உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, August 01, 2012

வலி தந்த வாலியார்!

 சாவி சார் கலந்துகொண்ட கடைசி விழாவான சாவி-80 நூல் வெளியீட்டு விழாவில் கலைஞருடன் சாவி.
‘மரங்கள் தங்களுக்குள் முனகிக் கொண்டன;
நம்மை வைத்துப் பல சிலுவைகளை உருவாக்கும் மனிதன்
அவர்களிடமிருந்து ஏன் ஒரு இயேசுவை மறுபடி உருவாக்கவில்லை?’

***

மறி ஆடே! செம்மறி ஆடே!
மேய்ச்சலுக்குப் போகிறாயா? போ!
அங்கே நல்ல மூலிகைத் தழைகள் மலிந்து கிடக்கின்றன.
அவைகளை மேய்! தப்பித் தவறி விஷப் பூண்டுகளில்
வாய் வைத்துவிடாதே!
ஜாக்கிரதையாகப் போ! அவசரப்படாதே! நீ
வேகமாய் ஓடி முட்டியில் அடிபட்டு விழுந்தால்
என் கண்களில் முட்டிக்கொண்டு கண்ணீர் வரும்.
அங்கே சுவரோரமாய்ப் படுத்துக் கொள்!
ஆனந்தமாய் அசைபோடு; விடியும் வரை
நிதானமாய் நிம்மதியுடன் தூங்கு.
விடிந்த பின்னர்தானே
பக்ரீத்?!

***

ரயில்கள் மட்டுமல்ல; மனிதர்களும் கூடத்தான்
கை இறங்கியவுடன் - நம்
கை இறங்கியவுடன்
ஓடத் தொடங்குகிறார்கள்!

***

அஞ்ஞானத்தை அறுக்க வந்த
பெரிய’வாள்’.

***

கவிஞர் வாலியை அணுஅணுவாக ரசித்தவன் நான். அவரது ‘தரை மேல் பிறக்க வைத்தான்...’ பாடலை சின்ன வயதிலிருந்து இன்று வரை நான் அத்தனை உருகி உருகிக் கேட்டு ரசிப்பதற்குக் காரணம் டி.எம்.எஸ்-ஸின் குரல் மட்டும் இல்லை; வாலியின் அற்புதமான வரிகளும்தான்! விகடனில் அவர் எழுதிய அவதார புருஷன், பாண்டவர் பூமி, கிருஷ்ண விஜயம், ராமானுஜ காவியம் இவற்றையெல்லாம் பாராட்டிச் சொல்வதற்கும் ஒரு தகுதி வேண்டும்; அது எனக்கில்லை.

துக்ளக்கில் கவிஞர் வாலி தொடர்ந்து எழுதி வரும் ‘எனக்குள் எம்.ஜி.ஆர்.’ தொடரையும் அப்படித்தான் நான் ரசித்துப் படித்துக்கொண்டு இருந்தேன்; இருக்கிறேன்.

ஒரு அத்தியாயத்தின் இறுதியில்...

’எம்.ஜி.ஆரை எந்தக் காரணமுமின்றித் தன் ஏட்டில் இடையறாது வசைபாடி வந்தார். அந்த இரண்டெழுத்துப் பத்திரிகையாளரைப் பற்றி’ அடுத்த இதழில் தான் எழுதப்போவதாக அவர் கொடுத்திருந்த குறிப்பு கூட என்னை அவ்வளவாக பாதிக்கவில்லை. சாவி சாரைப் பற்றி எழுதப் போகிறார் என்பது புரிந்தது. ஆனால், சாவி சாரைத் தாக்கி எழுதினாலும், தனக்கே உரிய சிலேடையில் ரசிக்கும்படியாக எழுதுவார் என்றுதான் நானும் ஆவலோடு காத்திருந்தேன்.

ஆனால்...

சாவி சார் பற்றி வாலி எழுதியிருந்த ஒவ்வொரு வரியைப் படித்தபோதும் ஒரு முறம் நெருப்பை அள்ளி என்னுள் கொட்டினாற்போன்று இருந்தது.

‘எம்.ஜி.ஆரைப் பற்றி ஏனோதானோவென்றும், எடுத்தேன் கவிழ்த்தேன் என்றும் மனம் போனபடியெல்லாம் எழுதிக்கொண்டிருந்த பத்திரிகையாளர் - திரு.சாவி!’ என்று தொடங்கியிருந்த அந்தக் கட்டுரையில், சாவி சாரை வேதாளம், மாடு என்றெல்லாம் உதாரண உவமைகளால் குத்தியிருந்தார் வாலி.

கடைசி வரைக்கும் கலைஞர் கருணாநிதியின் ஆப்த நண்பராக விளங்கியவர் சாவி. கலைஞர் தலைமையில் நடந்த தனது புத்தக வெளியீட்டு விழாவில் கலைஞரைப் புகழ்ந்து, நன்றி பாராட்டிப் பேசிக்கொண்டிருந்தபோதே மயங்கி விழுந்து கோமா ஸ்டேஜை அடைந்து, அப்படியே உயிர் துறந்தவர் அவர். அப்படிப்பட்டவர் தமது நண்பராகிய கலைஞருக்குப் பரம அரசியல் எதிரியாக விளங்கிய எம்.ஜி.ஆரைத் தாக்கிச் செய்தி வெளியிட்டதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது எம்.ஜி.ஆருக்கும் சாவிக்கும் இடையே இருந்த கோப தாபம்!

ஆனால், ‘ஊருக்கெல்லாம் வெளிச்சம் போடக் கொடுத்த பணத்திலே தாங்கள் வெளிச்சம் போட்டு வாழ்ந்துவிட்டார் நகரசபையிலே... ஏழைக்கெல்லாம் வீடு என்று திட்டம் தீட்டினார், தாங்கள் வாழ்வதற்கு ஊர்ப் பணத்தில் வீடு கட்டினார்...’ என்றும், ‘மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள் நலம் ஒன்றேதான் மனதில் கொள்ளுவார்’ என்றும், ‘ஏய்ப்பவர்க்கே காலம் என்று எண்ணிவிடாதே, பொய் எத்தனை நாள் கை கொடுக்கும் மறந்துவிடாதே! ஒரு நாள் இந்த நிலைமைக்கெல்லாம் மாறுதல் உண்டு, அந்த மாறுதலைச் செய்வதற்குத் தேர்தல் உண்டு’ என்றும் தேர்தல் நேரத்தில் எம்.ஜி.ஆருக்கு ஆதரவாக, அன்றைய தமிழக முதல்வராக இருந்த கருணாநிதியைத் தாக்கிப் பாடல் எழுதிய வாலி அவர்கள் - பின்னர் தனது மருத்துவச் செலவுகளை ஏற்றுக்கொண்டதற்கு நன்றிக் கடனாகவும், தன்னை பத்மஸ்ரீ விருதுக்குப் பரிந்துரைத்ததற்கு நன்றிக் கடனாகவும், காவியக் கவிஞர் என்று பட்டம் கொடுத்ததற்கு நன்றிக் கடனாகவும் கலைஞரின் ஜால்ராவாக மாறிப்போன வாலி அவர்கள் - எம்.ஜி.ஆரைத் தாக்கி சாவி செய்தி வெளியிட்டார் என்று இப்போது கோபப்படுவதில் உள்ள நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள இயலவில்லை.

கலா ரசிகன் தனது தினமணி கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது போல், முதல்வர் பதவியில் கருணாநிதி இருக்கும் வரை, ’இமை மூடாப் பணி செய்யும் சி.எம்.’ என்று பாடிப் புகழ்ந்துவிட்டு, ஆட்சி மாறிய அடுத்த கணமே முதல்வர் ஜெயலலிதாவை ‘ரங்கநாயகி’ என்று வர்ணித்துத் துதிக்கும் சந்தர்ப்பவாதம் சாவி சாரிடம் இருந்ததில்லை.

வாலி தமது கட்டுரையில் வேறு ஒரு விஷயத்தையும் குறிப்பிட்டுள்ளார். ‘கண்ணதாசன் காலமான பிறகு, தனக்கு அரசவைக் கவிஞர் பதவி கிடைக்க வேண்டும் என்று இரண்டெழுத்துக் கவிஞர் ஒருவர் இரவு பகலாக ராமாவரம் தோட்டத்து வாசலில் தவம் கிடக்கிறார்’ என்று ஒரு கிசுகிசு செய்தியை சாவி தனது பத்திரிகையில் வெளியிட்டுவிட்டாராம். ஆனால், வாலி ஒருநாளும் அப்படித் தவம் இருந்தது கிடையாதாம்!

எம்.ஜி.ஆரே இவருக்கு எம்.எல்.ஏ. சீட் வழங்க முன்வந்தபோதும் மறுத்துவிட்டாராம். ‘அப்படிப்பட்ட நானா அரசவைக் கவிஞருக்கு ஆசைப்பட்டு அவர் தோட்டத்துக்கு அலைந்திருப்பேன்?’ என்று கேட்டிருக்கிறார்.

நல்லது! அப்போதே அதற்கு ஒரு மறுப்பு அறிக்கை விட்டிருந்தால் அத்தோடு முடிந்துபோயிருக்குமே விஷயம்? இத்தனை நாள் கழித்து, காய்த்துப் போன சிரங்கைச் சொறிய வேண்டிய அவசியமென்ன?

கிசுகிசுக்கள் இல்லாத பத்திரிகை உண்டா? சில செய்திகள் அரசல்புரசலாக காதுக்கு வரும். அவற்றின் சுவாரஸ்யம் கருதி நிருபர்கள், உதவி ஆசிரியர்கள் எல்லாம் சேர்ந்து அதை ஒரு கிசுகிசு செய்தியாக்கி வெளியிடுவது பத்திரிகைகளில் வழக்கம்தான். ஒவ்வொன்றிலும் ஆசிரியரின் தலையீடு, சம்மதம் இருக்கும் என்று சொல்ல முடியாது. ஆசிரியரின் நேரடி கவனத்துக்கு வராமலும் பல துணுக்குச் செய்திகள், சிறு கட்டுரைகள் அரங்கேறுவதுண்டு.

மேற்படி செய்தியும் அப்படிப்பட்டதுதான்! ஒரு சாதாரண கிசுகிசு. அதை ஏதோ பெரிய கொலைப் பழியையே தன் மீது சாவி சுமத்திவிட்டாற்போல் வாலி அய்யா அவர்கள் இத்தனை காலம் கழித்து ஊதிப் பெரிதாக்கியிருப்பதன் காரணம் எனக்கு விளங்கவில்லை.

மூப்பனார் வீட்டில் வைத்து சாவி சாரை வாலி சந்தித்தாராம். ‘என்னைப் பற்றி நையாண்டி செய்து எழுதிய ஒரு பத்திரிகையாளரைப் பல பத்திரிகையாளர்கள் முன்னிலையிலேயே, அருணாசலம் ஸ்டூடியோவிலே ஓங்கி ஒரு அறை அறைஞ்சேன்! உங்க வயது கருதி வாய் வார்த்தையோடு விடறேன்’ என்றாராம்.

இப்படிச் சொல்ல வாலிக்கு நாக்கூசாமல் போனது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. இதை எடிட் செய்து வெளியிட சோ-வுக்கு மனமில்லாமல் போனது ஏன் என்றும் புரியவில்லை. அது வாலியின் தனிப்பட்ட கருத்து என்பதாக நினைத்து வெளியிட்டிருக்கலாம். ஆனால், இதற்கு முன்னரும் ஒரு சமயம் வாலி அவர்களின் கட்டுரையை வெளியிட்டுவிட்டு, அது குறித்த தனது கருத்தை வேறு பக்கத்தில் பதிந்திருந்தார் சோ. இப்போதும் அப்படி ஏன் செய்திருக்கக்கூடாது என்பதே என் கேள்வி.

மற்ற அரசியல் தலைவர்களை நையாண்டி செய்வது போலவே ஆரம்பக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜையும் நையாண்டி செய்தவர்தான் சோ. அவருக்குப் பெருந்தலைவரின் மேன்மையைப் புரியவைத்து, சோ-வை காமராஜின் அபிமானியாக மாற்றியவர் சாவி சார்தான். ‘அர்த்தமுள்ள இந்து மதம்’ என்று தலைப்புக் கொடுத்து, கவியரசு கண்ணதாசனை இந்து மதத்தைப் பற்றி எழுதச் செய்து, அவருக்குப் புதியதொரு பரிமாணத்தைக் கொடுத்தவர் சாவி சார்தான். ‘குறளோவியம்’ என்று தலைப்புக் கொடுத்து, கலைஞரை குறள் விளக்கம் எழுதச் சொல்லி வெளியிட்டவர் சாவி சார்தான். ‘கவிராஜன் கதை’ என்று தலைப்புக் கொடுத்து பாரதியார் பற்றி வைரமுத்துவை எழுதச் செய்தவர் சாவி சார்தான்.

சாவியின் மேன்மை புரிந்தவர் சோ; சாவி சாரின் மீது மதிப்பு வைத்திருப்பவர்தான் சோ. அவரின் துக்ளக் பத்திரிகையில், வாலி குறிப்பிட்டுள்ள சம்பவத்தில் இடம்பெற்றுள்ள எம்.ஜி.ஆர்., சாவி, மூப்பனார் யாரும் இன்று உயிரோடு இல்லை; வாலி சொல்லியிருப்பதெல்லாம் எத்தனை சதவிகிதம் உண்மை என்று அறிய! அப்படியிருக்க, போகிற போக்கில் எந்த ஆதாரமுமே இல்லாமல் சாவி சார் மீது வாலியார் சேறு வாரி இறைப்பதற்குத் தனது பத்திரிகையின் பக்கங்களை எப்படி ஒதுக்கினார் சோ என்பது இன்னமும் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது எனக்கு.

‘...இப்படிக் கவிஞர் சொல்லி முடித்ததும் ஆசிரியர் சாவி, வாலியின் கன்னத்தில் பளார் என்று ஒரு அறை விட்டார் என்று யாராவது சொன்னால், அதற்கு எப்படி ஆதாரமோ சாட்சியோ இல்லையோ, அது போலக் கவிஞர் வாலியின் பதிவுக்கும் சாட்சி கிடையாது’ என்று நெத்தியடியாக தினமணி நாளேட்டில், வாலியின் சேற்றுக் கட்டுரை குறித்த தனது நீண்ட கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் கலா ரசிகன். இவர் வேறு யாருமல்ல; தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன்தான். நான் சாவியில் பணியாற்றிய காலத்தில் எனக்கு சீனியராக இருந்தவர் வைத்தியநாதன். சாவி சார் மீது பெருமதிப்பும் மரியாதையும் கொண்டவர். சாவியிடம் நான் கோபித்துக்கொண்டு வேலையை விட்டு நிற்கும்போதெல்லாம் என்னை ஆற்றுப்படுத்தி, சாவி சாரின் பெருமையைச் சொல்லி, என்னை நெறிப்படுத்தியவர். 

பத்திரிகை தர்மம் பற்றியும், பத்திரிகையாளர்களிடம் தாம் வைத்திருக்கும் மரியாதை பற்றியும்கூட வாலி அந்தக் கட்டுரையில் சொல்லியிருக்கிறார். ஆனால், பத்திரிகை சொல்லாத ஒன்றை மேடையில் திரித்துக் கூறி, ‘அறிவு கெட்டவனுங்க’ என்று அந்தப் பத்திரிகையை வாலி திட்டியது எனக்குத் தெரியும்.

வாலியால் வசை பாடப்பட்ட அந்தப் பத்திரிகை வேறு எதுவுமல்ல; ஆனந்த விகடன்தான்!

1993-ஆம் ஆண்டு, ‘இந்து’ படத்தின் ஆடியோ காஸெட் வெளியீட்டு விழா. அந்தப் படத்தில் வாலி எழுதிய ‘எப்படி எப்படி... நீ சமைஞ்சது எப்படி’ என்கிற பாடல் படு விரசமாக உள்ளதென்று ஒரு சர்ச்சை எழுந்தது.

அதற்கு பதில் சொல்கிறாற்போன்று வாலி அந்த விழாவில் பேசினார். “கதைக்கும் கதையோட காரெக்டருக்கும் ஏத்தாப்ல பாட்டு எழுதறேன். இதிலே தப்பே இல்லை. பொழுது போகாதவங்கதான், சினிமா பாடல்களில் இலக்கியம் இருக்கா இல்லையான்னு பட்டிமன்றம் நடத்தி நேரத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க. இங்கே நான் ஒரு வியாபாரி. மாஸுக்கும் (MASS) காசுக்கும் பாடல்களை எழுதற வியாபாரி. இதிலே இலக்கியத்தைப் பார்க்காதீங்க. இலக்கியத்திலே என் புலமையைக் காட்டறதுக்குக் கம்பன் கழகம் மாதிரி வேற இடங்கள் இருக்கு. அங்கே நீங்க வேற வாலியைப் பார்க்கலாம்” என்றவர் அடுத்துப் பேசியதுதான் ஹைலைட்!

“சூரியன் படத்துலே ‘லாலாக்கு டோல் டப்பிமா’ன்னு ஒரு பாட்டு.  பவித்ரன் என்கிட்டே இந்த மாதிரி எஸ்டேட்ல வேலை செய்யறவங்க பாடற பாட்டுக்களை காஸெட்டுல பதிவு பண்ணிக் கொண்டு வந்து போட்டு எழுதச் சொன்னாரு. சொல்லப்போனா அந்தப் பாட்டையே அவர்தான் எழுதினார். பாட்டுக்கு வவுச்சர்ல கையெழுத்துப் போட்டதுதான் நான். இந்த லட்சணத்துலே ஆனந்த விகடன் பத்திரிகையிலேயிருந்து யாரோ வந்து, அதுக்கு அர்த்தம் கேட்டாங்க. எனக்குத் தெரியாதுன்னு உண்மையைச் சொன்னேன். அவங்க போய் ‘வாலிக்குத் தலைக்கனம். சொல்ல மாட்டேங்கறார். ஆணவம் பிடிச்சவர்’னு எழுதிட்டானுங்க.. அறிவுகெட்டவனுங்க..!

இலக்கியத்தைப் பொறுத்தமட்டில் நான் வண்ணத் தமிழ் மழலைக்குப் பாலூட்டும் தாய்; சினிமாவிலே விட்டெறியும் எலும்புக்கு வாலாட்டும் நாய்” என்று பேசினார்.

இந்த விழா நிகழ்ச்சி, ஆனந்த விகடனில் கட்டுரையாக வெளியானது. அதன் இறுதியில் கட்டம் கட்டி, பின்குறிப்பாக ஆசிரியர் எஸ்.பாலசுப்பிரமணியன் அவர்கள் கொடுத்திருந்த செய்தியைக் கீழே தருகிறேன்.

‘லாலாக்கு டோல் டப்பிமா’ என்ற பாடல் வரிகளுக்கு அர்த்தம் கேட்டு நமது நிருபர், கவிஞர் வாலியிடம் பேசியபோது, ‘எனக்குப் பத்திரிகைகளுக்குப் பேட்டி கொடுக்கும் பழக்கம் இல்லை’ என்றே சொன்னார். அதன்படி, “இன்னொரு பாடலை எழுதிய வாலி, பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் பழக்கம் எனக்கு எப்போதுமே இல்லை என்று சொல்லிவிட்டதால், அதற்கு இசையமைத்த ‘தேவா’வைச் சந்தித்தோம்” என்றுதான் 17.1.93 ஆனந்த விகடனில் பிரசுரித்திருந்தோம். அன்று அவர் கூறியதையே வெளியிட்டிருந்தோம். இன்று, அது அவருக்கு ‘அறிவுகெட்டத்தனமாக’ப் படுகிறது!    -ஆசிரியர்.

அன்றைக்கு ‘லாலாக்கு டோல் டப்பிமா’ பாடலையே பவித்ரன்தான் எழுதினார் என்று சொன்ன வாலியார், லேட்டஸ்ட் விகடன் பதில்களில் ‘இந்த வார்த்தைகளைப் பிடிக்க அவ்வளவாக மூளை வேண்டாம். இசையின் துள்ளு நடையைத் திரும்பத் திரும்ப செவியில் வாங்குகையில் இது போன்ற PHONETIC WORDS மனதில் உதயமாகும்’ என்று பதில் சொல்லியிருக்கிறார். எனில், அந்தப் பாடலை உண்மையில் யார்தான் எழுதினார்கள். வாலியா, பவித்ரனா?

லேட்டஸ்ட் விகடனில், “கவிஞர், பாடலாசிரியர் தாண்டி வாலியின் இன்னொரு முகம் என்ன?” என்கிற கேள்விக்கு, “கடலளவு கிடைத்தாலும் மயங்க மாட்டேன் - அது கையளவே ஆனாலும் கலங்க மாட்டேன் எனும் கண்ணதாசன் வரிகளுக்கேற்ப மனத்தைப் பக்குவப்படுத்தி வைத்திருக்கும் ஒரு ஸ்திதப் பிரக்ஞன்” என்று பதில் சொல்லியிருக்கிறார் வாலி. சிரிப்புத்தான் வருகிறது.
.

Sunday, June 24, 2012

என்னோடு இருக்கிறார் சாவி சார்!

சாவி சாரின் சதாபிஷேகத்துக்குப் பின்னர், அவரை நான் அதிகம் சந்திக்கவில்லை. சாவி பத்திரிகையை திருவேங்கடம் என்பவர் வாங்கி, நடத்திக்கொண்டு இருந்தார். சாவி சாரே அதற்கு ஆசிரியராக இருந்து நடத்தினார். முன்னர் ஆனந்த விகடனில் பணியாற்றிய எஸ்.வரதராஜன் என்பவர் சில காலமும், பாக்கியம் ராமசாமி அவர்கள் சில காலமும் சாவி சாருக்கு உதவியாக இருந்து நடத்திக் கொடுத்தார்கள். சாவி சாரின் கோப தாபங்கள் தொடர்ந்ததில், அவர் ஆசிரியர் பொறுப்பிலிருந்து சீக்கிரமே விலகிக்கொண்டார். பின்பு, திருவேங்கடம் அவர்களே ஆசிரியராக இருந்து நடத்தி வந்தார் என நினைக்கிறேன். பின்பு, அவரும் தொடர்ந்து பத்திரிகையை நடத்த இயலாமல் நிறுத்திவிட்டார். எப்படியோ... சாவி பத்திரிகை மறுபிறவி எடுத்தும், இரண்டு இரண்டரை ஆண்டுகள் மட்டுமே வெளியாகி நின்று போனது வருத்தத்துக்குரிய விஷயம்.

அதற்குப் பின்னர் சாவி சார் மந்தைவெளியில் இருந்த தமது மகள் ஜெயந்தி வீட்டில் செட்டிலாகி, பூரண ஓய்வில் இருந்தார். அங்கே அவரும் மாமியும் மட்டும்தான். மகள் ஜெயந்தியும் மருமகனும் பேரக் குழந்தைகளும் ஆஸ்திரேலியாவில் இருந்தனர்.

இந்த நிலையில்தான் சாவி சார் ஒரு நாள் என்னை விகடன் அலுவலக தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு பேசினார். நெடுநேரம் விகடனில் என் பணிகள் குறித்து விசாரித்தார். விகடனில் என்னைச் சேர்த்துக்கொள்வதற்கு முன்பு, விகடன் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்கள் என்னைப் பற்றி அவரிடம் விசாரித்ததையோ, அதற்கு சாவி சார் என்னைப் பற்றி ஆஹா, ஓஹோ என்று பாராட்டிச் சொன்னதையோ என்னிடம் சொல்லவே இல்லை. அப்போது மட்டுமல்ல; கடைசி வரைக்கும்கூட இது பற்றி சாவி சார் சொல்லவில்லை. நானும்கூட அவரிடம் இது குறித்துப் பேசி, நன்றி தெரிவிக்கவில்லை.

அன்றைய தொலைபேசி உரையாடலின் இறுதியில், முடிந்தால் தன்னை வந்து சந்திக்குமாறு சொன்னார் சாவி. “கண்டிப்பா ஒரு நாள் வரேன் சார்” என்றேன். “அப்படிப் பொதுவா சொன்னா, என்னிக்காவது ஒரு நாள் போய்க்கலாம்னு தோணும். போகவே கைவராது. அதனால, யாரையாவது போய்ச் சந்திக்கணும்னா என்னிக்குன்னு ஒரு டேட்டை ஃபிக்ஸ் பண்ணிக்கோ. அப்பத்தான் அந்தச் சந்திப்பு நிகழும். சரி, உன்னால என்னிக்கு இங்கே வரமுடியும், சொல்லு?” என்றார். “நீங்களே சொல்லுங்க சார், என்னிக்கு வரட்டும்? இந்த ஞாயித்துக்கிழமை வரட்டுமா?” என்றேன். “வா! அவசியம் வா! வரும்போது வொய்ஃபையும் குழந்தைகளையும் அழைச்சுக்கிட்டு வா! காலையில 10 மணிக்கு இங்கேயே சாப்பிடற மாதிரி வா!” என்றார்.

அதன்படியே காலையில் ஆட்டோ பிடித்து, மனைவி, குழந்தைகளோடு மந்தைவெளி போனேன். சாவி சாரும், மாமியும் மிகவும் மகிழ்ச்சியோடும் அன்போடும் வரவேற்றார்கள். ஜூஸ் கொடுத்தார்கள். சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம். விகடனில் என் வேலை, குடும்ப விஷயங்கள், குழந்தைகளின் நலன் எனப் பேச்சு பொதுவானதாகவே இருந்தது. விகடனில் தான் பணியாற்றியபோது நடந்த சுவாரஸ்யமான சம்பவங்களைப் பகிர்ந்துகொண்டார் சாவி. விகடன் சேர்மன் பாலசுப்பிரமணியன் அவர்களின் நினைவாற்றல், கருணை உள்ளம், மிக நேர்மையான குணம் எனப் பலவற்றை அனுபவ உதாரணங்களுடன் சொன்னார்.

பிறகு, 11 மணி அளவில், “வா, வெளியே ஓர் ஓட்டலில் போய் சாப்பிட்டுட்டு வரலாம்! மாமியால இப்பல்லாம் வெறும் ரசம் மட்டும்தான் சமைக்க முடியுது!” என்று மாமியையும் எங்களையும் அழைத்துக்கொண்டு காரில் கிளம்பினார். முன்பக்கத்தில் டிரைவருக்கு அருகில் சாவி சார் ஏறிக்கொள்ள, பின் சீட்டில் மடியில் குழந்தைகளை அமர்த்திக்கொண்டு நானும் மனைவியும் அமர்ந்துகொண்டோம். அருகில் மாமி.

கார் நேரே அண்ணா சாலையில் இருந்த மதுரா ஓட்டலுக்குச் சென்றது. அனைவருக்கும் மீல்ஸ் ஆர்டர் செய்தார். குழந்தைகள் உள்பட திருப்தியாகச் சாப்பிட்டோம். பின்னர் அனைவருக்கும் ஐஸ்க்ரீம் வந்தது. குழந்தைகளுக்குக் கொண்டாட்டம்தான். பின்னர் ஒரு பாக்கெட் நிறைய சாக்லேட்ஸ் வாங்கிக் குழந்தைகளுக்குக் கொடுத்தார். கிளம்பினோம்.

“காரை பீச் ரோடு வழியா மெதுவா விடு!” என்றார். வெயில் இல்லை. நல்ல காற்று வேறு! மீண்டும் சாவி சாரின் இல்லத்துக்குத் திரும்பினோம்.


சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்தோம். சாவி சார் ஒரு கணினி வாங்கியிருந்தார். அதில் கம்போஸ் செய்யவும், ஸேவ் செய்யவும் பழகிக்கொண்டு இருப்பதாகச் சொன்னார். கணினி அருகேயே நான் போயிராத காலம் அது. எனவே, இந்த வயதில் சாவி சார் கணினி கற்றுக்கொள்கிறாரா என்று எனக்கு ஆச்சரியமாக இருந்தது. “கொஞ்சம் காசு சேர்த்து நீயும் ஒண்ணு வாங்கிப் போடு! உன் வேலைக்கு ரொம்ப யூஸ்ஃபுல்லா இருக்கும்!” என்றார். ‘ஏதோ ஆர்வத்தில் சொல்கிறார். எனக்கெதற்கு கம்ப்யூட்டர்? அநாவசியம்!’ என்றுதான் அப்போது நினைத்தேன்.


பிறகு, மாமியை அழைத்து, உள்ளே சென்று பீரோவிலிருந்து என் மனைவிக்காக வைத்திருந்த புடவையை (ஜப்பான் சில்க்) எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும்படி சொன்னார். வெற்றிலை பாக்கு, குங்குமச் சிமிழ், ரவிக்கை பிட் உள்பட ஒரு தட்டில் புடவையை வைத்து என் மனைவியிடம் கொடுத்தார் மாமி. குழந்தைகளுக்கு பலூன் பாக்கெட், குட்டிக் குட்டி பொம்மைகள் அடங்கிய ஒரு பெட்டி, காற்றுத் தலையணை, ஃபாரின் செண்ட், யூஸ் அண்ட் த்ரோ ரேஸர்கள் 50 அடங்கிய ஒரு பாக்கெட் என என்னென்னவோ தந்தார்.


மணி மதியம் 3 இருக்கும். விடைபெறுகிற நேரம் வந்தது.


“ரவி, நீ குடும்பத்தோடு இங்கே வந்ததுல எனக்கு ரொம்ப சந்தோஷம். அடிக்கடி நீ மட்டுமாவது வந்துண்டு போயிண்டு இரு ரவி!” என்றவர், “உனக்குன்னு நான் ஒண்ணுமே தரலை. இந்தா, இது பழசுதான்! என் ஞாபகார்த்தமா இதை வெச்சுக்கோ!” என்று தன் கையில் பல ஆண்டுகளாகக் கட்டிக்கொண்டிருந்த வாட்ச்சைக் கழற்றி என் கைகளில் தந்தார்.


எனக்குக் கண்கள் கலங்கிவிட்டன. அவரையும் மாமியையும் மனைவியோடு நமஸ்கரித்து எழுந்து, அந்த வாட்சைப் பெற்றுக்கொண்டேன். (படத்தில் இருப்பது சாவி சாரின் வாட்ச்தான்!)

அந்த வாட்ச்சைப் பார்க்கிறபோதெல்லாம், சாவி சாரே என்னோடு இருந்து, தைரியம் சொல்லி, ஊக்கம் கொடுத்து, ஆசீர்வதித்து வழிநடத்துவதான ஒரு திருப்தி எனக்குள் எழுவது உண்மை!
.


Saturday, June 23, 2012

தந்தையானார் சாவி; மகளானேன் நான்!

சென்ற பதிவின் தொடர்ச்சி...

றுநாள்-

வேறு எந்த பத்திரிகைக்கு அப்ளிகேஷன் தட்டிவிடலாம் என்கிற யோசனையோடு நான் கண்விழித்தேன்.

காலை மணி 10. மற்றவர்கள் சாவி அலுவலகம் போயிருப்பார்களா, என்ன நடந்திருக்கும் என்கிற யோசனை வந்தது.

12 மணி சுமாருக்கு, அட்டெண்டர் ஃபிரான்சிஸ் சைக்கிளில் என் வீடு தேடி வந்தார். “சார், உங்களைக் கூப்பிட்டு வரச் சொன்னாங்க!” என்றார். “யாரு?” என்றேன். “நம்ம ராணிமைந்தன் சார், மோகன் எல்லாரும்தான்!” என்றார். “சாவி சார் கூப்பிட்டாரா? எல்லாரும் ஆபீஸுக்கு வந்துட்டாங்களா?” என்று கேட்டேன்.

சாவி அலுவலகம் அப்போது முரசொலி அலுவலகத்தை ஒட்டிய மாதிரி இருந்த ஒரு சின்ன தெருவில் இயங்கிக்கொண்டு இருந்தது.

“இல்லை சார்! கதவைப் பூட்டி வீட்டுல கொண்டுவந்து கொடுத்துடுன்னு சாவி சார் சொல்லிட்டாரு. எல்லாரும் இப்ப சாவி சார் வீட்டு வாசல்லதான் இருக்காங்க. உங்களையும் அங்கே வரச் சொன்னாங்க” என்றார்.

“எதுக்கு?” என்றேன்.

“சாவி சார் கிட்ட ஸாரி கேட்கறதுக்குதான்! வாங்க சார், கையோடு உங்களை அழைச்சுக்கிட்டு வரச் சொன்னாங்க!” என்றார் ஃபிரான்சிஸ். “சரி, நீங்க கிளம்புங்க! நான் பின்னாடியே வரேன்!” என்றேன்.

பின்னர் சில நிமிடங்களில் தயாராகி, சைக்கிளில் புறப்பட்டேன். சாவி சார் அப்போது அண்ணா நகரில் இருந்த தனது பெரிய வீட்டை விற்றுவிட்டிருந்தார். லயோலா கல்லூரிக்கு எதிரே நீளும் சாலையில், வசதியானதொரு அப்பார்ட்மெண்ட்டில் நான்காவது தளத்தில் வாடகைக்குக் குடியிருந்தார்.

நான் அங்கே போன சமயத்தில், அனைவரும் (ஆர்ட்டிஸ்ட் மோகனைத் தவிர, வேறு யார் யாரென்று தற்சமயம் பெயர்கள் நினைவில்லை.) அப்பார்ட்மெண்ட் வாசலில் நின்றிருந்தார்கள். நான் போய் இறங்கியதும், “வாங்க, போகலாம்! போய்ப் பார்த்து சாரை சமாதானப்படுத்தி, மறுபடியும் பத்திரிகையை நடத்தச் சொல்லிக் கேட்போம்!” என்றார்கள்.

“நான் வரலை. நீங்க போய்ப் பேசுங்க. என்ன சொல்றார்னு கேளுங்க. தொடர்ந்து நடத்துறதா சொன்னார்னா, நானும் மேல வந்து அவரைப் பார்க்கிறேன். இல்லேன்னா நான் இப்படியே கிளம்பறேன்!” என்றேன். அவர்கள் என்னையும் வரச் சொல்லி வற்புறுத்தினார்கள். நான் தீர்மானமாக சாவி சாரைப் பார்க்க மறுத்துவிட்டேன்.

அவர்கள் மட்டும் மேலே சென்று, சாவி சாரைப் பார்த்துப் பேசிவிட்டு, அரை மணி நேரம் கழித்துக் கீழே வந்தார்கள்.

“என்ன சொன்னார் சாவி சார்?” என்றேன்.

“என்ன... நீங்க மட்டும்தான் வந்திருக்கீங்க. ரவி வரலையான்னு கேட்டார். வந்திருக்கார் சார். கீழே நின்னுட்டிருக்கார்னோம். ஓஹோ, சார் வரமாட்டாராமான்னு கொஞ்சம் கோபமாயிட்டார்!”

“சரி, பத்திரிகையை மறுபடி நடத்துறதா சொன்னாரா?” என்று கேட்டேன்.

“எல்லாரும் சேர்ந்து மன்னிப்புக் கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தா நடத்துறதா சொன்னார்!” என்றார் மோகன்.

“தேவையில்லை. நான் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்கத் தயாராக இல்லை. நான் கிளம்பறேன்!” என்று மற்றவர்கள் தடுத்தும் கேட்காமல் கிளம்பிவிட்டேன்.

மற்றவர்கள் மட்டும் சாவி சார் கேட்டது போலவே மன்னிப்புக் கடிதம் எழுதிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார்கள். ஆனாலும், நான் மன்னிப்புக் கேட்கவில்லை என்பதால், சாவியை மீண்டும் நடத்தப்போவது இல்லை என்று சாவி சார் சொல்லிவிட்டதாகப் பின்னர் அறிந்தேன்.

“தப்பு செய்தது நான்; அதனால் என்னைத் தண்டிக்கட்டும். ஆனால், மற்றவர்களைத் தண்டிப்பது போல் பத்திரிகையை மூடுவானேன்?” - இதுதான் என் கேள்வி.

அதே போல், வேறொன்றையும் பின்னர் ராணிமைந்தன் மூலமாகக் கேள்விப்பட்டேன். அன்றைக்கு, சாவி சாரின் துண்டு பற்றி ராணி மைந்தன் என்னிடம் பேசியபோது, நடந்த தவறுக்கு மன்னிக்கச் சொல்லி நான் கேட்பேன் என்று எதிர்பார்த்திருந்தாராம் சாவி. நான் வேறெதுவும் சொல்லவில்லை என்றதும், ‘வேற ஒண்ணுமில்லையா ரவி?’ என்று ராணி கேட்டது அதை மனதில் கொண்டுதான். அப்போதே நான், “ஸாரி சார்! தெரியாம நடந்து போச்சு. மன்னிச்சுக்குங்க!” என்று சொல்லியிருந்தால், நடந்தது அனைத்தையும் மறந்து உடனே ஹோட்டல் அறைக்குக் கிளம்பி வரும் உத்தேசத்தில்தான் இருந்தாராம் சாவி. நான் நடந்த செயலுக்கு வருந்தவில்லை என்றதும், அவரின் கோபம் மேலும் அதிகமாகிவிட்டதாகச் சொன்னார் ராணி.

ஆக, எப்படியோ... ஒரு பத்திரிகை நின்ற பழி என் மீது விழுந்தது!

இங்கே ஒரு முக்கிய உண்மையையும் நான் சொல்லவேண்டியுள்ளது. பத்திரிகையை நிறுத்தியதற்கு சாவி சாருக்கு நான் ஒரு சாக்குதான். நிஜத்தில் நிர்வகிக்க ஆளில்லாமல், விற்பனையைக் கவனிக்க ஆளில்லாமல், ஏஜெண்ட்டுகளிடமிருந்து பணத்தை வசூலிக்கவும் ஆளில்லாமல் பத்திரிகையின் விற்பனை சரிந்து, நஷ்டத்தில் தள்ளாடிக்கொண்டு இருந்தது. எனவே, அதை மேலும் தொடர்வதில் அர்த்தமில்லை என்கிற உறுதியான முடிவுக்கு வந்துவிட்டார் சாவி. நான் மன்னிப்புக் கேட்டிருந்தால், ஒருவேளை மேலும் ஓரிரு ஆண்டுகளுக்குப் பல்லைக் கடித்துக்கொண்டு நடத்தியிருப்பாரோ என்னவோ!

மூன்றாம் முறை சாவி சாரிடம் நான் வேலை கேட்டு நின்றபோது, “இவன் அடிக்கடி கோவிச்சுக்கிட்டு வேலையை விட்டு நின்னுடறவனாச்சே! மறுபடியும் ஒழுங்கா இருப்பான்கிறது என்ன நிச்சயம்னு நீங்க நினைக்கலாம், சார்! ஆனா, உறுதியா சொல்றேன். நீங்களா என்னை வேண்டாம்னு வெளியே அனுப்புற வரைக்கும் நானா வேலையை விட்டு நிக்க மாட்டேன்!” என்று வாக்குறுதி தந்திருந்தேன்.

அதை நான் காப்பாற்றிவிட்டேன்தான் என்று நினைக்கிறேன்.

அதன்பின், நான் ஆனந்த விகடனில் சேர்ந்ததை அறிந்து, ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து மிகவும் சந்தோஷப்பட்டார் சாவி சார் என்று அறிந்தேன்.

என் மீதிருந்த கோபமெல்லாம் தணிந்து, என்னை வீட்டுக்கு வரச் சொல்லி பலமுறை அழைப்பு விடுத்தார் சாவி சார். எனினும், விகடனில் சேர்ந்து ஆறு மாத காலத்துக்கு அவரை நான் போய்ப் பார்க்கவே இல்லை.

காரணம், ஒருவேளை அவர் மீண்டும் சாவி பத்திரிகையைத் தொடர்ந்து நடத்தப்போவதாகச் சொல்லி, என்னை வந்து கவனித்துக்கொள்ளும்படி அழைத்தால், மகுடிக்குக் கட்டுப்பட்ட நாகம் போல் நான் மறுபேச்சில்லாமல் ஒப்புக்கொண்டு, அவரிடமே போய்விடுவேன் என்கிற பயம்தான்.

சாவி மிகச் சிறந்த பத்திரிகையாளர்; அதில் சந்தேகமே இல்லை. ஆனால், அந்தப் பத்திரிகையைத் திறம்படக் கவனித்துக்கொள்ள யாருமே இல்லை. எனவே, அதை நம்பிச் செல்வது மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்குவது போல்தான் என்று எனக்குத் தோன்றிவிட்டது.

என் காலை நான் அழுத்தமாக ஊன்றிக்கொள்ள வேண்டியது அப்போது எனக்கு அவசியமாக இருந்தது. எனவே, ஆனந்த விகடனில் என்னை நிரந்தர ஊழியனாக அங்கீகரிக்கும் வரை, அதாவது அடுத்த ஆறு மாத காலத்துக்கு அவரை நான் போய்ச் சந்திக்கவே இல்லை.

அதன்பின், அவருக்கு சதாபிஷேகம் வந்தது. அதற்கு அழைப்பு அனுப்பியிருந்தார். போயிருந்தேன். பிரிவுக்குப் பிறகு, கிட்டத்தட்ட ஓராண்டு கழித்து அப்போதுதான் அவரைச் சந்திக்கிறேன்.

மேடையில் மாலையும் கழுத்துமாக தம்பதி சமேதராக உட்கார்ந்திருந்த சாவி சாரை நெருங்கி, கைகூப்பி வணக்கம் சொன்னேன்.

அவர் என்னை அருகில் அழைத்தார். குனியச் சொன்னார். என் காதருகில் கிசுகிசுப்பாகக் கேட்டார்...

“அவா உன்னை நன்னா வெச்சுண்டிருக்காளா?”

மகளைத் திருமணம் செய்துகொடுத்து, அவள் தன் புகுந்த வீட்டில் குடியேறி, சில ஆண்டுகளுக்குப் பின்பு பிறந்துவீட்டுக்கு வரும்போது, ஒரு பாசமிக்க தந்தை வாஞ்சையோடு கேட்கும் கேள்வியல்லவா இது!
.

Tuesday, June 12, 2012

சாவியை நிறுத்தினார் சாவி!


 
டுகடு முகத்துடன் நின்றுகொண்டு இருந்த சாவி சாரைப் பார்த்ததுமே, அடி வயிற்றில் கத்தி சொருகிய மாதிரி ஒருவித பயமும் படபடப்பும் நடுக்கமும் உண்டானது எனக்கு. என்னைப் பார்த்ததுமே கோபத்தில் பட்டாசாக வெடிக்கத் தொடங்கிவிட்டார் சாவி சார்.

என்ன நினைச்சுக்கிட்டிருக்கே நீ உன் மனசிலே? இங்கே என்ன வெட்டியா வந்து தின்னுட்டு, குடிச்சுக் கும்மாளம் போட்டுக் கூத்தடிக்கவா உங்களையெல்லாம் செலவு பண்ணிக் கூட்டிட்டு வரேன்? 1 மணிக்கு மீட்டிங்னு சொன்னா டாண்ணு 1 மணிக்கு அத்தனை பேரும் இங்கே வந்து நிக்க வேணாமா? 1 மணிக்கு மீட்டிங்னு சொல்லியிருக்கோமேனு நான் என் வேலையையெல்லாம் அப்படி அப்படியே போட்டுட்டு12:30-க்கெல்லாம் வந்து இங்கே தேவுடு காத்துக்கிட்டு இருக்கேன். கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா உனக்கு? பொறுப்பாசிரியர்னு சொல்லிக்க வெக்கமாயில்லே உனக்கு? போறும்... இங்கேயே இப்பவே சாவி பத்திரிகையை மூடிட்டேன். போய் எல்லார்கிட்டயும் சொல்லு, போ! எக்கேடோ கெட்டுப் போங்க. எனக்குக் கவலை இல்லே! உங்களுக்கே பொறுப்பும் அக்கறையும் இல்லாதப்ப நான் மட்டும் எதுக்கு உங்களைப் பத்திக் கவலைப்படணும்?...” என்று என்னைப் பேசவே விடாமல் சடசடவென்று பொரிந்து தள்ளியவர், ராணிமைந்தன் பக்கம் திரும்பி, “ராணி, எல்லாத்தையும் எடுத்து பேக் பண்ணு. உடனே ரூமை காலி பண்றோம்!” என்றார்.

ராணிமைந்தனும் சாவி சாரின் பெரிய சூட்கேஸில் துணிமணி, பொருள்களை அடுக்கத் தொடங்க, நான் மெதுவாக, “சார், நாங்க 12:30-க்கே வந்துட்டோம். கீழே பார்த்தேன். வழக்கமா நிற்கிற உங்க காரைக் காணலே. அதான், நீங்க இன்னும் வரலையோன்னு...” என்று தயங்கித் தயங்கிச் சொல்ல, முன்னிலும் உக்கிரத்தோடு என்னைப் பார்த்த சாவி சார், “வரலையோன்னு நினைக்கிறதோட ஏன் நிறுத்திட்டே? அங்கேயே செத்து எனக்குக் காரியம் பண்ணி முடிச்சுட்டாங்கன்னு நினைச்சுக்கிறதுதானே?” என்றார். எனக்கு அடுத்துப் பேசவே வார்த்தை வரவில்லை.

சாவி சாரே தொடர்ந்து, “வந்திருந்தா என்ன பண்ணியிருக்கணும்? நேரே என் ரூமுக்கு வந்திருக்கணுமா இல்லையா? நேரே உங்க ரூம்ல போய் இழுத்துப் போர்த்திட்டுப் படுத்துட்டா என்ன அர்த்தம்? பத்திரிகை மேல உனக்கே அக்கறை இல்லை. வேறென்ன சொல்றது? போ, போ! என் கண்ணு முன்னால நிற்காதே! உன்னைப் பார்க்கப் பார்க்கப் பத்திக்கிட்டு வருது எனக்கு. மேற்கொண்டு ஏதாவது சொல்றதுக்குள்ளே ஓடிப்போயிடுங்க எல்லாரும்! இனிமே யாரும் வேலை அது இதுன்னு அங்கே வந்து நிற்க வேணாம். பத்திரிகையை இழுத்து மூடியாச்சு. நான் சொன்னா சொன்னதுதான்!” என்றவர், தயாரான பெட்டிகளில் ஒன்றை எடுத்துக் கொள்ள, ராணிமைந்தன் பெரிய சூட்கேஸை எடுத்துக் கொள்ள, வந்திருந்த சாவியின் உறவினர் மற்ற பொருள்களை எடுத்துக் கொள்ள, அனைவரும் அறையை விட்டு வெளியேறினர். சாவி சார் மிகக் கோபமாக கால்களை வேக வேகமாக எடுத்து வைத்து, யாரையும் லட்சியமே செய்யாமல் வெராண்டாவில் நடந்து, படிகளில் வேகமாக இறங்கிப் போனார். பின்னாலேயே போய் அவரைச் சமாதானப்படுத்த முயன்ற எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியிடமும் கோபமாக ஏதோ சொன்னார் சாவி. விறுவிறுவென அனைவரும் கீழே இறங்கிப் போய், டாக்ஸி ஒன்றைச் சடுதியில் பிடித்து, மளமளவென்று ஏறிக் கிளம்பிப் போயே போய்விட்டனர். அனைத்தும் ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்துவிட்டன. அடை மழை பெய்து ஓய்ந்த மாதிரி இருந்தது. நாங்கள் அநாதைகள் போல் நின்றுகொண்டு இருந்தோம்.

பின்னர், மெதுவாக எங்கள் அறைக்குத் திரும்பினோம். அன்றைக்கு இரவு 9 மணிக்கு மேல்தான் எங்களுக்கு டிரெயின். அதுவரை என்ன செய்வது? தெரியவில்லை. அருகில் உள்ள லால்பாக்குக்குப் போய்ப் பொழுதைக் கழிக்கலாம் என்றால், சாவி சார் தன் உறவினர் வீட்டுக்குப் போய்ச் சேர்ந்த பின்பு, ஒருவேளை கோபம் தணிந்து போன் செய்தாலும் செய்யலாம் என்று ஒரு எண்ணம் எங்களை வெளியே போக விடாமல் தடுத்தது. சாவி சார் போன் செய்வார் என்று நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

மூன்று மணி சுமாருக்கு போன் வந்தது. எடுத்துப் பேசினேன். ராணிமைந்தன்தான் பேசினார். “ரவி, கிளம்பி வரும்போது அங்கே எங்க ரூம்ல சாவி சாரோட பெரிய டர்க்கி டவல் ஒண்ணை மறதியா விட்டுட்டு வந்துட்டோம்னு நினைக்கிறேன். உனக்குத் தெரியுமில்லையா, சார் எப்பவும் தோள்ல போட்டிருப்பாரே, அந்த மஞ்சள் டர்க்கி டவல்தான்! போய் இருக்கான்னு பார்த்து, இருந்தா எடுத்துக்கிட்டு சென்னை வந்துடுங்க!” என்றார்.

துண்டு இருந்தால், அதைக் கொண்டு போய்க் கொடுக்கும் சாக்கிலாவது சென்னையில் சாவி சாரை சந்தித்துச் சமாதானம் செய்யலாம் என்று மெல்லியதாக ஒரு நம்பிக்கை என் நெஞ்சில் துளிர்த்தது.

சரி சார்! ஆனா, சாவி சார் என்ன இப்படிக் கோபப்பட்டுட்டாரு! நாங்க நெஜம்மாவே 12:30-க்கெல்லாம் ரூமுக்கு வந்தாச்சு. சாவி சாரின் குணம் தெரிஞ்சு, எல்லாரையும் விரட்டி அழைச்சுக்கிட்டு வந்தேன். வேணா கேட்டுப் பாருங்க. நான் பண்ணின ஒரே தப்பு, காரைக் காணோம்னதும் சாரும் வரலைபோலன்னு நினைச்சுட்டதுதான்!” என்றேன்.

கார்லதான் வந்தோம் ரவி, வெளியிலேயே சாரையும் என்னையும் இறக்கிவிட்டுட்டுக் கார் போயிடுச்சுநாங்க சார் சொன்ன மாதிரி 12:30-க்கே ரூமுக்கு வந்துட்டோம். மணி ஒண்ணாகியும் உங்களைக் காணோம்னதும் சாருக்கு பிரஷர் ஏறிடுச்சு” என்றார் ராணி.

அப்படியும் உங்க அறைப் பக்கம் வந்து எட்டிப் பார்த்தேன் சார். கதவு மூடியிருந்தது...”

காலிங் பெல் அடிச்சியா?”

இல்லை சார்! வழக்கமா நீங்க ரெண்டு பேரும் அறைக்குத் திரும்பிட்டீங்கன்னா, அறைக் கதவு விரியத் திறந்துதான் இருக்கும். அதனால தூரத்திலேர்ந்தே பார்த்துட்டு, வரலைன்னு நினைச்சுப் போயிட்டேன். இதெல்லாம் யதேச்சையா நடந்த விஷயங்கள். இதுக்கு சார் இத்தனைக் கோபப்படணுமா? முதல் ரெண்டு நாளும் நல்லாத்தானே போச்சு? இன்னிக்கும் டிரெயின் ராத்திரிதான். அதுவரைக்கும் பத்திரிகை பத்திப் பேசியிருக்கலாமே?” என்றேன்.

சரி, விடு ரவி! சாரோட குணம்தான் உனக்குத் தெரியுமில்லே? அவருக்கு என்னவோ இன்னிக்கு மூடு சரியில்லே! விடு! அறையில சாரோட துண்டு இருந்தா எடுத்துட்டுப் போயிடுங்க. அதைச் சொல்றதுக்காகத்தான் போன் பண்ணினேன்!” என்று சொல்லித் தொடர்பைத் துண்டித்தார் ராணிமைந்தன்.

இன்றைய தினம் போல் அன்றைக்கு செல்போன் வசதிகள் இல்லை. இருந்திருந்தால், ராணிமைந்தனுக்கு போன் போட்டு, “எங்கே இருக்கிறீர்கள்?” என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருக்க முடியும். இத்தனைப் பிரச்னைகள் ஏற்பட்டிருக்காது.

சரி, சாவி சார் இடத்திலிருந்து போன் வந்துவிட்டது. இனிமேல் வெளியே லால்பாக் வரை போய் வரலாம் என்று முடிவு செய்தோம். அதற்கு முன்னதாக, சாவி சாரின் அறைக்குள் போய் (சாவியை ஒப்படைக்கவில்லை. எங்களிடம்தான் இருந்தது.) துண்டு இருக்கிறதா என்று பாத்ரூம் உள்படத் தேடிப் பார்த்தேன். இல்லை. இதை போன் போட்டு ராணிமைந்தனிடம் உடனே தெரிவித்துவிட்டேன். “அவ்வளவுதானா, வேற ஒண்ணுமில்லையா?” என்றார். “இல்லை சார்!” என்றேன் நான் வெள்ளந்தியாக. “சரி” என்று போனை வைத்துவிட்டார்.

பின்பு, நடந்தே லால்பாக் போனோம். ஏதேதோ பிடிப்பில்லாமல் பேசிக்கொண்டே சுற்றினோம். மனசெல்லாம் ரணமாக இருந்தது. எதிலும் பிடித்தமில்லாமல் இருந்தது. சீக்கிரம் இரவு 9 மணியாகி, அறைகளைக் காலி செய்து, சாவிகளை ஒப்படைத்துவிட்டு, எப்போதடா ரயில்வே ஸ்டேஷனை அடைவோம் என்றாகிவிட்டது.

ஒருவழியாக மாலை 7 மணி ஆயிற்று.

அவரவர் பெட்டி, படுக்கைகளை எடுத்துக்கொண்டு, கீழே இறங்கிப் போய், ரிசப்ஷனில் சாவிகளை ஒப்படைத்தபோது, ஒரு திடுக்கிடும் விஷயம் தெரிய வந்தது. சாவி சார் அறைகளுக்கான வாடகையை மட்டும்தான் செட்டில் செய்துவிட்டுப் போயிருந்தார். எக்ஸ்ட்ரா பெட் வாங்கியது, அறைக்குள் வரவழைத்து காலை காபி, டிபன் சாப்பிட்டது, மதிய உணவு சாப்பிட்டது என்கிற வகையில் இன்னும் சில ஆயிரங்களை நாங்கள் கட்ட வேண்டியிருந்தது. பதறிவிட்டோம்.

அவரவரிடம் உள்ளதைத் திரட்டினோம். நல்லவேளையாக, அன்றைய தினம் காலையில் சாவி சார் எங்கள் செலவுக்காகக் கொடுத்திருந்த பணத்தை யாரும் முழுசாகச் செலவு செய்திருக்கவில்லை என்பதால், தேவையான பணம் தேறிவிட்டது. ஒருவழியாகக் கட்டி ரசீது பெற்றுக்கொண்டு, ஆட்டோ பிடித்து, ஸ்டேஷனை அடைந்தோம். சாவி சாரும் ராணிமைந்தனும் மட்டும் மறுநாள் இரவு கிளம்பி வருவதாகத்தான் பிளான்!

மறுநாள் காலையில் சென்னையை அடைந்தோம்.

அனைவருக்கும் உறுதியான நம்பிக்கை என்னவென்றால்... ‘சாவி சார் இப்படிக் கோபப்பட்டுக் கத்துவது ஒன்றும் புதிதில்லை; அவரது சுபாவமே இப்படித்தான்! சாவியை மூடிவிடப் போகிறேன் என்று இதற்கு முன்பும் எத்தனையோ முறை சொல்லியிருக்கிறார். ஆனால், செய்ய மாட்டார். காரணம், பத்திரிகைதான் அவர் மூச்சு! எனவே, எல்லாரும் நாளை வழக்கம்போல் சாவி அலுவலகத்துக்குச் செல்வோம். பணிகளை வழக்கம்போல் தொடருவோம்!’

ஆனால், எனக்கு மட்டும் அந்த நம்பிக்கை சுத்தமாக இல்லை. சாவி சார் இந்த முறை பத்திரிகையை நிஜமாகவே மூடிவிட்டார் என்று தோன்றியது. என்ன சமாதானம் செய்தாலும் ஏற்கமாட்டார் என்று தோன்றியது. அவருடைய கோபத்தின் உக்கிரம் அந்த அளவுக்கு வீர்யம்!

மறுநாள் - நாங்கள் போய் சாவி சாரைப் பார்த்தோமா?

- சொல்வதற்கு இன்னும் கொஞ்சம் மிச்சம் உள்ளது. அடுத்த பதிவில் சொல்கிறேன்.



Sunday, June 10, 2012

கொதித்தார் சாவி; குலைந்தேன் நான்!

ற்கெனவே இரண்டு முறை சாவி சாரிடம் கோபித்துக்கொண்டு வெளியேறி, மீண்டும் அவரிடமே சேர்ந்ததற்குக் காரணம், சாவி சார் மீது எனக்கிருந்த அளப்பரிய மரியாதையும் அபிமானமும்தான்! சாவி சாருக்கும் என் மீது மிகவும் அன்பு இருந்தது. அவர் என் மீது கொண்ட கோபமும்கூட என் நன்மைக்காகத்தான் என்பது எனக்கு அந்த வயதில் புரியவில்லை.

இரண்டாம் முறை அவரிடம் சேர்ந்தபோது, சாவி சாரிடம் நான் சொன்னேன்... “என்னடா இவன், அடிக்கடி வேலையை விட்டுட்டு ஓடிடறானே, இவனை எப்படி நம்பி வேலையில சேர்த்துக்கிறதுன்னு நினைக்காதீங்க சார்! எனக்குப் பக்குவமில்லாத வயசு; பக்குவப்படாத மனசு. இனி உங்களை விட்டு நான் விலக மாட்டேன். நீங்களாக என்னை வேண்டாம் என்று வேலையை விட்டு நீக்காதவரை நானாக இந்த வேலையை விட்டுப் போகமாட்டேன். இது சத்தியம்!” என்று சொன்னேன்.

அதன்படியே, அந்த முறை அவரிடம் சேர்ந்து, அவரின் எந்த கோப தாபத்தையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிக்கொண்டு இருந்த நேரத்தில்தான், அந்தப் பயணம் அமைந்தது.

வழக்கமாக ஆண்டுக்கு மூன்று முறை, சாவி எடிட்டோரியலில் பணியாற்றும் எங்களை ஊட்டி, வெலிங்டன், பெங்களூர் என மாறி மாறி அழைத்துப் போவார் சாவி சார். எடிட்டோரியல் மீட்டிங்கும் ஆச்சு, எங்களை உல்லாசப் பயணம் அழைத்துச் சென்று சந்தோஷப்படுத்தியதாகவும் ஆச்சு! அந்த நாட்கள் எல்லாம் சுகமானவை!

அந்த முறை பெங்களூருக்குச் செல்வது எனத் திட்டமிட்டார் சாவி. அதற்கு ஒரு முக்கிய காரணம் இருந்தது. பெங்களூரில் ஒரு வீடு வாங்குகிற யோசனையில் இருந்தார் சாவி. அது தொடர்பாக அங்கே அவருக்குச் சில பல வேலைகள் இருந்தன.

அந்த முறை எங்களோடு ராணிமைந்தனும், நகைச்சுவை எழுத்தாளர் பாக்கியம் ராமசாமியும் சுற்றுலாவில் கலந்துகொண்டார்கள். பெங்களூரில் லால்பாக் அருகே உள்ள பிரபல ஹோட்டலான எம்.டி.ஆருக்கு எதிரே ஒரு லாட்ஜில் மூன்று ரூம்கள் போடப்பட்டன. ஒன்றில் சாவி சாரும் ராணி மைந்தனும் தங்கிக் கொள்ள, மற்ற இரண்டு அறைகளில் சாவி எடிட்டோரியலைச் சேர்ந்த எங்களோடு பாக்கியம் ராமசாமி தங்கினார்.

சாவி சாரின் உறவினர் ஒருவர் பெங்களூரில் டிராவல்ஸ் நடத்தி வந்தார். அவர் சாவி சாரின் உபயோகத்துக்கென ஒரு காரை அளித்திருந்தார். அது எந்நேரமும் அந்த லாட்ஜ் வளாகத்திலேயே டிரைவரோடு காத்திருக்கும். சாவி சாருடன் காலையில் ஒரு சிட்டிங் உட்கார்ந்து டிபன், காபி சாப்பிட்டுக்கொண்டே, சாவி இதழில் செய்ய வேண்டிய மாற்றங்கள் பற்றியும், புதிய பகுதிகள் பற்றியும் விவாதிப்போம். மதியம் 1 மணியை நெருங்கியதும், மீட்டிங்கை முடித்துக்கொண்டு, சாவி சார் காரில் கிளம்பிச் சென்றுவிடுவார், தன் சொந்த வேலைகளைப் பார்க்க. நாங்கள் அந்த ஹோட்டலிலேயே சாப்பிட்டுவிட்டு, பெங்களூரைச் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிடுவோம். மாலை ஏழு மணிக்கு அறைக்குத் திரும்பி, டிபன் சாப்பிட்டுவிட்டு, மீண்டும் சாவி சார் அறையில் ஒரு சின்ன மீட்டிங் நடத்திவிட்டு, இரவு பத்து மணிக்கு எங்கள் அறைக்குத் திரும்புவோம். வழக்கமாக ஒவ்வொரு சுற்றுலாவிலும் இதுதான் வாடிக்கை.

அந்த முறை பெங்களூர் போன முதல் இரண்டு நாட்களும் எந்தப் பிசிறும் இல்லாமல் அனைத்தும் வழக்கப்படியே நடந்தன. மூன்றாம் நாள் காலையில் எடிட்டோரியல் மீட்டிங்குக்கு உட்கார, நாங்கள் தயாராகி, சாவி சார் அறைக்குச் சென்றோம்.

“இன்னிக்கு எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. மதியம் 1 மணிக்கு மீட்டிங்கை வெச்சுப்போம். நான் அதுக்குள்ளே வந்துடுவேன். நீங்களும் அதுக்குள்ளே போய், ஏதாவது பர்ச்சேஸ் பண்ணணும்னா பண்ணிக்கிட்டு, சாப்பிட்டுட்டு வந்துடுங்க” என்று சொல்லிவிட்டு, ராணி மைந்தனுடன் காரில் கிளம்பிச் சென்றார்.

நானும் பாக்கியம் ராமசாமியும் மற்றவர்களும் வெளியே கிளம்பினோம். இந்த மாதிரி வெளியூருக்குச் சுற்றுலா அழைத்துச் செல்லும்போதெல்லாம், எங்கள் செலவுக்கென்று அனைவரின் கைகளிலும் தலா 500 ரூபாய் கொடுப்பார் சாவி சார். மூன்று நாள் தங்கினோம் என்றால், தலா 1500 ரூபாய் கிடைக்கும். அதில் நாங்கள் எங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கிக் கொள்வோம். எங்களின் தனிப்பட்ட செலவுகளைச் செய்து மகிழ்வோம். சாப்பாட்டுச் செலவு பொதுவானது. அதற்கான தொகையை மொத்தமாக என்னிடம் கொடுத்திருப்பார். லாட்ஜ் ஹோட்டலிலேயே சாப்பிட்டால் அது ரூம் பில் கணக்கில் சேர்ந்துவிடும். இந்த மாதிரி வெளியே சாப்பிடுவதைக் கணக்கு வைத்துக்கொண்டு மீதியை, ஊர் திரும்பியதும் சாவி சாரிடம் கொடுத்துவிடுவேன்.

அன்று காலையில், வழக்கம்போல் பெங்களூர் தெருக்களில் சுற்றினோம். நான் அடிக்கடி நேரத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். மதியம் 1 மணிக்கு மீட்டிங் என்றிருக்கிறாரே சாவி சார் என்பதால், பதறிப் பதறி அனைவரையும் ‘போதும் பார்த்தது; சாப்பிட்டுவிட்டு ரூம் திரும்புவோம். குறித்த நேரத்துக்குள் வரவில்லையென்றால் சாவி சார் கன்னாபின்னாவென்று திட்டுவார்’ என்று, அனைவரையும் விரட்டி விரட்டி அழைத்துக்கொண்டு நாங்கள் தங்கியிருந்த லாட்ஜுக்கு வந்தபோது மணி 12:30.

சாவி சாரின் வழக்கமான கார் அங்கே காணோம். ‘சரி வாருங்கள், சார் வருவதற்குள் இங்கேயே சாப்பாட்டை முடித்துக்கொண்டு, அவர் அறைக்குப் போகலாம்’ என்று சொல்லி, அங்கேயே மதிய உணவை முடித்துக்கொண்டோம். மேலே எங்கள் அறைகளுக்கும் சாவி சாரின் அறைக்கும் இடையில் ஏழெட்டு அறைகள் இருந்தன. சாவி சார் அறை பூட்டப்பட்டு இருந்தது.

நாங்கள் எங்கள் அறைக்குச் சென்றோம். மணி 1. சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். கீழே கார்கள் நிறுத்தும் பகுதி முழுக்கக் கண்ணுக்குத் தெரிந்தது. சாவி சாரின் கார் மட்டும் இல்லை. திரும்பவும் அறைக்குள் சென்று, “சாவி சார் போன வேலை முடியவில்லை போலிருக்கிறது. அவர் இன்னும் அறைக்குத் திரும்பக் காணோம்!” என்று சொல்லிவிட்டு, டி.வி. பார்க்கத் தொடங்கினோம். சிரித்துப் பேசிக்கொண்டு இருந்தோம். அன்றைக்கு இரவு எங்களுக்கு டிரெயின்.

சற்று நேரம் கழித்து, மீண்டும் வெராண்டாவுக்கு வந்து சன்னல் வழியே எட்டிப் பார்த்தேன். சாவி சாரின் காரைக் காணவில்லை. மீண்டும் அறைக்குள் போய்விட்டேன். “1 மணிக்கு மீட்டிங் என்று சொல்லிவிட்டு இன்னும் வராமல் இருக்கிறாரே சார்..? மணி 2 ஆகப் போகிறதே!” என்று அலுத்துக்கொண்டபடி, ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டிருந்த நேரத்தில், எங்கள் அறைக் கதவு தட்டப்பட்டது. எழுந்து போய்த் திறந்தேன். இறுகிய முகத்துடன் நின்றுகொண்டு இருந்தார் ராணி மைந்தன்.

“ரவி, உன்னை சார் கூப்பிட்டார்!” என்றார். “என்னது... சாவி சார் வந்துவிட்டாரா? தெரியாதே! கீழே அவரின் காரை காணோமே?” என்று சொல்லியபடியே ராணி மைந்தனுடன் போனேன்.

சாவி சாரின் அறைக் கதவைத் திறந்துகொண்டு உள்ளே போனதுதான் தாமதம், ருத்ரமூர்த்தியாக நின்றுகொண்டு இருந்தார் சாவி சார்.

அவரது முகத்தில் கொதித்த கோபக் கனலைக் கண்டு நடுநடுங்கிப் போனேன் நான்.

- அடுத்த பதிவில் தொடர்கிறேன்.
.


Sunday, April 22, 2012

சிரிப்பிலே வளர்ந்தேன்!


சில நாட்களுக்கு முன்னால், ஹ்யூமர் கிளப் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு ‘சிரிப்பிலே வளர்ந்தேன்’ என்னும் தலைப்பில் பேசினேன். தலைப்புக்கும் நான் பேசினதுக்கும் அத்தனை பொருத்தம் இருந்த மாதிரி தெரியவில்லை. என்றாலும், என் பேச்சைக் கேட்ட அனைவரும் ரசித்துச் சிரித்தார்கள். அது போதும் எனக்கு. என் பேச்சை ரெக்கார்ட் செய்திருந்தான் என் மகன். ஆனால், தெளிவாகக் கேட்கவில்லை. ஒரே இரைச்சலாக இருந்தது. எனவே, என் ஞாபகத்தில் இருந்தவற்றை ஒலிப்பதிவோடு ஒப்பிட்டுப் பார்த்து ஒருவழியாக இந்தப் பதிவை எழுதிவிட்டேன். நான் அங்கே புகைப்படம் எதுவும் எடுக்கவில்லை. இந்தப் படம் எனது முக நூல் நண்பர் எஸ்.எஸ்.ஆர்.சுகுமாரின் ஃபேஸ்புக்கிலிருந்து சுட்டது.

சிரிப்பிலே வளர்ந்தேன்!

னைவருக்கும் வணக்கம்.

இன்னிக்குக் கூட்டத்தை சிரிப்பு இறைவணக்கத்தோடு தொடங்கினது புதுமையா இருந்தது. அதனால நானும்சிரிப்பிலே வளர்ந்தேன்என்கிற என் உரையை சிரிப்போடயே தொடங்கலாம்னு நினைக்கிறேன். (செல்போனில் பதிவு செய்திருந்த குழந்தையின் சிரிப்புச் சத்தத்தை மைக் மூலம் அரங்கமெங்கும் பரப்புகிறேன்!)

இந்தச் சிரிப்பைக் கேட்கும்போது எத்தனை ஆசையா இருக்கு பாருங்க. நம்ப மனசுக்கு எவ்ளோ உற்சாகமா இருக்கு. நம்முடைய துயரங்கள் எல்லாம் அடியோடு காணாம போன மாதிரி ஒரு ஃபீலிங் கிடைக்குதா, இல்லியா? சிரிப்பின் வலிமை இதுதான்!

இது ஒரு குழந்தையின் சிரிப்புங்கிறதும் ஒரு காரணம். ஏன்னா, இது கள்ளங்கபடு இல்லாத வெள்ளைச் சிரிப்பு. ஆமா, நாமெல்லாம் குழந்தை போல கள்ளங்கபடு இல்லாம சிரிச்சோம்னா நம்ம சிரிப்பும் நமக்குள்ளே மட்டுமில்லாம, நம்மைச் சுத்தி இருக்கிறவங்க மனசுக்குள்ளும் உற்சாகத்தை ஏற்படுத்தும். அதைவிட்டுட்டு, சிரிக்கிறேன்பேர்வழின்னும்க்குக்கும்ம்ம்... ராஜசேகர்... எதப் பத்தியும் கவலைப்படாதே! அவனைப் போட்டுத் தள்ளிடு!’னு நம்பியார் சிரிப்பு சிரிச்சா, அது வேலைக்காகாது! ஏன்னா அது வில்லன் சிரிப்பு!

ஆமா! சிரிப்பிலேயே பலவகை இருக்குங்க. வில்லன் சிரிப்பு, விஷமச் சிரிப்பு, நமுட்டுச் சிரிப்பு, நயவஞ்சகச் சிரிப்பு, அசட்டுச் சிரிப்பு, அதிகாரச் சிரிப்புன்னு... ‘நானே ராஜான்னு ஒரு படம். அதுல கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் ஒரு பாட்டுல, ‘சிரிப்பு... அதன் சிறப்பைச் சீர்தூக்கிப் பார்ப்பதே நமது பொறுப்பு!’ன்னு விதம் விதமா சிரிச்சுக் காண்பிச்சுப் பாடியிருப்பார்.

மா, சிரிக்கணும்... சிரிக்கணும்கிறாங்களே, எதுக்குச் சிரிக்கணும்? சிரிக்கிறதனால ஏதாவது பலன் உண்டா? உண்டு.

1993-ல் விஞ்ஞானிகள் கூடி, மனிதனோட எண்ணங்களுக்கும் உடல் நிலைக்கும் ஏதாவது தொடர்பு உண்டான்னு ஆராய்ச்சி பண்ணாங்க. அதுலே ஒரு முக்கியமான விஷயம் தெரிய வந்தது. அது என்னன்னா... நமது எண்ணங்களுக்கும் மன நிலைக்கும் ஏத்தபடி நம்ம உடல்ல இயங்குகிற செல்களோட நோய் எதிர்ப்புச் சக்தி கூடுது, அல்லது குறையுது என்பதுதான் அது.

நமது நரம்புகள் ஒரு ரசாயனத்தை வெளியிட்டபடியே இருக்குதாங்க. இந்த ரசாயனத்துக்கு CGRP’ன்னு பேரு. இதுதான் நரம்புகளுக்கு அடியில் இருக்கிற நோய் எதிர்ப்புச் சக்தி செல்களோட இயல்பை ஊக்குவிக்குதாம். நமது மன அலைக்கு ஏற்ப, நமது எண்ணங்களுக்கு ஏற்ப இந்த 'CGRP' ரசாயனம் அதிகமா உற்பத்தியாச்சுன்னா நம்ம உடல்ல நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகமாகும்.

சரி, எப்படி நாம நம்ம எண்ணங்களைக் கொண்டு இந்த ரசாயனத்தை அதிகப்படுத்திக்கிறது? ரொம்பச் சுலபம். நாம மனசு விட்டுச் சிரிச்சா போதும். நாம மனசு விட்டுச் சிரிக்கிறபோதெல்லாம் இந்த 'CGRP' (Calcitonin gene-related peptide) ரசாயனம் அதிகமா சுரக்குதுன்னு அந்த ஆராய்ச்சி மூலமா நிரூபிச்சிருக்காங்க.

அது மட்டுமில்லீங்க... ‘உலகின் மிகச் சிறந்த மருந்து - மனம் விட்டுச் சிரிப்பதே!”ன்னு நியூயார்க் பல்கலைக் கழகப் பேராசிரியர் ஆர்தர்ஸ்டோன் தன் ஆய்வின் மூலம் உறுதி செய்திருக்கிறார். நாம் சிரிக்கும்போதெல்லாம் 'இம்யூனோகுளோபுலின்-ஏ' [IMMUNOGLOBULIN-A] அப்படீங்கிற நோய் எதிர்ப்புப் பொருள் அதிகரிக்குதாம். இது பாக்டீயாக்கள், வைரஸ் கிருமிகள், புற்றுநோய்த் திசுக்கள் இதையெல்லாம் நம்ம  உடம்புக்குள்ளே போகவிடாம தடுத்துடுதுதாம். இதனால, மனம் விட்டுச் சிரிப்பவர்கள் நோய் எதிர்ப்புச் சக்தியோடு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக உயிர் வாழலாம்னு அடிச்சு சொல்றார் இந்த புரொஃபசர்.

அவ்வளவு ஏங்க... ‘வாய் விட்டுச் சிரிச்சா நோய் விட்டுப் போகும்னு நம்ம மூதாதையர்கள் ரொம்ப காலத்துக்கு முன்னாடியே இதைக் கண்டுபிடிச்சு ரொம்ப எளிமையா சொல்லிட்டுப் போய்ட்டாங்க. நம்மவங்க சொன்னா யாரு கேக்கறாங்க. யாராவது ஃபாரின்காரங்க சொன்னா, பிரமிச்சுக் கேட்போம் இல்லீங்களா, அதுக்காகத்தான் ஃபாரீன் சயிண்டிஸ்ட், ஃபாரின் புரொஃபசர் பத்தியெல்லாம்  இங்கே எடுத்து விட்டேன்.

ஃபாரின்லலாம் பார்த்தீங்கன்னா, ஆஸ்பத்திரிகள்ல நகைச்சுவை வீடியோ காட்சிகள் ஓடிக்கிட்டே இருக்கும். சிரிச்சுக்கிட்டே இருந்தா, அந்த பேஷண்ட்டை சீக்கிரமா குணப்படுத்திட முடியும்னு அங்குள்ள டாக்டர்கள் நினைகிறாங்க. இங்கேயும் சில ஆஸ்பத்திரிகள்ல டி.வி. ஓடிக்கிட்டிருக்கு. ஆனா என்ன, அங்கேயும் மெகா சீரியல் அழுகைதான்!

சிரிப்போட பெருமைகளைப் பத்திச் சொல்லிக்கிட்டே போகலாம். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ன்னை ஏன் இங்கே சிறப்பு விருந்தினரா கூப்பிட்டாரு சிரிப்பானந்தானு நேத்திக்கெல்லாம் யோசனை பண்ணிட்டே இருந்தேன். எனக்கும் சிரிப்பும் எத்தனை கிலோ மீட்டர்னு தெரியாம நம்மளைக் கூப்பிட்டுட்டாரேன்னு நினைச்சேன். இத்தனை பெரிய நகைச்சுவை ஜாம்பவான்கள் கூடியிருக்கிற இந்தக் கூட்டத்துக்கு மத்தியில நம்மளைக் கொண்டு வந்து நிறுத்தி, பேசச் சொல்லியிருக்காருன்னா இவருக்கு எவ்வளவு பெரிய தில்லு இருக்கணும்னும் யோசிச்சேன். அப்புறம் புரிஞ்சு போச்சு... இவன் நல்லபடியா பேசினா சரி... அல்லது தக்காபுக்கானு ஏதாவது உளறினாலும் அது இதைவிடப் பெரிய தமாஷா இருக்கும்னு முடிவு கட்டிட்டாருன்னு புரிஞ்சுடுச்சு. சிக்கிட்டாண்டா சின்னச்சாமின்னு இதோ உங்க முன்னாடி வந்து நின்னாச்சு.

நான் ஆனந்த விகடன்ல முதன்மைப் பொறுப்பாசிரியரா வேலை செய்யறேன். ஆனந்தம்னா மகிழ்ச்சி. விகடம்னா சிரிப்பு. அதாவது, ஆனந்த சிரிப்பு! நான் ஆனந்த சிரிப்பு; இவரு சிரிப்பானந்தா! நல்லாருக்கில்லே பொருத்தம்! ஒருவேளை அதனாலயும் என்னைக் கூப்பிட்டிருப்பாரோ?!

னந்த விகடனுக்கு வரதுக்கு முன்னால சாவி பத்திரிகைல பொறுப்பாசிரியரா இருந்தேன். சாவி சார் ரொம்ப நகைச்சுவையானவர். அவர் சொல்ற உதாரணம் ஒவ்வொண்ணும் நகைச்சுவையோட, பளீர்னு மனசுல தைக்கும்படியா இருக்கும்.

ஒருமுறை, ஒரு பத்திரிகைல அரைப் பக்கத்துக்கு ஒரு ஜோக் போட்டிருந்தாங்க. ஜோக் என்னவோ சின்னதுதான். படமும் பெரிசில்லே. ரெண்டு பேர் பேசிக்கிற மாதிரி ஜோக். அதுக்கு அரைப் பக்கம் தேவையே இல்லே. ஆனாலும், பக்கத்தை ரொப்பணும்னு அந்தப் பத்திரிகையோட லேஅவுட் ஆர்ட்டிஸ்ட் எண்ண பண்ணியிருந்தார்னா, ஜோககை கொஞ்சம் சாய்ச்சா மாதிரி லேஅவுட் பண்ணி, ஓரங்கள்ல விழற காலியிடங்கள்ல கோடுகள் போட்டு, ஒருமாதிரி சமாளிச்சிருந்தார். அவரும்தான் என்ன பண்ணுவார் பாவம்!

அதை எங்கிட்டே காண்பிச்சு சாவி சார் சொன்னார்... “இங்கே பார் ரவி, ரெண்டு ஜோக் போட வேண்டிய இடத்துல ஒரு ஜோக் போட்டு நிரப்பியிருக்காங்க. இது எப்படியிருக்குன்னா... ஒரு ட்ரெயின்ல போறோம். எதிர் சீட்டு காலியா இருக்கு. மூணு நாலு பேர் உட்கார வேண்டிய சீட்டு. அதுல ஒரே ஒருத்தன்தான் உட்கார்ந்திருக்கான். அவன் உட்கார ஓரமா ஒரு இடம் போதும். ஆனா நிறைய இடம் காலியா இருக்கே. அதையெல்லாம் அனுபவிச்சுட வேண்டியதுதான்னு முடிவு பண்ணவன் மாதிரி, நடுவுல உட்கார்ந்து இந்தப் பக்கம் காலை நீட்டிக்கிட்டு, அந்தப் பக்கம் சரிஞ்சு, சாய்ஞ்சு உட்கார்ந்து, கையைக் காலை இங்கேயும் அங்கேயுமா நீட்டிக்கிட்டு உட்கார்ந்திருப்பான். அந்த மாதிரி இருக்கு இந்த லேஅவுட்டு!” இன்னிக்கும் பத்திரிகைகளில் லேஅவுட்டைப் பார்க்கிறபோது, இது எனக்கு ஞாபகம் வரும். நகைச்சுவையோட சொன்னா எந்த ஒரு விஷயமும் மனசுல பளிச்சுனு பதியும்கிறது இது ஒரு நல்ல உதாரணம்.

சாவி சார் இன்னொரு பிரமாதமான ஜோக் சொன்னார்... ஒரு கஞ்சப் பிசினாறிக் கணவன். மனைவிக்கு நகை நட்டு வாங்கித் தரமாட்டான்; ஒரு நாள் கிழமைன்னா புடவை எடுத்துத் தரமாட்டான். அவ்வளவு ஏன், ஜாலியா ஒரு நாளைக்கு வெளியிலே ஒட்டலுக்குக் கூப்பிட்டுப் போய் டிபன் காபிகூட வாங்கித் தரமாட்டான்னா பார்த்துக்குங்க.

அவன் ஒரு நாள், தவிர்க்கவே முடியாம பெண்டாட்டியோட ஒரு ஹோட்டலுக்குப் போகும்படி ஆயிடுச்சு. உள்ளே போய் உட்கார்ந்தாங்க. ’என்ன சாப்பிடறே? ஆளுக்கு ரெண்டு இட்லி சொல்லவா?’ன்னு கேட்டான் கணவன். “இட்லியெல்லாம் வேணாங்க. அதையெல்லாம் வீட்லயே பண்ணி சாப்பிட்டுக்கலாம். ஏதாவது ஸ்வீட் இருந்தா வாங்குங்களேன்னா மனைவி. “அப்படியா... சரின்னு யோசிச்ச கணவன், “இன்னொரு குலோப்ஜாமூன் வேணா வாங்கித் தரவா?”ன்னு கேட்டான்.

அவளுக்குப் புரியலை. “இன்னொரு குலோப்ஜாமூனா? ஏங்க... இப்பத்தாங்க ஹோட்டலுக்கே வந்திருக்கோம். இனிமேதான் ஸ்வீட்டுக்கே ஆர்டர் பண்ணப் போறீங்க. அதுக்குள்ளே இன்னொண்ணான்னு கேக்கறீங்க?”

அடியே! என்ன மறந்துட்டியா? இல்ல மறந்துட்டியான்னு கேக்கறேன். 12 வருஷத்துக்கு முன்னாடி இதே மாதிரி ஒரு தடவை இந்த ஹோட்டலுக்கு வந்தப்போ உனக்கு ஒரு குலோப்ஜாமூன் வாங்கிக் கொடுத்தேனே! நல்லா ஞாபகப்படுத்திப் பாருன்னான் கணவன்.

இது எப்படியிருக்கு? இப்படியும் இருக்காங்க சில பேரு. “பேரைப் பாரு ரஞ்சனாம் ரஞ்சன். சரியான கஞ்சன்!”னு மனசுக்குள்ள முணுமுணுத்துக்கிட்டா அவன் பெண்டாட்டி.

ப்படி ஒவ்வொருத்தர் பேரையும் அவரவரோட கேரக்டருக்கேத்த மாதிரி மாத்தி வெக்கிறதும் ஒரு நகைச்சுவைதான்.

நடிகர் ராமராஜன் நிறைய கிராமிய கதாபாத்திரங்கள்ல நடிச்சப்போ அவரை கிராமராஜன்னு சொன்னாங்க இல்லியா! சரி, அவரே சினிமாவுக்கு பதிலா நிறைய மேடை நாடகங்கள்ல நடிச்சிருந்தா அவரை எப்படிக் கூப்பிடலாம்? டிராமாராஜன்னு கூப்பிடலாம்.

என்னோட நண்பர் ஒருத்தர் தன் கீழ வேலை செய்யற பையனை, “டேய் மடசாமி! இங்கே வாடா! மடசாமி, சாருக்கு சேர் எடுத்துப் போடுடா!”ன்னே சொல்வாரு. “என்ன சார், அவன் பேரு மாடசாமி. அதைப் போய் மடசாமி, மடசாமின்னு கூப்பிடறீங்களே!”ன்னு கேட்டேன். “இல்லப்பா! உனக்குத் தெரியாது. அவன் சரியான அசமஞ்சம். மாங்கா மடையன். அதான் மடசாமின்னு கூப்பிடறேன்!” என்றார்.

எங்க ஆபீசுக்குப் பக்கத்துல ஒரு நடமாடும் குளிர்பானக் கடை உண்டு. அங்கே தினமும் மோர், ஜூஸ்னு ஏதாவது வாங்கிக் குடிப்போம். விலை ரொம்ப சீப்தான். 5 ரூபா. ஆனா ஒண்ணு... ஜூஸோ, மோரோ எதுவுமே திக்கா இருக்காது. தண்ணியா இருக்கும். ஒருநாள் அவர் கிட்டேஎன்னாங்க உங்க பேரு?”ன்னு கேட்டேன். “பன்னீர்செல்வம் சார்னாரு. உடனே, “இனிமே தண்ணீர்செல்வம்னு மாத்தி வெச்சுக்கன்னுட்டேன். “ஆகட்டுங்கன்னாரு அசராம!

கொஞ்ச நாளைக்கு முன்னால, “எம் பேரு தணிகாசலம். கடந்த 25 வருஷமா பத்திரிகைகள்ல துணுக்குச் செய்திகள் எழுதிட்டு வர்றேங்கன்னு சில துணுக்குச் செய்திகளோடு வந்து நின்னார் ஒருத்தர். ”அடடே, அப்ப நீங்க துணுக்காசலம்னு சொல்லுங்கன்னேன். சிரிச்சுட்டாரு.

ங்கே எல்லாரும் டாக்டர்- பேஷண்ட் ஜோக்ஸ் சொன்னீங்க. நல்லா இருந்துது. நானும் எனக்குத் தெரிஞ்ச ஜோக்ஸைச் சொல்றேன்.

1) ஒரு ஆபரேஷன் தியேட்டர். பேஷண்ட் படுத்திருக்காரு. கத்தி, கத்திரிக்கோலையெல்லாம் தூக்கிப் போட்டுப் பிடிச்சு விளையாடிட்டே வந்தாரு டாக்டர். பேஷண்ட் பதற, “பயப்படாதீங்க. டாக்டருக்குக் கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சம் ஜக்ளிங் தெரியும்னா நர்ஸ்.

2) அதே மாதிரிதான் இன்னொரு ஆபரேஷன் தியேட்டர். மத்தவங்க எல்லாம் வாயில் பச்சைத் துணி கட்டிக்கிட்டு வர, ஆபரேஷன் செய்யப்போகிற டாக்டர் மட்டும் கண்ணுல துணி கட்டிக்கிட்டு வந்தாரு. பேஷண்ட் பார்த்து குழம்பிப் போய், நர்ஸ் கிட்டே கேட்க... “அது வேற ஒண்ணுமில்லைங்க, டாக்டருக்கு ரத்தத்தைப் பார்த்தா கொஞ்சம் அலர்ஜி! அவ்வளவுதான். நீங்க பயப்படாதீங்கன்னாளாம் நர்ஸ்.

3) ஆபரேஷனுக்குத் தயாரா ஒரு பேஷண்ட். ஆபரேஷனுக்கு எல்லாம் ரெடி! பேஷண்ட் பயத்தோட, “ஏன் டாக்டர்... நீங்க கத்தியால என் வயித்தைக் கீறும்போது வலிக்காதே?”ன்னு ஒரு சந்தேகத்துக்குக் கேட்டார். உடனே டாக்டர், “நல்லவேளை... ஞாபகப்படுத்தினீங்க! ஏன் நர்ஸ்... இந்தக் கத்தியையெல்லாம் சாணை பிடிச்சு வெக்கச் சொன்னேனே, வெச்சீங்களா?”ன்னு கேட்டாராம். பேஷண்ட்டோட நிலமை எப்படி இருந்திருக்கும்னு பார்த்துக்குங்க.

4) டாக்டர் தர்மராஜன் தன்னோட கிளினிக்கை மாடியில வெச்சிருந்தாரு. கீழே ஒரு போர்டு. டாக்டர் எம்.தர்மராஜன், மேலே போகும் வழின்னு அறிவிப்பு. சொல்லுங்க, ஒரு பய போவானா? இதுல, எம்ங்கிற எழுத்து மேல இருந்த புள்ளியை வேற ஒரு போக்கிரி அழிசசுட்டான். எம். தர்மராஜன் எமதர்மராஜன் ஆயிட்டாரு.

5) இன்னொரு டாக்டர்... எலும்பு சிகிச்சை மருத்துவர். அவர் கிட்டே கால் முறிவு ஏற்பட்டு ஒரு பேஷண்ட் வந்தார். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்ததுல, முழங்காலுக்குக் கீழே ரெண்டு மூணு துண்டா உடைஞ்சு போயிருந்துது எலும்பு.

கால்ல பலமா அடிபட்டிருக்கே. ஆபரேஷன் பண்ணிக் கட்டு போடுறேன். இன்னும் ரெண்டு மாசத்துக்கு மாடிப்படியெல்லாம் ஏறி இறங்காதீங்க. கட்டு அவுத்த பிறகு நானே சொல்றேன்ன்னர் டாக்டர். அடுத்து 15 நாள் கழித்து வரச் சொன்னார். பேஷண்ட் வந்தார். டாக்டர் டெஸ்ட் செய்தார். “மாடிப்படி ஏறி இறங்கலே இல்லே! நான் சொன்னதை கரெக்டா ஃபாலோ பண்றீங்கதானே?”ன்னு கேட்டார். ஆமா சார்! மறுபடி 15 நாள் கழித்து வந்தார். திரும்பவும் அதே கேள்வி. ஆமா சார், கரெக்டா ஃபாலோ பண்றேன். இப்பெல்லாம் மாடிப்படி ஏறி இறங்கறதில்லை. ஆமா, எப்ப சார் கட்டு அவுப்பீங்க?”ன்னு கேட்டார் பேஷண்ட்.

அதுக்குள்ள என்ன அவசரம் உங்களுக்கு? கால் பூரணமா குணமாக வேணாமா?” சிடுசிடுத்தார் டாக்டர்.

அதுக்கில்லே டாக்டர், எப்போலேர்ந்து நான் மாடிப்படி ஏறி, இறங்கலாம்னு தெரிஞ்சா...” ன்னு இழுத்தார் பேஷண்ட்.

தெரிஞ்சு என்ன பண்ணப் போறீங்க? கொஞ்சம் பேசாம இருங்க. இப்பத்தான் கால் எலும்பு மெதுவா கூடிட்டு வருது. கொஞ்சம் பொறுமையா இருக்க முடியாதா உங்களால?”ன்னு சீறினார் டாக்டர்.

அதுக்கில்லே டாக்டர், நீங்க மாடிப்படி ஏறி இறங்கக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டீங்க. அதனால, ஒவ்வொரு முறை இங்கே வரும்போதும், நான் இருக்கிற மூணாவது மாடியிலேர்ந்து டிரெயினேஜ் பைப்பைப் பிடிச்சு இறங்கி வரதுக்குள்ள எனக்குப் போதும் போதும்னு ஆயிடுது டாக்டர்னார் பேஷண்ட்.

, இப்படியிருக்கு நிலவரம்! அதனால, எல்லாரும் நல்லா சிரிங்க; வாய்விட்டுச் சிரிங்க; மனசு விட்டுச் சிரிங்க. ஆனா, தனியா மட்டும் சிரிச்சுடாதீங்க. சிரிக்கிறப்போ யாரையாச்சும் பக்கத்துல வெச்சுக்கறது நல்லது. தனிமையில அழலாம். தப்பில்லை. பாக்குறவங்களும் தப்பா நினைக்கமாட்டாங்க. ஆனா, தனிமையில சிரிச்சுக்கிட்டிருந்தா, அவனவனும் பக்கத்துல வர பயப்படுவான். ‘கொஞ்சம் அது போலருக்கு... கிட்ட போனா கடிச்சு கிடிச்சு வெச்சுடப் போறான்னு நம்மளைப் பத்தி தப்பா யோசிப்பான். அப்புறம் நம்ம பொழைப்பு சிரிப்பா சிரிச்சுடும்.

ஆகவே, கூட்டமா சிரிங்க. குதூகலமா சிரிங்க. இப்படியொரு கூட்டத்தை மாதா மாதம் நடத்திக்கிட்டு வர்ற சிரிப்பானந்தா உண்மையிலேயே இதன்மூலம் சத்தமில்லாம ஒரு பெரிய சமூக சேவை பண்ணிட்டு வர்றார்னுதான் சொல்வேன். அடுத்த முறையும் சிறப்பு விருந்தினரா இல்லேன்னாலும், சிரிப்பு விருந்தினரா வந்து இங்கே கலந்துக்க விரும்பறேன்.

நன்றி! வணக்கம்.