உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, September 03, 2011

எனது முதல் விமானப் பயணம்!

ட்டை வண்டி, பொட்டு வண்டி, குதிரை வண்டி, டயர் வண்டி, கை ரிக்‌ஷா, சைக்கிள், சைக்கிள் ரிக்‌ஷா, ஆட்டோ ரிக்‌ஷா, டூ-வீலர், ஸ்கூட்டர், பைக், கார், ஜீப், போலீஸ் (பேட்ரல்) கார், வேன், போலீஸ் வேன், லாரி, மிலிட்டரி லாரி, டிராக்டர், புல்டோசர், ரோடு ரோலர், கிரேன், ஆம்புலன்ஸ், ஃபயர் இன்ஜின், பஸ், ரயில், சபர்பன் ரயில், கரி இன்ஜின், கூட்ஸ் வண்டி, பாசஞ்சர் வண்டி, சதாப்தி எக்ஸ்பிரஸ், படகு, கேரள பாம்புப் படகு, மோட்டார் படகு, ஸ்பீட் போட், சொகுசுப் படகு வீடு எனப் பலவகையான வாகனப் போக்குவரத்துகளையும் பயன்படுத்திப் பயணங்கள் செய்திருக்கிறேன்.

கப்பல், ஹெலிகாப்டர், விமானம் மூன்றில் மட்டும் பயணிக்கும் வாய்ப்பு கிடைத்தது இல்லை. எனினும், முன் இரண்டில் சும்மா ஏறி இறங்கிப் பார்த்திருக்கிறேன்.

சென்னைக் கடற்கரையில் கப்பல் ஒன்று தரை தட்டி நின்றபோது, பள்ளிச் சுற்றுலாவில் வந்த நான் அதில் ஏறிப் பார்த்தது ஞாபகத்தில் உள்ளது. அதேபோல், விழுப்புரம் முனிசிபல் ஹைஸ்கூல் கிரவுண்டில் ஏதோ காரணத்துக்காக ஒரு ஹெலிகாப்டர் வந்து இறங்கி, ஒரு நாள் முழுக்க நின்றிருந்தது. அப்போது அதில் ஏறிக் குதூகலித்த பள்ளிச் சிறுவர்களில் நானும் ஒருவன்.

பல ஆண்டுகளுக்கு முன், மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நின்றிருக்கும் இரண்டொரு விமானங்களை ஏக்கத்தோடு வேடிக்கை பார்த்தபடி நின்றிருக்கிறேன். “அதோ பாருங்க, அதுதான் கே.ஆர்.விஜயாவோட விமானம்!” என்று பரபரப்பாகச் சுட்டிக்காட்டிப் பேசிக் கொள்வார்கள். அப்போதெல்லாம் குறைந்த கட்டணம் வாங்கிக்கொண்டு, சென்னையை விமானத்தில் ஒரு ரவுண்டு வரலாம் என்று கேள்வி.

என் சின்ன வயது ஏக்கங்கள் பலவும் 30 வயதுக்கு மேல் சுத்தமாகத் தொலைந்து போனது வரமா, சாபமா என்று இன்னமும் எனக்குப் புரியவில்லை.

சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, சிங்கப்பூருக்கு ஒருமுறையும், ஹாங்காங்குக்கு ஒருமுறையும் சாவி சார் என்னை விமானத்தில் அழைத்துச் செல்வதற்காகச் சகல ஏற்பாடுகளையும் செய்திருந்தபோது, அவரிடம் வேறு ஏதோ சில்லறை விஷயத்துக்காகக் கோபித்துக்கொண்டு விலகியதில், அந்த இரண்டு முறையும் விமானப் பயண அனுபவம் எனக்குக் கிட்டாமல் போனது. ஆனால், அது குறித்து எனக்குள் எந்த வருத்தமோ, ஏக்கமோ எழவில்லை என்பது எனக்கே ஆச்சரியமான ஒன்று. பின்னர் சாவி சார், “ரவி, நல்ல வாய்ப்பை நீ மிஸ் பண்ணிட்டே!” என்று சொன்னபோது, அவர்தான் அதற்காக வருத்தப்பட்டாரே தவிர, எனக்கொன்றும் அது ஒரு பெரிய இழப்பாகவே தோன்றவில்லை.

சில நாட்களுக்கு முன்னால், “ரவி, வருகிற வியாழக்கிழமை நாம ஒரு இருபது பேர் அந்தமான் போறோம். இரண்டு நாள் அங்கே இருந்துவிட்டு, ஞாயிற்றுக்கிழமை சென்னை திரும்பறோம். அதனால இஷ்யூ வொர்க்கை எல்லாம் அதுக்கேற்ப முடிச்சுக்குங்க” என்று பதிப்பாசிரியர் திரு.அசோகனும், ஆசிரியர் திரு.கண்ணனும் சொன்னபோது, ‘சரி’ என்றேனே தவிர, முதன்முறை விமானப் பயணம் மேற்கொள்ளப்போகும் பரபரப்போ, பரவச உணர்வோ எனக்குள் எழவேயில்லை.

வீட்டில் தகவல் சொன்னபோது, அவர்களுக்கு மகிழ்ச்சியான மகிழ்ச்சி! ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் தன் நண்பர் ஒருவர் முதன்முறை விமானப் பயணம் மேற்கொண்டபோது, அவர் நிலைகொள்ளாமல் தவித்ததையும், படபடத்ததையும் அப்பா நினைவுகூர்ந்தார்.

வியாழன். விகடன் குழுமத்தின் பெர்ஸோனல் மேனேஜர், அக்கவுண்ட்ஸ் மேனேஜர் இருவரும் மேற்கு மாம்பலத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், நாங்கள் மூவரும் ஒரே ஆட்டோவில் விமான நிலையத்தை அடைந்தோம்.

