உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, March 19, 2016

என் புகுந்த வீடு - 12

‘முரண்டு’ பிடிக்கிறேனா?

னந்த விகடன் ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதமும், கூடவே எனது ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ சிறுகதையும், தவிர இலக்கிய சிந்தனை வெளியிட்ட ஒரு புத்தகமும் எனக்கு வந்து சேர்ந்தது. 

கடிதத்தில்... “உங்களின் கதைகள் எதையும் நாங்கள் திருப்பி அனுப்புவதாக இல்லை. அவை கட்டாயம் ஆனந்த விகடனில் பிரசுரமாகவே செய்யும். ஒரு சில நீர்க்குமிழிகள் உடைந்து போவதால் கடலுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி ஒவ்வொரு நீர்க்குமிழியும் நினைத்துவிட்டால், கடலே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது! மற்றபடி, எங்களின் கடிதம் தங்கள் மனத்தைப் புண்படுத்தியிருப்பின் அதற்காக வருந்துகிறோம். இத்துடன் இலக்கிய சிந்தனை வெளியிட்ட சிறுகதைத் தொகுதியை இணைத்து அனுப்பியுள்ளோம். அதில் நாங்கள் குறிப்பிட்ட நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ சிறுகதை இடம்பெற்றுள்ளது. அதைத் தாங்கள் படித்துப் பார்த்தால், எங்களின் சந்தேகம் நியாயமானது என்று உங்களுக்கே புரிய வரும்.” என்று குறிப்பிட்டிருந்தார் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன்.

பின்னர், சம்பிரதாயமான ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்னும் குறிப்புச் சீட்டுடன் திரும்பி வந்திருந்த ‘அ-உ-ஆ’ கதையைப் பிரித்து, உள்ளே ஏதேனும் குறிப்புகள் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தேன். எதுவும் இல்லை. அடுத்த நொடியே அந்தக் கதையைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்துவிட்டேன். 

பின்னர் நிதானமாக, ஆனந்த விகடன் ஆசிரியர் அனுப்பி வைத்த, இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ சிறுகதையைப் படித்துப் பார்த்தேன். அந்தக் கதைக்கும் எனது அ-உ-ஆ கதைக்கும் சற்றும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘உன் கதையிலும் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டுச் சாகிறான்; அந்தக் கதையிலும் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டுச் சாகிறான். எனவே, அந்தக் கதையைப் பார்த்துத்தான் நீ காப்பி அடித்தாய்’ என்றால், அது எத்தனை அபத்தமாக இருக்கும்! அப்படியான சம்பந்தம்தான் அவரின் கதைக்கும் என் கதைக்கும் இருந்தது. ஆம்... அந்தக் கதையிலும் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான்; என் கதையிலும் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான். இதைத் தவிர, வேறு எந்தச் சம்பந்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

எனினும், எப்போது இரண்டும் ஒன்று என்று ஒரு பத்திரிகை ஆசிரியருக்குத் தோன்றிவிட்டதோ, அப்போதே அது அந்தப் பத்திரிகையில் மட்டுமல்ல, வேறு எந்தப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படத் தகுதியற்றதாகிவிட்டது, என்னைப் பொறுத்தவரையில்! எனவேதான், அந்தக் கையெழுத்துப் பிரதியை, அது விகடனிலிருந்து திரும்பி வந்ததுமே கிழித்துப் போட்டுவிட்டேன். அந்தக் கதை வரிக்கு வரி இன்னமும் என் மனத்தில் பதிந்திருக்கிறது. இப்போது அதைத் திரும்ப எழுதவேண்டுமென்றாலும் என்னால் எழுத முடியும். ஆனாலும், அதை நான் மீண்டும் எழுதவோ, வேறு எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவோ இல்லை; பின்னர் நான் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய ‘சாவி’ இதழிலும் அதை வெளியிட்டுக் கொள்ளவில்லை. (ஆனால், விகடனிலிருந்து திரும்பிய அந்த ‘மானம்’ என்கிற சிறுகதையை மட்டும் சாவியில் வெளியிட்டேன்.)

//ஒரு ரெண்டுங்கெட்டான் இளைஞன். தான் செய்வது இன்னதென்று அவனுக்குத் தெரியாது. ஆனால், அடிக்கடி கள்ளு குடிக்கப் போய்விடுவான். அவனை வைத்துக்கொண்டு அவன் அம்மா போராடுவாள். உறவுக்காரப் பெண் ஒருத்தியை அவனுக்குக் கட்டி வைத்துவிட்டால், அவனுக்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட நிம்மதி தனக்குக் கிடைக்கும் என்று நினைத்து, அதற்கு முனைவாள். அதற்குள் அவன் கள்ளு குடிக்கக் காசு புரட்டுவது எப்படி என்று யோசித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் ரூபாய் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு, அங்கே போய் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு விடுகிறான். அம்மாவின் ஆசை நிராசையாகிறது. அவ்வளவுதான் கதை!// இது ‘முரண்டு’ சிறுகதையின் சுருக்கம்.

என்னுடைய ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ கதைச் சுருக்கத்தைதான் முன்பே ஒரு பதிவில் சொல்லிவிட்டேன். இந்த இரண்டு கதைகளுக்கும் கிஞ்சித்தேனும் தொடர்பு உண்டா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இந்நிலையில், அந்தத் தொகுப்புப் புத்தகத்தை, கூடவே இன்னொரு பதில் கடிதத்தையும் இணைத்து விகடன் ஆசிரியருக்கு அனுப்பினேன்.

அதில்... ‘தாங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ கதைக்கும், என்னுடைய அ-உ-ஆ கதைக்கும் சற்றும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் ‘முரண்டு’ பிடிப்பதாக நீங்கள் கருதலாம். எப்போது தங்களுக்கு என் படைப்பின் மீது சந்தேகக் கோடு விழுந்துவிட்டதோ, அப்போதே தங்கள் பத்திரிகையில் பிரசுரமாகும் தகுதியை என் கதைகள் இழந்துவிட்டன என்பதுதான் உண்மை. என் முந்தைய கடிதத்தில் வெளிப்பட்ட கோபத்தில் என் பக்கம் நியாயம் இருப்பதாக உணர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட என் கதைகளைத் திருப்பியனுப்பாமல் பிரசுரிக்கத் தாங்கள் இசைந்திருக்கலாம். ஆனால், இன்னொரு முறையும் இப்படியான அனுபவம் நேராது என்பதற்கு என்னிடம் எந்த உத்தரவாதமும் இல்லை. அப்போது என் மீதான தங்களின் பழைய சந்தேகம் விஸ்வரூபம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, இந்தச் சிக்கல்களையெல்லாம் தவிர்ப்பதற்கான ஒரே வழி, எனது அத்தனை கதைகளையும் தாங்கள் உடனடியாக எனக்குத் திருப்பி அனுப்புவதுதான். எனவே, உடனடியாக என் கதைகளைத் திருப்பியனுப்ப வேண்டுகிறேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை!’ என்று எழுதியிருந்தேன்.

எனது முந்தைய கடிதத்தைப் படித்ததும் அப்பா என் மீது கடுங்கோபம் கொண்டார் அல்லவா! இந்த இரண்டாவது கடிதத்தால் மனம் மிக நொந்துபோனார். ஆனந்த விகடனில் இந்த ஜென்மத்தில்  இனி என் படைப்புகள் வெளியாகவே போவதில்லை என்று தெரிய வந்ததால் ஏற்பட்ட வேதனையை அவரால் தாங்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆனந்த விகடனை நேசித்தவர் அவர். அதில் என் சிறுகதைகள் பிரசுரமாவதால் அவருக்குக் கிடைக்கும் சந்தோஷம் கோடி ரூபாய் கொடுத்தால்கூட அவருக்குக் கிடைத்திருக்காது என்பதே உண்மை! எனவே, நான் புத்தகத்துடன் அந்த இரண்டாவது கடிதத்தை அனுப்பி வைத்த பின்பு, அவர் என்னுடன் முகம் கொடுத்துப் பேசுவதையே சில நாட்கள் நிறுத்தியிருந்தார்.

அவரை மீண்டும் என்னுடன் பேச வைத்தது, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடமிருந்து அடுத்த வாரம் வந்திருந்த மூன்றாவது கடிதம்!

(இன்னும் சொல்வேன்)

Monday, March 14, 2016

என் புகுந்த வீடு - 11

மனமும் மானமும்!
னந்த விகடனிலிருந்து வந்த அதிர்ச்சிக் கடிதத்தின் சாராம்சம் இதுதான்:

‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பியிருந்தீர்கள். அதைப் படித்துப் பரிசீலித்ததில், அந்தக் கதை சில ஆண்டுகளுக்கு முன் ‘தீபம்’ பத்திரிகையில் நாஞ்சில் நாடன் எழுதிய ‘முரண்டு’ என்னும் சிறுகதையோடு பெரிதும் பொருந்திப் போவது தெரிய வந்தது. அவர் தனக்கே உரிய வட்டார மொழியில் அந்தக் கதையை எழுதியிருந்தார். தாங்கள் பிராமண பாஷையில் எழுதியுள்ளீர்கள். அது மட்டுமே இரண்டுக்கும் உள்ள வித்தியாசம். ஆக, வேறு ஒரு பிரபல எழுத்தாளர் எழுதிய சிறுகதையைக் காப்பி அடித்து எழுதியதோடு மட்டுமல்லாமல், அதை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பியும் வைத்துள்ளீர்கள். இந்நிலையில், பிரசுரத்துக்காகத் தேர்ந்தெடுத்து வைக்கப்பட்டிருக்கும் தங்களின் மற்ற சிறுகதைகளை நாங்கள் ஏன் நிராகரிக்கக்கூடாது? இது குறித்துத் தங்களின் விளக்கத்தை உடனடியாக எதிர்பார்க்கிறோம்!’

கடிதத்தின் கீழே ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் கையொப்பம் இட்டிருந்தார். இதுதான் அவரது கையொப்பம் தாங்கி எனக்கு வரும் முதல் கடிதம்.

இதற்கு முன்னர் என் சிறுகதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டபோதோ, நிராகரிக்கப்பட்டபோதோ, கதைக்கு அனுப்பும் மணியார்டர் ஃபாரத்தின் அடியில் தகவல் அனுப்பும் பகுதியிலோ எஸ்.வரதராஜன், கே.சுந்தரம் என உதவி ஆசிரியர்கள்தான் கையொப்பம் இட்டு அனுப்புவது வழக்கம். இந்நிலையில், ஆசிரியரிடமிருந்து வரும் முதல் கடிதமே என் மீதான அபாண்டக் குற்றச்சாட்டைத் தாங்கி வரும் கடிதமாக அமைந்தது கண்டு நான் மிகவும் துடிதுடித்துப் போனேன்.

என்னைவிட அப்பாதான் மிகவும் மனம் நொந்து போனார். ‘ஆசிரியரே கையெழுத்திட்டு அனுப்பியுள்ளார். எனவே, இதற்கு அவசியம் உன் நிலையைத் தன்மையாக எடுத்துச் சொல்லி, விளக்கி ஒரு கடிதம் போடு!’ என்றார் அப்பா.

‘சரி, சரி’ என்றேனே தவிர, என் உள்ளம் கொதித்துக்கொண்டு இருந்தது. அப்போது ‘காணை’ என்னும் கிராமத்தில், நான் ‘பிரகாஷ் டெக்னிக்கல் இன்ஸ்டிட்யூட்’ என்னும் பெயரில் தட்டச்சுப் பயிலகம் வைத்து நடத்திக்கொண்டிருந்தேன். எனவே, அந்த லெட்டர் பேடிலேயே எனது பதில் கடிதத்தை டைப் செய்தேன்.

‘மதிப்பு மிக்க ஆசிரியருக்கு,

வணக்கம்.  வேறு ஒருவரின் கதையைக் காப்பி அடித்து எழுதியுள்ளதாக என் மீது ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளீர்கள். எந்த ஒரு வழக்கிலும், குற்றம் நிரூபிக்கப்படும் வரை, குற்றம் சாட்டப்பட்டவரை குற்றவாளி எனக் குறிப்பிடக்கூடாது என்பது விதி. ஆனால், தாங்களோ நான் அந்தக் கதையைக் காப்பி அடித்துதான் எழுதினேன் என்று தீர்ப்பே எழுதிவிட்டீர்கள். அது மட்டுமின்றி, ‘அதை எங்களின் பரிசீலனைக்கு அனுப்பியும் வைத்துள்ளீர்கள்’ என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அந்த ‘அனுப்பியும்’ என்பதில் உள்ள ‘உம்’ என்னைப் பெரிதும் உறுத்துகிறது.

தங்களுக்கு எந்த விளக்கமும் அளிக்க நான் தயாராக இல்லை. மேலும், தங்களுக்குத் திருப்தியளிக்கும் விதமாக என்னிடம் எந்த விளக்கமும் இல்லை. திட்டமிட்டுக் குற்றம் செய்பவனால்தான் ‘அலிபி’ தயாரித்து வைத்துக் கொள்ள முடியும். என்னிடம் அப்படி எந்த விளக்கமும் இல்லை.

எனவே, தங்கள் வசம் உள்ள என் சிறுகதைகள் அனைத்தையும், பிரசுரத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டவை மட்டுமின்றி பரிசீலனையில் உள்ள என் மற்ற கதைகளையும் சேர்த்து உடனடியாக எனக்குத் திருப்பி அனுப்பிவிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

எழுத்துலகம் என்பது ஒரு கடல். அதில் சில நீர்க்குமிழிகள் உடைந்து போவதால் கடலுக்குப் பெரிய நஷ்டம் ஒன்றுமில்லை!’

நான் எழுதிய இந்த அதிகப்பிரசங்கித்தனமான பதிலைப் படித்ததும், என் அப்பா மிகக் கோபமடைந்தார். ‘ஒரு பெரிய பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியரே விளக்கம் கேட்டுக் கடிதம் எழுதியிருக்கிறார் என்றால், தகுந்த காரணம் இல்லாமலா இருக்கும்? அதற்குப் பொறுமையாக உன் நிலையை எடுத்துச் சொல்வதை விட்டு, இப்படியா எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கடிதம் எழுதுவது?’ என்று கண்டித்தார். ஆனாலும், நான் அந்தக் கடிதத்தை விகடனுக்கு அனுப்பவே செய்தேன்.

அதன்பின்பும் என் மனம் ஓயவில்லை. அதுபற்றியே சுற்றிச் சுழன்றுகொண்டிருந்தது.

‘விளக்கில் விழுந்த விட்டில்’ என்னும் தலைப்பில், விகடனில் வெளியான என் முதல் சிறுகதையைப் படித்துவிட்டு, ஆனந்த விகடன் அலுவலகத்தில் என் முகவரியைக் கேட்டு வாங்கி, அந்தக் கதையைப் பாராட்டி எனக்குக் கடிதம் எழுதியவர் திரு.மார்க்கபந்து அவர்கள். பிரபல பத்திரிகையாளர் ‘மகரம்’ அவர்களின் புதல்வர். எனக்கு அவர் ஞாபகம்தான் அப்போது வந்தது. என் மன வேதனையை அவரிடம் பகிர்ந்துகொள்ள விரும்பி, உடனடியாக ஒரு கடிதத்தை டைப் செய்யத் தொடங்கினேன்.

சிங்கிள் லைன் ஸ்பேஸில் தட்டச்சு செய்தும்கூட, ஏ-4  ஷீட்டில் நான்கு பக்கங்கள் கொண்ட கடிதமாக உருவெடுத்தது அது.

அதில் நான் குறிப்பிட்டிருந்த சில முக்கிய விஷயங்களை மட்டும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்.

தினமணி கதிருக்கு ‘மாடு காத்துக்கொண்டிருக்கிறது’ என்ற தலைப்பில் ஒரு சிறுகதையை நான் அனுப்பியிருந்தேன். மூன்று மாதங்களுக்குப் பிறகும் அங்கிருந்து அது தொடர்பாக எந்த பதிலும் வராததால், என் கதை என்ன ஆயிற்று, பரிசீலனையில் உள்ளதா, காத்திருக்கவா என்று கேட்டுக் கடிதம் எழுதினேன். அதற்கும் பதில் இல்லை. மேலும் ஒரு மாதம் காத்திருந்தும் பதில் இல்லை. பின்னர், அந்தக் கதையை வேறு பத்திரிகையின் பரிசீலனைக்கு அனுப்பப்போவதாகவும், எனவே நீங்கள் அதைப் பரிசீலிக்க வேண்டாம் என்றும் சொல்லி, இன்னொரு கடிதம் அனுப்பினேன். அதற்கும் அங்கிருந்து பதில் இல்லை.

சில நாட்கள் கழித்து, அதே கதையை வேறு பத்திரிகைக்கு அனுப்பினேன். அங்கே சில மாத காலம் பரிசீலனையில் இருந்து திரும்பியதும், அதை இன்னொரு பத்திரிகைக்கு அனுப்பினேன். இப்படியாக ஒன்றரை வருடங்களில் அந்தக் கதை ஐந்தாறு பத்திரிகைகளுக்குப் போய்,கடைசியாக ஒரு பத்திரிகையின் பரிசீலனையில் இருக்கும்போது, நான் சற்றும் எதிர்பாராதவிதமாக, முதன்முதலில் நான் அந்தக் கதையை அனுப்பிய தினமணி கதிர் பத்திரிகையிலேயே பிரசுரமாகி, புத்தகம் என் வீட்டுக்கு வந்தது.

பெரிய சைஸ் தினமணி கதிர். அதில் என் கதை ஒரு வரி கூட எடிட் செய்யப்படாமல், திருத்தம் எதுவும் செய்யப்படாமல், ஐந்து முழுப் பக்கங்களுக்கு மிகப் பெரிய கதையாகப் பிரசுரம் ஆகியிருந்தது. ஆனால், அந்த மகிழ்ச்சியை நான் அனுபவிக்க முடியாமல், உண்மையில் பதறிப் போய், என் நிலைமையை விளக்கி, அந்தக் கதையை அடுத்தடுத்து நான் பரிசீலனைக்கு அனுப்பிய பத்திரிகைகளுக்கெல்லாம் ஒரு தன்னிலை விளக்கக் கடிதம் அனுப்பினேன். அந்தக் கதையை அந்தப் பத்திரிகைக்கு அனுப்புவதற்கு முன் நான் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்ததோடு, அந்தக் கதை அவர்களின் பரிசீலனையில் இருந்தால் தவிர்த்துவிடுமாறும், இனி இது போன்ற தவறுகள் நிகழாமல் பார்த்துக் கொள்வதாகவும் அதில் எழுதியிருந்தேன். இந்தக் கடிதத்தை அப்போது ஆனந்த விகடன் பத்திரிகைக்கும் அனுப்பியிருந்தேன். இந்தக் கடிதங்களை ‘சர்ட்டிஃபிகேட் ஆஃப் போஸ்டிங்’ மூலம் அனுப்பியிருந்தேன். ‘சர்ட்டிஃபிகேட் ஆஃப் போஸ்டிங்’ என்பது வேறொன்றுமில்லை. நாம் கடிதம் அனுப்பும் முகவரிகளை ஒரு தாளில் எழுதி, அவற்றை நான் போஸ்ட் செய்ததற்குச் சாட்சியாக போஸ்ட் ஆபீஸில் ஒரு முத்திரை வைத்துத் தருவார்கள். மேற்படி கடிதம் போய்ச் சேர்வதற்கு அது உத்தரவாதமில்லை என்றாலும், நான் அனுப்பினேன் என்பதற்கான உத்தரவாதமாக இருக்கும்.

இன்னொரு சம்பவம். ‘மானம்’ என்னும் தலைப்பில் ஒரு சிறுகதையை எழுதி, வழக்கம்போல் ஆனந்த விகடனுக்கு அனுப்பியிருந்தேன். கதைச் சுருக்கம் இதுதான்...

வேலையின்றித் தவிக்கும் ஒருவன் குடும்பத்தை நடத்த மிகவும் சிரமப்படுகிறான். கடன்காரர்களின் தொல்லை; உறவினர்களின்   கேலிப் பேச்சு; மனைவியின் குத்தல் மொழிகள்.

அவன் ஓர் எழுத்தாளன். அவனது சிறுகதைகள் அவ்வப்போது பத்திரிகைகளில் வெளியாவதுண்டு. ஒரு பத்திரிகை நடத்திய சிறுகதைப் போட்டியில் அவனும் கலந்துகொண்டு ஒரு சிறுகதை அனுப்பி வைக்கிறான். பரிசீலனையில் அவனது கதை முதற்பரிசுக்குரியதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பிரசுரமாகிறது. கூடவே அதற்கான காசோலையும் வருகிறது. மிகவும் மகிழ்கிறான். ஐயாயிரம் ரூபாய் என்பது பெரிய தொகை. கடன்களை அடைத்துவிடலாம். ஒரு நல்ல வேலை கிடைக்கும் வரை ஒரு இரண்டு மூன்று மாதங்கள் குடும்பத்தை ஓட்டலாம் என்று கணக்குப் போடுகிறான்.

