உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

பெங்களூரு ராக்கெட்!

ச்சின் டெண்டுல்கர் அவரை ‘ஒன் டௌன் கிங்’ என்பார் செல்லமாக. அவரின் அற்புதமான தடுப்பாட்டம் காரணமாக ‘இந்தியப் பெருஞ்சுவர்’ என்று அவரைக் கொண்டாடுவார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

அவர் - 1996 ஏப்ரல் 3-ம் தேதி, சர்வதேச இந்திய அணிக்கான ஒருநாள் போட்டியில் களமிறங்கி, 2012 ஜனவரி 24-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற ‘ராகுல் டிராவிட்’.

சிருஷ்டி – பெங்களூர் இந்திரா நகரில் இருக்கும் ராகுல் பங்களாவின் பெயர். மத்தியப்பிரதேசம் இந்தூரில் பிறந்து, கர்நாடகா பெங்களூரில் வசித்தாலும், ராகுலின் அப்பா வழிக் குடும்பம் தஞ்சாவூரைச் சேர்ந்தது. ராகுலின் அப்பா சரத் டிராவிட் தமிழில் அவ்வளவு சுத்தமாகப் பேசுவார்.

சரத் டிராவிட்டின் தாத்தா தஞ்சாவூரில் கோயில் குருக்களாக இருந்தவர். அவரின் மந்திர உச்சாடனங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்கும். அதில் கவரப்பட்ட குவாலியர் பகுதி மராத்தியர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோயிலில் பணியாற்ற அவரை அழைத்துப் போய்விட்டார்கள். சரத் டிராவிட்டின் மனைவி மராத்தியப் பெண் என்றாலும், அவர் கழுத்தை அலங்கரிக்கும் திருமாங்கல்யம் தமிழ்ப் பாரம்பரியப்படி உருவாக்கப்பட்டதுதான். “நாங்கள் வடக்கில் வாழ்ந்தாலும், மனதளவில் இன்னும் தெற்கத்திக்காரர்கள், திராவிடர்களாகத்தான் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தத்தான் எங்கள் பெயரோடு ‘திராவிட்’ என்று சேர்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று பெருமையுடன் சொல்கிறார் சரத் டிராவிட்.

ராகுலின் பெரியப்பா கே.வி.டிராவிட்தான் இந்தக் குடும்பத்தில் கிரிக்கெட் ஆர்வத்தைத் தூண்டியவர். அப்பா சரத் டிராவிட்டும் பல்கலைக்கழக அளவில் கிரிக்கெட் ஆடியவர்தான்.

‘வேதம் ஜெய்சங்கர்’ என்பவர் கர்நாடகாவில் பிரபல ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட். ராகுல் டிராவிட் சிறு பையனாக இருந்த காலத்திலிருந்தே அவரைப் பற்றி நன்கு அறிந்தவர். அவர் ராகுல் டிராவிட்டின் சாதனைகள் மற்றும் விளையாட்டுப் பயணம் குறித்து ‘Rahul Dravid: A Biography’ என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் எழுதியுள்ளார். “ராகுலின் வெற்றிக்குக் காரணம் அவரது பொறுமையும் நிதானமும் எதற்கும் அலட்டிக்கொள்ளாத தன்மையுமே ஆகும். இடியே விழுந்தாலும், சற்றும் சலனம் காட்டாமல் நடந்துபோவார் டிராவிட்” என்று புகழ்மாலை சூட்டுகிறார் அவர்.  

“இன்றைய இளைஞர்களுக்கு ரோல் மாடல் ராகுல் டிராவிட். நாம் எல்லோரும் பின்பற்றவேண்டிய உதாரண புருஷர். கடின உழைப்புதான் வெற்றிக்கனியை ருசிக்க வைக்கும் என்ற உண்மையை நிரூபிக்கக் கிடைத்திருக்கிற சத்தியமான சாட்சிதான் ராகுல் டிராவிட்” என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் கிரிக்கெட் கிங் சச்சின் டெண்டுல்கர்.

ஆனாலும், தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக ஒருபோதும் எண்ணிக்கொண்டதில்லை ராகுல் டிராவிட்.

ஒருமுறை, தன் மகனை பெங்களூரில் நடந்த ஓர் அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார் டிராவிட். நீளமான க்யூ இருந்தது. இருந்தும், தன் பிரபலத்தைப் பயன்படுத்தி முதலில் உள்ளே சென்று பார்க்க முயலாமல், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து, தன் முறை வந்த பிறகே பார்த்துவிட்டு வந்தார்.

பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தபோது, தீர்மானமாக மறுத்துவிட்டார் டிராவிட். ‘விளையாட்டுத் துறையில் நான் செய்ய வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது; இப்போது டாக்டர் பட்டம் பெற நான் தகுதியானவன் அல்ல’ என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் டிராவிட், "தோல்வியைப் பற்றிப் பேச எனக்கு முழுத் தகுதியுள்ளது. அறுநூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், அவற்றில் 410 போட்டிகளில் நான் 50 ரன்களைத் தாண்டவில்லை'' என்று அப்போது வெளிப்படையாகவும், மிகுந்த தன்னடக்கத்துடனும் குறிப்பிட்டார்.

அதுதான் ராகுல் டிராவிட்! மிகச் சிறந்த தடுப்பாட்டம், தேர்ந்த ஆட்ட நுணுக்கம், வசீகரமான பேட்டிங் பாணி, மிகச் சிறந்த தலைமைப் பண்பு... இவை மட்டுமல்ல, இந்தத் தன்னடக்கமும் டிராவிட்டை உயரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது.

அந்த ‘பெங்களூர் ராக்கெட்’டின் 48-வது பிறந்த நாள் இன்று.

– 11.01.2021

 

0 comments: