முப்பத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த ஒரு யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. உலக சாட்சியாக தமிழன் ஏமாளி, இளிச்சவாயன் என்பது ருசுப்படுத்தப்பட்டுவிட்டது. இங்கேயே கர்நாடகா, ஆந்திரா, கேரளா இவை கொடுக்கும் உள்குத்துகளையெல்லாம் தாங்கிக்கொண்டு, 'நான் ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாம்மா...' என்று வடிவேலு மாதிரி புலம்பிக்கொண்டு இருக்கிறான் தமிழன். இதோ இருக்கும் இலங்கை அந்நிய நாடாம். அதில் நாம் தலையிட முடியாதாம்!
இருக்கட்டுமே... அந்நிய நாடாகவே இருக்கட்டுமே! அதனால் என்ன?
பக்கத்து வீட்டில் ஒரு முரடன் தன் பெண்டாட்டியைப் போட்டு அடித்தால், அவள் கதறல் தெரு முழுக்க ஒலித்தால், "ஏண்டா பாவி, அவளை இப்படிப் போட்டுக் கொல்றே?" என்று கேட்கமாட்டோ மா நாம்? நமக்கென்ன போச்சு என்று இருந்துவிடுவோமா? அதுதான் மனிதப் பண்பா?
இலங்கைப் பிரச்னை இன்று நேற்று முளைத்ததல்ல! என்றைக்கு இந்தியாவும் இலங்கையும் பிரிட்டிஷாரிடமிருந்து சுதந்திரம் பெற்றனவோ, அன்றிலிருந்தே உருவான பிரச்னை.
சுமார்
75 ஆண்டுகளுக்கு முன்பு, இலங்கைக்குப் போனார் மகாத்மா காந்தி. 'பாலில் சர்க்கரை கலந்தது போல இங்கே சிங்களர்களோடு தமிழர்களும் கருத்தொருமித்து இணைந்து வாழ்வார்கள்' என்று தன் ஆசையை வெளிப்படுத்தினார். மகாத்மா கண்ட மற்ற கனவுகள் போலவே, அவரது இந்த ஆசையும் நிராசையாகிவிட்டது.
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பல தமிழ் மன்னர்கள் ஈழத்தில் ஆட்சி புரிந்திருக்கிறார்கள்; சிங்கள அரசர்களின் உறவினர்களாகவும் ஆகியிருக்கிறார்கள் என்கிறது வரலாறு. யாழ்ப்பாணம், மாவிட்டபுரம், மாத்தை, மட்டக்களப்பு, நல்லூர், வெள்ளவத்தை, கண்டி, கதிர்காமம் இவை எல்லாம் சிங்களப் பெயர்கள் அல்ல; சுத்த தமிழ்ப் பெயர்கள்தான்.
அதன் பின் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகுதான், இந்தியாவின் வட பகுதியில் உள்ளவர்கள் இலங்கைக்குப் போனார்கள். அங்கே புத்த மதம் பரவியது அதன்பிறகுதான். அவர்களே சிங்களர்களாகப் பெருகினார்கள். 'அன்புதான் இன்ப ஊற்று; அன்புதான் உலக ஜோதி; அன்புதான் உலக மகா சக்தி' என்று போதித்த புத்தரின் கொள்கையைப் பரப்ப, சாம்ராட் அசோகனின் மகனும் இலங்கை சென்றான்.
16-ம் நூற்றாண்டில், இலங்கையில் ஐரோப்பியர்கள் குடியேறினார்கள். பின்னர் போர்ச்சுகீசியர் வந்தனர். அவர்களுக்குப் பின் டச்சுக்காரர்கள். கடைசியாக ஆங்கிலேயர்கள் இலங்கையை அடிமைப்படுத்தி ஆட்சி செய்யத் தொடங்கினார்கள்.
அப்போது வெறும் காடாக இருந்தது இலங்கை. அங்கே தேயிலைத் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், தென்னந்தோப்புகளை உருவாக்கி லாபம் பெற ஆசைப்பட்ட ஆங்கிலேய தோட்ட முதலாளிகள் தமிழ்நாட்டிலிருந்து ஆயிரக்கணக்கில் ஏழைத் தமிழர்களை இலங்கைக்கு வரவழைத்து, அடிமைகளாக நடத்தி, கசக்கிப் பிழிந்து வேலை வாங்கி, அவர்களின் உழைப்பில் இலங்கையை வளம் மிக்கதாக மாற்றி, சொர்க்கபுரியாக்கினர்.
அப்படிப் பாடுபட்ட தமிழர்களைத்தான், 'இங்கே உனக்கு உரிமையில்லை' என்று விரட்டியது சிங்கள அரசு. அவர்களின் உடைமைகளைப் பறித்து, நாட்டை விட்டே துரத்தத் துடித்தது.
இலங்கை பிரிட்டிஷார் ஆட்சியின் கீழ் இருந்தவரையில் ஆங்கிலம் மட்டும்தான் அரசாங்க பாஷையாக இருந்தது. ஆனாலும் சிங்களம், தமிழ் இரண்டுமே இரண்டு கண்கள் போல் தாய்மொழியாகத்தான் இருந்தன. 1948-ல் பிரிட்டிஷார் போன பிறகு, இலங்கை சுதந்திரம் அடைந்ததும், சிங்களத்தை மட்டும்தான் அரசியல் மொழியாக்குவோம், தமிழுக்கு இங்கே இடமில்லை என்று கூறி, அதைச் சட்டமாகவும் ஆக்கிவிட்டனர் சிங்களர்கள்.
அதிலிருந்துதான் பிரச்னை ஆரம்பித்தது. அந்தச் சட்டம் நிறைவேறிய நாளில் தமிழர்கள் தங்கள் மொழி உரிமையைக் கோரிக் கிளர்ச்சி செய்தார்கள். அதைப் பொறுக்க முடியாத சிங்கள மொழி வெறியர்கள் தமிழ் மக்களைப் பலவிதங்களிலும் துன்புறுத்தத் தொடங்கினார்கள். மொழிவெறி பிடித்தலைந்த சிங்களர்களுக்கு அன்பைப் போதித்து நெறிப்படுத்த வேண்டிய புத்த பிட்சுக்களும் அவர்களோடு கூட்டுச் சேர்ந்துகொண்டு, தமிழர்களின் உரிமைகளை மறுத்தார்கள். சிங்களமே அறியாத, தமிழ் மொழி மட்டுமே தெரிந்த தமிழர் வாழும் பகுதிகளில் கூட மணியார்டர் தாள்கள், கார் நம்பர்கள் எல்லாம் சிங்கள மொழியில்தான் இருக்கவேண்டும் என்று கட்டாயப்படுத்தியது சிங்கள அரசாங்கம்.
1954-ல் பாரதப் பிரதமர் நேருஜியை வந்து சந்தித்தார் இலங்கைப் பிரதமர் சர் ஜான் கொத்தலாவலை. அன்றைக்கே ஏதோ குடும்பப் பிரச்னையை ஒன்றாக உட்கார்ந்து பேசித் தீர்த்துவிடுவது போல இரு தலைவர்களும் பேசி, ஒரு ஒப்பந்தம் செய்துகொண்டார்கள். ஆனால், பின்னர் பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், "இந்த இலங்கை&தமிழர் பிரச்னை 2000 ஆண்டுகளுக்கு முன் விஜய மன்னன் இந்தியாவிலிருந்து வந்து இலங்கையில் குடியேறியதிலிருந்தே இருந்து வருகிறது. அதை அத்தனைச் சுலபத்தில் தீர்த்துவிட முடியாது" என்று ஒரு போடு போட்டார் ஜான் கொத்தலாவலை. அவர்கள் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திலும் சட்ட ரீதியாக இலங்கைத் தமிழரின் அரசியல் உரிமைகள் பற்றிய ஷரத்துக்கள் அத்தனை திருப்தி தருவதாக இல்லை. பல அடிப்படைப் பிரச்னைகளுக்கான தீர்வுகள் அதில் இல்லை. இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை மனுக்களை இரண்டு வருஷத்திற்குள் பரிசீலித்து, ஒரு நல்ல முடிவு சொல்வதாகச் சொல்லிவிட்டுப் போனார் கொத்தலாவலை. ஆனால், எந்தவொரு நல்ல முடிவும் எடுக்கப்படவில்லை. சிங்களரின் அட்டகாசம் நாளுக்கு நாள் நீடித்துக்கொண்டேதான் இருந்தது.
அவர்களின் வன்முறையை எதிர்த்து, காந்திஜியின் அகிம்ஸா வழியில் அறப்போர் தொடங்கினார்கள் ஆறுமுக நாவலர் போன்ற தமிழ்ப் பெரியார்கள்.
அறப் போராட்டத்தின் முதற்படியாக, மோட்டார் வாகனங்களில் நம்பர் பிளேட்டுகள் சிங்கள மொழியில்தான் எழுதப்பட வேண்டும் என்ற சட்டத்தை எதிர்த்து,
1957-ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல், பிடிவாதமாகத் தமிழிலேயே எழுதத் தொடங்கினார்கள்.
இந்தப் போராட்டத்தில் வன்னியசிங்கம், பொன்னம்பலம், செல்வநாயகம், தொண்டமான், அண்ணாமலை, டாக்டர் நாகநாதன், கந்தய்யா என அத்தனைத் தமிழர்களும் ஒருமித்த கருத்தோடு ஒன்று திரண்டார்கள்.
இது அன்றைய ஸ்ரீலங்கா பிரதமர் பண்டாரநாயகாவுக்குப் பதைபதைப்பை ஏற்படுத்தியது. ஒரு வட்ட மேஜை மாநாடு கூட்டி, இது பற்றிப் பேசுவோம் என்றார். 'வெறுமே மொழிப் பிரச்னையைப் பற்றி மட்டும் இதில் பேசினால் போதாது; தமிழர்களுக்கு வாக்குரிமையோடு சம அந்தஸ்து கொடுப்பது பற்றியும் இதில் முடிவு செய்யவேண்டும்' என்ற நிபந்தனையோடு அதில் கலந்துகொண்டார்கள் தமிழர்கள். ஆனால், அன்றைக்கும் தமிழர்களின் தலையில் மிளகாய்தான் அரைக்கப்பட்டது.
அதற்கு முன்பே லண்டனில் நடந்த பேச்சு வார்த்தையில், இலங்கையில் இருக்கும் மொத்தம் எட்டரை லட்சம் இந்தியர்களில் நாலரை லட்சம் பேருக்கு உடனடியாகக் குடியுரிமை வழங்குவதென்றும், இரண்டரை லட்சம் தமிழர்களுக்கு இலங்கையில் நிரந்தரமாக வசிக்க சட்ட பூர்வமாக அனுமதி அளிப்பது என்றும், மீதமுள்ள ஒன்றரை லட்சம் தமிழர்களை மட்டும் வெளியேற்றுவது என்றும் அப்போதைய இலங்கைப் பிரதமர் டட்லி சேன நாயகா வாக்கு கொடுத்திருந்தார். அது காற்றோடு போச்சு!
நேருஜி-கொத்தலாவலை போட்டுக்கொண்ட ஒப்பந்தத்திலும் அது பற்றிய தகவல் எதுவும் காணோம். எனவே, இந்த ஒப்பந்தம் தங்களுக்கு அதிருப்தியை அளிப்பதாக நேருஜிக்கு ஒரு மகஜர் அனுப்பியிருந்தார்கள் இலங்கைத் தமிழ்ப் பெரியவர்கள். பின்னர், திருவனந்தபுரத்தில் வைத்து அதிருப்தியாளர்களைச் சந்தித்த நேருஜி, இரு நாட்டின் நல்லுறவை மனதில் கொண்டே இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்றும், 'ஒருவரோடு ஒருவர் வீண் தகராறு செய்துகொண்டு இருந்தால் எந்த முடிவும் கிடைக்காது; அதனால் இந்தியா, இலங்கை இரண்டு நாட்டுக்கும் நல்லதல்ல' என்று பேசி, சமாதானப்படுத்திவிட்டுப் போனார்.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த இந்தப் பிரச்னையில், இறுதி வரையில் தமிழர்களுக்கான உரிமை கிடைக்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை.
