உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, December 26, 2017

நான் பழகிய எழுத்தாளர்!

சிவசங்கரி - கம்பீர நாயகி!

சிவசங்கரி, அனுராதா ரமணன், இந்துமதி மூவரையும் தமிழ் எழுத்துலகின் முப்பெரும்தேவியர் என்றே சொல்வேன். இதைச் சில வருடங்களுக்கு முன்புகூட ஒரு ஃபேஸ்புக் பதிவில் சொல்லியிருந்தேன். பள்ளிக்கூடத்தில் படிக்கும் காலத்திலிருந்து இம்மூவரின் சிறுகதைகளையும், தொடர்கதைகளையும் நான் படித்து, இவர்களின் ரசிகனாகவே ஆகியிருந்தேன்.

மூவரில், மறைந்த எழுத்தாளர் அனுராதா ரமணன் எனக்கு நல்ல பழக்கம். திருமதி இந்துமதியுடன் போனில்கூடப் பேசியதில்லை. திருமதி சிவசங்கரியைப் பற்றித்தான் இப்போது நினைவுகூர விரும்புகிறேன்.

கம்பீரமான பெயர்; பெயருக்கேற்ற கம்பீரமான மனுஷியாக என் மனதில் பதிந்தவர் திருமதி சிவசங்கரி. இவரைப் பார்க்கும்போது ஒரு மிடுக்கான கலெக்டராகவோ, கண்டிப்பான ஒரு கல்லூரிப் பேராசிரியராகவோதான் என மனதில் ஒரு பிம்பம் எழும்.

அந்தக் காலத்தில் பெரிய சைஸ் தினமணிகதிரில் இவரின் பல சிறுகதைகளைப் படித்திருக்கிறேன்.சியாமா என்கிற தன் நாயைப் பற்றிக்கூட இவர் அதில் எழுதியிருந்ததைப் படித்து வியந்திருக்கிறேன். சுவாரஸ்யமாக எழுதுவதற்குப் பெரிய விஞ்ஞான ஆராய்ச்சியெல்லாம் செய்ய வேண்டாம், நம்மைச் சுற்றி நடப்பதை வைத்தே அற்புமாக எழுத முடியும் என்பதை இவரின் எழுத்துகள் நிரூபித்துக் காட்டியிருக்கின்றன.

ஒரு சிறுகதை; இதுவும் பெரிய சைஸ் தினமணிகதிரில் வந்ததுதான். ஒருவருக்கு அல்லது ஒருத்திக்கு ஒரு நபரின் பெயர் மறந்துபோய்விடும். அவர் அல்லது அவளின் அன்றாட வேலையே பாதிக்கும் அளவுக்கு, அந்தக் குறிப்பிட்ட நபரின் பெயர் என்னவாயிருக்கும் என்று நாள்பூரா சிந்தனை ஓடிக்கொண்டிருக்கும். சிறுகதை முழுக்க அவர் அல்லது அவளின் இந்த ஊசலாட்டம்தான்! இதை ஒரு சுவாரஸ்யமான சிறுகதையாக இன்றைக்குக்கூட என்னால் எழுத முடியுமா என்று தெரியவில்லை. அத்தனை பிரமாதப்படுத்தியிருப்பார் சிவசங்கரி. நமக்கே அந்தப் பெயரைத் தெரிந்துகொள்ளாவிட்டால் மண்டை வெடித்துபோய்விடும் அளவுக்குக் கதையில்பெப் ஏறியிருக்கும்.

கடைசியில், மாடிப்படிகளின் கடைசி படி அருகில் உள்ள கைப்பிடிச் சுவர் மீது கை வைக்க, அதன் பந்து போன்ற தலைப்பகுதி ஆடும். என்ன இது, ஆடுகிறதே! இதைச் சரிசெய்ய வேண்டும் என்று அவர் அல்லது அவள் நினைக்கும்போதே, சட்டென்று அந்த நபரின் பெயர் நினைவுக்கு வந்துவிடும். ஆடு… ஆடு… ஆடிய… ம்… ஆடியபாதம்!

ஆஹா… சிறுகதையின் விவரணை கொஞ்சம் முன்னேபின்னே இருக்கலாம்; ஆனால், அந்தச் சிறுகதையைப் படித்த மாத்திரத்தில், அந்தப் பெயரைத் தெரிந்துகொண்ட மாத்திரத்தில், அந்தக் கதாபாத்திரம் அடைந்த உற்சாகத்தையும் சந்தோஷத்தையும் நானும் அடைந்தேன் என்பதுதான் நிஜம். (இந்தஎன்பதுதான் நிஜம் என்கிற சொல்லாடல், மொழிநடைகூட சிவசங்கரி அவர்களுடையதுதான். அவரின் கதைகளில் அடிக்கடி இந்த நிஜம் வரும். அங்கிருந்து எனக்குத் தொற்றிக்கொண்டது.)

நான் பி.யூ.சி-யில் கோட் அடித்துவிட்டு, அரியர்ஸ் முடிப்பதில் மும்முரமாக இருந்த 1975-ம் ஆண்டு. விழுப்புரத்தில் இருந்த என் மாமா வீட்டில்தான் தங்கிப் படித்து வந்தேன். அப்போது சிவசங்கரி, விழுப்புரத்துக்கு அருகில் உள்ள வழுதரெட்டியில் வசித்துவந்தார்.

ஒருமுறை, விழுப்புரம் திரு.வி.க ரோட்டில் இருந்த ஒரு புத்தகக் கடையில் நான் ஏதோ நோட்ஸ் வாங்கிக்கொண்டு இருந்தபோது, பக்கத்தில் இருந்த பல்பொருள் அங்காடி வாசலில் ஒரு கார் வந்து நின்றது. யார் இறங்குகிறார்கள் என்று கவனித்தபோது, இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன். என் அபிமான எழுத்தாளர் சிவசங்கரிதான் இறங்கிக் கடைக்குள் சென்றார்கள். கூடவே, அவருக்கு பி.ஏ. போன்று ஒரு லேடியும் சென்றார். அந்த லேடி சுடிதாரோ சல்வார்கமீஸோ அணிந்திருந்ததாக நினைவு. எனவே, அவரை ஆங்கிலோ இண்டியன் என்று நான் நினைத்துக்கொண்டதும் இப்போதும் நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அப்பெல்லாம் சல்வார்கமீஸ் போட்டாலே அவர் ஆங்கிலோ இண்டியன்தானே?!

சிவசங்கரியிடம் சென்று அவரின் அபிமான வாசகன் என்று என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு, அவரின் ஆட்டோகிராஃப் பெற வேண்டும் என்று எனக்கு ஆசையான ஆசை. ஆனால், தயக்கம், பயம் காரணமாக நான் அதைச் செய்யவில்லை. அவர் ஷாப்பிங்கை முடித்துக்கொண்டு, காரில் ஏறிக் கிளம்பிப் போகிற வரையில் பார்த்துக்கொண்டே நின்றிருந்தேன்.

அந்நாளில் சிறுகதைகள், பத்திரிகைகள்மீது எனக்கு இருந்த நாட்டத்தை அறிந்த என் மாமா, சிவசங்கரியிடம் அசிஸ்டென்ட்டாகச் சேர்றியாடா, சேர்த்துவிடவா? எனக்கு அவங்களை நல்லா தெரியும்என்றார் ஒருநாள். என் மாமா விழுப்புரத்தில் பிரபல சிவில் இன்ஜினீயர். அந்த வகையில் சிவசங்கரி அவர்களைத் தெரிந்திருக்கக்கூடும். அல்லது, சிவசங்கரியின் கணவர் சந்திரசேகர் பிளாஸ்டிக் கம்பெனி வைத்து நடத்திவந்ததாக ஞாபகம். (இந்தப் பதிவைப் படித்துவிட்டு, சிவசங்கரி அவர்கள் எனக்குப் போன் செய்து, தன் கணவரின் நிறுவனம், பாலங்கள் கட்டப் பயன்படுத்தும் கான்க்ரீட் பைப்புகளைத் தயார் செய்யும் நிறுவனம் என்று திருத்தம் சொன்னார்.) அவரும் என் மாமாவும் சிநேகிதர்களாக இருந்திருக்கவும் வாய்ப்புண்டு. எப்படியோ… என் மாமா மூலமாக நான் திருமதி சிவசங்கரியிடம் உதவியாளனாகச் சேர்ந்துவிட்டதாகவே கனவு கண்டேன். அவர் சிறுகதைகளை டிக்டேட் செய்ய, நான் அவற்றை முத்துமுத்தாக எழுத, என் கையெழுத்தை அவர் பாராட்ட… இப்படியெல்லாம் என் கற்பனைக் குதிரை சிலகாலம் சிறகடித்துப் பறந்துகொண்டிருந்தது. ஆனால், எதுவும் நம்ம கையிலா இருக்கிறது? சூழ்நிலைகள் மாற, சிவசங்கரியிடம் உதவியாளனாகச் சேரும் அந்த பாக்கியம் எனக்குக் கிடைக்கவே இல்லை.

பின்னாளில் நான் சாவி பத்திரிகையில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தபோது, இரண்டு முறை சிவசங்கரி அவர்களைச் சந்திக்கும் பேறு கிட்டியது. ஒருமுறை, சாவியின் அழைப்பின்பேரில் அவரின் குடும்ப விழா ஒன்றில் கலந்துகொள்ள வந்திருந்தார். மறுமுறை அவரைச் சந்தித்தது, சிறுகதைப் போட்டியின் நடுவர்களில் ஒருவராக.

இரண்டு முறையும் அவரை நான் அதே பள்ளிச் சிறுவன் மனோநிலையில்தான் பார்த்துக்கொண்டிருந்தேனே தவிர, அறிமுகம் செய்துகொண்டு உரையாடும் தைரியம் எனக்கு வரவேயில்லை.

சிவசங்கரியுடன் முதன்முறையாக நான் பேசியது ஒரு துயரமான சூழ்நிலையில்.

அப்போது நான் ஆனந்த விகடனில் சேர்ந்து பணியாற்றிக்கொண்டிருந்தேன். சாவி சாரின் 85-வது வயது நிறைவையொட்டி, சாவி-85என்ற தலைப்பில் அவரின் சுயசரிதைப் புத்தகத்தைத் தொகுத்திருந்தார் திரு.ராணிமைந்தன். அதன் வெளியீட்டுவிழா நாரத கான சபாவில் நடைபெற்றது. அந்த விழாவுக்குத் தலைமை தாங்கிய கலைஞருக்கு நன்றி சொல்லிப் பேசிக்கொண்டிருந்தபோதே ஹார்ட் அட்டாக் ஏற்பட்டு, மயங்கிச் சரிந்தார் சாவி. சந்தோஷமாகப் போய்க்கொண்டிருந்த விழா நிகழ்ச்சிகள் உடனே சோக மயமாக மாறின. சாவி சார் உடனடியாக அப்போலோவில் சேர்க்கப்பட்டார். பல நாள்கள் கோமாவில் இருந்தார்.

அவரை அப்போலோ ஐ.சி.யூ-வில் இரண்டு முறை போய்ப் பார்த்தேன். அப்படிச் சென்றிருந்தபோதுதான் அங்கே சிவசங்கரியைச் சந்தித்தேன். சிவசங்கரியின் கண்கள் கலங்கியிருந்தன. மாமியுடனும் (சாவி சாரின் துணைவியார்) மகள்களுடனும் பேசிக்கொண்டிருந்தார். எழுத்துலகில் சாவி சார் தனக்குத் தந்த அதீத ஊக்கத்தைப் பற்றித்தான் அவர் அப்போது பகிர்ந்துகொண்டிருந்தார். பேச்சினிடையே நான் முன்பு சாவி சாரிடம் பணியாற்றியதைப் பற்றியும், தற்போது விகடனில் பணிபுரிந்துவருவது பற்றியும் அவரிடம் ஓரிரு வார்த்தைகள் பகிர்ந்துகொண்டேன்.

ஆனந்த விகடனில் பொக்கிஷம் புத்தகத் தயாரிப்புக்காக பழைய ஆனந்த விகடன் இதழ்களைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தபோதுதான், சிவசங்கரி எனும் ஆளுமையின் விஸ்வரூபம் எனக்குப் புலப்படலாயிற்று.

ஆனந்த விகடனில் அவர் எழுதியஒரு மனிதனின் கதை மறக்கக்கூடியதா என்ன? அந்தத் தொடர்கதையைப் படித்தபின்பும் ஒருவன் குடிப் பழக்கத்தைத் தொடர்ந்தான் என்றால், அவனை இனி ஆண்டவனால்கூடத் திருத்த முடியாது என்று அடித்துச் சொல்லலாம். அந்தத் தொடர்கதைக்கான அறிவிப்பை விகடன் ஆசிரியர் அவர்கள் மவுன்ட்ரோட்டில் ஒரு சினிமா பேனர் அளவுக்குப் பெரியதாக, பிரமாண்டமாக சர்ச் பார்க் கான்வென்ட் அருகில் வைத்திருந்ததாக ஞாபகம். எனக்குத் தெரிந்து வேறு எந்த எழுத்தாளருக்கும் இத்தனை பெரிய கௌரவம் கிடைத்ததில்லை.

விகடனில் சிவசங்கரி எழுதிய மூன்று தலைமுறைக் கதைபாலங்கள் தொடர்கதையும் அந்த நாளில் வாசகர்களிடையே மிகப் பரவலான வரவேற்பைப் பெற்றது. மூன்று தலைமுறைக்கும் கோபுலு, மாருதி, ஜெயராஜ் என மூன்று ஓவியர்களைப் படம் போடச் செய்திருந்தார் விகடன் ஆசிரியர். ஒரே தொடருக்கு மூன்று ஓவியர்கள் படம் வரைந்ததுவும் அந்நாளில் ஒரு புதுமை.

சிவசங்கரியை வெறுமே கதாசிரியராக மட்டுமே கொள்ள முடியாது. மிகச் சிறந்த கட்டுரையாசிரியரும் ஆவார்.

இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி ஆகியோரைச் சந்தித்து மிக விரிவான தொடர்கட்டுரைகள் எழுதியிருக்கிறார். நடிகையர் திலகம் சாவித்திரி உடல்நலிவுற்று கோமாவில் கிட்டத்தட்ட ஒரு வருட காலம் படுத்திருந்தபோது, அவர் கிடந்த கோலத்தைக் கண்ணீர் வரிகளால் கட்டுரையாக்கியிருக்கிறார். கண் தானம் செய்வதன் அவசியம் பற்றி அவர் எழுதிய கட்டுரை அத்தனை அற்புதம்! அதைப் படித்ததுமே விகடன் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் முதல் வேலையாக தம் கண்களை தானம் செய்ய எழுதிவைத்தார் என்று சொல்வார்கள். அத்தனை வீரியமுள்ள எழுத்து சிவசங்கரியுடையது. 

இன்றைக்கு நாம் பேசுகிறோமே, திருநங்கைகளுக்கு உரிய கௌரவத்தை அளிக்க வேண்டும் என்று… அதை அந்தக் காலத்திலேயே விரிவாக, திருநங்கைகளின் துயர வாழ்க்கையை அவர்களின் பக்கமாக நின்று கட்டுரையாக்கியிருக்கிறார்.  

இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம் அவரைப் பற்றி.

சமீபத்தில் இரண்டு மூன்று முறை அவரது இல்லத்துக்குச் சென்று அலுவல் நிமித்தமாகப் பேச வேண்டிய சூழல் வந்தது. அப்போதும் மாறாத, அந்தப் பள்ளிச் சிறுவன் மனோபாவத்துடன்தான் பேசிக்கொண்டிருந்துவிட்டு வந்தேன்.

சாவி சாருக்கு 100 வயது பூர்த்தியானதையொட்டி, ஜிம்கானா கிளப்பில் ஒரு சின்ன கெட்டுகெதர் நடத்தினார்கள் சாவி சாரின் அன்பு மகள்கள். என்னையும் அழைத்துப் பெருமைப்படுத்தியிருந்தார்கள். அந்த நிகழ்விலும் திருமதி சிவசங்கரியைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தேன். பின்பு, சாகித்ய அகாடமி அமைப்பும் சாவி சாருக்கு விழா ஒன்று எடுத்தது. அதிலும் என்னைப் பேச அழைத்திருந்தார்கள். அந்த நிகழ்விலும் சிவசங்கரியைச் சந்தித்துப் பேசினேன். இப்படிக் கடந்த ஆண்டில் அவரை ஏழெட்டு முறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். என்றாலும், ஒரு கலெக்டருடன் பேசுகிற மரியாதையோடும், ஒரு கல்லூரிப் பேராசிரியரோடு பேசுகிற பயபக்தியோடும்தான் அவருடன் பேசியிருக்கிறேன்.

இந்தச் சந்திப்புகளுக்கெல்லாம் முன்பு, அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள், திருமதி சிவசங்கரியிடமிருந்து போன்கால். அதாவது, அப்போலோவில் அவரைச் சந்தித்து ஓரிரு வார்த்தைகள் பேசியதற்குப் பல ஆண்டுகளுக்குப் பின்பு, ரவிபிரகாஷ் என்கிற ஒரு நபரே அவர் நினைவில் பதியாத சூழ்நிலையில், எங்கிருந்தோ என் மொபைல் எண் வாங்கி, என்னைத் தொடர்புகொண்டார் அவர்.

சொல்லுங்க மேடம், என்றதும், கடகடவென மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியுமாகப் பேசினார். ஆம், என் வலைப்பூவில் சாவி சார் பற்றி நான் எழுதியிருந்த பதிவுகளைப் படித்துவிட்டுத் தன் பாராட்டுகளைத் தெரிவிக்கவே அவர் போன் செய்திருந்தார்.

சிவசங்கரி மேம் அன்று என்னைப் பாராட்டியதை, முப்பெருந்தேவியருள் முதலாவதான அன்னை உமையாள் பாராட்டியதாகவே உணர்ந்தேன்; நெகிழ்ந்தேன்.

அவர் என்னைப் பாராட்டியது ஒருபக்கம் இருக்கட்டும்; சாவி சார் பற்றி அவர் அப்போது மகிழ்வும் நெகிழ்வுமாகப் பகிர்ந்துகொண்டவை… அந்த நன்றி விசுவாசம், அது ஒரு நல்ல குருவின் மிகச் சிறந்த சிஷ்யைக்கான அடையாளம்!

அதுதான் சிவசங்கரி!
Sunday, December 24, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 11

மனம்கவர் மலேசியா! 
சாப்பிட்டுவிட்டுக் கிளம்பியதும், திரு.முனியசாமி எங்களை அழைத்துச் சென்ற இடம் ஓர் அரண்மனை. இஸ்தானா நெகரா என்னும் பெயர் தாங்கிய அது, முன்பு மன்னரின் அரண்மனையாக இருந்து, பிறகு மியூஸியமாக மாற்றப்பட்டதாகச் சொன்னார் முனியசாமி.

அதன்பின், அவர் எங்களை லேக் கார்டனுக்கு அழைத்துச் சென்றார். மிகப் பரந்த இடம். அங்கே பார்க்க வேண்டிய இடங்கள் நிறைய. ஆனால், என் மகனுக்குக் காலையில் பஸ்ஸில் வரும்போதே காய்ச்சல் அடிக்க ஆரம்பித்திருந்தது. அது போகப்போக அதிகரித்து, ஒரு கட்டத்தில் அவனால் கொஞ்சம்கூட நடக்க முடியாத நிலை ஏற்பட்டது. முந்தின நாள் சதர்ன் ரிட்ஜஸில் ரொம்ப தூரம் நடந்த களைப்பு வேறு சேர்ந்துகொண்டதில், அவன் மிகவும் சோர்ந்துபோய், ஓரிடத்தில் உட்கார்ந்துவிட்டான். எனவே, அங்கே அதிக நேரம் செலவழிக்காமல், உடனே கிளம்பிவிட்டோம்.

ஒரு மெடிக்கல் ஷாப்பில் போய் டோலா 650 மாத்திரை இருக்குமாவென்று விசாரித்தோம். இல்லை. இங்கே சென்னையில் கிடைக்கும் மாத்திரைகள் எதுவும் அங்கே கிடைக்கவில்லை. அதனால், ஜுரத்துக்கு ஏதாவது மாத்திரை கொடுங்கள் என்று ஒரு மெடிக்கல் ஷாப்பில் கேட்டோம். Panadol என்று ஒரு மாத்திரை அட்டையை எடுத்துக் கொடுத்தார்கள். அதில் ஒன்று போட்டுக்கொண்டான் ரஜ்னீஷ். அதன்பின், ஒரு மணி நேரம் கழித்துக் காய்ச்சல் விட்டு, கொஞ்சம் தெளிவும் தெம்பும் பெற்றான்.

அதன்பின் நாங்கள் சென்ற இடம், தேசிய மசூதி. உள்ளே தொழுகை நடந்துகொண்டிருந்ததால், எங்களால் உள்ளே சென்று பார்க்க முடியவில்லை. வெளியே நின்று போட்டோக்கள் மட்டும் எடுத்துக்கொண்டு, அருகிலேயே இருந்த மலேயாவின் பழைய ரயில்வே ஸ்டேஷனுக்குப் போனோம். பார்ப்பதற்கு மும்பை சத்திரபதி டெர்மினல் மாதிரி இருந்தது.

அங்கிருந்து, இண்டிபெண்டன்ஸ் ஸ்கொயருக்கு எங்களை அழைத்துச் சென்றார் முனியசாமி. சில தினங்களுக்கு முன்புதான் அங்கே மலேசியாவின் சுதந்திர தினம் தடபுடலாகக் கொண்டாடப்பட்டதாகச் சொன்னார். அதாவது, ஆகஸ்ட் 31-ம் தேதியன்று.

1957-ல் ஆகஸ்ட் 30-ம் தேதியன்று, நம்மைப் போலவே நள்ளிரவில்தான் மலேசியாவுக்கும் பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை கிடைத்திருக்கிறது. மறுநாள் காலையில், ஒரே தூணால் ஆன தூண்களில் உலகிலேயே உயரமான இந்தக் கொடிமரத்தின் உச்சியில் பறந்துகொண்டிருந்த பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு, மலேசியக் கொடி பறக்கவிடப்பட்டதாம். இதை மெர்டெக்கா சதுக்கம் என்றும் அழைக்கிறார்கள். மெர்டெக்கா என்றால், மலேய மொழியில் சுதந்திரம் என்று பொருள். அந்த மெர்டெக்கா சதுக்கத்தின் ஒரு பக்கத்தில் மலேசிய அமைச்சர்களின் படங்கள் வரையப்பட்டு, பார்வைக்குக் கிடைத்தன.

அங்கிருந்து நாங்கள் கிளம்பிச் சென்ற இடம், மிகப் பிரசித்திபெற்ற கோலாலம்பூர் டவர். உலகின் உயரமான ஏழாவது கோபுரம் இது என்று சொல்கிறார்கள். ஒலி-ஒளிபரப்புக்காகக் கட்டப்பட்ட டெலிகம்யூனிகேஷன் டவராம் இது. முனியசாமிதான் சொன்னார்.

கிட்டத்தட்ட நாங்கள் அங்கு போகும்போது இருட்டிவிட்டது. மணி 7 இருக்கலாம். இருங்க, டிக்கெட் வாங்கிட்டு வரேன் என்று போனார் முனியசாமி. அதுவரைக்கும் கீழே இருந்த கடை கண்ணிகளை வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம். அவர் டிக்கெட்டுடன் வந்ததும், பெற்றுக்கொண்டு லிப்டுக்குச் சென்றோம். 1380 அடி உயரத்துக்கு எங்களை அழைத்துச் சென்றது லிப்ட். உச்சியில் உள்ள கூண்டில் சுற்றி வர நடந்து, மலேசியாவை முழுதாகச் சுற்றிப் பார்த்தோம். அங்கிருந்த கடைகளில் யாதொன்றையும் வாங்கவில்லை. வாங்கும்படியாக எதுவும் இல்லை. கீ செயின்கள், செல்போன் கேஸ்கள், கோலாலம்பூரின் மினியேச்சர் பொம்மைகள் இப்படியாக நிறைய இருந்தன. எனவே, சும்மா வேடிக்கை மட்டும் பார்த்துவிட்டு, சிலபல போட்டோக்கள் எடுத்துக்கொண்டு கீழே இறங்கினோம்.

இங்கே மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் இந்த மாதிரி அட்ராக்‌ஷன்களுக்குப் போனாலே, நம்மை அவர்கள் கேள்வியே கேட்காமல் பளிச் பளிச்சென்று போட்டோ எடுத்துவிட்டு, திரும்பி வரும்போது நம் படத்தை அலங்காரமாக ஷோகேஸில் வைத்திருக்கிறார்கள். பெருமையாக நின்று ஒரு பார்வை பார்த்தால் போதும், அதை எடுத்து வம்படியாக நம் தலையில் நம்ம ஊர் மதிப்பில் ரூ.300, ரூ.400 விலையில் கட்டிவிடுகிறார்கள். இரண்டு இடங்களில் ஏமாந்து வாங்கிவிட்டேன். ஏமாந்து என்று சொன்னதற்குக் காரணம் அதிக விலை என்பதல்ல; புகைப்படத்தின் தரம் மிகச் சுமார் என்பதுதான்.

டவரிலிருந்து கீழே வந்ததும், முனியசாமி எங்களுக்காகக் காத்திருந்தார். கீழேயே ஒரு ரவுண்டு சுற்றி வந்தோம். அதன்பின், நாங்கள் சென்ற இடம், மலேசியாவின் லேண்ட்மார்க்கான பெட்ரோனாஸ் ட்வின் டவர்.

ட்வின் டவருக்குப் போய்ச் சேருவதற்குள், இங்கே கே.எல்.டவருக்கு வரும் வழியில் நாங்கள் பார்த்த ஓர் இடத்தைப் பற்றிச் சொல்கிறேன்.

அது, தலைகீழ் வீடு. வெளியிலேயே மோரிஸ் மைனர் கார் ஒன்று அந்தரத்தில் தலைகீழாகத் தொங்கிக்கொண்டிருந்தது. கேட்டுக்கு உள்ளே, வீட்டையே தலைகீழாகக் கவிழ்த்து வைத்தாற்போன்ற அமைப்பில் கட்டப்பட்டிருந்தது அந்த வீடு. நேரமாகிவிட்டதால், உள்ளே செல்ல அனுமதி கிடைக்கவில்லை. உள்ளே போனால் சுவாரஸ்யமாக இருக்கும் என்றார். அறைகள் எல்லாம்கூட உல்டாவாக, கட்டில்கள், படுக்கை எல்லாம் மேலே தலைகீழாகவும், ஃபேன் போன்றவை தரையிலுமாக திருப்பி டிசைன் செய்யப்பட்டிருக்கும்; அங்கே நின்று போட்டோ எடுத்துக்கொண்டால் விசித்திரமாக இருக்கும் என்றார். அதற்கு எங்களுக்குக் கொடுப்பினை இல்லை.  

இதோ, பெட்ரோனாஸ் டவர் வந்துவிட்டது. 2004-ம் ஆண்டு வரைக்கும் இதுதான் உலகிலேயே உயரமான டவராக இருந்திருக்கிறது. அதன்பிறகு, உலகில் புர்ஜ் கலீபா போன்ற மகா உயரமான கட்டங்கள் எல்லாம் வந்துவிட்டாலும், இந்த ட்வின் டவருக்கான மகத்துவம் குறையவில்லை. இன்றைக்கும் அவசியம் பார்க்க வேண்டிய இடங்களில் ஒன்றாகவே இருக்கிறது மலேசியாவின் இந்த பெட்ரோனாஸ் டவர்.

திங்கள்கிழமைகளில் அங்கு அனுமதி கிடையாது. நாங்கள் போனது திங்கள்கிழமையில்தான் என்பதால், மேலே ஏறிச் சென்று பார்க்க இயலவில்லை. தவிர, நன்றாக இருட்டியும்விட்டபடியால், கீழே இருந்தபடியே புகைப்படங்கள் எடுத்துக்கொண்டு புறப்பட்டோம்.

எங்களை ஸ்டார்பாயின்ட் என்னும் ஹோட்டலில் இறக்கிவிட்டார் முனியசாமி. காலைல 8 மணிக்கெல்லாம் டிபன் சாப்பிட்டுவிட்டுக் கீழே ரிசப்ஷனுக்கு வாங்க. சரியா 9 மணிக்கெல்லாம் கிளம்பிடலாம் என்று சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றார்.  

அறை வசதியாக, தாராளமாகத்தான் இருந்தது. நாலு பேர் தங்கிக்கொள்ளும்படியான இம்மாதிரி அறைகளை quard room என்கிறார்கள்.

படுப்பதற்கு முன், சுமார் 8:30 மணியளவில் பொடிநடையாக நடந்து, அருகில் இருந்த ஓர் உணவகத்தில் டிபன் சாப்பிட்டோம். சிங்கப்பூர் போலில்லாமல், இங்கே மலேசியாவில் நம்ம ஊர் இட்லி, தோசை, பூரியெல்லாம் பரவலாகக் கிடைக்கிறது. சென்னையோடு ஒப்பிடும்போது விலை சற்று அதிகமே தவிர, சிங்கப்பூரின் பயமுறுத்தும் விலைவாசி இல்லை.  

இந்த ஓட்டலிலிருந்து சற்றுத் தள்ளி, ஒரு நாற்சந்தியைக் காட்டி, அங்கே நின்று பார்த்தால் கோலாலம்பூர் டவர் ஒளிவெள்ளத்தில் ஜெகஜ்ஜோதியாகத் தெரியும் என்று சொல்லியிருந்தார் முனியசாமி. எனவே, டிபனை முடித்துக்கொண்டு, அவர் சொன்னபடியே அங்கே சென்று பார்த்தோம். உண்மையிலேயே வண்ண விளக்கொளிகளின் அலங்காரத்தில், உயரமாக, கம்பீரமாக நின்றிருந்த கோலாலம்பூர் டவர் கண்ணுக்கு அழகான விருந்தாகக் கிடைத்தது. புகைப்படம்தான் எடுக்க முடியவில்லை.

இரவு, கைகால் எல்லாம் அசதியில் கெஞ்ச, வெகு சீக்கிரமே உறங்கிப்போனோம்.

(பயணம் தொடரும்) 

ஜாய்ஃபுல் சிங்கப்பூர், கலர்ஃபுல் மலேசியா! - 10

மலேசியா வந்தாச்சு!

சிங்கப்பூர் பயணத் திட்டத்தில் மலேசியாவும் உண்டு என்று முன்பே முடிவு செய்திருந்ததால், என்றைக்குப் போவது, எப்படிப் போவது, எங்கே தங்குவது என்பது குறித்தும் முன்பே திட்டமிட்டிருந்தோம். ‘சிங்கப்பூரிலிருந்து தலா ரூ.800 டிக்கெட்டில் ஃப்ளைட்டிலேயே மலேசியாவுக்கு ஒரு மணி நேரத்தில் போய்விடலாம். என்ன, போக வர டிக்கெட் போட்டுவிடவா?’ என்று கேட்டிருந்தார் டிராவல் ஏஜென்ட் திரு.பாலச்சந்தர். எங்களின் நலம்விரும்பியும் இனிய தோழியுமான ஜெயஸ்ரீசுரேஷ் வேறு ஒரு யோசனை தெரிவித்தார்.

ஃப்ளைட்டில் ஒரு மணி நேரத்தில் போனாலும், இங்கே ஏர்போர்ட்டுக்கு ஒன்றரை மணி நேரம் முன்னதாகச் சென்று காத்திருக்க வேண்டும். தவிர, அங்கே இறங்குமிடத்தில் செக்கிங் முடிந்து வெளியேற ஒரு மணி நேரத்துக்கு மேல் ஆகிவிடும். அப்புறம் கோலாலம்பூர் ஏர்போர்ட்டிலிருந்து நீங்கள் சுற்றிப் பார்க்க வேண்டிய இடங்களுக்கு டாக்ஸி பிடிக்க வேண்டும். தவிர, நீங்கள் போக விரும்பும் டூரிஸ்ட் அட்ராக்‌ஷன்களுக்கு 50, 55 மைல் தள்ளி வெளியே இருக்கிறது ஏர்போர்ட். இதையெல்லாம் கணக்கில் கொண்டு பார்த்தால், இங்கே சிங்கப்பூரிலேயே ஒரு டூரிஸ்ட் வேன் ஏற்பாடு செய்துகொண்டு, அதிலேயே போய்ச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்துவிடுவது உத்தமம் என்றார்.

எனில், அதிகச் செலவாகுமே? என்றேன்.

ஆகாது. இங்கே முஸ்தபா டிராவல்ஸ் என்றிருக்கிறார்கள். தமிழ்நாட்டிலிருந்து வருகிறவர்களுக்குப் பெரும்பாலும் இவர்கள்தான் மலேசிய டூருக்கு ஏற்பாடு செய்து தருகிறார்கள். அவர்களிடம் விசாரித்துப் பார்க்கிறேன். கொஞ்சம்போல் கூடுதலாக இருந்தாலும், இது உங்களுக்கு சௌகரியமாக இருக்கும் என்றார்.

 “நீங்கள் சொன்னால் சரிதான். அப்படியே செய்துவிடுங்கள்என்றேன். அடுத்த ஒரு வாரத்துக்குள், சிங்கப்பூரிலிருந்து மலேசியா போய்த் திரும்புவதற்கான டிக்கெட் செலவு, அங்கே ஒரு நாள் தங்குவதற்கான ஓட்டல் செலவு, இரண்டு முழு நாள்கள் சுற்றிப் பார்ப்பதற்கான செலவு அனைத்தையும் சேர்த்து எங்கள் நால்வருக்கும் மொத்தம் ரூ.38,000/-க்குள் முடியும்படியாக ஏற்பாடு செய்து தகவல் தெரிவித்து, உரிய டிக்கெட்டுகளையும் எங்களுக்கு மெயிலில் அனுப்பி வைத்திருந்தார் ஜெயஸ்ரீசுரேஷ்.

4-ம் தேதி காலையில், திரு.கண்ணன், கீதா தம்பதியிடம் பிரியாவிடை பெற்றுக்கொண்டோம். மலேசியாவிலிருந்து அப்படியே ஜெயஸ்ரீசுரேஷ் வீட்டுக்குச் சென்றுவிடுவோம் என்று தெரிவித்தோம். எட்டு நாள் இருக்கப்போவதாகச் சொல்லிவிட்டு, இப்படிச் சட்டென்று கிளம்பிவிட்டீர்களே?என்று வருத்தப்பட்டார்கள். சரி, அங்கே தங்கும் இடத்தில் ஏதாவது சிரமம் என்றால், யோசிக்கவே யோசிக்காதீர்கள். நேரே இங்கு வந்துவிடுங்கள்என்று சொல்லி, எனக்கும் மகனுக்கும் அழகான டி-ஷர்ட்டுகளைப் பரிசளித்து அனுப்பிவைத்தார்கள்.

காலை 8 மணி சுமாருக்கு கோல்டன் மைல் காம்ப்ளெக்ஸ் என்னும் இடத்திலுள்ள ஸ்டார்மார்ட் டிராவல்ஸ்அலுவலகத்தில் வந்து காத்திருந்தோம். எங்கள் எண்ணுள்ள பஸ் சரியாக 9 மணிக்கு வந்து, நாங்கள் அனைவரும் ஏறிக்கொண்டதும் உடனே புறப்பட்டது. எங்களுக்கு பஸ்ஸின் மேல்தளத்தில் இருக்கைகள். மலேசியப் பயணம் இனிமையாகத் தொடங்கியது.

அடுத்த ஒரு மணி நேரத்தில், இம்மிகிரேஷன் செக்கிங்குக்காக பஸ் நின்றது. கீழே லக்கேஜ் இடத்தில் வைத்திருந்த எங்கள் சூட்கேஸ், ட்ராலிபேக் அனைத்தையும் எடுத்துக்கொண்டு, வரிசையில் நின்று, பாஸ்போர்ட், விசா காட்டி, செக்கிங்கை முடித்து, மீண்டும் வண்டியில் ஏறினோம். ஆக, ஒரு அரைமணி நேரத்துக்குப் பிறகு, எங்கள் பஸ் மீண்டும் புறப்பட்டது.

சரியாக மதியம் 3 மணிக்கு, மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ளபெர்ஜயா டைம் ஸ்கொயர்என்ற இடத்தின் வாசலில் வந்து இறங்கினோம்.

பஸ்ஸில் பயணப்பட்டு மலேசியா வந்த நாற்பத்துச் சொச்சம் பேரையும் இந்த பஸ்ஸிலேயேதான் அழைத்துக்கொண்டு போய்ச் சுற்றிக்காண்பிக்கப் போகிறார்களாக்கும் என்றுதான் அதுவரை நான் நினைத்துக்கொண்டிருந்தேன். இதனால், நாம் விருப்பப்பட்ட மாதிரி நம்ம சௌகரியம்போல் ஒவ்வொரு இடத்தையும் சுற்றிப் பார்க்க முடியாதே என்று உள்ளூரக் கொஞ்சம் அதிருப்தியும்கூட. ஆனால், அப்படி ஆகவில்லை.

நாங்கள் பஸ்ஸிலிருந்து இறங்கியதுமே, சற்றுத் தள்ளி ஒரு டாக்ஸி அருகில் நின்றிருந்த டிரைவர் வேகமாக எங்கள் அருகில் வந்தார். நீங்கள்தானே ரவிபிரகாஷ்?என்று நல்ல தமிழில் கேட்டார். ஆமாம்என்றதும், வாருங்கள், நம்ம காருக்குப் போகலாம் என்று அழைத்துச் சென்றார்.

அவர் பெயர் முனியசாமி. நம்ம சேலத்துக்காரர்தான். ஆனால், அவரின் கொள்ளுத்தாத்தா காலத்திலிருந்து அவர்கள் குடும்பம் மலேசியாவில்தான் வசிக்கிறதாம். கலகலவென்று பேசினார். மலேசியாவில் இரண்டு நாள் டூர் அனுபவமும் இனிமையாக அமைந்ததற்கு மிக முக்கியமான காரணம் முனியசாமியின் கலகல பேச்சும், இனிமையான சுபாவமும், சுற்றுலாப் பயணிகளை அவர்களின் மனத் திருப்திக்கேற்ப முக்கிய இடங்களைப் பொறுமையாக, நிதானமாகச் சுற்றிக் காண்பிக்க வேண்டும் என்கிற எண்ணமும்தான்.

சிங்கப்பூர் மாதிரி மலேசியா பாதுகாப்பான நாடு இல்லை. உங்க கிட்டே டாலர் இருக்குன்னு தெரிஞ்சா, மணி எக்ஸ்சேஞ்ச் இடத்திலேயோ, டிக்கெட் வாங்குற வரிசையிலேயோ உங்க பின்னாலேயே ஒருத்தன் வந்து நின்னு, யாருக்குமே தெரியாத மாதிரி நீளமான கோணி ஊசியை உங்க கழுத்துல வெச்சு, பணம் நகைகளைக் கேட்பான். நீங்க கத்தவும் முடியாது. கொடுக்கலேன்னா ஊசியை உங்க கழுத்துல சர்ருனு இறக்கிட்டுப் போயிட்டே இருப்பான்… என்கிற ரீதியில், மலேசியப் பயணத்தையே ரத்து செய்துவிடலாமா என்று யோசிக்கும் அளவுக்குப் பலரும் என்னை பயமுறுத்தியிருந்தார்கள். சுரேஷ் தம்பதியும், கண்ணன் தம்பதியும்கூட, ஆமாம், மலேசியா அவ்வளவு பாதுகாப்பான நாடு இல்லை. திருட்டுப் பசங்க ஜாஸ்தி. கொஞ்சம் ஏமாந்தாலும் உங்க பணத்தை அடிச்சுக்கிட்டுப் போயிடுவான்கள்!என்றுதான் சொல்லியிருந்தார்கள். இன்று காலையில் கிளம்பி வரும்போதும்கூட கண்ணன், அங்கே எங்க தங்கப் போறீங்க? பாதுகாப்பான இடம்தானா? முன்னபின்ன தெரியாத இடத்துல நீங்கபாட்டுக்கு ரூம் போட்டுத் தங்கிடாதீங்க. நல்லா விசாரிச்சு, உங்களுக்குத் தெரிஞ்ச இடமா பார்த்துத் தங்குங்க. அதான் சேஃப்டி!என்று சொல்லி அனுப்பியிருந்தார்.

அதுபற்றி திரு.முனியசாமியிடம், மலேசியா என்ன அவ்வளவு மோசமான நாடா? என்று கேட்டேன். அவரும், ஆமாம், சிங்கப்பூரோடு ஒப்பிடும்போது மலேசியாவில் சட்டம் ஒழுங்கு கொஞ்சம் மோசம்தான்!என்றார். கூடவே சிரித்துக்கொண்டு, சிங்கப்பூரில் சட்டம் ஒழுங்கு அத்தனை கெடுபிடி. பிக்பாக்கெட் அடிச்சா விரலை வெட்டிடுவாங்க. டிராஃபிக் ரூல்ஸை மீறி வண்டி ஓட்டினா, டாலர்கள்ல அபராதம் போடுறது மட்டுமில்லே, லைசென்ஸையே கேன்சல் செஞ்சுருவாங்க. அதனால அங்கே பலரும் தப்பு செய்யப் பயப்படுவாங்க, இங்கே மலேசியாவில் அப்படி இல்லை. உங்க மெட்ராஸ் மாதிரிதான். அதனால சிங்கப்பூர்காரங்க கிட்டே கேட்டா, அப்படித்தான் மலேசியாவைப் பத்தி மிரண்டு, வந்தவங்களையும் பயமுறுத்திடுவாங்க. நீங்க மெட்ராஸ்லேர்ந்துதானே வரீங்க, உங்களுக்குப் பெரிய வித்தியாசம் எதுவும் தெரியாது! என்றார்.

சரி, டூர் கிளம்புறதுக்கு முன்னாடி… பசிக்குது. எங்கேயாவது ஒரு ஓட்டல்ல நிறுத்தினா, சாப்பிடுவோம்! என்றேன்.

சரஸ்வதி பவன் என்று நினைக்கிறேன். அங்கே டாக்ஸியை நிறுத்தினார் முனியசாமி. தான் சாப்பிட்டுவிட்டதாகச் சொன்னார். அந்த இரண்டு நாள் டூரின்போதும் நாங்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் அவர் எங்களுடன் டிபன் சாப்பிடவோ, ஜூஸ், காபி குடிக்கவோ இல்லை. கூடவே, இங்கே உங்க மெட்ராஸ் மாதிரி நினைச்சுக்கிட்டு, ஓட்டல்ல சாப்பிட்டதும் சர்வருக்கு டிப்ஸா ரிங்கெட்ஸ் (மலேசிய டாலர் ரிங்கெட்ஸ் எனப்படுகிறது) எதுவும் வைக்காதீங்க. அது இங்கே சட்டப்படி குற்றம் என்றார்.

சாப்பிட்டுவிட்டு நாங்கள் சுற்றுலாவைத் தொடங்கும்போது மணி மாலை 4.

(பயணம் தொடரும்)

Saturday, December 16, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்… கலர்ஃபுல் மலேசியா! - 9

டூரிஸ்ட்டுகளுக்கு மரியாதை!


மூன்றாம் நாள் காலையில் கண்ணன்-கீதா தம்பதி இருவரும் சம்ஸ்கிருதப் பாடத்தில் தேர்வு எழுதுவதற்காகக் கிளம்பிக்கொண்டிருந்தார்கள். “நாங்கள் தேர்வு எழுதிவிட்டு, மாலை 4 மணிக்குள் வந்துவிடுவோம். நீங்கள் அதற்குள் உங்கள் புரொகிராம்படி எங்காவது சுற்றிப் பார்க்கவேண்டுமாயிருந்தால் போய்விட்டு சாயந்திரம் வந்துவிடுங்கள். இரவு ‘ரிவர்ஸ் க்ரூஸ்’ போகலாம். மிக நன்றாக இருக்கும். சிங்கப்பூர் வருகிறவர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய விஷயம் அது” என்றார் கண்ணன்.

மகன் ரஜினியிடம் “எங்கேடா போகலாம்?” என்று கேட்டேன். அவன்தான் ஆரம்பத்திலிருந்தே கூகுளில் சிங்கப்பூரை அலசி, சகல விவரங்களையும் கைவசம் வைத்திருந்தான். 90 சதவிகிதம் அவன் போட்டுக்கொடுத்த செயல்திட்டப்படிதான் எங்கள் டூரை அமைத்துக்கொண்டிருந்தோம்.

“மொதல்ல சைனா டவுன் போவோம். அங்கே புத்தா டெம்பிள் ஒண்ணு இருக்கு. அதைப் பார்ப்போம். அப்புறம் மாரியம்மன் கோயிலும் பக்கத்துலயே இருக்கு. அதையும் பார்ப்போம். அப்புறம் சைனா ஸ்ட்ரீட்டுல கொஞ்ச நேரம் நடப்போம். அங்கிருந்து நேரா சதர்ன் ரிட்ஜஸ் வருவோம். நிறைய நடக்கணும். அதுக்கே 3 மணி ஆயிடும். அப்புறம் கிளம்பி வீட்டுக்கு வர சரியாயிருக்கும்” என்றான்.

“சதர்ன் ரிட்ஜஸா, அதென்ன?” என்றார் கீதா மன்னி. இரும்பு ராடுகளாலும் தகடுகளாலும் உயரமாக ஒரு நடைமேடை எழுப்பி, காடு, பூங்கா, நகரம் என எல்லா இடங்களிலும் நடந்துசென்று பார்க்கும்படியான ஒரு பாதை அது என்று விளக்கினான் ரஜினி.

சாப்பிட்டுவிட்டுக் கிளம்பினோம். பஸ்தான்; எம்.ஆர்.டி-தான். இரண்டு நாளில், சென்னைபோல் பஸ் பயணமும், மெட்ரோ ரயில் பயணமும் அவ்வளவு பழகிவிட்டது. 

நேரே சைனா டவுன் போய் இறங்கினோம். பகோடா தெருவில் நடந்தோம். கண்களில் பட்டது மாரியம்மன் கோயில். பயபக்தியுடன் உள்ளே நுழைந்து கன்னத்தில் போட்டுக்கொண்டு, குருக்கள் கொடுத்த குங்குமப் பிரசாதத்தை வாங்கி நெற்றியில் இட்டுக்கொண்டு, கற்பூர ஆரத்தியைக் கண்களில் ஒற்றிக்கொண்டு, அம்பாளைப் பிரார்த்தித்துவிட்டு வெளியேறினோம். சுத்தபத்தமாக இருந்தது கோயில்.

அருகிலேயே புத்தர் கோயில். அரக்கு சிவப்பில் பளீரென்று தெரிந்தது. நான்கு மாடிக் கட்டடம். தரைத் தளத்தில் மிகப் பெரிய ஹால். கலர்ஃபுல்லாக இருந்தது அந்தக் கூடம். ஒவ்வொரு மாடியாக ஏறிப் போய்ப் பார்த்தோம். கலையழகுடன்கூடிய பொம்மைகள், சிற்பங்கள், புத்தர் சிலைகள் எனப் பார்க்கப் பார்க்கத் திகட்டாமல் கண்ணுக்கு விருந்தாக இருந்தது ஒவ்வொரு தளமும். ஒரு தளத்தில் சுவர் முழுக்க ஆயிரக்கணக்கில் சின்னச் சின்ன பிறைகளில் புத்தர் சிலைகள். நம்ம குழந்தைக் கிருஷ்ணன், குழந்தை முருகன், குழந்தை விநாயகர் மாதிரி குழந்தை புத்தர் சிலைகளும் இருந்தன.

ஒரு தளத்தில் வரிசையாக கண்ணாடிக் கூண்டுகளில் புத்தபிட்சுக்கள் அமர்ந்திருந்தார்கள். ஒவ்வொருவரின் கையில் ஓடும் பச்சை நரம்புகள், ரேகைகள், கண் இமைகள் என அத்தனை தத்ரூபம்! மெழுகுச் சிலை போலவே தெரியவில்லை; தொட்டால் சட்டென்று தியானத்திலிருந்து சிணுங்கிவிடுவார்களோ என்பதுபோல் நிஜமாகவே உயிரோட்டமாக அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் புத்தரின் சீடர்களாம்.

நாலாவது மாடியில் புத்தரின் புனிதப் பல் ஒரு பேழையில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது. புத்தர் இலங்கையில் அமரத்துவம் பெற்றார் என்றும், அங்கே அவரது உடலை சந்தனக் கட்டைகளில் வைத்து எரியூட்டினார்கள் என்றும், அந்தச் சாம்பலில் கிடைத்த புத்தரின் பல்லை அவரது சீடர் எடுத்துக்கொண்டு வந்து, அதை வைத்து கண்டியில் புத்தருக்குக் கோயில் எழுப்பினார் என்றும் கேள்விப்பட்டுள்ளேன். இந்தியாவிலும் புத்தருக்குக் (புனிதப் பல்) கோயில்கள் உள்ளன. இங்கே சிங்கப்பூரிலும் புத்தர் பல் கோயில் பிரபலமாக உள்ளது.

ஆற அமர, புத்தர் கோயிலை நின்று நிதானமாகப் பார்த்துவிட்டு, பின்பு அங்கிருந்து கிளம்பி, சைனா டவுன் பகுதியில் மார்க்கெட் தெருக்களில் புகுந்து புகுந்து நடந்தோம். பின்னர், ஒரு ‘கேப்’ பிடித்து ஆண்டர்சன் தெருவில் போய் இறங்கினோம். அங்கேதான் ‘சதர்ன் ரிட்ஜஸ்’ நடைமேம்பாலம் தொடங்குகிறது என்று கூகுளில் தேடி வைத்திருந்தான் ரஜினி.

ஆண்டர்ஸன் தெருவில் இறங்கிக்கொண்டு, அருகிலிருந்து படிகளில் ஏறி மேலே வந்தோம். அங்கிருந்து வளைந்து வளைந்து தன் பயணத்தைத் தொடங்குகிறது ‘சதர்ன் ரிட்ஜஸ்’. அருகிலேயே சைக்கிளில் செல்பவருக்கும் பாதை செல்கிறது. கிட்டத்தட்ட 9 கிலோ மீட்டர் தூரம் செல்லும் நடைமேம்பாலம் இது. நடக்கத் தொடங்கினோம்.

காடு, மலை, செடிகளுக்குள் புகுந்தும் வளைந்தும் செல்கிறது இந்தப் பாதை. திடுமென அங்கிருந்து வெளிப்பட்டு, பரபரப்பான ஒரு அகன்ற சாலையைக் குறுக்கால் கடக்கிறது. அருகில் உயர உயரமான கட்டங்களினூடே பாதை பயணிக்கிறது. சட்டென்று ஒரு வளைவில் மீண்டும் வனத்தில் புகுகின்றது. நடந்து நடந்து கால் வலி கண்டாலும், சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது இந்த நடைப்பயணம். அங்கங்கே ‘ஸிங்கிங் ஃபாரஸ்ட்’ என்று போர்டு வைத்திருந்தார்கள். வனத்துக்குள்ளிருந்து விநோதமான பறவைகள் விதம்விதமாகக் கூவுவதைக் கேட்கமுடிகிறது. அதனால்தான் இந்தப் பெயர். பாடுவது பறவைகள்; பேரும் புகழும் வனத்துக்கு! என்ன அநியாயம்! அது மட்டுமா, ஆங்காங்கே ‘பறவைகளுக்கோ குரங்குகளுக்கோ உணவு எதுவும் கொடுக்காதீர்கள்’ என்று அறிவிப்புப் பலகைகள் வேறு. என்ன செய்ய… பறவைகளின் ‘டிசம்பர் சீசனை’ மனசுக்குள் பாராட்டிக்கொண்டே நடந்தோம்.

மவுன்ட் ஃபேபர் பார்க், ஹில் பார்க், கென்ட் ரிட்ஜ் பார்க் என மூன்று பெரிய பார்க்குகளை இந்த நடைமேம்பாலம் இணைக்கிறது. எங்களுக்கு அவ்வளவெல்லாம் நடக்க முடியவில்லை. ஒரு மூணு மூணரை கிலோ மீட்டர் நடந்திருப்போம். அதற்குள் மாலை 4 மணியே ஆகிவிட்டது. ‘சரி, வீடு திரும்புவோம்’ என முடிவு செய்து, இறங்கும் வழியைக் கண்டறிந்து, கடகடவென இறங்கினோம். நல்லவேளையாக, ஆங்காங்கே இறங்குவதற்கும் படிகள் வைத்திருக்கிறார்கள்.  

கீழே கேப் பிடித்து, கண்ணனின் அப்பார்ட்மென்ட்டுக்கு வந்தோம். அதற்குள் அவர்களும் வந்திருந்தார்கள். நடந்த களைப்பு தீர சிறிது நேரம் சிரம பரிகாரம் செய்துவிட்டு, டிபன் சாப்பிட்டுவிட்டு, மாலை 6 மணிக்குக் கிளம்பினோம்.

எல்லோருமாக ‘கிளார்க் கீ’ என்னும் இடத்துக்குச் சென்றோம். ‘Clarke Quay’ என்பதை ‘கிளார்க் க்வே’ என்று உச்சரித்தோம். அப்படி உச்சரிக்கக் கூடாதாம். ‘கிளார்க் கீ’ என்றுதான் சொல்ல வேண்டும் என்றார் கண்ணன். ‘கிளார்க் கீ’, ‘போட் கீ’ என்கிற இடங்கள் அடுத்தடுத்து உள்ளன. ‘கீ’ என்றால், படகுத் துறை, கப்பல் துறை என்று பொருள். கப்பல்களிலிருந்து சரக்குகளை இறக்கவும் ஏற்றவுமான இடம்.

40 ஆண்டுகளுக்கு முன்பு இந்த சிங்கப்பூர் நதியும் நம்ம கூவம் மாதிரிதான் கச்சடாவாக இருந்திருக்கிறது. காரணம், இங்குதான் சரக்குக் கப்பல்கள் வந்து சரக்குகளை இறக்கி, ஏற்றிச் சென்றுகொண்டிருந்தன. அவை வந்து வந்து போனதால் இங்குள்ள நீர்ப் பகுதி பெரிதும் மாசுபட்டு, சிங்கப்பூரின் அழகையே கெடுத்துவிட்டதாம். அதைக் கண்டு சகிக்கமுடியாமல், அன்றைக்கிருந்த ‘கிளார்க்’ என்கிற கவர்னர் இந்தச் சரக்குக் கப்பல் துறைமுகத்தை வேறு இடத்துக்கு மாற்றியமைத்து, இங்குள்ள தண்ணீரைச் சுத்தம் செய்து, இங்கே கரையில் வணிக வளாகங்கள், உணவகங்கள், ஹோட்டல்கள் அமைக்க வழி செய்தார். அதனால்தான் இந்த இடத்துக்கு அவர் பெயரையே ‘கிளார்க் கீ’ என்று வைத்துவிட்டார்களாம். நம்ம சென்னை கூவத்தையும் அப்படி நம்ம கவர்னர் ‘ஆய்வு’ செய்து, சுத்தப்படுத்தி, கரையோரங்களில் வணிக வளாகங்கள் ஏற்படுத்தி, ஜிலுஜிலுவென்று படகுப் போக்குவரத்துக்கு ஏற்பாடு செய்தால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பார்க்கிறேன். இந்தக் கரைக்கு பன்வாரிலால் கீ, அந்தக் கரைக்கு புரோஹித் கீ என்று நாமும் அழகாகப் பெயர் சூட்டலாமே?!

ஏற்கெனவே டிக்கெட் எடுத்திருந்ததால், நேரே படகுத் துறைக்குச் சென்றோம். எங்களுக்கான படகு வந்ததும் ஏறி அமர்ந்தோம். நிதானமாகக் கிளம்பியது படகு. ரிவர் க்ரூஸ் தொடங்கியது. க்ரூஸ் என்றால், படகுப் பயணம். அன்னம் நீந்துவதுபோல் மெதுவாக நீந்தியது படகு. கிட்டத்தட்ட சிங்கப்பூரின் மெயின் அட்ராக்‌ஷன்கள் அனைத்தையும் சிங்கப்பூர் ஆற்றுப் பயணத்திலேயே பார்த்துவிடலாம். சைனீஸ் கலந்த ஒரு வித்தியாசமான ஆங்கில உச்சரிப்பில், படகு கடக்கும் ஒவ்வொரு இடத்தையும் வர்ணித்துக்கொண்டே வந்தது கம்ப்யூட்டர் வாய்ஸ்.
பாலத்தின் அடியில் படகு போகும்போது கதகதப்பாக இருந்தது. இருளில் மெர்லின் சிங்கத்தின் வாயிலிருந்து வெளிச்ச நீரூற்று பாய்வது பார்க்கக் கொள்ளை அழகு! உயர உயரமான கட்டங்கள் மின்விளக்கொளியில் ஷங்கர் படம் பார்க்கிற அனுபவத்தைத் தந்தன.

சிங்கப்பூரில் டூரிஸத்துக்கு மிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். ஆரம்ப காலத்தில் டூர் அட்ராக்‌ஷன்கள் அமைக்க இடம் போதாமல் இருந்ததால், மண்ணைக் கொண்டு வந்து கொட்டி, கடலைக் கரையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தூர்த்து, மண் மேடாக்கி, கெட்டித்து நிலப்பகுதியாகச் செய்து இத்தனையையும் அமைத்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டபோது நான் வியப்பின் உச்சிக்கே போனேன்.

இரவு 9 மணிக்கு ‘ரிவர் க்ரூஸ்’ நிறைவடைந்தது. நாங்கள் கிளம்பினோம்.

நாளைக் காலையில் கலர்ஃபுல் மலேசியா!


(பயணம் தொடரும்)

Wednesday, December 13, 2017

என் வணக்கத்துக்குரிய காதலனே!

Image may contain: 1 person, standing, eyeglasses and outdoor

ன்றைக்கு (12.12.17) எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் நினைவு நாள் என்பதை வேதாகோபாலன் அவர்களின் பதிவு மூலமும், ராஜேந்திர குமாரின் மகன் திரு.நாகராஜ்குமாரின் பதிவு மூலமும் அறிந்துகொண்டேன்.
தொப்பி அணிந்த பிரபலங்கள் என்றதும் எனக்குச் சட்டென்று நினைவுக்கு வருபவர்கள் தமிழ்வாணன், எம்.ஜி.ஆர்., பாலுமகேந்திரா மற்றும் ராஜேந்திர குமார்.
அப்போதெல்லாம் பத்திரிகைகளில், தொப்பி அணிந்து, தலையைக் குனிந்து, பாதி முகம் மறைந்திருக்க, உள்ளுக்குள்ளிருந்து கூர்ந்து நம்மைப் பார்த்துக்கொண்டிருப்பது போன்ற ராஜேந்திர குமாரின் புகைப்படங்கள்தான் வெளியாகும். கிட்டத்தட்ட ஒரு டிரேட் மார்க்காகவே அவர் அந்தத் தொப்பியையும் அந்த போஸையும் வைத்திருந்தார்.
நான் அதிகம் பழகாமல் மிஸ் பண்ணிவிட்டேனே என்று ஜெயகாந்தன் உள்ளிட்ட சில முக்கிய எழுத்தாளர்களை நினைத்து இன்றைக்கும் வருத்தப்படுவதுண்டு. அவர்களில் ராஜேந்திர குமாரும் ஒருவர்.
எனவே, ‘நான் பழகிய எழுத்தாளர்கள்’ வரிசையில் இவரைப் பற்றி எழுத எனக்கு இவரோடு அதிக அனுபவம் இல்லை. ஆனால், இவரை ஒரே ஒருமுறை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறேன். இவரின் மகன் திரு.நாகராஜ் குமார் என் இனிய நண்பர். சாவி காலத்து நண்பர்.
நான் சாவி பத்திரிகையில் பணியில் சேர்ந்த புதிதில் அங்கே டிடிபி-யில் கம்போஸிங் செய்பவராக நாகராஜ் குமார் பணியாற்றிக்கொண்டிருந்தார். ‘தானுண்டு தன் வேலை உண்டு’ என்று மிக சாதுவாகப் பணியாற்றிக்கொண்டிருப்பார். சாவி சார் என்னை உள்பட அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த எல்லோரையும் திட்டிப் பார்த்திருக்கிறேன். ஆனால், இவரை ஒருமுறையேனும் சாவி சார் திட்டிப் பார்த்ததில்லை. காரணம் இவர் அவ்வளவு பொறுமை; வேலையில் அத்தனை கச்சிதம்!
அப்போது இவர் பிரபல எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் மகன் என்பது எனக்குத் தெரியாது. தெரிந்திருந்தால், இவரை அப்போதே சிநேகம் பிடித்து, ராஜேந்திர குமார் அவர்களோடு பழகி, இன்றைக்கு என் பெருமைகளில் ஒன்றாக, ‘நான் ராஜேந்திர குமாரின் அன்புக்குப் பாத்திரமானவனாக்கும்’ என்று நீளமாக ஒரு பதிவு போட்டிருப்பேன். ஹூம்... அதற்கு வாய்ப்பில்லாமல் போனது என் துரதிர்ஷ்டம்!
திரு.ராஜேந்திர குமாரின் எழுத்துக்கள் பலவற்றைப் படித்திருக்கிறேன் என்று பொய்யாக எழுத விரும்பவில்லை. அவரின் ‘வணக்கத்துக்குரிய காதலியே’, ‘பைரவன் அழைக்கிறேன்’, ‘நான் ஒரு A' ஆகிய மூன்று நாவல்களை மட்டுமே படித்துள்ளேன்.
‘வணக்கத்துக்குரிய காதலியே’ படிக்கப் படிக்கத் திகட்டாத நாவல். மிக ஜாலியான, சுவாரஸ்யமான எழுத்து நடையில், கதை ஜிலுஜிலுவென்று நகரும். இது பின்னர் ரஜினிகாந்த், ஸ்ரீதேவி (இரட்டை வேடம்) நடிப்பில் திரைப்படமாகவும் வெளியானது. படத்தையும் நான் பார்த்து ரசித்தேன்.
‘நான் ஒரு A' புத்தகத்தை சாவியின் ‘மோனா’ பப்ளிகேஷன் வெளியிட்டதென்று ஞாபகம். எனவே அதையும் படித்திருக்கிறேன்.
எழுத்தாளர் ராஜேந்திர குமாரின் எழுத்தை சாவி சார் சிலாகித்துப் பேசிக் கேட்டிருக்கிறேன். ஆனால், நான் அங்கே பணியாற்றிய கால கட்டத்தில் ராஜேந்திர குமார் சாவியில் எந்தத் தொடர்கதையும் எழுதவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை. ஆனால், இரண்டு மூன்று முறை அவர் வந்து, சாவி சாருடன் நட்பு ரீதியில் பேசிவிட்டுச் சென்றிருக்கிறார்.
பின்னர் நான் சில மாத காலம் அமுதசுரபியில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, அதன் ஆசிரியர் திரு.விக்கிரமனின் உத்தரவின்பேரில் எழுத்தாளர் ராஜேந்திர குமாரை அவரது இல்லத்தில் சென்று சந்தித்துள்ளேன். ஒரே ஒரு முறை சந்தித்திருப்பதாக ஆரம்பத்தில் சொன்னது அதைத்தான்.
அமுதசுரபிக்கென ஒரு சரித்திரக் கதை எழுதித் தந்திருந்தார் ராஜேந்திர குமார். சரித்திரம் என்றால் நிஜ சரித்திரம் இல்லை. கற்பனைக் கதாபாத்திரங்கள், கற்பனைச் சம்பவங்களால் ஆன கற்பனைச் சரித்திரக் கதை. அதை அவருக்கே உரிய பாணியில் ஜிலுஜிலு நடையில் எழுதியிருந்தார்.கதை என்னவோ எனக்குப் படிக்க ரொம்பவும் சுவாரஸ்யமாகத்தான் இருந்தது.
ஆனால், சரித்திரக் கதை எழுதுவதில் மன்னரான திரு.விக்கிரமனுக்கு அந்த நடை உவப்பாயில்லை. சரித்திரக் கதைக்கென்றே பிரத்யேகமான ‘புரவிகள்’, ‘கழஞ்சு’, ‘ஜாஜ்வல்யம்’, ‘பொற்கிரணங்கள்’, ‘உதயாதி நாழிகை’, ’நடுச்சாமம்’ போன்ற வார்த்தைகள் ஏதுமில்லாமல் எழுதப்பட்டிருந்ததை சரித்திரக் கதையாகவே அவரால் ஏற்க முடியவில்லை. இப்படியான ‘சரித்திர நடை’யில் அந்தக் கதையை மாற்றி எழுதித் தருமாறு கேட்டு, அந்தப் பிரதியை திரு.ராஜேந்திர குமாரிடம் கொடுத்துவிட்டு வருமாறு என்னை அனுப்பினார்.
அதன்படி நான் போய் திரு.ராஜேந்திர குமாரைச் சந்தித்தேன். அப்போது அவர் வீடு பெசன்ட் நகரில் இருந்ததாக ஞாபகம்.
கதையைக் கொடுத்துவிட்டு, திரு.விக்கிரமன் சொல்லியனுப்பியதை அப்படியே அவரிடம் ஒப்பித்தேன். அப்போது திரு.ராஜேந்திர குமார் என்னைப் பார்த்த பார்வை... ‘ஐயா, நான் சொல்லலை. விக்கிரமன் சார் சொன்னதை அப்படியே வந்து உங்ககிட்ட சொல்றேன்’ என்று தன்னிலை விளக்கம் கொடுக்கலாமா என்று என்னை யோசிக்க வைத்தது.
Image may contain: 1 person, eyeglasses and closeupபுகைப்படங்களில் பார்த்தது மாதிரியே தலையைக் குனிந்து, தொப்பிக்குக் கீழேயிருந்து, மேல்வெட்டாக என்னைக் குறுகுறுவென்று சிறிது நேரம் பார்த்துக்கொண்டிருந்தார் திரு.ராஜேந்திர குமார். நானும் உள்ளுக்குள் நடுக்கத்தோடு அமைதியாகக் காத்திருந்தேன்.
திடீரென்று, “நாகராஜ்... நாகராஜ்... இங்கே வாடா! இவர் என்னவோ சொல்றார். இங்கே வா. எனக்கொண்ணும் புரியலே” என்று சத்தமாகக் குரல் கொடுத்தார்.
அடுத்த அறையிலிருந்து ஓடி வந்தார் திரு.நாகராஜ் குமார். ‘அடேடே, இவர் சாவியில் பணியாற்றியவரல்லவா!’ என்று அப்போதுதான் அவரை அடையாளம் கண்டுகொண்டேன்.
“என்னப்பா, என்ன?” என்றார் நாகராஜ்குமார்.
“இவர் என்னவோ சொல்றாரே! இது சரித்திர நடையிலேயே இல்லையாமே? மாத்தி எழுதித் தரச் சொல்றாராமே? ஏண்டா, ராஜேந்திர குமார் ராஜேந்திர குமார் மாதிரிதாண்டா எழுத முடியும்? விக்கிரமன் மாதிரியா எழுத முடியும்? அதுக்கு நான் எதுக்கு?” என்றவர்,
“சரி, நீங்க போங்க! நான் அவர்கிட்ட பேசிக்கறேன்” என்று என்னை அனுப்பிவைத்தார்.
திரு.ராஜேந்திர குமாரை புகைப்படங்களில் சிரித்த போஸில் நான் பார்த்ததே இல்லை. ’உர்ரென்று’ ஒரு குறுகுறுப்பான முக பாவனையோடுதான் காணப்படுவார். நேரிலும் கோப உணர்ச்சியோடுதான் அவரைப் பார்த்தேன். ‘எனக்கு அந்தக் கதையும் நடையும் பிடித்திருக்கிறது. நான் உங்கள் ரசிகன்’ என்று சொல்ல மனமிருந்தாலும், பயத்தில் வாய் வரவில்லை.
“சரி சார்” என்று எழுந்துகொண்டேன்.
அவரின் அறைக் கதவைத் தாண்டியிருப்பேன். “எதுல வந்தீங்க?” என்று கேட்டார். “பஸ்லதான் சார்” என்றேன். “உங்க வீடு எங்கே?” என்றார். “மேற்கு மாம்பலத்தில் சார்!” என்றேன். உடனே, “டேய், இவரை உன் டூவீலர்ல அழைச்சுட்டுப் போய் இவர் வீட்டுல விட்டுட்டு வா!” என்று மகன் நாகராஜ் குமாரிடம் சொன்னார்.
சடக்கென்று திரு.ராஜேந்திர குமார் மீதான இனம்புரியாத பயம் அகன்று, என் மனசுக்குள் அவர் மிக நெருக்கமாக வந்ததுபோல் நெகிழ்ந்தேன்.
நாகராஜ்குமாரிடம் ‘என்னை பெசன்ட் நகர் பஸ் ஸ்டாண்டில் இறக்கி விட்டுடுங்க. நான் பஸ் பிடிச்சுப் போய்க்கறேன். நீங்க அவ்ளோ தூரம்லாம் வர வேணாம்’ என்று, அவரோடு வந்து இறங்கிக் கொண்டேன்.
இன்றைக்கு, இதோ இப்போது, இந்தப் பதிவை எழுதிக்கொண்டிருக்கிற இந்த விநாடியில், ‘திரு.ராஜேந்திர குமார் அவர்களோடு பழகக் கிடைத்த வாய்ப்பை நழுவ விட்டுவிட்டோமே’ என்று பரிதவிக்கிறது என் மனம்.
என்ன செய்வது... எல்லா பாக்கியங்களும் எல்லா நேரமும் ஒருவருக்கே கிடைத்துவிடுமா என்ன?!
(திரு.ராஜேந்திர குமாரின் புகைப்படம்: வேதாகோபாலனின் பதிவிலிருந்து சுட்டது - அவரின் முன் அனுமதியின்றி, கோபித்துக்கொள்ள மாட்டார் என்கிற தைரியத்தில், உரிமையில்!)

எடிட்டர் எஸ்.ஏ.பி.


Image may contain: one or more people, sunglasses and closeup

ன்று (12.12.17) குமுதம் எடிட்டர் அமரர் எஸ்.ஏ.பி அவர்களின் பிறந்த நாள் என்பதை எழுத்தாளர் திரு.ராஜேஷ்குமார் அவர்களின் முகநூல் பதிவு மூலம் அறிந்தேன்.
'நான் பழகிய எழுத்தாளர்கள்' வரிசையில் வைத்து எழுதும் அளவுக்கு திரு.எஸ்.ஏ.பி-யுடன் நான் அதிகம் பழகியதில்லை. ஆனால், அவர்மீது மிகுந்த மரியாதையும் அன்பும் வைத்திருந்த என் ஆசான் பத்திரிகையுலகப் பிதாமகர் சாவி அவர்கள் சொல்லி, திரு.எஸ்.ஏ.பி-யின் அருமை பெருமைகளை அறிந்திருக்கிறேன். தவிர, எஸ்.ஏ.பி. அவர்கள் மறைந்த 1994-ம் ஆண்டில், அவரைப் பற்றி 'எடிட்டர்' என்னும் தலைப்பில் திரு.ரா.கி.ரங்கராஜன் அவர்கள் ஆனந்த விகடனில் எழுதிய தொடர்கட்டுரை வாயிலாகவும் திரு.எஸ்.ஏ.பி. பற்றி அறிந்திருக்கிறேன். மேலும், என் மரியாதைக்குரிய நண்பர் அமரர் திரு.பாக்கியம் ராமசாமி அவர்கள் மூலமாகவும் எஸ்.ஏ.பி அவர்களின் பெருமைகளைச் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
நான் திரு.எஸ்.ஏ.பி அவர்களை நேரில் சந்தித்துப் பேசியது ஒரே ஒருமுறைதான். அந்த ஒரே சந்திப்பே, அவர் எத்தகைய மாமனிதர் என்பதை உணர்ந்துகொள்ளப் போதுமானதாக இருந்தது.
அப்போது 'சாவி' பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தமுடியாமல் பொருளாதார ரீதியாக நிறைய சிரமங்களை அனுபவித்து வந்தார் சாவி. நான் இந்தப் பத்திரிகை தொடர்ந்து நடக்குமா, என் எதிர்காலம் என்ன ஆகும் என்று பயந்து, தவித்து, குமுதத்தில் வேலை கேட்கலாம் என்ற உத்தேசத்தில், அப்போது குமுதம் பொறுப்பாசிரியராக இருந்த எழுத்தாளர் சுஜாதா அவர்கள் மூலமாக திரு.எஸ்.ஏ.பி அவர்களை குமுதம் அலுவலகத்தில் சந்தித்தேன்.
"குமுதத்தில் சேர விரும்புவதற்கு என்ன காரணம்?" என்று கேட்டார் எஸ்.ஏ.பி.
"சாவி இதழ் தொடர்ந்து நடக்குமா என்று தெரியவில்லை. என் எதிர்காலத்தை உத்தேசித்தே இங்கே சேர விரும்புகிறேன்" என்றேன்.
"ஒருவேளை, அதை அவர் தொடர்ந்து நடத்துவதாக இருந்தால் இங்கே சேருவீர்களா?" என்று கேட்டார்.
"மாட்டேன். அங்கே எனக்கு எந்தக் குறையும் இல்லை. அவர் சாவி இதழைக் கண்டிப்பாகத் தொடர்ந்து நடத்துவார் என்றால், அவரிடமேதான் வேலை செய்வேன்" என்று என் மனதில் உள்ளதை அப்படியே சொன்னேன்.
எஸ்.ஏ.பி. அவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தார். ஒரு புன்னகையுடன் திரும்பி அருகில் இருந்த சுஜாதாவைப் பார்த்தார்.
'இவனையெல்லாம் நம்பி எப்படி வேலைக்கு எடுப்பது?' என்று எண்ணுகிறாரோ, என்று நான் அவரின் அந்தப் புன்னகைக்கு அர்த்தம் செய்துகொண்டேன்.
"சரி, நீங்க இங்கே வந்துட்டா, சாவி பத்திரிகையை யார் கவனிச்சுப்பா?" என்று கேட்டார் எஸ்.ஏ.பி.
"அடுத்த சில வார காலம் சாவி சாரே பார்த்துப்பார். அப்புறம் மூடிடுவார். சில காலம் கழிச்சு எடுக்க வேண்டிய முடிவை, இதைச் சாக்கிட்டு உடனே எடுத்துடுவார். ஏன்னா, இப்போதைக்கு எடிட்டோரியலில் சாவி சாரும் நானும் மட்டும்தான் இருக்கோம்" என்றேன்.
எஸ்.ஏ.பி. யோசனையில் ஆழ்ந்தார். பிறகு "சமீபத்துல ஒரு ஏழெட்டு நாளைக்கு முன்னால சாவி சாரை ஒரு ஃபங்ஷன்ல பார்த்தேன். பத்திரிகையை நடத்த முடியாம சிரமப்படறதைப் பத்திச் சொன்னார். எனக்கு ரொம்பவும் பிடித்த பத்திரிகை சாவி. அதனால நான் அவர்கிட்டே, 'சார், பிரதிகள் விற்பனை குறைவா இருக்குங்கிறதுக்காக பத்திரிகையை நிறுத்திடாதீங்க. இன்னும் ஒரு ஏழெட்டு வருஷம், உங்களுக்காக இல்லேன்னாலும் எனக்காக 2000-மாவது வருஷம் வரைக்குமாவது இதை நீங்க தொடர்ந்து நடத்தணும்னு கேட்டுக்கறேன்'னு அவரிடம் சொன்னேன். அவர் சிரிச்சுக்கிட்டே 'ஆகட்டும். நீங்க இப்படிச் சொன்னதே எனக்குச் சந்தோஷமா இருக்கு. எஸ்.ஏ.பி என்கிற பெரிய வாசகருக்காகவே இதை நான் நடத்தறேன்'னு உற்சாகமா சொன்னார். அப்படியிருக்கும்போது, இப்போ நான் உங்களை இங்கே வேலைக்கு எடுத்துக்கிட்டா அது நல்லாருக்குமா? 'ஏய்யா... 2000 வரைக்கும் சாவியை நடத்தணும்னு எங்கிட்ட சொன்ன கையோடு, என்கிட்டே இருக்கிற ஒருத்தனையும் பிடுங்கிக்கிட்டா எப்படி?'னு சாவி சார் கேட்டா, நான் என் மூஞ்சியை எங்கே கொண்டுபோய் வெச்சுப்பேன்?" என்றார்.
எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. அமைதியாக அவரே ஒரு முடிவு சொல்லட்டும் என்று காத்திருந்தேன்.
"சரி, நீங்க போய் பழையபடியே அவர்கிட்டே உற்சாகமா வேலை செய்யுங்க. அவர் எப்போ பத்திரிகையை மூடறாரோ, அப்போ வாங்க. உங்களுக்கான இடம் எப்பவும் இங்கே காலியா இருக்கும்" என்றார்.
அதுதான் எஸ்.ஏ.பி.
அதன்பின் அடுத்த ஆண்டே, பொருளாதார நெருக்கடிகளால் சாவி இதழைத் தொடர்ந்து நடத்த முடியாமல் நிறுத்திவிட்டார் சாவி. ஏற்கெனவே கடும் சிரமத்தில் இருந்த அவரின் கோபத்தைத் தூண்டுவதுபோல் நான் என்னையறியாமல் நடந்துகொண்டுவிட்டேன் என்பதும் ஒரு காரணம். எஸ்.ஏ.பி அவர்கள் அதற்கு முன்பே அமரராகிவிட்டதால், அதன்பின் அங்கே செல்ல விரும்பாமல், ஆனந்த விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியனுக்கு இரண்டே வரிகளில் என் நிலையைத் தெரிவித்து வேலை வாய்ப்பு கேட்டேன். அவர் உடனே என்னைச் சேர்த்துக்கொண்டார். அதன்பின் ஒருநாள், "உங்களை இங்கே வேலையில சேர்த்துக்கறதுக்கு முன்னாடி சாவி கிட்டே கேட்டேன், 'பையன் எப்படி, ஊக்கமா வேலை செய்வானா?'ன்னு. அவர் உடனே, "தங்கமான பையன். அவனை நீங்க வேலைக்கு எடுத்துக்கிட்டீஙகன்னா அவன் உங்களுக்கு ஒரு 'அஸெட்'டாகவே இருப்பான்'னு உங்களைப் பத்தி ரொம்பவும் புகழ்ந்து சொன்னார்" என்றார். எனக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! ஏனென்றால், என்மீது சாவி சார் கடுங்கோபத்தில் இருப்பார் என்றுதான் அதுவரை நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் அதையெல்லாம் மறந்து என்னைப் பற்றி உயர்வாக விகடன் சேர்மனிடம் சொல்லியிருக்கிறார் என்பதை அறிந்தபோது என் கண்கள் கலங்கியேவிட்டன.
எத்தகைய மாமனிதர்களுடன் பழகியிருக்கிறேன் என்கிற நினைப்பு ஒன்றே போதும், இந்த என் ஜென்மத்தை அர்த்தமுள்ளதாக்க!

Sunday, December 10, 2017

ஜாய்ஃபுல் சிங்கப்பூர்... கலர்ஃபுல் மலேசியா! - 8

மேக வனாந்தரமும் பூ மண்டபமும்!

நைட் சஃபாரி முடிந்து, இரவு 12 மணி சுமாருக்கு டாக்ஸியில் வீடு திரும்பிக்கொண்டிருந்தோம். 

சிங்கப்பூரைப் பொறுத்தவரை மிகப் பாதுகாப்பான நகரம் என்று எல்லாருமே புகழ்ந்து சொல்கிறார்கள். காரணம், இங்கிருக்கிற சட்ட திட்டங்களும், அவற்றை நடைமுறைப்படுத்தும் விதமும்தான். ‘நடு இரவு 12 மணிக்கு இளம்பெண் ஒருத்தி உடம்பு முழுக்கத் தங்க நகைகள் அணிந்துகொண்டு, சற்றும் பயமின்றித் தெருவில் என்றைக்குப் பாதுகாப்பாக நடந்து செல்ல முடிகிறதோ, அன்றைக்குதான் உண்மையான சுதந்திரம் கிடைத்ததாக அர்த்தம்’ என்று காந்திஜி சொன்னது, சிங்கப்பூர் நிலவரத்தைக் கேள்விப்பட்டதால் இருக்குமோ என்று தோன்றுகிறது.

சிங்கப்பூரில் டிராஃபிக் ஒழுங்கு அத்தனை சுத்தம். விதிமீறலை எங்கேயும் ஒரு புள்ளியளவுகூடக் காண முடியவில்லை. நாங்கள் அன்றைய இரவு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, அதிகம் போக்குவரத்து இல்லை. காரணம், நாங்கள் அப்போது இருந்தது ‘ஹார்ட் ஆஃப் த சிட்டி’ இல்லை; சிங்கப்பூரின் மேற்கு முனை.

ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடந்துகொண்டிருந்தபோது, தெருவில் வேறு எந்த வாகனமும் காணப்படவில்லை. ஆனாலும், அந்த நேரத்தில் எங்கள் டாக்ஸி சட்டென்று வேகம் குறைந்தது. 

எங்களுக்குக் காரணம் புரியவில்லை. ‘பெட்ரோல் காலியா? போடப்போகிறாரா?’ என்று யோசனையோடு எதிரே பார்த்தபோதுதான் விஷயம் விளங்கியது.

சிக்னலில் ஆரஞ்சு ஒளிர்ந்து, சிவப்புக்கு மாறியது. தெருவில் ஈ காக்கா இல்லை. ஆனாலும், வண்டியை நிறுத்திவிட்டார் டிரைவர். அந்தச் சில விநாடிகளில் எங்கள் காரின் பின்னால் இன்னும் இரண்டு மூன்று கார்கள் வந்து நின்றன. யாரும் தங்கள் டிராக்கிலிருந்து மாறி, மூக்கை நீட்டிக்கொண்டு முன்னால் வரவில்லை. ஹாரன் சத்தமும் எழுப்பவில்லை. அவர்களும் அமைதியாகக் காத்திருந்தார்கள்.

சிக்னலில் பச்சை விழுந்ததும் காரைக் கிளப்பினார் எங்கள் டிரைவர். இந்த ஒழுங்கும் கட்டுப்பாடும் இருப்பதால்தான் வாகன விபத்துகள் இல்லா தேசமாக இருக்கிறது சிங்கப்பூர்.

இன்னொன்றையும் கவனித்தேன்… அங்குள்ள டாக்ஸிகள் எல்லாமே பார்ப்பதற்குப் புத்தம்புதுசாக இருந்தன. எதன் உடம்பிலும் ஒரு சின்ன கீறல் இல்லை. முன்பக்கமோ பின்பக்கமோ டொக்கு இல்லை. வண்டி ஓடும்போது ஒரு சின்ன ஜெர்க் இல்லை; உறுமல், உதறல் இல்லை. எந்த வாகனத்திலிருந்தும் ஒரு துளியளவு வேண்டாத சத்தமோ புகையோ வெளியேறவில்லை. இத்தனைக்கும் பல வண்டிகள் ஏழெட்டு வருஷங்களாக ஓடிக்கொண்டிருப்பவை.

நாங்கள் பயணிக்கிற கார்களின் மீட்டர்களைப் பார்ப்பது என் மகனின் வழக்கம். ஒவ்வொன்றும் ஒரு லட்சத்து அறுபதாயிரம் கிலோமீட்டர்கள், இரண்டு லட்சத்துச் சொச்சம் கிலோ மீட்டர்கள் என்று காட்டியதைப் பார்த்து வியந்து, “அப்படித் தெரியவே இல்லையே!” என்றான்.

இன்னொரு விஷயம்… அங்கு நாங்கள் இருந்தவரையில் (லிட்டில் இந்தியா பகுதி தவிர) வேறெங்கேயும் கார்களோ, பஸ்ஸோ ஹாரன் சத்தம் எழுப்பிக் கேட்கவேயில்லை. தேவையில்லாமல் ஹாரன் சத்தம் எழுப்புவதை முன்னால் போகும் வாகனத்தின் டிரைவரையோ, பிளாட்பாரத்தில் நிற்பவர், நடப்பவரையோ டீஸ் செய்வதாக அங்குள்ள டிரைவர்கள் கருதுகிறார்கள். ஹாரன் ஒலிப்பதற்கான தேவையே இல்லாமல் வாகனங்கள் அனைத்தும் அதனதன் ஒழுங்கில் இயங்கிக்கொண்டிருப்பதுதான் சிங்கப்பூரின் அழகு!

ஆரஞ்சு சிக்னல் விழுந்தவுடனேயே வண்டியை ஸ்லோ செய்து நிறுத்துவதற்குத் தயாராகிவிடுகிறார்கள். சிவப்பு விழுவதற்குள் தாண்டிவிட வேண்டும் என்று நம்மூர்க்காரர்கள்போல் வேகத்தைக் கூட்டுவதில்லை. இந்த ஒழுங்கு, பாதசாரிகளிடமும் இருக்கிறது. வாகனங்கள் ஓடிக்கொண்டிருக்கும்போது தாங்களே டிராஃபிக் கான்ஸ்டபிள்களாக மாறி, கையை உயர்த்திக் காட்டி, நிறுத்தும் சைகை செய்துகொண்டே, தடதடவென்று குறுக்கில் பாய்வதில்லை. சிக்னலில் வண்டிகள் நின்றாலும்கூட, தாங்கள் கிராஸ் செய்வதற்கான பச்சை சிக்னல் விழுந்தால் ஜீப்ரா கிராஸிங்கில் இறங்கி நடக்கிறார்கள்.

சிங்கப்பூரில் சொந்தமாக கார் வாங்கி வைத்துக்கொள்வதற்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள், விதிமுறைகள், நிபந்தனைகள் இருக்கின்றன. பெரும்பாலான பணக்காரர்களிடமும் அங்கே சொந்தமாக கார் இல்லை. காரணம், மாசுக் கட்டுப்பாடு. ஆளாளுக்குக் கார் வாங்கி வைத்துக்கொண்டு ஓட்டினால், பொல்யூஷன் ஏற்பட்டுவிடும் என்கிற பயம்தான் முக்கியக் காரணம். எனவே, எம்.ஆர்.டி. டிரெயினையும், பஸ்களையும் ஊக்குவிக்கிறது அந்த அரசு.

காற்று மாசுவில் இத்தனை கெடுபிடியாக இருக்கும் அந்த அரசு, சிகரெட் புகைக் கட்டுப்பாட்டில் தீவிரமாக இல்லை என்பது ஒரு முரண். பொது இடங்களில், பார்ப்பவர் எல்லாம் பக் பக்கென்று சிகரெட்டை ஊதித் தள்ளிக்கொண்டிருக்கிறார்கள். எந்த டாக்ஸிக்குள் ஏறினாலும் சிகரெட் நெடி மூச்சு முட்டுகிறது!

சரி, நம்ம விஷயத்துக்கு வருவோம்.

மறுநாள் காலையில் நாங்கள் டிபன் சாப்பிட்டுவிட்டுக் கிளம்பி, நேரே பொட்டானிக்கல் கார்டன் போனோம். 150 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான கார்டன் என்றார்கள். என்ட்ரி ஃப்ரீ. மிகப்பெரிய ஏரியா. நடந்துகொண்டே இருந்தோம். அங்கே புதிதாக ஏதுமில்லை. வழக்கமாக நம்ம ஊட்டி, கொடைக்கானல், ஏற்காட்டில் பார்த்தவைதான்.

மதியம் 2 மணி போல் வீடு திரும்பி, சாப்பிட்டுவிட்டு, மாலை 4 மணி போல் கிளம்பினோம். எங்களுடன் கண்ணன் தம்பதியும் சேர்ந்துகொண்டனர்.

நேரே ‘கார்டன்ஸ் பை தி பே’ என்னும் பகுதிக்குப் போனோம். தமிழில் ‘வளைகுடாத் தோட்டம்’ எனலாம். இந்தப் பகுதியில்தான் கிளார்க் க்வே ரிசார்ட்ஸ், சூதாட்ட அரங்கம் காஸினோ, கிளவுட் ஃபாரஸ்ட், ஃப்ளவர் டோம், ஓஸிபிஸி ஸ்கை வே, மெரினா பே சாண்ட்ஸ், மெர்லின் பார்க் என சிங்கப்பூரின் முக்கிய அட்ராக்‌ஷன்கள் எல்லாம் சுற்றிச் சுற்றி அமைந்துள்ளன.

பளபளக்கும் அலுமினிய உடம்போடு இரண்டு ராட்சத மீன்கள், கடலிலிருந்து சற்று வெளித்தெரிவதுபோல் காணப்படும் இரண்டு பெரிய டூம்களில் ஒன்றில் கிளவுட் ஃபாரஸ்ட்டும், மற்றொன்றில் ஃப்ளவர் டோமும் அமைந்துள்ளன. உள்ளே போய் வர எங்கள் நாலு பேருக்கும் என்ட்ரி ஃபீ மொத்தம் 120 சிங்கப்பூர் டாலர். நம்ம ரூபாய் மதிப்பில் கிட்டத்தட்ட 6000.

கிளவுட் ஃபாரஸ்ட்டின் உள்ளே செயற்கை வனாந்தரம் அமைக்கப்பட்டிருக்கிறது. செயற்கை நீர்வீழ்ச்சி ஒன்றும் உயரத்திலிருந்து கொட்டிக்கொண்டிருக்கிறது. மொத்த இடமும் மிதமாகக் குளிரூட்டப்பட்டிருந்தது. 

அது முடிந்து அப்படியே அடுத்துள்ள ஃப்ளவர் டோமுக்குப் போனோம். ஏராளமான பூச்செடிகள், பொம்மைகள்… பொம்மைக் காய்கறித் தோட்டம் ஒன்று இருந்தது. கம்பியாலேயே முறுக்கி முறுக்கிச் செய்யப்பட்ட ஒரு குதிரையும் ரதமும் இருந்தன. சுவாரஸ்யமான இடம்தான்.

இந்த இரண்டு டூம்களுக்கும் நாங்கள் ஏற்கெனவே சுரேஷ் ஜெயஸ்ரீ தம்பதி மூலம் டிக்கெட் புக் செய்திருந்ததால், அவற்றுள் நாங்கள் மட்டுமே போய்ப் பார்த்து வந்தோம். கண்ணன் தம்பதி வெளியே வளைகுடாத் தோட்டத்தில் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்தனர். நாங்கள் வெளியே வந்ததும், கண்ணன் தம்பதி எங்களுக்காக ஓஸிபிஸி ஸ்கை வாக் டிக்கெட் வாங்கி வைத்துக் காத்திருந்தார்கள்.

செயற்கை ராட்சச மரங்கள் போல் உயர உயரமாக எழுப்பி, வண்ண வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது ஒஸிபிஸி ஸ்கை வாக். உள்ளே போனோம். டிரம்ஸ் இசை அதிர அதிர, அதற்கேற்ப செயற்கை மரங்கள் நிறம் மாறி மாறி ஒளிர்ந்தது மிக மிக ரசனையான காட்சி! அதன் மேலே ஏறிச் செல்லவும் பாதை உண்டு. அங்கே ஒரு மணி நேரம்போல் இருந்திருப்போம். இன்னும்கூட இருக்கலாம்தான்!

அதன்பின், சூதாட்ட நகரமான ‘காஸினோ’வுக்கு எங்களை அழைத்துச் சென்றார் கண்ணன். அவர்கள் உள்ளே வரவில்லை. காரணம், சிங்கப்பூர்வாசிகள் உள்ளே நுழைய, ஒருவருக்கு 200 டாலர் கட்டணமாம். டூரிஸ்ட்டுகளுக்கு பாஸ்போர்ட் காண்பித்தால் போதும், என்ட்ரி ஃப்ரீ! எனவே, நாங்கள் மட்டும் உள்ளே போனோம், வேடிக்கை பார்க்க! தங்கள் சொந்த தேசத்தவர் சூதாட்டத்தில் ஈடுபட்டுப் பணத்தை இழக்கக்கூடாது என்கிற நல்ல எண்ணம் சிங்கப்பூர் அரசுக்கு!

பால்கனி வளைவு பாதையிலிருந்து கீழே பார்த்தால், தகதகவென ஜொலித்துக்கொண்டிருந்தது அரங்கம். கீழே இறங்கி, ஒவ்வொரு டேபிளாகப் புகுந்து புகுந்து வந்தோம். சீட்டுக்கட்டில் தொடங்கி, பின்பால், அது இது என விதம்விதமான ஆட்டங்களில் டாலர்களைப் பந்தயம் வைத்து ஆடிக்கொண்டிருந்தார்கள் ஏராளமானோர்.

ஓரிடத்தில், உயரே விதானத்திலிருந்து தடதடவென்று நீர்வீழ்ச்சிபோல் ஹாலில் தண்ணீர் கொட்டி, நதி போல ஓடிக்கொண்டிருந்தது. சூப்பர் செட்டப்!

அங்கே அரை மணிக்கு மேல் எங்களுக்கு வேலை இல்லை; பார்க்கவும் ஏதுமில்லை. வெளியேறினோம். மணி இரவு 9 ஆகியிருந்தது.

“இப்போ இங்கே லேசர் ஷோ ஒண்ணு காண்பிப்பான். பார்த்துட்டுக் கிளம்பிடலாம்” என்றார் கண்ணன்.

வாசலில் சற்றுத் தூரம் நடந்தால் சிங்கப்பூர் நதி வருகிறது. செயற்கையாக உண்டாக்கப்பட்ட நதி. அதன் கரையில், சிமென்ட் தளங்களில் ஆயிரக்கணக்கான ஜனங்கள் ஆவலுடன் நம்ம ஊரில் தெருக்கூத்து பார்ப்பதுபோல் துண்டை விரித்து அமர்ந்திருக்கிறார்கள்.

லேசர் ஷோ தொடங்கியது. அதுவரை மென்மையாக ஒலித்துக்கொண்டிருந்த இசை அதிர்ந்து வேகம் பிடிக்க, நீருக்குள் பதிக்கப்பட்டிருந்த  குழாய்கள் வழியாக தண்ணீர் பீய்ச்சியடிக்க… அங்கே ஒரு நீர் நடனம் ஆரம்பமாகியது.

இசையின் தாள கதிக்கேற்ப ஃபவுண்டெய்ன்கள் நீரை விதம் விதமாக வளைத்தும் நெளித்தும் பொழிய, ஏதோ மாயாஜாலக் காட்சி போன்ற உணர்வு.

எதிரே தூரத்தில் ஸ்கைபார்க் ஓட்டலின் மாடியிலிருந்து லேசர் கதிர்கள் சிவப்பும் பச்சையும் நீலமுமாய் இந்த நீரூற்றின்மேல் விழ, நீர் நடனம் கலர்ஃபுல்லாக மாறியது. வெறுமே வண்ணங்களாக மட்டுமில்லாமல், அதில் ஆண் பெண் உருவங்களும் தோன்றி நடனமாடும் காட்சிகள் உண்டாயின.

அரைமணி நேரம் போல் பார்த்திருப்போம். அடுத்த காட்சி எப்போது என்று அந்த நீரூற்று ஒளிக்காட்சியிலேயே எழுத்துக்கள் தோன்றி, சுபம் போட்டதும், அங்கிருந்து கிளம்பினோம்.

(பயணம் தொடரும்)


Friday, December 08, 2017

அவரின் அணுக்கம், எனது ‘பாக்கியம்’!

நான் பழகிய சில எழுத்தாளர்களுடனான என் அனுபவங்கள் பற்றி ஃபேஸ்புக்கில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறேன். அந்த வரிசையில் அடுத்ததாக, நகைச்சுவை மாமன்னர் பாக்கியம் ராமசாமி பற்றிக் கொஞ்சம் எழுதிவைத்திருந்தேன். அதை பிரின்ட் அவுட் எடுத்து, நாளைய சனிக்கிழமையன்று (9.12.17) அவரின் வீட்டுக்குச் சென்று, அவரிடம் காண்பித்து, அவரிடம் பேசி, கூடுதலாக வேறு ஏதேனும் விஷயங்கள் சேர்த்துவிட்டுப் பதிவிடலாம் என்று எண்ணியிருந்த நேரத்தில், எதிர்பாராத அதிர்ச்சியாக இன்று காலையில் என்னை அதிர வைத்தது அவரின் மரணச் செய்தி!

சந்தோஷமான ஒரு பதிவாக வலைதளத்தில் ஏறியிருக்க வேண்டிய இந்தக் கட்டுரை, அஞ்சலிக் கட்டுரையாக மாறிய கொடுமையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.

பாக்கியம் ராமசாமி சார் “ரவ்வி… ரவ்விப்ரகாஷ்ஷ்..” என்று என் பெயரை அழுத்தி உச்சரித்து அழைக்கும்விதமே என்னை அவர் இறுக அணைத்துக்கொள்வதுபோல் இருக்கும். அவரின் கலகல சிரிப்பு, நம் இதயப் புண்கள் எல்லாவற்றையும் ஆற்றும் மாமருந்து.

இதயம், நுரையீரல் என என் உள்ளுறுப்புகளில் ஏதோ ஒன்று கழன்று காணாமல் போய், அந்த இடம் காலியாக இருப்பது போன்ற உணர்வைத்தான் ஏற்படுத்தியிருக்கிறது அவரின் இழப்பு.   

oooooooo

சின்ன வயசில் அப்பா எனக்கு அறிமுகப்படுத்திய பெயர் ‘பாக்கியம் ராமசாமி’. குமுதம் பத்திரிகையில் வெளியான ‘அப்புசாமி-சீதாப்பாட்டி’ தொடர்களுக்கு என் அப்பா பெரிய ரசிகர். தான் அவற்றைப் படித்து ரசித்துச் சிரிப்பதோடு என்னையும் படிக்கச் சொல்வார்.

அன்றைக்கு, ஜோக்குகளில் உள்ள நகைச்சுவையையே புரிந்துகொள்ள முடியாத என்னால் ஒரு கதையைப் படித்து அதில் உள்ள நகைச்சுவையை அனுபவிக்கத் தெரியவில்லை. ஆனாலும் படித்தேன். ஒரு கதையின் அத்தியாயத்தில், அரபு ஷேக் ஒருவரின் முன் மண்டியிட்டு அவரின் மந்திரி நீளமாக பீடிகை போட்டு வசனங்களாகப் பேசி வணக்கம் தெரிவித்து மன்னிப்புக் கேட்பது போன்ற பகுதி இடம்பெற்றிருந்தது. புரியவில்லை என்றாலும், அது எனக்கு ஏனோ மிக சுவாரஸ்யமாக இருந்தது. அதுதான் ‘ஆயிரத்தொரு அப்புசாமி இரவுகள்’ தொடர்கதை.

அதன்பின், கொஞ்சம் வளர்ந்து பெரியவனானதும், அதாவது நான் பத்தாம், பதினொன்றாம் வகுப்புகளில் படிக்கும்போது, அப்புசாமி – சீதாப்பாட்டி படக்கதைப் புத்தகங்களாக வெளியானவற்றையெல்லாம் வாங்கிப் படித்தேன். அதில், அப்புசாமிதான் சீதாப்பாட்டிக்கு (அப்போது பாட்டியல்ல! இளம்பெண் சீதா) ஏ-பி-சி-டி புத்தகங்களையெல்லாம் வாங்கிக் கொடுத்து, அவளின் ஆங்கில அறிவை விருத்தி செய்வதாகவெல்லாம் கதைகள் இருக்கும்.

பின்னாளில், ‘சாவி’ பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோதுதான் ‘பாக்கியம் ராமசாமி’ அவர்களுடன் பழகும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அவர் அப்போது குமுதம் பத்திரிகையிலிருந்து விலகியிருந்த நேரம். சாவி அவரைத் தம் பத்திரிகையில் எழுத அழைத்தார்.

சாவி அவர்களின் இல்லம் அப்போது அண்ணா நகரில், ஆதர்ஷ் காலேஜுக்கு எதிரில் இருந்தது. கீழே சாவி பத்திரிகை அலுவலகமும், மாடியில் சாவி சாரின் வீடும்.

அப்போது நான் சாவி இதழில் ‘இளவட்டம்’ என்னும் பெயரில் கேள்வி-பதில் எழுதிக்கொண்டிருந்தேன். சாவி எழுதித் தரும் பதில்களில் சில நேரம் ஓரிரு பதில்களைச் சற்றே எடிட் செய்தோ அல்லது வேறு ஒரு பதிலையோ எழுதி அவரிடம் காட்டுவதுண்டு. வேறு எந்தப் பத்திரிகையாளரிடமாவது இப்படி என்னால் சுதந்திரமாகச் செயல்பட்டிருக்க முடியுமா என்று யோசிக்கக்கூட முடியவில்லை. அப்படி நான் செய்யும் திருத்தங்களைப் பார்த்துவிட்டு, “நீயே கேள்வி-பதில் எழுதேன், ரவி!” என்றார் சாவி ஒருநாள். திடுக்கிட்டுப் போனேன்.

“ஏன் பயப்படறே? நல்லாதானே எழுதறே! ட்ரை பண்ணு. எல்லாம் சரியா வரும்” என்று ஊக்கப்படுத்தினார். அவரேதான் ‘இளவட்டம்’ என்று பெயர் வைத்தார். சாவி இதழில் ஒரே நேரத்தில் சாவி பதில்கள், இளவட்டம் பதில்கள் என இரண்டுமே வெளியாகின. ஒருமுறை, கொஞ்சம் செக்ஸியான கேள்வி ஒன்று சாவி சாருக்கு வந்தபோது, ‘ரீ-டைரக்ட் டு இளவட்டம்’ என்று பதில் கொடுத்திருந்தார்.

அந்தக் கேள்வி… “டெபோனிர் பத்திரிகையை வாங்கியதும் நீங்கள் முதலில் பார்ப்பது எந்தப் பக்கத்தை?”

டெபோனிரில் அப்போது நடுப்பக்கத்தில் முழு நிர்வாணப் படங்கள் வெளியாகிக்கொண்டிருந்தன. அதை மனதில் கொண்டுதான் அந்த வாசகர் குறும்பாக இந்தக் கேள்வியை எழுதி அனுப்பியிருந்தார். இதற்குத்தான் ‘ரீ-டைரக்ட் டு இளவட்டம்’ என்று தன் கேள்வி-பகுதியில் பதில் கொடுத்திருந்தார் சாவி.

அந்தக் கேள்வி அதே இதழில் ‘இளவட்டம் பதில்கள்’ பகுதியில், ‘அக்கம்பக்கத்தை’ என்னும் பதிலோடு வெளியானது. அந்த பதிலும் சாவி சொன்ன பதில்தான்!

அதன்பின், சாவி சார் இரண்டாவது முறையாக ‘குங்குமம்’ பத்திரிகைக்கு ஆசிரியர் பொறுப்பேற்றபோது, அதில் ‘அசரீரி’ என்னும் தலைப்பில் என்னைக் கேள்வி-பதில் பகுதி எழுதச் சொன்னார். எழுதினேன். பின்னர், ‘அசரீரி’ என்னும் தலைப்பை ‘கதிர் பதில்கள்’ என கலைஞர் மாற்றிவிட்டார். அதன்பின் சில மாதங்களில், சாவி சாரே அங்கிருந்து விலகிவிட்டார். இது தனிக் கதை.

திரு.பாக்கியம் ராமசாமி, சாவி அலுவலகத்துக்கு வந்திருந்தபோது, தான் இளவட்டம் பதில்களைத் தொடர்ந்து படிப்பதாகச் சொல்லி, அந்த இளவட்டத்தைச் சந்திக்க வேண்டுமே என்று சாவி சாரிடம் கேட்டார். அருகில் நின்றிருந்த என்னைக் காட்டி, “இதோ, இவன்தான்!” என்றார் சாவி. “மத்தவங்க..?” என்று பா.ரா. கேட்க, “இவன் ஒருத்தன்தான். வேறு யாரும் இல்லை!” என்று சாவி சார் சொன்னதும், பாக்கியம் ராமசாமி அவர்களுக்கு ஆச்சர்யமான ஆச்சர்யம்! “நான் ஏதோ இளைஞர் பட்டாளம் ஒண்ணு உள்ளே வந்திருக்குன்னல்லவா நினைச்சேன்!” என்றார்.

சாவி சாரைப் போலவே மனசு திறந்து பாராட்டக்கூடியவர் பாக்கியம் ராமசாமி.

ஒருமுறை, A4 சைஸ் தாள்களைப் பாதியாகக் கிழித்து என் டேபிளில் அடுக்கி வைத்திருந்தேன். “இது என்ன?” என்று கேட்டார் பா.ரா. “கதை, கட்டுரை ஏதாவது எழுதறதுக்கு சார்!” என்றேன். “இதை எதுக்கு வேலை மெனக்கெட்டு பாதிப் பாதியா கிழிச்சு வெச்சிருக்கே? அப்படியே எழுத வேண்டியதுதானே?” என்றார். “இல்ல சார், முதல்ல ஒரு பாரா எழுதின பிறகுதான், என்னால ஒரு ஃபார்முக்கு வர முடியும். அதுக்கப்புறம் கடகடன்னு எழுதி முடிப்பேன். ஆனால், அந்த முதல் பாராவை சரியா எழுதறதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆயிடும். A4 ஷீட்டுல எழுதினா, அடிச்சுட்டு மறுபடி எழுதணும். அது என் மூடை அப்செட் பண்ணிடும். தொடர்ந்து அதுல எழுத முடியாது. அதனால நான் இந்த ட்ரிக்கைக் கைப்பிடிக்கிறேன்” என்றேன். “இது நல்லாருக்கே! நானும் இனிமே இதை ஃபாலோ பண்ணலாம்னு இருக்கேன்” என்றார்.

பார்த்த அந்த முதல் சந்திப்பிலேயே என்மீது அவ்வளவு வாஞ்சை கொண்டுவிட்டார் பாக்கியம் ராமசாமி. “ரவி, நீ வீட்டுக்கு எப்படிப் போவே?” என்று கேட்டார்.

நான் அப்போது ஒரு ஓட்டை உடைசல் டூ வீலர் வைத்திருந்தேன். அதில் போவதாக அவரிடம் சொன்னேன்.

“என்னைக் கொஞ்சம் பனகல் பார்க்ல இறக்கி விட்டுடறியா?” என்றார்.

எனக்குத் திடுக்கென்றது. நானே சுமாராகத்தான் ஓட்டுவேன். அதிலும் வண்டி வேறு சொல்லிக்கொள்கிற மாதிரி இல்லை. இவ்வளவு பெரிய எழுத்தாளரை எப்படி அதில் அழைத்துச் செல்ல முடியும்? அவர் போன்ற மாமனிதர் உட்காரச் சற்றும் தகுதியான வண்டியே இல்லை அது. எனவே, தயங்கினேன்.

“என்ன தயங்கறே? விழுந்துடுவேன்னு பார்க்கறியா? விழ மாட்டேன். தைரியமா வா!” என்றார். தயக்கமே இல்லாமல் என் டி.வி.எஸ். எக்ஸெல் வண்டியில் என் பின்னால் அமர்ந்துகொண்டார். டொர்… டொர்ரென்று ஒரு மொக்கை வண்டியில் அவரை உட்கார வைத்து அழைத்துச் செல்ல எனக்குத்தான் கூச்சமாகவும், சங்கடமாகவும் இருந்தது. அவர் அதுபற்றி அலட்டிக்கொள்ளவே இல்லை.

தான் பெரிய எழுத்தாளர் என்கிற கர்வமோ பந்தாவோ கொஞ்சம்கூட இல்லாதவர் பாக்கியம் ராமசாமி சார்.

அவரை அறிமுகம் செய்துவைக்கவும், அந்த மாமனிதரின் ஆசிகளைக் கிடைக்கச் செய்யவும், சில ஆண்டுகளுக்கு முன்பு ஒருநாள் நான் என் மகனை அழைத்துப் போயிருந்தேன். அவன் சின்ன பையன் என்றெல்லாம் பாராமல், சரிக்குச் சமமாக அவனோடு ரொம்ப நேரம் பேசிக்கொண்டிருந்தார் பா.ரா.

“ஏதோ ஃபேஸ்புக்னு என்னவோ சொல்றாங்களே… உனக்குத் தெரியுமா? எனக்குக் கொஞ்சம் சொல்லித் தாயேன்” என்றார்.

என் மகன் அங்கேயே, அவரின் சிஸ்டத்திலேயே அமர்ந்து ஃபேஸ்புக் அக்கவுன்ட் ஓப்பன் செய்து, கவர் பிக்சர், புரொஃபைல் பிக்சர் எல்லாம் செட் செய்து, அவர் சொன்ன சில வரிகளை முதல் பதிவாகப் பதிவேற்றியும் கொடுத்தான். அவரின் உதவியாளர் அனில் கேட்ட சில சந்தேகங்களுக்கு விளக்கமும் தந்தான். (இதை பா.ரா-வின் மகன் யோகேஷும் அனிலும் இன்றைக்கு நினைவுகூர்ந்து பேசினார்கள்.).

அதன்பின் அந்த ஃபேஸ்புக்கை அனிலே சிறப்பாகக் கையாளத் தொடங்கினார். பா.ரா. அதை ஒரு பத்திரிகை போலவே நடத்தி, பரிசுப் போட்டி எல்லாம் அதில் வைத்து, வெகு விரைவில் 5000 நட்புகளைத் தாண்டிவிட்டார்.

ஆனந்த விகடனில் அவரின் நகைச்சுவைக் கதைகள் பலவற்றைக் கேட்டு வாங்கிப் பிரசுரித்தேன். குறிப்பாக, பஃபே விருந்தில் நின்றுகொண்டே சாப்பிடும் சங்கடம், எதை முதலில் எடுத்துச் சாப்பிடுவது என்கிற குழப்பம் ஆகியவற்றை வைத்து அவர் எழுதிய ஒரு சிறுகதையும், நோயாளிகளைப் பார்க்க வருபவர்கள் எதையாவது ஒன்றுகிடக்க ஒன்று சொல்லி நோயாளிக்கு பீதி ஏற்படுத்துவது பற்றி அவர் எழுதிய ஒரு சிறுகதையும் அத்தனை நகைச்சுவையாக இருக்கும்.

வீட்டுக்கு வீடு சிஸ்டமும், கணினிப் பயன்பாடும் தொடங்கிய அந்த ஆரம்ப காலத்தில், கந்த சஷ்டி கவசம் பாணியில் விகடனில் ‘கணினி சிஸ்ட கவசம்’ ஒன்று எழுதினார் பா.ரா. அது வாசகர்களிடம் அமோக வரவேற்பு பெற்றது.

கதைகள் எழுதியது மட்டுமல்லாமல், ஒருசில ஆங்கில கார்ட்டூன் படங்களுக்கு தமிழ் வசனமும் எழுதியிருக்கிறார் பா.ரா. என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.

அவரின் குருநாதர் எஸ்.ஏ.பி. பற்றிப் பல சிலிர்ப்பான, ரசனையான விஷயங்களை என்னிடம் பகிர்ந்துகொண்டிருக்கிறார் பா.ரா. தன் நண்பர் ரா.கி.ரா. பற்றி, புனிதன் பற்றியெல்லாம்கூடச் சொல்லியிருக்கிறார்.

அவர் ஆசைப்பட்ட இரண்டு விஷயங்களை என்னால் நிறைவேற்ற முடியவில்லையே என்கிற உறுத்தலும் வருத்தமும் எனக்கு இருக்கிறது.

ஒன்று… அவர் அன்போடு பலமுறை அழைத்தும், அவர் நடத்திய அறக்கட்டளை நிகழ்ச்சிக்கு ஒரு தடவைகூட நான் போனதில்லை. போகக்கூடாது என்றில்லை; ஏதோ வேலை, என்னவோ ஒரு காரணம்!

மற்றொன்று… நான் மிகத் தீவிர டி.எம்.எஸ். ரசிகன் என்று என் ஃபேஸ்புக் பதிவுகள் மூலமாக அவருக்குத் தெரியும். ஆனால், நேரில் பார்க்கும்போதெல்லாம் கதை, கட்டுரை, பத்திரிகைகள், பத்திரிகையாளர்கள் என்றுதான் பேச்சு ஓடுமே தவிர, டி.எம்.எஸ். பற்றி நாங்கள் பேசிக்கொண்டதில்லை.

சில மாதங்களுக்கு முன்னால், அவர் வழக்கம்போல் ஒருநாள் போன் செய்திருந்தார்.

“ரவி, ஃபேஸ்புக்ல நீ டி.எம்.எஸ். பத்தி அடிக்கடி எழுதறதைப் பார்த்து, இன்னிக்கு ஒரு டி.எம்.எஸ். பாட்டை முழுசா கேட்டே ஆகணும்னு தோணிடுச்சு. அடிக்கடி டி.வி-யில டி.எம்.எஸ். பாட்டு ஏதாவது காதுல விழும்னாலும், இன்னிக்கு வேற யோசனை எதுவும் இல்லாம, அப்படியே முழுசா உட்கார்ந்து ஒரு பாட்டைக் கேக்கணும்னு நினைச்சேன். எங்கிருந்தோ புடிச்சு, எனக்காக டி.எம்.எஸ்ஸின் ‘மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்…’ பாடலைப் போட்டுக் காண்பிச்சார் அனில். ஹப்பா… என்னமா பாடறார்! நீ அவரோட ரசிகனா இருக்கிறது ரொம்பச் சரிதான். அடேங்கப்பா… என்னா பக்தி, என்னா குரல்… இனிமே ஒருத்தன் பிறந்துகூட வரமுடியாது இவர் போலப் பாட…” என்று டி.எம்.எஸ்ஸை வானளாவப் புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தார் பாக்கியம் ராமசாமி. நான் காது குளிரக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

பேச்சின் தொடர்ச்சியாக, “ஒரு இடத்துல ‘கல்லானாலும் தணிகை மலையில் கல்லாவேன்…’னு பாடறார் பாரு. ‘அடடா’ன்னு இருக்கு. ரவி, நீயும் நானும் சேர்ந்து டி.எம்.எஸ் நினைவா ஏதாவது செய்யணும். தணிகை மலையில் கல்லாவேன்னு பாடினாரே, சும்மா வெறுமே பாட்டுக்காக இல்லை; மனசுலேர்ந்து அவர் அந்த வரியைப் பாடற மாதிரி எனக்குத் தோணிச்சு. அதனால, அவர் ஆசைப்பட்டதை நிறைவேத்தி வைக்கணும்னு எனக்கு ஆசை. திருத்தணிகை மலையில் ஏறுற படிக்கட்டுகள்ல ஒரு படிக்கட்டாவோ, அல்லது அங்கேயிருக்கிற ஏதாவது ஒரு கருங்கல் தூணாவோ தயார் செஞ்சு, டி.எம்.எஸ்., பாடகர், முருக பக்தர், தோற்றம்-மறைவு எல்லாம் போட்டு, நிரந்தரமா அங்கே வெச்சுடணும். என்ன சொல்றே… திருத்தணி போற பக்தர்கள் கண்ணுல எல்லாம் அது படணும். அவ்வளவு பெரிய பாடகருக்கு ஓர் உண்மையான ரசிகனா இதை நான் செய்யணும்னு ஆசைப்படறேன். இதுக்கான செலவு மொத்தத்தையும் நான் ஏத்துக்கறேன். இதுக்கு யார்கிட்டே பர்மிஷன் கேக்கணும், அறநிலையத்துறைல யார்கிட்டே இதுபத்திப் பேசணும், என்ன பட்ஜெட் ஆகும்னு கொஞ்சம் விசாரிச்சு சொல்லேன்” என்றார்.

அதற்குப் பின்பும் இரண்டு மூன்று தடவை பேசியபோதும், வேறு ஏதோ பேசிக்கொண்டிருந்துவிட்டுக் கடைசியில் இந்த விஷயத்தையும் ஞாபகப்படுத்துவார். ஆரம்பத்தில் நானும் முயற்சி எடுத்து அது குறித்து விசாரித்தேன். ‘சொல்லின் செல்வர்’ திரு. பி.என்.பரசுராமன், ‘இமயத்துடன்’ சீரியலை இயக்கிய இயக்குநர் விஜய் ஆகியோருடனும் இதுபற்றிக் கலந்தாலோசித்தேன். அப்புறம், என் வேலை மும்முரத்தில் அது மறந்தே போனது.

அவரின் ஆசையை நிறைவேற்றித் தர இயலாமல் போனதில் எனக்கு உள்ளபடியே வருத்தம்தான்.

பாக்கியம் ராமசாமி எவ்வளவுக்கெவ்வளவு நகைச்சுவையாளரோ அவ்வளவுக்கவ்வளவு தத்துவ ஞானியாகவும் திகழ்ந்தார். பெரியவர்களுக்கே லேசில் புரியாத தத்துவ விசாரங்கள் அடங்கிய ‘பகவத் கீதை’யை இரண்டு ரிக்‌ஷாக்காரர்கள் பேசிக்கொள்வதுபோல அவர்கள் மொழியில் மிக எளிமையாக அவர் எழுதிய ‘பாமர கீதை’யே இதற்கு சாட்சி!   

ஒருமுறை, என்னிடம் ஏதோ பேசிக்கொண்டிருந்தவர், “ரவி, இப்ப நான் சிலரோட பெயர்களைச் சொல்லிக்கிட்டே வரேன். கவனமா கேளு. கடைசியில ஒரு கேள்வி கேட்பேன். பதில் சொல்லணும். சரியா?” என்றார்.

“சரி சார்” என்று தயாரானேன்.

“காஞ்சிப் பெரியவர், கிருபானந்த வாரியார், எஸ்.ஏ.பி., எம்.ஜி.ஆர்., சிவாஜிகணேசன், வாழப்பாடி ராமமூர்த்தி, ராஜீவ் காந்தி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, சில்க் ஸ்மிதா, ஸ்மிதா பாட்டீல், டி.ஆர்.ராஜகுமாரி, ராம்சுரத்குமார், சாவித்திரி, தேவிகா, ஜெமினி கணேசன், மகாராஜபுரம் சந்தானம், ஜி.கே.மூப்பனார், இந்திரா காந்தி, சஞ்சய் காந்தி, மைக்கேல் ஜாக்சன், ராஜ்கபூர், ராஜேஷ்கன்னா, தேவ் ஆனந்த், வி.பி.சிங், வாஜ்பாய், வேதாத்ரி மகரிஷி, சத்யசாயி பாபா, சுஜாதா, சாவி, நாகேஷ், குன்னக்குடி வைத்தியநாதன், லா.ச.ராமாமிருதம்…” என, ஆன்மிகம், அரசியல், சினிமா, இலக்கியம் எல்லாம் கலந்துகட்டி, கடகடவென ஐம்பது அறுபது பெயர்களுக்கு மேல் சொல்லிக்கொண்டுபோய், மூச்சு வாங்க நிறுத்தினார் பா.ரா.

பின்பு, “இப்ப நான் சொன்ன அத்தனை பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு. என்னன்னு சொல்லு, பார்க்கலாம்!” என்றார்.

என்ன யோசித்தும், இந்தக் கலவையான பட்டியலில் இருப்பவர்களுக்கிடையே என்ன ஒற்றுமை இருக்கிறது என்று என்னால் யூகிக்கவே முடியவில்லை.
“தெரியலை சார், நீங்களே சொல்லிடுங்க!” என்று சரண்டரானேன்.

ஒரு சின்ன இடைவெளிக்குப் பின், “இவங்க அத்தனை பேரும் நம் சம காலத்தவங்க. இவங்கள்ல யாரும் இப்ப உயிரோட இல்லைங்கிறதுதான் ஒத்துமை!” என்றார்.

அவர் இதைச் சொன்னதும், என் நெஞ்சு ஒரு தடவை திடுக்கெனத் தூக்கிப்போட்டது.

வாழ்க்கையின் அநித்யத்தை இதைவிட யாரும் சுலபமாக, சுருக்கமாகச் சொல்லிப் புரியவைத்துவிட முடியாது என்று தோன்றியது.

“நான் சொன்னது கொஞ்சம்தான். இன்னும் யோசிச்சா நம் சம காலத்துல, நம் கண்ணெதிரே வாழ்ந்து மறைஞ்ச இன்னுமொரு ஆயிரம் பேரை நம்மால பட்டியல் போட முடியும். அப்படின்னா, வாழ்க்கைங்கிறது எவ்ளோ சின்னது பாரு! இதுக்குள்ளேதான் மனுஷங்களுக்குள்ளே அத்தனை போட்டி, பொறாமை, சண்டை!” என்றார்.

அவர் சொன்ன இந்த விஷயம் இன்னமும் என் மண்டைக்குள் குடைந்துகொண்டிருக்கிறது.

இப்போது அந்தப் பட்டியலில் மேலும் ஒரு பெயர் சேர்ந்துகொண்டதில், என் மனக் குடைச்சல் அதிகமாகிவிட்டது.