உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, September 29, 2009

இந்தி டி.எம்.எஸ்; தமிழ் லதா மங்கேஷ்கர்!


பாட்டுத் தலைவன் டி.எம். சௌந்தர்ராஜனின் குரலுக்கு நான் எத்தனை ரசிகனோ, அத்தனை ரசிகன் இந்திப் பாடல்களுக்கும்! ஆராதனா, பாபி, சத்யம் சிவம் சுந்தரம், குர்பானி, ஷோலேயில் தொடங்கி, பாஸிகர், கல்நாயக், பேட்டா, ஹம் ஆப்கே ஹைன் கோன், சாஜன், மொஹ்ரா, கயாமத் ஸே கயாமத் தக் என வளர்ந்து, நேற்றைய ஆஜா நச்லே, ஓம் சாந்தி ஓம், பூல் புலய்யா, தூம் வரைக்கும் தொடர்ந்து இந்திப் பாடல்களைக் கேட்டு ரசித்துக்கொண்டு இருக்கிறேன்.

இந்திப் பாடல்களைக் கேட்டு ரசிப்பதற்கு விசேஷ காரணம் எதுவும் இல்லை. எனக்குப் பிடித்திருக்கிறது. அவ்வளவே! இந்தி இசையில் அதிகம் பயன்படுத்தப்படும் தபலா, சந்த்தூர், ஜலதரங்கம் இவற்றின் ஒலிகள் எனக்கு ரொம்பவும் பிடித்திருப்பதும்கூட ஒரு காரணமாக இருக்கலாம். என்னுடைய இன்னொரு பதிவில் (என் டயரி) நான் பீனாஸ் மஸானி பற்றி எழுதியிருந்தேன். அவரின் கஸல் ஆல்பங்களில் பெரும்பாலும் மேலே சொன்ன இந்த இசைக்கருவிகள்தான் பயன்படுத்தப்பட்டிருக்கும்.

மற்றபடி, இந்தியில் எனக்கு ஒரு அட்சரம்கூடத் தெரியாது. ஆனாலும், இந்தித் திரைப்பாடல்களை ரசிப்பதில் எனக்கு எந்தக் கஷ்டமும் ஏற்பட்டதில்லை. சொல்லப்போனால், இந்தி தெரியாமலிருப்பதால்தான் அவற்றை என்னால் ரசிக்க முடிகிறதோ என்னவோ!

மொழி புரிந்துவிட்டால், அதன் அர்த்தம் விளங்கிவிட்டால், நம் கவனம் இசையை விட்டு அதன் அர்த்தத்துக்குத் தாவிவிடும். ‘ஐயே! இவ்வளவுதானா! பெரிய அபாரமான பாட்டாகவெல்லாம் ஒன்றும் இல்லையே! ரொம்பச் சாதாரணமா எழுதியிருக்காரே!’ என்று யோசிக்கத் தொடங்கிவிட்டால், அப்புறம் இசையை எங்கேர்ந்து ரசிப்பது?

இறைவனை வழிபடும் ஸ்லோகம் ‘போற்றி... போற்றி...’ என்று தமிழில்தான் இருக்க வேண்டும் என்று, இறைவனை நம்பாதவர்கள்கூட மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கு நான் எதிரி அல்ல! என் தாய்மொழி தமிழ்தான். எனக்கு, என் தாய்க்கு, தந்தைக்கு, என் மனைவிக்கு, என் மாமியாருக்கு, என் குழந்தைகளுக்கு, என் தாத்தாவுக்கு, பாட்டிக்கு என எல்லோருக்குமே தமிழ்மொழிதான் தாய்மொழி. தமிழைத் தவிர வேறு மொழி தெரியாது. எனக்குக் கூட ஆங்கிலம் எழுதப் படிக்கத் தெரியுமே தவிர, சரளமாகப் பேசத் தெரியாது. இதில் இந்திக்கும், சம்ஸ்கிருதத்துக்கும் எங்கே போக? என் குழந்தைகளுக்கு தமிழ், ஆங்கிலம் தவிர இன்னொரு மொழி தெரிந்திருக்கட்டுமே என்று இந்திப் பாடத்திலும் சேர்த்திருக்கிறேன். ‘ஸ்டே ஹங்ரி, ஸ்டே ஃபூலிஷ்’ புத்தகத்தைத் தமிழாக்கம் செய்தபோது, அதன் இடையிடையே பல இடங்களில் இந்தி ‘கொட்டேஷன்ஸ்’ வந்து, அர்த்தம் தெரியாமல் நான் விழித்தபோது, அதைத் தமிழாக்கம் செய்து கொடுத்து உதவியது என் மகள்தான்.

இது இருக்கட்டும். இறைவனின் ஸ்லோகம் நமக்குப் புரியாத மொழியில் இருந்தால், நமக்கு அதன் மீது ஒரு மரியாதை வருகிறது; ஒரு நம்பிக்கை ஏற்படுகிறது. நமக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர் லோக்கல் தமிழில், ‘உனுக்கு ஒண்ணியுமில்லப்பா! ஜல்ப்புதான்; காய்ச்சலுதான்! மருந்து கொடுத்துக்குறேன். காலீல ஒரு தபா, ராவிக்கு ஒரு தபா எடுத்துக்க. பட்டுனு உட்டுரும்!’ என்று சொன்னால், அவர் போலி டாக்டரோ என்று யோசிக்க வேண்டியதாகிவிடும். அதுவே அவர் ஸ்டைலான ஆங்கிலத்தில் அந்த நோய்க்கு ஏதாவது பெயர் சொல்லி, பிரிஸ்கிருப்ஷன் தந்தால், நமக்கு அவர் மீது நம்பிக்கை பிறக்கும். நோய் குணமாக டாக்டரின்மீது நாம் வைக்கும் நம்பிக்கையும் முக்கியம்.

நம்மவர்கள் பாராட்டுவதைவிட, வெள்ளைக்காரர்கள் பாராட்டும்போதுதான் நமக்கே நம் அருமை புரிகிறது. ‘வெரிகுட்டுனு சொன்னான் வெள்ளைக்காரன்’ என்றால்தான் நமக்குத் திருப்தி! இது நமது பொதுவான மனோபாவம். அதன்படி, ‘இறைவா, உன் பன்னிரு கண்கள் போற்றி! பன்னிரு தடந்தோள்கள் போற்றி!’ என்று சொல்லிக்கொண்டு இருந்தால், மனம் பக்தியை விட்டுவிட்டு, அதன் அர்த்தத்தை ஆராய்ச்சி செய்வதில் இறங்கிவிடும். அது போலவேதான், இந்திப் பாடல்களையும் அதன் மொழி தெரியாததால்தானோ என்னவோ, என்னால் ரசிக்க முடிந்திருக்கிறது என்று நினைக்கிறேன். தமிழில் கண்ணதாசன், பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் உள்ளிட்ட பிரபல பாடலாசிரியர்கள் எழுதிய திரைப் பாடல்களையும் நம்மால் ரசிக்க முடிந்ததென்றால், அதற்குக் காரணம் இசையையும் விஞ்சி நிற்கும் அவர்களின் கவிதைத் திறன்தான் என்பதில் சந்தேகம் இல்லை.

‘எனையாண்ட இசை அரசர்கள்... அரசிகள்’ பதிவில் பி.சுசீலா பற்றி எழுதும்போது, ‘ராதையின் நெஞ்சமே’ பாட்டிலிருந்துதான் நான் அவரின் ரசிகனாக ஆனதாகக் குறிப்பிட்டிருந்தேன். அத்தனை ஈர்ப்பான இசையின் மூலம் இந்தி என்பது பிறகுதான் எனக்குத் தெரிந்தது. இந்தியில் லதா மங்கேஷ்கரும், கிஷோர் குமாரும் இந்தப் பாடலைத் தனித்தனியாகப் பாடியிருக்கிறார்கள். நான் ஸ்கூல் படிக்கும்போதே கிஷோர் குமாரின் ‘ராதையின் நெஞ்சமே’ மூலப் பாடலைக் கேட்கும் வாய்ப்பு கிட்டியது. அவரின் குரல் கம்பீரமானது; அதே சமயம் குழைவும் நெகிழ்வுமானது. மொத்தத்தில் அவர் இந்தி டி.எம்.எஸ்.

பி.சுசீலா பாடிய ‘ராதையின் நெஞ்சமே’ பாடலை பின்னர் ரொம்ப காலம் நான் கேட்கவே முடியவில்லை. (இப்போது கலைஞர் டி.வி-யில் அடிக்கடி அந்தப் பாடல் காட்சியைக் காண்பிக்கிறார்கள்.) அது தமிழ்ப் பாடல் என்பதால், வரிகள் ஞாபகத்தில் இருக்கவும், ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்னர் எனக்கு கணினி வசதி, இணைய வசதிகள் வந்தவுடன் அந்தப் பாடலைத் தேடி டவுன்லோடு செய்து கேட்டு மகிழ முடிந்தது. கிஷோர் குமார் விஷயத்தில் அந்த வரிகளும் தெரியவில்லை; அது என்ன படம் என்றும் தெரியவில்லை. என்ன, ஏது என்று கொஞ்சமாவது க்ளூ இருந்தால்தானே நெட்டிலும் தேடிப் பார்க்க முடியும்? பார்க்கிறவர்களிடமெல்லாம்கூடக் கேட்டுக் கேட்டுச் சலித்துப் போனேன்.

இந் நிலையில், நவராத்திரியை முன்னிட்டு போன ஞாயிற்றுக்கிழமை என் தங்கை வீட்டுக்குச் சென்றிருந்தபோது, அங்கே என் தம்பி யதார்த்தமாக கிஷோர் குமார் ஹிட்ஸ்களை வைத்திருந்து, எனக்குப் போட்டுக் காட்டினான். உடனே, ‘ராதையின் நெஞ்சமே’ பாடலைச் சொல்லி, கிஷோர் குமார் பாடிய அதன் மூலப் பாடல் இருக்கிறதா என்று கேட்டேன். ‘ஓ! இருக்கிறதே!’ என்று சொல்லி, அதை ஓடவிட்டான். ஆஹா! காதில் தேனமிர்தம் பொழிந்த மாதிரி இருந்தது.

‘கில்..... தே ஹைன் குல்யாஹான்’ என்கிற அந்தப் பாடல் கிஷோர் குமாரின் வசீகரக் குரலில் என்னை மயக்கியது. அப்புறம் கேட்கவேண்டுமா, நெட் இருக்கிறதே! அந்த வரிகளைப் போட்டுத் தேடி, அந்தப் பாட்டு இடம் பெற்ற படம் ‘ஷர்மிலி’ என்பதையும் கண்டுபிடித்துவிட்டேன். அதில் லதா மங்கேஷ்கர் பாடிய பாடலும் உள்ளது. லதா மங்கேஷ்கர் அற்புதமான பாடகிதான். அதில் சந்தேகமில்லை. அவரின் ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ படம் உள்ளிட்ட பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். என்றாலும், குறிப்பிட்ட ‘கில் தே ஹைன் குல் யாஹான்’ பாடல் நம்ம பி.சுசீலாவின் ‘ராதையின் நெஞ்சமே’ அளவுக்கு இல்லை.

கீழே, கிஷோர் குமாரின் ‘கில் தே ஹைன் குல்யாஹான்’ பாடலுக்கும், பி.சுசீலாவின் ‘ராதையின் நெஞ்சமே’வுக்கும் லின்க் கொடுத்துள்ளேன். விருப்பம் உள்ளவர்கள் கேட்டு ரசிக்கலாம்.


இதோ அந்த இரண்டு பாடல்கள்:

கில்தே ஹைன் குல்யா ஹான்

ராதையின் நெஞ்சமே
.

Monday, September 28, 2009

கணித விளையாட்டு!

மாயச் சதுரங்கள் பற்றி சுஜாதா ஒருமுறை விகடனில் தமது ‘கற்றதும் பெற்றதும்’ பகுதியில் எழுதியிருந்தார்.

‘மாயச் சதுரங்கள் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். கிரகங்களையும் மாயச் சதுரங்களையும் சம்பந்தப்படுத்தும் பழக்கம், பழைய சீனச் சக்கரவர்த்தி ‘யூ’ என்பவரின் (கி.மு.) காலத்திலிருந்தே இருந்து வருகிறதாம். மாயச் சதுரம் என்பது என்ன? எளிய உதாரணம்: சனி கிரகத்துக்கான 3-க்கு மாயச் சதுரம் இது.

8

1

6

3

5

7

4

9

2

இதை எப்படிக் கூட்டினாலும் 15 வருகிறதல்லவா? இப்படி ஒவ்வொரு கிரகத்துக்கும் ஒரு எண்ணில் மாயச் சதுரங்கள் உண்டு. சந்திரனுக்கான மாயச் சதுரம் 9-க்கு 9. இதன் எண்களைக் குறுக்கே, நெடுக்கே (மூலைவிட்டமாகவும்) எப்படிக் கூட்டினாலும் 369 வரும். இந்தச் சதுரம் காதலர்களையும் பிரிந்துபோன தம்பதியரையும் சேர்த்து வைக்கும் சதுரம். இதை உங்களால் அமைக்க முடியுமா, பாருங்கள்!’ என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.

நான் உடனே அவருக்கு ஒரு கடிதம் எழுதி, அலுவலக அட்டெண்டர் மூலம் கொடுத்தனுப்பினேன். அதில், அவர் சொன்னதுபோல் 9-க்கு 9 (மொத்தம் 81 சிறு சதுரங்கள்) உள்ள மாயச் சதுரத்தைப் போட்டு, ‘இது மட்டுமல்ல; ஒற்றைப் படையிலான எத்தனைப் பெரிய மாயச் சதுரத்தையும் என்னால் அமைக்க முடியும். தவிர, ஒன்றிலிருந்து தொடங்கித்தான் வரிசையாக எண்களை எழுத வேண்டும் என்கிற அவசியமும் கிடையாது. எந்த எண்ணிலிருந்தும் தொடங்கலாம்’ என்று குறிப்பிட்டிருந்தேன். அவர் ரொம்ப இம்ப்ரெஸ் ஆகி, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தனக்கு அந்த ட்ரிக்கைக் கற்றுக் கொடுக்கும்படி ஒரு குழந்தை போல் ஆர்வத்துடன் கேட்டார்.

அதன்படியே, அடுத்து வந்த ஞாயிற்றுக்கிழமையன்று அவரை அவரது வீட்டில் சந்தித்து, அந்த ட்ரிக்கை விளக்கினேன். “இது ஒற்றைப் படை எண்களுள்ள மாயச் சதுரத்துக்கான ஃபார்முலா. இரட்டைப் படை எண்களுள்ள - அதாவது, நாலுக்கு நாலு, ஆறுக்கு ஆறு, இருபதுக்கு இருபது... இப்படி - மாயச் சதுரங்களுக்கான ஃபார்முலாவும் இருக்கிறது” என்றேன். “வாவ்! அற்புதம் ரவிபிரகாஷ்! நீங்க கணக்குல புலியோ!” என்றார் உற்சாகமாக. “ஐயோ! அதெல்லாம் இல்லை, சார்! மத்த சப்ஜெக்ட்ஸைவிட கணக்கு கொஞ்சம் சுமாராக வரும். இந்த ட்ரிக்கை என் சின்ன வயதில், நான் ஐந்தாம் ஆறாம் வகுப்பு படிக்கும்போது யாரோ சொல்லிக் கொடுத்தார்கள். யாரென்பது மறந்துபோய்விட்டது. கணக்கு மட்டும் நினைவிருக்கிறது” என்றேன்.

அடுத்த வார விகடன் இதழில் சுஜாதா இதைக் குறிப்பிட்டு, “மாயச் சதுரம் பற்றி ஒரு சுவாரஸ்யமான கடிதம், விகடன் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த ரவிபிரகாஷிடம் இருந்து வந்தது. எந்த எண்ணையும் ஆரம்ப எண்ணாக வைத்து, ஒற்றைப் படை எண் வரிசையில் எத்தனை பெரிய மாயச் சதுரத்தையும் அமைக்க, ஓர் எளிய முறை சொல்லியிருக்கிறார். Amazing! மாயச் சதுரம் என்ற பெயர் பொருத்தமே! உதாரணத்துக்கு இதோ ஒரு மாயச் சதுரம். 17x17 வரிசையில் 289 கட்டங்கள் கொண்ட சதுரம் இது. இதில் குறுக்கே, நெடுக்கே, மூலைவிட்டமாக எப்படிக் கூட்டினாலும் 7,463 வருகிறது. இப்படி மாயச் சதுரங்கள் அமைக்கப் பொதுவான ஓர் எளிய விதி இருக்கிறது. தெரிந்தவர்கள் எழுதி அனுப்பலாம்” என்று எழுதியிருந்தார்.

ஏழெட்டுப் பேரிடமிருந்து மட்டுமே பதில்கள் வந்தன. அவர்கள் சொன்ன ஃபார்முலாக்கள் சுலபமாக இல்லாமல், சிக்கலானதாக இருந்தன. ஒரே ஒருவர் மட்டுமே அந்த எளிய விதியைத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தார். அவருக்கு சுஜாதா எழுதிய புத்தகம் ஒன்று அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்பட்டது.

அதன்பின்னர், ‘அது என்ன ஃபார்முலா?’ என்று கேட்டு நிறையக் கடிதங்கள் வந்தன. அதைத் தெளிவாக விவரித்து எழுதி, ஜெராக்ஸ் பிரதி எடுத்து அவர்களுக்கெல்லாம் அனுப்பி வைத்தேன்.

இதைப் படிக்கும் பதிவர்கள் ஆர்வப்பட்டால், எனது அடுத்த பதிவில் அந்த ஃபார்முலாவை விளக்குகிறேன். அதற்கு முன், கீழே உள்ள மாயச் சதுரத்தைப் பார்க்கவும்.

55

76

7

28

49

73

19

25

46

52

16

22

43

64

70

34

40

61

67

13

37

58

79

10

31

இதை எப்படிக் கூட்டினாலும் 215 வரும். இதில் எண் ஒன்றிலிருந்து தொடங்கவில்லை என்பதோடு, எண்கள் அடுத்தடுத்து வரிசையாகவும் உபயோகிக்கப்படவில்லை.

ரி, வேறு ஒரு கணித விளையாட்டு விளையாடுவோமா?

1 முதல் 9 வரை வரிசையாக எழுதிக் கொள்ளுங்கள். 8 மட்டும் வேண்டாம்.
12345679 - ஆயிற்றா? இதை 2x9=18-ஆல் பெருக்கினால், விடையில் எல்லா எண்களும் 2-ஆகவே இருக்கும். 3x9=27-ஆல் பெருக்கினால், விடையில் உள்ள எல்லா எண்களும் 3-ஆகவே இருக்கும். பெருக்கித்தான் பாருங்களேன்!

சரி, இன்னொரு கணக்கு! 1 முதல் 9 வரையுள்ள எண்கள் அனைத்தையும் ஒவ்வொரு முறையே பயன்படுத்தி மூன்று இலக்க எண்கள் மூன்று எழுத வேண்டும். ஒரு நிபந்தனை: நீங்கள் எழுதும் முதல் மூன்று இலக்க எண்ணைப் போல் இரண்டாவது எண் இரண்டு மடங்கு இருக்க வேண்டும்; மூன்றாவது எண் மூன்று மடங்கு இருக்க வேண்டும்.

நான் ஒரு உதாரணம் தருகிறேன். 192 - 384 - 576. சரியா? இது போல் இன்னும்கூட இரண்டு, மூன்று விதங்களில் இந்தக் கணக்கைப் போடலாம். முயற்சி செய்யுங்கள். அடுத்த பதிவில் அந்த விடைகளைத் தருகிறேன்.
.

Thursday, September 24, 2009

‘என்னோடு பாடுங்கள்...’-டி.எம்.எஸ்.


நான் டி.எம்.எஸ்ஸின் அதி தீவிர ரசிகன். இன்றல்ல, நேற்றல்ல... நாற்பது ஆண்டுகளுக்கும் மேலான ரசிகன். அவரது குரல் வளத்துக்கு ஈடு இணையாக இன்னொருவர் குரலை என்னால் ஒப்பிட்டுப் பார்க்க இயலவில்லை. எப்போது நான் கணினியில் வேலை செய்ய உட்கார்ந்தாலும், ஒரு புறம் டி.எம்.எஸ்ஸின் பாடலை ஒலிக்கவிட்டு, அதைக் கேட்டபடியே வேலை செய்வேன். என் வேலைக்கு இடையூறாக அது ஒருபோதும் இருந்ததில்லை. மாறாக, செய்கிற வேலையின் சுமை தெரியாமல் சுலபமாக முடிக்க, இந்தப் பழக்கம் எனக்கு உதவுகிறது.

டி.எம்.எஸ். தவிர்த்து மேலும் பலரின் குரல்களையும், பாடல்களையும் நான் ரசிப்பதுண்டு. சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், திருச்சி லோகநாதன், எஸ்.சி.கிருஷ்ணன், பி.பி.ஸ்ரீனிவாஸ், ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம், எம்.கே.டி.பாகவதர், எஸ்.பி.பாலசுப்ரமணியம் என அது ஒரு பெரிய லிஸ்ட்!

ஒவ்வொரு குரலுக்கும் ஒரு தனித்துவம் இருக்கிறது. லட்டு ஒரு வகை இனிப்பு என்றால் மைசூர்பாகு வேறு மாதிரியான இனிப்புச் சுவை. பால்கோவா வேறு ரகம். ஆனால், எல்லாமே இனிப்புதான். எல்லாமே சுவைதான். என்ன... ஒருவருக்கு மைசூர்பாகு பிடிக்கும்; இன்னொருவருக்கு பால்கோவா பிடிக்கும்; வேறு ஒருவருக்கு குலோப்ஜாமூன் பிடிக்கும். எனக்கு அதிகம் பிடித்தது பால்கோவா. அதில் ஒரு கிண்ணம் சாப்பிட்டேன் என்றால், மைசூர்பாகில் இரண்டு விள்ளல் மட்டும் எடுத்துக் கொள்வேன். லட்டில் பாதியே போதும் என்பேன். அது போலத்தான் டி.எம்.எஸ்ஸை நான் அதிகம் ரசித்தாலும், மற்றவர்களின் பாடல்களில் குறிப்பாகச் சிலவற்றைக் கேட்டு ரசிப்பதுண்டு.

சிவாஜி மிகப் பெரிய நடிகர். எத்தனையோ விதமான கேரக்டர்கள் செய்திருக்கிறார். நடையிலேயே வெவ்வேறு வகையான நடை நடந்து காட்டியவர். திருவிளையாடல் படத்தில் மீனவனாக, கடற்கரை மணலில் நடக்கிற நளினமான அழகு என்ன, தருமியுடன் புலவராக வேக நடை போட்டு வருகிற மிடுக்கு என்ன, திருவருட்செல்வர் படத்தில் ‘மன்னவன் வந்தானடி...’ பாடலின்போது மன்னனாக நடந்து வருகிற கம்பீரம் என்ன, வீரபாண்டிய கட்டபொம்மனில் தூக்கு தண்டனைக் கைதியாக, அதே சமயம் வீரம் சிறிதும் குன்றாமல் கிளைமாக்ஸில் நடந்து வருகிற ஜோர் என்ன... சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால், ரத்தக் கண்ணீர் படத்தில் எம்.ஆர்.ராதா செய்த குஷ்டரோகி கேரக்டரை அந்த அளவுக்கு சிவாஜியால் செய்ய முடியவில்லை என்பதே நிஜம். அதே போல், பாரதியார் கேரக்டரும் ('கை கொடுத்த தெய்வம்’ படத்தில் ‘சிந்து நதியின் மிசை நிலவினிலே...’ பாடல் காட்சி) சிவாஜிக்கு அத்தனைப் பொருத்தமாக இல்லை.

சிலது சிலருக்குத்தான் பொருத்தமாக இருக்கிறது. பாடல்களும் அப்படித்தான்! டி.எம்.எஸ். எல்லா விதமான பாடல்களையும் பாடியிருக்கிறார் என்றாலும், வேறு சிலர் பாடிய குறிப்பிட்ட சில பாடல்களை அவர் பாடினால் ரசிக்குமா என்பது சந்தேகம்தான். ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...’, ‘விநாயகனே, வினை தீர்ப்பவனே... வேழ முகத்தோனே, ஞான முதல்வனே...’ போன்ற சீர்காழியின் பாடல்களைக் கேட்டுக் கேட்டு, நம் மனதில் அதன் இசை வடிவம் ஆழமாகப் பதிந்துவிட்டது. அதை டி.எம்.எஸ். பாடினால் சீர்காழியின் பாட்டு அளவுக்குத் திருப்தியாக இருக்குமா என்று தெரியவில்லை. ‘இசைத் தமிழ் நீ செய்த அருஞ்சாதனை...’ என டி.ஆர்.மகாலிங்கத்தின் முழக்கம் டி.எம்.எஸ்ஸின் குரலில் ஒலிக்கும்போது, அதே அளவு சுவையானதாக இருக்குமா என்பது சந்தேகம்தான்.

காரணம், முதலில் வருகிற பாடலை நாம் கேட்டுக் கேட்டு, அது நம் மனதில் ஆழமாகப் பதிந்து, அதுதான் முறை, அதுதான் சரி என்பதாக நம் மனது ஏற்றுக் கொண்டு விடுவதால், அடுத்து ஒருவர் அதையே பாடுகிறபோது ஒரிஜினல் அளவுக்கு இது இல்லையே என்பதாக நினைக்கத் தோன்றுகிறது. இதனால்தான் ரீ-மிக்ஸ் கலாசாரம், நான் உள்படப் பலருக்கு வேப்பங்காயாகக் கசக்கிறது.

சரி, விஷயத்துக்கு வருகிறேன். எஸ்.பி.பி-யின் பல பாடல்கள் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதை ‘எனையாண்ட இசை அரசர்கள்’ பதிவில் குறிப்பிட்டுள்ளேன். ‘பொட்டு வைத்த முகமோ...’, ‘இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு...’, ‘காதல் ராணி கட்டிக் கிடக்கு, கட்டில் இருக்கு...’, ‘இளைய நிலா பொழிகிறதே...’ எனக் கடகடகவெனக் குறைந்தபட்சம் ஐம்பது, அறுபது பாடல்களைத் தாராளமாகச் சொல்லலாம். அவற்றை டி.எம்.எஸ். பாடினால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பார்த்திருக்கிறேன். சில இன்னும் நன்றாகவும் இருக்கலாம் என்று தோன்றியது. சில அவருக்குச் சரிவராது என்றும் தோன்றியது.

உதாரணமாக, சமீபத்தில் வெளியான ‘அட்றாட்றா நாக்கு மூக்க...’, ‘சூப்பரு...’ போன்ற பாடல்களை டி.எம்.எஸ் பாடினால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். அவர் குரல் கம்பீரமானது; கண்ணியமானது. அது சிவாஜி, எம்.ஜி.ஆர்., ஜெய்சங்கர் இவர்களுக்கெல்லாம் கச்சிதமாகப் பொருந்தியது. டி.எம்.எஸ். காதல் பாடல் பாடினாலும், அதில் ஒரு மிடுக்கு தெரியும். ‘மதன மாளிகையில், மந்திர மாலைகளாம்...’, ‘மயக்கமென்ன... இந்த மௌனம் என்ன’ போன்ற பாடல்களைக் கேட்டால், மிடுக்கும் கம்பீரமுமாக இருக்கும். அவ்வளவு ஏன், டப்பாங்குத்துப் பாடல்களான ‘பொண்ணாப் பொறந்தா ஆம்பிள கிட்டே கழுத்த நீட்டிக்கணும்...’, ‘நேத்துப் பூத்தாளெ ரோசா மொட்டு...’ பாடல்களையேகூட எடுத்துக் கொள்ளுங்கள். அவை ஏதோ ரெண்டுங்கெட்டான் விடலை பாடுகிற மாதிரி இருக்காது. காதலின் குழைவை விட, அதிலும் ஒரு முதிர்ச்சிதான் தெரியும். டி.எம்.எஸ்ஸின் குரல் அப்படி இயல்பிலேயே கம்பீரமானது.

எனவே, எஸ்.பி.பி-யின் ‘இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு...’ பாடலை அந்த அளவுக்கு நெகிழ்வும் குழைவுமாக டி.எம்.எஸ்ஸால் பாட முடியாதென்றே தோன்றுகிறது. அவர் என்னதான் மென்மையாகப் பாடினாலும், அது சிவாஜிக்கோ ஜெய்சங்கருக்கோதான் பொருத்தமானது போல் தெரியுமே தவிர, விஜய்க்கும் அஜீத்துக்கும் பொருந்தவே பொருந்தாது. ‘மதுரையில் பறந்த மீன் கொடியை உன் புருவத்தில் கண்டேனே...’ பாடலில், டி.எம்.எஸ் குரலின் கம்பீரத்துக்கு ஜெமினி கணேசனால் ஈடுகொடுக்கவே முடியவில்லையே!

1979-ல் வெளியான படம் ‘நான் வாழ வைப்பேன்’. அந்தப் படத்துக்கு இசை இளையராஜா. அதில், ‘என்னோடு பாடுங்கள்... நல்வாழ்த்துப் பாடல்கள்...’ என்று ஒரு பாட்டு. எஸ்.பி.பி. பாடிய பாட்டு அது. எனக்கு மிகவும் பிடித்தமான எஸ்.பி.பி. பாடல்களில் அதுவும் ஒன்று. அந்தப் பாட்டு சிவாஜிக்கு என்பதால், முதலில் அதை டி.எம்.எஸ்ஸை வைத்து ரெக்கார்ட் செய்தார்கள். பிறகு, அது சரியாக இல்லை என்று எஸ்.பி.பி-யைப் பாட வைத்து, அதைத்தான் படத்திலும், இசைத்தட்டிலும் வெளியிட்டார்கள்.

இதில் டி.எம்.எஸ்ஸுக்குக் கோபமான கோபம். இருக்கத்தானே செய்யும்? அவர் கச்சேரிக்காக இலங்கைக்குப் போன இடத்தில் (மதுரை போல அங்கே டி.எம்.எஸ். ரசிகர்கள் அதிகம்.) இந்தத் தகவலைச் சொல்லி, அதே பாடலைப் பாடி, “நீங்களே சொல்லுங்க. இது நல்லாருக்கா, எஸ்.பி.பி. பாடியது நல்லாருக்கா?” என்று கேட்டாராம். ரசிகர்கள் ஏக மனதாக டி.எம்.எஸ். பாடியதுதான் நன்றாக உள்ளது என்று சொன்னார்களாம். இப்படியொரு செய்தியை நான் அந்தக் காலத்தில் படித்தேன்.

டி.எம்.எஸ்ஸுக்கும் இளையராஜாவுக்கும் இடையில் மனக் கசப்பு ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணம். எனக்குக்கூட அப்போது இதனால் இளையராஜா மீது கோபமான கோபம். டி.எம்.எஸ். பாடியதை நன்றாக இல்லை என்று ஒதுக்கி, வேறு ஒருவரைப் பாட வைப்பதா என்று கோபம். இதன் காரணமாக, எஸ்.பி.பி. மீது கூட எனக்குக் கோபம் எழுந்தது உண்மை. இத்தனைக்கும், டி.எம்.எஸ். பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடலை நான் கேட்டதே இல்லை.

அந்த அபூர்வமான பாடலை நேற்று எனக்கு இ-மெயிலில் அனுப்பியிருந்தான் என் தம்பி. கேட்டேன்.

உண்மையைச் சொல்கிறேன். எஸ்.பி.பி-யின் பாடல் அளவுக்குச் சிறப்பானதாக அது தெரியவில்லை. இளையராஜா அன்று எடுத்த முடிவு சரிதான்!

இங்கே ஒரு விஷயத்தைக் குறிப்பிட விரும்புகிறேன். எஸ்.பி.பி. பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடல் நன்றாக இருந்தது. ஆனால், அது சிவாஜிக்குப் பொருத்தமானதாக இல்லை. டி.எம்.எஸ். பாடிய பாடல் அவ்வளவாகப் பிடித்தமானதாக இல்லை. என்றாலும், அதைக் கேட்கும்போது சிவாஜியின் நடிப்பு எப்படி இருக்கும் என்பதை மனக் கண் முன் கொண்டு வர முடிந்தது.

ஒரு வேளை டி.எம்.எஸ்., இளையராஜா இருவரும் அன்றைக்குக் கருத்தொருமித்து, விட்டுக் கொடுத்து, இன்னும் ஓரிரு தடவை முயன்றிருந்தால், நிச்சயம் டி.எம்.எஸ்ஸிடமிருந்து இதை விடச் சிறப்பான பாடல் நமக்குக் கிடைத்திருக்கக்கூடும்!

சரி, இளையராஜா எம்.எஸ்.வி. இல்லையே!

(டி.எம்.எஸ். பாடிய ‘என்னோடு பாடுங்கள்...’ பாடலைக் கேட்க விரும்பினால், கீழே உள்ள வரியில் சொடுக்கவும்.)
இப்பாடலை கேட்க இங்கே க்ளிக் செய்யவும்!
.

Sunday, September 20, 2009

கையெழுத்து வேட்டை!

வி.ஐ.பி-க்கள் பலரைச் சந்திக்கும் வாய்ப்பு, பத்திரிகைத் துறையில் இருப்பதால் எனக்குக் கிடைத்தது. எனினும், அவர்களை முதன்முறையாக நேரில் சந்திக்கும்போது எனக்கு எந்தவிதமான சிலிர்ப்போ, பரவசமோ ஏற்படவேயில்லை. பாடகர் டி.எம்.சௌந்தரராஜன் அவர்களை மட்டும்தான் நானாக விரும்பிப் போய்ச் சந்தித்தேன். (நான் சந்திக்க விரும்பும் மற்றொருவர் மெல்லிசை மன்னர் விஸ்வநாதன்.) அப்போதும்கூட மகிழ்ச்சிதான் உண்டாயிற்றே தவிர, ஒரு வி.ஐ.பி-யைச் சந்திக்கிறோம் என்கிற பரவச உணர்வு எதுவும் உண்டாகவேயில்லை.

நான் விழுப்புரம் அண்ணா கலைக் கல்லூரியில் படித்தபோது, அங்கே ஆண்டுவிழாவுக்குப் பிரதம விருந்தாளியாக வந்து கலந்துகொண்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். நான் சிவாஜியின் அதி தீவிர ரசிகன். என்றபோதிலும் அன்றைக்கு அவரிடம் கைகுலுக்கவோ, உடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளவோ, ஆட்டோகிராஃப் வாங்கிக்கொள்ளவோ எனக்குத் தோன்றவே இல்லை. என் நண்பர்களுக்கு இதில் ஆச்சரியமான ஆச்சரியம்!

ஒரு சினிமா ஸ்டுடியோவின் லைட்பாயைக்கூட சிவாஜி தோளில் தட்டியிருப்பார்; கை கொடுத்திருப்பார். அவரை அவரின் கார் டிரைவரோ, பணியாட்களோ நித்தம் நித்தம் அருகில் நின்று பேசியிருப்பார்கள். அவருடன் யார் யாரோ நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பார்கள். அந்நாளில் விழுப்புரத்தில் நடைபாதை கைரேகை ஜோசியக்காரர்கள் இரண்டு மூன்று பேர் தங்கள் பின்னால் பெரிய போர்டு வைத்து, அதில் சினிமா நட்சத்திரங்களுக்குக் கைரேகை பார்க்கிற மாதிரி புகைப்படங்கள் வைத்திருப்பார்கள். எம்.ஜி.ஆருக்கு கைரேகை பார்க்கிற மாதிரி, சிவாஜிக்கு, ஜெய்சங்கருக்கு, கே.ஆர்.விஜயாவுக்கு, உஷாநந்தினிக்கு என பல சினிமா நட்சத்திரங்கள் அருகில் அமர்ந்து அவர்கள் புகைப்படம் எடுத்துக்கொண்டு இருப்பார்கள். எனவே, வி.ஐ.பி-க்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக்கொள்வதில் என்ன பெரிய விசேஷம் இருக்கிறது என்பது இன்றுவரை எனக்குப் புரிந்ததே இல்லை.

அதேபோல்தான் அவர்களின் ஆட்டோகிராஃப் பெறுவதும்! எஸ்.எஸ்.எல்.சி. முடித்தபோது என்னோடு படித்த அத்தனை பேரும் ஆளுக்கொரு ஆட்டோகிராஃப் புத்தகம் வாங்கி, ஒரு கடமை போல் தலைமை ஆசிரியர், இதர ஆசிரியர்கள், சக மாணவர்கள் என அனைவரிடமும் கையெழுத்து வேட்டை நடத்தினார்கள். அது எதற்கு என்று புரியாமலே நானும் அந்த வேட்டையில் கலந்துகொண்டேன். சிலர் நாலைந்து ஆட்டோகிராஃப் புத்தகங்களைக் கையெழுத்துக்களால் நிரப்பி விட்டதாகப் பெருமையோடு சொல்லிக் கொண்டார்கள். யார் அதிகம் பேரின் கையெழுத்தைச் சேகரிக்கிறார்கள் என்பதில் ஒரு போட்டியே நடந்தது. வெறுமே கையெழுத்துப் போட்ட ஆசிரியர்களிடமும், மாணவர்களிடமும் ஏதாவது அட்வைஸ், பொன்மொழி எழுதிக் கையெழுத்துப் போடும்படி கெஞ்சிக் கூத்தாடிய மாணவர்களும் உண்டு. சில மாணவர்கள் இதற்காகவே நிறைய பொன்மொழிகளை மனப்பாடம் செய்து வந்திருந்தனர். சிலர் பழைய பொன்மொழிகளைத் திரித்து, சொந்தக் கற்பனையைக் கலந்து, புதுமை மொழிகளாக எழுதிக் கையெழுத்திட்டனர். அந்த ஆட்டோகிராஃப் புத்தகம் இப்போது என்னிடம் இல்லை. அதைப் பத்திரப்படுத்தி வைக்கவேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை.

இப்படிக் கையெழுத்துக்களை வாங்கிச் சேகரித்து, அதை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று எனக்கு அன்றைக்கும் தெரியவில்லை; வி.ஐ.பி-க்களின் ஆட்டோகிராஃபை வாங்கி வைத்துக்கொண்டு என்ன செய்வது என்று இன்றைக்கும் புரியவில்லை. இது பற்றிய ஒரு பதிவை எழுதவேண்டும் என்று நான் யோசித்துக்கொண்டு இருந்த சமயத்தில், ஆனந்த விகடன் பொக்கிஷம் பகுதிக்காக 1938-ம் வருட இதழ்களைப் புரட்டிக்கொண்டு இருந்தபோது ஓர் ஆச்சரியம்! நான் என்னவெல்லாம் எழுத நினைத்திருந்தேனோ அவற்றை அன்றைக்கே ஒரு கட்டுரையாக வடித்திருந்தார் ஒருவர். வெறுமே ‘வி.கே’ என்று மட்டுமே அதை எழுதியவரின் இனிஷியல் கொடுக்கப்பட்டு இருந்தது. ‘கையெழுத்து வேட்டை’ என்னும் தலைப்பில் 2.1.1938 விகடன் இதழில் வெளியான அந்தக் கட்டுரை கீழே.

கையெழுத்து வேட்டை

பூலோகத்திலே பைத்தியக்காரர்கள்தான் ஜாஸ்தி. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பைத்தியம். ஒவ்வொரு பைத்தியமும் ஒரு தனி விநோதம். எனக்குப் பாடவே தெரியாது. ஆனால் எல்லாப் பாட்டும் பாடம். எந்தப் பாட்டுக்கு அடி சொன்னாலும் சரி, கடைசிச் சரணம் வரை ஒப்பித்து விடுவேன். புதிதாய் யார், எங்கே, என்ன பாட்டுப் போடுகிறார்கள் என்று தேடுவேன். அவை அச்சுக்கு வருவதற்கு முன்னால் நான் எழுதிப் பாடம் பண்ணி விடுவேன். அதனால் எனக்கு என்ன பயன் என்று கேட்டால், எனக்குச் சொல்லத் தெரியாது.

பெரிய மனிதர்களிடம் கையெழுத்து வேட்டையாடுகிற வர்கள் வேறொரு தினுசு பைத்தியங்கள். அவர்களிடம் எனக்குக் கோபமே வருவதில்லை. அதற்குப் பதிலாக அனுதாபம் உண்டு. அவர்களை பார்க்கும் போதெல்லாம் ‘ஐயோ, பாவம்!’ என்று எனக்குள் சொல்லிக் கொள்வேன். மகாத்மா காந்தியிடமிருந்தும், ராஜாஜியிடமிருந்தும், ஸர் ஸி.வி.ராமனிடமிருந்தும் அவர்கள் கேட்பதெல்லாம் ஒரே ஒரு கையெழுத்துதான். அது கிடைத்துவிட்டால் போதும், அவர்கள் ஜன்மம் ஸாபல்யமாகிவிடும்.

ராஜாஜியும், ஸர் ஸி.வி.ராமனும் போடு என்றால், கையெழுத்துப் போட்டு விடுகிறார்கள். ஜவாஹர்லால்ஜிகூடத் தன் அவசரத்தை மறந்து, நீட்டின கடுதாசியிலெல்லாம் கையெழுத்துப் போட்டுக் கொண்டே இருந்துவிடுகிறார். ஆனால் மகாத்மா காந்தி மட்டும் கையெழுத்தை சும்மா போடுவதில்லை. “ஏதாவது தட்சிணை கொடு, ஹரிஜன சேவைக்கு” என்று பிடுங்கி விடுகிறார். ஆனால், இந்த வேட்டைக்காரர்கள் அதற்கும் அஞ்சுவதில்லை. தட்சிணை சகிதம் வந்து, கடுதாசியுடன் அதையும் நீட்டிவிடுகிறார்கள்.

இந்தக் கையெழுத்தை எல்லாம் அவர்கள் என்ன செய்வார்கள்? கண்ணாடி போட்டு மாட்டுவார்களா? அல்லது, புஸ்தகமாக பைண்டு பண்ணி அலமாரியில் வைத்துப் பூஜை செய்கிறார்களா? அந்த ரகசியம் எனக்குத் தெரியவில்லை. அவர்களைக் கேட்டாலும் சொல்லுவதில்லை; கண்ணைச் சிமிட்டிக்கொண்டு சிரிக்கிறார்கள்.

இந்த மாதிரி சிரிப்பு ஒரு தரம் என்னை ரொம்பச் சந்தேகத்துக்குள் ஆழ்த்தி விட்டது. ஒருவேளை தீய எண்ணத்துடன் கையெழுத்து வாங்கிக் கொள்ளுகிறார்களோ? அதே மாதிரி தாமும் கையெழுத்திட்ட கடிதங்கள், பிராமிஸரி நோட்டுகள், நற்சாக்ஷிப் பத்திரங்கள் இவற்றை சிருஷ்டித்துப் பயன்படுத்திக் கொள்ளுகின்றனரோ என்று பயந்தேன். ஆனால், அந்தப் பேர்வழிகளுடைய அசட்டுக் களை என் சந்தேகங்களை எல்லாம் விரட்டி விட்டது. போக்கிரியாய் இருப்பதற்கும் கொஞ்சமாவது சமர்த்து வேண்டாமா?

பிறகு இவர்கள் என்னதான் பண்ணுவார்கள் தங்கள் வேட்டையை? அப்படி ஒருவரிடம் கேட்டேன். ‘கையெழுத்துப் பித்து’ என்று மட்டும் சுருக்கமாகச் சொல்லித் தப்பித்துக்கொண்டு விட்டார்.

பிறர் கையெழுத்தை வேட்டையாடுகிறவர்கள் டில்டன், மகம்மதலி ஜின்னா, காமா, டின்ஷா மேத்தா, சியாங் கே ஷேக், தேவிகா ராணி என எல்லா நாமங்கள் மீதும் சமமான பக்தி, சமமான மரியாதை வைத்திருக்கிறார்கள். பிரஸித்தி பெற்றவர்களையெல்லாம் கையெழுத்துடன் பிடித்துவிடுவதுதான் இவர்கள் நோக்கம். ஆனால், அவற்றை என்ன செய்கிறார்கள்? காட்சி சாலைகளில் காண்பிக்க ஏற்பாடு செய்கிறார்களா?

யாருக்குத் தெரிகிறது? உயிர்களை எல்லாம் வேட்டையாடிக் கொண்டு போகிறான் யமன். அவற்றை அவன் என்ன பண்ணுகிறான் என்று யாராவது நிச்சயமாகக் கூற முடியுமா? அத்தனை மர்மம் இந்த வேட்டையிலும் இருக்கிறது. சரி, நான் ஏன் இந்தப் பைத்தியங்களைப் பற்றி எழுதுகிறேன்? அதற்குக் காரணம் உங்களால் சொல்ல முடியுமா? அது போலத்தான்!
.

Wednesday, September 16, 2009

எனையாண்ட இசை அரசர்கள்... அரசிகள்!

னிதனை மனிதனாக வாழ வைத்துக்கொண்டு இருப்பவை கலைகள்தான். கலைகள் மட்டும் இல்லையென்றால், மனிதனுக்கும் மிருகத்துக்கும் எந்த வித்தியாசமும் இருக்காது. ஓவியம், நடனம், இசை, இலக்கியம், நடிப்பு, எல்லாம் கலந்த திரைப்படம் என அடிப்படைக் கலைகள் ஏழெட்டு உள்ளன. அத்தனைக் கலைகளிலும் என்னை மிகவும் ஈர்ப்பது இசைக் கலைதான். என்னை அதிகம் சந்தோஷப்படுத்துவது இசைக் கலைதான். இசையை ரசிக்க எந்த அறிவும் தேவையில்லை; எந்த புத்திசாலித்தனமும் தேவையில்லை. காதுகள் பழுதடையாமலிருந்தால் போதுமானது! உட்கார்ந்த இடத்திலிருந்தபடியே சொர்க்கத்தில் உலாவிவிட்டு வரலாம்.

டி.எம்.சௌந்தரராஜன்:
என்னைக் கவர்ந்த இசை அரசர்கள், இசை அரசிகள் என்று இந்தப் பதிவை எழுதத் தொடங்கும்போதே இசை அரசர்களுக்கெல்லாம் அரசராக, இசைச் சக்கரவர்த்தியாக, ஏழிசை வேந்தராக என் நினைவில் முதலாவதாக வந்து நிற்பவர் திரு.டி.எம்.சௌந்தரராஜன் அவர்கள்தான். நான் ஐந்தாம் வகுப்பு படிக்கும்போதிலிருந்து, அதாவது 40 வருடங்களாக அவரின் பாடல்களைக் கேட்டு ரசித்து வருகிறேன். இன்னமும் அலுக்கவில்லை. அவரை நேரில் சந்தித்து, அவரின் அன்புக்குப் பாத்திரமானதை என் பாக்கியமாகக் கருதுகிறேன். அவரைப் பற்றி இந்த வலைப்பூவில் நிறையவே முன்பு எழுதியிருக்கிறேன். சமயம் வரும்போது இன்னும் எழுதுவேன்.

சீர்காழி கோவிந்தராஜன்:
இவரின் திருப்பதி வேங்கடாசலபதி பாடல்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். ‘திருப்பதி மலை வாழும் வெங்கடேசா...’ என்று எங்களூர் சினிமா கொட்டகையில் இவர் குரலெடுத்துப் பாடினால், படம் தொடங்கப்போகிறது என்று அர்த்தம். ‘விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்...’ என்று இவர் உச்ச ஸ்தாயியில் சொல்லும்போது நம்பாமல் இருக்க முடியவில்லை. ‘சாட்டைக் கையில் கொண்டு காளை ரெண்டு...’ என்று இவர் அவசர கதியில் பாடிய பாடலும், ‘சிவசங்கரி...’ பாடலின் இறுதியில் ‘திருதிருதோம்...’ என்று படு ஸ்பீடாக இவர் உச்சரிக்கும் ஸ்வரப்பிரஸ்தாரங்களும் அற்புதமானவை. இவரின் ‘சமரசம் உலாவும் இடமே’ பாடலைக் கேட்டால், நாமே ஒரு சித்தராக, ஞானியாக ஆகிவிட்டது போன்ற எல்லாம் கடந்த பற்றற்ற நிலைக்கு ஆளாவோம்.

சின்ன வயதில் இவரின் இரண்டு பாடல்களை நான் டி.எம்.எஸ். பாடியது என்று நினைத்திருக்கிறேன். அற்புதமான அந்தப் பாடல்களில் ஒன்று, ‘வணங்காமுடி’ படத்தில் இடம்பெறும் ‘மலையே உன் நிலையை நீ பாராய்... கலைஞன் கை உளியாலே காவியச் சிலையான மலையே உன் நிலையை நீ பாராய்’ பாடல். படத்தில் சிவாஜி பாடும் பாட்டு இது. மற்றொரு பாடல், ‘மாம்பழத் தோட்டம், மல்லிகைக் கூட்டம், மணக்க வரும் மாலைப் பொழுதோடு...’. எம்.ஜி.ஆர். படப் பாடல் இது. என்ன படம் என்று நினைவில்லை.

சி.எஸ்.ஜெயராமன்:
வயதான குரலாக ஒலித்தாலும், அதில் கம்பீரமும் மிடுக்கும் இருக்கும். சிவாஜியை மனதிலிருந்து ஒதுக்கிவிட்டுக் கேட்டால், இவரின் ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே...’, ‘அன்பாலே தேடிய என் அறிவுச் செல்வம்’, ‘காவியமா, ஓவியமா’, ‘நீ சொல்லாவிடில் யார் சொல்லுவார் நிலவே’ ஆகிய பாடல்கள் எல்லாமே எனக்குப் பிடித்தமானவைதான். சம்பூர்ண ராமாயணத்தில் ராவணனுக்கு இவர் பாடிய பாடல்கள் அதி அற்புதமானவை. ‘இன்று போய் நாளை வா என, எனை ஒரு மனிதன் புகலுவதோ’ என்று பெரிய சிவன் சிலையின் காலடியில் அமர்ந்து ராவணனாக டி.கே.பகவதி பாடும்போது, ஒரு மாவீரனின் கம்பீரமும், அதே சமயம் தோல்விமுகத்தில் இருக்கிற கழிவிரக்கமும் சி.எஸ்.ஜெயராமனின் குரலில் சேர்ந்து ஒலிக்கும். ராகங்களைக் குறிக்கும் பாடலும் அருமைதான். இவையெல்லாவற்றையும்விட நான் திரும்பத் திரும்பக் கேட்டு ரசிப்பது ‘ரத்தக்கண்ணீர்’ படத்தில் எம்.ஆர்.ராதாவின் குரலுடன் சேர்ந்து ஒலிக்கும் ‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது’ பாடல்தான்!

பி.பி.ஸ்ரீனிவாஸ்:
உருக்கமான பாடல்களை இவர் பாடிக் கேட்கும்போது உண்டாகும் பரவசமே தனி! பேசும்போது கணீரென்று, கம்பீரமாக ஒலிக்கும் இவர் குரல் பாடும்போது மட்டும் மென்மையாகக் குழைவது எனக்கு ஓர் ஆச்சரியம்! ஜெமினி கணேசன், பாலாஜி போன்றோருக்கு இவர் பாடிய பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும். இந்திப் பாடகர் கிஷோர்குமாரின் பாடல்களில் ஒரு சிறப்பம்சம் உண்டு. பாடிக்கொண்டு இருக்கும்போதே ‘ஹைலுலு ஹைலுலு ஹைலுலூ...’ என்று குரலை உருட்டுவார். ‘ஜிந்தகி ஏக்சஃபர் ஹைசுஹானா...’ பாடலில் இந்த குரல் வித்தையைச் செய்வார். இது ‘யோட்லிங்’ எனப்படும். இப்படிப் பாடுவது கஷ்டம். தமிழில் அந்த வித்தையைச் செய்து காட்டியவர் பி.பி.ஸ்ரீனிவாஸ்தான்!

எஸ்.பி.பாலசுப்பிரமணியம்:
மிகவும் மென்மையான குரலுக்குச் சொந்தக்காரர். இவர் பாடிய பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும். அடிமைப்பெண்ணில், ‘ஆயிரம் நிலவே வா...’, வீட்டுக்கு வீடு படத்தில் ‘அங்கம் புதுவிதம் அழகினில் ஒரு விதம் மங்கை இவள் முகம் நவரச நிலவு’, சுமதி என் சுந்தரியில் ‘பொட்டு வைத்த முகமோ’, ராஜா படத்தில் ‘இரண்டில் ஒன்று, நீ என்னிடம் சொல்லு’, ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’யில் ‘உச்சி வகிர்ந்தெடுத்து பிச்சிப்பூ வெச்ச கிளி’, ‘நியூ’ படத்தில் ‘சக்கர இனிக்கிற சக்கர’, ‘சந்திரமுகி’யில் ‘தேவுடா தேவுடா’, லேட்டஸ்ட்டாக ‘சிவாஜி’யில் ‘பல்லேலக்கா’ என நிறையச் சொல்லிக்கொண்டே போகலாம். பி.பி.ஸ்ரீனிவாசுக்குப் பிறகு தமிழில் கிஷோர்குமாரின் அந்த ஹைலுலு குரல் வித்தையைச் செய்து காட்டியவர் எஸ்.பி.பி.தான். ‘காலங்களில்... ராகங்களில்...’ பாட்டைக் கேட்டிருந்தால் தெரியும். இவர் இந்தியில் பாடிய, குறிப்பாக லதா மங்கேஷ்கரோடு இணைந்து பாடிய ‘ஹம் ஆப்கே ஹைன் கோன்’ பாடல்கள் அனைத்துமே எனக்குப் பிடிக்கும்.

இளையராஜா:
இசையமைப்பாளர் என்பதையும் தாண்டி இவரை ஒரு பாடகராகவும் எனக்குப் பிடிக்கும். ‘ஓரம்போ... ஓரம்போ... ருக்குமணி வண்டி வருது’, ‘ஒரு மஞ்ச குருவி என் நெஞ்சைத் தழுவி...’, ‘சாமக்கோழி ஹேய் கூவுதம்மா’ எனப் பல பாடல்களைத் திரும்பத் திரும்பக் கேட்டு ரசித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் ஏதோ ஒரு பத்திரிகை பேட்டியில் இவர் ‘டி.எம்.எஸ்ஸுக்கு சரியான பாவத்தோடு பாடத் தெரியவில்லை’ என்று சொல்லியிருந்ததைப் படித்ததிலிருந்து, ‘என்ன இப்படிச் சொல்லியிருக்கிறார்? டி.எம்.எஸ்ஸுக்குப் பாவத்தோடு தெரியவில்லை என்றால், வேறு யாருக்குத் தெரியும்? இவர் இதை மனப்பூர்வமாகத்தான் சொல்லியிருக்கிறார் என்றால், இவர் சிறந்த இசையமைப்பாளர்தானா என்பதே சந்தேகம்தான்!’ என்கிற கோபம் எழுந்ததில், அதன்பின் அவர் இசையமைக்கும் பாடல்களில் எல்லாம் குறையே தெரிந்தது எனக்கு. டி.எம்.எஸ்ஸும் படவுலகை விட்டு ஒதுங்கி, ரொம்ப காலம் கழித்துதான் மீண்டும் இளையராஜாவின் இசையை ரசிக்கத் தொடங்கினேன். சமீபத்தில் விகடனில் வெளியான டி.எம்.எஸ்-இளையராஜா சந்திப்புக் கட்டுரையில், ‘தமிழ் சினிமாவில் ஒரே ஒரு ஆண் குரல் டி.எம்.எஸ். குரல்தான்!’ என்று இளையராஜா மனம்விட்டுச் சொன்னதிலிருந்து பழையபடி இளையராஜாவின் ரசிகனாகிவிட்டேன்.

இன்னும் எம்.கே.டி.பாகவதர், ஏ.எம்.ராஜா, டி.ஆர்.மகாலிங்கம், திருச்சி லோகநாதன் என எனக்குப் பிடித்த பாடகர்கள் பலரைப் பற்றியும் சொல்லலாம். இந்திப் பாடகர்களில் நான் அதிகம் விரும்பிக் கேட்பது கிஷோர் குமார், உதித் நாராயணன் (இவர் இங்கேயும் வந்து தமிழைக் கடித்துத் துப்புவதைத்தான் சகிக்க முடியவில்லை), சுக்வீந்தர் சிங் ஆகியோரின் பாடல்களை.

பி.சுசீலா:
இசை அரசிகளுக்கு வருவோம். சந்தேகமில்லாமல் முதலிடத்தில் இருப்பவர் பி.சுசீலாதான். டி.எம்.எஸ் பாடியவற்றில் என்ன பாட்டு பிடிக்கும் என்று கேட்டால், எதைச் சொல்வது, எதை விடுவது என்று எனக்குக் குழப்பம் வரும். அப்படி அத்தனையுமே பிடித்தமான பாடல்கள்தான். அதுபோல பி.சுசீலாவின் பாடல்களிலும் எந்த பாட்டைச் சொல்வது, எதை விடுவது என்று எனக்குத் தெரியவில்லை. ‘ராதையின் நெஞ்சமே, கண்ணனுக்குச் சொந்தமே’ பாட்டிலிருந்துதான் பி.சுசீலாவைப் பிரத்தியேகமாகக் கேட்கத் தொடங்கினேன். அந்தப் பாடல் என்னை எங்கோ இழுத்துக்கொண்டு போனது போல் உணர்ந்தேன். அந்தப் பாடலின் ராகமா, பி.சுசீலாவின் குரல் வளமா எதுவென்று தெரியவில்லை... என்னை மயக்கத்தில் ஆழ்த்தியது. ‘மாறியது நெஞ்சம் மாற்றியவர் யாரோ...’, ‘ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன்’ என்று சொல்லிக்கொண்டே போகலாம். பி.சுசீலாவின் பாடல்களில் அவர் இழுக்கும் ராக ஆலாபனை அதியற்புதமாக இருக்கும். விதவிதமான சிரிப்புகளையே ராகமாக இசைப்பார். ஓர் உதாரணத்துக்குச் சொல்ல வேண்டுமானால், ‘வாராயோ வெண்ணிலாவே’ பாட்டைச் சொல்லலாம். இது போல இன்னும் நிறையப் பாடல்கள்!

மற்ற எந்தப் பாடகிக்கும் இல்லாத ஒரு சிறப்பு இவரிடம் உண்டு. டி.எம்.எஸ். எப்படி எம்.ஜி.ஆருக்கு, சிவாஜிக்கு, ஜெய்சங்கருக்கு என நடிகர்களுக்கேற்பத் தன் குரலையும் பாணியையும் மாற்றிப் பாடினாரோ, அதே போல நடிகைகளுக்கு ஏற்பத் தன் குரலையும் பாணியையும் மாற்றிப் பாடியவர் பி.சுசீலா. ஆனால், இதை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆண் குரலில் கம்பீரமும், குழைவும் மாற்றிக் கொடுக்க முடிகிற அளவுக்குப் பெண் குரலில் சாத்தியம் இல்லை. என்றாலும், தன்னால் முடிந்தவரை அதைச் சாத்தியப்படுத்திக் காட்டியிருப்பார் பி.சுசீலா. அவர் சரோஜாதேவிக்குப் பாடுகிறபோது அதில் ஒரு கொஞ்சல் இருக்கும்; அதுவே தேவிகாவுக்குப் பாடுகிறபோது அதில் அத்தனைக் குழைவு இருக்காது. ஜெயலலிதாவுக்குப் பாடுகிறபோது அதில் ஒரு மிடுக்கு தெரியும். பி.சுசீலா ஒவ்வொரு நடிகைக்கும் பாடிய பாடல்களைத் தனித் தனித் தொகுப்புகளாகப் பிரித்துக்கொண்டு கேட்டால், நான் சொல்வதில் உள்ள உண்மை புரியும். உதாரணத்திற்குச் சில பாடல்களைச் சொல்கிறேன். ‘நினைத்தேன் வந்தாய் நூறு வயது’ பாட்டில் ஜெயலலிதாவுக்கே உரிய மிடுக்கு பி.சுசீலாவின் குரலில் ஒலிப்பதைக் கவனியுங்கள். ‘லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ்... தகதிமிதா’ பாட்டில் சரோஜாதேவியின் கொஞ்சல் இருப்பதைக் கவனியுங்கள். ‘அழகே வா... அலையே வா’ பாடலில் தேவிகா களை கட்டுவது தெரிகிறதா? அவ்வளவு ஏன்... ‘அழகிய தமிழ் மகள் இவள்...’ பாடலில், ‘கோவை இதழ் இதோ இதோ... கொஞ்சும் கிளி அதோ அதோ’ என்று பி.சுசீலா பாடும்போது மஞ்சுளா மாதிரியே இருக்கிறதே! ஹேட்ஸ் ஆஃப் பி.சுசீலா!