எனக்குத் தெரிந்து,
83-ல் ஜெயவர்த்தனே ஆட்சிக் காலத்தில்தான், இலங்கைத் தமிழர்கள் மீது கற்பனை கூடச் செய்து பார்க்க முடியாத மிகக் கொடூரமான வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது. கணவனின் கண் எதிரே அவன் மனைவியையும், தகப்பனின் கண் எதிரே அவன் மகளையும் ஒரு மானை ஏழெட்டு வேங்கைகள் வெறி கொண்டு வேட்டையாடுவது போல இலங்கை ராணுவத்தினர் காம வேட்டை ஆடிக் கடைசியில் கொன்றும் போட்டனர். குழந்தைகளும் ஈவு இரக்கமின்றிக் கொல்லப்பட்டன.
அந்தக் கொடுமைகளையெல்லாம் எதிர்த்து அன்றைக்கும் கடையடைப்புகள், உண்ணாவிரதங்கள் எல்லாம் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டன. கவனிக்கவும், தமிழ்நாட்டில் மட்டும்தான். மற்ற மாநிலங்களோ, மத்திய அமைச்சரவையோ இதில் தங்களுக்குச் சம்பந்தம் இல்லை என்பது போல்தான் நடந்துகொண்டன.
வெறும்
15 மைல் தள்ளி இருக்கும் இலங்கையில் நடந்த இந்த இனப் படுகொலையைத் தட்டிக்கேட்கக் கையாலாகாமல்,
1,500 மைல்களுக்கு அப்பால் இருக்கும் டெல்லியின் கடைக்கண் பார்வைக்காக அன்றும் நாம் காத்திருந்தோம். அவர்களும் இன்றைக்குச் சொன்னது மாதிரியே அன்றைக்கும், "ஆமாம், இலங்கைப் பிரச்னை கவலையளிப்பதாக இருக்கிறது. விசாரிக்க வெளியுறவு அமைச்சரை அனுப்பியிருக்கிறோம்" என்று மழுப்பல் பதில்தான் சொன்னார்கள்.
அன்றைய வெளியுறவு அமைச்சரான நரசிம்மராவ் போனார்; பேசினார். என்ன பேசினார், ஏது பேசினார், என்ன உறுதிமொழி பெற்று வந்தார் என்று யாருக்கும் தெரியாது. இன்றைக்கும் பிரணாப் முகர்ஜி அதைத்தானே செய்தார்?
இலங்கைத் தமிழர்களின் உரிமையை மீட்டுத் தருவதற்காகத் தோன்றிய பல இயக்கங்களில் ஒன்றுதான் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கம். நோக்கம் என்னவோ நியாயமானதுதான். ஆனால், சகோதர தமிழர் இயக்கத் தலைவர்களுடன் கலந்து பேசி, அவர்களின் ஒத்துழைப்பையும் பெற்று, வலுவான இயக்கமாக மாறி சிங்களை அரசை எதிர்ப்பதை விட்டுவிட்டு, அமிர்தலிங்கம், யோகேஸ்வரன் முதலான சக தமிழர்களையே கொன்று, பின்னர் சென்னை கோடம்பாக்கத்தில் பவர் அப்பார்ட்மென்ட்ஸில் தங்கியிருந்த பத்மநாபா உள்ளிட்ட
15 தமிழ்த் தலைவர்களைக் கொன்று, கடைசியாக பாரதப் பிரதமர் ராஜீவையும் கொன்று, இந்தியாவின் வெறுப்பைச் சம்பாதித்துக் கொண்டது பிரபாகரன் செய்த மிகப் பெரிய தவறு.
இலங்கை அப்பாவித் தமிழர்கள் வேறு, விடுதலைப் புலிகள் வேறு என்கிற மன நிலைக்கு மத்திய அரசு மட்டுமின்றி, தமிழகத் தமிழர்களும் தள்ளப்பட்டது புலிகளின் இந்தத் தவறான போக்கினால்தான்.
நடுவில் புலிகளின் கை சில காலம் ஓங்கியிருந்தது. அந்தச் சமயத்தில், 'இது சகோதர யுத்தம். நாங்களே தீர்த்துக் கொள்வோம்' என்றார் பிரபாகரன். பின்னர் இலங்கை அரசு புலிகளை அடக்கத் திராணியின்றி இந்தியாவின் உதவியைக் கேட்டது. ராணுவமும் அங்கே போய் புலிகள் மீது போர் தொடுத்து, அவப் பெயர் சம்பாதித்துக்கொண்டு திரும்பியது.
ஆக, இந்தப் பிரச்னையில் என்னென்னவோ குழப்பங்கள், திருப்பங்கள் எல்லாம் நிகழ்ந்து, கட்டக் கடைசியாக தங்களுக்காகக் குரல் கொடுக்க புலிகள் அமைப்பு மட்டுமே இருக்கிறது என்ற நிலைக்கு வந்தார்கள் இலங்கை அப்பாவித் தமிழர்கள். இப்போது புலிகளும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டார்கள்.
மிச்சமிருக்கும் இலங்கைத் தமிழர்களின் நிலை என்ன? அவர்களுக்குரிய நியாயமான அந்தஸ்தைக் கொடுத்து, உரிமைகளைக் கொடுத்து, மதிப்பாக வாழ வழி செய்யுமா இலங்கை அரசு?
இந்தியாவிலும் இதர நாடுகளிலும் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளின் நிலை என்ன? அவர்களைத் திரும்ப அழைத்துக் கொள்ளுமா இலங்கை அரசு? இந்தியாவில் தங்கியிருக்கும் அகதிகள் அங்கே திரும்பப் போகாவிட்டால், அவர்களைச் சுமையாகக் கருதுமா இந்திய அரசு?
ஒன்றின் முடிவு, மற்றொன்றின் தொடக்கம். இலங்கை யுத்தத்தின் முடிவு, மிச்சமிருக்கும் இலங்கைத் தமிழர்களின் ஒளிமயமான எதிர்காலமாக அமையுமா? அல்லது, 'புலிகளின் கை ஓங்கியிருந்த காலத்திலேயே உன்னைக் கேட்க நாதியில்லை. இனியாவது... உனக்குச் சம அந்தஸ்து தருவதாவது!' என்று இலங்கை அரசு கொக்கரித்து, அவர்களைக் கொத்தடிமையாக நடத்தத் தொடங்குமா?
யாரை நம்புவது, எதை நம்புவது, எம் எதிர்காலம் என்ன என்று தெரியாமல் நிர்க்கதியற்று நிற்கும் இலங்கைத் தமிழர்களின் நிலை கண்களில் நீரை வரவழைப்பதாக இருக்கிறது.
இந்தியா அவர்களுக்காக என்ன செய்யப்போகிறது?
அட, என்னவோ செய்துகொள்ளட்டும் என்று நாம்பாட்டுக்கு 'மானாட, மயிலாட', 'எல்லாமே சிரிப்புதான்' எல்லாம் பார்த்துக்கொண்டு இருக்கலாம். ஐ.பி.எல் கிரிக்கெட் பார்த்து மகிழலாம். 'அடச்சே! இந்த கொல்கத்தா அணி மட்டும் விட்டுக் கொடுத்திருந்தால், நம்ம சென்னை அணி செமி ஃபைனல்ஸ் போயிருக்குமே' என்று அங்கலாய்க்கலாம்.
நம்மால் முடிந்தது அவ்வளவுதான்!