உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, January 13, 2021

அந்த ஏழு நாட்கள்!

யணத்துக்கான ஏற்பாடுகள் தயாராகிவிட்டன. 1984 ஏப்ரல் 2 அன்று பெற்றோரிடம் விடைபெற்றுக்கொண்டு கிளம்பினார் அவர். அவரின் பிரயாணம் நல்லபடியாக முடிய வேண்டும் என்பதற்காக பஞ்சமுக ஹனுமான் கோயிலில் விசேஷ பூஜைக்கும், குருத்வாராவில் தொடர்ந்து 48 மணி நேரம் கிரந்தசாஹிப் படிப்பதற்கும் ஏற்பாடு செய்திருந்தனர் அவரின் பெற்றோர். வாகனம் புறப்படுவதற்கு முன் மறக்காமல் காயத்ரி மந்திரத்தை மூன்று முறை படிக்கும்படி சொல்லி வழியனுப்பியிருந்தார் அப்பா. வீட்டிலும் தினசரி பூஜை அறையில் உட்கார்ந்து மகனுக்காகப் பிரார்த்தித்துக்கொண்டு இருந்தார் அம்மா.

இத்தனைக்கும் மகனின் பயண தூரம் வெறும் 500 கி.மீட்டர்தான். போகிற வேலையை முடித்துவிட்டு ஏழே நாளில் ஊர் திரும்பிவிடப் போகிறார். இதற்கு இத்தனை அமர்க்களமா, இத்தனை பயமா, இவ்வளவு பூஜைகள், பிரார்த்தனைகளா என்று யோசிக்கிறீர்களா?

அவர் 500 கி.மீ. தூரம் பயணம் மேற்கொள்ளப்போவது தரையில் அல்ல; பூமியை விட்டு விண்ணில்! ஏழு நாள்கள் தங்கியிருந்து பணியாற்றப்போவதும் விண்வெளி மையத்தில்தான்!

அவர் வேறு யாருமல்ல... முதல் இந்திய விண்வெளி நாயகர் ராகேஷ் சர்மா.

ரஷ்ய விண்வெளி வீரர்கள் இருவருடன் ‘சோயுஸ் டி-11’ என்னும் விண்கலத்தில் பயணம் மேற்கொண்டார் ராகேஷ் சர்மா. இதற்காக அவர் 18 மாத காலம் விசேஷ பயிற்சி எடுத்துக் கொண்டார். ‘சல்யூட்-7’ என்னும் விண்வெளி மையத்தில் அவர்கள் மூவரும் ஏழு நாள்கள் தங்கியிருந்து, பல அறிவியல் ஆய்வுகளை மேற்கொண்டார்கள். சரியாகச் சொல்வதானால் 7 நாள்கள் 21 மணி நேரம் 40 நிமிஷம் விண்வெளியிலேயே தங்கியிருந்தார்கள் அவர்கள். இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோவும் ரஷ்யாவும் சேர்ந்து செய்த கூட்டு முயற்சி அது.

இன்னும் பல்லாயிரம் கி.மீ உயரே பயணப்பட்டால்தான், பந்துபோல் பூமி கண்ணுக்குத் தென்படும் என்றும், இவர்கள் இருந்த விண்வெளி மையத்தில் இருந்து பார்க்கும்போது பூமியின் தரைப் பகுதி தங்க நிறத்திலும், காடுகள் நிறைந்த பகுதி பசுமை நிறத்திலும், கடல் நீல நிறத்திலும் அழகாகத் தெரிந்ததாகச் சொன்னார் ராகேஷ் சர்மா. அதே நேரம், “நியாயமாக பூமி நல்ல நீல நிறத்தில் தெரிய வேண்டும்; ஆனால், பூமியின் பெரும்பான்மையான பகுதிகள் சாம்பல் நிறத்தில்தான் தென்பட்டன. காரணம், நாம் அந்த அளவுக்குக் காற்றை மாசுபடுத்தி வைத்திருக்கிறோம்” என்றும் வருத்தப்பட்டார்.

அவர் விண்வெளியில் இருந்தபோது, நமது அன்றைய பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அவரைத் தொடர்பு கொண்டு பேசினார். “அங்கிருந்து பார்க்கும்போது இந்தியா எப்படி இருக்கிறது?” என்று கேட்டார். அதற்கு ராகேஷ், “ஸாரே ஜஹான் ஸே அச்சா” என்று பதிலளித்தார். ‘உலகிலேயே மிகச் சிறப்பானது’ என்று பொருள். பிரிட்டிஷ் ஆட்சியின்போது கவிஞர் இக்பால் எழுதிய தேசப்பற்றுப் பாடலின் முதல் வரி அது.

ராகேஷ் சர்மாவின் பணிகளைப் பாராட்டி ‘சோவியத் ரஷ்யாவின் நாயகன்’ என்னும் விருது அளித்து கௌரவித்தது ரஷ்யா. தவிர, அசோக சக்ரா விருது, ஆர்டர் ஆஃப் தி லெனின் ஆகிய விருதுகளையும் பெற்றிருக்கிறார் ராகேஷ்.

ராகேஷ் சர்மா குடும்பத்தாரின் சொந்த ஊர் பட்டியாலா. இந்தியச் சுதந்திரத்துக்குப் பிறகு, பாகிஸ்தான் பிரிவினையின்போது அவர்கள் குடும்பம் ஹைதராபாதுக்கு வந்து செட்டிலாகியது. அப்பா தேவேந்திரநாத் சர்மா, கமர்ஷியல் டாக்ஸ் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அம்மா திருபதா சர்மா, செகந்திராபாத் சென்ட்ரல் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களுக்கு ராகேஷ், மகேஷ் என இரண்டு பிள்ளைகள்.

ராகேஷின் மனைவி மது. இந்தத் தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள். மகன் கபில் சர்மா சினிமாவில் அசிஸ்டென்ட் இயக்குநராக இருக்கிறார். (இந்தி சினிமாவில் கபில் சர்மா என்றொரு காமெடி நடிகரும், அதே பெயரில் இன்னொரு நடிகரும்கூட இருக்கிறார்கள். அவர்களோடு இந்த கபில் சர்மாவைக் குழப்பிக்கொள்ள வேண்டாம்.) மகளும்கூட மீடியாவில்தான் இருக்கிறார்.

ராகேஷ் சர்மா தன் மனைவியோடு இப்போது ஊட்டி-குன்னூரில், நமது இன்னொரு இந்திய நாயகன் ஃபீல்டு மார்ஷெல் மானெக் ஷா வசித்த இடத்துக்கு அருகில்தான் வசிக்கிறார்.

“நான் விண்வெளி ஆராய்ச்சியை முடித்துக்கொண்டு திரும்பியதும், நான் ஏதோ நிலவுக்கே போய்விட்டு வந்தது மாதிரி பலரும் விசாரிக்க ஆரம்பித்து விட்டார்கள். ‘நான் போனது ஸ்பேஸ் ஸ்டேஷனுக்குதான். நிலவுக்கெல்லாம் இல்லை’ என்று அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களின் எண்ணத்தை நொறுக்குவது மனசுக்குக் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் ராகேஷ் ஷர்மா.

“முதன்முதலாக இந்த விண்வெளிப் பயண சாகசத்தை நிகழ்த்திய இந்திய விண்வெளி வீரர் நீங்கள். இந்தப் பயணத்தின் மூலம் உங்களுக்குக் கிடைத்த சந்தோஷம் என்று எதைச் சொல்வீர்கள்?” என்ற கேள்விக்கு ராகேஷ் சர்மாவின் பதில் சற்றும் எதிர்பாராத ஒன்றாக இருக்கிறது.

“அன்றிலிருந்து எனக்கு ஒருவர் தொடர்ந்து வருஷா வருஷம் வாழ்த்து அட்டைகள் அனுப்பிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு வருஷமும் அவர் மூன்று வாழ்த்து அட்டைகள் அனுப்புவார். ஒன்று – புத்தாண்டு வாழ்த்து; மற்றொன்று – என் பிறந்த நாள் வாழ்த்து; மூன்றாவது – நான் விண்வெளிக்குப் பயணப்பட்ட தினம். இன்றைக்கும் அவரிடமிருந்து வாழ்த்து அட்டைகள் வந்துகொண்டிருக்கின்றன. இத்தனைக்கும் அவர் அகமதாபாதில் இருக்கும் ஒரு சாதாரண வெற்றிலை வியாபாரிதான்! அவரின் அன்புதான் இந்தப் பயணத்தின் மூலம் எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம்!”

விண்வெளி நாயகன் ராகேஷ் சர்மாவின் 72-வது பிறந்த தினம் இன்று.

– 13.01.2021


போரை நிறுத்திய யோகி!

1962-ம் ஆண்டு, இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. சீனப்படையினர் இந்திய வீரர்களை வேட்டையாடி, வேகமாக முன்னேறிக்கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் ஆன்மிகத் துறவி ஒருவர் இங்கிலாந்தில் சொற்பொழிவாற்றிக்கொண்டிருந்தார்.

அவர் அப்போது அங்கிருந்த மக்களிடம், “நான் உடனடியாக இந்தியா செல்ல வேண்டும். போரைத் தடுத்து நிறுத்த என்னாலான முயற்சிகளைச் செய்ய வேண்டும்” என்று கூறி, விடைபெற்றுக்கொண்டு இந்தியா வந்தார். இந்திய ஜனாதிபதி டாக்டர் ராஜேந்திர பிரசாத்தைச் சந்தித்து, “இந்தப் போரைத் தடுத்து நிறுத்த என்னால் முடியும். ஆனால், போர் நடக்கும் இடத்தில் நான் சொல்கிறபடி சில விஷயங்களை உங்களால் செய்து தர முடியுமா?” என்று கேட்டார்.

“மன்னிக்கவும். அப்படிச் செய்ய இயலாது. ஆளும் அரசு ஒரு சாமியார் பின்னால் போய்விட்டதாக மற்ற கட்சிகள் அவதூறு செய்வார்கள். ஆகவே, அரசு சம்பந்தப்படாமல் நீங்களே தனியாக ஏதாவது செய்து போரைத் தடுத்து நிறுத்த முடியுமா என்று பாருங்கள்” என்றார் ஜனாதிபதி.

பின்னர் அந்த யோகி தமது செயலாளர் தேவேந்திராவை அழைத்துக்கொண்டு, போர் நடக்கும் இடத்திற்குச் சென்றார். அங்கே அருகில் உள்ள ஒரு மலைக்குகைக்குச் சென்றவர், “இந்தப் போர் நடப்பதற்கு முக்கியக் காரணம், சீனாவில் உள்ள ஒரு மனிதரின் மூளைதான்! அவர் மனத்தை மாற்றிவிட்டால் போதும், போர் நின்றுவிடும். இப்போது நான் அதைத்தான் செய்யப் போகிறேன். தியானம் செய்து அவரின் மூளையில் படிந்திருக்கும் போர் எண்ணத்தை மாற்றப் போகிறேன். தியானம் முடிந்து நான் வெளியில் வரும் வரை இங்கேயே காவலாக இரு. யாரையும் உள்ளே விடாதே!” என்று சொல்லிவிட்டு, உள்ளே சென்று தியானத்தில் அமர்ந்தார்.


24 மணி நேரம் இடைவிடாத தியானம். பின்பு வெளியே வந்த அந்த யோகி, தேவேந்திராவிடம் அருகிலிருந்த ஊருக்குச் சென்று அன்றைய நாளேடு ஒன்றை வாங்கி வரும்படி உத்தரவிட்டார். நாளேட்டை வாங்கிப் படித்த தேவேந்திராவுக்கு ஆச்சரியமான ஆச்சரியம்! ஆம்... சீனா சண்டையை நிறுத்தி, தன் படைகளை இந்திய எல்லையிலிருந்து வாபஸ் பெற்றுக்கொண்டதுதான் அதில் தலைப்புச் செய்தியே!

அந்த யோகி வேறு யாருமல்ல... ஆழ்நிலை தியானத்தை உலகம் முழுவதும் பரப்பிய ஆன்மிகத் துறவி மகரிஷி மகேஷ் யோகிதான்.

மேலே சொன்ன தகவல், மணிமேகலைப் பிரசுரம் வெளியிட்ட ‘மகரிஷியின் ஆழ்நிலை தியானம்’ என்னும் புத்தகத்தில் உள்ளது.

மத்தியப் பிரதேசம், ஜபல்பூர் அருகே உள்ள ‘சிச்லி’ என்ற கிராமத்தில் பிறந்தவர் மகேஷ் யோகி. இயற்பெயர் மகேஷ் பிரசாத் வர்மா. பிரம்மானந்த சரஸ்வதி ஸ்வாமிகளின் சீடராகி, தியானம், யோகம் ஆகியவற்றைக் கற்றார். 1953-ம் ஆண்டு இமயமலைச் சாரலில் ஆசிரமம் அமைத்து, ஆழ்நிலைத் தியானத்தை போதித்து வந்தார்.

