உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, May 08, 2016

என் புகுந்த வீடு - 16


மயக்கம் நிற்கவில்லை!


ரண்டு தும்மல் போட்டாலே, “என்னப்பா, பச்சைத் தண்ணியில குளிச்சியா? இல்லே, வெளியில எங்கேயாவது ஐஸ்க்ரீம் வாங்கிச் சாப்பிட்டியா? டாக்டர்கிட்டே காமிக்கிறதுதானே? இல்லே, கஷாயம் வெச்சுத் தரவா?” என்று அக்கறையோடு ஆயிரம் கேள்வி கேட்கிறவர் தாயார்தான்.

அப்படியான தாயன்பை என் குருநாதர் சாவி, விகடன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் இருவரிடம் கண்டு வியந்திருக்கிறேன்; நெகிழ்ந்திருக்கிறேன். சாவி சார் குறித்த தகவலை அவரைப் பற்றிய தொடர் பதிவுகள் எழுதும்போது குறிப்பிடுகிறேன். இங்கே விகடன் சேர்மனின் தாயன்பில் நனைந்த சம்பவத்தை நினைவுகூர்கிறேன்.

விகடனில் சேர்ந்த ஆரம்ப சில ஆண்டுகளில் எனக்கு அடிக்கடி தலைவலி, தும்மல், மயக்கம் என வந்துகொண்டிருந்தது. அல்சரும் இருந்தது. அதனால் அடிக்கடி வயிற்று வலியும் வரும்.

எம்.டி. (சேர்மன் பாலசுப்ரமணியன்) இது பற்றிக் கேள்விப்பட்டு, ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, அல்சரைப் போக்க நான் சாப்பிட வேண்டிய உணவுகள், தவிர்க்க வேண்டிய உணவுகள், நேரம் தவறாமல் சாப்பிட வேண்டியதன் அவசியம் ஆகியவை பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார். உண்மையில், குடும்ப மருத்துவர் ஒருவருக்கு அடிப்படையாகத் தெரிந்திருக்கக்கூடிய மருத்துவ விஷயங்கள் அனைத்தும் எம்.டி-க்குத் தெரியும். 

எனக்குத் தும்மல் வந்தால் தொடர்ச்சியாக பத்துப் பன்னிரண்டு தும்மல்கள் போட்டுவிட்டுத்தான் ஓய்வேன். அதுவும், என் உடம்பையே உலுக்கிப் போட்டு,  கட்டடமே இடிந்து விழுகிற மாதிரியான சத்தத்துடன் தும்மல்கள் வெளியேறும். எம்.டி-யுடனான கூட்டத்தில் கலந்துகொள்கிற சமயத்திலும் என்னால் தும்மலைக் கட்டுப்படுத்த முடியாமல், கூட்டத்துக்கு இடையூறு ஏற்படுத்துகிற விதமாகத் தும்மல்கள் வந்துகொண்டே இருக்கும்.

அப்படி ஒருமுறை தும்மியபோது, எம்.டி. என்னிடம் ஒரு துண்டுச் சீட்டில் ஒரு மாத்திரையின் பெயரை எழுதிக் கொடுத்து, ‘ஒருவித அலர்ஜியினால் உங்களுக்கு இப்படியான தொடர் தும்மல்கள் வருகிறது. இதை வாங்கிச் சாப்பிடுங்கள். அதன்பின் வராது!’ என்றார். 

பொதுவாக நான், டாக்டர் அல்லாத வேறு யார் எந்த மாத்திரையைப் பரிந்துரைத்தாலும் வாங்கிச் சாப்பிட்டுவிட மாட்டேன். என் அம்மா, அப்பாவேகூட சிலமுறை மாத்திரைகளைப் பரிந்துரைத்திருக்கிறார்கள். வாங்கிச் சாப்பிட்டதில்லை. ஆனால், என்னவோ தெரியவில்லை, எம்.டி. சொன்னபோது மறுக்கத் தோன்றவில்லை. உடனே வாங்கிச் சாப்பிட்டேன். சின்ன அரிசி போன்று இருந்தது அந்த மாத்திரை. ஆச்சரியம்... உடனடியாகத் தும்மல் நின்றது. 

சாவி சார்கூட, அவரிடம் பணியாற்றிய காலத்தில் என் உடம்பு பலவீனமாக இருப்பதைப் பார்த்து, தான் தினமும் போட்டுக்கொள்ளும் விட்டமின் மாத்திரைப் பட்டை ஒன்றைக் கொடுத்து, “தினமும் காலையில் சாப்பிட்டதும் இதில் ஒரு மாத்திரை போட்டுக் கொள்! உடம்பு தேறும்” என்று சொல்லியிருக்கிறார். நான் தயங்கியதைப் பார்த்துவிட்டு, “ஒண்ணும் ஆகாதுய்யா! பயப்படாதே! விட்டமின் மாத்திரைதான்! தைரியமா போட்டுக்கோ” என்று அவர் வற்புறுத்திய பின்புதான் அரை மனத்தோடு போட்டுக்கொள்ளத் தொடங்கினேன். பின்னர் சாவி சாரே மாதாமாதம் ஞாபகமாக தனக்கு அந்த மாத்திரை வாங்கும்போது எனக்கும் சேர்த்து ஒரு அட்டை வாங்கிவிடுவார். கிட்டத்தட்ட ஓரிரு ஆண்டுகள் அந்த மாத்திரையைச் சாப்பிட்டு வந்தேன். ஒருமுறை அவருடன் கோபித்துக்கொண்டு வெளியேறிய பின்பு, அந்த மாத்திரைப் பழக்கம் விட்டுப் போயிற்று. 

சரி, எம்.டி. விஷயத்துக்கு வருகிறேன். அதன்பின், அடுத்த வாரம், அடுத்த வாரம் என இரண்டு மூன்று முறை தொடர் தும்மல் வந்தபோதெல்லாம் அந்த மாத்திரையை வாங்கிச் சாப்பிட்டேன். அதன்பின், இன்று வரை அப்படியான தொடர் தும்மல்கள் தலைகாட்டவே இல்லை.

இன்னொரு நாள், மதன் சார், வீயெஸ்வி சார் ஆகியோருடன் பேசிக்கொண்டிருந்தபோது, எனக்குக் கை காலெல்லாம் நடுநடுங்கி, மயக்கம் வருகிற மாதிரி இருந்தது. முன்பே சொன்னது மாதிரி அப்போதெல்லாம் எனக்கு இப்படித் திடீர் திடீரென மயக்கம் வந்துகொண்டிருந்தது.

’ஷுகர் செக் பண்ணிக் கொள்ளுங்கள்’, ‘நேரத்துக்குச் சாப்பிடுங்கள்’ என்றெல்லாம் முன்பு அறிவுரை சொல்லியிருந்தார் எம்.டி.  ஷுகர் செக் செய்துகொள்ளவில்லை; என்றாலும், எம்.டி. சொன்னதுபோல் காலை, மதியம், இரவு எனத் தவறாமல் உண்ணுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். இருப்பினும், மயக்கம் வருவது தொடர்ந்துகொண்டே இருந்தது.

அன்றைக்கு மதன், வீயெஸ்வி ஆகியோருடன் பேசிக்கொண்டு இருந்தபோது, எனக்கு மயக்கம் வர, வீயெஸ்வி சார் உடனடியாக என்னை அழைத்துக்கொண்டு எம்.டி. அறைக்குச் சென்றார்.

“சார், இவர் தன் உடம்பைக் கவனிச்சுக்கவே மாட்டேங்கறார். அடிக்கடி மயக்கம் வருது. இப்பவும் இவரால நிக்க முடியலே; பேச முடியலே! டாக்டர் கிட்டே கொண்டு காட்டுங்கன்னாலும் போக மாட்டேங்கறார்” என்று நான் என் உடல் நலத்தில் அக்கறை இல்லாமல் இருப்பதாகக் குற்றம் சாட்டுவதுபோல் சொன்னார்.

அப்படித்தான் நான் இருந்தேன். இருக்கிறேன். எதற்கெடுத்தாலும் டாக்டரிடம் போவதை நான் விரும்புவதில்லை, அன்றும், இன்றும்.

வீயெஸ்வி சார் அப்படிச் சொன்னதும், “உக்காருங்கோ” என்று எங்கள் இருவரையும் தம் எதிரில் உட்காரச் சொல்லிவிட்டு, இன்டர்காமில் தன் டிரைவரை அழைத்தார் எம்.டி.

பின்னர் தம் குடும்ப டாக்டருக்கு போன் செய்தார். அவர் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட்! அவருடைய மகனும் ஒரு டாக்டர். காது, மூக்கு, தொண்டை நிபுணர்.

அவரிடம், “என்னோட உதவி ஆசிரியர். ரவிபிரகாஷ்னு பேரு. அவருக்குக் கொஞ்ச நாளா அடிக்கடி மயக்கம் வந்துட்டிருக்கு. என்ன, ஏதுன்னு அவரை தரோவா செக் பண்ணி ட்ரீட்மென்ட் கொடுங்கோ! இப்போ உடனே அவரை அனுப்பி வைக்கிறேன்” என்று சொன்னார்.

டிரைவர் வந்ததும், அவரிடம் “என்னோட ஃபேமிலி டாக்டர் வீடு உனக்குத் தெரியுமில்லே, இவரை அவர்கிட்டே நம்ம கார்ல அழைச்சுட்டுப் போய் அறிமுகப்படுத்தி வை! ஒரு மணி நேரமானாலும் இருந்து அழைச்சுட்டு வா!” என்று சொன்னார்.

அப்போது. நான் எம்.டி-யுடன் அதிகம் பழகியிராத காலம் என்பதால், அவரின் இந்தச் செயல் எனக்கு மிகுந்த வியப்பையே அளித்தது. அவரிடம் பணியாற்றுபவர்களில் நான் பத்தோடு பதினொன்று அல்ல; நூற்றோடு நூற்று ஒன்று! என் மீது இத்தனை
அக்கறை எடுத்து, தமது காரிலேயே என்னை டாக்டரிடம் சிகிச்சை பெற அனுப்பி வைக்கவேண்டிய அவசியமே இல்லை. தம்மோடு ஓரிரு முறையே பழகியிருந்தாலும், அவர்கள் மீது மிகவும் வாஞ்சையும் தனி அன்பும் அக்கறையும் எடுத்துக்கொண்டு செயல்படுபவர் எம்.டி. என்பதைப் பின்னாளில் புரிந்துகொண்டேன்.

டிரைவருடன் கிளம்புவதற்கு முன், எம்.டி-யிடம், “சார், டாக்டர் எவ்வளவு ஃபீஸ் கேட்பாருன்னு தெரியலையே? இப்ப என் கையில ஒரு பைசாவும் இல்லை!” என்றேன்.

“அதெல்லாம் ஒண்ணும் கொடுக்க வேண்டாம்! நான் சொல்லியிருக்கேன் அவர் கிட்டே!” என்றார் எம்.டி.

அதன்பின், டிரைவருடன் எம்.டி-யின் குடும்ப டாக்டர் வீட்டுக்குச் சென்றேன். அவருடைய மகன்தான் என்னைச் சோதித்தார்.  காதில் பிரச்னை இருந்தாலும் மயக்கம் வரும் வாய்ப்பு இருக்கிறதென்று சொல்லி, காது சம்பந்தமான சோதனைகளைச் செய்தார். ’பின்ச்சர்’ மாதிரி ஒரு பொருளைக் காதின் அருகில் தட்டி, எனது கேட்கும் திறன் எந்த அளவுக்குச் சிறப்பாக இருக்கிறது என்று கணக்கிட்டார். பிபி எடுத்துப் பார்த்தார்.

சோதனைகள் எல்லாம் முடிந்த பின்னர், தன் ஸீட்டில் வந்து அமர்ந்துகொண்டு, பிரிஸ்கிருப்ஷன் எழுதி என்னிடம் நீட்டினார். “இந்த மாத்திரைகளை வாங்கிச் சாப்பிட்டுட்டு, ஒரு மாசம் கழிச்சு வந்து காட்டுங்க” என்றார்.

“சரி சார்” என்று நான் கிளம்பவும், “ஃபீஸ் 200 ரூபாயை அங்கே கவுன்ட்டர்ல கட்டிடுங்க” என்றார். துணுக்குற்றேன். “இல்லையே! எங்க எம்.டி-தான் அனுப்பிச்சாரு! அவர் எதுவும் கொடுக்க வேண்டாம்னாரே...” என்றேன்,  பரிதாபமாக. “சார் நம்பருக்கு வேணா போன் போட்டுக் கேளுங்களேன்” என்றேன்.

“அதெப்படி...” என்று தயங்கிய டாக்டர், “சரி, போங்க! நான் அவர்கிட்டே பேசிக்கறேன்” என்று என்னை அனுப்பினார்.

நான் டிரைவருடன் காரில் அலுவலகம் திரும்பினேன். நேரே எம்.டி. அறைக்குச் சென்றேன். டிரைவரும் என்னுடன் எம்.டி. அறைக்கு வந்தார்.

“என்ன, போனீங்களா? டாக்டரைப் பார்த்தீங்களா? என்ன சொன்னார்? ஏன் மயக்கம் அடிக்கடி வர்றதாம்?” என்று கேட்டார் எம்.டி.

சொன்னேன். டாக்டரின் மகன்தான் என்னைச் சோதித்தார் என்றேன். காதுக்கான சோதனைகளை நடத்தி, ப்ரிஸ்கிரிப்ஷன் எழுதித் தந்துள்ளார்; ஒரு மாதம் கழித்து மீண்டும் வந்து பார்க்கச் சொன்னார் என்றேன்.

அப்போது டிரைவர் குறுக்கிட்டு, “கிளம்பறப்போ ஃபீஸ் 200 ரூபாய் கட்டிட்டுப் போங்கன்னுட்டார் டாக்டர். தம்பிக்கு என்ன பண்றதுன்னே தெரியலே ஒரு நிமிஷம்! உங்களுக்கு வேணா போன் பண்ணிக் கேளுங்கன்னுச்சு!” என்று சொன்னார்.

“எனக்கு எதுவும் போன் பண்ணலியே?” என்ற எம்.டி-க்கு சுறுசுறுவென்று கோபம் ஏறிவிட்டது. “அப்படியா ரவி? உங்க கிட்டே அவர் பணம் கேட்டாரா? நான்தான்  உங்க கிட்டே எதுவும் கேக்க வேணாம்னு அவர் கிட்டே படிச்சுப் படிச்சு சொன்னேனே? அப்புறம் எப்படிக் கேப்பார்?” என்றார்.

“இல்லே சார், அவருக்குத் தெரியாதா இருக்கும். நான் சொன்னதும்தான் சரி, போங்கன்னுட்டாரே!” என்றேன்.

“கேட்டதே தப்புங்கறேன்! இருங்க, அவருக்கு இப்பவே போன் பண்றேன்” என்று நம்பர்களை டயல் செய்ய ஆரம்பித்தார் எம்.டி.

எனக்குக் கவலையாகிவிட்டது, என்பொருட்டு அவர்களுக்குள் ஏதும் மனஸ்தாபமோ பிரச்னையோ உண்டாகிவிடக்கூடாதே என்று.

எம்.டி. அதற்குள் எதிர்முனையைத் தொடர்பு கொண்டுவிட்டார். 

“ஆமாம்... பாலுதான் பேசறேன். நான்தான் உங்களைக் கூப்பிட்டுச் சொன்னேன், ரவிபிரகாஷ்னு ஒருத்தரை அனுப்பறேன், பூரணமா செக் பண்ணி அனுப்புங்கோன்னு. ஃபீஸ் சம்பந்தமா அவர் கிட்டே எதுவும் கேக்க வேணாம்னு சொன்னேன். நான் பார்த்துக்கறேன்னு அவ்வளவு தெளிவா சொல்லி அனுப்பியிருக்கிறப்போ, அவர் கிட்டே ஃபீஸைக் கட்டிட்டுப் போங்கன்னு சொன்னீங்களாமே?..... அதெல்லாம் எனக்குத் தெரியாது. நான் வேலை மெனக்கிட்டு உங்களுக்குப் போன் பண்ணி சொன்ன பிறகும் அவர் கிட்டே ஃபீஸ் கேட்டா, அவர் என்னைப் பத்தி என்ன நினைச்சுப்பார்?..... அதுக்கு நான் என்ன பண்ண முடியும்? நீங்கதான் உங்க பையன் கிட்டே சொல்லிட்டுப் போயிருக்கணும்?..... இல்லே, இது தப்பா இருக்கு! ஸாரி, உங்க பதில் பொறுப்பான பதிலா எனக்குத் தெரியலே! நான் இப்பவே டிரைவர் கிட்டே 200 ரூபா கொடுத்தனுப்பறேன். கணக்கை செட்டில் பண்ணிடுங்கோ!” என்று படபடவெனப் பொரிந்தார்.

டிரைவரிடம் ரூ.200 கொடுத்து அனுப்பியதோடு, “ரவி கிட்டேர்ந்து அந்த ப்ரிஸ்க்ரிப்ஷனை வாங்கிண்டு போய், அந்த மாத்திரைகளையும் வரும்போது வாங்கிண்டு வந்து அவர் கிட்டே கொடுத்துடுங்கோ!” என்றார் எம்.டி.

பிறகு என்னிடம், “ரொம்ப ஸாரி! உங்களுக்குத் தர்மசங்கடமா போயிருக்கும். இத்தனைக்கும் நான் அவர்கிட்டே படிச்சுப் படிச்சு சொல்லியிருந்தேன். பையன் கிட்டே சொல்ல மறந்துட்டேங்கறார்! சரி, இதை நான் பார்த்துக்கறேன். நீங்க உடம்பைக் கவனிச்சுக்குங்கோ! அவர் சொன்னாப்ல ஒரு மாசம் கழிச்சுக் கொண்டு காட்டுங்கோ!” என்றார் எம்.டி.

அதன்பின்பும் எனக்கு மயக்கம் தொடர்ந்துகொண்டிருந்தது. எம்.டி. அடுத்த முறை என்னை வேறு ஒரு டாக்டரிடம் அனுப்பினார். அந்த டாக்டர் எனக்கு லோ ஷுகர் இருக்கலாம் என அபிப்ராயப்பட்டு அதற்கான டெஸ்ட்டுகளை எடுக்கச் சொன்னார்.

குளுகோஸ் டெஸ்ட், ஃபாஸ்ட்டிங் டெஸ்ட், எம்.ஆர்.சி. டெஸ்ட் என விதம்விதமாக எடுத்தேன்.  ரூ.1,500/-க்கு மேல் செலவானது. அதையும் எம்.டி. எனக்குத் திருப்பித் தந்துவிட்டார். டெஸ்ட்டுகளில் எனக்கு லேசாக ஷுகர் இருப்பதாகக் கண்டறியப்பட்டது. அதற்கான ரிப்போர்ட்டை எடுத்துப் போய் எம்.டி-யிடம் காண்பித்தேன். ஒரு தேர்ந்த மருத்துவர் போன்று அதை முழுவதுமாகப் பார்த்து, “பயப்பட வேண்டியதே இல்லே! ஷுகர் வரக்கூடிய வாய்ப்பு இருக்குன்னுதான் ரிப்போர்ட்ல இருக்கு. இதுக்கப்புறம் லெவல் ஒன், லெவல் டூ-ன்னு வரிசையா இருக்கு. இதையெல்லாம் கடந்து வரதுக்குப் பல வருஷங்களாகும். அதுக்குள்ளே உணவு விஷயத்துல கொஞ்சம் கவனமா இருந்தா ஷுகரே வராம பார்த்துக்கலாம்!” என்று சொன்னார்.

அதன்பிறகு, எம்.டி. சொன்ன உணவுக் கட்டுப்பாட்டைத் தீவிரமாகக் கடைப்பிடிக்கத் தொடங்கினேன். உடம்பில் தண்ணீர் அதிகம் இல்லையென்றாலும், மயக்கம் வர வாய்ப்புள்ளது என்று சொல்லி, அடிக்கடி தண்ணீர் குடிக்கச் சொன்னார். அதையும் செய்தேன். சில காலத்துக்குப் பின்பு மயக்கம் வருவது அடியோடு நின்று போனது.

ஆனால், ஆனந்த விகடன் என்கிற நிறுவனத்தின் மீதான மயக்கமும், அதன் சேர்மன் எஸ்.பாலசுப்ரமணியன் என்கிற மாமனிதரின் மீதான மயக்கமும் இன்றளவும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.

(இன்னும் சொல்வேன்)