உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, August 10, 2016

சாவி-100 (X)

சாவி-100 பதிவுகளின் தொகுப்பு இங்கே நிறைவு பெறுகிறது.  ஆனால், என் மனம் நிறைவு பெறவில்லை. முன்பே சொன்னது போல, என் முன்னோர் செய்த புண்ணியம்தான்  சாவி சாரிடம் என்னைக் கொண்டு வந்து சேர்த்தது என நம்புகிறேன். என் எதிர்காலத்தைப் பற்றி மிகக் கவலை கொண்டிருந்த என் தந்தையார் நான் பெரியவர் சாவியின் சிஷ்யனாகச் சேர்ந்துவிட்டேன் என்பதை அறிந்த பின் கவலையை விட்டு, தைரியம் வரப் பெற்றார். என் வாழ்க்கையின் முக்கியத் திருப்புமுனை என நான் கருதுவது ‘சாவி’ பத்திரிகையில் பெரியவர் சாவி அவர்களின் நேரடி சீடனாகச் சேர்ந்ததைத்தான். என் இரண்டாவது திருப்புமுனை, ஆனந்த விகடனில் சேர்ந்து, பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் அபிமானத்துக்கு ஆளானது. 

எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களைப் பற்றி, ‘என் புகுந்த வீடு’ தொடர் பதிவுகள் எழுதி வருகிறேன். தொடர்ந்து எழுதுவேன். அதே போல் ‘என் பிறந்த வீடு’ என்னும் தலைப்பில், நான் சாவி பத்திரிகையில் சேர்ந்ததில் தொடங்கி, அவருடனான அனுபவங்களை வாரந்தோறும் எழுதவிருக்கிறேன்.

இரண்டு தொடர்களையும் இனி இடையில் நிறுத்தாமல் தொடர்ந்து எழுதிட, போதிய நேரமும் உடலில் தெம்பும் உள்ளத்தில் உற்சாகமும் தந்து ஆசீர்வதித்து அருளுமாறு, மகாஸ்ரீ அரவிந்த அன்னையை மனம் கனிந்து வேண்டுகிறேன்.

இனி, சாவி-100 பதிவுகளின் நிறைவுத் தொகுப்பு:

91) அந்தக் காலத்துப் பத்திரிகைகளில் ‘சந்தனு சித்ராலயா’ விளம்பரங்கள் வந்தது சீனியர்கள் பலருக்கும் தெரிந்திருக்கலாம். மதுரையில் வசித்த ஓவியர் சந்தனுவின் ஓவியத் திறமையை அறிந்து, அவரை சென்னைக்கு வரவழைத்து அதிக சம்பளத்தில் தன் ‘வெள்ளிமணி’ பத்திரிகைக்கு கார்ட்டூனிஸ்ட்டாக நியமித்தார் சாவி.

92) போட்டோ போலவே வாஷ் டிராயிங் செய்வதில் வல்லவர் ஓவியர் வர்ணம். அவரை அழைத்து வந்து, பிரபல நாவலாசிரியர்களின் கதைகளுக்கு வரையச் சொல்லி, புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்ததும் சாவிதான்.

93) ‘கோல்டன் பீச்’ உருவாக்கத்தில் சாவிக்கும் முக்கியப் பங்கு உண்டு. வி.ஜி.பன்னீர்தாஸுக்குப் பல அரிய யோசனைகளைச் சொல்லி, தங்கக் கடற்கரையை வடிவமைத்தவர் சாவி. அவர் தமது கையால் அங்கு நட்ட தென்னைகள் இன்னமும் அங்கு இருக்கக்கூடும்.

94) ‘வடக்கு வளர்கிறது; தெற்கு தேய்கிறது’ என அந்தக் காலத்தில் வட இந்தியாவைப் புகழ்ந்தும், தென்னிந்தியாவை மட்டம் தட்டும் விதமாகவும் அரசியல்வாதிகளும், பத்திரிகைகளும்  சொல்வது வழக்கம். இதைச் சகித்துக்கொள்ள முடியாத சாவி, இந்த எண்ணத்தை மாற்ற விரும்பினார்.  ஜீவ நதிகளோ, கனிம வளங்களோ அதிகம் இல்லாத நிலையிலும், இங்கே தமிழ்நாட்டில்தான் அதிகமான தொழில்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன என்பதை எடுத்துக் காட்டும் விதமாக, முக்கியமான தொழிற்சாலைகளை நேரில் சென்று பார்த்து, அவற்றின் அதிபர்களை பேட்டி கண்டு, பல கட்டுரைகள் எழுதினார் சாவி. அந்தத் தொடர் கட்டுரைகளுக்கு அவர் கொடுத்த தலைப்பு, ‘தெற்கு வளர்கிறது!’.

95) சாவி சாரின் முன் பற்களுக்கு இடையில் சிறிய இடைவெளி இருக்கும். இயக்குநர் சரண், தன் வீட்டில் சாவி சாரின் படத்தைத் தனக்கே உரிய குறும்புடன் (ஆனந்த விகடனில் கார்ட்டூனிஸ்ட்டாகப் பணியாற்றியவரல்லவா?!) அவரின் முன்பற்களின் இடைவெளியை ‘சாவி’ (Key) உருவமாகக் கற்பனை செய்து வரைந்து வைத்திருந்தார். இதைப் பற்றி சாவி சாரின் இரண்டாவது மகள் ஜெயஸ்ரீ தன் அப்பாவிடம் சொல்ல, சாவி சார் என்னிடம் ‘அந்தப் படத்தைக் கேட்டு வாங்கிக் கொண்டு வாயேன்’ என்றார். நான் போய் சரணிடம் கேட்டதும், அவர் பதறிவிட்டார். ‘ஐயையோ! சாவி சார் தப்பாக நினைத்துக் கொள்ளப் போகிறார்’ என்று தயங்கியபடியே அதை என்னிடம் கொடுத்து அனுப்பினார். ஆனால், சாவி சார்தான் ரசனையின் நாயகராயிற்றே! சரணின் கற்பனையை வெகுவாக ரசித்ததோடு, தனது ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்துக்கு அட்டைப்படமாக அதை வைத்து லேஅவுட் செய்யச் சொல்லிவிட்டார்.

96) பண்பட்ட எழுத்தாளர் லக்ஷ்மியின் மீது சாவிக்கு மிகுந்த மதிப்பு உண்டு. ஆனந்த விகடன் காலத்துப் பழக்கம். ‘மோனா’ மாத நாவல் தொடங்கியபோது, முதல் நாவலாக லக்ஷ்மி எழுதிய கதையைத்தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்தார் சாவி. ஆனால், அப்போதைய சூழலில் உடனடியாக நாவல் எழுதித் தரமுடியாத நிலை லக்ஷ்மிக்கு. இருந்தாலும், மோனா வெளியீட்டை நிறுத்தி வைத்து, சில மாத காலத்துக்குப் பின்பு, லக்ஷ்மியிடமிருந்து கதை கிடைத்த பின்பு, தான் எண்ணியபடியே அதைத்தான் மோனாவின் முதல் நாவலாக வெளியிட்டார் சாவி. அது, லக்ஷ்மியின் ‘உறவுகள் பிரிவதில்லை’.

97) எழுத்தாளர் சுஜாதாவின் அபார எழுத்துத் திறமை பற்றிச் சொல்லும்போது, ‘அவர் சலவைக் கணக்கு எழுதினால்கூட பத்திரிகைகள் அவற்றைப் பிரசுரம் செய்யத் தயாராக இருக்கும்’ என்று புகழ்ந்து சொல்வது இன்றைக்கும் பத்திரிகை உலகில் வழக்கமாக இருக்கிறது. இதற்கு வித்திட்டவர் சாவிதான். சுஜாதாவின் சலவைக் கணக்குக் குறிப்பைக் கேட்டு வாங்கி, ஒரு தமாஷுக்காக சாவி தமது பத்திரிகையில் வெளியிட்டதிலிருந்துதான் சுஜாதாவின் எழுத்தாற்றலைப் புகழ்வதற்கான ஒரு வழிமுறையாகவே அது ஆகிவிட்டது.

98) இன்றைக்கு, பிறக்கிற குழந்தைகள் உள்பட கையில் உள்ள ஸ்மார்ட் போனில் நெட் பிரவுஸிங் செய்கிற கணினி யுகமாகிவிட்டது. ஆனால், 15 ஆண்டுகளுக்கு முன்பு, இன்டர்நெட் பயன்பாடு மெதுமெதுவே தலைகாட்டிக்கொண்டிருந்த நேரத்தில், அதை எப்படிக் கையாள்வது என்று பலரும் திணறிக்கொண்டிருந்த கால கட்டத்தில், தமது 85-வது வயதில், தனக்கென்று வீட்டில் ஒரு கம்ப்யூட்டர் வாங்கி வைத்துக்கொண்டு, அதில் கம்போஸ் செய்யப் பழகியதோடு, இ-மெயில் மூலம் கடிதம் அனுப்பவும் கற்றுக் கொண்டுவிட்டார் சாவி என்றால், பார்த்துக் கொள்ளுங்கள்!

99) நட்புக்கு மரியாதை கொடுப்பதில் சாவிக்கு நிகர் வேறு யாருமில்லை. 2001-ம் ஆண்டு,  ‘சாவி-85’ புத்தக வெளியீட்டு விழா, சென்னை, நாரத கான சபாவில் நடந்தது. புத்தகத்தை வெளியிட்டவர் சாவியின் நெருங்கிய நண்பர் கலைஞர் மு. கருணாநிதி. புத்தகத்தைப் பற்றிப் பேச எழுந்த கலைஞரைத் தடுத்து, “நீங்கள் பேசி முடித்தால் கூட்டம் கலைந்துவிடும். அதனால், முதலில் நான் நன்றியுரை சொல்லிவிடுகிறேன்” என்ற சாவி, கலைஞருக்கும் தனக்குமான ஆழ்ந்த நட்புக்கு ‘கர்ணன் - துரியோதனன்’ நட்பை உதாரணமாகக் காட்டி, தொண்டை கரகரக்க பரவசமும் நெகிழ்ச்சியுமாகப் பேசிக்கொண்டு இருந்தபோதே, ‘மார் வலிக்கிறது’ என்றபடி மேடையிலேயே மயங்கி விழுந்தவர்தான்; அதன்பின், பதினைந்து நாட்களுக்கு மேல் ‘அப்போலோ’ மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் ‘கோமா’ ஸ்டேஜிலேயே இருந்து, கடைசி வரை கண் திறவாமலே அமரரானார்.

100) எழுத்தாளர் மணியன் ஒருமுறை சொன்னதுபோல், ‘சா’ என்றால் சாதனை, ‘வி’ என்றால் விடாமுயற்சி என வாழ்ந்துகாட்டிய பெருமகனார் பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி.    

(அடுத்த வாரத்திலிருந்து ‘என் பிறந்த வீடு’ தொடர் பதிவுகள் தொடங்கும்.)

Tuesday, August 09, 2016

சாவி-100 (IX)

பெருந்தகையாளர் சாவி குறித்து நான் அறிந்த, அவரே என்னிடம் பகிர்ந்துகொண்ட, மற்றும் அவரைப் பற்றி நான் படித்த தகவல்களைத்தான் இங்கே தினம் தினம் தொகுத்துக் கொடுத்துக்கொண்டிருக்கிறேன். சாவி சாருக்கு நூற்றாண்டு என்றதும், எனக்கு முதலில் தோன்றிய எண்ணம், அவரைப் பற்றிய 100 தகவல்களைத் தொகுக்க வேண்டும் என்பதுதான். முதல் இரண்டு நாட்கள் எழுதியதும் எனக்கு லேசாக பயம் வந்துவிட்டது - 100 முக்கியமான தகவல்களைத் தொகுக்க முடியுமா என்று. ஆனால், என் குருநாதரின் அருளாலும் ஆசியாலும் அடுத்தடுத்த பத்து தகவல்களைத் திரட்டித் தருவதில் எனக்கெதுவும் சிரமம் ஏற்படவில்லை. யோசிக்க யோசிக்க அவர் பற்றிய தகவல்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கின்றன. ‘ஒன்றில் மிகுந்த ஆர்வமும் தீவிர முயற்சியும் இருந்தால் போதும்; அதைச் செயலாக்குவதற்கு வேண்டிய எல்லாம் தன்னாலே வந்து சேரும்’ என்பார் சாவி. இந்த என் முயற்சியிலும் அதை அனுபவபூர்வமாக உணர்கிறேன்.

இனி... சாவி-100-ன் ஒன்பதாவது தொகுப்பு:

81) “நான் பத்திரிகைத் துறையில் அரிச்சுவடி கற்றது ஆதித்தனாரிடம். பிஹெச்.டி முடித்து ஆனந்த விகடனில்!” என்பார் சாவி.

82) சாவி சாரின் கையில் MSV  என்று பச்சை குத்தியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். மெல்லிசை மன்னருக்குண்டான அதே எம்.எஸ். இனிஷியல் கொண்டவர்தான் சாவியும். பல நேரங்களில் மெல்லிசை மன்னருக்குப் போகவேண்டிய தபால்கள் இந்த பத்திரிகையுலக மன்னருக்கு வந்துவிடும். அவற்றையெல்லாம் உடனுக்குடன் தமது அட்டெண்டர் மூலம் எம்.எஸ்.வி-க்குக் கொடுத்து அனுப்பிவிடுவார் சாவி.

அது ஒருபுறம் இருக்கட்டும். சாவி சாரின் கையில் பச்சை குத்தியிருப்பதன் பின்னணி விவரம் சுவாரஸ்யமானது. வாலிப வயதில், கிராமத்துக்கு வந்த நரிக்குறவக் கும்பல் ஒன்றில் இருந்த ஒரு பெண் மிக அழகாக இருந்ததைப் பார்த்திருக்கிறார் சாவி. அவளைப் பார்ப்பதற்கென்றே அவர்களின் கூடாரம் பக்கம் அடிக்கடி சென்று வருவாராம். ஒருநாள், அவள் பச்சை குத்துவாள் என்றறிந்து, ஆசை ஆசையாக அவளிடம் சென்று, பச்சை குத்திக்கொண்டாராம். இந்தச் சம்பவத்தை சாவி சார் தனது ‘வேதவித்து’ நூலிலும் குறிப்பிட்டுள்ளார்.

83) சாவிக்கு மிகவும் பிடித்த ஓவியர் கோபுலு. இருவரும் நேரில் சந்தித்தாலோ, போனில் பேசத் தொடங்கினாலோ, ‘ஹலோ’ என்றோ, ‘வணக்கம்’ என்றோ பேசத் தொடங்க மாட்டார்கள். ‘நமஸ்காரா’ என்பார்கள். பக்கத்தில் இருந்து பார்க்கிறவர்களுக்கு இது விசித்திரமாகத் தெரியும். இருவரும் கர்நாடக மாநிலத்தில் சில நாட்கள் சுற்றுலா சென்றுவிட்டுத் திரும்பிய பின்னர் தொடங்கிய பழக்கம் இது. 

84) ‘அக்கிரஹாரத்து அதிசய மனிதர்’ என்று அறிஞர் அண்ணாவால் போற்றப்பட்டவர் எழுத்தாளர் வ.ரா. அவரின் துணைவியார் வறுமையால் வாடுவதை அறிந்த சாவி அவர்கள், அப்போது முதலமைச்சராக இருந்த கலைஞர் மு.கருணாநிதியிடம் பேசி, வ.ரா-வின் துணைவியாருக்கு மாதம்தோறும் ரூ.1000/- பென்ஷன் தொகை வழங்க ஏற்பாடு செய்தார்.

85) முதலமைச்சர் கருணாநிதியின் ஆப்த நண்பராக இருந்தும், தமக்கென பதவியோ பட்டமோ எதுவும் கேட்டுப் பெறாதவர் சாவி. இருப்பினும், கலைஞரின் வற்புறுத்தலுக்கிணங்க சில காலம் இயல் இசை நாடக மன்றத் தலைவர் பதவியை வகித்தார்.

86) சாவிக்கு மிகவும் பிடித்த நடிகர் சிவாஜி கணேசன். பிடித்த நடிகை மனோரமா. நடிகை மனோரமா பலமுறை சாவி இல்லத்துக்கு வந்து, சாவியின் துணைவியார் கையால் விருந்துண்டு சென்றிருக்கிறார்.

87) சாவி அவர்களிடம் தாம் வரைந்த ஓவியத்தை எடுத்து வந்து காண்பித்து, தனக்குப் பத்திரிகையில் வரையச் சந்தர்ப்பம் அளிக்குமாறு கேட்டுக் கொண்டார் ஒரு பெண்மணி. அந்தப் படத்தைப் பற்றி ஒரு குறிப்பு எழுதித் தரச் சொன்னார் சாவி. அப்படியே அந்தப் பெண்மணி எழுதிக் கொடுக்க, அதைப் படித்த சாவி, “உனக்குப் படம் வரைவதைவிட எழுதுவது நன்றாக வருகிறது. அதனால், ஒரு சிறுகதை எழுதிக் கொண்டு வா! பிரசுரிக்கிறேன்” என்று அவரைத் திருப்பி அனுப்பிவிட்டார். பின்னாளில் அந்தப் பெண்மணி புகழ்பெற்ற எழுத்தாளர் ஆனார். அவர் வேறு யாருமல்ல; அனுராதா ரமணன்.

88) சாவி பல புத்தகங்கள் எழுதியிருந்தாலும், தாம் எழுதியவற்றில் அவருக்கே பிடித்த புத்தகங்களாக அவர் குறிப்பிடுவது இரண்டைத்தான்! ஒன்று - நீங்களே எளிதில் யூகிக்க முடியும்; ஆம், காந்திஜியுடன் பயணம் செய்து எழுதிய ‘நவகாளி யாத்திரை’ புத்தகம். இரண்டாவது, தமது மனம் கவர்ந்த பெருந்தலைவர் காமராஜர் பற்றித் தாம் எழுதிய ‘சிவகாமியின் செல்வன்’ நூல்.

89) சாவி நடத்திய ‘வெள்ளிமணி’ பத்திரிகையில் விற்பனைப் பிரிவில் சேர்ந்து பணியாற்றி, தன் பத்திரிகை உலக வாழ்க்கையைத் தொடங்கியவர்தான் பின்னாளில் ‘நந்திபுரத்து நாயகி’ போன்ற சரித்திர நாவல்களை எழுதிப் புகழ்பெற்ற எழுத்தாளராக ஆனதோடு, அமுதசுரபி இலக்கியப் பத்திரிகையில் பல்லாண்டுக் காலம் ஆசிரியராகவும் இருந்த ‘கலைமாமணி’ விக்கிரமன்.

90) ஓவியர் கோபுலுவும் சாவியும் ஒருமுறை  அஜந்தா, எல்லோரா குகைக் கோயில்களுக்குச் சென்றிருந்தார்கள். எல்லோரா குகைக் கோயிலின் வெளியே பிரமாண்டமான கங்காதேவி சிற்பம்! வானத்திலிருந்து ஆவேசத்துடன் இறங்கி வருவது போன்ற அழகிய கலை நயமுள்ள சிற்பம் அது. ‘வெயிலும் மழையும் இதைச் சேதப்படுத்தாதா? இதை வடித்த சிற்பி குகையின் உள்ளே  இதை நிறுவாமல் வெளியே அமைக்க என்ன காரணம்?’ என்ற கேள்வி இருவரின் மனத்தையும் குடைந்தது. அதே நேரம், பலத்த இடியுடன்  மழை கொட்டோ கொட்டென்று கொட்டத் தொடங்கியது. பரவசமான சாவி, “கோபுலு! அங்கே பாருங்கள். ஆகாயத்திலிருந்து நீர் கொட்டுகிறது. அதன் நடுவே கங்கை இறங்கி வருவது போன்ற அற்புதமான சிற்பம்! ஆஹா! இதை இங்கே வடித்த சிற்பி என்னவொரு கலாரசிகனாக இருக்க வேண்டும்!” என்று ரசித்துச் சிலிர்த்தார். ரசனையின் மொத்த உருவம் சாவி சார் என்றால், மிகையில்லை!

(தொடரும்)


Monday, August 08, 2016

சாவி-100 (VIII)

நேற்றைய ஞாயிற்றுக்கிழமை, மரியாதை நிமித்தமாக, நகைச்சுவை எழுத்தாளர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்களை, அவரின் இல்லத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டு இருந்தேன். அப்போது பேச்சு சாவி சார் பற்றியே ஓடியது. பாக்கியம் ராமசாமி அவர்களும் கடைசி சில வருடங்களில் சாவி பத்திரிகையில் பணிபுரிந்திருக்கிறார். சாவி சாரின் பெருந்தன்மை, சிறந்த படைப்பைக் கண்டால் உடனே கூப்பிட்டு மனம் திறந்து பாராட்டும் பெருங்குணம், பணியில் சின்சியர் எனப் பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டவர், சாவி அவர்களின் அதீத கோபம் பற்றியும் சொன்னார். 

"சாவி சாரின் கோபம் நம் மீதுள்ள அக்கறையினால் என்பது புரியாமல் இருந்த காலத்தில், மனம் பக்குவப்படாமல் இருந்த அந்த இளம் வயதில், நானும் பதிலுக்கு அவர் மீது கோபப்பட்டுள்ளேன். அவர் எத்தனை பெரியவர், அவர் முன்னால் நான் எத்தனை தூசு என்று எனக்குப் புரியாமல் இருந்த காலம் அது. அவர் நினைத்திருந்தால் என்னைத் தூக்கிப் போட்டுவிட்டு, வேறு ஒருவரை அமர்த்திக்கொண்டு சாவி பத்திரிகையை நடத்தியிருக்கலாம். அவர் அப்படிச் செய்யவில்லை. என்னை அழைத்து வர அட்டெண்டரை அனுப்பி, நான் போய் அவர் முன் நின்றதும், 'என்ன, உங்க அப்பா திட்டினா வீட்டை ஓடிப் போயிடுவியா?' என்று உரிமையோடு கோபித்துக்கொண்டு, எதுவுமே நடக்காத மாதிரி, "போ! போய் வேலையைப் பாரு!" என்று பழையபடியே தன் பத்திரிகையில் பணியாற்ற அனுமதித்த அந்தப் பெருந்தகையாளர், தாயுள்ளத்தோடு என்னை வழிநடத்தியிருக்கவில்லை என்றால், நான் இன்று இந்த நிலையில் இருந்திருக்க மாட்டேன் என்பது சத்தியம்!" என்று திரு.பாக்கியம் ராமசாமி அவர்களிடம் சொன்னேன். 

எத்தனையோ பேர் சாவி சாரின் கோபத்தை மட்டுமே பார்த்தார்கள். நான் அவரின் கோபத்தின் பின்னணியில் ஒளிந்திருந்த அன்பைப் பார்த்தேன். சிலிர்த்து நிற்கும் பிடரி, சிங்கத்துக்கு அழகு! அதேபோல், கோபம் எனும் குணமும் சாவி சாருக்கு ஒரு தனி அழகையும், கம்பீரத்தையும் கொடுப்பதாகவே நான் உணர்கிறேன்.

இனி, சாவி-100-ன் அடுத்த பத்து:

71) கலைஞர் கருணாநிதியின் நெருங்கிய நண்பர் சாவி என்பது ஒருபுறம் இருக்க, அவர் ஒன்றும் எம்.ஜி.ஆரின் விரோதியாக ஆக வேண்டும் என்று எண்ணிச் செயல்படவில்லை. சந்தர்ப்பங்களும் சூழ்நிலைகளும் அப்படி அமைந்துவிட்டன. பெரம்பூரில் நடந்த 'வாஷிங்டனில் திருமணம்' நாடகத்துக்கு எம்.ஜி.ஆர். ஒருமுறை தலைமை தாங்கினார். சாவியும் சென்று கலந்துகொள்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் பெருந்தலைவர் காமராஜர், சாவியின் இல்லத்துக்கு வரப்போவதாகத் தகவல் வந்ததால், நாடகத்துக்குச் செல்வதை கேன்சல் செய்துவிட்டு, காமராஜரை வரவேற்க வீட்டிலேயே இருந்துவிட்டார் சாவி. 'என்னைவிட காமராஜர் உங்களுக்கு முக்கியமாகப் போய்விட்டாரா?' என்று எம்.ஜி.ஆருக்கும் கோபம் உண்டானதில் வியப்பில்லை.

72) எம்.ஜி.ஆர். சாவி மீது கோபப்படும்படியான இன்னொரு பெரிய விஷயமும் நடந்தது. தினமணி கதிரில் வாசகர்களின் கேள்விகளுக்கு எம்.ஜி.ஆர். பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். சில வாரங்களுக்குப் பின்னர், திரு.சோ-வைத் தாக்கி அடிக்கடி பதில் சொல்லத் தொடங்கினார் எம்.ஜி.ஆர். அந்தக் குறிப்பிட்ட பதில்களைப்  பிரசுரிக்காமல் நிறுத்திவிட்டார் சாவி. இப்படிச் சில வாரங்கள் கடந்தன. பின்னர், அந்த வாரத்துக்கான பதில்களோடு சாவியைத் தேடி வந்தார் எம்.ஜி.ஆரின் உதவியாளர் வித்வான் வே.லட்சுமணன். எம்.ஜி.ஆரின் பதில்களைக் கொடுத்துவிட்டு, "நீங்கள் அவர் எழுதும் சில பதில்களைப் பிரசுரிப்பது இல்லையாம். கட்டாயம் அவற்றைப் பிரசுரிக்கும்படி சொன்னார்" என்றார். "மாட்டேன். ஒருவரைக் குறிப்பிட்டு காயப்படுத்துகிற மாதிரியான பதில்களை நான் பிரசுரிக்க மாட்டேன். பத்திரிகை ஆசிரியராக ஒன்றைப் பிரசுரிப்பதும், நிறுத்தி வைப்பதும் என் உரிமை!" என்றார் சாவி. "அப்படியானால், எம்.ஜி.ஆரின் கோபத்துக்கு நீங்கள் ஆளாக நேரிடலாம். அடுத்த வாரம் அவர் பதில்கள் எழுதித் தருவதைக்கூட நிறுத்திவிடலாம்" என்றார் வே.லட்சுமணன். இது சாவியை கோபப்படுத்திவிட்டது. "அடுத்த வாரம் என்ன... இந்த வாரமே அவரின் பதில்களை நான் நிறுத்திவிட்டேன் என்று அவரிடம் போய்ச் சொல்லுங்கள்" என்று வந்த பதில்களையும் கையோடு வே.லட்சுமணனிடம், பிரித்துப் பார்க்காமலே திருப்பி அனுப்பிவிட்டார் சாவி. அன்றிலிருந்து எம்.ஜி.ஆரும் சாவியும் எலியும் பூனையுமாக ஆகிவிட்டார்கள்!

73) ஒரு பத்திரிகையாளராக நடுநிலையுடன் செயல்படத்தான் எப்போதும் விரும்பியிருக்கிறார் சாவி. தேர்தலில் எம்.ஜி.ஆர். வென்று முதலமைச்சராக ஆன பின்பு, அவரை வரவேற்று தம் பத்திரிகையில் தலையங்கம் வெளியிட்டார் சாவி. மேலும், 'தோட்டம் முதல் கோட்டை வரை' என்னும் தலைப்பில் எம்.ஜி.ஆரின் அரசியல் பயணம் குறித்துச் சில வாரங்களுக்கு அற்புதமான தொடர் கட்டுரையையும் வெளியிட்டு கௌரவித்தார்.

74) ஏவி.எம். தயாரித்த 'அன்பே வா' படப்பிடிப்பைக் காண, அவர்களின் அழைப்பின்பேரில் ஆனந்த விகடன் சார்பாக சிம்லா சென்றிருந்தார் சாவி. அங்கே, 'புதிய வானம், புதிய பூமி, எங்கும் பனிமழை பொழிகிறது' என்ற பாடல் காட்சியில், தம்மோடு சாவியையும் நடந்து வரச் சொல்லி அன்புக் கட்டளை இட்டார் எம்.ஜி.ஆர். ஆம்... மறுமுறை உங்கள் தொலைக்காட்சியில் அந்தப் பாடல் காட்சி ஒளிபரப்பாகும்போது கவனித்துப் பாருங்கள்... எம்.ஜி.ஆருடன் கோட் சூட் அணிந்தபடி கம்பீரமாக நடந்து வருவார் சாவி. 'அன்பே வா' படம் சூப்பர் டூப்பர் ஹிட்! 'இந்தப் பெருவெற்றிக்குக் காரணம், நான் அதில் நடித்திருந்ததுதான்!' என்று தமாஷாகச் சொல்வார் சாவி.

75) எம்.ஜி.ஆரின் பெருந்தன்மையான குணம் குறித்தும் என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் சாவி. சிம்லாவில் படப்பிடிப்பு நடந்த சமயத்தில், எம்.ஜி.ஆரைக் காண ராணுவ வீரர்கள் சிலர் விரும்பினார்களாம். எம்.ஜி.ஆரும் அவர்களிடம் அன்பாக உரையாடி, அவர்களின் பணிகளையும், அவர்களுக்கு இருக்கும் சிரமங்களையும் அக்கறையோடு கேட்டறிந்தாராம். அவர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாராம். அந்த வீரர்களில் ஒருவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். அவரின் தாயார் இங்கே தமிழ்நாட்டின் ஒரு மூலையில் இருக்கும் குக்கிராமத்தில் வசிக்கிறார். அந்த வீரர், தான் இங்கே மிகவும் நலமாக இருப்பது குறித்து தன் அம்மாவுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும், தாயாருக்காக தான் வாங்கி வைத்திருக்கும் ஒரு எளிய புடவையை தன் அம்மாவிடம் சேர்க்க வேண்டும் என்றும் எம்.ஜி.ஆரைக் கேட்டுக்கொண்டு, அவசரம் அவசரமாக தன் தாயாருக்கு ஒரு கடிதம் எழுதி, அதையும் எம்.ஜி.ஆரிடம் கொடுத்து, அதை எப்படியாவது தன் தாயிடம் சேர்க்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டாராம்.

"நாமாக இருந்தால் ஆகட்டும் என்று சொல்லி, அதை அத்தோடு மறந்திருப்போம். எம்.ஜி.ஆர். அப்படிச் செய்யவில்லை. சென்னை திரும்பியதும் முதல் காரியமாக அந்தப் புடவை, அந்த வீரர் கொடுத்த கடிதம் ஆகியவற்றோடு தனது அன்பளிப்பாக ஒரு பெரிய தொகையை வைத்துப் 'பேக்' செய்து, தனது உதவியாளரை அழைத்து, ஒரு காரில் உடனடியாகக் கிளம்பிச் சென்று, அந்த வீரரின் கிராமத்தைத் தேடிக் கண்டுபிடித்து, அவரின் தாயாரிடம் இந்த பார்சலை சேர்த்துவிட்டு வரும்படி உத்தரவிட்டார். அங்கே அந்த அம்மாவின் மகன் மிகவும் நலமாக இருக்கும் சேதியையும் சொல்லிவிட்டு வரும்படி சொன்னார். இந்த மனிதாபிமான பண்பை வேறு எவரிடமும் நான் பார்க்கவில்லை. அவரை 'மக்கள் திலகம்' என்று அழைப்பது மிகவும் சரியே!" என்று சிலாகித்துச் சொன்னார் சாவி.

76) நெருங்கிய நண்பராக இருந்தபோதிலும், தனக்கு நியாயமென்று பட்டதை பளிச்சென்று சொல்லும் குணம் உள்ளவர் சாவி. அப்படித்தான் ஒருமுறை, கலைஞர் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பியதும், அந்த நகரங்களைப் பற்றி என்னென்னவோ கருத்துக்களை வெளியிட்டார். சாவி அது குறித்துத் தன் பத்திரிகையில், "ஓரிரு நாட்கள் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வந்துவிட்டாலே, அந்த நகரங்களைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொண்டுவிட முடியாது" என்பதாக விமர்சித்து எழுதிவிட்டார். இதனால் கோபமுற்ற கலைஞர் கருணாநிதி, தமது முரசொலியில் பதிலுக்கு சாவியை விமர்சித்து, 'கூவுகிற கோட்டான்கள் கூவட்டும்; இந்தக் குயிலுக்கு என்ன வந்தது கேடு?' என்று சாடினார். பின்னர், சாவி சென்று கலைஞரைச் சந்தித்து விளக்கம் அளிக்கவும், கலைஞரின் கோபம் தணிய, பழையபடி நட்பு கனிந்தது.

77)  ஆரம்ப காலங்களில் சாவி அவர்கள் சைன் போர்டு ஆர்ட்டிஸ்ட்டாக வேலை செய்து பணம் ஈட்டியதைச் சொன்னேன். அதேபோலவே, அவர் ஏர் ரெய்ட் வார்டன் வேலையையும் ஏற்றுச் செய்திருக்கிறார். இரண்டாம் உலகப் போர் மூண்டிருந்த நேரம். காற்றில் யுத்த அபாயம் கலந்திருந்தது. சென்னையிலிருந்து பல குடும்பங்கள் காலி செய்து, வெவ்வேறு ஊர்களுக்குக் குடிபெயர்ந்துவிட்டன. சாவிதான் துணிச்சல்காரராயிற்றே..! சென்னையைவிட்டு நகர விரும்பவில்லை. அங்கேயே ஏதேனும் ஒரு வேலை தேடிக்கொண்டு செட்டிலாகிவிடவேண்டும் என்ற உறுதியான முடிவில் இருந்தார். யுத்த அபாயம் இருந்த காலம் என்பதால், ஏர் ரெய்ட் வார்டன் வேலை அவரைத் தேடி வந்தது.  ஏ.ஆர்.வி. யூனிஃபார்ம் அணிந்து, கையில் விசிலுடன் தெருத்தெருவாகச் சென்று, விசிலை பலமாக ஊதி, வீட்டுக் கதவுகளை மூடும்படியும், விளக்குகளை அணைக்கும்படியும் பொதுமக்களை எச்சரிக்க வேண்டும். இதுவே ஏர் ரெய்ட் வார்டனின் வேலை. இதையும் சவாலாக ஏற்றுச் செய்திருக்கிறார் சாவி.

78) இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில், தன் பங்குக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்று, மண்ணடி போஸ்ட் ஆபீஸ் வெளியில் இருந்த போஸ்ட் பாக்ஸில் நெருப்பைக் கொளுத்திப் போட்டுவிட்டு, தானே போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் செய்து, தபாலாபீஸைக் கொளுத்திவிட்டதாகவும், மண்ணடி போஸ்ட் ஆபீஸ் வாசலிலேயே, தான் காந்தி குல்லாயும் கதர்ச் சட்டை, வேட்டியும் அணிந்து காத்திருப்பதாகவும், உடனே வந்து தன்னை கைது செய்து அழைத்துப் போகும்படியும் சொன்னார் இளைஞனாக இருந்த சாவி. அதன்படியே அவரைக் கைது செய்து, பெல்லாரி அருகில் உள்ள அலிபுரம் சிறையில் அடைத்தது போலீஸ். இந்தச் சம்பவத்தைதான் ‘இந்தியன்’ படத்தில் நெடுமுடி வேணு பேசுகிற வசனமாக வைத்திருப்பார் எழுத்தாளர் சுஜாதா.

79) எளிமையான அமைச்சருக்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால் இன்றைக்கும் காமராஜ், கக்கன்ஜி இருவரின் பெயர்கள்தான் சட்டென நம் நினைவுக்கு வரும். அந்த மாமனிதர் கக்கன்ஜியை சாவி சந்தித்துப் பழகியது இந்த அலிபுரம் சிறையில்தான்.

80) சிறையில் கைதிகள் அனைவரும் ஒவ்வொரு குறிப்பிட்ட வேலையைப் பொறுப்பேற்றுச் செய்ய வேண்டும். சாவி அவர்கள் நூலகத்தைப் பராமரிக்கும் பொறுப்பை விரும்பி ஏற்றுக் கொண்டார்.

(தொடரும்)

Sunday, August 07, 2016

சாவி-100 (VII)

சாவி-100 (ஏழாவது பத்து)

61) குருநாதர் கல்கி மீது எத்தனை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தாரோ, அதே அளவு பக்தியை விகடன் அதிபர் எஸ்.எஸ்.வாசன் மீதும் வைத்திருந்தார் சாவி. விமர்சனங்களை திறந்த மனதோடு ஏற்கும் குணம், நல்லதைக் கண்டால் உடனே கூப்பிட்டுப் பாராட்டும் பண்பு, செய்யும் செயலில் துல்லியம் எனப் பல விஷயங்களில் சாவிக்கு ரோல்மாடலாக இருந்தவர் எஸ்.எஸ்.வாசன்தான். “உழைப்பால் உயர்ந்த மாமேதை அவர்” என்று எஸ்.எஸ். வாசன் குறித்து சிலிர்ப்பும் பிரமிப்புமாகக் குறிப்பிடுவார் சாவி. ‘போலி கௌரவத்தை அடியோடு வெறுத்து ஒதுக்கியவர் வாசன்” என்று புகழாரம் சூட்டுவார்.

62) சினிமா, பத்திரிகை என இரட்டைக் குதிரையில் பயணம் செய்தாலும், பத்திரிகைப் பணியில் எஸ்.எஸ். வாசன் எத்தனை தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதற்கு சாவி வர்ணித்த ஒரு சம்பவம் இன்னும் என் நினைவில் இருக்கிறது. பரங்கிமலையில் ஏதோ படப்பிடிப்பு. குதிரைகளை வைத்து ஏதோ காட்சி எடுக்கப்பட்டுக்   கொண்டிருந்தது. அந்தக் குதிரைகள் மைசூர் மகாராஜாவிடமிருந்து, அவர் போட்ட பல நிபந்தனைகளை ஒப்புக்கொண்டு, மிகவும் சிரமத்துக்கிடையில் படப்பிடிப்புக்காக வாங்கி வந்திருந்தனர். அதே நேரம், ஆனந்த விகடன் அலுவலகத்தில் ‘தில்லானா மோகனாம்பாள்’ தொடர்கதை வரிக்கு வரி படித்துத் திருத்திக் கொண்டிருந்தார் எஸ்.எஸ்.வாசன். அப்போது படப்பிடிப்பு நடக்கும் இடத்திலிருந்து வாசனின் பி.ஏ. நம்பியார் என்பவரிடமிருந்து பதற்றத்துடன் ஒரு போன்கால்! விஷயம் விபரீதமானது. படப்பிடிப்பில் ஓடிய ஒரு குதிரை, கால் தடுக்கி, இசகுபிசகாக உருண்டு விழுந்து, உயிரை விட்டுவிட்டது. ‘ஐயோ! மைசூர் மகாராஜாவுக்கு என்ன பதில் சொல்வது!” என்ற பதற்றத்தில் போன் செய்கிறார் நம்பியார். போன்காலை அட்டெண்ட் செய்த வாசன் சொன்ன பதில் என்ன தெரியுமா... “என்ன நம்பியார்! இந்தச் சின்ன விஷயத்துக்கெல்லாமா   நீங்க தொந்தரவு செய்யறது? இதை நீங்களே டீல் பண்ணிக்கக் கூடாதா? இங்கே நான் எத்தனை முக்கியமான காரியத்தில் இருக்கிறேன். என்ன, போங்க!” என்று காலை கட் செய்துவிட்டாராம் எஸ்.எஸ்.வாசன். “நாங்கள் ஆடிப்போய்விட்டோம். விலை உயர்ந்த ஒரு குதிரையின் இழப்பு ஒரு பக்கம், படப்பிடிப்பு தடைப்பட்டது ஒரு பக்கம், இதையெல்லாம் தாண்டி மைசூர் மகாராஜாவை சமாளிக்க வேண்டிய நெருக்கடி ஒருபக்கம்... இதையெல்லாம்விட பத்திரிகையில் வெளியாகும் ஒரு தொடர்கதையைத் திருத்துவதென்பது மிக முக்கியமான விஷயமாக இருந்திருக்கிறது என்றால்,  பத்திரிகை மீது அவருக்கிருந்த அதி தீவிர ஆர்வத்தை, பக்தியை என்னவென்பது!” என்று வியந்து வியந்து சொல்லியிருக்கிறார் சாவி.

63) திருமுருக கிருபானந்த வாரியார் அவர்களின் சொற்பொழிவு எத்தனை நகைச்சுவையாக இருக்கும் என்று அதைக் கேட்டவர்களுக்குத் தெரிந்திருக்கும். பொதுவாகவே வாரியாரின் சொற்பொழிவு என்றால், கூட்டம் திரளுவதற்குக் கேட்கவே வேண்டாம். மயிலை சம்ஸ்கிருதக் கல்லூரியில் ஒருமுறை சொற்பொழிவு நிகழ்த்தினார் வாரியார். அதற்கு ஒரு விமர்சனக் கட்டுரை எழுதினார் சாவி. விமர்சனம் வெளியான அடுத்த நாளிலிருந்து வழக்கமாக வரும் கூட்டத்தைவிட மும்மடங்கு கூட்டம் பெருகியது அந்த நிகழ்ச்சிக்கு.

64) வாரியாரின் பிரசங்கங்கள் தேனாம்பேட்டை காங்கிரஸ் மைதானத்தில் நடைபெறுவதற்கு முழு முயற்சி எடுத்துக்கொண்டவர் சாவி. ‘சத்திய சபா’ என்னும் ஓர் ஆன்மிக சபையை நிறுவி, மைசூர் மகாராஜாவையும் பெருந்தலைவர் காமராஜரையும் வரவழைத்து, கிருபானந்த வாரியாரைக் கொண்டு ராமாயண உபன்யாசத்தை ஒரு ஞான வேள்வி போல் 40 நாட்கள் தொடர்ந்து நடத்தியுள்ளார் சாவி.

65)  வாரியாரின் உபன்யாசத்தைக் கேட்க முன் வரிசையில் அமர்ந்திருந்தார் மைசூர் மகாராஜா. அவர் அருகில் தகுதியுள்ள யாரை அமரச் செய்யலாம் என்று யோசித்த சாவி, எஸ்.எஸ்.வாசனே இதற்குப் பொருத்தமானவர் என்று கருதி, அவர் அருகில் சென்று, ‘நீங்கதான் மகாராஜா பக்கத்தில் உட்கார்ந்து அவருக்கு கம்பெனி கொடுக்கவேண்டும்’ என்று விநயத்துடன் கேட்டுக் கொண்டார். முதலில் மறுத்த வாசன், பின்னர் சாவியின் வற்புறுத்தலுக்கிணங்க, மகாராஜாவின் அருகில் போய் அமர்ந்தார். சிங்கங்கள் போல் இரு பெரிய மனிதர்களும் அருகருகே அமர்ந்திருப்பதைக் கண்டு  காமிராக்கள் சும்மா இருக்குமா? படங்களாக எடுத்துத் தள்ளின. அப்படியொரு அபூர்வமான போட்டோவை பெரிதாக என்லார்ஜ் செய்து எடுத்துக்கொண்டு போய் எஸ்.எஸ்.வாசனிடம் நீட்டினார் சாவி. அதைக் கண்டு அவர் பெரிதும் மகிழ்வார் என்று நினைத்தார். ஆனால்,  மாறாக மகா கோபம் கொண்டார் வாசன். “இதை நான் என் வீட்டு ஹாலில் மாட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதற்காகத்தானே கொண்டு வந்திருக்கிறாய்? இந்த போட்டோவைப் பார்த்துவிட்டு மைசூர் மகாராஜாவும் வாசனும் நெருங்கிய சிநேகிதர்கள் போலிருக்கிறது என்று பார்ப்பவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும். அப்படித்தானே? மைசூர் மகாராஜாவுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை. அவரை எனக்குத் தெரியவும் தெரியாது. நீ சொன்னாயே என்றுதான் அவர் பக்கத்தில் உட்கார்ந்தேன். மற்றபடி, இந்த போலியான கௌரவமெல்லாம் எனக்குத் தேவையில்லை” என்றார் வாசன். வாசனைப் போன்ற ஓர் அபூர்வ மனிதரைக் காண்பது அரிது என்கிறார் சாவி.

66) சாவியுடன் ஒன்றாக  ஆனந்த விகடனில் பணியாற்றியவரும், சாவியின் நண்பரும், எழுத்தாளருமான மணியனுக்காக பெண் தேடி, லலிதா என்ற பெண்ணைப் பேசிமுடித்து,  நிச்சயதார்த்தத்துக்கு ஏற்பாடு செய்து, ஏவி.மெய்யப்பச் செட்டியாரிடம் பேசி ராஜேஸ்வரி மண்டபத்தை கட்டணமில்லாமல் பேசி முடித்து, திருமணத்தை தடபுடலாக நடத்திக் கொடுத்தவர் சாவிதான்.

67) சாவி பத்திரிகையில் தனது நண்பரான மணியனை தொடர்கதை எழுதச் செய்து, அவரின் ‘இதயம் பேசுகிறது’ பத்திரிகையில் தான் ஒரு தொடர்கதை எழுதினார் சாவி. இரண்டு பத்திரிகை ஆசிரியர்கள் மற்றவரின் பத்திரிகையில் பரஸ்பரம் தொடர்கதை எழுதியது அந்நாளில் ஒரு புதுமையாகப் பேசப்பட்டது. ஏன், இன்றளவிலும்கூட இது ஒரு புதுமைதானே? இதற்கு ஐடியா கொடுத்தவர் சாவிதான்.

68)   ஜவஹர்லால் நேருவின் மறைவுக்குப் பிறகு அடுத்த பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு ‘கிங் மேக்கராக’ இருந்த காமராஜ் தலையில் விழுந்தது. இதற்காக அவர் டெல்லியில் தங்கியிருந்த நாட்களில், அவரைப் பார்ப்பதற்காகப் பல பெரிய பெரிய புள்ளிகள் வருவதும் போவதுமாக இருந்தனர். அந்த முக்கியமான நேரத்திலும் காமராஜுடனே இருந்து, அந்தப் பரபரப்பான நிகழ்வுகளைக் கண்டு, கட்டுரையாக எழுதியுள்ளார் சாவி. 

69) ஆனந்த விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் மீது மிகவும் பிரியம் உள்ளவர் சாவி. “ஒரு முதலாளியாக இல்லாமல், ஒரு தோழனைப் போலத்தான் என்னோடு பழகுவார் பாலு. ஆனாலும், அவர் முதலாளி என்கிற மரியாதை என் உள்ளத்தில் எப்போதுமே இருக்கும். அவருடைய நினைவாற்றலைக் கண்டு பிரமித்திருக்கிறேன். மறதி என்றால் என்னவென்றே தெரியாதவர் பாலு. ஒரு தலையங்கத்தை கமா, ஃபுல்ஸ்டாப்போடு ஒரு முறை நிறுத்தி நிதானமாகப் படித்தால் போதும், கண்ணை மூடிக் கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, அதை வரிக்கு வரி அப்படியே திருப்பி ஒப்பிப்பார் பாலு! அசாத்தியமான இந்தத் திறமை வேறு யாருக்குமே வராது. அதேபோல் எந்தவொரு மேட்டரையும் மிகக் கச்சிதமாக எடிட் செய்வார். புதிதாக ஏதேனும் ஐடியாக்கள் கொடுத்தால், ரசித்து உற்சாகப்படுத்துவார். அதை மேலும் சிறப்பாகச் செய்ய ஆலோசனைகள் சொல்வார். என் எழுத்துத் திறமை மேம்பட்டதற்கு பாலுவின் ரசனையும் அவர் தந்த உற்சாகமும்தான் காரணம்!” என்பார் சாவி.

70) ஆசி பெறுவதற்காக காஞ்சி பரமாச்சார்யரை தரிசிக்கச் சென்றபோது, “சாமா சுப்பிரமணிய சாஸ்திரிகளோட பையன்தானே நீ? இப்போ நீ விகடன்லே ‘கீ’ போஸ்ட்ல இருக்கிறதா கேள்விப்பட்டேனே! க்ஷேமமா இரு!” என்று புன்னகைத்தபடி சாவியை ஆசீர்வதித்தாராம் மகா பெரியவா. தன் புனைபெயர் சாவி என்பதை மனதில் கொண்டு ‘key post' என்று வார்த்தை விளையாடிய காஞ்சிப் பெரியவரின் சாதுர்யத்தை வியந்து போற்றுவார் சாவி.

(தொடரும்)
Saturday, August 06, 2016

சாவி-100 (VI)

த்திரிகையுலகப் பிதாமகர் சாவி அவர்களின் சிஷ்யனாக ஒன்பது ஆண்டுக் காலம் அவரிடம் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது என் பெரும் பேறு. என் வாழ்க்கையின் முக்கியத் திருப்புமுனையே என் 30-வது வயதில், 1986-ல் சாவி பத்திரிகையில் நான் உதவி ஆசிரியனாகச் சேர்ந்ததுதான். இதோ... 30 ஆண்டுக் காலம் விளையாட்டுப் போல் ஓடிவிட்டது. ஆனாலும், இந்த நிமிடம் வரையில் என்னை நான் சாவியின் மாணவனாகத்தான் உணர்கிறேன். அவரைப் பற்றி நேரடியாக அவரிடமே கேட்டறிந்த தகவல்களையும், பிறர் மூலம் அறிந்த தகவல்களையுமே இங்கே சாவி-100 என்னும் தலைப்பில் குட்டிக் குட்டித் தகவல்களாகத் தொகுத்துக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். தற்போது அமெரிக்கா சென்றிருக்கும் மாலதி (சாவி அவர்களின் கடைசி புதல்வி) மற்றும், வெகு காலம் முன்பே அங்கே சென்று நிரந்தரமாகத் தங்கிப் பணியாற்றிக்கொண்டிருக்கும் சாவியின் மூத்த புதல்வர் ’பாச்சா’ என்கிற திரு.பாலச்சந்திரன்... இருவரும் தொடர்ந்து எனது பதிவுகளைப் படித்து வருகிறார்கள் என்பதை அறிந்து மகிழ்கிறேன். மாலதி ஃபேஸ்புக் வழியே இன்பாக்ஸில் தொடர்பு கொண்டு, தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார். திரு.பாச்சா இன்று காலையில் மொபைலில் தொடர்பு கொண்டு தனது பாராட்டுக்களைத் தெரிவித்தார். சாவி அவர்கள் அமரராகி 15 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், இன்றைக்கும் அவரின் குடும்பத்தார் என்னையும் தங்கள் குடும்பத்தில் ஓர் உறுப்பினனாகக் கருதி அன்பு பாராட்டுவதற்கு ஏதோ பூர்வ ஜென்ம பந்தம்தான் இருக்க வேண்டும். சாவியின் மாணாக்கனாக நான் போய்ச் சேர்ந்ததே ஒரு பூர்வ ஜென்ம பந்தம்தான், இல்லையா?!

இனி, சாவி-100-ன் ஆறாவது பத்து:

51) பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் உள்ளவர் சாவி. வெளிநாடு செல்லும்போதெல்லாம் தம்மோடு எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை, ஓவியர் ஜெயராஜ் என யாரையாவது உடன் அழைத்துச் செல்வார். தவிர, எடிட்டோரியல் மீட்டிங் என்கிற சாக்கில், தனது உதவி ஆசிரியர்களை அழைத்துக்கொண்டு ஆண்டுக்கு இரண்டு அல்லது மூன்று முறை பெங்களூர், ஊட்டி, குன்னூர் என இரண்டு மூன்று நாட்கள் சென்று தங்கி வருவது வழக்கம். சிங்கப்பூர் சென்று வருவதென்பது சாவி சாருக்கு அண்ணா நகரிலிருந்து மந்தைவெளி சென்று வருகிற மாதிரி!

52) ஆனந்த விகடன் அதிபர் எஸ்.எஸ். வாசன் தமது காரில் கல்கி, துமிலன், ஓவியர் மாலி என தமது சகாக்களை அழைத்துக்கொண்டு அடிக்கடி சென்னை, மவுண்ட் ரோடில் உள்ள காஸ்மோபாலிடன் கிளப்புக்குச் சென்று, சிற்றுண்டி வாங்கித் தருவது வழக்கம். அந்நாளில் விகடனில் கற்றுக்குட்டி உதவி ஆசிரியராகச் சேர்ந்த சாவியின் மனதில் இது அழுத்தமாகப் பதிந்தது. பின்னாளில் தமது சகாக்களையும் அதே போல் தமது காரில் அதே காஸ்மோபாலிடன் கிளப்புக்கு அழைத்துச் சென்று சிற்றுண்டி வாங்கித் தருவதை வழக்கமாக்கிக் கொண்டார் சாவி.

53) எஸ்.எஸ்.வாசன், கல்கி, சதாசிவம் எனத் தம்மோடு பழகியவர்களைப் போலவே மிமிக்ரி செய்து பேசுவதில் வல்லவர் சாவி. எஸ்.எஸ்.வாசன் போலவே நடந்து, அவரைப் போலவே சாவி மிமிக்ரி செய்து பேசும்போது அமரர் வாசனையே நேரில் பார்த்ததுபோல் இருக்கும்.

54) மகாத்மா காந்தி, தந்தை பெரியார், மூதறிஞர் ராஜாஜி, பெருந்தலைவர் காமராஜ், எஸ்.எஸ்.வாசன், ஏவி.மெய்யப்பச் செட்டியார், பேராசிரியர் கல்கி, அறிஞர் அண்ணா, முஜிபுர் ரஹ்மான், இசைக்குயில் லதா மங்கேஷ்கர், கிருபானந்த வாரியார், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., கலைஞர் கருணாநிதி எனப் பல முக்கியப் பிரபலங்களுடனும் நெருங்கிப் பழகியவர் சாவி. வேறு எந்தப் பத்திரிகையாளருக்கும் இத்தகைய அபூர்வ வாய்ப்பு கிட்டியதில்லை.

55) தமது குரு பேராசிரியர் கல்கி மீது பெரும் மதிப்பும் மரியாதையும் கொண்டவர் சாவி. சின்ன வயதில் சில்க் ஜிப்பா அணிவதென்றால் சாவிக்கு அத்தனை இஷ்டம். ஆனால், தேசியத்தில் பற்றுடையவரான கல்கி, ‘ஜிப்பாவெல்லாம் கூடாது. நல்ல கதர்ச் சட்டையாக வாங்கி அணிந்து கொள்!’ என்று சொன்ன ஒரே காரணத்துக்காக, தனது முதல் சம்பளத்தில் ஆசை ஆசையாக வாங்கி அணிந்த சில்க் ஜிப்பாவை அன்றைக்குக் கழற்றிப் போட்டவர்தான்... அதன்பின்  சாவி தமது வாழ்நாள் முழுவதும் சில்க் ஜிப்பா அணியவே இல்லை என்பதோடு, பெரும்பாலான நாட்களில் கதர்ச் சட்டையே அணிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

56) ஆனந்த விகடனில் பணியாற்றுவதையே சாவி பெரிதும் விரும்பினார் என்றாலும், கல்கி அங்கிருந்து வெளியேறியதும், குருவின் மீதுள்ள அபிமானத்தால் தானும் அங்கிருந்து வெளியேறி, குருவின் அடிச்சுவட்டைப் பின்பற்றிச் சென்றார் சாவி.

57) கல்கியுடன் ஏற்பட்ட ஒரு சின்ன மன வருத்தத்தில், அவரின் கல்கி பத்திரிகையிலிருந்து விலகி, சொந்தமாக ‘வெள்ளிமணி’ பத்திரிகையைத் தொடங்கினார் சாவி. இருந்தாலும், முதல் இதழை தன் குருநாதர் கல்கிக்கு அர்ப்பணம் செய்வதாக அதில் குறிப்பிட்டிருந்தார். வெகு சீக்கிரமே, சாவியின் மனசு புரிந்து கோபம் தணிந்த கல்கி, சாவி கேட்டுக்கொண்டதன்பேரில் ‘வெள்ளிமணி’க்கும் கட்டுரைகள் எழுதித் தந்துள்ளார். அது மட்டுமல்ல, தானே ஆசிரியராக இருந்து ‘வெள்ளிமணி’யை நடத்தித் தருவதாகவும் விருப்பம் தெரிவித்துள்ளார். கூடவே, ‘வெள்ளிமணி’ பத்திரிகையை இன்னும் சிறப்பாகக் கொண்டு வர,  தமக்குப் பழக்கமான செல்வந்தர்கள் சிலரிடமிருந்து நிதி உதவி பெற்றுத் தரும் முயற்சியிலும் இறங்கினார் கல்கி. ஆனாலும், வேறு பல காரணங்களால், ‘வெள்ளிமணி’ பத்திரிகையை சாவியால் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது.

58) ‘சுப்புடு’வை அற்புதமான சங்கீத விமர்சகராக வாசகர்களுக்கு வெளிச்சமிட்டுக் காண்பித்தவர் சாவிதான். அவருக்கும்கூட ஒரு பாராட்டு விழா எடுத்திருக்கிறார் சாவி.

59) சென்னை, அண்ணா நகரில் புது வீடு கட்டிக் கிரகப்பிரவேசம் செய்தபோது, நாமகிரிப்பேட்டை கிருஷ்ணனின் நாதஸ்வரக் கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தார் சாவி. சாவியின் அன்பு அழைப்பின்பேரில் பெருந்தலைவர் காமராஜ் வந்திருந்து அந்தக் கச்சேரியை முழுக்க இருந்து கேட்டு ரசித்துவிட்டுப் போனார்.

60) ஆனந்த விகடனில் சாவிக்கு சீனியராக இருந்தவர் துமிலன். பின்னாளில் அவர் சிரமதசையில் இருந்த காலத்தில், காமராஜரிடமும் தனக்கு நெருக்கமான காங்கிரஸ் அன்பர்களிடமும் தொடர்ந்து பேசி, ‘சுதந்திரச் சங்கு’ என்ற வாரப் பத்திரிகையை ஆரம்பித்து, துமிலனை அதன் ஆசிரியராக்கினார் சாவி.

(தொடரும்)

Friday, August 05, 2016

சாவி-100 (V)

சாவி சார் சொன்ன உவமான உதாரணங்களில், நேற்று பதிவு எழுதும்போது எனக்கு நினைவு வந்தவற்றைத் தொகுத்து எழுதினேன். பதிவு எழுதி முடித்த பின்னர், இன்னும் ஒன்று நினைவுக்கு வந்தது. 

அந்தக் காலத்தில், கதையோ, கட்டுரையோ... ஒரு படைப்பு விகடனில் பிரசுரமாகும்போது, அது எத்தனைப் பக்கம் வந்திருக்கிறது, ஒவ்வொரு காலமும் (column) எத்தனை நீளம் வந்திருக்கிறது என்பதை ஸ்கேல் கொண்டு அளந்து பார்த்து, அதற்கேற்பத்தான் சன்மானம் வழங்குவது வழக்கம். ஜெயகாந்தனின் சிறுகதை ஒன்று விகடனில் பிரசுரம் ஆனபோது, அதே வழக்கப்படி சன்மானத்தைக் கணக்கிட, சாவி சார் குறுக்கிட்டு, அந்தக் கதைக்கு அதிக சன்மானம் கொடுக்க வேண்டும் என்று ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடம் வாதிட்டார். “அதெப்படி... ஒருவருக்கு ஒரு நியாயம், மற்றவருக்கு இன்னொரு நியாயமா? எல்லா எழுத்தாளர்களுக்கும் ஒரே மாதிரி சன்மானம் கொடுப்பதுதானே சரி?” என்று ஆசிரியர் பாலசுப்ரமணியன் கேட்க, “அப்படியானால், உங்கள் அளவுகோல்படி ஒரு திருக்குறளுக்கு ஒண்ணரை அணாதான் தருவீர்களா?” என்று கேட்டார் சாவி.

சாவி சாரின் கேள்வியில் இருந்த நியாயத்தை உணர்ந்து, அன்று முதல் ஒரு படைப்பை அளவுகோல் வைத்து அளந்து பார்த்துச் சன்மானம் கணக்கிடும் வழக்கத்தைக் கைவிட்டு, அதன் தரத்தை மட்டுமே பார்த்து சன்மானம் அளிக்கும் வழக்கத்தை நடைமுறைப்படுத்தினார் ஆசிரியர் பாலு. அவரின் மனதை மாற்றியது, சாவி சாரின் வாதம் மட்டுமல்ல; அவர் சொன்ன அற்புதமான உதாரணமும்தான்!

இனி, சாவி-100-ன் அடுத்த பத்து...

41) தாம் ஓர் எழுத்தாளர் என்று நினைவுகூரப்படுவதைவிட, ஒரு பத்திரிகையாளர் என்று நினைவுகூரப்படுவதைத்தான் ஆசிரியர் சாவி பெரிதும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்.

42) தாம் எழுதுவது மட்டுமல்ல; மற்ற எழுத்தாளர்களையும் ஊக்குவித்து, அவர்களிடமிருந்து சிறந்த படைப்புகளைப் பெற்று வெளியிட்டு, அவர்களைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வருவதில் சாவி சாருக்கு அலாதி ஆனந்தம்.

43) கவியரசு கண்ணதாசனை ‘அர்த்தமுள்ள இந்துமதம்’ எழுத வைத்ததும், கலைஞர் மு.கருணாநிதியை ‘குறளோவியம்’ எழுத வைத்ததும், கவிப்பேரரசு வைரமுத்துவை ‘கவிராஜன் கதை’ எழுத வைத்ததும் சாவிதான்! அதுமட்டுமல்ல; இந்தத் தலைப்புகள்கூட சாவி சார் தந்தவையே!

44) ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் எழுதிக்கொண்டிருந்தவருக்கு ‘புஷ்பாதங்கதுரை’ என்னும் கவர்ச்சிகரமான புனைபெயர் சூட்டி,  அவரைப் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தவர் சாவிதான். ஜெயில் கைதிகளிடமும் ஹ்யூமன் ஸ்டோரி இருக்கும் என்று சொல்லி அவரை சிறைக் கைதிகளோடு உரையாட வைத்து, அவர்களின் கதைகளை ‘சிறைக் கதைகள்’ என்னும் தலைப்பில்  வெளியிட்டார் சாவி. சிவப்பு விளக்குப் பெண்களிடமும் உருக்கமான கதைகள் இருக்கும் என்று, அவர்களிடம் பேசச் செய்து, அந்தக் கதைகளை, ‘சிவப்பு விளக்குக் கதைகள்’ என்று வெளியிட்டார். அந்நாளில் வேறு எவருமே யோசிக்காத புதுமையான முயற்சிகள் இவை. மேலும், ‘ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது’ என்று விசித்திரமான தலைப்பு கொடுத்து, புஷ்பாதங்கதுரையை தொடர்கதை எழுதச் சொன்னார் சாவி. இது பின்னர் சினிமாவாகவும் எடுக்கப்பட்டது.

அதே புஷ்பாதங்கதுரையை மீண்டும் ஸ்ரீவேணுகோபாலன் அவதாரம் எடுக்கச் செய்து, ‘திருவரங்கன் உலா’ எழுதச் செய்தவரும், சத்யமே சாயி எழுதச் செய்தவரும்கூட சாவி சார்தான்!

45)  நாடக நடிகர் மற்றும் நாடக ஆசிரியராக மட்டுமே அதுவரை பரிச்சயமாகியிருந்த ‘சோ’விடம் உள்ள எழுத்தாற்றலைக் கண்டு, அவரை தாம் ஆசிரியராக இருந்த தினமணி கதிர் பத்திரிகையில் எழுத வைத்து, எழுத்தாளர் ஆக்கியவர் சாவிதான். தினமணி கதிர் பத்திரிகையில் சோ எழுதிய ‘மை டியர் பிரம்மதேவா!’ என்னும் தலைப்பில் அமைந்த அரசியல் நையாண்டித் தொடர் கட்டுரைகள்தான், அவர் பின்னாளில் ஒரு முழுமையான அரசியல் பத்திரிகையை நடத்துவதற்கான அடித்தளமாக அமைந்தன என்று சொன்னால் மிகையில்லை.

46) பத்திரிகையாளர் சோ-வுக்கு பெருந்தலைவர் காமராஜின் மீது எத்தனை பெரிய அபிமானம் உள்ளதென்று அனைவருக்கும் தெரியும். ஆனால், ஆரம்ப காலத்தில் சோ காமராஜ் மீது அப்படியொன்றும் அபிமானம் கொண்டிருக்கவில்லை. அவருக்குப் பெருந்தலைவரின் பெருமையை உணர்த்தி, காமராஜ், சோ இருவரையும் தம் வீட்டுக்கு வரவழைத்து, சோவை காமராஜிடம் அறிமுகப்படுத்தி, பெருந்தலைவர் மீது சோவுக்கு மரியாதையும் பக்தியும் ஏற்படக் காரணமாக இருந்தவர் சாவிதான்.

47) தாம் தொடங்கிய ‘சாவி’ பத்திரிகையின் முதல் இதழிலேயே சுஜாதாவின் தொடர்கதை ஒன்றைத் தொடங்க விரும்பினார் சாவி. ஓர் எழுத்தாளரிடம் ஒரு தொடர்கதை கேட்டுப் பிரசுரிப்பது என்று முடிவு செய்துவிட்டால், உடனே ஒரு தலைப்பு சொல்லும்படி  கேட்பது சாவியின் வழக்கம். ஆனால், கதை இன்னதென்று எதுவும் நிச்சயிக்காத நிலையில் சுஜாதாவால் தலைப்பு எதுவும் சொல்ல இயலவில்லை. ‘நில்லுங்கள் ராஜாவே’ என்று சாவியே ஒரு தலைப்பு தர, அதற்கேற்ப உடனடியாக முதல் அத்தியாயத்தை எழுதிக் கொடுத்தார் சுஜாதா.

48) சாவி வைக்கும் தலைப்புகள் புதுமையாக இருக்கும். சாவியில் ‘ஆப்பிள் பசி’ என்றொரு தொடர்கதை எழுதினார் சாவி. இந்தத் தலைப்பு எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகரை மிகவும் கவர்ந்துவிட, அதே பாணியில் ‘விஸ்கி தாகம்’ என்னும் தலைப்பிட்டு ஒரு நாவல் எழுதினார் அவர்.

49) தலைப்பு பற்றிச் சொல்லும்போது, சாவி  ஆனந்த விகடனில் எழுதிய ‘விசிறி வாழை’ தொடர்கதைத் தலைப்பு குறித்தும் சொல்ல வேண்டும். “வயதான தொழிலதிபர் ஒருவருக்கும், சமூகத்தில் மிக உயர்ந்த நிலையில் இருக்கும் ஒரு பெண்மணிக்கும் இடையே காதல். இந்த ஒன்லைன் ஸ்டோரியை விரிவாக்கி தொடர்கதையாக எழுத முடியுமா? ஜெயகாந்தனோ அல்லது நீங்களோதான் இதை வெற்றிகரமாகச் செய்ய முடியும்” என்று விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் சொல்ல, ஒப்புக்கொண்ட சாவி, ‘விசிறி வாழை’ என ஒரு தலைப்பையும் உடனே சொன்னார். வாஷிங்டனில் திருமணம் ஒரு நகைச்சுவைத் தொடர்கதை என்றால், ‘விசிறி வாழை’ சென்டிமென்ட் நிரம்பிய ஒரு சீரியஸ் தொடர்கதை. 

“கதையே இன்னும் முடிவாகவில்லை. அதற்குள் ‘விசிறி வாழை’ என உடனே எப்படித் தலைப்பிட்டீர்கள்?” என ஆசிரியர் பாலசுப்ரமணியன் வியப்புடன் கேட்க, “கதாநாயகியின் வாழ்க்கை யாருக்கும் உபயோகமில்லாமல் வீணாகப் போவதாகத்தான் இந்தக் கதை நீளும் சாத்தியம் இருக்கிறது. விசிறி வாழை பார்க்க அழகாக இருக்கும். ஆனால், அதனால் யாருக்கும் உபயோகம் இராது. எனவேதான், அதையே தலைப்பாக வைத்தேன்” என்றார் சாவி.

50) சாவியால் முன்னுக்கு வந்த எழுத்தாளர்களின் பட்டியல் நீளமானது. ஆனால், அதற்கான பெருமை எதையும் தனக்கு எடுத்துக் கொள்ள மாட்டார் சாவி. “நான் யாரையும் உருவாக்கவும் இல்லை; வளர்த்துவிடவும் இல்லை. அவரவர்களுக்குத் திற்மை இருந்தது. அதன் காரணமாகவே அவர்கள் மேலுக்கு வந்தார்கள்” என்பார். அதையும்கூட  அருமையான ஓர் உதாரணத்தோடுதான் சொல்வார். “விளக்கு இருக்கிறது; அதில் போதுமான எண்ணெய் இருக்கிறது; திரியும் இருக்கிறது. சொல்லப்போனால் அது எரிந்துகொண்டும் இருக்கிறது. நான் கீழே கிடந்த ஒரு சின்ன குச்சியைக் கொண்டு திரியைத் தூண்டிவிட்டேன். அது பிரகாசமாக எரிவதாக உங்கள் கண்ணுக்குத் தெரிகிறது. அவ்வளவுதான்! விளக்கில் எண்ணெயும் இல்லாமல், திரியும் இல்லாமல் இருந்தால் தூண்டிவிட்டு என்ன பிரயோசனம்?” என்பார்.

