சாவி என்னும் இரண்டெழுத்து மாமனிதர் என்னுள் இருநூறு ஆண்டுகளுக்கான நினைவுகளை விதைத்துச் சென்றிருக்கிறார். பத்திரிகைத்துறையின் மீது அவர் எவ்வளவு ஆர்வமும் பிடிப்பும் கொண்டிருந்தார் என்பதை நேரடியாகப் பார்த்து ரசித்தவன் நான்.
ஒருமுறை, சாவி சார் அமெரிக்கா சென்றிருந்தார். ஒரு மாத கால பிரயாணம் முடிந்து அன்றுதான் சென்னை திரும்புகிறார். அவரது மகள்கள், மகன் பாச்சா உள்பட அனைவரும் அவரது வரவுக்காகக் காத்திருக்கிறார்கள். வீட்டிலிருந்து காரை எடுத்துக்கொண்டு அவரது இளைய மருமகன் ராமமூர்த்தி ஏர்ப்போர்ட் சென்று சாவி சாரை அழைத்து வந்தார்.
அன்றைய தினம்தான் வழக்கமாக நாங்கள் சாவி இதழ் வேலைகளைப் பூர்த்தி செய்யும் தினம். இரவு பத்து மணி இருக்கும்... சாவி சாரை அழைத்துக்கொண்டு கார் வீடு வந்து சேர்ந்தது.
சொன்னால் நம்பமாட்டீர்கள்... காரிலிருந்து இறங்கிய சாவி சார் வீட்டினுள் போகாமல் நேரே அலுவலக அறைக்கு வந்து, என் எதிரே உட்கார்ந்துவிட்டார்.
“என்ன ரவி, இஷ்யூ வேலைகள்லாம் நன்னாப் போயிண்டிருக்கா? இந்த வாரம் இஷ்யூவை முடிச்சுட்டியா? ரெடியான பக்கங்களையெல்லாம் கொடேன். பார்த்துட்டுத் தரேன்” என்றார்.
எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. விமானத்தில் அத்தனை தூரம் அலுப்பும் களைப்புமாக வந்த 70 வயதுப் பெரியவர், நேரே வீட்டுக்குச் சென்று ஓய்வெடுக்காமல், தமது மனைவி, மகள்களைப் பார்த்துப் பேசாமல், அலுவலகம் வந்து சாவி இதழ் பக்கங்களைப் பார்க்கலாமா என்று கேட்கிறாரே என்று வியப்பாக இருந்தது.
முடித்து வைத்திருந்த பக்கங்களை எடுத்துக் கொடுத்தேன். ஒவ்வொரு மேட்டரையும் நிதானமாக, முழுதாகப் படித்தார். தேவைப்பட்ட இடங்களில் சின்னச் சின்ன திருத்தங்கள் செய்தார். “அவ்வளவுதானே? நான் கிளம்பலாமில்லையா?” என்று கேட்டுக்கொண்டு, எழுந்து போனார்.
“என்னய்யா இந்த மனுஷர்... நாமாக இருந்தா எப்படா போய்ப் படுக்கைல விழுவோம்னு பறப்போம்! இவர் என்னடான்னா, வந்ததும் வராததுமா ஆபீஸுக்கு வந்து மேட்டரைப் படிச்சுத் திருத்தம் வேற பண்ணிட்டுப் போறாரே?” என்று ஆர்ட்டிஸ்ட் மோகனிடம் என் வியப்பைப் பகிர்ந்துகொண்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் என் வியப்பை இன்னும் பல ஆயிரம் மடங்கு கூட்டிவிட்டது.
“இதுக்கே சொல்றீங்களே... ஒரு தடவை அவருடைய மருமகன் அசோக் உடல்நிலை மோசமாகி, மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந்தார். நிறையப் பேர் ரத்தம் கொடுத்தார்கள். சாவி பத்திரிகையில் வேலை செய்யும் நாங்களும்கூடப் போய் ரத்தம் கொடுத்துட்டு வந்தோம். ஆனா, சிகிச்சை எதுவும் பலனளிக்காம மருமகன் இறந்துபோயிட்டார். தகவல் அறிந்து, பதறிப்போய் உடனே ஆஸ்பத்திரிக்கு ஓடினார் சாவி சார். அழுதுகொண்டிருந்த தன் மகளுக்கு ஆறுதல் சொன்னார்.
அன்று சாவி இதழை முடிக்கவேண்டிய நாள். நாங்கள் மும்முரமாக அந்தப் பணியில் ஈடுபட்டிருந்தோம். அதற்கு முந்தைய ஃபாரங்களையெல்லாம் சாவி சார் பார்த்துத் திருத்திக் கொடுத்தார். லீடர் ஃபாரம் பார்த்துக்கொண்டு இருக்கும்போதுதான் மருத்துவமனையிலிருந்து தகவல் வந்து, உடனே புறப்பட்டுப் போனார். அவர் வருவதற்குள் நாங்கள் ஃபாரத்தை முடித்து, அச்சுக்குக் கொடுத்து அனுப்பிவிட்டோம்.
சாவி சார், தமது மருமகனின் உடலை வீட்டுக்குக் கொண்டு வருவதற்கு வேண்டிய ஏற்பாட்டையெல்லாம் செய்துவிட்டு, நேரே அலுவலகம் வந்தார். உதவியாசிரியர் கண்ணனின் எதிரே உட்கார்ந்துகொண்டு, “முடிச்சு வெச்சிருக்கிற ஃபாரத்தை எடுங்க” என்றார். அதிர்ந்து போனார் கண்ணன். தயங்கித் தயங்கி, “சார், நீங்க வரமாட்டீங்கன்னு நினைச்சு எல்லாத்தையும் அச்சுக்கு அனுப்பிட்டோம்..!” என்றார். அப்போது சாவி சார் கேட்டாரே ஒரு கேள்வி - “ஏன்... நான்தான் செத்துப்போயிட்டேனோன்னு நினைச்சுட்டீங்களா?” திடுக்கிட்டுப் போன கண்ணன், “அதில்லை சார்! ஃபாரம் பாக்கிற மூட்ல இருக்க மாட்டீங்கன்னுதான்...” என்று மெதுவாகச் சொல்ல, “வீட்டுல ஒருத்தர் இறந்துட்டா, அம்மாவைக் கவனிக்க மாட்டீங்களா? அவ எக்கேடோ கெடட்டும்னு விட்டுடுவீங்களா?” என்று கோபமாகக் கேட்ட சாவி சார், அனுப்பிய பக்கங்களைத் திரும்ப வாங்கி வரச் சொல்லி, அவை வந்ததும் அனைத்தையும் படித்துப் பார்த்துத் திருத்தங்கள் செய்து அனுப்பிவிட்டுப் பின்பு தமது மருமகனின் அந்திம கிரியைகளில் ஈடுபட்டார்” என்று மோகன் விவரித்தபோது, ‘இப்படியும் ஒரு மனுஷரா! பத்திரிகை மீது இத்தனை ஈடுபாடா!’ என்று வியந்து போனேன்.
ஒருமுறை, சாவி சாருக்குக் கொஞ்சம் தூரத்து உறவினரான ஓர் அம்மையார், ஒரு சிறுகதை எழுதி, அதை சாவி சாரிடமே பரிசீலனைக்குத் தந்திருந்தார். சாவியின் துணைவியாருக்கு உடல் நிலை சரியில்லாதபோதெல்லாம், சாவி சாருக்கு அவர் வீட்டிலிருந்துதான் கேரியரில் டிபன், சாப்பாடு எல்லாம் வரும். சாவியின் குடும்பத்துக்கு மிகவும் வேண்டியவர் அவர்.
சாவி சார் அந்தக் கதையை என்னிடம் கொடுத்து, “படிச்சுப் பார்த்துட்டு நல்லா இருந்தா, சாவியில் போடு!” என்று கொடுத்தார்.
நான் அதைப் படித்துப் பார்த்தேன். சாவி பத்திரிகையில் வெளியிட்டால் 16 பக்கங்கள் வரும் அளவுக்குப் பெரிதாக, வளவளா, கொளகொளா என்றிருந்தது. பிரசுரிக்க இயலாத கதை அது. அதனால் அதை எடுத்துக் கிடப்பில் போட்டுவிட்டேன்.
சில வாரங்கள் கழித்து, சாவி சார் கூப்பிட்டு, அந்தக் கதை என்ன ஆயிற்று என்று கேட்டார். “கொஞ்சம் கூட நல்லாவே இல்லை சார்! திருப்பிக் கொடுத்துடலாம்” என்றேன். அவர் கொஞ்சம் தயக்கமான குரலில், “அப்படியா சொல்றே... எடிட் கிடிட் பண்ணி, அதை எப்படியாவது பப்ளிஷ் பண்ணமுடியுமா பாரேன்!” என்றார்.
“சரி” என்றேனே தவிர, அந்தக் கதையில் ஜீவனே இல்லை என்பது, அதை முதல் முறை படித்தபோதே எனக்குப் புரிந்துவிட்டது. எனவே, மீண்டும் அதை அப்படியே கிடப்பில் வைத்திருந்தேன்.
மேலும் இரண்டு வாரங்கள் சென்றதும் சாவி சார் கூப்பிட்டார். “என்னாச்சு ரவி அந்தக் கதை?” என்றார். “சார், கதை கொஞ்சம்கூட நல்லாவே இல்லை. அதை ஒண்ணுமே பண்ண முடியாது. வேணா உங்க கிட்டே கொண்டு வந்து தரேன். நீங்களே படிச்சுப் பாருங்க!” என்றேன்.
“வேண்டாம்... வேண்டாம். நீ சொன்னா சரிதான்! ஆனா...” என்று மீண்டும் தயங்கினார் சாவி. “நல்லா இல்லாத கதையை போடுன்னு நான் உங்கிட்டே சொல்றது பத்திரிகைக்கு நான் பண்ற துரோகம். ஆனா, அந்தம்மா போட்ட சாப்பாட்டை நான் பல தடவை சாப்பிட்டிருக்கேன். என் கஷ்ட காலங்களில் எல்லாம் ரொம்பவும் உதவி செஞ்ச குடும்பம் அது. வேணா எனக்காக ஒண்ணு பண்றியா? அந்தக் கதையை நல்லா எடிட் பண்ணி, ‘மோனா’ மாத நாவல்ல சேர்த்துப் பப்ளிஷ் பண்ணிடு. நான் அந்தம்மா கிட்டே எப்படியாவது சமாளிச்சுக்கறேன்” என்றார் கெஞ்சலாக.
அவர் சொன்னபடியே அந்தக் கதையை (தலைப்பெல்லாம் மறந்துவிட்டது. ஒரு பிராமணத் திருமண நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட கதை அது என்பது மாத்திரம் நினைவில் இருக்கிறது.) மூன்றில் ஒரு பங்காகச் சுருக்கி, ‘மோனா’வில் துணைக் கதையாக வெளியிட்டேன்.
பிறகு சில நாட்கள் கழித்து, “அந்தம்மா இதுக்காக ரொம்பவும் வருத்தப்பட்டாங்க. என்னாலயும் எதுவும் சொல்ல முடியலை. ‘சின்ன பையன்; எதுல பப்ளிஷ் பண்ணா என்னன்னு பண்ணிட்டான்’ என்று பழியைத் தூக்கி உன்மேல போட்டுட்டேன். ‘அதில்லை மாமா! கதையை ரொம்பவே எடிட் பண்ணி, ஜீவனையே சிதைச்சுட்டார் உங்க சப்-எடிட்டர்! அவருக்கு எடிட் பண்ணவே தெரியலை. வேற யாராவது நல்ல ஆளா வேலைக்குப் போட்டுக்கக் கூடாதா நீங்க? ஏன் இப்படிப் பண்ணே, என்னான்னு அவர்ட்டே கண்டிச்சுக் கேளுங்கோ’ன்னாங்க. ‘சரி, சரி’ன்னுட்டு வந்துட்டேன். பாவம், எனக்காக நீ அவங்க கிட்டே திட்டு வாங்கிண்டே!” என்றார் சாவி.
பத்திரிகை உலக ஜாம்பவான் என்று பத்திரிகையாளர்கள் எல்லாராலும் போற்றப்படும் ஒரு மாமனிதர் என்னிடம் இப்படியெல்லாம் சொல்லியிருக்க வேண்டியதே இல்லை; ‘இந்தக் கதையைக் கச்சிதமா எடிட் பண்ணி, சாவி இதழ்ல இந்த வாரம் பப்ளிஷ் பண்ணிடுப்பா!’ என்றால் செய்துவிட்டுப் போகிறேன். அவர் இட்ட வேலையைச் செய்வதற்குத்தானே நான் இருக்கிறேன்!
ஆனால், அவர் அப்படிச் சொல்லவே இல்லை. அவருக்கு மிகவும் வேண்டியவரான ஒருவர் தந்த சிறுகதையை நான் சரியில்லை என்று மறுத்த பிறகு, அதை அவருக்குச் சொந்தமான பத்திரிகையில் பிரசுரிப்பதற்கும் அவர் தயங்கினார் என்றால், பத்திரிகைத் துறை மீது அவர் எத்தனை மதிப்பும் மரியாதையும் வைத்திருந்தார் என்று புரிகிறதல்லவா!
.