சர்க்கஸ் கூடாரத்துக்குள் நுழையும் உணர்வு. சுற்றிலும் வலை கட்டி, கட்டட வேலைகள் நடந்துகொண்டு இருந்தன.

செக்கிங்குகளுக்குப் பின்னர், ஆன்லைன் பதிவைக் காண்பித்து, டிக்கெட் பெற்றுக்கொண்டு வரிசையில் காத்திருந்து, கண்ணுக்கெட்டிய தூரத்தில் நிற்கும் விமானத்தில் ஏற, இருக்கைகளே இல்லாத ஒரு லொக்கடா பஸ்ஸில் சிறிது தூரம் பயணிக்க வேண்டியிருந்தது.

ஜெட் ஏர்வேய்ஸ் காத்திருந்தது. பந்தல் அமைக்கப்பட்ட படிகளில் ஏறினோம்.

உள்ளே... சற்றே நீளமான ஒரு சொகுசு பஸ்ஸுக்குள் ஏறியது போன்றுதான் உணர்ந்தேனே தவிர, பயமாகவோ, பரபரப்பாகவோ, பரவசமாகவோ உணரவில்லை.

இருக்கை எண் தேடி அமர்ந்தோம். சற்று நேரத்தில், சன்னமான குரலில் அறிவிப்புகள் ஒலிக்கத் தொடங்கின. பக்கத்து இருக்கைக்காரர் அவற்றை லட்சியமே செய்யாமல், முந்தின இருக்கையின் முதுகைப் பிளந்து மேஜை அமைத்துக்கொண்டு, லேப்டாப்பைப் பரப்பி மெயில் பார்க்கத் தொடங்கினார்.

செல்போன், லேப்டாப் ஆகியவற்றை ஸ்விட்ச் ஆஃப் செய்யச் சொன்னது அறிவிப்புக் குரல். சீட் பெல்ட் மாட்டிக்கொள்ளச் சொன்னது. மாட்டிக்கொண்டேன்.
(பயணிகளின் கனிவான கவனத்துக்கு. அனைவரும் தங்கள் சீட் பெல்ட்டுகளை அணிந்துகொள்ள வேண்டுகிறோம். சில விநாடிகளில் விமானம் புறப்படும்.)
.

12 comments:

மகிழ்ச்சி .தொடருங்கள் ,,,,
நட்புடன் ,
கோவை சக்தி
 
அழகான வர்ணனை.விமானப்பயண ஆச்சரியங்கள் 90களுக்கு முன்பே பெரும்பாலோருக்கு இருந்திருக்கும்.இப்பொழுதுதான் சிக்கனம் என்ற பெயரில் டீ,காபி கூட காசு கொடுத்து வாங்கும் ரயில் பயணம் போல் ஆகிவிட்டதே:)
 
விமானப் பயணம் விறுவிறுப்பாய் ஆரம்பித்து இருக்கிறது... முதல் முறை பயணம் எப்படி இருந்தது என்று சொல்லுங்கள்... காத்திருக்கிறேன்...
 
It reminds me about my first flight trip too. Pl. continue. Eager to know about Andaman also.
 
இந்தப் பதிவின் தொடர்ச்சியை எதிர்பார்க்கலாமா ?
 
என்ன சார்... விமானம் கிளம்புகிற நேரத்தில் ஏதாவது பிரச்னையா? கிளம்ப இத்தனைத் தாமதமாகிறதே? :) சீக்கிரம் டேக்‍ஆஃப் செய்யுங்கள் சார்
 
என்ன விமானம் டேக் ஆஃப் ஆகாமல் இருக்கிறது?
அது சரி! சென்னையில் தரை தட்டிய அந்தக் கப்பலின் பெயர் ஸ்டமாடிஸ். (ஏன் எனக்கு இதெல்லாம் நியாபகத்தில் இருக்கிறது?)
அப்போது நான் சென்னை ஹிண்டு உயர்நிலைப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்தேன்.
 
koncham viriva eluthuka saami...
naanka tour pokatha kurayai neenkathan eluthi pokkanum.

athusari, kiramathula irukkira naane ithanai 'vandiyil' pokaley.
road rolleril ellam poyirukkinga

kerala vandi..ethachum eariirukkinkala..sami...
 
muthal vimana payanam...naankalum
aakaayaththil parantha unarvu.
koduththathu.
 
என்ன சார், விமானம் ஸ்டார்ட் ஆகவே மாட்டேங்குது? நீங்க அடுத்த பதிவை சீக்கிரம் போடுவீங்க போடுவீங்க... மொத்தமா படிச்சுட்டு என் கமெண்ட்டைப் போடலாம்னு காத்திருந்தா, பதிவிடவே மாட்டேங்கறீங்களே?
 
சக்தி, ராஜ நடராஜன், வெங்கட் நாகராஜ், மோகன் குமார், பால ஹனுமான், கணேஷ் ராஜா, லதானந்த், ஜல்லி, கிருபாநந்தினி ஆகிய அனைவருக்கும் நன்றி!

அலுவலக வேலைச் சுமை காரணமாக பதிவுலகம் பக்கம் வரவே முடியவில்லை. சற்று முன்புதான் இந்தப் பதிவின் தொடர்ச்சியைப் பதிவிட்டேன்.

என் ஃபேஸ்புக்-கில் அந்தமான் ஆல்பம் போட்டுள்ளேன். முடிந்தால் பார்க்கவும். நன்றி!
 
இது போல் தொரட்டும் உங்கள் விமான பயணம் வாழ்த்துக்கள்