(தொடரும்)


Thursday, August 04, 2016

சாவி-100 (IV)

வாரியார் சுவாமிகளின் பொன்மொழிகள், கி.வா.ஜ. சிலேடைகள் எனப் பல புத்தகங்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மரியாதைக்குரிய என் குருநாதர் சாவி அவர்கள் ஒரு கருத்தை நம் மனதில் பதியவைப்பதற்காகச் சொன்ன அழகழகான உவமானங்களைத் தொகுத்தே ஒரு புத்தகம் வெளியிடலாம் என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. நேரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்த ‘பிள்ளையார்’ உதாரணம், பத்திரிகையை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கு ‘சிராத்தம்’ உதாரணம்... என சாவி சார் சொன்ன அருமையான உவமான உதாரணங்களில், சட்டென்று என் நினைவுக்கு வருவனவற்றை இங்கே தருகிறேன்.

31) ஒரு பத்திரிகையில் சிறுகதை ஒன்றை நான்கரை பக்கங்களுக்கு லே-அவுட் செய்திருந்தார்கள். மீதி அரைப்பக்கத்துக்கு ஒரே ஒரு சின்ன ஜோக்கை மட்டும் வைத்து வடிவமைத்திருந்தார்கள். அந்த இடத்தில் தாராளமாக இரண்டு ஜோக்குகளை வைத்து லே-அவுட் செய்ய முடியும். ஆனால், கைவசம் தேர்வான ஜோக் வேறு இல்லையோ என்னவோ, ஆர்ட்டிஸ்ட் அந்த ஒரே ஒரு ஜோக்கை மட்டும் வைத்து வடிவமைத்திருந்தார். ஆனால், இடம் காலியாகத் தெரியக்கூடாது என்பதற்காக ஜோக்கையும் படத்தையும் லேசாகச் சாய்த்து வைத்து, மேலும் கீழும் கோடுகள் போட்டு, அந்த அரைப் பக்கத்தை நிரப்பியிருந்தார். 

அதை என்னிடம் காண்பித்து சாவி சார் சொன்னது இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. அவர் சொன்னார்... “இதப் பார்த்தியா... இது எப்படி இருக்குன்னா... எப்பவாவது நீ காலியான ரயில்ல பிரயாணம் செஞ்சிருக்கியா? அப்ப ஒருவேளை நீ கவனிச்சிருக்கலாம். எதிரெதிர் சீட்டுகள் காலியாக இருக்கும். அப்போ சில பேர் என்ன பண்ணுவாங்க தெரியுமா? அவங்க உட்கார ஜன்னலோரமா ஒரு சின்ன இடம் போதும். ஆனா, அவ்ளோ இடம் காலியா இருக்கே, அனுபவிக்கணும்னு அவங்களுக்குள்ளே ஒரு எண்ணம் வரும். அதனால, சரிஞ்சு உட்கார்ந்து, கால்களை எதிர்சீட்டுல நீட்டிக்கிட்டு, எல்லா இடத்தையும் ஆக்கிரமிச்சுக்கிட்டு கோணல் மாணலா உட்கார்ந்திருப்பாங்க. பார்க்கவே ஆக்வேர்டா இருக்கும். அப்படி இருக்கு இந்த லே-அவுட்.”

இதைக் கேட்ட பிறகும் ஒருவரால் அப்படியொரு லே-அவுட்டைச் செய்ய முடியுமா என்ன?!

32) எதைப் பற்றி எழுதினாலும், சுற்றி வளைத்து எழுதாமல், நேரடியாக விஷயத்துக்கு வந்துவிடவேண்டும் என்பார் சாவி. “பெங்களூர் மசாலா தோசை சாப்பிட்டிருக்கியா? அது போல வேறெங்கயும் வராது; அத்தனை சுவையா இருக்கும்.  மசால் தோசை ஆர்டர் பண்ணி வந்தவுடனே, ஓரத்துலேர்ந்து கிள்ளிக் கிள்ளித் தின்னக்கூடாது. எடுத்த எடுப்புல நடுவுல கைவைச்சு மசாலாவோட எடுத்துத் தின்னணும். அப்பத்தான் சுவையா இருக்கும். பெங்களூர் மசாலா தோசையை அப்படித்தான் சாப்பிடணும். அது போலத்தான் கட்டுரையோ, கதையோ ... எதை எழுதினாலும், ஆரம்ப வரியிலேயே எதைப் பத்தி எழுதப் போறோம்கிறதை வாசகர்களுக்குப் புரிய வைக்கிற மாதிரி, எடுத்த எடுப்பிலேயே மெயின் பாயிண்ட்டைத் தொட்டுடணும்!” என்பார். சொல்லும்போதே பெங்களூர் மசாலா தோசையின் சுவை நாக்கில் ஊறுவதோடு, எப்படி எழுத வேண்டும் என்கிற ஞானமும் நம் புத்தியில் ஊறும்.

33) எப்படித் தொடங்குவது என்று சொல்லித் தந்த என் ஆசான், எந்த எந்த விஷயத்தை எப்படி எப்படி எழுதவேண்டும் என்பதையும் சொல்லித் தந்திருக்கிறார். “ஒரு விஷயத்தை எப்படி பிரசெண்ட் பண்ணணும்னு ஒரு முறை இருக்கு. குழம்பைக் கரண்டியாலதான் போடணும்; அன்னத்தை அன்னவெட்டியாலதான் பரிமாறணும். இந்த சின்ன விஷயம் தெரிஞ்சாலே பாதி ஜர்னலிஸம் தெரிஞ்ச மாதிரி!” என்பார். வாட்ஸப், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட், வலைத்தளம் எனப் பரந்துபட்டுக் கிடக்கும் இன்றைய கணினி உலகில், எந்த எந்த விஷயத்தை எப்படி எப்படித் தரவேண்டும் என்று, சாவி சார் மட்டும் இன்றைக்கு இருந்திருந்தால், நச்சென்று சொல்லிப் புரிய வைத்திருப்பாரே என்கிற ஆதங்கம் என் அடி மனதில் உண்டாகத்தான் செய்கிறது.

34) தினமணி கதிர் பத்திரிகையில் பல புதுமைகளைச் சேர்த்து, அதை அசுர வளர்ச்சி அடையும்படி செய்தவர் சாவி. இதனால், அப்போது அவரையே தினமணி நாளேட்டையும் பார்த்துக்கொள்ளும்படி கேட்டுக்கொண்டார்களாம். அதற்கும் அற்புதமான ஓர் உதாரணம் சொல்லி மறுத்துவிட்டிருக்கிறார் சாவி. “தவில் வாசிக்கிறவன்தான் அதை நல்லா வாசிக்க முடியும். மிருதங்கம் வாசிக்கிறவனைக் கொண்டு போய் தவில் வாசிக்கச் சொல்லக் கூடாது. அபஸ்வரம்தான் மிஞ்சும். தினப் பத்திரிகை என்பது தவில் மாதிரி! அடிச்சு, வெளுத்து வாரணும். பர்முடேஷன் காம்பினேஷனெல்லாம் அதுல முக்கியமில்லே. ஆனா, வாரப் பத்திரிகைங்கிறது மிருதங்கம் வாசிக்கிற மாதிரி. மிருதங்கத்துல சின்னச் சின்ன பிருகாக்களையும் நுணுக்கமா கொண்டு வர்ற மாதிரி, வாரப் பத்திரிகையில நிறைய நகாசு வேலைகள் பண்ணி அழகா கொண்டு வர முடியும். நான் மிருதங்கம் வாசிக்கிறவன்; தவில் வாசிக்கிறவன் இல்லே!” இதைக் கேட்ட பின்னரும் அவரை வற்புறுத்தத் தோன்றுமா என்ன?!

35) கதையோ, கட்டுரையோ... அது எத்தனை முக்கியமோ, அதற்கான லே-அவுட்டும் அத்தனை முக்கியம் என்று கருதுபவர் சாவி. ஒரு குறிப்பிட்ட கதை, கட்டுரைக்கான வடிவமைப்பைப் பார்க்கும்போதே அந்தக் கதை அல்லது கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயத்தின் தன்மை வாசகர்களுக்குப் புரிந்துவிட வேண்டும் என்பார். நகைச்சுவைக் கட்டுரை என்றால் அதற்கான வடிவமைப்பு, தலைப்பு, தலைப்பை எழுதும் விதம் எல்லாமே தமாஷாக இருக்கவேண்டும்; சோகமான ஒரு மேட்டர் என்றால், அதற்கான வடிவமைப்பும் சோகத்தைப் பிரதிபலிப்பதாய் இருக்க வேண்டும். இப்படி, கதை, கட்டுரையும் அதற்கான வடிவமைப்பும் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருக்கவேண்டும் என்று வலியுறுத்திச் சொல்வார் சாவி.

 “தெருவுல கணவனும் மனைவியும் நடந்து போறாங்கன்னு வெச்சுப்போம். அவங்க ஒருத்தருக்கொருத்தர் எத்தனை அந்நியோன்னியமா இருக்காங்கன்னு அவங்க ஒட்டி உரசி நடந்து போறதை வெச்சே சொல்லிடலாம். இணைஞ்சு அழகா நடந்து போனாங்கன்னா, அவங்க தாம்பத்தியமும் ரொம்ப அழகுன்னு புரியும். கணவன் எனக்கென்னன்னு எங்கேயோ போய்க்கிட்டிருக்கான், அவன் பெண்டாட்டி பின்னாடி வந்துட்டிருந்தாள்னா அவங்களுக்குக் கல்யாணமாகி அஞ்சு வருஷத்துக்கு மேல ஆகியிருக்கும், தாம்பத்தியம் சலிச்சுப் போயிடுச்சுன்னு புரிஞ்சுக்கலாம். அதுக்கு பதிலா, அவ முன்னாடி நடந்து போறா; பின்னாடியே ஒரு ஆண் தயங்கித் தயங்கி, அங்கே இங்கே பார்த்துக்கிட்டுப் பம்மிப் பதுங்கி அவளைப் பின்தொடர்ந்து போனான்னா, ரெண்டு பேர்ல யாரோ ஒருத்தர் சரியில்லே; யார் கிட்டேயோ ஏதோ தப்பு இருக்குன்னு அர்த்தம். கதை, கட்டுரையும் அதற்கான லே-அவுட்டும் அந்நியோன்னியமான தம்பதி மாதிரி அழகா, பொருத்தமா இருக்கணும்!” பொருத்தமில்லாத லே-அவுட்டைப் பார்க்கும்போதெல்லாம் சாவி சார் சொன்ன இந்த உதாரணம்தான் சட்டென்று என் நினைவுக்கு வரும்.

36) ஒரு பத்திரிகை அச்சிட்டு ரெடியாகி வந்ததும், முதல் பிரதி ஆசிரியரின் மேஜைக்குத்தான் வரவேண்டும் என்பார் சாவி. அவர் தினமணி கதிரில் இருந்தபோதா, குங்குமம் பத்திரிகையில் இருந்தபோதா என்று நினைவில்லை... ஒருமுறை  அந்த வாரத்திய இதழ் தயாராகி, உதவி ஆசிரியர் மேஜையில் இருந்தது; ஆசிரியர் சாவியின் மேஜைக்கு அது ஏனோ வரவில்லை. அல்லது, ஆசிரியருக்கென கொண்டு வந்த பிரதியை அந்த உதவி ஆசிரியர் வாங்கிப் பார்த்திருக்க வேண்டும். இதை கவனித்துவிட்டார் சாவி. உடனே அந்த உதவி ஆசிரியரை அழைத்தார்.

“உனக்குக் கல்யாணம் ஆயிடுச்சா?” என்று கேட்டார். இளம் வயதினரான அவர், “இன்னும் இல்லை சார்!” என்று பவ்வியமாகச் சொன்னார். “பரவாயில்லை, ஆயிடுச்சுன்னே வெச்சுக்கோ! உன் பெண்டாட்டிக்குப் புதுப் புடவை வாங்கித் தரே. அவ உடனே என்ன செய்யணும்? அதைக் கட்டிக்கிட்டு ஊர் பூரா போய்க் காட்டிட்டு, கடைசியா உங்கிட்டே வந்து காட்டணுமா? முதல்ல உன்கிட்டேல்ல கொண்டு வந்து காட்டணும்? அது மாதிரிதான் இதுவும். இஷ்யூ ரெடியானதும் முதல்ல இங்கே என் மேஜை மேல ஒரு காப்பி கொண்டு வந்து வைக்கணும். புரியுதா?” என்றார். அதன்பிறகும் அந்த உதவியாளர் ஆசிரியரின் மேஜைக்கு முதல் காப்பி வைக்க மறந்திருப்பார் என்றா நினைக்கிறீர்கள்?!

37)  மல்யுத்த வீரர்களான கிங்காங், தாராசிங் இருவரையும் ஊர் ஊராக அழைத்துச் சென்று, குத்துச் சண்டை நிகழ்ச்சிகள் நடத்தி, டிக்கெட் போட்டு வசூல் செய்திருக்கிறார் சாவி. அன்றைய குத்துச் சண்டையில் சிறப்பு அயிட்டம் என்ன என்பதை விளக்கி, ‘பாம்ப்லெட்’ எனப்படும் துண்டுப் பிரசுரம் அச்சிட்டு, ஜனங்களிடையே விநியோகிப்பார். அதைப் படித்துவிட்டு ஆர்வத்துடன் ஜனங்கள் அந்தக் குத்துச் சண்டையைக் காணக் கூட்டம் கூட்டமாக வருவார்கள். இன்றைக்கு டி.வி-யில் வெளிநாட்டு சேனல்களில் WWF குத்துச் சண்டைகளில் கடைப்பிடிக்கப்படும் யுக்திகளையெல்லாம் அன்றைக்கே செயல்படுத்தியவர் சாவி.

