உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, March 09, 2016

என் புகுந்த வீடு - 10

விளக்கில் விழுந்தது விட்டில்!

‘விளக்கில் விழுந்த விட்டில்’ - 1980-ம் ஆண்டு, ஆனந்த விகடனில் வெளியான என் முதல் சிறுகதையின் தலைப்பு இது.

எத்தனை பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளியானாலும், ஆனந்த விகடனில் சிறுகதைகள் பிரசுரமானால், அந்த எழுத்தாளருக்குக் கிடைக்கும் மரியாதையே தனி என்பதை எனக்கு நிரூபித்த கதை அது. அதன்மூலம் திரு.மார்க்கபந்து அவர்கள் (எழுத்தாளர் மகரம் அவர்களின் புதல்வர்) எனக்கு நண்பரானார். அவர் மூலம் எழுத்துலக மகரிஷி லா.ச.ராமாமிருதத்தைச் சந்தித்துப் பேசும் பாக்கியம் பெற்றேன். இன்னும் பல நல்ல விஷயங்கள், விகடனில் என் கதை பிரசுரமானதன் மூலம் கிடைத்தன. முக்கியமாக,  நானும் ஓர் எழுத்தாளன் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளும் அந்தஸ்தைக் கொடுத்தது, விகடன் எனக்களித்த அங்கீகாரம்.

இது என் எழுத்துலக அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ளும் தொடரல்ல! பெரியவர் எஸ்.பாலசுப்ரமணியன் அவர்களின் மேன்மையான குணங்கள் குறித்தும், அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் குறித்தும் விவரிக்கும் தொடர். இருப்பினும், அடுத்து நான் எழுதவிருக்கிற விஷயத்துக்கு, மேலே சொன்ன இரண்டு பாராக்கள் முக்கியமான ஆரம்பமாக இருக்கும் என்பதாலேயே அவற்றை எழுத நேரிட்டது.

விகடனில் என் முதல் சிறுகதை வெளியான பிறகு, அடுத்தடுத்து சராசரியாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை எனது கதைகள் விகடனிலும், இதர பத்திரிகைகளிலும் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருந்தன. நான் முதன்முதலாக எழுதிய 12 சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலிருந்தும் திருப்பி அனுப்பப்படாமல் பிரசுரமாகிவிட்டன என்பதை இந்த இடத்தில் நைஸாகப் பெருமையோடு சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

1984-ம் ஆண்டு - ஆனந்த விகடனில் என் சிறுகதைகள் அதிகம் வெளியான காலகட்டம். ஆனால், அதற்கு முன்னதாக விகடனோடு ஒரு சின்ன மன வருத்தம், மனஸ்தாபம் ஏற்பட்டது எனக்கு. எனது சின்ன வயது, பக்குவமின்மை, அனுபவமின்மை ஆகியவையே அதற்குக் காரணம் என்றால் மிகையில்லை.

என் கதைகளை அதிகம் வெளியிட்டு ஊக்குவித்துக்கொண்டு இருந்ததால், நான் புதிதாக எழுதும் எந்த ஒரு சிறுகதையையும் முதலில் ஆனந்த விகடனுக்கு அனுப்பி, அங்கே நிராகரிக்கப்பட்டால்தான் அதை இதர பத்திரிகைகளுக்கு அனுப்புவது என்பதை வழக்கமாகவே வைத்திருந்தேன்.

ஒருமுறை, அப்படி நான் அனுப்பிய சிறுகதைகள் அடுத்தடுத்து ஆனந்த விகடனால் அங்கீகரிக்கப்பட்டு, பிரசுரத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கடிதங்கள் வந்துகொண்டிருந்தன. இது எனக்கு மேலும் மேலும் உற்சாகத்தைத் தர, தொடர்ந்து என் கதைகளை விகடனின் பரிசீலனைக்கே அனுப்பிக்கொண்டு இருந்தேன், சிலந்தி, தொடரும் கதைகள், பின்னால் ஒரு பெண், மாறுபட்ட கோணங்கள் என, எனது பல கதைகள் விகடனில் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவை விரைவில் விகடனில் பிரசுரமாகும் என்கிற நற்செய்தியைத் தாங்கிக் கடிதங்கள் வந்துகொண்டிருந்தனவே தவிர, அவை பிரசுரமாகிற வழியைக் காணோம். இப்படியே கிட்டத்தட்ட ஓராண்டுக் காலம் ஓடிவிட்டது. கிட்டத்தட்ட எனது எட்டு கதைகள் விகடனில் பிரசுரத்துக்காகக் காத்துக்கொண்டிருந்தன.

இந்நிலையில், ஒன்பதாவதாக நான் ஒரு சிறுகதை எழுதினேன். ‘அன்பிற்கும் உண்டு ஆராதனை’ என்பது தலைப்பு.

கணவன், மனைவி. அம்மா சிரமப்பட்டு வளர்த்துப் பையனை ஆளாக்கியிருந்ததால், இவனுக்கு அம்மாவின் மீது ஏக மரியாதை. அவள் சொல்லைத் தட்ட மாட்டான். அதே நேரம், மனைவி மீதும் அக்கறை, பாசம் எல்லாம் உண்டு. ஆனால், அதையெல்லாம் வெளிக்காட்டத் தெரியாதவன். தானுண்டு, தன் வேலை உண்டு என்றிருப்பான்.

திருமணமாகி பல ஆண்டுகள் கடந்த பின்பும், அந்தத் தம்பதிக்குக் குழந்தை இல்லை. காத்திருந்து காத்திருந்து, ஒரு நாள் அம்மாவின் சொல்லைத் தட்ட முடியாமல், மனைவியைப் பரிசோதிக்க மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான் அவன். பரிசோதனையில் அவள் குழந்தைப் பேற்றுக்குத் தகுதியானவள் இல்லை என்று தெரிய வருகிறது.

அம்மாவுக்கு இது தெரிந்ததும், அவனை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளச் சொல்கிறாள். மருமகள் பேரில் தனக்குக் கோபம் இல்லை என்றும், வழக்கம்போல் அவள்தான் இந்த வீட்டு பட்டத்து ராணி என்றும், குடும்பம் தழைக்க வேண்டும் என்பதற்காகவே அவனை இன்னொரு கல்யாணம் செய்துகொள்ளச் சொல்வதாகவும் சொல்கிறாள். அவன் மறுக்கிறான்.

தினம் தினம் அம்மா அவனை வார்த்தைகளால் கரைக்க முயல்கிறாள். எங்கே அவன் மனம் மாறி, வேறு பெண்ணை இரண்டாம் தாரமாகத் திருமணம் செய்து கொள்வானோ என்று மனசுக்குள் குமைந்துகொண்டிருக்கிறாள் அவன் மனைவி.

அன்று இரவு, மன பாரம் தாங்காமல் அவனிடம் வெடித்து அழுகிறாள். இன்னொரு திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று அவன் என்னதான் சமாதானம் சொன்னாலும் அவள் கேட்பதாயில்லை. முதலில் மறுத்து, பின்பு அம்மா வ ற்புறுத்தினாள் என்பதற்காக அவன் செய்த காரியங்களைப் பட்டியலிடுகிறாள். அத்தனையையும் செய்தவன், அம்மா சொன்னாள் என்பதற்காக நாளையே மனம் மாறி இன்னொரு கல்யாணம் செய்துகொள்ள மாட்டான் என்பது என்ன நிச்சயம் என்று கேட்கிறாள். அவனது வாக்குறுதியை நம்ப மறுக்கிறாள். அவனுக்கு அவளை எப்படிச் சமாதானப்படுத்துவது என்று புரியவில்லை.

மறுநாள், வழக்கம்போல் வேலைக்குப் போய், மாலையில் வீடு திரும்புகிறான். அவன் உள்ளே நுழைந்ததுமே அம்மா பிடித்துக் கொள்கிறாள். ‘அப்புறம் என்னப்பா, நான் சொன்னதை யோசிச்சியா? நாம ஒண்ணும் அவளை (அவன் மனைவியை) கைவிட்டுடப் போறதில்லை. முன்பு போல் அவள்தான் இந்த வீட்டு ராணி. அதனால அவள் பயமோ, தயக்கமோ படவேண்டியதே இல்லை. வேணும்னா இந்த வீடு, சொத்து எல்லாத்தையும் அவ பேரில் மாத்திக்கட்டும். எனக்கு ஆட்சேபனை இல்லை. ஆனா, ஒரு வாரிசுக்காக நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்க அவள் சம்மதிக்கணும்’ என்கிறாள்.

‘அது முடியாதும்மா’ என்கிறான் அவன். ‘ஏன் முடியாது? உனக்கென்ன குறைச்சல்? நீ இன்னொரு கல்யாணம் பண்ணிக்கத்தான் வேணும்; எனக்கொரு பேரனோ பேத்தியோ பெத்துக் கொடுக்கத்தான் வேணும்’ என்கிறாள் அம்மா பிடிவாதமாக. இதையெல்லாம் தவிப்பும் பதைப்புமாக அருகில் நின்று கேட்டுக்கொண்டே இருக்கிறாள் அவன் மனைவி.

‘இல்லேம்மா. வாரிசுக்காகத்தானே நான் இன்னொரு கல்யாணம் பண்ணிக்கணும்னு நீ ஆசைப்படறே? உன் ஆசை நிறைவேறாது’ என்கிறான் மகன். ‘அதான் ஏன்னு கேக்கறேன்?’ என்கிறாள் தாய்.

‘ஏன்னா, நான் குடும்பக் கட்டுப்பாடு ஆபரேஷன் செய்துக்கிட்டேன்’ என்று சொல்லிவிட்டு, அம்மாவின் பதிலை எதிர்பார்க்காமல் மாடிப் படிகளில் ஏறி மேலே செல்கிறான் அவன். மனைவியின் மனத்தில் கணவன் கோபுரமாக உயர்ந்து நிற்கிறான் என்பது கதையின் சாரம்.

வழக்கம்போல் இந்தக் கதையையும் ஆனந்த விகடனின் பரிசீலனைக்கு அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன்.

என் அப்பாதான் ரொம்ப உற்சாகமாக இருந்தார். “சூப்பர் கதைடா இது. பாரேன், இதுவும் செலக்ட் ஆயிடுச்சுன்னு சீக்கிரமே லெட்டர் வரும் விகடன்லேர்ந்து” என்று முழு நம்பிக்கையோடு சொல்லிக்கொண்டு இருந்தார்.

மேற்படி கதை பரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற கடிதத்தோடு கதை திருப்பி அனுப்பப்பட்டிருந்தால், என் அப்பா வேண்டுமானால் ஏமாற்றம் அடைந்திருப்பாரே தவிர, நான் சற்றும் ஏமாற்றமோ வருத்தமோ அடைந்திருக்க மாட்டேன்.

ஆனால், நடந்ததோ வேறு!

என் மீது கடுமையான குற்றச்சாட்டு ஒன்றைச் சுமத்தியதோடு மட்டுமின்றி, பிரசுரத்துக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் என்  மற்ற கதைகளையும் ஏன் திருப்பியனுப்பக் கூடாது என்று கேட்டுக் கடிதம் எழுதியிருந்தார் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன். விளக்கில் விழுந்த விட்டில் போல் துடிதுடித்துப் போனேன்.

எனக்கே அதிர்ச்சியாக இருந்த அந்தக் கடிதம் என் அப்பாவுக்கு எத்தனை பெரிய இடியாக இருந்திருக்கும் என்பதைச் சொல்லத் தேவையில்லை. ஆனால், ஆனந்த விகடன் ஆசிரியரின் அந்தக் கடிதத்துக்கு நான் போட்ட பதில், என் அப்பாவுக்கு இன்னும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு, என் மீது அவரைக் கடுங்கோபம் கொள்ளச் செய்தது.

(இன்னும் சொல்வேன்)

3 comments:

அடுத்து...?
 
Thank you sir....
 
உங்கள் blog ஐ படிக்கையில் ஒரு பெண் எழுத்தாளரின் அனுபவம் போல் இருக்கிறது! நானும் ஆனந்தவிகடனின் வாசகியாகவும் எழுத்தாளராகவும் (from1972 to1985) இருந்தவள். திடுமென என் பெயர் பிளாக் List செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்தக்டு. காரணம் தெரியவில்லை!நானும் பேசாத்திருந்துவிட்டேன்.