உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, April 28, 2010

வியக்க வைக்கும் விசித்திர ரேகைகள்!

ஒரு நினைவூட்டல்:
எனது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில் நான் அறிவித்த புத்தகப் பரிசு போட்டிக்கான உங்கள் விடைகளை அனுப்பக் கடைசி நாள் ஏப்ரல் 30. இதில் வென்றவர்களுக்குப் பரிசாகக் கிடைக்கவிருக்கும் புத்தகம் ரூ.175 விலையுள்ள ‘முயற்சி திருவினையாக்கும்’.

ன் டிடெக்டிவ் ஏஜென்சி நிறுவனர் திரு.வரதராஜன் பேசுவதைத் தொடர்ந்து கேட்போம்...

கைரேகை பதியக்கூடாது என்பதற்காகக் குற்றவாளிகள் கிளவுஸ் அணிவது உண்டு. இதிலும் ‘மோடஸ் ஆபரேண்டி’ - அதாவது, ஒவ்வொருக்குமான தனிப் பாணி இருக்கிறது. மருத்துவர்கள் அணியும் கிளவுஸ் வாங்கி அணிபவர்கள் எப்போதும் அதையேதான் அணிவார்கள். சாதாரண ரப்பர் கிளவுஸ் உபயோகிப்பவர்கள், விலை மலிவான பிளாஸ்டிக் கிளவுஸ் அணிபவர்கள், துணியால் ஆன கிளவுஸ் அணிபவர்கள் எல்லாம் தங்களுக்குப் பழக்கமானவற்றையே மீண்டும் மீண்டும் உபயோகிப்பார்கள்.

நீங்கள் கொஞ்ச நேரம் தொடர்ந்தாற்போல் கிளவுஸ் அணிந்து வேலை செய்து பாருங்கள். அன்ஈஸியாக உணர்வீர்கள். எப்போதடா அதைக் கழற்றி எறிவோம் என்று உங்களுக்குத் தோன்றும். வெளிநாடுகளில் குற்றவாளிகள் அதிகம். கிளவுஸ் அணிவது இயல்பாக இருக்க வேண்டும், பழக வேண்டும் என்பதற்காக, அவர்கள் எப்போதுமே கிளவுஸ் அணிந்தபடிதான் இருப்பார்கள். நம் நாட்டில் அப்படியல்ல; தேவைப்படும்போது கடையில் ஏதோ ஒரு கிளவுஸ் வாங்கி அணிந்துகொண்டு, குற்றம் செய்துவிட்டு, அதை அங்கேயே கழற்றிப் போட்டுவிட்டு வந்துவிடுவார்கள். அதைக் கைப்பற்றி, ரிவர்ஸ் செய்து, அதிலிருந்தும் கைரேகை எடுக்கலாம்.

பெரும்பாலான குற்றவாளிகள் பூட்டை உடைக்கும்போது கிளவுஸைக் கழற்றிவிடுவார்கள். காரணம், கிளவுஸ் அணிந்து அவர்களால் சுத்தியலை வாகாகப் பிடித்து உபயோகிக்க முடியாது. எனவே, பூட்டைக் கவனமாக ஆராய்ந்தாலே பல குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்.

கைரேகை ஜோசியமும் படித்தவர் திரு.வரதராஜன். கைரேகை ஜோசியத்தில், எவன் ஒருவனுக்குப் பத்து விரல்களிலும் சுருள் அமைப்பு இருக்கிறதோ, அவன் நாட்டை ஆளுவான் என்று சொல்லப்பட்டிருக்கிறது. வரதராஜன் விரல் ரேகைப் பிரிவில் பணியாற்றத் தொடங்கியதும், அவருக்குள் இருந்த ஆர்வம் காரணமாக, பத்து விரல்களிலும் சுருள் அமைப்பு எத்தனை பேருக்கு இருக்கிறது என்று லட்சக்கணக்கான கிரிமினல்களின் விரல் ரேகைப் பதிவுகளை எடுத்துப் பார்த்தார். 2,400 பேருக்கு அப்படி இருந்ததாம். ‘இவர்கள் கைரேகை ஜோசியப்படி நாட்டை ஆள வேண்டுமே! குற்றவாளிகளாக அல்லவா இருக்கிறார்கள்!’ என்று யோசித்தபடியே, அந்தக் குற்றவாளிகளின் பின்புலத்தை ஆராய்ந்து பார்த்தால் ஓர் ஆச்சரியம்! அவர்கள் அத்தனை பேருமே தலா ஒரு பெரிய கூட்டத்துக்குத் தாதாவாக இருந்திருக்கிறார்கள்.

கைரேகை விஞ்ஞானத்தை முதன்முதலாகப் பிரயோகிக்கத் தொடங்கிய தமிழகம் துரதிர்ஷ்டவசமாக அங்கேயே நின்றுவிட்டது. அதற்குப் பின்னர் அதில் பல நாடுகள் ஆராய்ச்சி செய்து, கைரேகையைப் பலவற்றுக்கும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டன. நம் நாட்டில் குற்றவாளிகளின் கைரேகைகளை மட்டும்தான் பதிந்து வைத்திருக்கிறது அரசாங்கம். அமெரிக்கா போன்ற வெளிநாடுகளிலோ, ஒவ்வொரு குடிமகனுடைய ரேகையும் பதியப்பட்டுள்ளது. அப்படி இங்கேயும் கொண்டு வந்து, புகைப்படத்தோடு அவரவரின் கைரேகையையும் பதிந்து, தேசிய அடையாள அட்டையை ஒவ்வொரு குடிமகனுக்குத் தரவேண்டும். அப்படிச் செய்தால், அநாதைப் பிணம் என்பதே இல்லாது போகும்; போலி ரேஷன்கார்டு பிரச்னை இருக்காது. கைரேகை பதிந்தால்தான் ஒருவர் வோட்டளிக்கவே முடியும் என்றும் கொண்டு வந்துவிட்டால், கள்ள ஓட்டுப் பிரச்னையும் இருக்காது.

விகடன் அலுவலகத்தில் நாங்கள் விரல் ரேகை வைத்தால்தான் கதவு திறந்து எங்களை உள்ளே அனுமதிக்கும்; கூடவே, நாங்கள் அலுவலகம் வந்ததற்கான அட்டெண்டன்ஸ் பதிவாகும். இந்த டெக்னாலஜியை இன்னும் விரிவுபடுத்தி, திரு.வரதராஜன் சொல்வது போல் பல விஷயங்களில் கொண்டு வருவது சாத்தியம்தான் என்று தோன்றுகிறது.

இறந்தவரின் கட்டை விரலை வெட்டி எடுத்துக்கொண்டு போய், அதன் மூலம் ரேகைகளைப் பதிந்து, கேஸை திசை திருப்புவதாகச் சில திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். அது சாத்தியமா?

“அநேகமாக சாத்தியம் இல்லை. ஒருவரின் விரல்களில் வியர்வை நாளங்கள் உள்ளன. அவரது கைரேகையைப் பதிவு செய்து, அதைப் பெரிதுபடுத்திப் பார்த்தால், அந்த வியர்வை நாளங்கள் திறந்திருப்பது தெரியும். அதுவே, ஒருவர் இறந்துவிட்டால், அவரது உடல் டீ-கம்போஸாகி வியர்வை நாளங்கள் மூடிவிடும். அதன் மூலம் ரேகை பதிந்தால், அவற்றைப் பதிந்து, பெரிதுபடுத்திப் பார்க்கும்போது வியர்வை நாளங்கள் மூடியிருப்பது தெரியும். எனவே, இறந்தவரின் கைரேகை அது என்று கண்டுபிடித்துவிடலாம். இறந்து சுமார் ஆறு மணி நேரத்தில் உடம்பு டீ-கம்போஸாகும்” என்று விளக்கிய வரதராஜன், சில அபூர்வமான விரல் ரேகைகளைப் பற்றியும் சொன்னார்.

அவரது பதிவுகளில் உள்ள விரல் ரேகைகளில் ஆங்கில எழுத்துக்களான ஏ, பி, சி, டி என எழுத்துக்கள் உள்ள ரேகைகளும் உண்டாம். இன்னும் கிளி படம், சங்கு-சக்கரம், வேல் போன்ற வடிவங்கள் கொண்ட ரேகைகளும் இருக்கின்றன என்றார். சிலவற்றை லென்ஸ் மூலம் பெரிதுபடுத்தி எங்களுக்கும் காண்பித்தார். அவர் காண்பித்த ஒரு விரல் ரேகை வடிவம் எங்களைப் பெரிதும் ஆச்சரியத்தில் ஆழ்த்திற்று. அதில் தெள்ளத் தெளிவாக ‘ஓம்’ என்று இருந்தது. அது ரேகை வடிவம்தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இருக்கவில்லை. அது யாருடைய கைரேகை என்று கேட்டோம். எங்கள் ஆச்சரியம் பன்மடங்காயிற்று. ‘கரீம்’ என்கிற ஒரு குற்றவாளியினுடையது என்றார் வரதராஜன். “நமக்குத்தான் சாதி, மதமெல்லாம்! கடவுளுக்கு அதெல்லாம் கிடையாது என்பதற்கு இது ஒரு புரூஃப்” என்று சொல்லிச் சிரித்தார்.

