உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Tuesday, December 21, 2010

வயிற்று வலியால் வந்த விபரீதம்!

யிற்று வலி தொடர்கிறது.

நீண்ட காலமாக எனக்கு இருந்த வயிற்று வலி காரணமாக, என்னுள் ஒரு முன் ஜாக்கிரதைத்தனம் ஏற்பட்டு இருந்தது. ஏதேனும் கல்யாணங்களுக்குச் சென்றால், அந்தக் கல்யாண மண்டபத்தில் டைனிங் ஹால் எங்கே இருக்கிறது என்று பார்ப்பதை விட, டாய்லெட் எங்கே இருக்கிறது, தண்ணீர் வசதி இருக்கிறதா என்று முதல் காரியமாக தேடி வைத்துக் கொள்வேன். அதே போல் சுற்றுலாக்களுக்குச் செல்லும்போது பொட்டானிக்கல் கார்டன், சிம்ஸ் பார்க் போன்ற இடங்களில் கக்கூஸ் வசதி எங்கே இருக்கிறது என்றுதான் முதலில் என் கண்கள் தேடும். இயற்கை உபாதையை அகற்ற இடம் இருக்கிறது என்று தெரிந்த பிறகுதான் இயற்கைக் காட்சிகளில் என் மனம் லயிக்கும். பஸ் பிரயாணம், ரயில் பிரயாணம் மேற்கொள்ளவேண்டியிருந்தால், அதற்குச் சற்று முன்னதாக, வருகிறதோ இல்லையோ, முக்கி முக்கியாவது வயிற்றைக் காலி செய்துவிட்டுத்தான் புறப்படுவேன். இது இன்றைக்கும் என் வழக்கமாகியிருக்கிறது.

நான் சாவி பத்திரிகையில் பணியாற்றிய காலத்திலும் சரி, விகடனில் சேர்ந்து சில வருடங்கள் வரையிலும் சரி... ஓயாத வயிற்று வலி என்னை உபத்திரவம் செய்துகொண்டு இருந்தது. ஒருமுறை பஸ்ஸில் சென்றுகொண்டு இருந்தேன். கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் அருகில் என் வயிறு கடாமுடா செய்யத் தொடங்கிவிட்டது. பல்லைக் கடித்துக்கொண்டு பொறுத்துக்கொண்டு இருந்தேன். அவசரமாக டூ பாத்ரூம் போகவேண்டும் என்று வயிறு தகராறு செய்தது. அடக்க அடக்க, எனக்கு மயக்கம் வருகிற மாதிரி ஆகிவிட்டது. மீனாட்சி காலேஜ் வருவதற்கு முன்னதாக ஒரு சிக்னலில் பஸ் நிற்க, சட்டென்று இறங்கிவிட்டேன். அவசரமாக அருகில் இருந்த ஒரு ஹோட்டலுக்குள் நுழைந்து, நேரே டாய்லெட்டைத் தேடிப் போய் சிரம பரிகாரம் செய்துகொண்டு, ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். இது போல் பல முறை நடந்திருக்கிறது. ஹோட்டல்காரர்களுக்கு, அவர்கள் சுவையாகச் செய்து தரும் டிபன், சாப்பாடு வகையறாக்களுக்கு நன்றி சொல்வதைவிட, இது போன்று டாய்லெட் வசதி ஏற்படுத்தி வைத்து, என் சங்கடம் போக்கியதற்குத்தான் நான் அதிகம் நன்றிக் கடன் பட்டிருக்கிறேன்.

1996-ல், ஒரு வயது நிரம்பிய என் மகனுக்குச் சமயபுரத்தில் முடி இறக்குவதற்காக நான் என் மனைவியையும் மூன்று வயதான என் மகளையும் அழைத்துக்கொண்டு, விழுப்புரத்தில் பஸ் ஏறினேன். சமயபுரத்துக்கு டிக்கெட் எடுத்திருந்தேன். பஸ் கிளம்பிச் சென்றுகொண்டு இருக்கும்போது, எது நடக்கக்கூடாது என்று பயந்தேனோ, அது நடந்துவிட்டது.

வயிறு புரட்டத் தொடங்கிவிட்டது. வலி தாங்க முடியவில்லை. கட்டுப்பாடின்றி வெளியே வரத் துடிக்கும் டூ பாத்ரூமை அடக்க அடக்க, என் கண்கள் இருட்டத் தொடங்கின. மயக்கம் வந்தது. வாமிட் வருகிற மாதிரி இருந்தது. கால்கள் பலம் இழந்தன. மூச்சடைக்கிற மாதிரி இருந்தது.

ஊர்களே தென்படாத தேசிய நெடுஞ்சாலையில், பஸ் வேகமாக விரைந்துகொண்டு இருந்தது. என்ன ஊர் கடந்திருக்கிறது, என்ன ஊர் வரப் போகிறது, சமயபுரத்துக்கு இன்னும் எவ்வளவு தூரம் போக வேண்டும் என்று எந்த விவரமும் தெரியவில்லை. யாரையும் கேட்டுத் தெரிந்துகொள்கிற நிலையில்கூட இல்லை நான்.

கொண்டு போயிருந்த என் பையிலிருந்து பர்ஸை எடுத்து, அதிலிருந்து பத்து ரூபாய், ஐம்பது ரூபாய்த் தாள்களை மட்டும் எடுத்துக்கொண்டு, என் சட்டைப் பையில் வைத்துக்கொண்டேன். பர்ஸை மீண்டும் பையிலேயே வைத்தேன். மனைவியிடம், “என்னால தாங்க முடியலை. மயக்கம் வர மாதிரி இருக்கு. நீ குழந்தைகளோடு நேரே சமயபுரம் போய் இறங்கிக் கோயிலுக்குப் போயிடு. நான் அப்புறமா வரேன்” என்றேன். மனைவிக்குக் கொஞ்சம் உதறலாக இருந்தது. தனியாகப் பயணம் செய்து பழக்கப்படாதவள் அவள். ஆனாலும், வேறு வழியில்லை.

நடுவில் ஏதேனும் சின்ன ஊர் வந்தாலும் பரவாயில்லை, இறங்கிவிடலாம் என்று நினைத்தேன். ஆனால், சோதனையாக பஸ் நிற்காமல் ஓடிக்கொண்டு இருந்ததே தவிர, ஒரு சிற்றூர் கூட வழியில் வரவில்லை. என் பொறுமை எல்லை கடந்தது.

இனி ஒரு கணம் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது என்கிற நிலை. அப்போது, வழியில் ஒரு ரயில்வே டிராக் குறுக்கிட்டது. கேட் மூடியிருக்க, பஸ் நின்றது. அவ்வளவுதான்... மனைவியிடம் சொல்லிக்கொண்டு, சட்டென்று பஸ்ஸை விட்டு இறங்கினேன். ஒதுங்க இடம் தேடி நகர்வதற்குள் கேட் திறந்து, பஸ் புறப்பட்டுவிட்டது. என் மனசுக்குள் இனம் புரியாத பதற்றம், படபடப்பு! சிறு குழந்தைகளோடு முதன்முறையாகத் தனியாகப் பயணப்படும் என் மனைவிக்கும் அதைவிட அதிகமான பதற்றமும் படபடப்பும் இருந்திருக்கும் என்பது நிச்சயம். கூடுதலாக என்னைப் பற்றிய கவலை வேறு!

நான் தார்ச் சாலையை விட்டு இறங்கி, வேலிக்காத்தான் செடிகள் நிறைந்திருந்த பகுதியை நோக்கி ஓடினேன். கக்கூஸ் போனால், கழுவத் தண்ணீர் இருக்கிறதா? அப்போது கோடை; வயல்வெளிகள் எல்லாம் வெடித்துக் காணப்பட்டன. தண்ணீர் என்பது பொட்டு கூடக் கண்ணில் தட்டுப்படவே இல்லை. ஆனால், அது இப்போது முக்கியம் இல்லை. முதலில் வயிற்றுச் சுமையை இறக்கியாக வேண்டும்.

செடி, கொடி, புதர்களுக்குள் நடந்து சென்று தோதான இடம் பார்த்து அமர்ந்து, ஆசுவாசப்படுத்திக் கொண்டேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, எழுந்து தண்ணீர் தேடலாம் என்று நினைப்பதற்குள் மீண்டும் வயிற்றைச் சுருட்டி வலி! எழுந்து சற்றுத் தள்ளி நகர்ந்து இன்னொரு இடத்தில் அமர்ந்தேன். இப்படியாக நகர்ந்து நகர்ந்து புதர்களுக்குள்ளே எத்தனை தூரம் சென்றிருப்பேன், எவ்வளவு நேரமாகிறது பஸ்ஸிலிருந்து இறங்கி என்று தெரியவில்லை. எங்கும் ஒரே காடாக, முள்செடிகளாக இருந்தது. நாயோ, பூனையோ செத்த நாற்றம் குப்பென்று எங்கிருந்தோ வீசியது.

வாட்ச் கட்டுகிற பழக்கம் எனக்கு எப்போதும் இல்லை. இன்றைக்குப் போல் கையில் செல்போனும் இல்லை. நடுக்காட்டில் அநாதையாக நின்றேன்.

ஒரு வழியாக வயிறு சமாதானம் ஆனவுடன், தண்ணீர் தேடிக் கிளம்பினேன். முதலில் தார் ரோடு எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும். ரொம்ப தூரம் உள்ளே வந்துவிட்டேன் போலிருக்கிறது. வழியே புரியவில்லை. கிழக்கு எது, மேற்கு எது என்று தெரியவில்லை. குத்து மதிப்பாக நான் வந்த வழியை மனதில் இருத்தி, கால்களை எட்டிப் போட்டு நடந்தேன். வழியில்...

சற்றுத் தொலைவில், ரத்தக் கறையோடு எதுவோ விழுந்து கிடப்பது போல் இருந்தது. அதை ஒரு சொறி நாய் முகர்ந்துகொண்டு இருந்தது. மனசுக்குள் பயம் வந்தது. மெதுவே அதன் அருகில் நெருங்கினேன். நாய் என்னைப் பார்த்து ஈறு தெரியச் சீறியது. அதைக் கடந்துதான் நான் போக வேண்டும். எப்படி? புரியவில்லை. மனதை திடப்படுத்திக்கொண்டு, அதை இன்னும் சற்று நெருங்கினேன். நாய் கர்ர்... என்று என்னைப் பார்த்து உறுமியது. கீழே கிடந்த காய்ந்த குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டேன். நாய் மெல்ல பின்வாங்கியது.

நான் மெதுவே நடந்தேன். அந்தத் துணிப் பொட்டலத்திலிருந்து ஒரு மனிதக் கால் வெளியே தெரிந்தது. படபடக்கும் நெஞ்சை அடக்கிக்கொண்டு, அதைத் தாண்டி அப்பால் சென்று திரும்பிப் பார்த்தேன். ஐயோ... அந்த பயங்கரத்தை இப்போதும் என்னால் வர்ணிக்க இயலவில்லை. உடம்பெல்லாம் நடுங்குகிறது. அது ஒரு பச்சிளம் குழந்தையின் சடலம். கண்கள் திறந்தபடி இறந்து கிடந்தது அந்தக் குழந்தை. உடம்பெல்லாம் கிழிந்திருந்தது. வயிற்றுக்குள்ளிருந்து குடல், கறுப்பு நாடா போன்று வெளியே வழிந்திருந்தது.

அது இறந்து இரண்டு மூன்று நாட்களாவது ஆகியிருக்கும் என்று தோன்றியது. தப்பான வழியில் தனக்குப் பிறந்த குழந்தையை யாரோ ஒரு ராட்சசி கழுத்தை நெரித்துக் கொன்று, துணியில் சுற்றி, இந்தப் புதரில் வீசிவிட்டுப் போயிருக்க வேண்டும் என்றுதான் எனக்கு நினைக்கத் தோன்றியது.

விறுவிறுவென்று நடந்து, ஒருவழியாகச் சாலையை அடைந்தேன். வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு, தார்ச் சாலையிலேயே நடந்தேன். தண்ணீர்... தண்ணீர்... ஊஹூம்! ஒரு பொட்டுத் தண்ணீரைக்கூடக் கண்ணில் காணோம்!

ரொம்ப தூரம் நடந்ததும், சாலையோரம் ஒரு பம்ப் செட் தென்பட்டது. அங்கே போனேன். பம்ப் செட்டுக்கு வெளியில் இருந்த சிமெண்ட் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தேன், தண்ணீர் இருக்கிறதா என்று. இல்லை. காய்ந்து கிடந்தது. சுற்று முற்றும் பார்த்தேன். வயல் வரப்பில் நடந்து கொஞ்ச தூரம் உள்ளே போனேன். நாலு வயல்கள் ஒன்று சேருமிடத்தில் ஒரு சிறு குட்டை போல் தண்ணீர் தேங்கியிருந்தது. அவசரத்துக்கு வேறு வழியில்லை என்று கழுவிக்கொண்டு, மீண்டும் தார்ச் சாலையை அடைந்தேன்.

இனி, சமயபுரம் செல்ல வேண்டும். வழியில் செல்லும் எந்த பஸ்ஸைக் கை காட்டினாலும் நிற்கவில்லை. லாரிகளும்கூட நிற்கவில்லை. விர் விர்ரென்று வேகமாகப் பறந்தன. திருச்சி திக்கில் கால்களை எட்டிப் போட்டு நடந்தேன்.

விழுப்புரத்தில் பஸ் ஏறும்போது, உத்தேசமாக காலை 11 மணி வாக்கில் சமயபுரத்தை அடையலாம் என்று ஒரு கணக்கு வைத்திருந்தேன். குழந்தைகளுடன் என் மனைவி அதே போல் 11 மணிக்கெல்லாம் சமயபுரம் கோயிலை அடைந்திருப்பாள். இப்போது சூரியன் இருக்கும் நிலையைப் பார்த்தால், அநேகமாக மாலை 3 மணியாவது இருக்கும் என்று தோன்றியது. மனைவியும் குழந்தைகளும் ஓட்டலில் ஏதேனும் வாங்கிச் சாப்பிட்டார்களா என்று கவலை வந்தது. என் தீராத வயிற்று வலியை நினைத்து ஆத்திரமாக வந்தது.

கார், லாரி, பஸ் என எந்த வாகனமும் நிற்காத நிலையில், நான் இன்னும் எவ்வளவு தூரம்தான் நடக்க வேண்டியிருக்கும் என்று புரியவில்லை. நடந்துகொண்டே.....ஏஏஏஏஏ.... இருந்தேன். ஒருவர் இருவர் என தூரத்தில் ஒரு சிலர் தட்டுப்பட ஆரம்பித்தார்கள். அருகே நெருங்கியதும், அவர்களிடம் அருகில் என்ன ஊர் இருக்கிறது, அங்கே பஸ் நிற்குமா என்று கேட்டேன். அருகில் உள்ள ஊர் எரையூர் என்று சொன்னதாக ஞாபகம். அங்கே டவுன் பஸ்கள் மட்டும் நிற்கும் என்றார்கள். ‘இங்கிருந்து எரையூர் மூன்று மைல் தூரமாவது இருக்குமே’ என்றார்கள்.

மீண்டும் நடந்தேன். கால்கள் சோர்ந்து போகும் வரையில் நடந்தேன். ஒருவழியாக எரையூர் வந்தது. ஊர் என்றால், உள்ளே திரும்பும் சாலையில் நடக்க வேண்டும். மெயின் ரோட்டில் ஒரு குடிசை மட்டும் இருந்தது. அது ஒரு டீக்கடை. ஓரிருவர் மட்டுமே இருந்தார்கள்.

பஸ்ஸுக்காகக் காத்திருக்க ஆரம்பித்தேன். கண்கள் பூக்க வெகு நேரம் காத்திருந்த பிறகு, ஒரு பஸ் வந்தது. அது பெரம்பலூர் வரையில் மட்டுமே செல்லுகின்ற பஸ். ஏறிக்கொண்டேன். ஏழு ரூபாயோ என்னவோ டிக்கெட் சார்ஜ். அங்கே இறங்கி, மீண்டும் பஸ் பிடித்துச் சமயபுரம் போகவேண்டும். அதற்கு எவ்வளவு நேரம் ஆகுமோ தெரியவில்லையே! அங்கே இவ்வளவு நேரமாக என்னைக் காணாமல் மனைவி தவியாய்த் தவிப்பாளே, பதறுவாளே என்று கவலையாக இருந்தது.

சோதனையாக பஸ் அசைந்து அசைந்து ஆமை போல் நகர்ந்தது. அல்லது, எனக்கிருந்த பதற்றத்தில் அப்படித் தோன்றியதா என்றும் தெரியவில்லை. ஒருவழியாக பெரம்பலூர் வந்தது. நல்லவேளையாக, அங்கிருந்து அப்போதுதான் சமயபுரத்துக்கு ஒரு பஸ் கிளம்பிக்கொண்டே இருந்தது. இறங்கி ஓடிப் போய் அதில் தொற்றிக்கொண்டேன்.

சமயபுரம் கோவிலுக்குப் போய்ச் சேர்ந்து, என் மனைவி, குழந்தைகளைத் தேடத் தொடங்கினேன். எங்கேயும் காணோம். ரொம்ப பயமாகிவிட்டது. அங்கிருந்த கோயில் குருக்களிடமும், பூக்கடை, படக் கடை எனக் கோயில் அருகில் இருந்த அனைவரிடமும் அடையாளம் சொல்லி விசாரித்தேன். சிலர் ‘தெரியலையே கண்ணு’ என்றார்கள்; வேறு சிலர், ‘ஆமா! பாத்தாப்லதான் இருக்குது. ஆனா, எங்கே போனாங்கன்னு தெரியலையே!’ என்றார்கள். மணி அப்போது ஆறரை. இருட்டத் தொடங்கியிருந்தது.

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கால் சலிக்க, கண் சலிக்கத் தேடிவிட்டு, மனைவியும் குழந்தைகளும் கிடைக்காமல், அழுகையும் வேதனையுமாக, பாண்டிச்சேரி அன்னையிடம் அவர்கள் எந்த ஆபத்தும் இல்லாமல் பத்திரமாக இருக்கப் பிரார்த்தித்துக்கொண்டுவிட்டு, ஒரு தீர்மானத்தோடு மீண்டும் பஸ் ஸ்டேண்ட் வந்தேன். திருச்சி பஸ்ஸைப் பிடித்து, அடுத்த ஒரு மணி நேரத்தில் சத்திரம் பஸ் ஸ்டேண்டில் போய் இறங்கி, ஓட்டமும் நடையுமாக, திருச்சி மலைக்கோட்டைக்கு எதிரே இருக்கும் பத்தாய்க்கடைத் தெருவுக்குச் சென்றேன்.

அங்கேதான் திருமணத்துக்கு முன்பு, இருபது வருடங்களுக்கு மேலாக என் மனைவியின் குடும்பம் (அப்பா, அம்மா, மூன்று மகள்கள்) வசித்தது. இப்போது அங்கே யாரும் இல்லை என்றாலும், பக்கத்து வீட்டில் அவர்களுக்கு வேண்டப்பட்ட சிநேகிதக் குடும்பத்தார் வசித்தார்கள். தந்தை இல்லாத என் மனைவியின் திருமணத்தை அவர்கள்தான் முன்னின்று நடத்தி வைத்தார்கள்.

அந்த வீட்டை நெருங்கியதுமே, மனைவியின் குரல் என் காதுகளில் தேனாக விழுந்து, வயிற்றில் பாலை வார்த்தது. ஓடிச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அடக்க மாட்டாமல் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்துவிட்டாள் என் மனைவி. குழந்தைகள் எதுவும் புரியாமல் தேமே என்று விளையாடிக்கொண்டு இருந்தார்கள்.

“ரொம்ப நேரமா உங்களைக் காணலை. என்ன பண்றதுன்னே எனக்குத் தெரியலை. இங்கே திருச்சி எனக்கு நல்ல பழக்கம். இங்கே வந்துட்டா மனசுக்குக் கொஞ்சம் தெம்பா இருக்கும்போல இருந்தது. இருட்டின பிறகு தட்டுத் தடுமாறி வரவேண்டாமேன்னு நாலு மணிக்கெல்லாம் கிளம்பி இங்கே வந்துட்டேன். நீங்க எப்படியும் இங்கேதான் தேடிக்கிட்டு வருவீங்கன்னு நினைச்சேன்” என்றாள் மனைவி.

அன்றைய இரவு, அவர்கள் வீட்டிலேயே தங்கிவிட்டு, மறுநாள் காலையில் எழுந்து, சமயபுரம் வந்து, குழந்தைக்கு முடி இறக்கி, பிரார்த்தனையை நல்லபடியாக நிறைவேற்றிவிட்டு, நேரே விழுப்புரம் வந்தோம்.

எங்கள் குடும்பத்தைக் காத்தருளிய சமயபுரம் மாரியம்மனுக்கும், பாண்டிச்சேரி அரவிந்த அன்னைக்கும் கண்ணீரால் நன்றி சொன்னேன்.
.

14 comments:

என்ன சார் இப்படி திக் திக்ன்னு! பயந்தே போயிட்டேன். இறுதியில் தான் நார்மலுக்கு வந்தேன்.
 
அன்பான ரவிபிரகாஷ்,

நீங்கள் விவரித்திருந்த சங்கடமான சமாச்சாரம் எனக்கும் ஒரு முறை நிகழ்ந்திருக்கிறது. ஊட்டி சுற்றுலா போய்விட்டு சென்னை திரும்பிக் கொண்டிருந்தோம். இரவு, பேருந்து நிறுவனமே உணவு ஏற்பாடு செய்ததால் நிகழப் போகும் விபரீதம் அறியாது பசியில் குருமா, சட்னி என்று நிறைய சாப்பிட்டு விட்டேன் அதிகாலையில் சென்னையை நெருங்குவதற்கு முன் சில முன்ஜாக்கிரதை பெண்மணிகள் வண்டியை நிறுத்தி தண்ணீர் பாட்டிலுடன் மரத்தின் பின்னால் மறைந்தார்கள். ஆனால் எனக்கோ நகரததை நெருங்கிய பின்புதான் வயிறு பயங்கரமாக கலங்கியது. சமாளித்துக் கொள்ள முயன்றாலும் உள்ளே சுனாமி ரேஞ்சுக்கு ஏதோ நிகழ்ந்து கொண்டிருப்பது தெளிவாக தெரிந்தது. பேருந்து நகரத்திற்குள் நுழைய, ஒதுங்க எங்கும் மறைவான இடமில்லாத நிலை. அதிகாலை என்பதால் உணவகங்களும் திறந்திருக்காது. என்ன செய்வதென்று புரியாமல் கடைசியில் இறங்க வேண்டியவன், குடும்பத்தினரையும் அவசரப்படுத்தி சைதாப்பேட்டையில் இறங்கி...

நின்றிருந்த ஒரு ஆட்டோவின் பின்னால்.... சுகப் பிரசவம். (பிரசவத்திற்கு இலவசம் என்று ஆட்டோவில் வேறு எழுதி வைத்திருந்தார்கள்) :-)

எதிரே என் மனைவி,குழந்தைகள், மாமனார். என் நிலையை யோசித்துப் பாருங்கள். :-)

ஆண்களுக்கே இந்தச் சங்கடம் எனும் போது பெண்களின் நிலையை யோசித்துப் பாருங்கள். :-(

உங்கள் அனுபவத்தை வெளிப்படையாக எழுதினது நன்று. ஏற்க்குறைய எல்லோருக்குமே இது போன்று நிகழ்ந்திருக்கும் என நினைக்கிறேன்.
 
உங்கள் அப்போதைய நிலையை அப்படியே உணர முடிந்ததாலோ என்னவோ தெரியவில்லை, படிக்கையில் கண் கலங்கி விட்டேன்...
 
மிகப் பயனுள்ள பதிவு! ஒவ்வொருவருக்குமே இதுமாதிரியான நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கும் என்பது நிச்சயம். அப்போது எப்படிப்பட்ட சங்கடங்கள், துயரங்களையெல்லாம் சந்திக்க நேரிடும் என்பதற்கு ஒரு முன்மாதிரியாக தங்கள் அனுபவம் விளங்கியது. பாராட்டுக்கள்!
 
ரவி சார், தங்களின் பதில் பார்த்தேன். புத்தகப் பரிசு அறிவித்ததோடு, அதற்குள்ளேயே ஒரு துணைப் பரிசுப் போட்டி அறிவித்து போட்டியிலேயே ஒரு போட்டியாக வைத்து அசத்திட்டீங்க சார்! சொக்கா... பெரிய, விலைமதிப்பற்ற அந்தப் புத்தகப் பரிசு எனக்கே கிடைக்க நீதாம்பா அருள் செய்யணும்! :)
 
நீங்கள் பரிசளிக்கப்போகிற அந்த விலைமதிப்பற்ற புத்தகம் அனேகமாக தற்போது விகடனில் தொடர்ந்து வெளியாகிக்கொண்டு இருக்கும் 'பொக்கிஷம்'தான் என்பது என் யூகம். பொக்கிஷத்தை மட்டும் தனிப் புத்தகமாக விகடன் பிரசுரம் கொண்டு வர உள்ளதா, சொல்லுங்க சார்!‌
 
நான் விகடன் வாசகி. அதில், விகடனின் 75 ஆண்டுச் சரித்திரம் புத்தகமாக வரப்போவது பற்றிய விளம்பரம் பார்த்தேன். விகடனில் வெளியாகும் காலப் பெட்டகம் பகுதியைத் தொகுத்து வெளியிடப் போகிறார்கள் என்று நினைக்கிறேன். தாங்கள் வைக்கும் போட்டியில் அதைத்தான் பரிசளிக்கப்போகிறீர்கள் என்று ஒரு யூகம். இது சரியாக இருந்தால் எனக்குக் குட்டிப் புத்தகப் பரிசு உண்டுதானே?
 
எஸ்.ராஜேஸ்வரி
you realy great.whatis the problem for you? please consult the doctor.you give the many infor mation.
 
ரொம்ப கொடுமை சார். கூசசமின்றி, திறந்த மனதுடன் உங்கள் பலவீனத்தையும் எழுதுவதும் உங்கள் பலம்.
சமீபத்தில் சூப்பர் மார்க்கட் சென்ற போது வயது வந்தோருக்கான Adult Diaper பார்த்து வேடிக்கையாக என் மனைவியிடம் இனிமேல் பஸ் பிரயாணம் பண்ணும்போது உனக்கு இதை வாங்கித் தரணும்னு சொன்னேன். அடக்க முடியாமல் கஷ்டப்படுபவர்களுக்குத்தான் அடக்கம் என்பதின் அர்த்தம் பிரியுமோ?
 
+ சில அனுபவங்கள் பயங்கரமானவைதான். ஆனால், பிறருக்கு நடந்துள்ளதாகக் கேள்விப்படும் சில விஷயங்களைப் பற்றி நினைக்கும்போது, அவற்றின் முன் என் அனுபவங்கள் அப்படியொன்றும் பயங்கரமில்லை என்றுதான் தோன்றுகிறது. தங்கள் பின்னூட்டத்துக்கு நன்றி திரு.ரேகா ராகவன்.

+ திரு. சுரேஷ்கண்ணன், தங்களின் விரிவான பின்னூட்டத்துக்கு நன்றி! என் 30 ஆண்டுக் கால இலக்கிய நண்பர் திரு.மார்க்கபந்து அவர்கள் தனது வீட்டுக்கு வரும் விருந்தினருக்கு மறக்காமல் செய்யும் ஓர் உபசரிப்பு, "சிரம பரிகாரம் ஏதாவது செய்துக்கணுமா? டாய்லெட் அந்தப் பக்கம் இருக்கு!" என்று வழிகாட்டுவதுதான். 'விருந்தின்போது தேவையானதைப் பலர் உரிமையோடு கேட்டு வாங்கிக்கூடச் சாப்பிடுவார்கள்; ஆனால், டாய்லெட் பற்றிக் கேட்கத் தயங்கி, அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருப்பார்கள்' என்பதாலேயே தானாக அந்த உபசரிப்பை முன்வந்து செய்வதாகச் சொன்னார் அவர். நல்ல பழக்கம்தானே என்று நானும் அதைக் கடைப்பிடித்து வருகிறேன்!

+ நன்றி திரு.கே.பி.ஜனா!

+ நன்றி திரு.கணேஷ்ராஜா! புத்தகப் பரிசுப் போட்டி பற்றி நினைவூட்டியமைக்கு நான்தான் தங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்!

+ பிருந்தா, வணக்கம். முதன்முறையாக என் பதிவைப் படித்துப் பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அதற்கு முதற்கண் எனது மனமார்ந்த நன்றி! கடந்த ஐந்து ஆண்டுகளாக உணவுக் கட்டுப்பாடு ஏற்படுத்திக்கொண்ட பின்பு, எனக்கு இந்த வயிற்று வலிப் பிரச்னை இல்லை. தங்கள் அன்பான விசாரிப்புக்கு மீண்டும் என் நன்றி!

+ அஸ்கு பிஸ்கு! தாங்களும் முதன்முறை என் வலைப்பூவுக்கு வந்து பின்னூட்டம் இட்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நன்றி! என்னது... பெரியவர்களுக்கும் டயாப்பர் கிடைக்கிறதா? உடல் நிலை சரியில்லாத முதியோர்களைப் பயணத்தில் அழைத்துப் போகும்போது உபயோகமாகுமே? எனக்கு இது புதிய செய்தி! அதற்காகத் தங்களுக்கு மீண்டும் என் நன்றி!
 
+++
போட்டிக்குள் போட்டிக்கு இதுவரை மூன்று பேர்தான் தங்கள் யூகத்தைப் பின்னூட்டம் இட்டிருக்கிறார்கள். திங்கள்கிழமை (27.12.2010) வரை காத்திருந்துவிட்டு, செவ்வாய்க்கிழமையன்று காலையில் குட்டிப் புத்தகங்களைப் பரிசாக (சரியாக யூகித்தவர்களுக்கு மட்டும்) அனுப்பி வைக்க எண்ணியுள்ளேன்.
 
போன பதிவுல கொடுத்திருந்த போட்டிக்குள் போட்டிக்கான என் விடைகள்:
1. ராஷ்மி பன்சாலின் அடுத்த புத்தகத்தின் தமிழாக்கம்.
2. விகடன் பிரசுரம் வெளியிட்டிருக்கும் ‘உங்கள் குழந்தை’
3. ஏழு ஸ்வரங்களுக்குள் எத்தனை ராகம்!
 
இந்த வயிற்றுவலி சங்கடத்தை நானும் எப்போதாவது அனுபவித்திருக்கிறேன்! அப்போதெல்லாம் என் நினைவுக்கு வருவது "இதற்கே இவ்வளவு கஷ்டப்படுகிறோமே! பிரசவத்தின்போது பெண்கள் எவ்வளவு கஷ்டப்படுவார்கள்?" என்பதுதான்.

ஆமாம்.... சமயபுரம் போனபோது செல்ஃபோன்கள் புழக்கத்தில் இல்லையா?
 
போட்டியில் பங்கு பெரும் ஆர்வத்தில் பதிவை பற்றி ரொம்ப லேட் ஆக இந்த பின்னூட்டம் !
சிறு வயதில் DressoDu டூ போனதால் அம்மாவுக்கு [Bus stanD மற்றும் சூப்பர் மார்க்கெட்டில் ] வேலை வைத்து திட்டுவாங்கியது ஞாபகம்வந்தது !


,இப்போதும் செல்லும் இடங்களில் நம்பர் 1 போக வசதி இருக்க என்பதை நானும் பார்ப்பதுண்டு !
சரி , போட்டிமுடிவு என்னவென்று தெரிந்து கொள்ளலாமா? ?