உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, June 11, 2013

பதினைந்து வயதினிலே..!

நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போது, வெங்கிடேசன் என்கிற சக மாணவன் சதா சிகரெட் பிடிப்பான்; வகுப்புக்கு ஒழுங்காக வரமாட்டான். பல ஆசிரியர்களும் அவனைக் கண்டித்தார்கள். அவன் திருந்துவதாக இல்லை. அவனை மர ஸ்கேலால் அடித்த கணித ஆசிரியரின் கையிலிருந்து ஸ்கேலைப் பிடுங்கி மளுக்கென்று ஒடித்துப் போட்டான். தலைமை ஆசிரியர் டேவிட் ராஜ் அவனை ஒருநாள் அழைத்துப் புத்திமதி சொன்னார். என்ன மாயமோ தெரியவில்லை... அன்றிலிருந்து அவனிடம் ஒரு மாற்றம் தெரிந்தது. சிகரெட் பழக்கத்தை நிறுத்தினான். வகுப்புக்கு ஒழுங்காக வரத் தொடங்கினான். ஆசிரியர்களிடம் மிக மரியாதையாக நடந்துகொண்டான். அவனை மர ஸ்கேலால் அடித்த ஆசிரியர்கள் உள்பட அத்தனை பேரும் அவனைக் கொண்டாடினார்கள். ஒருநாள் காலை பிரேயரில், அவனைப் பற்றித் தலைமை ஆசிரியர் வானளாவப் புகழ்ந்து சிறு உரை ஆற்றி, சக ஆசிரியர்கள், மாணவர்கள் சார்பாக அவனுக்கு ஒரு நினைவுப் பரிசு வழங்கினார். பளபள காகிதத்தில் பேக் செய்யப்பட்டிருந்த அந்தப் பெட்டிக்குள் என்ன பரிசு இருந்ததென்று தெரியாது. மாணவர்கள் எல்லோரும் வலிக்க வலிக்கக் கை தட்டினோம். அந்த வெங்கிடேசன் அன்றிலிருந்து அந்தப் பள்ளியில் ஒரு ஹீரோவாகிப் போனான்.

அப்போது என் மனசுக்குள் ஓடிய எண்ணம்... “சே! நாம ஆரம்பத்திலிருந்தே நல்லவனாக, சிகரெட் போன்ற கெட்ட பழக்கங்கள் இல்லாதவனாக, வகுப்புக்கு மட்டம் போடாதவனாக, மரியாதை தெரிந்த பையனாக வளர்ந்துவிட்டோமே! இவனைப் போலப் பொறுக்கியாகச் சில நாள் திரிந்துவிட்டுப் பின் திருந்தியிருந்தால், நம்மையும் கொண்டாடியிருப்பார்களே? நாமும் இவனைப் போல ஹீரோ ஆகியிருக்கலாமே?”

அதன்பின், சில நாட்கள் பள்ளிக்கு மட்டம் போட்டேன். ஆசிரியர்களைப் பற்றி சக மாணவர்களிடத்தில் கேலியாக அவர்களின் பட்டப் பெயரைச் சொல்லிப் பேசினேன். சிகரெட் பழக்கம் மட்டும் ஏற்படவில்லை. மற்றபடி, கெட்ட பையனாக மாறும் முயற்சியில் இருந்தேன்.

ஒருநாள் - தலைமை ஆசிரியர் என்னை அழைப்பதாக பியூன் வந்து அழைத்தார்.
மற்ற ஆசிரியர்கள் திட்டுவார்கள். அடிப்பார்கள். ஆனால், தலைமை ஆசிரியர் மட்டும் திட்ட மாட்டார்; அடிக்கமாட்டார். குரலும் மிக மென்மையாக இருக்கும். ஆனால், பிள்ளைகள் எல்லாருக்கும் அவரிடத்தில் ஏனோ ஒரு பயம். அவர் நினைத்தால் டி.சி. கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடலாம் என்கிற காரணமாக இருக்கும். எனக்கும் அவரிடத்தில் பயம் இருந்தது.

நடுநடுங்கிக்கொண்டே அவர் முன் போய் நின்றேன். புன்னகையோடு வரவேற்றார். “என்ன ரவி, படிப்பெல்லாம் எப்படிப் போயிட்டிருக்கு?” என்று பொதுவாக விசாரித்தார். “அப்பா என்ன பண்றார்?” என்றார். “வாத்தியாரா இருக்கார் சார்!” என்றேன். “அப்படியா... வெரிகுட்! எங்கே, எந்த ஸ்கூலில்?” என்றார். “பெரும்பாக்கம் கிராமத்தில் எலிமெண்ட்டரி ஸ்கூலில் ஹெட்மாஸ்டரா இருக்கார், சார்!” என்றேன். “அங்கேருந்துதான் தினமும் வரியா?” என்றார். “இல்ல சார், நான் இங்கே எங்க மாமா வீட்டில் தங்கியிருந்து படிக்கிறேன்” என்றேன். “மாமா என்ன பண்றார்?” என்றார். “சிவில் இன்ஜினீயரா இருக்கார், சார்!” என்றேன். “வெரிகுட், வெரிகுட்! ம்...” என்று யோசித்தவர், அட்டெண்டன்ஸ் ரிஜிஸ்டரை எடுத்துப் புரட்டினார். ஜூன் மாதத்திலிருந்து ஒவ்வொரு மாதமாகப் புரட்டி வந்தவர், எனக்கு ஃபுல் அட்டெண்டன்ஸ் இருப்பதை ஒவ்வொரு மாதமும் உறுதிப்படுத்திக்கொண்டு, “வெரிகுட்... வெரிகுட்... வகுப்புக்கு ஒரு நாள்கூட மட்டம் போடாத ஓரிரண்டு பிள்ளைகள்ல நீயும் ஒருத்தன்! குட்..!” என்றவர் லேட்டஸ்ட் மாதத்துக்கு வந்தார். அவர் புருவங்கள் நெரிந்தன. நம்ப முடியாதவர்போல் அட்டெண்டன்ஸை அருகே வைத்துப் பார்த்தார். இடது ஓரம் எழுதப்பட்டிருந்த என் பெயருக்கு நேராக விரல் வைத்து வரிசையாகப் பார்த்து வந்தார். மாதத்தில் இருபது நாட்கள் கடந்திருக்க, நாலு நாள் நான் ஆப்செண்ட்!

“ரவி! நீயா இது! ஆச்சரியமா இருக்கே! நாலு நாள் ஆப்செண்ட்! ஏன்... உடம்பு கிடம்பு சரியில்லையா?” என்று வியப்பும் கரிசனமுமாகக் கேட்டார். நான் என்ன சொல்வதென்று தெரியாமல் மையமாகத் தலையாட்டினேன். “உடம்பு சரியில்லேன்னா லீவ் லெட்டர் கொடுத்திருப்பியே? அட்டெண்டன்ஸ்ல 'L' -ன்னுதானே மார்க் பண்ணியிருப்பார் கிளாஸ் டீச்சர். 'a' -ன்னு ஆப்செண்ட் போட்டிருக்க மாட்டாரே?” என்றார். எனக்கு பதில் சொல்ல வாயெழும்பாமல் கண்ணீர் முட்டிக்கொண்டு வந்தது.

“என்ன ரவி, என்ன பிரச்னைன்னாலும் என்கிட்ட மனம் விட்டுச் சொல்லு! எனக்குத் தெரிஞ்சு, நீ ரொம்ப குட் பாய்! நல்லா படிக்கிற பையன். ‘எல்லாப் பிள்ளைகளும் என்கிட்டே அடி வாங்கியிருக்காங்க, சார்! ரவி மட்டும்தான் என்கிட்டே அடி வாங்காம தப்பிச்சிருக்கான். ஸ்மார்ட் பாய்!’ங்கிறார் மேத்ஸ் டீச்சர். ‘மாவட்ட அளவுல நடக்கிற கட்டுரைப் போட்டி, பேச்சுப் போட்டி, தனி நடிப்பு போட்டிகள்ல நம்ம ஸ்கூல் சார்பா கலந்துக்கிட்டு போன வருஷம் ஃபர்ஸ்ட் பிரைஸ், செகண்ட் பிரைஸ்னு மூணுலயுமே ஏதோ ஒரு பிரைஸ் தட்டிக்கிட்டு வந்திருக்கான் சார், ரவி. இந்த வருஷமும் அவனைத்தான் அழைச்சுக்கிட்டுப் போகப் போறேன். படிப்புலயும் கெட்டி!’ன்னு சர்ட்டிஃபிகேட் தர்றார் உங்க தமிழய்யா. ஆனாலும், கொஞ்ச நாளா என்ன ஆச்சு உனக்கு? வகுப்புல பாடங்களை சரியா கவனிக்கிறதில்லையாம். ஒழுங்கா வீட்டுப் பாடம் எழுதிக்கிட்டு வரமாட்டேங்கிறயாம். உன் பேர்ல கம்ப்ளெயிண்ட்! சொல்லுப்பா, வீட்டுல ஏதாவது பிரச்னையா? உடம்பு ஏதாவது சரியில்லையா?” என்று தோள் மீது கைவைத்துக் கரிசனத்துடன் கேட்டார் தலைமை ஆசிரியர் டேவிட் ராஜ்.

‘தவறு செய்து திருந்திய பையனை ஹீரோவாகக் கொண்டாடி, பரிசு கொடுத்து, தன் செல்லப் பிள்ளை போல அருகில் நிறுத்திக்கொண்டு, பிரேயரில் அத்தனைப் பிள்ளைகளுக்கும் அறிமுகப்படுத்திய நீங்கள், தவறே செய்யாமல் ஒழுங்காக இருக்கும் என்னை ஏன் இப்படி கௌரவிக்கவில்லை?’ - இதுதான் அப்போது என் மனத்தில் ஓடிய எண்ணம். ஆனால், இப்போது தெளிவாக எழுத முடிகிறதே தவிர, அன்றைக்கு என் எண்ணத்தை அவருக்கு விளக்க என்னால் இயலவில்லை. மனத்தில் உள்ளதைச் சரியாக வெளிப்படுத்தத் தெரியவில்லை. எனவே, பதில் சொல்லாமல் தலைகுனிந்து மௌனமாக அழுதுகொண்டிருந்தேன்.

அடுத்து அவர் கேட்ட கேள்வி என்னைத் திடுக்கிடச் செய்தது,

“கணேஷ் பீடின்னா என்ன?”
“கணேஷ் பீடின்னா என்ன?”

தலைமை ஆசிரியர் இப்படிக் கேட்டதும் எனக்குத் தூக்கிவாரிப் போட்டது.

கணேஷ் பீடி என்பது எங்கள் டிரில் மாஸ்டருக்கு பள்ளிப் பிள்ளைகள் வைத்திருந்த பட்டப் பெயர். அவர், பிள்ளகள் எதிரிலோ அல்லது பள்ளி வளாகத்துக்கு உள்ளேயோ பீடி பிடிக்க மாட்டார். காம்பவுண்டு சுவருக்கு அப்பால் மறைவாக நின்றுதான் பீடி புகைத்துவிட்டு வருவார். அதை யதேச்சையாக ஒரு பையன் பார்த்ததும் அல்லாமல், அவர் எறிந்த துண்டு பீடியை எடுத்துப் பார்த்து, அது ‘கணேஷ் பீடி’ என்பதைக் கண்டுபிடித்து மற்ற பிள்ளைகளிடம் பரப்பிவிட்டான். அது முதல் அவரை கணேஷ் பீடி என்று அழைப்பது வழக்கமாகிவிட்டது.

அன்றைக்கு சக மாணவனுடன் பேசிக்கொண்டு இருந்தபோது, டிரில் மாஸ்டர் எங்களைக் கடந்து போனார். “டேய்... நாம ரெண்டு பேரும் கணேஷ் பீடின்னு கத்திட்டு, சட்டுனு ஓடிப்போய் ஒளிஞ்சுக்குவோமாடா?” என்று கேட்டான் நண்பன். கெட்டவனாக மாறும் முனைப்பில் இருந்த நானும் சட்டென்று ஒப்புக்கொண்டேன். இருவரும் ஒரே நேரத்தில் கத்தவேண்டும் என்பது உடன்படிக்கை.

ஒன்... டூ... த்ரீ... சொல்லிவிட்டு ‘கணேஷ் பீடி’ என்று கத்தினேன். ஆமாம், நான் மட்டும்தான் கத்தினேன். சக மாணவன் சத்தம் போடாமல் ஓடி ஒளிந்துகொண்டுவிட்டான். நானும் ஓடி ஒளிந்தேன். டிரில் மாஸ்டர் திரும்பி, கத்தியது யார் என்று தேடுவது தெரிந்தது. திரும்பி நடந்து வந்தார். நானும் சக மாணவனும் அப்படியே பின்பக்கமாக ஓடி, சுற்றிக்கொண்டு எங்கள் வகுப்புக்குள் வந்து புகுந்துகொண்டோம்.

“ஏண்டா பாவி கத்தலே! என் குரல் தனியா தெரிஞ்சிருக்கும்” என்று நண்பனிடம் கேட்டேன். “பின்னால் மேத்ஸ் டீச்சர் நின்னுட்டிருந்தார்டா! அதான், பயந்துட்டேன்” என்றான். அப்போதே வயிற்றைப் பிசையத் தொடங்கிவிட்டது. ஆனால், வகுப்பில் மேத்ஸ் டீச்சர் (பி.ராஜாப்பிள்ளை) இது குறித்து அன்றைக்கோ, மறுநாளோ எதுவுமே என்னை விசாரிக்காததில் கொஞ்சம் தைரியம் ஏற்பட்டது.

அதைத்தான் இப்போது தலைமை ஆசிரியர் விசாரிக்கிறார் என்று புரியவும், நான் ‘போச்சு! டி.சி. கிழித்துக் கொடுத்து அனுப்பிவிடப் போகிறார். தொலைந்தோம்!’ என்று நடுங்கினேன். என் அழுகை இன்னும் அதிகமாகியது. “இனிமே ஒழுங்கா நடந்துக்கறேன், சார்!” என்றேன் பலகீனமான குரலில்.

“ரவி, எனக்குப் புரியுது. நீ நல்ல பையன். இப்படியெல்லாம் செய்யக் கூடியவன் இல்லே. கொஞ்ச நாளாத்தான் இப்படி நடந்துக்கறே. ஏன்னு சொல்லட்டுமா? வெங்கிடேசனுக்குப் பரிசு கொடுத்தேன். பாராட்டினேன். இவனை மாதிரி எல்லாப் பிள்ளைகளும் தங்கள் துர்க்குணங்களை மாற்றிக்கிட்டு நல்ல பையனாக மாறணும்னு சொன்னேன். ‘இவர் என்னடா அந்தப் பையனைப் போய்ப் பாராட்டுறாரு. நான், நீயெல்லாம் எப்பவுமே ஒழுங்காத்தானே இருக்கோம். நம்மை என்னிக்காச்சும் பாராட்டியிருக்காரா?’ன்னு நீ மத்த பசங்க கிட்ட புலம்பியிருக்கே. உண்மையா? எப்படித் தெரியும்னு கேக்காதே! எனக்கு எல்லாம் தெரியும்” என்றவர், இன்னும் தன் குரலை மென்மையாக்கிக்கொண்டு தொடர்ந்தார்...

“ரவி! ஒரு பையன் எப்பவுமே ஒழுங்கா இருக்கான்கிறது பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான். அதுல சந்தேகம் இல்லை. ஆனால், தவறு பண்ணிட்டு ஒருத்தன் திருந்தியிருக்கான்னா அவனைக் கொஞ்சம் கூடுதலா பாராட்ட வேண்டியது அவசியம். அப்பத்தான், ‘ஓஹோ! நல்லவனா நடக்குறது இவ்வளவு பாராட்டுக்கும் பெருமைக்கும் உரிய விஷயமா!’ன்னு அவன் மனசுல பதியும். தொடர்ந்து ஒழுங்கா நடந்துக்கணும்கிற ஆர்வம் ஏற்படும். வழக்கமா 35 மார்க் வாங்குற ஒரு பையன் நல்லாப் படிச்சு 50 மார்க் வாங்கினான்னா, வாத்தியார் அவனை ஸ்பெஷலா பாராட்டுறதில்லையா, அது மாதிரிதான்! பள்ளத்துல இருக்கிறவனைக் கை கொடுத்து மேலே ஏத்தி விடலாம். அதுக்காக மேலேயே நிக்கிறவன், ‘எனக்கு நீங்க கை கொடுக்கலையே’ன்னு வருத்தப்படலாமா? ‘நானும் பள்ளத்துல குதிக்கிறேன், என்னையும் கை தூக்கி மேலே ஏத்தி விடுங்க’ன்னு சொல்றாப்ல இருக்கு, நீ இப்போ நடந்துக்கற விதம்! போ, போய் நல்லாப் படி! அப்புறம்... தமிழய்யா இந்த வருஷமும் மாவட்டப் போட்டிகளுக்கு உன் பேரைத்தான் கொடுத்திருக்காரு. அவர் கிட்டே டிராமா ஸ்கிரிப்ட், மத்த டீடெய்ல்ஸெல்லாம் கேட்டு வாங்கிக்க. குட் பாய் எப்பவும் குட் பாயாதான் இருக்கணும்!” என்று முதுகில் தட்டிக்கொடுத்து அனுப்பி வைத்தார்.

தலைகுனிந்துகொண்டே வெளியில் வந்தேன். யாருக்கும் தெரியாமல் தனியாகப் போய் விசும்பி விசும்பி அழுதேன். யாரிடமும் பேசவில்லை. என்னால் இயல்பாகவே இருக்க முடியவில்லை. முற்ற முழுக்கச் சேற்றில் நனைந்தது போல் இருந்தது. என்ன செய்து என்னை மீட்டெடுப்பது என்று குழப்பமாக இருந்தது.

அன்று பள்ளி விட்டு, வீட்டுக்குச் சென்ற பின்பும் இதே யோசனையாக இருந்தது. இரவு 7 மணி இருக்கும். நான் ஒரு முடிவோடு வீட்டை விட்டுக் கிளம்பினேன்.
நான் நேரே நடந்து சென்ற இடம்... தலைமை ஆசிரியரின் வீடு. அவர் அப்போது விழுப்புரத்தில் காந்தி சிலை தாண்டி, வலப்புறம் சீதாராம் தியேட்டருக்குத் திரும்பும் தெருவில், ஆரம்பத்திலேயே உள்ள ஒரு பெரிய வீட்டில் இருந்தார். பழங்காலத்து வீடு. ஜமீன் பங்களா மாதிரி இருக்கும்.

என்ன தைரியத்தில், என்ன உத்தேசத்தில் அங்கே போனேன் என்று எனக்கே தெரியவில்லை. பெரிய இரும்புக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனேன். வாசலில் பெரிய மரக் கதவு திறந்தே இருந்தது. ஹாலில், தலைமை ஆசிரியரின் மனைவி (டி.மல்லிகா - இவர் அந்நாளில் ஆனந்த விகடனில் சிறுகதைகள் பல எழுதியுள்ளார்.) இருந்தார்.

“வணக்கம் டீச்சர்!” என்றேன். “வாப்பா! யாரைப் பார்க்கணும்?” என்றார்.

“சார் இருக்காருங்களா? நான் மகாத்மா காந்தி மேல்நிலைப் பள்ளியில படிக்கிறேன். சாரைப் பார்க்கணும்” என்றேன். பார்த்து என்ன பேசப் போகிறேன் என்று அந்த நிமிடம் வரை எந்தத் திட்டமும் இல்லை. ஏதோ செலுத்தப்பட்டவன் போல்தான் இயங்கிக்கொண்டிருந்தேன்.

“உட்கார். சார் கிட்ட சொல்றேன்” என்றுவிட்டு எழுந்து மாடிக்குப் போனார் அந்த அம்மையார்.

நான் தயங்கி, சோபாவின் நுனியில் பட்டும் படாமல் அமர்ந்தேன். அதற்குள் ஒரு வேலைக்காரம்மா கண்ணாடி டம்ளரில் ஆரஞ்சு ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தார். பாதி குடித்துக்கொண்டிருக்கும்போதே மாடிப் படிகளில் தலைமை ஆசிரியர் இறங்கி வருவது தெரிந்து, ஜூஸ் டம்ளரை எதிரே டீப்பாய் மீது வைத்துவிட்டு, எழுந்து நின்றேன்.

“உட்கார். இதோ வரேன்!” என்று பின்கட்டுக்குப் போய்விட்டார் ஹெச்.எம்.

நான் மீதி ஜூஸைப் பருகி முடித்தேன். சற்று நேரத்தில் வந்தார். கை பனியனும், கோடு போட்ட பைஜாமாவுமாக அவரை வித்தியாசமான உடையில் பார்ப்பது எனக்குப் புதிதாக இருந்தது.

“சொல்லுப்பா! என்ன, இந்த நேரத்துல இவ்ளோ தூரம் வந்திருக்கே?” என்று அன்பாகக் கேட்டார்.

எனக்கு வார்த்தைகள் வெளிவரவில்லை. வாயைத் திறந்தால் அழுகைதான் வந்தது. எப்படியோ சமாளித்துப் பேசினேன்... “எ... எனக்கு... டி.சி. கொடுத்து அனுப்பிடுங்க, சார்! நான் கெட்ட பையன்!” என்றேன். மொத்தத்தில் என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் உளறினேன்.

“ம்... அப்புறம்..?” என்றார். “அனுப்பிடறேன். அடுத்து எந்த ஸ்கூலில் சேர்ந்து படிக்கலாம்னு உத்தேசம்? அல்லது, படிக்கவே போறதில்லையா?”

அந்நாளில் முனிசிபல் ஹைஸ்கூல் பள்ளிப் பிள்ளைகள் ரவுடிப் பசங்கள் என்று எங்களிடையே ஓர் அபிப்ராயம் இருந்தது.

எனவே, “முனிசிபல் ஹைஸ்கூல்ல சேர்ந்துக்கறேன், சார்! இந்த ஸ்கூல்ல படிக்க நான் லாயக்கில்லை!” என்றேன்.

“ம்... தெளிவாதான் இருக்கே! சரி, ஒண்ணு பண்ணு! மாவட்டப் போட்டிகளுக்கெல்லாம் பேர் கொடுத்தாச்சு. அதுல கலந்துக்கோ. அப்புறம், இன்னும் ரெண்டு மூணு மாசத்துல ஆன்யுவல் எக்ஸாம் வருது. அதையும் எழுதிடு! அப்புறம் டி.சி. கொடுக்கறேன். அடுத்த வருஷத்துலேர்ந்து அங்கே சேர்ந்துக்கோ! சரியா?” என்றார். தலையாட்டினேன்.

அப்புறம், மனைவியை அழைத்து வட்ட வடிவில் இருந்த ஒரு சாக்லெட் பெட்டியை (காட்பரீஸ்) கொண்டு வரச் சொல்லி, எனக்குத் தந்தார். மிகுந்த தயக்கத்துடன் பெற்றுக் கொண்டேன். ‘அப்பாடா!’ என்று எதனாலோ மனசு நிம்மதியாக இருந்தது.

விடைபெற்றுக்கொண்டு கிளம்பினேன்.

அந்த முறையும் பேச்சுப் போட்டியில் மாவட்ட அளவில் முதல் பரிசு எனக்கே கிடைத்தது. தனி நடிப்பில் மூன்றாம் பரிசு! தலைமை ஆசிரியர் அறையில் கலர் ஸ்கெட்ச் பேனாக்களைக் கொண்டு இதை அழகான ஓர் அறிவிப்பாக எழுதி, சுவரில் ஒட்டியிருந்தார் டிராயிங் மாஸ்டர். வெராந்தாவில் தலைமை ஆசிரியர் அறையைக் கடந்து போகும்போதெல்லாம் திரும்பிப் பார்த்து, அந்த அறிவிப்பைக் கண்டு மகிழ்ந்து மனசுக்குள் பெருமிதப்பட்டுக்கொண்டிருந்தேன். அதற்காகவே தேவையில்லாமல் அவர் அறையை அடிக்கடி கடந்துகொண்டிருந்தேன் என்றும் சொல்லலாம்.

அதன்பின் படிப்படியாக என்னுள் இருந்த குழப்பம், தயக்கங்கள் எல்லாம் காணாமல் போயின. டி.சி. வாங்குகிற எண்ணமே ஏற்படவில்லை. எஸ்.எஸ்.எல்.சி-யும் (11-ம் வகுப்பு) அங்கேயே முடித்தேன்.

என்னுடைய அறியாத்தனத்தைப் புரிந்துகொண்டு, என்னைச் சரியாக வழிநடத்திய பெருமகனார் திரு.டேவிட்ராஜ் அவர்கள். அதே போன்று என் மீது அக்கறை கொண்டு, நான் தவறான வழியில் செல்கிறேன் என்று தெரிந்தும் உடனே என்னைக் கூப்பிட்டுக் கண்டிக்காமல் தலைமை ஆசிரியருடன் கலந்து பேசி, என்னைத் திருத்தியவர்கள் என் மேத்ஸ் டீச்சர் திரு.ராஜாப்பிள்ளையும் தமிழய்யா திரு. அ.க.முனிசாமி அவர்களும்.

இவர்களைப் போன்ற ஆசிரிய தெய்வங்களால்தான் நான் இன்றைக்கு ஓரளவுக்கு நாலு பேர் மதிக்கிற அளவில் இருக்கிறேன் என்பதில் சந்தேகம் இல்லை.

இப்படியான ஆசிரியர்கள் இன்றைய இளம் தலைமுறையினருக்குக் கிடைத்திருக்கிறார்களா? தெரியவில்லை!

படத்தில்: மையமாக அமர்ந்திருப்பவர் தலைமை ஆசிரியர் திரு.டேவிட்ராஜ் அவர்கள். அவர் காலடியில் டை அணிந்து நான். தலைமை ஆசிரியருக்கு வலப் புறம் நடிகர் ரவிச்சந்திரன் போல் இருப்பவர் கணித ஆசிரியர் திரு.பி.ராஜாப்பிள்ளை. தலைமை ஆசிரியருக்கு இடப்புறம் சரித்திர ஆசிரியர் திரு.சங்கரநாராயணன். அவருக்கு அடுத்து அமர்ந்திருப்பவர் தமிழய்யா திரு.அ.க.முனிசாமி. படத்தில் வலது ஓரம் ஓவிய ஆசிரியர் திரு.சோலை. ராஜாப்பிள்ளைக்கு அருகில் அவருக்கு வலப்பக்கம் அறிவியல் ஆசிரியர் (பெயர் நினைவில்லை). அவருக்குப் பக்கத்தில் அமர்ந்திருப்பவர் டிரில் மாஸ்டர். வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ள பையன்தான் வெங்கிடேசன்.

5 comments:

Dear Sir,

I am reading your articles in http://ungalrasigan.blogspot.in/ and http://vikatandiary.blogspot.in

All articles are very very great...great..great.

I am seeing "Kalki" in your writings...great.

I enjoyed so much by reading your both blogs.

Thank you very much.Please write more and more articles and books.

Thanks,
Ungal Rasikan and Kalki Rasigan,
Amuthan Sekar
 
Dear Sir,

I am reading your articles in http://ungalrasigan.blogspot.in/ and http://vikatandiary.blogspot.in

All articles are very very great...great..great.

I am seeing "Kalki" in your writings...great.

I enjoyed so much by reading your both blogs.

Thank you very much.Please write more and more articles and books.

Thanks,
Ungal Rasikan and Kalki Rasigan,
Amuthan Sekar
 
உங்கள் இந்த மலரும் நினைவுகள் பதிவு இன்றைய வலைச்சரத்தில்.
வாழ்த்துக்கள்.

http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html
 
உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/12/blog-post_29.html) சென்று பார்க்கவும்... நன்றி...
 
வலைச்சரம் மூலம் வந்தேன்

மிக அருமையான பதிவு

நெகிழ்வு

நானும் ஒரு ஆசிரியன் என்பதால் நிறைய கற்க முடிந்தது ...

தற்போதைய நிலை யூஸ் அண்ட் த்ரோ சமூகம் சரியாய் இருக்கா பயன்படுத்து இல்லையா தூக்கி எறிந்துவிட்டு அடுத்த பொருள் என்பது மாதிரி இவன் ரிசல்ட் தருவான என்பது மட்டுமே இன்றைய நிலைப்பாடு பொதுவாய்