உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

விண்ணோடும் முகிலோடும் விளையாடிய குரல்!

 

ந்தத் திரைப் படத்தையும் அதிகபட்சம் இரண்டு தடவைக்கு மேல் பார்த்திராத நான் இருபது தடவைக்கும் மேல் தியேட்டருக்குச் சென்று, பார்த்து ரசித்த படங்கள் மூன்றே மூன்றுதான். ராஜபார்ட் ரங்கதுரை, கௌரவம் மற்றும் ரத்தக் கண்ணீர்.

‘குற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி கொள்வதென்பதேது...’ என்ற பாடல் காட்சியில் சி.எஸ்.ஜெயராமனின் குரலும் எம்.ஆர்.ராதாவின் குரலும் பாடலும் வசனமுமாகப் பின்னிப் பிணைந்து செய்யும் அற்புத ஜாலம், இதுவரை நான் வேறெந்தப் படத்திலும் பார்த்திராத ஒன்று. ரத்தக் கண்ணீர் படத்துக்கு இசையும் சி.எஸ்.ஜெயராமன்தான்.

நடிகர் திலகம் சிவாஜியின் முதல் படம் ‘பராசக்தி’யில் ‘கா...கா...கா...’ என்று பாடத் தொடங்கியது முதல், அவருக்கு நிறைய படங்களில் பின்னணி பாடியுள்ளார் சி.எஸ்.ஜெயராமன். ‘காவியமா, நெஞ்சின் ஓவியமா...’ பாடல் அவ்வளவு அழகு! ‘புதையல்’ படத்தில் ‘விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே..’ பாடலை ரசிக்காதவர்தான் யார்? ‘சம்பூர்ண ராமாயணம்’ படத்தில் ராவணனுக்கு சி.எஸ்.ஜெயராமன் பாடும் ‘சங்கீத சௌபாக்கியமே’ பாடல் அவ்வளவு மிடுக்காக, கம்பீரமாக இருக்கும்.

பின்னாளில் இவரின் குரலில் ‘ஆனந்தத் தேன்காற்று தாலாட்டுதே’ என்று பாடி அசத்தினார் மலேசியா வாசுதேவன்.

குழந்தையாக இருந்தபோதே, அதாவது தன் மூன்றாவது வயதிலேயே ஸ்வரம் பாடத் தொடங்கியவர் சி.எஸ்.ஜெயராமன். தமிழ் சினிமாவில் தானே பாடி, கதாநாயகனாக நடித்த முதல் நடிகரும் இவர்தான். படம்: கிருஷ்ண லீலா. இந்தப் படம் 1934-ல் வெளியானது. இந்தப் படத்தில் நடிக்கும்போது சி.எஸ்.ஜெயராமனுக்கு 16 வயதுதான். எம்.கே.டி. பாகவதரின் முதல் படமான ‘பவளக்கொடி’ வெளியானதும் அதே ஆண்டுதான். பாடலுக்குப் புகழ் பெற்ற எம்.கே.டி. பாகவதரே சில காலம் சி.எஸ்.ஜெயராமனிடம் பாட்டு கற்றுக் கொண்டிருந்திருக்கிறார்.

மிருதங்கம், கடம், கஞ்சிரா என ஜெயராமனுக்குப் பல தாள வாத்தியங்கள் வாசிக்கத் தெரியும். ஆர்மோனியமும் இசைக்கத் தெரியும்.

தமிழ்நாடு அரசு இசைக்கல்லூரியின் கௌரவ இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார் இவர். அப்போது, உப வாத்தியங்களாக ஒதுக்கப்பட்டிருந்த கஞ்சிரா, கடம், மோர்சிங் போன்றவற்றுக்கு சம அந்தஸ்து கொடுத்து, அவற்றை போதிக்க ஆசிரியர்களையும் நியமித்து, அந்த வாத்தியங்களைப் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ரூ.100 உதவித் தொகை வழங்கவும் ஏற்பாடு செய்தவர் சி.எஸ்.ஜெயராமன்.

இவர் ஒரு சிறந்த கார் மெக்கானிக் என்கிற தகவல் பலருக்கு ஆச்சரியம் தரலாம். அந்தக் காலத்தில் கார் வொர்க் ஷாப் வைத்து நடத்தியிருக்கிறார். அறிஞர் அண்ணா தன் காரை இவரிடம்தான் ரிப்பேர் செய்யக் கொடுப்பார். ‘எனக்கு சங்கீதத்தில் பத்துதான் தெரியும்; ஆனா, காரைப் பத்தி தொண்ணூறு தெரியும்’ என்பார் சி.எஸ்.ஜெயராமன்.

டேபிள் டென்னிஸ் விளையாட்டிலும் கெட்டிக்காரர் இவர். 1940-42-ல் இந்தியாவில் டேபிள் டென்னிஸ் சாம்பியன் தர வரிசையில் இரண்டாவது இடத்தில் இருந்திருக்கிறார். அதேபோல், சிறந்த கேரம் ஆட்டக்காரரும்கூட. 1938-40-களில் கேரம் ஆட்டத்தில் சென்னை சாம்பியனாக இருந்திருக்கிறார். கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒருமுறை, சி.எஸ்.ஜெயராமனின் வயதையொத்த ஒரு வாலிபரை அழைத்து வந்து, ‘இவரை நீ ஜெயித்துக் காட்டு பார்க்கலாம்’ என்று அந்த வாலிபரிடம் சவால் விட்டிருக்கிறார். ஆனால், அவரால் கேரம் விளையாட்டில் சி.எஸ்ஸை ஜெயிக்க முடியவில்லை. அவர் வேறு யாருமல்ல, எம்.ஜி.ஆர்தான்.

‘கலைஞன்’ என்ற பத்திரிகையின் ஆசிரியராகவும் சில காலம் இருந்திருக்கிறார் சி.எஸ்.ஜெயராமன். சிதம்பரம் கோயில் விசேஷத்தில் தொடர்ந்து 12 மணி நேரம் பாடியிருக்கிறார். நடிகர் தங்கவேலு வீட்டு நவராத்திரி விசேஷத்தில் தொடர்ந்து 9 மணி நேரம் பாடியிருக்கிறார்.

சி.எஸ்.ஜெயராமனுக்குக் கலைஞர் மு.கருணாநிதி மைத்துனர் முறை. சி.எஸ்.ஜெயராமனின் சகோதரி பத்மாவதிதான் கலைஞரின் முதல் மனைவி. அது மட்டுமல்ல, கலைஞரின் மூத்த மகன் மு.க.முத்துவுக்குதான் தன் மகள் சிவகாமசுந்தரியைத் திருமணம் செய்து கொடுத்தார் சி.எஸ்.ஜெயராமன்.

அவரின் கடைசி காலம் மிகத் துயரமானது. ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டார். பார்வை பறி போனது. வறுமை சூழ்ந்தது. சென்னை, வில்லிவாக்கத்தில் ஒரு குறுகலான சந்தில் இருந்த, தன் இரண்டாவது மகள் கங்கைவல்லியின் மிகச் சிறிய வீட்டில்தான் வாழ்ந்து மறைந்தார் அந்த இசைச்சித்தர். அவரின் பிறந்த நாள் இன்று.

தன்னைப் பார்க்க வருபவர்களிடமெல்லாம் சி.எஸ்.ஜெயராமன் மறக்காமல் சொல்லும் புத்திமதி இதுதான்... “யாரையும் நம்பாதே! உன் எதிர்காலத்தை யோசி! உன் கையே உனக்கு உதவி!”

அவர் கடைசியாகப் பாடிய சினிமாப் பாடலும் இந்த புத்திமதியைத்தான் போதிக்கிறது. 1964-ல் வெளியான ‘தர்மங்கள் சிரிக்கின்றன’ படத்தில், எம்.ஆர்.ராதாவின் அன்புக்காகப் பாடிக் கொடுத்த பாடல் அது...

‘போடா உலகத்தைப் புரிஞ்சுக்க, புத்தியிருந்தா பொழைச்சுக்க..!’

 – 6.01.2021

 

 

0 comments: