உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

கிரிக்கெட்டே உயிர்மூச்சு!

 


மன் லம்பா – மத்யமர் குழுவில் எத்தனை பேருக்கு இந்தப் பெயரை நினைவிருக்கிறது என்று கை தூக்குங்கள் பார்க்கலாம்!

ஆம்… 90-களில் பிரபலமாக இருந்த கிரிக்கெட் வீரர்தான். பேட்ஸ்மன் அடித்த ஒரு பந்து வேகமாகப் பறந்து வந்து நெற்றிப்பொட்டை பலமாகத் தாக்கியதில், அங்கேயே சுருண்டு விழுந்து, கோமாவில் கிடந்து, பரிதாபமாக உயிரைவிட்ட இந்தியக் கிரிக்கெட் வீரர் - எனக்குத் தெரிந்து இவர் ஒருவர்தான். அதனாலேயே இவர் பெயர் என் மனதில் அழுத்தமாகப் படிந்துவிட்டது.

அம்மா கிருஷ்ணாவுக்கு இவர் செல்லமாக ‘ராம்ஜி’. டெல்லியில் மீனாட்சி கார்டனில் வீடு. இவர் இறந்த அன்று ரசிகர்கள் துடிதுடித்துப்போய் ஆயிரக்கணக்கில் இவர் வீட்டின் முன் கூடிவிட்டார்கள். ‘He lived for cricket; He died for cricket’ என்று நகரெங்கும் கண்ணீர் போஸ்டர்கள், போர்டுகள்!

நண்பர்களின் கிரிக்கெட் குழுவுக்காக அடிக்கடி பங்களாதேஷ் சென்று ‘லீக்’ மேட்ச் ஆடுவது ரமன் லம்பாவின் வழக்கம். அப்படித்தான் 1998-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் டாக்கா நகருக்கு கிரிக்கெட் ஆடச் சென்றார். வழக்கமான சந்தோஷம் ஏனோ அந்த முறை ரமன் லம்பாவிடம் இல்லை. அதனால் அவர் தன் அம்மாவிடம் “அம்மா, நான் டாக்காவுக்குப் போகட்டுமா, வேண்டாமா?” என்று கிளம்பும் வரை திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டிருந்தார். டெல்லி ஏர்போர்ட்டில் விமானம் ஏறுவதற்குச் சற்று முன்பு வரைகூட செல்போன் மூலம் அம்மாவிடம் பேசி, இதே கேள்வியைக் கேட்டார்.

மேட்ச்சில், பேட்ஸ்மேனுக்கு அருகில் ஃபார்வர்டு ஷார்ட் லெக் பொசிஷனில் ஃபீல்டு செய்தார் ரமன் லம்பா. இங்கேதான் விதி விளையாடியது. வழக்கமாக ஹெல்மெட் அணிந்து விளையாடுபவர், அப்போது ஹெல்மெட் அணியாமல் ஃபீல்டு செய்தார். இத்தனைக்கும் அவரை ஹெல்மெட் அணியச் சொல்லி அறிவுறுத்தியிருக்கிறார்கள் சுற்றியிருந்தவர்கள். “இன்னும் மூன்று பந்துகள்தானே இருக்கு இந்த ஓவருக்கு… வேண்டாம், பார்த்துக் கொள்ளலாம்” என்று தவிர்த்துவிட்டார் ரமன். மெஹ்ரப் ஹுசைன் என்னும் இளம் பேட்ஸ்மேன் முழு வேகத்தில் ஒரு ஷாட் அடிக்க, அருகில் இருந்த ராமன் லம்பாவின் நெற்றிப்பொட்டில் பந்து படீரெனத் தாக்க, சுருண்டு விழுந்தார் ராமன். அவரை உடனடியாக ‘போஸ்ட் கிராஜுவேட் மருத்துவமனை’க்குக் கொண்டு சென்றார்கள். இரண்டு நாள் கோமாவில் கிடந்து, சிகிச்சை பலனின்றி, பிப்ரவரி 23-ம் தேதி காலமானார் ரமன் லம்பா. அப்போது அவருக்கு வயது 38-தான்.

ஐந்து வயதிலிருந்தே பேட் பிடித்தவர் ரமன். அவரின் குடும்பமே விளையாட்டு வீரர்கள் குடும்பம்தான். அண்ணன் ராஜேஷ் லம்பா கால்பந்து விளையாட்டு வீரர்; சகோதரி ரீட்டா மொயின் டென்னிஸ் வீராங்கனை.

ரமன் லம்பாவின் காதல் மனைவி கிம், அயர்லாந்தைச் சேர்ந்தவர். 1990-ம் ஆண்டு இருவரும் திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஜாஸ்மின், கம்ரான் என இரு குழந்தைகள். லம்பாவின் மரணத்துக்குப் பின், மனமுடைந்துபோன கிம் தன் குழந்தைகளோடு போர்ச்சுகல் நாட்டில் குடியேறிவிட்டார்.

கிரிக்கெட்டே உயிர்மூச்சு என வாழ்ந்தவர் ரமன் லம்பா. ஆனால், கிரிக்கெட் போர்டில் ஏற்பட்ட அரசியலால் இந்திய அணியில் அவருக்கு இடம் மறுக்கப்பட்டது. அதனால் மனம் வருந்தினாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் கடைசி வரை பல சின்னச் சின்ன போட்டிகளிலும், அதிகாரபூர்வமற்ற போட்டிகளிலும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு, கிரிக்கெட் ஆட்டத்திலேயே தன் வாழ்க்கையை முடித்துக்கொண்டுவிட்டார் ரமன் லம்பா.

ரமன் லம்பா பிறந்த தினம் இன்று.

 – 2.01.2021

0 comments: