உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

கொட்டாங்கச்சிக்குள் குதிரை!

 

ல ஆண்டுகளுக்கு முன் – டி.வி. தோன்றி ‘சன்’ தோன்றாக் காலத்துக்கு முன் தோன்றிய ‘பொதிகை’யில் ஒரு கலை நிகழ்ச்சி என்னை வெகுவாகக் கவர்ந்தது. அந்த நிகழ்ச்சியை வழங்கிய மனிதரின் வயிறும் மீசையும் பெரிதாக இருந்தன.

அவர் கையில் வழுவழுவென்று தேய்க்கப்பட்ட ஒரு கொட்டாங்கச்சி இருந்தது. “‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா, நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா... பாடலை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள்தானே, அதில் குதிரை ஓடும் சத்தம் கேட்டதல்லவா... அந்தக் குதிரை இந்தக் கொட்டாங்குச்சிக்குள்ளிருந்துதான் ஓடியது. குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவது என்பார்களே, அது மாதிரி நான் இந்தக் கொட்டாங்கச்சிக்குள்தான் குதிரை ஓட்டினேன்” என்றவர், அதன்மீது தன் விரல்களால் தாளம் போட ஆரம்பித்தார். அவ்வளவுதான்... குதிரை ‘டக்... டக்...’ என்று ஓடத் தொடங்கிவிட்டது. தொடர்ந்து, அது சிட்டாகப் பறந்தது. பின்பு வேகம் குறைந்து நிற்பதுபோல் மெதுவாக அடியெடுத்து வைத்தது. ஒரு சாதாரண குதிரை ஓட்டமே காதுகளுக்கு அவ்வளவு அற்புதமான விருந்தாக இருந்தது.

அடுத்து அந்த மனிதர் மரம் அறுக்கும் வாளை எடுத்தார். அதன் பிடியை வலுவாகப் பிடித்துக் கொண்டார். இந்த வாளை வைத்து என்ன செய்யப் போகிறார் இந்த மனிதர் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தேன். “பேய்ப் படங்கள் பார்த்திருக்கிறீர்களா, அந்தப் பாழடைந்த திகில் கட்டடத்தில் நுழையும்போது ‘ஊ...ஊ...ஊ...’ என்று பேய்கள் கத்துமே... இங்கே அந்தப் பேய்களை வரவழைக்கலாமா?” என்றவர், அந்த வாளைப் பிடித்துக் காற்றில் இப்படியும் அப்படியும் ஆட்டினார். அட... பேய்களின் அதே திகில் கிளப்பும் ஊளைச் சத்தம்!

‘சிறு துரும்பும் பல் குத்த உதவும்’ என்பதுபோல் அற்பமான பொருள்களைக் கொண்டு அந்த மனிதர் வழங்கிய அந்த இசை நிகழ்ச்சி அவ்வளவு அபாரமாக இருந்தது. ரொம்பவே ஜாலியாக, சுவாரஸ்யமாக, நகைச்சுவை ததும்பும் வர்ணனைகளோடு, கலகலப்பாக அந்த நிகழ்ச்சியை வழங்கிய அந்த மனிதர்தான் ‘மீசை’ முருகேஷ். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் பல்லாண்டுக் காலம் உதவியாளராக இருந்தவர். எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், இளையராஜா, குன்னக்குடி வைத்தியநாதன் மற்றும் இந்தி இசையமைப்பாளர்கள்  லட்சுமிகாந்த் பியாரிலால் எனப் பலரிடம் பணிபுரிந்துள்ளார். எம்.கே.டி.பாகவதர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, டி.எம்.சௌந்தர்ராஜன் ஆகியோருக்கும் பக்க வாத்தியம் வாசித்துள்ளார். சுகமான ராகங்கள் படத்தில் நடிகராகத் தோன்றி ஜனனி, அமைதிப் படை, ஆண்பாவம், இதயக்கோயில், உன்னால் முடியும் தம்பி, உயிரே உனக்காக, ஊமை விழிகள், பூவே உனக்காக, பிரிவோம் சந்திப்போம் என நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திரக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

தவில், மிருதங்கம், ஜலதரங்கம், மோர்சிங் என 32 வகையான வாத்தியக் கருவிகளைத் திறம்பட இசைக்கத் தெரிந்தவர் மீசை முருகேஷ். வாத்தியங்களை இசைப்பதைவிட அவற்றின் ஒலிகளைத் தன் வாயினாலேயே அச்சு அசல் எழுப்பத் தெரிந்தவர் – அதாவது, அற்புதமாக மிமிக்ரி செய்யத் தெரிந்தவர் என்பது இவரின் கூடுதல் சிறப்பு.

‘அபூர்வ ராகங்கள்’ படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி. விநோதமான, த்ரில்லிங் மியூஸிக் வேண்டும் என்று விரும்பினார் இயக்குநர் கே.பாலசந்தர். எம்.எஸ்.வி. ஏகப்பட்ட வாத்தியக் கருவிகளை வாசித்துக் காண்பித்தும், கே.பாலசந்தருக்குத் திருப்தி வரவில்லை. ஒரு சின்ன வேலை செய்தார் மீசை முருகேஷ். ஒரு பித்தளைக் குடத்தைக் கொண்டு வந்து ரெக்கார்டிங் தியேட்டரில் டொம்மென்று போட, அது ‘டண்டண்டண்டண்டய்ய்ய்ங்ங்ங்...’ என்று சத்தம் போட்டுக்கொண்டே உருண்டதில் இயக்குநருக்குத் தேவையான த்ரில்லிங் மியூஸிக் கிடைத்துவிட்டது.

‘அபூர்வ தாள வாத்தியங்கள்’ என்ற பெயரில், உலகின் பல பகுதிகளில் இசைக்கச்சேரி நடத்தியுள்ளார் மீசை முருகேஷ். ஒருமுறை, தென்னாப்பிரிக்காவில் கச்சேரி செய்வதற்காக ஏர்போர்ட்டில் இறங்கி, காரில் செல்லும்போது ஏற்பட்ட விபத்தில் பலத்த அடிபட்டு, உடம்பில் ஏகப்பட்ட காயங்களோடு, பல வருட காலம் வீட்டினுள்ளேயே முடங்கிப் போனார். ஆனாலும், மனிதர் அந்தப் பின்னடைவிலிருந்து மீண்டு, பழைய உற்சாகத்துடன் வலம் வரத் தொடங்கினார்.

சென்னை, வடபழனி குமரன் காலனியில்தான் வசித்தார். முதிய வயதில், 2014-ம் ஆண்டு, குளியல் அறையில் வழுக்கி விழுந்ததில் தலையில் பலத்த அடிபட்டு, உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும், சிகிச்சை பலனின்றி சில நாளில் இறந்துபோனார்.

‘கலைமாமணி’ விருது தவிர, அதிகம் கொண்டாடப்படாதவர் மீசை முருகேஷ் என்பதில் எனக்கு மிகுந்த மனவருத்தம் உண்டு. நாம் கட்டாயம் நினைவுகூர வேண்டிய அந்த அற்புதக் கலைஞரின் 91-வது பிறந்த நாள் இன்று.

 – 3.01.2021

0 comments: