உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, March 19, 2016

என் புகுந்த வீடு - 12

‘முரண்டு’ பிடிக்கிறேனா?

னந்த விகடன் ஆசிரியரிடமிருந்து ஒரு கடிதமும், கூடவே எனது ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ சிறுகதையும், தவிர இலக்கிய சிந்தனை வெளியிட்ட ஒரு புத்தகமும் எனக்கு வந்து சேர்ந்தது. 

கடிதத்தில்... “உங்களின் கதைகள் எதையும் நாங்கள் திருப்பி அனுப்புவதாக இல்லை. அவை கட்டாயம் ஆனந்த விகடனில் பிரசுரமாகவே செய்யும். ஒரு சில நீர்க்குமிழிகள் உடைந்து போவதால் கடலுக்கு எந்த நஷ்டமும் இல்லை என்று உங்கள் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இப்படி ஒவ்வொரு நீர்க்குமிழியும் நினைத்துவிட்டால், கடலே காணாமல் போய்விடும் ஆபத்து உள்ளது! மற்றபடி, எங்களின் கடிதம் தங்கள் மனத்தைப் புண்படுத்தியிருப்பின் அதற்காக வருந்துகிறோம். இத்துடன் இலக்கிய சிந்தனை வெளியிட்ட சிறுகதைத் தொகுதியை இணைத்து அனுப்பியுள்ளோம். அதில் நாங்கள் குறிப்பிட்ட நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ சிறுகதை இடம்பெற்றுள்ளது. அதைத் தாங்கள் படித்துப் பார்த்தால், எங்களின் சந்தேகம் நியாயமானது என்று உங்களுக்கே புரிய வரும்.” என்று குறிப்பிட்டிருந்தார் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன்.

பின்னர், சம்பிரதாயமான ‘பிரசுரிக்க இயலாமைக்கு வருந்துகிறோம்’ என்னும் குறிப்புச் சீட்டுடன் திரும்பி வந்திருந்த ‘அ-உ-ஆ’ கதையைப் பிரித்து, உள்ளே ஏதேனும் குறிப்புகள் போட்டிருக்கிறார்களா என்று பார்த்தேன். எதுவும் இல்லை. அடுத்த நொடியே அந்தக் கதையைச் சுக்கல் சுக்கலாகக் கிழித்து எறிந்துவிட்டேன். 

பின்னர் நிதானமாக, ஆனந்த விகடன் ஆசிரியர் அனுப்பி வைத்த, இலக்கிய சிந்தனை பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்புப் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ சிறுகதையைப் படித்துப் பார்த்தேன். அந்தக் கதைக்கும் எனது அ-உ-ஆ கதைக்கும் சற்றும் சம்பந்தம் இருப்பதாகத் தெரியவில்லை. ‘உன் கதையிலும் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டுச் சாகிறான்; அந்தக் கதையிலும் ஒருவன் கத்தியால் குத்தப்பட்டுச் சாகிறான். எனவே, அந்தக் கதையைப் பார்த்துத்தான் நீ காப்பி அடித்தாய்’ என்றால், அது எத்தனை அபத்தமாக இருக்கும்! அப்படியான சம்பந்தம்தான் அவரின் கதைக்கும் என் கதைக்கும் இருந்தது. ஆம்... அந்தக் கதையிலும் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான்; என் கதையிலும் ஒருவன் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துகொள்கிறான். இதைத் தவிர, வேறு எந்தச் சம்பந்தமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. 

எனினும், எப்போது இரண்டும் ஒன்று என்று ஒரு பத்திரிகை ஆசிரியருக்குத் தோன்றிவிட்டதோ, அப்போதே அது அந்தப் பத்திரிகையில் மட்டுமல்ல, வேறு எந்தப் பத்திரிகையிலும் பிரசுரிக்கப்படத் தகுதியற்றதாகிவிட்டது, என்னைப் பொறுத்தவரையில்! எனவேதான், அந்தக் கையெழுத்துப் பிரதியை, அது விகடனிலிருந்து திரும்பி வந்ததுமே கிழித்துப் போட்டுவிட்டேன். அந்தக் கதை வரிக்கு வரி இன்னமும் என் மனத்தில் பதிந்திருக்கிறது. இப்போது அதைத் திரும்ப எழுதவேண்டுமென்றாலும் என்னால் எழுத முடியும். ஆனாலும், அதை நான் மீண்டும் எழுதவோ, வேறு எந்தப் பத்திரிகைக்கும் அனுப்பவோ இல்லை; பின்னர் நான் பொறுப்பாசிரியராகப் பணியாற்றிய ‘சாவி’ இதழிலும் அதை வெளியிட்டுக் கொள்ளவில்லை. (ஆனால், விகடனிலிருந்து திரும்பிய அந்த ‘மானம்’ என்கிற சிறுகதையை மட்டும் சாவியில் வெளியிட்டேன்.)

//ஒரு ரெண்டுங்கெட்டான் இளைஞன். தான் செய்வது இன்னதென்று அவனுக்குத் தெரியாது. ஆனால், அடிக்கடி கள்ளு குடிக்கப் போய்விடுவான். அவனை வைத்துக்கொண்டு அவன் அம்மா போராடுவாள். உறவுக்காரப் பெண் ஒருத்தியை அவனுக்குக் கட்டி வைத்துவிட்டால், அவனுக்கு ஒரு வழி ஏற்படுத்திக் கொடுத்துவிட்ட நிம்மதி தனக்குக் கிடைக்கும் என்று நினைத்து, அதற்கு முனைவாள். அதற்குள் அவன் கள்ளு குடிக்கக் காசு புரட்டுவது எப்படி என்று யோசித்து, குடும்பக் கட்டுப்பாடு செய்துகொண்டால் ரூபாய் கொடுப்பார்கள் என்று தெரிந்துகொண்டு, அங்கே போய் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டு விடுகிறான். அம்மாவின் ஆசை நிராசையாகிறது. அவ்வளவுதான் கதை!// இது ‘முரண்டு’ சிறுகதையின் சுருக்கம்.

என்னுடைய ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ கதைச் சுருக்கத்தைதான் முன்பே ஒரு பதிவில் சொல்லிவிட்டேன். இந்த இரண்டு கதைகளுக்கும் கிஞ்சித்தேனும் தொடர்பு உண்டா என்பதை உங்களின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.

இந்நிலையில், அந்தத் தொகுப்புப் புத்தகத்தை, கூடவே இன்னொரு பதில் கடிதத்தையும் இணைத்து விகடன் ஆசிரியருக்கு அனுப்பினேன்.

அதில்... ‘தாங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று நாஞ்சில் நாடனின் ‘முரண்டு’ கதைக்கும், என்னுடைய அ-உ-ஆ கதைக்கும் சற்றும் சம்பந்தம் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நான் ‘முரண்டு’ பிடிப்பதாக நீங்கள் கருதலாம். எப்போது தங்களுக்கு என் படைப்பின் மீது சந்தேகக் கோடு விழுந்துவிட்டதோ, அப்போதே தங்கள் பத்திரிகையில் பிரசுரமாகும் தகுதியை என் கதைகள் இழந்துவிட்டன என்பதுதான் உண்மை. என் முந்தைய கடிதத்தில் வெளிப்பட்ட கோபத்தில் என் பக்கம் நியாயம் இருப்பதாக உணர்ந்து, தேர்ந்தெடுக்கப்பட்ட என் கதைகளைத் திருப்பியனுப்பாமல் பிரசுரிக்கத் தாங்கள் இசைந்திருக்கலாம். ஆனால், இன்னொரு முறையும் இப்படியான அனுபவம் நேராது என்பதற்கு என்னிடம் எந்த உத்தரவாதமும் இல்லை. அப்போது என் மீதான தங்களின் பழைய சந்தேகம் விஸ்வரூபம் எடுக்கவும் வாய்ப்பு உண்டு. எனவே, இந்தச் சிக்கல்களையெல்லாம் தவிர்ப்பதற்கான ஒரே வழி, எனது அத்தனை கதைகளையும் தாங்கள் உடனடியாக எனக்குத் திருப்பி அனுப்புவதுதான். எனவே, உடனடியாக என் கதைகளைத் திருப்பியனுப்ப வேண்டுகிறேன். இதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை!’ என்று எழுதியிருந்தேன்.

எனது முந்தைய கடிதத்தைப் படித்ததும் அப்பா என் மீது கடுங்கோபம் கொண்டார் அல்லவா! இந்த இரண்டாவது கடிதத்தால் மனம் மிக நொந்துபோனார். ஆனந்த விகடனில் இந்த ஜென்மத்தில்  இனி என் படைப்புகள் வெளியாகவே போவதில்லை என்று தெரிய வந்ததால் ஏற்பட்ட வேதனையை அவரால் தாங்க முடியவில்லை. அந்த அளவுக்கு ஆனந்த விகடனை நேசித்தவர் அவர். அதில் என் சிறுகதைகள் பிரசுரமாவதால் அவருக்குக் கிடைக்கும் சந்தோஷம் கோடி ரூபாய் கொடுத்தால்கூட அவருக்குக் கிடைத்திருக்காது என்பதே உண்மை! எனவே, நான் புத்தகத்துடன் அந்த இரண்டாவது கடிதத்தை அனுப்பி வைத்த பின்பு, அவர் என்னுடன் முகம் கொடுத்துப் பேசுவதையே சில நாட்கள் நிறுத்தியிருந்தார்.

அவரை மீண்டும் என்னுடன் பேச வைத்தது, ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களிடமிருந்து அடுத்த வாரம் வந்திருந்த மூன்றாவது கடிதம்!

(இன்னும் சொல்வேன்)

4 comments:

பேச வைத்த கடிதம்...?
 
படிக்க ரொம்ப சுவரசியம இருக்கு சார்.
 
எழுத்து நடையில் நல்ல அழகு பளிச்சிடுகிறது.வாழ்த்துக்கள்.

 
Thank you sir for your posts.
As you said, two stories are different.
In both stories concept, your story only heart touching and has high level/ high standard of ethic.