
எனக்கு அறவே இந்தி தெரியாது. அதிகம் இந்திப் படங்கள் பார்த்ததில்லை. அதிலும் அமிதாப் பச்சன் நடித்த படம் ஒன்றுகூடப் பார்த்ததில்லை. நான் சினிமா தியேட்டருக்குச் சென்று பார்த்த இந்திப் படங்கள் மொத்தம் இரண்டே இரண்டுதான். ஒன்று, ‘தேஸாப்’. புரியுமோ புரியாதோ என்ற குழப்பத்துடனேயே பார்த்தேன். நன்றாகப் புரிந்தது மட்டுமல்ல; ரொம்பவும் பிடிக்கவும் செய்தது. ஆனாலும், ஏனோ இந்திப் படங்கள் போய்ப் பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவே இல்லை. (இப்போதெல்லாம் எந்தப் படமுமே போய்ப் பார்க்க வேண்டும் என்று தோன்றுவதில்லை என்பது வேறு விஷயம்.) தவிர, தியேட்டருக்குச் சென்று நான் பார்த்த இன்னொரு இந்திப் படம் ‘தாரே ஜமீன் பர்’. அட்டகாசமான படம். என்னை மிகவும் நெகிழ வைத்த படம்.
தவிர, தொலைக்காட்சி ஒளிபரப்பில் ராஜா, துல்ஹே ராஜா, ஹீரோ நம்பர் ஒன் ஆகிய மூன்று இந்திப் படங்கள் பார்த்துள்ளேன். சமீபத்தில் டி.வி.டி-யில் ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ பார்த்தேன். இவை எதுவுமே ரொம்பப் பிரமாதமான படங்களாக (ஸ்லம்டாக் மில்லியனர் உள்பட) எனக்குத் தோன்றவில்லை. அவ்வளவுதான் நான் பார்த்த மொத்த இந்திப் படங்கள். இன்றைக்கு ‘பா’.
அமிதாப் பச்சனின் நடையுடை பாவனைகள் தெரியும். விளம்பரங்களிலும், பாடல் காட்சிகளிலும், துண்டுத் துண்டாக ஒளிபரப்பான ஒரு சில படக் காட்சிகளிலும் பார்த்திருக்கிறேன். ‘குரோர்பதி’ நிகழ்ச்சியையும் (தமிழ் டப்பிங்கோடு) பார்த்திருக்கிறேன்.
‘பா’ படத்துக்கு வருவோம். எனக்குப் புரிந்த வரையில் இந்த விமர்சனத்தை எழுதியிருக்கிறேன். தவறு இருந்தால் யாரும் கடுப்பாக வேண்டாம்.
அபிஷேக் பச்சன் அரசியலில் பெரிய நிலைக்கு வரவேண்டும் என்று ஆர்வப்படுகிறார். இதனால், திருமணத்தைத் தள்ளிப் போட விரும்புகிறார். டாக்டரும் காதலியுமான வித்யாபாலனின் வயிற்றில் வளரும் கருவை அழித்துவிடச் சொல்கிறார். வித்யாபாலன் மறுத்து, குழந்தையைப் பெற்றுக் கொள்கிறார். அந்தக் குழந்தைக்கு PROGERIA எனப்படும் உடல்ரீதியான குறைபாடு உள்ளது. (விரைவிலேயே மூப்பு அடையும் இந்த வகை நோய் மரபுரீதியானது. இந்த வகைக் குழந்தைகள் பெரும்பாலும் 13 வயதுக்குள் மரணமடைந்துவிடும்; ஒரு சில குழந்தைகள் 20 வயது வரையிலும், மிக மிக அரிதாக 40 வயது வரையிலும் உயிர் வாழக்கூடும் என்று விக்கிபீடியா சொல்கிறது.)
அந்தக் குழந்தை ‘ஆரோ’ கேரக்டரில் நடித்திருப்பவர் அமிதாப் பச்சன். இள வயதுகளில் ஒரு குழந்தையும், ஒரு சிறுவனும் நடித்திருக்கிறார்கள். அமிதாப் பச்சனுக்கு ஆள் யாரென்றே கண்டுபிடிக்க முடியாதபடிக்கு மிகை மேக்கப். ஆனால், வேறு வழியில்லை. இந்த கேரக்டருக்கு இப்படித்தான் போட்டாக வேண்டும். (தசாவதாரத்தில் கமல்ஹாசனுக்கு மிகை மேக்கப் என்று குறை சொன்னவர்கள் எல்லாம் இங்கே அமிதாப்புக்கு அட்டகாசமாக இருப்பதாகச் சொல்வதைக் கண்டு எனக்குச் சிரிப்புதான் வருகிறது. அதென்னவோ, சிலருக்கு இந்திக்காரர்களைப் பாராட்டுவதும், அதையே அட்வான்ஸாகச் செய்து முடிக்கும் நமது கலைஞன் கமல்ஹாசனைக் குறை சொல்வதும் ஒரு வியாதியாக இருக்கிறது.)

அபிஷேக் பச்சனுக்கு அதிகம் வேலையில்லை. என்றாலும், அவர் வருகிற காட்சிகளில் எல்லாம் மிக இயல்பாக இருக்கிறார். கொடுத்த பாத்திரத்தை அநாயாசமாகச் செய்துவிட்டுப் போகிறார். ஒரு காட்சியில் தன் மகனை (அப்பாவை) உப்பு மூட்டை தூக்கிக்கொண்டு போகிறார்.


மனக் கசப்பால் பிரிந்து செல்லும் அபிஷேக் பச்சன் பின்னர் ஒரு பள்ளி விழாவில் கலந்துகொண்டு, ஒரு மாணவன் செய்த கைவினைப் பொருளான உலக உருண்டையைப் பாராட்டிப் பேச, அந்த மாணவன் வேறு யாருமல்ல; ஆரோதான். அவனைத் தன் மகன் என்றே தெரியாமல் பரிசு கொடுத்துவிட்டுப் போகிறார் அபிஷேக். பின்னர் இணைய தளம் மூலம் ‘ஆரோ’ தன் அப்பாவைத் தொடர்பு கொள்கிறான். வெப்காம் மூலம் சாட்டிங் செய்கிறான். அவரது அழைப்பின் பேரில் மும்பையிலிருந்து டெல்லி சென்று அவருடன் சில நாள் இருக்கிறான்.

இசை இளையராஜா. ஆரம்பக் காட்சியில் வருகிற ட்யூன் முப்பது ஆண்டுகளுக்கு முன்பே நாம் கேட்டு ரசித்த, ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் இடம்பெற்ற ‘புத்தம் புதுக் காலை, பொன்னிற வேளை...’ பாடல் மெட்டாகும். மற்றபடி இதர பாடல்களும் இனிமையாகவே இருக்கின்றன. படத்தின் தன்மைக்கேற்ப மென்மையாகத் தன் பங்களிப்பை வழங்கியிருக்கிறார் இளையராஜா. ரீரிக்கார்டிங் செய்யப்பட்டிருப்பதே தெரியாமல் படத்தோடு ஒன்றியிருப்பது ஒரு ப்ளஸ். (இளையராஜாவைக் கண்டால் சாருவுக்கு ஏன் ஆகவில்லை என்று தெரியவில்லை. இந்தப் படத்தின் பாடல்களைக் கேட்டுச் சிரிக்கிறார்கள் இந்திப் படவுலகில் என்று அவர் எழுதியிருப்பதெல்லாம் ஜுர வேகத்தில் பிதற்றிய உளறல்கள் போலத்தான் தோன்றுகிறது எனக்கு.)
அமிதாப் நடிப்பு பெரிய ப்ளஸ். மற்றபடி அனைவரின் நடிப்பும், இளையராஜாவின் இசையும், ஒளிப்பதிவும் இந்தப் படத்தின் பலங்கள்தான்! (அபிஷேக்கின் அப்பாவாக வருபவர் மட்டும் ஏதோ நண்பர் போலத் தோன்றுகிறாரே தவிர, அப்பா மாதிரியே தெரியவில்லை.) ஆனால், கதை..?
‘தாரே ஜமீன் பர்’ படத்தில் அந்தப் பையனுக்கு டிஸ்லெக்ஸியா என்று பிரத்யேகமாக ஒரு நோயைக் குறிப்பிட்டதோடு நின்றுவிடாமல், கதை மொத்தமும் அழகாக, அற்புதமாக அதை மையப்படுத்தியே சுழன்றது. ‘பா’வில் அமிதாப்புக்கு ‘ப்ரோஜேரியா’ நோய் என்று சொல்லி மேக்கப் செய்திருக்கிறார்களே தவிர, கதை அதைச் சுற்றி நகராமல், காதலன் காதலி பிரிவு, அபிஷேக்கின் அரசியல் பிரவேசம், ஊழல் குற்றச்சாட்டு என்று சம்பந்தமில்லாமல் நகர்கிறது. அதே போல, கொடுத்த வரையில் தன் பாத்திரத்தை முழுமையாகச் செய்திருக்கிறார் அமிதாப் பச்சன். அதில் சந்தேகமில்லை. ஆனால், அவரை இன்னமும் பயன்படுத்திக்கொண்டு இருக்கலாம், கதையை அவரை மையப்படுத்தி இன்னும் வலுவான காட்சிகளை அமைத்திருந்தால்! சும்மா கைகளைத் தொங்கப் போட்டுக்கொண்டு நடப்பது, முன்னும் பின்னும் கைகளை ஆட்டி, தலைமேல் விரல்களால் தண்ணீர் தெளிப்பது போல் அபிநயிக்கும் மேனரிஸம் செய்வது, வித்தியாசமான குரலில் பேசுவது, சிரிப்பது என அவரை ஒரு குறுகிய வட்டத்துக்குள் இயங்க வைத்திருக்கிறார்கள். இதனால், நம் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகாமல் புஸ்ஸென்று போய்விட்டது.
‘தமிழ் சினிமா ரசிகர்களும், நடிப்பை ஆழ்ந்து நேசித்து அதில் அயர்வில்லாமல் ஈடுபடுகிற கமல்ஹாசனும், இன்னும் பலப்பல நடிகர்களும் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்களைச் சொல்கிற ஒரு இந்திப் படத்தைப் பார்த்தேன்’ என்று ‘பா’ படத்தைப் பற்றி எழுதியிருக்கிறார் ஞாநி. இதெல்லாம் ரொம்ப டூ மச்! அந்த அளவுக்கெல்லாம் இந்தப் படத்தில் ஏதும் இல்லை. சொல்லப்போனால், இயக்கத்தில் குறுக்கிடாமல் இருந்தால், நமது கமல்ஹாசன் இந்தப் பாத்திரத்தை இதைவிடப் பிரமாதமாய்ச் செய்திருப்பார் என்றுதான் நான் நம்புகிறேன்.
‘தாரே ஜமீன் பர்’ படத்தோடு ஒப்பிடும்போது ‘பா’ அதில் பாதி உயரத்தைதான் எட்டுகிறது!
15 comments:
என்னதான் ஆனாலும் கமல் கமல்தான்! கமல் பத்து பா-த்திரமே பா-ர்த்தவர்.
/எனக்கு அறவே இந்தி தெரியாது./
சேம் ப்ளட் :-)
இளையராஜாவை இந்திப்படவுலகில் மட்டுமே கிண்டலடிக்கிறார். சாருவை, பாரபட்சம் இன்றி சாதிமதம் வேறுபாடின்றி மொழி பற்றையெல்லாம் தாண்டி கிண்டலடித்துக் கொண்டிருப்பது அவருக்கு தெரியாததா என்ன?
கமல் கமல்தான். நேற்று ஜெயா டிவியில் சிதம்பரத்தில் அப்பாசாமி பார்த்தேன். நீங்களும் பார்க்கவில்லை என்றால் பாருங்கள். அந்த காரெக்டராக மாறியிருப்பது தெரியும். நாம் பச்சானை அந்த அப்பாசாமியாகவே பார்ப்பதே நடிப்பு என்று நினைக்கிறேன். மம்முட்டியும் அதுபோல ஒரு நடிகர். கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் பாருங்கள் நான் சொல்வது புரியும்.
அமிதாப்பை கமலுடன் ஒப்பிடவே முடியாது. என்னதான் கமல் ஆர்டிஃபீஷியலாக அற்புத நடிப்பை (நடிப்பது நமக்கு தெரிவது)வெளிப்படுத்தினாலும், அவரின் முயற்சிகளுக்கே அவரை பாராட்டலாம். அவரின் தொலைநோக்கு பார்வை அபாரம்.
@ நன்றி கே.பி.ஜனார்த்தனன்! வழக்கமான உங்கள் வார்த்தை ஜாலம் காணப்படவில்லையே என்று யோசித்தேன். ‘அப்பாடா’வில் ‘பா’வுக்கு மட்டும் கொட்டேஷன் போட்டிருப்பதை மறுமுறை பார்த்து ரசித்தேன்!
@ நன்றி கிருபாநந்தினி! தப்பு கண்டுபிடிக்கிறதுக்காகவும்தான் எழுதினால் என்ன தப்பு? தங்களுக்குத் தவறு என்று படுவதைத் தாராளமாகச் சுட்டிக் காட்டுங்கள். நன்றி!
@ நல்ல கேள்வி அனானிமஸ்! எனக்கு இரவல் கொடுத்த நண்பரைத்தான் இந்தக் கேள்வி கேட்க வேண்டும். (எப்படித் தப்பிச்சேன் பார்த்தீங்களா!)
மட்டுமல்ல நானும் உங்களை போல் ஹிந்தி புரியாதவன் தான். வெகு சில படங்களே பார்த்துள்ளேன். பார்த்ததில் தாரே ஜாமீன் பார் ஒரு மிக சிறந்த படைப்பு.
இளையராஜாவை இந்திப்படவுலகில் மட்டுமே கிண்டலடிக்கிறார். சாருவை, பாரபட்சம் இன்றி சாதிமதம் வேறுபாடின்றி மொழி பற்றையெல்லாம் தாண்டி கிண்டலடித்துக் கொண்டிருப்பது அவருக்கு தெரியாததா என்ன?
THE ABOVE COMMENT HAS TAKEN FROM POPULAR HINDI MOVIES WEBSITE.
http://www.realbollywood.com/news/2009/12/paa-movie-review.html
More details
http://ibnlive.in.com/news/masands-movie-review-paa-a-heartfelt-motherson-story/106502-8.html
Ilaiya Raja’s musical score soothingly works on a subconscious level.
http://movies.indiatimes.com/Reviews/Bollywood/Paa-Movie-Review/articleshow/5297628.cms
Post a Comment