உங்கள் ரசிகன்

ஆஹா ரசிகன்.. நல்ல ரசிகன்.. உங்கள் ரசிகன்!

Sunday, August 01, 2010

மொட்டை மாடியில் ‘கீதா’பதேசம்!

சென்னைப் பொது மருத்துவமனையில், இதயவியல் துறைத் தலைவராக இருக்கும் டாக்டர் கீதா சுப்ரமணியன் அவர்கள், சென்ற ஞாயிற்றுக்கிழமையன்று விகடன் ஊழியர்களிடையே உரையாற்றினார்.

‘டாக்டர், அதுவும் இதயவியல் நிபுணர், என்ன பெரிதாகப் பேசிவிடப்போகிறார்... இதய நோய் பற்றிய மருத்துவக் குறிப்புகளைச் சொல்லி போரடிக்கப் போகிறார்’ என்று சற்றே அசுவாரசியமாகத்தான் அதில் கலந்துகொண்டேன்.

ஆனால், என்ன ஆச்சரியம்..! வார்த்தைக்கு வார்த்தை ரசித்துச் சிரிக்கும்படியாக, மிகவும் கலகலப்பாகவும் நகைச்சுவையாகவும் ஒரு மணி நேரத்துக்கும் மேல் பேசி அசத்திவிட்டார் டாக்டர் கீதா சுப்ரமணியன். இன்னும் சற்றுப் பேசமாட்டாரா என்று ஆசையாக இருந்தது.

இதய நோய் தொடர்பாகத்தான் பேசினார் என்றாலும், அதில் திருக்குறள், ஆன்மிகம் எனப் பலவற்றையும் கலந்தடித்துப் பேசினார் கீதா.

“கடவுள் ஒரு சாடிஸ்ட்!” என்றார். “ஆமாம். பின்னே, பாருங்களேன்... பாகற்காய், பூண்டுன்னு நம்ம உடம்புக்கு நல்லது பண்ற பொருள்களையெல்லாம் கசப்பா படைச்சிருக்கார். அதுவே, உடம்புக்குக் கெடுதி விளைவிக்கிற சர்க்கரை, வெல்லம் போன்றவற்றை வாய்க்கு ருசியா, இனிப்பா படைச்சிருக்கார்” என்றார். இயற்கைப் பொருள்களிலிருந்து மனிதன் படைத்ததுதான் சர்க்கரையும் வெல்லமும் என்று குறுக்குக் கேள்வி கேட்க வேண்டியதில்லை. ஒரு நகைச்சுவைக்காகச் சொல்லப்பட்டதை அப்படியே எடுத்துக் கொள்வோம்.

“இதயத்தில் அடைப்பு என்றதும், எல்லோரும் பதறிவிடுகிறார்கள். அவசியமே இல்லை. பெரும்பாலானவை மருந்துகொடுத்துக் குணப்படுத்திவிடக் கூடியவைதான். என்னிடம் வருகிற இதய நோய் பேஷண்ட்டுகளே, ‘மேடம், ஒரு ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்துடலாமா?’ என்று கேட்கிறார்கள். வேண்டாம் என்று சொன்னால், ‘இவ நெஜம்மாவே இதய டாக்டரா, இல்லே போலி டாக்டரா?’ என்று நினைத்துவிடுகிறார்கள்.

தவிர, ‘எனக்கு பி.பி. இருக்கு; நான் ஹார்ட் பேஷண்ட்; ஆஞ்சியோகிராம் பண்ணிக்கிட்டேன். இருபதாயிரம் ரூபா செலவாச்சு. பைபாஸ் சர்ஜரி பண்ணிக்கிட்டேன். ரெண்டு லட்ச ரூபா செலவாச்சு’ன்னு சொல்லிக்கிறது ஒரு ஸ்டேடஸ் சிம்பலா போச்சு. “உனக்கு பயப்படும்படியா ஒண்ணுமில்லே. வெறும் மருந்து, மாத்திரை போதும்”னு சொன்னா, அவங்களுக்கு அது ஏதோ குறையா இருக்கு. அதான், நான் இப்பெல்லாம் என்கிட்டே வரவங்களுக்குச் சொல்றேன்... ஆஞ்சியோகிராமுக்கு ஆகுற இருபதாயிரம் ரூபாயை அப்படியே பேங்க்ல ஃபிக்ஸட் டெபாசிட்ல போடுங்க. ஆனா, வெளியில நண்பர்கள் கிட்டே ‘ஆஞ்சியோகிராம் பண்ணிக்கிட்டேன்; எனக்கு இவ்ளோ ரூபா செலவாச்சு’ன்னு பெருமையா சொல்லிக்குங்க. பணத்துக்குப் பணமும் மிச்சம் ஆச்சு; பெருமைக்குப் பெருமையும் ஆச்சு”ன்னு நானே சொல்லித் தரேன்.

நாற்பது வயசு வரைக்கும் ஓடி ஓடிப் பணத்தைச் சேர்க்கிறோம்; உடம்பைப் பத்திக் கவலைப்படறது இல்லே. அதுக்குப் பிறகு, அப்படிப் பாடுபட்டுச் சேர்த்த பணத்தைத் தண்ணியா செலவு பண்ணி உடம்புக்கு வைத்தியம் பார்க்கிறோம். பணத்தைப் பத்திக் கவலைப்படறது இல்லே. ஏன் இப்படி?

ஒரு ஆஞ்சியோகிராம் எடுக்கிறது நூறு எக்ஸ்ரேக்கள் - அதுவும் ஒரே சமயத்தில் - எடுக்கிறதுக்குச் சமம். இதை யாரும் புரிஞ்சுக்கிறது இல்லை. காரணம், இதய நோய்ன்னதுமே ஏற்படற பயம். உயிருக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுட்டா என்ன பண்றதுங்கிற பயம். தேவையே இல்லை. உங்க பயத்தைப் பல டாக்டர்கள் பணமாக்கிக்கிறாங்க. ஹார்ட்ல பிராப்ளமா, உடனே ஒரு ஆஞ்சியோகிராம் எடுத்துப் பார்த்துடலாம்கிறாங்க. உங்களுக்கும் திருப்தியா இருக்கு. அவங்களுக்கும் லாபம்.

பொதுவா நாற்பது வயசுக்கு மேல, எல்லாரும் ‘டிரெட்மில்’ டெஸ்ட் எடுத்துக்கறது நல்லது. இதயத்துல அடைப்பு இருக்கான்னு சோதிக்கிற டெஸ்ட் அது. ரொம்ப எளிமையான டெஸ்ட். ஜி.ஹெச்-சுல பைசா செலவில்லாம எடுத்துக்கலாம். தனியார் ஆஸ்பத்திரிகள்ல போனா 700 ரூபா, 800 ரூபா ஆகும்.

ஆனா, இங்கே பரவலா என்ன ஒரு அபிப்ராயம் இருக்குன்னா, ஜி.ஹெச்ல நல்லா கவனிக்க மாட்டாங்க; தனியார் ஆஸ்பத்திரிகள்ல நல்லா கவனிப்பாங்கன்ற எண்ணம் இருக்கு. ரொம்ப தப்பு.

பி.பி-யின் அளவு 120-80 இருக்கிறதுதான் நார்மல். ஆனா, சில பேருக்கு 160-100-ன்னெல்லாம் இருக்கும். ‘என்னங்க, இப்படி இருக்கு?’ன்னு கேட்டா, ‘எனக்கு இதுதான் நார்மல் மேடம்’னுவாங்க. அப்படியெல்லாம் இல்லை.

அமெரிக்க ஜனாதிபதிக்கு தினசரி பி.பி. அளவு குறிச்சிட்டு வந்தாங்க டாக்டர்ங்க. ஒருநாள், ‘இன்றைக்கு ரூஸ்வெல்ட்டின் பி.பி. அளவு 200-120 இருந்துது. இது ரொம்ப நார்மல்தான்’னு எழுதியிருக்காங்க. பார்த்தா, மறுநாள் ரூஸ்வெல்ட் இறந்துட்டார். ஹார்ட் அட்டாக்!

மனிதன் சாகுறது ரெண்டு விதமா. சினிமாவுல எல்லாம் பார்த்திருப்பீங்களே! ஒண்ணு விக்கி விக்கிச் சாவான்; இல்லேன்னா ரத்தம் கக்கிச் சாவான். இதைத்தான் அன்னிக்கே நம்ம புலவர்கள் பாடி வெச்சிருக்காங்க.

‘முக்காலுக்கேகா முன் முன்னரையில் வீழா முன்
அக்காலரைக்கால் கண்டஞ்சா முன் - விக்கி
இருமா முன் மாகாணிக்கேகா முன் கச்சி
ஒருமாவின் கீழரையின்றோது.’

‘விக்கி விக்கிச் சாகுறதுக்கு முன்னே ஒரு தடவை காஞ்சிபுரம் போய், ஏகாம்பரநாதரை வணங்கு’ என்கிறார் காளமேகப் புலவர்.

‘கோலூன்றி நடப்பதற்கு முன், நரை திரை தோன்றுவதற்கு முன், எமனைக் கண்டு உயிர் அஞ்சி நடுங்குவதற்கு முன், விக்கலெடுத்து இருமத் தொடங்குவதற்கு முன், மயானத்துக்குச் செல்லும் முன், காஞ்சிபுரத்தில் ஒரு மாமரத்தின் கீழே எழுந்தருளியுள்ள ஏகாம்பரநாதரை இப்போது சென்று வழிபடு’ என்பது இப்பாட்டின் பொருள்.

முக்கால், கால், அரை, அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, ஒருமாவின் கீழ் அரை என இதில் பழைய தமிழ் முறை அளவுக் கணிதப் பெயர்கள் எல்லாம் வந்திருந்தாலும், மேற்படி பாடலில் இவற்றுக்கு வேறு அர்த்தங்கள் உண்டு.

முக்கால் - மூன்று கால் (அதாவது, இரண்டு கால்கள் தவிர, கோலூன்றி நடப்பதை மூன்றாவது கால் என்கிறார்); கால் - உயிர்; காலரை - கால தூதரை; முன்னரை - முதலில் வரும் அறிகுறியான நரைத்தல்; மாகாணி - மயானம்; ஒரு மா - ஒரு மாமரம்.

‘அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்...’னு திருமூலர் பாடுறார். அதுல, ‘இடப்பக்கமே இறை நொந்தது என்றார்; கிடக்கப் படுத்தார், கிடந்தொழிந்தாரே’ன்னு சொல்றார். இடப் பக்கம் வலிச்சுதாம்; ஹார்ட் அட்டாக். அடுத்த க்ஷணம் ஆள் காலி!

நானூறு கிராம் பருப்பு சாப்பிடணும், இருநூறு மில்லி எண்ணெய் சேர்த்துக்கிட்டா போதும்னெல்லாம் ஒவ்வொண்ணையும் கணக்குப் பண்ணிச் சாப்பிட வேண்டியதில்லை. அதெல்லாம் சும்மா பம்மாத்து. நாம நார்மலா சாப்பிடுற சாப்பாடு ஓ.கே. எதுவுமே அளவுக்கு மிஞ்சாம பார்த்துக்கிட்டா போதும். உதாரணம, தேங்காயெண்ணெய்ல கொலஸ்ட்ரால் இருக்குன்னு இப்பல்லாம் அதை ஒதுக்குற ஒரு கலாசாரம் பரவிக்கிட்டிருக்கு. ஆனால், தேங்காய் எண்ணெய்ல இருக்கிற பல நல்ல விஷயங்கள் யாருக்கும் தெரியறதில்லே. அதை ஒதுக்கிட்டு, சன் ஃப்ளவர் ஆயில் பயன்படுத்தறோம். ஆனா, அதிலேயும் கொலஸ்ட்ரால் இருக்கு. என்ன ஒண்ணு, மத்த எண்ணெய்களோடு ஒப்பிடும்போது அளவு குறைவா இருக்கு. நாம அதுலேயே வடை, அப்பளம், பூரின்னு தினம் தினம் பண்ணிச் சாப்பிட்டுக்கிட்டு இருந்தோம்னா அதுவும் கெடுதிதான்.

இங்கே இருக்கிறவங்கள்ல சிகரெட் எத்தனை பேர் பிடிப்பீங்க? சுமார் நாற்பது பேர் இருக்குமா? ஒரு பாக்கெட் சிகரெட் சுமார் ஐம்பது ரூபா. அப்படின்னா ஒரு நாளைக்கு 2,000 ரூபா. ஒரு மாசத்துக்கு 60,000 ரூபா. ஒரு வருஷத்துக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபா. எத்தனைப் பண விரயம்? இதை சேமிச்சு வெச்சா, இங்கே இன்னொரு பிளாக்கே கட்டலாமே? ஒரு ட்ரஸ்ட் மாதிரி ஏற்படுத்தினா, அவசரத் தேவைக்கு எடுத்துச் செலவழிக்கலாமே?” என்று டாக்டர் கீதா பேசப் பேச, அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையிலும் சத்தியம் தொனித்தது.

இதய நோய் பற்றிப் பேசும்போதே, நமது பண்பாடு, கலாசாரம், வாழ்க்கை முறை பற்றியெல்லாம்கூட நகைச்சுவை ததும்ப, அதே சமயம் நல்லதொரு குடும்ப அமைப்பு முறையை எப்படியெல்லாம் பாழாக்கிக்கொண்டு இருக்கிறோம் என்பதை மனதில் அழுத்தமாக உறைக்கும்படியாகப் பேசினார் கீதா.

“ஆள் பாதி, ஆடை பாதின்னு சொல்லுவாங்க; இன்றைய பெண்கள் அதைத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டுப் பாதி ஆடைதான் அணியறாங்க!” என்றார்.

டாக்டர் கீதாவுக்குத் தெரிந்த ஒரு குடும்பம். பையன் வெளிநாட்டில் வேலை செய்கிறான். அங்கேயே ஒரு பெண்ணைப் பார்த்தான். நாகரிகமாக இருந்தாலும் அந்தப் பெண், தழையத் தழையப் பட்டுப் புடவை கட்டி, வீட்டில் குத்துவிளக்கு ஏற்றி, விஷ்ணு சகஸ்ரநாமம் சொல்லி, சாமி கும்பிட்டு அத்தனை சாஸ்திர சம்பிரதாயமாக இருந்ததைக் கண்டு இந்தப் பையன் பிரமித்து, இங்கே இப்படி ஒரு பெண்ணா என்று ஆச்சரியப்பட்டு, அவளைக் காதலித்தான். அவள் குடும்பமும் இங்கே தமிழ்நாட்டில்தான்; ஒரே குலம், கோத்திரம் என்பதால், இரு வீட்டாரின் சம்மதமும் கிடைக்க, திருமணம் இனிதே முடிந்தது.

அதற்குப் பின்புதான் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. பகல் பூராவும் பத்தினித் தெய்வமாக வளைய வந்த அந்தப் பெண், சாயந்திரமானதும்ம் உடம்பை வெளிக்காட்டும் கவர்ச்சிகரமான உடையணிந்து, டிஸ்கொதேவுக்குக் கிளம்பிவிட்டாளாம். போதாக்குறைக்கு மதுப் பழக்கம் வேறு அவளுக்கு இருப்பது தெரிந்தது. “என்ன இது... இத்தனை மோசமானவளா நீ! காலையில் அத்தனை பயபக்தியாய் இருந்தாயே, அது என்ன வேஷமா?” என்று அரண்டு போய்க் கேட்கவும், “ஏன்... காலையில் நான் அப்படி இருந்ததும் உண்மைதான். இப்போ இப்படி இருக்கிறதும் உண்மைதான். அது காலை ட்ரேடிஷன்; இது சாயந்திர ட்ரேடிஷன். ரெண்டையும் ஏன் ஒண்ணா போட்டுக் குழப்பிக்கிறே?” என்றாளாம் அவள் நிதானமாக.

அந்தத் தம்பதி இப்போது டிவோர்ஸ் வாங்கிக்கொண்டுவிட்டதாகச் சொன்னார் டாக்டர் கீதா.

மேலே சொன்ன சம்பவத்தை டாக்டர் கீதா விவரிக்கும்போது... ஒரு திரைப்படத்தில், ஆட்டோ டிரைவராக இருக்கும் வடிவேலு, ஒரு நாள் முழுக்க பெற்றோர் பக்தி, தொழில் பக்தியில் ஊறித் திளைப்பவராக இருந்துவிட்டு, சாயந்திரம் ஆறு மணி ஆனதும், மது அருந்திவிட்டு, அப்படியே தலைகீழாக மாறி, மோசமாக நடந்துகொள்கிற நகைச்சுவைக் காட்சிதான் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது.

*****

மாதம் இருமுறை நடக்கும் விகடன் மொட்டை மாடிக் கூட்டம் மிக, மிகப் பயனுள்ளது. சென்ற புதன்கிழமை டாக்டர் கீதா சுப்ரமணியன் பேசியதை உடனே பதியவேண்டும் என்று ஆர்வப்பட்டேன். ஆனால், வேலைப் பளு காரணமாக இயலவில்லை. மூன்று நாள் கழித்துப் பதிவிடும்போது, கீதாவின் பேச்சில் பல சுவாரசியமானவற்றை விட்டுவிட்டேன் என்று நினைக்கிறேன். டாக்டர் கீதாவுக்கு முன்பாக கடந்த இரண்டு கூட்டங்களில் சாரு நிவேதிதா, தங்கர்பச்சான் ஆகியோரும் எங்களிடையே உரையாற்றினார்கள். அவற்றைப் பதிவிடவே நேரம் அமையாமல் போய்விட்டது. அவர்கள் பேசியது ஞாபகம் இருந்தாலும், அதை இப்போது எழுதினால், அது நானே எழுதிய கட்டுரை போலத்தான் இருக்குமே தவிர, சூட்டோடு சூடாகப் பதிவிடும்போது கிடைக்கிற சுவாரசியம் அதில் இருக்காது.

எனவே, இனி வரும் காலங்களில் அவற்றை உடனுக்குடன் பதிவிட முயல்கிறேன்.

*****

னது மற்றொரு வலைப்பூவான ‘என் டயரி’யில், ஒரு பதிவில் நான் கொடுத்திருந்த புதிருக்கான விடையைச் சரியாகவும் முதலாவதாகவும் அனுப்பியவருக்கு என்னுடைய ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தைப் பரிசாக அனுப்பி வைப்பதாகக் குறிப்பிட்டிருந்தேன். அதன்படி நண்பரும், எழுத்தாளரும், சக பதிவருமான சொக்கன் அவர்கள் சரியான விடையை முதலாவதாக எனக்குப் பின்னூட்டம் இட்டிருந்தார்.

ஆனால், அவர் அந்தப் புத்தகத்தை ஏற்கெனவே படித்துவிட்டார் என்றும், ஒரு ஆர்வத்தின்பேரிலேயே போட்டியில் கலந்துகொண்டார் என்றும், எனவே மேற்படி புத்தகத்தைப் படிக்காத நண்பருக்கு அதை அனுப்பி வைத்தால் அவருக்குப் பயன்படுமே என்றும் கடிதம் அனுப்பியிருந்தார்.

அதைத் தொடர்ந்து, அதே பதிவில், கீழே கண்டபடி என் பின்னூட்டத்தைக் கொடுத்திருந்தேன்.

‘நண்பர் சொக்கனின் சமீபத்திய பின்னூட்டத்தின்பேரில், அவருக்கு அடுத்தபடியாகச் சரியான விடையை முதலாவதாக எழுதியுள்ள திரு.ஆர் (நாலாவது பின்னூட்டம்) அவர்களுக்கு மேற்படி புத்தகத்தைப் பரிசாக அனுப்பிவைக்க விழைகிறேன். அவருக்குப் புத்தகம் தேவையில்லை, பொற்காசுகள்தான் தேவை எனும் பட்சத்தில் அடுத்து வரும் திரு.கணேஷ் ராஜாவுக்கு மேற்படி புத்தகம் அனுப்பி வைக்கப்படும்.’

ஜூலை 23 அன்று மேற்படி பின்னூட்டம் இடப்பட்டது. ஒரு வார காலத்துக்குப் பின்னரும் திரு.ஆர் யார் என்று தெரியாததால், அவரது முகவரியைத் தெரிவித்து எனக்குக் கடிதம் எழுதாததால், நான் பின்னூட்டத்தில் தெரிவித்திருந்தபடி ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகத்தை திரு. கணேஷ் ராஜா அவர்களுக்கு கூரியர் மூலம் அனுப்பிவிட்டேன் என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

.