அவன் அந்தக் காசோலையை பக்கத்து ஊரில் இருக்கும் டவுனில் உள்ள பேங்க்கில் (அவனது ஊர் மிகக் குக்கிராமம்) டெபாசிட் செய்ய எண்ணியிருக்கும் நேரத்தில் ஒரு வாரம் கடந்து, அந்தப் பத்திரிகையின் அடுத்த இதழும் கடைகளில் விற்பனைக்கு வந்துவிடுகிறது. தன் கதை குறித்து ஏதேனும் வாசகர் கடிதம் வந்திருக்கிறதா என ஆர்வத்தோடு வாங்கிப் பார்க்கிறான். அதில் ஒரு வாசகர் கடிதம் கட்டம் கட்டிப் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. முதற்பரிசு பெற்ற கதை ஏற்கெனவே மலையாளப் பத்திரிகை ஒன்றில் வந்த கதையின் அப்பட்டமான காப்பி; சின்னச் சின்ன மாற்றங்கள் தவிர, அதன் தமிழாக்கம்தான் இது என்கிறது அந்தக் கடிதம். அதிர்கிறான்.

உடனடியாக அந்தப் பத்திரிகைக்கு ஒரு கடிதம் எழுதுகிறான். தனக்கு மலையாள மொழி தெரியாது என்றும், மேற்படி கதை தனது சுய கற்பனையில் உருவான கதையே என்றும், இருப்பினும் இதே போன்ற கருத்து கொண்ட கதை வேறு ஒருவரின் கற்பனையில் உருவாகிவிட்டது என்பதால் தார்மிகமாக தனது கதை முதற்பரிசுக்குரிய தகுதியை இழக்கிறது என்று  தான் கருதுவதாகவும், எனவே முதற்பரிசுக்கான காசோலையை இத்துடன் திருப்பி அனுப்புவதாகவும் அதில் எழுதி, காசோலையைத் திருப்பி அனுப்பிவிடுகிறான்.

வாக்களித்திருந்தபடி அவனால் கடன்களை அடைக்க முடியாமல் நாளை அவன் மானம் கப்பலேறும். ஆனால், இலக்கிய உலகில் தனது மானம் பறிபோகாமல் காப்பாற்றிக்கொண்ட பெருமையும் மகிழ்வும் அவனுக்கு உண்டு என்பதாகக் கதையை முடித்திருந்தேன்.

இந்த இரண்டு சம்பவங்களையும் விலாவாரியாக என் நண்பர் மார்க்கபந்துவுக்கு எழுதி, இப்படி அத்தனை பத்திரிகைகளுக்கும் சிரத்தையாகக் கடிதம் எழுதியவன், ‘மானம்’ என்கிற கதைக் கருவை மனதில் யோசித்தவன் வேறு யாரோ எழுதிய கதையைக் காப்பி அடித்து எழுதத் துணிவேனா என்று மனம் நொந்து கேட்டிருந்தேன்.

அடுத்த சில நாட்களில், ஆனந்த விகடன் ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதமும், கூடவே எனது ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ சிறுகதையும், தவிர இலக்கிய சிந்தனை வெளியிட்ட ஒரு புத்தகமும் எனக்கு வந்து சேர்ந்தது.

(இன்னும் சொல்வேன்)

Wednesday, March 09, 2016

என் புகுந்த வீடு - 10

விளக்கில் விழுந்தது விட்டில்!

‘விளக்கில் விழுந்த விட்டில்’ - 1980-ம் ஆண்டு, ஆனந்த விகடனில் வெளியான என் முதல் சிறுகதையின் தலைப்பு இது.

எத்தனை பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளியானாலும், ஆனந்த விகடனில் சிறுகதைகள் பிரசுரமானால், அந்த எழுத்தாளருக்குக் கிடைக்கும் மரியாதையே தனி என்பதை எனக்கு நிரூபித்த கதை அது. அதன்மூலம் திரு.மார்க்கபந்து அவர்கள் (எழுத்தாளர் மகரம் அவர்களின் புதல்வர்) எனக்கு நண்பரானார். அவர் மூலம் எழுத்துலக மகரிஷி லா.ச.ராமாமிருதத்தைச் சந்தித்துப் பேசும் பாக்கியம் பெற்றேன். இன்னும் பல நல்ல விஷயங்கள், விகடனில் என் கதை பிரசுரமானதன் மூலம் கிடைத்தன. முக்கியமாக,  நானும் ஓர் எழுத்தாளன் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அந்தஸ்தைக் கொடுத்தது, விகடன் எனக்களித்த அங்கீகாரம்.

