உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

நட்சத்திரத்தை ஆசீர்வதித்த சூரியன்!

 

சில ஆண்டுகளுக்கு முன்னால், உறவினர் ஒருவரின் திருமணத்தை முன்னிட்டு,  குடும்பத்தோடு மும்பை சென்றிருந்தேன். திருமணம் முடிந்து மற்றவர்கள் கிளம்பிவிட, ‘வந்தது வந்தோம், ஒரு நாள் மும்பையைச் சுற்றிப் பார்த்துவிட்டுப் போகலாமே’ என்று நாங்கள் தங்கிவிட்டோம். எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியின் மைத்துனர் மும்பை, செம்பூரில் இருந்தார். அவர் வீட்டில்தான் தங்கினோம். மறுநாள் மும்பையைச் சுற்றிப் பார்ப்பதாக ஏற்பாடு.

காலை 8 மணிக்கு டாக்ஸி வந்துவிடும் என்பதால் சீக்கிரமே எழுந்து, குளித்து ரெடியானோம். மும்பையைச் சுற்றிப் பார்த்துவிட்டு அப்படியே இரவு சத்ரபதி சிவாஜி டெர்மினஸுக்குப் போவதாகத் திட்டம். எனவே, பா.ரா. மைத்துனரிடம் விடைபெற்றுக் கொண்டோம். “பக்கத்தில்தான் செம்பூர் முருகன் கோயில் இருக்கிறது. நல்ல ஃபேமஸ் கோயில். நடக்கிற தூரம்தான். டாக்ஸி வருவதற்குள் அங்கே போய்விட்டு வருவதானால் வாருங்கள்” என்றார். கிளம்பி அங்கே போனோம்.

கோயிலில் இருபது முப்பது பேர் திரண்டிருக்க, அழகான ஒரு ஜோடிக்கு அங்கே திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கு வந்திருந்த பெரியவர்களிடமெல்லாம் பூத்தட்டைக் கொடுத்து, தங்கள் தலை மேல் பூப்போட்டு ஆசீர்வதிக்கச் சொன்னார் அந்தப் பெண். நல்ல லட்சணமாக இருந்தார். நானும் என் மனைவியும் எங்கள் பங்குக்குப் பூப்போட்டு அவர்களை ஆசீர்வதித்தோம்.

பிறகு பெரிய மண்டபத்தில் அவர்களுக்கு விமரிசையாகத் திருமணம் நடந்திருக்கும் என நினைக்கிறேன். அந்த அதிகாலையில் கோயிலில் நடந்தது ஆத்மார்த்தமான, பக்திபூர்வமான திருமணம்.

அந்தப் பெண்தான் நடிகை வித்யா பாலன் என்பது, மறுநாள் செய்தித் தாளைப் பார்த்த பின்னர்தான் எனக்குத் தெரிய வந்தது.

அழகும் திறமையும் வாய்ந்த நடிகை வித்யா பாலன். பாலக்காட்டைச் சேர்ந்த தமிழ்ப் பொண்ணு என்பதால், வித்யா பாலனுக்குச் சரளமாகத் தமிழும் மலையாளமும் பேச வரும். பிறந்து வளர்ந்ததெல்லாம் மும்பைதான்.

தமிழ்ப் பெண்ணாக இருந்தும் தமிழ்ப் பட உலகம் ஏனோ இவரை நிராகரித்துவிட்டது. ‘ரன்’ படத்தில் முதலில் ஒப்பந்தமானவர் இவர்தான். ஆனால், ஏனோ காரணமே சொல்லாமல் இவரை நீக்கிவிட்டு, மீரா ஜாஸ்மினைக் கதாநாயகியாக்கிவிட்டார்கள். அடுத்து ‘மனசெல்லாம்’ படத்தில் ஒப்பந்தமாகி, படப்பிடிப்பும் நடந்தது. ஆனாலும், இவர் முகம் ஃபோட்டோஜெனிக்காக இல்லை என்று சொல்லி இவரை நீக்கிவிட்டு, த்ரிஷாவைக் கதாநாயகியாக்கினார்கள்.

வெறுத்துப்போன வித்யா தமிழ்த் திரையுலகுக்கு ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு இந்திப் பக்கம் சென்றார். இவர் இந்தியில் நடித்த முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட்! இதன் இயக்குநருக்கு தேசிய விருதும், வித்யா பாலனுக்குச் சிறந்த புதுமுகம் மற்றும் அழகான முகம் என இரண்டு விருதுகளும் கிடைத்தன. இன்னும் பல விருதுகளையும் அள்ளியது இந்தப் படம்.

தமிழ்ப் பட உலகம் நிராகரித்து, இந்திக்குச் சென்று வெற்றிக்கொடி நாட்டியவர்கள் வஹீதா ரெஹ்மானும் ஹேமமாலினியும். அவர்கள் வரிசையில் வித்யா பாலனும் சேர்ந்துவிட்டார். அந்தக் கோபம்தானோ என்னவோ, பின்னர் கமல்ஹாசன் ‘தசாவதாரம்’ படத்தில் நடிக்கக் கூப்பிட்டபோது, தட்டிக் கழித்துவிட்டார்.

கர்னாடக சங்கீதம் பயின்றவர் வித்யா பாலன். பரதநாட்டியம் மற்றும் கதக் நடனங்களிலும் தேர்ச்சி உண்டு. 2014-ம் ஆண்டு, இவருக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்து கௌரவித்தது மத்திய அரசு.

இன்று ‘ஜனவரி 1’ - வித்யா பாலனின் பிறந்த நாள்.

எட்டு ஆண்டுகளுக்கு முன் ஆசீர்வதிக்கும்போது, அந்தப் பெண்தான் வித்யா பாலன் என்பது தெரியாமல் போயிற்றே என்கிற ஒரு சின்ன வருத்தம் இப்போதும் எனக்குள் உண்டு.

 – 1.01.2021

 

0 comments: