உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Wednesday, June 01, 2011

கலாரசிகனும் உங்கள் ரசிகனும்!

னந்த விகடன் பத்திரிகையின் 85 ஆண்டு கால இதழ்களையும் புரட்டும்போது, இந்திய சரித்திரத்தையே புரட்டிப் பார்க்கிற உணர்வு! எனவேதான், 'காலப் பெட்டகம்' புத்தகம் வெறும் விகடனின் சரித்திரமாக மட்டுமல்லாமல், தேசத்தின் சரித்திரமாகவும் விளங்குகிறது. ஜனவரியில் வெளியான இந்தப் புத்தகம் இரண்டு பதிப்புகள் கண்டு, இதோ மூன்றாவது பதிப்பு நடந்துகொண்டு இருக்கிறது. இதை 'பெஸ்ட் செல்ல'ராகச் செய்த வாசகர்களுக்கு விகடன் நன்றி தெரிவிக்கிறது. அதேபோல், இதை வாங்கிப் படித்த வாசகர்களும், இத்தகைய ஒரு தகவல் பொக்கிஷத்தைத் தங்களுக்குக் கொடுத்த விகடன் நிறுவனத்துக்குக் கடிதம் மூலமும், தொலைபேசி மூலமும் நன்றி தெரிவித்துக்கொண்டு இருக்கிறார்கள். இந்த இருவருக்கும் நடுவில் ஒரு மீடியேட்டராகச் செயல்படும் வாய்ப்பை எனக்கு அளித்து, காலத்தால் அழியாத ஒரு கருவூலமாக 'காலப் பெட்டகம்' புத்தகம் தொகுக்கும் பணியை வழங்கிய விகடனுக்கு என்றென்றைக்கும் என் நன்றிகள் உண்டு! புத்தகத்தின் முன்னுரையிலேயே நான் சொல்லியிருப்பதுபோல், இது எனக்குக் கிடைத்த பாக்கியம்தான்! அந்த மகிழ்ச்சி, இந்த ஜென்மம் முழுவதும் எனக்குள் இருக்கும்.

புத்தகம் வெளியானபோது, அது பற்றி ஒரு நீண்ட விமர்சனம் 'தினமணி' நாளேட்டில் வெளியாகியுள்ளதாக 'சாவி' கால‌ நண்பர் ராணிமைந்தன் எனக்குப் போன் செய்து சொன்னார். தவிர, பாக்கியம் ராமசாமி, ஜே.எஸ்.ராகவன் போன்று என் மீது அன்பும் அக்கறையும் உள்ள வேறு சிலரும் அது பற்றி உடனே எனக்குத் தகவல் தெரிவித்தார்கள். அப்படி அவர்கள் எனக்கு இது பற்றி உடனடியாகத் தகவல் தெரிவித்ததற்கு முக்கியக் காரணம், அந்த விமர்சனத்தை 'கலாரசிகன்' என்னும் புனைபெயரில் எழுதிய தினமணி நாளேட்டின் ஆசிரியர் கே.வைத்தியநாதன், என்னைப் பற்றியும் அதில் தனிப்பட்ட முறையில் குறிப்பிட்டு எழுதியிருந்ததுதான்.

உடனே அந்த விமர்சனத்தைப் படித்துப் பார்க்கவேண்டும் என்று ஆர்வப்பட்டேன். பேப்பர் ஃபைல் இங்கே போயிருக்கிறது, அங்கே போயிருக்கிறது, அவர் டேபிளுக்குப் போயிருக்கிறது என்று சொன்னார்களே ஒழிய, அதை என் கண்ணில் காட்டவில்லை அலுவலக உதவியாளர்கள். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று நானும் அதை ஒத்திப்போட்டு, பின்னர் வேலை மும்முரத்தில் அதை ஒரேயடியாக மறந்தே போய்விட்டேன்.

'காலப் பெட்டகம்' மூன்றாம் பதிப்பு வெளியாகவிருக்கிற செய்தியை, விகடன் பிரசுரத்தின் பொறுப்பாசிரியர் பொன்ஸீ நேற்று என்னிடம் சொன்னார்; கூடவே, ஜூனியர் விகடனில் பணியாற்றும் உதவியாசிரியர் ஒருவர், சமீபத்தில் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதனைச் சந்தித்தபோது, அவர் என்னைப் பற்றி விசாரித்ததாகச் சொன்னார். இரண்டும் இரண்டும் நாலு என்கிறாற்போல், எனக்கு உடனடியாக தினமணி விமர்சனம் ஞாபகத்துக்கு வந்தது. அது எந்தத் தேதியில் வெளியானது என்று தெரியவில்லை. 'கலாரசிகன்' வழக்கமாக எழுதுவது ஞாயிற்றுக்கிழமை பேப்பரில்தான் என்பதால், இணையத்தின் வழியே, 2011 ஜனவரி மாத ஞாயிற்றுக்கிழமை தினமணி பேப்பர்களைப் புரட்டினேன். சிக்கியது அந்த விமர்சனம். அதை இங்கே தருகிறேன்.'நான் வாராவாரம் ரசித்துப் படித்த, சிலாகித்து மகிழ்ந்த பொக்கிஷம் பகுதியை என் இனிய நண்பர் ரவிபிரகாஷ்தான் தொகுத்து அளித்துக்கொண்டு இருந்தார் என்று தெரிந்தபோது நான் அடைந்த மகிழ்ச்சி எத்தகையது என்பது சொல்லித் தெரியவேண்டியது இல்லை' என்று திரு.வைத்தியநாதன் என்னைப் பற்றி அந்த விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்தபோது, இதை முன்பே படித்திருந்தால் அவருக்கு உடனே ஒரு போன் போட்டு என் நன்றிகளையும் மகிழ்ச்சியையும் சொல்லியிருக்கலாமே என்று தோன்றியது. இனிமேல் சொல்வது காலம் கடந்ததாகும்.

நான் சாவி பத்திரிகையில் வேலைக்குச் சேரும்போது, அங்கே இருந்தவர்கள் மூவர். ரமணீயன், சி.ஆர்.கண்ணன் மற்றும் வைத்தியநாதன். மூவரில் முதல் இருவர், நான் பணியில் சேர்ந்த இரண்டு வருடங்களுக்குள்ளாக விலகிவிட்டனர். வைத்தியநாதனும் பின்னர் விலகிவிட்டார் என்றாலும், அரண்மனை ரகசியம் (டெல்லி அரசியல் துணுக்குகள்), அரசல் புரசல் (தமிழக அரசியல் துணுக்குகள்) மற்றும் சினிமா செய்திகளை சாவிக்கு வழங்கிக்கொண்டு இருந்தார்.

என் மீது அன்பும் அக்கறையும் கொண்டவர். சாவி மிகவும் கோபக்காரர். ஒரு சிறு தவறு செய்தாலும், தூக்கியடித்துவிடுவார். அந்த மாதிரி சமயங்களில் நான், 'இனி இந்த மனுஷர் மூஞ்சியிலேயே முழிக்க மாட்டேன். வேலையும் வேணாம், ஒரு மண்ணும் வேணாம். நான் போறேன்' என்று கோபமும், வேதனையுமாகப் பொங்குகிறபோது, அதற்கு எண்ணெய் வார்க்காமல், "என்ன ரவி, சின்னப் புள்ளை மாதிரி! சாவி சார் யாரு? எவ்ளோ பெரிய ஜாம்பவான்! அவர் கிட்டே திட்டு வாங்குறதுக்குக் கொடுத்து வெச்சிருக்கணும். நான் விலகிட்டேன்னா அதுக்கு வேற பல காரணங்கள் இருக்குது. ஆனாலும், நான் வேற ஒரு வார இதழ்ல சேர்ந்து வேலை செய்ய மாட்டேன். அதை சாவி சாருக்குச் செய்யுற துரோகமா நினைக்கிறேன். கொஞ்சம் பொறுமையா இருங்க. அவர் திட்டுறது, நீங்க நல்லா வரணுமேங்கிற அக்கறையிலதான்! அதைப் புரிஞ்சுக்குங்க. சாவி சார் கிட்டே திட்டு வாங்கினவங்க அத்தனை பேரும் இன்னிக்கு நல்ல பொஸிஷன்ல இருக்காங்க. நீங்களும் பெரிய அளவுக்கு வருவீங்க. கூல் டௌன்!" என்று அன்புடன் உபதேசிப்பார்.

