
இவை எல்லாவற்றிலுமே மகிழ்ச்சி கிடைக்கிறது என்பது உண்மைதான். ஆனால், உண்மையான மகிழ்ச்சி என்பது, பிறருக்கு உதவி, அதற்கு அவர்கள் நமக்கு நெஞ்சு நெகிழ நன்றி தெரிவிக்கும்போது கிடைப்பதுதான் என்று எனக்குத் தோன்றுகிறது. இன்னும் சொல்லவேண்டுமானால், பிறருக்கு உதவும்போது 80 சதவிகிதம் மகிழ்ச்சியும், அதற்கு அவர்கள் நன்றி தெரிவிக்கும்போது மீதி 20 சதவிகித மகிழ்ச்சியும் சேர்ந்து பூரணத்துவம் பெறுகிறது.
இப்படி எழுதுவதனால், நான் ஏதோ ஓடி ஓடி பிறருக்கு உதவுகிறவன், சேவை மனப்பான்மையில் ஊறித் திளைக்கிறவன் என்று யாரும் தப்பாக நினைத்துவிட வேண்டாம். அப்படி இல்லை. என்னால் என்ன முடியுமோ அதைக் கண்டிப்பாக, தேவைப்படுகிறவர்களுக்குச் செய்து தருவேன். அவர்கள் கேட்கும் உதவி என்னால் செய்ய முடிவதாக இருந்தால், தட்டிக் கழிக்காமல், அதை நிறைவேற்றித் தர உண்மையாக முயற்சி செய்வேன். அவ்வளவுதான்!
இப்போது இதை எதற்காக எழுதுகிறேன் என்றால், இந்த ஒரே வாரத்திலேயே நான்கு உதவிகளைச் செய்த மன நிறைவு கிடைத்திருக்கிறது எனக்கு!
முதலாவது... நண்பரும் இயக்குநருமான சிம்புதேவன் ஒரு நபரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர் பற்றிய விவரங்கள் வேண்டும் என்றார். சிம்புதேவனுக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தினர் வீட்டில் அந்த நபரை மருமகனாக்கிக் கொள்ள விரும்புகின்றனர் என்றும், எனவே அந்த நபரைப் பற்றிய தகவல்கள் தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார். அந்த நபர் எங்கள் அலுவலகத்தோடு தொடர்புடையவர் ஆதலால், அவர் யார், எவர் என அவரைப் பற்றிய மேலதிக விவரங்கள் சேகரித்துச் சிம்புதேவனிடம் சொன்னேன். தவிர, அந்த நபரைப் பற்றி இன்னும் நன்கு தெரிந்த ஒரு நண்பரின் செல்பேசி எண்ணையும் கொடுத்து, அவரிடமும் விசாரித்துக் கொள்ளலாம் என்று சொன்னேன்.
மேலும், சிம்புதேவன் தனது ‘இரும்புக்கோட்டை முரட்டு சிங்கம்’ படத்தைப் பத்திரிகையாளர் சோ அவர்களுக்குப் போட்டுக் காண்பிக்க விழைந்தார். சோவிடம் ஒரு அப்பாயின்ட்மென்ட் வேண்டும் என விரும்பினார். அவரே நேரடியாகக் கேட்டிருந்தால், மாட்டேன் என்றா சொல்லியிருக்கப் போகிறார் சோ? இருந்தாலும், ஏனோ என்னைக் கேட்டார். நான் என் நண்பர் துக்ளச் சத்யா மூலமாக அதற்கு ஏற்பாடு செய்தேன்.
சந்திப்பு நடந்ததா, தான் விரும்பியபடி சிம்புதேவன் சோ அவர்களுக்குப் படத்தைப் போட்டுக் காண்பித்தாரா என்று தெரியாது.
இரண்டாவது... பழம்பெரும் எழுத்தாளர் மகரம் அவர்களின் புதல்வரும், என் 30 ஆண்டு கால நண்பருமான திரு.மார்க்கபந்து அவர்களுக்கு எழுத்தாளர் பிரேமா நந்தகுமார் என்பவரின் விலாசமும், தொலைபேசி எண்ணும் தேவைப்பட்டது. ஐம்பது, அறுபது வருடங்களுக்கு முன்பு மகரம் அவர்களைப் பற்றிய கட்டுரைகள் சிலவற்றை பிரேமா நந்தகுமார் ‘பாரத மணி’ என்னும் பத்திரிகையில் எழுதி வந்துள்ளாராம்.
பிரேமா நந்தகுமார் பற்றிப் பலரிடம் விசாரித்ததில், எழுத்தாளர் சாருகேசியிடம் லட்டு மாதிரி அவருடைய வீட்டு விலாசமும், தொலைபேசி எண்ணும் கிடைத்தது. அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் குமுதினி என்றொரு எழுத்தாளர் பல கதைகளையும் கட்டுரைகளையும் தமிழில் மொழிபெயர்த்து எழுதியுள்ளார். அவருடைய மருமகள்தான் இந்த பிரேமா நந்தகுமார் என்கிற தகவலும் கிடைத்தது. கிடைத்த விவரங்களை உடனே மார்க்கபந்துவுக்குச் சொன்னேன்.
மூன்றாவது... இயக்குநர் மணிரத்னம் அவர்களிடம் அசிஸ்டென்ட் இயக்குநராகப் பணியாற்றும் ஷாலினி, விகடன் அலுவலகத்துக்கு ஓர் உதவி கோரி வந்திருந்தார். அந்தக் காலத்தில் ஆனந்த விகடனில் ஓவியர் கோபுலு வரைந்த சில ஓவியங்கள் ஒரு ரெஃபரென்ஸுக்காக மணிரத்னத்துக்குத் தேவைப்பட்டுள்ளது. குறிப்பாக, சோழர் காலப் பெண்டிரின் ஓவியங்கள். 1958-59-ல் ஜெகசிற்பியன் எழுதிய தொடர்கதைகளான ஆலவாய் அழகன், திருச்சிற்றம்பலம் ஆகியவற்றுக்கு கோபுலு வரைந்த ஓவியங்கள் கொள்ளை அழகு. ஆனந்த விகடனில் ‘பொக்கிஷம்’ பகுதிக்காக அந்தக் கால விகடன் இதழ்களை அடிக்கடி புரட்டிக்கொண்டு இருப்பவன் நான் என்பதால், ஷாலினி கேட்ட கோபுலு படங்களை உடனடியாக என்னால் ட்ரேஸ்-அவுட் செய்து கொடுக்க முடிந்தது. ஒன்றிரண்டு படங்கள் என்றால், நானே பிரின்ட்-அவுட் எடுத்துக் கொடுத்திருப்பேன். ஆனால், ஷாலினி அந்த இரண்டு தொடர்கதைகளுக்கும் கோபுலு வரைந்திருந்த அத்தனைப் படங்களையும் ஒரு சி.டி-யில் காப்பி செய்து தரும்படி கேட்டார். அது என்னால் சாத்தியமில்லை என்பதால், இதழ் தேதிகளைக் குறித்துக் கொடுத்து, ஆனந்த விகடன் இணை ஆசிரியர் திரு. கண்ணன் மூலமாக சிஸ்டம் டிபார்ட்மென்ட்டில் பதிவு செய்துகொள்ளும்படி சொல்லி அனுப்பினேன்.
சுபா சமீபத்தில் தொடங்கியிருக்கும் ஒரு பதிப்பகத்தின் மூலமாக நாலைந்து புத்தகங்களை வெளியிட்டிருக்கிறார்கள். அவற்றில் ஒன்று, மகாபலிபுரம் பற்றிய புத்தகம் (மகாபலிபுரம் என்பது தவறு; மாமல்லபுரம் என்பதே சரி என்று விளக்கினார் திரு. இறையன்பு). இது வெறும் விளக்கக் கையேடு போல இல்லாமல், மகாபலிபுரத்துக்குச் சுற்றுலா வருபவர்களுக்குக் கூடவே ஒரு கைடு வந்து வழிகாட்டி, ஒவ்வொன்றையும் விளக்கிச் சொல்வது போல விரிவாகவும், சுவாரசியமாகவும் தகவல்கள் இடம்பெற்றுள்ள புத்தகம். இதில், கோட்டுச் சித்திரங்களை அருமையாக வரைந்து அசத்தியிருக்கிறார் ஓவியர் ஜெ.பி. தமிழ், இந்தி, ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது இந்தப் புத்தகம்.
திரு.இறையன்பு சுற்றுலாத் துறைச் செயலர் என்பதால், அவருக்கு இந்தப் புத்தகங்களை அளிக்க விரும்பி, அவரிடம் இது பற்றிப் பேச விரும்பினார்கள் சுபா. திரு.இறையன்புவிடம் இன்று காலை செல்பேசியில் தொடர்புகொண்டபோது, மாலை 5 மணிக்கு வருமாறு அழைத்தார். அதன்படியே எழுத்தாளர்கள் ‘சுபா’வை அழைத்துச் சென்று, இறையன்புவிடம் அறிமுகப்படுத்தினேன். அறிமுகப்படுத்தினேன் என்றால், ‘இவர்கள்தான் சுபா. இவர்கள் பெரிய எழுத்தாளர்கள். ஆயிரக்கணக்கான சிறுகதைகளையும், நூற்றுக்கணக்கான நாவல்களையும், சில திரைப்படங்களுக்குக் கதை, வசனமும் எழுதியிருக்கிறார்கள்’ என்று அல்ல. எழுத்தாளர்கள் ‘சுபா’வைத் தெரியாதவர்கள் இருக்க முடியுமா? திரு.இறையன்புவுக்கும் அவர்களைத் தெரிந்திருந்தது. என்ன... இவர்கள் ஒருவருக்கொருவர் பத்திரிகை எழுத்துக்கள் மூலமாக அறிந்திருந்தார்களே தவிர, நேரடி அறிமுகம் இல்லை. அவர்களின் சந்திப்புக்கு நான் ஒரு ஓடமாக இருந்தேன். அவ்வளவே!
நாலு பேருக்கு உதவ முடிந்ததில் மகிழ்ச்சி! அவற்றை இங்கே எழுதிப் பெருமைப்பட்டுக்கொண்டுவிட்டேன். ஆனால், என்னிடம் உதவி கோரி, நிறைவேற்ற இயலாமல் போனவை நாற்பதாவது இருக்கும். என்னிடம் வந்த அந்த நாற்பது கோரிக்கைகளில், எனக்குச் சற்றும் சம்பந்தம் இல்லாதவை, சாத்தியம் இல்லாதவை முப்பதாவது இருக்கும். மீதி, நான் உதவ முயன்றும், பல காரணங்களால் இயலாமல் போனவை.
உதாரணமாக, பழம்பெரும் தமிழறிஞர் மறைமலையடிகள் அவர்களின் மகன் வறுமைக்கோட்டின் கீழ் இருப்பதாகவும், தமிழக அரசாங்கத்தின் மூலமாகத் தன் குடும்பத்துக்கு ஏதேனும் நிதி உதவி பெற்றுத் தருமாறும் என்னிடம் சில மாதங்களுக்கு முன் கோரிக்கை வைத்தார். அவரைப் பற்றி ஜூனியர் விகடன் குழுவிடம் சொல்லி, அந்தப் பத்திரிகையில் ஒரு கட்டுரை வெளிவரச் செய்தேன். என்னால் முடிந்த உதவி அவ்வளவுதான்!
சென்ற வாரம் அவர் மீண்டும் என்னைத் தொடர்பு கொண்டு, தமிழக அரசு இதுவரை தன் குடும்பத்தைக் கண்டுகொள்ளவே இல்லை என்று வருத்தப்பட்டு, மீண்டும் நிதி உதவி கோரிக்கையை வைத்தார். “மன்னிக்கவும் ஐயா! இதில் நான் ஒன்றும் செய்வதற்கில்லை. நீங்கள் ஜூனியர் விகடனைத் தொடர்பு கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டேன்.
அதே போல், ஓவியர் கோபுலு கேட்ட ஓர் உதவி உள்பட இன்னும் பலவற்றை (நாற்பது கோரிக்கைகள் என்பது சும்மா ஒரு கணக்குதான். துல்லியமான புள்ளி விவரம் அல்ல) என்னால் நிறைவேற்றி வைக்க முடியவில்லை.
உதவி செய்யமுடிந்த விஷயங்களைப் பகிர்ந்துகொண்டு மகிழ்ச்சியும் பெருமிதமும் அடையும் அதே வேளையில், உதவி செய்ய இயலாமல் விட்ட விஷயங்களையும் பகிர்ந்துகொண்டு வருத்தமும் சிறுமையும் அடைவதுதானே முறை!
ஆனால் ஒன்று... உதவ இயலாமல் போன நாற்பது விஷயங்கள் தந்த வருத்தத்தை, உதவ முடிந்த நாலு விஷயங்கள் அறவே போக்கி, பெரிய மன நிறைவை அளித்திருப்பது உண்மை!
.