உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, April 24, 2010

சில சுவாரசியமான கேஸ்கள்!

தற்கு முந்தைய ‘கடவுள் கொடுத்த முத்திரை’ பதிவைப் படித்துவிட்டீர்களா? சரி, திரு.வரதராஜன் (சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி) பேசுவதைத் தொடர்ந்து கேட்போம், வாருங்கள்!

குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க விரல் ரேகை எவ்வளவு உதவுகிறது என்பதை விளக்க, அவர் சில உதாரண சம்பவங்களை விவரித்தார்.

விரல் ரேகைகள் ஒன்றுக்கொன்று முற்றிலும் மாறுபடுகின்றன என்பதை அடிப்படையாக வைத்துக் குற்றவாளிகளை அடையாளம் காண்பதெல்லாம் சரி; ஆனால், பொருள்களின்மீது கைரேகை எப்படிப் படிகிறது? அவற்றை எப்படித் துல்லியமாகப் பார்க்கிறார்கள் விரல் ரேகை நிபுணர்கள்?

விரல் நுனிகளில் நுண்ணிய வியர்வைச் சுரப்பிகள் அதிகம். அவை வியர்வையைச் சுரந்துகொண்டே இருக்கின்றன. உடனுக்குடன் அது ஆவியாகிக்கொண்டே இருப்பதால், நம்மால் அதை உணர முடிவதில்லை. கட்டை விரலால் மற்ற விரல்களை லேசாக வருடிப் பார்த்தால், எப்போதும் ஒரு பிசுபிசுப்பு இருப்பதை உணரலாம். அது வியர்வைதான். இதுதான் நாம் ஒரு பொருளைத் தொடும்போது அதன் மீது ரேகையாகப் பதிகிறது.

ஒரு திருட்டோ, கொள்ளையோ நடந்த இடத்துக்கு முதலில் சோதனையிட வருவது காவல்துறையைச் சேர்ந்த விரல் ரேகை நிபுணர்கள்தான். அவர்கள் வந்ததும் அங்கிருப்பவர்களைக் கேட்கும் முதல் கேள்வி, “யாராவது இங்குள்ள பொருள்களைத் தொட்டீர்களா? இங்கே எந்தப் பொருளாவது இடம் மாறியிருக்கிறதா?” என்பதுதான். “ஆமாம் சார், இந்த டம்ளர் இங்கே டீபாயில் இருந்தது; இப்போது அந்த ஜன்னல் கட்டையில் இருக்கிறது” என்று அவர்கள் ஏதாவது குறிப்புக் கொடுத்தால், திருடனின் விரல் ரேகை அந்தப் பொருளின்மீது பதிந்திருக்கும் என்று யூகித்து, அதன் மீதுள்ள ரேகையைப் பதிவெடுக்க முனைவார்கள்.

டிட்டானியம் டையாக்ஸைடு, ஸிங்க் ஆக்ஸைடு போன்ற பல்வேறு ரசாயனப் பொருட்களைத் தேவைக்கேற்ப கலந்து, குறிப்பிட்ட பொருளின்மீது தூவினால், அதில் படிந்திருக்கும் ரேகை(வியர்வை ஈரம்)யில் ஒட்டிக்கொண்டுவிடும். பிறகு ஒரு லென்ஸ் வைத்துப் பார்த்தால், விரலின் ரேகை அமைப்பு துல்லியமாகத் தெரியும். சக்கர ரேகை, சுழல் ரேகை என ஏழெட்டு ரகங்களுக்குள், உலகில் உள்ள லட்சக்கணக்கான கிரிமினல்களின் ரேகைகளையும் வகைப்படுத்தியுள்ளார்கள். பிறகு, ஒவ்வொன்றையும் சிறு சிறு உள் பிரிவுகளாகப் பிரித்துக்கொண்டே போய், மொத்தமாக ஒரு ஆயிரம் கைரேகைகளோடு ஒப்பிட்டால் போதும் என்று தேடுதல் வட்டத்தைச் சுருக்கி, குறிப்பிட்ட ரேகை எந்தக் குற்றவாளியினுடையது என்று கண்டுபிடித்துவிடுகிறார்கள்.

கண்ணாடி போன்ற வழவழப்பான பகுதிகளில் படும் கைரேகை, பேப்பர் போன்ற வெள்ளையான பரப்பில் பதியும் கைரேகை, கறுப்பான பொருள் மீது பதியும் கைரேகை, பல வண்ணமயமான பொருள் மீது பதியும் கைரேகை, இரும்பு போன்ற கடினமான பொருள்கள்மீது, துணிகள் மீது என ரேகை பதியும் பொருள்களுக்கேற்ப தேவையான ரசாயனப் பொருள்களைக் கலந்து ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்காரர்களே ஒரு கலவையை உருவாக்கித் தெளிக்கிறார்கள். பல வண்ணமயமான பொருள்கள் மீது ரசாயனக் கலவையைத் தெளித்தால் மட்டும் போதாது; அதன்மீது அல்ட்ராவயலட் ஒளியைப் பாய்ச்சினால், ரேகை துல்லியமாக மின்னுவது தெரிகிறது (இதையெல்லாம் எங்கள் முன் டெமான்ஸ்ட்ரேட் செய்து காண்பித்தார் வரதராஜன்).

“சரி, இப்படிப் பொருள்களின் மீது பதியும் ரேகை எவ்வளவு நாள் இருக்கும்?” என்ற என் சந்தேகத்தைக் கேட்டேன்.

“அது பல விஷயங்களைப் பொறுத்தது. கண்டிஷன் ஆஃப் த ஆப்ஜெக்ட்: கண்ணாடி போன்ற வழவழப்பான தளம் கொண்ட பொருள்களில் பதியும் ரேகைகள் பல மாதங்கள் வரை இருக்கும். அதுவே பேப்பரில் பதியும் ரேகை அரை மணி நேரம்கூடத் தாக்குப்பிடிக்காது. கண்டிஷன் ஆஃப் த க்ளைமேட்: மழைக் காலத்தில் வியர்வை அதிகம் சுரக்காது. எனவே, மழைக் காலத்தில் பதியும் ரேகை பலவீனமாக இருக்கும். சீக்கிரமே மறைந்துவிடும். வெயில் காலத்தில் பதியும் ரேகை நீண்ட நாள் இருக்கும். கண்டிஷன் ஆஃப் த பாடி: நமது வியர்வையில் ஃபேட்டி ஆசிட் உள்ளது. சிலருக்கு அதன் பர்சன்டேஜ் மிக அதிகமாக இருக்கும்; சிலருக்கு மிகக் குறைவாக இருக்கும். அதிகமாக உள்ளவரின் ரேகை துல்லியமாகப் பதிந்து, நெடுநாட்களுக்கு இருக்கும்.

மத்தியப் பிரதேசத்தில் ஒரு திருட்டுச் சம்பவம். ஒரு வீட்டில், ஒரு குடத்தில் போட்டு வைத்திருந்த நகைகளைக் கொள்ளையடித்தவன், குடத்தில் தன் கைரேகை பதிந்திருக்கும் என்று அதைக் கிணற்றில் போட்டுவிட்டுப் போய்விட்டான். ஆறு மாதம் கழித்து, கிணற்றுக்குள் குடம் இருப்பது தெரிந்து, அதை வெளியே எடுத்துக் காய வைத்துப் பார்த்தபோது, ரேகை துல்லியமாகக் கிடைத்தது. திருடனும் பிடிபட்டான்” என்றார் வரதராஜன்.

ல ஆண்டுகளுக்கு முன், உயர் போலீஸ் அதிகாரி ஒருவரின் வீட்டிலேயே ஒருவன் புகுந்து திருட முனைந்து, எதுவும் கிடைக்காமல் தப்பி ஓடிவிட்டான். வெளியே சொன்னால் வெட்கக்கேடு என்று அவரும் பேசாமல் இருந்துவிட்டார். இரண்டாம் முறையும் அவரது வீட்டில் திருட வந்தான் அவன். அப்போதும் ஒன்றும் கிடைக்காமல் ஓடிப் போனான். அந்த போலீஸ் அதிகாரி, உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்து, உடனே நடவடிக்கை எடுக்கும்படி சொன்னார். அவர்களும் வந்து பார்த்துவிட்டுப் போனார்கள். அவர்களுக்கு எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மூன்றாம் முறையும் வந்த அந்தத் திருடன், அதிகாரியின் வீட்டிலிருந்து தங்க வளையல், கேமரா போன்றவற்றைத் திருடிக்கொண்டு போய்விட்டான்.

அதிகாரிக்குக் கடுப்பான கடுப்பு. லோகல் போலீஸ்காரர்களை செம டோஸ் விட்டவர், இம்முறை ஃபிங்கர் பிரின்ட்ஸ் டிபார்ட்மென்ட்டைத் துணைக்கு அழைத்தார். சிரமப்பட்டுப் பொடியெல்லாம் தூவி கைரேகை எடுக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை. அந்தத் திருடன் ஒரு பைப்பைப் பிடித்துக்கொண்டு ஏறி, சுவர் தாண்டிக் குதித்துப் போயிருக்கிறான். கிரீஸ் படிந்த அவனது கைரேகை, அந்த பைப்பில் துல்லியமாகப் பதிந்திருந்தது. அவரது வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு ஸ்லம் ஏரியா இருந்தது. அங்கே சென்று சந்தேகப்பட்டவர்களைப் பிடித்து விசாரித்தபோது, அதில் ஒருவனின் கைரேகையோடு இந்தக் கைரேகை பொருந்தியது.

“ஏண்டா... போலீஸ் அதிகாரி வீட்டிலேயே திருடுற அளவுக்கு உனக்குத் துணிச்சல் வந்துடுச்சா?” என்று அவனைக் கேட்டால், “ஐயா! வெளியே ஐயாவோட பேர் மட்டும்தாங்க போர்டுல போட்டிருந்துச்சு. போலீஸ் அதிகாரின்னு போட்டிருந்தா, சத்தியமா இங்கே திருடியிருக்க மாட்டேனுங்க” என்றான் அவன் அப்பிராணியாக.

பிறகு அந்த அதிகாரி, அவன் ஜெயில் தண்டனை முடிந்து வருகிற வரைக்கும் அவனது குடும்பத்துக்குத் தன் கையிலிருந்து மாதா மாதம் கொஞ்சம் பணம் கொடுத்து உதவினார். அவனுக்கு இரண்டு மகன்கள். இருவரின் படிப்புச் செலவுக்கும் உதவினார். அவன் ஜெயிலிலிருந்து வந்த பின்பு, அவனுக்கு வாட்ச்மேன் வேலை வாங்கித் தந்தார். அவனும் திருட்டுத் தொழிலை விட்டு, நல்லபடியாகக் குடும்பம் நடத்திக்கொண்டு இருக்கிறான். அது தனிக் கதை.

15 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று. ஒரு எக்ஸ்-மினிஸ்டரின் பி.ஏ. வீட்டில் புகுந்து வி.சி.ஆரைத் திருடிக்கொண்டு போய்விட்டான் ஒருவன். கைரேகை நிபுணர்கள் வந்து பார்த்து, கிடைத்த ரேகைகள் பழைய குற்றவாளி கவுஸ் பாஷா என்பவனின் ரேகையோடு ஒத்துப் போகிறது என்றார்கள். விஷயம் என்னவென்றால், அந்த கவுஸ் பாஷா அப்போது ஜெயிலில் இருந்தான்.

கமிஷனர் குழப்பமாகி, ‘என்னய்யா சொல்றீங்க? அவன் ஜெயில்ல இருக்கான். அவன் ரேகையோடு பொருந்திப் போகுதுன்னா என்ன அர்த்தம்?’ என்று கடுப்படிக்க, “அதுக்கு நாங்க என்ன சார் செய்ய முடியும்? இங்கே கிடைச்ச ரேகை கவுஸ் பாஷா ரேகையோடு ஒத்துப் போகுது. அதைத்தான் நாங்க சொல்ல முடியும்” என்று இவர்கள் சொல்ல, விசாரணை தொடர்ந்தது.

கடைசியில் என்ன நடந்திருக்கிறது என்றால், மேற்படி திருட்டு நடந்த நாளன்று கவுஸ் பாஷாவை கோர்ட்டில் சப்மிட் செய்ய அழைத்துப் போயிருக்கிறார்கள். காத்திருந்த நேரத்தில் இவன் ‘பசிக்கிறது. போய்ச் சாப்பிட்டுவிட்டு வந்துவிடுகிறேன்’ என்று தனக்குக் காவல் இருந்த கான்ஸ்டபிள்களுக்குப் பணம் கொடுத்துவிட்டு, அந்த ஒரு மணி நேரத்தில் போய் வி.சி.ஆரைத் திருடிப் பதுக்கிவிட்டு, நல்ல பிள்ளையாக வந்துவிட்டிருக்கிறான். ரேகை மட்டும் இல்லையென்றால், அவனை யாரும் சந்தேகப்பட்டிருக்கவே முடியாது.

ன்னொரு விசித்திர கேஸ்... 25 ஆண்டுகளுக்கு முன் மதுரையில் நடந்த சம்பவம். எல்லார் வீட்டிலும் தினம் தினம் திருடு போய்க்கொண்டே இருந்தது. ஜன்னலோரம் வைத்த மோதிரத்தைக் காணோம், மணிபர்சைக் காணோம், மேஜையில் வைத்த நகைப் பெட்டியைக் காணோம் என எக்கச்சக்க புகார்கள் வந்துகொண்டே இருந்தன. எல்லாமே பட்டப்பகலில் நடந்த திருட்டுக்கள். பூட்டை உடைத்து, ஜன்னலை வளைத்து என எந்த முயற்சியும் நடக்கவில்லை. ஆனால், பலரது வீடுகளில் திருட்டுப் போயிருந்தன.

காவல்துறைக்குப் பெரிய குழப்பம். கைரேகை நிபுணர்களை வைத்து ரேகை எடுத்துப் பார்த்தபோது, குழப்பம் இன்னும் அதிகமாகிவிட்டது. கிடைத்த ரேகை ஒரு நாலு வயதுக் குழந்தையின் ரேகை போன்று சிறியதாகக் காணப்பட்டது. குழந்தையைப் பழக்கி யாரேனும் திருடுகிறார்களோ என்று மண்டையைப் பிய்த்துக் கொண்டது காவல்துறை.

குற்றவாளி யார்?

பதிவு நீண்டுகொண்டே போவதால், மீதி அடுத்த பதிவில்!

.

6 comments:

this is an interesting article ...different information
 
சூப்பர்..
 
//“ஐயா! வெளியே ஐயாவோட பேர் மட்டும்தாங்க போர்டுல போட்டிருந்துச்சு. போலீஸ் அதிகாரின்னு போட்டிருந்தா, சத்தியமா இங்கே திருடியிருக்க மாட்டேனுங்க” என்றான் அவன் அப்பிராணியாக.// நல்ல ஜோக்!
அது சரி, சஸ்பென்ஸில் விட்டுவிட்டீர்களே! சீக்கிரம் தொடருங்கள். மண்டை காய்கிறது! :)
 
விசித்திர கேஸ்கள் ஒவ்வொண்ணும் சுவாரசியமா இருக்குங்க சார்!
 
Thank you infopedia...!

நன்றி சூர்யா!

நன்றி கணேஷ்ராஜா! அடுத்த பதிவையும் உடனே போட்டுவிட்டேனே!

நன்றி கிருபாநந்தினி! நான் வர்ணித்திருப்பது கொஞ்சம்தான். அதை அவரே குரலில் ஏற்றத்தாழ்வுடன் அழகாகச் சொல்லிக் கேட்டபோது அத்தனை ரசனையாக இருந்தது!
 
சூப்பர். வெரி இண்ட்ரஸ்டிங்.