உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, June 09, 2011

என்னைக் கவர்ந்த அழகிகள்!

ருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் குடும்பத்தோடு ஒரு வார காலம் எங்காவது சுற்றுலா சென்று வருவதை, என் இரு குழந்தைகளும் பிறந்தது முதல் ஒரு கடமையாகவே அனுஷ்டித்து வருகிறேன். இடையில் பணக் கஷ்டம், மனக் கஷ்டம் காரணமாக ஒரு வருடம் போக முடியவில்லை; இன்னொரு முறை, குடும்பத்தில் மாற்றி மாற்றி யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் போக முடியவில்லை; கட‌ந்த ஆண்டு மனைவிக்கு அறுவைச் சிகிச்சை; இந்த ஆண்டு வீடு மாற்றல், மகளின் கல்லூரிப் படிப்பு இன்ன பிற காரணங்களால் சுற்றுலா தடைப்பட்டுவிட்டது. மற்றபடி, இந்தப் பதினாறு ஆண்டுகளில் பன்னிரண்டு ஆண்டுகள் குடும்பத்துடன் சுற்றுலா போயிருக்கிறேன்.

சுற்றுலா என்றால், ஆஸ்திரேலியா, ஸ்விஸ், வெனிஸ் என்று கற்பனைகளை ஓட்ட வேண்டாம்; சிம்லா, குலு மனாலி, கோவா என்றும் நீட்ட வேண்டாம். அந்த அளவுக்கு நமக்கு வசதி கிடையாது.

நான் போனதெல்லாம் ஐந்து முறை ஊட்டிக்கு; இரண்டு முறை கொடைக்கானலுக்கு; மூன்று முறை கேரளாவுக்கு; ஒரு முறை ஹைதராபாத்; ஒரு முறை பெங்களூர்.

சின்ன வயதில் சுற்றுலா செல்வதைப் போன்று எனக்கு மகிழ்ச்சி அளித்த விஷயம் வேறில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் என்னை செஞ்சிக் கோட்டைக்கு அழைத்துச் சென்றார்கள்; எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, சாத்தனூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வேலைக்குப் போகத் தொடங்கியது‌ வரை, நான் போன மொத்த உல்லாசப் பயணங்களே இவ்வளவுதான்! சாவி பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, சாவி சார்தான் என்னை எடிட்டோரியல் டிஸ்கஷன் என்னும் பெயரில் ஊட்டி, குன்னூர், வெலிங்டன், பெங்களூர் என அழைத்துச் சென்றார்.

எனவே, எனக்கு இருந்த சுற்றுலாப் பயண ஏக்கம் என் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்திலும், வெளியே சென்று நாலு இடங்களைப் பார்த்து அறியும் அனுபவம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்கிற யோசனையிலும், இயற்கையை நேசிக்கும், பாதுகாக்கும் மனோபாவம் அவர்களுக்குள் வளர வேண்டும் என்னும் கருத்திலும், பலவித விமர்சனங்களையும் புறந்தள்ளி, குடும்பச் சுற்றுலாவை தீவிரமாகக் கடைப்பிடித்தேன்.

கேரளா சென்றிருந்த‌போது, ஒருமுறை சங்குமுகம் கடற்கரைக்கும் போயிருந்தோம். அங்கே உள்ள பிரமாண்டமான கன்னி சிலையின் அழகைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

சிலை என்றால் கல்லில் வடிக்கப்பட்ட சிலை இல்லை. கான்க்ரீட் சிலை. 26 அடி உயரம், 116 அடி நீளத்தில் ஒய்யாரமாகப் படுத்திருக்கும் நிர்வாணப் பெண் சிலையின் அழகை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

இதை வடிவமைத்தவர் கானாயி குஞ்ஞுராமன் என்கிற சிற்பி. இவர் இதை வடிவமைப்பதற்கு முன்பு ஒரு யட்சி சிலையை உருவாக்கினார். அது மலம்புழா அணைக்கட்டில் உள்ளது.

கானாயி குஞ்ஞுராமன் அபாரமான கலைஞர். சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களைச் சந்தித்தவர். இவரின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வருமாம். அம்மா ஒரு நாள் கோபித்துக்கொண்டு தன் பிறந்த வீடு சென்றுவிட்டார். அம்மாவின் பிரிவு தாங்காமல், ஒவ்வொருமுறையும் கானாயி தன் பாட்டி வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்துவிட்டு வரும்போதும் அப்பாவிடம் சரமாரியாகப் பிரம்படி படுவார். அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி வளர்ந்தவர் குஞ்ஞுராமன். கானாயி என்பது அவரது ஊரின் பெயர். சென்னை, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஸ்கூலில் படித்து, கேரள சுற்றுலாத் துறை அபிவிருத்திக் கழகத்தின் கலை ஆலோசகராகப் பணியாற்றியவர் இவர். திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, இந்த யட்சி மற்றும் ஒய்யாரக் கன்னி சிலைகளை ஆபாசம் என்று சொல்லி அகற்றவேண்டும் என்று ஒரு கோஷ்டி கிளம்பியது. ஆனால், விவகாரம் அத்தோடு அமுங்கிப் போயிற்று.

எது ஆபாசம், எது ஆபாசம் இல்லை என்பது பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எல்லாருடைய கண்களும் ஒரே மாதிரிதான். ஆனால், இடம், பொருள், சூழ்நிலையைப் பொறுத்தே ஒன்று அழகானதா, ஆபாசமானதா என்பது முடிவாகிறது. முன்பேகூட எழுதியிருக்கிறேன்... நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரு பெண் தொடைகள் தெரிய ஸ்விம் சூட் அணிந்து வந்தால், நீச்சல் போட்டி நடக்கும் இடத்தில் அது ஆபாசம் இல்லை. அதுவே, அந்தப் பெண் தன் வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு ஸ்விம் சூட் அணிந்து காபி உபசரித்தால் எப்படி இருக்கும்?

கோயில்களில் எத்தனையோ நிர்வாணச் சிலைகள் உள்ளன. அம்மன் சிலைகள் பருத்த அங்கங்களுடன்தான் காணப்படுகின்றன. அவற்றில் ஆபாசமா இருக்கிறது? நிச்சயமாக இல்லை.

அதேபோல்தான் இந்த ஒய்யாரக் கன்னி சிலையும், யட்சி சிலையும் என்பது என் கருத்து.

யட்சி சிலைக்கும், நான் விகடனில் வேலைக்குச் சேர்ந்ததற்கும், சுவாரஸ்யமான‌ ஒரு சின்ன‌ தொடர்பு இருக்கிறது.

'உனக்காக நான்' என்றொரு திரைப்படம். அதில், 'நோ நோ.. நோ நோ.. நோ நோ... காதல் கதை சொல்வேனோ, கட்டி சுகம் கொள்வேனோ' ‍என்று சிவாஜியும் லட்சுமியும் இந்த யட்சி சிலையைத்தான் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடுவார்கள். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தைப் பார்த்தபோது, பச்சக் என்று மனசில் ஒட்டிக்கொண்டது இந்தச் சிலைதான்.

1995 ஏப்ரலில், விகடனில் வேலைக்குச் சேரும்பொருட்டு, இங்கே வந்து, ஆசிரியரின் நேர்முக அழைப்புக்காகக் காத்திருந்தேன். அதற்கு முன்பாக திரு.வீயெஸ்வி, திரு.ராவ் ஆகியோர் என்னைப் பற்றி விசாரித்து அறிந்தனர். இதற்கிடையில், அங்கே ஒரு பக்கம் அந்த வார இதழுக்கான லே-அவுட் நடந்துகொண்டு இருந்தது. அது ஒரு சினிமா கட்டுரை என்று ஞாபகம். ராவ், வீயெஸ்வி ஆகியோர் அதை மேற்பார்வை இட்டுக்கொண்டு இருக்க, நான் அங்கே இருந்த மேட்டரை சும்மா படித்துப் பார்த்தேன்.

அதில், 'சிவாஜியும் லட்சுமியும் ஒரு யட்சி சிலையைச் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடுவார்களே...' என்று குறிப்பிட்டு, வேறு ஏதோ ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார் சினிமா கட்டுரையாளர். நான் உடனே திரு.ராவ், திரு.வீயெஸ்வி இருவரிடமும், "அது அந்தப் படம் இல்லை. 'உனக்காக நான்' படத்தில்தான் அந்தப் பாடல் காட்சி வரும்" என்றேன். "நிச்சயமாகத் தெரியுமா?" என்றார்கள். "ஐயோ! சத்தியமாகத் தெரியும்!" என்றேன். நான் சொல்வது சரியா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள அப்போது இன்டர்நெட் வசதிகள் இல்லை. என்றாலும், நான் உறுதியாகச் சொன்னதை ஏற்றுத் திருத்தம் செய்யப்பட்டது.

சிறிது நேரத்தில், ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னை இன்டர்வியூவுக்கு அழைத்தார். உடன் வந்த திரு.ராவ், திரு.வீயெஸ்வி இருவரும் அப்போது இடையில் மேற்படி சம்பவத்தைக் குறிப்பிட, "அப்படியா! வெரிகுட்!" என்று புன்னகைத்தார் ஆசிரியர். "அது என்ன பாட்டு?" என்றார். "நோ.. நோ..." என்று பாடத் தொடங்கினேன். ஆசிரியர் உடனே குறுக்கிட்டு, "ஏன், சொல்ல மாட்டீங்களா?" என்று புன்னகைத்தார். நான் தடுமாறி, "இல்ல சார், அதுதான் பாட்டு!" என்று மீண்டும் வரிகளைப் பாடினேன். "தெரியும். சும்மா தமாஷ் பண்ணினேன்" என்று சிரித்தார்.

வேலை கன்ஃபார்ம் ஆகியது!

* கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி, நீங்களும் அந்தப் பாடல் காட்சியைக் கண்டு களியுங்களேன்!

http://en.600024.com/video/I5LN_P-tzX8/

(நன்றி! - இன்று எனக்கு 54 வயது பூர்த்தியாகி, 55 தொடங்குகிறது. நேரிலும், வாழ்த்துக் கடிதம், ஈ‍மெயில் மற்றும் தொலைபேசி மூலமும், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமும் எனக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டிவிட்டது. இதுவரை என் எந்தவொரு பிறந்த நாளுக்கும் அதிகபட்சம் பத்துக்கும் அதிகமான வாழ்த்துக்கள் கிடைத்ததில்லை. இதனால், இந்த முறை வாழ்த்து வெள்ளத்தைக் கண்டு திக்குமுக்காடிப் போய்விட்டேன். வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
.

Wednesday, June 01, 2011

கலாரசிகனும் உங்கள் ரசிகனும்!

னந்த விகடன் பத்திரிகையின் 85 ஆண்டு கால இதழ்களையும் புரட்டும்போது, இந்திய சரித்திரத்தையே புரட்டிப் பார்க்கிற உணர்வு! எனவேதான், 'காலப் பெட்டகம்' புத்தகம் வெறும் விகடனின் சரித்திரமாக மட்டுமல்லாமல், தேசத்தின் சரித்திரமாகவும் விளங்குகிறது. ஜனவரியில் வெளியான இந்தப் புத்தகம் இரண்டு பதிப்புகள் கண்டு, இதோ மூன்றாவது பதிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. இதை 'பெஸ்ட் செல்ல'ராகச் செய்த வாசகர்களுக்கு விகடன் நன்றி தெரிவிக்கிறது. அதேபோல், இதை வாங்கிப் படித்த வாசகர்களும், இத்தகைய ஒரு தகவல் பொக்கிஷத்தைத் தங்களுக்குக் கொடுத்த விகடன் நிறுவனத்துக்குக் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் நன்றி தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இருவருக்கும் நடுவில் ஒரு மீடியேட்டராகச் செயல்படும் வாய்ப்பை எனக்கு அளித்து, காலத்தால் அழியாத ஒரு கருவூலமாக 'காலப் பெட்டகம்' புத்தகம் தொகுக்கும் பணியை வழங்கிய விகடனுக்கு என்றென்றைக்கும் என் நன்றிகள் உண்டு! புத்தகத்தின் முன்னுரையிலேயே நான் சொல்லியிருப்பதுபோல், இது எனக்குக் கிடைத்த பாக்கியம்தான்! அந்த மகிழ்ச்சி, இந்த ஜென்மம் முழுவதும் எனக்குள் இருக்கும்.

புத்தகம் வெளியானபோது, அது பற்றி ஒரு நீண்ட விமர்சனம் 'தினமணி' நாளேட்டில் வெளியாகியுள்ளதாக 'சாவி' கால‌ நண்பர் ராணிமைந்தன் எனக்குப் போன் செய்து சொன்னார். தவிர, பாக்கியம் ராமசாமி, ஜே.எஸ்.ராகவன் போன்று என் மீது அன்பும் அக்கறையும் உள்ள வேறு சிலரும் அது பற்றி உடனே எனக்குத் தகவல் தெரிவித்தார்கள். அப்படி அவர்கள் எனக்கு இது பற்றி உடனடியாகத் தகவல் தெரிவித்ததற்கு முக்கியக் காரணம், அந்த விமர்சனத்தை 'கலாரசிகன்' என்னும் புனைபெயரில் எழுதிய தினமணி நாளேட்டின் ஆசிரியர் கே.வைத்தியநாதன், என்னைப் பற்றியும் அதில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதியிருந்ததுதான்.

உடனே அந்த விமர்சனத்தைப் படித்துப் பார்க்கவேண்டும் என்று ஆர்வப்பட்டேன். பேப்பர் ஃபைல் இங்கே போயிருக்கிறது, அங்கே போயிருக்கிறது, அவர் டேபிளுக்குப் போயிருக்கிறது என்று சொன்னார்களே ஒழிய, அதை என் கண்ணில் காட்டவில்லை அலுவலக உதவியாளர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் அதை ஒத்திப்போட்டு, பின்னர் வேலை மும்முரத்தில் அதை ஒரேயடியாக மறந்தே போய்விட்டேன்.

'காலப் பெட்டகம்' மூன்றாம் பதிப்பு வெளியாகவிருக்கிற செய்தியை, விகடன் பிரசுரத்தின் பொறுப்பாசிரியர் பொன்ஸீ நேற்று என்னிடம் சொன்னார்; கூடவே, ஜூனியர் விகடனில் பணியாற்றும் உதவியாசிரியர் ஒருவர், சமீபத்தில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனைச் சந்தித்தபோது, அவர் என்னைப் பற்றி விசாரித்ததாகச் சொன்னார். இரண்டும் இரண்டும் நாலு என்கிறாற்போல், எனக்கு உடனடியாக தினமணி விமர்சனம் ஞாபகத்துக்கு வந்தது. அது எந்தத் தேதியில் வெளியானது என்று தெரியவில்லை. 'கலாரசிகன்' வழக்கமாக எழுதுவது ஞாயிற்றுக்கிழமை பேப்பரில்தான் என்பதால், இணையத்தின் வழியே, 2011 ஜனவரி மாத ஞாயிற்றுக்கிழமை தினமணி பேப்பர்களைப் புரட்டினேன். சிக்கியது அந்த விமர்சனம். அதை இங்கே தருகிறேன்.'நான் வாராவாரம் ரசித்துப் படித்த, சிலாகித்து மகிழ்ந்த பொக்கிஷம் பகுதியை என் இனிய நண்பர் ரவிபிரகாஷ்தான் தொகுத்து அளித்துக்கொண்டு இருந்தார் என்று தெரிந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சி எத்தகையது என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை' என்று திரு.வைத்தியநாதன் என்னைப் பற்றி அந்த விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தபோது, இதை முன்பே படித்திருந்தால் அவருக்கு உடனே ஒரு போன் போட்டு என் நன்றிகளையும் மகிழ்ச்சியையும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. இனிமேல் சொல்வது காலம் கடந்ததாகும்.

நான் சாவி பத்திரிகையில் வேலைக்குச் சேரும்போது, அங்கே இருந்தவர்கள் மூவர். ரமணீயன், சி.ஆர்.கண்ணன் மற்றும் வைத்தியநாதன். மூவரில் முதல் இருவர், நான் பணியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள்ளாக விலகிவிட்டனர். வைத்தியநாதனும் பின்னர் விலகிவிட்டார் என்றாலும், அரண்மனை ரகசியம் (டெல்லி அரசியல் துணுக்குகள்), அரசல் புரசல் (தமிழக அரசியல் துணுக்குகள்) மற்றும் சினிமா செய்திகளை சாவிக்கு வழங்கிக்கொண்டு இருந்தார்.

என் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர். சாவி மிகவும் கோபக்காரர். ஒரு சிறு தவறு செய்தாலும், தூக்கியடித்துவிடுவார். அந்த மாதிரி சமயங்களில் நான், 'இனி இந்த மனுஷர் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன். வேலையும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம். நான் போறேன்' என்று கோபமும், வேதனையுமாகப் பொங்குகிறபோது, அதற்கு எண்ணெய் வார்க்காமல், "என்ன ரவி, சின்னப் புள்ளை மாதிரி! சாவி சார் யாரு? எவ்ளோ பெரிய ஜாம்பவான்! அவர் கிட்டே திட்டு வாங்குறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும். நான் விலகிட்டேன்னா அதுக்கு வேற பல காரணங்கள் இருக்குது. ஆனாலும், நான் வேற ஒரு வார இதழ்ல சேர்ந்து வேலை செய்ய மாட்டேன். அதை சாவி சாருக்குச் செய்யுற துரோகமா நினைக்கிறேன். கொஞ்சம் பொறுமையா இருங்க. அவர் திட்டுறது, நீங்க நல்லா வரணுமேங்கிற அக்கறையிலதான்! அதைப் புரிஞ்சுக்குங்க. சாவி சார் கிட்டே திட்டு வாங்கினவங்க அத்தனை பேரும் இன்னிக்கு நல்ல பொஸிஷன்ல இருக்காங்க. நீங்களும் பெரிய அளவுக்கு வருவீங்க. கூல் டௌன்!" என்று அன்புடன் உபதேசிப்பார்.

சாவி சாரிடமிருந்து நான் மூன்று முறை கோபித்துக்கொண்டு, விலகியிருக்கிறேன். காரணம், அப்போதெல்லாம் திரு.வைத்தியநாதன் போன்று அன்பாக உபதேசிக்க யாரும் இல்லாததுதான்!

'ரேவதி ராஜேந்தர்' என்கிற பொதுவான புனைபெயரில், சாவியின் 'மோனா' மாத இதழில், அவரும் நானும் மாற்றி மாற்றி நாவல்கள் எழுதிக்கொண்டு இருந்தோம். ஒருமுறை, திரு.வைத்தியநாதன் எழுதித் தந்த‌ நாவல் அச்சுக்குப் போனபோது, மூன்று பக்க மேட்டர் குறைந்தது. வைத்தியநாதனிடமே கேட்டு வாங்கலாமென்றால், அவர் அந்தச் சமயம் பார்த்து, ஒரு விபத்தில் சிக்கிக் காலொடிந்து ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார். எனவே, அவரைத் தொல்லை செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. எனவே, பொதுவான புனைபெயர்தானே என நான் துணிந்து, இடைச் செருகலாக மூன்று பக்கம் எழுதி, நுழைத்து, புத்தகத்தை முடித்துவிட்டேன்.

புத்தகம் வெளியானதும், அவரது வீட்டுக்குச் சென்று, பிரதியைக் கொடுத்தேன். பின்னர் ஒரு வாரம் கழித்து அவரைச் சந்தித்து, "புத்தகம் படித்தீர்களா? எல்லாம் சரியாக வந்திருக்கிறதா?" என்று கேட்டேன். "அருமையா வந்திருக்கு ரவி! எப்படி நான் கரெக்டா பக்க அளவுக்குச் சரியா வர மாதிரி எழுதித் தந்தேன்னு ஆச்சரியமா இருக்கு. இல்லே, ஏதாச்சும் எடிட் பண்ணீங்களா?" என்று கேட்டார். "எடிட் பண்ணலை. ஆனா, கூடுதலா மூணு பக்கம் எழுதிச் சேர்த்தேன்" என்றேன். "அப்படியா! அப்படியா! எனக்குத் தெரியலையே!" என்றார் ஆச்சரியத்தோடு. புத்தகத்தைப் பிரித்து, நான் எழுதிச் சேர்த்த பகுதியை அவருக்குச் சுட்டிக் காட்டினேன். மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு, "ம்ஹூம்! இதையும் நானே எழுதின மாதிரிதான் இருக்கு. எனக்கு வித்தியாசமே தெரியலை!" என்று புன்னகைத்தார்.

