உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, June 28, 2009

வல்லாள கண்டன் கதை!

சில நாட்களுக்கு முன்னால், தொடர்பதிவு விளையாட்டு ஒன்று நடந்தது. அதில் 32 கேள்விகளுக்கு பதில் சொல்லியிருந்தேன். ஒரு கேள்விக்கான பதிலில், ‘கேட்டதும் கடன் கொடுக்கும் கிண்டான கிண்டன்; வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன்’ போன்ற கதைகளை என் தாத்தா எனக்குச் சொல்லியிருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தேன்.

‘அதென்ன கதை? இதுவரை நாங்கள் கேள்விப்படாத புதுக் கதையாக இருக்கிறதே!’ என்று ஆர்வமுடன் கேட்டு இ-மெயில் அனுப்பியிருந்தார்கள் பெங்களூரைச் சேர்ந்த வசுமதி, திருச்சியைச் சேர்ந்த கலியாணராமன் மற்றும் விழுப்புரத்தைச் சேர்ந்த ராமபத்ரன் ஆகியோர். விரைவில் சொல்கிறேன் என்று மூவருக்கும் பதில் போட்டேன். அதை அத்தோடு மறந்தே போய்விட்டேன். இன்றைய மெயிலில் அது பற்றிய நினைவூட்டல் கடிதம் அனுப்பியிருந்தார் ராமபத்ரன்.

இதோ, அந்த மூவருக்காகவும் மற்ற நேயர்களுக்காகவும் அந்தக் கதை:

கேட்டதும் கடன் கொடுக்கும் கிண்டான கிண்டன்;
வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன்!

முன்னொரு காலத்தில் கிண்டான கிண்டன், கிண்டான கிண்டன் என்றொரு தனவான் வாழ்ந்து வந்தான். அவன் கேட்டவர்க்கெல்லாம் கடன் வழங்கும் தாராளப் பிரபுவாக இருந்தான். கடன் கொடுப்பது மாத்திரமல்லாமல், கொடுத்த கடனை உரிய காலத்துக்குள் வசூலித்துவிடும் திறமைசாலியாகவுமிருந்தான்.

அவன் வாழ்ந்த பக்கத்தூரில் வல்லாள கண்டன், வல்லாள கண்டன் என்றொரு முரட்டுப் பயல் இருந்தான். அவன் வருவோர் போவோரிடமெல்லாம் கடன் வாங்கிச் செலவழித்துத் திருப்பித் தருவேனா என்றிருந்தான். அவனிடம் போன பணமும் முதலையின் வாய் சென்ற பொருளும் ஒன்றென்றறிக! இதனால் அவனை யாவரும் வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன் என்றே பிரஸ்தாபித்துக்கொண்டு இருந்தனர்.

தங்களிடம் மட்டும் இவன் இப்படிக் கடன் வாங்கித் திருப்பித் தராமல் ஏய்க்கின்றானே, இவனை என்ன செய்தால் தகும் என்று யோசித்த, அவனிடம் பணம் கொடுத்து ஏமாந்த ஒரு சோணகிரி ஓர் உபாயஞ் செய்தான். நேரே வல்லாள கண்டனிடத்திலே போய், “அடா வல்லாள கண்டா! பக்கத்தூரில் ஒரு பிரபு இருக்கின்றான். கேட்டவருக்குப் பணம் கொடுக்கும் கிண்டான கிண்டன் என்பது அவன் நாமம். ஆனால், கொடுத்த பணத்தை வட்டியுடன் வசூலிப்பதிலும் அவன் கிண்டான கிண்டன். நீ அவனிடம் உன் சாமர்த்தியத்தைக் காட்டினாயானால்தான், நீ வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள மகராஜா என நான் ஒப்புக்கொள்வேன்” என்று தூபம் போட்டுவிட்டுப் போனான்.

வல்லாளனுக்கு ரோசம் பொத்துக்கொண்டது. உடனே கிளம்பிப் போய் கிண்டான கிண்டனிடம் தேவையான பணத்தைக் கடனாகக் கேட்டான். கிண்டனும் கொடுக்கும்போது, “நீ வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டனென்று தெரிந்தேதான் கொடுக்கிறேன். உன்னிடமிருந்து இந்தக் கடனைக் குறித்த தேதியில் எப்படி வசூலிப்பதென்று எனக்குத் தெரியும். போய் வா!” என்று வழியனுப்பி வைத்தான்.

தேதி ஒன்றாயிற்று; இரண்டாயிற்று; மூன்றும் ஆயிற்று! பத்து தேதிக்குள் வல்லாளன் பணத்தை வட்டியுடன் திருப்பித் தரவேண்டும் என்பது ஒப்பந்தம். ஆனால், அது பற்றிய பேச்சு மூச்சைக் காணோம். வல்லாள கண்டனிடமிருந்து பணத்தை வசூலிக்கவில்லை என்றால், கிண்டான கிண்டனின் பராக்கிரமம் கேலிக்குரியதாகிவிடுமே என்று கவலைக்கு ஆளானான் கிண்டன். நேரே வல்லாள கண்டனைத் தேடிச் சென்றான். கொடுத்த பணத்தை ஞாபகப்படுத்தினான். வல்லாளனோ பித்தனுக்குப் பித்தன்; எத்தனுக்கு எத்தனாயிற்றே! ஆகட்டும் பார்க்காலாமென்று மழுப்பலாகச் சொன்னான்.

“சரி, அது போகட்டும். என் உல்லாச பங்களா ஒன்றிருக்கிறது. அதை உனக்குக் காண்பிக்கவேண்டும் என்று ஆவலாயிருக்கின்றேன். வருகிறாயா என்னோடு, அல்லது பயத்தில் கை கால்கள் நடுங்குமோ உனக்கு?” என்று கேட்டான் கிண்டன். “ஆகா, எனக்கென்ன பயம்? இப்போதே வருகிறேன் உம்மோடு” என்று கிளம்பிவிட்டான் வல்லாளன்.

கிண்டன் கூட்டிச் சென்ற இடம் பங்களாவன்று; பாழடைந்த ஓர் இடிபாடு! அதனுள் வல்லாள கண்டனை அழைத்துச் சென்று சுற்றிக் காண்பித்தான் கிண்டன். எங்கெங்கும் எலும்புகள், மண்டையோடுகள், பிண நாற்றத்தின் வீச்சம் எட்டு ஊரைத் தூக்கியடிப்பதாகயிருந்தது. “இதோ பார்த்தாயா, இதுதான் என் உல்லாசபுரி. இங்கே விழுந்துகிடக்கும் மண்டையோடுகள் யாவும் என்னிடம் கடன் வாங்கித் திருப்பித் தராத கபோதிகள். இந்த மண்டையோடுகளை வைத்து, நீண்ட தொடை எலும்புகளால் தட்டி விளையாடுவதுதான் எனது கேளிக்கை விளையாட்டு!” என்று வர்ணித்துச் சொன்னான் கிண்டன். “சரி, நீ போகலாம். பத்தாம் நாள் பணம் வரவேண்டும்” என்று அழுத்திச் சொல்லி, வல்லாளனை அனுப்பி வைத்தான்.

நாள்கள் ஓடின. பணம் வந்தபாடில்லை. வருவதற்கான ச்மிக்ஞையும் தெரிவதாயில்லை. பின்னொரு நாளும் மீண்டும் கண்டனின் வீட்டுக்குப் படையெடுத்தான் கிண்டன். “வாங்கின பணமெங்கே? அதற்கான வட்டியெங்கே?” என்று வினவினான்.

“அகோ வாருமய்யா கிண்டரே! நல்ல நேரத்தில்தான் வந்தீர்! என் மகன் இறந்துகிடக்கிற நேரத்தில் வந்து உம்முடைய பணத்தைத் திருப்பிக் கேட்பது உலகுக்கே அடுக்குமா?” என்று கதறியழுதவாறு வல்லாள கண்டன் கிண்டனையும் அழைத்துக்கொண்டு சுடுகாடு சென்றான்.

கிண்டன் சற்றுத் தொலைவில் ஒரு புங்க மரத்தடியில் காத்திருக்க, மகனுக்குக் கொள்ளி வைப்பதற்கெனச் சென்ற வல்லாளன் அங்கே பிணத்தருகில் அமர்ந்து அதை அங்கஹீனம் செய்தவாறு பிய்த்துப் பிய்த்துத் தின்னத் தொடங்கியது கண்ட கிண்டன், “ஏதேது, இவன் நமக்கும் முப்பாட்டனாகவன்றோ இருக்கிறான்” என்றெண்ணியவாறு அங்கிருந்து நடையைக் கட்டலானான். அவன் போவதைப் பார்த்து உள்ளூரப் பொங்கிப் பொங்கிச் சிரித்துக்கொண்ட வல்லாள கண்டன் தனது பார்யாளிடத்திலே போய், சுடுகாட்டில் சோற்றுப் பிண்டத்தைப் பரப்பி வைத்துப் பிணம் என்று பொய்யாகச் சொல்லித் தின்று, கிண்டனைக் கிலி பிடிக்கச் செய்து விரட்டிய தனது பராக்கிரமத்தைச் சொல்லி மகிழ்ந்தான்.

கிண்டன் வாளாவிருப்பானா? விசாரித்து அறிந்தவரையில் கண்டனின் மகன் சாகவில்லையென்றும், சகல சௌபாக்கியங்களுடனும் க்ஷேமமாக ஊருக்குள் உலா வந்துகொண்டிருப்பதாயும் அறிந்தான். உடனே தன் ஆட்களையனுப்பி அவனைப் பிடித்து மூட்டையாய்க் கட்டித் தன்னிடத்திலே கொண்டு வரப் பணித்தான். அதன்பின்பு வல்லாள கண்டனுக்கு ஓர் லிகிதம் அனுப்பினான். ‘அதாவது இப்பவும் நீரெமக்குச் சேரவேண்டிய தொகை இத்தனையாயிரம் உரூபாயை வட்டியும் முதலுமாகக் குறித்த பத்து திகதிக்குள்ளாக என்னைத் தேடி வந்து தரவேண்டியது. அன்னியில், உமது மகனை ஊர் முச்சந்தியில், வீர மாகாளியம்மன் கோவில் எதிரே பலரறிய தகனஞ்செய்வேன்’ என்று அதில் கண்டிருந்தது.

பத்தாம் நாளன்று வீரமாகாளியம்மன் கோவில் எதிரே, ஊர் முச்சந்தியில் ஒரு பீப்பாய் வைக்கப்பட்டது. அதனுள்ளிருந்து ஒரு பாலகன் அழும் சத்தம் கேட்டது. ஊர் முழுக்கக் கிண்டன் கண்டனின் மகனை, சொன்ன தேதியில் பணம் திருப்பித் தராததால், வீரமாகாளியம்மனுக்குப் பலியிடப் போகிறான் என்று தண்டோரா போடப்பட்டது.

வல்லாள கண்டன் ஏய்ப்பன், சூழ்ச்சிக்காரன், ஏமாற்றுக்காரன், பித்தலாட்டக்காரன், பொய்யன், புரட்டன் என்று சகலமான பட்டங்களுக்கும் சொந்தக்காரனாக இருந்தாலும், அவனொரு தகப்பனும்தானே? எந்தத் தகப்பந்தான் தன் மகனைப் பலியிடப் பார்த்துக்கொண்டிருப்பான்? ஆகையினால், வெம்பித் துடித்து பக்கத்தூருக்குப் பதறி ஓடினான் வல்லாள கண்டன்.

அங்கே ஊர்ப் பிரதிநிதிகள், முக்கியஸ்தர்கள், சமயப் பெரியோர்கள் நடுவே பீப்பாய் ஒன்று கிடக்க, தண்டோரா முழக்கமிடுவோன் நாலைந்து முறை தண்டோராவை ஓங்கியடித்துவிட்டுக் கூடியிருந்த அனைவருக்கும் நடக்கப்போவதை விவரித்துச் சொல்லிவிட்டு அப்பால் நகர, பீப்பாய் மீது சீமெண்ணையைக் கொட்டித் தீப்பந்தத்தால் தொட்ட நாழிகையில் அது குபீரென்று பற்றிக்கொண்டு சொக்கப்பனை போல் உயர்ந்தெழுந்து பட் படீரென வெடித்துச் சிதறியது.

“ஐயோ! நான் என் செய்வேன்” என்று கூடியிருந்தோர் நடுவேயிருந்து ஓர் கூக்குரல் எழுந்தது. முன்னே வந்தான் வல்லாள கண்டன். “அடேய் கிண்டா! இதோ இருக்கிறதடா உன் பணம் வட்டியும் அசலுமாய். எடுத்துக்கொள். திருப்பித் தா என் மகனை! தர முடியுமா உன்னால்? இப்போதே தரவேணும். நான் சொன்ன திகதியில் வாக்குத் தவறாமல் உன் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டேன். நீ இப்போதே என் மைந்தனை எனக்குத் தரவில்லையானால், இங்கே கூடியிருப்போர் சாட்சியாக, அந்த மலைகள், மரங்கள், மேலே தகித்துக்கொண்டிருக்கும் சூர்யன் சாட்சியாக, அந்த வீரமாகாளியம்மன் சாட்சியாக உன் உடலை இரண்டு துண்டாகக் கிழித்து, உன் குடலை மாலையாக அணிவேன். இது சத்தியம்! சத்தியம்!” என்று சூளுரை செய்தான்.

பணத்தை எடுத்துக்கொண்ட கிண்டன், “அப்படியே தந்தேன் உன் மகனை” என்று ஓர் ஓரமாக நின்றிருந்த தன் சேவகனுக்குச் சைகை காட்ட, அவன் ஓடிப்போய் மறைவாக இருந்த மைந்தனைக் கொணர்ந்து வல்லாள கண்டனிடம் ஒப்புவித்தான்.

இதனால் அறியப்படுகிற நீதியென்னவென்றால், வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டென்பதோடு, ஏமாற்றும் சூழ்ச்சியும் எந்நாளும் நிலைக்காது என்பதேயாம்!

Saturday, June 27, 2009

நண்பரல்ல... உறவினர்!


நான் மாம்பலம் வந்த மறுநாளே நண்பர் மார்க்கபந்து எப்படி நான் இருக்குமிடம் தேடி வந்தார் என்பது எனக்குப் பேராச்சரியமாக இருந்தது. அவர் அதைத் தன் வாயால் கடைசி வரை சொல்லவே இல்லை. என்றாலும், அந்தக் குட்டு தன்னால் அந்த வாரமே உடைந்தது.

நான் முந்தின தினம்தான் மாம்பலத்துக்கு வந்திருந்தேனே தவிர, பதினைந்து நாட்களுக்கு முன்பேயே சென்னை வந்து, மண்ணடியில் உள்ள என் அத்தை வீட்டில் தங்கியிருந்தேன். முதல் நாள் மாம்பலம் சித்தி (என் அம்மாவின் சித்தி) வீட்டுக்கு வந்திருந்த என் அத்திம்பேர் (அத்தையின் கணவர்) நான் வந்திருக்கும் தகவலைச் சொல்லியிருக்கிறார். ‘நாளைக்கு அவனை இங்கே வரச் சொல்லுங்களேன்’ என்று சித்தி அவரிடம் சொல்லியனுப்பியதன்பேரில்தான் மறுநாள் நான் புறப்பட்டு மாம்பலம் வந்தேன்.

முதல் நாள் அத்திம்பேர் மாம்பலம் வந்து, சித்தியிடம் நான் வந்திருக்கும் தகவலைச் சொல்லியபோது, அங்கே இருந்தவர் ரிசர்வ் பேங்க் அதிகாரியாக இருந்த சுப்பிரமணியன். அவரும் சுற்றி வளைத்து எனக்கு உறவினர்தான். அதாவது சித்தியின் தம்பிக்கு மச்சான்.

இது இப்படியிருக்க, ஜெயரதன் என்று ஓர் எழுத்தாளரைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஆர்ப்பாட்டமில்லாத எளிய நடையில் இதமான சமூகக் கதைகளாக எழுதுவார். கல்கியில் இவரின் சிறுகதைகள் நிறைய வந்திருக்கின்றன. நாவல்களும், தொடர்கதைகளும்கூட எழுதியிருக்கிறார்.

அவரின் ஒரு சிறுகதையைப் படித்துவிட்டு, அதைப் பாராட்டி மகிழும்பொருட்டு அவரைத் தேடிச் சென்றிருக்கிறார் நண்பர் மார்க்கபந்து. பிறரை வஞ்சனை இல்லாமல் பாராட்டுவதிலும், ஊக்குவிப்பதிலும், தன்னால் இயன்ற உதவிகளைச் செய்வதிலும் மார்க்கபந்து போல இன்னொருவரை நான் காணவில்லை.

ஜெயரதனும் ஒரு ரிசர்வ் பேங்க் அதிகாரியாகப் பணிபுரிந்தவர்தான். என் உறவினர் சுப்பிரமணியனுக்குப் பக்கத்து ஸீட்தான்!

ஜெயரதனைக் காண்பதற்காக மார்க்கபந்து ரிசர்வ் பேங்க் சென்றிருந்த அன்றுதான் நான் இங்கே மாம்பலத்துக்கு வந்து, மார்க்கபந்து வீட்டை மட்டும் வெளியிலேயே பார்த்துவிட்டுச் சித்தி வீட்டுக்குப் போய்விட்டேன்.

அங்கே ஜெயரதனின் சிறுகதையைப் புகழ்ந்து பாராட்டிய மார்க்கபந்து, அவரிடம் என் ‘விளக்கில் விழுந்த விட்டில்’ சிறுகதை வெளியாகியிருந்த ஆனந்தவிகடன் இதழைக் கொடுத்து, “படிச்சுப் பாருங்க ஜெயரதன்! யாரோ ரவிபிரகாஷ்னு புது எழுத்தாளர் போலிருக்கு. ரொம்ப அருமையா எழுதியிருக்காரு!” என்று சொல்ல, அருகில் இருந்த சுப்பிரமணியன் உடனே, “அந்த ரவிபிரகாஷ் என்னுடைய உறவுக்காரப் பையன்தான். இன்னிக்கு அவன் அநேகமா மாம்பலத்துலதான் இருப்பான்” என்று ஆர்வ மிகுதியில் சொல்லியிருக்கிறார். உடனே அவரிடம் மாம்பலம் சித்தி வீட்டு முகவரியை வாங்கிக்கொண்டுவிட்டார் மார்க்கபந்து. சரியாக மறுநாள் தேடிக்கொண்டு வந்துவிட்டார்.

என்னைச் சந்தித்த அன்றிலிருந்து, தொடர்ந்து பத்துப் பதினைந்து நாள்கள் என்னை அழைத்துக்கொண்டு் பால்யூ வீடு, புஷ்பாதங்கதுரை வீடு, கவிஞர் மெய்யப்பன் வீடு என ஒவ்வோர் இடமாக அலைந்தார் நண்பர் மார்க்கபந்து. எல்லோரிடமும் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார். அப்போது அம்பத்தூரில் இருந்தார் எழுத்தாள மாமுனி லா.ச.ரா. அவரிடமும் என்னை அழைத்துப்போய் அறிமுகப்படுத்தினார். அவர் வீட்டில் லா.ச.ராவே தன் கையால் எங்களுக்குத் தோசை வார்த்துப்போட, சாப்பிட்டுக் காபி குடித்துவிட்டுக் கிளம்பினோம்.

அப்படியான ஒரு நேரத்தில்தான், எழுத்தாளர் ஜெயரதனிடம் என்னை அறிமுகப்படுத்தி வைக்கும்பொருட்டு ரிசர்வ் பேங்குக்கு அழைத்துச் சென்றார் மார்க்கபந்து. ஜெயரதனிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே அருகில் இருந்த என் உறவினர் சுப்பிரமணியன், முந்தின வாரம் மார்க்கபந்து வந்ததையும், நான் வந்திருப்பதை அவரிடம் தான் சொல்லி மாம்பலம் முகவரி தந்ததையும் விலாவாரியாகச் சொல்லிவிட்டார். ‘சொல்லாதீங்க!’ என்று மார்க்கபந்து என்னதான் கண்ணைக் காட்டி சமிக்ஞை செய்தும் சுப்பிரமணியன் புரிந்துகொள்ளாமல் எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார்.

அந்த நட்பு இன்று வரை இறுக்கமாகத் தொடர்கிறது. எனக்காகப் பல இடங்களில் பெண் பார்த்துக்கொண்டு இருந்தார் மார்க்கபந்துவின் தாயார். இந்திரா காலனியில் (அசோக் நகர் உதயம் தியேட்டர் பின்புறம்) குடியிருந்த என் மனைவியின் அக்கா வீட்டில் நடந்த பெண் பார்க்கும் நிகழ்ச்சிக்கு என் அப்பா, அம்மாவோடு மார்க்கபந்துவும் அவரது தாயாரும் பெரு விருப்பத்தோடு கூட வந்ததோடு மட்டுமின்றி, பெண் வீட்டாரிடம் என் சார்பாகப் பேசி திருமணத்தை நிச்சயித்ததுகூட அவர்கள்தான்.

ஆக, என்னுடைய இந்தப் பத்திரிகை வேலை, திருமண வாழ்க்கை எல்லாமே மார்க்கபந்து தொடங்கி வைத்தவை.

அவர் எனக்கு இப்போது வெறும் நண்பராக மட்டும் தெரியவில்லை; ஓர் உறவினராகவே தோன்றுகிறார்!

Thursday, June 25, 2009

முப்பது ஆண்டு கால நண்பர்!

நான் பத்திரிகைத் துறைக்கு வர முக்கியக் காரணமாக இருந்தவர் நண்பர் மார்க்கபந்து அவர்கள். 30 வருடங்களுக்கு முன், விகடனில் நான் எழுதிய முதல் சிறுகதையைப் பாராட்டி ஒரு வாசகராக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார் அவர். அன்றிலிருந்து இன்று வரை மாறாத அன்புடன் இருந்து வருகிறார்.

அவரின் தந்தையார் மகரம் அவர்கள் ஒரு பழம்பெரும் எழுத்தாளர். மகரம் என்பது புனைபெயர். இயற்பெயர் கே.ஆர்.கல்யாணராமன். 1950-களிலேயே ஆனந்த விகடனில் ஏராளமான நகைச்சுவைக் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஏஜிஎஸ் அலுவலகத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஓய்வுக்குப் பிறகும் எழுத்துத் துறையில் முழு மூச்சாக இயங்கிக்கொண்டு இருந்தார். ‘ரைட்டர்ஸ் கில்டி’ல் உறுப்பினராக இருந்து அடிக்கடி டெல்லி சென்று வருவார். பிரபல எழுத்தாளர்களிடம் சிறுகதைகள் கேட்டு வாங்கித் தொகுத்துப் புத்தகமாக வெளியிட்டார். 80 வயது வரையில், தான் மறைவதற்கு முந்தின நாள் வரையில்கூட மலேசியாவிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரி ஒன்றுக்குக் கட்டுரைகள் எழுதி அனுப்பிக்கொண்டு இருந்திருக்கிறார்.

அவரின் மகன் மார்க்கபந்து தலைமைச் செயலகத்தில் செக்‌ஷன் ஆபீசராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர்.

முப்பது வருடங்களுக்கு முன், நான் சென்னை வந்திருந்தபோது, அசோக் பில்லரிலிருந்து வடபழனிக்கு பாத யாத்திரையாகச் சென்று, பின் மாம்பலம் வந்து, என் அம்மாவின் சித்தி வீட்டில் தங்கியிருந்தேனே, அந்தச் சமயத்தில், மார்க்கபந்து அவர்களின் பாராட்டுக் கடிதத்தையும் கையோடு எடுத்து வந்திருந்தேன். அதில் இருந்த அவரின் முகவரியை வைத்து, பொடிநடையாக அவரது வீட்டைத் தேடிக்கொண்டு போனேன்.

கிராமத்து எளிய ஓட்டு வீட்டில் வசித்திருந்த எனக்கு அவரது வீடு பெரிய பங்களாவாகத் தெரிந்தது. உள்ளே சென்று அறிமுகப்படுத்திக்கொள்ளத் தயங்கி, வாசலில் காம்பௌண்டு சுவரில் மகரம், மார்க்கபந்து இருவரின் பெயர்களும் பொறித்திருந்ததைப் பார்த்துவிட்டுத் திரும்பிவிட்டேன்.

மறுநாள், வெளியே போய்விட்டு வீடு (சித்தி வீட்டுக்குதான்) திரும்பியதும், “டேய்... உன்னைத் தேடி ஒருத்தர் வந்திருக்கார்டா! உனக்காக ஒரு மணி நேரமா வெயிட் பண்ணிட்டிருக்கார்” என்று வாசலிலேயே வரவேற்றார் சித்தி. உள்ளே நுழைந்தேன். “ஹலோ ரவிபிரகாஷ்!” என்று ரொம்ப நாள் பழகியவர் மாதிரி, நாற்காலியில் அமர்ந்திருந்தவர் எழுந்து வந்து என் கையைப் பிடித்துக் குலுக்கினார். நான் குழப்பமாக அவரைப் பார்க்க, “என்ன முழிக்கிறே? வா, நம்பாத்துலதான் இன்னிக்கு உனக்குச் சாப்பாடு!” என்று சுவாதீனமாக என் கையைப் பிடித்து இழுத்துக்கொண்டு, என் சித்தியிடம் “வரோம் மாமி” என்று விடைபெற்றார்.

எனக்கு அவர் யாரென்றே அப்போதும் புரியவில்லை. “என்ன முழிக்கிறே? மார்க்கபந்து வீட்டில் மார்க்கபந்து! இப்பவாவது புரியறதா?” என்றார். அம்மாவின் சித்தி கணவர் பெயரும் மார்க்கபந்துதான்.

சட்டென்று புரிந்தது. எனக்குப் பாராட்டுக் கடிதம் எழுதி, நான் நேற்றுப் போய்ப் பார்த்துவிட்டு வாசலோடு திரும்பிவிட்ட, அந்த மார்க்கபந்துதான் இவர்.

“அடடே! நீங்களா! எப்படி நான் இங்கே இருக்கேன்னு கண்டுபிடிச்சு வந்தீங்க?” என்று ஆச்சரியத்துடன் கேட்டேன். காரணம், சென்னை வரப்போவதாக அவருக்குக் கடிதம் எதுவும் நான் எழுதியிருக்கவில்லை. வந்த பின்பும், அவரைச் சந்திப்பதற்காகப் போனேனே தவிர, கூச்சப்பட்டுக்கொண்டு சந்திக்காமலேயே திரும்பிவிட்டேன். மற்றபடி நான் இங்கிருக்கிற விஷயம் அவருக்குத் தெரிய வாய்ப்பே இல்லை.

“நீ சொல்லாட்டா என்னால கண்டுபிடிக்க முடியாதுன்னு நினைச்சியா?” என்றாரே தவிர, எப்படி நான் இங்கிருப்பது தெரிந்து வந்தார்; அதுவும் நான் இங்கே வந்த மறுநாளே என்ற என் கேள்விக்கு அவர் கடைசி வரை பதில் சொல்லவில்லை.

அவரோடு அவரின் பங்களாவுக்குச் சென்றேன். பிரமாதமான விருந்து. ராஜ உபசாரம். ஏதோ பெரிய ஜெயகாந்தன், சுஜாதா இவர்களைக் கவனிப்பது போல என்னை அவர் தம் வீட்டாரிடம் பெருமைப்படுத்திப் பேசப் பேச, கூச்சத்தில் நெளிந்து குழைந்து, திக்குமுக்காடிப் போய்விட்டேன் நான்.

அதன்பின், சென்னையிலிருந்து ஊர் திரும்பிய நான் விழுப்புரத்தில் ஒரு சின்ன வேலை, பாண்டிச்சேரியில் கொஞ்ச நாள், எங்கள் கிராமத்தில் டைப்ரைட்டிங் இன்ஸ்டிட்யூட் என்றெல்லாம் ஒரு ரவுண்டு வந்து, பின்னர் ‘இங்கே இருந்தால் வேலைக்காகாது; மெட்ராஸ் போய்விடலாம்’ என்று முடிவெடுத்து, மார்க்கபந்து இருக்கும் தைரியத்தில் 1985-ல் சென்னைக்கு வந்து செட்டிலாகிவிட்டேன்.

ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் எனக்கு டெப்போ இன்சார்ஜ் வேலை வாங்கித் தந்தார் மார்க்கபந்து. என்றாலும், பத்திரிகை வேலையில்தான் எனக்கு விருப்பம் என்பதை, அவரைச் சந்திக்கும்போதெல்லாம் சொல்லிக்கொண்டே இருப்பேன். அவரும் எனக்காகத் தீவிர முயற்சி செய்துகொண்டு இருந்தார்.

ஒருநாள் என்னை அழைத்துக்கொண்டு ‘பால்யூ’ வீட்டுக்குப் போனார் மார்க்கபந்து. பால்யூ வீடு அப்போது கே.கே.நகரில் இருந்தது. பால்யூவிடம் என்னை அறிமுகப்படுத்தி, குமுதம் பத்திரிகையில் என்னைச் சேர்த்துவிட முடியுமா என்று அவரை ரொம்பவே அரித்தெடுத்தார். அவரும் ‘பார்க்கிறேன். பயோடேட்டா கொடுங்கள்’ என்று என்னிடம் கேட்டு வாங்கிக்கொண்டார்.

ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனி வேலைக்கு நான் வேண்டாவெறுப்பாகப் போய்க் கொண்டு இருந்தேன். இடையில் ஒருநாள், எழுத்தாளர் புஷ்பாதங்கதுரையிடம் இருந்து, தன்னை உடனே வந்து பார்க்கச் சொல்லி எனக்கு ஒரு கடிதம் வந்தது. அப்போதே போனேன். (அவரிடமும் என்னைப் பற்றிச் சொல்லி, பத்திரிகையில் ஏதேனும் வாய்ப்பு இருந்தால் எனக்கு வாங்கித் தரும்படி கேட்டுக்கொண்டு இருந்தார் மார்க்கபந்து.) அவர் உடனே சாவி சாரைப் போய்ப் பார்க்கச் சொன்னது, நான் சாவியில் சேர்ந்தது எல்லாம் தெரிந்த கதைதான்.

பின்பொரு நாள், பால்யூவைச் சந்தித்தபோது அவர் சொன்னார்: “நீ ஏன் அவசரப்பட்டே? குமுதம் மாதிரி பெரிய பத்திரிகையிலே சேர்றதை விட்டுட்டு சாவி மாதிரி சின்ன பத்திரிகையிலே சேர்ந்திருக்கே. குமுதம் எத்தனை லட்சம் காபி போகுது, சாவி எத்தனை ஆயிரம் போகுது... தெரிய வேண்டாமா உனக்கு? பயோடேட்டா கொடுத்தே இல்லே, நான் முடிவு சொல்றதுக்குள்ளே உனக்கு என்ன அவசரம்?” என்று கோபித்துக்கொண்டார்.

ஆனால், எந்த இழப்பும் நேர்ந்ததாக நான் நினைக்கவில்லை; வருந்தவில்லை. சாவியிடம் சேர்ந்தது குறித்து இன்றளவும் முழுச் சந்தோஷத்துடன்தான் இருக்கிறேன்.

பிறகு சில மாதங்கள் கழித்து மீண்டும் பால்யூவைச் சந்தித்தபோது, “உனக்கு வாங்கித் தருவதாக இருந்த வேலையை வேற ஒருத்தருக்கு நான் வாங்கிக் கொடுத்துட்டேன். தப்பு; ஒருத்தர் இல்லே, ரெண்டு பேருக்கு குமுதத்துல வேலை வாங்கிக் கொடுத்திருக்கேன். ஒரு ரவிபிரகாஷை சேர்க்கிறதுக்குப் பதிலா அதே பேர்ல ரெண்டு பேரைச் சேர்த்திருக்கேன்” என்றார்.

எனக்குப் புரியவில்லை. பிறகு அவர் விளக்கினார். அவர் குமுதத்தில் சேர்த்த இருவர் ப்ரியா கல்யாணராமன் மற்றும் பிரசன்னா. பிரசன்னாவின் இயற்பெயர் ரவி; ப்ரியா கல்யாணராமனின் இயற்பெயர் பிரகாஷ்.

ஆக, என் பத்திரிகையுலக வாழ்வுக்குப் பிள்ளையார் சுழி போட்டவர் அருமை நண்பர் மார்க்கபந்து அவர்கள். நேற்று தன் வீட்டு விசேஷம் ஒன்றுக்காக என் அப்பா, அம்மா இருவரையும் தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார் அவர். அப்போது என் அப்பாவிடம், 30 வருடங்களுக்கு முன் அவருடைய பாராட்டுக் கடிதத்துக்கு நன்றி தெரிவித்து நான் போட்டிருந்த கடிதத்தை எடுத்துக் காண்பித்து, பிரமிப்பில் என் அப்பாவைத் திக்குமுக்காடச் செய்திருக்கிறார்.

தீபாவளி சமயம் ஆதலால், ஒரு வெள்ளைத்தாளின் ஒரு பக்கத்தில் அழகான பெண் குழந்தைப் படம் ஒன்றை நானே கலர் பென்சிலால் வரைந்து, மறுபக்கத்தில் தீபாவளி வாழ்த்து என்று தலைப்பிட்டு, கவிதை ஒன்றை எழுதி (அட! நான் கவிதைகூட எழுதியிருக்கிறேனா! எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால், நான் எழுதிய முதலும் கடைசியுமான கவிதை அதுவாகத்தான் இருக்கும்.) அனுப்பியிருக்கிறேன்.

அந்தக் கவிதை:

ச்சரியம் ஆனந்தம் அதிசயம் இன்றெனக்கு
அஞ்சல் மார்க்கமாக வந்த அருமையான பந்தமிது
அன்புடன் பாராட்டி ஆர்வமுடன் எழுதியதை
பன்முறையும் படித்துவிட்டேன் பரவசமாகிவிட்டேன்
பேர் இல்லாக் கதையினை பாராட்டியே புதுமையென்று
படைப்புகளைக் குவித்திடவே பரிசளித்தீர் ஊக்கந்தனை
என்நன்றி உங்களுக்கு என்றென்றும் நிலைத்திருக்கும்
எந்நாளும் என் நெஞ்சில் உம் நினைவு குடியிருக்கும்
தீமை ஒழிந்திடவும் தர்மம் தழைத்திடவும்
தீபஒளித் திருநாளில் தெய்வமருள் தான்பெற்று
பந்துக்கள் நண்பர்கள் பாசமுள்ள அனைவருடன்
பல்லாண்டு வாழ்ந்திடவே பணிவுடனே வாழ்த்துகின்றேன்!

Wednesday, June 17, 2009

உடைப்பில் போடுங்கள் உடைப் பிரச்னையை!

நான் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த சமயம்... காக்கி அரை நிஜாரும் வெள்ளைச் சட்டையும் எனக்கு யூனிஃபார்ம். இப்போதுள்ள பள்ளிகள் போல் வண்ணங்களோ, கட்டங்களோ இல்லாத வறட்டு வெள்ளைச் சட்டை. தினமுமே அதைத்தான் போட்டுக்கொண்டு போகவேண்டும். ஞாயிற்றுக்கிழமை மட்டும், அன்று ஒரு நாள் முழுக்க வீட்டில் கலர் டிரஸ் போட்டுக்கொண்டு திரியலாம்.

எனக்கு ஒரு கட்டத்தில் இந்தச் சீருடை மீது வெறுப்பே வந்துவிட்டது. அதற்கு முக்கியமான காரணம் வேறொன்று. வீட்டில் ஒரு பண்டிகை, விசேஷம் என்று வந்தாலும் எனக்குப் புத்தாடை எடுக்கும்போது வண்ணத் துணிகளுக்குப் பதிலாக யூனிஃபார்ம் துணி வாங்கி டிராயரும், சட்டையும் தைத்துக்கொடுத்துவிடுவார்கள். புதுசுக்குப் புதுசும் ஆச்சு, தனியாகச் சீருடைக்கென்று பணம் செலவழிக்க வேண்டாம்! ஒரு கல்லில் இரண்டு மாங்காய்!

ஆனால், நான் எஸ்.எஸ்.எல்.சி. முடிக்கும்போதுதான் (அந்தக் காலத்து எஸ்.எஸ்.எல்.சி. பதினொண்ணாவது.) சீருடையின் மகத்துவம் பற்றியும் அவசியம் பற்றியும் தெரிந்துகொண்டேன். இவன் பணக்காரன், இவன் ஏழை என்ற வித்தியாசம் எதுவும் குழந்தைகள் மனதில் படியாமல் ஒருவரோடொருவர் சமமாகப் பழகவேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தில் கொண்டு வரப்பட்டதே சீருடை.

கல்லூரியும் படிக்கிற வயசுதான். சகலத்தையும் கரைத்துக் குடித்துவிட்டு, ஞானியாகி கல்லும் வைரமும் ஒன்று என்ற பக்குவத்துக்கு மாணவர்கள் வந்துவிடும் வயதல்ல! அவர்களுக்கும் சீருடை அவசியம் தேவை என்பதே என் எண்ணம். ஆனால், எந்தக் கல்லூரியிலும் சீருடை என்பதே இல்லை.

கேட்டால், மாணவர்கள் துள்ளித் திரிகிற பருவமாம் கல்லூரிப் பருவம். அவர்களை ஒரு சிறைக்குள் அடைக்கக்கூடாதாம்! ஊடகங்களிலிருந்து, இந்த மாதிரி விஷயங்களுக்கு வக்காலத்து வாங்குவதற்கென்றே இருக்கிற சில அதி மேதாவிகள் வரை வரிந்து கட்டிக்கொண்டு வருகிறார்கள். அப்படியானால், குழந்தைகளை மட்டும் சீருடைச் சிறையில் அடைக்கலாமா? அவர்கள் துள்ளித் திரிய வேண்டியதில்லையா?

மாணவிகள் ஜீன்ஸ், டாப்ஸ் எனக் கண்டபடி கண்ணியக் குறைவாக உடை உடுத்தி வந்தால், சில கல்லூரி நிர்வாகங்கள் அவர்களுக்குச் சில கட்டுப்பாடுகள் விதிக்கின்றன. அவர்களின் நோக்கம் பெண்களை அடிமைப்படுத்துவதா? இல்லையே! ஆனால், பொங்கிக்கொண்டு வந்துவிடுகிறது சில மாதர்குல மாமணிகளுக்கு. “ஆகா... ஓர் உடை கண்ணியக் குறைவானது என்று எப்படிச் சொல்லலாம்? உடையில் இல்லை ஆபாசம். பார்க்கிற பார்வையில் இருக்கிறது” என்று உள்நாக்கு தெரியக் குரலெழுப்பிக் கத்துகிறார்கள்.

கண்ணியக் குறைவுக்கு என்ன அளவுகோலா வைக்க முடியும்? முன்பக்கம் டெய்லர் வெட்டு இத்தனைக் கீழிறங்கி இருந்தால் ஆபாசம் என்று எல்லையா வகுக்க முடியும்? ஆண்களின் மனதில் கிளர்ச்சியைத் தோற்றுவிக்கிற மாதிரி இருந்தால், அது ஆபாசமான உடைதான்.

இதற்கும் சீறி எழுவார்கள் மங்கையர்திலகங்கள். ஒன்றுமே தெரியாத மாதிரி, “எது ஆண்களின் மனதைச் சலனப்படுத்தும், எது சலனப்படுத்தாது என்று ஒவ்வொன்றையும் யோசித்துக்கொண்டா நாங்கள் டிரஸ் செய்ய முடியும்?” என்று எதிர்க் கேள்வி கேட்பார்கள். ‘ஆண்களுக்கு இந்தக் கட்டுப்பாடு எதுவும் இல்லையே! பெண்கள் மட்டும் என்ன இளித்தவாயர்களா?’ என்பார்கள்.

எனக்குத் தெரிந்தவரை கல்லூரிப் பையன்கள் யாரும் கண்ணியக் குறைவாக உடை அணிந்து நான் பார்த்ததில்லை. சகலகலா வல்லவனில் கமல்ஹாசன் வெறும் வெய்ஸ்ட் கோட் மட்டும் அணிந்து ‘இளமை இதோ... இதோ...’ என்று ஆடுகிற மாதிரி எந்தப் பையனும் அக்குள் ரோமம் தெரிய அக்‌ஷய்குமார் மாதிரி சிக்ஸ்பேக்ஸ் காண்பித்துக்கொண்டு கல்லூரிக்குப் போகவில்லை. அப்படிப் போனால் அவர்களுக்கும் கல்லூரி நிர்வாகம் டிரஸ் கோடு வைக்கும்.

சுடிதார் அணிந்து துப்பட்டா அணிந்து வரவேண்டும் என்று நிபந்தனை விதித்தால், ஏதோ தன் சுதந்திரமே பறிபோய்விட்ட மாதிரி பதறுகிறார்கள் சில பெண்கள். கவனிக்க, சில பெண்கள்தான்! நூற்றுக்குப் பத்து பேர் மட்டும்தான் இப்படி. மற்றவர்கள் இந்த விளையாட்டில் கலந்துகொள்ளாமல் எட்ட நின்று வேடிக்கை பார்க்கிறவர்கள்தான். ‘நிர்வாண ஊரில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன்’ என்பது மாதிரித் தங்களைச் சொல்லிவிடுவார்களோ என்று பயந்து, இதற்கு எந்த எதிர்ப்பும் சொல்லாமல் ஒதுங்கி நின்றுவிடுகிறார்கள்.

சேலைதான் கவர்ச்சியான உடை என்பது பெண்ணீயவாதிகள் (பெண்ணீயவாதிகள் என்போர் பெண்கள் மட்டுமல்ல) சிலரின் கண்டுபிடிப்பு. ஒரு சமுதாயத்தில் ஆண்டாண்டு காலமாக எதை உடுத்தி வருகிறோமோ, அதுதான் அந்தச் சமுதாயத்துக்கான கண்ணிய உடை. கேரளாவில் வெறும் முண்டு மட்டும் உடுத்துகிறார்களே, அது அங்கே கண்ணிய உடைதான். அதற்காக, தமிழ்நாட்டிலும் அப்படித்தான் உடுத்தி வருவேன் என்று பெண்கள் அடம்பிடித்தால் எப்படி இருக்கும்?

ஒரு சின்ன உதாரணம் சொல்கிறேன். நீச்சல் போட்டிக்குப் போகிறோம். பெண்கள் ஸ்விம் சூட் அணிந்து நீரில் குதித்து, நீந்துகிறார்கள். வெற்றி பெற்ற பெண் அதே ஸ்விம் சூட்டோடு ஈரம் சொட்டச் சொட்ட தொலைக்காட்சி நிருபருக்கு பேட்டி கொடுக்கிறார். அங்கே அந்த உடை ஆபாசம் இல்லை. அதுவே அதே பெண் வீட்டுக்கு நாம் போகிறோம். அதே பெண் ஸ்விம் சூட்டில் நமக்கு காபி கொண்டு வந்து தந்தால் ஹார்ட் அட்டாக் வந்துவிடாதா?

கேட் வாக் நடக்கும்போது ஆபாசமில்லை, ஸ்பென்சர் பிளாசாவுக்கு அந்த உடையில் வந்தால் ஆபாசமாகிவிடுமா என்று கூச்சல் எழுப்பிப் பயனில்லை. அங்கே ஆபாசமில்லை; இங்கே ஆபாசம்தான்! ’ஆபாசம் என்பது உடையில் இல்லை; பார்க்கிற பார்வையில் இருக்கிறது’ என்று சொல்வதை என்னால் ஒப்புக் கொள்ள முடியாது. முதல் பாதி சரி. ஆனால், பார்க்கிற பார்வையில் என்பது சரி அல்ல. எந்த இடத்தில் அந்த உடை அணிந்துவரப்படுகிறது என்பதைப் பொறுத்துதான் அது முடிவாகிறது.

கிராமத்து விவசாயி வெறும் கோவணம் மட்டும் அணிந்து, பல நடவுப் பெண்கள் கண் எதிரில் ஏர் உழுகிறார். அதுவே ஒரு கிராமத்து வாலிபன் கோவணம் கட்டிக் கல்லூரிக்கு வந்தால் ஆபாசம் இல்லை என்பீர்களா?

சேலை ஆபாச உடை அல்ல. குதர்க்க வாதத்துக்காக அப்படித் திசை திருப்பாதீர்கள். நம் முப்பாட்டிகளும், பாட்டிமார்களும் அணிந்து வந்த உடையை ஆபாச உடை என்று திரிக்காதீர்கள். என்ன... இன்றைய நவீனத்துவப் பெண்கள் ஜாக்கெட்டின் பின்புறம் அபார இறக்கம் காட்டு்கிறார்கள். (பல இடங்களில் தைக்கிற ஆண் டெய்லருக்கே கை கூசி, ஓரளவுக்கு மேல் இறக்கம் வைக்காமல் போக, தையல் கூலி தரமாட்டேன் என்று சண்டைக்குப் போன சில பெண்களையும் நான் அறிவேன்.) அதே போல், இடுப்புச் சொருகலையும் திகிலூட்டும் அளவுக்குக் கீழே இறக்கிப் பார்க்கிறவர்களைப் பதறச் செய்கிறார்கள். அப்படியான உடுத்துதல்தான் ஆபாசமே தவிர, சேலை ஆபாசமல்ல!

‘சேலையில் இடுப்பு தெரிகிறது. அதுதான் ஆபாசம். ஜீன்ஸும் டாப்ஸும் அணிந்தால் உடம்பு முழுக்க மறைக்கப்படுகிறது. அது ஆபாசமில்லை!’ என்பது இன்னொரு விதண்டாவாதம். உடம்பு முழுக்க மறைந்தால், அது ஆபாசமில்லை என்று ஆகிவிடுமா என்ன? உடையே அணியாமல், உடம்பு முழுக்கப் பெயிண்ட் பூசிக்கொண்டு அப்படியே போய்விடலாமே? ஆபாச இலக்கணத்துக்குள் வராதல்லவா? உடம்புதான் மொத்தமும் மறைந்திருக்கிறதே! அங்கங்கள் தெரியவேண்டியது இல்லை; அவற்றின் நீள, அகல, பருமன்களைத் துல்லியமாக வெளிப்படுத்தினாலும் போதும்; அது ஆபாசம்தான்!

ஆங்கிலப் பத்திரிகை ஒன்றில் பார்த்தேன்... பேன்ட் அணிந்த இளைஞன் ஒருவன் படம். திடுக்கிட்டுப் போனேன். பேன்ட் ஜிப் அவிழ்ந்து, பேன்ட்டின் முன்பக்கம் திறந்து, உள்ளே வேறு நிறத்தில் ஜட்டி தெரிவது போன்ற படம். ஆனால், உண்மையில் அவனது ஜட்டி தெரியவில்லை. அப்படித் தோன்றும்படியாக அந்த பேன்ட் டிசைன் செய்யப்பட்டிருக்கிறது. அவ்வளவுதான்! அப்படியொரு பேன்ட்டை கல்லூரி மாணவர்கள் அணிந்து வந்தால் ஒப்புக்கொள்வார்களா?

முன்பு காவல்துறை உயரதிகாரி ஒருவர் நல்ல எண்ணத்தோடு பெண்களுக்குப் புத்திமதி சொன்னார்... “கவர்ச்சியாக உடை உடுத்தாதீர்கள்! பார்க்கிற ஆண்களைச் சபலப்படுத்தாதீர்கள். அதனால் உங்களுக்குத்தான் ஆபத்து. பாலியல் குற்றங்கள் அதிகரிப்பதற்கு அப்படி உடை அணிவதும் ஒரு காரணம்!” நல்லது சொன்னால் வாங்கிக் கட்டிக்கொள்ள வேண்டியதுதான்! கட்டிக்கொண்டார். “தப்பு செய்பவனைத் தண்டிப்பதை விட்டுவிட்டு, பெண்களுக்கு ஏன் உபதேசம் செய்கிறார்” என்று கத்தித் தீர்த்துவிட்டார்கள்.

தண்டிப்பது மட்டுமல்ல, குற்றங்கள் நிகழாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதும் போலீஸின் கடமைதான் என்று அந்த மாதரசிகளுக்குத் தெரியவில்லை. ‘திருட்டுப் பயம் அதிகமாக இருக்கிறது, வீட்டைத் திறந்து போட்டுவிட்டுப் போகாதீர்கள்’ என்று போலீஸ் புத்திமதி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும். ‘நான் திறந்துபோட்டுத்தான் போவேன். திருடு போனால் கண்டுபிடித்துக் கொடுக்கத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்’ என்று சொன்னால், எக்கேடும் கெட்டு ஒழியுங்கள் என்று விட வேண்டியதுதான்!

இயற்கை ஆண் உடம்பை ஒரு மாதிரியும், பெண் உடம்பை ஒரு மாதிரியும் படைத்திருக்கிறது. புத்தகத்தில் வரும் ஒரு சின்ன ஆபாசப் படம் கூட, அந்தப் பருவத்தில் இருக்கும் இளைஞனைச் சபலப்படுத்திவிடும். பெண் அப்படியல்ல. அவள் உடலளவில் கிளர்ந்தெழ வெகு நேரமாகும். எனவே, ஆணைச் சலனப்படுத்தாத வகையில் பெண்கள் உடை அணிவது அவசியம். இங்கே யாருமே யோகிகள் அல்ல; பெற்றோரின் மீது, சமுதாயத்தின் மீது, சட்டத்தின் மீது, கடவுளின் மீது... இப்படி ஏதோ ஒன்றின் மீது இருக்கிற பயத்தினால்தான் ஒவ்வொரு ஆணும் கட்டுப்பாடாக இருக்கிறான்.

புஷ்பாதங்கதுரை ஒருமுறை ஒரு பேட்டியில் சொன்னார்... “முனிவர்களின் கட்டுப்பாட்டைப் பார்த்து எனக்கு பிரமிப்பு வரவில்லை. பஸ்ஸில் இத்தனை நெருக்கடியில் பெண்களின் மத்தியில் போய்வரும் இளைஞர்கள் பலர் கண்ணியம், கட்டுப்பாட்டோடு இருக்கிறார்களே, அதை நினைத்தால்தான் பெருமையாக இருக்கிறது. அவர்களைத்தான் மதிக்கத் தோன்றுகிறது!”

உண்மைதான். ஏதோ ஒரு கட்டுப்பாடு காரணமாக, (அவன் தன் மனச்சாட்சிக்குக்கூடக் கட்டுப்பட்டு இருக்கக்கூடும்!) தமிழக இளைஞன் அத்துமீறிப் போகாமல் கட்டுப்பாட்டோடு கண்ணியமாகவே நடந்துகொள்கிறான். உடைச் சுதந்திரம் என்கிற பெயரில் விபரீதத்தை விதைக்காதீர்கள். பெட்ரோல் பங்க்குகளில் ‘சிகரெட் பிடிக்காதீர்’ என்று போட்டிருப்பது சிகரெட் பிடிப்பவரின் உரிமையை நசுக்குவதற்கு அல்ல என்று புரிந்துகொள்ளுங்கள்.

படிக்கிற வயசில் படிக்கிற வேலையை மட்டும் பாருங்கள். அதில் ஏதாவது பிரச்னை என்றால் தாராளமாகக் கேஸ் போடுங்கள். மற்றபடி உபயோகமில்லாத உடைப் பிரச்னையைத் தூக்கி உடைப்பில் போடுங்கள்!

Sunday, June 14, 2009

சத்தியம் நீயே... தர்மத் தாயே..!

ங்கள் தாத்தா வளர்த்த பசு ‘லக்ஷ்மி’ பற்றி மூன்று நாட்களுக்கு முன்னால் நான் பிளாகில் எழுதியிருந்ததை இன்று யதேச்சையாகப் படித்துவிட்டு, இன்று அந்த லக்ஷ்மி பற்றி மேலும் சில தகவல்களைச் சொன்னார் அப்பா. அவை ஆச்சரியமாக இருந்தன.

எங்கள் தாத்தாவுக்கு அறுபதாம் கல்யாணம் நடந்த சமயம் அது. நானெல்லாம் பிறந்திருக்கவில்லை.

வீடு முழுக்க கல்யாணத்துக்கு வந்த உறவினர்கள் நிரம்பியிருந்தார்கள். கிராமத்து வீடு, கல்யாண சத்திரம் போன்று பெரியது. விசாலமான கூடத்தில் அத்தனை பேரும் தங்கள் குழந்தை குட்டிகளோடு குறுக்கும் நெடுக்குமாகப் படுத்திருந்தார்கள். ஊருக்கே மின்வசதி இல்லாத காலம் அது. இரண்டு மூன்று சிம்னி விளக்குகள் மட்டும் அங்கங்கே ஏற்றி வைக்கப்பட்டிருந்தன.

நடு ராத்திரி மணி 12 இருக்கும். புறக்கடைப் பக்கம் புஸ்... புஸ்ஸென்று ஏதோ சத்தம். திடுக்கிட்டு எழுந்த என் பாட்டி சிம்னி விளக்கைப் பெரிதாக்கிக்கொண்டு தோட்டத்துப் பக்கம் போய்ப் பார்த்தால்... லக்ஷ்மி தொட்டியில் இருந்த கழுநீரைக் குடித்துக்கொண்டு இருக்கிறது.

வாசலில் கட்டப்பட்டிருந்த பசு அது. எப்படியோ கட்டு அவிழ்ந்துவிட்டிருக்கிறது. வழக்கமாக அது வீட்டினுள் சுவாதீனமாக நுழைவது மாதிரி நுழைந்து, அந்த இருட்டில், குறுக்கும் மறுக்குமாகப் படுத்திருந்த இருபது முப்பது பேரையும் தாண்டி, ஒருவரையும் துளியும் மிதிக்காமல் தோட்டத்துப் பக்கம் போயிருக்கிறது. அன்றைக்கு வந்திருந்த உறவினர்களிடையே மிகவும் சிலாகித்துப் பேசப்பட்ட விஷயம் இது.

இங்கே எனக்குத் தெரிந்த ஒரு விஷயத்தையும் சொல்ல விரும்புகிறேன். குதிரைகளும் தப்பித் தவறிக்கூட யாரையும் மிதிக்காதாம். காமிரா மேதை கர்ணனே சொல்லியிருந்த ஒரு தகவல் இது.

அவரது படங்களில்தான் குதிரை அதற்கான லட்சணத்தோடு மிடுக்காக இருக்கும். மற்ற படங்களில் வரும் குதிரைகள் எல்லாம் வண்டிக் குதிரை மாதிரி சொத்... சொத்தென்று நடந்து வர, கர்ணன் படத்தில் மட்டும் குதிரைகள் நாலு கால் பாய்ச்சலில் பறக்கும். எப்படித்தான் அதை அத்தனை அழகாகப் படம் பிடித்தாரோ என்று வியப்பாக இருக்கும். ‘கங்கா’ என்றொரு படம். தென்னகத்து ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கர் நடித்தது. இங்கிலீஷ் படம் பார்க்கிற மாதிரி இருக்கும். அதில் குதிரைகள் ஓட்டம் அபாரமாக இருக்கும். சில காட்சிகளில், பார்க்கும் நம்மையே தாண்டிக்கொண்டு ஓடுகிற மாதிரியான கோணங்களில் எல்லாம் படமாக்கப்பட்டிருக்கும். இந்த மாதிரி எப்படிப் படம் பிடித்தார் என்று ரொம்ப நாள் எனக்கு ஆச்சரியமாகவே இருந்தது. வலுவான பெரிய கண்ணாடித் தளம் ஒன்றை அமைத்து, குதிரைகளை மேலே ஓடவிட்டு, காமிராமேன் கீழே இருந்து படம் பிடித்தாரோ என்று கூட நான் யோசித்தது உண்டு.

அது அப்படியல்ல! தப்பித் தவறிக்கூட குதிரைகள் யாரையும் மிதிக்காது என்கிறார் கர்ணன். இந்தத் தன்மை குதிரைகளிடம் இருப்பது தெரிந்து, அவர் தைரியமாக ஒரு காரியம் செய்தாராம். மூவி காமிராவோடு அவர் தரையில் படுத்துப் படம் எடுக்கத் தொடங்கிவிடுவாராம். தூரத்திலிருந்து பல குதிரைகள் அவர் படுத்திருக்கும் பாதை வழியாகத் துரத்தப்படுமாம். அவை வேகமாக ஓடி வந்து, கர்ணனைத் தாண்டிக்கொண்டு ஓடிவிடுமாம். ‘அந்தக் காட்சியை அப்படியே நான் படம் பிடித்துவிடுவேன்’ என்று சொல்லியிருக்கிறார் கர்ணன்.

என்னதான் குதிரைகள் மிதிக்காது என்றாலும், தைரியமாக அப்படிப் படம் பிடிப்பதற்குத் துணிச்சல் வேண்டும்தானே!

சரி, லக்ஷ்மியிடம் வருவோம். லக்ஷ்மி பற்றி அப்பா சொன்ன இன்னொரு விஷயம்தான் என்னை உண்மையில் சிலிர்க்க வைத்தது.

என் அப்பாவுக்கு சுசீலா என்று ஒரு தங்கை இருந்தாளாம். (இப்போது இல்லை. சின்ன வயதிலேயே இறந்துவிட்டதாகச் சொன்னார்.) சுசீலா அப்போது ஐந்தாறு வயதுக் குழந்தை. லக்ஷ்மி பசு அசை போட்டபடி வாசலில் அமர்ந்திருந்தது. சுசீலா விளையாட்டாக அதன் முதுகில் ஏறியவள், அப்படியே குப்புறப் படுத்து உறங்கியும் விட்டிருக்கிறாள். எத்தனை நேரம் ஆயிற்றோ!

யதேச்சையாக வெளியே வந்த என் அப்பாவின் அத்தை, பசு மாட்டின் முதுகில் குழந்தை படுத்திருப்பதைப் பார்த்துத் திடுக்கிட்டு, ‘ஐயையோ! பசு எழுந்தால் குழந்தை உருண்டு விழுந்துவிடுமே’ என்று பதறி, ஓடிப் போய்க் குழந்தையைத் தூக்கிக் கொண்டாராம்.

அடுத்த கணம், லக்ஷ்மி விலுக்கென்று உடம்பை உதறிக்கொண்டு எழுந்து நின்றது. அடுத்து அது செய்த காரியம்... நிறுத்தாமல் கொஞ்ச நேரத்துக்கு சிறுநீர் கழித்ததுதான்! தான் எழுந்தால் குழந்தை விழுந்துவிடுமே என்று அது பாவம், அத்தனை நேரமாக அடக்கிக்கொண்டு இருந்திருக்கிறது.

மிகச் சாதுவான பசு லக்ஷ்மி. வறுமையான ஒரு நேரத்தில், மனசே வராமல் அதை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டார் என் தாத்தா. ஆனால், அது அங்கே இருக்கப் பிடிக்காமல் முரட்டுத்தனமாகக் கட்டை அறுத்துக்கொண்டு தாத்தா வீட்டுக்கே ஓடி வந்துவிட்டதாம். அந்த ஆள் அதைப் பிடிக்கப் போனால், முட்ட வந்ததாம். இரண்டு மூன்று முறை இப்படியே லக்ஷ்மி, தாத்தா வீட்டுக்கு ஓடி வந்துவிட, அந்தப் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு லக்ஷ்மியை மீண்டும் தன்னிடமே வைத்து வளர்த்து வந்திருக்கிறார் தாத்தா.

பால் கறப்பை நிறுத்திய பிறகும், அந்தப் பசுவை யாரிடமும் விற்காமல் (அடிமாட்டுக்கென வாங்கிக் கொள்வார்கள்), தெருவில் துரத்தாமல் கடைசி வரை தன்னிடமே வைத்திருந்து தீனி போட்டுக் காப்பாற்றியிருக்கிறார். அவர் இறந்த அன்று... அன்று மட்டுமல்ல, அடுத்த இரண்டு மூன்று நாட்களும் லக்ஷ்மி வைக்கோல், புல் எதுவும் தின்னாமல், கழுநீர் குடிக்காமல் உண்ணாவிரதம் இருந்து, நாலாம் நாள் அதுவும் இறந்துபோய்விட்டதாம்.

‘மாட்டுக்கார வேலன்’ படத்தில் எம்.ஜி.ஆருக்காக கவிஞர் வாலி எழுதிய பாடலை இப்போது உணர்ச்சியோடு நினைத்துப் பார்க்கத் தோன்றுகிறது.

‘சத்தியம் நீயே, தர்மத் தாயே, குழந்தை வடிவே, தெய்வ மகளே...’ என்ற அந்தப் பாடலில் ஒரு வரி...

‘வளர்த்தவரே உன்னை வெறுத்துவிட்டாலும், அடுத்தவரிடத்தில் கொடுத்துவிட்டாலும், வளர்ந்த இடத்தை நீ மறக்காத செல்வம், வாய் மட்டும் இருந்தால் மொழி பேசும் தெய்வம்...’

Friday, June 12, 2009

விகடனில் முதல் நாள்!

சாவியில் முதல் நாள் அனுபவம் சொன்னேன். விகடனில் முதல் நாள் அனுபவம் சொல்ல வேண்டாமா?

முன்பே நான் சொன்னது போல், நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு எனக்குப் பழக்கமில்லை. என்ன கேட்பார்கள், அதற்கு எப்படிப் பதில் சொல்ல வேண்டும் என்கிற எந்த ஐடியாவும் எனக்கு இல்லை.

சாவி பத்திரிகை நிறுத்தப்பட்டதும், ஆனந்த விகடனில் வேலைக்கு விண்ணப்பித்து ஒரு அரைப் பக்கத் தாளில் (ஃபுல்ஸ்கேப் பேப்பர்கூட இல்லை.) எழுதிப் போட்டேன். எந்த மேலதிக விவரமும் இல்லாமல், ‘சாவி பத்திரிகையில் பணியாற்றினேன். பத்திரிகை நிறுத்தப்பட்டுவிட்டது. தங்களிடம் வேலை இருந்தால், இணைந்து பணியாற்ற விரும்புகிறேன்’ என்று சிக்கனமாக இரண்டே வரிகளில் எழுதிப் போட்டேன்.

இதற்கிடையில், முன்பு குமுதம் எஸ்.ஏ.பி-யும் சுஜாதாவும் சொன்னதை மனதில் கொண்டு அங்கேயும் ஒரு அப்ளிகேஷன் தட்டிவிட்டேன். அதுவும் போதாதென்று ஓவியர் அரஸ் சிபாரிசின்பேரில் சுதேசமித்திரன் நாளேட்டில் (அப்போது சுதாங்கன் அதற்கு ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தார்.) போய் வேலைக்கும் சேர்ந்துவிட்டேன். அந்தப் பத்திரிகை தொடர்ந்து வெளிவராது என்று அங்கு சேர்ந்த மூன்றாம் நாளே எனக்குத் தெரிந்துவிட்டது. வேலையிலிருந்து நின்றுவிட்டேன்.

குமுதத்திலிருந்து ஆசிரியர் சுஜாதாவிடமிருந்து அழைப்பு வந்தது. போனேன். ‘இங்கே சப்-எடிட்டர் வொர்க் மாதிரி தற்சமயம் எதுவும் இல்லை. கொஞ்ச நாள் ரிப்போர்ட்டரா இருங்க. சமயம் வந்ததும் சப்-எடிட்டராகலாம்’ என்றார். மறுத்துவிட்டு வந்துவிட்டேன்.

ஓவியர் அரஸ்ஸுக்கு போன் செய்து, நான் சுதேசமித்திரனிலிருந்து விலகிவிட்ட தகவலைச் சொன்னேன். “அதிருக்கட்டும்... விகடனுக்கு அப்ளிகேஷன் போட்டிருக்கீங்களா?” என்றார். “ஆமாம்” என்றேன். “உடனே வந்து இங்கே ராவ் சாரைப் பாருங்க” என்றார்.

அன்றைக்கே போனேன். ஓவியர் அரஸ் அனுப்பியதாகச் சொல்லி, ராவ் சாரைப் பார்க்க வேண்டும் என்றேன். அவர் வந்திருக்கவில்லை. காத்திருந்த நேரத்தில் வீயெஸ்வி சார் அழைப்பதாகத் தகவல் வந்தது. மேலே படியேறி, விகடன் எடிட்டோரியலுக்குப் போனேன். வீயெஸ்வி சாரின் தனியறைக்கு வழிநடத்தப்பட்டேன்.

நேர்முகத் தேர்வு மாதிரி இல்லாமல், சாவியில் நான் என்ன பண்ணிக்கொண்டு இருந்தேன், சாவி எப்படிப்பட்டவர் என்று பொதுவான கேள்விகளையே அவர் கேட்டார். நானும் யதார்த்தமாகப் பதில் சொல்லிக்கொண்டு இருந்தேன். இதற்குள் ராவ் சார் வந்துவிட, அவர் அறைக்கு என்னை அழைத்துச் சென்றார் வீயெஸ்வி.

ராவ் என்னைக் கேட்ட ஒரே கேள்வி... “அரஸ் உங்களுக்கு ரொம்ப ஃப்ரெண்டா?”

இதற்கு என்ன பதில் சொல்வது என்று எனக்குக் குழப்பமாக இருந்தது. ஃப்ரெண்டுதான் என்று சொன்னால், சிபாரிசுக்கு இங்கே இடமில்லை என்று சொல்லி மறுத்துவிடுவார்களா அல்லது அவர் இங்கே எனக்கு பலமாக சிபாரிசு செய்திருந்து, ‘ஃப்ரெண்டெல்லாம் இல்லை. தெரியும்’ என்று படாமல் சொல்லி வைக்கப்போக, அதனால் வாய்ப்பு நழுவிவிடுமா என்று குழப்பமாக இருந்தது. ‘இதைச் சொல்லலாமா, அதைச் சொல்லலாமா என்று குழப்பம் வந்தால், எது உண்மையோ அதைச் சொல்லிவிடுவதே மேல்’ என்று ஒரு பொன்மொழி உள்ளது. அதன்படி நான் செயல்பட்டு, “ஆமாம். நல்ல நண்பர்” என்று சொல்லிவிட்டேன்.

பின்னர், நாங்கள் மூவருமாய் ஆசிரியர் பாலசுப்பிரமணியனின் அறைக்குள் போனோம். சாவி சாரை முதன்முதல் பார்த்தபோது உண்டான அதே உதறல் இவர் முன்பும் எனக்கு இருந்தது. “அ... உக்காருங்கோ!” என்றார் எங்கள் மூவரையும்.

“அப்ளிகேஷன் பார்த்தேன். எங்க கிட்டேர்ந்து பதில் வரதுக்குள்ள குமுதத்துக்குப் போயிருக்கீங்க. சுதேசமித்திரன்ல சேர்ந்திருக்கீங்க. ஏன்?” என்றார் எடுத்த எடுப்பில் ஆசிரியர்.

“இங்கே நிச்சயம் வேலை கிடைக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்லை. நாலு இடத்துல கல் விட்டுப் பார்த்தா ஏதாவது ஒரு காய் விழாதாங்கிற நப்பாசைதான்! திடீர்னு சாவி பத்திரிகை மூடப்பட்டதும், நடுக்கடல்ல விழுந்து தத்தளிக்கிற மாதிரி ஓர் உணர்வு. அவசரத்துக்கு எந்தக் கட்டையாவது கிடைக்காதா பிடிச்சுக்கன்னு அலைபாய்ஞ்சேன். அதான்..!” என்றேன்.

“குமுதத்துல ஏன் சேரலை?” என்றார்.

“எனக்கு ரிப்போர்ட்டிங் வராது. தெரியாது. பிடிக்காது. சாவியிலும் நான் ரிப்போர்ட்டிங் பண்ணினதில்லை. டெஸ்க் வொர்க்தான். ஆனா, குமுதத்துலே என்னை ரிப்போர்ட்டரா இருக்கச் சொன்னாங்க. வேண்டாம்னு வந்துட்டேன்!”

“இங்கே ரிப்போர்ட்டர்ஸ் நிறையப் பேர் இருக்காங்க. பஞ்சமே இல்லை. டெஸ்க் வொர்க் பண்ணத்தான் ஆளில்லை. நீங்க சாவி கிட்டே எட்டு வருஷம் வேலை பார்த்திருக்கீங்க. அதை விடப் பெரிய தகுதி வேண்டியதில்லை. நீங்க இங்கே வேலை செய்யலாம். ஆனா, முதல்ல கான்ட்ராக்ட்லதான் வேலை செய்யணும். அதுதான் இங்கே முறை. கான்ட்ராக்ட்ல வேலை செய்யறப்போ உங்களுக்கு இங்கே திருப்தி இல்லேன்னா தாராளமா போயிடலாம். கான்ட்ராக்ட் முடிஞ்சு புரொபேஷன் தருவோம். அந்தச் சமயத்துலயும் உங்களுக்கோ எங்களுக்கோ பரஸ்பரம் திருப்தி இல்லேன்னா விலகிக்கலாம். அப்புறம்தான் பணி நிரந்தரமாகும். ஆனா, அதுக்குக் கொஞ்ச காலம் ஆகும். அதுக்குள்ளே உங்களுக்கு விகடனைப் பிடிக்கணும்; விகடனுக்கு உங்களைப் பிடிக்கணும். நீங்க நல்லா வேலை செய்வீங்க. அதுல எனக்குச் சந்தேகமில்லே. ஆனா, அங்கே நீங்க தனியாளா ஒரு பத்திரிகையைப் பார்த்து, சுதந்திரமா முடிவெடுத்து இருப்பீங்க. இங்கே அப்படியில்லே. உங்களுக்கு மேல பல சீனியர்ஸ் இருக்காங்க. அவங்களோடு இணைஞ்சு வேலை செய்ய வேண்டியிருக்கும். மத்தபடி, ஒண்ணாந்தேதிலேர்ந்து நீங்க இங்கே வந்து வேலை செய்யலாம். அன்னிக்கே உங்க அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் வாங்கிக்கலாம். பெஸ்ட் ஆஃப் லக்!” என்று கைகுலுக்கினார் ஆசிரியர்.

விடைபெற்று வெளியே வந்தேன். ராவ், வீயெஸ்வி ஆகியோரிடமும் விடைபெற்று வெளியேறி, வீட்டுக்கு வந்தேன். முதல் தேதிக்கு இன்னும் இரண்டு மூன்று நாட்கள்தான் இருந்தன.

முதல் தேதியன்று காலை... சுறுசுறுப்பாகக் கிளம்பி வேலைக்குப் போகும் ஜோருடன் விகடன் அலுவலகத்துக்குப் போனேன். ரிசப்ஷனிஸ்ட் பத்மினி, “யார் நீங்க? என்ன வேணும்?” என்று கேட்டார். “புதுசா ஜாயின் பண்ணியிருக்கிறேன்” என்றேன். “கொஞ்சம் வெயிட் பண்ணுங்க” என்று அங்கேயே சோபாவில் உட்கார வைத்துவிட்டார். பிறகு இன்டர்காமில் யாருடனோ பேசி, “மேலே போய் மதன் சாரைப் பாருங்க” என்றார். போனேன்.

ஆசிரியரின் அறையைப் போல் இரண்டு மடங்கு விசாலமாக இருந்தது அவரின் அறை. உள்ளே நுழையவே படபடப்பாக இருந்தது. அவரின் பி.ஏ. என்னை அழைத்துச் சென்று அவர் முன் நிறுத்திவிட்டுப் போய்விட்டார்.

மதன் என்னை இன்டர்வியூ செய்யத் தொடங்கினார். வழக்கமான கேள்விகள்தான். ஆனால், வேலை கேட்டு வந்தவன் நான் என்கிற பிரக்ஞையே இல்லாமல் நான்பாட்டுக்கு என் மனதில் தோன்றிய பதில்களைச் சொல்லி வைத்தேன். உதாரணத்துக்கு ஒரு கேள்வி: “கார்ட்டூன்களிலே உங்களுக்கு யாரோட கார்ட்டூன்ஸ் பிடிக்கும்?”

மதன் சார் கேட்டதும், “உங்க கார்ட்டூன்கள்தான்” என்று சொல்லியிருக்கக் கூடாதோ நான்? “எனக்கு மதிக்குமாரின் கார்ட்டூன்கள்தான் பிடிக்கும். சாவியில் அவர் போட்ட ஒவ்வொரு கார்ட்டூனும் அற்புதமானவை. இப்போது தினமணியில் வேலை செய்கிறார். அபாரமான சிந்தனையாளர். எப்படித்தான் அவர் மூளையில் இத்தனை கார்ட்டூன் ஐடியாக்கள் உதயமாகுதோன்னு நான் ஆச்சரியப்படுவேன்.” இப்படியா ஒருத்தன் பதில் சொல்வான்? நான் சொன்னேன்.

“உங்களுக்கு என்ன பத்திரிகை பிடிக்கும்?”

“சாவிதான்.”

“ஆனந்த விகடனில் எதை விரும்பிப் படிப்பீர்கள்?”

“ஆனந்த விகடனை நான் சமீப காலத்தில் படித்ததில்லை. இதன் பின் அட்டையில் த்ரீ-டி படங்கள் வெளியிடத் தொடங்கியதிலிருந்துதான் வாங்கவே ஆரம்பித்தேன். எனவே, இதில் நான் விரும்பிப் படிக்கும் பகுதி என்று தனியாக எதுவும் எனக்குச் சொல்லத் தெரியவில்லை.”

நேர்முகத் தேர்வு இப்படியாக என் அசட்டுத்தனத்துடன் நீண்டுகொண்டிருந்தது. முடிவில், “சரி, போயிட்டு வாங்க! லெட்டர் வரும்” என்றார் மதன்.

எனக்குக் குழப்பமாகிவிட்டது. இத்தனை நேரம் அவர் ஏதோ அறிமுகத்துக்காகத்தான் கேட்கிறார் என்று நினைத்தால், இதுதான் அசல் இன்டர்வியூவா?!

“சார்! நான் ஏற்கெனவே ஆசிரியரை வந்து பார்த்துப் பேசி, இன்னிலேர்ந்து வேலைக்கு வரலாம், அப்பாயின்ட்மென்ட் ஆர்டரையும் இன்னிக்கு வாங்கிக்கலாம்னு சொன்னாரே?” என்றேன்.

இப்போது மதன் சார் குழம்பிவிட்டார். “அப்படியா..! சரி, போய் வேலை செய்ங்க” என்று அனுப்பிவிட்டார்.

இப்படியாக விகடனில் என் பணி தொடங்கியது. ‘உங்களுக்கும் விகடனைப் பிடிக்கணும்; விகடனுக்கும் உங்களைப் பிடிக்கணும்’ என்றாரே ஆசிரியர்... அது நடந்தது. பரஸ்பரம் பிடித்துப்போக, கான்ட்ராக்ட், புரொபேஷன் என்ற நீட்டிப்புகள் எதுவுமின்றி, அடுத்த ஆறே மாதத்தில் விகடனில் என் பணி நிரந்தரமாக்கப்பட்டது.

Thursday, June 11, 2009

லக்ஷ்மியின் கதை

ன்று காலையில் நான் பஸ்ஸில் அலுவலகம் சென்றுகொண்டிருந்தபோது, நான் சென்ற பஸ் ஒரு பசு மாட்டின் மேல் லேசாக மோதிவிட்டது. ஆனால், அந்தப் பசுவின் மேல் அக்கறை கொண்டு யாரும் விசாரணைக்கு வரவில்லை. காரணம், அது கைவிடப்பட்ட, நிராதரவான அபலைப் பசு. அது பால் கறந்துகொண்டு இருந்தவரைக்கும் அதன் உரிமையாளர்களுக்குத் தேவைப்பட்டிருக்கும். அவர்களும் அதைக் கடமையும் கருத்தும் கரிசனமுமாகப் பார்த்துக்கொண்டு இருந்திருப்பார்கள். பால் வற்றிப் போனதும், வயதான பெற்றோர் மாதிரி அது அவர்களுக்கு அநாவசிய சுமையாகிவிட்டது. சம்பந்தப்பட்டவர்கள் அதைக் கொண்டு போய் அநாதை இல்லம், முதியோர் இல்லம் என்று எங்கேயும் சேர்க்காததால், பாவம் அது பாட்டுக்கு தெருவில் கிடக்கிற சக்கைகள், சினிமா போஸ்டர் என மேய்ந்து தன் ஜீவிதத்தைக் கழித்து வருகிறது.

நான் ஏழாம் வகுப்பு வரையிலும் கிராமத்துப் பள்ளிக்கூடத்தில்தான் படித்தேன். எங்கள் தாத்தாவுக்கு ஏழெட்டுப் பசுக்கள் சொந்தமாக இருந்தன. எனக்கு நினைவு தெரிந்து லக்ஷ்மி என்ற பெயருள்ள பசு அதன் கன்றோடு எங்கள் தாத்தா வீட்டில் இருந்தது. அதற்குத் தீனி போடாமல் வீட்டில் யாரும் சாப்பிடக்கூடாது என்று ஓர் எழுதப்படாத உத்தரவே இருந்தது. தாத்தா வெளியே போய்விட்டு வரும்போது வாசலிலேயே கை கால் கழுவிக்கொண்டு முதல் வேலையாக லக்ஷ்மியின் அருகில் சென்று அதன் கழுத்தைச் சொரிந்து கொடுப்பார். அதுவும் தலையை அண்ணாத்தி உணக்கையாகக் காட்டிக்கொண்டு இருக்கும். 'சாப்பிட்டியாடி? தொப்பை ரொம்பித்தா? தண்ணி குடிச்சியா?' என்றெல்லாம் பரிவோடு அதனிடம் விசாரித்த பின்னர்தான் வீட்டின் உள்ளேயே செல்வார் தாத்தா. சமயங்களில் அவர் வரும்போது அது பசியால் கத்திக்கொண்டு இருந்தால், வீட்டில் உள்ளவர்களுக்கு செம டோஸ் கிடைக்கும். 'நீங்க உப்பு போட்டு சோறு திங்கலே? லக்ஷ்மியை பட்டினி போட்டுட்டுட்டு நீங்க மட்டும் கொட்டிக்கிறீங்களே, நீங்கெல்லாம் என்ன ஜென்மமோ!' என்கிற ரீதியில் அத்தனை போரையும் திட்டித் தீர்த்துவிடுவார்.

லக்ஷ்மி ரொம்ப புத்திசாலி என்று தாத்தா அடிக்கடி சொல்வார். எங்கள் தாத்தா வீட்டில் லக்ஷ்மி ரொம்ப சுவாதீனமாக அதுபாட்டுக்கு வீட்டுக்குள்ளே வந்து நடை, தாழ்வாரம், முற்றம், பின்கடை எனக் கடந்து தோட்டத்துக்குப் போய் தனக்கான தொட்டியில் தவிட்டுத் தண்ணீர் பருகும்.

ஒரு முறை அப்படித்தான், மேய்ச்சலுக்குப் போன மாடு வீடு திரும்பியதும் எப்போதும்போல் சகஜமாக வீட்டுக்குள்ளே வந்துவிட்டது. கூடத்தில் நடு வழியில் ஒரு துண்டு விரித்து, கைக்குழந்தையாக இருந்த என் தங்கையை அதில் படுக்கப் போட்டிருந்தார்கள். லக்ஷ்மி வீட்டுக்கு வரும் ஆர்வமோ என்னவோ, குழந்தையைக் கவனிக்காமல் முன் இரண்டு கால்களையும் குழந்தையைத் தாண்டி வைத்துவிட்டது. அப்புறம்தான் அது கவனித்து இருக்கிறது. அவ்வளவுதான், அது முன்னேயும் போகாமல் பின்னேயும் போகாமல் நின்ற இடத்திலிருந்தே குரல் எழுப்பிக் கத்திக்கொண்டு இருந்தது. புறக்கடைப் பக்கம் போயிருந்தவர்கள், வாசற் பக்கம் போயிருந்தவர்கள் எல்லாம் அதன் குரல் கேட்டு ஓடி வந்து பார்த்துக் குழநதையைத் தூக்கும் வரையில் அந்தப் பசு அப்படியே அசையாமல் நின்றிருந்தது; பின்னர்தான் தோட்டத்துக்குப் போயிற்று என்று சொல்லக் கேட்டிருக்கிறேன்.

