உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, August 26, 2009

எங்கும் தமிழ்... எதிலும் தமிழ்..!

‘யாமறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவதெங்கும் காணோம்’ என்று பாரதி போல் என்னால் சொல்ல முடியாது. ஏனென்றால், பாரதிக்கு ஏழெட்டு மொழிகள் தெரிந்திருக்கும். எனக்குத் தமிழை விட்டால் வேறு நாதி இல்லை. இதை அங்கலாய்ப்புடன் சொல்கிற தொனியில் படிக்க வேண்டாம். ‘கடவுளை விட்டால் எனக்கு வேறு நாதியில்லை’ என்று ஒரு பக்தன் சொல்கிற தொனியில் படிக்கவும்.

தமிழ் தமிழ்தான்; தாய் தாய்தான்!

ஆனால், தமிழை ஏதோ தாங்கள்தான் தாங்குகிற மாதிரி சில அரசியல்வாதிகள் அவ்வப்போது கிளம்பி, சில ஸ்டண்ட் வேலைகளில் இறங்குகிறார்கள். (தமிழ்ப் படத்துக்குத் தமிழ்ப் பெயர் வைத்தால் வரிவிலக்கு என்று கலைஞர் மு.கருணாநிதி அறிவித்ததும் அப்படியான ஸ்டண்ட்தான். ஆனால், நாகேஷ் போடுகிற மாதிரி இது ஒரு காமெடியான ஸ்டண்ட்!) வேறு பரபரப்பான பிரச்னைகள் எதுவும் கிடைக்காதபோது, அவர்கள் இந்தத் தமிழாயுதத்தை ஏந்திக் கொள்கிறார்கள். ‘ஆஹா... பாரதியே சொல்லிவிட்டான், மெல்லத் தமிழினி சாகும் என்று’ எனத் தொண்டை கிழிய வறட்டுக் கூச்சல் போடுகிறார்கள்.

பாரதி உண்மையில் சொன்னது என்ன? ‘தமிழ்த் தாய்’ என்னும் தலைப்பில், ‘ஆதிசிவன் பெற்றுவிட்டான்...’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் சில வரிகளைக் கீழே கொடுத்துள்ளேன்.

இன்றொரு சொல்லினைக் கேட்டேன் - இனி
ஏது செய்வேன்? என தாருயிர் மக்காள்!
கொன்றிடல் போலொரு வார்த்தை - இங்கு
கூறத் தகாதவன் கூறினான் கண்டீர்!

"புத்தம் புதிய கலைகள் - பஞ்ச
பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும்
மெத்த வளருது மேற்கே - அந்த
மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை

சொல்லவும் கூடுவ தில்லை - அவை
சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை
மெல்லத் தமிழினிச் சாகும் - அந்த
மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்"

என்றந்தப் பேதை உரைத்தான் - ஆ!
இந்த வசையெனக் கெய்திட லாமோ?
சென்றிடுவீர் எட்டுத் திக்கும் - கலைச்
செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

தந்தை அருள்வலி யாலும் - இன்று
சார்ந்த புலவர் தவவலி யாலும்
இந்தப் பெரும்பழி தீரும் - புகழ்
ஏறிப் புவிமிசை என்றும் இருப்பேன்.

இதற்கு நான் தனியாகப் பதவுரை சொல்லத் தேவையில்லை. சரி, விஷயத்துக்கு வருகிறேன்.


1996-ல், கடைகளின் பெயர்ப் பலகைகளில் கட்டாயத் தமிழ்; ரயில் வண்டிகளின் பெயர்களைத் தமிழாக்கம் செய்தல் (எம்.ஜி.ஆரும் தமது ஆட்சியின்போது தன் தமிழ்ப் பற்றை வெளிக்காட்டும்பொருட்டு ஒரு கப்பலுக்குத் ‘தமிழ் அண்ணா’ என்று பெயர் வைத்து காமெடி ஸ்டண்ட் அடித்தார்!) எனத் தமிழ் மொழியை வளர்ப்பதில்(!) தடாலடியாக இறங்கினார், அன்றைய தமிழ் ஆட்சிமொழித்துறை அமைச்சராக இருந்த தமிழ்க்குடிமகன்.


அதையொட்டி அப்போது ஜூனியர்விகடனில் நக்கலாக நான் எழுதிய கட்டுரை கீழே:


லுவலக வேலையாக வெளிநாடு போனவன், சரியாக ஒரு வருடத்துக்குப் பிறகு இன்றுதான் சென்னை திரும்புகிறேன். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தேன்.


“ஐயா! தானியங்கி ஊர்தி வேணுங்களா?” என்றபடி அருகில் வந்து நின்றார் ஒருவர்.


“அப்படின்னா... டாக்ஸியாப்பா?” என்றேன் குழப்பத்தோடு.


“இல்லை ஐயா! அது வாடகை இயந்திர ரதம் ஆச்சுங்களே!” என்றவர் என் காதில் குனிந்து, “நம்மது ஆட்டோ ரிக்‌ஷாங்க. இங்கிலீஷ்ல சொன்னா எங்க ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்துடுவாங்க” என்று கிசுகிசுத்தார்.


ஏறிக் கொண்டேன். “அளக்கும் கருவிக்கு மேலே அஞ்சு பணம் போட்டுக் கொடுங்க” என்றார் தானியங்கி ஊர்தி ஓட்டுநர்.


வீட்டுக்கு வெறுங்கையுடன் போக வேண்டாமே என்று வழியில் ஒரு கடை முன் நிறுத்தச் சொன்னேன்.


“என்னங்க வேணும்? புகையிலைச் சுருளா, உலர்ந்த ரொட்டிப் பொட்டலமா?” என்றார் கடைக்காரர்.


“பிஸ்கட் பாக்கெட் இருந்தா கொடுங்க” என்றேன்.


“அதைத்தான் ஐயா, உலர்ந்த ரொட்டிப் பொட்டலம் என்றேன். கடைப் பெயர்களை மாத்திரமல்ல, கடையில் விற்கிற பொருள்களின் பெயர்களையும் தமிழில்தான் சொல்லி விற்க வேண்டும் என்பது உத்தரவு. இல்லேன்னா எங்க விற்பனை உரிமத்தை ரத்து செய்துடுவாங்க” என்றார் கடைக்காரர்.


“ஜூஸ் ஏதாவது இருக்குங்களா?” என்றேன், காய்ந்த உதடுகளை நாவால் ஈரப்படுத்திக்கொண்டு.


“பழரசம்ங்களா? கொஞ்சம் தள்ளிப்போனா ஒரு அங்காடி இருக்குங்க. அங்க கிடைக்கும். இங்க எங்கிட்ட வெறும் புட்டித் திரவம் மட்டும்தாங்க இருக்கு” என்றார்.


சற்றுத் தள்ளி ஒரு கடையின் முகப்பில், ‘சரவணாவின் வேக உணவு’ என்று பெயர்ப் பலகை தெரிந்தது. ‘இதுவாக இருக்குமோ’ என்று உள்ளே எட்டிப் பார்த்தேன். ஒரு பலகையில் ‘இன்றைய சிற்றுண்டி’ என்று எழுதி, ‘மாவுப் பணியாரம்’, ‘அப்ப வருக்கம்’ என்றெல்லாம் விநோத தின்பண்டங்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. தலைசுற்றிக் கிறுகிறுத்து, வெளியேறி நடந்தேன்.


அடுத்த கடையின் பெயர்ப் பலகையைப் பார்த்தேன். ‘இலக்குவன் அற்ப ஆகாரம் மற்றும் தேநீர் குடிசை’ என்று எழுதப்பட்டிருந்தது.


உள்ளே நுழைந்து, “அற்ப ஆகாரம் என்னங்கய்யா இருக்கு?” என்று விசாரித்தேன்.


“வெண்ணெய் ரொட்டி, இனிப்பு ரொட்டி, பழக்கூழ்... என்ன வேணும் சொல்லுங்க?”


“பழரசம் இருக்குமா?”


“பழரசம் பக்கத்துக் கடை. இங்கே வெறும் கொட்டைவடிநீரும், இலைவடிநீரும் மட்டும்தான் கிடைக்கும்” என்றார் டீ மாஸ்டர். அதாவது, தேநீர் தலைவர்.


பக்கத்துக் கடை - ‘கதிர் குழம்பியகம்’.


“என்ன இருக்கு?” - பயந்த குரலில் விசாரித்தேன்.


“எல்லாம் இருக்குங்க. என்ன வேணும், சதைப்பற்றுப் பழமா, சர்க்கரைநாரத்தையா?”


எனக்குத் தலையே வெடித்துவிடும் போலிருந்தது.


“அது வேண்டாம்னா சொல்லுங்க... இனிப்புத் தயிர் போட்டுடலாம்!”


ஒரு வேகத்தில், அது என்ன பண்டம் என்று புரியாமலே, ஆனது ஆகட்டும் என்ற தைரியத்தில், ‘சரி’ என்று சொல்லிவிட்டேன். கடைசியில், அவர் கலந்து நீட்டியது... அட! நான் விரும்பிச் சாப்பிடும் லஸ்ஸி!


தானியங்கி ஊர்தியில் ஏறி அமர்ந்தேன். கடந்து சென்றது ஒரு பஸ். அதைத் தொடர்ந்து ஒரு கார். அவற்றின் நம்பர் பிளேட்டுகளில் ‘கக-அ’, ‘கஅ-யோ’ என்றெல்லாம் விசித்திரமாக எழுதப்பட்டிருந்தன.


“என்னங்கய்யா இது?” என்றேன் ஆட்டோ ஓட்டுநரிடம், மிரட்சியாக.


“அதுங்களா... பேருந்து, மகிழுந்து இதிலெல்லாம் வண்டி எண்களைத் தமிழில்தான் எழுதணும்னு உத்தரவு. நம்ம தானியங்கி ஊர்தியின் எண் பலகையிலும் தமிழில்தான் எழுதியிருக்கு. கவனிக்கலீங்களா?” என்றார்.


ஒருவழியாக வீடு வந்து சேர்ந்தேன். வீட்டு எண் 96 என ஆட்டோ டிரைவரிடம் சொல்லியிருந்ததால், அவரே சரியாக ௯௬ என்று கதவிலக்கம் எழுதப்பட்டிருந்த வீட்டின் முன் கொண்டு வந்து இறக்கிவிட்டார்.


உள்ளே என் மனைவி என் மகனின் கற்பலகையில், “௮-வும் ௨-வும் கூட்டினா ௧0. ௭-வும் ௩-வும் கூட்டினா என்ன வரும், சொல்லு?” என்று கணிதம் கற்பித்துக்கொண்டு இருந்தாள்.


எனக்குத் தலையே சுற்றி, ‘ஓ’வெனக் கத்த ஆரம்பித்தேன்.


என்னை உலுக்கி எழுப்பிய என் மனைவி, “ஏன் இப்படி நடு ராத்திரியில கத்தி டிஸ்டர்ப் பண்றீங்க?” என்று சிடுசிடுத்தாள்.


டிஸ்டர்ப்..? அப்பாடா!

.

Tuesday, August 25, 2009

நான் ஏன் கதை எழுதுவதில்லை?

‘நீங்கள் ஏன் இப்போதெல்லாம் சிறுகதைகளே எழுதுவதில்லை?’ என்று எனக்கு நெருங்கியவர்கள், வேண்டியவர்கள், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் கோபுலு, மாயா என்று என் மீது அக்கறை கொண்ட பெரியவர்கள் எல்லோரும் அவ்வப்போது கேட்பது வழக்கம். அப்போதெல்லாம், “ஆமாம், எழுதணும். எழுத வேண்டியதுதான். ஆபீஸ் வேலையே டைட்டா இருக்கு” என்று ஏதாவது மழுப்பலாகச் சொல்லிவிட்டுப் பேச்சை மாற்றிவிடுவேன். சமீபத்தில் இதே கேள்வியை, தொடர்ந்து என் வலைப்பூவை வாசித்து வரும் சகோதரி கிருபாநந்தினி கேட்டிருந்தார். நானும் வலைப்பூ எழுதி ரொம்ப நாளாகிவிட்டதா, சரிதான் என்று அந்தக் கேள்விக்கான பதிலாகவே இதை எழுதுகிறேன்.

இனி, நான் சிறுகதை எழுதாமைக்கான காரணங்கள்:

1) சிறுகதை எழுதுவதற்கு ஆர்வம் மிக முக்கியம். நான் சிறுகதை எழுதத் தொடங்கிய காலத்தில் (1978) எனக்குப் படிப்பும் இல்லை; வேலையும் இல்லை. தண்டச் சோறாகத் திரிந்துகொண்டு இருந்தேன். பொழுது போகவில்லை. எதையாவது கிறுக்குவோமே என்று எழுதத் தொடங்கினேன். நிஜமாக நடந்த ஒரு சம்பவத்தைச் சிறுகதையாக்கி ‘கரிநாக்கு’ என்னும் தலைப்பில் ‘கல்கி’ பத்திரிகைக்கு அனுப்பி வைத்தேன். அது பிரசுரம் ஆகுமென்று எனக்குக் கொஞ்சமும் நம்பிக்கையில்லை. காரணம், என் எழுத்தின் மீதான அவநம்பிக்கை அல்ல. பத்திரிகையில் வேலை செய்பவர்களேதான் கதைகளையும் எழுதுவார்கள் என்று நான் எண்ணிக்கொண்டு இருந்த காலம் அது. ஆனால் அதிசயமாக, கதையை நான் அனுப்பி வைத்த அடுத்த இருபதாவது நாள் அது கல்கியில் பிரசுரமாகி, வீட்டுக்குப் புத்தகம் வந்தது.

முதல் முயற்சியே வெற்றியாக அமைந்ததில் ஏக நம்பிக்கை பிறக்க, நானும் உற்சாகமாகி தொடர்ந்து எழுதத் தொடங்கினேன். ஆனந்த விகடன், கல்கி, குங்குமம், தினமணி கதிர், சாவி என ஐந்து பத்திரிகைகளிலும் அடுத்தடுத்து என் சிறுகதைகள் மாதத்துக்கு ஒன்றாக வெளியாகின. (ஏனோ குமுதத்துக்கு மட்டும் நான் என் படைப்புகளை அனுப்பி வைக்கவேயில்லை.) நான் முதலில் எழுதிய பன்னிரண்டு சிறுகதைகளுமே திருப்பியனுப்பப்படாமல் பரிசீலனையில் தேர்வாகிப் பிரசுரம் ஆனதில் தலைகால் புரியவில்லை எனக்கு.

பத்திரிகையில் பணியாற்ற இந்த ஒரு தகுதியே போதும் என்று எண்ணிக்கொண்டு, சென்னைக்குக் கிளம்பி வந்து, பத்திரிகை வேலைக்கு முயன்றதில் மூக்குடைபட்டு, பின்பு கிடைத்த வேலைகளை எல்லாம் செய்து, பின்னர் தங்கையின் திருமணத்துக்காக 1981-ல் விழுப்புரம் போனவன், அதன்பின் கொஞ்ச நாள் பாண்டிச்சேரியில் அஞ்ஞாதவாசம் செய்து... அது பெரிய கதை!

திரும்பவும் 1985-ல் சென்னை வந்தவன், முதலில் ஆம்ப்ரோ பிஸ்கட் கம்பெனியில் பணியாற்றி, பின்னர் ‘சாவி’ வார இதழில் சேர்ந்தேன். நேர்காணலின்போது சாவி சாரிடம் நான் கதை எழுதியிருப்பதைப் பற்றிச் சொல்ல, “அது என்ன பெரிய விஷயம்! வீட்டுக்கு ஒரு பொம்மனாட்டி கதை எழுதறா. பத்திரிகையாளன் ஆகணும். அதுதான் சிறப்பு. பத்திரிகையாளனாக இருக்கிறவனால் அற்புதமான கதை எழுத முடியும். ஆனா, எழுத்தாளனாக இருக்கிறவனெல்லாம் நல்ல பத்திரிகையாளனாக முடியாது!” என்றார்.

அந்த நிமிடத்திலிருந்தே கதை எழுதுவதில் இருந்த ஆர்வம் எனக்குப் புஸ்ஸென்று குறைந்து போய்விட்டது என்பதுதான் நிஜம்!

2) அதன்பின், ‘சாவி’ வார இதழில் நான் பணியாற்றிய ஒன்பது வருட காலமும் சராசரியாக மூன்று வாரத்துக்கு ஒருமுறை அதில் நான் சிறுகதை எழுதியிருக்கிறேன். ஆனால், எதுவும் என் சொந்தப் பெயரில் அல்ல; ஏகப்பட்ட புனைபெயர்களில்! (அவற்றைப் புனைபெயர்கள் என்று சொல்வது கூடச் சரியில்லை. புனைபெயர்கள் என்றால், அதில் ஒரு தனித்துவம் இருக்க வேண்டும். இஷ்டத்துக்கு கோபி, வைஷ்ணவி என்று மனதுக்குத் தோன்றிய பெயர்களில் எல்லாம் எழுதினால் அவை புனைபெயர்களா என்ன?)

அதற்கு மூன்று காரணங்கள். சாவி இதழின் மொத்தப் பொறுப்பையும் சாவி சார் என்னையே நம்பி ஒப்படைத்திருந்ததால், அதைப் பயன்படுத்திக்கொண்டு நான் என்னுடைய கதைகளை வெளியிட்டுக் கொள்கிறேன் என்பதாக அவர் என்னைத் தப்பாக நினைக்கக்கூடாது என்பது ஒரு காரணம். தவிர நானே சிறுகதை எழுதி, அதை நானே வெளியிட்டு, நானே என் பெயரைப் போட்டுக்கொள்ளக் கூச்சப்பட்டதும் ஒரு காரணம்.

இரண்டாவது, ஒரே எழுத்தாளரின் கதைகள் திரும்பத் திரும்ப வந்தால் வாசகர்களுக்குச் சலிப்பாக இருக்கிறதோ இல்லையோ, மற்ற வளரும் எழுத்தாளர்கள் அத்தனை பேருக்கும் கொஞ்சம் கடுப்பாக இருக்கும். அந்தப் பத்திரிகை மீது எரிச்சல் உண்டாகும். இதைத் தவிர்க்கவும் நான் என் பெயரைத் தவிர்த்தேன்.

மூன்றாவது, பரிசீலனைக்கு வருகிற சிறுகதைகளில் சரியாக எதுவும் தேறாத பட்சத்தில் அவசரமாக தொலைபேசியில் ஓவியர் ஜெயராஜிடமோ, அரஸ்ஸிடமோ ஒரு ஸீனைச் சொல்லிப் படம் வரைந்து தரும்படி கேட்டுவிட்டு, இரவோடு இரவாக ஒரு கதையை எழுதி, மறுநாள் அதை அச்சுக்கு அனுப்பி, ஃபாரத்தில் சேர்ப்பது எனக்குச் சௌகரியமாக இருந்தது. எனவே, சிறுகதை எழுதுவது என்பது எனக்கு ஒரு பெரிய விஷயமாகத் தெரியவில்லை. அதற்கு என் பெயரைப் போட்டுக்கொள்வது ஒரு பெருமையாகவும் தோன்றவில்லை.

ஆக, பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்ததிலிருந்தே, அச்சில் என் பெயரைப் பார்க்கிறபோது உண்டாகிற பரவசமும் சந்தோஷமும் தொலைந்துபோய்விட்டது. நான் சிறுகதை எழுத ஆர்வப்படாததற்கு இதுவும் ஒரு காரணம்.

3) ஆரம்பக் காலங்களில், நான் ஒரு சிறுகதையை எழுதி முடித்ததுமே, (பெரும்பாலும் இரவு 11 மணிக்குதான் எழுதத் தொடங்குவது வழக்கம். எழுதி முடிக்கும்போது நடு இரவு 2 மணியானாலும் சரி, விடியற்காலை 4 மணியானாலும் சரி) உடனுக்குடன் என் கையெழுத்துப் பிரதியை ஆர்வத்தோடு வாங்கிப் படித்து மகிழ்ந்தவர் என் அப்பா. அவர் கொடுத்த ஊக்கத்திலும் உற்சாகத்திலும்தான் நான் மேலும் மேலும் எழுத வேண்டும் என்கிற எண்ணம் உண்டாயிற்று. சாவியில் சேர்ந்த பின்னர் நான் சென்னை வந்து செட்டிலாகிவிட்ட படியால், சிறுகதை எழுதுவதை என் பத்திரிகை வேலைகளில் ஒன்றாகத்தான் செய்தேனே தவிர, என் சுய சந்தோஷத்துக்காக எழுதவேயில்லை. தவிர, என் கதையை அப்பா போன்று உடனுக்குடன் படித்து சந்தோஷப்படுவாரும் ஊக்குவிப்பாரும் அருகில் இல்லாததும் ஒரு காரணம்.

4) ஆனந்த விகடனில் பணியில் சேர்ந்த புதிதில், சில கதைகள் எழுதியிருக்கிறேன். ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் தந்த ஊக்கம் பெரிது. ஆனால், சாவி பத்திரிகை போல் இங்கே நான்தான் கதை எழுத வேண்டும் என்கிற நிர்பந்தம் கிடையாது. ஏனென்றால், கதைக்கு இங்கு பஞ்சமே இல்லை. இங்கே பரிசீலனைக்கு வந்த, வந்துகொண்டிருக்கும் சிறுகதைகளின் எண்ணிக்கை சாவி இதழுக்கு வந்ததைப் போல இருபது மடங்கு. தவிர, முன்பே சொன்னது போல ஆர்வமோ, பத்திரிகையில் என் பெயரைப் பார்க்கிற பரவசமோ இல்லை.

5) நினைத்தால் ஒரு சிறுகதை எழுதிவிடமுடியும் என்றால், எழுதுவதில் எப்படி ஆர்வம் பிறக்கும்? அதற்காகத்தான் சிறப்புச் சிறுகதைகளை மட்டும் எழுதுவது என்று வைத்துக்கொண்டேன். 9.09.99 தேதியிட்ட விகடன் இதழ் என்று நினைக்கிறேன்; ‘இதழ் தேதியில் ஒன்பது சிறப்பாக இருக்கிறது. இதற்குப் பொருத்தமாக ஏதேனும் சிறுகதை எழுத முடியுமா?’ என்று கேட்டார் திரு.கண்ணன். (இவர் விகடனின் ரா.கண்ணன்). கதையின் தலைப்பு, அதில் வருகிற கதாபாத்திரங்களின் பெயர்கள், அதில் இடம்பெறுகிற கற்பனை சினிமா பெயர்கள் எல்லாம் ஒன்பது எழுத்தில் அமையும்படி ஒரு கதை எழுதினேன். (அதில் நான் எழுதியிருந்த ‘வெற்றிக் கொடி கட்டு’ என்னும் தலைப்பிலேயே பின்னர் இயக்குநர் சேரன் ஒரு படம் எடுத்து வெளியிட்டது யதேச்சையாய் அமைந்த சுவாரசியம்.)

அதன்பின், சினிமா சிறப்பிதழ் ஒன்று தயாரிக்கும்போது திரு. கண்ணன் சொல்லி, சினிமா தலைப்புகளை வைத்தே ஒரு சிறுகதை எழுதினேன். அந்தக் கதையில் மொத்தம் 150 தலைப்புகளுக்கு மேல் இடம்பெற்றிருந்தன.

பின்பு, ‘ஏடாகூட கதைகள்’ ஒன்றிரண்டு எழுதிக் காட்டவும், ஆசிரியர் பாலசுப்பிரமணியன் அவர்கள் உற்சாகமாகி, ஊக்குவித்ததில் எட்டு கதைகள் அப்படி எழுதினேன். சாதாரண கதை எழுதுவது போலில்லாமல், ஒவ்வொன்றிலும் ஒரு விநோதம் செய்ய வேண்டிய சவால் எனக்கு இருந்தது.

பின்னர் ஒருசமயம், திரு. கண்ணன் எட்டு விஷுவல் டேஸ்ட் புகைப்படங்களைக் காட்டி, “இவற்றுக்குப் பொருத்தமாக ஒரு பக்கச் சிறுகதைகள் எழுத முடியுமா?” என்று கேட்டபோது, எழுதினேன். கடைசி கதையின் அடியில் மட்டும் சின்னதாக என் பெயரைப் போட்டுக் கொண்டேன்.

பெண்களை மட்டம் தட்டும் பொன்மொழிகளைத் திரித்து, (உதாரணமாக, பெண்ணிடம் ரகசியம் சொல்லாதே என்பதை ‘பெண்ணிடம் ரகசியம் சொல்’ என்று பெண்களுக்கு ஆதரவாக மாற்றித் தலைப்பிட்டு) அவற்றுக்குப் பொருத்தமாகச் சிறுகதைகள் எழுதி, ‘அவள் விகடன்’ பத்திரிகையில் ‘பெண்மொழிக் கதைகள்’ என்று எழுதி வந்தேன்.

‘ஒரு நிமிடத்தில் படித்து முடிக்கிற மாதிரியான மிகக் குட்டியூண்டு கதைகள் எழுத முடியுமா?’ என்று கேட்டார் திரு.கண்ணன். அப்படி முதல் செட்டாக நான் எழுதிய எட்டு ஒரு நிமிடக் கதைகள் விகடனில் வெளியாகின. அதற்கு ஏராளமான வரவேற்பு. அதைத் தொடர்ந்து வாசகர்களும் எழுத்தாளர்களாக மாறி, எக்கச்சக்கமாக ஒரு நிமிடக் கதைகள் எழுதி அசத்திவிட்டார்கள். இந்தக் குட்டிக் கதை ஜுரம் பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் போல வேகமாகப் பரவி, ‘அரை நிமிடக் கதைகள்’, ’கால் நிமிடக் கதைகள்’ என்றெல்லாம் இதர பத்திரிகைகளிலும் வெளியாகத் தொடங்கிவிட்டது.

ஆக, இப்படி ஏதேனும் ஒரு சவால் இருந்தால் மட்டுமே எனக்குச் சிறுகதை எழுதத் தோன்றுகிறது. வெறுமே ஒரு சிறுகதை எழுத வேண்டும் என்ற எண்ணமே ஏற்படவில்லை.

6) இன்னொரு முக்கியமான காரணமும் உண்டு. விகடனின் பரிசீலனைக்கு வரும் ஏராளமான கதைகளைப் படித்துப் பரிசீலிக்கும் பொறுப்பு எனக்கு இருப்பதால், நான் வாரத்துக்கு எப்படியும் இருபது, இருபத்தைந்து கைப்பிரதிகளையாவது முழுமையாகப் படிக்கிறேன். அவற்றில் ஒன்றிரண்டு பரிசீலனையில் தேறலாம். அல்லது, அத்தனையுமே தேர்ந்தெடுக்கப்படாமல் போகலாம். சில கதைகள் எழுதப்பட்ட விதமே சரியில்லாமல், எடிட் செய்து திருத்தியமைக்கக்கூட முடியாமல் இருக்கும். ஆனால், மையக் கரு அற்புதமாக இருக்கும்; இந்தக் கதை தேர்ந்தெடுக்கப்படாமல் திருப்பியனுப்பப்பட்டாலும், அந்தக் கரு என் மனதின் ஆழத்தில் போய்ப் பதிந்துவிட வாய்ப்புண்டு. பிறகு எப்போதாவது நான் சிறுகதை எழுதினால், என்னையும் அறியாமல் அந்தக் கருவை மையப்படுத்திக் கதை எழுதிவிட வாய்ப்புண்டு. இந்தத் தவறு நேர்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே நான் சிறுகதை எழுதுவது இல்லை.

திரு. கண்ணன் புகைப்படங்களைக் கொடுத்துக் கதைகள் எழுதச் சொன்னபோது, நான் எழுதிய ஒரு கதையின் மையக் கரு இப்படித்தான் வேறு ஒரு எழுத்தாளர் விகடனின் பரிசீலனைக்கு அனுப்பி வைத்திருந்த, நான் படித்து நிராகரித்த கதை ஒன்றின் கருவாக என்னையுமறியாமல் அமைந்துவிட்டது. அந்த எழுத்தாளர் கடிதம் எழுதியதும் நான் உண்மையிலேயே கூசிக் குறுகிப் போனேன். என் தவற்றை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்டு அவருக்குக் கடிதம் எழுதிப் போட்டேன்.

அதன்பின் நான் சிறுகதை எழுதுவதையே விட்டுவிட்டேன்.

7) இதெல்லாவற்றையும்விட இப்போது எனக்குத் தோன்றுகிற ஒரு காரணமும் முக்கியமானதுதான். பயம்! இன்றைக்குச் சிறுகதை எழுதுகிற இளைய தலைமுறையின் எழுத்தின் வேகம் அபாரமாக இருக்கிறது. பின்னிப் பெடலெடுக்கிறார்கள். எங்கள் விகடன் அலுவலகத்திலேயே அற்புதமான இளம் எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். ராஜு முருகன், பாரதி தம்பி, கார்த்திகேயன்... இன்னும் பலரின் எழுத்துக்கள் என்னைப் பிரமிப்பில் ஆழ்த்துகின்றன. விகடனின் பொறுப்பாசிரியராக இருந்துகொண்டு நான் கதை எழுதினால், அது இவர்களின் கதைகளைவிட ஒரு படி மேலாக இருக்க வேண்டும் அல்லவா! இருக்குமா? இளைய தலைமுறையின் வேகத்தோடு என்னால் போட்டி போட முடியுமா? எல்லோராலும் சுஜாதா ஆக முடியுமா என்ன?
.

Sunday, August 16, 2009

நா ஒரு மாதிரி! (பாகம் 2)

சென்ற பதிவின் தொடர்ச்சி...கிரீஸ் கறை, ஆயில் கறை லட்சணங்கள் உள்ள எனது காக்கிச் சீருடையை மாட்டிக்கொண்டு ஆயுத சகிதம் கிளம்பியபோதுதான் அந்தத் தபால் என் முன் விசிறப்பட்டது. புக் போஸ்ட்!

எடுத்துப் பிரித்தேன். சுஜா என்கிற சுஜாதாவுக்கும், ராகி என்கிற ராதாகிருஷ்ணனுக்கும் சுபயோக சுபதினம் பார்த்து நடத்தி வைக்கப்படுகிற கல்யாணத்துக்கான அழைப்பிதழ்! ஒன்று அடிக்கவே ஒன்பது ரூபாய் ஆகியிருக்கும்போல, வாசனாதி திரவியங்களைப் பூசிக்கொண்டு வந்த மகா ஆடம்பர அழைப்பிதழ்!

பிரிந்து வந்த ஆறே மாத காலத்துக்குள் மாமாவிடமிருந்து இப்படி ஓர் அழைப்பு! கிழித்து எறிவேன் என்று அம்மா தப்பாய் யூகித்திருக்கலாம். “திங்கள்கிழமை கல்யாணமாம். ஓனரிடம் ஒரு நாள் லீவு சொல்லிவிட்டு வந்துவிடுகிறேன். இரண்டு பேருமாய்ப் போய்விட்டு வரலாம்” என்றதும் அதிசயித்துப் போனாள்.

ராகி என்கிற ராதாகிருஷ்ணன் யாரென்று நான் மூளையைக் கசக்கிக் கொண்டேன். எனக்குத் தெரிந்து இரண்டு ராதாகிருஷ்ணன்கள். ஒருவன் மாமியின் அண்ணார் மகன். ஃபாரின் ரிட்டர்ன் என்று அடிக்கடி பீற்றிக் கொள்கிறவன். இன்னொருவன் மாமியின் உடன்பிறப்பு. பணம் காய்க்கும் மரம் இவன் வீட்டுத் தோட்டத்தில் இருக்கிறதோ என்று எனக்கு ஒரு சந்தேகம். இருவரில் இவன் எந்த ராகியோ? யாராய் வேண்டுமானாலும் இருந்துவிட்டுப் போகட்டும். எப்படியும் அவன் சந்தேகமில்லாமல் மச்சமுள்ள ஆசாமிதான்.

இன்றைக்கு நான் ஒரு மெக்கானிக். கார் ஒன்றை நட்டு நட்டாய்க் கழற்றிப் போட்டுப் பூட்டத் தெரிந்த கில்லாடி மெக்கானிக். வீணாய் சுஜாவை எண்ணி எண்ணி மருகிக்கொண்டு இருப்பதை விடுத்து, என் தகுதிக்கேற்ற பெண் இருக்கிறாளா என்று பார்ப்பது உசிதம் என்கிற தீர்மானத்துக்கு நான் எப்போதோ வந்துவிட்டிருந்தேன்.

ண்டபம் மகா பிரமாண்டமாய் இருந்தது. வெளியே கார்ப் படை. நாயனம் வாசித்தவரை டி.வி-யில் பார்த்த ஞாபகம். பார்க்குமிடமெல்லாம் பட்டு பளிச்சிட்டது. வீடியோ காமிரா சகிதம் ஒரு சுறுசுறுப்பாளர் குறுக்கே நெடுக்கே வயர்களை இழுத்தபடி ஓடிக்கொண்டு இருந்தார். கவலை கிலோ என்ன விலை என்று கேட்கிற முகங்கள். பரிதாப ஜீவன்களாய் நானும் அம்மாவும். “யார் இதுங்களை உள்ளே விட்டது?” என்று யாரும் அதட்டல் போடாமல் இருக்க வேண்டுமே என்று கவலை வந்தது.

மாமா பார்த்ததும், “வா” என்று ஒற்றை எழுத்தில் விளித்தார். தொடர்ந்து, “டே தத்தி! மசமசன்னு நிக்காம, வர்றவங்களைப் பார்த்து உபசரி. டிபனுக்குக் கூட்டிட்டுப் போ. காபி கேக்கறவங்களுக்குக் கொண்டு குடு. ஓடு, ஓடு!” என்று விரட்டினார். அகன்றார்.

நான் வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சுறுசுறுப்பானேன். பம்பரமாய்ச் சுழன்றேன்.

முகூர்த்த நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது. யதேச்சையான ஒரு கணத்தில், மாலையும் கழுத்துமாய் மணையில் உட்கார்ந்திருந்த சுஜாவின் பார்வையும் என் பார்வையும் ஒருமுறை மோதிக் கொண்டன. அதற்குள் ஏராள கற்பனைகள்.

தலையை உலுப்பிக்கொண்டு மணமகனைத் தேடினேன்.

சற்று எட்டத்தில் ஒரு ரகளை உருவாகிக்கொண்டு இருப்பது புலப்பட்டது. அணுகியதில் வழக்கமான வைரத் தோடு தகராறு. மாமா அவகாசம் கேட்டாராம். வுட்-பி மாப்பிள்ளை சுருக்கென்று தைக்கிற மாதிரி ஏதோ சொல்லிவிட்டானாம். காலரைப் பிடித்துவிட்டார். நான் அந்த ‘ராகி’ என்கிற ராதாகிருஷ்ணனைப் பார்த்தேன். மாமியின் தம்பிதான்!

சூழ்நிலையின் விபரீதம் புரிந்து சுற்றம் அனைத்தும் எழுந்து நிற்க, சலசலப்பு குறைந்து, அமைதியின் கனம் அதிகரித்தது.

புரோகிதர்களின் மந்திரம் தடைப்பட்டது. சுஜா எழுந்து நின்றாள். நாயனம் தரையில் செங்குத்தாக நின்றது. மேளம் மௌனம் காத்தது. வீடியோ சுழல்வது நின்றது. பானகம் வழங்குதல் தற்காலிகமாய் ஒத்திவைக்கப்பட்டது. அனைவரின் கவனமும் கலவரப் பகுதிக்குத் தாவிற்று.

மாமா ஆவேசப்பட்டார். மைத்துனனை உதறித் தள்ளினார். பெருங்குரலெடுத்து இரைந்தார்.

“இடியட்! உறவுன்னு மதிச்சுதான் உனக்கு என் பொண்ணைக் கட்டித் தர சம்மதிச்சேன். பட் நௌ, யூ ப்ரூவ் - யூ ஆர் அன் இண்டீசன்ட் மேனர்லெஸ் ஸ்கௌண்ட்ரல்! கெட் அவுட் ஃப்ரம் திஸ் ப்ளேஸ்! நீ இல்லேன்னா இந்தக் கல்யாணம் ஒண்ணும் நின்னு போயிடாது. மைண்ட் தட்! உன்னைவிட ஒரு கழுதைக்கு எம் பொண்ணை சந்தோஷமா கட்டி வைப்பேன். பார்க்கறியா, நடத்திக் காட்டட்டுமா? சேலஞ்ச்?” என்று அவன் முகத்துக்கு எதிரே விரலை ஆட்டி அறைகூவல் விடுத்தார்.

தொடர்ந்து, “டே தத்தி! இங்கே வாடா!” என்று அதிர்ந்தார். “போ, போய் மணையில உட்காரு. போ! நீதான் இப்போ மாப்பிள்ளை. நடத்தியே காமிச்சுடறேன். அப்பத்தான் இந்தப் பயல்களுக்கு நான் யாருன்னு புரியும்!” என்று சிம்மமாக முழங்கினார்.

குபுக்கென்று என் மனசுக்குள் ஒரு பிரளயம் உண்டாயிற்று. மூளையின் லட்சக்கணக்கான ஞாபகச் செல்களில் சிற்சில வெடித்தன. நரம்புகளில் அதிர்வு உற்பத்தியானது. இதயம் தடதடத்தது.

“மாமா” என்றேன்.

“என்னடா இன்னும் மசமசன்னு நின்னுக்கிட்டு? முதல்ல சொன்னதைச் செய், போ! அப்புறம் பேசலாம்” என்று வெடித்தார்.

“மன்னிச்சுக்குங்க மாமா! உங்க பெண்ணை ஏத்துக்க நான் தயாரில்லை!”

மண்டபம் மொத்தமும் நிசப்தம் உறைந்தது. மாமா ‘தட்’டென்று அதிர்ந்து போனவராய், “காரணம்?” என்றார் புருவம் சுழித்து.

“அது உங்களுக்கு அநாவசியம்னு நினைக்கிறேன். அம்மா, வாங்க போகலாம்! மாமா, சுஜாவுக்கு அடுத்த முறை கல்யாணம் பண்றப்பவும் மறக்காம எனக்கு அழைப்பு அனுப்புங்க. பந்தி உபசரிப்பு செய்யக் கட்டாயம் வரேன். வரட்டுமா?” என்று சொல்லிவிட்டு, அம்மாவை அழைத்துக்கொண்டு விருட்டென்று வெளியேறினேன்.

எனக்கு என்ன ஆயிற்று என்கிறீர்களா?

நான்தான் ஆரம்பத்திலேயே சொன்னேனே சார்... நான் ஒரு மாதிரி! கிராக்.

1.1.88 தேதியிட்ட மோனா மாத இதழில் வெளியான கதை.

நா ஒரு மாதிரி!

மரர் சி.ஆர்.கண்ணன் பற்றிய ஒரு பதிவில், மோனா நாவலில் துண்டு விழுந்த பக்கங்களைப் பூர்த்தி செய்வதற்காக, அச்சகத்திலேயே உட்கார்ந்து விடிய விடிய ஒரு சிறுகதையை எழுதிப் புத்தகத்தை முழுமையாக்கியதாகக் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கதை இங்கே...நா ஒரு மாதிரி!

நா ஒரு மாதிரி. கிராக். மாமாவினால் செல்லமாய் ‘தத்தி’ என்றும், மாமியினால் வாஞ்சையுடன் ‘தண்டச் சோறு’ என்றும் விளிக்கப்படுகிறவன். அவ்வப்போது சுஜா என் மீது எய்யும் பரிதாபப் பார்வைக்குக் காதல் முலாம் பூசி, மனசுக்குள் குளிர்ந்து போகிறவன். ஒரு பௌர்ணமி நாளில் - சந்தியா காலத்தில் - மொட்டை மாடியில் அமர்ந்துகொண்டு, தென்னங்கீற்றுகளூடே வெட்டி வெட்டித் தென்படுகிற நிலவின் அழகைக் கண்களால் பருகியபடி, ‘சுஜா, என் பிரிய சகியே!’ என்று, சுஜாவின் கைகளில் தருவதற்காகப் புதுக்கவிதை எழுத முயற்சித்து, மேலே வரிகள் வராமல் தோற்றவன்.

சுஜா, என் மாமா பெண். ‘சுஜா ஹோம் அப்ளையன்ஸஸ்’ நிறுவனத்துக்கும், பெசன்ட் நகரில் இருக்கிற ‘சுஜா பியூட்டி பார்ல’ருக்கும், இருபது லட்ச ரூபாய் பெறுமானமுள்ள ஒரு ‘போஷ்’ பங்களாவுக்கும், இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் நிரந்தரமாய் முகாமிட்டிருக்கும் ஐந்து லட்ச ரூபாய் தொகைக்கும் ஒரே செல்ல வாரிசு!

‘அதரங்களில் தேன் வைத்திருந்தாள்; கண்களில் காந்தம் வைத்திருந்தாள்; புஷ்டியான...’ என்றெல்லாம் நேர்முக வர்ணனைகள் கொடுத்து, எனக்கே எனக்கு மட்டுமேயான என் சுஜாவைக் கொச்சைப்படுத்த என் மனசு இடங் கொடுக்கவில்லையாதலால், சுருக்கமாக - அவளொரு ‘பிரம்மனின் மாஸ்டர்பீஸ்!’

பத்து வருஷங்களுக்கு முன்னால், உட்காருமிடக் கிழிசல்களுள்ள காக்கி அரை டிராயரும், வியர்வையில் தொப்பலாய் உடம்புடன் ஒட்டிக்கொண்டு இருந்த வெள்ளைக் கதர்ச் சட்டையுமாய், அம்மாவின் நிறம் மாறிப்போன சேலைத் தலைப்பின் கிழிசல் முடிச்சினை விரல்களால் உருட்டிக்கொண்டு நின்றிருந்தபோது எனக்கு இது தெரியவில்லை.

அதுவரை பார்த்தேயிராத நவீன உடையில் நின்றிருந்த அன்றைய ஒன்பது வயது சுஜா, என்னை விசித்திர ஜந்து போல் நோக்கினாள். அவள் பின்னால் வந்து நின்ற என் மாமா ‘ராப் பிச்சைக்காரர்கள் டியூட்டி டயத்தை மாற்றிக்கொண்டு விட்டார்களா, என்ன’ என்பது போல் ஒரு முகச் சுளிப்புப் பார்வையை எங்கள் மீது எறிந்தார். புதியவர்களைக் காணும் ஆவலில் சமையலறையிலிருந்து அவசரமாய் வெளிப்பட்ட மாமி, சட்டென்று முகம் மாறி, ‘வாங்கோ’ என்றாள் சன்னமாய் - வெகுவாய் துக்கித்து!

அம்மா கையிலிருந்த பையைத் திறந்தாள். வெள்ளை நிற யூரியா பையைப் பிரித்து நாலாய் அடித்ததில் மிச்சமிருந்த ஒரே பை அது. திறந்து, மந்தார இலையில் சுற்றிக்கொண்டு வந்திருந்த கனகாம்பரத்தை எடுத்து மாமியிடம் நீட்டினாள். நைந்துபோன நியூஸ்பேப்பரில் எண்ணெய்க் கறை தெரியக் கட்டிக்கொண்டு வந்திருந்த கைமுறுக்கை எடுத்து சுஜாவிடம் நீட்டினாள். அடுத்து, பை வைக்க இடம் தேடினாள்.

எதிரே, சினிமா செட்டுகளில் வருவது போல், நாலு படிகள் கடந்ததும் இரண்டாய் வகிர்ந்து, வளைந்து மேலேறி உயரே இணைகிற மாடிப்படிகள். படிகளின்மீது போர்த்தப்பட்டிருந்த கம்பளத்தில் சிவப்பு டாலடித்தது.

படிகள் பிரிகிற இடத்தில், சுவரில், நிஜத்தைப் போல் மூன்று மடங்கு பெரிதாக்கப்பட்ட சுஜா! படிகள் வளைகிற இடங்களில் புன்னகை பூக்கிற சுஜாக்கள்!

அம்மா பிரமித்துத் திரும்பினாள். கோணலாய், சரியாகச் செய்யப்படாமல் ஒரு மேஜை. பியானோ என்று பின்னாளில் தெரிந்து கொண்டேன். கர்ட்டன்கள் அழகுற அசைந்தவண்ணம் இருந்த ஜன்னல் திட்டில், கலையம்சம் நிறைந்த பூ ஜாடிகளில், வாடாத மலர்கள்.

வியூகம் அமைத்திருந்த சோபா செட்டுகளுக்கு மத்தியிலிருந்த டீப்பாயை, பை வைக்கத் தோதான இடமாக இருக்குமா என்று ஆராய்ந்தாள். மேலே நவ நாகரிகமான ஈகிள் ஃப்ளாஸ்க், பெரிய சைஸ். சுற்றிலும் வித விதமாய் டிஸைன்கள் போடப்பட்ட கப்புகள், சாஸர்கள். அடித்தட்டில் வழவழாப் புத்தகங்கள்.

அம்மா ஊருக்குக் கிளம்புகிறவரை அந்தப் பையைக் கையிலேயே வைத்திருந்தாள். சீக்கிரமே கிளம்பிவிட்டாள்.

போகிறபோது கடைசி முறையாய்த் தன் குச்சிக் கைகளால் என்னைப் பற்றி இழுத்துப் போய் மாமா வசம் ஒப்புவித்து, ‘இவன் இனி உன் மகன்! இவனை வளர்த்து ஆளாக்குவது இனி உன் பொறுப்பு! இவன் நல்லது பொல்லாததுக்கெல்லாம் இனி நீயே ஜவாப்!’ என்று, அடுத்த காட்சியில் மண்டையைப் போடவிருக்கிற கதாநாயகியின் அம்மா மாதிரி சொல்லிவிட்டுப் போனாள்.

“ஜாக்கிரதைடா! உடம்பைப் பார்த்துக்கோ. ஒழுங்காப் படி. ஊர் சுத்தாதே! மாமா, மாமி சொல்படி கேட்டு நட! அவங்களுக்குக் கூடமாட ஒத்தாசையா இரு. சுஜாவுக்குக் கணக்கெல்லாம் சொல்லிக் கொடு. அவளும் நம்ப ஜெயா மாதிரிதான். சமர்த்தா இருக்கியா? நான் போயிட்டு வரட்டுமா?” என்று என் முதுகைத் தடவி, தோளைத் தடவி, முகத்தை வருடி விடைபெற்ற அம்மாவைத் திரும்பிக்கூடப் பார்க்காமல், ‘டிர்ர்ரிங்’ அடித்த அந்த இள நீல நிறப் பொருளை மாமா தொட்டுத் தூக்கிக் காதில் வைத்துப் பேசுகிற அழகில் பிரமித்து நின்றபடி, “ம்... ம்...” என்று அனுப்பினேன்.

“நடேசா! நா போயிட்டு வரேண்டா!” என்றாள் அம்மா, மாமாவிடம். அந்த ‘டா’ மிகச் சன்னமாக வெளிப்பட்ட ‘டா’. பொருட்காட்சியில் தொலைந்த குழந்தை மாதிரி மிரள் விழித்த ‘டா’!

விழிகளை ஓரங்கட்டி, அம்மாவை ஒரு தலையசைப்பில் வழியனுப்பினார் மாமா.

மாமா! சொந்த மாமா! தாய் மாமா! ஜெயாவுக்கு நான் அண்ணன் போல் இவர் என் அம்மாவுக்கு சொந்தத் தம்பிதான் என்பதை நம்புவது மிகச் சிரமமாக இருந்தது. இருவரையும் போட்டோ எடுத்துப் போட்டு, தலைப்பு வைக்கச் சொல்லிப் புகைப்படப் போட்டி ஒன்று நடத்தினால், ‘வறுமையும் வளமையும்’ என்ற தலைப்பு மட்டும் ஆயிரம் வரும்.

அம்மா நல்ல அம்மா! சமர்த்து அம்மா. சௌகர்யமான இடத்தில் என்னைத் தூக்கி உட்கார்த்தி வைத்துவிட்டுப் போன அம்மா. மனசு பூராவும் அம்மாவை வாழ்த்தினேன். விட்டுப் போன சொர்க்கங்களை நினைந்து நினைந்து நாளெல்லாம் சந்தோஷித்தேன். ‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’ என்று போக வர, விசிலில் பாடினேன். மனம் குளிரக் குளிர காண்டெஸாவைத் தழுவினேன். பக்கெட் நிறையத் தண்ணீர் முகர்ந்து வந்து, துணியை நனைத்து சளப், சளப்பென்று அடித்து, ஆனந்தமாய், ஒரு குழந்தையைக் குளிப்பாட்டுவது போல் கழுவினேன். டெலிபோன் ரிசீவரை, ஒரு முயலின் காதைப் பற்றித் தூக்கும் லாகவத்துடன் தூக்கிக் காதில் பொருத்திக்கொண்டு, ‘ரொய்ங்ங்..’கென்ற அதன் ரீங்காரத்தைச் சற்று நேரம் ரசித்தேன். பின், அட்டகாசமாய் ‘ஹலாவ்’ என்று படு ஸ்டைலாகச் சொல்லிப் பார்த்தேன். அப்புறம் கர்ச்சீப் மாதிரி மிருது துணி கொண்டு துப்புரவாய்த் துடைத்தேன். பிரஷ் வைத்து, இடுக்குகளை அநாயாசமாய் சுத்தம் செய்தேன். அந்நியர் யாரேனும் வந்தால், நானே சகலத்துக்கும் அத்தாரிட்டி போல், ‘யாரய்யா அது?’ என்று அதட்டினேன். அங்கேயே நிற்க வைத்தேன். அத்தனை பெரிய பங்களாவில் எங்கு வேண்டுமானாலும் போவேன் என்று வந்தவருக்குக் காட்டுகிற விதமாய் மாடிப்படிகளில் தாவி ஓடினேன். உற்சாகனாயிருந்தேன்.

படிப்பு ஏறவில்லை. ஆரம்பக் காலத்தில் ‘எத்தனை சப்ஜெக்ட்ல போச்சு?’ என்று விசாரித்தார் மாமா. எண்ணச் சிரமப்படுகிறேன் என்பதைப் புரிந்துகொண்டவராய், என் மேல் பரிதாபப்பட்டு படிப்பு பற்றி விசாரிப்பதை நிறுத்திவிட்டார். மகா ஆனந்தமாகிவிட்டேன். அன்றிலிருந்து கொண்டாட்டம்தான்!

முன் ஏடு, பின் ஏடு போன புத்தகங்களை எடைக்குப் போட்டுப் பட்டாணி வாங்கிக் கொறித்தேன். சுஜாவுக்கும் அன்புடன் இரண்டு கொடுத்தேன்.

“டே தத்தி! கார்ல என்னவோ ரிப்பேர்னு சொன்னான் கிருஷ்ணன். அவனோட போய் என்னான்னு பார்த்து, ஸ்பேர் பார்ட்ஸ் ஏதாவது புதுசு மாத்த வேண்டியிருந்துதுன்னா, கையோட இருந்து ரிப்பேர் வேலையை முடிச்சுக்கிட்டு வா! வேலை முடியற வரைக்கும் ஷெட்டை விட்டு அன்னண்டை இன்னண்டை நகரக் கூடாது. கிருஷ்ணன் கிராதகன். அவனை நம்ப முடியாது. புதுசு மாத்தறதா சொல்லிப் பணத்தை வாங்கிப் பையில போட்டுக்குவான். அதுக்குத்தான் உன்னை அனுப்பறேன். புரியுதா?” என்பார் மாமா.

கிளுகிளுத்துப் போய்விடுவேன். மாமாவின் மொத்தச் சொத்தும் இப்போது என் கைப்பிடியில் என்கிற மாதிரி உடம்பு பூரா சிலிர்த்துப் போகும். மிதப்பாய் டிரைவர் கிருஷ்ணனை ஏறிடுவேன். பூச்சி மாதிரி அவனைப் பார்ப்பேன். ‘ஓட்டுய்யா’ என்று உத்தரவிடுவேன்.

மாமா ‘உட்கார்’ என்றால் உட்கார்ந்தேன். மாமி ‘எழுந்திரு’ என்றால் எழுந்திருந்தேன். சுஜா சொன்னாளே என்று ஒரு நாள் பாத்ரூம் முழுக்க ‘சானிஃப்ரெஷ்’ தெளித்து சுத்தமாய்க் கழுவிவிட்டேன்.

கால்களில் ரோமத்தின் அடர்த்தி அதிகரித்ததில், மாமி சொல்படி வேட்டி கட்டப் பழகினேன். வெகுவாய் யோசித்து, கோடாய் மீசை ஒதுக்கி, அப்புறம் மாமா நையாண்டி செய்ததில், தாட்சண்யமில்லாமல் எடுத்துவிட்டேன். சந்தேகத்துக்கு சுஜாவிடம், ‘எது எனக்கு அழகு - மீசை எடுத்தலோ, ஒதுக்கலோ?’ என்று விசாரித்துத் தெரிந்துகொண்டேன் - இரண்டுமே இல்லையென்று. நடுநடுவே, சுஜாவிடம் தோன்றி வரும் பரிணாம வளர்ச்சிகளைப் பார்த்தும் பெருமூச்சு விடலானேன். அவளைக் குறிப்பாய்க் கவனித்தேன். நெஞ்சுக்குள் தொட்டில் கட்டி, அவளை வைத்துத் தாலாட்டினேன். ஒரு வசமான சந்தர்ப்பத்தில் அவளை இறுக அணைத்துத் துணிச்சலாய் அவள் கன்னத்தில் அழுந்த முத்தமிட்டேன். அப்புறம் அவளை நேரே சந்திக்கப் பயந்து, நாளெல்லாம் நடுங்கிக்கொண்டு இருந்தேன்.

ம்மா வருஷத்துக்கு ஒருமுறை, தப்பினால் இரண்டு முறை, வந்து போய்க்கொண்டு இருந்தாள். வருகிறபோதெல்லாம் மறக்காமல் கனகாம்பரமும், கைமுறுக்கும் கொண்டு வந்தாள். முதல் பூ, முதல் முறுக்கு போலவே ஒவ்வொரு முறையும் இரண்டும் வேலைக்காரி தாயம்மாவின் தலையையும், அவள் மகனின் வயிற்றையும் நிறைக்கப் போயின.

சரியான ஒரு தருணத்தில் அம்மாவைச் சிக்கெனப் பிடித்துக்கொண்டு, மாமாவிடம் சுஜாவைப் பெண் கேட்கச் சொல்லி மன்றாடினேன். அம்மா அதிர்ந்தாள். மிரண்டாள். “வேண்டாண்டா! உன் மாமன்காரன் போக்கிரி. கேட்டதும் அக்கான்னுகூடப் பார்க்காம என்னைக் கண்டந்துண்டமாய் வெட்டியே போட்டுடுவான்!” என்றாள்.

மாமாவின் குணாதிசயங்கள் பலவற்றை நயமாக அம்மாவுக்கு எடுத்துச் சொல்லித் தைரியமாய்க் கேட்கும்படி ஊக்கினேன்.

கிளம்புகிற சமயத்தின் அம்மா பெரிதாய் பீடிகை போட்டாள். “சுஜாவுக்கு இப்போ பத்தொம்போது நடக்கறதா?” என்று நைஸாக ஆரம்பித்தாள். “வரன் ஏதாவது வர்றதானு பார்த்துக்கிட்டிருக்கியோ?” என்று வளர்த்தாள். “அவ கல்யாணத்துக்கு இப்ப என்ன அவசரம்?” என்ற மாமாவிடம், “இப்பவே பிடிச்சுப் பார்த்தால்தானே காலாகாலத்துல கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?” என்று சாதுர்யமாய் வார்த்தை விட்டாள்.

“ஏன், ஏதாவது பார்த்து வச்சிருக்கியா என்ன? நல்ல இடமா இருந்தா சொல்லேன், முடிச்சுடுவோம்” என்றார் மாமா, குத்துக்கல் மாதிரி என்னை எதிரே வைத்துக்கொண்டு. அம்மா ஜாடையாய் என்னைத் திரும்பிப் பார்த்துக் குறிப்பால் அவருக்கு உணர்த்த முயன்றாள். முடியாமல் தோற்றுப் போய்த் தலையைக் குனிந்துகொண்டு, பலகீனமான குரலில், “பையன் ஆசைப்படறான். எனக்கும்கூட லேசா உள்ளூற சபலம்தான். வேண்டாம்னு பார்த்தாலும் என்னால கேக்காம இருக்க முடியலே. உன் பொண்ணை மருமகளாக்கிக் கொள்ள ஆசைப்படறேன். நீ என்ன சொல்றே?” என்றாள்.

நல்லதொரு நகைச்சுவையைக் கேட்டாற்போல், மாமா தலையை அண்ணாத்தி ‘ஹோ...ஹோ...’வென்று சிரித்தார். கண்களில் நீர் ததும்புகிற வரைக்கும் சிரித்தார். வந்து நின்ற மாமியிடமும், வேலைக்காரி தாயம்மாவிடமும், டிரைவர் கிருஷ்ணனிடமும், இன்னும் அப்போதைக்கு அங்கே குழுமியிருந்த சகலரிடமும், “கேட்டியா, கேட்டியா?” என்று சொல்லிச் சொல்லிச் சிரித்தார். “என்னம்மா சுஜா, தோ நிக்கறான் பார் நம்ம கதாநாயகன். இவனை நீ கல்யாணம் பண்ணிக்கணுமாம். என்ன, பண்ணிக்கிறயா?” என்று மகளிடம் லஜ்ஜையில்லாமல் கேட்டுக் கண் சிமிட்டினார். “என்னடா தத்திப் பயலே! என் பொண்ணு வேணுமா? நூத்தியெட்டு தடவை தோப்புக்கரணம் போடறியா, தர்றேன். எண்ணிக்கவா?” என்றார்.

குபுக்கென்று என் உடம்பு பூராவும் உற்சாக ரத்தம் கொப்பளிக்க, காதுகளைப் பிடித்துக்கொண்டு தயாரானேன். மாமா ஒன்று, இரண்டு சொல்ல... மாமி, சுஜா, தாயம்மா, கிருஷ்ணன் எல்லோரும் வாய் வலிக்க, விலா வலிக்கச் சிரித்துக் குதூகலிக்க, அம்மா மட்டும் ஏனோ வாயடைத்துப் போய்க் கூனிக் குறுகி உட்கார்ந்திருந்தாள்.

முடிந்ததும் வெற்றி வீரனாய் எழுந்து நின்று நீளமாய் மூச்சு விட்டு, “என்ன மாமா, சரியா? கல்யாணத்தை எப்போ வெச்சுக்கலாம்?” என்று நான் ஆர்வத்துடன் கேட்டபோது, பதில் சொல்லாமல் அலட்சியப்படுத்தி, அம்மாவிடம் திரும்பி, “தெரிஞ்சுக்கிட்டியா உம் புள்ளையோட யோக்கியதையை? போறுமா, இன்னும் சாம்பிள் காட்டவா? ஆசைப்படறதுக்கும் ஓர் அளவு உண்டு, ஞாபகத்துல வெச்சுக்கோ. பின்னாடி ரொம்ப உதவும்” என்றார் சாவதானமாய்.

மறுபடி நான் “மாமா, கல்யாணம்...” என்று விடாமுயற்சிக்க, “போடா! போய் வேலையைப் பாரு. பூட்ஸுக்கெல்லாம் பாலிஷ் போட்டு வைடான்னனே, போட்டியா? எரும்மாடு! கழுதைக்குக் கல்யாணம் ஒரு கேடாக்கும்!” என்று ஆசீர்வதித்தார்.

நான் சுவாரசியம் இழந்தவனாய்த் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு, மாமா சொன்ன வேலையைச் செவ்வனே செய்து முடிக்கத் திரும்பியபோது, “நில்!” என்றாள் அம்மா.

பின்பு மாமாவிடம் திரும்பி, “நாங்க கிளம்பறோம்” என்றாள்.

“நல்லது! இதுக்குப் பிறகும் அவன் இங்கே இருக்கிறது சரியில்லை என்பதை நான் சொல்லாமல் நீயாக உணர்ந்துகொண்ட வரையில் சந்தோஷம்” என்றார் மாமா டாணென்று.

மனசேயில்லாமல் அம்மாவுடன் புறப்பட்டேன்.

- அடுத்த பதிவில் முடியும்.

Sunday, August 09, 2009

மூன்றாவது கிணறு!


‘ஞா
நியின் கேணிமூன்றாவது இலக்கியக் கூட்டம் இன்று (9-8-2009) நடந்தது. சென்ற முறையைவிட இந்த முறை வந்திருந்தவர்களின் எண்ணிக்கை இரு மடங்கு. சிறப்பு விருந்தினர் ஒரு சினிமாக்காரர் (பாலு மகேந்திரா) என்பதாலும் இருக்கலாம்; அல்லது, கேணிக் கூட்டம் பரவலாகத் தெரிய வந்ததாலும் இருக்கலாம். ஆனால், போன கூட்டத்தில் கலந்துகொண்ட பல முகங்களை இந்த முறை நான் பார்க்கவில்லை. ஆனால், ஒன்று நிச்சயம். போன முறை வந்தவர்களையும் எனக்குத் தெரியவில்லை; இந்த முறை வந்தவர்களையும் எனக்குப் பழக்கமில்லை. நான்தான்...

பாலு மகேந்திரா ட்ரிம் செய்யப்பட்ட தாடியும், தனது ஃபேவரைட் தொப்பியுமாக வந்தார். முதுகில் ASSAULT என்று எழுதப்பட்ட கார்கோ சட்டை அணிந்திருந்தார். இலக்கியத்துக்கும் சினிமாவுக்கும் உள்ள தொடர்பு பற்றிப் பேசினார். எதுவுமே எனக்குப் புதுசாகவோ, புதிராகவோ இல்லை.

ஓர் எழுத்தாளன் ஒரு வரியில் வர்ணிப்பதைக் காட்சிப்படுத்த இரண்டு மூன்று சீன்கள் தேவைப்படலாம்; அல்லது, பத்திருபது பக்கங்கள் வர்ணித்திருப்பதை ஒரு ஷாட்டில் காண்பித்துவிடலாம் என்றார். தெரிந்ததுதான். எந்தவொரு படைப்புமே சொல்கிற விதம், சொல்லப்படுகிற விஷயம் (Form and content) என இரண்டு அம்சங்களைக் கொண்டது. சொல்லப்படுகிற விதம் எப்படி என்பதை வைத்துத்தான் ஒரு படைப்பாளி மதிக்கப்படுகிறான். சொன்ன விஷயம் இரண்டாம்பட்சம்தான். ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருக்கும் காட்சியை எத்தனையோ பேர் வரைந்திருந்தாலும், அந்நாளில் ஓவியர்கள் பலரும் திரும்பத் திரும்ப அதை வரைந்துகொண்டு இருந்தார்கள். ஏற்கெனவேதான் சிலர் அதை வரைந்துவிட்டார்களே என்று யாரும் விட்டுவிடவில்லை. ‘அதில் நான் சொல்ல வருவது என்ன’ என்பதைக் காட்டத்தான் ஒவ்வொரு படைப்பாளியும் முயல்கிறார்.

இதைச் சொல்லிவிட்டு, “ஆனால், ஓர் இலக்கிய உபாசகனான நான் ஒரு கதையை சினிமாவாக எடுக்கும்போது, எழுத்தாளர் அந்தக் கதையில் எழுதியிருக்கும் வர்ணனைகள், வார்த்தைகள், வார்த்தைக் கோவைகள், சொல்லாற்றல் இவற்றையெல்லாம் தூக்கிக் குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டு, அதில் அவர் சொல்ல வருவது என்ன, எந்த விஷயம் அவரை அந்தக் கதையை எழுதத் தூண்டியது என்று பார்த்து அதை மட்டும் எடுத்துக் கொள்வேன். அதாவது, அந்தக் கதையின் ஜீவன் என்று சொல்லலாம். அதில் அந்த எழுத்தாளர் சொல்லத் தவறிய, அல்லது வாசகர்களின் யூகத்துக்கென வேண்டுமென்றே சொல்லாமல் விட்ட இடங்களையும் நான் காட்சிப்படுத்துவேன். அந்த எழுத்தாளர் சொல்லியிருக்கிற சில விஷயங்களைத் தேவையில்லை என்றால், விட்டுவிடுவேன். எழுத்து என்பது வேறு ஊடகம்; சினிமா என்பது வேறு ஊடகம். ஒரு கதையை நான் சினிமாவாக்கும்போது, அதற்கான படைப்புச் சுதந்திரம் எனக்கு உண்டு என்று நான் கருதுகிறேன்” என்றார்.

இது எதுவுமே எனக்குப் புதிய கருத்தாகத் தெரியவில்லை. ‘ஆமாம். அப்படித்தானே இருக்க முடியும்!’ என்றுதான் அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் மனசுக்குள் நினைத்துக்கொண்டு இருந்தேன்.

மாலனின் சிறுகதைத் தொகுப்பிலிருந்து ‘தப்புக் கணக்கு’ என்கிற ஒரு சிறுகதையைச் சிலாகித்துச் சொன்னார் பாலு மகேந்திரா. தனக்குப் பிடித்த எழுத்தாளர் மாலன் என்று பலமுறை குறிப்பிட்டார். மேற்படி கதையின் வரிகளை, அதை மாலன் எழுதியிருக்கும் விதத்தை மிகவும் பாராட்டிப் பேசினார். பின்னர், ஞாநி அந்தக் கதையை அனைவருக்கும் கேட்கும்படியாக ஏற்ற இறக்கத்துடன் வாசித்தார்.

ஜனனி என்கிற ஒரு சிறுமி வெகு புத்திசாலி. அவள் 7x2=14 என்று போட்ட கணக்கைத் தப்பு போட்டிருக்கிறாள் ஒரு டீச்சர். சிறுமியின் தாத்தா நியாயம் கேட்க பள்ளிக்குச் செல்கிறார். தான் சொல்லிக்கொடுத்தபடி 2x7=14 என்று போடாமல் மாற்றிப் போட்டதால்தான் தப்பு போட்டதாகச் சொல்கிறாள் அந்த டீச்சர். தாத்தா உடனே பிரின்சிபாலிடம் சென்று நியாயம் கேட்கிறார். ‘குழந்தை தன் இஷ்டத்துக்குப் போடக்கூடாது. இங்கே என்ன சொல்லித் தருகிறார்களோ அப்படித்தான் போடவேண்டும்’ என்று அவரும் சொல்கிறார். தாத்தா உடனே பள்ளிக் கல்வி அதிகாரியிடம் செல்கிறார். அவரும்கூட, ‘ஒரு விதத்தில் உங்கள் பேத்தி போட்டது பாதி சரிதான். ஆனால், விடை சரியாக இருந்துவிட்டால் போதாது, அதற்கான வழிமுறையும் சரியாக இருக்க வேண்டும் என்று காந்திஜியே சொல்லியிருக்கிறாரே’ என்று சொல்கிறார் அவர். குழந்தையின் அப்பாவுக்கு இந்த விஷயங்கள் தெரிய வர, ‘ஸ்கூலில் சொல்லிக் கொடுத்த மாதிரி போட வேண்டியதுதானே இவ! பொட்டப் புள்ள நாளைக்குப் பெரியவளா வளர்ந்ததும் நம்ம சம்பிரதாயம், பழக்க வழக்கங்கள் எல்லாத்தையும் கேள்வி கேப்பா. அதுக்கு அனுமதிக்கக் கூடாது’ என்கிறார். சிறுமியின் முகம் வாடிப்போக, தாத்தாவின் கண்கள் கசிகின்றன. இதுதான் கதை.

நமது கல்வி முறை மாணவர்களை எத்தனை தூரத்துக்குச் சிந்திக்க விடாமல் செய்கிறது என்பதைச் சொல்கிற அருமையான கதை இது. இது தொடர்பான என் பள்ளிக்கூட அனுபவங்கள் இரண்டை நான் இதே வலைப்பூவில், கல்வி தொடர்பான பதிவில் குறிப்பிட்டிருந்தேன். ஒன்று, கணக்கை வித்தியாசமான முறையில் நான் போட முயன்று, ஆசிரியரிடம் திட்டு வாங்கியது. மற்றொன்று, பத்து வார்த்தைகளை வாக்கியத்தில் பொருத்தி எழுதும்படி தமிழய்யா சொல்ல, அவர் சொன்ன வாக்கியங்களுக்குப் பதிலாக நான் வேறு சில வாக்கியங்களை, அதுவும் ஒரே பாராவாக வரும்படி தொடர்ச்சியாக எழுதி, அதற்குப் பாராட்டு கிடைக்கும் என்று கெத்தாக நிற்க, தமிழய்யா என்னைப் பாராட்டுவதற்குப் பதிலாகக் கண்டித்தது - இரண்டுமே மாணவர்களைச் சுயமாகச் சிந்திக்கவிடாத நமது கல்வி அமைப்பின் குறைபாட்டுக்கான சான்றுகள்தான்.

பாலு மகேந்திரா இந்தக் கதையைக் குறும்படமாக எடுத்திருந்தார். அது முன்னர் சன் தொலைக்காட்சியிலும் வெளியாயிற்று. அந்தப் படத்தையும் இன்று டி.வி-யில் வீடியோ போட்டுக் காண்பித்தார்கள். நன்றாகவே எடுத்திருந்தார் பாலு மகேந்திரா. தாத்தாவின் கண்களில் கண்ணீர் என்று முடிப்பதற்குப் பதிலாக அந்தப் பெண்ணின் எதிர்காலம் என்ன என்பதாக பார்ப்பவர்கள் மனதில் ஒரு கேள்வி எழும் வண்ணம் அந்தப் பெண்ணின் ஏக்கமான முகத்தை ஃப்ரீஸ் செய்து படத்தை முடித்திருந்தார். ஜனனி என்ற பெயருக்குப் பதிலாக அந்தப் பெண்ணுக்கு சக்தி என்று பெயரிட்டிருந்தார். எல்லாமே அருமைதான்!

ஆனால், அவரது பேச்சிலிருந்து நான் புதிதாகத் தெரிந்துகொண்ட விஷயம் எதுவும் இல்லை. எல்லாம் எனக்கு ஏற்கெனவே தெரிந்தவைதான்.

பாலு மகேந்திரா ஓர் அருமையான படைப்பாளி! அவரது மூடுபனி, அழியாத கோலங்கள் இரண்டையும் பார்த்து நான் பிரமித்திருக்கிறேன். அவர் தனக்குப் பிடித்ததாக வீடு, சந்தியா ராகம் இரண்டையும் குறிப்பிட்டார். 'ஒரு வருத்தமான செய்தி! இரண்டுக்குமான நெகடிவ்கள் அழிந்து போய்விட்டன. இனி அவற்றை புது பிரிண்ட் போடுவது சாத்தியமில்லை!' என்றார். சந்தியா ராகம் நான் பார்த்திருக்கிறேனா என்று நினைவில்லை. வீடு பார்த்திருக்கிறேன். அருமையாக எடுத்திருந்தார். சிறப்பாகவே இருந்தது. ஆனால், சினிமா சுவை எதுவுமின்றி, கிட்டத்தட்ட ஒரு டாகுமெண்ட்டரி போலத்தான் அது இருந்தது. அதை ஒரு கமர்ஷியல் சினிமாவாக என்னால் ரசிக்க முடியவில்லை. அதைவிட ‘மூன்றாம் பிறை’யும் மற்றும் மேலே சொன்ன படங்களும் எனக்கு ரொம்பப் பிடித்தமானவை.

கூட்டம் முடிந்து பலரும் பாலு மகேந்திராவுடன் நின்று போட்டோ எடுத்துக் கொண்டனர். ஆட்டோகிராஃப் வாங்கினர். முன்பே சொல்லியிருக்கிறேன். எனக்கு சினிமா பிடிக்கும். ஆனால், சினிமாக்காரர்கள் என்றால் அலர்ஜி. எனவே, அடுத்த கணம் நான் எஸ்கேப்!

இந்தப் பதிவு பிடித்திருந்தால் இங்கே வாக்களிக்கவும்!--->

Thursday, August 06, 2009

கம்ப்யூட்டருக்குப் பன்றிக் காய்ச்சல்!

திருஷ்டி பட்டுவிட்டது போலிருக்கிறது... தொடர்ந்து என் பிளாகுகளில் பதிவிட முடியாமல், என் சிஸ்டத்தில் பன்றிக் காய்ச்சல் பற்றிவிட்டது. வைரஸ் தொற்றிவிட்டது. ஜன்னலைத் திறந்தாலே WARNING என்று அலறுகிறது. எந்த ஆன்ட்டி வைரஸ் மருந்து கொடுத்தாலும் ஜுரம் விடுவதாயில்லை.

லினக்சும் இருக்கிறது. ஆனால், அதில் தமிழ் எழுத்துக்கள், ஆதி கால கல்வெட்டுத் தமிழ் போலப் படிக்கவே முடியாமல் இருக்கிறது.

என் (சிஸ்டத்துக்கான) குடும்ப டாக்டரான என் தம்பி, வரும் ஞாயிறு அன்று வந்து சிஸ்டத்துக்கு சிகிச்சை செய்வதாய்ச் சொல்லியிருக்கிறார்.

அதுவரை பொறுத்தருள்க.

அலுவலக சிஸ்டத்தில் பிளாக் எழுத விரும்பவில்லை. மற்றவர்களைச் செய்யாதே என்று தடுக்கிற நானே அந்தத் தவற்றைச் செய்யலாமா? விளக்கத்துக்காக இந்தப் பதிவை மட்டும் அலுவலகத்தில் வைத்துப் பதிகிறேன்.

என் சிஸ்டத்தின் ஜுரம் தணியப் பிரார்த்தியுங்கள்.

Sunday, August 02, 2009

கற்பனைக் கேள்வி-பதில்!

‘இவர்கள் எழுதினால்’ கற்பனைக் கட்டுரைக்கு வந்த பாராட்டுக்கள் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தின. அனைவருக்கும் மீண்டும் என் நன்றி!

நான் ஏற்கெனவே 2008 பிப்ரவரியில் ‘ஏடாகூடம்’ என்ற பெயரில் வலைப்பூ எழுதத் தொடங்கி, ஒரே ஒரு மாதம் மட்டும் சுறுசுறுப்பாக எழுதி, பிறகு அதில் ஆர்வம் இல்லாமல், ஊற்றிமூடிவிட்டேன்.

அந்தச் சமயத்தில், நான் எழுதிய குட்டிக் குட்டிக் கதைகள், விகடனில் ‘டிக்... டிக்... டிக்’ என்ற தலைப்பில் நான் எழுதி வந்த பொன்மொழிகள் ஆகியவற்றை அந்த ஏடாகூடம் வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன்.

அவற்றில் ஒன்று, நான் ’80-களில் கல்கி வார இதழில் எழுதிய ‘கற்பனைக் கேள்வி-பதில்’. அப்போது - அதாவது, ஏடாகூடம் வலைப்பூவில் அதைப் பதிவிட்டபோது அதை நிறையப் பேர் படித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். எனவே, அதை இங்கே மறுபதிவிடுகிறேன். அதை ஏற்கெனவே படித்திருப்பவர்கள் இங்கேயே கழன்றுகொண்டு, வேறு சுவாரசியமான வலைப்பூவுக்குத் தாவிவிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

கற்பனைக் கேள்வி-பதிலுக்குள் செல்வதற்கு முன்...

1979-80-களில் நான் வேலை தேடி சென்னைத் தெருக்களில் சுற்றிக்கொண்டு இருந்தேன். சாப்பாட்டுக்குக் கவலையில்லை. ஜார்ஜ் டவுனில் என் அத்தை வீடு இருந்தது. அங்கே தங்கிக்கொண்டு வேளாவேளைக்குச் சாப்பிட்டுவிட்டு, காலாற நடந்தே போய் ஒவ்வொரு நிறுவனமாக ஏறி வேலை கேட்பதே என் வேலையாக இருந்தது அப்போது.

வேலை லேசில் கிடைக்கவில்லை. (தண்டையார்பேட்டையில் இருந்த கங்கப்பா பேப்பர் கம்பெனியில் சில காலமும், மறைமலையடிகள் பாலத்தின் அருகில் - தீரன் சின்னமலை ஸ்டாப்பிங் - இருந்த ‘என்டர்பிரைஸிங் என்டர்பிரைசஸ்’ என்கிற வாட்ச் பாகங்கள் தயாரிக்கிற ஒரு தொழிலகத்தில் ஒரே ஒரு நாளும் நான் வேலை செய்தது அப்போதுதான். அந்த அனுபவங்களையும் ஏடாகூடம் வலைப்பூவில் பதிவிட்டிருந்தேன்.)

அப்படி ஒரு சமயம் மண்ணடி பக்கமாக நடந்து வந்துகொண்டு இருந்தபோது, வேலை கிடைக்காத சோர்வில், ‘முட்டாள்தனமாக இங்கே இப்படி அலைந்துகொண்டு இருக்கிறோமோ’ என்று தோன்றியது. அந்த யோசனையின் தொடர்ச்சியாக எழுந்த சிந்தனையில், ‘மிக மிக மடத்தனமான காரியத்தைத் தற்போது செய்துகொண்டு இருப்பவர் யார்?’ என்ற கேள்விக்குப் பத்திரிகைகள் பதில் சொன்னால் எப்படி இருக்கும் என்று மளமளவென்று ஒரு கற்பனை ஓடியது.

சட்டென்று மண்ணடி போஸ்ட் ஆபீசுக்குள் நுழைந்து, ஒரு இன்லாண்டு கவர் வாங்கினேன். அங்கேயே ஒரு பெஞ்ச்சில் அமர்ந்து என் கற்பனையை விறுவிறுவென்று எழுதி, ஒட்டி, அங்கேயே போஸ்ட் செய்துவிட்டு வெளியேறினேன். சத்தியமாக அது பிரசுரமாகும் என்கிற நம்பிக்கையெல்லாம் எனக்கில்லை. ஆனால், என் கற்பனையை இன்லாண்டில் எழுதியதுமே, அது ஒரு பத்திரிகையில் பிரசுரமானால் உண்டாகக்கூடிய சந்தோஷம் எனக்குக் கிடைத்துவிட்டது மட்டும் உண்மை.

அடுத்த இருபதாவது நாள், கிராமத்தில் இருந்த என் பெற்றோர் வீட்டுக்கு 30.3.80 தேதியிட்ட கல்கி இதழ் சென்றது - கடைசி பக்கத்தில் என் ‘கற்பனைக் கேள்வி-பதில்’ கட்டுரையைத் தாங்கி! பிறகு, அப்பாவிடமிருந்து கடிதம் வந்த பின்பே, இங்கு சென்னையில் மேற்படி கல்கி இதழைக் கடையில் வாங்கிப் பார்த்து ஆனந்தித்தேன்.

இதோ, அந்தக் கட்டுரை:

கற்பனைக் கேள்வி பதில்!

ன்று பெரும்பாலான பத்திரிகைகள் கேள்வி-பதில் பகுதியை வெளியிடுகின்றன. ‘மிக மிக மடத்தனமான காரியத்தினைத் தற்போது செய்துகொண்டு இருப்பவர் யார்?’ என்ற கேள்வி கேட்டால், அவர்கள் எவ்வாறு பதிலளிக்கக்கூடும் என்பதற்கான கற்பனை இதோ...மணிவண்ணன் பதில்கள் (தினமணி கதிர்): இந்தக் கேள்வி, இந்திய மக்கள் மீது தங்களுக்கு இருக்கும் இழிவான அபிப்ராயத்தையே காட்டுகிறது. உலக நாடுகள் பலவும் வேகமாக வளர்ந்து வருகிற நிலையில், நமது பாரத கண்டத்தில் கட்சிப் பூசல்களும், இன வெறி, மொழி வெறிகளும், ஒற்றுமையின்மையுமே பெரிதாகப் பல்கிப் பெருகி நாட்டைத் துண்டு துண்டாக்கிக் கொண்டிருக்கிற வேளையில், ‘புத்திசாலித்தனமான காரியத்தைச் செய்துகொண்டிருப்பவர் யார்?’ என்று கேட்பதே பொருத்தமாக இருக்கும். ஜப்பானைப் பார்த்துப் பெருமூச்சு விடுவதோடு நிறுத்திக் கொண்டால், முன்னேற்றம் எங்கிருந்து வரும்?

பராசக்தி (குங்குமம்): அதி முட்டாள்தனமான ர்ரியம் செய்வதில் என்றுமே முன்னணியில் நிற்கிறவர்... வேண்டாம், பாவம்... விட்டுவிடுவோம்!

சோ (துக்ளக்): சாட்சாத் அடியேன்தான்! பெரும்பான்மையான இடங்களைப் பிடித்து வெற்றி வாகை சூடிக் கொண்டிருக்கிற அன்னை மாதா தாயாரின் கட்சியில், அத்தனை கட்சிகளிலிருந்தும் அரசியல்வாதிகளின் கூட்டம் விழுந்தடித்துக்கொண்டு போய்ச் சேருகிற நேரத்தில் நான் மட்டும் இன்னமும் விடாப்பிடியாக எதிர்த்துக்கொண்டு இருக்கிறேனே! இதை முட்டாள்தனம் என்று சொல்லாமல் வேறு என்னவென்று சொல்வது? ஆனாலும், இதே முட்டாள்தனத்தையே என்றென்றும் இறைவன் என்னிடம் தங்க வைத்திருப்பானாக!

கடுகு (கல்கி): என்னய்யா மறைமுகமாகத் தாக்குகிறீர்? எனக்குப் புரியாதென்று நினைத்தீரா? வேலை வெட்டியற்ற பயல்களெல்லாம் கேள்வி-பதில் பகுதி எழுத வந்துவிட்டானே என்கிற எண்ணமா உமக்கு?

ஜூனியர் (கல்கண்டு): இந்தக் கேள்வி கேட்ட நீரும், இதற்குப் பதில் சொல்கிற நானும்!

அரசு (குமுதம்): ஒரு கதை நினைவுக்கு வருகிறது. சிறு வயதில் படித்த ஞாபகம். தந்தையின் சொல்லை மீறாத பிள்ளை. கப்பலில் பிரயாணம். கப்பலின் உச்சியில் தீப்பிடித்துக் கொண்டது. பையனிடம், தான் வருகிற வரையில் எங்கும் போகாதே என்று சொல்லிவிட்டுத் தீயை அணைக்கப் போன தந்தை அங்கேயே இறந்துவிட்டார். தீ வெகுவாகப் பரவிவிட்டது. இனி கப்பலைக் காப்பாற்ற முடியாது என்ற நிலையில், மாலுமிகள் அனைவரும் கடலில் குதித்துத் தப்பித்தார்கள். பையனையும் அழைத்தார்கள். தந்தையின் வாக்கினை மீறக்கூடாது என்பதில் உறுதியாக இருந்த அவன் அதற்கு மறுத்து, அத்தீயிலேயே மாண்டு போனான். அவன் செய்தது மடத்தனமான காரியமா இல்லையா என்பது பற்றிக்கூட சில வருடங்களுக்கு முன்னால் ஒரு சர்ச்சை எழுந்ததாக நினைவு. ஆமாம்... நீங்கள் என்ன கேட்டீர்கள்?

மணியன் (இதயம் பேசுகிறது): அன்புள்ள நண்பரே! அது நிச்சயமாக நீர் இல்லை. திருப்திதானே?

சாவி (சாவி): கலைஞருடன் ஒருமுறை பேசிக்கொண்டு இருந்தேன். “உதிர்ந்து போன இரண்டே இரண்டு இலைகளை வைத்துக்கொண்டு, சூரியனுடைய ஒளியினைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்று மனப்பால் குடித்துக்கொண்டு இருக்கிறார்களே சிலர், அவர்களை எந்த வரிசையில் சேர்க்கலாம்?” என்று கேட்டேன். ஏதோ ஓர் அர்த்தத்துடன் புன்னகைத்தார். அது என்ன அர்த்தம் என்பது உங்கள் கேள்வியைப் படித்த பின்புதான் விளங்கியது.

Saturday, August 01, 2009

இவர்கள் எழுதினால்... PART II

காக்கா-வடை-நரி கதையை புஷ்பா தங்கதுரை, சுஜாதா, கண்ணதாசன் ஆகியோர் எழுதினால் எப்படி இருக்கும்?

புஷ்பா தங்கதுரை:

ரிச்சான் நொண்டியாகிச் சரிந்து, அந்த நேரம் ஒரு கிழவியின் கோபத்திற்கு ஆளாகிக்கொண்டு இருந்தது.

சிறுவர்கள் பள்ளியின் மணி ஒலிக்கேற்ப யந்திரகதியாக இயங்கத் தம்மைத் தயார்ப்படுத்திக் கொண்டு இருந்தார்கள்.

கருவாலி மரத்தின் மேல் கிளையில் அமர்ந்துள்ள காகத்தினை நீங்கள் பார்ப்பதற்குள், அதனைப் பற்றிய சிறு குறிப்பு:

அந்தக் காகத்திற்குக் கரிச்சான்குஞ்சு என்று அலையஸ் உண்டு. கடைசியாக அடித்த புயலின்போது, பக்கத்து ஊரிலிருந்து தனியாகப் பறந்து வந்தது.

கரிச்சானுக்குச் சில பின்புற நடவடிக்கைகள் உண்டு. புயலுக்குப் பின் இங்கு வந்து சேர்ந்ததும், அது மிகவும் தாராளமாகக் கருவடாம் கடத்தலில் ஈடுபட்டது. அம்மரம் அதற்கு ஏகபோகம்.

பின்னாட்களில் அவ்வூர்க் காக்கைகளின் பெரும்புள்ளிகளோடு விருந்தும் சாப்பிட்டிருக்கிறது.

கருவடாம் கடத்தலில் சில சில்லறைச் சங்கடங்கள் ஏற்பட்டதால், அப்பளம் கடத்தலில் ஈடுபட்டது. குடும்பங்களில் இது பிரபலமாகும் முன்பே பல வீடுகளிலிருந்து அப்பளங்களை அகற்றியது. அது இத்தொழிலில் இறங்கிய நாட்களில் இப்படி ஒரு மோசடி நடக்கிறதென்பதே அங்கு யாருக்கும் தெரியாது. அப்பாவி குடும்பஸ்தர்கள்.

இங்கே இந்தக் கருவாலி மரத்தினில் நித்தியவாசத்திற்கு வந்த பின், பழைய சுவர்க்கங்களை நினைத்துச் சோகமாக வாழ்வதுடன், விட்ட குறை தொட்ட குறையாகச் சில சில்லறைக் கடத்தல்களை - வடை கடத்தல் அதற்கு ஸ்பெஷாலிட்டி - செய்து, ஓரமாக ஒரு சின்ன உல்லாச வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது.

- அந்த ஆளு யாரப்பா? தமனகன்னு பேர் சொன்னான். சோப்ளாங்கின்னு நெனைச்சா மடி மேல கை வைக்கிறானே?

- என்னா செஞ்சான்?

கேட்டது கிரீவ். தூய பெயர் கிரீவன். கழுத்திலும் கறுப்பு மின்னியது. மொஸைக் உடம்பு. வயிறு பம்மென்று வீங்கி, நீண்ட வால் கறுப்பு சுக்கான்.

- வடையை ராவிக்கினு வந்தேன்ல..?

- ஆமா!

- துண்ணலாம்னு இருந்தேன். பாடச் சொல்லி ஐஸ் வெச்சான் இந்த ஆளு!

- வடையைப் பறிக்கத் திட்டம் போட்டிருப்பானோ?

- தெரியாது. நம்பளை ஆழம் பார்க்கணும்னு டூப் அளக்கறானோ என்னவோன்னு, நான் வாயையே தொறக்கலே!

- ஒருவேளை, புகழ்ச்சியில் மயங்கி பாடியிருந்தேன்னு வெச்சுக்க...

- அந்தச் சந்தேகம் எனக்கும் தோணுச்சு. அதனால்தான் வடையைக் கீழே உழுந்துடாம பத்திரமா ஒரு கிளையிலே வெச்சேன். அப்புறம் பாடினேன்.

ஆமாம். பாடியது. தமனகன் ஏமாந்து ஓட, கிரீவ் கரைந்து சிரிக்க, கரிச்சான் வடையைச் சுவைக்க ஆரம்பித்தது.

சுஜாதா:

தை விருட்சம் என்றோ, மரம் என்றோ சொல்ல முடியாது. ஒரு தாவரம். அவ்வளவுதான்! பள்ளிக் கட்டடத்துக்கு உட்பட்டது. பஞ்சாயத்து சார்பில் அதற்குக் கிடைத்திருப்பது 1/2’ x 1/2’ சதுர வெட்டுப் பள்ளத்தில், வெள்ளைப் பெயின்ட்டடித்துக் கறுப்பில் எண்.

இதிலிருந்து பத்தடி தள்ளி பாப்பம்மாள் இட்லிக் கடை இருக்கிறது. கடையின் சாமுத்ரிகா லட்சணங்கள்... புகை படிந்த தகரம் - அடுப்புக்குத் தடுப்பாகப் பயன்படுவது - ஓரிரண்டு வாழை இலை, மந்தார இலைச் சுருள்கள், சின்ன பெட்டி போன்ற சமாசாரம், அதனுள் பக்கத் தடுப்பில் சில்லறை நாணயங்கள், மத்தியில் அருள்பாலித்துக்கொண்டு முருகர். மரத்துக்குப் பக்கத்தில் கையலம்புதலின் ஈர அடையாளங்கள்.

மதிய நேரம்... மணி சரியாக ஒன்று; இல்லை, ஒன்று பத்து! காகம் ஒன்று மெல்லியதாய் சீட்டியடித்துக்கொண்டு, டைவடித்துக் கடையினை நெருங்கியது.

பாப்பம்மாள் அதே சமயம் வேறு புறம் திரும்ப, எதிரே ஸ்ரீசூர்ணம் இட்டிருந்தவர், “அம்மா, அந்தால பாருங்க, காக்க” என்றார்.

பாப்பம்மாள் சட்டென்று உஷாராகி, கையில் கிடைத்ததை எடுத்து ஆக்ரோஷத்துடன் ஒரு வீசு வீச, ‘ஷ்ஷ்ஷ்க்க்க்க்’ என்று அந்தக் கல் காற்றைக் கிழித்துக்கொண்டு போய் காக்கையின் மண்டையில் பட்டுத் தாக்க, உள்ளே இலவச வைரங்கள் ஜொலித்தன. மண்டைக்குள் ஜாஜ்வல்யமாக வலித்தது. அந்தக் காகம் மிச்சமிருந்த தன் ரிஃப்ளெக்ஸ் செயல்பாடுகளில் உடம்பை உதறிக்கொண்டு பறந்து போய் ஒரு கிளையில் லேண்ட் ஆக, பாம்மாவுக்கு ஒரு வடை இழப்பு! ஸ்ரீசூர்ணாச்சாரி வாயெல்லாம் சிரித்தார்.

எட்ட இருந்த ஒரு நரி, மௌனமாகக் கிட்டே வந்து நின்று, காக்கையிடம் இன்ஸ்டன்ட் காதல் கொண்டது. அதன் கன்னங்களில், குட்டிப் பருவத்தில் சாப்பிட்ட முயல் மாமிசங்களின் உபயம் தெரிந்தது. தடித்த உதடுகள். மார்பு புஷ்டியாக வளர்ந்திருந்தது.

“மிஸ் காக்... ஐ மீன், காக்கா! யு ஆர் ஸோ பியூட்டிஃபுல்! உங்க சாங்னா எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸோ...”

வடையைக் வாயில் கடித்தபடியே சின்னதாகக் கர்ர்ர்ரிட்டது காகம்.

“...எனக்காக நீங்க இப்பவே ஒரு பர்ஃபாமென்ஸ் கொடுக்கணும்.”

நரி வஞ்சத்தில் புகழ, காகத்தின் உணர்வு நரம்புகளில் வேகம் உற்பத்தியாகித் துடிக்க, கீழே நரி வடையை எதிர்பார்த்துக் காத்திருக்க, அலகினைத் திறந்து பாடியது அப்பாவிக் காகம்.

பூமியின் கிரேவிட்டி பவரில் சரசரவென்று கீழே வந்த வடையைக் கப்பென்று பிடித்துக்கொண்டது நரி. தட்சணமே பெரும் ஓட்டமெடுத்து ஓடத் தொடங்கியது. எதிர்ப்பட்ட பாறை மீது தாவிக் குதித்து, விழுந்து கிடந்த மர நீட்டலின் மீது ஓடி, சரிந்து எழுந்து, பக்கத்தில் சரேலென்ற திருப்பத்தில் வளைந்து மறைந்தது.

ம்ஹூம்... இந்த நரிக்கு விமோசனமே கிடையாது!

கண்ணதாசன்:

வாழ்க்கை எதிலே ஓடிக் கொண்டிருக்கிறது?

அடுத்தவனை ஏமாற்றிப் பிழைப்பதில் சிலருக்கு ஓடிக் கொண்டிருக்கிறது.

அமைதியாக ஓடிக் கொண்டிருக்கும் நதி, ஆடி வெள்ளம் வரும்போது கரையேறி ஊரை அழிக்கிறது; அடுத்தவனை ஏய்ப்பதில் ஓடிக் கொண்டிருக்கும் வாழ்க்கை, ஆடி அலைந்து ஓய்ந்து போய் அமரப்போகும் வயதில் அலைக்கழிக்கிறது.

பாவத்தின் அளவு எவ்வளவோ அவ்வளவே தண்டனையின் அளவும் என்பது உண்மை!

ஒரு நடைபாதையில் நீ ஒரு கண்ணாடித் துண்டைப் போட்டால், நீ திரும்பி வரும்போது அது உன் காலிலேயே குத்துகிறது; நீ மற்றவனை ஏமாற்றினால், தெய்வம் உன்னை ஏமாற்றுகிறது.

சிறு வயதில் படித்த கதை ஞாபகமிருக்கலாம்.

அடுத்தவரை ஏய்த்துத் திருடிக்கொண்டு வந்த வடையை ஒரு காகம் தின்ன முற்படுகையில், நரி வருகிறது.

நேரில் ஒருவனைப் புகழ்வதும், மற்றவரிடத்து இவனை இகழ்வதும் எத்தர்கள் செய்கின்ற வேலை. அதை நரி செய்கிறது.

நரியின் பேச்சில் மயங்கிய காகம், நரி கேட்டுக்கொண்டதற்கிணங்க வாயைத் திறந்து பாடுகிறது.

தன்னைத் தூக்கிப் பார்க்கும் கசாப்புக் கடைக்காரன், தன்னை எதற்காகப் பார்க்கிறான் என்று தெரியாத வரை ஆடு ஆனந்தம் கொள்கிறது.

தேர்தல் நேரத்தில் தங்களைப் புகழ்ந்து பேசும் அரசியல்வாதி, தங்களை எதற்காகப் புகழ்கிறான் என்று தெரியாத வரையில் மக்களுடைய ஓட்டுக்கள் அவனுக்கே கிடைக்கின்றன.

ஏமாற்றுகிறவன் அகப்பட்டதைச் சுருட்டுகிறான்; ஏமாறுகிறவன் விவரம் புரியாமல் விழிக்கிறான்.

காகம் ஏமாற்ற நினைத்தது; தானே நரியிடம் ஏமாந்து நின்றது.

வினை விதைத்தவன் வினை அறுப்பான். இது முன்னோர்கள் சொல்லி வைத்த பாடம். அதை விளக்குவதற்காக அவர்கள் எழுதி வைத்த புராணங்கள் அனந்தம்.

தவறு செய்தவன் இந்திரனே ஆனாலும், தண்டனை உண்டு என்கிறது இந்து மதம். இதை எளிதில் புரிந்துகொள்வதற்காக எழுதப்பட்ட கதைதான் இந்தக் ‘காக்கையும் வடையும்’ கதை.

இது வெறும் கற்பனைக் கதையல்ல; பெரும் தத்துவ விதை!

‘ஏமாற்றுவோர்க்குத்தான் காலம்’ என்கிற அர்த்தம்தானே இக்கதையில் கிடைக்கிறது என்று குதர்க்க வாதம் செய்வதில் அர்த்தமில்லை.

‘இத் தவறை நீ செய்யாதே’ என்று நேரடியாகச் சொல்லித் திருத்துவது ஒரு முறை; இத் தவறை இவர்கள் செய்ததால் இந்த நிலைக்கு ஆளானார்கள் என்று சுட்டிக்காட்டித் திருத்துவது ஒரு முறை!

ராவணனின் பெண்ணாசையே அவன் வீழ்ச்சிக்குக் காரணம் என்கிறது ராமாயணம். துரியோதனன் வீழ்ச்சி அவனது மண்ணாசையால் விளைந்த விளைவே என்கிறது மகாபாரதம். பிறரை ஏமாற்ற நினைத்தால், நீ ஏமாந்து போவாய் என்கிறது இக் கதை.

நேர்மை என்றும், நியாயம் என்றும் சொல்லி வைத்த நமது மூதாதையர்கள் முட்டாள்கள் அல்ல! கஷ்டத்திலும் நேர்மையாக இரு. நீ ஏமாற்றப்பட்டாலும் பிறரை ஏமாற்றாதே!

உன் வாழ்நாளிலேயே அதன் பலனைக் காண்பாய்!