அந்தக் காலத்தில், இவர் தனது வீட்டில் ஒரு பெரிய அறை முழுக்கச் செய்தித்தாள்களாகச் சேகரித்து வைத்திருந்தார். அறை முழுக்க என்றால், நிஜமாகவே உள்ளே நுழைய இடம் இல்லாமல், தரைக்கும் கூரைக்குமாகச் செய்தித் தாள்களை அடுக்கி வைத்திருந்தார். அத்தனையும் அவர் வாங்கிப் படித்தவை. அவற்றை ஒரு நாள் மொத்தமாக பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டுவிட்டு, வந்த பணத்தில் ஒரு புத்தம்புதிய மோட்டார் சைக்கிளையே விலைக்கு வாங்கிவிட்டார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றளவும் நான் நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருக்கும் விஷயம் அது!

ஆரம்பத்தில், மேனகா காந்தி நடத்திய 'சூர்யா' பத்திரிகையில் பணியாற்றியவர் வைத்தியநாதன். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா காந்தி இவர்களோடு மிகுந்த நட்பு கொண்டவர். அவர்கள் குடும்பத்தில் ஒருவராக, ஒன்றாக அமர்ந்து உணவருந்தியவர். கமல்ஹாசன் அரை நிஜார், சட்டை அணிந்து சிறு பையனாக நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவரின் நண்பர். நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது, ஒரு சமயம் வெளியூரில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. எப்படி தனியாக‌ அவரை அனுப்பி வைப்பது என்று குழப்பமாக இருந்த நேரத்தில், இந்த வைத்தியநாதன்தான் குழந்தை ஸ்ரீதேவியைத் தன் மோட்டார் சைக்கிளின் முன்னால் உட்கார்த்தி வைத்துக்கொண்டு, சுமார் 200 மைல்கள் பயணம் செய்து, படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு அழைத்து வந்தார்.

சில சினிமாக்களிலும் இவர் தலைகாட்டியிருக்கிறார். 'மாங்குடி மைனர்' படத்தில் ரஜினியோடு (ரஜினி அதில் வில்லன்; விஜயகுமார்தான் ஹீரோ) மோதும் நாலைந்து அடியாட்களில் இவரும் ஒருவர். நல்ல உயரம், அதற்கேற்ற ஆஜானுபாகுவான சரீரம்; கெடுபிடியான போலீஸ் உயரதிகாரி போன்ற தோற்றம். முதலில், இவரைப் பார்த்து நான் பயந்தது உண்மை. ஆனால், பழக ஆரம்பித்த பின்னர், இவரின் மென்மையான, அன்பான சுபாவம் கண்டு நெகிழ்ந்தேன்.

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு.வைத்தியநாதன் அவர்கள் என்னை ஞாபகம் வைத்திருந்து, தனது விமர்சனம் கட்டுரையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டதில், உள்ளபடியே நெகிழ்கிறேன்.

(கலாரசிகனின் விமர்சனக் கட்டுரையில் ஒரே ஒரு சிறு தவறு. குமுதம் பால்யூவின் பரிந்துரையுடன் நான் சாவி அலுவலகத்துக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இல்லை. குமுதம் பால்யூவை நான் சந்தித்து, குமுதத்தில் வேலை வாங்கித் தரும்படி கேட்டது உண்மை. அவரும் என்னைச் சற்றுக் காத்திருக்கச் சொன்னார். அதற்குள், எழுத்தாளர் திரு.புஷ்பாதங்கதுரையின் பரிந்துரையின்பேரில்தான் நான் 'சாவி' வார இதழில் வேலைக்குச் சேர்ந்தேன். இதை நான் போய் பால்யூவிடம் சொன்னபோது, "என்ன ரவி, ஒரு பத்து நாள் காத்திருக்க முடியாதா? குமுதத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருப்பேனே? அது என்ன சர்க்குலேஷன், சாவி என்ன சர்க்குலேஷன்? குமுதத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இது இருக்காதே! அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துக்கிட்டியே?" என்று அவர் என்னைக் கோபித்துக்கொண்டார்.)
.