தாத்தா அந்தப் பசுவிடம் பால் கறக்கும்போது பின்னங்கால்களை அணைக்கயிறு கொண்டு கட்டமாட்டார். அது அவருக்குப் பிடிக்காத விஷயம். ஒருநாள் அப்படிப் பால் கறப்பதற்காக அதன் மடியில் அவர் கை வைத்ததுதான் தாமதம், கால்களை உதறி அவரை இடித்துத் தள்ளிவிட்டது லக்ஷ்மி. எகிறிப் போய் விழுந்தார் தாத்தா. சட்டென அந்தப் பசு, தான் ஏதோ தப்பு செய்துவிட்டது போன்ற பாவனையில் தாத்தாவின் முகத்தின் அருகில் தன் முகத்தைக் கொண்டு வந்தது. முத்தம் கொடுப்பது மாதிரி, ஸாரி கேட்பது மாதிரி கால்களை மாற்றி மாற்றி வைத்து நெளிந்தது. தாத்தா நிதானமாக அதன் மடியை ஆராய்ந்தார். பனியினால் ஏற்பட்ட வெடிப்புகள் இருந்தன. கீறலாக ரத்தம் கசிந்துகொண்டு இருந்தது. ௩0 ௪0 பட்டதும் தன்னையுமறியாமல் உதைத்துவிட்டிருக்கிறது. ஆனால், உதைத்த பின்பு மன்னிப்புக் கேட்பது போன்ற பாவனையில் அது தவித்த தவிப்பு... தாத்தா வர்ணித்தது இன்னும் என் காதுகளில் ஒளித்துக்கொண்டு இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நான் தினமணி கதிரில் எழுதிய ‘மாடு காத்துக்கொண்டு இருக்கிறது’ கதையில் வைத்திருந்தேன்.

எங்கள் வீட்டு லக்ஷ்மி மட்டுமல்ல, அந்தத் தெருவில் இருக்கும் எல்லார் வீட்டுப் பசுக்களின் பெயர்களும் தாத்தாவுக்கு அத்துப்படி. அது மட்டுமல்ல, அத்தனைப் பசுக்களையும் தன் சொந்த பசு போலவே நேசித்தார். ஒரு முறை கிராம முன்சீப்பிடம் அவர் சவால் விட்டு ஒன்று நிகழ்த்திக் காட்டியதாகச் சொல்வார்கள். பசுக்கள் ரொம்ப அறிவுள்ளவை; ரொம்ப சென்சிடிவ்வானவை என்றெல்லாம் தாத்தா சொல்ல, கிராம முன்சீப் அதை மறுத்து, அவை வெறும் ஐந்தறிவு ஜீவன்கள்; அவற்றுக்கு உணர்ச்சியாவது, அறிவாவது என்றிருக்கிறார்.

அப்போது அவர்கள் நின்றிருந்த இடம் பரந்த புல்வெளிப் பிரதேசம். மேய்ச்சலுக்கு விட்டிருந்த மாடுகள் கண்ணுக்கெட்டிய தூரத்தில் கும்பலாக 30, 40 மேய்ந்துகொண்டு இருந்தன. “அவற்றில் ஏதாவது ஒரு மாட்டைச் சொல்லுங்கள்; அதை இங்கே நான் இங்கிருந்தே வரவழைக்கிறேன்” என்றார் தாத்தா. “அதோ அந்த வெள்ளையும் பழுப்புமாக, கொம்பில் ஒரு கறுப்புக் கயிறு கட்டியிருக்கிறதே, அந்தப் பசு” என்று முன்சீப் ஒரு பசுவைச் சொல்ல, தாத்தா உடனே குரலெடுத்து, “லலிதா... ஏ, லலிதா..!” என்று கத்த, சட்டென்று அந்தப் பசுக் கும்பலிலிருந்து குறிப்பிட்ட அந்த வெள்ளையும் பழுப்புமான பசு மட்டும் தலையை உயர்த்திக் குரல் வந்த திக்கில் பார்த்தது. தாத்தா இங்கிருந்தே தன் தோள் துண்டை எடுத்து ஆட்டி, “வா... வா” என்று கூப்பிட, அந்தப் பசு உடனே இவர் இருக்குமிடம் நோக்கி ஓடி வந்ததாம்.

பசுக்கள் என்றாலே பொதுவாக உயிர்கள் என்றுதான் பொருள். பதி என்றால் பகவான். பசுக்களாகிய நம்மைக் காத்து ரட்சிப்பதனால்தான் அவன் பசுபதி.

என் தாத்தாவைப் போன்ற பசு நேசர்கள் இப்போது கிராமங்களில் இருக்கிறார்களா என்று எனக்குத் தெரியவில்லை. இப்போதெல்லாம் பசு நேசன் என்றால் நமக்கெல்லாம் கேலியும் கிண்டலுமாக நினைவுக்கு வருவது ராமராஜன்தான் என்றாகிவிட்டது.

Wednesday, June 10, 2009

ஊட்டியில் ஓர் உறவு!

ண்டுக்கு ஒருமுறை நான் என் குடும்பத்தோடு கோடை விடுமுறையில் உல்லாசப் பயணம் செல்வதை ஒரு வழக்கமாகவே வைத்திருக்கிறேன். அதற்கு ஆகும் செலவை ஒரு தண்டச் செலவாக நான் ஒருபோதும் கருதியதே இல்லை. கடந்த பன்னிரண்டு ஆண்டுகளில் இடையில் ஒரே ஒரு வருடம் மட்டும் உல்லாசப் பயணம் போகவில்லை. அந்த ஆண்டு எக்கச்சக்கமான பண நஷ்டம் உள்பட வேறு பல பிரச்னைகள் ஒட்டுமொத்தமாக வந்து அழுத்தியதில் டூர் கேன்ஸல். ‘அப்பா பை சொல்றாரு’ என்று டாடா காட்டி மற்றவர்களை மட்டும் அனுப்பி வைக்க, அதொன்றும் ஈனோ சாப்பிட்டுத் தீர்கிற சின்ன விஷயமாக இல்லை. (இந்த வருடமும் டூர் போகவில்லை. பெரியவள் ப்ளஸ் டூ; சின்னவன் டென்த் பப்ளிக். அவர்களே டூர் வேண்டாம் என்று கேன்ஸல் செய்துவிட்டார்கள்.)

சென்ற வருடம், மே மாத இறுதியில் ஊட்டி போய் வந்தோம். ஊட்டி போவது இது நாலாவது முறை. இதற்கு முன் போனபோது பிள்ளைகள் ரொம்பச் சின்னவர்களாக இருந்தார்கள். போட்டோ ஆல்பத்தைப் பார்த்த அவர்களுக்கு ஏதோ ஞாபகம் இருக்கலாமே தவிர, மற்றபடி அந்த அனுபவம் அதிகம் நினைவிருக்க வாய்ப்பில்லை. எனவே, அவர்கள் விருப்பத்தின்பேரில் வேறு ஸ்தலம் யோசிக்காமல் ஊட்டி என்று முடிவு செய்தோம்.

இந்த முறை குழந்தைகள் ரொம்பவே ஊட்டி பயணத்தை ரசித்தார்கள். ஊட்டியிலேயே ரூம் எடுத்துத் தங்கினோம். மழையில் தொப்பலாக நனைந்து மகிழ்ந்தோம். பற்கள் தந்தியடிக்க, உடம்பு உதறிப்போட, கை கால்கள் கிடுகிடுக்க சொத சொதவென்ற ஈரத்தோடு டூர் வேனில் அமர்ந்து பயணித்தது மறக்க முடியாத அனுபவம். தனியாக ஒரு வாடகைக் கார் அமர்த்திக்கொண்டு கடும் மழையிலும் தொட்டபெட்டா ஏறிப்போய் பார்த்தே தீருவது என்று போய் வந்தோம். சாலை வளைவுகளே தெரியாதபடிக்குச் சரியான மழை.

இதற்கு முந்தைய வருடங்களில், ஊட்டியில் இருக்கும் என் அன்பு நண்பர் பார்த்திபன் அவர்கள் குடும்பத்தாரின் அன்பு உபசரிப்பில் திளைத்து மகிழ்ந்தோம். பார்த்திபன், ஊட்டியில் இந்து பிலிம் நிறுவனத்தில் உயர் அதிகாரியாக இருக்கிறார். நல்ல எழுத்தாளர். இனிமையாகப் பழகுவார். அவரது துணைவியாரும் ஏதோ பல வருட காலம் பழகிய குடும்ப உறுப்பினர் போலவே இயல்பாகப் பழகுவார். அவரின் சமையல் அருமையாக இருக்கும். முந்தின முறை சென்றபோது, நாங்கள் நால்வரும் டிபன் சாப்பிட வரிசையாக உட்கார்ந்து, அவர் ஒவ்வொரு தோசையாகச் சுட்டுப் போடப் போட, அதன் சுவையில் மயங்கி, இலையை விட்டு எழுந்திருக்காமல், அவசரப்படாமல், பொறுமையாகக் காத்திருந்து, கூச்சமே இல்லாமல் வேண்டுமென்கிற தோசைகளைக் கேட்டு வாங்கித் திருப்தியாகச் சாப்பிட்டுவிட்டே எழுந்தோம். தோசை மட்டுமா, அதற்கு சப்போர்ட்டாக இணைப் பதார்த்தங்கள், தேங்காய்ச் சட்னி, புதினாச் சட்னி, மிளகாய்ப் பொடி, எள்ளுப் பொடி, மணக்க மணக்க சாம்பார் என்றால், யாருக்குத்தான் எழுந்திருக்கத் தோன்றும்?

சென்ற ஆண்டு ஊட்டிப் பயணத்தின்போது நாங்கள் இன்னொரு புதிய நண்பரின் பரிவான உபசரிப்பில் கிறங்கியிருந்தோம். அவர் வேறு யாருமல்ல; நல்ல எழுத்தாளரும், காட்டிலாகா அதிகாரியுமான லதானந்த் அவர்கள்தான். ஆனந்த விகடன், கல்கி எனப் பல பத்திரிகைகளில் சிறுகதைகள் எழுதியிருக்கிறார். லதானந்த்பக்கம் என பிளாக் எழுதி வருகிறார்.

விகடனில் ‘குதுர கர்ணா’ என்கிற புனைபெயரில் இவர் எழுதிய திருக்குறள் பொழிப்புரை படு தமாஷ்! பரிமேலழகரிலிருந்து சுஜாதா வரை எத்தனையோ பேர் திருக்குறளுக்கு உரை எழுதிவிட்டார்கள். ஆனால், இவர் எழுதிய உரை போல் வராது. கொங்குத் தமிழ்க்காரராக இருந்துகொண்டு சென்னைத் தமிழில் இவர் எழுதிய திருக்குறள் பொழிப்புரை செம கலக்கல். படிக்கலாம்; ரசிக்கலாம்; சிரிக்கலாம்; சிந்திக்கலாம். கடினமான அர்த்தங்களையும் ரொம்பச் சுலபமாக போகிறபோக்கில் குதுர கர்ணா சொல்லியிருந்த விதம் படு அசத்தல்! ஆனால், அது ஏனோ தமிழ்ப்பற்றாளர்கள் சிலரின் கண்களை உறுத்த, எதிர்ப்பு கிளம்பி, மேலிடம் வரை போய் குதிரையின் கழுத்து முறிக்கப்பட்டது. (இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை; குதுர கர்ணா 1330 திருக்குறள்களுக்கும் பொழிப்புரை எழுதி, தனிப் புத்தகமாகவே கொண்டு வரலாம்!)

நாங்கள் கோவை வந்து சேர்ந்ததுமே, தனக்கு போன் செய்யும்படி லதானந்த் சொல்லியிருந்தார். குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு மணி நேரம் முன்னதாகவே எங்கள் ரயில் கோவையை அடைந்துவிட்டது. போன் போட்டதும், பதறி பத்தே நிமிடத்துக்குள் தனது ஹூண்டாய் ஆக்சென்ட் காரை கோவை ரயில் நிலையத்துக்குக் கொண்டு வந்துவிட்டார். அப்போதுதான் அவரை முதன்முதலாகப் பார்க்கிறேன். ஆனால், அவர் முகத்தில் என்னைப் புதிதாகப் பார்க்கிற பாவனை இல்லை. ஏதோ நெடுநாள் பழகியவர் மாதிரி கலகலவெனப் பேசியபடி, எங்களைத் தமது காரில் ஏற்றிக்கொண்டு, அவரது கெஸ்ட் ஹவுஸுக்கு அழைத்துப் போனார். சிறிது நேர இளைப்பாறலுக்குப் பிறகு, அறையிலேயே மற்றவர்கள் தங்கியிருக்க, என்னைத் தனது அலுவலகத்தைச் சுற்றியுள்ள பாதைகளில், ஒவ்வொன்றாக விளக்கிச் சொன்னபடியே நீள நெடுக ஒரு ரவுண்டு அழைத்துப் போய் வந்தார்.

பின்னர் காரில், அன்னபூர்ணா ஹோட்டலுக்கு அழைத்துப் போய் உணவருந்தச் செய்து, ஜெயண்ட் சைஸில் ஃபான்ட்டா பாட்டில் ஒன்றை தாக சாந்திக்குக் கையில் வாங்கிக் கொடுத்து, கூட இருந்து ஊட்டிக்கு பஸ் ஏற்றிவிட்டே கிளம்பினார்.

அவரின் வீடு கோவையிலிருந்து கொஞ்சம் தள்ளி, துடியலூர் என்ற இடத்தில் இருந்தது. அங்கே எங்களை அழைத்துச் செல்ல முடியவில்லை என்கிற ஆதங்கமோ என்னவோ, ஊட்டியில் இரண்டு நாள் தங்கிச் சுற்றிப் பார்த்துவிட்டு நாங்கள் கிளம்பியதுமே அவரிடமிருந்து மறுபடியும் போன்... “வர வழியில துடியலூர்ல இறங்கிக்குங்க.” “நாங்க கோயமுத்தூருக்கு டிக்கெட் வாங்கிட்டோமே!” - அவருக்குச் சிரமம் தரக்கூடாது என்கிற எண்ணம் எனக்கு. எங்களைத் தன் இல்லத்துக்கு அழைத்துப் போய் உபசரிக்காமல் அனுப்பிவிடக் கூடாது என்கிற பிடிவாதம் அவருக்கு. “அதெல்லாம் பரவாயில்லை. நீங்க துடியலூர்ல இறங்கறீங்க. நான் வெயிட் பண்றேன்.”

அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ்? துடியலூரில் இறங்கிவிட்டோம். காரில் காத்திருந்து அழைத்துப் போனார்.

ஊட்டி மழையில் நனைந்ததாலோ என்னவோ, சரியான தலைவலி எனக்கு. உள்ளூர லேசாக ஜுரமும் இருந்தது. அதை அவரிடம் காண்பித்துக்கொள்ளாமல் இருக்கவேண்டும் என்றுதான் நினைத்தேன். ஆனால், ‘எவ்வளவு நேரம்தான் ஜுரம் வராத மாதிரியே நடிக்கிறது..!’ எங்களுக்கு அவர் ஒதுக்கியிருந்த அறைக்கு, சென்னையாக இருந்தால் ஒரு நாள் வாடகை குறைந்தபட்சம் 1,200 ரூபாயாவது கேட்பார்கள். அத்தனை சொகுசான அறை. உபசரிக்க அழைத்துப் போன அவருடன் பேசக்கூட முடியாமல் தலையில் ஒரு கர்ச்சீப்பை இறுகக் கட்டிக்கொண்டு படுத்துவிட்டேன்.

அப்புறம் மாத்திரை, டீ தந்தது நினைவிருக்கிறது. எத்தனை நேரம் உறங்கினேனோ தெரியவில்லை; ஆனால், சீக்கிரமே கொஞ்சம் சுதாரித்து எழுந்து ஹாலுக்குப் போனேன். லதானந்த் ஒரு அறையில் பிளாக் எழுதுவதில் மும்முரமாக இருக்க, என் பிள்ளைகள் இருவரும் மற்றொரு அறையில் கம்ப்யூட்டர் கிரிக்கெட் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

பிளாக் சம்பந்தமாக அவர் தமது அனுபவங்களைச் சுவாரஸ்யமாகச் சொல்லிக்கொண்டு இருந்தார். நடுவில் என் பையன் கேட்டான் என்று அந்த கிரிக்கெட் விளையாட்டை டிவிடியில் பதிவு தரும் வேலையிலும் இறங்கினார் லதானந்த். டிபன் சாப்பிட்டோம். அட, இங்கேயும் தோசை! பார்த்திபன் வீட்டுச் சுவையான தோசைக்குச் சற்றும் பின்வாங்காத மொறுமொறுவென்ற அசத்தல் தோசை! ‘அது எப்படித்தான் செய்யுறாங்களோ! நமக்குத் திங்கத்தான் தெரியும்!’
குரூப் போட்டோ எடுத்துக்கொண்டோம். பின்னர் விடைபெற்று வெளியே வரும்போது தன் வளர்ப்புச் செல்லங்களான மாலா, கென்ஸி இரண்டையும் அறிமுகப்படுத்தினார். கிளம்பினோம். கோவை ரயில்வே ஸ்டேஷனில் எங்களைக் கொண்டு விடுவதற்காக அவரின் மகன் எங்களைக் காரில் அழைத்துப் போனார். போகிற வழியிலேயே பாதி வழியில் ஓரிடத்தில் நிறுத்தினார். ‘பெட்ரோல் கிட்ரோல் தீர்ந்து போச்சா, போடப் போகிறாரா’ என்று யோசிப்பதற்குள், பக்கத்தில் இருந்த ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸில் நுழைந்து ஒரு பெரிய மைசூர்பாகுப் பெட்டி வாங்கி வந்து தந்துவிட்டுக் காரைக் கிளப்பினார்.

யம்மாடி..! ஊட்டி மழையில் நனைந்த குளிர் ஜுரம் ஒரு சில மணி நேரத்தில் விட்டுப் போய்விட்டது. ஆனால், லதானந்த் குடும்பத்தாரின் அன்பு மழையில் நனைந்ததில் பிடித்துக்கொண்ட பாச ஜுரம் இன்றைக்கு வரைக்கும் விடவில்லை.

Tuesday, June 09, 2009

சாவியில் முதல் நாள்!

வேலைக்கான நேர்முகத் தேர்வுகளில் கலந்துகொண்டு அதிகம் எனக்குப் பழக்கமில்லை.

குப்பை பொறுக்குவதில் தொடங்கி, பின்னர் வீடு வீடாகச் சென்று பழைய பேப்பர் வாங்குபவனாக மாறி, பழைய பேப்பர் கடைக்காரனாக ஒரு கடையில் உட்கார்ந்திருக்கப் பழகி, கிளார்க், டைப்பிஸ்ட், டைப்ரைட்டிங் இன்ஸ்ட்ரக்டர், டெப்போ இன்சார்ஜ் எனப் பல வேலைகளைச் செய்து, கடந்த 22 ஆண்டுகளாகப் பத்திரிகைத் துறையில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறேன். சாவியில் எட்டு வருடம் (இடையில் ஏழு மாத காலம் அமுதசுரபியில்), விகடனில் பதினான்கு வருடங்களுக்கும் மேலாக...

பத்திரிகை வேலைகளில் சேரும்போதுகூட எனக்கு சினிமாக்களிலும், கதைகளிலும் பார்த்த மாதிரியான நேர்முகத் தேர்வு வாய்க்கவில்லை.

சாவியில் முதல் நாள்:

ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியின் சென்னைக் கிளையில் டெப்போ இன்சார்ஜாகப் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை அவர்களிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது, தன்னை உடனே வந்து பார்க்கச் சொல்லி! போனேன். அவர் உடனடியாக என்னைப் பத்திரிகையாளர் சாவியைப் போய்ப் பார்க்கச் சொன்னார். உடனே வேலையில் சேர்ந்துகொள்ளலாம் என்றார்.

அன்றைக்கே சாவி அலுவலகம் போனேன். அப்போது சாவி இல்லம் தனியாகவும், அலுவலகம் அண்ணா நகர் தபால்-தந்தி அலுவலகத்துக்கு அருகிலும் இருந்தன. நான் போயிருந்த நேரத்தில் அலுவலகத்தில் சாவியின் மூத்த மகன் ‘பாச்சா’ என்கிற பாலசந்திரன்தான் இருந்தார். சாவி சார் இல்லை.

பாச்சாவிடம் சென்று புஷ்பாதங்கதுரை அனுப்பியதாகச் சொல்லி என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். ‘அப்படியா! அதான் உங்க ஸீட்! மத்தியானம் அப்பா வந்துடுவார். மத்த விவரங்களை அவர் கிட்டே பேசிக்கோங்க’ என்றார். அதாவது, நேர்முகத் தேர்வு நடப்பதற்கு முன்பே எனக்கான ஸீட் தயாராகிவிட்டது.

மதியம் சாவி சார் வரும்வரையில் எனக்கான ஸீட்டில் வெட்டியாக உட்கார்ந்திருந்தேன். சாவி சிங்கம் மாதிரி உள்ளே நுழைந்தார். அனைவரும் அலட்டிக்கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்து தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொண்டு இருக்க, நான் படபடக்கும் நெஞ்சோடு எழுந்துகொண்டேன்.

சாவி சார் நேரே தன் அறைக்குச் சென்றார். பின்னாலேயே பாச்சாவும் சென்றார். சிறிது நேரத்தில் வெளியே வந்து, “சார் கூப்பிடறார், போங்க!” என்றார் என்னிடம். கொஞ்சம் கைகால்கள் உதறலெடுக்க, மெதுவாக அடி மேல் அடி வைத்து அவர் எதிரில் போய் நின்றேன்.

“நீதான் ரவிபிரகாஷா? உட்காரு, ஏன் நிக்கிறே!” என்றார். சடக்கென உட்கார்ந்தேன்.

“புஷ்பாதங்கதுரை சொன்னாரு. ம்... நீ சொல்லு!” என்றார்.

“சார், நான் ஆனந்த விகடன், தினமணி கதிர், கல்கி, குங்குமம் எல்லாத்துலயும் கதைகள் எழுதியிருக்கேன். சாவியில கூட என்னோட கதை ஒண்ணு வந்திருக்கு. பத்திரிகையில வேலை செய்யணும்கிறது என் ஆசை...” என்றபடி என் கதைகள் பிரசுரமாகியிருந்த இதழ்களை எல்.ஜி.பெருங்காய விளம்பரம் அச்சிட்ட துணிப்பையிலிருந்து வெளியே எடுத்து, மேஜையில் அவர் முன் வைத்தேன்.

சாவி சார் அதைத் தொட்டுக் கூடப் பார்க்கவில்லை. “இதெல்லாம் எனக்கு வேண்டாம். எடுத்து உள்ளே வெச்சுக்கோ. யார்தான் கதை எழுதலே? வீட்டுக்கு ஒரு பொம்மனாட்டி கதை எழுதறா! அது ஒண்ணும் பெரிய விஷயமில்லை” என்றார். எனக்குப் பொசுக்கென்று போய்விட்டது. நான் ஏதோ சிறுகதை எழுதுவதையே பெரிய தகுதியாக நினைத்துக்கொண்டு வர, அவர் இப்படிச் சொன்னது எனக்குச் சற்று ஏமாற்றமாக இருந்தது. பின்னாளில் எனக்குக் கதை எழுதும் ஆசை விட்டுப் போனதற்கும், என்னையறியாமல் அதுதான் காரணமாக அமைந்திருக்க வேண்டும்.

“பத்திரிகையில வேலை செய்யணும்கிற ஆசை உனக்கு இருக்கில்லே... அது போதும்! அதுதான் எனக்கு முக்கியம்.”

“சார், ஆனா கதை எழுதறது தவிர பத்திரிகை வேலை எதுவும் எனக்குத் தெரியாதே!” என்று தயங்கினேன்.

“பொறக்கும்போதே பத்திரிகை வேலை கத்துக்கிட்டா பொறக்கிறாங்க எல்லாரும்? கத்துக்கறதுதான். ஆசை இருக்கோல்லியோ, நீ இங்கே தாராளமா கத்துக்கலாம். பத்திரிகையாளனா ஆகறது ஒண்ணும் பிரம்ம வித்தையில்லை!”

“சார், எனக்கு இங்கிலீஷ் தெரியாது...”

“எனக்கு மட்டும் தெரியுமா? இங்கிலீஷ்ங்கிறது ஒரு லேங்வேஜ்யா! அது ஒரு முக்கியமில்லே! தவிர, நானென்ன இங்கிலீஷ் பத்திரிகையா நடத்தறேன்?”

சாவி சார் இப்படிச் சொன்னாலும், அவர் தம் நண்பர்களான டி.டி.வாசு, பாண்ட்ஸ் அதிபர் எனப் பலரிடம் ஆங்கிலத்தில் பேசுவதை நான் கண்டிருக்கிறேன்.

“ஆர்வம்தான் முக்கியம். பத்திரிகைக்காரனாக ஆசைப்படறவன் வாட்ச் கட்டக்கூடாது. சம்பளம் கொடுப்பேன். ஆனா நீ அதுக்காக வேலை செய்யக்கூடாது. பத்திரிகைக்காகச் செய்யணும். செய்வியா?”

“செய்வேன் சார்!”

“சரி, முதல்ல புரூஃப் பார்க்கக் கத்துக்கோ! சாந்தா நாராயணன்னு ஒரு அம்மா... பிரமாண்டமா, அற்புதமா கோலம் போடுவாங்க. ஆனா, அவங்களும் ஒவ்வொரு புள்ளியா வெச்ச பிறகுதான், அதைக் கோடுகளால் சேர்த்துக் கோலம் போட ஆரம்பிப்பாங்க. புள்ளி வைக்கிறது ஒண்ணும் சுலபமில்லே. கை பழகணும். பத்திரிகையில புரூஃப் பார்க்கிறது புள்ளி வைக்கக் கத்துக்கிற மாதிரி! கத்துக்கோ. ஆசை இருந்தா உனக்கு வரும்!”

அன்பாக, ஆசையாக, அக்கறையாக, பொறுமையாக, கோபமாக, கண்டிப்பாக (ஆனால் ஒருபோதும் எரிச்சலாக, வெறுப்பாக, அசிரத்தையாக இல்லை) ஒவ்வொன்றையும் கற்றுக்கொடுத்த அந்தப் பத்திரிகையுலக ஜாம்பவானை இப்போது மனதுக்குள் நினைத்துக்கொள்கிறபோதும் கண்கள் கலங்குகின்றன எனக்கு.

Sunday, June 07, 2009

நான் முரண்டு பிடிக்கிறேனா?

ன் முந்தைய பதிவைப் பார்த்துவிட்டு, ‘அந்தக் கதை என்ன, நாஞ்சில் நாடனின் கதை என்ன, உங்கள் குறிப்பிட்ட கதையைப் பிறகு வேறு எந்தப் பத்திரிகையிலாவது வெளியிட்டீர்களா?’ என்று கேட்டிருக்கிறார் திரு.சத்தியமூர்த்தி.

ஆனந்த விகடன் ஆசிரியர் அனுப்பி வைத்த அந்தப் புத்தகத்தில் (இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற கதைகளின் தொகுப்பு) இருந்த நாஞ்சில் நாடனின் குறிப்பிட்ட அந்த ‘முரண்டு’ சிறுகதையைப் படித்துப் பார்த்தேன். எனக்கென்னவோ, அந்தக் கதைக்கும் நான் எழுதியிருந்த கதைக்கும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. அந்தக் கதையிலும் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான்; என் கதையிலும் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான். இதைத் தவிர, வேறு எந்தச் சம்பந்தமும் இல்லை.

எனினும், எப்போது இரண்டும் ஒன்று என்று ஒரு பத்திரிகை ஆசிரியருக்குத் தோன்றிவிட்டதோ, அப்போதே அது அந்தப் பத்திரிகையில் மட்டுமல்ல, வேறு எந்தப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படத் தகுதியற்றதாகிவிட்டது - என்னைப் பொறுத்த வரையில். எனவே, அந்தக் கையெழுத்துப் பிரதியை, அது விகடனிலிருந்து திரும்பி வந்ததுமே கிழித்துப் போட்டுவிட்டேன். அதை வேறு எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவும் இல்லை; பின்னர் நான் பணியாற்றிய ‘சாவி’ இதழிலும் வெளியிட்டுக் கொள்ளவில்லை. (ஆனால், விகடனிலிருந்து திரும்பிய அந்த ‘மானம்’ என்கிற சிறுகதையை மட்டும் சாவியில் வெளியிட்டேன்.)

நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ கதை, என்னுடைய ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ கதை இரண்டின் சுருக்கத்தையும் கீழே தருகிறேன். இரண்டுக்கும் தொடர்பு இருக்கிறதா என்று நீங்களே தீர்மானித்துக் கொள்ளுங்கள்.

முரண்டு:
இலக்கியச் சிந்தனை பரிசு பெற்ற கதை இது. ரொம்ப காலத்துக்கு முன்னே படித்ததால், கதை துல்லியமாக நினைவில்லை. ஞாபகம் இருக்கிறவரையில் சொல்கிறேன்.

ஒரு ரெண்டுங்கெட்டான் இளைஞன். தான் செய்வது இன்னதென்று அவனுக்குத் தெரியாது. அவனை வைத்துக்கொண்டு அவன் அம்மா போராடுவாள். உறவுக்காரப் பெண் ஒருத்தியை அவனுக்குக் கட்டி வைத்துவிட்டால் தனக்கு ஒரு நிம்மதி பிறக்கும் என்று நினைத்து அதற்கு முனைவாள். அதற்குள் அவன் கள்ளு குடிக்கக் காசு புரட்டுவது எப்படி என்று யோசித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் ரூபாய் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு, அங்கே போய் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு விடுகிறான்.

அன்பிற்கும் உண்டு ஆராதனை:
ஒரு கணவன் - மனைவி. கணவன் நல்லவன்தான். ஆனால், அம்மாவுக்கு அடங்கிய பிள்ளை. அம்மா சொல்லைத் தட்டாதவன். அந்தத் தம்பதிக்குக் குழந்தைகள் இல்லை. அதனால் அவன் அம்மா, தன் தம்பி மகளை அவனுக்கு இரண்டாம் தாரமாகக் கட்டி வைக்க நினைக்கிறாள்.

மனைவி இது பற்றிக் கணவனிடம் சொல்லி அழ, ‘கவலைப்படாதே! நீ மட்டும்தான் எனக்கு மனைவி. வேறு யாரையும் நான் கல்யாணம் செய்து கொள்ள மாட்டேன்’ என்று ஆறுதல் சொல்கிறான். ஆனால் அவளோ, வேறு சில சம்பவங்களைச் சொல்லிக் காட்டி, ‘அப்போதெல்லாம் நீங்கள் நான் சொன்னதையா செய்தீர்கள்? அம்மா மனம் நோகக் கூடாது என்று அவள் விருப்பப்படிதானே நடந்துகொண்டீர்கள்? இப்போதும் அப்படித்தான் செய்வீர்கள். உங்களை நம்ப முடியாது!’ என்கிறாள்.

மறுநாள்... கல்யாணப் பேச்சை எடுக்கிறாள் அம்மா. “வாரிசு வேண்டும் என்றுதானே எனக்கு மறு கல்யாணம் செய்ய நினைக்கிறீர்கள் அம்மா! ஆனால், அதற்கு வழியில்லை. நான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொண்டு விட்டேன்” என்கிறான் கணவன். மனைவி நெகிழ்கிறாள்.

என்ன... இரண்டுக்கும் சம்பந்தம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறதா? அல்லது, சம்பந்தமே இல்லை என்று நான்தான் ‘முரண்டு’ பிடிக்கிறேனா?

Saturday, June 06, 2009

விகடனோடு ஒரு லடாய்!

னந்த விகடன் வார இதழில் என் சிறுகதைகள் அடுத்தடுத்து வெளியாகி, நான் தலைகால் புரியாத உற்சாகத்தில் திளைத்துக்கொண்டு இருந்த 1982-1983 கால கட்டம்!

ஒரு நேரத்தில், பரிசீலனைக்கு நான் அனுப்பி வைத்த கதை பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கடிதம் வரும். அது பிரசுரமாவதற்குள் இன்னொரு கதை எழுதி அனுப்புவேன். சில நாட்களில், அதுவும் தேர்ந்தெடுக்கப்பட்டதாகக் கடிதம் வரும். இரண்டும் பிரசுரமாவதற்குள் வேறொரு கதை எழுதி அனுப்புவேன். சில மாதங்களில் அதுவும் பரிசீலனையில் தேறிவிட்டதாகவும், விரைவில் பிரசுரமாகும் என்றும் கடிதம் வரும். இப்படி, என் சிறுகதைகள் ஆறு அடுத்தடுத்து விகடன் பரிசீலனையில் தேர்வாகி, பிரசுரத்துக்காகக் காத்திருந்தன.

அப்போது வந்தது ஒரு கடிதம், விகடனிலிருந்து எனக்கு இடி போல! ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களே கையெழுத்திட்டு அந்தக் கடிதத்தை அனுப்பியிருந்தார்.

கடைசியாக நான் விகடனின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்த சிறுகதை ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’. அது ஏற்கெனவே தீபம் இதழில் திரு.நாஞ்சில் நாடன் எழுதிய ‘முரண்டு’ என்கிற சிறுகதையின் அப்பட்டமான காப்பி என்றும், அவர் வட்டார வழக்கில் எழுதியிருந்த கதையை நான் பிராமண பாஷை உபயோகித்து எழுதியுள்ளேனே தவிர, மற்றபடி மையக் கரு ஒன்றுதான் என்றும், இதனால் பரிசீலனைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என் மற்ற கதைகளை ஏன் நிராகரிக்கக்கூடாது என்று கேட்டு், அந்தக் கடிதத்துக்கு உடனடியாக விளக்கம் சொல்லும்படி அந்தக் கடிதத்தில் எழுதப்பட்டிருந்தது.

அந்தக் கடிதம் எனக்கு வருத்தத்தை விடக் கோபத்தைதான் அதிகம் ஏற்படுத்தியது. அந்தக் கோபத்துடனேயே ஆசிரியர் பாலசுப்பிரமணியனுக்கு ஒரு பதில் எழுதிப் போட்டேன். “ ‘அவர் கதையும் உங்கள் கதையும் பொருந்திப் போகிறது. இதற்கு என்ன சொல்கிறீர்கள்?’ என்று கேட்டால் விளக்கம் சொல்லலாம். நான் காப்பி அடித்து எழுதியதாக நீங்களே தீர்ப்பளித்துவிட்டு, பிறகு விளக்கம் கேட்டால் எப்படி? நான் உங்களுக்கு விளக்கம் எதுவும் சொல்லத் தயாராக இல்லை. திட்டமிட்டுக் குற்றம் செய்பவன்தான் அலிபி தயாரித்துக்கொள்ள முடியும். இது நான் சொந்தக் கற்பனையில் எழுதினதுதான் என்பதற்கு என் மனச்சாட்சி தவிர, வேறு சாட்சியில்லை. என் கதைகள் எதையும் நீங்கள் பிரசுரிக்க வேண்டாம். தயவுசெய்து உடனடியாக அத்தனைக் கதைகளையும் திருப்பி அனுப்பிவிடுங்கள்” என்று எழுதியிருந்தேன்.

என் அப்பா கோபித்துக்கொண்டார். பதில் அனுப்புகிற முறை இதுதானா என்று சத்தம் போட்டார்.

இரண்டொரு நாளில், மீண்டும் ஆனந்த விகடன் ஆசிரியரியரிடமிருந்து ஒரு கடிதமும், ஒரு புத்தகமும் வந்தது. கடிதத்தில், “உங்கள் உணர்வை நாங்கள் புரிந்து கொண்டோம். உங்கள் கதைகளை நாங்கள் திருப்பி அனுப்புவதாக இல்லை. அவை கண்டிப்பாக விகடனில் பிரசுரமாகும். இத்துடன் ஒரு புத்தகம் அனுப்பியுள்ளோம். அதில் உள்ள நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ சிறுகதையைப் படித்துப் பாருங்கள். எங்கள் சந்தேகத்தில் நியாயம் உள்ளது என்று உங்களுக்குப் புரியும்” என்று எழுதியிருந்தார்.

பாரம்பரியம் மிக்க ஒரு பத்திரிகையின், அனுபவம் மிக்க ஆசிரியர் எழுதியிருந்த மிகத் தன்மையான அந்தக் கடிதம் என்னைப் பற்றி நானே கூசச் செய்துவிட்டது. உடனே மிக நீண்ட பதில் எழுதினேன்.

நான் கிராமத்துவாசி. ஆனந்த விகடன், குமுதம், கல்கி தவிர வேறு பத்திரிகைகள் படித்தறியாதவன். தீபம், கலைமகள், மஞ்சரி, அமுதசுரபி என்று பெயர்கள்தான் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, அவற்றைக் கண்ணாலும் பார்த்தது இல்லை.

தவிர, அந்தச் சமயத்தில் ஆனந்த விகடனுக்கு அடுத்ததாக இன்னொரு சிறுகதையும் எழுதி அனுப்பியிருந்தேன். ‘மானம்’ என்ற தலைப்புடைய அந்தக் கதையின் சாராம்சம் இதுதான். வறுமையான ஓர் எழுத்தாளன் சிறுகதைப் போட்டியில் கலந்து கொள்கிறான். முதல் பரிசு பெறுகிறது அக் கதை. பரிசுக்கான காசோலை வருகிறது. அவன் அதை எடுத்துக் கடன்காரர்களுக்குக் கொடுக்கும் முன்பு, அடுத்த வார இதழ் வெளியாகிறது. தன் கதைக்குக் கடிதம் ஏதும் வந்துள்ளதா என ஆவலோடு வாங்கிப் பார்க்கிறான். ‘மேற்படி கதை மலையாளப் பத்திரிகை ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட அப்பட்டமான காப்பி’ என்று ஒரு வாசகரின் கடிதம் கட்டம் கட்டிப் பிரசுரமாகியிருக்கிறது. அவன் மனம் நொந்து அந்த காசோலையைத் திருப்பி அனுப்பிவிடுகிறான்.

மேலும், அப்போது தினமணி கதிருக்கு ‘மாடு காத்துக்கொண்டிருக்கிறது’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதை அனுப்பி, கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேலாகியும், அது பற்றி விசாரித்தும் பதில் வராத நிலையில் அதை கல்கி, குங்குமம், ஆனந்தவிகடன், சாவி என எல்லாவற்றுக்கும் அடுத்தடுத்துப் பரிசீலனைக்கு அனுப்பி வைத்த நிலையில் திடுமென ஒரு நாள் அந்தக் கதை தினமணி கதிரில் பிரசுரமாகி புத்தகம் வந்தது. திடுக்கிட்டுப் போன நான் உடனடியாக அந்தக் கதையை நான் அனுப்பிய எல்லாப் பத்திரிகைகளுக்கும் (ஆனந்த விகடன் உள்பட) நடந்ததை விவரித்து, அந்தக் கதையைப் பிரசுரிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டேன்.

“இப்படி ‘மானம்’ கதையை எழுதும் மன நிலையில் இருப்பவன், தப்பித் தவறியும் ஒரே கதை வேறு இதழில் பிரசுரமாகிவிடக் கூடாதே எனப் பதறியவன் காப்பி அடித்து எழுதத் துணிவேனா?” என்று அந்த நீண்ட கடிதத்தில் தன்னிலை விளக்கம் சொல்லியிருந்தேன்.

“இதை முன்பே செய்திருக்கலாம். ஆனால், காப்பி அடித்து ஒரு கதை எழுதி, அதை எங்களுக்கு அனுப்பியும் வைத்துள்ளீர்கள் என்று நீங்கள் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தீர்கள். அந்த ‘உம்’ என்னை மிகவும் நோகச் செய்துவிட்டது. உங்கள் அடுத்த கடிதம், நான் அதிகப்பிரசங்கித்தனமாக நடந்துகொண்டு விட்டேன் என்று என்னைக் கூசச் செய்துவிட்டது. எனவேதான், இப்போது இந்தத் தன்னிலை விளக்கம்” என்று மிக விரிவான கடிதம் எழுதிப் போட்டேன்.

அதன் பிறகு, விகடனில் என் பல சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ஆனால், அந்தக் கோபக்கார இளைஞனே தன்னிடம் வந்து பணியாற்றுவது ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியனுக்கு இன்று வரை தெரியாது. அவருக்கு மட்டுமல்ல, இன்றைய எம்.டி., ஆசிரியர் அசோகன் உள்ளிட்ட யாருக்குமே தெரியாது!

மறைக்க வேண்டும் என்ற எண்ணமில்லை. அதைச் சொல்வதற்கான வாய்ப்பு வரவேயில்லை. இதோ, இங்கேதான் முதன்முறையாக அதை எழுதுகிறேன்.

போட்டுக்கொடுத்துட மாட்டீங்களே?!

Friday, June 05, 2009

தொடர் பதிவு விளையாட்டு!

னக்கு இந்த ஆட்டம் புரியலை. சரி, நண்பரும் சீனியர் பதிவருமான லதானந்த் சார் என்னவோ சொல்றாரேன்னு நானும் இந்த ஆட்டத்துல கலந்துக்கறேன்.
ம்... ஆரம்பிக்கலாமா?

1) உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அது பெரிய கதைங்க. அதுக்கு தனிப் பதிவே நான் போடணும். சுருக்கமா சொல்றேன். என் ஆதிப் பெயர் ரவிச்சந்திரன்தான். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் வகுப்புல நாலைஞ்சு ரவிச்சந்திரன்கள் இருந்ததால, அப்பவே எனக்கு ஒரு இண்டிவிஜுவாலிட்டி வேணும்னு நினைச்சு எங்க அப்பா கிட்ட சொன்னேன். அவர்தான் எங்க ஸ்கூல் ஹெட்மாஸ்டர். ரெஜிஸ்டர்ல ரவிச்சந்திரன்கிறதை ரவிபிரகாஷ்னு சுலபமா மாத்திட்டாரு. இந்தப் பேரு எனக்கு ரொம்ப ரொம்பப் பிடிக்கும். அது சரி, இப்ப இதைச் சொல்றேனே, பிரச்னை ஒண்ணும் வந்துடாதே?

2) கடைசியா அழுதது எப்போது?
தெரியலை. உள்ளுக்குள் அழுததுன்னா, இலங்கையில கொத்துக்கொத்தா வெட்டிச் சாய்ச்சாங்களே, அப்ப!

3) உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
சின்ன வயசுல நான் கையெழுத்துக்காக ஆசிரியர்கள் கிட்டே பாராட்டே வாங்கியிருக்கேன். அப்புறம் நிறையப் பேர் கையெழுத்து அழகா இருந்தா, தலையெழுத்து அழகா இருக்காதுன்னு சொன்னதை நம்ம்ம்ம்ம்பி, கிறுக்க ஆரம்பிச்சுட்டேன். அது சரி, இப்ப எதுக்கு இந்தக் கேள்வி. எல்லாம் சிஸ்டம், கீ-போர்டு, இ-மெயில்னு ஆனப்புறம் எவன் கையெழுத்து அழகா இருக்கு?

4) பிடித்த மதிய உணவு?
தயிர்சாதம். பிடிக்குதோ பிடிக்கலையோ, தினம் அதான் கையில எடுத்துப் போறேன். வேற எதைச் சாப்பிட்டாலும் உடம்புக்கு ஒத்துக்கலீங்களே!

5) நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
இல்லை. நான் கொஞ்சம் ரிசர்வ்ட் டைப். நான் யாரோடவும் நட்பு வெச்சுக்க மாட்டேன். அவங்களா வந்து நட்பு பாராட்டினா விலகி ஓடமாட்டேன்.

6) கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
கடல்ல குளிக்கப் பிடிக்கும் - பயம்! அருவியில குளிக்கப் பிடிக்கும் - ஜலதோஷம்!

7) ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
கண்களை! காரணம், அவர் நம்பிக்கைக்குரியவரா என்பதை அவர் கண்கள் எனக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.

8) உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்ச விஷயம் - திறமை எங்கிருந்தாலும் வஞ்சனை இல்லாமல் பாராட்டுவது; பிடிக்காத விஷயம் - சோம்பேறித்தனம்!

9)உங்கள் துணைவர்/துணைவி கிட்டே உங்களுக்குப் பிடிச்ச/பிடிக்காத விஷயம்?
பிடிச்ச விஷயம் - அருமையான சமையல், சிறப்பான வீட்டு நிர்வாகம், என் பெற்றோர்களை அன்பாகக் கவனித்துக் கொள்ளும் பாங்கு, எனக்கு நேர்மாறான சுறுசுறுப்பு.
பிடிக்காத விஷயம் - குழந்தைகளை சதா படி, படி என்று திட்டிக்கொண்டே இருப்பது, சம்பளப் பணத்தில் கணக்குக் கேட்டுக் குடாய்வது.

10) இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
என் தாத்தா பக்கத்துல! தெனாலிராமன் கதை, மரியாதைராமன் கதை, பட்டி விக்கிரமாதித்தன் கதை, கேட்டதும் கடன் கொடுக்கும் கிண்டான கிண்டன்-வாங்கின கடனைக் கொடுக்காத வல்லாள கண்டன் கதை போல என் சின்ன வயசில் ஏகப்பட்ட கதைகளைச் சொல்லி அவர் வளர்த்ததனாலதான் இன்னிக்கு நான் ஒரு பத்திரிகையில் பொறுப்பாசிரியர் அளவுக்கு உயர முடிஞ்சிருக்குன்னு நம்பறேன்.

11) இதை எழுதும்போது என்ன நிறத்தில் ஆடை அணிந்துள்ளீர்கள்?
எதுக்கு இந்தக் கேள்வின்னு புரியலை. இருந்தாலும் சொல்றேன், நீலத்தில் பொடிக் கட்டம் போட்ட லுங்கி; டாப்லெஸ்!

12) என்ன பார்த்து/கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள்?
வீட்டில் நெட்டில் உட்கார்ந்தாயிற்றென்றால், ஏதாவது ஒரு டி.எம்.எஸ். பாட்டுதான் சைடில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்போது ஓடிக்கொண்டு இருப்பது ராகா டாட் காமில் பரவசமூட்டும் முருகன் பாடல்... ‘மனம் கனிந்தே நீ அருள் புரிவாய்... திருமால் மருகா’

13) வர்ணப் பேனாவாக உங்களை மாற்றினால், என்ன நிறப் பேனாவாக மாற ஆசை?
கறுப்புதான் எனக்குப் புடிச்ச கலரு!

14) பிடித்த மணம்?
மல்லிகை.

15) நீங்கள் அழைக்கப்போகும் பதிவரிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்? அவரை நீங்கள் அழைக்கக் காரணம் என்ன?
சொக்கன். மிகச் சிறந்த எழுத்தாளர். கணினி தொடர்பாக விகடனில் தொடர் கட்டுரை எழுதியிருக்கிறார். கதைகளும் எழுதியிருக்கிறார். அவரை அழைக்கக் காரணம்... ம்... மத்த பதிவர்களைப் பார்த்தேன். ஒருத்தர் ஜெயமோகனைக் கூப்பிடுவீர்களா, சாருவைக் கூப்பிடுவீர்களா, அப்படியென்றால் நானும் வருகிறேன் என்கிறார். இன்னொரு பதிவு், இதென்ன அசட்டுத்தனமான ஆட்டம், சேச்சே என்கிறது. சொக்கன் அப்படியெல்லாம் சொல்ல மாட்டார் என்று ஒரு நம்பிக்கை. அதான்!

16)உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
அவர் சமீபத்தில் பதிவிட்ட ‘கேட்டோ சேதியை - ஆணும் பெண்ணும்’ கவிதை! அவருக்கு ரெண்டும் பசங்கன்னு நினைக்கிறேன். எனக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். அதனாலே அவர் கவிதைக் கருத்துல எனக்கு 100 சதவிகிதம் உடன்பாடு!

17) பிடித்த விளையாட்டு?
சீட்டாட்டம். அட, காசு வெச்செல்லாம் இல்லீங்க. சும்மா ரம்மி, டிக்ளேர், நைன் நாட் ஃபோர் என்று உறவினர்களோடு விளையாடுவது. என் பிள்ளைகளோடு விளையாடினால் செஸ். என் அப்பாவோடு விளையாடினால் ஆடுபுலி ஆட்டம்.

18) கண்ணாடி அணிபவரா?
இமேஜை ஸ்பாயில் பண்றீங்களே! அட, ஆமாய்யா ஆமாம்!

19) எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
என் ரசனைக்குரியதாக இருக்கும் எந்தப் படமும்!

20) கடைசியாகப் பார்த்த படம்?
ரத்தக்கண்ணீர் - சிடியில்!

21) பிடித்த பருவ காலம் எது?
இதுக்கு லதானந்த் வில்லங்கமா பதில் சொல்லியிருந்தாரு. நான் அப்படியெல்லாம் சொல்லப்போறதில்லை. வசந்தம்.

22) என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
ராஷ்மி பன்சால் எழுதிய ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ என்கிற புத்தகம். சுய தொழில் தொடங்கி அதில் சாதித்தவர்களைப் பற்றியது.

23) உங்கள் டெஸ்க்டாப்பில் இருக்கும் படத்தை எத்தனை நாளைக்கு ஒருமுறை மாற்றுவீர்கள்?
மாற்றுவதே கிடையாது. காரணம், என் குழந்தைகள் படம் அது. குன்னூர் சிம்ஸ் பூங்காவில் அவர்களை நான் எடுத்த படங்களில் மிக அருமையாக வந்திருக்கும் தி பெஸ்ட் படம் அது!

24) பிடித்த சத்தம்? பிடிக்காத சத்தம்?
பிடித்தது - பிறந்த குழந்தையின் அழுகை; வளர்ந்த குழந்தையின் சிரிப்பு.
பிடிக்காதது - மனிதன் வெளியிடும் கொட்டாவி, ஏப்பம் மற்றும் அபான வாயுச் சத்தம்.

25) வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
இந்தப் பக்கம் கன்னியாகுமரி; அந்தப் பக்கம் ஹைதராபாத்!

26) உங்களின் தனித்திறமை?
எந்தத் தனித்திறமையும் இல்லாதபோதும், நம்பர் ஒன் தமிழ்ப் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் பதவியில் உட்கார்ந்திருப்பதே ஒரு தனித்திறமைதானே?

27) உங்களால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம்?
ஒரு கண்ணில் வெண்ணெய்; ஒரு கண்ணில் சுண்ணாம்பு!

28) உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
திடுக்கென்று வந்துவிடும் கோபம்!

29) உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
போனவற்றில் பிடித்தது மூணாறு. போக விரும்புகிற லிஸ்ட்டில் அதிகம் பிடித்தது வெனிஸ்!

30) எப்படி இருக்கணும்னு ஆசை?
இருக்கணும். எப்படியாவது!

31) கணவர்/மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
கணவர்/மனைவிக்குத் தெரியாமல் செய்ய விரும்பும் காரியம்னு இந்தக் கேள்வி இருந்திருக்கணும்னு நினைக்கிறேன். ரொம்ப யோசித்துப் பார்த்தும் அப்படி எதுவும் தோன்றவில்லை.

32) வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க.
முழுமையாக வாழ்!

Thursday, June 04, 2009

அன்னையிடம் ஒரு விசித்திர வேண்டுதல்!

தொடர்ச்சி...
சாவியில் நடந்த அந்த விபரீதம்! - II

அடுத்த வார சாவி இதழ் வெளி வராது என்கிற நிலைமை. பொறுப்பாசிரியராகிய நான் பொறுப்பற்ற ஆசிரியராக நடந்துகொண்டதால் வந்த வினை! எப்படியும் என் முகத்தில் காரி உமிழ்ந்து, டிஸ்மிஸ் செய்யப்போகிறார் சாவி! வேறென்ன, நான் செய்த காரியத்துக்குக் கொஞ்சவா செய்வார்?

அதனால் ஒரு முடிவுக்கு வந்தேன். நேரே வீட்டுக்குப் போனேன். மனைவியிடம் விஷயத்தைச் சொன்னேன். பின்பு, ஒரு வெள்ளைத் தாளை எடுத்து மளமளவென்று எழுத ஆரம்பித்து விட்டேன்.

‘மதிப்பு மிக்க ஐயா! உங்கள் முன் நிற்கக் கூடத் தகுதியில்லாதபடிக்கு நான் ஒரு பெரிய விபரீதமான காரியத்தைச் செய்துவிட்டேன். அதை எப்படி எழுதுவது என்று கூடத் தெரியவில்லை. கை நடுங்குகிறது. சாவி இதழ் முடித்த ஃபாரம் வைத்திருந்த கவரை வழியில் எங்கோ தொலைத்துவிட்டேன். இதற்காக என்னை மன்னிக்கும்படி நான் உங்களிடம் கேட்பதற்கும் யோக்கியதை அற்றவன். எனவே, நானாகவே வேலையிலிருந்து விலகிக் கொள்கிறேன். தங்களுக்கு இந்த விஷயத்தைத் தெரிவிப்பது கடமை என்பதால், இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளேன். இப்படிக்கு, பொறுப்பற்ற ஆசிரியன், ரவிபிரகாஷ்.’

இதை ஒரு என்வலப் கவரில் போட்டு ஒட்டி, மாம்பலத்திலேயே அடுத்த தெருவில் குடியிருந்த என் தங்கை கணவரிடம் ஓடினேன். காலை மணி 7. விஷயத்தைச் சொன்னதும், ‘ஐயையோ! என்னப்பா... ரவி!’ என்று அலறியே விட்டார். என்னைவிட அவருக்குக் கை கால்கள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. வெறும் வார்த்தைக்காகச் சொல்லவில்லை; அவரின் கை கால்கள் உதறுவதைக் கண்கூடாகப் பார்க்கவே முடிந்தது.

ஜே.பாலசுப்பிரமணியன் என்கிற அவரும் அன்று சாவி வார இதழில், சர்க்குலேஷன் பிரிவில் வேலை செய்துகொண்டு இருந்தார். இப்போது கல்கியில் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்.

அவரிடம் என் ராஜினாமா கடிதத்தைக் கொடுத்து, “இதை உடனே கொண்டு போய் ஆசிரியர் சாவியிடம் கொடுத்து விடுங்கள்!” என்றேன்.

பின்னர் வீடு திரும்பி, மேஜையில் மகாஸ்ரீ அன்னை படத்தின் முன்பு, செய்வதறியாமல், வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தேன்.

‘வேலை போனது பெரிய துக்கமில்லை. வேறு ஏதாவது தேடிக் கொள்ளலாம். ஆனால், இத்தனை அலட்சியமாக ஒரு தவறை, திருத்தவே முடியாத ஒரு தவறைச் செய்துவிட்டேனே’ என்கிற என் மீதே எழுந்த கோபம்தான் என்னைக் கல் மாதிரி உறையச் செய்திருந்தது.

அப்போது அன்னையிடம் நான் ஓர் விசித்திரமான, சிக்கலான வேண்டுதலை முன் வைத்தேன். ‘அன்னையே! ராஜினாமா கடிதம் கொடுத்து விட்டேன். ஆசிரியர் சாவி என்னை மன்னிப்பதாகவே இருந்தாலும், அவரிடம் என்னால் இனி எந்த முகத்தோடு தொடர்ந்து வேலை செய்ய முடியும்? அதற்கு எனக்கு என்ன தகுதி இருக்கிறது? எனவே, அவரே மன்னித்து என்னைச் சேர்த்துக் கொள்வதாக இருந்தாலும், நான் இனி அவரிடத்தில் வேலைக்குச் சேருவதாக இல்லை. ஆனால், பத்திரிகை உலக ஜாம்பவானான அவரிடம் தொடர்ந்து வேலை செய்ய இயலாமல் போயிற்றே என்கிற வேதனை என்னை அழுத்துகிறது. என்னைத் தொடர்ந்து அவரிடத்தில் பணிபுரிய வைப்பது உங்கள் பொறுப்பு!’

ராஜினாமா கடிதத்தைக் கொண்டு சென்ற ஜே.பாலசுப்பிரமணியன் திரும்பி வரும் வரையில் நான் அன்னை படத்தின் முன்பு பிரமை பிடித்தது போல் உட்கார்ந்திருந்தேன். ஒன்பதரை மணி சுமாருக்கு அவர் திரும்பி வந்தார். நடந்ததை அவர் விவரித்தார்...

காலை ஏழரை மணிக்கு அவர் சாவி அலுவலகம் போயிருக்கிறார். வழக்கம்போல் வாட்ச்மேன் சித்திரை வெளியே இருந்திருக்கிறார். அவரிடம் விஷயத்தைச் சொல்லியிருக்கிறார் ஜே.பி. ‘ஐயையோ! சாவி ஐயாவுக்குத் தெரிஞ்சா கொன்னுடுவாருங்களே!’ என்று அவரும் பதறியிருக்கிறார்.

பின்னர், மெதுவாக பயந்துகொண்டே மாடிக்குச் சென்றிருக்கிறார் ஜே.பி. திருமதி சாவி வந்து, “என்னப்பா ஜே.பி., ஞாயிற்றுக்கிழமையும் அதுவுமா எங்கே இவ்வளவு தூரம்?” என்று யதார்த்தமாகக் கேட்டிருக்கிறார். “அது... வந்தும்மா... ரவி...” - ஜே.பி-க்குத் தொண்டையை அடைத்தது. வார்த்தை வெளிவரவில்லை.

“ரவி ராத்திரி ஒரு மணிக்கு வேலை முடிச்சுட்டு வீட்டுக்குப் போயிட்டானே!”

“அதில்லைம்மா... வந்து...”

“என்னப்பா, சொல்லு!”

“சாவி ஃபாரம் முடிச்சாங்க இல்லையா ராத்திரி, அதை ரவிதான் நடராஜா கிராஃபிக்ஸுக்கு எடுத்துட்டுப் போயிருக்கான். போற வழியில... அந்த கவர் எங்கேயோ விழுந்துடுச்சாம்..!”

ஜே.பி. முடிக்கு முன்பு அலறிவிட்டார் திருமதி சாவி. “என்னப்பா சொல்றே! இதை அவர் கிட்டே எப்படிச் சொல்றது? ஐயோ, எனக்குப் பயமா இருக்கே? நல்லாத் தேடிப் பார்க்கச் சொல்லு!” மாமிக்கு பீ.பி-யே வந்துவிடும் போல இருந்தது.

“இல்லை மாமி, விடிய விடிய தேடியும் கிடைக்காமதான் ராஜினாமா லெட்டர் எழுதிக் கொடுத்தனுப்பியிருக்கான் என் கிட்டே...”

“இரு, அவரை எழுப்பிக் கூட்டிட்டு வரேன். நீயே அவர் கிட்ட சொல்லிடு. எனக்குப் பயமா இருக்கு. நான் சொல்ல மாட்டேன்” என்று படபடத்த திருமதி சாவி, ஆசிரியரை எழுப்ப உள்ளே சென்றார்.

கை கால்கள் நடுநடுங்க, நெஞ்சு தடதடக்கக் காத்திருந்தார் ஜே.பி.

“இந்தாங்கோ! பாலா வந்திருக்கான். உங்க கிட்டே ஏதோ சொல்லணுமாம்!” என்று உள்ளே மாமி, ஆசிரியரை எழுப்புவது காதில் விழுந்தது.

தொடர்ச்சி அடுத்த பதிவில்...

Wednesday, June 03, 2009

கை கொடுத்தார் கலைஞர்!

கைதானார் சாவி! - II

எங்கள் மேனேஜரும் அலுவலக நண்பர்களும் ஆசிரியர் சாவியின் காரில் எங்களைப் பின்தொடர்ந்து அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்துவிட்டார்கள். சாவியின் மாப்பிள்ளைகள் இருவர் தங்கள் காரில் வந்து சேர்ந்தனர். எங்களைப் பார்க்க அவர்களை அனுமதிக்கவில்லை போலீஸார்.

இதற்குள் சாவி இதழை அச்சிட்டுத் தரும் பிரஸ் மணியும் கைதாகி, நாங்கள் இருந்த இருட்டறைக்குக் கொண்டு வரப்பட்டார்.

6 மணிக்கு அந்த அறையின் உள்ளே அடைக்கப்பட்ட நாங்கள், பத்து மணி வரை அப்படியே கிடந்தோம். நீளமான மேஜை ஒன்று கிடந்தது. அதன் எதிரே இருந்த ஒரே ஒரு நாற்காலியில் சாவி சார் அமர்ந்து, அமைதியாகிவிட்டார். அவருக்கு எதிரே தன் கால்களை நீட்டியபடி அந்த மேஜை மீது படுத்திருந்தார் ஒரு கான்ஸ்டபிள். மரியாதை என்ற வார்த்தைக்கு அவருக்கு அர்த்தமாவது தெரியுமா என்று சந்தேகமாக இருந்தது. எங்கள் காவலுக்கு இருக்கிறாராம்.

மணி பத்துக்கு கலைஞர் தன் சகாக்கள் சூழ கீழே வந்துவிட்டார் என்பது தெரிந்தது. சடசடவென்று போலீஸ் அதிகாரிகள் சிலர் ஓடிவந்தார்கள். அவசர அவசரமாக நாங்கள் இருந்த இருட்டறையில் டியூப் லைட் பொருத்தப்பட்டது. வெளிச்சம் பாய்ந்தது. மின் விசிறி சுழன்றது. தோற்றமே முற்றிலுமாக மாறிவிட்டது.

எங்களை மேலே வந்து பார்க்கக் கலைஞரையும் முதலில் அனுமதிக்கவில்லை அண்ணா நகர் போலீஸார். பின்னர், கலைஞர் பிடிவாதமாகப் படியில் ஏறத் தொடங்கியதுதான் வழிவிட்டார்கள். அதுவரை எங்களுக்குக் குடிக்கத் தண்ணீர் கூடத் தரப்படவில்லை. எங்கள் அலுவலகத் தோழர்கள் வாங்கி வந்த பிஸ்லேரி தண்ணீர் பாட்டிலைக் கூட எங்களுக்குக் கொடுக்க அனுமதி மறுத்தார்கள்.

கலைஞரோடு (அப்போது எதிர்க்கட்சித் தலைவர்) துரைமுருகன், ஆயிரம் விளக்கு உசேன் என கட்சிக்காரர்கள் ஏழெட்டுப் பேர் வந்தார்கள். வந்ததுமே, “நீங்க சாப்பிட்டீங்களா?” என்றுதான் கேட்டார் கலைஞர். “இல்லை. தண்ணீர் கூடக் குடிக்கவில்லை” என்றதும், அவர் கண்ணசைக்க ஆயிரம் விளக்கு உசேன் உடனே ஆளனுப்பி எங்கள் மூவருக்கும் மசால்தோசை, வடை, காபி வாங்கி வரச் செய்தார்.

திருப்தியாகச் சாப்பிட்டோம். கலைஞர் ஆசிரியர் சாவியுடன் அவரை மூட் மாற்றும் விதமாக நகைச்சுவையாகப் பேசிக்கொண்டு இருந்தார். ஒரு அரை மணி நேரம் அங்கே இருந்திருப்பார். பின்னர் எங்களிடம் விடைபெற்றுப் புறப்படும்போது என்னிடம், “என்ன தம்பி, பயந்துட்டீங்களா? பொதுவாழ்க்கைன்னு வந்தாச்சுன்னா இதெல்லாம் சகஜம். ஒண்ணும் ஆகாது. தைரியமா இருங்க” என்று என் தோளைத் தட்டிவிட்டுக் கிளம்பினார்.

அதன்பின் 12 மணி வாக்கில், திடுதிடுவென்று சில போலீஸார் வந்தார்கள். “ம்... கிளம்புங்க, கிளம்புங்க” என்று விரட்டினார்கள். கீழே இறங்கி வந்தோம். மூவரையும் மீண்டும் ஜீப்பில் ஏற்றினார்கள். அதிலேயே 10 நிமிடம் உட்கார்ந்திருந்தோம். ஜீப் கிளம்பினால், அதைப் பின்தொடர எங்கள் ஆட்கள் கார்களில் தயாராக இருந்தார்கள். “யாரும் பின்தொடரக்கூடாது. புரியுதா?” என்று போலீஸ் உயரதிகாரி கடுமையாக உத்தரவிட்டார்.

அடுத்த விநாடி, எடுத்த எடுப்பில் சரேலென்று வேகமெடுத்துச் சீறிக் கிளம்பியது ஜீப். தலைதெறிக்கும் வேகம். முன்னே இரண்டு போலீஸ்காரர்கள் பைக்கில் பறக்க, அதைத் தொடர்ந்து உயரதிகாரி இன்னொரு போலீஸ் காரில் மண்டையில் சிவப்புச் சுழல்விளக்கோடு விரைய, பின்னால் எங்கள் ஜீப் பின்தொடர்ந்தது.

ஆங்காங்கே டிராஃபிக் நிறுத்தப்பட, எந்தத் தடங்கலும் இன்றி, விமானம் மாதிரி சீறிச் சென்றது போலீஸ் அணிவகுப்பு. அண்ணா ஆர்ச்சைக் கடந்து இடப்புறம் திரும்பியது. எங்கள் கார்களும் கஷ்டப்பட்டு எங்களைப் பின்தொடர்ந்தன. சர்ரென்று சென்ற ஜீப்புகள் அருண் ஹோட்டல் அருகில் வந்ததும் சடாரென்று யூ டர்ன் அடித்து எதிர் பாதையில் வந்த வழியே திரும்பி, நேரே எம்.எம்.டி.ஏ. காலனியை நோக்கி விரைந்தன.

எங்கள் கார்கள் நேரே போய் சுதாரித்து, பின்பு திரும்பி எங்களைப் பின்தொடர்வதற்குள் நாங்கள் அவர்கள் கண்களிலிருந்து மறைந்து விட்டோம்.

நேரே மாஜிஸ்ட்ரேட் வீட்டின் முன் போய் இறங்கினோம். காலிங் பெல் அடித்து அவரைக் கீழே கூப்பிட்டார் காவல்துறை உயரதிகாரி. தூக்கம் கெட்ட அலுப்போடு அவர் வந்து சேர்ந்தார். வழக்கை அவரிடம் சுருக்கமாகச் சொன்னார் போலீஸ் அதிகாரி.

“யாருப்பா... நீதான் சாவியா?” - மாஜிஸ்ட்ரேட் கேள்வி. இதற்குள் தட்டுத் தடுமாறி வந்து சேர்ந்திருந்தார்கள் சாவியின் மாப்பிள்ளைகள் மற்றும் எங்கள் மேனேஜர் உள்ளிட்ட மற்றவர்கள். மேனேஜர் முன்னால் போய், “ஆமாம் சார்” என்றார். “நீ யாரு? நீ எதுக்கு முன்னே வர? நீயா சாவி?” என்றார் போலீஸ் அதிகாரி காட்டமாக.

“சாவி என்பது நான்தான்” என்றார் சாவி, மாஜிஸ்ட்ரேட்டின் முன் நின்று. கிட்டத்தட்ட அரைமணி நேரமாக அங்கே இருட்டில் நின்றுகொண்டிருக்கிறார் அவர். “அட்டைப்படத்துல ஆபாசப்படம் போட்டதா உன் மேல வழக்கு. ஜாமீன் எடுக்க யார் வந்திருக்கா?” என்றார் மாஜிஸ்ட்ரேட்.

எனக்கு ஆலடி அருணாவும், பிரஸ் மணிக்கு என்.வி.என்.சோமுவும், சாவிக்கு அவரது இரு மாப்பிள்ளைகளும் (ஒருவர் மிலிட்டரி மேன், மற்றவர் ஆடிட்டர்) ஜாமீன் தந்திருப்பதாக போலீஸ் அதிகாரி மாஜிஸ்ட்ரேட்டிடம் சொல்ல, “சரி, விசாரணைன்னு கூப்பிட்டா வரணும். இப்ப நீங்க போகலாம்!” என்று கோப்புகளில் கையெழுத்திட்டுவிட்டு, மாடியேறிப் படுக்கச் சென்றுவிட்டார் மாஜிஸ்ட்ரேட்.

அடுத்த கணம், எங்களை அம்போவென்று இருளில் நிற்க வைத்துவிட்டு போலீஸார் கிளம்பிப் போய்விட்டார்கள்.

நாங்கள் எங்களின் கார்களில் சாவி இல்லம் வந்தடைந்தோம். நான் தொடர்ந்து சாவி இதழ் வேலைகளில் (27.5.1992 இதழ்) ஈடுபட்டேன். சாவி அப்போதே ‘அழுவதா, சிரிப்பதா?’ என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை விறுவிறுவென்று எழுதிக் கொடுக்க, சாவி இதழ் அட்டையிலும் அதையே வெளியிட்டு ரெடி செய்து அனுப்பினோம்.

அந்தக் கட்டுரையை பிறகு ஒரு நாள் பதிகிறேன்.

மகளிர் அமைப்புகள் தங்கள் வழக்கைப் பின்னர் வாபஸ் வாங்கிவிட்டன.

கைதானார் சாவி!

விகடன் அட்டையில் வெளியான ஒரு ஜோக், விகடன் ஆசிரியரை சிறையில் தள்ளியதென்றால், சாவி அட்டையில் வெளியான ஒரு ஜோக் சாவியைக் கைது செய்து ஏழு மணி நேரத்துக்கு மேல் அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனில் வைத்திருக்கச் செய்தது.

‘அத்தைதான் உங்களுக்கு ஆடையில்லாம பால் தரச் சொன்னாங்க!’ என்பது வசனம். ஆடை என்று பாலாடையை அத்தை குறிப்பிட, அதை புது மணப்பெண் தவறாகப் புரிந்துகொண்டு ஆடையில்லாமல் கணவன் எதிரே பால் சொம்போடு நிற்பதாகப் படம்.

ஆசிரியர் சாவி அமெரிக்கா சென்றிருந்த நேரத்தில், நான் இந்த ஜோக்கை அட்டையில் வெளியிட்டுவிட்டேன். அது எனக்கு ஆபாசமாகவோ, பெண்மையைப் பழிப்பதாகவோ எல்லாம் தோன்றவில்லை. ஒரு கணவனிடம் வெள்ளந்தியான பெண் தவறாகப் புரிந்துகொண்டு செயல்பட்ட முறை எனக்கு வெறும் நகைச்சுவையாகத்தான் தோன்றியது. அதில் எந்த வக்கிரமும் இருப்பதாகத் தெரியவில்லை. படத்திலும் பெரிய ஆபாசம் இல்லை.

இருந்தாலும், மாதர் சங்கங்கள் கொதித்தெழுந்துவிட்டன. சாவிக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தன. இரண்டு மாத காலமாக அமெரிக்காவிலிருந்த சாவி அந்த சனிக்கிழமை மதியம்தான் சென்னை திரும்பியிருந்தார். விமான நிலையத்திலிருந்து வரும் வழியிலேயே மேனேஜர் துரை சாவியிடம் பக்குவமாக விஷயத்தைச் சொல்லிவிட்டிருந்தார்.

அன்றைய தினம் (16.5.1992) மாலை 4 மணி வாக்கில் மாதர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் படை திரண்டு வந்து, சாவி இல்லத்தின் எதிரே குறிப்பிட்ட ஜோக் வெளியான சாவி இதழ்களைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்தனர். “சாவியே, வெளியே வா! மன்னிப்புக் கேள்!” என்று கூச்சல் போட்டனர். சாவி வெளியே வந்தார். கைகூப்பி அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டார். “அதை வெறும் ஜோக்காதான் நான் நினைக்கிறேன். அப்படியும், உங்க மனசு அதனால புண்பட்டிருந்தா, அதுக்காக நான் உங்க கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கறேன்” என்றார். அனைவரும் போய்விட்டார்கள்.

மாலை 5 மணிக்கு, ஒரு ஜீப் வந்தது. போலீஸ் உயர் அதிகாரியும், இரண்டு கான்ஸ்டபிள்களும் இறங்கினார்கள். “வாங்க, போகலாம்! உங்க மேல ஒரு கம்ப்ளெயிண்ட் இருக்குது. விசாரிக்கணும்” என்றார்கள். “அப்புறம்... இங்க ரவிபிரகாஷ் யாருய்யா?” என்றார்கள். நான் முன்னால் போனேன்.

“போய் நீயும் வண்டியில ஏறு!” என்றார்கள். சாவியின் கார் பெட்ரோல் போடுவதற்காகச் சென்றிருந்தது.

“ஏறுங்கய்யா! ஏன் நிக்கறீங்க?” என்றார் போலீஸ் அதிகாரி காட்டமாக.

“இருங்க, என் கார் வந்துடட்டும். அதுல வர்றேன்” என்றார் சாவி.

“உங்க கார் எதுக்கு? அதான், இவ்ளோ பெரிய ரதம் கொண்டு வந்திருக்கிறோமே! கிளம்புங்க” என்றார் அவர் எகத்தாளமாக. கொஞ்சம் தாமதித்தாலும், சாவி சாரை நெட்டித் தள்ளிக்கொண்டு போய் ஜீப்பில் ஏற்றி விடுவார் போலிருந்தது.

சாவி மெதுவாக நடந்து போய் ஜீப்பில் ஏறிக்கொண்டார். கூடவே நானும்.

உட்கார்ந்து பின்புறக் கதவைப் படக்கென்று அடித்துச் சார்த்தியதும், விருட்டென்று புறப்பட்டது ஜீப். அதற்குள் பெட்ரோல் போடச் சென்ற சாவியின் கார் எதிர்ப்பட்டது. ஜீப் நிற்கவெல்லாம் இல்லை. சீறிக்கொண்டு பாய்ந்தது. யாரும் பின்தொடரவே முடியாத ஒரு வேகத்தில் சென்ற ஜீப், நேரே அண்ணா நகர் போலீஸ் ஸ்டேஷனை அடைந்தது.

எங்களை மாடி அறை ஒன்றுக்கு அழைத்துப் போனார்கள் கான்ஸ்டபிள்கள். வௌவால் புழுக்கை நெடியோடு, மாலை 6 மணிக்கே இருளாக இருந்தது அந்த அறை. அறையில் மின் விளக்குகளோ, மின் விசிறியோ இல்லை.

அதன்பின்..?

அடுத்த பதிவில்!

Tuesday, June 02, 2009

சாவியில் நடந்த அந்த விபரீதம்!

1993... சாவியில் எனக்கு அந்த விபரீதம் நடந்தது அந்த வருடத்தில்தான்!

வழக்கம்போல் சாவி அலுவலகத்தில் நான், லே-அவுட் ஆர்ட்டிஸ்ட் மோகன் (இவர் ஓவியர் ஜெயராஜின் அக்கா மகன்), கார்ட்டூனிஸ்ட் என எல்லோரும் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக்கொண்டு இருந்தோம். அன்றைய வார இதழை முடிக்கிற தினம் அன்று. 80 பக்கம் மட்டுமே என்பதால், தனித்தனி ஃபாரங்களாக இல்லாமல் 80 பக்கத்தையும் ஒட்டுமொத்தமாகத்தான் கொண்டு போய் நடராஜா கிராஃபிக்ஸில் நெகடிவ் எடுக்கக் கொடுப்பது வழக்கம். அதன்பின், அதை வைத்து பிளேட் போட்டு, அச்சாகி மறுநாளே புத்தகம் கைக்குக் கிடைக்கும். அதாவது ஒவ்வொரு சனிக்கிழமையும் புத்தகத்தை முடித்துக் கொடுத்தால், திங்கள் கிழமை புத்தகம் ரெடியாகிவிடும்!

அன்று வேலை முடிய இரவு ஒரு மணி ஆகிவிட்டது. ஆசிரியர் சாவி வந்து அனைத்துப் பக்கங்களையும் பார்த்து ஓ.கே. செய்துவிட்டார். வழக்கமாக அதை எடுத்துப் போகும் அட்டெண்டர் ஃபிரான்சிஸ் என்பவருக்கு அன்று காய்ச்சல். எனவே, சீக்கிரமே அவரை அனுப்பிவிட்டிருந்தேன்.

நடராஜா கிராஃபிக்ஸ் எல்டாம்ஸ் ரோடு சிக்னல் அருகில் இருந்தது. நான் சைக்கிளில்தான் மாம்பலத்தில் உள்ள என் வீட்டுக்குப் போகவேண்டும். சரி, இந்த ஃபாரத்தைக் கொண்டு போய் நாமே நடராஜா கிராஃபிக்ஸில் (அது 24 மணி நேரமும் திறந்திருக்கும்.) கொடுத்துவிட்டு, அப்புறம் வீட்டுக்குப் போவோம் என்று முடிவு செய்தேன். வேறு வழி?

ஒரு தடித்த பிரவுன் கவரில், லே-அவுட் செய்யப்பட்ட 80 பக்கங்களையும், அதற்குரிய புகைப்படங்கள், லைன் டிராயிங்குகளோடு சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துப் போட்டுக்கொண்டு, அதை சைக்கிளின் கேரியரில் க்ளிப்பில் வைத்துக்கொண்டேன். க்ரிப்பாக இருக்கிறதா என்று இழுத்துப் பார்த்துச் சோதித்துக்கொண்டேன். பின்னர் வாட்ச்மேன் சித்திரையிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

மணி நடு நிசி இரண்டு. சைக்கிளை ஆழ்வார்ப்பேட்டை நோக்கிச் செலுத்தினேன். தெருக்கள் சிலோவென்றிருந்தன. அண்ணா நகரிலிருந்து ஆழ்வார்ப்பேட்டை வர, சைக்கிளில் அதிகபட்சம் அரை மணி நேரத்துக்கு மேல் ஆகாது.

நடராஜா கிராஃபிக்ஸ் வாசலில் சைக்கிளை நிறுத்தி இறங்கி, கேரியரைப் பார்த்ததும் நெஞ்சு தடக்கென்று தூக்கிப் போட்டது. பிரவுன் கவரைக் காணோம். குபீரென்று வியர்த்துவிட்டது எனக்கு.

வழியில் எங்கோ நழுவி, விழுந்துவிட்டிருக்கிறது.

பதறியபடி, திரும்ப வந்த வழியே இருட்டில், மங்கலான வெளிச்சத்தில், பிரவுன் கவர் எங்காவது விழுந்து கிடக்கிறதா என உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டே மெதுவாக சைக்கிளைச் செலுத்தினேன். ஊஹூம்! எங்குமே காணோம்.

ஆழ்வார்ப்பேட்டை எல்டாம்ஸ் ரோடு சிக்னல், பாண்டி பஜார், பனகல் பார்க், வலப்புறம் உஸ்மான் ரோடில் திரும்பி மகாலிங்கபுரம், அதைத் தாண்டி நேரே லயோலா கல்லூரி, அங்கே சப்-வேயில் இறங்கி நேரே அருண் ஹோட்டல், இடப்புறம் திரும்பிக் கொஞ்ச தூரம் சென்றால் அண்ணா வளைவு... என நான் வந்த வழியெல்லாம் கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றிக்கொண்டு, அந்த பிரவுன் கவரைத் தேடியபடியே சாவி அலுவலகம் வரை வந்துவிட்டேன்.

வாசலில் சித்திரை உட்கார்ந்திருந்தார். ‘என்ன சார்...’ என்றபடி எழுந்து வந்தார். ‘ஒண்ணுமில்ல சித்திரை...’ என்று மீண்டும் அதே வழியில் சைக்கிளைச் செலுத்தி, இன்னொரு நடை நடராஜா கிராஃபிக்ஸ் வரை போனேன். உள்ளமெல்லாம் வெதுக் வெதுக்கென்று அடித்துக் கொண்டது.

பின்னே, சாவி்யின் ‘வடம் பிடிக்க வாங்க’ தொடர்கதை, அதற்கான ஓவியர் கோபுலுவின் லைன் டிராயிங் படம், தவிர கதைப்படி, கலைஞர் கருணாநிதி சொற்பொழிவாற்றுவதாக அதில் ஒரு ஸீன், அதற்கு கருணாநிதியே கைப்பட எழுதிக் கொடுத்த உரையை அப்படியே ஸ்கேன் செய்து அவரது கையெழுத்தில் வெளியிடும் உத்தேசத்தோடு அந்த ஒரிஜினல் கட்டுரை, ஓவியர் கோபுலுவின் பயணக் கட்டுரைக்காக அவர் எடுத்து வந்த போட்டோக்கள், அதற்கு அவர் வரைந்து தந்திருந்த ஸ்கெட்ச்கள்... இன்னும்... இன்னும்...

இத்தனையும் போய்விட்டால், அதை எப்படி ஈடு செய்வது? சாவி சாருக்கு நான் என்ன பதில் சொல்வது?

இரவு இரண்டு மணியிலிருந்து விடியற்காலை ஐந்து மணி வரை சாவி அலுவலகத்துக்கும் நடராஜா கிராஃபிக்ஸுமாக இரண்டு மூன்று தடவை சைக்கிளில் ஷண்ட்டிங் அடித்ததுதான் மிச்சம்! அந்த பிரவுன் கவர் எங்கே விழுந்ததென்றே தெரியவில்லை. சோர்ந்து போனேன்.

சாவி சாரை எதிர்கொள்ள பயமான பயம்! எந்த முகத்தை வைத்துக்கொண்டு அவர் முன் நிற்பது?

ஒரு முடிவுக்கு வந்தேன்.

அது என்ன முடிவு? அதைப் பின்னர் பார்ப்போம்!

அதுவரை என் நெஞ்சைக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன்.