தாராசிங் நெற்றியில் வரிவரியாக மடிப்புச் சுருக்கங்கள் இருக்கும். சண்டைக்கு முன், அந்த மடிப்புகளில் லேசாக பிளேடால் தாராசிங்கை கீறிக்கொள்ளச் சொல்வாராம் சாவி. பிளேடு கீறிய இடத்தில் ரத்தம் கசிந்து உறைந்து போகும். பின்பு சண்டையில் கிங்காங்கிடம் தாராசிங்கின் நெற்றியில் உள்ளங்கையால் அறையச் சொல்வார். அப்படி அறையும்போது, ரத்தம் காய்ந்த இடம் உதிர்ந்து, புதிய ரத்தம் பளிச்செனக் கிளம்பும். இது பார்வையாளர்களின் கண்ணுக்குத் தெரிந்தால்தானே அவர்களிடம் ஒரு விறுவிறுப்பு உண்டாகும்! அதற்கும் ஒரு வழி செய்தார் சாவி. கிங்காங்கை வெள்ளை பனியன் அணிந்து சண்டையிடச் சொல்வார். தாராசிங்கைத் தாக்கி, ரத்தம் ஒட்டிய கையை தன் வெள்ளை பனியன் மீது அறைந்து கொள்ளச் சொல்வார். அப்படிச் செய்யும்போது, வெள்ளை பனியன் ரத்தமாகி, பார்வையாளர் கண்ணுக்குப் பளிச்செனத் தெரியும். சண்டை சூடு பிடிக்கும். பின்பு, ஏற்கெனவே திட்டமிட்டபடி, தாராசிங் பாய்ந்து கிங்காங் மேல் மோதி, அவரின் பனியனைக் கிழித்துக் கந்தல் கந்தலாக்குவார். “ஒரு பனியன் போனா என்ன, ஆயிரம் பனியன் வாங்குற அளவுக்கு வசூல் சேர்ந்துடும்” என்று சொல்லிச் சிரிப்பார் சாவி.

செய்கிற எந்த ஒரு காரியத்தையும் எப்படித் திட்டமிட்டுக் கச்சிதமாகச் செய்து மக்களிடம் கொண்டு போய்ச் சேர்க்க வேண்டும் என்கிற நுட்பம் தெரிந்தவர் சாவி.

38) அந்தக் காலத்தில் தியாகராய நகரில், காஃபி பேலஸ் என்று ஒரு சின்ன ஹோட்டல் வைத்து நடத்தியிருக்கிறார் சாவி. ம.பொ.சி., சாண்டில்யன் எனப் பல பிரபலங்கள் அதன் ரெகுலர் கஸ்டமர்களாக இருந்தனர். ஆனால், அங்கு வந்து சாப்பிட்டுவிட்டுச் சென்ற பலபேர், தாங்கள் சாப்பிட்டதற்குக் காசு கொடுத்தால் சாவி தப்பா நினைத்துக் கொள்வாரோ என்று கருதியே, பணம் எதுவும் தராமல் போய்க்கொண்டிருந்தார்கள். இதனால் ஒரு கட்டத்தில் அந்த ஹோட்டலைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நஷ்டமாகி, சாவி அதை இழுத்து மூடும்படியாகிவிட்டது.

39) சினிமா நட்சத்திரங்களுக்கு மட்டுமே கட்-அவுட்கள், பேனர்கள் வைக்கப்பட்டு, விழாக்கள் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த காலத்தில் எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் விழாக்கள் எடுத்து, அவர்களை கௌரவப்படுத்தி, அவர்களுக்கும் ஸ்டார் அந்தஸ்து ஏற்படுத்தித் தந்தவர் சாவிதான். எழுத்தாளர்கள் சுஜாதா, புஷ்பாதங்கதுரை,  சிவசங்கரி, ஓவியர் கோபுலு, ஜெயராஜ் ஆகியோருக்கு விழாக்கள் எடுத்துள்ளார் சாவி.

40) எழுத்தாளர்களுக்கும் ஓவியர்களுக்கும் மட்டுமல்ல; வாசகர்களுக்கும் விழா எடுத்தவர் சாவி. வி.ஜி.பி. கோல்டன் பீச்சில், கடற்கரை மணலில் தங்கச் சாவியைப் புதைத்து வைத்து, வாசகர்களைத் தேடச் சொல்லி ஒரு போட்டி நடத்தி, அதை வாசகர் திருவிழாவாகவே நடத்தியிருக்கிறார் சாவி. 

எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க. ஜானகி அணி, ஜெயா அணி என இரண்டாக உடைந்தபோது நடந்த சட்டமன்றத் தேர்தலில், ‘அடுத்த முதல்வர் யார்?’ என்று வாசகர்களுக்குப் போட்டி வைத்து, கலைஞர் பெயரைக் குறிப்பிட்டு எழுதியவர்களில் மாவட்ட வாரியாகப் பரவலாக ஒரு பத்து பேரைத் தேர்ந்தெடுத்து, விழா எடுத்து, அவர்களுக்கு தமிழக முதல்வர் கையால் மாலை அணிவிக்கச் செய்தார் சாவி.

(தொடரும்)

சாவி-100 (III)

த்திரிகையுலகப் பிதாமகர் சாவி அவர்களின் மகள் உமா, தன் அப்பாவின் நூற்றாண்டு நினைவாக, அப்பாவோடு நெருக்கமாக இருந்தவர்களில் சிலரை அழைத்து, ஐலண்ட் கிரவுண்டில் உள்ள ஜிம்கானா கிளப்பில் இன்று ஒரு கெட்-டுகெதர் நடத்தினார். என்னையும் அழைத்திருந்தார். சாவி சார் இன்றில்லை; என்றாலும், அவர்களின் குடும்பத்தார் என்னை நினைவு வைத்திருந்து அழைத்ததானது, சாவி சாரே என்னை அழைத்து ஆசீர்வதித்தது போல் என்னை நெகிழச் செய்தது. எழுத்தாளர் திருமதி சிவசங்கரி, எழுத்தாளர் திரு.பட்டுக்கோட்டை பிரபாகர், ஓவியர் திரு.ஜெயராஜ், அவரின் மனைவி திருமதி ரெஜினா ஜெயராஜ், ராணிமைந்தன் என சாவி சாரின் அன்புக்குப் பாத்திரமானோர் சுமார் 20 பேர் மட்டும் கலந்துகொண்ட இனிய குடும்ப விழாவாக அது அமைந்தது. பல வருடங்களுக்குப் பிறகு சாவி சாரின் அன்பு மகள்கள் ஜெயந்தி, உமா, ஜெயஸ்ரீ மற்றும் சாவி சாரின் மருமகன்கள் எனப் பலரை இன்று சந்தித்து உரையாடினேன். 25 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்களையெல்லாம் சந்திக்கிறோம் என்கிற நினைவே எழாத வண்ணம், ஏதோ தினம் தினம் பார்த்துப் பேசிப் பழகிக்கொண்டு இருந்தவர்கள் போன்று அவர்கள் கலகலப்பாகவும் அன்புடனும் உரையாடியது ஓர் இனிய அனுபவம்!

இனி, சாவி-100  தொடர் பதிவின் மூன்றாவது பத்து:

21) ‘வாஷிங்டனில் திருமணம்’ தவிர,  விசிறி வாழை, இங்கே போயிருக்கிறீர்களா, கேரக்டர், ஆத்திசூடிக் கதைகள், திருக்குறள் கதைகள், பயணத் துளிகள் எனப் பல கதை, கட்டுரைகளை ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறார் சாவி.

22) ஓவிய ரசனை அதிகம் உண்டு சாவிக்கு. ஓவியர் கோபுலு, ஓவியர் ஜெயராஜ், ஓவியர் மணியம்செல்வன் என ஒவ்வொரு ஓவியரின் ஸ்பெஷாலிட்டி என்ன என்பதை நுணுக்கமாகக் கவனித்து அவர் சொல்லும்போதுதான், அந்த ஓவியத்தில் உள்ள நுட்பமே நமக்குப் புரிய வரும். இல்லையெனில், மேலோட்டமாக ‘அழகாக இருக்கிறது’ என்பதற்கு மேல் எதுவும் தோன்றாது நமக்கு. 

23) ஓவியராக வேண்டும் என்று ஆசைப்பட்டவர் சாவி. சின்ன வயதில் அதற்கான வாய்ப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. எனினும், சென்னை, தம்புச்செட்டித் தெரு, அரண்மனைக்காரன் தெருக்களில் நடந்துபோகும்போது, எந்தக் கடையின் ஸைன்போர்டாவது அழிந்தோ, மங்கலாகவோ காணப்பட்டால், உடனே அந்தக் கடையின் முதலாளியை அணுகி, தான் அந்த போர்டை அழகாக எழுதிக் கொடுக்கட்டுமா என்று கேட்டு, அப்படியே எழுதிக் கொடுத்து, வருமானம் ஈட்டியவர் சாவி. பின்னாளில், முதிர்ந்த வயதில் சீனப் பயணம் மேற்கொண்டு திரும்பியபோது, அங்கிருந்த புகழ்பெற்ற ஓவியர்களின் படைப்புகளையும், படம் வரைவதற்கான ஸ்டேண்டு உள்பட டிராயிங் உபகரணங்களையும் வாங்கி வந்து, ஆர்வத்தோடும் ஈடுபாட்டோடும் படம் வரைவதை  ஒரு பொழுதுபோக்காக ஆக்கிக் கொண்டார் சாவி.

24) நம்மில் பலரிடம் டைமிங் சென்ஸ் இல்லாதது குறித்து மிகவும் வருத்தப்படுவார் சாவி. எதையும் குறித்த நேரத்தில் செய்து முடிப்பதற்கு, தானே ஒரு முன்னுதாரணமாகத் திகழ்வார்.  அவர் சொல்வார்... “பிள்ளையார் சதுர்த்தியன்னிக்கு வந்தாதான் அது பிள்ளையாரு; மறுநாள் வந்தா வெறும் களிமண்ணுதான்!” நேரத்தின் முக்கியத்துவத்தை இதைவிட யாராலும் பொட்டில் அடித்தாற்போல் சொல்லிப் புரிய வைக்க முடியாது. 

25) வாழ்க்கையில் பல நெருக்கடிகளையும், துயரங்களையும், அதிர்ச்சிகளையும் சந்தித்தவர் சாவி. ஆனாலும், அதைப் பற்றியெல்லாம் அவர் பொதுவெளியில் அதிகம் பேசியதில்லை. “ஆண்டவனுக்குத் தெரியும், இவனுக்கு எதையும் தாங்கிக்கிற சக்தி உண்டுன்னு. அதான், எனக்கே மீண்டும் மீண்டும் பெரிய பெரிய துக்கங்களைக் கொடுக்கிறான்!” என்பார். தமது துயரங்களைக் கரைக்கும் வடிகாலாக பத்திரிகைப் பணியை பாவித்தார் சாவி. பத்திரிகை அவர் மூச்சு! பத்திரிகை அவர் தாய் மடி!

26) ஒரு பத்திரிகையை எப்படி நடத்த வேண்டும், எப்படி நடத்தக் கூடாது என்பதை சாவி சொல்லும் அழகே அழகு! “பத்திரிகையை சிராத்தம் மாதிரி நடத்தக் கூடாது. அரிசியும் வாழைக்காயும் கொடுத்து ஒப்பேற்றிவிடலாம் என்று நினைக்கக் கூடாது. ஒவ்வொரு இதழைக் கொண்டு வருவதையும் ஒரு கல்யாணம் மாதிரி பண்ணணும். பாத்திரம், துணிமணி, நகைகள் எனப் பார்த்துப் பார்த்து வாங்குகிற மாதிரி, விஷயங்களைத் தேடித் தேடிச் சேகரிக்கணும். மேள தாளத்துக்கு, மண்டபத்துக்கு ஏற்பாடு பண்ற மாதிரி பத்திரிகையின் லே-அவுட், ஒவ்வொண்ணையும் ரசிச்சு ரசிச்சுப் பண்ணணும்.” சாவி சாரின் இந்த அட்வைஸ், இன்றைய ஜர்னலிஸ்டுகளுக்கும்கூட ஒரு வேத வாக்கு!

27) ஆனந்த விகடன், குமுதம், கல்கி என மூன்றே மூன்று பத்திரிகைகள் மட்டுமே வாசகர்களிடம் வரவேற்பு பெற்றிருந்த அந்தக் காலத்தில், வெறும் பத்தாயிரம் பிரதிகள் மட்டுமே விற்றுக்கொண்டிருந்த தினமணி கதிர் பத்திரிகைக்குப் பொறுப்பேற்று, அதில் பல புரட்சிகள் செய்து, அதன் விற்பனையை கிடுகிடுவென இரண்டரை லட்சம் வரை உயர்த்தியவர் சாவி.

28) எழுத்தாளர் சுஜாதாவை ஒரு பெண் எழுத்தாளர் என வாசகர்கள் நினைத்துக்கொண்டிருந்த அந்தக் காலத்தில், பெரிய சைஸ் தினமணி கதிரில் ‘நில், கவனி, தாக்கு!; என்னும் சுஜாதாவின் தொடர்கதைக்கு, பெரிய மீசை வைத்த  சுஜாதாவின் முகத்தை  ஒரு முழுப்பக்க அளவுக்குப் பிரசுரித்து, அவரை வாசகர்கள் மத்தியில் பிரபலப்படுத்தியவர் சாவி.

29) ’இங்கே போயிருக்கிறீர்களா?’ கட்டுரைகளில் சாவி ஒரு புதுமையைச் செய்தார். வாசகர்களையும் தன்னோடு பயணம் அழைத்துக்கொண்டு போய், அங்கேயெல்லாம் சுற்றிக் காட்டும் விதமான நேர்முக வர்ணனையில் அமைந்த கட்டுரைகள் அவை. இதே உத்தியைப் பின்னாளில் பல எழுத்தாளர்கள் கையாண்டு கட்டுரைகள் எழுதியுள்ளார்கள். அவர்களுக்கெல்லாம் முன்னோடி சாவி.

30) ஓர் எழுத்தாளரின் படைப்புகள் ஒரு பத்திரிகையில் வெளியானால், அதைப் புத்தகமாக வெளியிடும் உரிமையும் அந்தப் பத்திரிகைக்குதான் உண்டு என அன்றைக்கு நடைமுறையில் இருந்த நிலையை மாற்றி, எழுத்தாளர்களுக்கே அவர்களின் படைப்புகளுக்கான உரிமை உண்டு எனப் போராடிப் பெற்றுத் தந்தவர் சாவிதான். “அதெப்படி..? கோஷா ஆஸ்பத்திரியில் ஒருத்தி பிள்ளை பெற்றுக் கொண்டால், அந்தக் குழந்தை அந்த ஆஸ்பத்திரிக்குதான் சொந்தம் என்று ஆகிவிடுமா என்ன?” என்று சாவி வைத்த வாதத்தில் கச்சிதமான உதாரணமும் இருந்தது; ரசிக்கத்தக்க நகைச்சுவையும் இருந்தது; மறுக்கமுடியாத நியாயமும் இருந்தது!

(தொடரும்) 


Tuesday, August 02, 2016

சாவி-100 (II)

சாவி-100 வரிசையில் இரண்டாவது பத்து இங்கே...

11) வெள்ளிமணி, சாவி பத்திரிகைகள் தவிர, மோனா, சுஜாதா, திசைகள், பூவாளி, விசிட்டர் லென்ஸ் ஆகிய பத்திரிகைகளையும் சாவி சொந்தமாகத் தொடங்கி நடத்தியுள்ளார். இவற்றில் ‘திசைகள்’, பத்திரிகை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதேபோல் ‘பூவாளி’, ஆங்கில ரீடர்ஸ் டைஜஸ்ட்டுக்கு இணையான தமிழ்ப் பத்திரிகையாக விளங்கியது. சாவி தொடங்கிய விசிட்டர் லென்ஸ் பத்திரிகைதான் இன்றைய இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிஸ பத்திரிகைகளுக்கெல்லாம் முன்னோடி என்று சொன்னால் மிகையாகாது. இதன் ஆசிரியராக இருந்தவர்தான் பின்னர் ‘விசிட்டர் அனந்த்’ என்று அடைமொழியோடு அழைக்கப்பட்டார்.

12) சாவி ‘ஆன்ட்டெனா’ என்றொரு பத்திரிகை தொடங்குவதாகத் திட்டமிட்டிருந்தார். சினிமா பத்திரிகைகள் இருப்பதுபோல் முழுக்க முழுக்க டி.வி-யை மையமாகக் கொண்டு இந்தப் பத்திரிகையை நடத்த அவர் எண்ணியிருந்தார். சாவி பத்திரிகையில் தொடர்ந்து விளம்பரங்களும் கொடுத்து வந்தார். பல காரணங்களால், அதை அவரால் தொடங்க இயலாமல் போனது. என்றாலும், மக்களின் ரசனையை பல்லாண்டுகளுக்கு முன்பே தீர்க்கதரிசனமாக உணர்ந்து, அதற்குத் தீனி போடும் விதத்தில் பத்திரிகை நடத்த வல்லவர் சாவி என்பதற்கான அத்தாட்சி இது என்பதில் சந்தேகம் இல்லை.

13) நகைச்சுவை எழுத்தாளர்கள் என்று பட்டியல் இட்டால், கல்கி, தேவனுக்கு அடுத்தபடியாக நம் நினைவுக்கு வருபவர் சாவி அவர்கள்தான்.

14) ஆனந்த விகடனில் ‘சாவி’ எழுதிய ‘வாஷிங்டனில் திருமணம்’ பல புதுமைகளை உள்ளடக்கியிருந்தது. அத்தியாய எண்களுக்குப் பதிலாக, தலைப்பில் உள்ள வா, ஷி, ங், ட... என்கிற எழுத்துக்களையே அத்தியான எண்களாக்கி, 11 வாரம் இந்தத் தொடர்கதையை எழுதினார் சாவி. எந்த வாரமும் இதன் எழுத்தாளர் பெயர் வெளியிடப்படவே இல்லை. கடைசி அத்தியாயத்தின் இறுதியில்தான் மிகச் சிறியதாக ‘சாவி’ என்ற பெயர் காணப்பட்டது. வாராவாரம் வாசகர்களை குலுங்கக் குலுங்கச் சிரிக்கச் செய்த இந்தக் கதை, சாவியின் மாஸ்டர் பீஸ் படைப்பாகவே ஆகிவிட்டது. இது பூர்ணம் விஸ்வநாதன் குழு உள்பட பல்வேறு குழுக்களால் நாடகமாக நடிக்கப்பட்டு, ஆயிரம் முறைகளுக்கு மேல் அரங்கேறியிருக்கிறது. அந்தக் காலத்தில், பெரும்பாலான திருமண விழாக்களில், தாம்பூலப் பையில் ‘வாஷிங்டனில் திருமணம்’ புத்தகத்தையும் வைத்துக் கொடுப்பது வழக்கத்தில் இருந்தது.

15) தேசப்பிதா மகாத்மா காந்தி நவகாளி யாத்திரை மேற்கொண்டபோது அவருடனே நடைப்பயணம் செய்து, அந்த அனுபவங்களை ‘நவகாளி யாத்திரை’ என்னும் தலைப்பில் தொடர் கட்டுரையாக எழுதியுள்ளார் சாவி.

16) எவரையும் மனம் திறந்து பாராட்டுவதில் சாவிக்கு நிகர் யாருமில்லை. தன் ‘சாவி’ பத்திரிகையில் வெளியான படைப்புதான் என்றில்லை; வேறு ஒரு பத்திரிகையில் நல்ல சிறுகதையையோ, ஓவியத்தையோ கண்டாலும், உடனே அவரைக் கூப்பிட்டுப் பாராட்டுவார் சாவி. அந்தப் பாராட்டு உதட்டிலிருந்து வராமல் அவரது உள்ளத்தின் அடித்தளத்திலிருந்து வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

17) கர்னாடக இசைக்குப் பரம ரசிகர் சாவி. மகாராஜபுரம் விஸ்வநாத அய்யர் கச்சேரி என்றால் உயிர். கர்னாடக இசைப் பாடகர் மதுரை சோமுவைத் தமது இல்லத்துக்குப் பலமுறை வரவழைத்து, கச்சேரி செய்யச் சொல்லி அனுபவித்து ரசித்து, அவரை கௌரவப்படுத்தி அனுப்பியுள்ளார்.

18) இயக்குநர் கே.பாலசந்தர், சாவியின் ஆப்த நண்பர். இருப்பினும், இயக்குநர்களான மணிரத்னம், பாரதிராஜா இருவரின் திறமையையும் மிகவும் போற்றினார். ஒருமுறை, ‘உங்களுக்குப் பிடித்த இயக்குநர் யார்?’ என்ற கேள்விக்கு, “அன்று, பாலசந்தர்; இன்று, மணிரத்னம்; என்றும் பாரதிராஜா’ என்று பதில் சொன்னார். ”இந்த பதிலைப் படித்தால், உங்கள் நண்பர் பாலசந்தருக்கு உங்கள் மேல் வருத்தம் உண்டாகாதா?” என்று கேட்டேன். “கட்டாயம் வருத்தப்பட மாட்டார். ஏனென்றால், அவர் என் நண்பர்!” என்றார் சாவி அழுத்தமாக.

19) சரித்திரக் கதை, கவிதை என்றால் சாவிக்கு அலர்ஜி!

20) சாவிக்கு மிகவும் பிடித்த ஊர் - சிங்கப்பூர். அதேபோல், சாவியை மிகவும் கவர்ந்த விஷயம் ஜப்பானியர்களின் பர்ஃபெக்‌ஷன். தாமும் அதேபோன்று பர்ஃபெக்‌ஷனாக நடந்துகொள்வார்.

(தொடரும்) Monday, August 01, 2016

சாவி-100

நானும் என் குடும்பமும் இப்போது சாப்பிட்டுக்கொண்டிருக்கிற சோறு, சாவி எனும் பத்திரிகையுலகப் பிதாமகர் போட்டது. சிறுகதைகள் சில எழுதியதைத் தவிர வேறு எந்தத் தகுதியும் இல்லாத என்னை, எந்தக் கேள்வியும் கேட்காமல், 'உனக்குப் பத்திரிகையில வேலை செய்யணும்னு ஆசை இருக்கில்லே, அது போதும்!' என்று சொல்லி, தம் சாவி பத்திரிகையில் உதவியாளனாகச் சேர்த்துக்கொண்டு, பத்திரிகையின் நுட்பங்களை தாய்க்குத் தாயாய், தகப்பனுக்குத் தகப்பனாய் இருந்து சொல்லிக் கொடுத்து, என்னைப் பொறுப்பாசிரியர் ஆக்கி அழகு பார்த்தவர் சாவி. பின்னாளில், ஒரு மனஸ்தாபத்தில் அவருடன் கோபித்துக்கொண்டு விலகி, ஆனந்த விகடனில் சேர்ந்த பின்னர், எங்கள் சேர்மன் மதிப்புக்குரிய எஸ்.பாலசுப்ரமணியன் சொன்ன ஒரு தகவல், என் குருநாதர் சாவி மீது முன்னைவிட அளப்பரிய மரியாதையையும் அபிமானத்தையும் பல்லாயிரம் மடங்கு பெருக்கிவிட்டது. "ரவி, விகடனில் வேலை கேட்டு உன் விண்ணப்பம் இங்கே வந்தவுடனே, உன்னைப் பத்தி சாவி கிட்டே விசாரிச்சேன். 'தங்கமான பையன். பொறுப்பான பையன். விட்டுராதீங்கோ! அவன் உங்களுக்குக் கிடைச்ச அஸெட்னுதான் சொல்லுவேன்'னு உன்னைப் பத்தி ஆகா, ஓகோன்னு சொன்னார்" என்றார் சேர்மன். 'அஸெட்' என்பதெல்லாம் பெரிய வார்த்தை. ஆனால், தன்னிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி இன்னொரு பெரிய பத்திரிகையில் பணியில் சேர விண்ணப்பம் போட்டிருக்கும் ஒருவனைப் பற்றிப் புகழ்ந்து பேச வேண்டுமென்றால், அதற்கு எத்தனைப் பெரிய உள்ளம் வேண்டும். அதுதான் சாவி!
வரும் ஆகஸ்ட் 10-ம் தேதி அவரின் நூற்றாண்டு. அதையொட்டி, அமரர் சாவியை கௌரவிக்கும் பொருட்டு, ஆனந்த விகடனில் அவரைப் பற்றி ஒரு சிறு கட்டுரை எழுதியுள்ளேன். அவர் என்னைத் தூக்கி உட்கார்த்தி வைத்திருக்கும் இந்த உயரமான இடத்துக்கு என்னாலான அணில் பங்கு நன்றிக்கடன் இது!
சாவியின் நூற்றாண்டையொட்டி, அவரைப் பற்றிய துணுக்குத் தகவல்களை இன்றிலிருந்து தினத்துக்கு 10 தகவல்களாக, வருகிற 10-ம் தேதி வரையில் மொத்தம் 100 தகவல்களை இங்கே பகிரலாம் என்று எண்ணியுள்ளேன்.
முதல் பத்து இங்கே...
1) பத்திரிகையுலகப் பிதாமர் சா.விஸ்வநாதன் என்கிற சாவி பிறந்தது 10.08.1916-ல்; அமரர் ஆனது 9.02.2001-ல்.
2) காஞ்சி மகா பெரியவா அவ்வப்போது போய்த் தங்கும் கலவை என்னும் ஊரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது மாம்பாக்கம் என்னும் கிராமம். அங்கே சாமா சுப்பிரமணிய அய்யர், மங்களம் அம்மாள் தம்பதியின் புதல்வராகப் பிறந்தார் சாவி.
3) சா.விஸ்வநாதன் என்னும் தம் பெயரைத்தான் சுருக்கி சாவி எனப் புனைபெயராகச் சூட்டிக்கொண்டார் சாவி. பின்னாளில் இதே பெயரில்தான் பத்திரிகை தொடங்கி நடத்தினார். 
4) விஸ்வநாதன் என்னும் பெயரை வழக்கமாகப் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் எழுதும்போது Viswanathan என்றுதான் எழுதுவார்கள். ஆனால், சாவி சாரோ வித்தியாசமாக தமது பெயரை  w-க்கு பதிலாக v எழுத்தைப் போட்டு, Visvanathan என்றுதான் எழுதுவார்.
5) காஞ்சி மகா பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர் சாவி. அதேபோல், புட்டபர்த்தி சாயிபாபாவிடமும் தீவிர பக்தி கொண்டவராக இருந்தார்.
6) சாவி சாருக்கு மிகவும் இஷ்ட தெய்வம் என்றால், பெங்களூரில் உள்ள ‘பள்ளத்துப் பிள்ளையார்’தான். எப்போது பெங்களூர் போனாலும், பள்ளத்துப் பிள்ளையாரை தரிசிக்காமல் வரமாட்டார். பள்ளத்துப் பிள்ளையாருக்குப் பெரிய கோயில் எல்லாம் கிடையாது. பெங்களூர் சாலையின் ஓரமாக, ஒரு பிளாட்பாரத்தில் இரண்டு மூன்று படிகள் இறங்கிச் செல்லும்படியான ஒரு பள்ளத்தில் வீற்றிருக்கிறார் பிள்ளையார்.
7) ஆனந்த விகடன், தினமணி கதிர், குங்குமம் ஆகிய பத்திரிகைகளில் சாவி ஆசிரியராகப் பணியாற்றியது பலருக்கும் தெரிந்திருக்கும். ஆனால், அதற்கு முன்பே விசித்திரன், ஹனுமான், சந்திரோதயம், தமிழன் போன்ற பத்திரிகைகளில் பணியாற்றியுள்ளார் சாவி.
8) பல்லாண்டுகளுக்கு முன்பே ‘வெள்ளிமணி’ என்னும் இலக்கியப் பத்திரிகையை நடத்தியுள்ளார் சாவி. முதன்முதலில் சிறுகதைகளுக்கு வண்ணப்படம் அச்சிட்டு வெளியிட்டது வெள்ளிமணி பத்திரிகைதான்!
9) 1938-ம் ஆண்டு, ஆனந்த விகடன் பத்திரிகையில், ஆசிரியர் கல்கியிடம் உதவி ஆசிரியராகச் சேர்ந்தார் சாவி.
10) சாவி தினமணி கதிரிலிருந்து விலகியபோது, நட்பின் காரணமாக சாவி சாருக்காகவே ஒரு பத்திரிகையைத் தொடங்கினார் கலைஞர் மு.கருணாநிதி. அதுதான் ‘குங்குமம்’.
- தொடரும்.