11 comments:

நல்ல பதிவு .......வாழ்த்துகள்
 
ரொம்பவும் ரசித்து படிக்கக்கூடிய நடை.
 
டாக்டர் கிதா அவர்களின் உபதேசம் சிறப்பாக இருந்தது.மருத்துவத்துறை வியாபாரமயமாகி கொண்டிருக்கும் சுழலில் நம்பிக்கை அளிக்கும் விதமாக பதட்டமின்றி நோய்களை அணுகும் முறைகளை நகைச்சுவை கலந்து சொன்னவிதம் அருமை. டாக்டருக்கு வணக்கம்.
 
வெளியாட்கள் மொட்டை மாடிக்கு‍ வர அனுமதி உண்டா? சாரு‍ பேசியதை முடிந்த அளவு ஞாபகப்படுத்தி பதிவிடுங்களேன்.
ஜெ.பாபு
கோவை-20
 
அடடா, சொக்கன் அண்ணே, வடை போச்சே
 
கீதோபதேசம் என்பதைத் திரித்து ‘கீதா’பதேசம் என்று நீங்கள் கொடுத்திருந்த தலைப்பு என்னை மிகவும் கவர்ந்தது. அதே போலவே, டாக்டர் கீதா அவர்கள் சொன்ன அறிவுரைகள் யாவும் பயனுள்ளவை. நிற்க. தங்களின் ‘தரையில் நட்சத்திரங்கள்’ புத்தகம் கிடைக்கப் பெற்றேன். நன்றி! முழுவதும் படித்து முடித்துவிட்டேன். மிக எளிய நடையில், சின்னச் சின்ன உதாரணங்கள் கொடுத்து, டிஸ்லெக்ஸியா என்றால் என்ன வகையான குறைபாடு, அதை எப்படிக் களைவது என விவரமாகக் கொடுத்துள்ளீர்கள். எனக்குத் தெரிந்து, டிஸ்லெக்ஸியா பற்றித் தமிழில் புத்தகங்கள் எதுவும் வந்திருப்பதாகத் தெரியவில்லை. அநேகமாக இதுதான் முதல் புத்தகமாக இருக்கும். அமீர்கானின் ‘தாரே ஜமீன் பர்’ படம் பார்த்தேன். டிஸ்லெக்ஸியா நோயால் அவதிப்படும் சிறுவனை ஆசிரியர் அமீர்கான் முன்னேற்றப் பாடுபடுகிறார் என்பது வரையில்தான் புரிந்தது. மற்றபடி, இந்தப் புத்தகத்தைப் படித்த பின்புதான் அந்தக் குறைபாடு பற்றி ஏ-இஸட் அறிந்துகொள்ள முடிந்தது. நல்லதொரு புத்தகத்தை அனுப்பி வைத்தமைக்கு மீண்டும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
பின்னூட்டம் இட்டுத் தங்கள் கருத்துக்களைப் பதிந்திருக்கும் ஆர்.கே.குரு, ஜோதிஜி, பத்மநாபன், ஜெ.பாபு, சி.பி.செந்தில்குமார், கணேஷ் ராஜா அனைவருக்கும் என் இதயங்கனிந்த நன்றி!

’தரையில் நட்சத்திரங்கள்’ புத்தக விமர்சனத்துக்கு நன்றி கணேஷ் ராஜா!
 
ரெக்கார்ட் செய்துக்கலாம் இல்லையா?

இப்பல்லாம் கைத்தொலைபேசியிலேயே இருக்கிறது :)
 
follow
 
டாக்டர் கீதாவின் உறையும் அதை அழகாக பதிவிட்ட உங்களுக்கும் பாராட்டுக்கள். நீங்க ரெகார்ட் பண்ணி வச்சு எழுதலாமே. ரெகார்ட் பண்ணுவதில்தப்பில்லையே
 
‘கீதா’பதேசம்!" மிக அருமை. பயனுள்ள உபதேசம் இதை படித்த எங்களுக்கும்.