
அதற்கு முன்... கீழே சில வாக்கியங்களைக் கொடுத்துள்ளேன். அவற்றில் உள்ள தப்பு என்ன என்று ஊகியுங்கள். விடையைக் கடைசியில் சொல்கிறேன்.
1) பிரபல தொழிலதிபர் ஜகதீஷ்வரை இப்போதெல்லாம் வெளியில் எங்கும் காண முடியவில்லை. கிரிக்கெட் மற்றும் சினிமா தொடர்பான எந்த விழாவும் ஜகதீஷ்வர் இல்லாமல் நடந்தது இல்லை. அதே போல் அவர் அலங்கரிக்காத முக்கிய அரசியல் மேடைகளும் இல்லை. அப்படி சகலகலா வல்லவராக இருந்தவரின் ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது?
2) வருகிற திங்கள் அன்று விடியற்காலையில், தீவிரவாதி அம்ஷன்குமாருக்குத் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவனைத் தூக்கிலிடப் போகிறவர் 82 வயதான நாதா மல்லிக். பரம்பரை பரம்பரையாகத் தூக்குப் போடும் தொழிலில் உள்ள குடும்பம் அவருடையது. இதுவரை 24 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ள நாதா மல்லிக்குக்கு இது 25-வது இரை!
3) சுரேஷ் தன் மனைவி பூர்ணாவுடன் அமெரிக்கா சென்று செட்டிலாகி, ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பூர்ணாவின் தந்தை தற்போது மும்பையில் வசிக்கிறார். அமெரிக்கா செல்வதற்கு முன்பாக, மும்பை சென்று, தன் மாமனார் வேலாயுதம் வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தார் சுரேஷ். அதுவே அவர்களின் கடைசி சந்திப்பு!
4) சிறுவன் பரத் எங்கே போனான் என்று தெரியவில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது கடத்திப் போனார்களா என்றும் ஒரு பக்கம் பயமாக இருந்தது. உறவினர்களும் நண்பர்களுமாக நாலா திக்கிலும் தேடிப் பார்த்தார்கள். காவல் துறையும் தீவிரமாகத் தேடியது. கடைசியில், கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் ஒரு மூலையாகப் படுத்திருந்த பரத்தை கண்டுபிடித்தது போலீஸ்!
5) அம்மையார் குப்பத்தில் நேற்று இரவு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பல வீடுகள் இடிந்து விழுந்தன. குடிசை வீடுகள் சரிந்து தரைமட்டமாகின. ஒரு குடிசை வீட்டின் கூரை அப்படியே சரிந்து விழுந்தது. அதில் வசித்த குப்புசாமி, அவரின் மனைவி சுலோசனா, பத்து மற்றும் எட்டு வயதுகளில் உள்ள அவரின் மகன், மகள் என நான்கு பேரும் இந்த விபத்தில் சிக்கிப் பரிதாபமாக இறந்து போனார்கள். அனைவரின் உடல்களும் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் மீட்கப்பட்டபோது, மிகவும் வருத்தமாக இருந்தது.
எதிராளி என்ன சொல்கிறார் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுவது முக்கியம். புரியவில்லை என்றால், மீண்டும் ஒரு தரம் சொல்லச் சொல்லிக் கேட்பதற்குக் கூச்சப்படத் தேவையில்லை. புரியாமலேயே புரிந்ததாகப் பாவனை செய்து, தப்புத் தப்பாக எழுதுவதற்கு, மீண்டும் ஒருமுறை விளக்கமாகச் சொல்லும்படிக் கேட்டுச் சரியாக எழுதுவதே மேலானது! ‘கோவலனைக் கொண்டு வருக என பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஆணையிட்டதைச் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல், ‘கோவலனைக் கொன்று வருக என ஆணையிட்டதாகத் தவறாகக் கருதி, வீரன் செயல்பட்டதால் எத்தனைப் பெரிய விபரீதம் நிகழ்ந்துவிட்டது! கோவலன் கொலையுண்டான்! அவனையடுத்து யானோ அரசன்? யானே கள்வன்!’ என மன்னன் உயிர் துறந்தான். அவனது பிரிவைத் தாளாமல் பாண்டிமாதேவியும் இறந்துபோனாள். அதோடு நின்றதா? கண்ணகியின் கோபம் மதுரை நகரையே தீக்கிரையாக்கியதே!
சரி, ரொம்ப சீரியஸாகப் போகவேண்டாம். நகைச்சுவையாகப் பார்ப்போம். முன்னே பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். வயல் வரப்பில் நடந்து வந்துகொண்டு இருப்பார் சுருளிராஜன். அப்போது சற்றுத் தொலைவில் இருந்த வேறொரு நடிகர் (தேங்காய் சீனிவாசனா என்பது ஞாபகமில்லை) சுருளியைப் பார்த்து, ‘‘டேய்... வயல்ல ஆடு! வயல்ல ஆடு!’’ என்று கத்துவார். சுருளி உடனே தடதடவென்று வயலுக்குள் இறங்கி, ஆடத் தொடங்குவார். ‘‘அடேய்! என்னடா பண்றே! வயல்ல ஆடு மேயுதுன்னு சொன்னேன்டா!’’ என்று மீண்டும் விளக்கமாகச் சொல்வார் அவர். இன்றைக்குச் சாதாரணமாகத் தெரிந்தாலும், படம் வெளியான காலத்தில் சுருளியின் நடிப்பு, பார்வையாளர்களிடையே பெரிய சிரிப்பலையைக் கிளப்பிய காட்சி இது. ஒருவர் சொல்வதை எப்படி அனர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணம் இந்தக் காட்சி.
சமீபத்திலும், சிவகாசி என்கிற படத்தில் இப்படி ஒரு காட்சி வந்தது. விஜய் ஏதோ கடிதத்தை வைத்து பிளாக்மெயில் செய்து ஆயிரக் கணக்கில் பணம் கேட்க, பிரகாஷ்ராஜ் கடைசியில் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு, ‘‘உள்ளே போய் ஒரு ப்ரீஃப்கேஸில் பத்து ரூபாய், பெரிய பத்து கொண்டு வந்து இவர் கிட்டே கொடு!’’ என்று கஞ்சா கருப்புக்கு உத்தரவிடுவார். அவர் போய் அப்படியே ப்ரீஃப்கேஸில் பணத்தைக் கொண்டு வந்து விஜய்யிடம் கொடுத்துவிட்டு, ‘‘பத்து லட்சம் ரூபாயைக் கொடுத்துட்டேய்யா!’’ என்பார் அப்பாவியாக. ‘‘என்னது... பத்து லட்சமா? மடையா, மடையா! பத்தாயிரம்தானேடா என்று பிரகாஷ்ராஜ் பதற, ‘‘அந்த எழவைக் கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்றது!’’ என்பார் கஞ்சா கருப்பு கூலாக. சொல்வதைப் புரியும்படி சொல்லவேண்டும், தான் புரிந்துகொண்டது சரிதானா என்பதை விளக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான நகைச்சுவைப் பாடம் இந்தக் காட்சி.
ஒரு பண்ணையில் திடீரென்று வருமான வரித் துறையினர் வந்து சோதனை நடத்தினர். கணக்கு வழக்குகளையெல்லாம் பார்வையிட்டனர். அப்போது முதலாளி தனது கணக்குப் பிள்ளையைக் கூப்பிட்டு, ‘‘அந்தக் கள்ளக் கணக்கைக் கொண்டு வந்து காமிய்யா!’’ என்றார். ‘‘என்னய்யா சொல்றீங்க... கள்ளக் கணக்கா?’’ என்று கேட்டார் கணக்குப்பிள்ளை. ‘‘ஆமாய்யா! கொண்டு வந்து காட்டுய்யா, அதையும் பார்க்கட்டும் இவங்க!’’ என்றார் முதலாளி. கணக்குப் பிள்ளை நேரே போய், தான் தயாரித்து வைத்திருந்த பொய், புரட்டுக் கணக்குகளையெல்லாம் கொண்டு வந்து வருமான வரித் துறையினரிடம் கொடுத்துவிட்டார். லட்டு மாதிரி ஆதாரம் கிடைக்க, முதலாளி வசமாகச் சிக்கிக்கொண்டார். அப்புறம், ‘‘என்னய்யா இப்படிப் பண்ணிட்டே?’’ என்று முதலாளி, தன் கணக்குப் பிள்ளையிடம் அங்கலாய்க்க, ‘‘நீங்கதானேய்யா கள்ளக் கணக்கைக் கொண்டு வந்து காட்டச் சொன்னீங்க? நான்கூட சந்தேகப்பட்டு மறுபடியும் கேட்டேனுங்களே?’’ என்றார் கணக்குப் பிள்ளை. ‘‘அட என்னய்யா நீ! கள்ள (கடலை. கடலையை பேச்சுவழக்கில் கள்ள என்பது வழக்கம்) தெரியாதாய்யா உனக்கு? கள்ள பயிறு வித்தது, லாபம்னு கள்ள கணக்கக் காட்டச் சொன்னா இப்படிப் பண்ணிட்டியேய்யா!’’ என்று புலம்பினார் முதலாளி.
எதிராளிக்குப் புரிகிற மாதிரி பேச வேண்டும்; படிப்பவருக்குப் புரிகிற மாதிரி எழுத வேண்டும். பத்திரிகை உலகில் இது பால பாடம்.
பழைய ஜோக் ஒன்று எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘‘எதிர்காலத்துல என்னவா ஆகணும்னுடா உனக்கு ஆசை?’’ என்று கேட்டார் ஆசிரியர், ஒரு மாணவனைப் பார்த்து. ‘‘எங்கப்பா மாதிரியே எனக்கும் டாக்டர் ஆகணும்னுதான் சார் ஆசை!’’ என்றான் மாணவன். ‘அட, உங்கப்பா டாக்டரா? சொல்லவே இல்லியே?’’ என்றார் ஆசிரியர். ‘‘இல்லே சார்! எங்கப்பாவும் டாக்டர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டாரு!’’ என்றான் மாணவன்.
சொல்லுவதில் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு வகை இது. கீழே உள்ள வாக்கியங்களைக் கவனியுங்கள்.
இரண்டு மாதங்களுக்கு முன்னால் தூக்கு மாட்டிச் செத்துப்போன சரவணனின் தந்தை வேலுச்சாமியை குமாருக்கு நன்றாகத் தெரியும். நேற்று விடியற்காலையில் அவன் தன் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தபோது, அங்கே நின்றிருந்த வேலுச்சாமியைக் கண்டு திடுக்கிட்டான். கை காலெல்லாம் உதறலெடுத்தது குமாருக்கு.
கட்டுரையில் இப்படி ஒரு பகுதி வந்தால், படிப்பவர்கள் உடனே இதை எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்றால்... தூக்கு மாட்டிச் செத்துப் போனது வேலுச்சாமி; அவர் உயிரோடு எதிரே நிற்கிறார் என்றால், ஆவியோ பிசாசோ என்று பயம் வரத்தானே செய்யும் என்பதாகத்தான் புரிந்துகொள்வார்கள். உதவி ஆசிரியர்களும் இதை விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று, ‘இரண்டு மாதங்களுக்கு முன்னால் தூக்கு மாட்டிச் செத்துப் போனார் சரவணனின் தந்தை வேலுச்சாமி. அவரை குமாருக்கு நன்றாகத் தெரியும்...‘ என்பதாகத் திருத்துவார்கள். அங்கேதான் தவறு நிகழும்.
உண்மையில் தூக்கு மாட்டி இறந்துபோனது சரவணன்தான். அவனுடைய தகப்பனார் வேலுச்சாமியை குமாருக்கு நன்றாகத் தெரியும். அவரைப் பார்த்ததும் குமார் ஏன் பயந்தான் என்றால், அதன் பின்னணியில் வேறு ஏதோ ஒரு விவகாரம் இருக்கிறது. அது கட்டுரையில் கடைசிப் பகுதியில் இடம் பெறுமோ என்னவோ! சரவணனின் தற்கொலை சம்பந்தமாக அவனது நண்பன் என்ற முறையில் தன்னை ஏதும் அவர் குடாய்வாரா என்று குமார் பயந்திருக்கலாம்.
அது வேறு கதை. எதையும் தெளிவாக எழுத வேண்டும் என்பதே இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.
பாபு, கோபு என இரண்டு நண்பர்கள் தங்கள் மனைவிமார்களை அழைத்துக் கொண்டு உல்லாசப் பயணம் செல்வதாகத் திட்டமிட்டார்கள். யதேச்சையாக, வழியில் கோபுவின் மனைவியைச் சந்தித்த பாபு, அவளிடம் டூர் புரொகிராம் பற்றிச் சொல்ல, ‘‘ஆமாம், யார் யார் போகப் போகிறீர்கள்?’’ என்று கேட்டாள் அவள். ‘‘நீங்க என் வொய்ஃப், நான் உங்க ஹஸ்பெண்டு’’ என்றான் பாபு. கோபுவின் மனைவி அரண்டுபோய்விட்டாள். ‘‘என்ன சொல்றீங்க?’’ என்று பதறினாள். பாபு நிதானமாக, ‘‘நீங்க, என்னோட வொய்ஃப், நான், உங்க ஹஸ்பெண்ட் நாலு பேரும் போகப்போறோம்னு சொன்னேன்’’ என்றானாம்.
அதே போல், ‘ஒரு’ என்ற சொல்லைப் பலர் தப்பான இடத்தில் பயன்படுத்துகிறார்கள். ‘ஒரு வயசுப் பெண்ணுடன் அவர் மட்டும் தனியாக இருக்கிறார் வீட்டில்’ என்றால், கன்னிப் பெண் ஒருத்தியுடன் இருக்கிறார் என்ற அர்த்தம்தான் வரும். அவர் தனது ஒரு வயது மகளுடன் இருக்கிறார் என்று அர்த்தம் வராது. ‘ஒரு கைத் தொழில் கற்றுத் தரும் நிறுவனம்’ என்றால், ஒரே ஒரு கைத்தொழிலை மட்டும்தான் கற்றுத் தருவார்களா அங்கே என்ற கேள்வி எழுகிறதல்லவா? எனவே, ‘கைத்தொழில் கற்றுத் தரும் பயிற்சி நிலையம் ஒன்று அந்த ஊரில் இருந்தது’ என்று தெளிவாக எழுத வேண்டியது முக்கியம்.
மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் உரையாற்றிய சீனியர் மாணவர் ஒருவர், தன் பேச்சினிடையே, ‘‘மெல்லத் தமிழினி சாகும் என்று பாரதியே வருத்தப்பட்டுச் சொன்னார். அந்த நிலையை நாம் தமிழ்மொழிக்கு ஏற்படுத்திவிடக் கூடாது என்று பேசினார். திறமையான மாணவர்தான். ஆனால், அவர் மட்டுமல்ல: ரொம்பப் பேர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிற விஷயம் இது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதியே சொல்லிவிட்டான் என்று பிரபல பேச்சாளர்களே இன்றைக்கும் மேடைகளில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முன்னெப்போதோ யாரோ ஒரு பிரபல பேச்சாளர், பாரதியின் கவிதையை மேலோட்டமாகப் படித்துப் புரிந்துகொண்டு இப்படிப் பேசப் போக, அதைக் கேட்டுக் கேட்டு மற்றவர்களும் சுலபமாக அதைத் தங்கள் பேச்சில் கையாண்டதன் விளைவே இது.
பாரதி உண்மையில் என்ன சொன்னார்? தமிழ் சாகும் என்று சொன்னாரா? அப்படிச் சொல்வாரா அவர்?
‘மெத்த வளருது மேற்கே, அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை; சொல்லவும் கூடுவதில்லை; அதைச் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை; மெல்லத் தமிழினி சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்’ என்கிறார். எவனோ ஒரு முட்டாப் பய இப்படிச் சொல்றான் என்கிறார். தொடர்ந்து... ‘ஆ... இந்த வசை எனக்கெய்திடலாமோ?’ என்றும் கேட்கிறார். ‘இப்படியான வசை மொழி என் காதுகளில் விழ வேண்டுமா?’ என்று ‘ஆ’ என அலறிக் கேட்கிறார். இதைத்தான், தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதியே சொல்லிவிட்டதாக, பாரதியின் மீது பழி போட்டுப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் பலரும்.
இதை அந்தக் கூட்டத்தில் என் பேச்சில் குறிப்பிட்டு, ‘நிருபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இது. யார் என்ன சொன்னார் என்பதை நன்றாகக் கவனியுங்கள். அதைத் திருத்தமாக, தெளிவாக எழுதுங்கள். இல்லையென்றால் ஒரு தலைமுறையே தப்பாகப் புரிந்துகொள்ளும்என்று விளக்கினேன்.
இனி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம்.
1) ‘ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது’ என்றால், அந்த நபர் இறந்துவிட்டார் என்றுதான் அர்த்தம் வரும். எனவே, ‘ஆட்டம் ஏன் அடங்கியிருக்கிறது?’ என்று எழுதுவதே சரி.
2) ‘இரை’ என்று குறிப்பிடுவது தவறு. தூக்குப் போடுவது அவரது தொழில். இரை என்றால், அவர் ஏதோ வஞ்சம் வைத்து இவரைக் கொன்றுவிட்டதாக விபரீத அர்த்தம் வரும்.
3) கடைசி சந்திப்பு என்றால், அந்தச் சந்திப்புக்குப் பின்பு இருவரில் ஒருவர் இறந்துபோய்விட்டார் என்று அர்த்தம் வரும். அப்படி இல்லை என்கிற நிலையில், இப்படிக் குறிப்பிடுவது தவறு. ‘அவர்கள் சந்தித்தது அதுதான் கடைசி முறை’ என்று சொல்லலாம்.
4) பரத்தை என்ற வார்த்தைக்கு ‘விலைமாது’ என்கிற பொருள் உண்டு. எனவே, ’கடைசியில், கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் ஒரு மூலையாகப் படுத்திருந்தான் பரத்; அவனை ஒருவழியாகக் கண்டுபிடித்தது போலீஸ்!’ என்று பிரித்து எழுதுவது நல்லது.
5) ‘அனைவரின் உடல்களும் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் மீட்கப்பட்டபோது, மிகவும் வருத்தமாக இருந்தது’ என்றால், காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்குமோ என்று ஒரு குதர்க்கமான அர்த்தம் வருகிறது. எனவே இங்கேயும், ‘அனைவரின் உடல்களும் சிறு காயம் கூட இல்லாமல் மீட்கப்பட்டன. இந்த விபத்து மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது’ எனப் பிரித்து எழுதுவதே சரி.
கடைசியாக...
‘என்னுடைய முதல் சிறுகதை 1978-ல் ஆனந்த விகடனில் வெளியானது.’
‘ஆனந்த விகடனில் என்னுடைய முதல் சிறுகதை 1978-ல் வெளியானது.’
இந்த இரண்டு வாக்கியங்களையும் கவனியுங்கள். இரண்டிலும் ஒரே விதமான வார்த்தைகள்தான் உள்ளன. ஆனால், இடம் மாறியுள்ளன. மற்றபடி, இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? தெரிந்தால் உடனே பின்னூட்டம் இடுங்கள். சரியாக விடை எழுதியவர்களின் பெயர்களை நானே குலுக்கிப் போட்டு, நானே தேர்ந்தெடுத்து, குறைந்தபட்சம் ரூ.80 மதிப்புள்ள விகடன் பிரசுர புத்தகம் ஒன்றை எனது பரிசாக அவருக்கு அனுப்பி வைப்பேன்.
.