உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

புலி வேட்டையாடிய புலி!

 

  

ள்ளி வயதில் என் சக மாணவர்கள் எல்லாரும் விளையாட்டுத் திடலில் உற்சாகமாக கிரிக்கெட் விளையாடிக்கொண்டிருக்க, நான் மட்டும் ‘தேமே’யென்று ஒரு ஓரமாக, மர நிழலில் நின்று அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன். காரணம், ஒரு முறை கிரிக்கெட் விளையாடும்போது பந்து என் முகத்தில் பட்டது. என் கண்ணில் படவில்லையென்றாலும், பந்து பட்ட அதிர்ச்சியில் கொஞ்ச நேரத்துக்குக் கண்ணீர் வந்துகொண்டிருந்தது. அதைப் பார்த்த என் நண்பர்கள் ‘பட்டோடி… பட்டோடி’ என்று சொல்லிச் சிரித்தார்கள். எனக்குப் புரியவில்லை. கேட்டதற்குச் சொன்னார்கள்... பட்டோடி என்றொரு கிரிக்கெட் வீரராம்; கிரிக்கெட் விளையாடும்போது அவருக்கும் இதுபோல் பந்து கண்ணில் பட்டு, கண்ணே பிதுங்கி வெளியே வந்துவிட்டதாம். இப்போது அந்தக் கண்ணுக்குப் பதிலாக ஆட்டுக் கண்ணைப் பொருத்தியிருக்கிறார்களாம். ஒரு கண் பார்வையோடுதான் அவர் கிரிக்கெட் ஆடுகிறாராம். அதுபோல் இப்போது நானும் பந்து கண்ணில் பட்டு பட்டோடி ஆகிவிட்டேன் என்று சொல்லிச் சிரித்தார்கள். அதிலிருந்து எனக்குப் பயம் பிடித்துக்கொண்டது. கிரிக்கெட் என்றில்லை, எந்த விளையாட்டிலுமே கலந்துகொள்வதை விட்டுவிட்டேன்.

சக மாணவர்கள் சொன்னதில் பாதி தவறான தகவல் என்று பலப்பல ஆண்டுகளுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிய வந்தது. கிரிக்கெட் பந்தினால் அல்ல, ஒரு கார் விபத்தில் கண்ணாடிக் கதவு உடைந்து, அதன் கூர்முனை கண்ணுக்குள் பாய்ந்ததால்தான், பட்டோடியின் வலது கண் முற்றிலுமாகப் பாதிக்கப்பட்டது. முகம் கோரம் அடையாமல் இருக்க, டாக்டர் அவருக்குச் செயற்கைக் கண் பொருத்தினார். மற்றபடி, அது பார்வைக்காக இல்லை. தன் தொப்பியைக் கீழிறக்கி, வலது கண்ணை மறைக்குமாறு வைத்துக்கொண்டு ஆடுவார் பட்டோடி. இடது கண் பார்வையைக் கொண்டே கிரிக்கெட்டில் சாதனைகளைப் படைத்தவர் அவர்.

ஒரு சமயம், நட்பு ரீதியில் கிரிக்கெட் ஆடி மகிழ்வதற்காக, கிரிக்கெட் நண்பர்கள் பலரை போபாலுக்கு அழைத்திருந்தார் பட்டோடி. அவர்களுக்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் அறைகளும் புக் செய்திருந்தார். கடைசி நாளன்று, அருகில் இருந்த ஒரு காட்டுக்குள் சென்று மிருகங்களை வேட்டையாடி மகிழலாம் என்பது அவர்கள் திட்டம்.

அதன்படி அவர்கள் அனைவரும் ஒரு ஜீப்பில் சுற்றுலாபோல் கிளம்பிச் சென்றார்கள். காட்டுக்குள் சிறிது தூரம் சென்றதும், திடுமென ஒரு கொள்ளைக் கூட்டம் அவர்களைச் சுற்றி வளைத்தது. வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டது. விஸ்வநாத், பிரசன்னா இருவரையும் ஜீப்பை விட்டுக் கீழே இறங்கச் சொன்னார்கள் அந்தக் கொள்ளையர்கள். இருவரையும் ஒரு மரத்தில் கட்டிப் போட்டார்கள். இவ்வளவு பணம் கொடுத்தால்தான் அவர்களை விடுவிப்போம் என்றும், இல்லையென்றால் சுட்டுக் கொன்றுவிடுவோம் என்றும் மிரட்டினார்கள். இருவரின் கழுத்திலும் கொள்ளையர்களின் துப்பாக்கி முனைகள் பதிந்தன.

சிக்கிக்கொண்ட கிரிக்கெட் வீரர்கள் இருவரும் கதறி அழவே செய்துவிட்டார்கள். கொஞ்ச நேரம் அவர்களை அழ வைத்து வேடிக்கை பார்த்துவிட்டுப் பிறகுதான் அவர்களை விடுதலை செய்தார்கள் அந்தக் கொள்ளைக் கூட்டத்தார். தப்பித்தோம் பிழைத்தோம் என்று கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் ஹோட்டலுக்குத் திரும்பிய பிறகுதான், இது பட்டோடி நடத்திய விளையாட்டு நாடகம் என்பது அவர்களுக்குத் தெரிய வந்தது.

‘Sunny Days‘ என்னும் தலைப்பில் புத்தகமாக வெளியான கவாஸ்கரின் சுயசரிதைப் புத்தகத்தில் இந்தத் தகவல் உள்ளது.

நவாப் பரம்பரையில் வந்த பட்டோடி சிறந்த வேட்டைக்காரர். கிரிக்கெட்டில் ‘டைகர்’ என்று ரசிகர்களால் போற்றப்பட்ட இவர் ஒரு டஜன் புலிகளுக்கு மேல் சுட்டு வீழ்த்தியுள்ளார். சைக்கிள் போலோ ஆட்டத்திலும் கெட்டிக்காரர். நல்ல இசை ஞானமும் இவருக்கு உண்டு. தபேலா, ஹார்மோனியம் வாசிப்பதில் திறமைசாலி. சுவாசப் பிரச்னை காரணமாக 2011-ம் ஆண்டு மறைந்தார்.

ஆயிரம் சொன்னாலும், இந்தத் தகவலையும் சேர்த்து எழுதாவிட்டால், இந்தப் பதிவு முழுமையடையாது. அது… பிரபல இந்தி நடிகை ஷர்மிளா டாகூரின் கணவர்தான் பட்டோடி.

மன்சூர் அலிகான் பட்டோடியின் 80-வது பிறந்த தினம் இன்று.

– 5.01.2021   

0 comments: