உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, August 01, 2012

வலி தந்த வாலியார்!

 சாவி சார் கலந்துகொண்ட கடைசி விழாவான சாவி-80 நூல் வெளியீட்டு விழாவில் கலைஞருடன் சாவி.
‘மரங்கள் தங்களுக்குள் முனகிக் கொண்டன;
நம்மை வைத்துப் பல சிலுவைகளை உருவாக்கும் மனிதன்
அவர்களிடமிருந்து ஏன் ஒரு இயேசுவை மறுபடி உருவாக்கவில்லை?’

***

மறி ஆடே! செம்மறி ஆடே!
மேய்ச்சலுக்குப் போகிறாயா? போ!
அங்கே நல்ல மூலிகைத் தழைகள் மலிந்து கிடக்கின்றன.
அவைகளை மேய்! தப்பித் தவறி விஷப் பூண்டுகளில்
வாய் வைத்துவிடாதே!
ஜாக்கிரதையாகப் போ! அவசரப்படாதே! நீ
வேகமாய் ஓடி முட்டியில் அடிபட்டு விழுந்தால்
என் கண்களில் முட்டிக்கொண்டு கண்ணீர் வரும்.
அங்கே சுவரோரமாய்ப் படுத்துக் கொள்!
ஆனந்தமாய் அசைபோடு; விடியும் வரை
நிதானமாய் நிம்மதியுடன் தூங்கு.
விடிந்த பின்னர்தானே
பக்ரீத்?!

***

ரயில்கள் மட்டுமல்ல; மனிதர்களும் கூடத்தான்
கை இறங்கியவுடன் - நம்
கை இறங்கியவுடன்
ஓடத் தொடங்குகிறார்கள்!

***

அஞ்ஞானத்தை அறுக்க வந்த
பெரிய’வாள்’.

***

கவிஞர் வாலியை அணுஅணுவாக ரசித்தவன் நான். அவரது ‘தரை மேல் பிறக்க வைத்தான்...’ பாடலை சின்ன வயதிலிருந்து இன்று வரை நான் அத்தனை உருகி உருகிக் கேட்டு ரசிப்பதற்குக் காரணம் டி.எம்.எஸ்-ஸின் குரல் மட்டும் இல்லை; வாலியின் அற்புதமான வரிகளும்தான்! விகடனில் அவர் எழுதிய அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் இவற்றையெல்லாம் பாராட்டிச் சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்; அது எனக்கில்லை.

துக்ளக்கில் கவிஞர் வாலி தொடர்ந்து எழுதி வரும் ‘எனக்குள் எம்.ஜி.ஆர்.’ தொடரையும் அப்படித்தான் நான் ரசித்துப் படித்துக்கொண்டு இருந்தேன்; இருக்கிறேன்.

ஒரு அத்தியாயத்தின் இறுதியில்...

’எம்.ஜி.ஆரை எந்தக் காரணமுமின்றித் தன் ஏட்டில் இடையறாது வசைபாடி வந்தார். அந்த இரண்டெழுத்துப் பத்திரிகையாளரைப் பற்றி’ அடுத்த இதழில் தான் எழுதப்போவதாக அவர் கொடுத்திருந்த குறிப்பு கூட என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. சாவி சாரைப் பற்றி எழுதப் போகிறார் என்பது புரிந்தது. ஆனால், சாவி சாரைத் தாக்கி எழுதினாலும், தனக்கே உரிய சிலேடையில் ரசிக்கும்படியாக எழுதுவார் என்றுதான் நானும் ஆவலோடு காத்திருந்தேன்.

ஆனால்...

சாவி சார் பற்றி வாலி எழுதியிருந்த ஒவ்வொரு வரியைப் படித்தபோதும் ஒரு முறம் நெருப்பை அள்ளி என்னுள் கொட்டினாற்போன்று இருந்தது.

‘எம்.ஜி.ஆரைப் பற்றி ஏனோதானோவென்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் மனம் போனபடியெல்லாம் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் - திரு.சாவி!’ என்று தொடங்கியிருந்த அந்தக் கட்டுரையில், சாவி சாரை வேதாளம், மாடு என்றெல்லாம் உதாரண உவமைகளால் குத்தியிருந்தார் வாலி.

கடைசி வரைக்கும் கலைஞர் கருணாநிதியின் ஆப்த நண்பராக விளங்கியவர் சாவி. கலைஞர் தலைமையில் நடந்த தனது புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞரைப் புகழ்ந்து, நன்றி பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து கோமா ஸ்டேஜை அடைந்து, அப்படியே உயிர் துறந்தவர் அவர். அப்படிப்பட்டவர் தமது நண்பராகிய கலைஞருக்குப் பரம அரசியல் எதிரியாக விளங்கிய எம்.ஜி.ஆரைத் தாக்கிச் செய்தி வெளியிட்டதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது எம்.ஜி.ஆருக்கும் சாவிக்கும் இடையே இருந்த கோப தாபம்!

ஆனால், ‘ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே... ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார், தாங்கள் வாழ்வதற்கு ஊர்ப் பணத்தில் வீடு கட்டினார்...’ என்றும், ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்’ என்றும், ‘ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே, பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்துவிடாதே! ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு, அந்த மாறுதலைச் செய்வதற்குத் தேர்தல் உண்டு’ என்றும் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக, அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியைத் தாக்கிப் பாடல் எழுதிய வாலி அவர்கள் - பின்னர் தனது மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிக் கடனாகவும், தன்னை பத்மஸ்ரீ விருதுக்குப் பரிந்துரைத்ததற்கு நன்றிக் கடனாகவும், காவியக் கவிஞர் என்று பட்டம் கொடுத்ததற்கு நன்றிக் கடனாகவும் கலைஞரின் ஜால்ராவாக மாறிப்போன வாலி அவர்கள் - எம்.ஜி.ஆரைத் தாக்கி சாவி செய்தி வெளியிட்டார் என்று இப்போது கோபப்படுவதில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

கலா ரசிகன் தனது தினமணி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும் வரை, ’இமை மூடாப் பணி செய்யும் சி.எம்.’ என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே முதல்வர் ஜெயலலிதாவை ‘ரங்கநாயகி’ என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் சாவி சாரிடம் இருந்ததில்லை.

வாலி தமது கட்டுரையில் வேறு ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்’ என்று ஒரு கிசுகிசு செய்தியை சாவி தனது பத்திரிகையில் வெளியிட்டுவிட்டாராம். ஆனால், வாலி ஒருநாளும் அப்படித் தவம் இருந்தது கிடையாதாம்!

எம்.ஜி.ஆரே இவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்க முன்வந்தபோதும் மறுத்துவிட்டாராம். ‘அப்படிப்பட்ட நானா அரசவைக் கவிஞருக்கு ஆசைப்பட்டு அவர் தோட்டத்துக்கு அலைந்திருப்பேன்?’ என்று கேட்டிருக்கிறார்.

நல்லது! அப்போதே அதற்கு ஒரு மறுப்பு அறிக்கை விட்டிருந்தால் அத்தோடு முடிந்துபோயிருக்குமே விஷயம்? இத்தனை நாள் கழித்து, காய்த்துப் போன சிரங்கைச் சொறிய வேண்டிய அவசியமென்ன?

கிசுகிசுக்கள் இல்லாத பத்திரிகை உண்டா? சில செய்திகள் அரசல்புரசலாக காதுக்கு வரும். அவற்றின் சுவாரஸ்யம் கருதி நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து அதை ஒரு கிசுகிசு செய்தியாக்கி வெளியிடுவது பத்திரிகைகளில் வழக்கம்தான். ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் தலையீடு, சம்மதம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆசிரியரின் நேரடி கவனத்துக்கு வராமலும் பல துணுக்குச் செய்திகள், சிறு கட்டுரைகள் அரங்கேறுவதுண்டு.

மேற்படி செய்தியும் அப்படிப்பட்டதுதான்! ஒரு சாதாரண கிசுகிசு. அதை ஏதோ பெரிய கொலைப் பழியையே தன் மீது சாவி சுமத்திவிட்டாற்போல் வாலி அய்யா அவர்கள் இத்தனை காலம் கழித்து ஊதிப் பெரிதாக்கியிருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.

மூப்பனார் வீட்டில் வைத்து சாவி சாரை வாலி சந்தித்தாராம். ‘என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, அருணாசலம் ஸ்டூடியோவிலே ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்’ என்றாராம்.

இப்படிச் சொல்ல வாலிக்கு நாக்கூசாமல் போனது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதை எடிட் செய்து வெளியிட சோ-வுக்கு மனமில்லாமல் போனது ஏன் என்றும் புரியவில்லை. அது வாலியின் தனிப்பட்ட கருத்து என்பதாக நினைத்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், இதற்கு முன்னரும் ஒரு சமயம் வாலி அவர்களின் கட்டுரையை வெளியிட்டுவிட்டு, அது குறித்த தனது கருத்தை வேறு பக்கத்தில் பதிந்திருந்தார் சோ. இப்போதும் அப்படி ஏன் செய்திருக்கக்கூடாது என்பதே என் கேள்வி.

மற்ற அரசியல் தலைவர்களை நையாண்டி செய்வது போலவே ஆரம்பக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜையும் நையாண்டி செய்தவர்தான் சோ. அவருக்குப் பெருந்தலைவரின் மேன்மையைப் புரியவைத்து, சோ-வை காமராஜின் அபிமானியாக மாற்றியவர் சாவி சார்தான். ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்று தலைப்புக் கொடுத்து, கவியரசு கண்ணதாசனை இந்து மதத்தைப் பற்றி எழுதச் செய்து, அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர் சாவி சார்தான். ‘குறளோவியம்’ என்று தலைப்புக் கொடுத்து, கலைஞரை குறள் விளக்கம் எழுதச் சொல்லி வெளியிட்டவர் சாவி சார்தான். ‘கவிராஜன் கதை’ என்று தலைப்புக் கொடுத்து பாரதியார் பற்றி வைரமுத்துவை எழுதச் செய்தவர் சாவி சார்தான்.

சாவியின் மேன்மை புரிந்தவர் சோ; சாவி சாரின் மீது மதிப்பு வைத்திருப்பவர்தான் சோ. அவரின் துக்ளக் பத்திரிகையில், வாலி குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர்., சாவி, மூப்பனார் யாரும் இன்று உயிரோடு இல்லை; வாலி சொல்லியிருப்பதெல்லாம் எத்தனை சதவிகிதம் உண்மை என்று அறிய! அப்படியிருக்க, போகிற போக்கில் எந்த ஆதாரமுமே இல்லாமல் சாவி சார் மீது வாலியார் சேறு வாரி இறைப்பதற்குத் தனது பத்திரிகையின் பக்கங்களை எப்படி ஒதுக்கினார் சோ என்பது இன்னமும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு.

‘...இப்படிக் கவிஞர் சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி, வாலியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால், அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அது போலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது’ என்று நெத்தியடியாக தினமணி நாளேட்டில், வாலியின் சேற்றுக் கட்டுரை குறித்த தனது நீண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் கலா ரசிகன். இவர் வேறு யாருமல்ல; தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்தான். நான் சாவியில் பணியாற்றிய காலத்தில் எனக்கு சீனியராக இருந்தவர் வைத்தியநாதன். சாவி சார் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டவர். சாவியிடம் நான் கோபித்துக்கொண்டு வேலையை விட்டு நிற்கும்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்தி, சாவி சாரின் பெருமையைச் சொல்லி, என்னை நெறிப்படுத்தியவர். 

பத்திரிகை தர்மம் பற்றியும், பத்திரிகையாளர்களிடம் தாம் வைத்திருக்கும் மரியாதை பற்றியும்கூட வாலி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்திரிகை சொல்லாத ஒன்றை மேடையில் திரித்துக் கூறி, ‘அறிவு கெட்டவனுங்க’ என்று அந்தப் பத்திரிகையை வாலி திட்டியது எனக்குத் தெரியும்.

வாலியால் வசை பாடப்பட்ட அந்தப் பத்திரிகை வேறு எதுவுமல்ல; ஆனந்த விகடன்தான்!

1993-ஆம் ஆண்டு, ‘இந்து’ படத்தின் ஆடியோ காஸெட் வெளியீட்டு விழா. அந்தப் படத்தில் வாலி எழுதிய ‘எப்படி எப்படி... நீ சமைஞ்சது எப்படி’ என்கிற பாடல் படு விரசமாக உள்ளதென்று ஒரு சர்ச்சை எழுந்தது.

அதற்கு பதில் சொல்கிறாற்போன்று வாலி அந்த விழாவில் பேசினார். “கதைக்கும் கதையோட காரெக்டருக்கும் ஏத்தாப்ல பாட்டு எழுதறேன். இதிலே தப்பே இல்லை. பொழுது போகாதவங்கதான், சினிமா பாடல்களில் இலக்கியம் இருக்கா இல்லையான்னு பட்டிமன்றம் நடத்தி நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. இங்கே நான் ஒரு வியாபாரி. மாஸுக்கும் (MASS) காசுக்கும் பாடல்களை எழுதற வியாபாரி. இதிலே இலக்கியத்தைப் பார்க்காதீங்க. இலக்கியத்திலே என் புலமையைக் காட்டறதுக்குக் கம்பன் கழகம் மாதிரி வேற இடங்கள் இருக்கு. அங்கே நீங்க வேற வாலியைப் பார்க்கலாம்” என்றவர் அடுத்துப் பேசியதுதான் ஹைலைட்!

“சூரியன் படத்துலே ‘லாலாக்கு டோல் டப்பிமா’ன்னு ஒரு பாட்டு.  பவித்ரன் என்கிட்டே இந்த மாதிரி எஸ்டேட்ல வேலை செய்யறவங்க பாடற பாட்டுக்களை காஸெட்டுல பதிவு பண்ணிக் கொண்டு வந்து போட்டு எழுதச் சொன்னாரு. சொல்லப்போனா அந்தப் பாட்டையே அவர்தான் எழுதினார். பாட்டுக்கு வவுச்சர்ல கையெழுத்துப் போட்டதுதான் நான். இந்த லட்சணத்துலே ஆனந்த விகடன் பத்திரிகையிலேயிருந்து யாரோ வந்து, அதுக்கு அர்த்தம் கேட்டாங்க. எனக்குத் தெரியாதுன்னு உண்மையைச் சொன்னேன். அவங்க போய் ‘வாலிக்குத் தலைக்கனம். சொல்ல மாட்டேங்கறார். ஆணவம் பிடிச்சவர்’னு எழுதிட்டானுங்க.. அறிவுகெட்டவனுங்க..!

இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் நான் வண்ணத் தமிழ் மழலைக்குப் பாலூட்டும் தாய்; சினிமாவிலே விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்” என்று பேசினார்.

இந்த விழா நிகழ்ச்சி, ஆனந்த விகடனில் கட்டுரையாக வெளியானது. அதன் இறுதியில் கட்டம் கட்டி, பின்குறிப்பாக ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் கொடுத்திருந்த செய்தியைக் கீழே தருகிறேன்.

‘லாலாக்கு டோல் டப்பிமா’ என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் கேட்டு நமது நிருபர், கவிஞர் வாலியிடம் பேசியபோது, ‘எனக்குப் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லை’ என்றே சொன்னார். அதன்படி, “இன்னொரு பாடலை எழுதிய வாலி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு எப்போதுமே இல்லை என்று சொல்லிவிட்டதால், அதற்கு இசையமைத்த ‘தேவா’வைச் சந்தித்தோம்” என்றுதான் 17.1.93 ஆனந்த விகடனில் பிரசுரித்திருந்தோம். அன்று அவர் கூறியதையே வெளியிட்டிருந்தோம். இன்று, அது அவருக்கு ‘அறிவுகெட்டத்தனமாக’ப் படுகிறது!    -ஆசிரியர்.

அன்றைக்கு ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாடலையே பவித்ரன்தான் எழுதினார் என்று சொன்ன வாலியார், லேட்டஸ்ட் விகடன் பதில்களில் ‘இந்த வார்த்தைகளைப் பிடிக்க அவ்வளவாக மூளை வேண்டாம். இசையின் துள்ளு நடையைத் திரும்பத் திரும்ப செவியில் வாங்குகையில் இது போன்ற PHONETIC WORDS மனதில் உதயமாகும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். எனில், அந்தப் பாடலை உண்மையில் யார்தான் எழுதினார்கள். வாலியா, பவித்ரனா?

லேட்டஸ்ட் விகடனில், “கவிஞர், பாடலாசிரியர் தாண்டி வாலியின் இன்னொரு முகம் என்ன?” என்கிற கேள்விக்கு, “கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் எனும் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப மனத்தைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஸ்திதப் பிரக்ஞன்” என்று பதில் சொல்லியிருக்கிறார் வாலி. சிரிப்புத்தான் வருகிறது.
.