சாவி சாரிடமிருந்து நான் மூன்று முறை கோபித்துக்கொண்டு, விலகியிருக்கிறேன். காரணம், அப்போதெல்லாம் திரு.வைத்தியநாதன் போன்று அன்பாக உபதேசிக்க யாரும் இல்லாததுதான்!

'ரேவதி ராஜேந்தர்' என்கிற பொதுவான புனைபெயரில், சாவியின் 'மோனா' மாத இதழில், அவரும் நானும் மாற்றி மாற்றி நாவல்கள் எழுதிக்கொண்டு இருந்தோம். ஒருமுறை, திரு.வைத்தியநாதன் எழுதித் தந்த‌ நாவல் அச்சுக்குப் போனபோது, மூன்று பக்க மேட்டர் குறைந்தது. வைத்தியநாதனிடமே கேட்டு வாங்கலாமென்றால், அவர் அந்தச் சமயம் பார்த்து, ஒரு விபத்தில் சிக்கிக் காலொடிந்து ஆஸ்பத்திரியில் படுத்திருந்தார். எனவே, அவரைத் தொல்லை செய்யவும் எனக்கு விருப்பம் இல்லை. எனவே, பொதுவான புனைபெயர்தானே என நான் துணிந்து, இடைச் செருகலாக மூன்று பக்கம் எழுதி, நுழைத்து, புத்தகத்தை முடித்துவிட்டேன்.

புத்தகம் வெளியானதும், அவரது வீட்டுக்குச் சென்று, பிரதியைக் கொடுத்தேன். பின்னர் ஒரு வாரம் கழித்து அவரைச் சந்தித்து, "புத்தகம் படித்தீர்களா? எல்லாம் சரியாக வந்திருக்கிறதா?" என்று கேட்டேன். "அருமையா வந்திருக்கு ரவி! எப்படி நான் கரெக்டா பக்க அளவுக்குச் சரியா வர மாதிரி எழுதித் தந்தேன்னு ஆச்சரியமா இருக்கு. இல்லே, ஏதாச்சும் எடிட் பண்ணீங்களா?" என்று கேட்டார். "எடிட் பண்ணலை. ஆனா, கூடுதலா மூணு பக்கம் எழுதிச் சேர்த்தேன்" என்றேன். "அப்படியா! அப்படியா! எனக்குத் தெரியலையே!" என்றார் ஆச்சரியத்தோடு. புத்தகத்தைப் பிரித்து, நான் எழுதிச் சேர்த்த பகுதியை அவருக்குச் சுட்டிக் காட்டினேன். மீண்டும் ஒரு முறை படித்துவிட்டு, "ம்ஹூம்! இதையும் நானே எழுதின மாதிரிதான் இருக்கு. எனக்கு வித்தியாசமே தெரியலை!" என்று புன்னகைத்தார்.

அந்தக் காலத்தில், இவர் தனது வீட்டில் ஒரு பெரிய அறை முழுக்கச் செய்தித்தாள்களாகச் சேகரித்து வைத்திருந்தார். அறை முழுக்க என்றால், நிஜமாகவே உள்ளே நுழைய இடம் இல்லாமல், தரைக்கும் கூரைக்குமாகச் செய்தித் தாள்களை அடுக்கி வைத்திருந்தார். அத்தனையும் அவர் வாங்கிப் படித்தவை. அவற்றை ஒரு நாள் மொத்தமாக பழைய பேப்பர் கடையில் எடைக்குப் போட்டுவிட்டு, வந்த பணத்தில் ஒரு புத்தம்புதிய மோட்டார் சைக்கிளையே விலைக்கு வாங்கிவிட்டார் என்றார் பார்த்துக் கொள்ளுங்கள். இன்றளவும் நான் நினைத்து நினைத்து ஆச்சரியப்பட்டுக்கொண்டு இருக்கும் விஷயம் அது!

ஆரம்பத்தில், மேனகா காந்தி நடத்திய 'சூர்யா' பத்திரிகையில் பணியாற்றியவர் வைத்தியநாதன். ராஜீவ் காந்தி, சோனியா காந்தி, சஞ்சய் காந்தி, மேனகா காந்தி இவர்களோடு மிகுந்த நட்பு கொண்டவர். அவர்கள் குடும்பத்தில் ஒருவராக, ஒன்றாக அமர்ந்து உணவருந்தியவர். கமல்ஹாசன் அரை நிஜார், சட்டை அணிந்து சிறு பையனாக நடிக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே அவரின் நண்பர். நடிகை ஸ்ரீதேவி குழந்தை நட்சத்திரமாக இருந்தபோது, ஒரு சமயம் வெளியூரில் நடந்த ஒரு படப்பிடிப்பில் கலந்துகொள்ள வேண்டியிருந்தது. எப்படி தனியாக‌ அவரை அனுப்பி வைப்பது என்று குழப்பமாக இருந்த நேரத்தில், இந்த வைத்தியநாதன்தான் குழந்தை ஸ்ரீதேவியைத் தன் மோட்டார் சைக்கிளின் முன்னால் உட்கார்த்தி வைத்துக்கொண்டு, சுமார் 200 மைல்கள் பயணம் செய்து, படப்பிடிப்பு நடந்த இடத்துக்கு அழைத்து வந்தார்.

சில சினிமாக்களிலும் இவர் தலைகாட்டியிருக்கிறார். 'மாங்குடி மைனர்' படத்தில் ரஜினியோடு (ரஜினி அதில் வில்லன்; விஜயகுமார்தான் ஹீரோ) மோதும் நாலைந்து அடியாட்களில் இவரும் ஒருவர். நல்ல உயரம், அதற்கேற்ற ஆஜானுபாகுவான சரீரம்; கெடுபிடியான போலீஸ் உயரதிகாரி போன்ற தோற்றம். முதலில், இவரைப் பார்த்து நான் பயந்தது உண்மை. ஆனால், பழக ஆரம்பித்த பின்னர், இவரின் மென்மையான, அன்பான சுபாவம் கண்டு நெகிழ்ந்தேன்.

என் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய திரு.வைத்தியநாதன் அவர்கள் என்னை ஞாபகம் வைத்திருந்து, தனது விமர்சனம் கட்டுரையில் என்னைப் பற்றிக் குறிப்பிட்டதில், உள்ளபடியே நெகிழ்கிறேன்.

(கலாரசிகனின் விமர்சனக் கட்டுரையில் ஒரே ஒரு சிறு தவறு. குமுதம் பால்யூவின் பரிந்துரையுடன் நான் சாவி அலுவலகத்துக்கு உதவி ஆசிரியராக வந்து சேர்ந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். இல்லை. குமுதம் பால்யூவை நான் சந்தித்து, குமுதத்தில் வேலை வாங்கித் தரும்படி கேட்டது உண்மை. அவரும் என்னைச் சற்றுக் காத்திருக்கச் சொன்னார். அதற்குள், எழுத்தாளர் திரு.புஷ்பாதங்கதுரையின் பரிந்துரையின்பேரில்தான் நான் 'சாவி' வார இதழில் வேலைக்குச் சேர்ந்தேன். இதை நான் போய் பால்யூவிடம் சொன்னபோது, "என்ன ரவி, ஒரு பத்து நாள் காத்திருக்க முடியாதா? குமுதத்தில் வேலை வாங்கிக் கொடுத்திருப்பேனே? அது என்ன சர்க்குலேஷன், சாவி என்ன சர்க்குலேஷன்? குமுதத்தில் பத்தில் ஒரு பங்கு கூட இது இருக்காதே! அவசரப்பட்டுக் காரியத்தைக் கெடுத்துக்கிட்டியே?" என்று அவர் என்னைக் கோபித்துக்கொண்டார்.)
.

7 comments:

ஒரு பத்திரிக்கை ஆசிரியர் வலைப்பூ எழுதுபவராக இருப்பதில் அதைப் படிப்பவர்களுக்கு எவ்வளவு சுவாரஷ்யம் கிடைக்கிறது.. அதிலும் உங்கள் ’’சாவி’’ காலம் மிக சுவாரஷ்யம்...
விகடன் காலப்பெட்டகம் ..ஊருக்கு வரும்பொழுது கண்டிப்பாக வாங்கவேண்டும்.
 
''காலப் பெட்டகம்' புத்தகத்தை நானும் வாங்கி, முதலில் ஒரே புரட்டலாகப் புரட்டிவிட்டு, பின்பு, சிறிது சிறிதாக, ஒரு நாளைக்கு ஒரு ஆண்டு வீதம் ஆழ்ந்து அனுபவித்துப் படித்து வருகிறேன். கால யந்திரத்தில் பயணிப்பது போன்ற உணர்வு என உங்கள் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது சரியே! ஒரே ஒரு வேண்டுகோள்! ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம் போல் கொடுத்திருக்கிறீர்கள். விட்டுப்போன சுவையான விஷயங்கள் இன்னும் ஏராள‌ம் இருக்குமே? அவற்றையும் தொகுத்து, காலப்பெட்டகம் பாகம் 2, பாகம் 3 எனக் கொண்டு வரலாமே?
 
இந்த வைத்தியனாதன் பத்தி நீங்க ஏற்கெனவே ஒரு பதிவு எழுதினதா ஞாபகம். நான் துக்ளக்கைத் தொடர்ந்து படிக்கிறவள். அதுலகூட இவர் நிறைய கட்டுரைகள் எழுதியிருக்கார். 'நியூஸ்கிரைப்'னு ஒரு பத்திரிகையும் நடத்திக்கிட்டிருந்தார்.
 
# நன்றி பத்மநாபன்!

# நன்றி கணேஷ்ராஜா! நீங்கள் குறிப்பிட்டுள்ளது போன்று, விகடனின் பழைய இதழ்களிலிருந்து சுவையான விஷயங்களைத் தொகுக்கும் பணியில்தான் தற்போது ஈடுபட்டுள்ளேன்.

# நன்றி கிருபாநந்தினி! நியூஸ்கிரைப் என்பது பத்திரிகை அல்ல; எல்லா பத்திரிகைகளுக்கும் தகவல் சேகரித்துத் தரும் ஓர் அமைப்பாகவே அதை வைத்திருந்தார் திரு.வைத்தியநாதன்.
 
மிக்க தினமணி ஞாயிறு இதழை கலாரசிகனுக்காகவே வாங்குகிறேன்..
அவரைப் பற்றிய அறிமுகம் படு ஜோர்..
 
தினமணி ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள், என் தம்பி போட்டோகிராபர் பி.ராதாகிருஷ்ணன் மூலம் எனக்கு பழக்கமானார்,அவரது சுறுசுறுப்பும் உழைப்பும் என்னை மலைக்க வைக்கும் ஒன்று, இன்று திரு ரவிபிரகாஷ் மூலம் வைத்தியநாதன் அவர்களைப் பற்றிய பல சுவையான சம்பவங்களையும், செய்திகளையும் அறிந்து கொள்ள முடிந்தது மகிழ்ச்சி, நன்றி....
 
தினமணி ஆசிரியர் திரு கே.வைத்தியநாதன் அவர்கள், என் தம்பி போட்டோகிராபர் பி.ராதாகிருஷ்ணன் மூலம் எனக்கு பழக்கமானார்,அவரது சுறுசுறுப்பும் உழைப்பும் என்னை மலைக்க வைக்கும் ஒன்று, இன்று திரு ரவிபிரகாஷ் மூலம் வைத்தியநாதன் அவர்களைப் பற்றிய பல சுவையான சம்பவங்களையும், செய்திகளையும் அறிந்து கொள்ள முடிந்தது மகிழ்ச்சி, நன்றி.... - ப ரவிவர்மன் , முன்பு சினிமா இயக்குனர் ஆனால் என்றும் பத்திரிகையாளர்...