நான் டூ-வீலர் ஓட்டத் தொடங்கி ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இதற்கு முன்பும் டூ-வீலர் ஓட்டியிருக்கிறேன் என்றாலும், அது நான் சாவியில் பணியாற்றிய
1989 - 90-ல். அப்போது சென்னை சாலைகளில் கூட்டம் அவ்வளவாக இல்லை. தவிர, வேகம் அதிகம் இல்லாத, சைக்கிள் மாதிரியான வாகனம் அது. ‘மோஃபா’ என்று பெயர்.
மற்றபடி, நான் தொடர்ந்து டூ-வீலர் ஓட்டுவது இப்போதுதான். ஆரம்பத்தில் பயமாக இருந்தது. இப்போது பழகிவிட்டது. என் அனுபவத்தில், வாகனங்கள் ஓட்டுபவர்கள் எல்லாருமே மிகச் சரியாகத்தான் ஓட்டுகிறார்கள். திறமையாகத்தான் ஓட்டுகிறார்கள். ஆனாலும், அங்கங்கே விபத்துக்கள் நடப்பதற்குக் காரணம்... அவசரம், அசிரத்தை, மற்றவரை முந்திச் செல்ல வேண்டும் என்கிற வெறி மற்றும் பழுதான சாலைகள் ஆகியவைதான்.
டூ-வீலர் ஓட்டும்போது கவனிக்க வேண்டியவை:
1) வேகமாகச் செல்வதா, மெதுவாகச் செல்வதா? எது பாதுகாப்பான பயணத்துக்கு உகந்தது? என்னைப் பொறுத்தவரையில், ஒவ்வொரு வாகனத்துக்கும் தகுதியான வேகம் ஒன்று இருக்கும்; அதே போல், ஒவ்வொருவரின் திறமைக்கேற்பவும் வேகம் மாறுபடும். நான் 55 கி.மீ. வேகத்தில் செல்கிறேன். நெரிசல் மிகுந்த இடங்களில் வேகம் குறையும். என்றாலும், என் சராசரி வேகம் 55 கி.மீ. இவ்வளவு வேகம் ஆகாது என்று 40 கி.மீ வேகத்தில் வேண்டுமென்றே குறைத்து மந்தமாக ஓட்டியபோதெல்லாம் விபத்து நேரிடக்கூடிய வாய்ப்பு ஏற்பட்டது. எனவே, ஒவ்வொருவருக்கும் இயல்பான வேகம் என ஒன்றிருக்கும். அதற்கு மேலேயும் செல்லாதீர்கள்; கீழேயும் செல்லாதீர்கள். உங்கள் இயல்புப்படி ஓட்டுங்கள்.
2) கார், வேன் போன்ற வாகனங்களைப் பின்தொடரும்போது கவனம் தேவை. பெரிய பள்ளத்தை அவற்றின் சக்கரங்கள் அணைத்தாற்போல் சென்றுவிடும். பின் தொடரும் நீங்கள் சட்டென்று எதிர்ப்படும் பள்ளத்தைச் சமாளிக்க முடியாமல் தடுமாறி விழ நேரிடும்.
3) உங்கள் டிராக்கிலேயே செல்லுங்கள். சடாரென்று இடப் பக்கமோ வலப்பக்கமோ வளைத்து ஓட்டாதீர்கள். குறிப்பாக, முன் செல்லும் வாகனத்தை ஓவர் டேக் செய்யவேண்டுமென்றால், முன்னதாகவே தீர்மானித்துக்கொண்டு அதற்கேற்ப உங்கள் வண்டியை ஒதுக்கி ஓட்டுங்கள். அல்லது, வேறு ஏதாவது காரணத்தால் முன் வாகனம் நின்று, நீங்கள் கடந்துதான் போகவேண்டும் என்றால், பின் வரும் வாகனங்களைப் போகவிட்டு, நிதானித்துக் கடக்கவும்.
4) ரியர் வியூ மிர்ரர் இருக்கிறதே என்பதற்காக அடிக்கடி அதைப் பார்க்கவேண்டும் என்பதில்லை. வலப்பக்கமோ இடப்பக்கமோ திரும்பும்போது ஓர் எச்சரிக்கைக்குப் பார்த்துக்கொண்டால் போதுமானது. டிராஃபிக்கில் வேகமாகப் போய்க்கொண்டிருக்கும்போது ரியர் வியூ மிர்ரரைப் பார்த்தால், சாலையிலான கவனம் சிதறுகிறது என்பதோடு, உங்களையொட்டி பின்னால் வேகமாக வந்துகொண்டிருக்கும் வாகனம் எங்கே உங்கள் மீது மோதிவிடுமோ என்கிற அநாவசியமான பயம் ஏற்பட்டு, அதிலேயே தடுமாறி விழும்படி ஆகிவிடும்.
5) உங்கள் பாதையில் திடுமென பள்ளத்தைப் பார்த்தால், சட்டென்று வளைத்துக் கடக்க முயலாதீர்கள். பின்தொடர்பவர்கள் சுதாரிக்க முடியாமல் உங்கள் வண்டி மீது மோதும்படியாகிவிடும். எனவே, முன்கூட்டியே மேடு பள்ளங்களைப் பார்த்துக் கவனமாக ஓட்டுவதே சிறந்தது. அல்லது, எதிர்பாராமல் பள்ளம், மேடு கண்ணில் பட்டது என்றால், வண்டியின் வேகத்தைக் குறைத்து, பள்ளத்தை வளைத்துக்கொண்டு செல்லவும். பள்ளம் அல்லது மேடு சிறியதுதான் என்றால், பேசாமல் வண்டியை இறக்கி ஏற்றிச் செல்வதே நலம்.
6) சாலையில் போய்க்கொண்டிருக்கும்போது திடீர் திடீரென பிரேக் பிடித்து நிற்காதீர்கள். அதுவும் தேவையே இல்லாமல் சடன் பிரேக் போடாதீர்கள். சிக்னல் வந்தாலோ, டிராஃபிக் ஜாம் என்றாலோ அதற்கேற்ப வேகத்தைக் குறைத்து ஓட்டிக்கொண்டு போய் நிறுத்துங்கள்.
7) வெகுகாலம் சைக்கிள் ஓட்டிப் பழகியவர்கள் திடுமென டூ-வீலர் ஓட்டத் தொடங்கினால், பிரேக் பிடித்து காலை அழுத்தமாக ஊன்றி நிற்கத் தோன்றும். அது ஆபத்தானது. காலூன்றி நிற்கும்போது, வண்டி கொஞ்சமும் சாயக் கூடாது. அப்படிச் சாய்ந்தால் வண்டியின் கனத்தை உங்களால் சமாளிக்க முடியாது. எனவே, இரண்டு பக்கமும் தரையில் லேசாகக் கால் படும்படியாக நிற்பதே சரியான முறை.
8) சாலைத் திருப்பங்களில் கண்டிப்பாக ஹாரன் செய்யுங்கள். அதே போல் வலப் பக்கம் திரும்பப் போகிறீர்களா, இடப் பக்கமா என்பதற்கேற்ப சிக்னல் விளக்கை எரிய விடுங்கள். சாலையில் திரும்பியதும், மறக்காமல் சிக்னல் விளக்கை அணையுங்கள். இல்லையெனில், நீங்கள் திரும்பப் போகிறீர்கள் என்று நினைத்து பின் தொடரும் வாகனம் உங்களை எதிர்ப்பக்கமாக வேகமாகக் கடக்க முயலும். சரியாக நீங்களும் அந்தப் பக்கம் வளைத்துத் திரும்ப, விபத்து நேரிடும்.
9) சாலையில் வாகனப் போட்டி எதுவும் நடத்திப் பரிசு கொடுக்கப் போவதில்லை. எனவே, யாரேனும் உங்களை வேகமாக முந்திச் சென்றால், பதிலுக்கு நீங்களும் வேகம் எடுத்து அவர்களை முந்தப் பார்க்காதீர்கள். பெரும்பாலும் பெண்கள் தங்களை வேகமாக முந்திச் செல்வதைப் பல ஆண்கள் விரும்புவதில்லை. ஏதோ தங்களுக்கு இடப்பட்ட சவால் போல வேகமெடுத்துப் பறந்து சென்று ஓவர் டேக் செய்கிறார்கள். வேண்டாமே!
10) வாகனத்தை ஓட்டும்போது சிந்தனையை எங்கோ ஓட விடாதீர்கள். உங்கள் முழுக் கவனமும் சாலையிலேயே இருக்கட்டும். தூக்கக் கலக்கமாக இருக்கும் நேரத்தில் எக்காரணம் கொண்டும் வண்டியை ஓட்டவே ஓட்டாதீர்கள். ‘ஓட்ட முடிகிறதே! ஒன்றும் சிரமமாக இல்லையே!’ என்று நினைக்கலாம். தொடர்ந்த பழக்கத்தின் காரணமாக வண்டியை ஓட்ட முடியும்தான். ஆனால், தூக்கக் கலக்கத்தில் நம் மூளை அயர்ச்சியுடன் இருப்பதால், தொலைவில் வரும் வாகனம் என்ன வேகத்தில் வருகிறது, நாம் என்ன வேகத்தில் செலுத்தினால் முந்தின வாகனத்தைப் பாதுகாப்பாகக் கடக்கலாம் என்பன போன்ற கணக்கீடுகளைச் செய்ய முடியாது. இதனால் விபத்து நேரிடும் ஆபத்து உண்டு.
மற்றபடி, தங்கள் அனுபவத்தில் வேறு ஏதேனும் முக்கியக் குறிப்பு சொல்லவேண்டும் என்று தோன்றினால், பின்னூட்டம் இடுங்கள். எனக்கும் மற்றவர்களுக்கும் உதவும்.
இனி, ‘பொக்கிஷம் புத்தகப் பரிசுப் போட்டி’!
1) ஓர் எழுத்தாளரின் பேச்சைக் கேட்பதற்காகப் பல ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பள்ளிக்கூடத்தின் வாசலிலேயே காத்திருந்தேன். என்னை உள்ளே விட வாட்ச்மேன் மறுத்துவிட்டார். யார் அந்த எழுத்தாளர்? என்னுடைய எந்த வலைப்பூவில், எந்த ஆண்டு, எந்த மாதம், என்ன தேதியில் எழுதிய பதிவில் இது பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்? அந்தப் பதிவின் தலைப்பு என்ன?
இந்தக் கேள்விக்கான சரியான விடையை முதலில் பின்னூட்டமாக அனுப்புபவருக்கு, வரும் புத்தகச் சந்தைக்கு விகடன் பிரசுரம் வெளியிடவிருக்கும், சுமார் ரூ.180 மதிப்புள்ள ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ புத்தகம் அன்பளிப்பாக அனுப்பிவைக்கப்படும்.
2) என் வலைப்பூக்கள் பற்றிய தங்களின் ஆக்கபூர்வமான விமர்சனத்தை, ரசிக்கும்படியான எழுத்து நடையில் சுவாரஸ்யமாக எழுதி அனுப்புங்கள். சிறந்த விமர்சனக் கட்டுரையை எழுதியவருக்கும் மேற்படி ‘பொக்கிஷம்’ புத்தகம் பரிசாக அளிக்கப்படும். தவிர, அந்தக் கட்டுரையை என் வலைப்பூவில் பிரசுரிப்பேன்.
நிபந்தனைகள்:
1) தாங்கள் சரியான விடை அனுப்பியிருந்தும் ஏதேனும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அது எனக்குக் கிடைக்கவில்லை எனில், அதற்கு நான் பொறுப்பாக முடியாது. என் பரிசீலனைக்கு வரும் விடைகளிலிருந்து மட்டுமே பரிசுக்குரிய விடைகளை நான் தேர்ந்தெடுக்க முடியும்.
2) இந்திய முகவரிக்கு மட்டுமே என்னால் புத்தகத்தைத் தபாலில் அனுப்பி வைக்க இயலும். எனவே, வெளிநாட்டில் வசிப்பவராக இருந்தால், தயவுசெய்து உங்கள் இந்திய முகவரியைத் தரவும்.
3) முதல் கேள்விக்கான விடையைப் பின்னூட்டமாக அனுப்பலாம். ஆனால், இரண்டாவது கேள்விக்கான விடையை, அதாவது விமர்சனக் கட்டுரையை எனது nraviprakash@gmail.com இ-மெயிலுக்கு மட்டுமே யூனிகோடில் அனுப்பவேண்டும். அல்லது, பி.டி.எஃப் செய்து இணைத்து அனுப்பலாம்.
4) இந்த இரண்டு போட்டிகளிலும் கலந்துகொள்ளக் கடைசி தேதி 8.1.2012. அதற்குப் பின் வரும் விடைகள் பரிசீலனைக்கு ஏற்கப்படமாட்டாது.
5) முதல் கேள்வியைப் பொறுத்தமட்டில் முதலில் வரும் சரியான விடைக்கே பரிசு. அதில் சந்தேகம் இல்லை. ஆனால், இரண்டாவது கேள்விக்கான பரிசு ரசனையின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது. எனவே, பரிசீலனைக்கு வரும் விமர்சனக் கட்டுரைகளில் என் ரசனைக்கு உகந்ததாக ஏதும் இல்லையெனில் எந்தக் கட்டுரைக்கும் பரிசளிக்க இயலாது. அதேபோல், பரிசு அளித்தாலும் அந்தக் கட்டுரையை என் வலைப்பூவில் (தேவைப்பட்டால் சிறுசிறு திருத்தங்களோடு) பிரசுரிப்பதும் பிரசுரிக்காததும் என் விருப்பத்தைப் பொறுத்தது.
6) பரிசு பெறுபவர்களின் பெயர்களை நான் இதே வலைப்பூவில் 10.1.2012-க்குள் தெரிவித்துவிடுவேன். அவர்கள் தங்களின் இந்திய முகவரியை உடனே என் இ-மெயிலுக்கு முழுமையாக அனுப்ப வேண்டும். உடனடியாக அவர்களுக்கான பரிசுப் புத்தகங்கள் தபாலில் அல்லது கூரியரில் அனுப்பி வைக்கப்படும். ஜனவரி மாத இறுதிக்குள்ளாக எனக்கு முகவரி கிடைத்தால்தான், பரிசுப் புத்தகம் அனுப்பி வைக்க ஏதுவாக இருக்கும். அதற்கும் தாமதாக முகவரியை அனுப்பினால், பரிசு அளிக்க இயலாது.

நினைவூட்டல்:
‘என் டயரி’ வலைப்பூவில், ‘பொன்னியின் செல்வனும் பொக்கிஷமும்’ என்னும் பதிவில் ஒரு படம் வெளியிட்டு, அந்த அழகி யார் என்று கேட்டிருந்தேன். சரியான விடை அனுப்புகிறவருக்கு விகடன் பிரசுர குட்டிப் புத்தகம் ஒன்று பரிசு எனச் சொல்லியிருந்தேன். சரியான விடை: பூங்குழலி. இதை முதலில் பின்னூட்டமாக அனுப்பியவர் யாழ் மைந்தன் என்ற விடையையும் அடுத்த பதிவில் கொடுத்திருந்தேன். திரு.யாழ் மைந்தன் தனது முகவரியை இன்னும் எனக்கு அனுப்பி வைக்கவில்லை என்பதை இதன்மூலம் அவருக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்.