உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, December 19, 2009

ஞாநி Vs. சா.நி.

ஞாநியைப் பற்றி சாரு நிவேதிதா தனது சாரு ஆன்லைனில் எழுதிய விஷயத்தை ஞாநியைப் பிடித்தவர்களும் பிடிக்காதவர்களும் வெவ்வேறு காரணங்களுக்காகத் தங்கள் வலைப்பூக்களில் மறு பதிவீடு செய்துகொண்டிருக்கிறார்கள்.

ஞாநி என் நண்பர். அவரது எழுத்துக்களை நிறையப் படித்திருக்கிறேன். தொடர்ந்து படித்தும் வருகிறேன். சாரு நிவேதிதா எனக்கு அதிகம் பழக்கம் இல்லாதவர். அவரது எழுத்துக்களை நான் அதிகம் படித்ததில்லை. என்றாலும், சமீபத்தில் ஞாநியைப் பற்றி சாரு எழுதியிருந்தவற்றில் பெரும்பாலானவை எனக்கும் உடன்பாடே!

பொதுவாகவே ஞாநிக்கும் சாருவுக்கும் ஏழாம் பொருத்தம் என்று கேள்வி. பொதுவாக, ஞாநியின் பெரும்பாலான கருத்துக்களுடன் நானும் ஒத்துப் போகிறேன். ஆனால், அவரது சில கருத்துக்களை என்னால் ஏற்க முடியவில்லை.

இங்கே நம்மில் பெரும்பாலோர் செய்கிற தவறு - அது அரசியல் தலைவரோ, நடிகரோ, அறிஞரோ, ஜோசியரோ, பத்திரிகையாளரோ... யாரோ ஒருவர் சொன்ன பத்துப் பன்னிரண்டு விஷயங்கள் நமக்கு நியாயம் என்று தோன்றிவிட்டால், நம் கருத்தோடு பொருந்திப் போய்விட்டால், அடுத்து அவர் பதின்மூன்றாக ஒன்றை அபத்தமாகச் சொன்னாலும் நம் சிந்தனைகளை அடகு வைத்துவிட்டு அதை அப்படியே ஏற்றுக் கொண்டு விடுகிறோம். அவர் சொன்ன அந்த அபத்தத்தையே நியாயமான கருத்து என்று நம்பி விடுகிறோம்.

‘எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு’ என்றார் வள்ளுவர். இதில் ‘யார் யார் வாய்’ என்பதில், முக்கியமாக நமது நம்பிக்கைக்கு உரியவர்களின் வாய்களும் அடங்கும். காரணம், நம்பிக்கைக்கு உரியவர்கள் ஒன்றைச் சொல்லும்போதுதான் நம் மூளை மரத்துப் போகும் அபாயம் இருக்கிறது.

கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது இளைஞர்களின் பிறப்புரிமை என்பதாக ஞாநி எழுதியிருந்ததைப் படித்தபோதே, என்ன இத்தனை அபத்தமாக எழுதியிருக்கிறார் என்று நினைத்தேன். கிரிக்கெட் விளையாடும் இடம் கடற்கரை என்பதைப் பைத்தியக்காரன்கூட ஒப்புக்கொள்ள மாட்டான். கடற்கரையில் வாக் போகும்போது, கிரிக்கெட் பந்து பட்டு கபாலம் பிளந்தால், ஞாநியா வந்து தாங்கப் போகிறார்? கடற்கரை என்ன, தெருக்களில்கூடத்தான் இளைஞர்கள் கிரிக்கெட் ஆடுகிறார்கள். அதற்கும் சேர்த்து வக்காலத்து வாங்கவேண்டியதுதானே ஞாநி?

பெயரைச் சுருக்கக்கூடாது என்றாராம் ஞாநி. சாரு நிவேதிதாவை சாநி, சாநி என்று கூப்பிடலாமா என்று கேட்டாராம். இதற்கு ஞாநி தனது மறுப்புக் கடிதத்தில் பதிலேதும் சொல்லவில்லை. அப்துல் கலாமை இவர் தனது கட்டுரைகளில் வெறுமே கலாம், கலாம் என்றுதானே குறிப்பிடுகிறார்? எம்.ஜி.ஆர். பற்றிச் சொன்னால் ஒவ்வொரு முறையும் எம்.ஜி.ராமச்சந்திரன் என்றா சொல்லிக்கொண்டு இருக்கிறார்? பெயரைச் சுருக்கக்கூடாது என்பது அபத்தம். பெரும்பாலான அலுவலகங்களில் ‘என்ன வி.கே. எப்படி இருக்கீங்க? நம்ம கே.வி. சார் இன்னிக்கு லீவா?’ என்று சுருக்கமாக அழைத்துத்தான் பேசுகிறார்கள். இதிலென்ன தவறு கண்டார் ஞாநி என்பது ஞாநிக்கே வெளிச்சமாக இருக்காது.

‘பொன்னாடை என்று பொய் சொல்லிப் போர்த்தும் கைத்தறித் துண்டு’ என்று தனது மறுப்புக் கடிதத்தில் ஒரு வரி எழுதியிருக்கிறார். இவர் எழுத்தில் தரும் பூச்செண்டு என்பது பாராட்டின் அடையாளமாம். ஆகா, பேஷ், பேஷ், பலே என்பது போல அது ஒரு சொல் குறியீடாம். சரி, பொன்னாடை என்பதும் அதுதானே? அது சொல் குறியீடு என்றால் இது பொருள் குறியீடு. கௌரவத்தின் அடையாளம்! அவ்வளவுதானே! அதை மட்டும் எப்படி வாய் கூசாமல் ‘பொய் சொல்லிப் போர்த்துவதாக’ச் சொல்கிறார்? நிஜமாகவே பொன் இழைகளால் நெய்து போர்த்தவேண்டும் என்று சொல்ல வருகிறாரா ஞாநி?

ஒரு கட்டுரையில், கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு அகற்றல் என்ற பெயரில் 1500 ஏழை பள்ளிச் சிறுவர்களை 30 கி.மீ-க்கு அப்பால் தூக்கியடித்த தமிழக அரசைக் கண்டித்திருக்கிறார். ஏழைப் பங்காளராகக் காண்பித்துக் கொள்வதில் அத்தனைத் துடிப்பு ஞாநிக்கு. ஆக்கிரமிப்பை யார் செய்தாலும் ஆக்கிரமிப்புதான். ஏழை செய்தால் நியாயமாகிவிடாது. ‘ஐயோ பாவம், ஏழை’ என்று, கொள்ளையடித்தவனை தண்டிக்காமல் விட்டுவிட முடியுமா? ஞாநியின் வீட்டுக்குள் ஏழை எளியவர் என ஒரு ஏழெட்டுப் பேர் அவர் அனுமதியின்றி அத்து மீறி வந்து குடியேறினால், அவர்தான் ஐயோ பாவம், ஏழை என்று சும்மா விட்டுவிடுவாரா? ஏழைகளுக்கு உரிய வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதைச் செய்யாத அரசாங்கத்தைக் கண்டிக்கட்டும். மற்றபடி, ஆக்கிரமிப்பு செய்தவர்களை அகற்றியதை அநியாயம் என்று சொல்வதுதான் அநியாயம்!

அதே போல்தான் இவரது இன்னொரு எதிர்ப்பும் அபத்தமாக இருந்தது. சென்னை நகரின் அண்ணா சாலை, காமராஜ் சாலை ஆகிய பகுதிகளில் சுவரொட்டிகள், சுவர் எழுத்துக்கள் ஆகியவற்றை மாநகராட்சி தடை செய்திருப்பது மக்களுடைய கருத்துச் சுதந்திரத்தில் தலையிடும் அராஜகச் செயலாம். சுவர்களில் கண்டபடி கிறுக்குவது கருத்துச் சுதந்திரமா? அதுவும் பொதுமக்களின் கருத்துச் சுதந்திரமா? பள்ளிச் சுவர்களில் ஆசிரியரைப் பற்றிக் கரியால் கண்டபடி கிறுக்கி வைப்பார்கள் மாணவர்கள். அது மாணவர்களின் சுதந்திரம் என்று அதற்கும் ஞாநி வக்காலத்து வாங்கினாலும் வாங்குவார். என்னைக் கேட்டால், மேலே சொன்ன இரண்டு தெருக்கள் மட்டுமல்ல, பொது இடங்களில் எந்த ஒரு சுவரிலுமே போஸ்டர் ஒட்டக்கூடாது, சுவர்களைக் கறைப்படுத்தக்கூடாது என்று சட்டம் கொண்டு வரவேண்டும் என்பேன்.

லுங்கி அணிந்து வரக்கூடாது என்று கமலா தியேட்டர் நிர்வாகம் அறிவித்தபோது பொங்கியெழுந்துவிட்டார் ஞாநி. லுங்கியோடு சினிமா துறையினரை அழைத்துச் சென்று போராட்டம் நடத்தப் போவதாக வீராவேசமாக எழுதினார். அதைப் படித்தபோது சிரிப்புதான் வந்தது.

கமலா தியேட்டரின் அந்த அறிவிப்பு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டு மதச் சண்டையை வேறு கிளறிவிட முயன்றார் ஞாநி. காரணம், அது அவங்களுக்கு வீட்டில் மட்டுமே அணிகிற உடை இல்லையாம். பொது இடங்களிலேயும் பயன்படுத்துகிற உடைதானாம். ஆனால், அடுத்த வரியிலேயே, லுங்கி எல்லா மதத்துலயும் இருக்கிற சாமான்ய மக்களுடைய உடை என்கிறார். சரிதான். அப்படியானால், அந்த அறிவிப்பு சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரானது என்று எப்படிச் சொல்ல முடியும்? இது வக்கிரமாகத் திரிக்கப்பட்ட ஒரு விஷயம்தானே?

நான் 35 ஆண்டுகளாக லுங்கி அணிந்துதான் வருகிறேன். சினிமாவுக்குப் போனாலும் சரி, வெளியே கடைத் தெருவுக்குப் போனாலும் சரி. ஞாநி சொல்வது போல் அது ஒன்றும் முஸ்லிம்களின் பிரத்யேக உடை என்கிற எண்ணமெல்லாம் என்னிடமும் இல்லை; ஏனைய தமிழ் மக்களிடமும் இல்லை. அது ஒரு பொது உடையாகி வெகு காலமாகிவிட்டது. முஸ்லிம்கள் லுங்கி அணிந்தால் கணுக்கால் நன்கு தெரியும்படி உயர்த்திக் கட்டுவார்கள். அதுதான் அவர்களின் மரபு. நாமெல்லாம் தழையத் தழைய லுங்கி அணிவோம். அது ஒன்றுதான் வித்தியாசம்.

லுங்கி அணிந்து வந்தால் அனுமதிக்க மாட்டோம் என்று கமலா தியேட்டர் நிர்வாகம் அறிவித்தால் அது அவர்கள் விருப்பம். இஷ்டமிருந்தால் போ; இல்லாவிட்டால் விடு! அதற்காகப் போராட்டம் நடத்துவேன், மதச் சண்டையைக் கிளறுவேன் என்றால் என்ன அர்த்தம்? கமலா தியேட்டர் ஒன்றும் பொது இடமல்ல. அது ஒரு தனியாரின் வணிக வளாகம். அவர்களின் வணிகம் சினிமா வெளியீடு. அங்கே அவர்கள் ஓர் ஒழுங்கைக் கொண்டு வர விரும்புகிறார்கள். கல்லூரிகளின் யூனிஃபார்மையே எதிர்ப்பவரால் தியேட்டரின் இந்த அறிவிப்பை ஜீரணித்துக் கொள்ள முடியாதுதான். இவர் ஓர் அலுவலகத்தில் பணியாற்றினால், அங்கேயும் லுங்கி அணிந்துதான் செல்வாரா? எந்த ஒழுங்குக்கும் கட்டுப்பட மாட்டேன் என்று சொல்பவரை என்னதான் செய்வது?

லுங்கி ஒன்றும் தவறான உடையல்ல; ஆபாச உடையல்ல. வசதியான உடைதான். அதற்காகச் சில கட்டுப்பாடுகளை, நியதிகளை மீறுவது எப்படிச் சரியாகும் என்று புரியவில்லை. நான் வீட்டில் அரை டிராயரும் பனியனும் மட்டும்தான் அணிந்திருப்பேன். அதோடுதான் காலையில் வாக் போவேன். அதற்காக அதையே அலுவலகத்துக்கும் அணிந்து செல்வேன் என்று பிடிவாதம் பிடிக்க முடியுமா? அதற்கு அலுவலகம் மறுத்தால், ‘அரை டிராயர் என்ன ஆபாச உடையா?’ என்று குரலெழுப்ப முடியுமா? பேத்தல்.

மதுகோடாவை விமர்சிக்கும் கட்டுரையில் ‘அவன், இவன்’ என்று ஏக வசனத்தில் ஞாநி எழுதியிருந்ததைப் பார்த்து, ‘அட, என்ன தைரியமாக எழுதியிருக்கிறார்! ஞாநி ஞாநிதான்!’ என்று பிரமித்தேன். மறுவாரமே சொதப்பிவிட்டார். அவர் ஜார்கண்டில் இல்லை என்ற வசதியில்தான் அப்படி எழுதினாராம். இங்கே இருக்கும் ஊழல் அரசியல் தலைவர்களையும் நியாயப்படி அவன், இவன், அவள், இவள் என்றுதான் எழுத வேண்டும்; ஆனால், முடியாதே என்று அங்கலாய்க்கிறார். ஆக, கேட்பார் இல்லை என்றால்தான் ஞாநி எதையும் ‘வீர’மாக எழுதுவார் போலிருக்கிறது. அருகில் இல்லாதவன், கையாலாகாதவன், இளித்தவாயன், அப்பிராணி இவர்களிடம் மட்டும்தான் ஞாநி தன் வீரத்தைக் காட்டுவார் போலிருக்கிறது. சபாஷ்! தூரத்தில் பார்த்துக் குரைத்துவிட்டு, அருகில் சென்றதும் பம்மிப் பதுங்கி மீண்டும் ஓடிப் போய் தூரத்தில் நின்றுகொண்டு குரைக்கும் சோப்ளாங்கி நாயின் ‘வீர’த்துக்கு ஒப்பானது இது. அனைவரையும் ஏக வசனத்தில் சரிசமமாக எப்போது குறிப்பிட வக்கில்லையோ அப்போதே அனைவரையும் மரியாதையாகக் குறிப்பிட்டு எழுதிவிட்டால் இந்தக் கேள்விக்கே இடமிருந்திருக்காது. ஞாநியின் இந்த ‘வீர’த்துக்கு, கருணாநிதி சந்தன வீரப்பனை ‘அவர், இவர்’ என்று குறிப்பிட்டது எவ்வளவோ மேல்!

கடைசியாக ஞாநியிடம் ஒரு கேள்வி. அப்துல் கலாமைப் பற்றி எழுதும்போதெல்லாம் ‘கலாம் அய்யர்... கலாம் அய்யர்’ என்று குறிப்பிடுகிறீர்களே, அதன் தாத்பர்யம் என்ன? அதன் மூலம் கலாமைப் பெருமைப்படுத்த எண்ணுகிறீர்களா? நிச்சயம் இருக்காது. ஓர் இஸ்லாமியரை அய்யர் என்று குறிப்பிடுவதன் மூலம் அவரைப் பெருமைப்படுத்துவதாகத் தாங்கள் எண்ண மாட்டீர்கள். சரி, கலாமை மட்டம் தட்டவே அப்படி ‘கலாம் அய்யர்’ என்று புகுத்திச் சொல்கிறீர்களா? அதாவது, அய்யர் என்றாலே மட்டமானவர்கள் என்ற பொதுக் கருத்தில் அவரை அப்படி அழைப்பதன் மூலம் அவரின் தரத்தைக் குறைக்க முனைகிறீர்களா? அப்படியானால், அய்யர் கூட்டம் மொத்தமுமே (தங்களையும் சேர்த்து) அயோக்கியக் கூட்டம் என்பதுதான் உங்கள் கருத்தா? சொல்லுங்கள் ஞாநி சார், கலாம் அய்யர் என்று சொல்வதன் மூலம் நீங்கள் கலாமை உயர்த்துகிறீர்களா, தாழ்த்துகிறீர்களா, இரண்டும் இல்லாமல் ஒளஒளாக்காட்டிக்கா?

.

32 comments:

சென்னையில் ஒரு சொலவடை உண்டு.
“வண்டை வண்டையாக் கேக்கிறது” என்று!
அதற்கு இந்த இடுகை சாலச் சிறந்த உதாரணம்.
 
// கமலா தியேட்டர் ஒன்றும் பொது இடமல்ல. அது ஒரு தனியாரின் வணிக வளாகம். அவர்களின் வணிகம் சினிமா வெளியீடு. அங்கே அவர்கள் ஓர் ஒழுங்கைக் கொண்டு வர விரும்புகிறார்கள்.

லுங்கி அணிந்து வர கூடாது என்ற அறிவிப்பு சுத்த அபத்தம். தனியாரின் வணிக நிறுவனம் ஆனாலும் அரசின் வரி சலுகைகளை பெற்று தான் அந்த நிறுவனம் நடக்கிறது...
 
மற்றபடி நல்ல அலசல் :-)
 
சார், சாரு நிவேதிதா அவர்களின் கட்டுரையை சாரு ஆன்லைனில் சமீபத்தில் படிக்க நேர்ந்தது. அதில் குறை கூறவேண்டும் என்ற நோக்கம் இருந்ததாக தெரியவில்லை. மாறாக தொட்ட தொன்னூறுக்கும் குறை கூறுவதையே வாடிக்கையாய் கொண்டால் கோபம் தான் வரும் என்பதைத்தான் தெளிவாக காட்டி இருக்கிறார்.

கருத்துக்களை கருத்துக்களோடு மோத விடுகிறார்களே.அதுவே பாராட்டப் பட வேண்டியது.

சார், அந்த வகையில் உங்களுக்கு ஒரு பூச்செண்டு ! :-)
 
நெத்தியடி..!
 
தலைவா...ஞாநி,சாரு எல்லாம் "சுப்பிரமணியசாமி" மாதிரி! இவங்க எல்லாம் இல்லைனா சுவாரசியமாவே இருக்காது...தவிர, இவங்க பேசறத சீரியஸா எடுத்துக்கிட்டா அதை விட காமெடி வேற இருக்காது.கரெக்டா...?
 
ஒன்றிரண்டு கருத்துக்களில் மாற்று எண்ணம் தோன்றினாலும், படித்து முடிக்கும் வரை பின்னணியில் ஒரு சரவெடி ஓசை கேட்டுக் கொண்டே இருந்தது.
 
நன்றி லதானந்த்! திரு.ஞாநி என் அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நண்பர் என்பதால் கூடுமானவரை அடக்கியே வாசித்திருக்கிறேன்.

காலப் பறவை! வந்ததுக்கும் பின்னூட்டம் இட்டதுக்கும் மிகவும் நன்றி! உங்கள் கருத்தைத் தெரியப்படுத்தியதற்கு மகிழ்ச்சி! தமிழக அரசின் அறநிலையத் துறையின் கீழ்தான் கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் கண்டபடி உடை அணிந்து போக முடியாது. கூடாது. மந்திரிகள் ஏன் லுங்கி அணிந்து சட்ட சபைக்குச் செல்வதில்லை? அரசின் வரிச் சலுகைகளைப் பெற்றுத்தான் சில மருந்து ஸ்தாபனங்கள் நடைபெறுகின்றன. அங்கே பணியாற்றுபவர்கள் என்ன உடை வேண்டுமானாலும் அணியலாமா? மற்றபடி உங்கள் மாற்றுக் கருத்துக்கு மதிப்பளிக்கிறேன்.

* பாராட்டுக்கு நன்றி!
 
திரு.பொன்னியின் செல்வன், நிறைய பூச்செண்டு கொடுங்க, குறியீடாகவோ, நிஜப் பொருளாகவோ! நான் வேண்டாமென்று சொல்ல மாட்டேன்! :)
 
திரு.ராஜு! நெத்தியடியாகப் பாராட்டியிருக்கிறீர்கள். இதற்கு எத்தனை நன்றி சொன்னாலும் போதாது!
 
ரெட்டை வால்’ஸ்! சுப்பிரமணியம் சுவாமி உண்மையிலேயே ரொம்ப ஜீனியஸ்! சிலர் அப்படித்தான் எதனாலோ பொதுமக்கள் பார்வையில காமெடியன்கள் ஆயிடுறாங்க! நான் ஞாநியை மிகவும் மதிக்கிறேன். (சாருவையும்தான்!) அதனால்தான் அவர் அபத்தமாக ஏதாவது சொல்லி வைக்கும்போது எரிச்சல் வருகிறது. நிற்க, உங்கள் வலைப்பூவைத் திறந்தால், அடோபே ஃப்ளாஷ் பிளேயரால் ஸ்ட்ரக் ஆகி நின்றுவிடுகிறது. இதே பிரச்னையால் வேறு சிலரின் வலைப்பூக்களும் சிக்கலாகி நின்றன. ஏன்? இது பற்றி உங்களுக்கு ஏதாவது தெரியுமா?
 
திரு.எஸ்.ஆர்.கே., மாற்றுக் கருத்தானாலும் அவசியம் பகிர்ந்து கொள்ளுங்கள்! மற்றபடி தங்கள் பாராட்டுக்கு நன்றி!
 
ரவி சார்! கம்ப்யூட்டரில் எனக்கு அவ்வளவாக தெரியாது...எனினும் யாரிடமாவது கேட்டு சரி செய்ய முயற்சிக்கிறேன்.By the way எனக்கும் ஞாநியையும் சாருவையும் பிடிக்கும். எல்லாத்துக்கும் கருத்து சொன்னால் எரிச்சலாக வருமில்லையா! நடைமுறைத் தீர்வு சொல்லாத எந்தவொரு Allegation ம் அபத்தம் என்பதே என் கருத்து.இருவருக்கும் உள்ள ஒரு ஒற்றுமை சில நல்ல கட்டுரைகளுக்காக எல்லாக் கட்டுரையையும் வாசிக்க வைத்து விடுவார்கள்.லார்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட் ஆடக் கூப்பிட்டால் அதைப் புறக்கணித்து அமிஞ்சிக்கரையில் கிரிக்கெட் ஆடிக்கொண்டு பிட்ச் சரியில்லை என்று புலம்பும் ரகம் ரெண்டு பேரும்.நிறைய பேருக்கு ஐகான் ஆகத் தகுதியிருந்தும் அதிகப்பிரசங்கித்தனத்தால் தன்னை அப்படி ஆகாமல் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொள்வார்கள்.And the list nver dry.
 
Sir please install latest version of adobe and plug-ins also.
 
ரவி சார், ஞாநி பேர்ல உங்களுக்கு என்னங் சார் அத்தினி காண்டு? இந்தக் கிழி கிழிச்சிருக்கீங்க? வழக்கமா கேணிக் கூட்டத்தைப் பத்தி எழுதுவீங்க. இந்த முறை காணோம். ஞாநி மேல உள்ள கடுப்புலதான் இந்த முறை போகலையோ?
 
//தலைவா...ஞாநி,சாரு எல்லாம் "சுப்பிரமணியசாமி" மாதிரி! இவங்க எல்லாம் இல்லைனா சுவாரசியமாவே இருக்காது...
தவிர, இவங்க பேசறத சீரியஸா எடுத்துக்கிட்டா அதை விட காமெடி வேற இருக்காது.கரெக்டா...? //

----- ரெட்டை வால்ஸ்இதுதான் உண்மையும் கூட, இவர்களிப்போன்ற "கோமாளிகள்" இல்லை என்றால் ஒரு சுவாரசியமே இருக்காது.
சாரு,ஞானி போன்றவர்களை இந்த நிலையில் வைத்தே பார்க்க்க லாயக்கானவர்கள்.
 
/கிரிக்கெட் விளையாடும் இடம் கடற்கரை/

இல்லைதான்! ரொம்பச் சரி!

இதைப் பைத்தியக்காரர்கள் ஒத்துக் கொள்கிறார்களோ இல்லையோ, கடற்கரையைத் தமிழ் நாட்டில் மட்டும் அரசியல்வாதிகள் செத்துப்போன பிறகும் தூங்குமிடமாக அரசும், அரசியல் வாதிகளும் மாற்றிக் கொண்டு வருகிறார்களே!

இது மட்டும் கடற்கரைக்குப் பெருமையாக இருந்துவிட்டுப் போகட்டும் என்கிறீர்களோ?
 
//கடற்கரையில் கிரிக்கெட் ஆடுவது . .......... கீழ்ப்பாக்கம் பகுதியில் ஆக்கிரமிப்பு .......... சுவரொட்டிகள், சுவர் எழுத்துக்கள் //

நீங்கள் குறிப்பிட்ட மூன்று விஷயங்களும் எந்த ஒரு சாமான்யனுக்கும் எரிச்சல் தரும். ஆனால் ஞாநி அதற்கு வக்காலத்து வாங்கியது மேலும் எரிச்சலை மூட்டியது.
குமுதம் இதழில் படிப்பதற்கு என்று இருந்த ஒரே விஷயம் ஞாநி - யின் பக்கங்கள் என்று நினைத்திருந்தேன். அந்த நினைப்பில் அவர் மண் அள்ளிப் போட்டு வெகு நாட்கள் ஆகின்றன.

உங்கள் கட்டுரை மிகவும் அருமை .
நன்றி !
 
அதாவது, அய்யர் என்றாலே மட்டமானவர்கள் என்ற பொதுக் கருத்தில் அவரை அப்படி அழைப்பதன் மூலம் அவரின் தரத்தைக் குறைக்க முனைகிறீர்களா?
அப்படி ஒரு பொதுகருத்து எங்கு இருந்து வந்தது? உங்களின் தனிப்பட்ட கால்புனர்சிக்கு ஒரு இனத்தையே பழிப்பது தவறான செயல்.
 
குமுதத்தில் சாருவை ஞாநி விமர்சித்த மொழிகள் ரொம்ப மோசமானவை. சிறுபத்திரிகை மற்றும் வலையுலகத்துக்குள் நடந்துகொண்டிருக்கும் ஒரு பிரச்சினையை ஏன் குமுதத்தில் அவர் எழுதவேண்டும் என்று புரியவில்லை.
 
ரெட்டைவால்’ஸ்! தங்கள் கருத்தை நான் ஆமோதிக்கிறேன். மற்றபடி தங்கள் ஆலோசனைக்கு (அடோபே பற்றி) நன்றி!
 
கிருபாநந்தினி மேடம்! இதுக்கும் அதுக்கும் முடிச்சுப் போடாதீங்க! ஞாநியின் பெரும்பாலான கருத்துக்களை நான் மதிக்கிறவன்; ஆமோதிக்கிறவன். அவர் என் மதிப்புக்குரிய நண்பர். இந்த முறை கேணிக் கூட்டத்துக்குப் போகாததன் காரணம், பிரதம விருந்தினர் எனக்கு அறவே தெரியாத ‘திலிப்குமார்’ என்பதால்தான்! மற்றபடி தங்கள் கருத்துக்கு நன்றி!
 
வரவுக்கும் பின்னூட்டத்துக்கும் மிக்க நன்றி கக்கு-மாணிக்கம்!
 
அழகான சென்னைக் கடற்கரையை அரசியல்வாதிகளின் கல்லறைத் தோட்டமாக மாற்றுவதில் எனக்கும் உடன்பாடு இல்லை திரு.கிருஷ்ணமூர்த்தி! அதற்கான வேளை வரும்போது அதற்கும் தனியே ஒரு பதிவு எழுதுவேன். தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி!
 
திரு! தங்களின் பாராட்டுக்கு மிக்க நன்றி!
 
அனானிமஸ்! தங்கள் கருத்துக்கு நன்றி! ஆனால், பெரும்பாலான பகுத்தறிவுவாதிகளின் எண்ணம் அய்யர் என்றாலே அயோக்கியர்கள், மூட நம்பிக்கையை விதைப்பவர்கள் என்பதாகத்தான் இருக்கிறது. ஞாநியும் ஒரு பகுத்தறிவுவாதி என்பதால், அப்படி ஒரு எண்ணம் அவருக்கும் இருக்கலாமோ என்று சந்தேகித்துத் தெளிவுபடுத்திக் கொள்ளவே அப்படிக் கேட்டுள்ளேன். மற்றபடி தங்கள் கருத்துக்கு நன்றி!
 
படித்தேன் யுவகிருஷ்ணா! தாங்கள் சொல்லியிருப்பது ரொம்பச் சரி!
 
உங்கள் கருத்துக்கள் நியாயமாகவே தோன்றுகிறது.

"அறிவு ஜீவிகள்" இடம் உள்ள ஒரு தொந்தரவு அவர்கள் எல்லாவற்றையும் generalise செய்வது தான். ஞானி செய்வதும் அதுவே.

ஒரு விழா நடத்துவது எத்தனை சிரமம்? இதில் தன் கருத்தை ( "பூச்செண்டு தராதீர்கள்" ) ஏன் இவர் விழா நடத்துபர்வர்கள் வருந்தும் விதமாய் insist செய்ய வேண்டும்?

அதே போல் தான் யாருடைய பெயரையும் முழுசாய் சொல்ல வேண்டும் என ஞானி கூறுவதும் !!

இவர் சொன்னால் அதை அத்தனை பேரும் follow செய்ய வேண்டுமா? எப்படி வருகிறது இந்த எதிர் பார்ப்பு? நான் ஞானியின் எதிர்ப்பாளர் அல்ல. ஆனால் இது போன்ற சில விஷயங்களில் அவர் நடந்து கொள்வது சரியல்ல என்றே தோன்றுகிறது
 
ஞானிக்கு கமலையும் பிடிக்காது இளையராஜாவையும் பிடிக்காது. இவர்கள் மீது சேற்றை வாரி இறைப்பதே இவருக்கு முழுநேர தொழில். பொதுவாக இவருக்கும் சாருவுக்கும் ஒத்து வராது. ஆனால் இவர்கள் இருவரையும் எதிர்ப்பதில் ஒற்றுமையானவர்கள்

இவர்களை எதிர்பதின் மூலம் பிரபலம் தேடுகின்றார்கள்
 
தலைவா...ஞாநி,சாரு எல்லாம் "சுப்பிரமணியசாமி" மாதிரி! இவங்க எல்லாம் இல்லைனா சுவாரசியமாவே இருக்காது...தவிர, இவங்க பேசறத சீரியஸா எடுத்துக்கிட்டா அதை விட காமெடி வேற இருக்காது.கரெக்டா...?
 
பெரும்பாலான பகுத்தறிவாந்திகளின் கருத்து அய்யர்கள் மட்டமானவர்கள் என்று இருக்கிறது என்று நினைத்தால் அதை அப்படி எழுதியிருக்க வேண்டும். அதை விட்டு விட்டு கேணத்தனமாக “பொதுக்கருத்து” என்று எழுதிவிட்டு சப்பைக்கட்டு வேறு! த்தூ!
 
நல்ல ஆய்வு. திறனாய்வு மற்றும் நாவல் துறைகளில் ஏற்பட்டிருக்கும் பின்னடைவே காரணம் என்று கருதுகிறேன்.
பாண்டியன்ஜி - வேர்கள்