எல்.ஆர்.ஈஸ்வரி:
மின்சாரக் குரல் இவருடையது. இந்தப் ‘பட்டத்து ராணி’யை இந்தி லதா மங்கேஷ்கராலும் கிட்டே நெருங்க முடியவில்லை. இவர் பாடிய ஒவ்வொரு பாட்டுமே ‘விர்’ரென்று நரம்புகளில் போதை ஊசியை ஏற்றுவது போலிருக்கும். ‘வந்தாள் என்னோடு...’, ‘அடி என்னடி உலகம்’ எனச் சொல்லிக்கொண்டே போகலாம். எலந்தப்பயத்துக்கு ஈடு இணை உண்டா? ‘முப்பது பைசா மூணு முழம்...’ இன்னும் முப்பது வருடங்களுக்குத் தாங்கும். ‘நானென்பதென்ன... நீ என்பதென்ன...’ என்று இவர் நிதானமாகப் பாடியதுகூட என்னைக் கிறங்கடித்தது. ‘காதோடுதான் நான் பேசுவேன்’ பாட்டில் எத்தனை ஈரம்? இவர் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மிக அமைதியாகப் பாடிய பாடல், ‘தபால்காரன் தங்கை’ படத்தில் வரும் ‘தெரிஞ்சுக்கோ... ஐயா தெரிஞ்சுக்கோ! கொஞ்சம் போகட்டும், மனசு மாறட்டும்...’ என்கிற பாடல். அதே படத்தில் இவர் பாடியிருக்க வேண்டிய ஒரு கிளப் பாடலை பி.சுசீலா பாடியிருப்பார். அந்தப் பாடல் என்னவென்று மறந்துபோய்விட்டது. எல்.ஆர்.ஈஸ்வரியின் பாட்டுதான் ஞாபகத்தில் இருக்கிறது.

தவிர, ‘செல்லாத்தா, எங்க மாரியாத்தா’, ‘தாயே கருமாரி, எங்கள் தாயே கருமாரி’, ‘உலகாளும் உமையவளே உன் பாதம் பணிந்து நின்றேன்’, ‘கற்பூர நாயகியே கனகவல்லி’, ‘வேற்காடு வாழ்ந்திருக்கும் ஆதிபராசக்தி அவள்’ என இவர் பாடிய அம்மன் பாடல்கள் அத்தனையும் பக்தி ரசம்!

எஸ்.ஜானகி:
‘சிங்கார வேலனே, தேவா’வில் நாதஸ்வரத்தோடு போட்டி போட்டுப் பிரமிக்க வைத்த குரல் இவருடையது. ’வசந்த காலக் கோலங்கள், வானில் விழுந்த கோடுகள்’ என்கிற இவருடைய பாடல் பி.சுசீலாவின் ‘ராதையின் நெஞ்சமே’வுக்குச் சமம். ‘ஆழக் கடலில் தேடிய முத்து...’, ‘ராசாவே... உன்ன நம்பி இந்த ரோசாப்பூ இருக்குதுங்க’ போன்ற பாடல்கள் எல்லாம் மனசைப் பிசைபவை. ‘கண்ணா நீ எங்கே’ பாட்டை மழலையான குழந்தைக் குரலில் பாடி அசத்தினார். ‘டாடி டாடி, ஓ மை டாடி’ என்று மௌனகீதங்களில் கொஞ்சம் வளர்ந்த பையன் குரலில் பாடி ஆச்சரியப்படுத்தினார். ‘முதல்வனே... வனே... வனே...’வுக்குப் பிறகு ஏதாவது பாடியிருக்கிறாரா என்று தெரியவில்லை. இந்தி ஆஷாபோன்ஸ்லே குரலும் இவர் குரலும் ஒன்றே போல் இருப்பது ஆச்சரியம்!

வாணிஜெயராம்:
ஸ்பஷ்டமான ஸ்வர நிரவல்களோடு பாடுவதில் திறமைசாலி. இவரின் பாடல்கள் பெரும்பாலும் நம்மால் பாடிப் பார்க்க, அவ்வளவு ஏன், ஹம்மிங் செய்து பார்க்கக்கூட முடியாத அளவுக்குக் கஷ்டமாக இருக்கும். எப்படி இந்தப் பாடலை இவர் இத்தனைச் சுலபமாகப் பாடியிருக்கிறார் என்று இவரின் ஒவ்வொரு பாடலைக் கேட்கும்போதும் எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ‘மேகமே... மேகமே... பால் நிலா தோன்றுதே’ என்று இவர் பாடிய பாடலை மனசுக்குள்கூட அதே பாவத்தில் என்னால் பாடிப் பார்க்க முடியவில்லை. இதற்காகத்தானோ என்னவோ, எந்தக் கஷ்டமுமே இல்லாமல் ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு, நெய் மணக்கும் கத்திரிக்கா...’ என்று இவரைப் பாட வைத்து அழகு பார்த்தார் இளையராஜா.

சித்ரா:
பி.சுசீலாவைப் போன்ற இதமான குரல் வளம். ‘சின்னக்குயில் பாடும் பாடல் கேட்குதா’ தொடங்கி, ‘ஒவ்வொரு பூக்களுமே’ வரையில் இவர் பாடிய அத்தனைப் பாடல்களுமே அமிர்தம்தான்!

இன்னும் ஜமுனா ராணி, ஜிக்கி, எஸ்.பி.ஷைலஜா, ஜென்ஸி, பி.எஸ்.சசிரேகா என சிறப்பாகப் பாடும் பாடகிகள் பட்டியல் நீண்டது. பாடகர்களில் ஒரு சி.எஸ்.ஜெயராமன் போல பாடகிகளில் கே.பி.சுந்தராம்பாள் குரல் மிடுக்கும் கம்பீரமும் கொண்டது. ‘ஞானப்பழத்தைப் பிழிந்து...’, ‘பழம் நீயப்பா’, ‘ஏழுமலை இருக்க எனக்கென்ன மனக்கவலை...’, ‘சென்று வா மகனே சென்று வா’ என இவர் பாடிய ஒவ்வொரு பாடலுமே உணர்ச்சி கொப்பளிக்கும் ரகம்.

ன்றைக்குப் பாடுகிறவர்களும் எந்தக் குறையுமில்லாமல் மிக அருமையாகத்தான் பாடுகிறார்கள். பழைய பாடகர்கள் போல யார் எந்தப் பாட்டைப் பாடுகிறார் என்று எனக்கு இனம் காணத் தெரியவில்லை. ஓரளவு சுசித்ராவின் குரல் புரிகிறது. மற்றபடி சாதனா சர்கம், ஸ்ரேயா கோஷல், மதுஸ்ரீ எனப் பலர் பாடுகிறார்கள். பாடகர்களிலும் ரமேஷ் ஐயர், கார்த்திக், கே.கே. என்று பெயர்கள் கேள்விப்படுகிறேன். பாட்டைக் குறை சொல்லலாமே தவிர, இவர் பாடியதால் கெட்டது என்று ஒரு பாடலும் இல்லை. வஞ்சனையில்லாமல் அத்தனை பேருமே அற்புதமாகப் பாடுகிறார்கள்.

‘டாடி மம்மி வீட்டில் இல்லே...’ என்கிற பாட்டில், ‘தக்...தக்...தங்க வியாபாரி என் அங்கம் பார்த்தானே...’ என்று பாடகியின் குரல் ஏறி இறங்கி குதியாட்டம் போடுகிறது. ‘மியாவ் மியாவ் பூனே...’ பாடலும் ரசனையாகத்தான் இருக்கிறது.

ஹாரிஸ் ஜெயராஜ், தேவிஸ்ரீபிரசாத், விஜய் ஆண்டனி என்று திறமையான இசையமைப்பாளர்களுக்கும் பஞ்சமில்லை. நா.முத்துக்குமார், பா.விஜய் போன்ற திறமையான பாடலாசிரியர்களும் இருக்கிறார்கள்.

ஆனாலும், அந்தக் கால கண்ணதாசன் பாடல்களைப் போல உள்வாங்கி மகிழக்கூடிய பாடல்கள் இன்றைக்கு உண்டா? இருந்தால் எனக்குச் சொல்லுங்கள்! கேட்டு ரசிக்கிறேன்.
.

Sunday, September 13, 2009

மகேந்திர ஜாலம்!

ஞாநியின் நான்காவது கேணிக் கூட்டம் இன்று நடந்தது. சென்ற முறை பாலு மகேந்திரா பேசியதில் எனக்கு அத்தனை சுவாரசியம் இல்லாமல் இருந்தது. அவர் பெரிய இயக்குநர்தான். அவரது அழியாத கோலங்கள், மூடுபனி ஆகிய படங்களைப் பார்த்துப் பிரமித்திருக்கிறேன். ஆனால், கேணிக் கூட்டத்தில் அவர் புதிதாக எதையும் சொல்லிவிடவில்லை என்பதோடு, என்னை அதிகம் ஈர்ப்பதாகவும் இல்லை அவர் பேச்சு. எனவே, இந்த முறை கேணிக் கூட்டத்துக்குப் போகாமல் இருந்துவிடலாம் என்றுதான் கடைசி நிமிஷம் வரையில் தீர்மானித்திருந்தேன். என்றாலும், வருபவர் மகேந்திரன் என்பதால், போய்த்தான் பார்ப்போமே என்று போனேன்.

திரு.மகேந்திரனை சாவியில் பணியாற்றிய காலத்தில் தெரியும். சாவி சாரின் அத்யந்த நண்பர் அவர். நான் அங்கே வேலை செய்த காலத்தில் மகேந்திரன், சாவி சார் இல்லத்துக்கு இரண்டு முறை வந்திருக்கிறார். கன்னங்கள் எல்லாம் ஒட்டிப்போய், குச்சியாக மெலிந்திருந்தார். அப்போது அவருடன் பேசியிருக்கிறேன். பழகியதில்லை.

ஒரு முறை (நான் சாவியில் சேருவதற்கு முன்பு) சாவி பத்திரிகை விழா ஒன்று பெங்களூரில் நடந்தது. சாவி சாரோடு திரு.மகேந்திரனும் சென்றிருந்தார். அதற்கு முந்தைய வாரத்தில், வாரம் ஒரு ஊர் என்கிற வரிசையில் பெங்களூரைப் பற்றி சாவி இதழில் எழுதியிருந்தவர் (கார்த்திகா ராஜ்குமார் என்று நினைக்கிறேன். சரியாக நினைவில்லை.) ‘அங்கே பெண்கள் கூப்பிட்டால் வந்துவிடுவார்கள்’ என்ற தொனியில் ஏதோ எழுதிவிட்டிருந்தார். இதை மனதில் கொண்டு, பெங்களூர் தமிழ்ச் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் விழாவின்போது கலாட்டா செய்ய, செருப்பும் அழுகிய முட்டைகளும் பறக்க, மகேந்திரனை பத்திரமாக அழைத்து வருவதற்குள் போதும் போதுமென்றாகிவிட்டது சாவி குழுவினருக்கு என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.

‘பதினாறு வயதினிலே’ படத்துக்கு அடுத்தபடியாக ஆனந்த விகடனில் அதிக மதிப்பெண் பெற்ற படம், மகேந்திரனின் ‘முள்ளும் மலரும்’தான். விகடனில் பொக்கிஷம் பகுதிக்காக எழுத்தாளர் சுஜாதா மற்றும் நடிகை லட்சுமியுடன் தான் நடத்திய உரையாடலை மறு பிரசுரம் செய்யும்படி கேட்டிருந்தார் மகேந்திரன்.

குடிப்பழக்கம் அதிகம் கொண்டவர் மகேந்திரன். இப்போது குறைத்துக் கொண்டாரா, விட்டுவிட்டாரா என்று தெரியவில்லை. சில ஆண்டுகளுக்கு முன், ஒரு டி.வி. பேட்டியின்போதுகூட குடி மயக்க நிலையில்தான் அவர் பேசினார். பேச்சு குழறலாக இருந்தது. ஒரு மகா கலைஞன் தன்னைப் பாழடித்துக் கொள்கிறாரே என்று வேதனையாக இருந்தது.

ஆனால், இன்றைக்கு மகேந்திரனைப் பார்க்கச் சந்தோஷமாக இருந்தது. கம்பீரமாக இருந்தார். முழு ஆரோக்கியத்துடன், தெம்பாகத் தெரிந்தார். குரல் பிசிறில்லாமல் கணீரென்று இருந்தது. அவர் பேசியதிலும் புதிதாகத் தெரிந்து கொள்ள எனக்கு எதுவும் இல்லையென்றாலும், அவர் பேசிய விதமே இனிமையாக இருந்தது. ஒரு தோழமையோடு, சிநேகித பாவத்தோடு பேசினார். தான் பெரிய டைரக்டர் என்கிற பந்தா எதுவும் அவரிடம் துளியும் இல்லை. ஆத்மார்த்தமாகப் பேசினார்.

புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கி.ராஜநாராயணன் ஆகிய மூவரின் எழுத்துக்கள்தான் தனக்கு ரொம்பப் பிடிக்கும் என்று குறிப்பிட்டார். மலையாளத்தைப் பொறுத்தவரை எம்.டி.வாசுதேவன் நாயர் போன்ற பலரின் எழுத்துக்கள் பிடிக்கும் என்றார். சினிமாவிலும் இலக்கியத்திலும் மலையாளப் படைப்பாளிகள் அளவுக்குத் தமிழில் இன்றைக்கு இல்லை என்பது மகேந்திரனின் அபிப்ராயம். சத்யஜித்ரேவை சிறந்த இயக்குநராகத்தான் எனக்குத் தெரியும். ஆனால், அவர் ஒரு நல்ல எழுத்தாளரும்கூட; நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார் என்று குறிப்பிட்டார் மகேந்திரன்.

உமாசந்திரனின் கதையைத்தான் மகேந்திரன் அப்படியே ‘முள்ளும் மலரும்’ என்று சினிமாவாக இயக்கியதாக நான் இத்தனை நாள் நினைத்துக்கொண்டு இருந்தேன். மகேந்திரன் இன்றைக்குப் பேசியதிலிருந்து, படம் மூலக் கதையிலிருந்து ரொம்பவே வேறுபட்டிருக்கும் என்று தோன்றுகிறது. கதாநாயகன் காளி ஒரு விஞ்ச் ஆபரேட்டர் என்பது வரைதான் அந்தக் கதையில் தன்னை ஈர்த்தது; மற்றதையெல்லாம் தானே ஜோடித்துக்கொண்டதாகச் சொன்னார்.

ரஜினி பற்றியும் பேசினார். அற்புதமான நடிகர் சிவாஜி, எந்திரன் என்று ஒரு இமேஜில் சிக்கி வீணாகப் போய்விட்டது குறித்துத் தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். உண்மைதான். அதாவது, ரஜினி அற்புதமான நடிகர் என்பது உண்மைதான். எங்கேயோ கேட்ட குரல், நான் வாழ வைப்பேன், புவனா ஒரு கேள்விக்குறி ஆகிய படங்கள் அவரின் நடிப்புத் திறமைக்குச் சான்று. ஆனால், அதற்காக அப்படியான படங்களில் மட்டும்தான் ஒரு நடிகர் நடிக்க வேண்டும் என்பது இல்லை. ஒரு பெரிய ஆடியன்ஸைக் கவர வேண்டுமானால் பில்லா, முரட்டுக் காளை, சிவாஜி போன்ற படங்களிலும் நடிக்கத்தான் வேண்டும். அதே சமயம் குணச்சித்திர நடிப்புக்கு வாய்ப்புள்ள படங்களிலும் ரஜினி நடிக்க வேண்டும். கமல் கச்சிதமாக அதைச் செய்து வருகிறார். என்ன... இரண்டு விதமான படங்களிலும் இரண்டையும் அங்கங்கே கலந்து சிண்டைப் பிய்த்துக் கொள்ள வைத்து விடுகிறார்.

சரி, மகேந்திரனுக்கு வருவோம். அவரின் உதிரிப் பூக்கள் படத்தின் கிளைமேக்ஸ் காட்சியைப் பார்த்து நெஞ்சு கனக்காதவர்கள் இருக்க முடியாது. கை கொடுக்கும் கை என்று, தான் ஓர் உருப்படாத படம் கொடுத்ததாகச் சொன்னார். நானும் அந்தப் படத்தைப் பார்த்திருக்கிறேன். ரஜினியின் மனைவியாக ரேவதி, பார்வையற்றவராக வருவார்; சின்னி ஜெயந்த அறிமுகமான படம் என்பதைத் தவிர, கதை எதுவும் ஞாபகமில்லை. ஆனால், மகேந்திரன் சொல்வதுபோல் அது அத்தனை மோசமான படம் இல்லை என்று நினைக்கிறேன்.

ஒருவர் சாதனையாளர் என்றால், அவர் மட்டும் கிரீடம் சூட்டிக் கொள்கிறார்; அவரை அந்த இடத்துக்கு உயர்த்தியதற்கு எத்தனை எத்தனையோ பேரின் பங்களிப்பு இருக்கும்; அவர்களை யாருக்கும் தெரிவதில்லை; இந்தச் சாதனையாளர்களும் சொல்வதில்லை; தன் மூளை, தன் உழைப்பு என்று பெயரைத் தட்டிக்கொண்டு போய்விடுகிறார்கள் என்று குறிப்பிட்டார் மகேந்திரன்.

பிரீமெச்சூர்ட் பேபியாக பிறந்த தன்னை, உயிர் பிழைப்பது கடினம் என்கிற நிலையில், தன் வயிற்றின் மீது வைத்து அந்தச் சூட்டில் வைத்துக் காப்பாற்றி உயிர் கொடுத்த சாரா என்கிற டாக்டர் மட்டும் இல்லையென்றால், இன்றைக்குத் தான் இங்கே நின்றுகொண்டு பேசியிருக்க முடியாது என்றார்; தான் கணக்குப் பாடத்தில் ரொம்ப வீக் என்றும், எஸ்.எஸ்.எல்.சி-யில் தேறவே மாட்டோம் என்று நினைத்திருந்தபோது, கணக்கில் சரியாக 25 மார்க் (அன்றைக்கு அதுவே பாஸ் மார்க்) எடுத்து பாஸ் செய்திருந்ததையும் குறிப்பிட்டவர், தன் பேப்பரைத் திருத்திய எந்த ஆசிரியரோ ஆசிரியையோ முகம் அறியாத தன் மீது இரக்கம் கொண்டு மார்க்குகளை அள்ளி வழங்கியிருக்காவிட்டால், தான் கல்லூரியில் சேர்ந்திருக்க முடியாது, அங்கே வருகை தந்த எம்.ஜி.ஆரைச் சந்தித்திருக்க முடியாது, அவர் மூலம் சினிமாவுக்கு வந்திருக்க முடியாது; எனவே, நான் இன்றைக்குப் பரவலாக அறியப்பட்டிருப்பதற்கு அந்த முகம் தெரியாத டீச்சரும் ஒரு காரணம் என்றார்.

அதீத தன்னடக்கமும் ஒருவகையான அகம்பாவம்தான் என்பது என் கருத்து. ஆனால், மகேந்திரனின் பேச்சில் தூய்மை இருந்தது; சத்தியம் இருந்தது. அவர் தன் தலைக்குப் பின்னால் ஒளிவட்டம் இருப்பதாக உண்மையிலேயே நினைத்துக் கொள்ளவில்லை; தான் ஆகச் சிறந்த படைப்பாளி என்பதான எண்ணம் எதுவும் அவர் தலைக்குள் ஏறவில்லை என்பது அவர் பேச்சிலிருந்து புலனாகியது.

இன்றைக்கு கேணி கூட்டத்துக்குப் போகவேண்டாம் என்று நினைத்தேன். ஆனால் போனேன். மனசுக்கு இதமாக இருந்தது. மகேந்திரன் என்கிற அந்த மகோன்னத கலைஞருக்கு நன்றி!
.