பின்னர், தான் அரசுப் பணியிலிருந்து விலகி, சொந்தமாக ஒரு துப்பறியும் நிறுவனத்தைத் தொடங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது பற்றி விவரித்தவர், தனது ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ மூலம் தீர்த்து வைத்த சில சுவாரசியமான வழக்குகள் பற்றியும் சொன்னார்.

பெரும்பாலும், மணமகன் எப்படிப்பட்டவன், நல்ல குணம் உள்ளவனா என்று கண்டுபிடித்துச் சொல்லும்படி பெண்களின் தகப்பனார்கள் கேட்டுக் கொள்ளும் வழக்குகள்தான் வரும் என்றும், அதற்கடுத்ததாக தன் மனைவி எப்படிப்பட்டவள், தன் மீது விசுவாசம் உள்ளவளா, அவளுடைய செய்கையைப் பார்த்தால் சந்தேகமாக இருக்கிறது என்று சொல்லி, வெளிநாடுகளில் வேலை செய்யும் கணவன்மார்கள் கேட்டுக்கொள்ளும் வழக்குகள் அதிகம் வரும் என்று சொன்னார் வரதராஜன். இன்றைய கணினி உலகில், அதற்கேற்ப டெக்னாலஜியைப் பயன்படுத்தி அந்த வழக்குகளைத் தீர்த்துவைப்பதாகச் சொல்லி, தாங்கள் கையாளும் நவீன முறைகள் பற்றியும் விளக்கினார்.

அவர் விவரித்த ஒரு கேஸ் ரொம்பவும் உருக்கமாக இருந்தது.

சவூதி அரேபியாவிலிருந்து ஒருவர் போன் செய்து, “என் மாமனார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை. நானும் எப்படியெப்படியெல்லாமோ, எந்தெந்த வழிகளில் எல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னால் முடியவில்லை. தயவுசெய்து அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்ட வழக்கு அது.

அது விரிவாக அடுத்த பதிவில்!

.

9 comments:

////கைரேகை பதிந்தால்தான் ஒருவர் வோட்டளிக்கவே முடியும் என்றும் கொண்டு வந்துவிட்டால், கள்ள ஓட்டுப் பிரச்னையும் இருக்காது.////


......அதான் பிரச்சினையே.........கள்ள வோட்டு போட முடியாதே.........

ரொம்ப விறுவிறுப்பாக interesting ஆக இருக்குதுங்க. பகிர்வுக்கு நன்றி.
 
அடுத்த பதிவிற்கு காத்திருக்கின்றேன்.
 
விறுவிறுப்பா இருக்கு. அது இருக்கட்டும்... //அன்ஈஸியாக உணர்வீர்கள்// ஏன் இத்தனைக் கஷ்டப்பட்டு ஆங்கிலத்தில் எழுதணும்? ‘அசௌகரியமாக உணர்வீர்கள்’ என்று தமிழிலேயே சுலபமா எழுதியிருக்கலாமே? :)
 
super. super.

சார்.. சீக்கிரமா எழுதுங்க.

இல்லையென்றால் நாளை ஆவல் மிகுதியில் அலுவலகத்துக்கே வந்து விடுவேன். அது தவிர பார்த்து ரொம்ப நாளாச்சு..
 
very nice post.
 
நிறைய தெரிந்துகொள்ள முடிந்தது. நன்றி சார்.
 
மிக அருமையான தொடாராக இருக்கிறது சார். தொடருங்கள்.

Its more interesting...
 
சித்ரா, மால்குடி, கிருபாநந்தினி, பட்டர்ஃப்ளை சூர்யா, யூர்கன் க்ருகியர், ரோஸ்விக் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

கிருபாநந்தினி: ‘அசௌகரியம்’ என்பது தமிழ் இல்லை நந்தினி! அதே போல ‘சுலபம்’ என்பதும் தமிழ் இல்லை! :)

பட்டர்ஃப்ளை சூர்யா: வாங்க நேர்ல! பதிவுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம்? :)
 
very interesting.