இது என் எழுத்துலக அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் தொடரல்ல! பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மேன்மையான குணங்கள் குறித்தும், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்தும் விவரிக்கும் தொடர். இருப்பினும், அடுத்து நான் எழுதவிருக்கிற விஷயத்துக்கு, மேலே சொன்ன இரண்டு பாராக்கள் முக்கியமான ஆரம்பமாக இருக்கும் என்பதாலேயே அவற்றை எழுத நேரிட்டது.

விகடனில் என் முதல் சிறுகதை வெளியான பிறகு, அடுத்தடுத்து சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எனது கதைகள் விகடனிலும், இதர பத்திரிகைகளிலும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருந்தன. நான் முதன்முதலாக எழுதிய 12 சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலிருந்தும் திருப்பி அனுப்பப்படாமல் பிரசுரமாகிவிட்டன என்பதை இந்த இடத்தில் நைஸாகப் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

1984-ம் ஆண்டு - ஆனந்த விகடனில் என் சிறுகதைகள் அதிகம் வெளியான காலகட்டம். ஆனால், அதற்கு முன்னதாக விகடனோடு ஒரு சின்ன மன வருத்தம், மனஸ்தாபம் ஏற்பட்டது எனக்கு. எனது சின்ன வயது, பக்குவமின்மை, அனுபவமின்மை ஆகியவையே அதற்குக் காரணம் என்றால் மிகையில்லை.

என் கதைகளை அதிகம் வெளியிட்டு ஊக்குவித்துக்கொண்டு இருந்ததால், நான் புதிதாக எழுதும் எந்த ஒரு சிறுகதையையும் முதலில் ஆனந்த விகடனுக்கு அனுப்பி, அங்கே நிராகரிக்கப்பட்டால்தான் அதை இதர பத்திரிகைகளுக்கு அனுப்புவது என்பதை வழக்கமாகவே வைத்திருந்தேன்.

ஒருமுறை, அப்படி நான் அனுப்பிய சிறுகதைகள் அடுத்தடுத்து ஆனந்த விகடனால் அங்கீகரிக்கப்பட்டு, பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. இது எனக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தர, தொடர்ந்து என் கதைகளை விகடனின் பரிசீலனைக்கே அனுப்பிக்கொண்டு இருந்தேன், சிலந்தி, தொடரும் கதைகள், பின்னால் ஒரு பெண், மாறுபட்ட கோணங்கள் என, எனது பல கதைகள் விகடனில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை விரைவில் விகடனில் பிரசுரமாகும் என்கிற நற்செய்தியைத் தாங்கிக் கடிதங்கள் வந்துகொண்டிருந்தனவே தவிர, அவை பிரசுரமாகிற வழியைக் காணோம். இப்படியே கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் ஓடிவிட்டது. கிட்டத்தட்ட எனது எட்டு கதைகள் விகடனில் பிரசுரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தன.

இந்நிலையில், ஒன்பதாவதாக நான் ஒரு சிறுகதை எழுதினேன். ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ என்பது தலைப்பு.

கணவன், மனைவி. அம்மா சிரமப்பட்டு வளர்த்துப் பையனை ஆளாக்கியிருந்ததால், இவனுக்கு அம்மாவின் மீது ஏக மரியாதை. அவள் சொல்லைத் தட்ட மாட்டான். அதே நேரம், மனைவி மீதும் அக்கறை, பாசம் எல்லாம் உண்டு. ஆனால், அதையெல்லாம் வெளிக்காட்டத் தெரியாதவன். தானுண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பான்.

திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த பின்பும், அந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை. காத்திருந்து காத்திருந்து, ஒரு நாள் அம்மாவின் சொல்லைத் தட்ட முடியாமல், மனைவியைப் பரிசோதிக்க மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான் அவன். பரிசோதனையில் அவள் குழந்தைப் பேற்றுக்குத் தகுதியானவள் இல்லை என்று தெரிய வருகிறது.

அம்மாவுக்கு இது தெரிந்ததும், அவனை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளச் சொல்கிறாள். மருமகள் பேரில் தனக்குக் கோபம் இல்லை என்றும், வழக்கம்போல் அவள்தான் இந்த வீட்டு பட்டத்து ராணி என்றும், குடும்பம் தழைக்க வேண்டும் என்பதற்காகவே அவனை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளச் சொல்வதாகவும் சொல்கிறாள். அவன் மறுக்கிறான்.

தினம் தினம் அம்மா அவனை வார்த்தைகளால் கரைக்க முயல்கிறாள். எங்கே அவன் மனம் மாறி, வேறு பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொள்வானோ என்று மனசுக்குள் குமைந்துகொண்டிருக்கிறாள் அவன் மனைவி.

அன்று இரவு, மன பாரம் தாங்காமல் அவனிடம் வெடித்து அழுகிறாள். இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று அவன் என்னதான் சமாதானம் சொன்னாலும் அவள் கேட்பதாயில்லை. முதலில் மறுத்து, பின்பு அம்மா வ ற்புறுத்தினாள் என்பதற்காக அவன் செய்த காரியங்களைப் பட்டியலிடுகிறாள். அத்தனையையும் செய்தவன், அம்மா சொன்னாள் என்பதற்காக நாளையே மனம் மாறி இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம் என்று கேட்கிறாள். அவனது வாக்குறுதியை நம்ப மறுக்கிறாள். அவனுக்கு அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.

மறுநாள், வழக்கம்போல் வேலைக்குப் போய், மாலையில் வீடு திரும்புகிறான். அவன் உள்ளே நுழைந்ததுமே அம்மா பிடித்துக் கொள்கிறாள். ‘அப்புறம் என்னப்பா, நான் சொன்னதை யோசிச்சியா? நாம ஒண்ணும் அவளை (அவன் மனைவியை) கைவிட்டுடப் போறதில்லை. முன்பு போல் அவள்தான் இந்த வீட்டு ராணி. அதனால அவள் பயமோ, தயக்கமோ படவேண்டியதே இல்லை. வேணும்னா இந்த வீடு, சொத்து எல்லாத்தையும் அவ பேரில் மாத்திக்கட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனா, ஒரு வாரிசுக்காக நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க அவள் சம்மதிக்கணும்’ என்கிறாள்.

‘அது முடியாதும்மா’ என்கிறான் அவன். ‘ஏன் முடியாது? உனக்கென்ன குறைச்சல்? நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணும்; எனக்கொரு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுக்கத்தான் வேணும்’ என்கிறாள் அம்மா பிடிவாதமாக. இதையெல்லாம் தவிப்பும் பதைப்புமாக அருகில் நின்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள் அவன் மனைவி.

‘இல்லேம்மா. வாரிசுக்காகத்தானே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ ஆசைப்படறே? உன் ஆசை நிறைவேறாது’ என்கிறான் மகன். ‘அதான் ஏன்னு கேக்கறேன்?’ என்கிறாள் தாய்.

‘ஏன்னா, நான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துக்கிட்டேன்’ என்று சொல்லிவிட்டு, அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் மாடிப் படிகளில் ஏறி மேலே செல்கிறான் அவன். மனைவியின் மனத்தில் கணவன் கோபுரமாக உயர்ந்து நிற்கிறான் என்பது கதையின் சாரம்.

வழக்கம்போல் இந்தக் கதையையும் ஆனந்த விகடனின் பரிசீலனைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன்.

என் அப்பாதான் ரொம்ப உற்சாகமாக இருந்தார். “சூப்பர் கதைடா இது. பாரேன், இதுவும் செலக்ட் ஆயிடுச்சுன்னு சீக்கிரமே லெட்டர் வரும் விகடன்லேர்ந்து” என்று முழு நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டு இருந்தார்.

மேற்படி கதை பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற கடிதத்தோடு கதை திருப்பி அனுப்பப்பட்டிருந்தால், என் அப்பா வேண்டுமானால் ஏமாற்றம் அடைந்திருப்பாரே தவிர, நான் சற்றும் ஏமாற்றமோ வருத்தமோ அடைந்திருக்க மாட்டேன்.

ஆனால், நடந்ததோ வேறு!

என் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியதோடு மட்டுமின்றி, பிரசுரத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என்  மற்ற கதைகளையும் ஏன் திருப்பியனுப்பக் கூடாது என்று கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன். விளக்கில் விழுந்த விட்டில் போல் துடிதுடித்துப் போனேன்.

எனக்கே அதிர்ச்சியாக இருந்த அந்தக் கடிதம் என் அப்பாவுக்கு எத்தனை பெரிய இடியாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், ஆனந்த விகடன் ஆசிரியரின் அந்தக் கடிதத்துக்கு நான் போட்ட பதில், என் அப்பாவுக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, என் மீது அவரைக் கடுங்கோபம் கொள்ளச் செய்தது.

(இன்னும் சொல்வேன்)