உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Thursday, December 29, 2011

சாவி எனும் மகான்!

சாவி சாரின் அபூர்வ படம். தன் மகன்கள் பாச்சா (எ) பாலசந்திரன், மணி மற்றும் மகள்கள் ஜெயந்தி, உமா, ஜெயஸ்ரீ மற்றும் மாலதியுடன் சாவி சார். கடைக்குட்டிப் பெண்தான் மாலதி.

‘சா
வி’ என்று அந்த மாமனிதரின் பெயரை தட்டச்சு செய்யும்போதே என் உடம்பு சிலிர்க்கிறது. அவரிடம் எட்டு ஆண்டுகள் பணியாற்றியது நான் செய்த பாக்கியம். ஆனால், அவரிடம் பணியாற்றிய காலத்தில் அதை நான் பூரணமாக உணர்ந்திருக்கவில்லை என்பதுதான் நிஜம்.

அவர் என்னிடம் உரிமையோடு கோபித்துக்கொண்டபோதெல்லாம் அது என் நன்மைக்காகவே என்பது புரியாமல், மோதிரக் கையால் பெறப்படும் குட்டுக்கள் அவை என்பதை உணராமல், பதிலுக்கு பதில் நானும் அவரிடம் முறைத்துக் கொண்டதை இப்போது நினைத்தாலும் எனக்கு உடம்பு கூசுகிறது. என்னை நானே எதாலாவது அடித்துக் கொள்ளலாம் போல் இருக்கிறது.

சாவி பத்திரிகையை முழுக்க முழுக்க என்னை நம்பி விட்டிருந்தார் சாவி. அவர் தொடர்பான கட்டுரைகளை மட்டுமே கவனிப்பார். மற்ற விஷயங்கள், கட்டுரைகள், சிறுகதைகள், தொடர்கதைகள், வடிவமைப்புகளை எல்லாம் என் விருப்பத்துக்கேற்பத் தீர்மானிக்கும் சுதந்திரத்தைக் கொடுத்திருந்தார். ஒரு முறை, சிறுகதை ஒன்றின் படத்தை சாவி பத்திரிகை அட்டையில் வெளியிட்டு, அதன் கீழேயே கதையின் ஆரம்பச் சில வரிகளைப் பெரிய எழுத்தில் பிரசுரித்து, தொடர்ச்சி உள்ளே எனக் குறிப்பிட்டேன். அவ்வளவு ஏன்... இம்ப்ரிண்ட் என்று சொல்லப்படும் ஆசிரியர் குழுப் பட்டியலை சாவி பத்திரிகை அட்டையிலேயே ஒருமுறை வெளியிட்டேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். எதற்குமே மாற்றுக் கருத்து சொன்னதில்லை அவர். ‘இம்ப்ரிண்ட்டை அட்டையில் வெளியிடணும்கிற விசித்திரமான யோசனை யாருக்குமே தோணாது, ரவி!’ என்று புன்னகைத்துப் பாராட்டத்தான் செய்திருக்கிறார்.

அப்படிப்பட்டவர் என் மீது அக்கறை கொண்டு உரிமையோடு கோபித்துக் கொண்டபோது அதை ஆசீர்வாதமாக ஏற்காமல், பதிலுக்கு நானும் முறுக்குக் காட்டியதை நினைத்தால் வேதனையாக இருக்கிறது.

ஒருமுறை, எஸ்.சங்கரநாராயணன் என்கிற எழுத்தாளர் ‘அன்றிரவு’ என்று ஒரு சிறுகதையை என்னிடம் பரிசீலனைக்கு நேரில் கொண்டு வந்து கொடுத்தார். அவர் அண்ணா நகரில், சாவி இல்லம் - கம் - அலுவலகத்துக்கு அருகில் இருந்த போஸ்ட் அண்ட் டெலகிராஃப் ஆபீஸில் அப்போது பணியாற்றிக்கொண்டு இருந்தார். எனவே, தனது படைப்புகளைப் பொடி நடையாக நேரிலேயே வந்து கொடுப்பது அவர் வழக்கம். அவர் தந்த ‘அன்றிரவு’ கதையை அன்றிரவே படித்து, அந்த வார சாவி இதழிலேயே பிரசுரித்துவிட்டேன்.

சாவி இதழுக்கு பரிசீலனைக்கு வரும் சிறுகதைகள் மொத்தத்தையும் என் ஒருவனால் படிக்க முடியாது என்பதால், அவற்றை சாவி சாரின் கடைசி மகள் மாலதிக்கு அனுப்பி வைப்பேன். அவர் படித்துத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த சிறுகதைகளையும் வெளியிடுவேன். ஆனால், அப்படி அனுப்புவதற்கு முன்பு, உடனடி தேவைக்காக, நன்றாக எழுதக்கூடிய எழுத்தாளர்களின் சிறுகதைகளை நானே பரிசீலிப்பதற்காகத் தனியாக எடுத்து வைத்துக் கொள்வது என் வழக்கம்.

‘அன்றிரவு’ சிறுகதை ‘சாவி’யில் வெளியாகி, இரண்டு நாட்கள் கழித்து, சாவி சார் என்னை அழைத்தார். “இந்த வார இஷ்யூவுல வந்திருக்கிற ‘அன்றிரவு’ கதையை யார் படிச்சு செலக்ட் செஞ்சது?” என்று கேட்டார். “நான்தான் சார்” என்றேன். “கதை அப்படி ஒண்ணும் நல்லா இல்லையாமே? எப்படி இதை செலக்ட் பண்ணினே?” என்றார். “இல்ல சார், நல்ல கதைதான்...” என்றேன். “ம்ஹூம்! கதை ரொம்ப சுமாரா இருக்குப்பான்னு மாலதிதான் போன் பண்ணிச் சொன்னா!” என்றார் சாவி. “இல்ல சார், அந்தக் கதை அப்படி ஒண்ணும் மோசமான கதை இல்லே!” என்றேன். “மோசமான கதை இல்லேங்கறியே தவிர, நல்ல கதைன்னு சொல்ல மாட்டேங்கிறே பார்த்தியா?” என்று என் வார்த்தையைக் கொண்டே என்னை மடக்கியவர், “கதை செலக்ட் பண்றதுல நீ இன்னும் கொஞ்சம் கவனமா இருக்கணும் ரவி! சுமார் ரகக் கதைகளை எல்லாம் யோசிக்காம தள்ளிடு. நல்ல கதைகள் மட்டும்தான் சாவியில் வெளியாகணும். பக்கத்துல இருக்கிறவங்க நேர்ல கொண்டு வந்து கொடுத்தாங்கன்னு முக தாட்சண்யத்துக்காக எல்லாம் சிறுகதைகளைப் பிரசுரிச்சோம்னா பத்திரிகை பேர் கெட்டுடும்” என்றார் சாவி.

அவர் பேசப் பேச, எனக்குள் சுறுசுறுவென்று கோபம் ஏறிக்கொண்டு இருந்தது.

அடுத்து அவர் சொன்னதுதான், கட்டுப்பாட்டை மீறி என்னை வெகுண்டு எழச் செய்துவிட்டது.

“ரவி, இனிமே எல்லாக் கதைகளையும் மாலதிக்கு அனுப்பிச்சுடு! அவ படிச்சு செலக்ட் பண்ணிக் கொடுக்கிறதை மட்டும் போடு, போதும்!” என்றார்.

அடுத்த விநாடி, அவர் அடுத்து என்ன சொல்ல வருகிறார் என்பதையும் கவனிக்காமல், விருட்டென்று அங்கிருந்து நகர்ந்துவிட்டேன். மாடியில் சாவி சார் வீடு; கீழே அலுவலகம்.

விறுவிறுவென்று கீழே இறங்கி வந்தேன். ஐம்பது ஐம்பது கதைகளாகக் கட்டி வைத்திருந்த இரண்டு மூன்று கட்டுகளை சுமக்க முடியாமல் மாடிக்குத் தூக்கிச் சென்றேன். சற்றும் இங்கிதமோ, மரியாதையோ இல்லாமல், சாவி சார் முன்பு தொப்பென்று சத்தம் வரும்படி தரையில் போட்டேன். “சார், இதுல 150 கதைகள் இருக்கு. ஏற்கெனவே உங்க பொண்ணு கிட்டே 300 கதைகள் வரை இருக்கு. எல்லாத்தையும் படிச்சு செலக்ட் பண்ணிக் கொடுக்கச் சொல்லுங்க. அடுத்த இஷ்யூவுக்குக் கையில ஒரு கதை கூட இல்லை” என்றவன், “இனிமே நானாக ஒரு கதை கூட செலக்ட் பண்ணிப் போட மாட்டேன். ஆனா, இஷ்யூவுக்குக் கதைகள் இல்லேன்னா என்ன பண்ணலாம்னு நீங்கதான் சொல்லணும்” என்று வீராப்பாகச் சொல்லிவிட்டு, அவர் பதிலைக்கூட எதிர்பார்க்காமல் மீண்டும் தடதடவென்று கீழே இறங்கி வந்து என் சீட்டில் உட்கார்ந்துகொண்டு, படபடப்பு அடங்காமல் சக தோழர்களிடம் புலம்பித் தீர்த்தேன்.

கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் கடந்திருக்கும். சாவி சார் மெதுவாக நடந்து வந்து, என் எதிரில் இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தொண்டையைக் கனைத்துக் கொண்டு, “ரவி! எனக்கு உன் கோபம் புரியுது. நான் அப்படிச் சொல்லியிருக்கக் கூடாதுதான். உன் இடத்துல நான் இருந்திருந்தாலும் அப்படித்தான் நடந்துக்கிட்டிருப்பேன். என் கோபம் அப்படியே உன் கிட்டே இருக்கு” என்றவர், சற்று இடைவெளி விட்டு, “இனிமே கதைகளை நீயே படிச்சுத் தேர்ந்தெடு. நான் எதுவும் கேட்க மாட்டேன். உன் சுதந்திரத்துல நான் குறுக்கிட மாட்டேன். உன் மேல எனக்குப் பூரண நம்பிக்கை இருக்கு. என்னவோ, அவள் சொன்னாளேன்னு அவசரப்பட்டுக் கேட்டுட்டேன். அதை ஒண்ணும் நீ மனசுல வெச்சுக்காதே! உனக்கு உதவியா இருக்கும்னா, கதைகளை மாலதிக்கு அனுப்பு. அவ செலக்ட் பண்ணிக் கொடுக்கிறதையும் அப்படியே போடணும்னு அவசியம் இல்லே. உனக்குத் திருப்தியா இருந்தா போடு! இதை ஏதோ உன் மனச்சாந்திக்கு சொல்றதா நினைக்காதே! மனப்பூர்வமா சொல்றேன்” என்று சொல்லிவிட்டு எழுந்து போய்விட்டார்.

சர்வாங்கமும் கூனிக் குறுக அமைதியாக உட்கார்ந்திருந்தேன். வேறு என்ன எதிர்வினையாற்றுவது என்று எனக்கு அப்போது தெரியவில்லை. அன்றைக்கு ராத்திரி முழுக்க, நடந்த சம்பவத்தை நினைத்து நினைத்துக் குமுறிக் கொண்டிருந்தேன். பெருந்தகையாளர் சாவி அவர்களின் முன்னால் நான் வெறும் தூசு. தூசினும் தூசு. அப்படிப்பட்டவர் அன்று என்னிடம் நடந்து கொண்ட விதம், அவரை ஒரு மகானாகவே எனக்குக் காட்டியது.

இந்த நிகழ்வு ஒரு சாம்பிள்தான்! இன்னும் இருக்கிறது. இதெல்லாவற்றுக்கும் சேர்த்து வைத்துத்தான், சாவி சார் இறந்த அன்றைக்கு அவர் உடம்பின் அருகில் அமர்ந்து அடக்கமாட்டாமல் கதறித் தீர்த்தேன். அன்றைக்கு நான் விட்ட ஒவ்வொரு சொட்டுக் கண்ணீரும், இதே போன்று நடந்த ஒவ்வொரு சம்பவத்தை முன்னிட்டும் அது நாள் வரை நான் அடக்கி வைத்திருந்த கண்ணீர்தான்!

பின்குறிப்பு: அந்த ஆண்டு ‘இலக்கிய சிந்தனை’ அமைப்பால் சிறந்த சிறுகதை எனத் தேர்வு செய்யப்பட்டது ‘அன்றிரவு’.
.

Sunday, December 25, 2011

இரண்டு ‘பொ’ புத்தகங்கள்!

கவனிக்க: இந்தப் பதிவின் இறுதியில் ஒரு சுவாரஸ்யம் காத்திருக்கிறது.

நீண்ட நாட்களாக வலைப்பூ பக்கம் வரவில்லை; பதிவு எதுவும் எழுதவில்லை. வருத்தமாகத்தான் இருக்கிறது. “ஏன் சார் இப்பெல்லாம் எழுதறதே இல்லே?” என்று ஆர்வத்தோடும், அக்கறையோடும், ஆதங்கத்தோடும் கேட்போரிடமெல்லாம், “அலுவலகத்தில் வேலை பளு அதிகம்” என்று நேற்று வரை சொல்லிக்கொண்டு இருந்தேன். ‘அப்படியானால், நான் மட்டும்தான் உழைப்பாளி, ஓய்வின்றிப் பணியாற்றுபவன்; தொடர்ந்து பரபரப்பாகவும் சுறுசுறுப்பாகவும் சுவாரஸ்யமாகவும் பதிவு எழுதிக்கொண்டு இருப்பவர்கள் எல்லாம் வேலை வெட்டி இல்லாதவர்களா?’ என்று இந்த நிமிடம் மனசுக்குள் ஒரு கேள்வி எழ, என் பதில் எனக்கே அதிகப்பிரசங்கித்தனமாகவும் அசட்டுத்தனமாகவும் தோன்றுகிறது. இப்படியொரு பதிலைச் சொன்னோமே என்று கூச்சமாக இருக்கிறது. நேர்மையாகச் சொல்வதானால், நான் பதிவு எழுதாததற்குக் காரணம் அசிரத்தையும் ஆர்வமின்மையும்தான். இன்னும் உடைத்துச் சொன்னால், சோம்பேறித்தனம்.

சமீபத்தில், மதிப்புக்குரிய நகைச்சுவை எழுத்தாளர் கடுகு அவர்களை, எழுத்தாள நண்பர் பாலகிருஷ்ணன் (சுபா) அவர்களின் மகள் திருமண விழாவில் சந்தித்துப் பேசினேன். “ஏன் பிளாக் எழுதுவதில்லை?” என்று கேட்டார். அவரிடம் “வேலை பளு” என்று சொல்லத் தயக்கமாக இருந்தது; “சோம்பேறித்தனம்” என்று சொல்லவும் கூச்சமாக இருந்தது. “எழுதணும் சார். எழுதறேன்” என்று மையமாக பதில் சொன்னேன். “எழுதணும். கட்டாயம் எழுதுங்க. நம்ம சந்தோஷத்துக்காகவாவது எழுதணும்” என்றார். “ஆகட்டும் சார்!” என்று வாக்குக் கொடுத்தேன்.

கண்டிப்பாக வாரம் ஒரு பதிவாவது எழுதவேண்டும் என்பதை 2012 புத்தாண்டுத் தீர்மானமாக எடுத்துக் கொள்கிறேன்.

கூடவே, இந்த இரண்டு மூன்று மாதங்களாக பதிவு எழுதக் கூட நேரமில்லாமல்... தப்பு, தப்பு... ஆர்வமில்லாமல் அப்படி வேறு என்ன வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தேன் என்பதைச் சொல்ல விரும்புகிறேன்.

முக்கியமாக இரண்டு விஷயங்கள். ஒன்று - ஆனந்த விகடன் பொக்கிஷம். இந்த ஆண்டு ஜனவரி புத்தகச் சந்தைக்கு ‘காலப் பெட்டகம்’ புத்தகம் வெளியானது. அதற்கு வாசகர்கள் தந்த ஏகோபித்த வரவேற்புதான், 2012 ஜனவரி புத்தகச் சந்தைக்கு ‘பொக்கிஷம்’ புத்தகத்தைக் கொண்டு வரவேண்டும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்தியது.

காலப் பெட்டகம் புத்தகத்தில், விகடன் பிறந்த 1926ஆம் ஆண்டு முதல். 2000-வது ஆண்டு வரை, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும் உலக அளவிலும் நடந்த முக்கியமான நிகழ்வுகளை விகடன் பதிவு செய்திருப்பதை வருட வாரியாகத் தொகுத்திருந்தேன். அது நல்லதொரு ஆவணப் புத்தகமாக உருவாகி, வாசகர்களிடையே நன்மதிப்பைப் பெற்றது. ஆனால், ‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமாகத்தான் அதில் விஷயங்கள் கொடுக்கப்பட்டிருந்தனவே தவிர, முழுமையான கட்டுரையாக எதுவும் இல்லை’ என்பது பலரின் ஆதங்கம். வாசகர்களின் அந்த மனக் குறையை ஆனந்த விகடன் பொக்கிஷம் நிச்சயம் போக்கும்.

இதில் வருட வாரியாக இல்லாமல், அங்கொன்றும் இங்கொன்றுமாக, ஆரம்ப காலத்தில் இருந்து சமீப காலம் வரையில் விகடனில் வெளியான படைப்புகளைத் தொகுத்துள்ளேன். காந்தி முதல் கருணாநிதி வரை, நௌஷாத் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை, டி.பி.ராஜலட்சுமி முதல் ஐஸ்வர்யா ராய் வரை, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் முதல் வடிவேலு வரை, செம்மங்குடி முதல் கே.ஜே.யேசுதாஸ் வரை... எனப் பார்த்துப் பார்த்துத் தொகுத்துள்ளேன். தவிர, ஜெயகாந்தன், சுஜாதா போன்ற ஸ்டார் எழுத்தாளர்களின் சிறுகதைகளும் உண்டு. இது நிச்சயம் ஒரு சோறு பதமாக இல்லாமல், முழுமையான தலைவாழை விருந்தை உண்டு மகிழும் திருப்தியை வாசகர்களுக்கு அளிக்கும் என நம்புகிறேன்.

நான் மும்முரமாக ஈடுபட்டிருந்த இரண்டாவது விஷயம் - பொன்னியின் செல்வன். நான் பத்தாம் வகுப்பு படித்துக்கொண்டு இருந்த சமயத்தில், ஒரு கோடை விடுமுறையில், அமரர் கல்கியின் ‘சிவகாமியின் சபதம்’ புத்தகத்தை ஒரே மூச்சில், இரண்டு முழு நாளில் படித்து முடித்துள்ளேன். ஆனால், பொன்னியின் செல்வனை அப்படிப் படிக்கும் பேறு எனக்கு இதுவரை கிடைக்காமல் இருந்தது. அந்தக் காலத்தில் ஓவியர் மணியம் வரைந்த அதே படங்களோடு, அமரர் கல்கியின் மாஸ்டர் பீஸான பொன்னியின் செல்வனை ஒரு எழுத்து கூட எடிட் செய்யாமல், அப்படியே முழுமையாக, வரும் புத்தகச் சந்தைக்குக் கொண்டு வருகிறது விகடன் பிரசுரம். அத்தியாயங்களுக்கான கறுப்பு - வெள்ளைப் படங்களோடு, இந்தத் தொடருக்காக மணியம் வரைந்த அழகிய வண்ணப்படங்களும் இந்தத் தொகுப்பில் இடம்பெறுகின்றன. இதை வரிக்கு வரி படித்து, பிழை திருத்தம் செய்து, அத்தியாயங்களுக்கேற்ற படம்தான் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொடுக்கும் வாய்ப்பு எனக்கு அளிக்கப்பட்டது. ஆக, ஐந்து பாகங்களாக வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வனை தினந்தோறும் படித்து மகிழும் பாக்கியம் பெற்றேன். தொகுப்பில் உதவியோர் பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது எனக்குப் பெருமையைத் தருவதாகவும், அமரர் கல்கியின் சுண்டு விரலைப் பற்றி நடப்பது போன்ற மகிழ்ச்சியைத் தருவதாகவும் இருக்கிறது. பொன்னியின் செல்வன் புத்தகத்தை வாங்க விரும்பி அட்வான்ஸ் தொகை அனுப்பியுள்ளவர்களின் எண்ணிக்கை இப்போதே ஆயிரத்தைத் தாண்டிவிட்டது என்று கேள்வி. மகிழ்ச்சியாக இருக்கிறது.

விகடன் பிரசுரம், வரும் புத்தகச் சந்தைக்கு இருபதுக்கும் மேற்பட்ட புதிய, முக்கியமான, அருமையான புத்தகங்களை வெளியிடவிருக்கிறது. அவற்றில் பொக்கிஷம், பொன்னியின் செல்வன் ஆகிய இரண்டு புத்தகங்கள் தலைசிறந்த புத்தகங்களாக, ஸ்டார் புத்தகங்களாகத் திகழும் என்பது நிச்சயம்.

‘பொக்கிஷம்’ புத்தகத்தில் இடம்பெறும் என் முன்னுரையையும், பொன்னியின் செல்வன் புத்தகம் பற்றிய என் வாசிப்பு அனுபவத்தையும் ‘என் டயரி’யில் தனிப் பதிவாகப் பதிவு செய்வேன்.

இனி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட அந்த சுவாரஸ்யத்துக்கு வருவோம்.

வரும் புத்தாண்டை, என் வலைப் பதிவு நேயர்களுக்கு - குறிப்பாக, தொடர்ந்து என் வலைப்பதிவுகள் அனைத்தையும் வாசித்திருப்பவர்களுக்கு ஒரு பரிசுப் போட்டி வைத்துப் பரிசு அளிப்பதன் மூலம் தொடங்கலாம் என்பது என் விருப்பம்.

உங்கள் ரசிகன், என் டயரி ஆகிய என் இரண்டு வலைப்பூக்களில் இதுவரை நான் எழுதியுள்ள பதிவுகளிலிருந்து ஒரு கேள்வி கேட்பேன். அதற்கான சரியான விடையை உடனடியாக எனக்குப் பின்னூட்டம் இடவேண்டும். முதலில் வரும் சரியான விடைக்குப் பரிசு. தவிர, பொதுவாக என் பதிவுகள் பற்றிய நிறை, குறை, மற்றும் ஆலோசனைகளோடு கூடிய உங்கள் விமர்சனத்தை விரிவாக எழுதி அனுப்ப வேண்டும். சிறப்பான விமர்சனக் கட்டுரையை என் வலைப்பூவில் பதிவதோடு, அதை எழுதியவருக்கும் ஒரு பரிசு.

சரி, என்ன பரிசு?

வேறென்ன? புத்தகம்தான். ‘பொன்னியின் செல்வன்’ புத்தகத்தைப் பரிசாக வழங்கலாம் என்று மனசில் ஆசை இருந்தாலும், அது என் பொருளாதாரத் தகுதிக்கு அப்பாற்பட்டதாக உள்ளது. எனவே, சுமார் 180 ரூபாய் மதிப்புள்ள (சரியான விலை இன்னும் நிர்ணயிக்கப்படவில்லை) ‘ஆனந்த விகடன் பொக்கிஷம்’ புத்தகத்தை இரண்டு பேருக்கு அளிப்பதென்று முடிவு செய்துள்ளேன்.

போட்டி தொடர்பான முழுமையான விவரங்கள் அடுத்த பதிவில்.

அன்பு வாசகர்கள் அனைவருக்கும் என் அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!


.

Sunday, October 02, 2011

அந்தமான் போய் வந்தேன்!

விமானம் லேசாக நகரத் தொடங்கியதை, ஜன்னல் வழியே நகர்ந்த வெளிப்புறக் காட்சிகளை வைத்து உணர்ந்துகொண்டேன். ஒரு பஸ் மிக மெதுவாக நகர்வது போன்று விமானம் மெதுவாக தார்ச்சாலையில் ஊர்ந்து, ஒரு திருப்பத்தில் திரும்பி நின்றது.

எதிரே வேறொரு விமானம், திடுதிடுவென ஓடி வருவது தெரிந்தது. விரைந்து வந்த அந்த விமானம் கண்ணெதிரே குபுக்கென உயரே எழுந்து பறந்தது. அது வானில் புள்ளியாகி மறைந்த விநாடியில், எங்களின் விமானம் உறுமத் தொடங்கியது. அந்த உறுமல் சட்டென பேரிரைச்சலாக மாறியது. யோசிப்பதற்குள் திடுக்கெனக் கிளம்பி, எடுத்த எடுப்பில் படு வேகத்தில் ஓடியது. கண் சிமிட்டும் நேரத்துக்குள் நாங்கள் தரையை விட்டு இருநூறு அடி உயரத்தில் இருந்தோம்.

ஜன்னல் வழியே சென்னையின் வீடுகள், எல்.ஐ.சி. கட்டடம், அண்ணா மேம்பாலம், மெரினா கடற்கரை ஆகியவை புள்ளிப் புள்ளியாகத் தெரிந்தன. பின்னர் வெறுமே பச்சை மரங்களாக மட்டும் கண்ணில் பட்டன. பின்னர் வெறும் கடற்பரப்பு தெரிந்தது. சில விநாடிகளில் அதுவும் மறைந்து, வெறும் ஆகாயம் மட்டுமே தெரிந்தது (ஆல்பம் என் முகப் புத்தகத்தில்).

காதுக்குள் ஏதோ திரவம் சுரப்பது போன்று ஓர் உணர்வு. குறுகுறு என்று இருந்தது. குப் குப்பென்று அடைத்தது. சன்னமான வலி. விரல்களைச் செலுத்தி, காதுகளை இறுகப் பொத்திக்கொண்டேன்.

முழு உயரத்தை எட்டுவதற்குள், விமானம் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் மாறி மாறிச் சாய்ந்து பறந்தது. பின்னர் சீராகப் பறக்கத் தொடங்கியதும், சீட் பெல்ட்டுகளை அவிழ்த்துக் கொள்ளலாம் என்கிற அறிவிப்பு கசிந்தது. நான் என் பெல்ட்டைக் கழற்றிவிட்டு, மெதுவாக எழுந்து நடந்தேன். இந்தக் கோடியிலிருந்து அந்தக் கோடி வரை ஒரு நடை போய், நம்மவர்கள் யார் யார் எங்கே எங்கே உட்கார்ந்திருக்கிறார்கள் என்று பார்த்துவிட்டு வந்தேன்.

இடப் பக்கம் மூன்று, வலப் பக்கம் மூன்று என வரிசைக்கு ஆறு சீட்டுகள். இப்படி சுமார் 30 வரிசைகள் இருந்தன. மையமாக, ஓராள் மட்டுமே நடந்து செல்ல முடிகிற அளவுக்குக் குறுகலான நடைபாதை. விமானம் ஹவுஸ்ஃபுல் ஆகவில்லை. ஏழெட்டு சீட்டுகள் காலியாக இருந்தன.

என் சீட்டுக்குத் திரும்புவதற்குள், ஒரு நடை டாய்லெட்டுக்கும் போய் வந்தேன். அவசரமோ அவசியமோ எதுவும் இல்லை. என்றாலும், வந்ததுதான் வந்தோம்; விமானத்தில் டாய்லெட் வசதி எப்படி இருக்கிறது என்றுதான் பார்ப்போமே என்று ஒரு எண்ணம்.

மிகக் குறுகிய அறை. வெஸ்டர்ன் டாய்லெட்டில் அமர்ந்தபடியே கழுவிக் கொள்ளும் சாமர்த்தியமோ, அல்லது நின்றபடியே கழுவிக் கொள்ளும் சாமர்த்தியமோ இருந்தால் பிழைத்தோம். உள்ளே நுழைந்து கதவைத் தாழ் போட்டதும் விளக்கு எரிந்தது. தாழ்ப்பாளைத் திறந்ததும் லைட் அணைந்தது. நம்மவர்களின் அசிரத்தை, அலட்சியம், பொறுப்பின்மை இவற்றை உணர்ந்து செய்திருந்த ஏற்பாடாகவே அது எனக்குத் தோன்றியது.

என் இருக்கையில் வந்து அமர்ந்தேன். அக்கம்பக்கத்து சீட்டுகளில் உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள் என்று நோட்டமிட்டேன். சிலர் தங்களின் முன்னிருக்கையின் முதுகில் இருந்த குட்டி மானிட்டரில் வீடியோ கேம் விளையாடிக்கொண்டு இருந்தனர். சிலர் கூகுள் மேப் போன்ற ஒரு மேப்பில், விமானம் தற்போது எங்கே, என்ன உயரத்தில் பறந்துகொண்டு இருக்கிறது என்று கவனித்துக்கொண்டு இருந்தனர்.

நான் எனக்கான குட்டித் திரையை ஆன் செய்தேன். ஹெட்போனை எடுத்துக் காதில் மாட்டிக்கொண்டேன். இந்திப் படம் ஒன்று இருந்தது. அதை கிளிக் செய்து, கொஞ்ச நேரம் பார்த்தேன். போரடிக்கவே, வேறு என்னென்ன இருக்கிறது என்று தேடினேன். பாப் பாடல்கள் இருந்தன. அதைக் கிளிக் செய்து, ஓட விட்டேன். பரவாயில்லை ரகம்!

சற்று நேரத்தில், குறுகலான நடைபாதையில் சக்கர வண்டி ஒன்றைத் தள்ளியபடி ஏர் ஹோஸ்டஸ்கள் இருவர் வந்தனர். இந்த விமானத்தில் என் கண்ணில் பட்ட ஏர் ஹோஸ்டஸ்கள் மொத்தம் ஆறு பேர். நாலு பேர் பெண்கள்; இருவர் ஆண்கள். அனைவரும் கருநீல நிறத்தில் கோட், சூட் அணிந்திருந்தனர். பெண்கள் தங்கள் தலைமுடியை இறுக்க முடிந்து, கொண்டை போட்டிருந்தனர். அதீத மேக்கப். ரோஸ் நிறத்தில் ஓவர் லிப்ஸ்டிக். விழிகளில் பட்டையடித்திருந்த மை. ரோபோத்தனமான செயல்பாடுகள். உறைந்த சிரிப்பு! அவர்கள் உணர்ச்சியுள்ள ஜந்துக்கள் மாதிரி எனக்குத் தெரியவில்லை. கீ கொடுத்த பொம்மை போன்று இயங்கினார்கள்.

வண்டியைத் தள்ளியபடியே, ‘வெஜ்ஜா, நான்-வெஜ்ஜா?’ என்று கேட்டு, அதற்கேற்ப ஆளுக்கொரு பேக்கிங்கை விநியோகித்தபடி வந்தார்கள். எனக்கான பேக்கிங்கைப் பிரித்தேன். பனீர் ரொட்டி, கிச்சடி, சப்பாத்தி, குருமா என இருந்தது. சாப்பிட்டு முடித்ததும், மீண்டும் ‘காபியா, டீயா?’ என்று கேட்டபடி, அதே ஏர்ஹோஸ்டஸ்கள் மீண்டும் வந்தார்கள். காபி என்றேன். ஒரு சின்ன கப்பில் காபி டிகாக்‌ஷன் மட்டும் கொடுத்தார்கள். ஏற்கெனவே கொடுத்த பேக்கிங்கில், ஒரு சின்ன முட்டை மாதிரி கூட்டுக்குள் செயற்கைப் பால் இருந்தது. அதைப் பிரித்து டிகாக்‌ஷனுடன் கலக்க, காபி ரெடி! ஆனால், அப்படியொன்றும் சுவையாக இல்லை. மிகச் சுமார் ரகம்!

மீண்டும் சக்கர வண்டியைத் தள்ளியபடி வந்து, காலியான எச்சில் பேக்கிங்குகளை சேகரித்துக்கொண்டு போனார்கள் ஏர்ஹோஸ்டஸ்கள். பாதை ஓர சீட்டில் நான். எனக்குப் பக்கத்தில், அதாவது என் வரிசையின் மத்தியில் அமர்ந்திருந்த நபரின் காலி பேக்கிங்குகளைச் சேகரிக்கும்போது, ஏதோ ஒரு சிறு குப்பி, தவறி என் பேண்ட்டின் மீது விழுந்து, தரையில் விழுந்தது. பதறிவிட்டாள் அந்த ஏர்ஹோஸ்டஸ். ‘ஸாரி... ஸாரி...’ என்று பலமுறை சொல்லி, கையிலிருந்த சின்ன டவலால் பேண்ட்டைத் துடைத்துவிட்டாள். தரையில் முட்டி போட்டு அமர்ந்து, கீழே விழுந்திருந்த குப்பியை எடுத்து தள்ளுவண்டியில் போட்டுவிட்டு, தரையைத் துடைத்துச் சுத்தம் செய்தாள். பின்பு எழுந்து, மீண்டும் ‘ஸாரி...’ என்றாள். “இட்ஸ் ஓகே! விடும்மா!” என்றும் கேட்காமல், மறுபடியும் ஸாரி சொல்லி, ஒரு சின்ன டவல் தந்து துடைத்துக்கொள்ளச் சொன்னாள். நடிகை மாதிரி இருந்தவள் சர்வண்ட்டாக மாறிப் பணிவிடை செய்தபோது, அவள் மீது கொஞ்சம் பரிதாபமாக இருந்தது. பெயர் கேட்டேன். ‘ஏஞ்சலினா’ என்றபடி, இடது தோள் பக்கம் குத்தியிருந்த பேட்சைத் தொட்டுக் காட்டினாள், தனது வழக்கமான செயற்கைப் புன்னகையுடன்.

சரியாக இரண்டு மணி நேரப் பயணத்துக்குப் பின்பு, விமானம் இறங்கத் தொடங்கியது. தரையில் மேடு பள்ளமான சாலையில் தடக் தடக்கென்று பஸ் இறங்குவதைப் போலவே, விமானமும் தட் தட்டென்று எதிலோ தட்டுவது போல் இறங்கியது ஆச்சரியமாக இருந்தது. ஏர் பிளாக்குகள் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு விமானம் மாறும்போது இப்படித்தான் இடிக்குமாம்.

ஜன்னல் வழியே மீண்டும் கடல் பரப்பு, பச்சைப் பசேல் மரங்கள், தீப்பெட்டிகள் போல வீடுகள் எல்லாம் கண்ணில் பட்டன. தட்டென்று தரை தட்டி, விறுவிறுவென்று ஓடி நின்றது விமானம். சினிமா முற்றாக முடிவதற்குள் எல்லோரும் கிளம்பி நகரத் தொடங்குவது போல, விமானம் நிற்பதற்குள் பலர் எழுந்துகொண்டார்கள். ‘உட்காருங்க, சொன்னதும் எழுந்திருக்கலாம்!’ என்றார்கள் ஏர்ஹோஸ்டஸ்கள்.

காக்பிட்டிலிருந்து இரண்டு விமானிகளும் வெளியே வந்து, பயணிகளின் முன் நின்று, சர்க்கஸ் முடிந்ததும் வீரர்கள் கையசைப்பது போல் கையசைத்து ‘ஹாய்’ என்றார்கள். விமானத்தைச் செலுத்திய விமானியின் பெயர் சுப்பிரமணியன் என்றும், துணை விமானியின் பெயர் சுரேஷ் என்றும் அறிவிப்புக் குரல் ஒலித்தது.

ஒவ்வொருவராக வெளியேறினோம். போர்ட்பிளேர் விமான நிலையத்தின் பெயர் வீர சாவர்க்கர் விமான நிலையம்.

தயாராக இருந்த கார்களில் கிளம்பி, நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘மெகாபோட்’ ஹோட்டலுக்குப் போனோம்.

அந்தமான் சிறைச்சாலையைப் பார்வையிட்டோம். செல்லுலார் ஜெயிலில் வீர சாவர்க்கர் அடைபட்டிருந்த சிறு அறையில் நின்று பலர் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். பின்னர், ஒரு சிறு கப்பலில் கிளம்பி, ஹேவ்லாக் தீவு போனோம். அங்கிருந்து சிறு படகில் லாவெண்டர் தீவு, ரோஸ் ஐலண்ட் போன்ற குட்டிக் குட்டித் தீவுகளைப் பார்த்தோம். தரைப்பகுதியில் கண்ணாடி பதித்த ஒரு படகில் சென்று, கடலுள் இருந்த பவழப் பாறைகள், சிப்பிப் பாறைகள் ஆகியவ்ற்றைப் பார்த்தோம். கடலில் குதியாட்டம் போட்டோம். 30 வருடங்களுக்குப் பிறகு, மீண்டும் நீரில் நீந்தினேன். கடலில் நீந்துவது இதுவே முதல்முறை!

எலிஃபெண்டா பீச் போனோம். அப்புறம் ராதா நகர் பீச் போனோம். அது ரொம்ப அழகான கடற்கரை; மியாமி கடற்கரைக்கு அடுத்தபடியாக ஆசியாவிலேயே அழகிய கடற்கரை; அங்கே நிறைய சினிமா ஷூட்டிங்குகள் நடந்திருக்கின்றன; சத்ரியன் படத்தில் ஒரு பாடல் காட்சி அங்கேதான் படமாக்கப்பட்டது; சமீபத்தில் வெளியான ‘செல்லமே’ படத்தில் இடம்பெறும் ‘காதலிக்கும் ஆசை இல்லை கண்கள் உன்னைக் காணும் வரை...’ பாடல் காட்சி அங்கே படமானதுதான் என்றெல்லாம் பில்டப் செய்து கூட்டிப் போனார்கள். ஆனால், என் கண்ணுக்கு அப்படியொன்றும் அது அழகாகத் தெரியவில்லை.

வியாழக் கிழமை அந்தமான் போய், இரண்டு நாட்கள் இருந்துவிட்டு, ஞாயிற்றுக் கிழமை மாலை சென்னை திரும்பினோம்.

‘அந்தமானைப் பாருங்கள், அழகு..!’ என்று பாட்டில்தான் அந்தமான அழகாக இருக்கிறது. மற்றபடி, நம்ம ஊட்டியைவிட அந்தமான் ஒன்றும் அழகானதாக எனக்குத் தெரியவில்லை. அங்கே பார்க்கவும் ரசிக்கவும் ஒன்றும் இல்லை. முன்பு ஐந்து சினிமா தியேட்டர்கள் இருந்ததாம். அத்தனையும் போணியாகாமல் மூடிவிட்டார்களாம். இப்போது மருந்துக்கு ஒரு சினிமா தியேட்டர் கூடக் கிடையாது என்றார்கள். ஆனால், இந்தியாவில் ரிலீசாகும் புத்தம்புதுப் படங்கள் எல்லாம் அடுத்த ஒரே வாரத்துக்குள் விசிடி-யாகக் கிடைத்துவிடுவதால், வீட்டிலேயே எல்லாப் படங்களையும் பார்த்துவிடுகிறார்கள். அந்தமானில் வங்காளிகள் அதிகம்; அடுத்தபடியாக தமிழர்கள் அதிகம். எனவே, தமிழ்நாட்டிலேயே வனங்கள் சூழ்ந்த பகுதி ஒன்றில் இருந்துவிட்டு வந்தது போல்தான் இருந்தது. என்றாலும், குளிர்ச்சியான தட்பவெப்பம் இல்லை. புழுக்கமும் வேர்வையும் இருந்தது.

மொத்தத்தில், சுவாரஸ்யமாகச் சொல்வதற்கு இந்தப் பயணத்தில் எனக்கு ஏதும் தெரியவில்லை.

இந்தப் பயணத்தில் சிறப்பாக ஒன்றை மட்டும் குறிப்பிடலாம். விகடன் குழுமத்தில் எடிட்டோரியல், சர்க்குலேஷன், பிரிண்ட்டிங், அட்வர்டைஸ்மெண்ட் எனப் பலப்பல பிரிவுகள் இருந்தாலும், அவரவர் பணியாற்றும் துறையைத் தவிர, மற்ற துறையில் உள்ளவர்களின் அறிமுகம் இல்லாதிருந்தது. இந்தப் பயணத்தில் சர்க்குலேஷன் மேனேஜர் யார், பெர்சோனல் மேனேஜர் யார், சேல்ஸ் மேனேஜர் யார், அக்கவுண்ட்ஸ் மேனேஜர் யார் என்றெல்லாம் தெரிந்துகொண்டேன்.

அக்கவுண்ட்ஸ் மேனேஜரும், பெர்சோனல் மேனேஜரும் நான் இருக்கும் மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள்தான் என்பதும் இந்தப் பயணத்தின்போதுதான் தெரிந்தது. அவர்கள் இருவரோடு நானும் கிளம்பி, ஒன்றாகத்தான் ஆட்டோவில் பேசிக்கொண்டே ஏர்போர்ட் போனோம். அந்தமானில் எல்லோரும் தங்கள் தங்கள் பதவிகளை உதறிவிட்டு, நண்பர்களாகப் பேசி கலகலப்பாகப் பழகியது இனிமையான அனுபவம்.

சென்னை ஏர்போர்ட்டில் இறங்கி, திரும்பி வரும்போது பர்ச்சேஸ் மேனேஜர் திரு.ஸ்ரீதரும் சேர்ந்துகொண்டார். “வேணாம்! ரொம்ப டிரிங்க்ஸ் எடுத்துக்காதீங்க. ஹெல்த்துக்குக் கெடுதல்!” என்று அங்கே எங்களுக்கு அடிக்கடி அன்பும் அக்கறையுமாக அட்வைஸ் பண்ணிக்கொண்டே இருந்தார் அவர். “விமானத்தில் வந்து இறங்கினா கால்டாக்ஸியிலோ, ஆட்டோவிலாதான் வீட்டுக்குப் போகணும்னு கட்டாயமா என்ன? வாங்க, சப்-வே இறங்கி ஏறினா திரிசூலம் ஸ்டேஷன். சபர்பன்ல போயிடுவோம்!” என்று எந்த பந்தாவும் இல்லாமல், எங்களை அழைத்துக் கொண்டு வந்தார்.

இதற்கு முன்பு அவரை எங்கள் அலுவலகத்தில் பார்த்திருக்கிறேன் என்றபோதிலும், அவர் யார் என்று தெரியாமல் கடந்து போயிருக்கிறேன். இந்தப் பயணத்துக்குப் பின்பு, அவர் எதிர்ப்படும்போதெல்லாம் ஒருவருக்கொருவர் புன்னகையைப் பரிமாறிக்கொண்டோம். விஷ் செய்து கொண்டோம். அவ்வப்போது நலம் விசாரித்துக் கொண்டோம்.

இனிமையான, பந்தா இல்லாத எளிய நட்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்தார் அவர்.

எல்லாம் சரி; புதிய, இனிய, அன்பானதொரு நட்பை எனக்குக் கொடுத்த இறைவன் ஏன் இத்தனை ஈவு இரக்கமற்றவனாகிப் போனான்?

அந்தமான் பயணம் நிகழ்ந்து ஒரு மாதம் பூர்த்தியாவதற்குள்ளாகவே, அந்த இனிய மனிதருக்கு ‘ஹார்ட் அட்டாக்’ கொடுத்து, ஏன் எங்களிடம் இருந்து பிரித்துவிட்டான்?

இன்னமும் ஆறவில்லை மனசு!
ஸ்ரீதர்

Saturday, September 03, 2011

எனது முதல் விமானப் பயணம்!

ட்டை வண்டி, பொட்டு வண்டி, குதிரை வண்டி, டயர் வண்டி, கை ரிக்‌ஷா, சைக்கிள், சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ ரிக்‌ஷா, டூ-வீலர், ஸ்கூட்டர், பைக், கார், ஜீப், போலீஸ் (பேட்ரல்) கார், வேன், போலீஸ் வேன், லாரி, மிலிட்டரி லாரி, டிராக்டர், புல்டோசர், ரோடு ரோலர், கிரேன், ஆம்புலன்ஸ், ஃபயர் இன்ஜின், பஸ், ரயில், சபர்பன் ரயில், கரி இன்ஜின், கூட்ஸ் வண்டி, பாசஞ்சர் வண்டி, சதாப்தி எக்ஸ்பிரஸ், படகு, கேரள பாம்புப் படகு, மோட்டார் படகு, ஸ்பீட் போட், சொகுசுப் படகு வீடு எனப் பலவகையான வாகனப் போக்குவரத்துகளையும் பயன்படுத்திப் பயணங்கள் செய்திருக்கிறேன்.

கப்பல், ஹெலிகாப்டர், விமானம் மூன்றில் மட்டும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. எனினும், முன் இரண்டில் சும்மா ஏறி இறங்கிப் பார்த்திருக்கிறேன்.

சென்னைக் கடற்கரையில் கப்பல் ஒன்று தரை தட்டி நின்றபோது, பள்ளிச் சுற்றுலாவில் வந்த நான் அதில் ஏறிப் பார்த்தது ஞாபகத்தில் உள்ளது. அதேபோல், விழுப்புரம் முனிசிபல் ஹைஸ்கூல் கிரவுண்டில் ஏதோ காரணத்துக்காக ஒரு ஹெலிகாப்டர் வந்து இறங்கி, ஒரு நாள் முழுக்க நின்றிருந்தது. அப்போது அதில் ஏறிக் குதூகலித்த பள்ளிச் சிறுவர்களில் நானும் ஒருவன்.

பல ஆண்டுகளுக்கு முன், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நின்றிருக்கும் இரண்டொரு விமானங்களை ஏக்கத்தோடு வேடிக்கை பார்த்தபடி நின்றிருக்கிறேன். “அதோ பாருங்க, அதுதான் கே.ஆர்.விஜயாவோட விமானம்!” என்று பரபரப்பாகச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொள்வார்கள். அப்போதெல்லாம் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டு, சென்னையை விமானத்தில் ஒரு ரவுண்டு வரலாம் என்று கேள்வி.

என் சின்ன வயது ஏக்கங்கள் பலவும் 30 வயதுக்கு மேல் சுத்தமாகத் தொலைந்து போனது வரமா, சாபமா என்று இன்னமும் எனக்குப் புரியவில்லை.

சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, சிங்கப்பூருக்கு ஒருமுறையும், ஹாங்காங்குக்கு ஒருமுறையும் சாவி சார் என்னை விமானத்தில் அழைத்துச் செல்வதற்காகச் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தபோது, அவரிடம் வேறு ஏதோ சில்லறை விஷயத்துக்காகக் கோபித்துக்கொண்டு விலகியதில், அந்த இரண்டு முறையும் விமானப் பயண அனுபவம் எனக்குக் கிட்டாமல் போனது. ஆனால், அது குறித்து எனக்குள் எந்த வருத்தமோ, ஏக்கமோ எழவில்லை என்பது எனக்கே ஆச்சரியமான ஒன்று. பின்னர் சாவி சார், “ரவி, நல்ல வாய்ப்பை நீ மிஸ் பண்ணிட்டே!” என்று சொன்னபோது, அவர்தான் அதற்காக வருத்தப்பட்டாரே தவிர, எனக்கொன்றும் அது ஒரு பெரிய இழப்பாகவே தோன்றவில்லை.

சில நாட்களுக்கு முன்னால், “ரவி, வருகிற வியாழக்கிழமை நாம ஒரு இருபது பேர் அந்தமான் போறோம். இரண்டு நாள் அங்கே இருந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பறோம். அதனால இஷ்யூ வொர்க்கை எல்லாம் அதுக்கேற்ப முடிச்சுக்குங்க” என்று பதிப்பாசிரியர் திரு.அசோகனும், ஆசிரியர் திரு.கண்ணனும் சொன்னபோது, ‘சரி’ என்றேனே தவிர, முதன்முறை விமானப் பயணம் மேற்கொள்ளப்போகும் பரபரப்போ, பரவச உணர்வோ எனக்குள் எழவேயில்லை.

வீட்டில் தகவல் சொன்னபோது, அவர்களுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தன் நண்பர் ஒருவர் முதன்முறை விமானப் பயணம் மேற்கொண்டபோது, அவர் நிலைகொள்ளாமல் தவித்ததையும், படபடத்ததையும் அப்பா நினைவுகூர்ந்தார்.

வியாழன். விகடன் குழுமத்தின் பெர்ஸோனல் மேனேஜர், அக்கவுண்ட்ஸ் மேனேஜர் இருவரும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நாங்கள் மூவரும் ஒரே ஆட்டோவில் விமான நிலையத்தை அடைந்தோம்.

சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழையும் உணர்வு. சுற்றிலும் வலை கட்டி, கட்டட வேலைகள் நடந்துகொண்டு இருந்தன.

செக்கிங்குகளுக்குப் பின்னர், ஆன்லைன் பதிவைக் காண்பித்து, டிக்கெட் பெற்றுக்கொண்டு வரிசையில் காத்திருந்து, கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிற்கும் விமானத்தில் ஏற, இருக்கைகளே இல்லாத ஒரு லொக்கடா பஸ்ஸில் சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.

ஜெட் ஏர்வேய்ஸ் காத்திருந்தது. பந்தல் அமைக்கப்பட்ட படிகளில் ஏறினோம்.

உள்ளே... சற்றே நீளமான ஒரு சொகுசு பஸ்ஸுக்குள் ஏறியது போன்றுதான் உணர்ந்தேனே தவிர, பயமாகவோ, பரபரப்பாகவோ, பரவசமாகவோ உணரவில்லை.

இருக்கை எண் தேடி அமர்ந்தோம். சற்று நேரத்தில், சன்னமான குரலில் அறிவிப்புகள் ஒலிக்கத் தொடங்கின. பக்கத்து இருக்கைக்காரர் அவற்றை லட்சியமே செய்யாமல், முந்தின இருக்கையின் முதுகைப் பிளந்து மேஜை அமைத்துக்கொண்டு, லேப்டாப்பைப் பரப்பி மெயில் பார்க்கத் தொடங்கினார்.

செல்போன், லேப்டாப் ஆகியவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்யச் சொன்னது அறிவிப்புக் குரல். சீட் பெல்ட் மாட்டிக்கொள்ளச் சொன்னது. மாட்டிக்கொண்டேன்.
(பயணிகளின் கனிவான கவனத்துக்கு. அனைவரும் தங்கள் சீட் பெல்ட்டுகளை அணிந்துகொள்ள வேண்டுகிறோம். சில விநாடிகளில் விமானம் புறப்படும்.)
.

Monday, August 01, 2011

பெரியவா பற்றி டாக்டர் சுவாமி!

காஞ்சிப் பெரியவருடனான தனது அனுபவங்கள் பற்றி ‘பிராமின் டுடே’ என்னும் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி வருகிறார் டாக்டர் சுப்பிரமணியம் சுவாமி. அதன் நகல்கள் சிலவற்றை எனக்கு அனுப்பி வைத்திருந்தார் பிரபல எழுத்தாளர் சாருகேசி அவர்கள்.

சுப்பிரமணியம் சுவாமியின் கட்டுரைகளிலிருந்து சில பகுதிகள் இங்கே:

“காஞ்சிப் பெரியவரை 1977 முதல் அவர் முக்தியடைந்த தினம் வரையில், பலப்பல முறை சென்று தரிசித்து, அவரின் ஆசிகளையும் வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறேன் நான். ஆனால், அதை நான் ஒருபோதும் பிரகடனப்படுத்திக் கொண்டது இல்லை. தரிசன சமயத்தில் என்னைப் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் இல்லை. பெரும்பாலும் முன் அனுமதி பெறாமலேயே, பல முறை காஞ்சி மடத்துக்குச் சென்றிருக்கிறேன். அவர் என்னைப் பார்ப்பார். ஆசி வழங்குவார். அவர் தூங்கிக்கொண்டு இருந்தாலும்கூட, நான் வந்ததும் அவரின் அணுக்கத் தொண்டர்கள் அவரை எழுப்பிவிடுவார்கள். காரணம், அவர்களுக்கு அவர் என்னைப் பற்றித் தெளிவாகக் குறிப்பிட்டு, உத்தரவுகள் பிறப்பித்திருந்ததுதான். இருந்தபோதிலும், அவருடனான எனது நெருக்கம் குறித்து, அவர் வாழும் காலத்தில் நான் ஒருக்காலும் தற்பெருமையடித்துக்கொண்டது இல்லை.

அடுத்த ஒரு நூறு ஆண்டுகளுக்கு, காஞ்சி மகான் போன்று ஒரு மனித தெய்வம் தோன்றப்போவது இல்லை. அவரை நான் அறிந்திருந்ததும், அவரது ஆசிகள் எனக்குக் கிடைத்ததும் நான் செய்த பாக்கியம்தான். பூதவுடலாக அவர் இன்று நம்மிடையே இல்லாதிருக்கலாம்; ஆனால், அவர் எனக்கு அறிவுறுத்தியிருந்ததன் காரணமாக, அவர் என் அருகில் இருப்பதாகத்தான் உணர்கிறேன்.

1977-ஆம் ஆண்டு, காஞ்சி மகா பெரியவாளின் அற்புதமான பிரசங்கத்தைக் கேட்ட பின்பு, பரமாச்சார்யரின் தரிசனத்தைப் பெறுவதற்காக நான் பலப்பல முறை சென்றிருக்கிறேன். எப்போதெல்லாம் எனக்குக் குழப்பம் ஏற்பட்டதோ, ஏதாவது கடினமான கேள்விக்கு விடை தெரியாமல் இருந்ததோ, ஏதேனும் பிரச்னைக்குத் தீர்வு தெரியாமல் இருந்ததோ, அப்போதெல்லாம் நான் பெரியவரிடம் ஓடுவேன்; எனக்கு வழிகாட்டும்படி வேண்டுவேன். காஞ்சிபுரம், பெல்காம் அல்லது சதாரா என அவர் எங்கிருந்தாலும், அங்கே அவரைத் தரிசிப்பதற்காக எத்தனைக் கூட்டம் திரண்டிருந்தாலும், பெரியவரின் தரிசனம் எனக்குக் கிடைத்துவிடும். ஆனால், மற்ற சிலர் செய்வது போன்று, இந்தத் தரிசனங்களை நான் செய்தித் தாள்களிலோ பத்திரிகைகளிலோ வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டது இல்லை. எனது இந்தச் செயலை மடத்து நிர்வாகிகளும், குருமார்களும் பெரிதும் பாராட்டினார்கள்.

பரமாச்சார்யரைப் போன்ற மனித தெய்வம் வேறு இல்லை. பிரதமர் இந்திரா காந்தி நெருக்கடி நிலையை அறிவித்திருந்த நேரத்தில் அவரை ஆசீர்வதிக்க மறுத்த ஒரே சந்நியாசி காஞ்சி மகான்தான். இத்தனைக்கும் இந்திரா அப்போது அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தார்; தேசமே அவரைப் போற்றிக் கொண்டாடிக்கொண்டு இருந்தது. அவர் காஞ்சி மகான் முன் விழுந்து வணங்கினார். இருப்பினும், அவருக்கு ஆசிகள் வழங்க மறுத்துவிட்டார் காஞ்சி மகான். அதே சமயம், ஆட்சிக் கட்டிலில் ஜனதா கட்சி அமர்ந்து, இந்திரா பதவி இழந்திருந்த நிலையிலும், எமெர்ஜென்ஸி கொண்டு வந்ததற்காக அவர் மனதார வருத்தப்பட்டதைத் தொடர்ந்து, அவருக்குத் தமது பரிபூர்ண ஆசிகளை வழங்கினார் பெரியவா.

இதனாலேயே, நான் உண்மையாகவும் நேர்மையாகவும் மக்களின் நலனை முன்னிட்டு எது செய்யும்போதும், ஒவ்வொரு முறையும் பரமாச்சார்யரின் ஆசிகள் எனக்கு இருக்கும் என்றே எண்ணுகிறேன். எனக்கு இருக்கும் தைரியத்தை எனது எதிரிகளால்கூட மறுக்க இயலாது. அத்தகைய தைரியத்தை எனக்கு அளித்தது பெரியவரின் ஆசிகள்தான். எனது முயற்சிகள் தோற்றுவிட்டதாகப் பலரும் ஆரம்பத்தில் நினைப்பார்கள்; ஆனால், இறுதியில் நான் வெற்றி பெறுவேன். அதற்குக் காரணம் பெரியவருடைய ஆசிகள்தான்.

இந்தியா- ஸ்ரீலங்கா ஒப்பந்தத்தில் இருந்த கச்சத் தீவில், தமிழக மீனவர்களுடைய உரிமையை நிலைநாட்டும்பொருட்டு, சில மீனவர்களோடு நான் அந்தத் தீவுக்குச் செல்ல முயன்றேன். எம்.ஜி.ஆர். தமிழக முதல்வராக இருந்த நேரம் அது. மதுரையில் என்னைக் கைது செய்து, மதுரை ஜெயிலில் வைக்காமல், அதற்குப் பதிலாக தமிழ்நாடு ஹோட்டலில் சிறை வைத்தார்கள். கச்சத் தீவுக்குப் போவதைக் கைவிட்டுவிட்டுப் பேசாமல் சென்னை திரும்புவதாக ஒப்புக்கொண்டாலொழிய என்னை விடுவிக்கப் போவது இல்லை என்று தெளிவுபடச் சொன்னார் அப்போதைய டி.ஜி.பி. அந்நாளில் எனக்கு ஓரளவே குற்றவியல் சட்டம் தெரியும். எனவே, என் உரிமைகள் பற்றித் தெரியாததால், சென்னை திரும்புவதாக ஒப்புக்கொண்டேன்.

சென்னை வந்த பின்பு, நேரே காஞ்சிபுரத்துக்கு ஓடி, பரமாச்சார்யரைத் தரிசித்தேன். எனக்கு நேர்ந்த அவமதிப்பு பற்றி கூறி, கச்சத் தீவுக்குச் செல்ல முடியாமல் போனது பற்றிச் சொன்னேன். என்னை ஒரு குழந்தை போல் பார்த்துப் புன்னகைத்தார் பெரியவா. ‘’நேரே டெல்லி போ! உன்னைக் கைது செய்தது பற்றி சுப்ரீம் கோர்ட்டில் ஒரு புகாரைப் பதிவு செய். கச்சத் தீவு போவதற்கான ஏற்பாடுகளை உனக்குச் செய்து கொடுக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு அறிவுறுத்துமாறு கோர்ட்டைக் கேட்டுக் கொள்’’ என்றார்.

அதன்படி, அன்று மாலையே நான் விமானத்தில் டெல்லி சென்றேன். சுப்ரீம் கோர்ட்டில் என் மனைவியும் ஒரு வழக்கறிஞர். எனவே, எனது ரிட் மனுவை எழுதித் தரும்படி அவளையே கேட்டேன். அவள் அதைக் கேட்டு அதிர்ந்து போனாள். ‘’ஒரு கைதுக்காக நீங்கள் இப்படி நேரே சுப்ரீம் கோர்ட்டை அணுகினால், கோர்ட்டே உங்களைப் பார்த்துச் சிரிக்கும். முதலில் நீங்கள் மதுரை நீதிமன்றத்தைத்தான் அணுக வேண்டும். பிறகு செஷன்ஸ் கோர்ட்; அப்புறம் ஹைகோர்ட். கடைசியில்தான் சுப்ரீம் கோர்ட்டுக்கு வர வேண்டும்” என்றாள். எனினும், ரிட் மனுவை எழுதும்படி அவளை நான் வற்புறுத்தினேன். ‘’ஒரு வக்கீலாக, கோர்ட்டில் முட்டாள் போன்று நிற்க நான் விரும்பவில்லை. எனவே, நீங்கள் கேட்டது போல் ரிட் மனு எழுதித் தருகிறேன்; ஆனால், மற்றதெல்லாம் உங்கள் பாடு. இந்த விஷயத்தில் நான் உங்களுக்கு வேறெந்த விதத்திலும் உதவ மாட்டேன்’’ என்றாள். ஆனால், பரமாச்சார்யரின் மீதிருந்த ஆழ்ந்த நம்பிக்கை காரணமாக, அப்படியே ஆகட்டும் என்றேன்.

ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி வெங்கட ராமையா முன்பு நான் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டேன். தலைமை நீதிபதி வந்து தமது ஆசனத்தில் அமர்வதற்குச் சில நிமிடங்கள் முன்பு நான் கோர்ட்டுக்கு வந்துவிட்டேன். என்னை அறிந்திருந்த பல வழக்கறிஞர்கள் என் அருகில் வந்து, நான் எதற்காக வந்திருக்கிறேன் என்று விசாரித்தார்கள். விஷயத்தைச் சொன்னதும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். ‘’உங்கள் மனு தள்ளுபடி ஆவது மட்டுமில்லை; உங்கள் முட்டாள்தனத்தைப் பற்றியும், சுப்ரீம் கோர்ட்டின் நேரத்தை வீணடித்தது பற்றியும் தலைமை நீதிபதி குற்றம் சாட்டுவார்” என்றார்கள்.

எனது மனு விசாரணைக்கு வந்தது. அப்போது ஓர் அதிசயம் நிகழ்ந்தது. தலைமை நீதிபதி வெங்கட ராமையா, தமிழ்நாடு கவுன்ஸிலை அழைத்து, (அப்போது இருந்தவர் குல்தீப் சிங். பின்னாளில் இவர் பிரபல நீதிபதி ஆனார்.) தமிழக அரசு என்னை ஏன் கைது செய்தது என்று கேட்டார். எனது மனுவைத் தள்ளுபடி செய்யாமல் அவர் இப்படிக் கேட்டதும், குல்தீப் சிங் ரொம்பவே தடுமாறிப் போனார். பேசவே வார்த்தை வரவில்லை அவருக்கு.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆதரவான கும்பல் ஒன்று, நான் கச்சத் தீவுக்குப் போவதற்கு எதிர்ப்பாக இருப்பதாகவும், மேலும் என்னைத் தீர்த்துக் கட்ட விடுதலைப் புலிகள் மிரட்டல் விடுத்திருப்பதாகவும் விளக்கினார் குல்தீப் சிங். அவ்வளவுதான், கடுங் கோபம் அடைந்து குல்தீப் சிங் மீது எகிறிவிட்டார் வெங்கட ராமையா. ‘’ஜனநாயகக் குடியரசுக்கு லாயக்கானவர்தான் என்று உங்களை நினைக்கிறீர்களா? ஒரு வன்முறைக் கும்பல் டாக்டர் சுவாமியைத் தடுக்க விரும்பினால், நீங்கள் அந்தக் கும்பலைத்தான் கைது செய்ய வேண்டுமே தவிர, சுவாமியையல்ல!” என்று சீறினார்.

பின்பு, நான் கச்சத் தீவு செல்வதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுக்குமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டார் தலைமை நீதிபதி. கோர்ட்டில் இருந்த யாருமே இதை நம்பவில்லை. “நீங்கள் வெங்கட ராமையாவுக்கு ஏதேனும் உறவா?” என்றுகூடச் சிலர் என்னிடம் கேட்டார்கள். அவருக்கும் எனக்கும் உறவு கிடையாது என்பது மட்டுமில்லை; அந்நாளில் அவரைப் பற்றி நான் அறிந்ததுகூடக் கிடையாது.

சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்குப் பிறகு, பாராளுமன்ற இல்லத்தில் பிரதமர் ராஜீவ் காந்தியைச் சந்தித்தேன். அவரிடம் ஏற்கெனவே இந்தத் தீர்ப்பு பற்றிச் சொல்லியிருந்தார் குல்தீப் சிங். எனவே, ராஜீவ் என்னிடம், “நீங்கள் ஏன் முதலில் என்னிடம் இது பற்றிப் பேசவில்லை? நான் எம்.ஜி.ஆரிடம் பேசி உங்களைக் கச்சத் தீவுக்குச் செல்ல அனுமதித்திருக்கும்படி சொல்லியிருப்பேன். போனது போகட்டும். இனிமேல் நீங்கள் எப்போது கச்சத் தீவு செல்லத் திட்டமிட்டாலும், கடற்படையும் விமானப் படையும் உங்களுக்குப் போதிய பாதுகாப்பு அளிக்கும்” என்றார்.

அதுதான் காஞ்சி மகா பெரியவரின் தெய்வீக சக்தி!
.

Sunday, July 31, 2011

மெல்லத் தமிழினி வாழும்!

மிழில் எழுதும்போது எப்படியெல்லாம் தவறுகள் ஏற்படலாம் என்பதையும், பேட்டி கொடுப்பவர் ஒன்று சொல்ல, நிருபர்கள் அதை வேறு மாதிரி புரிந்துகொண்டு எழுதி அனுப்ப, அவர்கள் எழுதியதை ஆசிரியர் குழுவில் உள்ளவர்கள் இன்னொரு விதமாக அர்த்தப்படுத்திக்கொண்டு திருத்த, அனைத்துமே குளறுபடியாகிவிட நேரிடலாம் என்பதையும் விகடன் மாணவப் பத்திரிகையாளருக்கு அன்றைய கூட்டத்தில் விளக்கிச் சொன்னேன். சென்ற பதிவு மாதிரி உரையாக இல்லாமல், விஷயத்தை மட்டுமே இங்கே கொடுத்துள்ளேன். எனவே, இது உங்களுக்கு சுவாரஸ்யமான பதிவாக இல்லாவிட்டாலும், போரடிக்காது என நம்புகிறேன்.

அதற்கு முன்... கீழே சில வாக்கியங்களைக் கொடுத்துள்ளேன். அவற்றில் உள்ள தப்பு என்ன என்று ஊகியுங்கள். விடையைக் கடைசியில் சொல்கிறேன்.

1) பிரபல தொழிலதிபர் ஜகதீஷ்வரை இப்போதெல்லாம் வெளியில் எங்கும் காண முடியவில்லை. கிரிக்கெட் மற்றும் சினிமா தொடர்பான எந்த விழாவும் ஜகதீஷ்வர் இல்லாமல் நடந்தது இல்லை. அதே போல் அவர் அலங்கரிக்காத முக்கிய அரசியல் மேடைகளும் இல்லை. அப்படி சகலகலா வல்லவராக இருந்தவரின் ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது?

2) வருகிற திங்கள் அன்று விடியற்காலையில், தீவிரவாதி அம்ஷன்குமாருக்குத் தூக்குதண்டனை நிறைவேற்றப்பட உள்ளது. அவனைத் தூக்கிலிடப் போகிறவர் 82 வயதான நாதா மல்லிக். பரம்பரை பரம்பரையாகத் தூக்குப் போடும் தொழிலில் உள்ள குடும்பம் அவருடையது. இதுவரை 24 பேருக்குத் தூக்குத் தண்டனை நிறைவேற்றியுள்ள நாதா மல்லிக்குக்கு இது 25-வது இரை!

3) சுரேஷ் தன் மனைவி பூர்ணாவுடன் அமெரிக்கா சென்று செட்டிலாகி, ஐந்து வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பூர்ணாவின் தந்தை தற்போது மும்பையில் வசிக்கிறார். அமெரிக்கா செல்வதற்கு முன்பாக, மும்பை சென்று, தன் மாமனார் வேலாயுதம் வீட்டில் ஒரு வாரம் தங்கியிருந்தார் சுரேஷ். அதுவே அவர்களின் கடைசி சந்திப்பு!

4) சிறுவன் பரத் எங்கே போனான் என்று தெரியவில்லை. பணத்துக்கு ஆசைப்பட்டு யாராவது கடத்திப் போனார்களா என்றும் ஒரு பக்கம் பயமாக இருந்தது. உறவினர்களும் நண்பர்களுமாக நாலா திக்கிலும் தேடிப் பார்த்தார்கள். காவல் துறையும் தீவிரமாகத் தேடியது. கடைசியில், கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் ஒரு மூலையாகப் படுத்திருந்த பரத்தை கண்டுபிடித்தது போலீஸ்!

5) அம்மையார் குப்பத்தில் நேற்று இரவு பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. பல வீடுகள் இடிந்து விழுந்தன. குடிசை வீடுகள் சரிந்து தரைமட்டமாகின. ஒரு குடிசை வீட்டின் கூரை அப்படியே சரிந்து விழுந்தது. அதில் வசித்த குப்புசாமி, அவரின் மனைவி சுலோசனா, பத்து மற்றும் எட்டு வயதுகளில் உள்ள அவரின் மகன், மகள் என நான்கு பேரும் இந்த விபத்தில் சிக்கிப் பரிதாபமாக இறந்து போனார்கள். அனைவரின் உடல்களும் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் மீட்கப்பட்டபோது, மிகவும் வருத்தமாக இருந்தது.


திராளி என்ன சொல்கிறார் என்பதைச் சரியாகப் புரிந்துகொண்டு எழுதுவது முக்கியம். புரியவில்லை என்றால், மீண்டும் ஒரு தரம் சொல்லச் சொல்லிக் கேட்பதற்குக் கூச்சப்படத் தேவையில்லை. புரியாமலேயே புரிந்ததாகப் பாவனை செய்து, தப்புத் தப்பாக எழுதுவதற்கு, மீண்டும் ஒருமுறை விளக்கமாகச் சொல்லும்படிக் கேட்டுச் சரியாக எழுதுவதே மேலானது! ‘கோவலனைக் கொண்டு வருக என பாண்டிய மன்னன் நெடுஞ்செழியன் ஆணையிட்டதைச் சரியாகக் காதில் வாங்கிக் கொள்ளாமல், ‘கோவலனைக் கொன்று வருக என ஆணையிட்டதாகத் தவறாகக் கருதி, வீரன் செயல்பட்டதால் எத்தனைப் பெரிய விபரீதம் நிகழ்ந்துவிட்டது! கோவலன் கொலையுண்டான்! அவனையடுத்து யானோ அரசன்? யானே கள்வன்!’ என மன்னன் உயிர் துறந்தான். அவனது பிரிவைத் தாளாமல் பாண்டிமாதேவியும் இறந்துபோனாள். அதோடு நின்றதா? கண்ணகியின் கோபம் மதுரை நகரையே தீக்கிரையாக்கியதே!

சரி, ரொம்ப சீரியஸாகப் போகவேண்டாம். நகைச்சுவையாகப் பார்ப்போம். முன்னே பழைய திரைப்படம் ஒன்றில் ஒரு காட்சி வரும். வயல் வரப்பில் நடந்து வந்துகொண்டு இருப்பார் சுருளிராஜன். அப்போது சற்றுத் தொலைவில் இருந்த வேறொரு நடிகர் (தேங்காய் சீனிவாசனா என்பது ஞாபகமில்லை) சுருளியைப் பார்த்து, ‘‘டேய்... வயல்ல ஆடு! வயல்ல ஆடு!’’ என்று கத்துவார். சுருளி உடனே தடதடவென்று வயலுக்குள் இறங்கி, ஆடத் தொடங்குவார். ‘‘அடேய்! என்னடா பண்றே! வயல்ல ஆடு மேயுதுன்னு சொன்னேன்டா!’’ என்று மீண்டும் விளக்கமாகச் சொல்வார் அவர். இன்றைக்குச் சாதாரணமாகத் தெரிந்தாலும், படம் வெளியான காலத்தில் சுருளியின் நடிப்பு, பார்வையாளர்களிடையே பெரிய சிரிப்பலையைக் கிளப்பிய காட்சி இது. ஒருவர் சொல்வதை எப்படி அனர்த்தப்படுத்திக்கொள்ள முடியும் என்பதற்கு உதாரணம் இந்தக் காட்சி.

சமீபத்திலும், சிவகாசி என்கிற படத்தில் இப்படி ஒரு காட்சி வந்தது. விஜய் ஏதோ கடிதத்தை வைத்து பிளாக்மெயில் செய்து ஆயிரக் கணக்கில் பணம் கேட்க, பிரகாஷ்ராஜ் கடைசியில் பத்தாயிரம் ரூபாய்க்கு ஒப்புக்கொண்டு, ‘‘உள்ளே போய் ஒரு ப்ரீஃப்கேஸில் பத்து ரூபாய், பெரிய பத்து கொண்டு வந்து இவர் கிட்டே கொடு!’’ என்று கஞ்சா கருப்புக்கு உத்தரவிடுவார். அவர் போய் அப்படியே ப்ரீஃப்கேஸில் பணத்தைக் கொண்டு வந்து விஜய்யிடம் கொடுத்துவிட்டு, ‘‘பத்து லட்சம் ரூபாயைக் கொடுத்துட்டேய்யா!’’ என்பார் அப்பாவியாக. ‘‘என்னது... பத்து லட்சமா? மடையா, மடையா! பத்தாயிரம்தானேடா என்று பிரகாஷ்ராஜ் பதற, ‘‘அந்த எழவைக் கொஞ்சம் விளக்கமாத்தான் சொல்றது!’’ என்பார் கஞ்சா கருப்பு கூலாக. சொல்வதைப் புரியும்படி சொல்லவேண்டும், தான் புரிந்துகொண்டது சரிதானா என்பதை விளக்கமாகக் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதற்கான நகைச்சுவைப் பாடம் இந்தக் காட்சி.

ஒரு பண்ணையில் திடீரென்று வருமான வரித் துறையினர் வந்து சோதனை நடத்தினர். கணக்கு வழக்குகளையெல்லாம் பார்வையிட்டனர். அப்போது முதலாளி தனது கணக்குப் பிள்ளையைக் கூப்பிட்டு, ‘‘அந்தக் கள்ளக் கணக்கைக் கொண்டு வந்து காமிய்யா!’’ என்றார். ‘‘என்னய்யா சொல்றீங்க... கள்ளக் கணக்கா?’’ என்று கேட்டார் கணக்குப்பிள்ளை. ‘‘ஆமாய்யா! கொண்டு வந்து காட்டுய்யா, அதையும் பார்க்கட்டும் இவங்க!’’ என்றார் முதலாளி. கணக்குப் பிள்ளை நேரே போய், தான் தயாரித்து வைத்திருந்த பொய், புரட்டுக் கணக்குகளையெல்லாம் கொண்டு வந்து வருமான வரித் துறையினரிடம் கொடுத்துவிட்டார். லட்டு மாதிரி ஆதாரம் கிடைக்க, முதலாளி வசமாகச் சிக்கிக்கொண்டார். அப்புறம், ‘‘என்னய்யா இப்படிப் பண்ணிட்டே?’’ என்று முதலாளி, தன் கணக்குப் பிள்ளையிடம் அங்கலாய்க்க, ‘‘நீங்கதானேய்யா கள்ளக் கணக்கைக் கொண்டு வந்து காட்டச் சொன்னீங்க? நான்கூட சந்தேகப்பட்டு மறுபடியும் கேட்டேனுங்களே?’’ என்றார் கணக்குப் பிள்ளை. ‘‘அட என்னய்யா நீ! கள்ள (கடலை. கடலையை பேச்சுவழக்கில் கள்ள என்பது வழக்கம்) தெரியாதாய்யா உனக்கு? கள்ள பயிறு வித்தது, லாபம்னு கள்ள கணக்கக் காட்டச் சொன்னா இப்படிப் பண்ணிட்டியேய்யா!’’ என்று புலம்பினார் முதலாளி.

எதிராளிக்குப் புரிகிற மாதிரி பேச வேண்டும்; படிப்பவருக்குப் புரிகிற மாதிரி எழுத வேண்டும். பத்திரிகை உலகில் இது பால பாடம்.

பழைய ஜோக் ஒன்று எனக்கு ரொம்பப் பிடிக்கும். ‘‘எதிர்காலத்துல என்னவா ஆகணும்னுடா உனக்கு ஆசை?’’ என்று கேட்டார் ஆசிரியர், ஒரு மாணவனைப் பார்த்து. ‘‘எங்கப்பா மாதிரியே எனக்கும் டாக்டர் ஆகணும்னுதான் சார் ஆசை!’’ என்றான் மாணவன். ‘அட, உங்கப்பா டாக்டரா? சொல்லவே இல்லியே?’’ என்றார் ஆசிரியர். ‘‘இல்லே சார்! எங்கப்பாவும் டாக்டர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டாரு!’’ என்றான் மாணவன்.

சொல்லுவதில் குழப்பம் ஏற்படுத்தும் ஒரு வகை இது. கீழே உள்ள வாக்கியங்களைக் கவனியுங்கள்.

இரண்டு மாதங்களுக்கு முன்னால் தூக்கு மாட்டிச் செத்துப்போன சரவணனின் தந்தை வேலுச்சாமியை குமாருக்கு நன்றாகத் தெரியும். நேற்று விடியற்காலையில் அவன் தன் வீட்டுக் கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தபோது, அங்கே நின்றிருந்த வேலுச்சாமியைக் கண்டு திடுக்கிட்டான். கை காலெல்லாம் உதறலெடுத்தது குமாருக்கு.

கட்டுரையில் இப்படி ஒரு பகுதி வந்தால், படிப்பவர்கள் உடனே இதை எப்படிப் புரிந்துகொள்வார்கள் என்றால்... தூக்கு மாட்டிச் செத்துப் போனது வேலுச்சாமி; அவர் உயிரோடு எதிரே நிற்கிறார் என்றால், ஆவியோ பிசாசோ என்று பயம் வரத்தானே செய்யும் என்பதாகத்தான் புரிந்துகொள்வார்கள். உதவி ஆசிரியர்களும் இதை விளக்கமாகச் சொல்ல வேண்டும் என்று, ‘இரண்டு மாதங்களுக்கு முன்னால் தூக்கு மாட்டிச் செத்துப் போனார் சரவணனின் தந்தை வேலுச்சாமி. அவரை குமாருக்கு நன்றாகத் தெரியும்...‘ என்பதாகத் திருத்துவார்கள். அங்கேதான் தவறு நிகழும்.

உண்மையில் தூக்கு மாட்டி இறந்துபோனது சரவணன்தான். அவனுடைய தகப்பனார் வேலுச்சாமியை குமாருக்கு நன்றாகத் தெரியும். அவரைப் பார்த்ததும் குமார் ஏன் பயந்தான் என்றால், அதன் பின்னணியில் வேறு ஏதோ ஒரு விவகாரம் இருக்கிறது. அது கட்டுரையில் கடைசிப் பகுதியில் இடம் பெறுமோ என்னவோ! சரவணனின் தற்கொலை சம்பந்தமாக அவனது நண்பன் என்ற முறையில் தன்னை ஏதும் அவர் குடாய்வாரா என்று குமார் பயந்திருக்கலாம்.

அது வேறு கதை. எதையும் தெளிவாக எழுத வேண்டும் என்பதே இங்கு நாம் கற்றுக்கொள்ள வேண்டியது.

பாபு, கோபு என இரண்டு நண்பர்கள் தங்கள் மனைவிமார்களை அழைத்துக் கொண்டு உல்லாசப் பயணம் செல்வதாகத் திட்டமிட்டார்கள். யதேச்சையாக, வழியில் கோபுவின் மனைவியைச் சந்தித்த பாபு, அவளிடம் டூர் புரொகிராம் பற்றிச் சொல்ல, ‘‘ஆமாம், யார் யார் போகப் போகிறீர்கள்?’’ என்று கேட்டாள் அவள். ‘‘நீங்க என் வொய்ஃப், நான் உங்க ஹஸ்பெண்டு’’ என்றான் பாபு. கோபுவின் மனைவி அரண்டுபோய்விட்டாள். ‘‘என்ன சொல்றீங்க?’’ என்று பதறினாள். பாபு நிதானமாக, ‘‘நீங்க, என்னோட வொய்ஃப், நான், உங்க ஹஸ்பெண்ட் நாலு பேரும் போகப்போறோம்னு சொன்னேன்’’ என்றானாம்.

அதே போல், ‘ஒரு’ என்ற சொல்லைப் பலர் தப்பான இடத்தில் பயன்படுத்துகிறார்கள். ‘ஒரு வயசுப் பெண்ணுடன் அவர் மட்டும் தனியாக இருக்கிறார் வீட்டில்’ என்றால், கன்னிப் பெண் ஒருத்தியுடன் இருக்கிறார் என்ற அர்த்தம்தான் வரும். அவர் தனது ஒரு வயது மகளுடன் இருக்கிறார் என்று அர்த்தம் வராது. ‘ஒரு கைத் தொழில் கற்றுத் தரும் நிறுவனம்’ என்றால், ஒரே ஒரு கைத்தொழிலை மட்டும்தான் கற்றுத் தருவார்களா அங்கே என்ற கேள்வி எழுகிறதல்லவா? எனவே, ‘கைத்தொழில் கற்றுத் தரும் பயிற்சி நிலையம் ஒன்று அந்த ஊரில் இருந்தது’ என்று தெளிவாக எழுத வேண்டியது முக்கியம்.

மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் உரையாற்றிய சீனியர் மாணவர் ஒருவர், தன் பேச்சினிடையே, ‘‘மெல்லத் தமிழினி சாகும் என்று பாரதியே வருத்தப்பட்டுச் சொன்னார். அந்த நிலையை நாம் தமிழ்மொழிக்கு ஏற்படுத்திவிடக் கூடாது என்று பேசினார். திறமையான மாணவர்தான். ஆனால், அவர் மட்டுமல்ல: ரொம்பப் பேர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிற விஷயம் இது. தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதியே சொல்லிவிட்டான் என்று பிரபல பேச்சாளர்களே இன்றைக்கும் மேடைகளில் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். முன்னெப்போதோ யாரோ ஒரு பிரபல பேச்சாளர், பாரதியின் கவிதையை மேலோட்டமாகப் படித்துப் புரிந்துகொண்டு இப்படிப் பேசப் போக, அதைக் கேட்டுக் கேட்டு மற்றவர்களும் சுலபமாக அதைத் தங்கள் பேச்சில் கையாண்டதன் விளைவே இது.

பாரதி உண்மையில் என்ன சொன்னார்? தமிழ் சாகும் என்று சொன்னாரா? அப்படிச் சொல்வாரா அவர்?

மெத்த வளருது மேற்கே, அந்த மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை; சொல்லவும் கூடுவதில்லை; அதைச் சொல்லும் திறமை தமிழ் மொழிக்கில்லை; மெல்லத் தமிழினி சாகும்; அந்த மேற்கு மொழிகள் புவிமிசை ஓங்கும் என்றந்தப் பேதை உரைத்தான்’ என்கிறார். எவனோ ஒரு முட்டாப் பய இப்படிச் சொல்றான் என்கிறார். தொடர்ந்து... ‘... இந்த வசை எனக்கெய்திடலாமோ?’ என்றும் கேட்கிறார். ‘இப்படியான வசை மொழி என் காதுகளில் விழ வேண்டுமா?’ என்று ‘ஆ’ என அலறிக் கேட்கிறார். இதைத்தான், தமிழ் இனி மெல்லச் சாகும் என்று பாரதியே சொல்லிவிட்டதாக, பாரதியின் மீது பழி போட்டுப் பேசிக்கொண்டு இருக்கிறார்கள் பலரும்.

இதை அந்தக் கூட்டத்தில் என் பேச்சில் குறிப்பிட்டு, ‘நிருபர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான பாடம் இது. யார் என்ன சொன்னார் என்பதை நன்றாகக் கவனியுங்கள். அதைத் திருத்தமாக, தெளிவாக எழுதுங்கள். இல்லையென்றால் ஒரு தலைமுறையே தப்பாகப் புரிந்துகொள்ளும்என்று விளக்கினேன்.

இனி, ஆரம்பத்தில் குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளைப் பார்ப்போம்.

1) ‘ஆட்டம் ஏன் அடங்கிவிட்டது’ என்றால், அந்த நபர் இறந்துவிட்டார் என்றுதான் அர்த்தம் வரும். எனவே, ‘ஆட்டம் ஏன் அடங்கியிருக்கிறது?’ என்று எழுதுவதே சரி.

2) ‘இரை’ என்று குறிப்பிடுவது தவறு. தூக்குப் போடுவது அவரது தொழில். இரை என்றால், அவர் ஏதோ வஞ்சம் வைத்து இவரைக் கொன்றுவிட்டதாக விபரீத அர்த்தம் வரும்.

3) கடைசி சந்திப்பு என்றால், அந்தச் சந்திப்புக்குப் பின்பு இருவரில் ஒருவர் இறந்துபோய்விட்டார் என்று அர்த்தம் வரும். அப்படி இல்லை என்கிற நிலையில், இப்படிக் குறிப்பிடுவது தவறு. ‘அவர்கள் சந்தித்தது அதுதான் கடைசி முறை’ என்று சொல்லலாம்.

4) பரத்தை என்ற வார்த்தைக்கு ‘விலைமாது’ என்கிற பொருள் உண்டு. எனவே, ’கடைசியில், கோயம்பேடு பஸ் ஸ்டேண்டில் ஒரு மூலையாகப் படுத்திருந்தான் பரத்; அவனை ஒருவழியாகக் கண்டுபிடித்தது போலீஸ்!’ என்று பிரித்து எழுதுவது நல்லது.

5) ‘அனைவரின் உடல்களும் ஒரு சிறு காயம் கூட இல்லாமல் மீட்கப்பட்டபோது, மிகவும் வருத்தமாக இருந்தது’ என்றால், காயங்களுடன் மீட்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியாக இருந்திருக்குமோ என்று ஒரு குதர்க்கமான அர்த்தம் வருகிறது. எனவே இங்கேயும், ‘அனைவரின் உடல்களும் சிறு காயம் கூட இல்லாமல் மீட்கப்பட்டன. இந்த விபத்து மிகவும் வேதனையை ஏற்படுத்துவதாக இருந்தது’ எனப் பிரித்து எழுதுவதே சரி.

கடைசியாக...

என்னுடைய முதல் சிறுகதை 1978-ல் ஆனந்த விகடனில் வெளியானது.’

ஆனந்த விகடனில் என்னுடைய முதல் சிறுகதை 1978-ல் வெளியானது.’

இந்த இரண்டு வாக்கியங்களையும் கவனியுங்கள். இரண்டிலும் ஒரே விதமான வார்த்தைகள்தான் உள்ளன. ஆனால், இடம் மாறியுள்ளன. மற்றபடி, இந்த இரண்டு வாக்கியங்களுக்கும் ஏதேனும் வித்தியாசம் இருக்கிறதா? தெரிந்தால் உடனே பின்னூட்டம் இடுங்கள். சரியாக விடை எழுதியவர்களின் பெயர்களை நானே குலுக்கிப் போட்டு, நானே தேர்ந்தெடுத்து, குறைந்தபட்சம் ரூ.80 மதிப்புள்ள விகடன் பிரசுர புத்தகம் ஒன்றை எனது பரிசாக அவருக்கு அனுப்பி வைப்பேன்.

.

Tuesday, July 26, 2011

சக்தி கொடுக்கும் சக்தி விகடன்!

சென்னை, தி.ந‌கரில் உள்ள மீனாட்சி கல்யாண மண்டபத்தில், நேற்றைய சனி, ஞாயிறு இரண்டு நாளும், விகடன் மாணவர் பயிற்சித் திட்ட முகாம் நடந்தது. அதில் கலந்துகொண்டு, 'சக்தி விகடனுக்கு நீங்க எப்படிப் பயன்பட முடியும்?' என்கிற தலைப்பில், பத்திரிகையாளர் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட கல்லூரி மாணவர்களிடையே நான் ஆற்றிய உரையை இங்கே தந்திருக்கிறேன். இது உங்களுக்கு எள்ளளவாவது பயன்படுமா, சுவாரஸ்யமாக இருக்குமா என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை. அதாவது, பயன்படாது, சுவாரஸ்யப்படாது என்று நிச்சயம் தெரியும். இருந்தும், துணிச்சலாகத் தந்திருக்கிறேன் என்றால், அதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று... தொடர்ந்து நான் பிளாக் எழுதுவதில்லை என்கிற வசையை ஒழிப்பது! மற்றொன்று... இந்த அற்புதமான உரையை விகடன் பத்திரிகைகள் கண்டிப்பாகப் பிரசுரிக்கப் போவது இல்லை என்கிற தைரியம்!
*****

விகடன் மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து, களம் இறங்கியிருக்கும் துடிப்பு மிக்க இளம் வீரர்களாகிய உங்கள் அனைவரையும் வருக, வருக என மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

சரி, அது என்ன பத்திரிகையாளர் பயிற்சித் திட்டம்?

இப்ப உங்க காலேஜ்ல இன்டெர்ன்ஷிப் பண்ணணும்னு உங்களை அனுப்பறாங்க இல்லியா? அதாவது, படிக்கிறப்பவே வேலையும் பழகணும்கிறதுக்கான பயிற்சிக் களம் அது. இந்த இன்டெர்ன்ஷிப் லொட்டு லொசுக்கெல்லாம் இப்ப சமீப ஆண்டுகள்ல வந்ததுதான். ஆனா, 55 ஆண்டுகளுக்கு முன்பே, கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் ஓய்வு நேரத்தை நல்லபடியாகப் பயன்படுத்தி, எழுத்துத் துறையிலும் பத்திரிகைத் துறையிலும் பயிற்சி பெறணும்னு ஆசைப்பட்டவர் அமரர் எஸ்.எஸ்.வாசன் அவர்கள். அவர் 1956-ல் தொடங்கி வெச்சதுதான் இந்த மாணவர் திட்டம். மாணவர்களுடைய எழுத்தாற்றல் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்குப் பயன்படணும்னு கனவு கண்டார் திரு. வாசன்.

அவருக்குப் பிறகு, அவருடைய மகன் மரியாதைக்குரிய திரு.எஸ்.பாலசுப்ரமணியன் அவர்கள் இந்தத் திட்டத்தை இன்னும் விரிவுபடுத்தி, பிரமாண்டமா செய்தார்.

'ஜர்னலிசத்தில் இன்டெர்ன்ஷிப்னு இந்த மாணவப் பத்திரிகையாளர் பயிற்சித் திட்டத்தைச் சொல்லலாம். இதைப் பல ஆண்டுக் காலமாக வெற்றிகரமாக நடத்தி வருகிற ஒரே பத்திரிகை ஆனந்த விகடன்தான். இந்தத் திட்டத்தில் சேர்ந்து, அப்புறம் விகடனிலேயே பணி புரிந்தவர்கள், இன்னிக்கும் பணியில் இருப்பவர்கள் நிறையப் பேர். குறிப்பா, இன்றைக்கு விகடன் குழுமப் பத்திரிகைகளில் முக்கியப் பொறுப்புகளை வகிப்பவர்கள், விகடனின் மாணவப் பத்திரிகையாளர் திட்டத்தில் உங்களைப் போலச் சேர்ந்து, பயின்று வந்தவங்கதான்!

இதையெல்லாம் எதுக்குச் சொல்றேன்னா, உங்களுக்குக் கிடைச்சிருக்கும் இந்த வாய்ப்பு எத்தனை அருமையானது, எத்தனை மதிப்பானதுன்னு உங்களுக்குப் புரியணும்கிறதுக்காகத்தான்.

ஆரம்பக் காலத்தில் மாணவர் திட்டத்தில் சேர்ந்து பயனடைஞ்சவங்களைவிட இப்ப சேர்ந்திருக்கிற உங்களுக்கு இன்னும் அதிகமான வாய்ப்பு இருக்கு. அப்பெல்லாம் ஆனந்த விகடன்னு ஒரே ஒரு பத்திரிகை மட்டும்தான். இப்ப ரசனைக்கு ஏத்தபடி விதம்விதமான பத்திரிகைகளை வெளியிட்டு வருது விகடன் குழுமம்.

குழந்தைகளுக்குத் தக்கவாறு எழுதுற திறமை சில பேர் கிட்ட இருக்கும்; அவர்களுக்கு சுட்டி விகடன்; ஷேர் மார்க்கெட் போன்ற விஷயங்களில் சிலர் கில்லாடியா இருப்பாங்க; அவங்க பங்கு பெற நாணயம் விகடன்; கார், பைக் போன்ற விஷயங்கள்ல சிலர் ஆர்வமா இருக்கலாம். அவங்க மோட்டார் விகடன்ல எழுதலாம். இப்படி உங்க திறமைக்கும் ரசனைக்கும் ஏற்றவாறு பங்கு பெற எட்டு விதமான பத்திரிகைகள் நம்ம கிட்டே இருக்கு. அது மட்டுமல்ல, இதோ, சீக்கிரமே வரப்போகுது ‘டாக்டர் விகடன்'.

சரி, இந்தப் பத்திரிகைகள்ல எழுதணும்னா, உங்களுக்கு என்ன தேவை? சக்தி. எழுதுற சக்தி. நாம் எண்ணுவதைக் கட்டுரையாக்குகிற சக்தி.

அந்தச் சக்தியை ‘சக்தி விகடன்' உங்களுக்குத் தரும்.

சக்தி விகடனின் பொறுப்பாசிரியர் என்கிற முறையிலே, இங்கே ஒரு பெருமையான, மகிழ்ச்சியான விஷயத்தை உங்களுக்குச் சொல்லிக்க ஆசைப்படறேன்.

கடந்த ஆகஸ்ட் மாசத்திலிருந்து இந்த ஏப்ரல் மாசம் வரைக்கும், அதாவது இந்த ஒன்பது மாச காலத்துல, விகடன் குழுமத்தின் பத்திரிகைகள்ல, மாணவப் பத்திரிகையாளர்கள் எழுதின கட்டுரைகள் எந்தெந்தப் பத்திரிகைல எத்தனைப் பக்கம் வந்திருக்குன்னு ஒரு கணக்கு அனுப்பியிருந்தார், இந்த ஸ்டூடண்ட்ஸ் ஸ்கீமின் பொறுப்பாளராக இருக்கும் நமது ரகோத்தமன்.

சக்தி விகடன்ல மொத்தம் 345 பக்கங்களுக்கு, மாணவப் பத்திரிகையாளர் எழுதின கட்டுரைகள் வந்திருக்கு. எட்டுப் பத்திரிகைகள்ல, மாணவப் பத்திரிகையாளர்களின் கட்டுரைகளை அதிகபட்சம் வெளியிட்ட பத்திரிகை சக்தி விகடன்தான். இதற்கு அடுத்தபடியா, இரண்டாவது இடத்துல இருக்கிறது... பத்திரிகை பேரைச் சொல்ல விரும்பலே. சக்தி விகடனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் பத்திரிகை வெளியிட்ட மாணவர் படைப்புகளின் பக்க எண்ணிக்கை 139. அதாவது, சக்தி விகடன் வெளியிட்டதுல பாதிக்கும் குறைவு.

இது, இந்த ஒன்பது மாசங்களுக்கு மட்டும்தான்னு இல்லை. தொடர்ந்து பல ஆண்டுகளாக, மாணவர் படைப்புகளை வெளியிடுவதில் முன்னணியில் நிற்பது சக்தி விகடன்தான்.

இதை ஏதோ மத்த குழுமப் பத்திரிகைகளைக் குறை சொல்றதா நினைக்கக்கூடாது. ஏன்னா, ஒவ்வொரு பத்திரிகையும் ஒரு ரகம். அவங்க வெளியிடுகிற விஷயங்கள், அவங்களுக்கு விஷயங்கள் கிடைக்கக்கூடிய சோர்ஸுகள்னு எல்லாமே வித்தியாசமா இருக்கு. அதனால, ஒரு பத்திரிகை போல அதே அளவுல மத்த பத்திரிகையும் மாணவர் கட்டுரைகளை வெளியிடும்னு சொல்லமுடியாது. அது முடியவும் முடியாது. அதனதன் தன்மைக்கேற்பத்தான் உபயோகப்படுத்திக்க முடியும்.

ஆனா, நான் இங்கே என்ன சொல்ல வரேன்னா, மத்த பத்திரிகைகளைவிட சக்தி விகடன்ல உங்களுக்கான கதவுகள் அகலமா திறந்துவைக்கப்பட்டிருக்கு; இப்பத்தான் பத்திரிகைக்குப் புதுசா எழுத வந்திருக்கீங்க. உங்களுக்கான அடிப்படைப் பயிற்சியை சக்திவிகடன் உங்களுக்குக் கொடுக்கும்.

விகடன் குழுமம்கிறது ஒரு நர்சரி மாதிரி. இங்கே நாற்றுகளாக வளர்ந்த பத்திரிகையாளர்கள் வெவ்வேறு துறைகள்ல ஜொலிச்சிட்டிருக்காங்க; வெவ்வேறு பத்திரிகைகள்ல பணியாற்றிக்கிட்டு இருக்காங்க. அதனால விகடனை பத்திரிகையாளர்களின் நர்சரின்னு சொல்வாங்க.

ஆனா, விகடனுக்குள்ளேயே எட்டு பத்திரிகைகள் இருக்கே! இந்த எட்டுப் பத்திரிகைகள்லயும் வெற்றிகரமா எழுதணும்னா, அதுக்கான நர்சரியா செயல்படுது சக்தி விகடன். அதாவது, நர்சரியின் நர்சரி!

மத்த பத்திரிகைகள்ல எழுதுறதைவிட சக்தி விகடன்ல எழுதுறது உங்களுக்குச் சுலபம். கொஞ்சம்போல ஆன்மிக விஷயங்கள் தெரிஞ்சிருந்தாலும் போதும், அதை வெச்சு அழகான அட்டகாசமான ஆன்மிகக் கட்டுரைகளை நீங்க சக்தி விகடன்ல எழுதிடலாம்.

எல்லா ஊர்லயும் ஒரு கோயில் இருக்கும்; கோயில்னு இருந்தா, அதுக்கொரு தல புராணம், வழிபாட்டு முறை இருக்கும். அந்த அர்ச்சகரை, குருக்களை, பூசாரியைக் கேட்டால் சொல்வார். இன்னும் கொஞ்சம் பழைமையான, 500, 1000 ஆண்டுகளுக்கு முன்னால கட்டப்பட்ட கோயில்னா, பாடல் பெற்ற ஸ்தலம்னா அதன் சாந்நித்தியம் அதிகமா இருக்கும். அதைப் பற்றிய தகவல்கள் அதிகம் கிடைக்கும். அங்கே விழாக்கள், விசேஷங்கள் எல்லாம் அமர்க்களப்படும்.

இதைப் பத்தியெல்லாம் சம்பந்தப்பட்டவங்களைப் போய் விசாரிச்சு எழுதலாம். உங்க ஊர் பெரியவங்களைக் கேட்டால், பழைய ஆன்மிக, புராண விஷயங்கள் பத்திக் கதை கதையா சொல்வாங்க. ஆன்மிகம் என்பது ஒரு கடல். இதுல, தோண்டத் தோண்ட பொக்கிஷங்கள் கிடைச்சுக்கிட்டே இருக்கும். நான் இங்கே பொக்கிஷம்னு சொல்றது ஆன்மிகத் தகவல்களைங்க. நீங்க பாட்டுக்கு வேற ஏதாவது பொக்கிஷத்தை நினைச்சுக்காதீங்க. அந்த பொக்கிஷங்களைப் பத்தியும் நீங்க தாராளமா எழுதலாம். அதுக்கு ஜூனியர் விகடன் இருக்கவே இருக்கு.

நிறைய எழுதுங்க. எல்லா பத்திரிகைகள்லயும் எழுதுங்க. உங்க டேஸ்ட் என்னவோ, அதுக்கு ஏத்த மாதிரி உள்ள பத்திரிகையை செலக்ட் பண்ணிக்கிட்டு, அதுல எழுதுங்க. இதுக்கெல்லாம் ஒரு பயிற்சிக் களமா சக்தி விகடன்ல நிறைய எழுதுங்க. எழுத எழுதத்தான் உங்களுக்கான ஸ்டைல் பிடிபடும்.

ஆன்மிகப் பத்திரிகைல இருக்கேங்கிறதால, ஆன்மிகம் சம்பந்தமாவே ஒரு உதாரணம் சொல்றேன். பெரிய பெரிய கோயில்கள்ல பார்த்தீங்கன்னா, பிரமாண்டமான கதவுகள் இருக்கும். ஒரு பெரிய விசேஷம்னா, விழாக்கள், உற்சவங்கள்னா அந்தப் பெரிய கதவுகள் திறந்திருக்கும். நிறைய ஜனங்கள் கும்பல் கும்பலா அதன் வழியா போறதும் வர்றதுமா இருப்பாங்க. கொஞ்சம் மிரட்சியா இருக்கும். ஆனா, அந்தப் பெரிய கதவிலேயே சின்னதா திறந்து மூடுற மாதிரி ஒரு குட்டிக் கதவு இருக்கும். பார்த்திருக்கீங்களா? அதைத் திட்டிவாசல்னு சொல்லு வாங்க. அது எப்பவுமே திறந்திருக்கும். அதன் உள்ளே நுழையறது சுலபம். மிரட்சியாவோ, பயமாவோ இருக்காது. யாரும் உள்ளே நுழைஞ்சு, சர்வசாதாரணமா கோயில் உள்ளே போய்ப் பார்க்கலாம்.

அந்த மாதிரி, விகடன் குழுமம்கிறது பிரமாண்டக் கதவுகள்னா, சக்தி விகடன்கிறது திட்டிவாசல் மாதிரி. ஈஸியா உள்ளே வாங்க. மிரட்சி இல்லாம எழுதுங்க. உங்க எழுத்துத் திறமையை வளர்த்துக்கோங்க.

எடுத்த எடுப்பில் பைக் ஓட்டக் கத்துக்கிட்டு ஓட்டலாம்னாலும், அது கொஞ்சம் கஷ்டம். முதல்ல சைக்கிள் ஓட்டப் பழகிட்டு, அப்புறம் பைக் ஓட்டினா சுலபமா இருக்கும், இல்லியா? அடிப்படை பேலன்ஸ் பழகிட்டா, அப்புறம் எத்தனை பெரிய ஹார்ஸ் பவருள்ள பைக்கையும் சுலபமா ஓட்டக் கத்துக்கலாம். அது போல, சக்தி விகடன்ல எழுதுறது சைக்கிள் ஓட்டக் கத்துக்கற மாதிரி. ஏன்... நடைவண்டி பழகுற மாதிரின்னு கூடச் சொல்லலாம்.

உலகத்தையே ஜெயிக்கப் புறப்படறதா இருந்தாலும், முதல் அடி எடுத்து வெச்சாதானே முடியும்? அந்த முதல் அடியை சக்தி விகடனுக்குள்ளே எடுத்து வைங்க.

கடவுள் உங்கள் கையைப் பிடிச்சு அழைச்சுக்கிட்டுப் போவார். கவலையே படாதீங்க.

அத்தனை பேரும் எழுத்துத் துறையில் ஜொலிக்க வாழ்த்துக்கள்!

*****

மேலே தந்திருப்பது, சனிக்கிழமை நான் ஆற்றிய உரை. மறுநாள், ஞாயிற்றுக் கிழமையன்று, எழுத்தில் எப்படி எப்படியெல்லாம் குழப்பங்கள் நேரிடக்கூடும், அவற்றை எப்படிப் பிழையில்லாமல் எழுதுவது என்பது பற்றி மாணவர்களுக்கு விளக்கினேன். அதை விரைவில் பதியவிருக்கிறேன். காரணம், அது ஓரளவுக்கு உங்களுக்குப் பயன்படும், சுவாரஸ்யமாக இருக்கும் என்கிற‌ நம்பிக்கைதான்!

Thursday, June 09, 2011

என்னைக் கவர்ந்த அழகிகள்!

ருடந்தோறும் ஏப்ரல், மே மாதங்களில் குடும்பத்தோடு ஒரு வார காலம் எங்காவது சுற்றுலா சென்று வருவதை, என் இரு குழந்தைகளும் பிறந்தது முதல் ஒரு கடமையாகவே அனுஷ்டித்து வருகிறேன். இடையில் பணக் கஷ்டம், மனக் கஷ்டம் காரணமாக ஒரு வருடம் போக முடியவில்லை; இன்னொரு முறை, குடும்பத்தில் மாற்றி மாற்றி யாருக்காவது உடல் நிலை சரியில்லாமல் போன காரணத்தால் போக முடியவில்லை; கட‌ந்த ஆண்டு மனைவிக்கு அறுவைச் சிகிச்சை; இந்த ஆண்டு வீடு மாற்றல், மகளின் கல்லூரிப் படிப்பு இன்ன பிற காரணங்களால் சுற்றுலா தடைப்பட்டுவிட்டது. மற்றபடி, இந்தப் பதினாறு ஆண்டுகளில் பன்னிரண்டு ஆண்டுகள் குடும்பத்துடன் சுற்றுலா போயிருக்கிறேன்.

சுற்றுலா என்றால், ஆஸ்திரேலியா, ஸ்விஸ், வெனிஸ் என்று கற்பனைகளை ஓட்ட வேண்டாம்; சிம்லா, குலு மனாலி, கோவா என்றும் நீட்ட வேண்டாம். அந்த அளவுக்கு நமக்கு வசதி கிடையாது.

நான் போனதெல்லாம் ஐந்து முறை ஊட்டிக்கு; இரண்டு முறை கொடைக்கானலுக்கு; மூன்று முறை கேரளாவுக்கு; ஒரு முறை ஹைதராபாத்; ஒரு முறை பெங்களூர்.

சின்ன வயதில் சுற்றுலா செல்வதைப் போன்று எனக்கு மகிழ்ச்சி அளித்த விஷயம் வேறில்லை. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது, பள்ளியில் என்னை செஞ்சிக் கோட்டைக்கு அழைத்துச் சென்றார்கள்; எட்டாம் வகுப்புப் படிக்கும்போது, சாத்தனூர் அணைக்கட்டுக்கு அழைத்துச் சென்றார்கள். வேலைக்குப் போகத் தொடங்கியது‌ வரை, நான் போன மொத்த உல்லாசப் பயணங்களே இவ்வளவுதான்! சாவி பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்த பிறகு, சாவி சார்தான் என்னை எடிட்டோரியல் டிஸ்கஷன் என்னும் பெயரில் ஊட்டி, குன்னூர், வெலிங்டன், பெங்களூர் என அழைத்துச் சென்றார்.

எனவே, எனக்கு இருந்த சுற்றுலாப் பயண ஏக்கம் என் குழந்தைகளுக்கும் ஏற்படக்கூடாது என்ற எண்ணத்திலும், வெளியே சென்று நாலு இடங்களைப் பார்த்து அறியும் அனுபவம் அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்கிற யோசனையிலும், இயற்கையை நேசிக்கும், பாதுகாக்கும் மனோபாவம் அவர்களுக்குள் வளர வேண்டும் என்னும் கருத்திலும், பலவித விமர்சனங்களையும் புறந்தள்ளி, குடும்பச் சுற்றுலாவை தீவிரமாகக் கடைப்பிடித்தேன்.

கேரளா சென்றிருந்த‌போது, ஒருமுறை சங்குமுகம் கடற்கரைக்கும் போயிருந்தோம். அங்கே உள்ள பிரமாண்டமான கன்னி சிலையின் அழகைப் பாராட்ட வார்த்தைகளே இல்லை.

சிலை என்றால் கல்லில் வடிக்கப்பட்ட சிலை இல்லை. கான்க்ரீட் சிலை. 26 அடி உயரம், 116 அடி நீளத்தில் ஒய்யாரமாகப் படுத்திருக்கும் நிர்வாணப் பெண் சிலையின் அழகை வார்த்தைகளில் விவரிக்க முடியாது.

இதை வடிவமைத்தவர் கானாயி குஞ்ஞுராமன் என்கிற சிற்பி. இவர் இதை வடிவமைப்பதற்கு முன்பு ஒரு யட்சி சிலையை உருவாக்கினார். அது மலம்புழா அணைக்கட்டில் உள்ளது.

கானாயி குஞ்ஞுராமன் அபாரமான கலைஞர். சொந்த வாழ்க்கையில் நிறைய சோகங்களைச் சந்தித்தவர். இவரின் அப்பாவுக்கும் அம்மாவுக்கும் அடிக்கடி சண்டை வருமாம். அம்மா ஒரு நாள் கோபித்துக்கொண்டு தன் பிறந்த வீடு சென்றுவிட்டார். அம்மாவின் பிரிவு தாங்காமல், ஒவ்வொருமுறையும் கானாயி தன் பாட்டி வீட்டுக்குப் போய் அம்மாவைப் பார்த்துவிட்டு வரும்போதும் அப்பாவிடம் சரமாரியாகப் பிரம்படி படுவார். அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்கி வளர்ந்தவர் குஞ்ஞுராமன். கானாயி என்பது அவரது ஊரின் பெயர். சென்னை, ஆர்ட் அண்ட் கிராஃப்ட் ஸ்கூலில் படித்து, கேரள சுற்றுலாத் துறை அபிவிருத்திக் கழகத்தின் கலை ஆலோசகராகப் பணியாற்றியவர் இவர். திருவனந்தபுரம் நுண்கலைக் கல்லூரியில் பேராசிரியராகவும், முதல்வராகவும் பணியாற்றியுள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு, இந்த யட்சி மற்றும் ஒய்யாரக் கன்னி சிலைகளை ஆபாசம் என்று சொல்லி அகற்றவேண்டும் என்று ஒரு கோஷ்டி கிளம்பியது. ஆனால், விவகாரம் அத்தோடு அமுங்கிப் போயிற்று.

எது ஆபாசம், எது ஆபாசம் இல்லை என்பது பார்ப்பவரின் கண்களைப் பொறுத்தது என்பார்கள். எனக்கு அதில் உடன்பாடு இல்லை. எல்லாருடைய கண்களும் ஒரே மாதிரிதான். ஆனால், இடம், பொருள், சூழ்நிலையைப் பொறுத்தே ஒன்று அழகானதா, ஆபாசமானதா என்பது முடிவாகிறது. முன்பேகூட எழுதியிருக்கிறேன்... நீச்சல் போட்டிகளில் கலந்துகொள்ளும் ஒரு பெண் தொடைகள் தெரிய ஸ்விம் சூட் அணிந்து வந்தால், நீச்சல் போட்டி நடக்கும் இடத்தில் அது ஆபாசம் இல்லை. அதுவே, அந்தப் பெண் தன் வீட்டுக்கு வந்த விருந்தினர்களுக்கு ஸ்விம் சூட் அணிந்து காபி உபசரித்தால் எப்படி இருக்கும்?

கோயில்களில் எத்தனையோ நிர்வாணச் சிலைகள் உள்ளன. அம்மன் சிலைகள் பருத்த அங்கங்களுடன்தான் காணப்படுகின்றன. அவற்றில் ஆபாசமா இருக்கிறது? நிச்சயமாக இல்லை.

அதேபோல்தான் இந்த ஒய்யாரக் கன்னி சிலையும், யட்சி சிலையும் என்பது என் கருத்து.

யட்சி சிலைக்கும், நான் விகடனில் வேலைக்குச் சேர்ந்ததற்கும், சுவாரஸ்யமான‌ ஒரு சின்ன‌ தொடர்பு இருக்கிறது.

'உனக்காக நான்' என்றொரு திரைப்படம். அதில், 'நோ நோ.. நோ நோ.. நோ நோ... காதல் கதை சொல்வேனோ, கட்டி சுகம் கொள்வேனோ' ‍என்று சிவாஜியும் லட்சுமியும் இந்த யட்சி சிலையைத்தான் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடுவார்கள். சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்தப் படத்தைப் பார்த்தபோது, பச்சக் என்று மனசில் ஒட்டிக்கொண்டது இந்தச் சிலைதான்.

1995 ஏப்ரலில், விகடனில் வேலைக்குச் சேரும்பொருட்டு, இங்கே வந்து, ஆசிரியரின் நேர்முக அழைப்புக்காகக் காத்திருந்தேன். அதற்கு முன்பாக திரு.வீயெஸ்வி, திரு.ராவ் ஆகியோர் என்னைப் பற்றி விசாரித்து அறிந்தனர். இதற்கிடையில், அங்கே ஒரு பக்கம் அந்த வார இதழுக்கான லே-அவுட் நடந்துகொண்டு இருந்தது. அது ஒரு சினிமா கட்டுரை என்று ஞாபகம். ராவ், வீயெஸ்வி ஆகியோர் அதை மேற்பார்வை இட்டுக்கொண்டு இருக்க, நான் அங்கே இருந்த மேட்டரை சும்மா படித்துப் பார்த்தேன்.

அதில், 'சிவாஜியும் லட்சுமியும் ஒரு யட்சி சிலையைச் சுற்றிச் சுற்றி வந்து டூயட் பாடுவார்களே...' என்று குறிப்பிட்டு, வேறு ஏதோ ஒரு திரைப்படத்தின் பெயரைக் குறிப்பிட்டிருந்தார் சினிமா கட்டுரையாளர். நான் உடனே திரு.ராவ், திரு.வீயெஸ்வி இருவரிடமும், "அது அந்தப் படம் இல்லை. 'உனக்காக நான்' படத்தில்தான் அந்தப் பாடல் காட்சி வரும்" என்றேன். "நிச்சயமாகத் தெரியுமா?" என்றார்கள். "ஐயோ! சத்தியமாகத் தெரியும்!" என்றேன். நான் சொல்வது சரியா என்பதைச் சரிபார்த்துக்கொள்ள அப்போது இன்டர்நெட் வசதிகள் இல்லை. என்றாலும், நான் உறுதியாகச் சொன்னதை ஏற்றுத் திருத்தம் செய்யப்பட்டது.

சிறிது நேரத்தில், ஆசிரியர் திரு.பாலசுப்பிரமணியம் அவர்கள் என்னை இன்டர்வியூவுக்கு அழைத்தார். உடன் வந்த திரு.ராவ், திரு.வீயெஸ்வி இருவரும் அப்போது இடையில் மேற்படி சம்பவத்தைக் குறிப்பிட, "அப்படியா! வெரிகுட்!" என்று புன்னகைத்தார் ஆசிரியர். "அது என்ன பாட்டு?" என்றார். "நோ.. நோ..." என்று பாடத் தொடங்கினேன். ஆசிரியர் உடனே குறுக்கிட்டு, "ஏன், சொல்ல மாட்டீங்களா?" என்று புன்னகைத்தார். நான் தடுமாறி, "இல்ல சார், அதுதான் பாட்டு!" என்று மீண்டும் வரிகளைப் பாடினேன். "தெரியும். சும்மா தமாஷ் பண்ணினேன்" என்று சிரித்தார்.

வேலை கன்ஃபார்ம் ஆகியது!

* கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி, நீங்களும் அந்தப் பாடல் காட்சியைக் கண்டு களியுங்களேன்!

http://en.600024.com/video/I5LN_P-tzX8/

(நன்றி! - இன்று எனக்கு 54 வயது பூர்த்தியாகி, 55 தொடங்குகிறது. நேரிலும், வாழ்த்துக் கடிதம், ஈ‍மெயில் மற்றும் தொலைபேசி மூலமும், ஃபேஸ்புக், டிவிட்டர் மூலமும் எனக்கு இன்று பிறந்த நாள் வாழ்த்துச் சொன்னவர்களின் எண்ணிக்கை 200-ஐத் தாண்டிவிட்டது. இதுவரை என் எந்தவொரு பிறந்த நாளுக்கும் அதிகபட்சம் பத்துக்கும் அதிகமான வாழ்த்துக்கள் கிடைத்ததில்லை. இதனால், இந்த முறை வாழ்த்து வெள்ளத்தைக் கண்டு திக்குமுக்காடிப் போய்விட்டேன். வாழ்த்திய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் என் இதயங்கனிந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.)
.

Wednesday, June 01, 2011

கலாரசிகனும் உங்கள் ரசிகனும்!

னந்த விகடன் பத்திரிகையின் 85 ஆண்டு கால இதழ்களையும் புரட்டும்போது, இந்திய சரித்திரத்தையே புரட்டிப் பார்க்கிற உணர்வு! எனவேதான், 'காலப் பெட்டகம்' புத்தகம் வெறும் விகடனின் சரித்திரமாக மட்டுமல்லாமல், தேசத்தின் சரித்திரமாகவும் விளங்குகிறது. ஜனவரியில் வெளியான இந்தப் புத்தகம் இரண்டு பதிப்புகள் கண்டு, இதோ மூன்றாவது பதிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. இதை 'பெஸ்ட் செல்ல'ராகச் செய்த வாசகர்களுக்கு விகடன் நன்றி தெரிவிக்கிறது. அதேபோல், இதை வாங்கிப் படித்த வாசகர்களும், இத்தகைய ஒரு தகவல் பொக்கிஷத்தைத் தங்களுக்குக் கொடுத்த விகடன் நிறுவனத்துக்குக் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் நன்றி தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இருவருக்கும் நடுவில் ஒரு மீடியேட்டராகச் செயல்படும் வாய்ப்பை எனக்கு அளித்து, காலத்தால் அழியாத ஒரு கருவூலமாக 'காலப் பெட்டகம்' புத்தகம் தொகுக்கும் பணியை வழங்கிய விகடனுக்கு என்றென்றைக்கும் என் நன்றிகள் உண்டு! புத்தகத்தின் முன்னுரையிலேயே நான் சொல்லியிருப்பதுபோல், இது எனக்குக் கிடைத்த பாக்கியம்தான்! அந்த மகிழ்ச்சி, இந்த ஜென்மம் முழுவதும் எனக்குள் இருக்கும்.

புத்தகம் வெளியானபோது, அது பற்றி ஒரு நீண்ட விமர்சனம் 'தினமணி' நாளேட்டில் வெளியாகியுள்ளதாக 'சாவி' கால‌ நண்பர் ராணிமைந்தன் எனக்குப் போன் செய்து சொன்னார். தவிர, பாக்கியம் ராமசாமி, ஜே.எஸ்.ராகவன் போன்று என் மீது அன்பும் அக்கறையும் உள்ள வேறு சிலரும் அது பற்றி உடனே எனக்குத் தகவல் தெரிவித்தார்கள். அப்படி அவர்கள் எனக்கு இது பற்றி உடனடியாகத் தகவல் தெரிவித்ததற்கு முக்கியக் காரணம், அந்த விமர்சனத்தை 'கலாரசிகன்' என்னும் புனைபெயரில் எழுதிய தினமணி நாளேட்டின் ஆசிரியர் கே.வைத்தியநாதன், என்னைப் பற்றியும் அதில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதியிருந்ததுதான்.

உடனே அந்த விமர்சனத்தைப் படித்துப் பார்க்கவேண்டும் என்று ஆர்வப்பட்டேன். பேப்பர் ஃபைல் இங்கே போயிருக்கிறது, அங்கே போயிருக்கிறது, அவர் டேபிளுக்குப் போயிருக்கிறது என்று சொன்னார்களே ஒழிய, அதை என் கண்ணில் காட்டவில்லை அலுவலக உதவியாளர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் அதை ஒத்திப்போட்டு, பின்னர் வேலை மும்முரத்தில் அதை ஒரேயடியாக மறந்தே போய்விட்டேன்.

'காலப் பெட்டகம்' மூன்றாம் பதிப்பு வெளியாகவிருக்கிற செய்தியை, விகடன் பிரசுரத்தின் பொறுப்பாசிரியர் பொன்ஸீ நேற்று என்னிடம் சொன்னார்; கூடவே, ஜூனியர் விகடனில் பணியாற்றும் உதவியாசிரியர் ஒருவர், சமீபத்தில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனைச் சந்தித்தபோது, அவர் என்னைப் பற்றி விசாரித்ததாகச் சொன்னார். இரண்டும் இரண்டும் நாலு என்கிறாற்போல், எனக்கு உடனடியாக தினமணி விமர்சனம் ஞாபகத்துக்கு வந்தது. அது எந்தத் தேதியில் வெளியானது என்று தெரியவில்லை. 'கலாரசிகன்' வழக்கமாக எழுதுவது ஞாயிற்றுக்கிழமை பேப்பரில்தான் என்பதால், இணையத்தின் வழியே, 2011 ஜனவரி மாத ஞாயிற்றுக்கிழமை தினமணி பேப்பர்களைப் புரட்டினேன். சிக்கியது அந்த விமர்சனம். அதை இங்கே தருகிறேன்.'நான் வாராவாரம் ரசித்துப் படித்த, சிலாகித்து மகிழ்ந்த பொக்கிஷம் பகுதியை என் இனிய நண்பர் ரவிபிரகாஷ்தான் தொகுத்து அளித்துக்கொண்டு இருந்தார் என்று தெரிந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சி எத்தகையது என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை' என்று திரு.வைத்தியநாதன் என்னைப் பற்றி அந்த விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தபோது, இதை முன்பே படித்திருந்தால் அவருக்கு உடனே ஒரு போன் போட்டு என் நன்றிகளையும் மகிழ்ச்சியையும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. இனிமேல் சொல்வது காலம் கடந்ததாகும்.

நான் சாவி பத்திரிகையில் வேலைக்குச் சேரும்போது, அங்கே இருந்தவர்கள் மூவர். ரமணீயன், சி.ஆர்.கண்ணன் மற்றும் வைத்தியநாதன். மூவரில் முதல் இருவர், நான் பணியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள்ளாக விலகிவிட்டனர். வைத்தியநாதனும் பின்னர் விலகிவிட்டார் என்றாலும், அரண்மனை ரகசியம் (டெல்லி அரசியல் துணுக்குகள்), அரசல் புரசல் (தமிழக அரசியல் துணுக்குகள்) மற்றும் சினிமா செய்திகளை சாவிக்கு வழங்கிக்கொண்டு இருந்தார்.

என் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர். சாவி மிகவும் கோபக்காரர். ஒரு சிறு தவறு செய்தாலும், தூக்கியடித்துவிடுவார். அந்த மாதிரி சமயங்களில் நான், 'இனி இந்த மனுஷர் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன். வேலையும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம். நான் போறேன்' என்று கோபமும், வேதனையுமாகப் பொங்குகிறபோது, அதற்கு எண்ணெய் வார்க்காமல், "என்ன ரவி, சின்னப் புள்ளை மாதிரி! சாவி சார் யாரு? எவ்ளோ பெரிய ஜாம்பவான்! அவர் கிட்டே திட்டு வாங்குறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும். நான் விலகிட்டேன்னா அதுக்கு வேற பல காரணங்கள் இருக்குது. ஆனாலும், நான் வேற ஒரு வார இதழ்ல சேர்ந்து வேலை செய்ய மாட்டேன். அதை சாவி சாருக்குச் செய்யுற துரோகமா நினைக்கிறேன். கொஞ்சம் பொறுமையா இருங்க. அவர் திட்டுறது, நீங்க நல்லா வரணுமேங்கிற அக்கறையிலதான்! அதைப் புரிஞ்சுக்குங்க. சாவி சார் கிட்டே திட்டு வாங்கினவங்க அத்தனை பேரும் இன்னிக்கு நல்ல பொஸிஷன்ல இருக்காங்க. நீங்களும் பெரிய அளவுக்கு வருவீங்க. கூல் டௌன்!" என்று அன்புடன் உபதேசிப்பார்.

சாவி சாரிடமிருந்து நான் மூன்று முறை கோபித்துக்கொண்டு, விலகியிருக்கிறேன். காரணம், அப்போதெல்லாம் திரு.வைத்தியநாதன் போன்று அன்பாக உபதேசிக்க யாரும் இல்லாததுதான்!

'ரேவதி ராஜேந்தர்' என்கிற பொதுவான புனைபெயரில், சாவியின் 'மோனா' மாத இதழில், அவரும் நானும் மாற்றி மாற்றி நாவல்கள் எழுதிக்கொண்டு இருந்தோம். ஒருமுறை, திரு.வைத்தியநாதன் எழுதித் தந்த‌ நாவல் அச்சுக்குப் போனபோது, மூன்று பக்க மேட்டர் குறைந்தது. வைத்தியநாதனிடமே கேட்டு வாங்கலாமென்றால், அவர் அந்தச் சமயம் பார்த்து, ஒரு விபத்தில் சிக்கிக் காலொடிந்து ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார். எனவே, அவரைத் தொல்லை செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. எனவே, பொதுவான புனைபெயர்தானே என நான் துணிந்து, இடைச் செருகலாக மூன்று பக்கம் எழுதி, நுழைத்து, புத்தகத்தை முடித்துவிட்டேன்.

புத்தகம் வெளியானதும், அவரது வீட்டுக்குச் சென்று, பிரதியைக் கொடுத்தேன். பின்னர் ஒரு வாரம் கழித்து அவரைச் சந்தித்து, "புத்தகம் படித்தீர்களா? எல்லாம் சரியாக வந்திருக்கிறதா?" என்று கேட்டேன். "அருமையா வந்திருக்கு ரவி! எப்படி நான் கரெக்டா பக்க அளவுக்குச் சரியா வர மாதிரி எழுதித் தந்தேன்னு ஆச்சரியமா இருக்கு. இல்லே, ஏதாச்சும் எடிட் பண்ணீங்களா?" என்று கேட்டார். "எடிட் பண்ணலை. ஆனா, கூடுதலா மூணு பக்கம் எழுதிச் சேர்த்தேன்" என்றேன். "அப்படியா! அப்படியா! எனக்குத் தெரியலையே!" என்றார் ஆச்சரியத்தோடு. புத்தகத்தைப் பிரித்து, நான் எழுதிச் சேர்த்த பகுதியை அவருக்குச் சுட்டிக் காட்டினேன். மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு, "ம்ஹூம்! இதையும் நானே எழுதின மாதிரிதான் இருக்கு. எனக்கு வித்தியாசமே தெரியலை!" என்று புன்னகைத்தார்.

அந்தக் காலத்தில், இவர் தனது வீட்டில் ஒரு பெரிய அறை முழுக்கச் செய்தித்தாள்களாகச் சேகரித்து வைத்திருந்தார். அறை முழுக்க என்றால், நிஜமாகவே உள்ளே நுழைய இடம் இல்லாமல், தரைக்கும் கூரைக்குமாகச் செய்தித் தாள்களை அடுக்கி வைத்திருந்தார். அத்தனையும் அவர் வாங்கிப் படித்தவை. அவற்றை ஒரு நாள் மொத்தமாக பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டுவிட்டு, வந்த பணத்தில் ஒரு புத்தம்புதிய மோட்டார் சைக்கிளையே விலைக்கு வாங்கிவிட்டார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றளவும் நான் நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருக்கும் விஷயம் அது!

ஆரம்பத்தில், மேனகா காந்தி நடத்திய 'சூர்யா' பத்திரிகையில் பணியாற்றியவர் வைத்தியநாதன். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா காந்தி இவர்களோடு மிகுந்த நட்பு கொண்டவர். அவர்கள் குடும்பத்தில் ஒருவராக, ஒன்றாக அமர்ந்து உணவருந்தியவர். கமல்ஹாசன் அரை நிஜார், சட்டை அணிந்து சிறு பையனாக நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவரின் நண்பர். நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது, ஒரு சமயம் வெளியூரில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. எப்படி தனியாக‌ அவரை அனுப்பி வைப்பது என்று குழப்பமாக இருந்த நேரத்தில், இந்த வைத்தியநாதன்தான் குழந்தை ஸ்ரீதேவியைத் தன் மோட்டார் சைக்கிளின் முன்னால் உட்கார்த்தி வைத்துக்கொண்டு, சுமார் 200 மைல்கள் பயணம் செய்து, படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு அழைத்து வந்தார்.

சில சினிமாக்களிலும் இவர் தலைகாட்டியிருக்கிறார். 'மாங்குடி மைனர்' படத்தில் ரஜினியோடு (ரஜினி அதில் வில்லன்; விஜயகுமார்தான் ஹீரோ) மோதும் நாலைந்து அடியாட்களில் இவரும் ஒருவர். நல்ல உயரம், அதற்கேற்ற ஆஜானுபாகுவான சரீரம்; கெடுபிடியான போலீஸ் உயரதிகாரி போன்ற தோற்றம். முதலில், இவரைப் பார்த்து நான் பயந்தது உண்மை. ஆனால், பழக ஆரம்பித்த பின்னர், இவரின் மென்மையான, அன்பான சுபாவம் கண்டு நெகிழ்ந்தேன்.

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு.வைத்தியநாதன் அவர்கள் என்னை ஞாபகம் வைத்திருந்து, தனது விமர்சனம் கட்டுரையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டதில், உள்ளபடியே நெகிழ்கிறேன்.

(கலாரசிகனின் விமர்சனக் கட்டுரையில் ஒரே ஒரு சிறு தவறு. குமுதம் பால்யூவின் பரிந்துரையுடன் நான் சாவி அலுவலகத்துக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இல்லை. குமுதம் பால்யூவை நான் சந்தித்து, குமுதத்தில் வேலை வாங்கித் தரும்படி கேட்டது உண்மை. அவரும் என்னைச் சற்றுக் காத்திருக்கச் சொன்னார். அதற்குள், எழுத்தாளர் திரு.புஷ்பாதங்கதுரையின் பரிந்துரையின்பேரில்தான் நான் 'சாவி' வார இதழில் வேலைக்குச் சேர்ந்தேன். இதை நான் போய் பால்யூவிடம் சொன்னபோது, "என்ன ரவி, ஒரு பத்து நாள் காத்திருக்க முடியாதா? குமுதத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருப்பேனே? அது என்ன சர்க்குலேஷன், சாவி என்ன சர்க்குலேஷன்? குமுதத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இது இருக்காதே! அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துக்கிட்டியே?" என்று அவர் என்னைக் கோபித்துக்கொண்டார்.)
.