உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, May 01, 2010

நெகிழ வைத்த வழக்கு!

‘சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி’ வரதராஜன் எங்களிடையே பேசியபோது, தனது துப்பறியும் நிறுவனம் மூலம் கண்டுபிடித்துத் தீர்த்து வைத்த பல வழக்குகள் பற்றிச் சொன்னார். அவற்றிலேயே தனக்கு ஆத்ம திருப்தி அளித்த வழக்காக அவர் சொன்னது, சவூதி அரேபியாவிலிருந்து ஒருவர் போன் செய்து, “என் மாமனார் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை, சார்! நானும் எப்படியெப்படியெல்லாமோ, எந்தெந்த வழிகளில் எல்லாமோ முயற்சி செய்து பார்த்து விட்டேன். என்னால் முடியவில்லை. தயவுசெய்து அவரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள்” என்று கேட்டுக்கொண்ட வழக்கு.

‘காணாமல் போன மனைவியைக் கண்டுபிடித்துக் கொடுங்கள், கணவனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள், வீட்டை விட்டு ஓடிப் போன மகனைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று வழக்குகள் வந்திருப்பதைப் பார்த்திருக்கிறோம். இதென்ன, மாமனாரைக் கண்டுபிடித்துக் கொடுங்கள் என்று கேட்கிறாரே இவர்! புதுசாக இருக்கிறதே’ என்று நினைத்தார் வரதராஜன். வழக்கத்துக்கு மாறான கோரிக்கையாக இருந்ததால், அந்த வழக்கில் ஒரு கூடுதல் ஆர்வமும் ஏற்பட்டது அவருக்கு.

சவூதி அரேபியாவிலிருந்து பேசியவர் ஒரு முஸ்லிம். அவரது மனைவியிடம் பேசினால், அவரின் அப்பா பற்றி ஏதாவது க்ளூ கிட்டும் என்று வரதராஜன் சொல்ல, அதன்படியே அந்தப் பெண்மணியும் வரதராஜனோடு தொலைபேசியில் பேசினார். அவரின் தந்தையைப் பற்றி விசாரித்தார் வரதராஜன்.

அந்தப் பெண்ணின் பெயர் நஸீமா. எட்டு வயதிலேயே தன் தந்தையை விட்டுப் பிரிந்துவிட்டிருந்தார் அந்தப் பெண். அம்மா நினைவு சுத்தமாக இல்லை. மனசில் பதிந்திருப்பது தந்தையின் நினைவு மட்டும்தான். அப்பா பெயர் இப்ராஹீம். அவரது முகம் லேசாக ஞாபகம் இருக்கிறது. அவரால் வாய் பேச முடியாது. காது கேட்கும். மற்ற அப்பாக்கள் தங்கள் குழந்தையைக் கையைப் பிடித்து பள்ளிக்கூடத்துக்கு நடத்தி அழைத்துச் செல்ல, இந்தப் பெண்ணின் அப்பா மட்டும் இவரைத் தன் தோள் மீது ஏற்றி உட்கார வைத்துச் சென்றிக்கிறார். இந்த ஞாபகம் அழுத்தமாக இருக்க, அதை வரதராஜனிடம் சொல்லும்போதே மேலே பேச்சு வராமல் விம்மியிருக்கிறார் நஸீமா.

நஸீமாவுக்குத் திருமணம் ஆகிக் கணவரோடு சவூதி சென்றதும், முதலில் ஒரு மகள் பிறந்தாள். அதற்கடுத்து இரண்டு வருடங்களில் இரண்டாவது மகள் பிறந்தாள். அவள் தன் தாத்தாவைப் போலவே வாய் பேச முடியாதவளாக இருந்தாள். ஆனால், அவள் பிறந்த நேரம் அவள் அப்பாவுக்கு அவரின் தொழிலில் அமோக வருமானம். அவர்களின் செல்ல மகளாக ஆனாள் அவள். அதே சமயம் நஸீமாவுக்குத் தன் அப்பா பற்றிய ஏக்கம் அதிகரிக்க, தன் கணவரை நச்சரிக்கத் தொடங்கினாள். இத்தனைக்கும் அவளின் அப்பா உயிரோடு இருக்கிறாரா, இல்லையா என்பதே அவளுக்குத் தெரியாது. இந்தச் சமயத்தில்தான் வரதராஜனைத் தொடர்பு கொண்டார் அவளின் கணவர்.

சரி, அப்பாவை எப்படிப் பிரிந்தார் அந்தப் பெண்?

வறுமையான குடும்பம். அப்பா இப்ராஹீம் ஒரு பீடிக் கம்பெனியில் பீடி சுத்தி, கிடைக்கும் சொற்பச் சம்பளத்தில்தான் தன் பெண்களை வளர்த்தார். அவருக்கு மூன்று பெண்கள். வறுமை அளவுக்கு அதிகமாகப் போகவே, தன் கடைசி மகளான நஸீமாவை ஒரு கான்ஸ்டபிள் வீட்டில் வேலைக்குச் சேர்க்க முடிவெடுத்தார் அப்பா. அப்போது அந்தப் பெண்ணுக்கு 8 வயது.

அவரே தன் பெண்ணை அழைத்து வந்து வேலைக்கு விடவில்லை. அந்த கான்ஸ்டபிளின் உறவுக்காரப் பெண்மணி ஒருத்தியும், வேறு ஒரு தெரிந்த உள்ளூர்க்காரப் பெண்மணியுமாக இரண்டு பேர் இந்தப் பெண்ணை அழைத்து வந்து அந்த கான்ஸ்டபிள் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டுப் போயிருக்கிறார்கள். அந்தக் கான்ஸ்டபிளின் மனைவியும் ஒரு லேடி கான்ஸ்டபிள்!

கணவன், மனைவி இருவரும் தங்களிடம் வேலைக்குச் சேர்ந்த இந்தப் பெண் குழந்தையை அத்தனைக் கொடுமைப்படுத்தியிருக்கிறார்கள். சரியாக வேலை செய்யவில்லை என்றால், இரும்புக் கம்பியைப் பழுக்கக் காய்ச்சித் தொடையில் சூடு வைத்திருக்கிறார்கள். கொடுமை தாங்காத இந்தக் குழந்தை ஒரு நாள் வீட்டைவிட்டு வெளியேறி ஓடிப் போய், தெருமுனையில் இருந்த நடமாடும் இஸ்திரி வண்டிக்காரரிடம் விஷயத்தைச் சொல்லிக் கதறியிருக்கிறது.

“உங்க வீடு எங்கம்மா இருக்கு தாயி?” என்று அனுதாபத்துடன் கேட்டிருக்கிறார் அவர். “அண்ணா நகர்” என்று சொல்லியிருக்கிறது குழந்தை. அவர் உடனே ஒரு பஸ் பிடித்து, குழந்தையை அழைத்துக்கொண்டு வந்து சென்னை, அண்ணா நகரில் இறங்கி, “என்ன தெரு?” என்று விசாரித்திருக்கிறார். குழந்தைக்குச் சரியாகச் சொல்லத் தெரியவில்லை.

வீட்டுக்கு வீடு பால் கவர் போடும் ஒரு பெண்மணியைப் பிடித்து, இந்தக் குழந்தையை அதன் வீட்டில் சேர்த்துவிடும்படி சொல்லி ஒப்படைத்துவிட்டு, இஸ்திரி வண்டிக்காரர் போய்விட்டார். பால்காரம்மா குழந்தையை எப்படி எப்படியோ விசாரித்தும், குழந்தைக்குத் தன் வீடு இருக்கும் தெரு எது என்று தெரியவில்லை.

அவளே நஸீமாவை தன் வீட்டில் கொஞ்ச நாள் வளர்த்தாள். அவள் குடும்பமும் ரொம்ப வறுமையான குடும்பம் என்பதால், தொடர்ந்து இந்தப் பெண்ணை வளர்க்க முடியாமல் ஒரு வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்டாள். அங்கேயும் இந்தப் பெண்ணுக்குச் சரியான கவனிப்பில்லை. அதன் பின்னர் இரண்டு மூன்று வருடங்கள் வெவ்வேறு வீட்டில் வேலை செய்து, எங்கேயும் சரிப்படாமல், கடைசியாக அந்தப் பெண் நஸீமா தன் பன்னிரண்டாவது வயதில் ஒரு பிராமண குடும்பத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தாள்.

அவர்கள் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நடத்தவில்லை. தங்கள் சொந்த மகள் போலவே பாசத்துடன் வளர்த்தார்கள். அவளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்தார்கள். அவளும் அவர்களின் மகளாகவே வளர்ந்தாள். ஆனால், பிராமணப் பெண்ணாக அல்ல. அவளை அவளின் மத வழக்கப்படியே முஸ்லிம் பெண்ணாகவே வளர்த்தார்கள் அந்த பிராமணத் தம்பதி. பருவம் எய்தினாள் அந்தப் பெண். பதினெட்டு வயது அழகிய மங்கையாக வளர்ந்து நின்றாள். முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிந்து வளர்ந்தாள்.

அவளுக்குப் பக்கத்து வீட்டில் ஒரு முஸ்லிம் குடும்பம் வசித்தது. அவரின் தம்பி சவூதி அரேபியாவில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருந்தார். அவர் விடுமுறையில் ஊருக்கு வந்தபோது இந்தப் பெண்ணைப் பார்த்து, திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார். “என்னடா தம்பி, அது அய்யரு வூட்டுப் பொண்ணாயில்ல வளருது?” என்று அண்ணன் குடும்பம் ஆட்சேபம் தெரிவித்தாலும், அந்தப் பெண்ணைத்தான் திருமணம் செய்துகொள்வேன் என்று பிடிவாதமாக இருந்தார் தம்பி. திருமணம் பேசினார்கள். தங்கள் சொந்த மகளைக் கட்டிக்கொடுப்பது போலவே சீர் செனத்திகள் நிறையச் செய்து, பன்னிரண்டரை சவரன் நகை போட்டு, முஸ்லிம் மத வழக்கப்படி, அந்தப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள். 1997-ல் நடந்தது இந்தத் திருமணம்.

நஸீமா தன் கணவரிடம் கேட்டது ஒன்றுதான். “எங்க அப்பாவைக் கண்டுபிடிக்க எத்தனையோ முயற்சி பண்ணிப் பாத்துட்டேன். முடியலை. நீங்களாவது கண்டுபிடிச்சுத் தருவீங்களா?” ‘கண்டிப்பாக’ என்று வாக்களித்தார் கணவர். அதன் பின்னர் நஸீமாவின் தந்தையைக் கண்டுபிடிக்க அவர் பல வருடங்களாக முயற்சி செய்தும் முடியாமல், சன் டிடெக்டிவ் ஏஜென்ஸி பற்றிக் கேள்விப்பட்டு, வரதராஜனைத் தொடர்பு கொண்டார்.

வரதராஜனிடம் நஸீமா, தான் இருந்தது அண்ணா நகர் என்று சொன்னாரே தவிர, அது சென்னை அண்ணா நகராக இருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது வரதராஜனுக்கு. காரணம், “அங்கே நூறு நூத்தம்பது வீடுங்கதான் இருக்கும். குறுக்கே ஒரு நதி ஓடிட்டிருந்தது. தவிர, நெசவு வேலை செய்யறவங்க அதிகம் இருந்தாங்க” என்றெல்லாம் வர்ணித்தார் நஸீமா. சென்னை மட்டுமல்லாமல் கோவை, மதுரை எனப் பல இடங்களில் அண்ணா நகர் உண்டு. நஸீமா சொன்ன அடையாளங்களை வைத்துப் பார்த்தால், அது காஞ்சிபுரம் அண்ணா நகராக இருக்க வாய்ப்புண்டு என்று தெரிந்தது.

உடனே, அங்கே கிளம்பிப் போய்ப் பார்த்தார் வரதராஜன். நஸீமா சொன்ன அடையாளங்களுடன் அங்கே ஒரு இடம் இருந்தது. குறுக்கே ஒரு ஆறும் ஓடிக் கொண்டு இருந்தது.

அங்கே உள்ளவர்களிடம் இப்ராஹீம் பற்றி விசாரித்துப் பார்த்தார். இருபது இருபத்தைந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால், யாருக்கும் தெரியவில்லை. பின்னர் வரதராஜன் நஸீமாவைத் தொடர்பு கொண்டு, அவள் வேலைக்குச் சேர்ந்திருந்த அந்த கான்ஸ்டபிள் பெயர் தெரியுமா என்று கேட்டார். ‘ஷரீஃப்’ என்றார் நஸீமா.

அன்றைக்குக் கான்ஸ்டபிளாக இருந்த ஷரீஃப் இத்தனை வருடங்களில் சப்-இன்ஸ்பெக்டராகவோ, ஹெட்-கான்ஸ்டபிளாகவோ ஆகியிருக்கலாம் என்று நினைத்த வரதராஜன், ஷரீஃப் என்ற பெயரில் யாராவது காவல்துறையில் பணியாற்றுகிறார்களா என்று தன் விசாரணையைத் தொடங்கினார். அந்தப் பெயர் கொண்ட ரிடையர்ட் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் சென்னை, ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் பின்புறத்தில் உள்ள ஒரு தெருவில் வசிப்பதாகத் தகவல் கிடைத்தது. உடனே அங்கே விரைந்தார் வரதராஜன். தெருப் பெயர் சரியாகத் தெரியவில்லை. எனவே, அங்கே உள்ள மளிகைக்கடைகளில் எல்லாம் தன் விசாரணையைத் தொடங்கினார். ஒரு கடைக்காரர், “ஆமாம் சார்! ஷரீஃப் வீட்டுல மளிகைச் சாமானெல்லாம் நம்ம கடையிலதான் தொடர்ந்து வாங்குவாங்க” என்று அவரது முகவரியைத் தந்தார். ஷரீஃபின் மனைவியும் ஒரு கான்ஸ்டபிள்தானே என்று வரதராஜன் கேட்க, “ஆமாம்” என்று பதில் கிடைத்தது.

நேரே அந்த முகவரிக்குப் போனார் வரதராஜன். நேரடியாக அந்தப் பெண் நஸீமா பற்றிக் கேட்டால், அவர் வீணாக மறைக்கக்கூடும் என்பதால், அந்தப் பெண்ணின் தந்தைக்கு இன்ஷ்யூரன்ஸ் பணம் ஒன்று வந்திருப்பதாகவும், அதைச் சேர்க்க வேண்டும் என்றும் சொல்லி, இப்ராஹிமின் முகவரி பற்றி விசாரித்திருக்கிறார்.

“இல்லை சார்! அந்தப் பெண்ணின் அப்பா யாருன்னே எனக்குத் தெரியாது. என் மனைவியோட அக்காவும், கூட இன்னொரு பெண்ணுமாதான் நஸீமாவைக் கொண்டு வந்து என் வீட்டுல விட்டுட்டுப் போனாங்க” என்றார் ஷரீஃப். “உங்க மனைவியோட அக்கா விலாசம் கொடுங்க” என்று வரதராஜன் கேட்க, “அவங்க இறந்துட்டாங்க சார்” என்று சொன்னார் ஷரீஃப்.

மேற்கொண்டு என்ன செய்வதென்று புரியவில்லை வரதராஜனுக்கு. “சரி, அவங்களோட புருஷன், மகன்னு யாராவது இருந்தா அவங்க அட்ரஸ் கொடுங்க. நான் விசாரிச்சுக்கறேன்” என்று கேட்க, ஷரீஃப் தனது மனைவியின் அக்கா மகனது விலாசம் தந்திருக்கிறார். அந்த மகனுக்குச் சுமார் 45 வயதிருக்கும்.

அவரிடம் வரதராஜன் போய் விஷயங்களைச் சொல்லி விசாரித்ததும், அவர் மிகவும் நெகிழ்ந்துபோய்விட்டார். “சார், ஒரு இந்துவான நீங்க, எங்க மதத்துப் பெண்ணுக்கு அவங்க அப்பாவைத் தேடிக் கொடுக்குறதுல இவ்வளவு தீவிரமா இருக்கும்போது, நாங்க உதவ மாட்டோமா?” என்று சொல்லி, தான் சார்ந்திருந்த முஸ்லிம் அமைப்பின் உதவியோடு தீவிரமாக முனைந்து, இருபது வருடங்களுக்கு முன் தன் அம்மாவோடு சேர்ந்து போய் நஸீமாவை கான்ஸ்டபிள் ஷரீஃப் வீட்டில் வேலைக்குச் சேர்த்துவிட்ட அந்தப் பெண்மணியைக் கண்டுபிடித்துவிட்டார். அந்தப் பெண்மணிக்கு இப்போது வயது 85.

விஷயத்தைச் சொன்னதும், “தப்பு பண்ணிட்டேன், தப்பு பண்ணிட்டேன்” என்று விம்மி அழ ஆரம்பித்துவிட்டார் அந்தப் பெண்மணி. அவரிடம் நஸீமாவின் தந்தை இப்ராஹிம் பற்றிக் கேட்க, “தெரியலை. அவர் உயிரோட இருக்காரா, இல்லையான்னே தெரியாது எனக்கு. அவருக்கு மூணு பொண்ணுங்க. மூணாவது பொண்ணுதான் நஸீமா. இது பொறந்ததுமே அவங்க அம்மா இறந்துட்டாங்க. நஸீமாவை கான்ஸ்டபிள் வீட்டுல வேலைக்குச் சேர்த்ததுக்குப் பிறகு, கொஞ்ச நாள்தான் அவர் காஞ்சிபுரத்துல இருந்தாரு. அப்புறம் எங்கே போனாருன்னே தெரியலை. அவரோட தம்பி ஒருத்தர் ஆற்காட்டில் இருக்காரு. அவரைக் கேட்டா விஷயம் தெரியும்” என்று அவரது பெயரையும், இடத்தையும் குத்துமதிப்பாக அந்த அம்மா சொல்ல, நேரே ஆற்காட்டுக்குப் போனார் வரதராஜன். ஆற்காட்டையே அலசி, அவரைக் கண்டுபிடித்துவிட்டார். அது ஒரு குடிசை வீடு.

“ஆமாம் சார்! என்னோடதான் அண்ணன் இப்ராஹிம் இருக்காரு” என்று சொன்னார் அந்தத் தம்பி.

இப்ராஹீம் மிகவும் வறுமைக் கோலத்தோடு, கிழிசல் லுங்கி மட்டும் அணிந்து, (மேலே சட்டையோ, துண்டோகூட இல்லாமல்) ஒரு ஓட்டலில் டேபிள் கிளீனராக வேலை செய்து கொண்டிருந்தார். மாதம் 20 ரூபாய் சம்பளம். சாப்பாடெல்லாம் அந்த ஓட்டலிலேயே முடித்துக் கொள்வார். இருபது ரூபாயைத் தம்பியிடம் கொடுத்தால்தான், அந்தக் குடிசை வீட்டின் வாசலில் இருந்த திண்ணையில் அவரைப் படுக்க அனுமதிப்பார் தம்பி.

இப்ராஹீமைக் கண்டுபிடித்ததும், உடனடியாக ‘கண்டேன் சீதையை’ பாணியில், அவரது மகள் நஸீமாவுக்கு போன் போட்டு, “கண்டுபிடித்துவிட்டேன் உங்கள் தந்தையை” என்று சொல்லியிருக்கிறார் வரதராஜன். அந்தப் பக்கத்திலிருந்து மறுமொழி ஏதும் இல்லை. “ஹலோ... ஹலோ...” என்று இவர் குரல் கொடுக்க, விம்மி அழுகின்ற சத்தம் மட்டும் சிறிது நேரத்துக்குக் கேட்டது. பிறகு சமாதானமாகி, “நான் எங்கப்பா கிட்ட பேசணுமே?” என்று கேட்டிருக்கிறார் நஸீமா. “அவர் வாய் பேச முடியாதவராச்சேம்மா... எப்படி...” என்று வரதராஜன் தயங்க, “இல்லை. நீங்க ஏற்பாடு பண்ணுங்க. நான் எங்கப்பாவோட பேசணும். நான் பேசுறதை அவர் கேப்பாரில்லே?” என்றிருக்கிறார் நஸீமா.

இப்ராஹீமுக்கு ஒருவழியாக, அவரின் கடைசி மகள் சவூதியில் நல்ல நிலைமையில் இருப்பதைச் சொல்லிப் புரிய வைத்து, இருவரையும் தொலைபேசியில் உரையாட வைத்தார் வரதராஜன். “அப்பா... அப்பா...” என்று நஸீமா கதறியழ, இங்கே இவர் புரியாத குழறலில் ஏதோ சொல்லிக் கதற, இந்தக் காட்சியைச் சுற்றி நின்று கவனித்துக்கொண்டு இருந்த முப்பது நாற்பது முஸ்லிம் அன்பர்களும் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறார்கள்.

இப்ராஹீமுக்கு உடனடியாக நல்ல லுங்கி, பனியன்கள் வாங்கித் தந்து, அவரை சென்னைக்கு அழைத்து வந்து, பத்திரிகையாளர்கள் முன்னிலையில் தந்தையையும் மகளையும் பல வருடங்களுக்குப் பிறகு ஒன்று சேர்த்திருக்கிறார் வரதராஜன். இப்ராஹீமின் முதல் மகளுக்குத் திருமணமாகி வேறு ஒரு ஊரில் இருந்தார். இரண்டாவது மகள் ஒரு வீட்டில் வேலை செய்துகொண்டு இருந்தார்.

நஸீமாவின் கணவர் அந்தப் பெண்ணுக்குத் தன் செலவில் ஒரு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்தார். தன் மாமனாரின் குடும்பத்தினருக்கு வேண்டிய பொருளுதவிகளைச் செய்தார். இப்ராஹீமைத் தங்களோடு சவூதி அழைத்துச் செல்லவும் திட்டமிட்டிருந்தார் அவர்.

ஆனால், இங்கே ஒரு வருத்தமான திருப்பம் நிகழ்ந்தது. அப்பா-மகள் இருவரும் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்று சேர்ந்த நிகழ்ச்சியைப் பக்கம் பக்கமாக விவரித்து எழுதிய பத்திரிகைகள், இப்ராஹிமின் வறுமையான தோற்றத்தைப் படம் பிடித்துப் போட்டு, அவர் இந்த ஓட்டலில்தான் வேலை செய்தார், இந்தத் திண்ணையில்தான் படுத்துக் கொள்வார் என்று அவரின் பரிதாபமான நிலையைப் படங்களாகப் பிரசுரித்திருந்தன. இதில் முகம் சுளித்த நஸீமாவின் மாமனார் குடும்பம், இவரை அழைத்து வந்து தங்களோடு வைத்துக் கொண்டால் தங்களின் அந்தஸ்துக்கு இழுக்கு என்று எதிர்ப்பு தெரிவிக்க, நஸீமாவின் கணவரும் அவர்களின் எதிர்ப்பை மீறி எதுவும் செய்ய இயலாதவரானார்.

நஸீமா சவூதியிலிருந்து கிளம்பி, தன் இரு பெண் குழந்தைகளோடு சென்னை வந்துவிட்டார். இங்கே சைதாப்பேட்டையில் நல்லதொரு வீட்டில் நஸீமா தன் அப்பா மற்றும் தன் இரு பெண் குழந்தைகளோடு இன்றைக்கும் வசித்துக்கொண்டு இருக்கிறார். அவரின் கணவர் மட்டும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை விடுமுறை எடுத்துக்கொண்டு இங்கே வந்து இவர்களோடு சில நாட்கள் இருந்துவிட்டுப் போகிறார். இந்தக் குடும்பத்துக்காக நஸீமா பெயரில் அவர் நிறைய ஃபிக்ஸட் டெபாசிட் போட்டு வைத்திருப்பதால், பணப் பிரச்னை ஏதுமில்லை.

இப்போது இப்ராஹீம், அந்தக் காலத்தில் தன் கடைசி மகள் நஸீமாவை எப்படித் தோளில் தூக்கிக்கொண்டு போய் பள்ளிக்கூடத்தில் விட்டாரோ, அதுபோல, இன்றைக்கு அவர் தன் பேத்தியைத் தோளில் தூக்கிக்கொண்டு சந்தோஷமாகப் பள்ளிக்குக் கொண்டு போய் விட்டு வருகிறார்.

இந்த வழக்கைப் பொறுத்தவரையில், தான் அதிகம் பணம் சம்பாதிக்கவில்லை என்றாலும், மிகப் பெரிய மன நிறைவையும் சந்தோஷத்தையும் இதன் மூலம் சம்பாதித்திருப்பதாகச் சொல்லி நெகிழ்கிறார் திரு.வரதராஜன்.

.

20 comments:

நெஞ்சைத்தொடும் பதிவு.அப்பா பெண் ஃபோனில் பேசிய போது, சுற்றி நின்று கண்ணீர் வடித்தவர்களில், நானும்...
 
மதங்களை, மனித நேயம் வென்று விட்டது. வாழ்த்துக்கள் திரு.வரதராஜன்.
 
மதங்களை வென்ற மனிதநேயம். வாழ்த்துக்கள் திரு.வரதராசன்.
 
பதிவை படித்து முடித்ததும் மனசு கனத்தது.

ரேகா ராகவன்.
(சிகாகோவிலிருந்து)
 
நஸீமா தன் பன்னிரண்டாவது வயதில் ஒரு பிராமண குடும்பத்தில் போய் வேலைக்குச் சேர்ந்தாள்.

அவர்கள் அந்தப் பெண்ணை வேலைக்காரியாக நடத்தவில்லை. தங்கள் சொந்த மகள் போலவே பாசத்துடன் வளர்த்தார்கள். அவளைப் படிக்க வைத்தார்கள். அவளுக்கு வேண்டியதெல்லாம் செய்து கொடுத்தார்கள். அவளும் அவர்களின் மகளாகவே வளர்ந்தாள். ஆனால், பிராமணப் பெண்ணாக அல்ல. அவளை அவளின் மத வழக்கப்படியே முஸ்லிம் பெண்ணாகவே வளர்த்தார்கள் அந்த பிராமணத் தம்பதி. பருவம் எய்தினாள் அந்தப் பெண். பதினெட்டு வயது அழகிய மங்கையாக வளர்ந்து நின்றாள். முஸ்லிம் மத வழக்கப்படி பர்தா அணிந்து வளர்ந்தாள்.
தங்கள் சொந்த மகளைக் கட்டிக்கொடுப்பது போலவே சீர் செனத்திகள் நிறையச் செய்து, பன்னிரண்டரை சவரன் நகை போட்டு, முஸ்லிம் மத வழக்கப்படி, அந்தப் பெண்ணை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார்கள்.

மனித நேயம் இன்னும் வாழ்கிறது . படிக்கும் போதே கண்ணீர் வருகிறது.
 
கொஞ்ச நேரம் தான் படிக்க முடிந்தது.
கண்களில் நீர் திரையிட்டு படிக்க முடியவில்லை!இது வரை படித்ததிலேயே பிடித்த பதிவு இது தான்!
இதைப் போல் நிறைய வெளியிடுங்கள்.
மனித நேயம் மலர்ந்து மணம் வீசட்டும்.
 
என் பதிவுகளை உடனுக்குடன் படிப்பதோடு, தங்கள் நேரத்தையும் அக்கறையையும் செலுத்தி தமிழிஷ்-ஷில் ஓட்டளிக்கும் முகம் தெரியா நண்பர்கள் அனைவருக்கும் என் இதயம் நெகிழ்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அநன்யா மஹாதேவன், அன்பு, ரேகா ராகவன், ஷபீர், ஆரண்யநிவாஸ் ராமமூர்த்தி அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
இதை படிக்கும் போது கண்ணீரை சிரமத்துடன் அடக்கிக்கொண்டேன். ஜாதி மத வேறுபாடு இல்லாமல் உதவும் திரு.வரதராஜன் அவர்கள் மற்றும் அதே நல்ல உள்ளம் கொண்டு, இதை முக்கியத்துவம் கொடுத்து அழகான முறையில் எழுதி பதிவு செய்த உங்களுக்கும் எனது நன்றிகள்.

நீங்க நல்லா இருக்கனும் சார். உங்களைப்போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் இன்னும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்ந்து வருகிறோம்.
 
நெகிழ வைத்த பதிவு.
 
படித்ததும் கண்ணீர் வந்தது
 
manathai nekizha vaiththa pathivu.................
 
மிக அற்புதமான பதிவு சார். மனிதர்கள் வாழ்கை எவ்வளவு விசித்திரமானதாக உள்ளது!! அந்த வயதானவர் பற்றி எழுதிய பத்திரிக்கைகள் மேல் சற்று கோபமும் வருகிறது.
 
இதைப் படித்து விட்டு வேகு நேரம் வேறெதிலும் கவனம் செல்லவில்லை. மனிதரிகளின் பல முகங்கள் இதில் தெரிகிறது. சிலரால் மனம் வலிக்கிறது, சிலரால் மனம் நெகிழ்கிறது.

இது போல நிறைய எழுதுங்கள். அதைப்படித்து பல மனங்கள் இளகட்டும்.
 
நூர், தங்கள் பின்னூட்டம் என்னை நெகிழ வைத்தது. நன்றி... நன்றி!
 
பட்டர்ஃப்ளை சூர்யா, யூர்கன் கர்கியர், பஹ்ருதீன் அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றிகள்!
 
நன்றி மோகன்குமார்! பத்திரிகைகளையும் குறை சொல்ல முடியாது. அந்தப் பெரியவரின் நிலையை அப்பட்டமாக வெளிப்படுத்திக் காட்டுவதன் மூலம் பொதுமக்களிடம் அனுதாபமும், உதவிகளும் கிடைக்க வழி பிறக்கலாம் என்ற எண்ணத்திலும் அவை அப்படிச் செய்திருக்கலாம் அல்லவா?
 
நன்றி காஞ்சி ரகுராம்!
 
மனித நேயம் இன்னும் வாழ்கிறது .
நல்ல பதிவு.
 
இப் பதிவைப் படிக்கும் ஒவ்வொருவரும் தமக்குள்ள மனித நேயத்தை மிகுதியாக்கிக் கொள்ள விழையும்படியான எழுத்து வீர்யத்துக்குத் தலைவணங்குகிறேன்.
இத்தகைய
நெகிழ்வான இது போன்ற பதிவைப் படிக்க கிடைத்த தருணத்துக்கு மகிழ்வும் நன்றியும்.