1957-ல் சென்னை, மயிலாப்பூரில் ‘ஆன்மிகப் புத்துணர்வு இயக்கம்’ என்னும் அமைப்பின் சார்பாக தியான மையம் தொடங்கினார். அது பின்னர் ‘மகரிஷி இன்ஸ்டிட்யூட் ஆஃப் கிரியேட்டிவ் இன்டெலிஜென்ஸ்’ என்று விரிந்து பரந்தது. இதன் தலைமையகம் ஸ்விட்சர்லாந்தில் மகேஷ் யோகியின் நேரடி மேற்பார்வையில் செயல்பட்டது.

1958-ல் அமெரிக்கா சென்றார். சாமானியர்கள் முதல் பிரபலமானவர்கள் வரை பலரும் இவரது சீடர்களானார்கள். ‘அகில உலக தியான ஸ்தாபனம்’ என்னும் அமைப்பைத் தொடங்கினார். அமெரிக்காவில் தமது ஆன்மிக இயக்கம் பிரபலமான பின்பு, ஐரோப்பாவில் பயணம் மேற்கொண்டார். பின்னர் சீனா, கனடா, டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து, பிரிட்டன், மலேயா, நார்வே, ஆஸ்திரேலியா, கிரேக்கம், இத்தாலி, கிழக்கிந்தியத் தீவுகள் என உலகம் முழுவதும் பல நாடுகளில் தியான மையங்கள் தொடங்கினார். அவை இன்றைக்கும் இயங்கி வருகின்றன.

இவர் சிறந்த எழுத்தாளரும்கூட. சயின்ஸ் ஆஃப் பீயிங் அண்ட் தி ஆர்ட் ஆஃப் லிவிங் - டிரான்சென்டென்டல் மெடிட்டேஷன்’, ‘மெடிட்டேஷன்ஸ் ஆஃப் மகரிஷி மகேஷ் யோகி’ எனப் பல நூல்களை எழுதியுள்ளார்.

1960-களில் புகழ்பெற்ற ‘பீட்டில்ஸ்’ பாடகர் குழுவினருக்குக் குருவாக விளங்கியவர் மகேஷ் யோகி. அமைதி மற்றும் நல்லிணக்கம் நோக்கி மனித குலத்துக்கு வழிகாட்டும் குருவாகப் போற்றப்பட்ட இவர் 2008-ம் ஆண்டு, தமது 91-வது வயதில் சித்தியடைந்தார்.

மன வலிமையாலும் பிரார்த்தனையாலும் எத்தகைய அற்புதங்களையும் சாதிக்க முடியும் என்பதை மக்களிடம் எடுத்துச்சொன்ன மகரிஷி மகேஷ் யோகியின் ஜன்ம தினம் இன்று.

 – 12.01.2021

பெங்களூரு ராக்கெட்!

ச்சின் டெண்டுல்கர் அவரை ‘ஒன் டௌன் கிங்’ என்பார் செல்லமாக. அவரின் அற்புதமான தடுப்பாட்டம் காரணமாக ‘இந்தியப் பெருஞ்சுவர்’ என்று அவரைக் கொண்டாடுவார்கள் கிரிக்கெட் விமர்சகர்கள்.

அவர் - 1996 ஏப்ரல் 3-ம் தேதி, சர்வதேச இந்திய அணிக்கான ஒருநாள் போட்டியில் களமிறங்கி, 2012 ஜனவரி 24-ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியுடன் ஓய்வு பெற்ற ‘ராகுல் டிராவிட்’.

சிருஷ்டி – பெங்களூர் இந்திரா நகரில் இருக்கும் ராகுல் பங்களாவின் பெயர். மத்தியப்பிரதேசம் இந்தூரில் பிறந்து, கர்நாடகா பெங்களூரில் வசித்தாலும், ராகுலின் அப்பா வழிக் குடும்பம் தஞ்சாவூரைச் சேர்ந்தது. ராகுலின் அப்பா சரத் டிராவிட் தமிழில் அவ்வளவு சுத்தமாகப் பேசுவார்.

சரத் டிராவிட்டின் தாத்தா தஞ்சாவூரில் கோயில் குருக்களாக இருந்தவர். அவரின் மந்திர உச்சாடனங்கள் அவ்வளவு துல்லியமாக இருக்கும். அதில் கவரப்பட்ட குவாலியர் பகுதி மராத்தியர்கள் தங்கள் பகுதியில் உள்ள கோயிலில் பணியாற்ற அவரை அழைத்துப் போய்விட்டார்கள். சரத் டிராவிட்டின் மனைவி மராத்தியப் பெண் என்றாலும், அவர் கழுத்தை அலங்கரிக்கும் திருமாங்கல்யம் தமிழ்ப் பாரம்பரியப்படி உருவாக்கப்பட்டதுதான். “நாங்கள் வடக்கில் வாழ்ந்தாலும், மனதளவில் இன்னும் தெற்கத்திக்காரர்கள், திராவிடர்களாகத்தான் இருக்கிறோம் என்பதை வெளிப்படுத்தத்தான் எங்கள் பெயரோடு ‘திராவிட்’ என்று சேர்த்துக்கொண்டிருக்கிறோம்” என்று பெருமையுடன் சொல்கிறார் சரத் டிராவிட்.

ராகுலின் பெரியப்பா கே.வி.டிராவிட்தான் இந்தக் குடும்பத்தில் கிரிக்கெட் ஆர்வத்தைத் தூண்டியவர். அப்பா சரத் டிராவிட்டும் பல்கலைக்கழக அளவில் கிரிக்கெட் ஆடியவர்தான்.

‘வேதம் ஜெய்சங்கர்’ என்பவர் கர்நாடகாவில் பிரபல ஸ்போர்ட்ஸ் ஜர்னலிஸ்ட். ராகுல் டிராவிட் சிறு பையனாக இருந்த காலத்திலிருந்தே அவரைப் பற்றி நன்கு அறிந்தவர். அவர் ராகுல் டிராவிட்டின் சாதனைகள் மற்றும் விளையாட்டுப் பயணம் குறித்து ‘Rahul Dravid: A Biography’ என்ற தலைப்பில் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் எழுதியுள்ளார். “ராகுலின் வெற்றிக்குக் காரணம் அவரது பொறுமையும் நிதானமும் எதற்கும் அலட்டிக்கொள்ளாத தன்மையுமே ஆகும். இடியே விழுந்தாலும், சற்றும் சலனம் காட்டாமல் நடந்துபோவார் டிராவிட்” என்று புகழ்மாலை சூட்டுகிறார் அவர்.  

“இன்றைய இளைஞர்களுக்கு ரோல் மாடல் ராகுல் டிராவிட். நாம் எல்லோரும் பின்பற்றவேண்டிய உதாரண புருஷர். கடின உழைப்புதான் வெற்றிக்கனியை ருசிக்க வைக்கும் என்ற உண்மையை நிரூபிக்கக் கிடைத்திருக்கிற சத்தியமான சாட்சிதான் ராகுல் டிராவிட்” என்று மனம் திறந்து பாராட்டியிருக்கிறார் கிரிக்கெட் கிங் சச்சின் டெண்டுல்கர்.

ஆனாலும், தன்னை ஒரு சூப்பர் ஸ்டாராக ஒருபோதும் எண்ணிக்கொண்டதில்லை ராகுல் டிராவிட்.

ஒருமுறை, தன் மகனை பெங்களூரில் நடந்த ஓர் அறிவியல் கண்காட்சிக்கு அழைத்துச் சென்றிருந்தார் டிராவிட். நீளமான க்யூ இருந்தது. இருந்தும், தன் பிரபலத்தைப் பயன்படுத்தி முதலில் உள்ளே சென்று பார்க்க முயலாமல், மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து, தன் முறை வந்த பிறகே பார்த்துவிட்டு வந்தார்.

பெங்களூரு பல்கலைக்கழகம் கெளரவ டாக்டர் பட்டம் வழங்க முன்வந்தபோது, தீர்மானமாக மறுத்துவிட்டார் டிராவிட். ‘விளையாட்டுத் துறையில் நான் செய்ய வேண்டியது இன்னும் எவ்வளவோ இருக்கிறது; இப்போது டாக்டர் பட்டம் பெற நான் தகுதியானவன் அல்ல’ என்று உறுதியாகத் தெரிவித்துவிட்டார்.

பெங்களூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ராகுல் டிராவிட், "தோல்வியைப் பற்றிப் பேச எனக்கு முழுத் தகுதியுள்ளது. அறுநூற்றுக்கும் மேற்பட்ட சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ளேன். ஆனால், அவற்றில் 410 போட்டிகளில் நான் 50 ரன்களைத் தாண்டவில்லை'' என்று அப்போது வெளிப்படையாகவும், மிகுந்த தன்னடக்கத்துடனும் குறிப்பிட்டார்.

அதுதான் ராகுல் டிராவிட்! மிகச் சிறந்த தடுப்பாட்டம், தேர்ந்த ஆட்ட நுணுக்கம், வசீகரமான பேட்டிங் பாணி, மிகச் சிறந்த தலைமைப் பண்பு... இவை மட்டுமல்ல, இந்தத் தன்னடக்கமும் டிராவிட்டை உயரத்தில் ஏற்றி வைத்திருக்கிறது.

அந்த ‘பெங்களூர் ராக்கெட்’டின் 48-வது பிறந்த நாள் இன்று.

– 11.01.2021

 

வில்லன்களை ஹீரோவாக்கியவர்!

 

ராமசாமி சுப்பிரமணிய லட்சுமி நரசிம்மன் என்றால் புரியாது; ஆர்.எஸ்.மனோகர் என்றால் சட்டென்று புரியும்.

தமிழகத்தில் இதுவரை இரண்டே இரண்டு பேரின் குறிப்பிட்ட இரண்டு நாடகங்கள் மட்டுமே மூவாயிரம் முறைக்கு மேல் மேடை நாடகமாக நடிக்கப்பட்டுச் சாதனை படைத்திருக்கின்றன. ஒன்று – எம்.ஆர்.ராதாவின் ‘ரத்தக் கண்ணீர்’. மற்றொன்று – ஆர்.எஸ்.மனோகரின் ‘இலங்கேஸ்வரன்’.

‘மனோகர்’ என்றால் சட்டென்று என் நினைவுக்கு வருவது, அகத்திய முனிவருடன் இலங்கேஸ்வரன் கலந்துகொள்ளும் போட்டிப் பாடல் காட்சிதான். ‘எந்த நாட்டையும் நாதத்தால் வென்றிடுவேன்...’ என்று கம்பீரமும் மிடுக்குமாக என் அபிமான பாடகர் டி.எம்.எஸ். பின்னணி கொடுக்க, அலங்காரபூஷிதராக அமர்ந்து, வீணையை மீட்டிப் பாடும் மனோகரின் உடல்மொழி அவ்வளவு அழகு!

சென்னையில் தபால் இலாகாவில் பணியாற்றிக்கொண்டிருந்தவர் மனோகர். எழும்பூர் டிரமாடிக் சொஸைட்டி நாடகங்களிலும், வி.சி.கோபாலரத்னம், தோட்டக்கார விசுவநாதன், சேஷாத்ரி ஆகியோர் நடத்திய நாடகங்களிலும் அமெச்சூர் நடிகராக நடித்துக் கொண்டிருந்தார். 1950-ம் வருஷம் ‘ராஜாம்பாள்’ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் மனோகர். “என் நாடகத் திறமையைப் பார்த்தெல்லாம் அவர்கள் என்னைத் தேர்ந்தெடுக்கவில்லை; அப்போதெல்லாம் சூட் அணிந்து, கிராப் தலையுடன்கூடிய நடிகர்கள் கிடைப்பது அபூர்வமாக இருந்தது. ஆகவேதான் என்னைத் தேர்ந்தெடுத்தார்கள். அப்போது ஒரு நாடகத்தில் ‘மனோகர்’ என்னும் கதாபாத்திரத்தில் நான் நடித்துவந்ததால், அதே ‘மனோகர்’ என்ற பெயரையே சினிமாவிலும் எனக்குச் சூட்டிவிட்டார்கள்” என்று தன்னடக்கத்துடன் சொல்லிக்கொள்வார்.

ஹீரோவாக நடித்துக்கொண்டிருந்த இவரைத் தமது ‘அதிசயப் பெண்’ படத்தில் முதன்முதலாக வில்லன் ஆக்கியவர் எம்.வி.ராமன்.

ஆனந்த ராமாயணத்தை அடிப்படையாகக் கொண்டு துறையூர் மூர்த்தி எழுதிய நாடகம்தான் ‘இலங்கேஸ்வரன்’. “இலங்கேஸ்வரனுக்குரிய கம்பீரமான உடல்வாகு எனக்கு இல்லை. அதனால் இது வேண்டாம்” என்று முதலில் மறுத்துவிட்டார் மனோகர். துறையூர் மூர்த்திதான் மனோகரை வற்புறுத்திச் சம்மதிக்க வைத்தார். ஆனால், தமிழ்நாட்டில் இந்த நாடகத்துக்கு பலத்த எதிர்ப்பு. சபாக்கள் இதற்கு சான்ஸ் தர மறுத்தன. ‘சரி, இதை விட்டுவிட்டு அடுத்த காரியம் பார்க்கலாம்’ என்ற மனநிலையில் இருந்தபோதுதான் இலங்கையில் இதை நடத்தச் சொல்லி அழைப்பு வந்தது. தன் ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ குழுவுடன் கிளம்பிச் சென்றார் மனோகர்.

இலங்கையில் இந்த நாடகம் சக்கைப்போடு போட்டது. அதன்பின் தமிழ்நாட்டிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டது. மூதறிஞர் ராஜாஜியை இந்த நாடகத்தைக் காணச் செய்ய வேண்டும் என்பது மனோகரின் விருப்பம். ஆனால், ராஜாஜியோ “ராவணனைப் போற்றும் இந்த நாடகத்தைப் பார்க்க நான் விரும்பவில்லை” என்று மறுத்துவிட்டார். மிக வருத்தப்பட்ட மனோகர், தன் நாடக ஸ்க்ரிப்டை காஞ்சி மகா பெரியவரிடம் கொண்டு போய்க் கொடுத்து, அவரின் ஆசிகளைக் கோரினார். பெரியவருக்கு மொத்த நாடக ஸ்க்ரிப்டையும் வாசித்துக் காண்பித்தார். “இதில் ராமனை எந்த இடத்திலும் இழிவுபடுத்தவில்லையே… நாடகமும் நல்ல முறையில்தானே எழுதப்பட்டிருக்கிறது! தாராளமாக நடத்தலாம்” என்று மனம் குளிர ஆசீர்வதித்தார் காஞ்சி மகான். அதன்பின் புத்துணர்ச்சி பெற்று, தமிழகமெங்கும் ‘இலங்கேஸ்வரன்’ நாடகத்தை மேடையேற்றி, வெற்றி மேல் வெற்றி பெற்றார் மனோகர்.

‘இலங்கேஸ்வரன்’ தந்த வெற்றியில் சூரபத்மன், நரகாசுரன், சிசுபாலன், இந்திரஜித் என புராண வில்லன்களையெல்லாம் கதாநாயகனாக்கி மேடையேற்றி அழகுபார்த்தவர் மனோகர்.

நாடக மேடையிலேயே பெரிய யானையைக் கொண்டு வருவது, சுழலும் மேடை அமைத்து, நொடிக்கும் குறைவான நேரத்தில் அரங்க அமைப்பை மாற்றுவது எனப் பல புதுமைகளைச் செய்திருக்கிறார் மனோகர். இவரின் நாடகத்தில் செய்யப்பட்ட தந்திரக் காட்சிகள் எல்லாம் அவரின் மூளையில் உதித்த ஐடியாக்கள்தான்!

மற்ற நாடகக் குழுக்களைப்போல் இல்லை மனோகரின் குழு. பல ஒழுக்கக் கட்டுப்பாடுகள் உண்டு. மாலை 6:30-க்கு நாடகம் தொடங்கிவிடும் என்றால், சரியாக 6:30-க்கு பெல் அடிக்கப்பட்டுவிடும். எந்தப் பிரபலத்தின் வருகைக்காகவும் காத்திருப்பது கிடையாது. அதேபோல் நாடகத்தில் நடிக்கும் பெண்களிடம் யாரும் நாடக ஸ்க்ரிப்டைத் தவிர வேறு பேச்சுகள் எதுவும் பேசக் கூடாது. புகை, மது அருந்திவிட்டு வரக்கூடாது. தவிர, குழுவில் உள்ள அனைவருக்கும் யூனிஃபார்ம் உண்டு. வெளியூரில் நாடகம் நடத்தப் போகும்போதெல்லாம் ரயிலில் இந்த யூனிஃபார்ம் அணிந்து, ‘நேஷனல் தியேட்டர்ஸ்’ என்னும் பாட்ஜையும் கட்டாயம் அணிந்துதான் பயணம் செய்ய வேண்டும்.

நாடகக் கலைக்கு மனோகர் செய்த சேவை அளப்பரியது. ‘நாடகக் காவலர்’ என்னும் பட்டத்துக்கு மிகப் பொருத்தமான ஆர்.எஸ்.மனோகரின் 15-வது நினைவு நாள் இன்று.

 – 10.01.2021

தென்னிந்தியாவின் பஸ்டர் கீட்டன்!


மிழ்த் திரையுலகில் இரண்டு ராமச்சந்திரன்கள் மிகப் பிரபலம். எம்.ஜி.ராமச்சந்திரன் ‘எம்.ஜி.ஆர்’ ஆன பின்பு, ‘ராமச்சந்திரன்’ என்றால், அது டி.ஆர்.ராமச்சந்திரனை மட்டுமே குறிப்பதாக ஆகியது. திருதிருவென்று அவர் முழிக்கும் அழகே அழகு! இதனாலேயே அவர் ‘முட்டை முழி ராமச்சந்திரன்’ ஆனார்.

‘அடுத்த வீட்டுப் பெண்’ படத்தில், ‘கண்களும் கவி பாடுதே’ பாடல் காட்சியைப் பார்த்து ரசிக்காத சீனியர் சிட்டிஸன்கள் இருக்க முடியாது. அஞ்சலி தேவிக்குப் போட்டியாக எதிர் வீட்டில் இருக்கும் டி.ஆர்.ராமச்சந்திரன் பாடுவார். உண்மையில், அவருக்குப் பாடத் தெரியாது. மறைவில் ஒளிந்துகொண்டு தங்கவேலு பாட, அதற்குப் பொருத்தமாக அபிநயம் பிடித்து வாயசைப்பார் டி.ஆர்.ராமச்சந்திரன். சிலச் சில இடங்களில், வரியைத் தவறவிட்டு, திடுக்கென்று ஒரு முழி முழித்து, மீண்டும் சுதாரித்து அவர் பாடும் அழகை நாளெல்லாம் ரசித்துக்கொண்டே இருக்கலாம்.

இது இந்தியில் சுனில் தத், மெஹ்மூத், சாய்ரா பானு நடிப்பில் ‘படோஸன்’ என்னும் பெயரில் வெளியாயிற்று. அனைவருமே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார்கள். ஆனாலும், பாடல் வரிகளைத் தவறவிட்டு முழிக்கிற முட்டை முழி ராமச்சந்திரனின் அந்த அசட்டுத்தனமான அழகை சுனில்தத்தால் கொஞ்சமும் கொண்டுவர முடியவில்லை.

‘சபாபதி’ படம் நகைச்சுவையின் உச்சம். தமிழ் வாத்தியாராக சாரங்கபாணியும் மாணவராக டி.ஆர்.ராமச்சந்திரனும் வரும் காட்சியில் சிரித்துச் சிரித்து என் வயிறு புண்ணாகிவிட்டது. ‘இருப்புப் பாதை’ வியாசம் (கட்டுரை) எழுதுகிற காட்சியில், பதினெட்டுப் பக்கங்களுக்கு ரயில் ‘குப்... குப்...’ என்று ஓடுவதை டி.ஆர்.ராமச்சந்திரன் வர்ணித்துப் படிக்கிற காட்சி, நகைச்சுவையின் உச்சம்!

பின்னாளில் காமெடி நடிகர்களுக்காக தனி டிராக்கும், நாகேஷ் போன்ற கலைஞர்களுக்காகவே தனியாக நகைச்சுவைப் படங்களும் தயாரிக்கப்பட்டிருந்தாலும், முதன்முதலில் நகைச்சுவைக்கென்றே ஸ்க்ரிப்ட் எழுதிப் படங்கள் தயாரிக்கப்பட்டது டி.ஆர்.ராமச்சந்திரனுக்குதான் என்று நினைக்கிறேன்.

டி.ஆர். ராமச்சந்திரன் நடித்த படங்கள்தான் பல கலைஞர்களுக்கு முதல் படமாக அமைந்திருக்கிறது. ‘வாழ்க்கை’ படத்தில் நடித்த வைஜெயந்திமாலாவுக்கு அதுவே முதல் படம்.வானம்பாடி’ படத்தில்யாரடி வந்தார் என்னடி சொன்னார்' என்ற பாடல் காட்சியில் நடனமாடியதன் மூலம்தான் ஜோதிலட்சுமி தனது முதல் திரைப்பயணத்தைத் தொடங்கினார். வில்லன் நடிகர் எம்.என்.நம்பியார் அறிமுகமானது ‘வித்யாபதி’ படத்தில்தான். எம்.ஜி.ஆரின் துணைவியார் வி.என்.ஜானகி கதாநாயகியாக நடித்த முதல் படம்சகடயோகம். அதே போல்,பொன்வயல்’ படத்தில்தான் சீர்காழி கோவிந்தராஜன் பின்னணிப் பாடகராக அறிமுகமானார். இவை எல்லாமே டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த படங்கள்தான். தயாரிப்பாளர் ஏவி.மெய்யப்ப செட்டியார் இயக்குநராகவும் அவதாரம் எடுத்த முதல் படமும் டி.ஆர்.ராமச்சந்திரன் ஹீரோவாக நடித்தசபாபதி’.

ஹீரோ என்றால் கம்பீரமாக இருக்க வேண்டும், உயரமாக இருக்க வேண்டும், நல்ல உடல் கட்டோடு இருக்க வேண்டும் என்கிற இலக்கணங்களையெல்லாம் உடைத்தெறிந்து வெற்றிக்கொடி நாட்டியவர் டி.ஆர்.ராமச்சந்திரன். நியாயமாக அவரின் திறமைக்கு சார்லி சாப்ளின், பஸ்ட்டர்கீட்டன் என உலக நகைச்சுவை நடிகர்களுக்கு இணையாகப் பேசப்பட்டிருக்க வேண்டும்.

எனக்கு நினைவு தெரிந்து திரைப்படங்களில் டி.ஆர்.ராமச்சந்திரனைப் பார்த்தது என்றால், .அன்பே வா’ படத்திலும், ‘தில்லானா மோகனாம்பாள்’ படத்திலும்தான். அப்போதே அவர் பழம்பெரும் நடிகராகி, வெறும் கறிவேப்பிலையாக மட்டுமே பயன்படுத்தப்பட்டிருந்தார். அவை அவரின் உச்சம் அல்ல!

இன்றைக்கும் ‘யூடியூபில்’, டி.ஆர்.ராமச்சந்திரன் நடித்த பழைய தமிழ்த் திரைப்பட நகைச்சுவைக் காட்சிகளைக் கண்டு களிப்பது அலாதி சுகம்!

நகைச்சுவை மன்னன் டி.ஆர்.ராமச்சந்திரன் பிறந்த நாள் இன்று.

 – 9.01.2021

மகா பெரியவா!

 

தெய்வம் மனித வடிவில் பூமியில் அவதரித்து வந்தது பற்றிய புராணக் கதைகளைப் படித்திருக்கிறோம். நம் வாழ்நாளிலும் அப்படியொரு தெய்வத்துடனே வாழ்ந்திருக்கிறோம், வளர்ந்திருக்கிறோம், அந்த தெய்வத்தின் அன்பு ஆசிகளுக்குப் பாத்திரமாகியிருக்கிறோம் என்பது நமக்கான வாழ்நாள் கொடுப்பினை.

ஆம்... சிவபெருமானின் அவதாரமாகவே கருதப்பட்டவர் ‘மகா பெரியவா’ என்று பக்தர்களால் போற்றப்பட்ட மகாஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள். நடமாடும் தெய்வமாக நமக்கெல்லாம் அருள்பாலித்து வந்த அந்த மகான் தம் பூதவுடலைத் துறந்து, மீண்டும் சிவனோடு ஐக்கியமாகிவிட்ட தினம் இன்று.

மகா பெரியவாளைப் பற்றி ரா.கணபதியும், ரமணி அண்ணாவும், என் இனிய நண்பர் பி.என்.பரசுராமனும், இன்னும் பல ஆன்மிகப் பெரியோர்களும், அவரோடு பழகிய பிரபலங்களும் சொல்லாத விஷயங்களையா நான் சொல்லிவிடப் போகிறேன்? பெரியவா பற்றி எழுதுகிற அளவுக்கு எனக்கு யோக்கியதை இருப்பதாக நான் கருதவில்லை. இந்தப் பதிவையேகூடத் தயங்கித் தயங்கித்தான், இதில் ஒரு சின்ன வார்த்தைகூட அதிகப்பிரசங்கித்தனமாக இருந்துவிடக்கூடாதே என்கிற பயத்தோடுதான் எழுதுகிறேன்.

விழுப்புரத்தில் அவதரித்த மகான் அவர். விழுப்புரம் சங்கர மடத்தில் அவர் முகாமிட்டிருந்தபோது, குடும்பத்தாரோடு நானும் சென்று அவரை தரிசித்தது ஒரு கனவுபோல் என் ஞாபக அடுக்குகளில் படிந்திருக்கிறது. நானும் விழுப்புரத்தான் என்பதால், அவரின் அருள்மழையில் ஒரு சொட்டேனும் என்மீது விழுந்திருக்கும் என்று ஏதோ ஓர் உள்ளுணர்வு சொல்கிறது. இது குழந்தைத்தனமான உணர்வுதான் என்பது புத்திக்குப் புரிந்தாலும், அதை வலுக்கட்டாயமாக ஒதுக்கிவிட்டு, அந்த உணர்வை வலுவாக நம்பவே என் மனம் விழைகிறது.

மகா பெரியவா தம் கடைசி காலத்தில் தங்கியிருந்த தேனம்பாக்கம் இல்லத்துக்கு என் அம்மாவை சில ஆண்டுகளுக்கு முன் அழைத்துப் போயிருந்தேன். மிகச் சிறிய எட்டுக்கு எட்டு அறை அது. குனிந்துதான் உள்ளே செல்ல வேண்டும். உள்ளே சென்று தரிசித்தோம். இருளாக இருந்தது. அந்த மகானின் சந்நிதியில் நின்றிருந்தபோது, சாந்நித்தியம் மிகுந்த ஒரு திருத்தலத்தின் கருவறைக்குள் நின்றிருக்கும் உணர்வு ஏற்பட்டது. சுவர் ஓரமாக பெரியவா படம் வைத்து, ஒரு விளக்கு மட்டும் ஏற்றப்பட்டிருந்தது. முன் வலது பக்கத்தில் பாத்திரங்கள் கழுவும் சிறு தொட்டிமித்தம்போல் ஓர் இடம். பெரியவா தினமும் அங்கு அமர்ந்துதான் ஸ்நானம் செய்வார் என்று அங்கிருந்த அணுக்கத் தொண்டர்கள் சொன்னார்கள்.

அந்த அறையில், கம்பியில்லாத ஜன்னல் போன்று ஓரடிக்கு ஓரடி அளவில் ஒரு சின்ன துவாரம் இருந்தது. ‘இது எதற்காக?’ என்று அங்கிருந்தவர்களைக் கேட்டேன். பெரியவா தமது கடைசி காலத்தில், தம்மைத் தாமே சிறைப்படுத்திக்கொண்டாற்போன்று இந்தச் சின்ன அறையில்தான் இருந்தாராம்; இதைவிட்டு அவர் வெளியே வரவே மாட்டாராம். “அவருக்கு இந்தச் சிறிய ஜன்னல் திட்டின் வழியாகத்தான் நாங்கள் உணவு கொடுப்போம். அதை அவர் எடுத்து உண்டுவிட்டு, பாத்திரங்களைச் சுத்தமாகக் கழுவி மீண்டும் அங்கேயே வைத்துவிடுவார்” என்றார்கள். வாசலை மறித்தாற்போல் ஒரு கிணறு. பெரும்பாலும் சுவாமிகள் தாமேதான் ஒரு சிறிய வாளியில் இந்தக் கிணற்றிலிருந்து தண்ணீர் இறைத்துக் குளிப்பாராம்.

பாரதப் பிரதமர் இந்திரா காந்தி ஒருமுறை பெரியவாளை தரிசிக்க வந்து, இந்தக் கிணற்றுக்கு மறுபுறம் ரொம்ப நேரம் காத்துக்கொண்டிருந்து, தரிசனம் பெற்றுச் சென்றாராம். அவர் தேர்தலில் தோற்றுப் பதவியை இழந்திருந்த நேரம் அது. பெரியவாள் கை உயர்த்தி இந்திராவை ஆசீர்வதிக்க, அந்தப் புனித கரத்தையே அடுத்த தேர்தலில் தனது இந்திரா காங்கிரஸ் கட்சிக்கான ‘கை’ சின்னமாக அறிவித்து வென்றதாகச் சொல்வார்கள்.

என் அம்மாவுக்கு ஏழெட்டு வயதாக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தைப் பின்னாளில் என்னிடம் பகிர்ந்துகொண்டார். அப்போது திருக்கழுக்குன்றத்தில் இருந்தது அவர்களின் வீடு. அம்மாவின் அம்மா, அதாவது என் பாட்டி போலியோவால் பாதிக்கப்பட்டவர். சட்டென்று எழுந்து நடந்து வர முடியாது. ஒரு நாள் அவர் வீட்டின் நடை, தாழ்வாரம், முற்றம் எனப் பல கட்டுகளுக்குப் பின்னால், தோட்டத்துக் கதவு அருகில் அமர்ந்திருந்தார். வாசலில் மேளச் சத்தமும் அணுக்கத் தொண்டர்களின் ‘ஹர ஹர சங்கர’ கோஷமுமாக, பெரியவா மேனாவில் செல்வது தெரிந்தது. தரிசிக்க வேண்டும் என்ற அவா இருந்தும், பாட்டி எழுந்திருப்பதற்குள் வாசலில் மேனா நகர்ந்துவிட்டது. தரிசிக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தில் அப்படியே அமர்ந்து, வாசல் தெருவையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தாராம் பாட்டி.

அப்போது, மேனாவைச் சுமந்து சென்றவர்களைக் கொஞ்சம் நிற்கச் சொல்லியிருக்கிறார் பெரியவா. பின்னோக்கி சற்று தூரம் நடந்து வரச் சொல்லியிருக்கிறார். என் பாட்டியின் வீட்டு வாசலுக்கு எதிரே வந்ததும் மேனா நின்றது. பெரியவா மேனாவிலிருந்தபடியே வீட்டுக்குள் பார்த்துக் கையை அசைத்து என் பாட்டிக்கு ஆசியளித்த பின்பு, மேனா மீண்டும் தன் பயணத்தைத் தொடர்ந்ததாம்.

ஹர ஹர சங்கர, ஜய ஜய சங்கர..! 

 - 8.01.2021

ஆயிரம் கொக்குகள்!

 

ன் அபிமான நடிகை ‘அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி; என் அபிமான இயக்குநர் கே.பாக்யராஜ். இருவரும் பிறந்தது இந்த ஜனவரி 7-ம் தேதிதான். இன்று இவர்களில் ஒருவரைப் பற்றித்தான் எழுத வேண்டும் என்று முதலில் நினைத்திருந்தேன். ஆனால், பிறகு அந்த முடிவை மாற்றிக்கொண்டுவிட்டேன். நான் இன்று எழுதப்போவது, ஒரு ஜப்பானியப் பெண்ணைப் பற்றி. ‘சடாகோ சசாகி’ என்பது அந்தப் பெண்ணின் பெயர்.

1945-ம் ஆண்டு, ஆகஸ்ட் 6-ம் தேதி - வீட்டுக்குள் சமர்த்தாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருந்தாள் அந்த இரண்டு வயதுப் பெண் குழந்தை சசாகி. திடுமென பூமிப்பந்தே இரண்டாகப் பிளப்பதுபோல் நிலம் அதிர, அவள் ஜன்னல் வழியாக வெளியே தூக்கியெறியப்பட்டாள். பதறிப்போன அம்மா ஓடிச்சென்று குழந்தையைத் தூக்கிக்கொண்டாள். நல்லவேளை... குழந்தை உயிருடன் இருந்தது.

ஒரு ‘குட்டிப் பையன்’ செய்த அயோக்கியத்தனம் அது. அவன் அது மட்டுமா செய்தான்... அன்றைய தினம், ஒரு லட்சம் பேருக்கு மேல் கொன்று தீர்த்துவிட்டான். இரண்டாம் உலகப்போரில், ஜப்பான்மீது அமெரிக்கா போட்ட அணுகுண்டுகளில் ‘ஹிரோஷிமா’ நகரில் விழுந்த குண்டின் பெயர்தான் ‘குட்டிப் பையன்’ (லிட்டில் பாய்).

சுமார் 2 கி.மீட்டர் தொலைவுக்கு அப்பால் விழுந்த குண்டின் அதிர்ச்சியே குழந்தை சசாகியை அலாக்காகத் தூக்கி, வீட்டுக்கு வெளியே வீசியெறிந்தது. எனில், அந்த அணுகுண்டு எவ்வளவு வீர்யம் வாய்ந்தது, எவ்வளவு சேதம் விளைவித்திருக்கும் என யோசித்துப் பாருங்கள்.

ஹிரோஷிமா நகரமே பூண்டோடு அழிந்தது. 1946 ஆகஸ்ட் 10-ம் தேதி ஹிரோஷிமா நகராட்சி வெளியிட்ட அறிக்கையின்படி, அணுகுண்டு வீச்சில் 1,18,661 பேர் இறந்துவிட்டார்கள்; 79,130 பேர் காயப்பட்டார்கள்; 30,524 பேர் உடல் சிதைந்து போனார்கள்; 3,677 பேரைக் காணவில்லை. இயற்கைச் சீற்றங்கள்கூட ஒட்டுமொத்தமாக இவ்வளவு பெரிய உயிர்ச் சேதத்தை நிகழ்த்தியதில்லை.

குழந்தை சசாகி உயிர் தப்பினாலும், பன்னிரண்டு வயதில் அவளின் கழுத்திலும் காதுகளிலும் வீக்கங்கள் ஏற்பட்டன. அணுகுண்டு வீச்சின் கதிரியக்கம் அந்தப் பெண்ணுக்குத் தந்த பரிசு அது. ரத்தப் புற்றுநோய். அதன்பின், சசாகி என்று அவளைக் கூப்பிடுவது போய், ‘ஹிபாகுஷா’ என்றே அவள் பரவலாக அறியப்பட்டாள். ஜப்பானிய மொழியில் ‘அணுகுண்டால் பாதிக்கப்பட்ட பெண்’ என்று பொருள்.

நாளாக நாளாக சசாகியின் உடல் மோசமாகிக்கொண்டு வந்தது. அவளின் நெருங்கிய தோழி சிஜுகோ அவளைப் பார்க்க வந்தாள். அவள் சசாகிக்கு தைரியமும் ஆறுதலும் சொல்லி, ஆயிரம் காகிதக் கொக்குகள் செய்து பிரார்த்தனை செய்துகொண்டால் உடம்பு குணமாகும் என்று சொன்னாள். ஜப்பானியர்களிடம் இப்படி ஒரு நம்பிக்கை உண்டு. காகிதத்தை மடக்கி மடக்கி உருவங்கள் செய்வது ஜப்பானியர்களுக்கே உரித்தான கலை.

தோழியின் யோசனைப்படி காகிதக் கொக்குகள் செய்யத் தொடங்கினாள் சசாகி. 644 கொக்குகள் வரை செய்தாள். அதன்பின் அவளின் உடம்பு ஓய்ந்துபோனது. அம்மா அழுதுகொண்டே, “என் கண்ணே, இதையாவது கொஞ்சம் சாப்பிடும்மா!” என்று ஜப்பானிய உணவு முறைப்படி, வடித்த சாதத்தில் கிரீன் டீயைக் கலந்து மகளுக்கு ஊட்டினாள். அதை ஒரு வாய் சாப்பிட்டுவிட்டு, “அரிசி டீ அருமையா இருக்கும்மா” என்று புன்னகைத்த சசாகி, சுற்றி நின்றிருந்த தன் உறவினர்கள், நண்பர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து நன்றி சொல்லிவிட்டுக் கண்களை மூடினாள். அதன்பின் அந்தக் கண்கள் திறக்கவில்லை.

அவள் உடலைப் பெற்றோரிடம் ஒப்படைப்பதற்கு முன், அணுகுண்டுத் தாக்குதலானது ஒரு மனித உடலில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அறிவதற்கான சோதனைகளைச் செய்துவிட்டே கொடுத்தது ‘அணுகுண்டு விபத்து ஆணையம்’. அவள் இறந்துபோவதற்கு முன்பேயேகூட இந்தச் சோதனைகளை அந்த ஆணையம் நடத்தியிருந்த விஷயம் பிறகுதான் வெளியில் கசிந்தது.

சசாகியின் மறைவால் விம்மி விம்மி அழுத அவளின் தோழிகள், சசாகி செய்தது போக மிச்சம் செய்ய வேண்டிய 356 கொக்குகளையும் செய்து, மொத்தம் ஆயிரம் கொக்குகளாக சசாகியின் உடலோடு சேர்த்துப் புதைத்தார்கள். அணுகுண்டுத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் பிரதிநிதியாக, ஓர் நினைவுச் சின்னமாக, ஹிரோஷிமா அமைதி நினைவுப் பூங்காவில் சிலையாக நின்றுகொண்டிருக்கிறாள் சசாகி. (அமெரிக்காவின் வாஷிங்டன் மாநிலத்தில், சியாட்டில் நகரில் உள்ள அமைதிப் பூங்காவிலும் சசாகிக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது.)

ஹிரோஷிமாவில் குண்டு விழுந்தஆகஸ்ட் 6-ம் தேதியை ஒவ்வோர் ஆண்டும் ‘அமைதி நாளாக’க் கொண்டாடுகிறார்கள் ஜப்பானியர்கள். அன்று அவள் சிலைக்கு ஆயிரக் கணக்கில் காகிதக் கொக்குகளைச் சூட்டி அஞ்சலி செலுத்துகிறார்கள் ஜப்பானியக் குழந்தைகள்.

சசாகியின் சிலையின் பீடத்தில் இப்படிப் பொறிக்கப்பட்டுள்ளது... ‘இது எங்கள் அழுகை; இது எங்கள் பிரார்த்தனை. உலக அமைதி!’

இன்று சசாகியின் 78-வது பிறந்த நாள்.

 – 7.01.2021