உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Saturday, January 15, 2011

ரமணீயன் எழுதிய கதை

ழுத்தாளர் ரமணீயனின் நினைவாக, ஆனந்த விகடனில் அந்தக் காலத்தில் வெளியான சிறுகதைகளில் ஒன்றை எனது வலைப் பதிவில் பிரசுரிப்பதாகச் சொல்லியிருந்தேன்.

அதன்படி, விகடனில் வெளியான அவரது சிறுகதைகளைப் படித்துப் பார்த்தேன். அவற்றுள், ‘அபிராமி வந்தாள்’ என்கிற சிறுகதை மிகவும் சிறியதாகவும், சுவையானதாகவும், கருத்துள்ளதாகவும் இருந்ததாக எனக்குத் தோன்றியது.

அந்தக் கதையை இங்கே பதிவிட்டுள்ளேன். கதையின் சுவையைக் கூட்டும் விதமாக ஒன்றிரண்டு மிகச் சிறிய திருத்தங்கள் மட்டும் செய்துள்ளேன். (பத்திரிகைக்காரன் புத்தி!)

ராமநாதனுக்குப் புரியவில்லை!

இத்தனை வருடங்களாக வராத அபிராமி இன்று திடுதிப்பென்று அவ்ர்கள் வீட்டுக்கு எதற்காக வந்துவிட்டுப் போக வேண்டும்? அவள் மட்டும் தனியாகவா வந்தாள்? இல்லை. தன்னுடைய மூத்த பிள்ளையையும், இரண்டு நாட்டுப் பெண்களையும், முதல் பேரனையும் அழைத்துக் கொண்டு வந்திருந்தாள். காரில் வந்து இறங்கி, அவர்கள் வீட்டுக்கு வந்து கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கு மேல் இருந்து, பேசி, சிரித்து, காபி சாப்பிட்டுவிட்டுப் போனாள்.

இதில் ராமநாதனுக்கு மாத்திரம் ஆச்சரியம் இல்லை; அவருடைய நான்கு பிள்ளைகளுக்கும் கொள்ளை ஆச்சரியம்! மூன்று நாட்டுப்பெண்களுக்கும்கூட அபிராமியின் வரவுக்கான காரணம் விளங்கவில்லை.

அபிராமி, ராமநாதனுக்கு நெருங்கிய உறவு. இருக்கப்பட்ட இடம். ஆனால், ராமநாதனும் ஒன்றும் அபிராமியின் வசதிகளைவிடத் தாழ்ந்து விடவில்லை. சொல்லப்போனால், அபிராமி சொந்த வீடு கட்டுவதற்கு முன்பே ராமநாதன் சொந்தமாக இரண்டு வீடுகள் கட்டியாகிவிட்டது. அபிராமி வாங்குவதற்கு முன்பே ராமநாதன் வீட்டுக்கு டெலிவிஷன் வந்துவிட்டது. ஆகவே, அபிராமி ஒன்றும் ராமநாதனைப் பற்றித் தாழ்வான அபிப்ராயம் வைத்துக் கொண்டு வராமல் இருந்திருக்க முடியாது. அப்படியே ஓர் அபிப்ராயம் இருந்திருந்தாலும், இப்போது திடுதிப்பென்று விஜயம் செய்யும்படி அவர் என்ன வகையில் உயர்ந்துவிட்டார்? தெரியவில்லை.

ராமநாதன் தன்னுடைய முதல் பையன் கல்யாணத்துக்கு அபிராமியை நேரிலேயே போய்க் கூப்பிட்டார். அபிராமி வரவில்லை. இரண்டாம், மூன்றாம் பையன்களின் கல்யாணத்துக்குப் பத்திரிகைகள் அனுப்பி வைத்தார். ஆனால், அபிராமி கலந்து கொள்ளவில்லை.

அபிராமியின் முதல் மகன் (வக்கீல்) கல்யாணத்துக்குப் பத்திரிகை மட்டுமே வந்தது ராமநாதனுக்கு. இருந்தாலும் விட்டுக் கொடுக்காமல் போய்விட்டு வந்தார். இரண்டாவது பிள்ளை (டாக்டர்) கல்யாணத்துக்கு அழைப்பு வரவில்லை. ஆனாலும், விஷயத்தைக் கேள்விப்பட்டு இவராகவே வலியப் போய் விசாரித்துவிட்டு வந்தார்.

அவருடைய பையன்களுக்கு அது பிடிக்கவில்லை. “நாம் என்ன குறைந்தா போய்விட்டோம்?” என்று கேட்டான் மூத்தவன் சுந்தர்.

“அவர்கள் வராதபோது நாமும் போகக் கூடாது” என்றான் இரண்டாமவன் பாபு. மூன்றமவன் சந்துருவுக்கும் ரொம்பக் கோபம்.

இவ்வளவு வாதப் பிரதிவாதங்களுக்கு உள்ளான அபிராமி, யாரும் எதிர்பாராத வகையில் தன் மூத்த பையன், அவனுடைய மனைவி, இரண்டாவது பையன், அவனுடைய மனைவி, குழந்தைகள் சகிதம் விஜயம் செய்தது எல்லாருக்கும் ஆச்சரியமாக இருந்ததில் ஆச்சரியம் இல்லைதானே!

அபிராமி ஏன் வந்துவிட்டுப் போனாள் என்பதைப் பற்றி அவர்கள் என்னென்னவோ யோசித்துக் கொண்டார்கள்.

“ஒருவேளை, அவர்களுடைய வருமானம் அப்படி இப்படி ஆட்டம் கண்டிருக்கும். நாளைக்கு உதவி வேண்டியிருக்குமே என்பதற்குப் பூர்வாங்கமாக இந்த விஜயம் இருக்கும்” என்றான் பாபு.

மூன்றாம் நாள் சாயங்காலம், அபிராமியின் வீட்டுக்குப் பக்கத்து வீட்டு மாடியில் குடியிருக்கும் சாரதா வந்து ஒரு விஷயம் சொன்னாள்.

அபிராமி வீட்டில் சில நாட்களாகவே உள்ளுக்குள் மூட்டமாக இருந்த அந்தப் பிரச்னை திடுதிப்பென்று புகைந்து, கனலவும் ஆரம்பித்துவிட்டிருக்கிறது. டாக்டர் பையனின் மனைவிக்கும், வக்கீல் பையனின் மனைவிக்கும் முதலில் லேசான உரசல். இது எப்படியோ தூண்டப்பட்டுவிட்டது. இவனுக்கு பிராக்டீஸ் அதிகம், அவனுக்கு பிராக்டீஸ் குறைவு, இவன் சம்பாத்தியம் நிரந்தரம், அவன் சம்பாத்தியம் நிரந்தரமில்லை என்றெல்லாம் ஏதேதோ பேச்சுக்கள் எழத் துவங்கிவிட்டன.

“தனித்தனியே குடித்தனம் நடத்தி விடலாம். அதுதான் பிரச்னைக்கு ஒரே முடிவு” என்று வாதம் புரிந்தாள் வக்கீலின் பெண்டாட்டி. “ஆமாம். பிரிஞ்சுடறதுதான் ரொம்ப நல்லது” என்று டாக்டரின் மனைவியும் ஒத்துப் பாடினாள்.

ஆடிப் போய்விட்டாள் அபிராமி. தன் பிள்ளைகளையும் நாட்டுப் பெண்களையும் வைத்துக் கொண்டு, கணவனின் சம்பாத்தியம், கார், பங்களா எல்லாவற்றையும் வைத்துக் கொண்டு ஏகபோகமாகக் கோலோச்சி வந்த அவளுடைய கௌரவத்துக்கு இந்தப் பிரிவினை வாதம் நல்ல சாட்டையடி கொடுத்த மாதிரி இருந்தது. இதை எப்படித் தடுப்பதென்று அவளுக்குப் புலப்படவில்லை. தன் வீட்டு விவகாரங்களை ஒருநாளும் வெளியில் சொல்லாத அவள்கூடத் தாங்க முடியாமல் அடுத்த வீட்டு சாரதாவிடம் ஒரு குரல் அழுதுவிடும் அளவுக்கு இந்தத் தனிக் குடித்தன விவகாரம் அவளைப் பாதித்துவிட்டது.

இந்த விவரங்களையெல்லாம் சாரதா மூலமாகக் கேள்விப்பட்ட ராமநாதன் குடும்பத்தினர் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.

“அபிராமி எதுக்கு வந்தாள்னு இப்போ உங்களுக்குப் புரிஞ்சதா?” என்று புன்னகையுடன் கேட்டார் ராமநாதன்.

“நாம் பங்களா கட்டியதோ, டி.வி. வாங்கியதோ அந்த அம்மாளுக்குப் பெருமையாகப் படவில்லை” என்றான் பாபு.

“ஏ.சி-யும் மற்ற வசதிகளும்கூட அவர்கள் கண்ணில் நம் குடும்பத்தைப் பற்றிய உயர்வான அபிப்ராயத்தை ஏற்படுத்தவில்லை” என்றான் சந்துரு.

“காசு இருந்தால் இவற்றையெல்லாம் யார் வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். ஆகவே, மற்றவர்களின் கண்ணுக்கு நம் குடும்பம் உயர்வாகத் தெரிவதற்குக் காரணம் இதெல்லாம் இல்லை. நாம் எல்லோரும் ஒன்றாக, ஒற்றுமையாகக் குடித்தனம் நடத்துகிறோமே, அதுதான் அவர்களுக்குப் பெருமையாகப் படுகிறது!” என்றான் சுந்தர்.

“ஆமாம். மூன்று நாட்டுப் பெண்கள் வந்த பிறகும் அவர்கள் வீட்டில் எப்படி இன்னும் சௌஜன்யம் நிலவுகிறது; எப்படி அவர்கள் ஒருவருக்கொருவர் அனுசரித்துக் குடும்பம் நடத்துகிறார்கள் என்பதையெல்லாம் தன்னுடைய இரண்டு நாட்டுப் பெண்களும் பார்த்தாலாவது திருந்த மாட்டார்களா என்று நினைத்திருக்கிறாள் அபிராமி. அதன் பலன்தான் இந்தத் திடீர் விஜயம்!” என்று முடித்தார் ராமநாதன்.

- ஆனந்த விகடன் 12.9.1976 தேதியிட்ட இதழில் வெளியான சிறுகதை.
.

4 comments:

அர்த்தமுள்ள அருமையான சஸ்பென்ஸ்!
 
பல் வேறு உணர்வுகளை த்தொட்டு எளிமையான நடையில் இனிமையாக இருக்கிறது....

கெளரவம் காசு பணத்தில் இல்லை .உறவுகளை பேணும் விதத்தில் உள்ளது என்பதை சுட்டி காட்டும் கதை..
 
கூட்டுக்குடும்பம் என்பது பெரும்பாலும் ஒழிந்து விட்ட இந்தக்காலத்தில் இந்தக் கதை அப்படிப்பட்ட கூட்டுக்குடும்பத்தின் பெருமையை அழகே பறைசாற்றுகிறது. இத்தகு அருமையான கதையை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி சார்.
 
சின்ன கதையாக இருந்தாலும், சீரிய கதை!