உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, January 29, 2016

என் புகுந்த வீடு - 6

அன்பிலே கரைந்தேன்...!
ரிசீலனையில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளை வேறு வழியின்றி சம்பந்தப்பட்ட கதாசிரியர்களுக்கே திருப்பி அனுப்புவதற்குரிய காரணங்களை எடுத்துச் சொன்னதும் ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியன் அதற்கு அரை மனதாக ஒப்புக்கொண்டாலும், அவர்களுக்கான கடிதத்தில் கூடுதலாக ஒரு தகவலை மட்டும் சேர்க்கச் சொன்னார்.

‘தங்கள் சிறுகதையைப் பிரசுரிப்பதற்குக் கால தாமதம் ஏற்படுவதை முன்னிட்டே அதைத் திருப்பி அனுப்புகிறோம். என்றாலும், தங்கள் படைப்புக்குரிய சன்மானத்தையும் தங்களுக்கு அனுப்பியுள்ளோம். இந்தச் சன்மானம், தங்களின் இந்தப் படைப்பை வேறு பத்திரிகையின் பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதை எந்த விதத்திலும் கட்டுப்படுத்தாது என்பதையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறோம்’ என்பதே அந்தத் தகவல்.

ஆம்... தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் பிரசுரிக்கப்படாமல் திருப்பி அனுப்பிய கதைகளுக்கும்கூட அவற்றுக்குரிய சன்மானத் தொகையை வழங்கிய பண்பாளர் மதிப்புக்குரிய ஆசிரியர் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்.

நான் திட்டமிட்டபடியே, பரிசீலனையில் தேங்கிக் கிடந்த 3000 சிறுகதைகளையும் அடுத்த ஒன்று, ஒன்றரை மாத காலத்துக்குள் அதிரடியாகப் பரிசீலித்து முடித்துவிட்டேன். இதை நான் ஒருவன் மட்டும் தனியனாகச் சாதிக்கவில்லை. சாதிக்கவும் இயலாது.

அப்போது நிர்வாக ஆசிரியராக இருந்த திரு.வீயெஸ்வி அவர்களிடம் ஒரு யோசனையைச் சொன்னேன். ஆசிரியர் குழுவில் இருந்த அனைவரும் ஒவ்வொரு ஞாயிறன்றும் அலுவலகத்துக்கு வந்து, கான்ஃப்ரென்ஸ் ஹாலில் ஒன்றாக அமர்ந்து, கதைகளைப் படித்துப் பரிசீலிக்க வேண்டும்; இப்படி தொடர்ந்து ஆறு, ஏழு ஞாயிற்றுக்கிழமைகள் வந்து படித்தால், கண்டிப்பாக அத்தனை கதைகளையும் படித்து முடித்துவிட முடியும் என்பதுதான் என் யோசனை.

அதை அப்படியே செயல்படுத்தினோம். அனைவரும் வந்தார்கள். ஒன்றாக அமர்ந்து அத்தனை கதைகளையும் படித்து முடித்து, தேர்ந்தெடுக்கப்படாத கதைகளில் திருப்பி அனுப்ப ஸ்டாம்ப் வைத்திருந்தவற்றை உடனடியாகத் திருப்பி அனுப்பினோம். பிரசுரத்துக்காக வைத்திருந்த கதைகளையும் அடுத்த சில வாரங்களில் பிரசுரித்துவிட்டோம். அதன்பின்பு, அதிகபட்சம் இரண்டு, மூன்று மாத காலத்துக்குள்ளாக பரிசீலனைக்கு வந்த கதைகள் பரிசீலிக்கப்பட்டு, பிரசுரிக்கப்பட்டுவிடும் நிலை உருவானது.

இதில் என் மனத்தில் ஆழமாகப் பதிந்த விஷயம் ஒன்றுதான்... திருப்பி அனுப்பப்பட்ட கதைகளுக்குக்கூட சன்மானம் அனுப்பச் சொன்ன ஆசிரியரின் அந்த நேர்மை; அவர் கடைப்பிடித்த அந்தப் பத்திரிகா தர்மம்!

தனிப்பட்ட முறையிலும் ஆசிரியர் தன் கீழ் பணிபுரிகிறவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பு கொடுப்பார், அவர்களின் கஷ்ட நஷ்டங்களில் மனிதாபிமானத்தோடு பங்கு கொள்வார் என்பதை, விகடனில் சேர்ந்த ஒரு சில மாதங்களிலேயே நான் அனுபவபூர்வமாக அறிந்துகொண்டேன். சில பழக்கங்களை, பக்குவங்களை வரவழைத்துக்கொள்ள முடியும்; ஆனால், அடிப்படைக் குணங்கள் வாழையடி வாழையாக ஜீன்களிலேயே கலந்திருக்கும். ஆசிரியர் எஸ்.பாலசுப்ரமணியனின் அந்தப் பெரிய மனசு, அவரின் பாட்டி அதாவது எஸ்.எஸ்.வாசனின் தாயார் காலத்திலிருந்தோ, அதற்கும் முந்தைய தலைமுறையிடமிருந்தோ வழிவழியாக வந்துகொண்டிருப்பது.

நான் விகடனில் சேர்ந்து நாலு மாதங்களே ஆகியிருந்த நிலையில் எனக்குப் பெரிய பணத் தேவை ஒன்று வந்தது. என் மனைவிக்கு பிரசவ செலவு. முதல் குழந்தை சிசேரியன் என்பதால், இரண்டாவது குழந்தையும் சிசேரியன் செய்து எடுக்க வேண்டிய கட்டாயம். மாதச் சம்பளமாக அப்போது நான் பெற்ற ரூ.1200 மாதாந்திர செலவுகளுக்கே சரியாக இருந்தது. சிசேரியனுக்கு குறைந்தபட்சம் ரூ.8000/-வது தேவைப்படும் என்ற நிலை. என்ன செய்வது, யாரிடம் கேட்பது என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. செப்டம்பர் முதல் வாரம் எனத் தேதி கொடுத்திருந்தார் டாக்டர்.

ஆகஸ்ட் மூன்றாம் வாரத்தில் ஒரு நாள், திரு.வீயெஸ்வி அவர்களின் அறைக்குச் சென்றேன். சட்டைப் பையில் வைத்திருந்த மனைவியின் தங்க வளையல்களை எடுத்து அவர் மேஜையில் வைத்தேன். “சார், மனைவியின் ஆஸ்பத்திரி செலவுகளுக்கு எனக்கு உடனடியாக எட்டாயிரம் ரூபாய் பணம் வேண்டும். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. நான் இங்கே பணியில் சேர்ந்து ஒரு சில மாதங்களே ஆகியுள்ளதால், இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகக் கேட்பதும் முறையில்லை. எனவே, நீங்கள்தான் இதை வைத்துக்கொண்டு எனக்கு எப்படியாவது பண உதவி செய்ய வேண்டும்” என்றேன்.

அவர் பதறிவிட்டார். “என்ன ரவி இது, முதல்ல இதை எடுத்துப் பையில வைங்க. வாங்க, எடிட்டர்கிட்ட போய்ப் பேசுவோம்” என்றார். “இல்லை சார், எனக்குத் தயக்கமாக இருக்கிறது. நான் இங்கே சேர்ந்து சில மாதங்கள்கூட ஆகாத நிலையில், இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகத் தரும்படி ஆசிரியரிடம் போய்க் கேட்டால், அவர் என்னைப் பற்றி என்ன நினைத்துக் கொள்வார். அதனால் இந்த வளையல்களை எங்காவது விற்றுப் பணம் தந்து உதவுங்கள். தங்கம் விலை, சேதாரம், செய்கூலி போன்ற விவரங்கள் எனக்கு எதுவும் தெரியாது என்பதால்தான் உங்கள் உதவியைக் கேட்கிறேன்” என்றேன்.

எனக்குப் பணி ரீதியாக நேரடித் தொடர்பில் இருந்தவர் வீயெஸ்வி சார் மட்டும்தான்! அவரைத் தவிர, ஆசிரியர், மதன் சார், ராவ் சார் ஆகியோர் மட்டுமல்ல; அங்கு வேறு யாரையுமே அதிகம் பழக்கம் இல்லாமல் இருந்தது. தவிர, ஏழெட்டு பேர் மட்டுமே கொண்ட ‘சாவி’ என்னும் மிகச் சிறிய பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிந்துவிட்டு, இப்போது (1995-ல்) ஆசிரியர் குழுவில் மட்டுமே ஐம்பது அறுபது பேர் பணிபுரியும் ஒரு பெரிய நிறுவனத்தில் பல ஜாம்பவான்களுக்கு மத்தியில் பணிபுரிவதில் உள்ள தயக்கமும் கூச்சமும் வேறு என்னை ஆக்கிரமித்திருந்தது.

இருந்தாலும், “வாங்க சும்மா! ஆசிரியர்கிட்ட நான் பேசறேன். நீங்க பேச வேண்டாம். போதுமா?” என்று என்னை உடனே ஆசிரியரின் அறைக்கு அழைத்துச் சென்றார் வீயெஸ்வி. தலையைக் குனிந்தவாறு அவரைப் பின்தொடர்ந்தேன்.

“வாங்கோ, என்ன விஷயம்?” என்றார் ஆசிரியர்.

வீயெஸ்வி நேரடியாக விஷயத்துக்கு வந்தார். “சார், இவர் மனைவிக்கு இது பிரசவ நேரம். சிசேரியன்தான்னு டாக்டர்கள் சொல்லி, செப்டம்பர் ஒண்ணுன்னு தேதியும் கொடுத்துட்டாங்களாம். இவருக்கு உடனே எட்டாயிரம் ரூபாய் கடனாகத் தேவை!” என்றார்.

ஆசிரியர் மேற்கொண்டு எந்தக் கேள்வியும் கேட்கவில்லை. “சரி, நான் கேஷியரைக் கூப்பிட்டுச் சொல்றேன். அவர் தருவார்!” என்றார். என்னால் நம்பவே முடியவில்லை. நான் இங்கே பணியில் சேர்ந்து, என் உழைப்பையோ, திறமையையோ இன்னும் சரிவரக் காட்டியிருக்கவில்லை. என் முகம் கூட இன்னும் இங்குள்ளோருக்குப் பரிச்சயம் ஆகியிருக்காது. அப்படியிருக்க, என்ன தகுதியில் எனக்கு இவ்வளவு பெரிய தொகையைக் கடனாகத் தருகிறார்கள் என்று புரியவே இல்லை. நன்றியின் மிகுதியில், ஆசிரியருக்கு வாய் வார்த்தையாக நன்றி சொல்லக்கூடத் தோன்றாமல் சிலையாக நின்றிருந்தேன். வீயெஸ்விதான் என் சார்பாக நன்றி சொல்லிவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு வெளியே வந்தார்.

“போதுமா? இனிமே நிம்மதியா போய் உங்க வேலையைக் கவனியுங்க!” என்று சொல்லிவிட்டுத் தன் அறைக்குப் போனார்.

மறுநாள் போனது. அதற்கு மறுநாளும் போனது. இப்படியே நாலைந்து நாள் ஓடிப் போயிற்று. எனக்கு யாரும் பணம் கொண்டு வந்து தரவில்லை. மீண்டும் வீயெஸ்வி அவர்களிடம் சென்றேன். “சார், கேஷியரைப் போய்ப் பார்க்கட்டுமா சார்? எனக்கு இன்னும் கடன் தொகை கிடைக்கவில்லை!” என்றேன்.

“கேளுங்களேன்” என்றார். அதன்பின் கேஷியரைப் போய்ப் பார்த்து, விஷயத்தைச் சொல்லிக் கேட்டேன். அவர் சொன்னதிலிருந்து பணம் வழங்குவதில் உள்ள சில நடைமுறைகள், வவுச்சரில் கையெழுத்து போடுவது, வங்கியில் பணம் எடுப்பது போன்ற அலுவலக சம்பிரதாயங்கள் சில பூர்த்தியாகாததால் உடனடியாகப் பணம் வழங்க அவரால் இயலவில்லை என்பதாகப் புரிந்துகொண்டேன்.

திரும்ப வீயெஸ்வியிடம் வந்து கேஷியர் சொன்னதைச் சொல்லி, “ஆசிரியரிடம் சொல்வோமா சார்?” என்று கேட்டேன். “சார் ஊர்ல இல்லையே! ஃபாரின் போயிருக்கார். மாதக் கடைசியிலதான் வர்றார்!” என்றார்.

எனக்கு மேற்கொண்டு என்ன செய்வதென்றே புரியவில்லை. நாட்கள் கடகடவென்று ஓடிக்கொண்டு இருந்தன. சாமி வரம் தந்தும் பூசாரி தரவில்லை என்கிற கதையாக, எனக்குப் பணம் கிடைக்காமலே இருந்தது.

ஆகஸ்ட் 29. “ரவி, ஆசிரியர் வந்துவிட்டார். வாருங்கள், அவரிடம் போய்ச் சொல்லலாம்!” என்று என்னை அழைத்துப் போனார் வீயெஸ்வி.

உள்ளே நுழைந்ததும், “வாங்கோ! எப்படியிருக்கா உங்க வொய்ஃப்? செக்கப்லாம் ஒழுங்கா பண்ணிண்டிருக்கேளா? கூட யார் இருக்கா கவனிச்சுக்கறதுக்கு?” என்றெல்லாம் அக்கறையோடு விசாரித்தார். சொன்னேன்.

“சார், அது விஷயமாத்தான் வந்தோம். இவர் எட்டாயிரம் ரூபாய் கடனா கேட்டிருந்தார் இல்லையா...” என்று வீயெஸ்வி ஆரம்பித்ததுமே, “அதான் அன்னிக்கே கொடுக்கச் சொல்லிட்டேனே..!” என்றார் ஆசிரியர்.

“இல்லை. இவருக்கு அந்தத் தொகை இன்னும் கிடைக்கலை!” என்றார் வீயெஸ்வி.

சரிந்து தளர்வாக உட்கார்ந்திருந்த ஆசிரியர் சட்டென்று எழுந்து நிமிர்ந்து உட்கார்ந்தார். “என்னது... இன்னும் கிடைக்கலையா, ஏன்?” என்று கோபமானவர், உடனே இன்டர்காம் மூலம் கேஷியரை அழைத்து, உடனே தன் அறைக்கு வரச் சொன்னார்.

அவர் வந்ததும், “இவருக்கு பத்தாயிரம் ரூபாய் கொடுக்கச் சொன்னேனே, ஏன் கொடுக்கலே?” என்று கேட்டார். கேஷியர் நடைமுறை புரொஸீஜரைச் சொல்லவும், “கையெழுத்து என்ன மண்ணாங்கட்டி கையெழுத்து! உங்களுக்கு எத்தனை கையெழுத்து போடணும், நான் போடறேன்!” என்று பேனாவை மேஜை மீது கோபத்துடன் எறிந்தார் ஆசிரியர். “அன்னிக்கு நானே உங்களைக் கூப்பிட்டு, ‘அவசரம்... இவருக்கு உடனே  பத்தாயிரம் ரூபாய் கொடுங்க’ன்னு சொல்லிட்டுப் போனேனா இல்லையா, பத்து நாள் ஆகியும் பணம் கொடுக்கலேன்னா இவர் என்ன பண்ணுவார் பாவம்? என்னைப் பத்தி என்ன நினைப்பார்? சே...! முதல்ல போய் பணத்தை எடுத்து வாங்க! வவுச்சரையும் கொண்டு வாங்க, கையெழுத்து போடறேன்! உடனே வரணும்!” என்றார்.

கேஷியர் ஓடிப் போய் பணத்தையும் வவுச்சரையும் கொண்டு வந்தார். வவுச்சரில் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துவிட்டு, என்னிடம் பணத்தை நீட்டிய ஆசிரியர், “ஸாரி, ரொம்ப ஸாரி! கொடுக்கச் சொல்லிட்டுதான் போனேன். கொடுத்திருப்பார்னு நினைச்சேன். பணம் இல்லாம ரொம்ப சிரமப்பட்டிருப்பேள். தப்பு நடந்து போச்சு! மன்னிக்கணும்! உடனே போய் கவனியுங்கோ!” என்றார். (அடுத்த இரண்டு நாளில் மனைவியை சென்னை- மாம்பலம் ஹெல்த் சென்டரில் சேர்த்து, செப்டம்பர் முதல் தேதியன்று மகன் பிறந்தான்.)

புத்தம் புதியவன்; அலுவலகத்துக்குச் சற்றும் பழகாதவன்; நான் யார், உழைப்பாளியா, திறமைசாலியா, விகடனுக்குப் பயன்படுவேனா, தொடர்ந்து இங்கே வேலை செய்வேனா... எதுவும் தெரியாது! ஆனால், வாக்களித்தபடி உரிய நேரத்தில் எனக்குப் பணம் தந்து உதவ முடியவில்லையே என்பதற்காகப் பதறி, தன் அலுவலகத்தில் வெகு காலமாகப் பணிபுரியும் ஒருவரைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார் ஆசிரியர் என்றால், அவருடைய மனிதாபிமானத்துக்கு முன், அவருடைய பெருந்தன்மைக்கு முன் நான் தூசிலும் தூசு!

அதுவும் எவ்வளவு பெரிய வார்த்தை... ‘தப்பு நடந்து போச்சு! மன்னிக்கணும்!’

என் கண்கள் கரகரவென்று நீரைச் சொரிந்தன. இதோ, இதை எழுதிக்கொண்டிருக்கிற இப்போதும்!

எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியப் பெருந்தகையாளர் எஸ்.பாலசுப்ரமணியன் மரிக்கவில்லை; எங்கள் உடம்புகளில் ஓடும் ரத்த நாளங்களின் கதகதப்பாக, எங்கள் மூச்சுக் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவாக, எங்களின்  மூளை மடிப்புகளில் பொதிந்திருக்கும் நினைவுப் படிமங்களாக அவர் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.

(இன்னும் சொல்வேன்)

8 comments:

//தேர்ந்தெடுக்கப்பட்டு, ஆனால் பிரசுரிக்கப்படாமல் திருப்பி அனுப்பிய கதைகளுக்கும்கூட அவற்றுக்குரிய சன்மானத் தொகையை வழங்கிய பண்பாளர் மதிப்புக்குரிய ஆசிரியர் அமரர் எஸ்.பாலசுப்ரமணியன்.//

இதைக்கேட்கவே மிகவும் ஆச்சர்யமாக உள்ளது.

//புத்தம் புதியவன்; அலுவலகத்துக்குச் சற்றும் பழகாதவன்; நான் யார், உழைப்பாளியா, திறமைசாலியா, விகடனுக்குப் பயன்படுவேனா, தொடர்ந்து இங்கே வேலை செய்வேனா... எதுவும் தெரியாது! ஆனால், வாக்களித்தபடி உரிய நேரத்தில் எனக்குப் பணம் தந்து உதவ முடியவில்லையே என்பதற்காகப் பதறி, தன் அலுவலகத்தில் வெகு காலமாகப் பணிபுரியும் ஒருவரைக் கடுமையாகக் கோபித்துக்கொண்டார் ஆசிரியர் என்றால், அவருடைய மனிதாபிமானத்துக்கு முன், அவருடைய பெருந்தன்மைக்கு முன் நான் தூசிலும் தூசு!

அதுவும் எவ்வளவு பெரிய வார்த்தை... ‘தப்பு நடந்து போச்சு! மன்னிக்கணும்!’

என் கண்கள் கரகரவென்று நீரைச் சொரிந்தன. இதோ, இதை எழுதிக்கொண்டிருக்கிற இப்போதும்!//

உண்மையிலேயே மனிதாபிமானம் மிக்க மிகப்பெரிய மனிதர்தான் என்பதை என்னாலும் இப்போது நன்றாக அறிய முடிகிறது.

பகிர்வுக்கு நன்றிகள்.
 
Nice.. 👏
 
Nice.. 👏
 
எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியப் பெருந்தகையாளர் எஸ்.பாலசுப்ரமணியன் மரிக்கவில்லை; எங்கள் உடம்புகளில் ஓடும் ரத்த நாளங்களின் கதகதப்பாக, எங்கள் மூச்சுக் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவாக, எங்களின் மூளை மடிப்புகளில் பொதிந்திருக்கும் நினைவுப் படிமங்களாக அவர் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
 
எங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆசிரியப் பெருந்தகையாளர் எஸ்.பாலசுப்ரமணியன் மரிக்கவில்லை; எங்கள் உடம்புகளில் ஓடும் ரத்த நாளங்களின் கதகதப்பாக, எங்கள் மூச்சுக் காற்றில் கலந்திருக்கும் பிராண வாயுவாக, எங்களின் மூளை மடிப்புகளில் பொதிந்திருக்கும் நினைவுப் படிமங்களாக அவர் இன்னமும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார்.
 
நெகிழ்ந்து போனேன்
நன்றி
 
1982 நவம்பர் மாதம் அந்த இளைஞன் ஆனந்த விகடனில் வேலைக்குச் சேர நேர்காணலுக்கு சென்றான்.நான்கு எழுத்துத் தேர்வு முடிந்து ஐந்தாவது நேர்காணல் அது!அன்றைய தேதி நவம்பர் 24 1982! எம்.டி. என்றழைக்கப்படும் ஆசிரியர் பாலசுப்ரமணியம் `உங்களுக்கு இந்த மாதம் 28ந் தேதிக்குள் வேலைக்கான கடிதம் வரவில்லையென்றால், நீங்க தேர்வாகலைன்னு புரிஞ்சுக்கலாம்' என்றார். அந்த தேதியில் கடிதம் வரவில்லை! அந்த இளைஞன் துடித்துப் போனான்! காரணம் அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் தான் வந்த வங்கி வேலையை வேண்டாம் என்று உதறித்தள்ளியிருந்தான்! வீட்டில் அப்போது அவன் தீண்டத்தகாதவன்! வாழ்கையே வெறுத்து தற்கொலை எண்ணத்தில் இருந்தான்! இரண்டு நாள் கழித்து ஒரு மாலை நான்கு மணிக்கு ஆனந்தவிகடன் சிப்பந்தி ஒரு கடிதம் கொண்டு வந்தார்! அதில் நாளை காலை 11 மணிக்கு என்னை நேரில் சந்திக்கவும்' எம்.டி என்றிருந்தது! அடுத்த நாள் அந்த இளைஞன் ஆசிரியர் அறைக்கு நுழைந்த போது அவர் எழுந்து நின்று கைகூப்பியபடியே நின்று கொண்டிருந்தார். `முதல்ல என்ன மன்ன்னிச்சுட்டேன்' ன்னு சொல்லுங்க! வேலைக்கு போன இளைஞன் பதறிப்போனான்! உடல் வெடவெடுத்து, கண்களில் ஒரம் நீர் கட்டிக்கொண்டு வெளியேற காத்திருந்தது! ` நான் சொன்ன தேதியில் உங்களுக்கு கடிதம் அனுப்ப முடியாம ஒரு குழப்பம் நடந்து போச்சு! இரண்டு நாள் உங்க மனசு வேதனைப்பட்டிருக்கும்! முதல்ல என்னை மன்னிச்சுடுங்கோ!' வேலை கொடுக்கிற எந்த முதலாளியாவது இப்படி நடந்து கொண்டதாக இதுவரையில் அவன் எங்கும் படிக்கவில்லை! பிறகு அந்த இளைஞன் அங்கே ஜீனியர் விகடன் நிருபராக சேர்ந்து 1992 ம் வருடம் பொறுப்பாசிரியராகி வெளியேறினான். அந்த இளைஞன் பெயர் சுதாங்கன் என்கிற அடியேன் தான்!
 
நன்றி சார்...படித்து முடிக்கவும், என் கண்களும் கலங்கின.