உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, April 24, 2010

கடவுள் கொடுத்த முத்திரை!

காவல்துறையில் விரல் ரேகைப் பிரிவில் 20 வருடங்கள் பணியாற்றிவிட்டுப் பின்பு சில பல காரணங்களால் பதவியை ராஜினாமா செய்து, சொந்தமாக ‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ என்கிற துப்பறியும் நிறுவனத்தைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக்கொண்டு இருப்பவர் திரு. வரதராஜன். இவர், சென்ற புதன்கிழமையன்று விகடன் அலுவலகத்துக்கு விருந்தினராக வந்து எங்களிடையே உரையாற்றினார். அருமை... அருமை... மிக அருமை!

அவர் எங்களிடையே பேசிய இரண்டு மணி நேரமும், பரபரப்பான கிரைம் படம் பார்ப்பது போல, அற்புதமான ஒரு நாவலைப் படிப்பது போல இருந்தது. இன்னும் இன்னும் அவர் தன் அனுபவங்களைச் சொல்ல மாட்டாரா என்று இருந்தது. நாங்கள் கேட்டுக் கொண்டதன்பேரில், இரண்டு வார இடைவெளியில் மீண்டும் வந்து எங்களோடு பேசுவதாகச் சொல்லியிருக்கிறார். அவருக்கு நன்றி!

அவர் சொன்ன எந்த விஷயத்தையும் பதியாமல் விட விரும்பவில்லை. எனவே, ஒரே பதிவில் இயலவில்லை என்றாலும், அடுத்தடுத்து இரண்டு மூன்று பதிவுகளில் அவர் சொன்ன பல சுவாரசியத் தகவல்களை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

ரேகையில் தொடங்குகிறார் வரதராஜன்...

ரேகையைப் பொறுத்தவரை கைரேகை, விரல் ரேகை என இரண்டு விதம் உண்டு. கைரேகை என்பது ஒட்டு மொத்த உள்ளங்கையின் ரேகை. கைரேகை ஜோஸ்யர்களுக்கு உதவக்கூடியது இதுதான். காவல்துறைக்கும் கைரேகை உதவும் என்றாலும், அதிகம் உதவுவது விரல் ரேகைதான்!

விரல் ரேகைகளைப் பொறுத்தவரை ஓர் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், ஒருவரின் விரல் ரேகை போல் இன்னொருவரின் விரல் ரேகை இருக்காது. அது மட்டுமல்ல, ஒருவரின் பத்து விரல்களில் ஒரு விரலின் ரேகை போல் மற்றது இருக்காது. ஒரே தோற்றத்தில் பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் விரல் ரேகைகள்கூட மாறுபடும். உலகில் மொத்தம் சுமார் 600 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்றால், 6000 விரல்கள்; இந்த 6000 விரல்களின் ரேகைகளும் ஒன்றிலிருந்து மற்றொன்று வித்தியாசப்பட்டிருக்கும்.

விரல்களின் நுனிகளில் ரேகை எப்படி உருவாகிறது? எப்போது உருவாகிறது?

குழந்தை தாயின் வயிற்றில் மூன்று மாதக் கருவாக இருக்கும்போதே விரல் ரேகைகள் உருவாகிவிடுவதாக விஞ்ஞான ஆய்வு சொல்கிறது. குழந்தையின் உடம்பில் நடைபெறும் ரத்த ஓட்டம் விரல் நுனிகளுக்குச் சென்று, அதற்கு மேலே செல்ல முடியாமல் சுழன்று திரும்புவதன் காரணமாகவே (reverse swing) ரேகைகள் உருவாகியிருக்க வேண்டும் என்கிறது ஒரு விஞ்ஞான ஆய்வு.

விரல் ரேகை இப்படி ஒருவருக்கொருவர் வித்தியாசப்படுகிறது எனக் கண்டறிந்து, அதைக் கொண்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முறை உருவானது 19-ம் நூற்றாண்டில்தான்! சரி, அதற்கு முன் குற்றவாளிகளை எப்படி அடையாளம் கண்டனர்?

