ராஜா-ராணிக் கதையையும் பேய்-பிசாசுகளையும் கலந்தடித்துப் படம் செய்து பெரிய வெற்றி பெற்றார் விட்டலாச்சார்யா. ராஜா-ராணிக் கதையோடு நகைச்சுவையைக் கலந்து கொடுத்து, ‘இம்சை அரசன் 23-ம் புலிகேசி’யாக வடிவேலுவைக் களமிறக்கி அசத்தினார் டைரக்டர் சிம்புதேவன். கவிதைக்கு இலக்கணத்தை மீறும் சுதந்திரம் உண்டு. அது ‘பொயட்டிக் லைசென்ஸ்’ எனப்படும். அதுபோல, ஒரு படத்தில் நகைச்சுவை பிரதானமாக அமைந்து விட்டால், லாஜிக் மீறல் ஒரு குற்றமாகாது! அதை மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவும் மாட்டார்கள். கே.பாக்யராஜின் வெற்றிப் படமான ‘இன்று போய் நாளை வா’ இதற்கு ஒரு நல்ல உதாரணம்.
சிம்புதேவனின் ‘அறை எண் 305-ல் கடவுள்’ என்னும் அடுத்த படமும் யதார்த்தத்தை மீறிய கற்பனைதான். என்றாலும், இம்சை அரசனின் பாதிப்பால் இதிலும் நகைச்சுவையை எதிர்பார்த்துப் போனவர்கள் ஏமாந்தார்கள். படம் மிக அருமையாக இருந்தும், இம்சை அரசனின் வெற்றியை இது தொடவில்லை. ஒரே ஒரு படத்திலேயே மக்களுக்குத் தன் மீது அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிட்டதே அவரது பலம், பலவீனம் இரண்டுமாகிவிட்டது.

எப்படி ராஜா-ராணிக் கதையைத் தனக்கே உரிய நகைச்சுவையோடு கலகலப்பாகக் கொடுத்தாரோ, அதே போல கௌபாய் படங்களை உல்டா செய்து அட்டகாசமான நகைச்சுவை விருந்தளிக்கத் தயார் செய்துகொண்டு இருக்கிறார் சிம்பு.

‘கங்கா’ படத்தில் மேஜர் சுந்தர்ராஜனுக்கும் ஜெய்சங்கருக்கும் நடக்கும் சண்டைதான் ஆரம்பக் காட்சியாக இருக்கும். குதிரை லாயத்தில் நடக்கும் அந்தச் சண்டையில், இருவரும் குதிரைகளின் காலடியில் எல்லாம் விழுந்து புரண்டு சண்டையிடுவார்கள். சுந்தர்ராஜன் வில்லன் என்று பார்த்தால், சண்டையின் முடிவில் அவர் ஜெய்சங்கரின் அப்பா; தன் மகனுக்குச் சண்டைப் பயிற்சி அளிக்கிறார் என்பது புரியும். ‘அட!’ என்று அங்கே நிமிர்ந்து உட்கார்ந்தவன், படம் முடியும் மட்டும் சீட்டின் நுனியில் உட்கார்ந்தேதான் பார்த்தேன்.
மரத்தாலான வித்தியாசமான வீடு, இதர படங்களில் பார்க்க முடியாத ஏகப்பட்ட குதிரைகள், மலைகள், அருவிகள் என இயற்கை வளம் சூழ்ந்த லொகேஷன்கள் என கௌபாய் படங்களுக்கே உரித்தான அழகோடு அந்தப் படம் இருக்கும். மிதவை வீடு கூட உண்டு. அதில் அசோகனுடன் ஒரு சண்டையும் உண்டு. கிளாமராக உடை அணிந்த ஹீரோயினும் பிரமாதமாகச் சண்டை போடுவாள். காமிராமேதை கர்ணன் உபயத்தில் குதிரைகள் சிட்டாகப் பறக்கும். இதெல்லாம் வேறெந்தப் படத்திலும் காணக் கிடைக்காது.
‘கங்கா’ படம் ரிலீசான சமயத்தில் பார்த்ததுதான். ஆனால், அதில் இடம் பெறும் பல காட்சிகளும் கதையும் இன்னும் எனக்கு நினைவிருக்கின்றன. ஒரு காட்சியில் தெருவே வெறிச்சோடியிருக்கும். வில்லன் ஒரு அப்பாவியின் கழுத்தில் தன் பூட்ஸ் காலை வைத்து, அப்படியே அழுத்திக் கொல்வான். ஒரு காட்சியில் சுந்தர்ராஜனின் கைகளையும் கால்களையும் நான்கு குதிரைகளில் கட்டி, நாலு பக்கமும் குதிரைகளைச் செலுத்துவார்கள். சுந்தர்ராஜன் வலியால் கதறித் துடிப்பார். அவரைத் தரையோடு தரையாக இழுத்துக்கொண்டே பல மைல் தூரம் குதிரைகள் ஓடும். மேட்டிலும் பள்ளத்திலும் அவர் உடம்பு அடிபட்டு இறந்து போவார். பின்பு, அவரின் மகன் ஜெய்சங்கர் அதே போலவே அந்த நான்கு வில்லன்களையும் குதிரைகளின் கால்களில் கட்டிப் பழி வாங்குவார். செம விறுவிறுப்பான படம்!
அதே போலவே ‘எங்க பாட்டன் சொத்து’. இதில் ஜெய்சங்கர் பெரிய நெருப்பு வளையத்துக்குள் எகிறிக் குதித்து சண்டையிடும் காட்சியைத்தான் போஸ்டர்களாக அடித்து ஒட்டியிருந்தார்கள். இந்தப் படத்திலா அல்லது ‘துணிவே துணை’ படத்திலா என்று ஞாபகமில்லை... சவப் பெட்டி செய்யும் அசோகன் தன் பெரிய தொப்பை மீது பட்டையாக பச்சை பெல்ட் அணிந்து, ஊருக்குள் வருபவர்களையெல்லாம் ‘மாப்ளே... அளவெடுக்கணும் மாப்ளே’ என்பார். வேறொரு படத்தில் அசோகன் தங்கத்தைக் கடத்துவார். ஹெலிகாப்டர்கள் பறக்கும். ஓடுகிற கார் டாப் மீது ஒரு தேய் தேய்த்துவிட்டுப் பின் மேலெழும்பிப் பறக்கும். காஷ்மீரில் டூயட் பாடிக்கொண்டு இருக்கும் ஜெய், ஊர்த் திருவிழாவுக்கு வந்து கலந்து கொள்வார். அவரின் அண்ணனுக்கோ அப்பாவுக்கோ கோயிலில் முதல் மரியாதை செலுத்தும்போது வில்லன்களால் கொல்லப்பட, ஜெய் ஆவேசமாகிப் பழி வாங்கக் கிளம்புவார். ‘உடையப்பனைப் பழி வாங்குவோம்’ என்று சிறுவர்கள் கூட்டம் ஒன்று ஹீரோயின் தலைமையில் புறப்படும். உயிர் நண்பரான சிவகுமாருக்கும் (போலீஸ்) ஜெய்சங்கருக்கும் சண்டை.
நான் என் சின்ன வயதில் மிகவும் ரசித்துப் பார்த்த படங்கள் இம்மாதிரிப் படங்கள்தான். பொதுவாக, சிறுவர்களுக்கே குதிரைகள், அவற்றில் ஏறி சாகசம் செய்யும் வீரர்கள் எல்லாம் பிடிக்கும் என்றுதான் தோன்றுகிறது.
அந்த வகையில், அதே போன்ற ஒரு கௌபாய் படம், அதுவும் நகைச்சுவை கலந்து பார்க்கக் கிடைக்கிறதென்றால் அது நிச்சயம் மிக மிக சுவாரஸ்யமானதாகவே இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
கண்களுக்கும் காதுகளுக்கும் ஒரு பெரிய விருந்து காத்திருக்கிறது!
.
9 comments:
முதல் பந்திக்கு நான் இப்பவே ரெடி. அப்ப நீங்க? (மற்றவர்களை)
ரேகா ராகவன்
முதல் படத்தில் பிரசித்தி பெற்றார். அடுத்ததில் பிரமிக்க வைத்தார். தயாராவோம் ரசிக்க ... கே.பி.ஜனா
Django,
Good Bad Ugly
போன்ற படங்களைப் பார்த்தது ஞாபகம் வருது
இந்த படம் வெல்ல வாழ்த்துக்கள்
Post a Comment