உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

வில்லன்களை ஹீரோவாக்கியவர்!

 

ராமசாமி சுப்பிரமணிய லட்சுமி நரசிம்மன் என்றால் புரியாது; ஆர்.எஸ்.மனோகர் என்றால் சட்டென்று புரியும்.

தமிழகத்தில் இதுவரை இரண்டே இரண்டு பேரின் குறிப்பிட்ட இரண்டு நாடகங்கள் மட்டுமே மூவாயிரம் முறைக்கு மேல் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுச் சாதனை படைத்திருக்கின்றன. ஒன்று – எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக் கண்ணீர்’. மற்றொன்று – ஆர்.எஸ்.மனோகரின் ‘இலங்கேஸ்வரன்’.

‘மனோகர்’ என்றால் சட்டென்று என் நினைவுக்கு வருவது, அகத்திய முனிவருடன் இலங்கேஸ்வரன் கலந்துகொள்ளும் போட்டிப் பாடல் காட்சிதான். ‘எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்...’ என்று கம்பீரமும் மிடுக்குமாக என் அபிமான பாடகர் டி.எம்.எஸ். பின்னணி கொடுக்க, அலங்காரபூஷிதராக அமர்ந்து, வீணையை மீட்டிப் பாடும் மனோகரின் உடல்மொழி அவ்வளவு அழகு!

சென்னையில் தபால் இலாகாவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் மனோகர். எழும்பூர் டிரமாடிக் சொஸைட்டி நாடகங்களிலும், வி.சி.கோபாலரத்னம், தோட்டக்கார விசுவநாதன், சேஷாத்ரி ஆகியோர் நடத்திய நாடகங்களிலும் அமெச்சூர் நடிகராக நடித்துக் கொண்டிருந்தார். 1950-ம் வருஷம் ‘ராஜாம்பாள்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் மனோகர். “என் நாடகத் திறமையைப் பார்த்தெல்லாம் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை; அப்போதெல்லாம் சூட் அணிந்து, கிராப் தலையுடன்கூடிய நடிகர்கள் கிடைப்பது அபூர்வமாக இருந்தது. ஆகவேதான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்போது ஒரு நாடகத்தில் ‘மனோகர்’ என்னும் கதாபாத்திரத்தில் நான் நடித்துவந்ததால், அதே ‘மனோகர்’ என்ற பெயரையே சினிமாவிலும் எனக்குச் சூட்டிவிட்டார்கள்” என்று தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்வார்.

ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த இவரைத் தமது ‘அதிசயப் பெண்’ படத்தில் முதன்முதலாக வில்லன் ஆக்கியவர் எம்.வி.ராமன்.

ஆனந்த ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு துறையூர் மூர்த்தி எழுதிய நாடகம்தான் ‘இலங்கேஸ்வரன்’. “இலங்கேஸ்வரனுக்குரிய கம்பீரமான உடல்வாகு எனக்கு இல்லை. அதனால் இது வேண்டாம்” என்று முதலில் மறுத்துவிட்டார் மனோகர். துறையூர் மூர்த்திதான் மனோகரை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தார். ஆனால், தமிழ்நாட்டில் இந்த நாடகத்துக்கு பலத்த எதிர்ப்பு. சபாக்கள் இதற்கு சான்ஸ் தர மறுத்தன. ‘சரி, இதை விட்டுவிட்டு அடுத்த காரியம் பார்க்கலாம்’ என்ற மனநிலையில் இருந்தபோதுதான் இலங்கையில் இதை நடத்தச் சொல்லி அழைப்பு வந்தது. தன் ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ குழுவுடன் கிளம்பிச் சென்றார் மனோகர்.

இலங்கையில் இந்த நாடகம் சக்கைப்போடு போட்டது. அதன்பின் தமிழ்நாட்டிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டது. மூதறிஞர் ராஜாஜியை இந்த நாடகத்தைக் காணச் செய்ய வேண்டும் என்பது மனோகரின் விருப்பம். ஆனால், ராஜாஜியோ “ராவணனைப் போற்றும் இந்த நாடகத்தைப் பார்க்க நான் விரும்பவில்லை” என்று மறுத்துவிட்டார். மிக வருத்தப்பட்ட மனோகர், தன் நாடக ஸ்க்ரிப்டை காஞ்சி மகா பெரியவரிடம் கொண்டு போய்க் கொடுத்து, அவரின் ஆசிகளைக் கோரினார். பெரியவருக்கு மொத்த நாடக ஸ்க்ரிப்டையும் வாசித்துக் காண்பித்தார். “இதில் ராமனை எந்த இடத்திலும் இழிவுபடுத்தவில்லையே… நாடகமும் நல்ல முறையில்தானே எழுதப்பட்டிருக்கிறது! தாராளமாக நடத்தலாம்” என்று மனம் குளிர ஆசீர்வதித்தார் காஞ்சி மகான். அதன்பின் புத்துணர்ச்சி பெற்று, தமிழகமெங்கும் ‘இலங்கேஸ்வரன்’ நாடகத்தை மேடையேற்றி, வெற்றி மேல் வெற்றி பெற்றார் மனோகர்.

‘இலங்கேஸ்வரன்’ தந்த வெற்றியில் சூரபத்மன், நரகாசுரன், சிசுபாலன், இந்திரஜித் என புராண வில்லன்களையெல்லாம் கதாநாயகனாக்கி மேடையேற்றி அழகுபார்த்தவர் மனோகர்.

நாடக மேடையிலேயே பெரிய யானையைக் கொண்டு வருவது, சுழலும் மேடை அமைத்து, நொடிக்கும் குறைவான நேரத்தில் அரங்க அமைப்பை மாற்றுவது எனப் பல புதுமைகளைச் செய்திருக்கிறார் மனோகர். இவரின் நாடகத்தில் செய்யப்பட்ட தந்திரக் காட்சிகள் எல்லாம் அவரின் மூளையில் உதித்த ஐடியாக்கள்தான்!

மற்ற நாடகக் குழுக்களைப்போல் இல்லை மனோகரின் குழு. பல ஒழுக்கக் கட்டுப்பாடுகள் உண்டு. மாலை 6:30-க்கு நாடகம் தொடங்கிவிடும் என்றால், சரியாக 6:30-க்கு பெல் அடிக்கப்பட்டுவிடும். எந்தப் பிரபலத்தின் வருகைக்காகவும் காத்திருப்பது கிடையாது. அதேபோல் நாடகத்தில் நடிக்கும் பெண்களிடம் யாரும் நாடக ஸ்க்ரிப்டைத் தவிர வேறு பேச்சுகள் எதுவும் பேசக் கூடாது. புகை, மது அருந்திவிட்டு வரக்கூடாது. தவிர, குழுவில் உள்ள அனைவருக்கும் யூனிஃபார்ம் உண்டு. வெளியூரில் நாடகம் நடத்தப் போகும்போதெல்லாம் ரயிலில் இந்த யூனிஃபார்ம் அணிந்து, ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ என்னும் பாட்ஜையும் கட்டாயம் அணிந்துதான் பயணம் செய்ய வேண்டும்.

நாடகக் கலைக்கு மனோகர் செய்த சேவை அளப்பரியது. ‘நாடகக் காவலர்’ என்னும் பட்டத்துக்கு மிகப் பொருத்தமான ஆர்.எஸ்.மனோகரின் 15-வது நினைவு நாள் இன்று.

 – 10.01.2021

0 comments: