உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, December 05, 2010

கண்டேன் கன்னடத்துப் பைங்கிளியை!

மிழ்ப் பட ஹீரோயின்களில் என்னை அதிகம் கவர்ந்தவர் சரோஜாதேவிதான். பத்மினி, வைஜயந்திமாலா அளவுக்கு டான்ஸ் ஆடத் தெரியாது; பானுமதி, சாவித்திரி அளவுக்கு நடிக்கத் தெரியாது; தமிழ் உச்சரிப்பும் கொச்சையாக, கொஞ்சலாக இருக்கும்; என்றாலும், என்னை அதிகம் கவர்ந்தவர் சரோஜாதேவிதான். அடுத்து, தேவிகா.

நான் தீவிர சிவாஜி ரசிகனாக இருந்தும், எம்.ஜி.ஆர். படங்களையும் அதிகம் பார்த்ததற்குக் காரணம் இரண்டு பேர். ஒருவர் டி.எம்.எஸ்.; மற்றவர் சரோஜாதேவி. நான் சாவி பத்திரிகையில் பணியாற்றிக்கொண்டு இருந்தபோது, என்னுடன் பணியாற்றிய திருமதி லோகநாயகிக்குப் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையைப் பார்க்கச் சென்றிருந்த நான், அந்தக் குழந்தைக்கு ‘அபிநயா’ என்று பெயர் வைக்கச் சொன்னேன். சரோஜாதேவியின் பட்டப் பெயர் ‘அபிநய சரஸ்வதி’ அல்லவா... அதை மனதில் கொண்டுதான் அந்தப் பெயரை சிபாரிசு செய்தேன். அவரும் அப்படியே வைத்தார். திருமதி லோகநாயகி தற்போது குமுதம் சிநேகிதியின் ஆசிரியையாக உள்ளார்.

எண்பதுகளின் துவக்கத்தில், வீட்டுக்குத் தெரியாமல் ஓடிப் போய், பாண்டிச்சேரியில் ஒரு பழைய பேப்பர் கடையில் நான் பணியாற்றிக்கொண்டு இருந்த காலத்தில், வாரத்துக்கு மூன்று சினிமாக்கள் பார்த்தேன். சரோஜாதேவி நடித்த படம் என்றால், கண்டிப்பாகப் பார்த்துவிடுவேன். தீவிர சரோஜாதேவி ரசிகனாக நான் ஆனது அப்போதுதான். ஜெமினி சினிமா, பேசும்படம், பொம்மை, சினிமா எக்ஸ்பிரஸ் போன்ற பத்திரிகைகளில் வரும் சரோஜாதேவி படம் எதையும் விடமாட்டேன். கத்தரித்து ஆல்பம் போல் தயார் செய்வேன்.

நான் வேலை செய்த கடைக்குப் பக்கத்திலேயே தெருத் திருப்பத்தில் இருந்த ஒரு வீட்டிலிருந்து அடிக்கடி பழைய பேப்பர்களைக் கொண்டு வந்து என் கடையில் எடைக்குப் போட்டுவிட்டுக் காசு வாங்கிப் போவார்கள். அவர்கள் வீட்டில் ப்ளஸ் டூ படிக்கும் ஒரு பெண் இருந்தது. அதுவும் சில நாள் பேப்பர் கொண்டு வந்து எடைக்குப் போடும். அந்தப் பெண் பாக்யராஜ் ரசிகை என்று தெரிந்து, சினிமாப் புத்தகங்களில் இருந்து பாக்யராஜ் படங்களைக் கத்தரித்து வைத்திருந்து, அதற்குக் கொடுப்பேன்.

அந்தப் பெண் இரட்டைச் சடை போட்டு, முக ஜாடை அப்படியே சரோஜாதேவி மாதிரியே இருக்கும். அது புன்னகைக்கும்போது சரோஜாதேவி சிரிக்கிற மாதிரியே இருக்கும். இதனால் மெள்ள மெள்ள அந்தப் பெண் மீது எனக்கு ஒரு ஈர்ப்பு உண்டாகி, ஒரு நாள் அதைப் பார்க்கவில்லையென்றால்கூட தலை வெடித்துப் போகிற மாதிரி ஆகிவிட்டது.

சரி, அந்தக் கதை அப்புறம். கன்னடத்துப் பைங்கிளிக்கு வருவோம்.

எங்கள் பழைய பேப்பர் கடைக்குச் சேர வேண்டிய தொகையை பெங்களூர் மில்களில் இருந்து வாங்கி வர வேண்டியிருந்தது. என் முதலாளிக்கு (காந்தி என்கிற நடராஜன். இவரைப் பற்றி ஏற்கெனவே தனிக் கட்டுரை எழுதியிருக்கிறேன்.) அப்போது பம்பாய் செல்லும் வேலை இருந்ததால், யாரை அனுப்புவது என்று யோசித்துக்கொண்டு இருந்தார். நான் விழுப்புரம், பாண்டிச்சேரி, கடலூர் என்று குறுகிய வட்டத்தைத் தாண்டி அதிகம் வெளியே போகாதவன். இருந்தும், “நான் வேணா போய் வாங்கி வருகிறேனே... அட்ரஸ் கொடுங்களேன்” என்று துணிச்சலாகச் சொன்னேன். காரணம், சரோஜாதேவி பெங்களூர்வாசி என்பதுதான். பில் கலெக்ட் பண்ணுகிற சாக்கில் அப்படியே சரோஜாதேவி வீட்டுக்கும் போய் ‘ஹாய்’ சொல்லிவிட்டு வரலாமே என்கிற நப்பாசைதான்!

“நெஜம்மாவா? தைரியமா போய் வருவியா? விசாரிச்சு வழி கண்டுபிடிச்சு அந்த ரெண்டு மூணு மில்களுக்கும் போய்ப் பார்த்து, சம்பந்தப்பட்டவங்களோடு பேசி, காரியத்தை சக்ஸஸா முடிச்சுக்கிட்டு வருவியா?” என்று கேட்டார் முதலாளி. “கண்டிப்பா!” என்றேன். ‘சரி, இவனுக்கும்தான் ஒரு வாய்ப்பு கொடுத்துப் பார்ப்போமே!’ என்று நினைத்தவர் போல, நான் செய்ய வேண்டியது என்ன என்பதை விலாவாரியாக விளக்கி, அட்ரஸ்களைக் கொடுத்து, என்னை பெங்களூருக்கு பஸ் ஏற்றி அனுப்பினார் முதலாளி.

பெங்களூரில் போய் இறங்கியதுமே, அந்தப் புதிய சூழல் என்னை ரொம்ப மிரட்டியது. என்னவோ கண்காணாத அமெரிக்காவிலேயே போய் இறங்கிவிட்டது மாதிரி மிரட்சியாகவும், சற்றுப் பயமாகவும் உணர்ந்தேன்.

நல்லவேளையாக, அங்கிருந்த ஆட்டோக்காரர்களுக்குத் தமிழ் தெரிந்திருந்தது. ஒவ்வொரு இடமாகச் சொல்லி, அந்தந்த மில்களுக்கும், கம்பெனிகளுக்கும் போய் அவர்கள் தந்த செக்குகளைப் பெற்றுக்கொண்டேன். முதலாளி சொல்லியிருந்தபடி, அவருக்குத் தெரிந்த ஒரு கடையில், அந்த ஊழியர்களோடு இரவு தங்கினேன்.

விடிந்ததும், நேரே கிளம்பி பாண்டிச்சேரி வரவேண்டும் என்று முதலாளி உத்தரவு. ஆனால், என் அபிமான நடிகை சரோஜாதேவியைப் பார்க்கவேண்டும் என்கிற ஆவல் எனக்குள் மிகுந்திருந்ததால் (சொல்லப்போனால், முக்கியமாய் அதற்காகத்தானே வேலைமெனக்கெட்டு வந்திருக்கிறேன்!) ஒரு ஆட்டோ பிடித்து, சிவாஜி நகர் போகச் சொன்னேன். பேசும்படம் புத்தகத்தில் வெளியான சரோஜாதேவி அட்ரஸைக் கிழித்து வைத்துக்கொண்டிருந்தேன். அந்த அட்ரஸுக்கு ஆட்டோவில் போய் இறங்கினேன்.

வெளியே வாட்ச்மேனிடம், “அம்மா இருக்காங்களா?” என்று விசாரித்தேன். “நீ யாரு தம்பி?” என்று கேட்டார் அவர். “அம்மாவோட ரசிகன் நான். சும்மா பார்த்துட்டுப் போகலாம்னு...” என்று தயங்கினேன். சரோஜாதேவி அப்போது நடிப்பதை நிறுத்திப் பல காலம் ஆகியிருந்தது. எனவே, அந்த பங்களாவில் ஈ, காக்காய் இல்லை. ரசிகன் என்று சொல்லிக்கொண்டு வந்த என்னை அந்த வாட்ச்மேன் ஆச்சரியமாகத்தான் பார்த்தார். யாரிடமும் எந்த அனுமதியும் பெறாமல், ‘உள்ளே போ’ என்று என்னைச் சுலபமாக அனுமதித்துவிட்டார்.

உள்ளே போனேன். முன்னால் வரவேற்பறை மாதிரி இருந்த சிறு அறை ஒன்றில் நுழைந்தேன். யாரோ ஒரு பணிப்பெண், “யாரு?” என்று என்னை விசாரித்தார். “அம்மாவைப் பார்க்கணும். நான் பாண்டிச்சேரிலேர்ந்து வந்திருக்கேன். அவங்களோட ரசிகன்” என்றேன். “உக்காரு” என்று சொல்லிவிட்டு உள்ளே போனார் அந்தப் பணிப்பெண்.

எவ்வளவு நேரம் காத்திருந்திருப்பேன் என்று தெரியாது... ஒரு மணி நேரமாவது இருக்கலாம் என்று நினைக்கிறேன். அந்த அறைக்குள் நுழைந்தார் சரோஜாதேவி. சட்டென்று எழுந்து நின்றேன். “உக்காருப்பா! என்னைப் பார்க்கணும்னா வந்திருக்கே?” என்றார். தோற்றத்தில்தான், படத்தில் பார்த்ததைவிட முதுமையாகத் தெரிந்தாரே தவிர, குரல் பழைய அதே கொஞ்சும் குரல்தான்!

வாங்கிக்கொண்டு போயிருந்த ஆப்பிள் பழங்களை அவரிடம் கொடுத்துவிட்டு, நாற்காலியின் நுனியில் தயக்கத்தோடு உட்கார்ந்தேன். அவருடைய படங்களை சிலாகித்துச் சொன்னேன். புன்னகை மாறாமல் கேட்டுக்கொண்டு இருந்தார். “எனக்கு சிவாஜிதான் பிடிக்கும். ஆனா, நீங்க பொதுவா சிவாஜி படத்துல சோகமான கேரக்டர்ல வர்றீங்க. எம்.ஜி.ஆர். படத்துலதான் உற்சாகமா, சிரிச்ச முகத்தோட அழகா தெரியறீங்க” என்றதும், “அப்படியா..!” என்று சிரித்தார்.

பணிப்பெண்ணை அழைத்து பிஸ்கட் கொண்டு வந்து கொடுக்கச் சொன்னார். மிகுந்த தயக்கத்தோடு ஒன்றை எடுத்துத் தின்றேன். பின்னாலேயே சூடான டீ வந்தது. குடித்தேன். அதுக்கப்புறம் என்ன பேசுவது என்று தெரியவில்லை. “உங்களைப் பார்த்ததுல ரொம்பச் சந்தோஷம்மா! நான் வரேன்” என்று விடைபெற்றுக் கிளம்பினேன். அவர் போட்டோவில் கையெழுத்துப் போட்டுக் கொடுக்கச் சொல்லிக் கேட்க வேண்டும் என்று எனக்கு அப்போது தோன்றவே இல்லை. என் அபிமான நடிகையை நேரில் பார்த்துச் சில நிமிஷ நேரம் பார்த்துக் கொண்டு இருந்ததே பெரிய சந்தோஷமாக இருந்தது எனக்கு.

அதன்பின், 1988-ல் நான் ‘சாவி’யில் பணியாற்றிக்கொண்டு இருந்த சமயத்தில், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு அ.தி.மு.க.- ஜெயலலிதா அணி, வி.என்.ஜானகி அணி என இரண்டாகப் பிரிந்திருந்த நேரம்...

சரோஜாதேவி சென்னை, நியூ உட்லண்ட்ஸ் ஓட்டலில் வந்து தங்கியிருந்தார் என்று கேள்விப்பட்டு, சாவி பத்திரிகையின் புகைப்படக் கலைஞர் ராதாகிருஷ்ணனுடன் கிளம்பிப் போனேன். சரோஜாதேவியை இரண்டாவது முறையாக, இந்த முறை ஒரு பத்திரிகையாளன் என்கிற முறையில் சந்தித்தேன். அ.தி.மு.க. இரண்டாக உடைந்தது பற்றியும், எம்.ஜி.ஆரின் வாரிசாக ஜெயலலிதா வந்திருப்பதுபோல், எம்.ஜி.ஆருடன் அதிகம் நடித்தவர் என்கிற முறையில் அவரும் அரசியலில் எம்.ஜி.ஆரின் வாரிசாக வந்திருக்கலாமே, ஏன் வரவில்லை என்றும் கேட்டேன். “அச்சச்சோ! பேட்டியே வேணாம். எனக்கு அரசியலே தெரியாது. பிடிக்காது. ஜெயலலிதா நல்ல டேலண்ட்டட் வுமன். அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்!” என்று சிரித்தபடி கையெடுத்துக் கும்பிட்டு, பேட்டி கொடுக்கக் கண்டிப்பாக மறுத்துவிட்டார்.

“ஒரு ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னால், உங்களின் ரசிகன் என்கிற முறையில், பெங்களூரில் உங்களை உங்க வீட்டுக்கே வந்து சந்தித்துப் பேசிவிட்டுப் போனேன்” என்றேன். “அப்படியா..!” என்று அதற்கும் ஒரு சிரிப்பு.

பின்னர், சரோஜாதேவியிடம் நான் எடுக்க நினைத்திருந்த அதே பேட்டியை, ஃப்ரீலான்ஸ் ரைட்டராக இருந்த வரதராஜன் என்பவரை அனுப்பி, பழம்பெரும் நடிகை பி.பானுமதியிடம் பேட்டி எடுத்து வரச் சொன்னேன். ‘கலைஞர் ஆட்சி வந்தால்தான் தமிழகத்துக்கு நல்லது’ என்பது போல் அந்த பேட்டியை எழுதிக் கொடுத்திருந்தார் வரதராஜன். சாவியில் அதை வெளியிட்டேன். அது அப்படியே மாலை முரசு பேப்பரில் முழுப்பக்கம் வெளியானது.

அடுத்த வாரம், சாவி பத்திரிகை அலுவலகத்துக்கு ஒரு போன்கால். நான்தான் எடுத்துப் பேசினேன். “நான் பானுமதி பேசறேன்...” என்று கணீர்க் குரல் கேட்டது. “சொல்லுங்கம்மா” என்றேன்.

“நீங்க அனுப்பின நிருபர் சுத்த ஃப்ராட்! அவருக்குக் கற்பனை வளம் ரொம்ப ஜாஸ்தியா இருக்கு. நான் சொல்லாததையெல்லாம் சொன்னது மாதிரி திரிச்சுத் திரிச்சு எழுதியிருக்கார். எல்லாமே தப்பு. என் ஆல்பத்துலேர்ந்து நிறைய போட்டோஸ் வாங்கிட்டுப் போனார். அதையெல்லாம் உடனடியா கொண்டு வந்து கொடுக்கச் சொல்லுங்க. அவரை லெஃப்ட் அண்ட் ரைட் விட்டாத்தான் சரிப்படும்” என்றார்.

பின்னர், வரதராஜனைச் சந்தித்து விஷயத்தைச் சொன்னபோது, “அவங்க பரம்பரையாவே காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவங்க. கலைஞரைப் புகழ்ந்து பேட்டி கொடுத்ததைப் பார்த்து யாராவது ஏதாவது சொல்லியிருப்பாங்க. அதான், அப்படி மாத்திச் சொல்றாங்க” என்றார் கூலாக. “இருக்கட்டும்... அவங்க கிட்டேர்ந்து வாங்கிட்டு வந்த போட்டோக்களையெல்லாம் கொண்டு போய்க் கொடுத்துடுங்க” என்றேன். ‘ஆகட்டும்’ என்றார்.

ஆனால், பத்து நாட்களுக்குப் பிறகு மீண்டும் பானுமதியம்மாவிடமிருந்து போன். “உங்க ஆசாமி வரவே இல்லை. போட்டோக்களைக் கொண்டு தரவே இல்லை. பண்ற தப்பையும் பண்ணிட்டு, இங்கே வந்து என் எதிர்ல எப்படித் தைரியமா நிக்க முடியும் அந்த ஆளால?” என்றார் கேலிச் சிரிப்போடு. “அவர் எங்க பத்திரிகையைச் சேர்ந்தவர் இல்லைம்மா. பிரமுகர்களைப் பேட்டி எடுத்து, எந்தப் பத்திரிகைக்குப் பொருத்தமோ, அதுக்குக் கொடுப்பாரு. உங்க கிட்டேர்ந்து வாங்கிட்டு வந்த போட்டோக்கள்ல, நாங்க பிரசுரம் பண்ணியிருக்கிற அந்த ஒரு போட்டோவைத் தவிர, வேறு எதையும் என் கிட்டே கொடுக்கலை. நான் வேணா, அந்தப் போட்டோவை நானே கொண்டு வந்து உங்க கிட்டே கொடுக்கவா?” என்று கேட்டேன்.

கலகலவென்று சிரித்தார். “வேணாம், வேணாம்... போட்டோஸ் எனக்கு முக்கியமில்லை. அதைக் கொண்டு வர்ற சாக்குல, அந்த ஆளைப் பிடிச்சு லெஃப்ட் அண்ட் ரைட் விடலாம்னு பார்த்தேன். அவ்வளவுதான்! மத்தபடி, நீங்க என்னைச் சந்திக்கணும்னா எப்ப வேணா என் வீட்டுக்கு வரலாம்” என்றார் கனிவான குரலில்.

ஆனால், நடிப்புக்கு இலக்கணமாம் பி.பானுமதியைப் போய்ச் சந்திக்கவில்லை நான்.

அவர் என் அபிமான நடிகை இல்லை (ஆனால், அவரது நடிப்பு எனக்குப் பிடிக்கும்) என்பது மட்டுமில்லை அதற்குக் காரணம்; பத்திரிகைத் துறைக்கு வந்த பின், சினிமா நட்சத்திரங்களைச் சந்திக்கும் ஆர்வம் எனக்கு அடியோடு போய்விட்டிருந்தது என்பதுதான்!

குறிப்பு: “உங்கள் வலைப்பூக்களைத் தொடர்ந்து படிக்கிறேன். ரொம்பச் சுவாரஸ்யமாக இருக்கிறது. உங்கள் அனுபவங்களை அடிக்கடி பதிவிடுங்கள்” என்றார் என் பெருமதிப்புக்குரிய நகைச்சுவை எழுத்துலக ஜாம்பவான் திரு.ஜ.ரா.சுந்தரேசன் (பாக்கியம் ராமசாமி), சமீபத்தில். ஏதோ டயரி எழுதுவது போல்தான் எழுதுகிறேனே தவிர, பிறருக்கு இது சுவாரஸ்யமாக இருக்குமா என்று எனக்கு ஒவ்வொரு முறையுமே பதிவிட்டு முடித்ததும் சந்தேகம்தான். திரு.பாக்கியம் ராமசாமி அவர்கள் கொடுத்த ஊக்கத்தின் பேரில் இந்தப் பதிவை எழுதியுள்ளேன். இது உங்களுக்குச் சுவைக்கவில்லை என்றால், அந்தப் பழி அவரைத்தான் சாரும்! :)
.

21 comments:

நல்லதொரு அனுபவத்தினை எங்களுடன் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி. நீங்கள் இடும் ஒவ்வொரு பதிவுமே சுவாரசியம்தான் – அதில் சந்தேகமென்ன? அதனால் தொடர்ந்து பதிவிடுங்கள் – இது “உங்கள் ரசிகனின்” ரசிகனாய் ஒரு வேண்டுகோள்!.
 
மிகவும் நன்றாக உள்ளது.. உங்களை தொடர்வதே நீங்கள் இதுபோல் தொடர்வதால்தான்... நன்றி ;-)
 
நல்ல பகிர்வு சார். சுவாரஸ்யமாக எழுதுவதற்கு உங்களுக்கு சொல்லியா கொடுக்க வேண்டும். இந்தப் பதிவிற்கு காரணமான ஜா.ரா.சு அவர்களுக்கும் என் நன்றிகள்.
 
சுவாரசியமான பதிவு! ஆனால், கொஞ்சம் அதிகப்பிரசங்கித்தனமாக ஒரு கேள்வி... பத்திரிகைத் துறைக்கு வந்த பின் நட்சத்திரங்களைச் சந்திக்கும் ஆவல் அகன்றுவிட்டது என்று காரணம் சொல்லியிருக்கிறீர்கள், பானுமதியைச் சந்திக்காததற்கு. ஆனால், சரோஜாதேவி சென்னை வந்திருப்பது தெரிந்து உடனே ஓடிப்போய்ப் பார்த்தீர்களே, அது ஏனோ? :)
 
பைங்கிளியை பார்த்த கதையை வழக்கம் போல் எல்லா தொடர்பு செய்திகளோடு பகிர்ந்தது சிறப்பு.. அதற்கு தான் உங்கள் ரசிகர்களாக நாங்கள் இருக்கிறோம்....

சரி ```கோபால்`` வசனத்தை சொல்ல சொல்லிக்கேட்டிங்களா..அது இன்னமும் கொடிகட்டி பறக்கும் வசனம்...
 
திரு.வெங்கட் நாகராஜ், தங்களின் மனப்பூர்வமான பாராட்டுக்கு நன்றி!

திரு.ஆர்.வி.எஸ்., மிக்க நன்றி!

திரு.செ.சரவணக்குமார், தங்களின் அன்பான பின்னூட்டத்திற்கு நன்றி!

திரு.கணேஷ்ராஜா, நீங்கள் தொடர்ந்து என் பதிவுகளை உன்னிப்பாகப் படித்து வருகிறீர்கள் என்பதை அறிய மகிழ்ச்சி; நன்றி! வெறுமே படிப்பதோடு மட்டுமின்றி, பதிவு பற்றிய சில கேள்விகளை நுணுக்கமாக எழுப்புகிறீர்கள் என்பதை அறிந்து வியக்கிறேன்; ரசிக்கிறேன்.

‘பத்திரிகைத் துறைக்கு வந்த பின், நட்சத்திரங்களை ஒரு ரசிகனாகச் சந்திக்கும் ஆர்வம் அடியோடு போய்விட்டிருந்தது’ என்று எழுதியிருந்தால் நீங்கள் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்க மாட்டீர்கள்தானே? :)
 
ஜ.ரா.சுந்தரேசன் அவர்களுக்கு நன்றி
 
நன்றி திரு.பத்மநாபன்! நான் சரோஜாதேவியை ஒரு ரசிகனாகச் சந்தித்தது 30 ஆண்டுகளுக்கு முன்பு! (அப்போது என் வயது 20; அவர் வயது 40.) அப்போதெல்லாம் அவர் குரலை யாரும் இப்போது மாதிரி மிமிக்ரி செய்தது இல்லை; ‘என்னெ மறந்துடாதீங்க கோபால்’ என்கிற டயலாக் தனித்துவமாகப் பேசப்பட்டது இல்லை. என்றாலும், சிவாஜியுடன் அவர் ஜோடியாக நடித்த ஒரு படத்தில் (பெயர் மறந்துவிட்டது) அப்பா விசாரிக்க, ‘சந்த்ரூப்பா..!’ என்று கொஞ்சலாக தன் காதலன் சிவாஜி பேரைச் சொல்லுவார். அதே போல், ‘அரும்பு மீசை, குறும்புப் பார்வை, அஞ்சடி ஆறங்குலம்...’ என்பார் தனக்கே உரிய மழலைக் குரலில். அதை ரசித்ததைச் சொன்னேன். பகபகவென்று சிரித்துவிட்டு, ‘தமிழைத் தப்பில்லாமச் சொன்னேனா... அவ்ளோதான்!’ என்று மறுபடி சிரித்தார். ஒரு பெரிய நடிகையாக இருந்தும், எந்தவித பந்தாவும் இல்லாமல், மிகச் சாதாரண ரசிகனாக வந்து பார்த்த என்னிடம் மிக இயல்பாகச் சிரித்துப் பேசியதில் அவர் மீது இருந்த அபிமானம் இன்னும் உயர்ந்தது!
 
திரு.சரவணகுமரன் அவர்களுக்கு நன்றி!
 
///‘சந்த்ரூப்பா..!’ என்று கொஞ்சலாக தன் காதலன் சிவாஜி பேரைச் சொல்லுவார். அதே போல், ‘அரும்பு மீசை, குறும்புப் பார்வை, அஞ்சடி ஆறங்குலம்...’ என்பார் தனக்கே உரிய மழலைக் குரலில். அதை ரசித்ததைச் சொன்னேன். //

இதை படிக்கறப்பவே இவ்வளவு ஆனந்தமாக இருக்கிறதே... படத்துல பார்த்தா இன்னமும் கூடும்... பைங்கிளியின் தலைமை ரசிகரை சீண்டியதில் எனக்கு கிடைத்த சுவாரஸ்ய செய்தி...

// பகபகவென்று சிரித்துவிட்டு, ‘தமிழைத் தப்பில்லாமச் சொன்னேனா... அவ்ளோதான்!’ என்று மறுபடி சிரித்தார்.//

தன்னடக்கமும் எதார்த்தமும் வியக்க வைக்கிறது...
 
வழக்கம் போல் நல்லாயிருக்கு.

தொடருங்கள்.
 
சுவாரஸ்யமான பகிர்வு சார்
 
அது என்ன அப்படி ஒரு வரி கடைசியில?? இந்த விஷயங்கள் எல்லாம் எவ்வளவு சுவாரஸ்யமாய் இருக்கிறது தெரியுமா? உங்கள் அனுபவங்கள் எல்லாம் எங்களைப்போன்றவர்களுக்கு ஒரு பொக்கிஷம் போல. தொடர்ந்து எழுதுங்கள். அடுத்த புக் என்ன எழுதிக்கிட்டு இருக்கீங்க?
 
நல்லதொரு பகிர்வு. இன்னும் நிறைய படங்களை தந்து இருக்கலாமே.... இதே போல நிறைய பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றிங்க.
 
ஒரு தமிழனாக சரோஜாதேவியை மதிக்கமுடியாது. கீழ்தஞ்சை மாவட்டங்களில் வரட்சியின் கொடுமையில் விவசாயிகள் சாகும்போது கர்னாடகா காவேரி நீர் தர மறுத்தது. தமிழ்நாட்டில் சம்பாதித்த இந்த நடிகை கர்னாடகாவுக்கு ஆதரவாக பேசினார்.

ஒரு பத்திரிக்கையாளனாக உள்ள உங்களுக்கு இது எப்படி தெரியாமல் போனது?..எப்படி இந்த நடிகையை பற்றி சிலாகித்து எழுத முடிகிறது?

ZAKIR HUSSAIN
 
நன்றி பட்டர்ஃப்ளை சூர்யா!

நன்றி நேசமித்ரன்!

நன்றி கவிதைக் காதலன்!

நன்றி சித்ரா!

நன்றி கீதா!
 
திரு.ஜாகிர் உசேன்! தங்களின் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி!

காவிரி நீர் அரசியல் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் ஒரு விஷயம். அங்கே காங்கிரஸார் ஆண்டாலும், பி.ஜே.பி. ஆண்டாலும், எவர் ஆண்டாலும் தமிழனுக்குத் தண்ணீர் தருவதில்லை. ஆனால், இங்கே தமிழ்நாட்டில் பி.ஜே.பிக்கும் ஓட்டுப் போடுகிறோம்; காங்கிரஸுக்கும் ஓட்டுப் போடுகிறோம். இங்குள்ள மாநிலக் கட்சிகள் இந்தப் பெரிய கட்சிகளுடன் மாறி மாறிக் கூட்டு வைத்துக்கொள்கின்றன. இந்த விஷயத்தில் திரைப்பட நடிகர்களையும், நடிகைகளையும் சந்தித்து அபிப்ராயம் கேட்பதே தவறு. அவர்கள் எல்லா மொழிக்கும் பொதுவானவர்கள். கேரளா கூடத்தான் தண்ணீர் தர மறுக்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் இன்றைக்குப் பாப்புலராக இருக்கிற நடிகைகள் பெரும்பாலும் கேரள நடிகைகள்தான். கர்நாடகாவில் வாழ்ந்துகொண்டு இருக்கிற சரோஜாதேவியிடம் போய்க் கேட்டால், கர்நாடகர்களுக்குத்தான் ஆதரவாகச் சொல்லுவார். பின்னே, தமிழருக்கு ஆதரவாக ஒரு கருத்தைச் சொல்லி வீணாக குண்டர்களின் வன்முறைக்கு ஆளாகவா விரும்புவார்? இங்கேயுள்ள கன்னட நடிகர்கள் மட்டும் என்னவாம்? இங்கேதான் இவர்கள் பேச்செல்லாம் தமிழருக்கு ஆதரவாக இருக்கிறது. பெங்களூர் போனால், அவர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கும். இது இயல்பு.

அவ்வளவு ஏன்... பெங்களூரில் நான் சந்தித்த, அங்கு வசிக்கும் பல தமிழர்களேகூட, “தண்ணி தரலேன்னு, தண்ணி தரலேன்னு சொல்றாங்களே... அங்கே தண்ணி கொடுத்துட்டா, அப்புறம் இங்கே நாங்க என்ன பண்றது? சென்னை மக்கள் மாதிரி குடத்தைத் தூக்கிக்கிட்டுத் தெருத் தெருவா அலைய வேண்டியதுதான்!” என்று சொல்லிக் கேட்டிருக்கிறேன்.

இத்தனை ஏன்..? இங்கே நாங்கள் வசிக்கும் வீட்டில் மோட்டார் ரிப்பேராகி இரண்டு மூன்று நாள் தண்ணி கிடைக்காமல், தெரு டேங்க்கை நிரப்பும் குடிநீர் லாரியும் வராமல் மிகவும் அவதிப்பட்டு, அக்கம்பக்கத்து வீடுகளில் நாலு குடம் தண்ணீர் கேட்டதற்கு முகத்தில் அடித்தாற்போல் மறுத்துவிட்டார்கள்.

யாரோ கொடுத்த புகாரின் பேரில் சமீபத்தில் எங்கள் தெருவில் உள்ள குப்பைத் தொட்டியை அகற்றிவிட்டார்கள். அங்கே குப்பைத் தொட்டி இல்லாததால், ‘இங்கே குப்பை கொட்டாதீர்கள்’ என்று அங்குள்ள கடைக்காரர்கள் நோட்டீஸ் போர்டு எழுதி வைத்துவிட்டார்கள். வீட்டுக் குப்பையை வெளியே போட முடியாமல், பக்கத்துத் தெருவில் குப்பைத் தொட்டியில் போடப் போனால், ‘உங்க தெரு குப்பையை எல்லாம் இங்கே கொண்டு வந்து போடுவீங்களா?’ என்று பிலுபிலுவென்று சண்டைக்கு வந்துவிட்டார்கள்.

தமிழனுக்குத் தமிழனே உதவ மாட்டேன் என்கிறான். இந்த லட்சணத்தில், நீங்கள் கன்னட நடிகையின் பேச்சை ஒருபொருட்டாக மதித்துக் கேள்வி கேட்கிறீர்கள்!

நல்ல மனம் உள்ளவர்கள் எங்கும் இருக்கிறார்கள். ஆனால் இடம், பொருள், ஏவல் அறிந்துதானே பேச வேண்டியிருக்கிறது?

காவிரி நீர் அரசியல். அதனோடு தயவுசெய்து கலையைக் கலந்து பார்க்காதீர்கள். பிறகு, நம்மால் எதையுமே ரசிக்கவோ, நேசிக்கவோ முடியாமல் போய்விடும்!

மற்றபடி, உங்களின் அக்கறையான பின்னூட்டத்திற்கு மீண்டும் என் நன்றி!
 
இவ்வளவு விவரமாக எழுதியமைக்கு நன்றி. உங்கள் கருத்திலும் எழுத்திலும் ஞாயம் இருக்கிறது. கலையை அரசியலோடு சேர்த்து நான் பார்க்கவில்லை. என் கண்முன்னே என் விவசாய மக்கள் பசியாலும் வறுமையாலும் பட்ட கஷ்டம் இன்னும் என் மனதை விட்டு அகலவில்லை.

ZAKIR HUSSAIN
 
எல்லா அனுபவங்களும் unique ஆனவை தான் ..எழுதுங்கள் படிக்க நாங்கள் உள்ளோம்
 
நடிகை சரோஜாதேவி பத்தி எழுதியிருந்தது நல்லா இருந்துச்சு. பானுமதி, சாவித்திரி, உங்களுக்குப் பிடிச்ச இன்னொரு நடிகை தேவிகான்னு வரிசையா எழுதிட்டே போகவேண்டியதுதானே? :)
 
excellant sir
shall i use this in other sites for reference with your permission