உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, January 17, 2012

டி.எம்.எஸ்... ஆணவம் அல்ல... ஆவணம்!

சில மாதங்களுக்கு முன்னால் கல்லூரி மாணவ, மாணவிகள் சிலர், பாட்டுக்கொரு தலைவன் டி.எம்.சௌந்தர்ராஜன் அவர்களைச் சந்தித்து உரையாடுவது போன்ற ஒரு நிகழ்ச்சியை ‘கோல்டன் பீச்’சில் ஏற்பாடு செய்திருந்தார் என் நண்பரும் இயக்குநருமான திரு.விஜய்ராஜ். திரு. டி.எம்.எஸ் அவர்களோடு உரையாடிய கல்லூரி இளைஞர்களில் என் மகள் ஷைலஜாவும் ஒருத்தி.

அன்றைய சந்திப்பு தொடர்பான புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் ஒரு டிவிடி-யில் பதிந்து கொடுத்திருந்தார் விஜய்ராஜ். அதிலிருந்து சில புகைப்படங்களை என் முகப் புத்தகத்தில் பதியலாம் என்று சிடி கன்டெய்னரில் தேடியபோது, அதைக் காணவில்லை. வீடு முழுக்கத் தேடிப் பார்த்தேன். ம்ஹூம்... கிடைக்கவே இல்லை. அது காணாமல் போனதில், காணும் பொங்கலன்று நான் மூட் அவுட்!

அன்றைய சந்திப்பைத் தொடர்ந்து, ஆனந்த விகடனின் சென்னை இணைப்பான ‘என் விகடன்’ இதழில் ஒரு கட்டுரை எழுதியிருந்தாள் என் மகள். அதை இங்கே வெளியிட்டு, என் மனத்தைக் கொஞ்சம் ஆற்றிக் கொள்கிறேன்.

பின்னணிப் பாடகர் டி.எம்.சௌந்தர்ராஜனின் வாழ்க்கை வரலாற்றை 'இமயத்துடன்...’ என்ற தொலைக்காட்சித் தொடராக இயக்கிவரும் இயக்குநர் விஜய்ராஜையும் டி.எம்.எஸ்ஸையும் லயோலா கல்லூரி மாணவர்கள் சிலருடன் கடந்த வாரம் கோல்டன் பீச்சில் சந்தித்தேன். திரையுலகில் கால் பதிக்க சந்தித்த சவால்கள், காதல் தோல்வி, எம்.ஜி.ஆர், சிவாஜி, ரஜினிகாந்த் போன்ற பிரபல நடிகர்களுடனான அனுபவங்கள், இந்த வயதிலும் ரஜினிக்காக .ஆர்.ரஹ்மான் இசையில் பாட இருப்பது எனப் பல விஷயங்களை எங்களோடு பகிர்ந்துகொண்டார் டி.எம்.எஸ்.

''2001-ம் ஆண்டு தொடங்கிய இந்தப் படப் பதிவு 10 ஆண்டு காலத்துக்குப் பிறகு, இந்த மாதம் செப்டம்பர் 18-ம் தேதி பூர்த்தியானது. என் 10 ஆண்டுகாலத் தவம் இன்றோடு முடிந்தது!'' - மகிழ்ச்சியோடும் மன நிறைவோடும் பேசுகிறார் விஜய்ராஜ். ''பணப் பிரச்னை; பொருத்தமான பாடல் காட்சிகள் கிடைக்காமல் மலேசியா, சிங்கப்பூர் எனப் பறந்தேன். தானாக வந்த பல திரைப்பட, சீரியல் வாய்ப்புகளை இழந்தேன். உறுதுணையாக இருந்த என் தாயார் மீனாட்சி, ஊக்கம் கொடுத்த பெரியம்மா இருவரையும் இழந்தேன். 'வேண்டாத வெட்டி வேலைஎன்று நண்பர்களின் கேலிப் பேச்சுக்கு ஆளானேன்'' என விஜய்ராஜ் விவரிக்க விவரிக்க... அவரின் கஷ்டங்கள் புரிந்தன.

''நான் 90-களில் தமிழக அரசின் செய்திப் பிரிவில் பணியாற்றி னேன். முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நேரு ஸ்டேடியம் திறக்கப்பட்டபோது, அவருக்கு அருகில் நான் மேடையில் இருந் தேன். அப்போது ஸ்பீக்கர்கள் நாலா பக்கமும் டி.எம்.எஸ். பாடல்களை முழங்கிக்கொண்டு இருந்தன. ஆனால், விழாவுக்கு வந்த டி.எம்.எஸ்-ஸை உள்ளே விட மறுத்தனர் காவல் துறையினர். இதை மேடையில் இருந்து பார்த்த நான், பி.ஆர்.. ஒருவரை அனுப்பி அவரை உள்ளே அழைத்துவந்தேன். எனினும், ஒரு மாபெரும் கலைஞனுக்கு உரிய மரியாதை தரப்படாததும், அவரை பத்தோடு பதினொன்றாக நடத்தியதும் என் மனதைப் புண்படுத்தியது. கேரளாவில் யேசுதாஸை எப்படிக் கொண்டாடுகிறார்கள்? இங்கே மட்டும் அபிமானப் பாடகருக்கு ஏன் இந்த அவமதிப்பு?'' என்று குமுறுகிற விஜய்ராஜுக்கு அப்போதுதான் வேறு எந்தப் பாடகருக்கும் யாரும் செய்திராத வகையில் டி.எம்.எஸ்ஸின் வாழ்க்கையை ஓர் ஆவணப்படமாக, கலகலப்பான, அனைவரும் ரசிக்கும் வகையில் பொருத்தமான பாடல் காட்சிகளோடு தொகுக்க வேண்டும் என்ற உறுதி உண்டானதாம்.

கலைஞர், சரோஜாதேவி, வாலி, வைரமுத்து, ரஜினி, கமல், சோ, வடிவேலு, இளையராஜா, எம்.எஸ்.வி., .ஆர்.ரஹ்மான், லதா மங்கேஷ்கர் என ஒருவர் விடாமல் அனைவருடனும் டி.எம்.எஸ்ஸைச் சந்திக்கவைத்து, உரையாடச் செய்து, பதிவுசெய்திருக்கிறார். கோவை சென்ட்ரல் ஸ்டுடியோ, சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் என பழைய ஸ்டுடியோ இருந்த இடங்களுக்கு டி.எம்.எஸ்ஸை அழைத்துச் சென்று, பழைய நினைவு களை அசைபோடச் செய்திருக்கிறார்.

''அந்தக் காலத்தில் டி.எம்.எஸ். என்றால் சிறந்த பாடகர் என்பதைத் தாண்டி, இளையராஜா, டி.ஆரோடு மல்லுக்கட்டியவர், கோபக்காரர் என்றெல்லாம் பத்திரிகைச் செய்திகள் பதியவைத்துவிட்டன. ஆனால், அந்த மாயக் கருத்தை உடைத்தெறிந்து, டி.எம்.எஸ்ஸின் குழந்தை மனத்தையும், இளையராஜாவும் டி.ஆரும் இவர் மீது வைத்திருக்கும் அபிமானத்தையும் இந்தத் தொலைக்காட்சித் தொடர் மக்களுக்கு உணர்த்தும்'' என்கிறார் விஜய்ராஜ்.

''டி.எம்.எஸ். ஆணவம் என்பதை மாற்றி, அவரை ஆவணமாகப் பதிவுசெய்ய முடிந்ததை என் வாழ்நாள் பேறாகக் கருதுகிறேன்'' - விஜய்ராஜ் சொன்னபோது, அவரின் 10 ஆண்டுக் கனவு நனவாகும் தருணம் நெருங்கிவிட்டதை உணர முடிந்தது!

- ஆர்.ஷைலஜா

.

Monday, January 09, 2012

மீண்டும் சாவியிடமே..!

“ஆசிரியர் சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டது. பொதுவாக ஏற்கெனவே இரண்டு முறை நான் இப்படிக் கோபித்துக்கொண்டு போயிருந்தாலும், அதிகபட்சமாக இரண்டு மாத காலத்துக்குள் சாவியிடமே வந்திருந்தேன். ஆனால், அந்த முறை அப்படி நான் மீண்டும் சாவி பத்திரிகைக்குத் திரும்பி வர விரும்பவில்லை. எனவே, ‘அமுதசுரபி’ பத்திரிகையில் சேர்ந்துவிட்டேன்.

ஆனால், ஏழெட்டு மாத காலம் அங்கே பணியாற்றிவிட்டு, பின்பு மீண்டும் சாவியிடமே வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. அதை மிக விரைவில் அடுத்த பதிவில் எழுதுகிறேன்’’ என சமீபத்திய பதிவு ஒன்றில் குறிப்பிட்டிருந்தேன்.

அதென்ன கதை?

’மண் மணம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ எனத் தலைப்பிட்டு, வட்டார வழக்கில் சிறுகதை எழுதும் போட்டி ஒன்றை சாவியில் அறிவித்திருந்தேன். அதற்கு வந்த கதைகள் அனைத்தையும் அவ்வப்போது படித்து செலக்ட் செய்து, வாரம் ஒரு சிறுகதையாக வெளியிட்டு வந்தேன். கதைத் தேர்வுகள் முடிந்து, ரிசல்ட்டும் அறிவிக்கப்பட்டு (இந்தப் போட்டியில் எழுத்தாளர் சுஜாதா நடுவராக இருந்த விவரம் குறித்து வேறொரு பதிவில் எழுதியிருக்கிறேன்.) விழா ஒன்றுக்கு ஏற்பாடாகி, விழா மேடையில் வெற்றி பெற்ற எழுத்தாளர்களுக்குப் பரிசுகளும் கொடுக்கப்பட்ட பின்பு, சில வாரங்கள் கழித்து, ஓய்வு பெற்ற கல்லூரி முதல்வர் ஒருவரிடமிருந்து, ஒரு கடிதம் வந்தது. சாவியில் வந்த வட்டார வழக்குக் கதையின் கட்டிங் ஒன்றை இணைத்து, அதில் இடம்பெற்றிருந்த ஒரு கெட்ட வார்த்தைக்காகக் கன்னாபின்னாவென்று திட்டி எழுதி, “தரமான சாவி பத்திரிகையில் இப்படியான வார்த்தை இடம்பெறலாமா?” என்று காட்டமாகக் கேட்டிருந்தார்.

அந்தக் கடிதத்திலேயே, “இப்படி நம் பத்திரிகையில் வரலாமா? சீ... கேவலம்!” என்று குறிப்பு எழுதி, என் பார்வைக்கு அனுப்பியிருந்தார் சாவி. நானும் பதிலுக்கு அவர் குறிப்பின் கீழேயே, “தவறுதான்! மன்னிக்கவும். இதற்குத் தண்டனையாக நான் இந்த க்ஷணமே ராஜினாமா செய்கிறேன். சாவி பத்திரிகையின் கௌரவம் என்னால் கெட வேண்டாம்.” என்று எழுதிக் கையெழுத்துப் போட்டுவிட்டு, சாப்பிடக் கொண்டு வந்திருந்த டிபன் பாக்ஸையும் எடுத்துக்கொண்டு, சாப்பிடாமலே, சாவி சாரிடம் சொல்லிக்கொள்ளாமலே. விருட்டென்று கிளம்பி, யார் தடுத்தும் நிற்காமல் வீட்டுக்குப் போய் விட்டேன்.

அப்போது என் கோபத்தில் சற்றும் நியாயமே இல்லை. அது நிச்சயமாகக் கெட்ட வார்த்தைதான். இருந்தாலும், நான் கோபித்துக் கொண்டு கிளம்பிவிட்டேன். காரணம் அப்போதைய என் இளமை முறுக்கு, அதே போன்றதொரு கெட்ட வார்த்தையை எழுத்தாளர் சுஜாதா, பண்பட்ட ஒரு பத்திரிகையில் பயன்படுத்தியிருந்ததால் நான் செய்தது தவறில்லை என்ற ஒரு வாதம், அது மண் மணம் கமழும் மாவட்டக் கதைப் போட்டியாதலால் இயல்பாக இருக்கட்டுமே என்பதால்தான் நான் அதை எடிட் செய்யாமல் விட்டிருந்தேன் என்கிற சமாதானம்... தவிர, அப்போது என்னிடம் பணியாற்றிய திருமதி ஷ்யாமா உள்ளிட்ட பத்திரிகைப் பயிற்சிக் குழுவினர் தங்களின் முன்னேற்றத்துக்கு நான் முட்டுக்கட்டையாக இருப்பதாக நினைத்தது என எல்லாமாகச் சேர்ந்து எனக்குள் ஒரு வேகத்தை ஏற்படுத்தி, வெளியேறச் செய்துவிட்டது.

பொதுவாக, இதற்கு முன்பு இரண்டு முறை சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு போயிருந்தாலும், ஓரிரு மாதங்கள் பிகு செய்துவிட்டுப் பிறகு சாவி சாரிடமே வந்துவிடுவேன். வேறு பத்திரிகையில் சேர மாட்டேன். ஆனால், இந்த முறை மீண்டும் சாவி பத்திரிகைக்குத் திரும்பி வரவே கூடாது என்ற எண்ணத்தில் நேரே போய் அமுதசுரபி ஆசிரியர் திரு.விக்கிரமன் அவர்களைப் பார்த்து, அந்தப் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்துவிட்டேன்.

சாவியில் அப்போது என் மாதச் சம்பளம் 1000 ரூபாய். ஆனால், அமுதசுரபியில் என் சம்பளம் ரூ.750. ஆனால், அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. கிட்டத்தட்ட ஏழு எட்டு மாதங்கள் அங்கே பணியாற்றியிருப்பேன். சாவி - வார இதழ்; அமுதசுரபி - மாத இதழ். எனவே, வேலை மந்தமாக இருந்தது. நாளெல்லாம் பரபரவென்று ராத்திரியும் பகலுமாக வேலை செய்துவிட்டு, இப்போது நாள் பூரா நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பது கஷ்டமாக இருந்தது. சோம்பேறி ஆகிவிடுவேனோ என்று பயமாக இருந்தது. அதே சமயம், திரும்ப சாவியிடம் போகவும் மனமில்லை.

இந்த நிலையில், என்னை வந்து சந்தித்தார், ‘மின்மினி’ பத்திரிகையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றும் ஒரு நண்பர். அவர் பெயர் மறந்துவிட்டது. ஏற்கெனவே சாவி பத்திரிகையில் விற்பனைப் பிரிவில் பணியாற்றிக்கொண்டு இருந்தவர் அவர். அப்போது லேசாகப் பழக்கம் உண்டு.

பத்திரிகை உலகில் ஆழ்வார் என்கிற பெயர் அப்போது பிரசித்தம். பெரிய பத்திரிகைகளுக்குதான் கோட்டா மூலம் நியூஸ்பிரிண்ட் பேப்பர் கிடைக்கும். சின்ன பத்திரிகைகளுக்கு நியூஸ்பிரிண்ட் காகிதம் சப்ளை செய்துகொண்டிருந்தவர் ஆழ்வார்தான். அவருடைய மகன் - மன்னிக்கவும், சம்பவம் நடந்து 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால், பல பேரின் பெயர்கள் மறந்துவிட்டன. - மின்மினி, போலீஸ் செய்தி என இரண்டு மூன்று பத்திரிகைகளை நடத்திக்கொண்டு இருந்தார். மின்மினி வார இதழைப் பார்த்துக்கொள்ள ஒருவர் தேவை என்றும், என்னைப் பற்றி அவரிடம் சொன்னதாகவும், தன்னோடு வந்தால் உடனே வேலையில் சேர்ந்துகொள்ளலாம் என்றும், பொறுப்பாசிரியர் பதவியே வாங்கித் தருகிறேன் என்றும் அந்த விற்பனைப் பிரிவு நண்பர் சொன்னார். எனக்கும் சபலம் உண்டாகியது. சாவி இதழ் போலவே சுதந்திரமாக ஒரு பத்திரிகையை நடத்தலாம் என்ற எண்ணமே உற்சாகமாக இருந்தது.

’மின்மினி’ பத்திரிகை அப்போது சௌகார்பேட்டை ஏரியாவில், பத்மனாபா தியேட்டரின் பின்புறம் இருந்தது. அங்கே சென்றேன். விற்பனைப் பிரிவு நண்பர் இருந்தார். ஆழ்வாரின் மகன் ஏதோ பூஜையில் ஈடுபட்டிருப்பதாகவும், சற்றுக் காத்திருக்கும்படியும் சொன்னார். காலையில் 10 மணிக்குச் சென்றவன், கிட்டத்தட்ட மூன்று மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருந்தேன். ‘ஆரம்பமே சரியில்லையே’ என்று தோன்றியது.

2 மணி அளவில் அழைப்பு வந்தது. மேல் மாடியில், ஆழ்வாரின் மகனைச் சந்தித்தேன். அறை முழுக்கச் செம்மண் நிறம் பூசப்பட்டிருந்தது. ஏதோ ஒரு அம்மன் படம் மிக பிரமாண்டமாக சுவரில் மாட்டப்பட்டிருந்தது. சுவர்கள் முழுக்க இன்னும் என்னென்னவோ சாமி படங்கள். சாமந்தி, கதம்பம் என ஏராள மாலைகள் ஒவ்வொரு படத்துக்கும் சூட்டப்பட்டிருந்தன. ஒவ்வொரு படத்துக்கும் முன்னால் உள்ள ஸ்டேண்டில் தட்டுத்தட்டாக ஆப்பிள், சாத்துக்குடி, வாழைப்பழம், எலுமிச்சை எனப் பழங்கள்... உதிரிப் பூக்கள். விபூதி, குங்குமம் பரப்பிய தட்டுகள். எலுமிச்சைப் பழங்கள் பாதி பாதியாக நறுக்கப்பட்டு, வட்டப்பகுதியில் குங்குமம் தோய்க்கப்பட்டிருந்தது. சாம்பிராணி மணம் கமழ்ந்துகொண்டு இருந்தது. கிட்டத்தட்ட சீரியல்களிலும் சினிமாக்களிலும் காட்டப்படும் ஒரு மந்திரவாதியின் அறை போலவே இருக்கவும், எனக்கு உள்ளூர கொஞ்சம் திகிலாக இருந்தது.

ஆழ்வார் மகன் தனது கடைசி கட்ட தீபாராதனையை முடித்துவிட்டு, தனது நாற்காலியில் வந்து அமர்ந்தார். அதுவரை நின்றிருந்த நான் அவர் எதிரே போய் நின்றேன். ‘உட்காருங்க’ என்றார். எதிரில் இருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன்.

ஆழ்வார் மகன் பார்ப்பதற்கு அச்சு அசல் நடிகர் முரளி மாதிரி இருந்தார். அதே கறுப்பு நிறம். அதே வட்ட முகம். நெற்றியில் கட்டை விரலால் கீழிருந்து மேலாக நீளமாக இழுத்தது போல் குங்குமத் தீற்றல்.

“அ... சொல்லுங்க மிஸ்டர்...” என்றார். “ரவி” என்றேன் சலிப்பாக.

“அ, மிஸ்டர் ரவி! சொன்னாரு, நீங்க டேலண்ட்டான ஆளுன்னு. எனக்கும் அப்படி ஒருத்தர்தான் தேவை. நீங்க உடனே ஜாயின் பண்ணிக்கலாம். குழந்தைகள் பத்திரிகையும் ஒண்ணு ஆரம்பிக்கலாம்னு இருக்கேன். அதுக்கு வாண்டுமாமாவைத்தான் எடிட்டரா போடலாம்னு பேசியிருக்கேன். நீங்க மின்மினியைப் பார்த்துக்கோங்க. மாசம் என்ன சம்பளம் எதிர்பார்க்கிறீங்க?” என்றார் முரளி. (அவர் பெயரை முரளி என்றே வைத்துக் கொள்வோமே?)

“1,500 தருவீங்கன்னு சொல்லித்தான் கூட்டிட்டு வந்தார்” என்றேன், நண்பரைக் கை காட்டி. அப்போது அது மிக அதிகமான சம்பளமாக எனக்குத் தோன்றியது.

“ஆமாம், ஆமாம்! தந்துடலாம். அதுல ஒண்ணும் பிரச்னை இல்லை. நீங்க நாளையிலேர்ந்தே வந்துடுங்க!” என்றார்.

மற்றபடி, பொதுவாகப் பத்திரிகை உலகம் பற்றிப் பேசினார். மின்மினியின் சர்க்குலேஷனை குமுதத்தை மிஞ்சிக் காட்டவேண்டும் என்பதுதான் தனது லட்சியம் என்றார். உண்மையில் அப்போது ‘மின்மினி’ பத்திரிகை படிப்பதற்கு சுவாரசியமான பத்திரிகையாகத்தான் இருந்தது. எனது ஒரு பக்கக் கதை ஒன்றும் சில ஆண்டுகளுக்கு முன்பு, நான் சாவியில் வேலைக்குச் சேர்வதற்கு முன்பு, அதில் பிரசுரமாகியிருந்தது. எனவே, எனக்கு அங்கே வேலையில் சேருவது மகிழ்ச்சியான விஷயமாக இருந்தது.

சுமார் அரை மணி நேரம் பேசிக்கொண்டு இருந்த பின்னர், முரளியிடம் விடைபெற்றுக் கிளம்பினேன்.

மறுநாள் காலையில், அமுதசுரபி ஆசிரியர் திரு.விக்கிரமனை மாம்பலம் ஜெய்சங்கர் தெருவில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து, எனது ராஜினாமா கடிதத்தைக் கொடுத்தேன். விஷயத்தைச் சொன்னேன். “சம்பளத்துக்காகன்னு இல்லை சார், தினம் தினம் பரபரப்பா வேலை செய்துட்டு, இங்கே நாளெல்லாம் சும்மா உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். மாதப் பத்திரிகையில அத்தனை வேலை இருக்காது. மின்மினி வார இதழ்; தவிர, பொறுப்பாசிரியராக இருந்து, என் ரசனைக்கேற்ப நடத்த ஒரு வாய்ப்பு கிடைச்சிருக்கு. அதான், அங்கே சேரலாம்கிற முடிவுக்கு வந்திருக்கேன்” என்றேன்.

“வாழ்த்துக்கள் ரவி! வெற்றிகரமா நடத்துங்க. சாவி கிட்டே கத்துக்கிட்ட அனுபவம், நீங்க அந்தப் பத்திரிகையை நல்லா கொண்டு வருவீங்க” என்று மனமுவந்து ஆசீர்வதித்தார் விக்கிரமன்.

நான் கிளம்பும்போது, “ரவி! அங்கே ஏதாவது பிரச்னைன்னா, தயங்கவே வேண்டாம். நேரா இங்கே வரலாம். அமுதசுரபியின் கதவுகள் உங்களுக்காக என்னிக்கும் திறந்தே இருக்கும்” என்றார்.

நன்றி சொல்லி விடைபெற்றேன். வீட்டுக்குச் சென்று சாப்பிட்டுவிட்டு, மதியத்துக்கு ஒரு எவர்சில்வர் டப்பாவில் தயிர்சாதம், ஊறுகாய் எடுத்துக்கொண்டு, நேரே சௌகார்ப்பேட்டைக்குப் போனேன்.

சம்பிரதாயமாக மீண்டும் முரளியை அவரது அறையில் சென்று சந்தித்தேன்.

அப்போது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் அவர்.

*****

இந்தப் பதிவை எழுதிக்கொண்டு இருக்கும்போதே, இந்த விஷயங்களை ஏற்கெனவே எழுதிவிட்டேனோ என்று சந்தேகமாக இருந்தது. எனவே, என் பழைய பதிவுகளைத் தேடிப் பார்த்தேன். ஆமாம், அனைத்தையும் ஒன்று விடாமல் விலாவாரியாக எழுதியிருக்கிறேன். என்ன... சின்னச் சின்ன முரண்பாடுகள் பழைய பதிவில் உள்ளன. யானைகவுனியில் உள்ள பழனியப்பா தியேட்டர் என்று லொகேஷனை எழுதியிருக்கிறேன். அது தப்பு. அது பத்மநாபா தியேட்டர்தான். அதே போல், ராஜினாமா கடிதத்தை அமுதசுரபி அலுவலகத்தில் வைத்து திரு.விக்கிரமனிடம் கொடுத்ததாக எழுதியுள்ளேன். இல்லை. நன்றாக நினைவு இருக்கிறது. வீட்டில்தான் கொடுத்தேன். இப்படிச் சின்னச் சின்ன தவறுகள். மற்றபடி, ஏற்கெனவே எழுதிய விஷயங்களையே மீண்டும் எழுதுவது அர்த்தமற்றது. சொன்னதையே மீண்டும் மீண்டும் தொணதொணவென்று சொல்லிக் கொண்டு இருப்பது ஞாபகமறதி போன்ற ஒரு கோளாறு. அந்தக் கோளாறு வருவதற்கு எனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் வயதாகவேண்டும். எனவே, பதிவைத் தொடராமல் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

மற்றபடி, இந்தப் பதிவின் மர்மத்தையும் அதைத் தொடர்ந்த நிகழ்வுகளையும் படிக்க விரும்புகிறவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பழைய பதிவுகளின் லிங்க்குளைக் கிளிக்கிப் படித்துக் கொள்ள வேண்டுகிறேன்.

அன்னைக்கு ஒரு சவால்!

அரவணைத்தார் அன்னை!

.

Saturday, January 07, 2012

பொக்கிஷம் பரிசு யாருக்கு?

‘பொக்கிஷம்’ புத்தகப் பரிசுப் போட்டிக்கு வந்த விடைகளை இன்று பதிவிட்டுவிட்டேன். நாளை வரை விடைகளை அனுப்பலாம் என்று சொல்லியிருந்தேன். ஆனாலும், இனிமேல் விடைகள் வர வாய்ப்பில்லை என்பதாலும், அப்படியே வந்தாலும் முதலில் அனுப்பியவருக்கே பரிசு என்பதால் பரிசுக்குரியவர் மாறப்போவதில்லை என்பதாலும் விடைகளை வெளியிடுவதில் தவறில்லை என வெளியிட்டுவிட்டேன்.

ஓர் எழுத்தாளரின் பேச்சைக் கேட்பதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலிலேயே காத்திருந்தேன். என்னை உள்ளே விட வாட்ச்மேன் மறுத்துவிட்டார். யார் அந்த எழுத்தாளர்? என்னுடைய எந்த வலைப்பூவில், எந்த ஆண்டு, எந்த மாதம், என்ன தேதியில் எழுதிய பதிவில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்? அந்தப் பதிவின் தலைப்பு என்ன?

இதுதான் பொக்கிஷம் பரிசுக்கான கேள்வி. இதற்கான சரியான விடை: அந்த எழுத்தாளர் திரு.அசோகமித்திரன். எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில், 2009-ம் ஆண்டு, ஜூன் மாதம் 26-ம் தேதி எழுதிய பதிவில் இதைக் குறிப்பிட்டுள்ளேன். அந்தப் பதிவின் தலைப்பு: (அசோக)மித்திரனின் மித்திரன் நான்!

இதற்கான சரியான விடையை முதலில் பின்னூட்டம் இட்டவர் திரு.சிவானந்தம்.

அவர் தனது இந்திய முகவரியினை உடனே என் இ-மெயிலுக்கு அனுப்பி வைத்தால், ‘பொக்கிஷம்’ புத்தகத்தை அவருக்குப் பரிசாக அனுப்பி வைப்பேன்.

என் வலைப்பூக்கள் பற்றி ஆக்கபூர்வமாக விமர்சனம் எழுதி அனுப்பும்படி இன்னொரு போட்டியும் வைத்திருந்தேன். இதுவரை மொத்தம் 7 கட்டுரைகள் மட்டுமே வந்துள்ளன. நாளை வரை கடைசி தேதி கொடுத்திருப்பதால், நாளை இரவு இது குறித்து மீண்டும் எழுதுகிறேன்.

நிற்க.

‘என் டயரி’ வலைப்பூவில், ‘பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்’ என்னும் பதிவில் ஒரு படம் வெளியிட்டு, அந்த அழகி யார் என்று கேட்டிருந்தேன். சரியான விடை அனுப்புகிறவருக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு எனச் சொல்லியிருந்தேன்.

சரியான விடை: பூங்குழலி.

இதை முதலில் பின்னூட்டமாக அனுப்பியவர் ‘யாழ் மைந்தன்’. திரு.யாழ் மைந்தன் தனது முகவரியை இன்னும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என்பதால் பரிசுப் புத்தகம் அனுப்பி வைக்க இயலவில்லை. இந்தத் தகவலை எனது ‘உங்கள் ரசிகன்’ பதிவில் கொடுத்திருந்தேன்.

இருப்பினும், இன்று வரையில் யாழ் மைந்தனின் முகவரி எனக்குக் கிடைக்கவில்லை. அவரும் என்னை தொலைபேசி மூலமாகவும் தொடர்பு கொள்ளவில்லை. ஒருக்கால் அவர் எனது ‘உங்கள் ரசிகன்’ வலைப்பூ பதிவைப் பார்த்திருக்க மாட்டாரோ என்ற ஐயத்தில் இதே பதிவை ‘என் டயரி’யிலும் மீண்டும் பதிந்துள்ளேன்.

ஜனவரி 15 தேதிக்குள்ளாக திரு. யாழ் மைந்தன் தனது இந்திய முகவரியை எனது இ-மெயிலுக்கு (nraviprakash@gmail.com) அனுப்பி வைத்தால், உடனே விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்றைப் பரிசாக அனுப்பி வைக்கிறேன்.

ஜனவரி 15 தேதி வரையிலும் திரு.யாழ் மைந்தனின் முகவரி எனக்குக் கிடைக்கவில்லையெனில், அந்தக் குட்டிப் புத்தகப் பரிசு யாரோ ஒருவனுக்குக் கிடைக்க வாய்ப்புண்டு.

அடடா..! மரியாதைக் குறைவாகச் சொல்லலீங்க. ‘யாரோ ஒருவன்’ என்னும் பெயரில் வலைப்பூ எழுதி வருபவர்தான் யாழ் மைந்தனுக்கு அடுத்தபடியாக சரியான விடையைப் பின்னூட்டம் இட்டவர்.

என்ன ஆச்சரியம் பாருங்கள்... முதலில் சரியான விடையை எழுதி அனுப்பிய இருவருமே ‘யா’ எழுத்தில் தொடங்குகிறது!
.

Monday, January 02, 2012

தாழ்ந்த கண்ணோட்டமா? எனக்கா?!

டந்த 2009-ம் வருடம், ஜூன் மாதம் ‘நானும் என் சாவி சகாக்களும்’ என்னும் தலைப்பில், எனக்கு சீனியர்களாக, மும்மூர்த்திகளாக விளங்கிய சி.ஆர்.கண்ணன், ரமணீயன் மற்றும் சத்தீஷ் கே.வைத்தியநாதன் மூவரைப் பற்றி எழுதிவிட்டு, அடுத்து எனக்கு உதவியாளர்களாக வந்து சேர்ந்த எட்டு பேரைப் பற்றியும் எழுதியிருந்தேன்.

அதில், ‘மூவரும் சென்ற பின்னர், சாவியில் என் ஆட்சிதான்! எனக்கு உறுதுணையாக இருக்க உதவியாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும்படி சாவி ஒரு யோசனை சொன்னார். அதன்படி, சாவியில் ஜர்னலிசம் பழக விருப்பம் உள்ளவர்கள் (விகடன் மாணவர் திட்டம் போல்) தங்கள் படைப்பு ஒன்றையும், போட்டோ, பயோடேட்டாவையும் இணைத்து அனுப்பச் சொல்லி சாவியில் அறிவிப்பு வெளியிட்டேன். ஆயிரக்கணக்கில் வந்து குவிந்த விண்ணப்பங்களில் நானே எட்டு பேரைத் தேர்ந்தெடுத்தேன். இருவர் ஆண்கள்; ஆறு பேர் பெண்கள். அவர்கள் வருமாறு...’ என்று குறிப்பிட்டுவிட்டு, அந்த எட்டு பேரைப் பற்றியும் சிறுகுறிப்பு வரைந்திருந்தேன்.

அவர்களில் ஒருவர் ஷ்யாமா. ‘சாவியில் சில நாட்கள்’ என்னும் தலைப்பில், சாவியில் பணியாற்றிய அனுபவங்களைச் சுவைபடத் தொகுத்து, ஒரு புத்தகமாக வெளியிட்டுள்ளார் அவர். அதன் ஒரு பிரதியை எனக்கும் சமீபத்தில் அனுப்பி வைத்திருந்தார்.

208 பக்கங்கள் கொண்ட அந்தப் புத்தகத்தில் என்னைப் பற்றியும் ஓரிரு பாராக்கள் எழுதியுள்ளார். அதற்காக அவருக்கு என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துவிட்டு, அந்த வரிகளை அப்படியே உங்கள் பார்வைக்கு இங்கே பதிவிட்டுள்ளேன்.

“சாவி எடிட்டோரியலின் நடுநாயகமாக எங்கள் பயிற்சிக் காலகட்டத்தில் செயல்பட்டுக் கொண்டிருந்தவர் திரு.ரவிபிரகாஷ். (இப்போது ஆனந்தவிகடனின் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்). இப்போது அவர் எப்படிப்பட்டவர் என்று எனக்குத் தெரியாது. அப்போது அவர் எங்கள் கண்களுக்கும் மனதுக்கும் மிகவும் கண்டிப்பானவராகவும் கறாரானவராகவுமே தென்பட்டார். அதிகம் புன்னகைக்க மாட்டார். அவருடன் பழகலாம் என்று தோன்றுகின்ற அளவிற்கு ஸ்நேகமும் காண்பிக்க மாட்டார். இவர் எங்களை ஊக்குவித்ததாகவும் யாரும் உணரவில்லை. எடிட்டோரியலுக்குள் நுழைந்து, அவரிடமிருந்து நாங்கள் எதையும் கற்றுக்கொண்டுவிட முடியவில்லை. எங்களுக்குள் இது ‘இவர்கள் (எங்களை) முன்னேற்றத்தைத் தடுத்துவிட வேண்டும்’ என்கிற ரீதியில் கங்கணம் கட்டிக்கொண்டு அவர் செயல்படுகிறார் என்றும் சொல்லிவிட முடியாதபடி, அவர்... அவராக மட்டுமே செயல்பட்டுக் கொண்டிருந்தது எடிட்டோரியலுக்கும் எங்களது ரிப்போர்ட்டிங் அறைக்கும் இடையே மிக உயர்ந்த குறுக்குச் சுவரை எழுப்பி இருந்தது என்று வேண்டுமானால் சொல்லலாம். பின்னாட்களில் அனுராதா சேகரும் லோகநாயகியும் அவருடன் சற்றே பழகுவதற்கான வாய்ப்பினைப் பெற்றிருந்தார்கள் என்று கேள்விப்பட்டேன்.”

மேலே கொடுக்கப்பட்ட வரிகள் பக்கம் 120-ல். இதையடுத்து 170-ம் பக்கத்தில்... சில்க் ஸ்மிதாவை பேட்டி எடுக்கச் சென்று வந்ததை விவரித்துவிட்டுத் தொடர்கிறார் ஷ்யாமா.

“சாவி அவர்கள், சில்க்கின் புகைப்படங்களைச் சில விநாடிகள் பார்த்துக்கொண்டிருந்தார். ‘சரி... இவளை பின் அட்டைல வரிசையா போடச் சொல்லு ரவிபிரகாஷ்கிட்ட...’ எனக்குச் சந்தோஷமாய் இருந்தது. அட்டையில் சில்க் இடம்பெறப் போறாளே என்று. எந்தக் காரணத்தால் இந்த முடிவு மாறிவிடக் கூடாது என்று நினைத்து, “சார், நான் சொன்னா ரவிபிரகாஷ் கேட்கமாட்டார் சார்... ‘பின் அட்டையில் போடு’ன்னு ஒரு ஸ்லிப் எழுதிக் கொடுங்க சார்’ என்றேன்.

‘ஏன், உனக்கும் அவனுக்கும் ஆகாதா?’

‘அதெல்லாம் இல்லை சார்... அவர் நீங்க சொன்னாத்தான் கேப்பார். நாங்கெல்லாம் அப்புறம் வந்தவங்கதானே... நாங்க சொல்லி அவர் செய்யறதுக்கு அவ்ர் பொஸிஷன் இடம் கொடுக்காது’.

‘அதென்ன பொஸிஷன்... இங்கெ அதெல்லாம் யாருக்கும் கிடையாது. புரிஞ்சுதா... போ’ என்றுவிட்டு கடுகடுப்பாய் ஒரு துண்டுக் காகிதத்தில் ‘பின் அட்டைக்கு’ என்று எழுதி, ‘போ... போய் அவன் கிட்ட கொடு’ என்றார்.

நான் கீழே இறங்கியதும், பிழை திருத்தும் சம்பத் அவர்களை அழைத்து, ‘இதை சாவி சார் ரவிபிரகாஷ்கிட்ட கொடுக்கச் சொன்னார்’ என்று கூறி அவர் கையில் கொடுத்தனுப்பி, ‘எடிட்டோரியல் இன்சார்ஜ்’ ஆகவும், உதவி ஆசிரியர் நிலையிலும் இருந்த ரவிபிரகாஷை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்தேன். ஏனோ தெரியவில்லை... எங்களுக்குள் மனம் வருத்தப்படும்படி எதுவும் நடந்ததில்லை. ஆனால், எனக்கு அவருடன் பழகுவது அவ்வளவு சுலபமாக இருந்ததில்லை. பல நேரங்களில் பத்திரிகையாளர் பயிற்சிக்கு வந்திருக்கும் எங்களை அவர் தாழ்ந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக எனக்கு... (எனக்கு மட்டுமே) பட்டுக்கொண்டிருந்தது. இது தவறான பார்வையாகவும் இருக்கலாம்.

எது எப்படியோ... 11.1.89 தேதியிட்ட தேதியிட்ட சாவியின் பின் அட்டையில் சில்க் ஸ்மிதாவின் மூன்று வண்ணப்படங்கள் மிக அழகாக ரவிபிரகாஷ் மற்றும் அவருடைய குழுவினரால் லே-அவுட் செய்யப்பட்டு வெளிவந்தது. அந்தச் சாவியின் அட்டையில் இன்னுமொரு சற்றே பிரமிப்பான, என்னைச் சந்தோஷக் கடலில் ஆழ்த்திய ஒரு விஷயமும் இருந்தது. அது என்னவென்றால், பின் அட்டையில் என் பெயரையும் இடம்பெறச் செய்திருந்ததுதான். பெயரில் என்ன இருக்கிறது என்பார்கள். பெயரெடுத்தவர்களுக்குதான் பெயரின் அருமை தெரியுமோ என்னவோ? சம்பத் அந்த வார சாவி இதழ் வெளிவந்ததும், அதை எடுத்துக்கொண்டு என்னிடம் வந்தார். ‘பாத்தியா, பின் அட்டைல உன் பெயரும் வந்திருக்கு’ என்றார். ‘ஆமாம் சம்பத்... ரொம்ப ஆச்சர்யமா இருக்கு’. ‘உனக்கு அதிர்ஷ்டந்தான் போ... கிழம் (சாவியை அவர் அப்படித்தான் சொல்வார்) அட்டைல நேம் கிரெடிட் கொடுக்கவே மாட்டார். என்னமோ... உனக்குக் கொடுத்துட்டார். ரொம்ப கொடுத்து வெச்சிருகே...’ அட்டகாசமாய் சிரித்துக்கொண்டே போனார் சம்பத்.”

அவ்வளவுதான் ஷ்யாமா என்னைப் பற்றி அந்தப் புத்தகத்தில் எழுதியிருந்த குறிப்புகள். எனக்கு ஒரு விஷயம் மட்டும் ஆச்சர்யமாக இருக்கிறது. எதைக் கொண்டு அவர் என்னைப் பற்றி அப்படி ஒரு கணிப்புக்கு வந்தார்?! “எங்கள் முன்னேற்றத்தைத் தடுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார் என்றும் சொல்லிவிட முடியாதபடி...”, “பயிற்சிக்கு வந்திருக்கும் எங்களை அவர் தாழ்ந்த கண்ணோட்டத்துடன் பார்ப்பதாக எனக்கு (எனக்கு மட்டுமே) பட்டுக்கொண்டிருந்தது” என்றெல்லாம் என்னைப் பற்றித் தானே சில யூகங்களைக் கற்பித்துக்கொள்ள வேண்டிய அவசியம் என்ன நேர்ந்தது? ‘எங்களுக்குள் வருத்தப்படும்படி எதுவும் நடந்ததில்லை’ என்றும் அவரே இதில் சொல்லியிருக்கிறார். அப்படியென்றால், தனது சந்தேகங்களை நேரடியாக அப்போதே என்னிடம் கேட்டிருக்கலாமே? ஏன் செய்யவில்லை?

சாவி சார் அன்றைக்கு சில்க் ஸ்மிதாவின் படங்களை ‘பின் அட்டைக்கு’ என்று குறிப்பெழுதித் தந்தாரே தவிர, அதற்குப் பின்பு அவர் அதில் தலையிடவே இல்லை. பின அட்டையில் ஷ்யாமாவின் பெயரைப் போட வேண்டும் என்றும் அவர் சொல்லவில்லை. நானேதான் போட்டேன்.

எனக்கு உதவியாளர்களாக நானே எட்டுப் பேரைத் தேர்ந்தெடுத்துவிட்டு, அவர்களை முன்னேற விடாமல் தடுப்பதில் எனக்கென்ன லாபம்? ஆனால், அப்படியொரு எண்ணம் எப்படியோ அவர்கள் மனத்தில் விஷ வித்தாக ஆழப் பதிந்திருப்பதை நான் உணர்ந்துகொண்டேன்.

இந்தச் சூழ்நிலையில், ஆசிரியர் சாவியிடம் கோபித்துக்கொண்டு வெளியே செல்ல வேண்டிய கட்டாயம் நேரிட்டது. பொதுவாக ஏற்கெனவே இரண்டு முறை நான் இப்படிக் கோபித்துக்கொண்டு போயிருந்தாலும், அதிக பட்சமாக இரண்டு மாத காலத்துக்குள் சாவியிடமே வந்திருந்தேன். ஆனால், அந்த முறை அப்படி நான் மீண்டும் சாவி பத்திரிகைக்குத் திரும்பி வர விரும்பவில்லை. (அதற்கு முக்கியமானதொரு காரணம் இருந்தது. அதைக் கடைசியில் சொல்கிறேன்.) எனவே, ‘அமுதசுரபி’ பத்திரிகையில் சேர்ந்துவிட்டேன்.

ஆனால், ஏழெட்டு மாத காலம் அங்கே பணியாற்றிவிட்டு, பின்பு மீண்டும் சாவியிடமே வந்தது ஒரு சுவாரஸ்யமான கதை. அதை மிக விரைவில் அடுத்த பதிவில் எழுதுகிறேன்.

சரி, ஏன் அந்த முறை திரும்பி வரக்கூடாது என்று முடிவெடுத்தேன்?

அத்தனை பேரின் முன்னிலையிலும் சாவி சிரித்துக்கொண்டே இதையேதான் யதார்த்தமாகக் கேட்டார்... “என்ன ரவி, ஒவ்வொரு முறையும் நீ கோவிச்சுக்கிட்டுப் போனா ஒரு மாசம், ரெண்டு மாசத்துக்குள்ள திரும்பி வந்துடுவே! இப்ப கொஞ்சம் கூடுதலா இடைவெளி விழுந்துடுச்சு போலிருக்கே? என்ன விஷயம்?”

“நான் இவங்க முன்னேற்றத்துக்கு இடைஞ்சலா இருக்கிறதா இவங்க நினைக்கிறாங்கன்னு புரிஞ்சுது. வேண்டாம். என்னால் இவங்க யாருடைய முன்னேற்றமும் தடைப்பட வேண்டாம். நான் யாருக்கும் தடைக்கல்லா இருக்க விரும்பலே.அதுதான் காரணம்”என்று நானும் அவர்கள் முன்னிலையிலேயே ஒளிவுமறைவின்றி பதில் சொன்னேன்.

அன்றைய என் சாவி சகாக்களில் திருமதி அனுராதா சேகர் மங்கையர் மலரில் இருக்கிறார்; திரு.சம்பத் நக்கீரனில் பணியாற்றுகிறார்.லே-அவுட் ஆர்ட்டிஸ்ட்டுகள் திரு.மோகனும் திரு.ராஜேந்திரனும் தினமணியிலும் தினமலரிலும் பணியாற்றிக்கொண்டு இருக்கிறார்கள். லோகநாயகி குமுதம் சிநேகிதியில் ஆசிரியராக இருக்கிறார். அப்போது எங்களுடன் பணியாற்றிய கார்ட்டூனிஸ்ட் ஹரன் இப்போதும் ஆனந்த விகடனிலும் சக்தி விகடனிலும் படங்கள் வரைந்துகொண்டு இருக்கிறார். (தினமணியில் கார்ட்டூன்கள் வரையும் ‘மதி’ பிறகு வந்தவர்). மதிப்புக்குரிய திரு.ராணி மைந்தன் பிபிசியில் செய்தித் தொகுப்பு செய்துகொடுத்துக்கொண்டு இருக்கிறார். விகடன் பிரசுரத்துக்கும் மொழி மாற்றங்கள் செய்து தருகிறார். சாவி நினைவு நாளன்று இவர்கள் அனைவரும் அநேகமாக ஒன்றுகூடப் போகிறார்கள். எனக்கே தெரியாமல் எனக்குத் தாழ்ந்த கண்ணோட்டம் இருந்ததா என இவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம் என்று காத்திருக்கிறேன்.

“பெரும்பாலான பிரச்னைகளுக்குக் காரணம் நமது யூகங்கள்தான்!” என்று ஒரு பொன்மொழி உண்டு. அது ஷ்யாமா விஷயத்தில் சரியாகப் பொருந்தியிருக்கிறது. வேறென்ன சொல்ல?
.

Sunday, January 01, 2012

இதோ, ‘பொக்கிஷம்’ பரிசுப் போட்டி!

நான் டூ-வீலர் ஓட்டத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதற்கு முன்பும் டூ-வீலர் ஓட்டியிருக்கிறேன் என்றாலும், அது நான் சாவியில் பணியாற்றிய 1989 - 90-ல். அப்போது சென்னை சாலைகளில் கூட்டம் அவ்வளவாக இல்லை. தவிர, வேகம் அதிகம் இல்லாத, சைக்கிள் மாதிரியான வாகனம் அது. ‘மோஃபா’ என்று பெயர்.

மற்றபடி, நான் தொடர்ந்து டூ-வீலர் ஓட்டுவது இப்போதுதான். ஆரம்பத்தில் பயமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. என் அனுபவத்தில், வாகனங்கள் ஓட்டுபவர்கள் எல்லாருமே மிகச் சரியாகத்தான் ஓட்டுகிறார்கள். திறமையாகத்தான் ஓட்டுகிறார்கள். ஆனாலும், அங்கங்கே விபத்துக்கள் நடப்பதற்குக் காரணம்... அவசரம், அசிரத்தை, மற்றவரை முந்திச் செல்ல வேண்டும் என்கிற வெறி மற்றும் பழுதான சாலைகள் ஆகியவைதான்.

டூ-வீலர் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை:

1) வேகமாகச் செல்வதா, மெதுவாகச் செல்வதா? எது பாதுகாப்பான பயணத்துக்கு உகந்தது? என்னைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வாகனத்துக்கும் தகுதியான வேகம் ஒன்று இருக்கும்; அதே போல், ஒவ்வொருவரின் திறமைக்கேற்பவும் வேகம் மாறுபடும். நான் 55 கி.மீ. வேகத்தில் செல்கிறேன். நெரிசல் மிகுந்த இடங்களில் வேகம் குறையும். என்றாலும், என் சராசரி வேகம் 55 கி.மீ. இவ்வளவு வேகம் ஆகாது என்று 40 கி.மீ வேகத்தில் வேண்டுமென்றே குறைத்து மந்தமாக ஓட்டியபோதெல்லாம் விபத்து நேரிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. எனவே, ஒவ்வொருவருக்கும் இயல்பான வேகம் என ஒன்றிருக்கும். அதற்கு மேலேயும் செல்லாதீர்கள்; கீழேயும் செல்லாதீர்கள். உங்கள் இயல்புப்படி ஓட்டுங்கள்.

2) கார், வேன் போன்ற வாகனங்களைப் பின்தொடரும்போது கவனம் தேவை. பெரிய பள்ளத்தை அவற்றின் சக்கரங்கள் அணைத்தாற்போல் சென்றுவிடும். பின் தொடரும் நீங்கள் சட்டென்று எதிர்ப்படும் பள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழ நேரிடும்.

3) உங்கள் டிராக்கிலேயே செல்லுங்கள். சடாரென்று இடப் பக்கமோ வலப்பக்கமோ வளைத்து ஓட்டாதீர்கள். குறிப்பாக, முன் செல்லும் வாகனத்தை ஓவர் டேக் செய்யவேண்டுமென்றால், முன்னதாகவே தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ப உங்கள் வண்டியை ஒதுக்கி ஓட்டுங்கள். அல்லது, வேறு ஏதாவது காரணத்தால் முன் வாகனம் நின்று, நீங்கள் கடந்துதான் போகவேண்டும் என்றால், பின் வரும் வாகனங்களைப் போகவிட்டு, நிதானித்துக் கடக்கவும்.

4) ரியர் வியூ மிர்ரர் இருக்கிறதே என்பதற்காக அடிக்கடி அதைப் பார்க்கவேண்டும் என்பதில்லை. வலப்பக்கமோ இடப்பக்கமோ திரும்பும்போது ஓர் எச்சரிக்கைக்குப் பார்த்துக்கொண்டால் போதுமானது. டிராஃபிக்கில் வேகமாகப் போய்க்கொண்டிருக்கும்போது ரியர் வியூ மிர்ரரைப் பார்த்தால், சாலையிலான கவனம் சிதறுகிறது என்பதோடு, உங்களையொட்டி பின்னால் வேகமாக வந்துகொண்டிருக்கும் வாகனம் எங்கே உங்கள் மீது மோதிவிடுமோ என்கிற அநாவசியமான பயம் ஏற்பட்டு, அதிலேயே தடுமாறி விழும்படி ஆகிவிடும்.

5) உங்கள் பாதையில் திடுமென பள்ளத்தைப் பார்த்தால், சட்டென்று வளைத்துக் கடக்க முயலாதீர்கள். பின்தொடர்பவர்கள் சுதாரிக்க முடியாமல் உங்கள் வண்டி மீது மோதும்படியாகிவிடும். எனவே, முன்கூட்டியே மேடு பள்ளங்களைப் பார்த்துக் கவனமாக ஓட்டுவதே சிறந்தது. அல்லது, எதிர்பாராமல் பள்ளம், மேடு கண்ணில் பட்டது என்றால், வண்டியின் வேகத்தைக் குறைத்து, பள்ளத்தை வளைத்துக்கொண்டு செல்லவும். பள்ளம் அல்லது மேடு சிறியதுதான் என்றால், பேசாமல் வண்டியை இறக்கி ஏற்றிச் செல்வதே நலம்.

6) சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது திடீர் திடீரென பிரேக் பிடித்து நிற்காதீர்கள். அதுவும் தேவையே இல்லாமல் சடன் பிரேக் போடாதீர்கள். சிக்னல் வந்தாலோ, டிராஃபிக் ஜாம் என்றாலோ அதற்கேற்ப வேகத்தைக் குறைத்து ஓட்டிக்கொண்டு போய் நிறுத்துங்கள்.

7) வெகுகாலம் சைக்கிள் ஓட்டிப் பழகியவர்கள் திடுமென டூ-வீலர் ஓட்டத் தொடங்கினால், பிரேக் பிடித்து காலை அழுத்தமாக ஊன்றி நிற்கத் தோன்றும். அது ஆபத்தானது. காலூன்றி நிற்கும்போது, வண்டி கொஞ்சமும் சாயக் கூடாது. அப்படிச் சாய்ந்தால் வண்டியின் கனத்தை உங்களால் சமாளிக்க முடியாது. எனவே, இரண்டு பக்கமும் தரையில் லேசாகக் கால் படும்படியாக நிற்பதே சரியான முறை.

8) சாலைத் திருப்பங்களில் கண்டிப்பாக ஹாரன் செய்யுங்கள். அதே போல் வலப் பக்கம் திரும்பப் போகிறீர்களா, இடப் பக்கமா என்பதற்கேற்ப சிக்னல் விளக்கை எரிய விடுங்கள். சாலையில் திரும்பியதும், மறக்காமல் சிக்னல் விளக்கை அணையுங்கள். இல்லையெனில், நீங்கள் திரும்பப் போகிறீர்கள் என்று நினைத்து பின் தொடரும் வாகனம் உங்களை எதிர்ப்பக்கமாக வேகமாகக் கடக்க முயலும். சரியாக நீங்களும் அந்தப் பக்கம் வளைத்துத் திரும்ப, விபத்து நேரிடும்.

9) சாலையில் வாகனப் போட்டி எதுவும் நடத்திப் பரிசு கொடுக்கப் போவதில்லை. எனவே, யாரேனும் உங்களை வேகமாக முந்திச் சென்றால், பதிலுக்கு நீங்களும் வேகம் எடுத்து அவர்களை முந்தப் பார்க்காதீர்கள். பெரும்பாலும் பெண்கள் தங்களை வேகமாக முந்திச் செல்வதைப் பல ஆண்கள் விரும்புவதில்லை. ஏதோ தங்களுக்கு இடப்பட்ட சவால் போல வேகமெடுத்துப் பறந்து சென்று ஓவர் டேக் செய்கிறார்கள். வேண்டாமே!

10) வாகனத்தை ஓட்டும்போது சிந்தனையை எங்கோ ஓட விடாதீர்கள். உங்கள் முழுக் கவனமும் சாலையிலேயே இருக்கட்டும். தூக்கக் கலக்கமாக இருக்கும் நேரத்தில் எக்காரணம் கொண்டும் வண்டியை ஓட்டவே ஓட்டாதீர்கள். ‘ஓட்ட முடிகிறதே! ஒன்றும் சிரமமாக இல்லையே!’ என்று நினைக்கலாம். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாக வண்டியை ஓட்ட முடியும்தான். ஆனால், தூக்கக் கலக்கத்தில் நம் மூளை அயர்ச்சியுடன் இருப்பதால், தொலைவில் வரும் வாகனம் என்ன வேகத்தில் வருகிறது, நாம் என்ன வேகத்தில் செலுத்தினால் முந்தின வாகனத்தைப் பாதுகாப்பாகக் கடக்கலாம் என்பன போன்ற கணக்கீடுகளைச் செய்ய முடியாது. இதனால் விபத்து நேரிடும் ஆபத்து உண்டு.

மற்றபடி, தங்கள் அனுபவத்தில் வேறு ஏதேனும் முக்கியக் குறிப்பு சொல்லவேண்டும் என்று தோன்றினால், பின்னூட்டம் இடுங்கள். எனக்கும் மற்றவர்களுக்கும் உதவும்.

இனி, ‘பொக்கிஷம் புத்தகப் பரிசுப் போட்டி’!

1) ஓர் எழுத்தாளரின் பேச்சைக் கேட்பதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலிலேயே காத்திருந்தேன். என்னை உள்ளே விட வாட்ச்மேன் மறுத்துவிட்டார். யார் அந்த எழுத்தாளர்? என்னுடைய எந்த வலைப்பூவில், எந்த ஆண்டு, எந்த மாதம், என்ன தேதியில் எழுதிய பதிவில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்? அந்தப் பதிவின் தலைப்பு என்ன?

இந்தக் கேள்விக்கான சரியான விடையை முதலில் பின்னூட்டமாக அனுப்புபவருக்கு, வரும் புத்தகச் சந்தைக்கு விகடன் பிரசுரம் வெளியிடவிருக்கும், சுமார் ரூ.180 மதிப்புள்ள ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ புத்தகம் அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்படும்.

2) என் வலைப்பூக்கள் பற்றிய தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனத்தை, ரசிக்கும்படியான எழுத்து நடையில் சுவாரஸ்யமாக எழுதி அனுப்புங்கள். சிறந்த விமர்சனக் கட்டுரையை எழுதியவருக்கும் மேற்படி ‘பொக்கிஷம்’ புத்தகம் பரிசாக அளிக்கப்படும். தவிர, அந்தக் கட்டுரையை என் வலைப்பூவில் பிரசுரிப்பேன்.

நிபந்தனைகள்:

1) தாங்கள் சரியான விடை அனுப்பியிருந்தும் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது எனக்குக் கிடைக்கவில்லை எனில், அதற்கு நான் பொறுப்பாக முடியாது. என் பரிசீலனைக்கு வரும் விடைகளிலிருந்து மட்டுமே பரிசுக்குரிய விடைகளை நான் தேர்ந்தெடுக்க முடியும்.

2) இந்திய முகவரிக்கு மட்டுமே என்னால் புத்தகத்தைத் தபாலில் அனுப்பி வைக்க இயலும். எனவே, வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், தயவுசெய்து உங்கள் இந்திய முகவரியைத் தரவும்.

3) முதல் கேள்விக்கான விடையைப் பின்னூட்டமாக அனுப்பலாம். ஆனால், இரண்டாவது கேள்விக்கான விடையை, அதாவது விமர்சனக் கட்டுரையை எனது nraviprakash@gmail.com இ-மெயிலுக்கு மட்டுமே யூனிகோடில் அனுப்பவேண்டும். அல்லது, பி.டி.எஃப் செய்து இணைத்து அனுப்பலாம்.

4) இந்த இரண்டு போட்டிகளிலும் கலந்துகொள்ளக் கடைசி தேதி 8.1.2012. அதற்குப் பின் வரும் விடைகள் பரிசீலனைக்கு ஏற்கப்படமாட்டாது.

5) முதல் கேள்வியைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் சரியான விடைக்கே பரிசு. அதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்கான பரிசு ரசனையின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது. எனவே, பரிசீலனைக்கு வரும் விமர்சனக் கட்டுரைகளில் என் ரசனைக்கு உகந்ததாக ஏதும் இல்லையெனில் எந்தக் கட்டுரைக்கும் பரிசளிக்க இயலாது. அதேபோல், பரிசு அளித்தாலும் அந்தக் கட்டுரையை என் வலைப்பூவில் (தேவைப்பட்டால் சிறுசிறு திருத்தங்களோடு) பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் என் விருப்பத்தைப் பொறுத்தது.

6) பரிசு பெறுபவர்களின் பெயர்களை நான் இதே வலைப்பூவில் 10.1.2012-க்குள் தெரிவித்துவிடுவேன். அவர்கள் தங்களின் இந்திய முகவரியை உடனே என் இ-மெயிலுக்கு முழுமையாக அனுப்ப வேண்டும். உடனடியாக அவர்களுக்கான பரிசுப் புத்தகங்கள் தபாலில் அல்லது கூரியரில் அனுப்பி வைக்கப்படும். ஜனவரி மாத இறுதிக்குள்ளாக எனக்கு முகவரி கிடைத்தால்தான், பரிசுப் புத்தகம் அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும். அதற்கும் தாமதாக முகவரியை அனுப்பினால், பரிசு அளிக்க இயலாது.


நினைவூட்டல்:

‘என் டயரி’ வலைப்பூவில், ‘பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்’ என்னும் பதிவில் ஒரு படம் வெளியிட்டு, அந்த அழகி யார் என்று கேட்டிருந்தேன். சரியான விடை அனுப்புகிறவருக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு எனச் சொல்லியிருந்தேன். சரியான விடை: பூங்குழலி. இதை முதலில் பின்னூட்டமாக அனுப்பியவர் யாழ் மைந்தன் என்ற விடையையும் அடுத்த பதிவில் கொடுத்திருந்தேன். திரு.யாழ் மைந்தன் தனது முகவரியை இன்னும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என்பதை இதன்மூலம் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.