உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Friday, September 24, 2010

குதிரைக்குக் குரல் கொடுத்தவர்!

சை மேதைகள் சுதர்ஸனம், எஸ்.எம்.சுப்பையா நாயுடு, ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் எனப் பலரைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், இசை மேதை சங்கீத பூஷணம் எம்.டி.பார்த்தசாரதி பற்றி யாராவது கேள்விப்பட்டிருக்கிறோமா?

அபார திறமை இருந்தும், குடத்தில் இட்ட விளக்காக இருந்து, மறைந்துவிடுகிறார்கள் பல மேதைகள். அவர்களில் ஒருவர்தான் திரு.எம்.டி.பார்த்தசாரதி.

ஜெமினி பிக்சர்ஸின் ஆஸ்தான இசையமைப்பாளராகப் பணியாற்றியவர் இவர். ஜெமினியின் தயாரிப்புகளான மதன காமராஜன், பக்த நாரதா, ஞான சௌந்தரி, மங்கம்மா சபதம், தாசி அபரஞ்சி, கண்ணம்மா என் காதலி, பாதுகா பட்டாபிஷேகம், சக்ரதாரி, அபூர்வ சகோதரர்கள் போன்ற பல படங்களுக்கு இசையமைத்தவர் இவர்தான்.

‘நந்தனார்’ படத்தில் நந்தனாராகவே வாழ்ந்திருந்தார் எம்.எம்.தண்டபாணி தேசிகர்; ‘ஔவையார்’ படத்தில் ஔவையாராகவே மாறிவிட்டார் கே.பி.சுந்தராம்பாள். இருவரையும் புகழ் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்த இந்த இரண்டு படங்களுக்கும் இசை அமைத்திருந்தவர் பார்த்தசாரதிதான். இந்தப் படங்களின் இசை அந்தக் காலத்தில் பலராலும் மிகுந்த பாராட்டுக்களைப் பெற்றது. ‘சந்திரலேகா’வில் கர்னாடக முறையிலான இசையை பார்த்தசாரதியும், மேற்கத்திய பாணியிலான இசையை எஸ்.ராஜேஸ்வரராவும் அமைத்திருந்தனர். அந்தப் படத்தில் ‘நாட்டியக் குதிரை’ பாட்டு செம ஹிட்! பார்த்தசாரதி இசைமைத்த அந்தப் பாட்டில் குதிரை பாடுவது போல் குரலை மாற்றிக் கட்டைக் குரலில் பாடியுள்ளவர் அவரேதான்.

இசை மேதைகள் சபேசய்யரிடமும், பொன்னையாபிள்ளையிடமும் சங்கீதம் கற்றுத் தேர்ந்து ‘சங்கீத பூஷணம்’ என்ற பட்டத்தைப் பெற்றிருந்தாலும், பார்த்தசாரதி ஆரம்ப காலத்தில் ஒரு நடிகராகத்தான் திரையுலகுக்கு வந்தார். ‘சக்குபாய்’ படத்தில் விஷ்ணுசித்தராக நடித்தார். தொடர்ந்து ஸ்ரீனிவாச கல்யாணம், திரௌபதி வஸ்திராபரணம், சேது பந்தனம், தியாக பூமி எனப் பல படங்களில் நடித்தார். கருட கர்வ பங்கம் படத்தில் ஹனுமானாக இவர் நடித்தது, இவருக்குப் பெரிய புகழைத் தேடித் தந்ததோடு, சிறந்த நடிகர் விருதையும் பெற்றுத் தந்தது. ராஜபக்தி படத்தில் வில்லனாக நடித்தார் பார்த்தசாரதி. தமிழில் முதலில் தயாரான வண்ணப்படம் ‘தர்மபுரி ரகசியம்’. இதில் நடிக்கும் வாய்ப்பு பெற்றவர் பார்த்தசாரதி. அதில் அவர் இரண்டு வேடங்களில் நடித்தார்.

அந்தக் காலத்தில் மிகப் பிரபலமாக இருந்த சுகுண விலாஸ் சபாவின் மேடை நாடகங்களில் ஏற்கெனவே நடித்திருந்தார் பார்த்தசாரதி. இவரது நடிப்பாற்றலைக் கண்டு வியந்து, இவரைத் திரையுலகுக்கு அழைத்து வந்தவர் அந்தக் காலத்தில் மிகப் பிரபல நடிகராகவும் வசனகர்த்தாவாகவும் இருந்த திரு.வடிவேலு நாயக்கர். அந்நாளில் பாடத் தெரிந்தவர்கள்தான் நடிக்கவும் முடியும். பார்த்தசாரதிக்கு இயல்பிலேயே கணீர் குரலும், சங்கீத ஞானமும் அமைந்திருந்ததால், அவரால் சுலபமாகத் திரையில் பரிமளிக்க முடிந்தது.

நடிகராகப் புகழ் பெற்றதும் சொந்தமாகத் திரைப்படம் எடுக்க முயன்றார் பார்த்தசாரதி. ஆனால், அது தோல்வியில் முடிந்தது. 1940-ல் ‘அபலா’ என்னும் திரைப்படத்துக்கு முதன்முதலாக இசையமைத்தார். இசை என்னவோ பரவலாகப் பெரிதும் பாராட்டப்பட்டாலும், படம் ஃப்ளாப் ஆனதால், இவர் பெயரும் சேர்ந்து அடிபட்டது. பின்னர் இவர் திருச்சி சென்று ‘ஆல் இண்டியா ரேடியோ’வில் (அந்நாளில் இது திருச்சி ரேடியோ கார்ப்பொரேஷன் என்று அழைக்கப்பட்டது) நிலைய வித்வானாகச் சேர்ந்து பணியாற்றினார். பின்பு, ஜெமினி நிறுவனத்தில் வேலை கிடைக்க, அந்த வேலையை உதறிவிட்டுச் சென்னை வந்தார்.
இவரது இசையாற்றலுக்கு ஓர் உதாரணம்... சக்ரதாரி படத்தில் கோராகும்பராக நடிப்பார் பழம்பெரும் நடிகர் நாகையா. பானை வனையும் தொழில் செய்பவர் பக்த கோராகும்பர். நாராயண பக்தியில் திளைத்து, பாண்டுரங்கனை நினைத்துப் பரவசத்தில் பாடியபடியே மண்ணை மிதித்துக் குழைத்துக்கொண்டு இருப்பார் நாகையா. அப்போது அவரது குழந்தை தவழ்ந்து, அவரது காலின் கீழ் வரும். பக்தியில் மெய்ம்மறந்திருந்த கோராகும்பர், குழந்தை வந்தது தெரியாமல், அதையும் சேர்த்து மிதித்துக் குழைத்து மண்ணோடு மண்ணாக்கிவிடுவார். குழந்தையின் தாய் பதறி ஓடி வந்து, இந்தக் காட்சியைக் கண்டு, மயக்கமுற்று விழுவதாக ஸீன்.

குழந்தையின் தாயாக நடித்தவர் புஷ்பவல்லி. குறிப்பிட்ட அந்தக் காட்சியில், அவர் நிஜமாகவே மயங்கி விழுந்துவிட்டார். அதை முதலில் நடிப்பு என்று நினைத்த படப்பிடிப்புக் குழுவினர், நீண்ட நேரம் அவர் எழுந்திருக்காததால், பின்னர் அவரை அவசரமாகத் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்துச் சிகிச்சையளித்து, மயக்கம் தெளிவித்தனர்.

எழுந்ததும் புஷ்பவல்லி சொன்னார்... “இந்தக் காட்சியின்போது ஒலித்த உருக்கமான இசையும் பாடலும் என்னை என்னவோ செய்தது. காட்சியின் தீவிரமும் அபூர்வமான இசையும் சேர்ந்துகொண்டதில், உண்மையாகவே எனக்கு மயக்கம் வந்துவிட்டது!”

தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் புலமை மிக்கவர் பார்த்தசாரதி. இவர் இசையமைப்பில் வெளியான கடைசி படம் ‘நம் குழந்தை’. இதில் பணியாற்றிய இசைக்குழுவினருக்குப் படத் தயாரிப்பாளரால் சம்பளம் கொடுக்க முடியாமல் போக, பார்த்தசாரதி தமது சொந்தப் பணத்திலிருந்து எடுத்து அவர்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தந்தார்.

1958-ல் திரைத் துறையை விட்டு விலகி, பெங்களூர் ஆல் இண்டியா ரேடியோவில் மெல்லிசை நிகழ்ச்சித் தயாரிப்பாளராகச் சேர்ந்து பணியாற்றினார் பார்த்தசாரதி. அங்கே பற்பல குறிப்பிடத்தக்க இசை நிகழ்ச்சிகளைத் தயாரித்தளித்து, 1963-ல் அமரர் ஆனார்.

மிகுந்த தெய்வ பக்தி உள்ளவர் பார்த்தசாரதி. குறிப்பாக, திருப்பதி வெங்கடாசலபதி மீதும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மீதும் அளவற்ற பக்தி கொண்டவர். சின்ன வயதிலிருந்தே கோயில் பஜனைகளிலும், ஏகாந்த சேவைகளிலும் கலந்துகொண்டு பாடுவதில் விருப்பம் கொண்டவர். சாகும் தறுவாயிலும்கூட அவரது வாய் காயத்ரி மந்திரத்தைதான் முணுமுணுத்துக்கொண்டு இருந்தது; அவரது கை விரல்கள் அதன் எண்ணிக்கையைக் கணக்கிட்டபடி இருந்தன.

1910-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21-ஆம் தேதி பிறந்தவர் எம்.டி.பார்த்தசாரதி. நாளைய 25-ஆம் தேதி (நட்சத்திரப்படி), மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் இவரது நூற்றாண்டு விழா நடைபெற உள்ளது.

‘சந்திரலேகா’ படத்தின் ‘நாட்டியக் குதிரை’ பாடல் காட்சியைக் காண விரும்புகிறவர்கள் இதை க்ளிக் செய்யவும்.
.

11 comments:

அபூர்வமான மனிதரைப் பற்றிய அபாரமான கட்டுரை. மனம் கனிந்த பாராட்டுக்கள்.
 
நன்றி லதானந்த்! பதிவிட்ட சில நிமிடங்களிலேயே படித்துத் தங்கள் கருத்தைப் பதிந்த வேகத்துக்கு இன்னுமொரு நன்றி! :)
 
நேற்றுதான் இவரைப் பற்றி படித்தேன். இன்று நீங்கள் எழுதி இருக்கிறீர்கள். என் பதிவை இங்கே காணலாம்.

http://awardakodukkaranga.wordpress.com/2010/09/24/%E0%AE%87%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0/
 
இசை மேதை எம்.டி.பார்த்தசாரதி பற்றி அருமையாக எழுதி இருக்கிறீர்கள். அவரைப் பற்றி எனக்குத் தெரிந்த ஒரு தகவலை இங்கே எழுதுகிறேன்.

பால நாகம்மா படத்தில் மாயால மராட்டி என்றொரு கதாபாத்திரம். பார்ப்பவர்களைக் கதிகலங்க வைக்கும் தோற்றத்துடன் வரும் வில்லன் பாத்திரம் அது. அந்தப் பாத்திரம் அறிமுகம் ஆகும் காட்சியில் அதிரடி இசை வேண்டும் என்று விரும்பினார் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.வாசன். அந்தக் காட்சியை 100 முறைகளுக்கும் மேல் போட்டுப் பார்த்துவிட்டார் இசையமைப்பாளர் பார்த்தசாரதி. அவருக்கு எத்தகைய மெட்டுப் போடுவது என்று ஒன்றும் பிடிபடவில்லை. இதற்குள் பகல் 1 மணி ஆகி, லஞ்ச் பிரேக் வந்துவிட்டது.

எல்லோருமாகக் கிளம்பிப் போய், சாப்பிட உட்கார்ந்தார்கள். இலைகளில் காய்கறிகள் பரிமாறப்பட்டன. அடுத்து, கையில் ஒரு பெரிய சாதத் தட்டுடன் பரிமாறிக்கொண்டே வந்த சர்வர், பார்த்தசாரதி அருகில் வந்ததும், சூடு தாங்காமல் தட்டைக் கீழே போட்டுவிட்டார். அந்தத் தட்டு பித்தளைத் தட்டு. அதுவும், கூடவே வெண்கல அன்னக் கரண்டியும் சேர்ந்து விழுந்ததில், ணங்... கிணிங்... என்று பலத்த, வினோதமான ஓசை உண்டாகியது. அவ்வளவுதான்... பார்த்தசாரதி உடனே எழுந்து, கை கழுவிக்கொண்டு இசைக்கூடத்துக்குப் போய்விட்டார். அவரது உத்தரவின் பேரில் மெஸ்ஸில் இருந்த பெரிய பெரிய பித்தளை அண்டாக்கள், தாம்பாளங்களை (எண்ணிக்கை சுமார் 150) எடுத்துக்கொண்டு போனார்கள். அவற்றை உயரமான ஒரு இடத்திலிருந்து தடாலென்று போட்டார்கள். அதுதான் பால நாகம்மாவில் வில்லன் அறிமுகமாகிற காட்சிக்கான அதிரடி இசையாக அமைந்தது. எஸ்.எஸ்.வாசன் திருப்தி அடைந்து பார்த்தசாரதியைக் கட்டிப்பிடித்து அணைத்துக்கொண்டு பாராட்டினார்.

ஜெமினி கேண்ட்டீன் அதிபர் ஏ.என்.எஸ்.மணியன் என் அப்பாவின் நெருங்கிய நண்பர். அவர் என் அப்பாவிடம் சொல்லி, அப்பா மூலம் எனக்குத் தெரிந்த தகவல் இது.‌
 
அற்புதமான பதிவு! அபூர்வ சகோதரர்களில் வரும் 'மானும் மயிலும் ஆடும் சோலை மாலை இந்நேரம்...' என்ற இனிமையான பாடலுக்கு இசையமைத்தவர் இவர் என்று அறிந்ததில் மகிழ்ச்சி...
 
திரு பார்த்தசாரதி பற்றி இத்தனை தகவல்கள் தந்ததற்கு நன்றி. இணைத்திருந்த பாடலை நான் இப்போது தான் முதல் முறை பார்க்கிறேன். நன்றி.
 
இவரின் அறிமுகம் அருமை!!
இதைப் போல் எண்ணற்ற வித்தகர்கள்
வெளிச்சம் இல்லாமல் இருந்தார்களே ?
அவர்கள் எல்லாரையும் அறிமுகப் படுத்துங்கள், ப்ளீஸ் !!!
 
nice one!
 
என்ன சார், ரொம்ப நாளா வலைப்பூ பக்கம் ஆளையே காணோம்? வேலை பளு அதிகமோ? வாரத்துக்கு ஒரு தடவையாவது வந்து ஏதாச்சும் கிறுக்கிட்டுப் போங்க சார்! அதிகம் வேணாம்... ஒரு ரெண்டு பாராவாச்சும் எழுதலாமில்லே?
 
ரொம்ப நாளா பதிவே இல்லையே, ஏன்?
ஆவலுடன் காத்திருக்கும்,
அன்பன்,
ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/
 
ரொம்ப நாளாச்சு போல இருக்கே..புதுசா எதாவது போடுங்களேன்...ப்ளீஸ்..

அன்பு கலந்த உரிமையுடன்,

ஆர்.ஆர்.ஆர்.
http://keerthananjali.blogspot.com/