, February 02, 2010

ஞாநியின் குறும்படமும் புத்தக வெளியீடும்!

‘என் வாழ்க்கை என் கையில்’ என்கிற நூல் வெளியீட்டு விழாவுக்கான அழைப்பு ஞாநியிடமிருந்து SMS-ல் வந்தது. கடந்த இரண்டு முறையாக கேணிக் கூட்டத்தில் கலந்து கொள்ள இயலவில்லை; தவிர, ஞாநி உடல் நிலை பாதிக்கப்பட்டுத் தேறி வந்த பின்பு சென்று பார்க்கவில்லை என்கிற காரணத்தால், கண்டிப்பாக இந்த நூல் வெளியீட்டு விழாவுக்குச் செல்ல வேண்டும் என்று தீர்மானித்துக்கொண்டு, நேற்றைய ஞாயிற்றுக் கிழமை கே.கே.நகரில் உள்ள ஞாநியின் இல்லத்துக்குச் சென்றேன். அங்கேயேதான் புத்தக வெளியீட்டு விழா!

ஞாநி உடலளவில் மெலிந்திருந்தார். குரலில் மட்டும் அதே பழைய கம்பீரம்!

சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்தவர்களை அறிமுகம் செய்து பேசினார் ஞாநி. ஒருவர் ஸ்ரீராம் - அடலசன்ட் பருவத்தில் உள்ள ஒரு பெண்ணை மையமாக வைத்துக் குறும்படம் இயக்கித் தரும் வாய்ப்பை வழங்கியவர். மேற்படி குறும்படம் விஜய் டி.வி-யில் ஒளிபரப்பானதாம். புத்தக வெளியீட்டு விழாக் கூட்டத்தின் இறுதியிலும் அந்தப் படம் திரையிடப்பட்டது.

இன்னொருவர் (பதிவிட இரண்டு நாள் ஆனதால் பெயர் மறந்துவிட்டது) ராஜீவ் காந்தி யூத் ஃபவுண்டேஷனில் ஓர் உயர் அதிகாரி. வாழ்க்கைத் திறன் எனப்படும் 'LIFE SKILLS' தொடர்பான புத்தகங்களை வெளியிட்டு வருகிறது அந்த அமைப்பு. மற்றவர் ஒரு பெண்மணி. ‘லைஃப் ஸ்கில்ஸ்’களைப் பயிற்றுவிப்பவர்.

மற்ற இருவரை எனக்குத் தெரியும். ஒருவர் வசந்தி தேவி. 71 வயது. கல்லூரி முதல்வராகப் பணியாற்றி, பின்பு துணை வேந்தர் நிலைக்கு உயர்ந்த கல்வியாளர். இவரது பேட்டிகளையும் கட்டுரைகளையும் விகடனில் வெளியிட்டுள்ளோம். இன்னொருவரை எல்லோருக்குமே தெரியும். நடிகர் நாசர்.

ஞாநி அறிமுக உரை நிகழ்த்தி முடிந்ததும், (தமிழ், தமிழ் என்று குரல் கொடுக்கிற ஞாநி ‘ஸஹ்ருதயர்கள்’ என்கிற சமஸ்கிருத வார்த்தையை இரண்டு மூன்று தடவை தன் பேச்சில் வலிந்து குறிப்பிட்டார். ஒருமித்த இதயமுள்ளவர்கள் என்று அழகான தமிழில் சொல்லியிருக்கலாம். எதற்காக இந்த சமஸ்கிருதத் திணிப்பு என்று தெரியவில்லை.) அவரின் நீண்ட நாளைய சிநேகிதி பத்மாவதி ‘லைஃப் ஸ்கில்ஸ்’ என்றால் என்ன என்பது பற்றி ஒரு முன்னுரை கொடுத்தார்.

வாழ்க்கைத் திறன்கள். அதாவது, நான் யார் என்று அறிந்து கொள்வது முதல் படி. நான் யார், என் பலம் என்ன, பலவீனம் என்ன என்றெல்லாம் அலசி ஆராய்ந்து உணர்வது. அடுத்ததாக மற்றவர்களைப் பற்றிப் புரிந்துகொள்வது. பின்பு அவர்களுக்கும் நமக்கும் இடையிலான தொடர்பு... என ஒவ்வொரு படியாகக் கடந்து, நம்மை நாமே மேம்படுத்திக் கொள்வது எப்படி என்பதைக் கற்றுத் தரும் ஒரு வொர்க்‌ஷாப் இது. அலுவலகத்தில் வேலை பார்க்கும் கிளார்க்கோ, திரைப்படத் துறையில் இயங்கும் தொழிலாளியோ, மேனேஜரோ, படிக்கிற பள்ளி மாணவரோ, பாலியல் தொழில் புரியும் பெண்களோ... யாருக்குமே அவரவர் துறை சார்ந்து இந்த வாழ்க்கைத் திறன்களை எப்படி அமல்படுத்திக் கொள்வது என்பதைப் பயிற்றுவிக்கும் ஒரு பயிற்றுநராக இயங்கிக்கொண்டு இருப்பவர் பத்மாவதி.

இந்த லைஃப் ஸ்கில்ஸ் என்கிற வார்த்தையே, ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டவர்களுக்கான ஒரு வழிகாட்டுதல் திட்டமாக உருவானதுதான் என்றார் பத்மாவதி. பின்னர் படிப்படியாக அதை மற்றவர்களுக்கும் விரிவுபடுத்தமுடியும் என்று ஆராய்ந்து செயல்படுத்தி வருவதாகச் சொன்னார்.

சிறப்பு விருந்தினர்களில் நாசரின் பேச்சுதான் இயல்பாகவும் எளிமையாகவும் இருந்தது. தன் வாழ்க்கையிலிருந்தே ஒரு சின்ன சம்பவம் சொல்லி விளக்கினார்.

பிலிம் இன்ஸ்டிட்யூட்டில் படித்த பின்பு நேரே சினிமாவுக்கு வராமல் சில காலம் அவர் ஸ்டார் ஓட்டல் ஒன்றில் மேஜை துடைக்கும் பணியாளாக, வெயிட்டராகப் பணியாற்றியதைச் சொன்னார். பின்பு ரூம் சர்வீஸ் செய்வதற்கு ஒன்பது மாதம் பயிற்சி கொடுத்தார்களாம். உணவுத் தட்டில் முள் கரண்டி எந்தப் பக்கம் இருக்கவேண்டும், ஸ்பூன்களை எப்படி வைக்க வேண்டும், நாப்கினை எப்படி மடித்து வைக்க வேண்டும் என்பதிலிருந்து எதை எதை எப்படி சர்வ் செய்ய வேண்டும் என்பது வரை சொல்லிக் கொடுப்பார்களாம். அந்தப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்து, அறை ஒன்றில் தங்கியிருந்த ஒரு வெள்ளைக்காரருக்கு தான் முதன்முறையாக ஒரு கப் காபி சர்வ் செய்தது பற்றிச் சொன்னார். அறைக்குள் நுழைந்து பவ்வியமாக அவருக்கு காபி சர்வ் செய்துவிட்டுச் சரியாகச் செய்துவிட்டோம் என்கிற பெருமிதத்தோடு வெளியேறிய சிறிது நேரத்தில் அவரை மேனேஜர் சுனில் அழைத்தாராம்.

“என்ன பண்ணினே இன்னிக்கு?” என்று சுனில் கேட்க, அறை எண் --ல் உள்ள வெள்ளைக்காரருக்கு காபி சர்வ் பண்ணியதைச் சொன்னார் நாசர்.

“எப்படி சர்வ் பண்ணே?” என்று சுனில் திரும்பக் கேட்க, நாசர் இடுப்பை வளைத்து பவ்வியமாக வழங்கியதாகச் சொல்ல, “நீ என்ன அவனுக்கு அடிமையா? எதுக்கு இடுப்பை வளைத்துக் குனியறே? கம்பீரமாக நிமிர்ந்து பெருமிதத்தோடு மிடுக்காக அல்லவா காபியை சர்வ் செய்திருக்க வேண்டும்?” என்று கேட்டாராம் சுனில்.

“எந்த ஒரு வேலையுமே கேவலமானது இல்லை; எதிராளிக்கு மரியாதை கொடுக்கவேண்டும் என்பதற்காக நம்மை நாமே தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது இல்லை போன்ற பல லைஃப் ஸ்கில் பாடங்களை அவரிடம் நான் அப்போது கற்றேன்” என்று நாசர் சொன்ன விதம் ரசிக்கத்தக்கதாக இருந்தது.

கடைசியாக, ஒரு வளர் இளம் பெண்ணின் பிரச்னை ஒன்றையும் லைஃப் ஸ்கில்ஸையும் இணைத்து ஞாநி இயக்கி, விஜய் டி.வி-யில் ஒளிபரப்பான குறும்படத்தைத் திரையிட்டார்கள்.

ப்ளஸ் டூ படிக்கிற பெண். எப்போதுமே மூன்றாம் ரேங்க். வாலிபால் சேம்பியன். அவளுக்குத் தன் வீட்டில் வார இதழ்கள் கொண்டு போடும் பையன் மீது ஒரு ஈர்ப்பு. படிப்பில் கவனம் சிதறுகிறது. 13-வது ரேங்க். எதற்கு வாழ வேண்டும் என்று பாத்ரூமில் தற்கொலை செய்து கொள்ளப் போகும்போது, வாசலில் புத்தகம் போடும் பையனுக்குப் பணம் தர வேண்டும் என்று அம்மாவின் குரல் கேட்கிறது. வெளியே வருகிறாள். அந்தப் பையன் இல்லை. அவனது தம்பி. எல்லோரும் தங்கள் சொந்த ஊருக்கே போய்விடப் போவதாகச் சொல்கிறான்.

அன்று அவளும் மற்ற மாணவிகளும் ஒரு லைஃப் ஸ்கில் நிகழ்ச்சியில் கலந்துகொள்கிறார்கள். பயிற்றுநராக நாசர். அவர் லைஃப் ஸ்கில்ஸின் அடிப்படையான பத்துக் கட்டளைகள் பற்றிச் சொல்லிவிட்டு, ஒரு குட்டிக் கதை சொல்கிறார். தன் நண்பனான குரங்கை தன் மனைவிக்கு விருந்தாகக் கொடுக்க ஏமாற்றி அழைத்துச் செல்லும் முதலையின் கதை அது. கதையின் முடிவில், அந்தப் பத்துக் கட்டளைகளும் இந்தக் கதையில் இருக்கு, கண்டுபிடியுங்க என்று சொல்லி முடிக்கிறார். எல்லா மாணவர்களும் கலைகிறார்கள்.

அந்தப் பெண் மட்டும் சுரத்தில்லாமல் இருப்பதைக் கண்டு அவளை அழைத்து விசாரிக்கிறார். (நாசர் அவளை இதற்கு முன்பே ஒரு கிரீட்டிங்ஸ் கடையில் சந்தித்திருக்கிறார்.) அவள் தன் பிரச்னையைச் சொல்கிறாள்.

“இதெல்லாம் பிரச்னையே இல்லை. அப்பாவோட ஸ்கூட்டர்ல போயிருக்கே. ஸ்கூட்டர் விலை என்னன்னு தெரியுமா உனக்கு? ஒரு லிட்டர் பெட்ரோல் விலை என்னன்னு தெரியுமா? துவரம் பருப்பு கிலோ என்ன விலைன்னு தெரியுமா? தெரியாது. அதனால தப்பில்லை. அதெல்லாம் உன் அப்பா, அம்மாவோட பொறுப்பு. இன்னிக்கு உன்னோட கடமை நல்லாப் படிச்சு மார்க் வாங்குறதுதான். ஒவ்வொரு பருவத்துலயும் நமக்குன்னு சில வேலைகள் இருக்கு. அதை நாம அப்பப்போ சரியா செய்துக்கிட்டுப் போனா போதும். எந்தக் குழப்பமும் வேணாம். படி. வாலிபால் விளையாடு. எல்லாம் சரியாயிடும்” என்று புத்திமதி சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அந்தப் பேப்பர் போடும் பையன் அவளைத் தனியாகச் சந்தித்து, வடபழனியில் மாலை மாற்றிக் கல்யாணம் செய்து கொள்ளலாம் என்கிறான். இவள் தெளிவாக, ‘சொந்தமா பிரிண்ட்டிங் பிரஸ் வைக்கப் போறேன்னியே, உன் லட்சியம் என்னாச்சு? நான் நல்லா படிச்சு முன்னுக்கு வரணும். நம்மளோட கடமை அதுதான். கல்யாணத்தைப் பத்தி யோசிக்க இது நேரம் இல்லை. நமக்கு அது பத்தி இப்போ தெரியாது; புரியாது. அதுக்குன்னு நேரம் வரும்போது அதைப் பத்தி யோசிக்கலாம். இப்ப நான் தெளிவா இருக்கேன்’ என்று சொல்லிவிட்டு வந்துவிடுகிறாள்.

ஒரு சிறுகதை படித்த திருப்தி. ஆரம்பத்தில் அனைவரின் நடிப்பும் பேச்சும் ரொம்பச் செயற்கையாகத் தெரிந்தது. போகப் போக இயல்புக்கு வந்தது. அந்தப் பெண் ரொம்ப க்யூட். நாசர் மிக இயல்பான நடிப்பு.

“ஏன் எப்பவும் மூன்றாம் ரேங்க்கே வாங்குறே? அட்லீஸ்ட் ரெண்டாம் ரேங்க் கூட வாங்க மாட்டேங்கிறியே? இத்தனைக்கும் ரெண்டாம் ரேங்க் வாங்கின பெண் எடுத்திருக்கும் மார்க்கைவிட நீ நாலு மார்க்தான் கம்மி! கொஞ்சம் முயற்சி பண்ணிப் படிச்சிருந்தா நீ ரெண்டாம் ரேங்க் வாங்கியிருக்கலாமில்லே?” என்று அந்தப் பெண்ணின் அப்பா கேட்க, அதற்கு அந்தப் பெண் சொல்லும் பதில் வேடிக்கையாக இருக்கிறது.

“நாலு மார்க் எடுக்கணும்னா நான் இன்னும் கூடுதலா அரை மணி நேரம் படிக்கணும். அப்படிக் கூடுதல் அரை மணி நேரத்தைப் படிப்புக்கு ஒதுக்கினேன்னா, என்னால வாலிபால் விளையாட முடியாது. ஆனா, வாலிபால் டோர்னமெண்ட்ல கலந்துகிட்டுச் சாம்பியன் ஆகணும்னு எனக்கு ஆசை” என்கிறாள். அதென்ன, அரை மணி படிச்சா, நாலு மார்க்; ஒரு மணி படிச்சா எட்டு மார்க்னு படிப்புக்குக் கணக்கு உண்டா என்ன?

அதேபோல, நாசர் சொல்லும் முதலை-குரங்கு கதையிலும் ஒரு சின்ன நெருடல். முதலை தன் நண்பன் குரங்கை விருந்து கொடுப்பதாகச் சொல்லி ஏமாற்றி தன் இடத்துக்கு அழைத்துச் செல்லும்போது, மனசு குறுகுறுக்க, விருந்து கொடுக்க அல்ல; அதன் வயிற்றைத் தன் மனைவிக்கு விருந்தாக அளிக்க என்கிற உண்மையைச் சொல்கிறது. குரங்கு தந்த மாம்பழங்களே அத்தனை ருசியாக இருந்தால், அந்த மாம்பழங்களை அவ்வளவு காலமும் தின்று செரித்த வயிறு எத்தனை ருசியாக இருக்கும் என்று மனைவி முதலை ஆசைப்பட்டதன் விளைவே அது. உடனே குரங்கு, ‘அடடா! இதை முதல்லேயே சொல்லியிருக்கக்கூடாதா? நான் என் வயிற்றைக் கழற்றி மரத்திலேயே காயப் போட்டிருக்கிறேனே?’ என்று சொல்லவும், திரும்பவும் அதை எடுத்து வருவதற்காக இக்கரைக்குப் பயணமாயின இரண்டும். தன் இடம் வந்ததும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஓடிவிட்டது குரங்கு.

இந்தக் கதையில் மனைவி முதலை குரங்கின் ஈரலைத்தான் புசிக்க விரும்பும்; வயிற்றை அல்ல. விருந்துக்கு என வருகிற குரங்கு வயிற்றைக் கழற்றிக் காயப் போட்டுவிட்டா வரும்? ரொம்ப லாஜிக் பார்க்க வேண்டாம்தான். ஆனால், மூலக் கதையில் ஈரல் என்று (ஞாநி வெளியிட்டுள்ள ‘என் வாழ்க்கை என் கையில்’ புத்தகத்தில் இந்தக் கதையில் ஈரல் என்று சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.) வருவதை குறும்படத்தில் வயிறு என ஏன் மாற்ற வேண்டும் என்று புரியவில்லை.

‘என் வாழ்க்கை என் கையில்’ தலைப்பு அருமையானது. இந்த லைஃப் ஸ்கில் பற்றி ‘படையப்பா’ படத்தில் கவிப்பேரரசு வைரமுத்து ‘கிக்கு ஏறுதே’ பாடலில் மிக அழகான வரிகளை எழுதியிருப்பார். எனக்கு மிகவும் பிடித்த பாட்டு அது. அதில் கிட்டத்தட்ட கண்ணதாசனை நெருங்கியிருப்பார் வைரமுத்து.

‘தாயைத் தேர்ந்தெடுக்கும் தந்தையைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை;
முகத்தைத் தேர்ந்தெடுக்கும் நிறத்தைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை;
பிறப்பைத் தேர்ந்தெடுக்கும் இறப்பைத் தேர்ந்தெடுக்கும்
உரிமை உன்னிடத்தில் இல்லை.
எண்ணிப் பார்க்கும் வேளையிலே
உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு
அதை வென்று எடு!’

ஞாநியின் புத்தகம் இதைத்தான் விரிவாக எடுத்துச் சொல்லும் என்று நினைக்கிறேன். இன்னும் படிக்கவில்லை. படித்த பின்னர் அது பற்றி எழுதுகிறேன்.

கொசுறு செய்தி: ஞாநியின் அடுத்த கேணிக் கூட்டம் வருகிற 14-ம் தேதி. சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள இருப்பவர் எழுத்தாளர் ஜெயமோகன்.
.