உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, August 19, 2010

சுஜாதா கேள்வி; சாவி கோபம்!

பொதுவாக சாவி சாரை மிகுந்த கோபக்காரர் என்று பலர் வர்ணித்துக் கேட்டிருக்கிறேன். நானே நேரடியாகவும் அவர் கோபத்துக்கு ஆளாகியிருக்கிறேன்.

பல ஆண்டுகளுக்கு முன், நான் ஆனந்த விகடனில் சேர்ந்த புதிதில், ஒரு குறிப்பிட்ட விஷயத்தில் மன வருத்தமும் கோபமும் கொண்டு, அன்றைய ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியன் அவர்களின் அறைக்குச் சென்று, ஆனந்த விகடன் இம்ப்ரின்ட்டிலிருந்து என் பெயரை நீக்கிவிடும்படி முறையிட்டேன். அவருக்கு அது பெரிய மன வருத்தத்தை ஏற்படுத்திவிட்டது. இரண்டு மணி நேரத்துக்கும் மேல் என்னோடு பொறுமையாகப் பேசி, என் வருத்தத்தையும் கோபத்தையும் போக்கி, சமாதானப்படுத்தி அனுப்பினார் ஆசிரியர். அப்போது, “ரவி! சாவி சார் கிட்டே நீங்க பல வருஷம் வொர்க் பண்ணியிருக்கிறதாலே, அவரிடம் உள்ள பல நல்ல குணங்கள், திறமைகள் உங்க கிட்டேயும் இருக்கிறதைப் பார்க்கிறேன். சந்தோஷம். ஆனா, சாவி சார் கிட்டே இருக்கிற கோபமும் உங்க கிட்டே தொத்திக்கிட்டு இருக்கு. அது மட்டும் வேண்டாம். முன்னேற்றத்துக்கு கோபம் ஒரு முட்டுக்கட்டை!” என்றார்.

எனக்கென்னவோ, சாவி சாரின் கோபமும் பிடித்திருந்தது. சிங்கத்துக்கு அதன் கர்ஜனைதானே அழகு! இரண்டு மூன்று முறை சாவி சாரிடம் நானும் பதிலுக்குக் கோபித்துக்கொண்டு விலகிப் போனாலும், மீண்டும் மீண்டும் அவரிடமே போய்ச் சேர்ந்ததற்கு, அவரது கோபத்தை நான் ரசித்ததும் ஒரு காரணம். கோபம் இருக்கும் இடத்தில்தான் குணமும் இருக்கும் என்பார்கள். அதற்கு சாவி சார் நல்ல உதாரணம்.

சரி, முந்தின பதிவின் தொடர்ச்சிக்கு வருகிறேன்.

பரிசுக்குரிய சிறுகதைகளை முடிவு செய்து, பத்திரிகையில் வெளியிட அன்றைக்குத்தான் கடைசி நாள். மதியம் 2 மணிக்குத் தொடங்கிய நடுவர் குழு கலந்துரையாடல் மாலை 5 மணி வரை தொடர்ந்தது. சட்டுப் புட்டென்று ஒரு தீர்மானத்துக்கு வந்து, பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்க விரும்பினார் ஆசிரியர் சாவி.

அப்போது சுஜாதா கேட்டார்... “சார்! இந்தப் பதினைஞ்சு கதைகளையும் நான் படிச்சுட்டேன். இதிலிருந்துதான் நான் பரிசுக் கதைகளைத் தேர்வு செய்யணுமா?”

“ஆமாம்! ஏன்?” - சாவி சார் புரியாமல் கேட்டார்.

“இல்லை. நான் அந்த 65 கதைகளையும் படிக்க விரும்பறேன்!” என்றார் சுஜாதா.

“ரொம்பச் சந்தோஷம். தாராளமா படிங்க! பிரசுரமான அத்தனைக் கதைகளின் கட்டிங்குகளும் இருக்கு. கொடுக்கச் சொல்றேன். நாளைக்கு அல்லது மறுநாளைக்குள்ள உங்க வீட்டுக்குக் கொடுத்தனுப்பறேன்...”

“நல்லது! எனக்கு ஒரு வாரம் டயம் கொடுங்க. அத்தனைக் கதைகளையும் படிச்சுட்டு, அப்புறம் என் தீர்ப்பைச் சொல்றேன்” என்று ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார் சுஜாதா.

“சுஜாதா! என்ன சொல்றீங்க..! இன்னிக்கு இஷ்யூ முடிக்கணும். இதுல நாங்க ரிசல்ட்டை வெளியிடணும். அடுத்த வாரத்துக்கெல்லாம் ஒத்திப் போட முடியாது!”

“ஏன்... போடலாமே? பரிசீலனை நடந்துகொண்டிருக்கிறது. முடிவு அடுத்த இதழில்னு போட்டுடுங்களேன்!” என்றார் சுஜாதா.

“இப்ப நீங்க சொல்ற இதே வாக்கியத்தை நாங்க போன இதழ்லேயே போட்டாச்சு. அதனால, தள்ளிப் போட முடியாது. அதிருக்கட்டும்... இப்பவே உங்க தீர்ப்பைச் சொல்றதுல உங்களுக்கென்ன கஷ்டம்?” - சாவியின் குரலில் லேசாக சலிப்பும் எரிச்சலும் கலந்திருந்ததை நான் கவனித்தேன்.

“அத்தனைக் கதைகளையும் படிச்சாதான் எது பெஸ்ட்டுனு என்னால தீர்மானிக்க முடியும்!” என்றார் சுஜாதா.

“அதுக்கு இப்போ நேரமும் இல்லை; அவசியமும் இல்லையே?!”

“நேரம் இல்லைன்னா அது உங்க பிராப்ளம், சார். ஆனா, அவசியம் இருக்கு!”

“என்ன அவசியம்?”

“நீங்க என்ன அறிவிச்சிருக்கீங்க உங்க பத்திரிகையிலே? ‘போட்டிக்கு வந்த கதைகள்ல சிறந்த கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரத்துக்கு ஒன்று அல்லது இரண்டு கதைகள் வீதம் தொடர்ந்து பிரசுரம் பண்ணி, மொத்தம் 65 கதைகள் வெளியிட்டிருக்கோம். இந்த 65 கதைகளையும் நடுவர் குழு படிச்சுப் பார்த்துப் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுக்கும்’னுதானே போட்டிருக்கீங்க? அப்போ, நியாயமா பார்த்தா அந்த 65 கதைகளையும் நாங்க படிக்கணுமா, வேணாமா?” என்று லாஜிக்கான ஒரு கேள்வியைக் கேட்டார் சுஜாதா.

“ரொம்ப நியாயம் சுஜாதா! நான் ஒப்புக்கறேன். உங்களுக்கு அந்த 65 கதைகளையும் தரேன். தாராளமா படிங்க. ஆனா, இப்போ இந்த 15 கதைகள்லேருந்து உங்க தீர்ப்பைச் சொல்லுங்க” என்றார் சாவி.

“இல்லே சார், அது சரியா வராது...” என்று தயங்கினார் சுஜாதா.

“நீங்க ஏன் இப்படிப் பிடிவாதம் பிடிக்கிறீங்கன்னு எனக்குப் புரியலை சுஜாதா?” என்று சலித்துக்கொண்டார் சாவி. “இந்தக் கதைகள்ல எதுவுமே நல்லா இல்லைன்னு சொல்றீங்களா? அதான் உங்க அபிப்ராயம்னா, அதையாவது சொல்லுங்க. அப்படியே போட்டுடறேன்” என்றார் எரிச்சல் கலந்த குரலில்.

“அதில்லே சார்! வாசகர்கள் அந்த 65 கதைகளையும் படிச்சிருப்பாங்க. ஒருவேளை, இந்தப் பதினைந்து கதைகளைவிடவும் அருமையான கதை அதுல இருந்தா, ‘என்ன... சுஜாதா நடுவரா இருந்துக்கிட்டு, இந்த அருமையான கதையை செலக்ட் பண்ணாம, வேற எதையோ செலக்ட் பண்ணியிருக்காரே’ன்னு என்னையில்ல தப்பா நினைப்பாங்க?” என்றார் சுஜாதா.

“ப்பூ... இவ்வளவுதானா! இப்ப ஒரு ரகசியத்தை உங்களுக்குச் சொல்றேன். இந்த 65 கதைகளையும் நான்கூடப் படிச்சதில்லை. நானும் உங்களைப்போல 15 கதைகளை மட்டும்தான் படிச்சேன். இதுலேர்ந்துதான் நானும் என் முடிவைச் சொல்லப் போறேன்.அதனால கவலையே படாம, தைரியமா உங்க தீர்ப்பைச் சொல்லுங்க” என்றார் சாவி சார்.

சுஜாதாவுக்கு அப்போதும் தயக்கம். “இல்லே சார்... அது சரியா வராது...” என்று இழுத்தார்.

“இதோ பாருங்க சுஜாதா! இந்தப் பதினைந்து கதைகளைவிட அருமையான கதை, மீதி உள்ள கதைகள்ல இருந்துடப் போறதேங்கிறது உங்க கவலை. எனக்குப் புரியுது. ஆனா, போட்டிக்கு வந்த அத்தனைக் கதைகளையும் படிச்சு, செலக்ட் பண்ணிப் பிரசுரிச்சவன் ரவிபிரகாஷ்தான். வேறு யாரும் படிக்கவும் இல்லை; பரிசீலிக்கவும் இல்லை. அவனேதான் இந்த 65 கதைகள்லேருந்து மிகச் சிறந்ததா 15 கதைகளை செலக்ட் பண்ணிக் கொடுத்திருக்கான். அதனால, இதைத் தாண்டி வேறு சிறப்பான கதை மத்த செட்ல இருக்காதுங்கிறதுக்கு நான் கேரண்ட்டி! நீங்க தாராளமா இதுல எது பெஸ்ட்டுன்னு தேர்ந்தெடுக்கலாம்” என்றார் சாவி.

சுஜாதா அப்போதும் சமாதானமாகவில்லை. “சரி சார்! எனக்கு ஒரே ஒரு நாள் மட்டும் டயம் கொடுங்க. இந்த 65 கதைகளோட சினாப்ஸிஸை டைப் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. அதை நான் விறுவிறுன்னு படிச்சுட்டு, நாளைக்கு மத்தியானத்துக்குள்ள என் முடிவை உங்களுக்குச் சொல்லிடறேன்” என்றார்.

அவ்வளவுதான்... சாவி சார் கோபத்தின் உச்சிக்குப் போய்விட்டார். விருட்டென்று நாற்காலியைப் பின்னுக்குத் தள்ளிக்கொண்டு எழுந்தார்.

“இல்லே சுஜாதா! இது சரியா வராது. விட்டுடுங்க. ரவி! இந்தா மத்த நாலு பேரோட தீர்ப்பு. இதும்படி ரிசல்ட்டைப் போட்டுடு. கூடவே, ‘சுஜாதா இந்தச் சிறுகதைப் போட்டிக்கு நடுவராக இருக்க விரும்பாததால் விலகிக்கொண்டுவிட்டார்’னு ஒரு குறிப்பையும் போட்டுடு. இல்லேன்னா, இந்தத் தீர்ப்புக்கு அவரும் உடந்தைன்னு பாவம், அவருக்கு வாசகர்கள்கிட்டே கெட்ட பேர் வந்துடும்!” என்று உரத்த குரலில் சொல்லிவிட்டு, விறுவிறென்று அந்த அறையை விட்டு வெளியேறிச் சென்று, ஹால் சோபாவில் உட்கார்ந்துகொண்டுவிட்டார் சாவி சார்.

நாங்கள் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் ஒரு சில விநாடிகள் திக்பிரமையில் ஆழ்ந்திருந்தோம். எங்களிடையே ஒரு சங்கடமான மௌனம் நிலவியது.

சுஜாதா மெள்ள எழுந்து சென்று, சாவி சார் பக்கத்தில் போய் அமர்ந்தார். தணிந்த குரலில் ஏதோ பேசினார். நாங்கள் அதுவரை அறையிலேயே அமர்ந்திருந்தோம்.
“சுஜாதா கேக்குறதும் நியாயம்; சாவி சாரோட ஆதங்கமும் கரெக்ட்தான். இதுல நாம யார் பக்கம் சரின்னு எப்படிச் சொல்றது?” என்பதே அனைவரின் எண்ணமாக இருந்தது.

சற்று நேரத்தில், சாவி சார் என்னை அழைக்கும் குரல் கேட்டது. போனேன். “இந்தா ரவி, சுஜாதாவோட ஜட்ஜ்மென்ட்! அஞ்சு பேரோட ரிசல்ட்டையும் கூட்டிக் கழிச்சுப் பார். எந்த அஞ்சு கதைகள் பரிசுக்குத் தகுதி பெறுதுன்னு உடனே எனக்கு ரிசல்ட்டைச் சொல்லு பார்க்கலாம்!” என்றார் சாவி.

ஏற்கெனவே மற்ற நால்வரும் ஏக மனதாக முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுக்குரிய கதைகளைத் தேர்ந்தெடுத்துவிட்டிருந்ததால், எந்தப் பிரச்னையும் இல்லை. சுஜாதாவின் தீர்ப்பைப் பார்த்தேன். மற்றவர்கள் முதல் பரிசுக்குரியதாக ஏக மனதாகத் தேர்ந்தெடுத்த கதையையே சுஜாதாவும் தேர்ந்தெடுத்திருந்தார். இரண்டாம், மூன்றாம் பரிசுக்கதைகள் மட்டும் சற்றே முன்பின்னாக இருந்தன. இருப்பினும், மெஜாரிட்டிபடி பரிசுகளை அறிவிப்பதில் எந்தச் சிக்கலும் இல்லை.

சுமுகமாக எல்லாம் முடிந்தது. அதன்பின்னர் டின்னர். சாவியின் மூத்த புதல்வர் பாச்சா (பாலச்சந்திரன்) அவர்கள், எங்களை நிற்க வைத்துப் புகைப்படம் எடுக்க விரும்பினார் (கலைஞர், சாவி இவர்களோடு நாங்கள் இருக்கும் புகைப்படத்தை எடுத்ததும் பாச்சாதான்). வரிசையில் ஓரமாக நின்றிருந்த என்னை அருகே அழைத்த சாவி, “ரவி! உன் அபிமான எழுத்தாளர் சுஜாதா பக்கத்தில் நின்னு படம் எடுத்துக்கோ! பின்னாடி ஒரு நாள் எடுத்துப் பார்க்கிறப்போ சந்தோஷமா இருக்கும்” என்றார். பின்பு, “சுஜாதா! இவன் உங்க பரம ரசிகன். உங்க எழுத்துன்னா இவனுக்கு அத்தனை உயிர்!” என்று அவரிடம் என்னை அறிமுகப்படுத்தினார். சட்டென்று என் மனம் நெகிழ்ந்து, இதயம் இளகின மாதிரி ஓர் உணர்வு. சரியாக அதை வர்ணிக்கத் தெரியவில்லை.

சுஜாதாவின் தீவிர வாசகன் நான் என்பது உண்மைதான். ஆனால், அவரைவிடவும் என் அபிமானத்துக்குரியவர் சந்தேகமில்லாமல் சாவி சார்தான்! எனவே, அன்றைக்கு அவரே என்னை அழைத்து, சுஜாதா பக்கத்தில் நின்று போட்டோ எடுத்துக் கொள்ளச் சொன்னபோது, என் மனத்தில் உண்டான அதே உணர்வுகளை, இப்போதும் என்னால் உணர முடிகிறது. ஆனால், அதை உங்களுக்கு எப்படி விவரித்துச் சொல்வதென்றுதான் தெரியவில்லை.

சுஜாதாவை நான் முதன்முதல் நேரில் சந்தித்தது அந்த நிகழ்ச்சியின்போதுதான்!

.

Wednesday, August 18, 2010

சுஜாதா கிளப்பிய பிரச்னை!

வி.ஐ.பி-க்களுடன் சேர்ந்து நின்று புகைப்படங்கள் எடுத்து வைத்துக் கொள்வதில் எனக்கு எப்போதுமே ஆர்வம் இருந்தது இல்லை. அதே போல் ஆட்டோகிராஃப் வாங்குவதும். இது பற்றி ஏற்கெனவே ஒருமுறை பதிவு எழுதியிருக்கிறேன் என்று ஞாபகம்.

எனக்குத் தெரிந்து மிகப் பலருக்கு, வி.ஐ.பி-க்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வதில் பெரு விருப்பம் இருக்கிறது. புத்தகக் கண்காட்சி போன்ற ஏதாவது ஒரு பொது இடமாக இருந்தாலும் சரி, திருமணம் போன்ற ஏதேனும் விசேஷமாக இருந்தாலும் சரி, அங்கே தன் அபிமான வி.ஐ.பி-யைப் பார்த்துவிட்டால் போதும், அங்கேயே அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ளத் துடியாய்த் துடிக்கிறார்கள். ஆட்டோகிராஃப் வாங்கிவிடப் பெரு முயற்சி செய்கிறார்கள்.

அதைத் தவறு என்றோ, இங்கிதமற்ற செயல் என்றோ சொல்ல முடியாது. அந்த வி.ஐ.பி-யின் மேல் அவர் வைத்திருக்கும் அபிமானம் அத்தனை வீர்யம் உடையது என்று சொல்லலாம். ஆனால் பலர், அபிமான வி.ஐ.பி-க்களைப் பார்த்தால்தான் என்றில்லை; எந்த வி.ஐ.பி. சிக்கினாலும், அவரோடு நின்று புகைப்படம் எடுத்துக் கொள்ள முனைகிறார்கள். அது ஒரு மேனியாவாகவே அவர்களிடம் படிந்திருக்கிறது. என்னைப் பொறுத்தவரையில் இதுவும் கூடத் தவறானதோ, கேலிக்குரியதோ இல்லை. இத்தனைப் பெரிய மனிதர்களோடு தங்களுக்குப் பழக்கம் உண்டு என்று காண்பித்துக் கொள்வதில் அவர்களுக்கு ஒரு சந்தோஷம். அது ஒன்றும் தவறில்லையே!

ஆனால், சில வி.ஐ.பி-க்கள் இம்மாதிரி பொது இடங்களில் புகைப்படத்துக்கு போஸ் தருவதையும், ஆட்டோகிராஃப் போடுவதையும் விரும்புவதில்லை. முகச் சுளிப்போடு ஒப்புக்கொள்கிறார்கள். அல்லது, நிர்த்தாட்சண்யமாக மறுத்து விடுகிறார்கள். அப்போது அந்த நேயரின் மனம் வாணலியில் வறுபட்ட சுண்டைக்காய் போல் சுண்டிவிடுகிறது. வருத்தத்தில் ஆழ்ந்துவிடுகிறது. அது தேவையில்லை.

சாவி பத்திரிகையில் ஏறத்தாழ பத்து ஆண்டுகள் பணியாற்றியும், சாவி சாருடன் சேர்ந்து நின்று நான் புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை. எனக்கு அது தோணவில்லை என்பதே உண்மை. எழுத்தாளர் சுஜாதா, வாலி, வைரமுத்து, கிரேஸி மோகன், எஸ்.வி.சேகர், ராஜேஷ்குமார், பட்டுக்கோட்டை பிரபாகர், கே.வி.ஆனந்த், அனுராதா ரமணன், புஷ்பா தங்கதுரை... எனப் பலருடன் எனக்கு நட்போ, பழக்கமோ இருந்தும், இவர்கள் யாருடனும் நான் சேர்ந்து நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டது இல்லை.

ஏன் எனக்கு அந்த ஆர்வம் வரவில்லை என்பதற்கான காரணத்தை யோசித்தால், சட்டென ஒரு விஷயம்தான் ஞாபகத்துக்கு வருகிறது. என் பள்ளிப் பருவத்தில், விழுப்புரத்தில் நடைபாதையில் கைரேகை ஜோசியம் பார்ப்பவர் சிவாஜி கணேசனுடன், ஜெய்சங்கருடன், கே.ஆர்.விஜயாவுடனெல்லாம் சேர்ந்து நிற்பது போன்றோ, அவர்களுக்குக் கைரேகை பார்ப்பது போன்றோ போட்டோக்களை ஒரு பெரிய வண்ணக் குடையின் கீழ் காட்சிக்கு வைத்திருப்பார். அதைப் பார்த்ததிலிருந்து, ‘ப்பூ... இவ்வளவுதானா!’ என்று தோன்றிவிட்டது எனக்கு.

அதற்கு முன்பு வரை, வேறு யாரேனும், ஒரு பெரிய வி.ஐ.பி-யோடு தான் நின்றிருக்கும் புகைப்படத்தைக் காண்பித்தால், உடனடியாக நானும் அதே மாதிரி வி.ஐ.பி. யாரோடாவது நின்று போட்டோ எடுத்துக்கொள்ள மாட்டோமா என்று மனசு தவியாய்த் தவிக்கும். விழுப்புரத்தில் எங்கள் வீட்டில் குடியிருந்த குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் சென்னை, கற்பகம் ஸ்டுடியோவில் வேலை செய்துகொண்டு இருந்தார். அங்கே படமாக்கப்படும் எல்லா திரைப்படங்களிலும் ஏதாவது ஒரு ஸீனில் அவர் தலைகாட்டியிருப்பார். அவரும் வேறு சில நண்பர்களும் ஒரு சினிமா வி.ஐ.பி-யோடு சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஒருமுறை என்னிடம் காண்பித்தார். அதைப் பார்த்ததும், ‘இவருக்கு அந்தக் கொடுப்பினை கிடைத்திருக்கிறதே, எனக்கும் இந்த மாதிரி சினிமா பிரபலங்களோடு நின்று போட்டோ எடுத்துக் கொள்கிற பாக்கியம் கிடைக்காதா’ என்று மனசு ஏக்கத்தில் மூழ்கியது. அந்த நண்பர் சேர்ந்து படம் எடுத்துக்கொண்ட சினிமா வி.ஐ.பி. - தேங்காய் சீனிவாசன்.

சரி, எதையோ எழுத உத்தேசித்து, எங்கேயோ போய்விட்டேன். மிக அபூர்வமாக, எந்த மெனக்கிடலும் இல்லாமல் யதார்த்தமாக எடுத்துக்கொண்ட போட்டோதான், சமீபத்தில் ‘என் டயரி’ வலைப்பூவில் நான் வெளியிட்டிருந்த கலைஞர் மு.கருணாநிதியுடனான போட்டோ. அப்படி ஒரு போட்டோ எடுக்கப்பட்ட சம்பவத்தைச் சுத்தமாக நான் மறந்தே போயிருந்த நிலையில், பல ஆண்டுகளுக்குப் பிறகு, வேறு ஏதோ தேடிக்கொண்டு இருந்தபோது, யதேச்சையாகச் சிக்கியது அது. கூடவே கிடைத்த இன்னொரு போட்டோதான், இந்தப் பதிவில் மேலே நான் பதிவிட்டிருப்பது.

இடமிருந்து வலமாக: சாவி சாரின் இளைய மாப்பிள்ளை ஆடிட்டர் ராமமூர்த்தி, ராணிமைந்தன், நான், எழுத்தாளர் சுஜாதா, சாவி, எழுத்தாளர் சிவசங்கரி, டாக்டர் கி.வேங்கடசுப்பிரமணியன்.

இந்தப் போட்டோ எடுக்கப்பட்ட சூழ்நிலையைச் சுருக்கமாகச் சொல்லி முடித்து விடுகிறேன்.

சாவி வார இதழில் ‘மண் வளம் கமழும் மாவட்டச் சிறுகதைப் போட்டி’ ஒன்று அறிவித்திருந்தேன். அதற்கு ஆயிரத்துக்கும் மேல் சிறுகதைகள் வந்தன. நான் ஒருவனே அத்தனைக் கதைகளையும் படித்து, சிறப்பான கதைகளைத் தேர்ந்தெடுத்து, வாரம் ஒன்றாக வெளியிட்டு வந்தேன். இப்படி மொத்தம் 65 கதைகளை வெளியிட்டேன்.

இந்த 65 கதைகளிலிருந்து பரிசுக்குரிய ஆறு சிறுகதைகளை நடுவர் குழு தேர்ந்தெடுக்கும். நடுவர் குழுவில் இருந்தவர்கள்: எழுத்தாளர்கள் சுஜாதா, சிவசங்கரி, கவியரசு வைரமுத்து, டாக்டர் கி.வேங்கட சுப்ரமணியன் மற்றும் ஆசிரியர் சாவி.

65 கதைகளையும் படிக்க இவர்களுக்கு அவகாசம் இருக்காது என்பதால், அவற்றிலிருந்து மிகச் சிறப்பான 15 கதைகளைத் தேர்ந்தெடுத்து, தனக்கும் மற்ற நால்வருக்கும் ஜெராக்ஸ் பிரதிகள் கொடுக்கச் சொன்னார் சாவி. அடுத்த வாரத்தில் ஒரு நாள் அவர்கள் அனைவரையும் சாவி இல்லத்துக்கு அழைத்து, கலந்துரையாடி, பரிசுக்குரிய ஆறு கதைகளை ஏக மனதாகத் தேர்ந்தெடுப்பது என்பது திட்டம்.

அதன்படி, நானே பதினைந்து மிகச் சிறப்பான சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்தேன். அனைவருக்கும் அவற்றின் பிரதிகளை அனுப்பி, என்றைக்கு சாவி இல்லத்தில் நடுவர் குழு ஒன்றுகூடிக் கலந்துரையாடுவது என்றும் பேசி, அனைவருக்கும் வசதிப்படும் ஒரு தேதியை நிச்சயித்தேன்.

அந்த நாளும் வந்தது. கவியரசு வைரமுத்து தவிர, அனைவரும் உரிய நேரத்தில் ஆஜராகிவிட்டனர். வைரமுத்து அந்தச் சமயம் அமெரிக்கா சென்றிருந்த காரணத்தால், தனது தீர்ப்பை - எந்தக் கதைக்கு முதல் பரிசு, எது இரண்டாம் பரிசுக்குரியது என்றெல்லாம் ஒவ்வொரு கதைக்கும் தனித்தனியே மதிப்பெண்கள் கொடுத்துத் தெளிவாக எழுதிக் கையெழுத்திட்டு, தனது உதவியாளர் மூலம் கொடுத்தனுப்பியிருந்தார்.

அவரைத் தவிர, மற்றவர்கள் ஒரு அறையில் குழுமினோம். கலந்துரையாடல் தொடங்கியது.

ஒவ்வொரு கதையையும் ஆழமாகப் படித்து வந்திருந்தார் சிவசங்கரி. மிக ஆழமாக அலசி ஆராய்ந்து, தன் கருத்தைத் தெரிவித்தார். டாக்டர் கி.வேங்கட சுப்பிரமணியனுக்கு ரொம்பத் தாராள மனசு. ஒவ்வொரு கதையையுமே சர்க்கரைப் பந்தலில் பெய்த தேன்மாரி, தேனில் தோய்த்த பலாச்சுளை, பாலில் ஊறிய பாதாம் பருப்பு, நெய் வார்த்த சர்க்கரைப் பொங்கல், ஜீராவில் ஊறிய குலோப்ஜாமூன் என்றெல்லாம் ஏகபோகமாக வர்ணித்து, அனைத்துமே முதல் பரிசு பெறத் தகுதியுள்ளவை என்று சர்ட்டிஃபிகேட் கொடுத்தார்.

அடுத்து, சுஜாதாவின் முறை. அவரை அபிப்ராயம் சொல்லும்படி கேட்டார் சாவி. அப்போது சுஜாதா ஒரு பிரச்னையைக் கிளப்பினார்.

சாவி அதற்குத் தகுந்த விளக்கம் சொல்லிவிட்டு, பரிசுக்குரிய கதைகள் பற்றிய சுஜாதாவின் தீர்ப்பைச் சொல்லும்படி வற்புறுத்தினார்.

ஆனால், சுஜாதா மீண்டும் மீண்டும் தான் சொன்னதையே சொல்லி, “... அதன் பின்புதான் நான் என் தீர்ப்பைச் சொல்ல முடியும்” என்று சொல்ல, சாவிக்குக் கோபம் வந்துவிட்டது.

அப்படி சுஜாதா என்ன பிரச்னையைக் கிளப்பினார்?

அது அடுத்த பதிவில்!

.

Sunday, August 01, 2010

மொட்டை மாடியில் ‘கீதா’பதேசம்!

சென்னைப் பொது மருத்துவமனையில், இதயவியல் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் கீதா சுப்ரமணியன் அவர்கள், சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று விகடன் ஊழியர்களிடையே உரையாற்றினார்.

‘டாக்டர், அதுவும் இதயவியல் நிபுணர், என்ன பெரிதாகப் பேசிவிடப்போகிறார்... இதய நோய் பற்றிய மருத்துவக் குறிப்புகளைச் சொல்லி போரடிக்கப் போகிறார்’ என்று சற்றே அசுவாரசியமாகத்தான் அதில் கலந்துகொண்டேன்.

ஆனால், என்ன ஆச்சரியம்..! வார்த்தைக்கு வார்த்தை ரசித்துச் சிரிக்கும்படியாக, மிகவும் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசி அசத்திவிட்டார் டாக்டர் கீதா சுப்ரமணியன். இன்னும் சற்றுப் பேசமாட்டாரா என்று ஆசையாக இருந்தது.

இதய நோய் தொடர்பாகத்தான் பேசினார் என்றாலும், அதில் திருக்குறள், ஆன்மிகம் எனப் பலவற்றையும் கலந்தடித்துப் பேசினார் கீதா.

“கடவுள் ஒரு சாடிஸ்ட்!” என்றார். “ஆமாம். பின்னே, பாருங்களேன்... பாகற்காய், பூண்டுன்னு நம்ம உடம்புக்கு நல்லது பண்ற பொருள்களையெல்லாம் கசப்பா படைச்சிருக்கார். அதுவே, உடம்புக்குக் கெடுதி விளைவிக்கிற சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை வாய்க்கு ருசியா, இனிப்பா படைச்சிருக்கார்” என்றார். இயற்கைப் பொருள்களிலிருந்து மனிதன் படைத்ததுதான் சர்க்கரையும் வெல்லமும் என்று குறுக்குக் கேள்வி கேட்க வேண்டியதில்லை. ஒரு நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டதை அப்படியே எடுத்துக் கொள்வோம்.

“இதயத்தில் அடைப்பு என்றதும், எல்லோரும் பதறிவிடுகிறார்கள். அவசியமே இல்லை. பெரும்பாலானவை மருந்துகொடுத்துக் குணப்படுத்திவிடக் கூடியவைதான். என்னிடம் வருகிற இதய நோய் பேஷண்ட்டுகளே, ‘மேடம், ஒரு ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்துடலாமா?’ என்று கேட்கிறார்கள். வேண்டாம் என்று சொன்னால், ‘இவ நெஜம்மாவே இதய டாக்டரா, இல்லே போலி டாக்டரா?’ என்று நினைத்துவிடுகிறார்கள்.

தவிர, ‘எனக்கு பி.பி. இருக்கு; நான் ஹார்ட் பேஷண்ட்; ஆஞ்சியோகிராம் பண்ணிக்கிட்டேன். இருபதாயிரம் ரூபா செலவாச்சு. பைபாஸ் சர்ஜரி பண்ணிக்கிட்டேன். ரெண்டு லட்ச ரூபா செலவாச்சு’ன்னு சொல்லிக்கிறது ஒரு ஸ்டேடஸ் சிம்பலா போச்சு. “உனக்கு பயப்படும்படியா ஒண்ணுமில்லே. வெறும் மருந்து, மாத்திரை போதும்”னு சொன்னா, அவங்களுக்கு அது ஏதோ குறையா இருக்கு. அதான், நான் இப்பெல்லாம் என்கிட்டே வரவங்களுக்குச் சொல்றேன்... ஆஞ்சியோகிராமுக்கு ஆகுற இருபதாயிரம் ரூபாயை அப்படியே பேங்க்ல ஃபிக்ஸட் டெபாசிட்ல போடுங்க. ஆனா, வெளியில நண்பர்கள் கிட்டே ‘ஆஞ்சியோகிராம் பண்ணிக்கிட்டேன்; எனக்கு இவ்ளோ ரூபா செலவாச்சு’ன்னு பெருமையா சொல்லிக்குங்க. பணத்துக்குப் பணமும் மிச்சம் ஆச்சு; பெருமைக்குப் பெருமையும் ஆச்சு”ன்னு நானே சொல்லித் தரேன்.

நாற்பது வயசு வரைக்கும் ஓடி ஓடிப் பணத்தைச் சேர்க்கிறோம்; உடம்பைப் பத்திக் கவலைப்படறது இல்லே. அதுக்குப் பிறகு, அப்படிப் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைத் தண்ணியா செலவு பண்ணி உடம்புக்கு வைத்தியம் பார்க்கிறோம். பணத்தைப் பத்திக் கவலைப்படறது இல்லே. ஏன் இப்படி?

ஒரு ஆஞ்சியோகிராம் எடுக்கிறது நூறு எக்ஸ்ரேக்கள் - அதுவும் ஒரே சமயத்தில் - எடுக்கிறதுக்குச் சமம். இதை யாரும் புரிஞ்சுக்கிறது இல்லை. காரணம், இதய நோய்ன்னதுமே ஏற்படற பயம். உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுட்டா என்ன பண்றதுங்கிற பயம். தேவையே இல்லை. உங்க பயத்தைப் பல டாக்டர்கள் பணமாக்கிக்கிறாங்க. ஹார்ட்ல பிராப்ளமா, உடனே ஒரு ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்துடலாம்கிறாங்க. உங்களுக்கும் திருப்தியா இருக்கு. அவங்களுக்கும் லாபம்.

பொதுவா நாற்பது வயசுக்கு மேல, எல்லாரும் ‘டிரெட்மில்’ டெஸ்ட் எடுத்துக்கறது நல்லது. இதயத்துல அடைப்பு இருக்கான்னு சோதிக்கிற டெஸ்ட் அது. ரொம்ப எளிமையான டெஸ்ட். ஜி.ஹெச்-சுல பைசா செலவில்லாம எடுத்துக்கலாம். தனியார் ஆஸ்பத்திரிகள்ல போனா 700 ரூபா, 800 ரூபா ஆகும்.

ஆனா, இங்கே பரவலா என்ன ஒரு அபிப்ராயம் இருக்குன்னா, ஜி.ஹெச்ல நல்லா கவனிக்க மாட்டாங்க; தனியார் ஆஸ்பத்திரிகள்ல நல்லா கவனிப்பாங்கன்ற எண்ணம் இருக்கு. ரொம்ப தப்பு.

பி.பி-யின் அளவு 120-80 இருக்கிறதுதான் நார்மல். ஆனா, சில பேருக்கு 160-100-ன்னெல்லாம் இருக்கும். ‘என்னங்க, இப்படி இருக்கு?’ன்னு கேட்டா, ‘எனக்கு இதுதான் நார்மல் மேடம்’னுவாங்க. அப்படியெல்லாம் இல்லை.

அமெரிக்க ஜனாதிபதிக்கு தினசரி பி.பி. அளவு குறிச்சிட்டு வந்தாங்க டாக்டர்ங்க. ஒருநாள், ‘இன்றைக்கு ரூஸ்வெல்ட்டின் பி.பி. அளவு 200-120 இருந்துது. இது ரொம்ப நார்மல்தான்’னு எழுதியிருக்காங்க. பார்த்தா, மறுநாள் ரூஸ்வெல்ட் இறந்துட்டார். ஹார்ட் அட்டாக்!

மனிதன் சாகுறது ரெண்டு விதமா. சினிமாவுல எல்லாம் பார்த்திருப்பீங்களே! ஒண்ணு விக்கி விக்கிச் சாவான்; இல்லேன்னா ரத்தம் கக்கிச் சாவான். இதைத்தான் அன்னிக்கே நம்ம புலவர்கள் பாடி வெச்சிருக்காங்க.

‘முக்காலுக்கேகா முன் முன்னரையில் வீழா முன்
அக்காலரைக்கால் கண்டஞ்சா முன் - விக்கி
இருமா முன் மாகாணிக்கேகா முன் கச்சி
ஒருமாவின் கீழரையின்றோது.’

‘விக்கி விக்கிச் சாகுறதுக்கு முன்னே ஒரு தடவை காஞ்சிபுரம் போய், ஏகாம்பரநாதரை வணங்கு’ என்கிறார் காளமேகப் புலவர்.

‘கோலூன்றி நடப்பதற்கு முன், நரை திரை தோன்றுவதற்கு முன், எமனைக் கண்டு உயிர் அஞ்சி நடுங்குவதற்கு முன், விக்கலெடுத்து இருமத் தொடங்குவதற்கு முன், மயானத்துக்குச் செல்லும் முன், காஞ்சிபுரத்தில் ஒரு மாமரத்தின் கீழே எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதரை இப்போது சென்று வழிபடு’ என்பது இப்பாட்டின் பொருள்.

முக்கால், கால், அரை, அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, ஒருமாவின் கீழ் அரை என இதில் பழைய தமிழ் முறை அளவுக் கணிதப் பெயர்கள் எல்லாம் வந்திருந்தாலும், மேற்படி பாடலில் இவற்றுக்கு வேறு அர்த்தங்கள் உண்டு.

முக்கால் - மூன்று கால் (அதாவது, இரண்டு கால்கள் தவிர, கோலூன்றி நடப்பதை மூன்றாவது கால் என்கிறார்); கால் - உயிர்; காலரை - கால தூதரை; முன்னரை - முதலில் வரும் அறிகுறியான நரைத்தல்; மாகாணி - மயானம்; ஒரு மா - ஒரு மாமரம்.

‘அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்...’னு திருமூலர் பாடுறார். அதுல, ‘இடப்பக்கமே இறை நொந்தது என்றார்; கிடக்கப் படுத்தார், கிடந்தொழிந்தாரே’ன்னு சொல்றார். இடப் பக்கம் வலிச்சுதாம்; ஹார்ட் அட்டாக். அடுத்த க்ஷணம் ஆள் காலி!

நானூறு கிராம் பருப்பு சாப்பிடணும், இருநூறு மில்லி எண்ணெய் சேர்த்துக்கிட்டா போதும்னெல்லாம் ஒவ்வொண்ணையும் கணக்குப் பண்ணிச் சாப்பிட வேண்டியதில்லை. அதெல்லாம் சும்மா பம்மாத்து. நாம நார்மலா சாப்பிடுற சாப்பாடு ஓ.கே. எதுவுமே அளவுக்கு மிஞ்சாம பார்த்துக்கிட்டா போதும். உதாரணம, தேங்காயெண்ணெய்ல கொலஸ்ட்ரால் இருக்குன்னு இப்பல்லாம் அதை ஒதுக்குற ஒரு கலாசாரம் பரவிக்கிட்டிருக்கு. ஆனால், தேங்காய் எண்ணெய்ல இருக்கிற பல நல்ல விஷயங்கள் யாருக்கும் தெரியறதில்லே. அதை ஒதுக்கிட்டு, சன் ஃப்ளவர் ஆயில் பயன்படுத்தறோம். ஆனா, அதிலேயும் கொலஸ்ட்ரால் இருக்கு. என்ன ஒண்ணு, மத்த எண்ணெய்களோடு ஒப்பிடும்போது அளவு குறைவா இருக்கு. நாம அதுலேயே வடை, அப்பளம், பூரின்னு தினம் தினம் பண்ணிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம்னா அதுவும் கெடுதிதான்.

இங்கே இருக்கிறவங்கள்ல சிகரெட் எத்தனை பேர் பிடிப்பீங்க? சுமார் நாற்பது பேர் இருக்குமா? ஒரு பாக்கெட் சிகரெட் சுமார் ஐம்பது ரூபா. அப்படின்னா ஒரு நாளைக்கு 2,000 ரூபா. ஒரு மாசத்துக்கு 60,000 ரூபா. ஒரு வருஷத்துக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபா. எத்தனைப் பண விரயம்? இதை சேமிச்சு வெச்சா, இங்கே இன்னொரு பிளாக்கே கட்டலாமே? ஒரு ட்ரஸ்ட் மாதிரி ஏற்படுத்தினா, அவசரத் தேவைக்கு எடுத்துச் செலவழிக்கலாமே?” என்று டாக்டர் கீதா பேசப் பேச, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் சத்தியம் தொனித்தது.

இதய நோய் பற்றிப் பேசும்போதே, நமது பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை முறை பற்றியெல்லாம்கூட நகைச்சுவை ததும்ப, அதே சமயம் நல்லதொரு குடும்ப அமைப்பு முறையை எப்படியெல்லாம் பாழாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதை மனதில் அழுத்தமாக உறைக்கும்படியாகப் பேசினார் கீதா.

“ஆள் பாதி, ஆடை பாதின்னு சொல்லுவாங்க; இன்றைய பெண்கள் அதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டுப் பாதி ஆடைதான் அணியறாங்க!” என்றார்.

டாக்டர் கீதாவுக்குத் தெரிந்த ஒரு குடும்பம். பையன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். அங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்தான். நாகரிகமாக இருந்தாலும் அந்தப் பெண், தழையத் தழையப் பட்டுப் புடவை கட்டி, வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி, சாமி கும்பிட்டு அத்தனை சாஸ்திர சம்பிரதாயமாக இருந்ததைக் கண்டு இந்தப் பையன் பிரமித்து, இங்கே இப்படி ஒரு பெண்ணா என்று ஆச்சரியப்பட்டு, அவளைக் காதலித்தான். அவள் குடும்பமும் இங்கே தமிழ்நாட்டில்தான்; ஒரே குலம், கோத்திரம் என்பதால், இரு வீட்டாரின் சம்மதமும் கிடைக்க, திருமணம் இனிதே முடிந்தது.

அதற்குப் பின்புதான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பகல் பூராவும் பத்தினித் தெய்வமாக வளைய வந்த அந்தப் பெண், சாயந்திரமானதும்ம் உடம்பை வெளிக்காட்டும் கவர்ச்சிகரமான உடையணிந்து, டிஸ்கொதேவுக்குக் கிளம்பிவிட்டாளாம். போதாக்குறைக்கு மதுப் பழக்கம் வேறு அவளுக்கு இருப்பது தெரிந்தது. “என்ன இது... இத்தனை மோசமானவளா நீ! காலையில் அத்தனை பயபக்தியாய் இருந்தாயே, அது என்ன வேஷமா?” என்று அரண்டு போய்க் கேட்கவும், “ஏன்... காலையில் நான் அப்படி இருந்ததும் உண்மைதான். இப்போ இப்படி இருக்கிறதும் உண்மைதான். அது காலை ட்ரேடிஷன்; இது சாயந்திர ட்ரேடிஷன். ரெண்டையும் ஏன் ஒண்ணா போட்டுக் குழப்பிக்கிறே?” என்றாளாம் அவள் நிதானமாக.

அந்தத் தம்பதி இப்போது டிவோர்ஸ் வாங்கிக்கொண்டுவிட்டதாகச் சொன்னார் டாக்டர் கீதா.

மேலே சொன்ன சம்பவத்தை டாக்டர் கீதா விவரிக்கும்போது... ஒரு திரைப்படத்தில், ஆட்டோ டிரைவராக இருக்கும் வடிவேலு, ஒரு நாள் முழுக்க பெற்றோர் பக்தி, தொழில் பக்தியில் ஊறித் திளைப்பவராக இருந்துவிட்டு, சாயந்திரம் ஆறு மணி ஆனதும், மது அருந்திவிட்டு, அப்படியே தலைகீழாக மாறி, மோசமாக நடந்துகொள்கிற நகைச்சுவைக் காட்சிதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

*****

மாதம் இருமுறை நடக்கும் விகடன் மொட்டை மாடிக் கூட்டம் மிக, மிகப் பயனுள்ளது. சென்ற புதன்கிழமை டாக்டர் கீதா சுப்ரமணியன் பேசியதை உடனே பதியவேண்டும் என்று ஆர்வப்பட்டேன். ஆனால், வேலைப் பளு காரணமாக இயலவில்லை. மூன்று நாள் கழித்துப் பதிவிடும்போது, கீதாவின் பேச்சில் பல சுவாரசியமானவற்றை விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். டாக்டர் கீதாவுக்கு முன்பாக கடந்த இரண்டு கூட்டங்களில் சாரு நிவேதிதா, தங்கர்பச்சான் ஆகியோரும் எங்களிடையே உரையாற்றினார்கள். அவற்றைப் பதிவிடவே நேரம் அமையாமல் போய்விட்டது. அவர்கள் பேசியது ஞாபகம் இருந்தாலும், அதை இப்போது எழுதினால், அது நானே எழுதிய கட்டுரை போலத்தான் இருக்குமே தவிர, சூட்டோடு சூடாகப் பதிவிடும்போது கிடைக்கிற சுவாரசியம் அதில் இருக்காது.

எனவே, இனி வரும் காலங்களில் அவற்றை உடனுக்குடன் பதிவிட முயல்கிறேன்.

*****

னது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில், ஒரு பதிவில் நான் கொடுத்திருந்த புதிருக்கான விடையைச் சரியாகவும் முதலாவதாகவும் அனுப்பியவருக்கு என்னுடைய ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி நண்பரும், எழுத்தாளரும், சக பதிவருமான சொக்கன் அவர்கள் சரியான விடையை முதலாவதாக எனக்குப் பின்னூட்டம் இட்டிருந்தார்.

ஆனால், அவர் அந்தப் புத்தகத்தை ஏற்கெனவே படித்துவிட்டார் என்றும், ஒரு ஆர்வத்தின்பேரிலேயே போட்டியில் கலந்துகொண்டார் என்றும், எனவே மேற்படி புத்தகத்தைப் படிக்காத நண்பருக்கு அதை அனுப்பி வைத்தால் அவருக்குப் பயன்படுமே என்றும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அதே பதிவில், கீழே கண்டபடி என் பின்னூட்டத்தைக் கொடுத்திருந்தேன்.

‘நண்பர் சொக்கனின் சமீபத்திய பின்னூட்டத்தின்பேரில், அவருக்கு அடுத்தபடியாகச் சரியான விடையை முதலாவதாக எழுதியுள்ள திரு.ஆர் (நாலாவது பின்னூட்டம்) அவர்களுக்கு மேற்படி புத்தகத்தைப் பரிசாக அனுப்பிவைக்க விழைகிறேன். அவருக்குப் புத்தகம் தேவையில்லை, பொற்காசுகள்தான் தேவை எனும் பட்சத்தில் அடுத்து வரும் திரு.கணேஷ் ராஜாவுக்கு மேற்படி புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.’

ஜூலை 23 அன்று மேற்படி பின்னூட்டம் இடப்பட்டது. ஒரு வார காலத்துக்குப் பின்னரும் திரு.ஆர் யார் என்று தெரியாததால், அவரது முகவரியைத் தெரிவித்து எனக்குக் கடிதம் எழுதாததால், நான் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தபடி ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தை திரு. கணேஷ் ராஜா அவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பிவிட்டேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

.