நான்கு விதமான முறைகளைக் கையாண்டிருக்கிறார்கள். முதலாவது, உறுப்புகளை வெட்டும் முறை. அதாவது, குற்றம் செய்தவன் என யாராவது நிரூபிக்கப்பட்டால் அவனது கை விரலையோ, கால் விரலையோ வெட்டிவிடுவார்கள். ஒருவனுக்குச் சுண்டு விரலை வெட்டினால், மற்றவனுக்கு நடு விரலை வெட்டுவார்கள். அடுத்தவனுக்குக் கட்டை விரலை வெட்டுவார்கள். சுண்டு விரல் இல்லாதவன் குப்புசாமி, நடு விரல் இல்லாதவன் ராமசாமி, கட்டை விரல் இல்லாதவன் கந்தசாமி என அடையாளம் வைத்துக் கொள்வார்கள்.

இரண்டாவது முறை, சூடு வைத்தல். நெற்றியில், முதுகில், மார்பில் என பழுக்கக் காய்ச்சிய இரும்பால் குற்றவாளிகளின் உடம்பில் ஏதேனும் பிரத்யேக வடிவங்களில் சூடு வைத்து, அதன்மூலம் இன்னார் என்று அடையாளம் கண்டார்கள்.

மூன்றாவது முறை, பச்சை குத்துதல். நான்காவது முறை, சவுக்கடி. முதுகில், தொடையில், கால்களில் என சவுக்கால் ரணகளமாக அடித்து, அதனால் ஏற்படும் வரித் தழும்புகளின் எண்ணிக்கையைக் கொண்டு அடையாளம் காணும் முறை.

நாகரிகம் வளராத காலம் அது. எனவே, இந்தக் கொடூர முறைகள்தான் வேறு வழியின்றிப் புழக்கத்தில் இருந்தன. ஆனால், நாகரிகம் வளர வளர, குற்றவாளிகளை அடையாளம் வைத்துக்கொள்ள வேறு ஒரு சிறந்த முறை வேண்டும் என்று யோசித்து, 18-ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் உடல் உறுப்புகளை அளத்தல் என்கிற ஒரு முறையைக் கொண்டு வந்தார் பெர்ட்ராண்ட் என்பவர். அதாவது ஒருவன் குற்றவாளி என்பது நிரூபணம் ஆனவுடன், அவனது தலைச் சுற்றளவு, நெற்றி அகலம், தோள்களின் அகலம், கை, கால்களின் நீளம், மார்புச் சுற்றளவு என சகலத்தையும் தனித் தனியாக அளந்து குறித்துக் கொள்வார்கள். புதிதாக ஒரு குற்றவாளி அகப்பட்டதும் அவனையும் அளந்து பழைய அளவுகளோடு ஒப்பிட்டுப் பார்த்து, அவன் பழைய குற்றவாளியா, புதிய குற்றவாளியா என்று தீர்மானிப்பார்கள். இதற்குப் பெர்ட்ராண்ட் முறை என்று பெயர்.

ஆசாமி இளைத்துப் போதல், பருமனாகிவிடுதல் என அளவுகள் அவ்வப்போது மாறிவிடும் சாத்தியம் உள்ளிட்ட பல குறைபாடுகள் இருந்தாலும், இந்த முறை சாத்விக முறையாக இருக்கவே, பல காலம் நீடித்தது. ஆனால், 1909-ல் இந்த முறைக்கும் வந்தது சிக்கல்.

வில்லியம் ஈஸ்ட் என்கிற ஒரு நீக்ரோ குற்றவாளியைக் கைது செய்தபோது, வழக்கம்போல் அவனை அளக்க வந்தார் ஒரு கான்ஸ்டபிள். அளந்து முடித்ததும், அவன் பழைய குற்றவாளிதான் என்று சொன்னார். அவனோ ‘இல்லை, நான் போலீஸில் சிக்குவது இதுதான் முதல் முறை’ என்று சாதித்தான். கான்ஸ்டபிள் தான் பதிந்து வைத்திருந்த குற்றவாளிகளின் அளவு நோட்டுப் புத்தகத்தைக் காட்டி, இவனுடைய அதே அங்க அளவுகளை ஏற்கெனவே குறித்து வைத்திருப்பதோடு ஒப்பிட்டுக் காட்டினார். ஆச்சரியம், இவனுடைய ஒவ்வொரு அளவும் அவர் குறித்து வைத்திருந்த அளவுகளோடு துல்லியமாக ஒத்துப் போயிருந்தது.

ஆனால், அதில் காணப்பட்ட பெயர் வில்லியம் வெஸ்ட். இப்போது பிடிபட்டவன் பெயர் வில்லியம் ஈஸ்ட். ‘என்ன... இரண்டு பேரின் உடல் உறுப்புகளின் அளவுகளும் துல்லியமாகப் பொருந்திப் போகிறதா! என்ன ஆச்சரியம்!’ என்று அந்தக் காலத்தில் உலகம் முழுக்கப் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவம் இது.

அதன்பின், இந்த அளவீட்டு முறையும் சரியில்லை என்பதால், குற்றவாளிகளை அடையாளப்படுத்த வேறு ஒரு முறையைக் கண்டறியும் தேவை உண்டாயிற்று. விஞ்ஞானிகள் கலந்தாலோசித்தனர். அப்போதுதான் அந்த ஈஸ்ட், வெஸ்ட் ஆசாமிகளின் விரல் ரேகையைப் பதிந்து, இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்தனர். இரண்டும் வேறுபட்டு இருந்தன.

அதன்பிறகு, இது சம்பந்தமாக பலப் பல ஆராய்ச்சிகள், பலப் பல ஒப்பீடுகள் செய்யப்பட்டன. ஒரு விரல் ரேகையும் இன்னொரு விரல் ரேகையும் ஒன்றுபோல் இல்லை என்கிற விஷயம் கண்டறியப்பட்டது. அந்த விஞ்ஞானிகள் குழுவில் இருந்த முக்கிய விஞ்ஞானி ஒருவருக்கு ஒரு சந்தேகம் வந்தது. இப்போது ஒருவிதமாக இருக்கும் ஒருவரின் விரல் ரேகை, பிறகு வேறு எந்தக் காரணத்தாலாவது மாறிவிட வாய்ப்பு உண்டா என்று கண்டறிய முயன்றார். அதற்காக அவர் தனது விரல்களையே தீயில் சுட்டுப் புண்ணாக்கிக் கொண்டார்.

சில மாதங்களுக்குப் பிறகு, காயமெல்லாம் ஆறிய பின்பு, மீண்டும் தன் விரல்களின் ரேகையைப் பதிந்து, முந்தைய தனது விரல் ரேகைகளோடு ஒப்பிட்டுப் பார்த்தார். என்ன ஆச்சரியம்..! தீயில் முழுவதுமாகக் கருகி, புதிதாக வளர்ந்த சதையில்கூட ரேகை பழையபடியே அதே அமைப்பில் இருந்தது. கொஞ்சமும் மாறவில்லை.

அன்றிலிருந்துதான், குற்றவாளிகளை அடையாளம் காண விரல் ரேகை முறை பின்பற்றப்பட்டு, இன்று வரை வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது.

நமது தோற்றம் நாளுக்கு நாள் மாறக்கூடியது. பத்து வயதில் இருப்பது போல் இருபது வயதில் இருப்பதில்லை; நாற்பது வயதில், அறுபது வயதில், எண்பது வயதில் என நமது தோற்றம் மாறிக்கொண்டே இருக்கிறது. ஆனால், இரண்டு வயதுக் குழந்தையின் விரல் ரேகைகள்தான், அந்தக் குழந்தைக்கு எண்பது வயதாகும்போதும் இருக்கிறது. அந்த அமைப்பு கொஞ்சம்கூட மாறுவதில்லை.

எனவேதான், இதை ‘கடவுள் கொடுத்த முத்திரை’ என்று வர்ணிக்கிறார்கள் விரல் ரேகை நிபுணர்கள். A seal given by God!

இங்கே தமிழர்களாகிய நாம் பெருமை கொள்ளத்தக்க செய்தி ஒன்றையும் சொன்னார் திரு.வரதராஜன்.

ரேகை மூலம் அடையாளம் காணும் முறை 1909 முதல் பின்பற்றப்பட்டாலும், அதற்கு முன்பே, 1895-லேயே உலகின் முதல் கைரேகைக் கூடம் சென்னையில்தான் ஆரம்பிக்கப்பட்டது. குற்றவாளிகளின் கைரேகைகளைப் பதிந்து, பாதுகாத்து, அந்த இடத்துக்குப் பொறுப்பாளராக ஒரு போலீஸ் ஆபீசர் நியமிக்கப்பட்டு, அவருக்கு மாதச் சம்பளம் ரூ.15 வழங்கப்பட்டுள்ளது. ‘ஃபிங்கர் பிரின்ட் டிபார்ட்மென்ட்’டில் இந்தச் சம்பளம் வழங்கப்பட்ட ரசீது இன்னமும் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது.

திரு.வரதராஜன் சொன்ன இன்னும் பல சுவாரசியத் தகவல்கள் எனது அடுத்த பதிவில்!

.

12 comments:

சுவாரஸ்யம் மற்றும் ஆச்சிரியங்களின் பின்னணியில் கடவுள் கொடுத்து முத்திரை நன்று
 
சுவாரஸ்யம் மற்றும் ஆச்சிரியங்களின் பின்னணியில் கடவுள் கொடுத்து முத்திரை நன்று
 
அருமை. தொடருங்கள்..
 
உலகில் உள்ள 600 கோடிப் பேரின் 6000 விரல் ரேகைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்பட்டிருப்பது உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான். இதைக் கடவுள் கொடுத்த முத்திரை என்று குறிப்பிடுவது மிகவும் பொருத்தமே!
 
திரு.ரவிபிரகாஷ்,

இந்த பின்னூட்டம் இந்தப் பதிவுக்கானது அல்ல.

ஒரு பதிவில் 'ரிச்சீ ஸ்ட்ரீட்'டில் வாங்கிய சல்லிசான எம்.பி.3 ப்ளேயர் பற்றி எழுதியிருந்தீர்கள். அதன் கூடுதல் விபரங்கள் தரமுடியுமா ?

- ரிச்சி ஸ்ட்ரீட்டில் என்னவென்று சொல்லி கேட்பது?
- இதன் தோராய விலை என்ன?
- இதன் மெமரி கொள்ளளவு என்ன?
- பேட்டரி (AAஆ AAAஆ) இல்லை எலெக்ட்ரிக் சார்ஜா ?
- இதனுடன் என்னென்ன கனெக்டர்கள் கொடுக்கிறார்கள். (USB?)

நன்றி - மகேஷ்.
 
சர்த்தான்..! பதிவு போட மேட்டருக்கு இனிமே நீங்க மண்டையப் பிச்சுக்க வேண்டியதில்ல போல்ருக்கே! லட்டு மாதிரி பிடிச்சுட்டீங்க. ‘கடவுள் கொடுத்த முத்திரை’ சூப்பர் பதிவு! கலக்குங்ணா!
 
நன்றி பத்மநாபன்!

நன்றி சூர்யா!

நன்றி கணேஷ்ராஜா!
தாங்கள் புதிய வரவென்று அறிகிறேன். தங்களை வருக வருகவென வரவேற்கிறேன். தங்களின் வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் நன்றி!
 
திரு. மகேஷ்!
தங்களின் இ-மெயில் முகவரியைத் தரவில்லையாதலால், தங்களின் இந்தப் பின்னூட்டத்தை இங்கே பதிய வேண்டியது (பதில் சொல்வதற்காக) அவசியமாகிவிட்டது.
1. ரிச்சி ஸ்ட்ரீட்டில் தடுக்கி விழுந்தால் எலெக்ட்ரானிக்ச் பொருள்கள் விற்கும் கடைதான். அங்கே போய், யு.எஸ்.பி. எம்.பி-3 பிளேயர் என்று கேட்டால் கொடுப்பார்கள்.
2. நல்லதொரு பிராண்டட் யு.எஸ்.பி. எம்.பி-3 ரூ.700 விலையாகிறது. 500, 300 ரூபாய்களிலும் கிடைக்கிறது. ஆனால், தரத்துக்கு உத்தரவாதம் கிடையாது.
3. யு.எஸ்.பி வாங்கும்போதே அதனுடன் சார்ஜரும் கொடுப்பார்கள் (செல்போனுக்குக் கொடுப்பது போல).
4.தவிர, அதைக் கொண்டே கம்ப்யூட்டரிலிருந்து பாடல்களை இந்த எம்.பி-3-க்கு மாற்றிக் கொள்ள முடியும்.
யு.எஸ்.பி. எம்.பி-3 ஒரு ஜி.பி., இரண்டு ஜி.பி. எனப் பல அளவுகளில் கிடைக்கிறது. ஒரு ஜி.பி உள்ள எம்.பி-3-யில் தோராயமாக 150 பாடல்களை டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ள முடியும். ஆனால், வரிசைப்பிரகாரம்தான் கேட்டு ரசிக்க முடியும். தேர்ந்தெடுத்துக் கேட்க இயலாது. அதற்கு நீங்கள் ‘ஐ-பாட்’தான் வாங்க வேண்டும். அது ரூ.2000-லிருந்து 4000 வரை தரத்துக்கேற்ப கிடைக்கிறது.
 
நன்றி கிருபாநந்தினி! யாமின்புறுவது பிறரும் இன்புறட்டும் என்கிற நோக்கிலேயே அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். பதிவுக்கு மேட்டர் தேடி மண்டையைப் பிய்த்துக் கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை.
 
திரு.ரவிபிரகாஷ்

நன்றி - மகேஷ்.
 
அன்புள்ள ரவிபிரகாஷ்,

உங்கள் பதிவில் மகேஷ் என்பவருக்கு நீங்கள் அளித்த பின்னூட்டத்துக்கான பின்னூட்டம் இது.

/வரிசைப்பிரகாரம்தான் கேட்டு ரசிக்க முடியும். தேர்ந்தெடுத்துக் கேட்க இயலாது. அதற்கு நீங்கள் ‘ஐ-பாட்’தான் வாங்க வேண்டும்.//

எம். பி 3 பிளேயர்களில் பொதுவாக ஷபல் செய்து கேட்கும் வசதி இருக்கும். அது தவிர கம்ப்யூட்டரிலிருந்து பிளேயருக்கு பாடல்களை கொண்டு செல்லும்போது ப்ளே லிஸ்ட் உருவாக்கி அதையும் ப்ளேயரில் சேர்க்க இயலும். அப்படி ப்ளே லிஸ்ட்கள் சேர்த்து விட்டால் ப்ளே லிஸ்ட்டை தேர்ந்தெடுத்து அப்போதைக்கு விருப்பப்படும் பாடல்களை மட்டும் கேட்கலாம்.

[SRK]
 
லேட்டா வந்ததால் புது பதிவுகளை முன்னமே படித்துவிட்டேன். இருந்தாலும் மிகவும் சுவாரஸ்யமான பதிவாக இருக்கிறது.