பயணத்துக்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன. 1984 ஏப்ரல் 2 அன்று பெற்றோரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார் அவர். அவரின் பிரயாணம் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக பஞ்சமுக ஹனுமான் கோயிலில் விசேஷ பூஜைக்கும், குருத்வாராவில் தொடர்ந்து 48 மணி நேரம் கிரந்தசாஹிப் படிப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர் அவரின் பெற்றோர். வாகனம் புறப்படுவதற்கு முன் மறக்காமல் காயத்ரி மந்திரத்தை மூன்று முறை படிக்கும்படி சொல்லி வழியனுப்பியிருந்தார் அப்பா. வீட்டிலும் தினசரி பூஜை அறையில் உட்கார்ந்து மகனுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு இருந்தார் அம்மா.
இத்தனைக்கும் மகனின் பயண தூரம் வெறும் 500 கி.மீட்டர்தான். போகிற வேலையை முடித்துவிட்டு ஏழே நாளில் ஊர் திரும்பிவிடப் போகிறார். இதற்கு இத்தனை அமர்க்களமா, இத்தனை பயமா, இவ்வளவு பூஜைகள், பிரார்த்தனைகளா என்று யோசிக்கிறீர்களா?
அவர் 500 கி.மீ. தூரம் பயணம் மேற்கொள்ளப்போவது தரையில் அல்ல; பூமியை விட்டு விண்ணில்! ஏழு நாள்கள் தங்கியிருந்து பணியாற்றப்போவதும் விண்வெளி மையத்தில்தான்!
அவர் வேறு யாருமல்ல... முதல் இந்திய விண்வெளி நாயகர் ராகேஷ் சர்மா.
ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவருடன் ‘சோயுஸ் டி-11’ என்னும் விண்கலத்தில் பயணம் மேற்கொண்டார் ராகேஷ் சர்மா. இதற்காக அவர் 18 மாத காலம் விசேஷ பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘சல்யூட்-7’ என்னும் விண்வெளி மையத்தில் அவர்கள் மூவரும் ஏழு நாள்கள் தங்கியிருந்து, பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். சரியாகச் சொல்வதானால் 7 நாள்கள் 21 மணி நேரம் 40 நிமிஷம் விண்வெளியிலேயே தங்கியிருந்தார்கள் அவர்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் ரஷ்யாவும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சி அது.
இன்னும் பல்லாயிரம் கி.மீ உயரே பயணப்பட்டால்தான், பந்துபோல் பூமி கண்ணுக்குத் தென்படும் என்றும், இவர்கள் இருந்த விண்வெளி மையத்தில் இருந்து பார்க்கும்போது பூமியின் தரைப் பகுதி தங்க நிறத்திலும், காடுகள் நிறைந்த பகுதி பசுமை நிறத்திலும், கடல் நீல நிறத்திலும் அழகாகத் தெரிந்ததாகச் சொன்னார் ராகேஷ் சர்மா. அதே நேரம், “நியாயமாக பூமி நல்ல நீல நிறத்தில் தெரிய வேண்டும்; ஆனால், பூமியின் பெரும்பான்மையான பகுதிகள் சாம்பல் நிறத்தில்தான் தென்பட்டன. காரணம், நாம் அந்த அளவுக்குக் காற்றை மாசுபடுத்தி வைத்திருக்கிறோம்” என்றும் வருத்தப்பட்டார்.
அவர் விண்வெளியில் இருந்தபோது, நமது அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவரைத் தொடர்பு கொண்டு பேசினார். “அங்கிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு ராகேஷ், “ஸாரே ஜஹான் ஸே அச்சா” என்று பதிலளித்தார். ‘உலகிலேயே மிகச் சிறப்பானது’ என்று பொருள். பிரிட்டிஷ் ஆட்சியின்போது கவிஞர் இக்பால் எழுதிய தேசப்பற்றுப் பாடலின் முதல் வரி அது.
ராகேஷ் சர்மாவின் பணிகளைப் பாராட்டி ‘சோவியத் ரஷ்யாவின் நாயகன்’ என்னும் விருது அளித்து கௌரவித்தது ரஷ்யா. தவிர, அசோக சக்ரா விருது, ஆர்டர் ஆஃப் தி லெனின் ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் ராகேஷ்.
ராகேஷ் சர்மா குடும்பத்தாரின் சொந்த ஊர் பட்டியாலா. இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரிவினையின்போது அவர்கள் குடும்பம் ஹைதராபாதுக்கு வந்து செட்டிலாகியது. அப்பா தேவேந்திரநாத் சர்மா, கமர்ஷியல் டாக்ஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா திருபதா சர்மா, செகந்திராபாத் சென்ட்ரல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ராகேஷ், மகேஷ் என இரண்டு பிள்ளைகள்.
ராகேஷின் மனைவி மது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் கபில் சர்மா சினிமாவில் அசிஸ்டென்ட் இயக்குநராக இருக்கிறார். (இந்தி சினிமாவில் கபில் சர்மா என்றொரு காமெடி நடிகரும், அதே பெயரில் இன்னொரு நடிகரும்கூட இருக்கிறார்கள். அவர்களோடு இந்த கபில் சர்மாவைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.) மகளும்கூட மீடியாவில்தான் இருக்கிறார்.
ராகேஷ் சர்மா தன் மனைவியோடு இப்போது ஊட்டி-குன்னூரில், நமது இன்னொரு இந்திய நாயகன் ஃபீல்டு மார்ஷெல் மானெக் ஷா வசித்த இடத்துக்கு அருகில்தான் வசிக்கிறார்.
“நான் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பியதும், நான் ஏதோ நிலவுக்கே போய்விட்டு வந்தது மாதிரி பலரும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘நான் போனது ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குதான். நிலவுக்கெல்லாம் இல்லை’ என்று அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களின் எண்ணத்தை நொறுக்குவது மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் ராகேஷ் ஷர்மா.
“முதன்முதலாக இந்த விண்வெளிப் பயண சாகசத்தை நிகழ்த்திய இந்திய விண்வெளி வீரர் நீங்கள். இந்தப் பயணத்தின் மூலம் உங்களுக்குக் கிடைத்த சந்தோஷம் என்று எதைச் சொல்வீர்கள்?” என்ற கேள்விக்கு ராகேஷ் சர்மாவின் பதில் சற்றும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது.
“அன்றிலிருந்து எனக்கு ஒருவர் தொடர்ந்து வருஷா வருஷம் வாழ்த்து அட்டைகள் அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வருஷமும் அவர் மூன்று வாழ்த்து அட்டைகள் அனுப்புவார். ஒன்று – புத்தாண்டு வாழ்த்து; மற்றொன்று – என் பிறந்த நாள் வாழ்த்து; மூன்றாவது – நான் விண்வெளிக்குப் பயணப்பட்ட தினம். இன்றைக்கும் அவரிடமிருந்து வாழ்த்து அட்டைகள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் அவர் அகமதாபாதில் இருக்கும் ஒரு சாதாரண வெற்றிலை வியாபாரிதான்! அவரின் அன்புதான் இந்தப் பயணத்தின் மூலம் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்!”
விண்வெளி நாயகன் ராகேஷ் சர்மாவின் 72-வது பிறந்த தினம் இன்று.
– 13.01.2021